Total Pageviews

Wednesday, May 27, 2009

எல்லோரும் சந்தோஷமா இருங்கப்பா....

இந்த மாசம் முழுக்கவே சரியா பதிவு போடலை.

விருந்தினர் வருகை, வேலைப்பளு, உடல்நிலை
சரியில்லாமல் போனதுன்னு ”வழக்கம் போல”
பதிவு எழுதலை. ரெம்ப வருத்தமா இருக்கு.
(உங்க எல்லோருக்கும் சந்தோஷமா இருந்திருக்கும்)


இதுல இப்ப சென்னைப்பயணம் வந்திருச்சு...
நாளை கிளம்பறேன்.
ஊருக்கு போயிட்டு வரும்போதே விருந்தினர்களுடன்
வந்திறங்கப்போகும் அதிர்ஷ்டசாலி நான். :))


அநேகமா ஜூன் 10 தேதி வரை அதிகமா
இந்தப்பக்கம் வரமுடியாது. முடிஞ்சப்போ
எட்டி பாக்கறேன்.

அதுவரைக்கும் ALL ENJOY.

**********************************
சென்னை பயணத்தில் பதிவர் சந்திப்புக்கு
ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு.

அப்துல்லாவை சந்திக்கப்போறேன். அப்படியே
சில நண்பர்களும் சேர்ந்துக்கறதா சொல்லியிருக்காங்க.
நடந்துச்சுன்னா உங்க வயிற்றெரிச்சலை மேலும்
அதிகமாக்க பதிவு வரும். :))))))))))

**************************************

எப்போதும் சென்னை போகணும்னா அழுவாச்சியா
வரும். பாதிநாள், மீதிநாள் மட்டும் சென்னையில
இருக்கற மாதிரி திட்டம் போட்டு கிளம்புவேன்.

இந்த முறை சென்னைப் பயணம் மகிழ்ச்சி தரக்கூடியது.
காரணம் திரு.D.Vநாரயணன்.

அயித்தானோட அயித்தான் இவர்(அக்கா ஹஸ்பெண்ட்)

ஆனால் எனக்கு அன்பான தாத்தா(அதெல்லாம்
எப்படின்னுகேட்க கூடாது. உறவு அம்புட்டுதான்)

ஒவ்வொரு முறை மும்பையிலிருந்து நான்
வரும்பொழுதெல்லாம் (எப்ப அந்த ட்ரையின்
நேரத்துக்கு வந்திருக்கு) சென்னை செண்ட்ரலில்
காத்திருந்து அழைத்துச் செல்வார்.
(அப்போது என் திருமணம் சம்பந்தமான
பேச்சுவார்த்தை இல்லை.. இல்லை.. மனதில்
கூட யாரும் நினைத்திருக்கவில்லை)

என் அன்பான நாராயணன் தாத்தா தனது
70ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
பீமரத சாந்தி விழாவில் கலந்துக்கொள்ளத்தான்
சென்னை விஜயம்.

அன்பான தாத்தா இப்போது நாத்தானாரின்
கணவர் என்ற +ம் சேர்ந்துக்கொள்ள
தாத்தா, அம்மம்மாவுக்கு சீர் செய்து
ஆசிர்வாதம் பெறச் செல்கிறேன்.

29.5.09அன்று தாம்பரத்தில் விழா.

Tuesday, May 26, 2009

கொஞ்சம் ஹெல்புங்களேன்....

துணை என்பதன் பொருள் என்ன?
நானிருக்கிறேன் என்று, எங்கும், எப்போதும்
துணையாக இருப்பது.

இப்படி ஒரு துணை வாழ்க்கைத் துணையாக
கிடைக்க வேண்டுமென்பதுதானே அனைவரின்
கனவு/ஆசை.

நூல்வேலி திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலில்
மனைவிக்கு கணவன் ஊக்கமளிப்பதாக வரிகள்
இருக்கும்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
பாலு அவர்களுடன் தேனிசை தேவதை
வாணிஜெயராம் அவர்கள் இணைந்து
பாடியிருப்பார்கள்.




Get Your Own Hindi Songs Player at Music Plugin

திருமணத்திற்கு பிறகும் பெண்கள் சாதிக்க
கண்டிப்பாக கணவரின் அன்பும், ஒத்துழைப்பும்
அவசியம். அடக்கி வைக்காமல் சுடர் விடும்
விளக்குக்கு தூண்டுகோளாக எத்தனை பேர்
இருப்பார்கள்???

அயித்தானின் அன்பும் அனுசரனையும் தான்
என்னை அதிகம் கற்க வைத்தது. நீச்சல்,
மாண்டிசோரி கல்வி என லிஸ்ட் அதிகம்.

இப்போது வெகு நாட்களாக நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்த
தஞ்சாவூர் பெயிண்டிங், INTERIOR DECORATION
இரண்டு கோர்ஸும் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அயித்தானும் ஓகே சொல்லிவிட்டார்.(சொல்லாட்டிதான்
ஆச்சரியம் :)) )

என்ன படிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

மீ த யோசிச்சிங்....

உங்க ஐடியாஸ் என்ன ஃப்ரெண்ட்ஸ்.

மாமா தந்த ட்ரீட்!!!

சாப்பாட்டு நேரத்துல இப்படி ஒரு பதிவான்னு
எத்தனை பேரு வந்து திட்ட போறாங்களோ!!! :))



அதென்னவோ எங்க வீட்டுல ஆண்கள்
அடுப்படியில் கலக்குவாங்க. எங்கப்பா
வைக்கும் ரசத்துக்கு நானும் தம்பியும் அடிமை.
என் கணவரின் அண்ணன் உயிரோடிருந்தவரை
தன்னால் ஆன உதவியை அடுக்களையில்
செய்து கொடுத்துவிட்டுத்தான் நிம்மதியாக
உட்காருவார்.(சின்னச்சின்னதாக சேனைக்கிழங்கு
சிப்ஸுக்கு சீவுவது மாமாவால் மட்டுமே
முடியும்) அயித்தான் போடும் காபி அமர்க்களம் :))
(இதுக்கு ஆதி என்ன சொல்லப்போறார்னு பாக்கணும்)

தம்பியும் அழகாக சமைப்பான். ஆஷிஷ் சமைப்பதைப்
பத்தி பதிவுல சொல்லியிருக்கேன்.

