Total Pageviews

Wednesday, September 30, 2009

என்னதான் வலியோ!!???????

வலி.. வலி..வலி வலி என் வாழ்வில் ஒரு பங்கு ஆகிவிட்டது.
வலியோடு வாழ்வது எப்படி? என்று பழக ஆரம்பித்திருக்கிறேன்.

அப்படி என்னதான் வலி????

என் முந்தைய பதிவு இங்கே.


ஸ்பாண்டிலைடிஸ் என்று சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
ட்ராக்‌ஷன், பிசியோதெரபி கையை அசைக்க உதவியது.
மெல்ல மெல்ல முன்னேற்றம் வந்தது. ஆனாலும்
கைகளில் வலி குறையவில்லை.

மேலும் பரிசோதித்து பார்த்த மருத்துவர் சொன்னது
Fibromyalgia - பேரெ வாயில் நுழையவில்லை எனக்கு.
ஃபைரோமயால்ஜியா. இது வரை இதைப்பற்றி
கேள்விபட்டதுமில்லை.





வலி வலி என எப்போதும் வலி இருந்து கொண்டே
இருக்கும். அதிகம் பெயின் கில்லர் எடுத்துக்கொள்ளக்
கூடாது என்பதால் வலி வரும்போது மேலே நிவாரனி
பூசி, வெந்நீர் ஒத்தடம் தான். தவிர நரம்புகளுக்கு
வலு தரும் மருந்து எடுத்துக்கொள்கிறேன்.

Fibromyalgia - எப்படி எதனால் வருகிறது என்று
கண்டுபிடிக்க முடியாத ஒன்றாம்.நோயின்
அறிகுறி பற்றிய செய்திக்கு இங்கே கி்ளிக்கவும்.
கீழே படத்தில்
பாருங்கள். இந்த இடங்களில் எல்லாம் வலி இருக்கும்.
தலை சுற்றி மயக்கம் வரும். குனிந்து ஏதும்
செய்யப்போனால் ”டமால்” என் விழுந்துவிட நேரம்.
படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல் பெரிய விடயம்.




எனக்கு வலது கையில் வலி என்பதால் கையை
உபயோகிப்பது குறைவாகிப்போனது.
தூக்கம் நல்ல நாளிலேயே சரியாக
வராது. இந்த நிலையில் நிம்மதியான
தூக்கம் இராது. கொடுக்கப்படும்
மருந்தில் தூக்கம் வரவழைக்கும் காரனிகள்
உண்டு. தூக்கம் ஒருவகையான மருந்தாகிறது.
அதிக தூக்கம் பழக்கமேயில்லாத ஒன்று
கஷ்டமாக இருக்கிறது.

மருந்துடன், உடற்பயிற்சி அதுவும் ஸ்ட்ரெட்சஸ்
என்ப்படும் வகை மிக அவசியம் என
மருத்துவர் பரிந்துரை செய்திருக்கிறார்.
1 மாதத்தில் கொஞ்சம் முன்னேற்றம்.

அதிகம் வீட்டு வேலை(பாத்திரம் கழுவுதல்,
பெருக்குதல்) காய்கறி வெட்டுதல் போன்றவை
செய்யாமல் இருந்தால் உடற்பயிற்சியின் உதவியோடு
வலி குறைவாக இருக்கிறது.

சோம்பி இருக்க முடியாமல் மெல்ல மெல்ல
என் வேலைகளை செய்கிறேன். ஆனால்
முன்புபோல் செய்யமுடியவில்லையே என்று
மன வருத்தம். மன வருத்தம் மேலும் வருத்தத்தை
தரும் என்று சொல்கிறார்கள். அதனால் மனதை
மாற்ற பாட்டு, புத்தகம் எப்போதாவது பதிவு என
இருக்கிறேன்.


இந்த நேரத்தில் நம் ராமலட்சுமியின் இந்த கவிதை
படித்து பாருங்கள். எனக்கு ஊட்டம் தரும் விதமாக
இருக்கிறது.

ஒரு வேண்டுகோள்:
Fibromyalgia பற்றி அதிகம் சொல்லக் கூடியது
நம் தமிழ்த்துளி தேவா டாக்டர் தான்.
உங்களிடம் எனது அன்பு கோள் இதுதான்
தேவா சார். இந்த வலியைப் பற்றி தமிழில்
பதிவு எழுதுங்கள். பலருக்கு இந்த வலி
இருக்கிறது என்றே தெரியாமல் கழுத்தெலும்பு
தேய்வுக்கு மருத்துவம் தவறாக கொடுக்கப்படுகிறதாம்.
ப்ளீஸ்...

