Wednesday, July 01, 2009

சிக்கி... சிக்கி..

அப்பாவால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இது.
பாய்க்கடையில் 1 ரூ்பாய்க்கு வாங்கி வருவார் அப்பா. மேலே
தேங்காப்பூவெல்லாம் தூவி சூப்பரா இருக்கும்.

ஒழுங்கா சைக்கிள் ஓட்டினா, சொன்னபடி
வேலைகளை முடிச்சிருந்தா, ஹிந்தி எக்ஸாம்ல
பாஸ் செஞ்சா என எல்லாத்துக்கும் எனக்கு
அப்பா தரும் ட்ரீட் கடலை உருண்டை.

ஒரே ஒரு மாதம் பள்ளத்தூர் ஆச்சி காலேஜ்
ஹாஸ்டலில் தங்கி இருந்த என்னை பார்க்க
வந்த போது அல்லது பார்க்க வருபவர்களிடமெல்லாம்
அப்பா கொடுத்தனுப்பியதும் இது தான். :))

”ஏன்ப்பா கடலை உருண்டையே வாங்கித்தர்றீங்க”?
அப்படின்னு தெகிரியமா கேட்டப்போ அப்பா சொன்னது,
“இது உடம்புக்கு நல்லது. வெல்லம் இரும்புச் சத்து
தருது. வேர்க்கடலை உடலுக்கு நல்லது. சல்லிசான
விலையில உடலுக்கு நல்லதாச்சேன்னு வாங்கி
கொடுத்தேன். பிடிக்கலைன்னா வேற ஏதாவது
வாங்கித் தர்றேன்” என்றார்.

பழகிபோயிவிட்டாதல் கடலை உருண்டை பிடித்த
பண்டமாகிவிட்டது.

மும்பையிலிருந்து கிளம்பும்போதே மாமா
ஞாபகமா சொல்லி அனுப்புவார். ”புனேல
லோனாவாலா சிக்கி கிடைக்கும். தூங்கிடமா(!!)
வாங்கிகிட்டுவா!”

எல்லா இடத்திலும் கடலைமிட்டாய், கடலை
உருண்டை கிடைக்கிறது. ஆனாலும் லோனாவாலாவில்
புகழ் பெற்றது.
லோனாவாலாவின் இருக்கும் புகழ்பெற்ற சிக்கி
கடையின் போட்டோ இது.




முப்பது வகையான சிக்கிக்கள்.
(பலதுக்கு பேருதான் தெரியாது)

பாதாம், பிஸ்தா, எள்ளு என
பல வகைகள்



சிக்கி பற்றியவிக்கிப்பீடியா:


சென்ற முறை மாமா வந்திருந்த போது
5 பாக்கெட் சிக்கி வாங்கி வைத்திருந்தேன்.
மாமா வந்ததும் கையில் கொடுத்த போது
சின்ன பிள்ளையாய் “ஹை என்னோட
ஃபேவரீட்!! இன்னும் ஞாபகம் இருக்கா உனக்கு?!”
என ஆச்சரியப்பட்டார்.

சென்ற வாரம் இங்கே லோக்கலில் இருக்கும்
அத்தை மகள் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
அக்காக்கு பூ, அக்காவின் மகளுக்கு பிறந்த
நாள் என்பதால் உடை எல்லாம் வாங்கிக்கொண்டேன்.
ஞாபகமாக 2 சிக்கி பாக்கெட். இது பாவாவுக்கு(அக்கா
கணவர்).

கையில் கொடுத்ததும் ,”விலையுயர்ந்த ஸ்வீட் வாங்கிக்
கொண்டுவந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷ
பட்டிருக்க மாட்டேன். எனக்கு மிகவும் பிடித்ததை
கொண்டு வந்து கொடுத்திருக்காய்” என அக மகிழ்ந்தார்.

அல்ப காசுக்கு வாங்கின பொருளாக என நினைக்காமல்
அவர்களுக்கும் சந்தோஷம். அவர்களின் சந்தோஷம்
கண்டு எனக்கும் சந்தோஷம்.

சரி யாருக்கெல்லாம் கடலை மிட்டாய் பிடிக்கும்?
ஆளுக்கொன்னு எடுத்துக்கோங்க.:))