தனது பிறந்த நாள் ட்ரீட்டாக சத்யாமாமா
பாவ்பாஜி செய்து தரப்போறதா பதிவுல
சொல்லியிருந்தேன். மாமா பாவ்பாஜில
எக்ஸ்பர்ட். மிக அருமையாச் செய்வார்.

தேவையான சாமான்களை வாங்கி வெய்யின்னு
சொல்லிட்டாரு. வாங்கி ரெடியா வச்சிருந்தேன்.
ஆனா மாமா செஞ்சது பாவ்பாஜி இல்ல.
FIGHTER BAJI.

இதுவும் பாவ்பாஜி மாதிரிதான். ஆனா செய்முறை
வித்தியாசம். பாவ்பாஜி செய்யத் தெரியாதவங்களுக்காக
ரெசிப்பியும் கொடுத்திடறேன்.

தேவையான சாமான்கள்:
பாவ்: 6
காய்கறிகள் :
தக்காளி-1/2 கிலோ
வெங்காயம் 1/2 கிலோ
உருளைக்கிழங்கு 1/2 கிலோ
காலிப்ளவர் -1
குடைமிள்காய் - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
பட்டர் : 100 கிராம்
உப்பு- தேவைக்கேற்ப
பாவ் பாஜி மசாலா - 5 ஸ்பூன்.

செய்முறை:
உருளையை வேகவைத்து தோல்நீக்கி
மசித்துக்கொள்ளவும்.

காலிஃப்ளவ்ரை வெந்நீரில் போட்டு வைத்து
எடுத்து நன்கு வேகவைத்து மசிக்கவும்.

குடை மிளகாயை பொடியாக விதை நீக்கி
அரிந்துக்கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம் பொடியாக அறிந்துக்கொள்ளவும்.

செய்முறை:

அடி கணமான கடாயில் எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு
வெங்காயம் போட்டு வதக்கவும். கொஞ்சம்
வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்க்கவும்.

பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வெந்ததும்
பாவ்பாஜி மசாலா சேர்த்து வதக்கி
மசித்த உருளை, காலிஃப்ளவர், குடமிளகாய்
ஒவ்வொன்றாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். பாஜி மிக தண்ணீராகவோ
மிக கெட்டியாகவோ இருக்கக்கூடாது.

கொஞ்சம் கொஞ்சமாக பட்டர் சேர்க்கவும்.
(கொஞ்சம் பட்டர் மிச்சம் வைக்கவும்)

இப்போது பாஜி ரெடி. சாதாரண பாவ் பாஜிக்கு
ப்ரட்டை தவாவில் டோஸ்ட் செய்து பாஜியுடன்
சாப்பிட வேண்டும். இந்த FIGHTER BAJIக்கு
ப்ரட்டை துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ள
வேண்டும்.

இன்னொரு வாணலியில் பட்டர் போட்டு அதில்
துண்டுகளாக்கி வைத்திருக்கும் ப்ரட்டைப்போட்டு
இந்த பாஜியை எடுத்து தேவையான அளவு ஊற்றி
கலந்து ”சுடச்சுட”(கண்டிப்பா அப்ப செஞ்சு
அப்பவே சாப்பிட்டாத்தான் ருசி) தட்டில் போட்டு
வெங்காயம், கொத்தமல்லி தூவி போட்டுச் சாப்பிட்டா......

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் செம ருசி.




அதென்ன FIGHTER BAJI? அப்படின்னு பெயர்க்காரணம் கேட்டேன்.
மாமா தந்த விளக்கம்:
“சுடச்சுட சாப்பிடும்பொழுது நாக்கு, கண்ணு எரியும்.
அந்த ஃபைட்டிங் எஃபக்ட் தான் பேரு!!!” என்றார். :)))))


பாவ்பாஜி பராத்தாவும் நல்லா இருக்கும்.

காற்றினிலே வரும் கீதம்......

இசை நமக்கு புத்துணர்ச்சி தந்து மனதை
இலகுவாக்குகிறது.

நிஜ வாழ்வில் யாரும் டூயட் பாடுவதில்லை..
சோக கீதம் வாசிப்பதில்லை. ஆனால்
பாடல்கள் கேட்காமல் யாராலும் இருக்க
முடியாது.

ரேடியோவை மட்டுமே நம்பி வாழ்ந்த
காலங்களில் எத்தனை பேர்வீடுகளில்
ரேடியோவுடன் சேர்ந்து பாடிக்கொண்டிருந்தோம்.
அலுவலகம் செல்லும் வரை அலறிக்கொண்டிருக்கும்
பக்கத்து வீட்டு ரேடியோவுடன் போட்டி போட்டுக்கொண்டு
நம் வீட்டு ரேடியோவும் அலறும்.

பிறகு டேப்ரிக்கார்டர். ஆஹா சவுண்ட் எஃபக்டுக்காக
இதுவும் அலறும். தான் இந்த வீட்டில் இருக்கிறோம்
என்று டேப்ரிக்கார்டர் தன் குரலில் தானே கட்டியம்
கூறும்!!!!

காலங்கள் மாறினாலும் மாறாதது இசையை
கேட்பது. சாஸ்திரிய சங்கீதமோ, கர்நாடக
சங்கீதமோ, ராக் ம்யூசிகோ, திரைப்படப்பாடல்களோ
கேட்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறதே
தவிர குறையவில்லை.


ஆனால் கேட்கும் விதம் மாறிவிட்டது.
செல்போனிலோ, ஐபாட்டிலோ பாடல்கள்
கேட்பதுதான் இப்போதைய ஃபேஷன்.

பிறருக்கு துன்பம் தராமல் ஹெட்போன் மாட்டிக்கொண்டு
பாட்டு கேட்கிறார்கள். ஆனால் அதிலும் பிரச்சனை
இருக்கு. பாட்டு கேட்பவருக்கு பிரச்சனை.

””யார் பெத்த புள்ளையோ!!! தானா பேசிக்கிட்டு
போகுது!!” என கமெண்டடிக்கும் நிலையில் இன்றய
இளைஞர்கள் எப்போதும் ஹெட்போனும் கையுமாக
இருக்கிறார்கள்.


இப்படி ஹெட்போனோடு ரோட்டில் நடக்கும் பொழுது
வண்டிக்காரர்கள் எழுப்பும் சத்தம் கூட காதில் கேட்காது!


தன் நிலை மறந்து மூழ்கிக்கிடக்கும் அபாயம்
இருக்கிறது. இந்த அபாயம் மட்டுமா!!



கேட்கும் சக்தியை இழக்கும் அபாயம் இருப்பதாக
வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஒலி் அளக்கப்படும் அளவை டெசிபல் என்கிறோம்.