வலைத்தளத்தில் தேடினால் நிறைய்ய விடயங்கள்
கிடைத்தது. எப்படி எதிர்கொள்வது? போன்ற
விடயங்கள். என் மருத்துவர் சொன்னது Fibromyalgia
வுக்கு இந்தியாவில் அதிக மருந்துகள் அல்லது
மருத்துவ முறை இல்லை. விடாமல் உடற்பயிற்சி
முக்கியம். அவர் சொன்ன தகவல் வலிகுறைய்ய
தாய்ச்சி கற்றுக்கொள்வார்களாம்ம். (தாய்ச்சி ஒருவகை
கராத்தே பயிற்சி)Taichi india


”நானும் தாய்ச்சி கத்துக்கறேன்”என்று அயித்தானிடம்
கேட்டேன். உடனே ஆஷிஷ், அம்ருதாவைக்கூப்பிட்டு
“கண்ணுங்களா! எப்பவும் என் கூடவே இருங்க.
என்னிய பத்திரமா பாத்துக்கங்க. நீங்க டீவி பாக்கறப்ப
ஏதும் சத்தம் கேட்டா கவனமா இருங்க”ன்னு சொன்னார்.

பசங்க,”ஏன்பா! என்னாச்சு”ன்னு கேட்க,

”அம்மா தாய்ச்சி கத்துக்கப்போறாங்களாம்!!!!” என்னை
நீங்க தான் காப்பத்தணும்னு” கிண்டல் அடிச்சு பயந்து
போயிட்டார்.

அயித்தான் ரொம்பவே பயந்து போயிருப்பதால்
தாய்ச்சி கற்றுக்கொள்வதை தள்ளி வைத்து
யோகா மட்டும் செய்வதாக முடிவெடுத்திருக்கிறேன்.

:)))))))))


Tuesday, September 29, 2009

தென்றல் வந்தக் கதை..

ரெய்கி கற்ற பிறகு மெடிட்டேஷன் செய்வேன்.
சில சமயம் அபூர்வமாக ஏதாவது
மெசெஜ்கள் கிடைக்கும். அதாவது ஏதோ நிகழ போவது
போல். கண்ணை மூடினால் கம்ப்யூட்டர் மானிட்டர் போன்ற
ஸ்கிரீனில் தமிழ் எழுத்துக்கள் போகும். இப்படி பலமுறை
போக ஆரம்பித்த பிறகு யோசிக்க ஆரம்பித்தேன். நமக்கு
வரும் செய்தி தான் என்ன? என கூர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.


தமிழில் நான் எழுதுவது என்பது சாத்தியமில்லை என்பது
என் திடமான நம்பிக்கை. பதிவர் வண்ணத்துப்பூச்சியார்
அவர்கள் என்னை சென்னை இரயில் நிலையத்தில்
சந்தித்த போது அப்பாவும் உடனிருந்தார்.

என் டிரையின் கிளம்பிய பிறகு அப்பாவுடன்
பேசிக்கொண்டிருந்திருப்பார் போல.
என் எழுத்தைப் பற்றி சூர்யா சொல்ல அப்பா
சொன்னது சூர்யா அவர்களுக்கு செம அதிர்ச்சி.
“அவளுக்கு தமிழே வராது. தமிழ் படிக்க ரொம்ப
கஷ்டப்படுவாள்”!!!!!!! :))) எல்லோரும் சொல்வது
போல் தமிழ் தெரியாது என்று ஸ்டைலுக்காகச் சொல்லவில்லை.

தாய்மொழி தெலுங்கு. வீட்டில் அதுதான் பழக்கத்தில்
இருக்கும் மொழி. பேச்சுத் தமிழ் தெரியும். எழுத
படிக்கத் தெரியும். ஆனால் கதை, கட்டுரை, கவிதை
எல்லாம் எழுதும் அளவுக்கு தமிழ் தெரியாது. அதுதான்
மேட்டர்.