அதிக பட்ச சத்தம் 194 டெசிபல். இரகசியமாக
பேசும் பொது ஏற்படும் ஒலி 30 டெசிபல் இது ஆகக்குறைந்தது.

நாம் சாதரணமாக பேசும்பொழுது ஏற்படும் ஒலியின்
அளவு 60 டெசிபள். ஹேர் டிரையர் ஏற்படுத்தும் சத்தம்
85 டெசிபல். இதற்கு மேல் கேட்கும் எந்த அளவும்
காதைச் செவிட்டாக்கும்.(ஆம்புலன்ஸ், ஜெட் எஞ்சின்
எழுப்பும் ஒலிகள் 120,140 டெசிப்ல்கள்)

நம் ஐபாட் அல்லது எம்பி3 ஒலிக்க வேண்டிய
டெசிபல் 60 முதல் என்றாலும் சிலர் 120 டெசிபல்
வரை வைத்துக்கொள்வார்கள். இதனால்
காது அடையும் பாதிப்பிற்கு அந்தக் காதிற்கு
ஒரு வாயையாவது ஆண்டவன் வைத்திருந்தால்
சொல்லியழும்!!! (அப்போது கூட காதுக்கு
கேட்கும் தன்மை இருக்க வேண்டும்)





குறைபாடு ஏற்படாமல் நம் காதுகளை பாதுகாப்பது எப்படி?


குறைந்த அளவில் பாடல்களை கேட்கும் வழக்கத்தை
ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

sound isolating earphones வகைகள்
பாடலையும், இசையையும் பிரித்து பாடலைதுல்லியமாக
கேட்க செய்யுமாம். இவ்வகை இயர் போன்களுக்கு மாறலாம்.

அருகில் இருக்கும் நண்பர்களிடம் தனது ஐபாட்டிலிருந்து
வரும் சத்தம் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டால்
அவரது பதில் “ஆம்” என்றால் சத்தம் அதிகமாக
இருக்கிறது என்று அர்த்தம். உடன் வால்யூமை
குறைத்துக்கொள்ளலாம்.

விட்டமின் A,C,E and Magnesioum இவை நம்
காதுகளை பாதுகாக்கிறதாம்.


சுற்றுப்புரத்தை மாசுபடுத்துவதில் சத்தமும்
ஒரு மூலகாரணி. ஆனால் அதைப் பற்றி
யாரும் அலட்டிக்கொள்வதில்லை.

இப்போது அதிகம் ஹெட்போன் அதிக சத்தத்தோடு
மாட்டிக்கொண்டு இருப்பவர்கள் அதி விரைவில்
Hearing aid உதவி இல்லாமல் வாழப்போவதில்லை
என அபாயச்சங்கு ஊதுகிறார்கள் மருத்துவர்கள்.

அவர்கள் காதில் கேட்க வேண்டுமே....

Monday, May 25, 2009

ஆவக்காயரா....

அமிர்தம் வேண்டுமா?? ஆவக்காய் வேண்டுமா என்று
தெலுங்கர்களிடம் கேட்டால் யோசிக்காமல் டக்கென
வரும் பதில் “ஆவக்காய” என்பதாகத்தான் இருக்குமென
சொல்வார்கள். ஆவக்காய் மீது இருக்கும் ப்ரியம் அப்படி!!!

ஆவக்காய இல்லாத ஆந்திரா சாப்பாடு முழுமை பெறாது.
எனக்கு ஆவக்காய் அறிமுகமானது என் அம்மமமாவால்தான்.
மிக அருமையாக ஊறுகாய் போடுவார் அம்மம்மா.

திருமணம் முடிந்து ஹைதைக்கு வந்ததும் ஆவக்காய்
போடக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சங்கல்பமே
எடுத்துக்கொண்டேன். :))

ஆவக்காய் போடுவது ஏதோ பண்டிகை போல இருக்கும்.
பெரிய ஊறுகாய் ஜாடி வாங்கி, கழுவி வெயிலில் காயவைத்து
தயாராக வைத்திருப்பார்கள்.



மார்கெட்களில் பச்சை மாங்காயின் வாசம் மூக்கைத்
துளைக்கும். ”கச்சக் கச்சக்கென்று” ஓட்டோடு
மாங்காயை துண்டங்களாக்கி கொண்டுவருவோம்.
(அந்த வாசனையே... வாசனை)

பாந்தமாக துணியில் காயவைத்து, துடைத்து,
உள்ளே இருக்கும் மெல்லிய தோலை எடுத்து
ஆவுப்பிண்டி(கடுகுப்பொடி)காரம், உப்பு,
நல்லெண்ணெய் கலந்து அதில் துண்டங்களைப்
போட்டு பிசறி ஜாடியில் எடுத்து வைத்துக்கொண்டால்
ஒரு வருடமானாலும் கெடாது.




ஆவக்காயில் பலவகைகள் உண்டு.

வெந்தய ஆவக்காய்
வெல்ல ஆவக்காய்
எள்ளு ஆவக்காய்
மாகாய
இஞ்சி ஆவக்காய
பூண்டு ஆவக்காய

சோற்றுக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் என்ற நிலைபோய்
ஊறுகாய்க்கு தொட்டுக்கொள்ள சோறு எனும் நிலை
ஆவக்காய் சாப்பிடும்போது ஆகிவிடும். ருசி அப்படி.



(என் மகன் நெஸ்டம் சாப்ப்டும் குழந்தையாய்
இருந்த பொழுது ஆவக்காய் தொட்டுக்கொண்டுதான்
சாப்பிடுவான் :))




முதல் சோறு ஆவக்காய் போட்டு பிணைந்ததாக
இருந்தால் சொர்கம் தான். :)) தொட்டுக்கொள்ள
தயிர் அருகில் இருந்தால் வேறு சமையலே
வேண்டாம்.





ஆவக்காய் தெலுங்கர்களால் அதிகம் விரும்பப்படுவதால்
“ஆவக்காயரா” என்பது அவர்களின் செல்லப்பெயராகிவிட்டது.

இந்த முறை ஆவக்காய் போடும் போது ஏகப்பட்ட
புக்கிங் ஆகிவிட்டது. என் மாமா மகள் தனக்கு மட்டும்
பெரிய்ய்ய்ய்ய்ய்ய பாட்டில் 2 பாட்டில் அனுப்பிவைக்கச்
சொல்லி விட்டாள்.

ஊறுகாய் மிக ருசியாக வந்திருக்கிறது. அயித்தானுக்காக
ஆவுப்பிண்டி(ஊறுகாய் பொடி) அதிகம் வருவது போல்
போட்டிருகிறேன். (காய் கொஞ்சம் பொடி அதிகம்)

சத்யநாராயண விரதம்

அன்னவரம் பற்றிய இந்தப்பதிவு பல்வேறு் காரணங்களால்
முடிக்கப்படாமலேயே இருந்துவிட்டது. மன்னிக்கவும்

இதற்கு முந்தைய பதிவிற்கு

ஸ்ரீ சத்யநாராயண விரதத்தை செய்தால் விரும்பியது
கிடைக்கும். நம் துயர் தீரும். இந்த விரதத்தை
பார்த்தாலும் புண்ணியம், கதை கேட்டாலும்
புண்ணியம்.





ஜாதி வேறுபாடு இல்லாமல் சகலரும் கலந்து
செய்யக்கூடிய ஒரு பூஜை சத்ய நாராயண விரதம்.
பொதுவாக பூஜைகளில் வைக்கப்படும் பிரசாதம்
ஆண்டவனின் அருளாக கருதப்படுகிறது.
அப்படிபட்ட பிரசாதத்தை அனைவருடனும்
பகிர்ந்து உண்ணவேண்டுமென்பது சத்யதேவர்
நாரதருக்குச் சொல்லி அதை மக்களுக்கு
எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

பூஜை செய்து பிராசதம் எடுத்துக்கொள்ளாமல்
போன கலாவதி தன் கணவன் மற்றும் அவர்
வந்த ஓடம் நதியில் மூழ்கிப்போக, பிரசாதம்
உண்ட பிறகு திரும்பபெற்றதாக சத்யநாராயண
விரத கதா மகிமையில் சொல்லப்பட்டிருக்கிறது.


நம் வீடுகளில் சத்யநாராயண விரதம் செய்வது
விசேடம். அதிலும் அன்னவரத்தில் சத்ய்நாராயண
விரதம் செய்வது மேலும் மேலும் விசேஷம்.

காரணம்:

அன்னவரத்தில் யந்திர ரூபமாக இருப்பது பிரம்மா.
சிவனும் ஹரியும் ஒன்றாகி கோவில் கொண்டிருப்பது
இங்கே. துர்கா,லட்சும், சரஸ்வதி ஆகிய முத்தேவியரும்
சத்யவதியாகி அருள் பாலிக்கின்றனர்.
முத்தேவர்களும் சேர்ந்து அருள் பாலிக்கும்
இந்தக் கோவிலில் முதல் சத்யநாராயண விரதத்தைச்
செய்தது யார் தெரியுமா??

ராமேஸ்வரத்தில் இருக்கும் லிங்கம் ஸ்ரீராமனால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். அன்னவரம்
கோவிலில் முதல் விரதம் செய்து கொண்ட
தம்பதிகள் பத்ராசல வாசனாம் ஸ்ரீராமனும்
அவரது தர்மபத்தினி சீதாபிராட்டியும் ஆவார்கள்.

சைவமும் வைணவுமும் ஒன்றே என்று சொல்ல
இதைவிட ஆதாரம் ஏதும் உண்டா?

அன்னவரம் கோவிலிலேயே நாம் பணம் கட்டி
விரதம் செய்து கொள்ளலாம், 116,501,1116
ஆகிய மதிப்புக்களில் விரதம் செய்து கொள்ளலாம்.

500 ரூபாய் விரதம் உற்சவ மூர்த்தியின் அருகில்
நடைபெறும்.(மேலே இருக்கும் படம் உற்சவ
சத்யநாராயணர் உடனுறை சத்யவதி)

நவக்கிரக எந்திரத்தில் அரிசி இட்டு,
தேங்காய்களை வைத்து ஆவாஹனம்
செய்து சங்கல்பம் செய்து வைப்பார்கள்.

சத்யநாராயணரின் பிரதிமை(உருவம்) + எந்திரம்
இருக்கும் தாமிரக்காசை பூஜையில் வைத்து
பூஜை நடக்கும்.





நவக்கிரக பூஜை, அங்கபூஜை செய்து சத்யநாராயண
அஷ்டோத்ரம் படித்து பூஜை முடிந்து ஆரத்தி.


பணத்தைக்கட்டிவிட்டால் தேங்காய் பூ, பழங்கள்,
நைவேத்தியம் எல்லாம் கோவிலிலேயே தந்து
விடுவார்கள். பூஜையில் வைத்த அந்த நவக்கிரகதுணியை
வீட்டில் வைத்துக்கொள்வதால் நவக்கிரக தோஷம் இராது.
சத்யநாராயணர் உருவம் பதித்த காயினை பூஜையில்
வைத்து தினமும் பூஜிக்கலாம்.

கோவிலேயேயே அந்தணர் ஒருவர் சத்ய்நாராயண
விரத கதையைச் சொல்வார். ஆரத்தி காட்டி முடிந்ததும்
பூஜை முடிந்தது.(காலை 7 மணிக்கு கோவிலுனுள் சென்ற
நாங்கள் வெளியே வந்த பொழுது 11 மணி. ஒவ்வொரு
பேட்சாக பூஜை நடக்கும்)

கலியுகத்தில் விசேஷ பலனை அளிக்கும் இந்த
பூஜை செய்ததாக கதையில் சொல்லப்பட்டவர்களின்
மறு பிறப்பு கதையின் சாராம்சமாகும். அந்தணன்
குசேலராக பிறந்தான்,விறகு விற்பவன் குகனாக
பிறந்து ஸ்ரீராமனின் தம்பியானான், உல்காமுகன்
தசரத்னாக பிறந்தான், வணிகன் மோரத்வஜனாக பிறந்து
தனது உடலில் பற்றில்லாமல் அந்தணுர்க்காக தன்
சதையை அறுத்துத் தந்து மோட்சமடைந்தான்,
அரசன் துங்கத்வஜன் நான்முகனான்.


“ஸ்ரீ சத்யநாராயனம், உபாஸ்மகே நித்யம்.
சத்யத்யான நந்த மயம் சர்வம் விஷ்ணு மயம்”


Thursday, May 21, 2009

தென்றல் அப்டேட்ஸ் 21/5/09

4 நாள் வந்ததும் தெரியவில்லை. போனதும்
தெரியவில்லை. :)

பெரிய மாம்ஸ், சின்ன மாம்ஸ், அவர்களது
குடும்பத்தினர், அம்மம்மா, தாத்தா என
செம ஜாலியாக இருந்தோம்.