என்னைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்பதால்
“நாம எங்க தமிழ்ல எழுத போறோம்”!!! என மெசெஜை
லட்சியம் செய்யாமலிருந்தேன். 4 மாதங்கள் கழித்து
இம்சை அரசி அவர்களின் வலைப்பூ பற்றி விகடன்
வரவேற்பரையில் வந்திருந்தது. அதைப் படித்து
விட்டு இணையத்தில் அவரது வலைப்பூ தான் நான்
முதலில் படித்தது. அங்கேயிருந்து சில வலைப்பூக்களுக்கு
போய் படித்தேன். செம இண்ட்ரஸ்டிங்காக இருந்தது.

புத்தகம் வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று.
இப்போது இணையத்தில் படிக்க வாய்ப்பு. இதுதான்
என்னை வலைப்பூ பக்கம் வரத் தூண்டியது.

பா.பா.சங்கத்தில் பக்கம் போனதில் மைஃப்ரெண்ட்
இமெயில் ஐடி கிடைத்தது. இம்சை அரசிக்கு
என் வாழ்த்தை சொல்லுங்கன்னு அவருக்கு ஒரு
மெயில் அனுப்பி ஆரம்பித்தது முதல் உறவு.

அந்த நேரம் பினாத்தல் சுரேஷ் அவர்கள்
Wifeology பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
படிக்க படிக்க இம்புட்டு பெண்கள் எழுதறாங்களே!
ஒருத்தராவது இவருக்கு எதிராக எழுதக்கூடாதா?
என ஆதங்கப்படுவேன்.

”நீங்களே எழுதுங்க அக்கா!” என்று மை ஃப்ரெண்ட்
ஊக்குவிக்க வலைப்பூ துவங்கினேன். இ கலப்பை
லிங்க் அனுப்பி, தமிழ் டைப் அடிப்பது எல்லாம்
சொல்லிக்கொடுத்தது அன்பு தங்கச்சி மைஃப்ரெண்ட் தான்.
மனமார்ந்த நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

எத்தனையோ பெயர்கள் யோசித்து கடைசியில்
நான் பிறந்து வளர்ந்த ஊரான புதுக்கோட்டைக்கு
பெருமை!!! சேர்க்குமுகமாக புதுகைத் தென்றல்
என்ற பெயரில் பதிவெழுத ஆரம்பித்தேன்.
மும்மத பிரார்த்தனை பதிவுதான் என் ஆரம்ப
பதிவு. அது வித்தயாசமான துவக்கம்னு ரசிகன்
பாராட்டியிருந்தார். அப்பெல்லாம் என் பதிவுகளுக்கு
ரசிகன் தான் அதிகமா பின்னூட்டம் போட்டு
பாராட்டி, ஊக்குவித்து எல்லாம் செய்தார்.

அப்புறம் ஆரம்பமானது ஹஸ்பண்டாலஜி. :)))
செம காரசாரமான விவாதங்கள், வெளிநடப்புக்கள்
என ஜாலியா இருக்கும் ஹஸ்பண்டாலஜி வகுப்பறை.

அக்கா, அக்கான்னு பேசறவங்க கூட அவங்க
மனைவிகிட்ட என்னை அறிமுகப்படுத்த
பயப்பட்டாங்க!!! ஒரு டெர்ரரா அறிமுகமானோம்ல.
:)))

ஹஸ்பண்டாலஜி பதிவுகள் தந்த அறிமுகம்
என் எழுத்தை படிக்கவும் மக்கள் வந்தனர்.
”அட நாமும் தமிழில் எழுதி அதை நல்லா
இருக்குன்னு!”சொல்றாங்க என்பது சந்தோஷம். உபயோகமான
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளனும் என்பதுதான்
என் ஆசை. படிப்பவர்கள் ”புதுகைத் தென்றல் வலைப்பூ பக்கம்
போனோம்பா, நல்லா இருந்துச்சு, மைண்ட்ல
வெச்சுகிட்டு பின்னாடி யூஸ் செஞ்சுக்கலாம்”
எனும் எண்ணம் வரவேண்டும். இது தான்
ஆசை. உங்கள் அனைவரின் ஆதரவோடு
484 பதிவுகள் போட்டுவிட்டேன். இன்னும்
இரண்டு வருடங்கள் கூட முடியவில்லை
என்பது தான் சிறப்பு.





பதிவு எழுதுவது என்று ஆரம்பித்து இப்போது
ஒரு உலகமே உருவாகிவிட்டது.புது புது உறவுகள்,
நட்புகள் என அன்பு நிறைந்த உலகம் என்னுடையது.