பழங்கதைகளை தூசி தட்டி ஞாபகப்படுத்தி
பேசிக்கொண்டோம்.

திருமணத்துக்கு முந்தைய சமையல் பயிற்சியில்
நொந்து போயிருந்த மாம்ஸ்கள் இப்போதைய
என் கைப்பக்குவத்தில் மலைத்துவிட்டார்கள். :))

ஆந்திரா ஸ்டைல் மிளகுக் குழம்பு செய்திருந்தேன்.
மிளகு காட்டு சூப்பரா இருக்கு இன்னும் கொஞ்சம்
போடு என்று கேட்டு வாங்கி பெரிய மாமா சாப்பிட்டார்.

***************************************

என் திருமண வீடியோவை மாம்ஸ் மற்றும்
அனைவரும் இப்போதுதான் முதல் முறையாக!!!
பார்த்தனர். அப்போது 9 மாதக் குழந்தையாக
இருந்த பெரிய மாம்ஸின் இரண்டாவது மகள்
தன்னை, தான் அடித்த லூட்டிகளை வெட்கத்துடன்
பார்த்தாள்.

விவரம் புரியாமல் என் தம்பியை திருமணம்
செய்து கொள்வதாக சொல்லி அவனை அப்போது
கலங்கடித்துக்கொண்டிருந்த பெரிய(மாமா) மகள் சசி
இப்போது கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறாள்.
“பாவம் பாவா! என்னாள் மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்”
என்று பரிதாப்பட்டாள்.
************************************
சின்ன மாமாவுடன் செல்லச் சண்டையும் நடந்தது. :)))

ஞாயிற்றுக்கிழமை அதி காலையே மற்றவர்கள் வந்து
விட சின்ன மாம்ஸும், பெரிய மாம்ஸின் மகளும்(
அவளுக்கு ஏதோ எண்ட்ரன்ஸ் எக்சாம் இருக்க அதை
முடித்து வந்தாள்) ஞாயிற்றுக்கிழமை இரவுதான் வந்தார்கள்.
அதனால் திங்கள் கிழமை சின்ன மாம்ஸை ஷ்பெஷலாக
கவனிக்க திட்டம் போட்டு வைத்திருந்தேன்.

மாமாவுக்கு பிடித்த சமையல் முடித்து வெங்காய
பக்கோடாவும், ரஸமலாயும் சர்ப்ரைஸாக வாங்கி
வரச் சென்று வருவதற்குள் மாமா சாப்பிட ஆரம்பித்து
விட்டார்.” உனக்காகத்தானே மாமா! வாங்கப்போனேன்.
சேர்ந்து சாப்பிட வருவதற்குள் என்னை விட்டு ஏன்
தனியாக சாப்பிட்டாய்” என்று சண்டை போட்டேன்.

“ஐயோ தெரியாதேடா! கண்ணம்மாவுக்கு என்
பக்கத்திலேயே இலையை போடு!!!” என்று
அத்தைக்குச் சொல்ல 7 வயது மாமா மகள்
“அதென்ன அண்ணியை கண்ணம்மா
என்று கூப்பிடறீங்க!!!” என்று ஆச்சரியமாக
கேட்டாள். “நான் தூக்கி வளர்த்த பெண்ணாச்சே!”
என்று ஒரே பாசமழை தான்:))) எல்லாவற்றையும்
புதிதாக பார்த்துக்கொண்டிருந்தார் அத்தை.
(சின்ன மாமாவுக்கு திருமணமாகி 9 வருடங்கள்தானே
ஆகிறது)

*****************************************

சில்க்கூரி பாலாஜி கோவிலுக்குச் சென்று
திரும்பும் பொழுது சர்ப்ரைசாக 5 கிலோ
மாம்பழங்களுடன் வந்தார் பெரிய மாம்ஸ்.
”உனக்கு பிடித்த ஆம்ரஸ் செய்து கொடுக்கவேயில்லை
என்று உன் பூவாஜி”!!(பெரிய மாம்ஸின் மனைவியை
அப்படித்தான் அழைப்பேன். பூவா என்றால் அத்தை
(அப்பாவின் தங்கை) என்று அர்த்தம். என் அப்பாவுக்கு
தூரத்து உறவில் தங்கை முறை)என்று சொல்லிவிட்டு
மிக்ஸியில் போட்டு அடிக்காமல் தன் கைகளாலேயே
மாம்பழத்தை பிழிந்து அருமையார ஆம் ரஸ்
செய்து வைத்தார் மாமா. இரவு உணவுக்கு பிறகு
அருமையாக ஆனந்தமாக மாமா செய்து கொடுத்த
ஆம் ரஸ் அனைவரும் சாப்பிட்டோம்.
எனக்கு மட்டும் அதிகம் இனித்த மாதிரி இருந்தது.

பாசம் அதிமாயிடுச்சோ!!!!

*****************************************

வெளியில் செல்ல திட்டமிட்டிருந்த பொழுது
வருணபகவானும் வெளியில் வந்து பார்வை இட
திட்டமிட்டுவிட்டார். அதனால் வீட்டுக்குள்
இருக்க நேர மாலை 7 மணி துவங்கி நள்ளிரவு
ஒரு மணி வரை சந்தமாமா, ஆ நலுகுரு ஆகிய
தெலுங்கு படங்கள் பார்த்தோம்.

குடும்பத்தினர் அனைவரும் ஒரு சேர அமர்ந்து
சிரித்து, கமெண்டடித்து படம் பார்த்தோம்.

தூங்கப்போகும் முன் பெரிய மாம்ஸ் சொன்னது,
“இப்படி அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு, மகிழ்ந்து,
சினிமா பார்த்து எத்தனை நாளாச்சுடா!! இந்த
சந்தோஷம் காசு கொடுத்து வாங்க முடியுமா!!”

*************************************

Saturday, May 16, 2009

HEARTIEST WISHES TO மாம்ஸ்

சனிக்கிழமை நோ பதிவுடே என்றாலும் பதிவு
போட்டே ஆகவேண்டும் என்பதால் இந்தப் பதிவு.

அன்னையர் தினத்துக்கு தனிப்பதிவு போடவில்லை.
பெற்ற பாசத்தை விட வளர்த்த பாசம் அதிகம்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் வாழ்வில்
அது உண்மை.

அம்மா வேலைக்குச் சென்றதாலும், அம்மம்மா
லோக்கலிலேயே இருந்ததாலும் என்னை
வளர்த்தது அம்மம்மாதான். அம்மா என்றுதான்
அழைக்கிறேன்.

”தாயைப் பார்த்து பெண் எடு” என்று சொல்வார்கள்.
என் அம்மம்மாவின் பெயர் தான் எனக்கு
துருப்பு சீட்டாக இருந்தது. ராஜலட்சுமியின்
பேத்தி, TRAINED BY ராஜலட்சுமி இதுதான்
எனக்கு +பாயிண்ட்.

படிக்காத மேதை அம்மம்மா.
அம்மம்மாவைப் பார்த்து நான் அடிக்கடி
பாடும் வரிகள்

“தலைதான் முன்னல நரையாச்சு அம்மாடி
அதுவும் அழகாச்சு” :)))




ஐ லவ் யூ அம்மா.


****************************************

இன்று என்னுடைய சின்ன மாம்ஸ் (மாமா)
தனது திருமண நாளைக் கொண்டாடுகிறார்.
சின்ன மாம்ஸ் ஆனா வீட்டில் எல்லோரும்
செல்ல மாம்ஸ் என்றுதான் சொல்வாங்க.

மாமாவுக்கு நான் செல்லமா, எனக்கு மாமா
செல்லமா என்று கன்ஃப்யூசிங் தான்.

என்னைவிட 5 வயது மூத்தவர். எனக்கு
அண்ணனாக எப்போதும் துணையிருப்பவர்.
சிறுவயதில் எங்கள் இருவருக்கும் குடிமிபிடி
சண்டை நடக்கும். :))

ஆனாலும் அம்மா(என் முதுகில்) தனிஆவர்த்தனம்
வாசிக்கும்போது அம்மாவுடன் சண்டை போடும்
அன்பு உண்டு.

எனக்காக ஒரு சாக்லட் கிடைத்தாலும் அதில்
சரிபாதி மாமாவுக்காக எடுத்து வைத்து
கொடுப்பேன்.

***************************************
நாளை 17ஆம் தேதி பெரிய மாம்ஸ்
சத்யா மாமா தனது பிறந்த நாளைக்கொண்டாடுகிறார்.

சத்யாமாமாவுக்கு அறிமுகம் தேவையில்லை.

இவரைப்பற்றிய பதிவுக்கு இங்கே


இந்த வருடம் சிறப்பு என்னவென்றால் மாமா தனது
பிறந்த நாளைக்கொண்டாட ஹைதைக்கு வருகிறார்.

தடபுடலான ஏற்பாடுகள் செய்துகொண்டிருகிறேன். :))

நாளைக் காலையில் அம்மம்மா, தாத்தா, மாம்ஸ்,
அத்தைஸ், குட்டீஸ் எல்லோரும் வரப்போறாங்க.

தனது பர்த்டே ட்ரீட்டாக சத்யாமாமா தனது
கையால் செய்யப்போகும் பாவ் பாஜிக்காக
மீ த வெயிட்டிங்.(வேணுங்கறவங்க காலை
உணவுக்கு வந்திடுங்க)

Thursday, May 14, 2009

வீக் எண்ட் ஜொள்ளு மன்னரை வாழ்த்த வாருங்கள்

நம்ம வீக் எண்ட் ஜொள்ளு மன்னர் மங்களூர் சிவாவுக்கு
15.5.09 பிறந்த நாள்.

வீக் எண்ட் ஜொள்ளா??? அப்படின்னா? என கேள்வி
கேட்கும் புதியவர்களுக்கும், அதெல்லாம் ஒரு காலம்பா!!!
என மலரும் நினைவுகளுக்கு போக விரும்புவர்களும்
ஒரு எட்டு சிவாவின் வலைப்பூவிற்கு விசிட் அடிக்கவும்

மங்களூர் சிவா வலைப்பூ


தம்பி சிவாவுக்கு பிடித்த காமெடி.

இது நம்ம எல்லோருக்கும் ஆல் டைம் ஃபேவரிட்டாச்சே!!

:))))



இது் போனஸாக :))



பிறந்த நாள் கொண்டாடும் தம்பி சிவா

எல்லா வளமும் பெற்று,
சகல சொளபாக்கியங்களுடன்
வாழ எல்லாம் வல்ல இறைவனை
மனதார பிராத்தித்து எங்கள் அனைவரின்
பிறந்த நாள் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.

(நம்ம ஃப்ரெண்ட்ஸுங்க வீட்டுக்கு எல்லாம்
ஒரு எட்டு போங்க. எல்லோரும் பதிவு போட்டிருக்காங்க)

Tuesday, May 12, 2009

ஆங்கிலப்படங்களும் நானும்

ஆங்கிலபடங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது
என் சத்யா மாமாதான்.

முதலில் நான் பார்த்த படம் HONEY I SHRUNK THE KIDS.

அந்த படத்தின் பெயர் ஞாபகத்திலேயே இல்லை.
திருமணத்திற்கு பிறகு INDEPENDENCE DAY, SPEED,
FREE WILLE,ஆகிய படங்கள் பார்த்திருக்கிறேன்.

அருமையான படங்கள். ஒவ்வொன்றும் ஒரு ரகமாக
மகிழ்விக்கும்.

ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படமென்றால்
அது Eddie Murphy நடித்த DADDY DAY CARE தான்.



வேலைபறி போன இரண்டு இளைஞர்கள் க்ரச்
நடத்த முடிவு செய்கிறார்கள். அதில் ஏற்படும்
கஷ்ட நஷ்டங்களை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள்.




தன் மகனுக்கு நல்லதொரு டேகேர் செண்டர் கிடைக்காமல்
போகவே எடி மர்ஃபி டேகேர் செண்டர் நடத்த விரும்புவார்.

மேலும் கதைக்கு விக்கிபிடியா.

இந்தப் படம் வெளிவந்த பொழுதுதான் நான் எனது
மாண்டிசோரி பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தேன்.
என் வகுப்பு இருக்கும் நாட்களில் அயித்தான்
பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டார்.

டேடி டே கேரராக பார்த்துக்கொண்டதால்தான்
தடையின்றி என் பயிற்சி முடிக்க முடிந்தது.



முடிந்தால் இந்தப் படத்தை பாருங்கள்.
உங்களுக்கும் பிடிக்கும்.