கைவலி என்று பதிவு போடுவது
குறைந்துவிட்டாலும் ஆன்லைனில் பார்த்தாலே
அதட்டும் ஜீவஸ், ரங்கா, மங்களூர் சிவா
என அன்பு நெஞ்சங்கள். கை வலி பற்றி
எஸ்.எம்.எஸ் அடித்தாவது தெரிந்து கொள்ளும்
கோமா, மெயிலோ, போனோ செய்து பேசும்
நட்பு ராமலட்சுமி என எத்தனையோ கொடுத்திருக்கான்
இறைவன்.



ஹைதையில் “தாரே ஜமீன் பர்” படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியை நான். ஆனால் அதிகமாக
டூர் போகும் வேலை அயித்தானுக்கு. நான் வேலைக்கு போனால்
பிள்ளைகளை சரிவர கவனிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக
வேலைக்குச் செல்லவில்லை. பார்ட்டைம் வேலை எல்லாம்
இந்தியாவில் சாத்தியமில்லை.( எங்கள் அப்பார்ட்மெண்டில்
இருக்கும் தோழி ஒருவர் டெல்லி பப்ளிக் பள்ளியில் ஆசிரியை.
என்னிடம் இருக்கும் நான் தயாரித்த புத்தகங்கள், பயிற்சி
எல்லாம் பார்த்து என்னை அவர்கள் பள்ளியில் ப்ர்ப்ரைமரி
இன்சார்ஜாக சேரச்சொல்லி ஒரே அடம்.)

படம் பார்த்துமுடித்தது மனதில் ஏதோ நெருடல்.
மாண்டிசோரி ஆசிரியையாக நீ வேலை பார்க்காவிட்டால்
என்ன? பெற்றோர்களுக்கு தேவையான டிப்ஸ்கள்,
சில்ட்ரன் சைக்காலஜி பற்றி, இப்படி நிறைய்ய சொல்லலாமே.
ஒரு ஆரோக்கியமான தலைமுறை பிள்ளைகள்
உருவாக உன்னாலான தகவல்களை பகிர்ந்து
கொள்ளலாமே!! என்று தோன்றியது.

அதனால் உருவானது தான் பேரண்ட்ஸ் கிளப். தம்பி இம்சை அவர்கள் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று கிளப்பில்

என்னோடு
* விசயக்குமார்

* Vidhoosh
* பேரன்ட்ஸ் கிளப்
* வண்ணத்துபூச்சியார்
* கிருத்திகா
* Jeeves
* அபி அப்பா
* சுரேகா
* பாச மலர், எம்.எம்.அப்துல்லா ஆகியோரும் எழுதி தேவையான
விழிப்புணர்வை வழங்குகிறோம்.

கானக்கந்தர்வன் யேசுதாஸ்- இவரது பாடல்கள் என்றால்
உயிர். அவரது பாடல்களை பதிய வேண்டும் என்ற
ஆசையுடன் ஆரம்பித்தது கானக்கந்தர்வன் வலைப்பூ.
யேசுதாஸ் அவர்களின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு
பாடல்கள் இங்கே இருக்கு. தம்பி நிஜம்ஸ், நாமக்கல் சிபி,
ஜி3,ஆகியோரும் என்னோடு இங்கே எழுதறாங்க.

தென்றல் வந்த கதைன்னு சொல்லி தென்றல்
செல்லும் பாதையையும் சொல்லிட்டேன் போல இருக்கு.

:))))))))))))))))

Monday, September 28, 2009

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!!!

9நாட்கள் நவராத்திரி பூஜை முடிந்து இன்று தசரா.
10ஆம் நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.

மஹிஷனை அன்னை சம்ஹரித்த தினமாகவும்,
ராவணனை ஸ்ரீராமர் கொன்ற தினமாகவும்
பலவித கதைகள்.

எப்படியானால் என்ன??? தீமையிலிருந்து
நன்மை. தீய சக்தியின் மீது வெற்றி.




தமிழ் நாட்டில் கொலு. சாரதா நவராத்திரி என்று பெயர்.



சுண்டல் இல்லாத கொலுவா!!!!!


வட இந்தியாவில் ராவணன் பொம்மை எரிப்பு.