Monday, May 11, 2009

வாழ்க்கைக்கு உதவும் கல்வி பதிவுகளின் தொகுப்பு

வேலைப்பளு, விருந்தினர் வருகை ஆகிய காரணங்களால்
இந்தத் தொடரை தொடர்ந்து எழுத முடியாமல் போனதற்கு
வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


இனி இந்தத் தொடர் பேரண்ட்ஸ் கிளப் வலைப்பூவில்
மட்டும் தொடரும். இங்கே மற்றவை எழுதும் பொழுது
இந்தத் தொடர் இருப்பதே தெரியாமல் போய்விடுகிறது.

வாழ்க்கைக்கு உதவும் கல்வி பதிவுகளின் தொகுப்பு
இங்கே இருக்கிறது.


தங்களின் வளமையான ஆதரவை பேரண்ட்ஸ் கிளப்
பதிவுகளிலும் தர வேண்டுகிறேன்.

நன்றி

அருமையான உணவுக்கு ஒரு இடம்

மதியம் ஒரு மணி ஆகியும் கூலாக ஆவக்காய் ஊறுகாய்
போட்டுக்கொண்டிருந்த என்னை சந்தேகத்துடன் பார்த்து
கொண்டிருந்தார்கள் பிள்ளைகள் இருவரும்.

மின்னல் வேகத்திலாவது சாப்பாடு வந்துவிடும்
என்பது அவர்களுக்கு தெரியும் அதனால் ஒன்றும்
கேட்கவில்லை.


அயித்தான்,” சரி ரெடியாகுங்க லஞ்சுக்கு வெளில
போறோம்!!!” என்றதும் ,”எங்க போறோம்?”
என கேள்விக் கணைதான். ”போர இடத்துக்கு
தகுந்தாப்ல ட்ரெஸ் போட்டுக்கணும்!!”
அப்படி இப்படின்னு வாயிலேர்ந்து வார்த்தையை
பிடுங்க பார்த்தாலும் வாயை மூடிக்கிட்டு
சர்ப்ரைஸ மெயிண்டென் செஞ்சோம்.

இந்த வழியில போனா இந்த ஹோட்டல்னு
நல்லா தெரிஞ்சு வெச்சிருக்காங்க பசங்க.:))

ஹை! உத்சவ் போறோம் என்று சொல்லவும்
கார் திவோலி தியேட்டருக்கு பக்கது பில்டிங்கான
உத்சவ் ஹோட்டல் வாசலில் நிற்கவும் சரியாக
இருந்தது.

UTSAV, Tivoli Road,, Begumpet Police Lines,
Hyderabad - 500003 இதுதான் முகவரி.

இந்த உணவகத்துக்கு கிடைத்திருக்கும்
விருதுகள்:

HYDERABAD'S FINEST RESTAURANT BY (Diner's
club international Food utsav)

AP TOURISM'S Award of excellence
(2003-04, 2004-05, 2005-06, 2006-07)

Best restaurant of the year awarded by
Association of Catering Professionals)
2001-02, 2003-04, 2004-05, 2005-06,
2006-07)

டைம்ஸ் ஃபுட் அவார்ட் அவர்களால்
பெஸ்ட் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட்
எனும் விருதும் கிடைத்திருக்கிறது.

வெஜ், நான் வெஜ் மிக்சிங் இல்லாமல்
வெஜிடேரியன் உணவு மட்டும் கிடைப்பது
இங்கே சிறப்பு.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை
DAKSHIN THALI மதிய உணவு வேளையில்
கிடைக்கும்.

திங்கள் முதல் வெள்ளிவரை LUNCH BUFFETயும்
உண்டு.

வார இறுதிகளில் BUFFET EXOTICA
பலவிதமான வட மற்றும் தென்னிந்திய,
சைனீச் உணவுவகைகள் கிடைக்கும்.

இரவு வேளைகளில் அலாக்ரடி மெனு.

உணவின் தரத்தை பார்க்கும்பொழுது
விருது வழங்கியதில் தப்பே இல்லை
என்று அடித்துச் சொல்லலாம்.

சுவை, மணம், குணம் எல்லாம் கலந்த
ஒரு படைப்பு. நீர் மோர் அன்லிமிட்டடாக
தந்து கொண்டே இருப்பார்கள். இது தாலி மீல்ஸ்,
புஃபே எல்லாவற்றிலும் உண்டு.

வார இறுதி BUFFET EXOTICA
ரேட்ஸ் இப்படி இருக்கும்,

ADULTS - 350 + TAX
KIDS - 150 + TAX

நேற்றைய மெனு என்னவென்று
சொல்லாவிட்டால் தப்பாச்சே. :))

BUFFET EXOTICA மெனு

தக்காளி சூப்/வெஜிடபில் கிளியர் சூப்

உருளை வெஜி/ பனீர் வெஜி

சாலட் வகைகள்
மினி ஊத்தப்பம், தேங்காய் சட்னி

பனிர் பட்டர் மசாலா, பாலக் பஞ்சாபி
ஸ்டைல், வெண்பொங்கல், கடி பகோடி

வெஜ் நூடில்ஸ், காலிஃபளவர் கோப்தா,
தால் ஃப்ரை, சாம்பார், சாதம், ரசம்,
தயிர் சாதம், ஊறுகாய் வகைகள்

அப்பளம்.

பாஸ்தா வகைகள்,

டெசர்டுக்கு : தவா மிட்டாய்(பலவகையான
இனிப்புக்களை கிண்ணத்தில் போட்டு சூடாக
ரபடி போட்டு தருவார்கள்)

கேக், ஐஸ்கிரீம்.

அன்லிமிடட் மோர் கடைசியாக பீடா ஒன்று.

ஹைதைக்கு அடிக்கடி விசிட் அடிக்கும்
ஆதி, நர்சிம் கவனத்திற்கு.
”மிஸ் பண்ணாம ஒரு தபா இந்த ஹோட்டல்
போய் பாருங்க ஃப்ரெண்ட்ஸ்”.

தென்றல் அப்டேட்ஸ்

சென்றவாரம் மழையால் நனைந்த ஹைதை

இந்த வாரம் இசைமழையால் நனைந்தது.

நேற்று பாரேட் க்ரவுண்டில் 1.6 லட்சம்
பாடகர்கள் இணைந்து அன்னமாச்சாரிய
கீர்த்தனைகள் பாடினார்கள்.

பாடல்களால் பரமனை குளி்ர்வித்த
அன்னமாச்சரியரின் 601ஆவது ஜன்மதினத்திற்காக
இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல புகழ்பெற்ற பாடகர்கள் இணைந்து
பாடினார்கள்.

வீட்டுக்கு அருகேதான் பாரேட் க்ரவுண்ட்
என்பதால் பால்கனியிலிருந்தே பாடல்களை
கேட்டேன். பாவமுலோனா, பிரம்மகடிகின
பாதமு,தந்தநாநா,என பல பாடல்கள்
கேட்டேன். மொட்டைமாடிக்கு சென்று
நாங்கள் நால்வரும் இசைமழையில் நனைந்தோம்.

இந்த நிகழ்ச்சியில் ஒருமுக்கிய விடயம்.
இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனையில்
இடம்பிடித்துள்ளது.

1937ஆம் வருடம் 60,000 மக்கள் இணைந்து
தங்களது தேசிய கீதத்தை இசைத்ததுதான்
இதற்கு முந்தைய உலக சாதனை. அந்த
சாதனையை முறியடித்து அன்னமாச்சாரியாவுக்கு
ஆராதனை செய்துள்ளனர்.

அன்னமய்ய படக்குழுவினர் சிலர், பாலமுரளி
கிருஷ்ணா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில்
பங்குபெற்றனர்.

****************************************

அருமையான அன்னம்மய்ய பாடல் பார்க்க
தவறாதீர்கள்.

ப்ரம்மம் ஒகடே பர ப்ரம்ம ஒகடே


*****************************************

நேற்று நான் கண் திறக்குமுன்னரே பரிசுகள் மற்றும்
வாழ்த்து அட்டைகளுடன் வந்து பிள்ளைகள்
இருவரும் ”ஹேப்பி மதர்ஸ் டே” வாழ்த்து
சொன்னார்கள். முதல் நாளே அப்பாவை
அழைத்து சென்று பரிசு வாங்கிவந்து
சர்ப்ரைஸாக கொடுத்தார்கள்.

அருமையான வார்த்தைகள் அடங்கிய
வாழ்த்து அட்டைகள். சூப்பர் செலக்‌ஷன்.
**************************************

சர்ப்ரைஸாக இருவரையும் லஞ்சுக்கு
அழைத்து சென்றோம். அதைப் பற்றி
விரிவாக பதிவு போட்டு வயிற்றெரிச்சலைக்
கொட்டிக்கொள்ள வேண்டாமா!!! :))
******************************

வேறு என்ன பெயர் வைப்பது என்று
யோசித்து மண்டை காய்ந்து தென்றல் அப்டேட்ஸ்
என்றே வைத்துக்கொண்டேன். அமித்து அப்டேட்ஸ்
பதிவு போடும் அமித்து அம்மா
“ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி”

****************************

Wednesday, May 06, 2009

பாட்டு கேக்க வாங்க...

நீங்க மட்டும் பாட்டை கேட்டுட்டீங்க,

ஊர் காரவுக மட்டும் கேட்டு சந்தோஷப்படுங்க

அப்படி இப்படின்னு என்னிய போட்டு காய்ச்சி
எடுத்திட்டாங்க அம்புட்டு பேரும்.

தப்பு என் பேர்ல இல்ல. அப்துல்லா தம்பி
அனுப்பிவெச்ச சீடியில பாட்டை கேக்கத்தான்
முடியும். கணிணியில் ஏத்த முடியாது!!!



இப்படி எல்லாம் பதிவு போட்டு பயமுறுத்துவாங்கன்னு
நினைச்சு கூட பாக்கலை. :))))

என்னிய நாட்டமை ரேஞ்சுக்கு ஆக்கினதுதான்
சரியில்லை.



இதெல்லாம் அப்துல்லா மேலே அன்பாயிருக்கறவங்க
கூட்டம் இங்கே அதிகம் என்பதை காட்டுது.

வாழ்த்துக்கள் அப்துல்லா.

சரி பாட்டைக் கேப்போம். எல்லோரும் ஒரு டான்ஸ்
போட ரெடியாகுங்க. அப்துல்லா குரல்தானான்னு
இருக்கு!!! பல தத்துவ முத்துக்கள் நிறைந்த பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA



நிச்சியமா இளைஞர்களின் காலர் ட்யூன் ஆக
எல்லா தகுதியும் இருக்கு. விருதுக்கு அட்வான்ஸ்
வாழ்த்துக்கள் அப்துல்லா.

என் கையால் முதல் முதலாக வலையேற்றம்
செய்யும் வாய்ப்பை தந்ததுக்கு நன்றி அப்துல்லா.

தென்றல் அப்டேட்ஸ்

கொதிக்கும் உலையாக கொதித்துக்கொண்டிருந்த ஹைதைக்கு
நேற்று வர்ணதேவன் எட்டிப்பாத்தான். ச்சும்மா ஜில் ஜில் காத்து,
இடி மின்னல் மழை என்னவோ கொஞ்சம் தான். 1 மில்லி மீட்டர்
மழை பெய்திருந்தது.

**********************************

பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஐமேக்ஸ்
சென்றிருந்தேன். சினிமா பார்க்க இல்லாமல்
அங்கே கேம்ஸ் விளையாட அழைத்துச்சென்றேன்.
ஒரே குஷி. (பர்ஸ் கொஞ்சமா இளைச்சிடுச்சு.)
***************************************

வெயிலுக்கு பயந்து அப்பா, அம்மா எங்கேயும்
வரவில்லை. கூலர், ஏசி ஓடினாலும்
உஸ் புஸ்ஸுன்னு தான் கஷ்டபட்டாங்க.

”உங்களை யாரு தாத்தா ரிடர்ன் டிக்கட் புக்
செஞ்சுகிட்டு வறச்சொன்னாங்கன்னு” பசங்க
சண்டை போட்டுகிட்டு இருக்காங்க.
இன்றைக்கு ஊருக்கு கிளம்பறாங்க.
****************************************

எல்லோரு என்னிய திட்டி தீர்த்திருப்பீங்க.
அப்துல்லா பாடின பாட்டை நான் மட்டும்
கேட்டுட்டேன்னு. கூடிய சீக்கிரம் அதை
எம்பி3 ஃபார்மேட்டுக்கு மாத்தி பதிவு
போட்டுவிடுகிறேன். அதுவரை
பொறுத்தருள வேண்டுகிறேன்.
************************************

லீவு முடிஞ்சு ஆட்டம் ஆரம்பமாகப்போகுதுன்னு
சொல்லத்தான் இந்த வெள்ளோட்ட பதிவு

:)))))))))))))))))))