மைசூரில் சாமுண்டீஸ்வரி யானை அம்பாரியில் பவனி


அன்னையவள் அனைவருக்கும் தீயவற்றை நீக்கி
நல்லதை அருள வேண்டுகிறேன்.

அனைவருக்கு தசரா வாழ்த்துக்கள்

Friday, September 25, 2009

மகதீரா!!!!!!!

1609 ஆண்டில் துவங்குகிறது படம். காலபைரவன்(ராம் சரண் தேஜா,
மெகா ஸ்டார் சிரங்சீவியின் மகன்) உதயகார்க பேரரசின் மெய்காப்பாளான்.
இவரின் குடும்பத்தாருக்கு ஒரு புகழ் உண்டு. போரில் 100 பேரையாவது
வெட்டி சாய்த்துவிட்டு 30 வயதுக்குள் இறந்துவிடுவார்கள்.

இளவரசி மித்ரா (காஜல் அகர்வால்)வும் காலபைரவனும் காதலிக்கிறார்கள்.
இராஜாவின் உறவினனும் மித்ராவை விரும்ப இருவருக்கும் இடையே
போட்டி நடக்கிறது. வென்றது காலபைரவன். உறவினன் நாடு கடத்தப்
படுகிறான். ஆனால் அவர்களது குடும்ப பாரம்பரிய கதையால்
அரசர் தனது மகளின் நீண்ட விவாக வாழ்விற்காக

காலபைரவனைக் கோர அவனும் இளவரசியை விட்டுக்கொடுத்து
மெய்க்காப்பளானாகவே இருக்க விரும்புவதாக கூறுகிறான்.

தேசத்தின் நலன் கருதி பைரவனுக்கு பூஜை நடக்கும் பொழுது
ராஜாவின் உறவினன், எதிரி நாட்டு மன்னன் ஷேர் கானுனுடன்(ஸ்ரீ ஹரி)
கலந்து ராஜாவை கொன்று பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து
போர் செய்ய காலபைரவன் 100 பேர்களை கொன்று போரி
புரிந்து கொண்டிருக்கும் வேளையில் இராஜாவின் உறவினன்
காலபைரவனையும், மித்ராவையும் கொன்று விடுகிறான்.
மலையின் உச்சியிலிருந்து இருவரும் கீழே விழுந்து இறக்கிறார்கள்.


400 வருடங்களுக்கு பிறகு இந்த நூற்றாண்டில் காலபைரவன், மித்ரா,
வில்லன், ஷேர்கான் நால்வரும் மறுபிறவி எடுக்கிறார்கள்.




இந்த ஜென்மத்தில் பைக்ரேஸ் ப்ரியராக வரும் ஹர்ஷா( ராம் சரண் தேஜா)
அருமையாக நடித்திருக்கிறார். காதலர்கள் இணைகிறார்களா?
என்பதுதான் மீதிக்கதை.

ராஜர் காலக்கதையும் சரி இந்தக்காலக்கதையும் சரி
அலுப்புத்தட்டாமல் கொண்டு போயிருக்கிறார்கள். அதற்கே
ஷ்பெஷல் பாராட்டு தரலாம்.

பாவம், காமெடித் திலகம் ப்ரம்மானந்தாவைத்தான்
வீணடித்து இரண்டு காட்சியில் அடிவாங்கிக்கொண்டு
போய்விடுவதாக காட்டியிருக்கிறார்கள்.




57 நாட்களுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது
இத்திரைப்படம். பாடல்கள் ”பஞ்சதாரா பொம்ம்” மெலடியாக
இனிக்கிறது.

15 வருடங்களுக்கு முன் சிரஞ்சிவியின் சூப்பர் ஹிட் பாடலான
”பங்காரு கோடிபிட்ட” இந்த படத்தில் ரீ மிக்ஸாக ஒளிக்கிறது.

அந்தக்காலப்பாடல் சிரஞ்சிவியின் நடனத்துக்காக அவரது
ப்ரத்யேக ரசிகர்களால் இன்றும் நினைவில் இருக்கிறது என்றால்
இப்போதைய பாடல் ராம் சரணின் ரசிகர்களுக்கு விருந்து தான்.

அப்பா ஆடிய ஆட்டம் டிஸ்கோ சாந்தியுடன்:



மகனின் ஆட்டம் முமைத் கானுடன்:
சிரஞ்சீவியும் ஒரு ஆட்டம் இதில் போட்டிருக்கிறார்.



எங்களுக்கு பிடித்திருக்கிறது.

ஆல் தி பெஸ்ட் ராம் சரண்.

Friday, September 18, 2009

ஹைதை -ஆவக்காய பிரியாணி

தலைப்பு வேற பிடிக்கக்கூடாதா? ஏற்கனவே வடகரை
அண்ணாச்சியும் இதே தலைப்புதான் இல்லையா?-
அப்படின்னு நண்பர் ஆதி கதம்பமாலை பதிவில்
கேட்டிருந்தார். தென்றல் அப்டேட்ஸ் அது இதுன்னு
யோசிச்சு ஒண்ணும் தேராம தான் கதம்பமாலைன்னு
வெச்சேன். சரி இப்ப மாத்திப்புடலாம்னு ஹைதை -ஆவக்காய பிரியாணி
அப்படின்னு வெச்சிருக்கேன்.

இனி வாரம் ஒருமுறை ஹைதை-ஆவக்காய பிரியாணி
வரும்.

****************************************

தோணிச்சுன்னா எங்க ரூம்ல வந்து பசங்க படுத்துக்குவாங்க.
இன்னைக்கு அவசரத்துல அம்ருதா மட்டும் தன்னோட தலையனை,
பெட்ஷீட் எடுத்துவைக்கலை.
”இன்னைக்கு சோறு கட்அம்ருதாவுக்கு!”
“ஏம்மா!”

”தலையனை,பெட்ஷீட் எடுத்துவைக்கலை”!

”அதுக்கு எங்க ரூம்ல தூங்க விடமாட்டேன்னு சொல்லலாம்.
அதுக்காக எதுக்கு சோறு கட்?”

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


**********************************

ஹோண்டா சிட்டி தாழ்மையா இருப்பதால் உயரம்
கொஞ்சம் அதிகமான அயித்தானுக்கு முழங்கால் வலி
வருது. வித்துட்டு வேற வண்டி வாங்க முடிவு.

“அப்பா ஹன்ச் பேக் மாடல் வேண்டாம். அழகா
செடான் யூஸ் செஞ்சிட்டு எதுக்குப்பா ஹன்ச் பேக்
மாடல் பாக்கறீங்க”???

பேசாம எஸ் யூ வி இல்லாட்டி சி யூ வி மாடல்ஸ்
பாருங்கப்பான்னு “ லெக்சர் கொடுத்தது ஆஷிஷ்னு
சொல்லணுமா!!!!

எதுவும் புரியாம முழிச்சிட்டு அப்புறமா அயித்தானிடம்
விவரம் கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.

” ஹன்ச் பேக் வாங்காதீங்கன்னு என்னமா ஆர்க்யூ
செய்யறான்னு” அப்பாவுக்கு ஒரே பெருமை!!!!

*******************************************

முதல்வர் ராஜசேகரரெட்டியின் அகால மரணத்துக்கப்புறம்
இடைக்கால முதல்வரா திரு.ரோசய்யா இருக்காரு.
எல்லோரும் ஜெகனை முதல்வராக்கனும்னு கங்கணம்
கட்டிகிட்டு இருக்காங்க. காங்கிரஸ் தலைமையகம்
இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு முடிவு எடுக்கலாம்னு
சொல்லியிருக்கு.

இந்த நிலையில அமைச்சர்கள் யாரும் செக்கரட்ரியேட்
பக்கம் வர்றதே இல்லையாம். :((

”வந்து உங்க வேலையை பாருங்கப்பான்னு” ரோசைய்யா
கூப்பிடும் நிலை. தன் நிலையை உணர்ந்து
வேலை பார்க்காத அமைச்சர்களுக்கு காங்கிரஸ்
தலைமையகம் தண்டனை ஏதும் ஏன் தரக்கூடாது????

மக்கள்தான் யோசிக்காம ஓட்டு போடுவாங்க.
தலைமையகம் கூடவா யோசிச்சு முடிவு எடுக்க
மாட்டாங்க?????????????

கந்தா காப்பாத்து.


********************************

லீவு விட்டாச்சு. அக்டோபர் 4 வரை என் ப்ரெண்ட்ஸ்
என் கூடவே இருப்பாங்க.

எம்புட்டு சண்டையோ, என்னென்ன கூத்தோ!!
நா காலிடா சாமி இப்படி
புலம்பிக்கிட்டு கிடப்பது அயித்தான். :)))

(என் ப்ரெண்ட்ஸ் ஆஷிஷ் அண்ட் அம்ருதா)

:)))))))))))))

Thursday, September 17, 2009

ஏடாகூடா ஆசிர்வாதங்கள்!!!!

அப்பா எப்போதும் சொல்லும் வாழ்த்து
“மனம்போல் வாழ்க்கை” அல்லது “வாழ்க வளமுடன்”தான்.
இந்த முறை பிறந்தநாளுக்கு அப்பா சொன்ன வாழ்த்து,
“தொங்கத் தொங்கத் தாலி கட்டி!நல்லா இரு”!!!

”அப்பா! தாலியை சோக்கர் டைப்ல போடலைப்பா,
தொங்கத்தான் கட்டியிருக்கேன்” இது நான். :)

மறுமுனையில் ஒரே ஹா..ஹா..ஹா.தான்.

”என்னப்பா காலங்காத்தால காமெடி பண்ணிகிட்டு
இருக்கீங்க!” இதைக்கேட்டதும் அப்பா சொன்னது,
“தொங்கத் தொங்கத் தாலி கட்டின்னா அர்த்தம்
கூன் விழுந்து உன் தாலி இன்னும் தொங்கும்
அளவுக்கு நீண்ட் ஆயுளும், தீர்க்க சுமங்கலியாகவும்
இருக்கணும்னு ஆசிர்வாதம் செஞ்சேன்னு” சொன்னாரு.

அப்பாவோட பாசம் ஜாஸ்தியா போச்சு.......


கடந்த 14ஆம் தேதி அம்மம்மா தாத்தாவின் 60ஆவது
திருமண நாள். போனைப்போட்டு அம்மம்மாகிட்ட
பேசினா “என்னைப்போல நீயும் 60ஆவது திருமணநாள்,
80ஆவது திருமணநாள் எல்லாம் கொண்டாடம்னு
ஆசிர்வதிச்சாங்க”




அப்பா சொன்ன வாழ்த்து பத்தி சொன்னதும் அம்மம்மா
இன்னும் சில ஏடாகூட ஆசிர்வாதங்கள் இருக்குன்னு
சொன்னாங்க.( ஏடாகூடம்னா ஏடாகூடமான பொருள்
வரும் வாழ்த்து இல்ல. வாழ்த்துற விதம் கொஞ்சம்
ஏடாகூடமா இருக்கும்.) ”ஆஹா சொல்லுங்கம்மா!”ன்னு
அம்மம்மாகிட்ட கேட்டதை இங்கே சொல்றேன்.
(இதை எதிர்க்கறவங்க தயவு செஞ்சு படிக்கவேண்டாம். ப்ளீஸ்)


உறவினர் வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிப் பெண்ணிற்கு
அந்த வீட்டில் இருக்கும் மாமியார் தனது புதுமருமகளை
அறிமுகப்படுத்தறாங்க. ”கால்ல விழுந்து கும்பிட்டுக்கம்மா”
என்றதும் விழுந்து கும்பிட்ட மருமகளுக்கு விருந்தாளி
அம்மா செஞ்ச ஆசிர்வாதம்,”உம்பொட்டழிய!! உன் தாலியறுக்க!!!
உன் வீட்டுகோலம் கலைய!!!” வந்தது கோபம் மருமகளுக்கு
“என்ன ஜென்மமோ, ஆசிர்வாதத்தைப்பாருன்னு!!!” மாமிக்கும்
முறைப்புக்காட்டிட்டு கோபத்தோட உள்ள போயி புருஷன் கிட்ட
“உங்க உறவுக்காரங்க எல்லோருமே உங்க அம்மா மாதிரி தான்
ஏடாகூடமா இருப்பாங்களா”ன்னு சண்டை போட ஆரம்பிச்சா..

உள்ள கேக்குற சத்தத்தை பாத்து விருந்தாளி அம்மாவே
உள்ள வந்து புருஷன் பொண்டட்டியைக்கூப்பிட்டு தான்
சொன்னதுக்கு அர்த்தம் சொல்ல ஆரம்பிச்சாங்களாம்.

”நான் வாழ்த்தினதுக்கு அர்த்தம் இதான் சீக்கிரமே
ஒரு குழந்தைக்கு தாயாகனும்னு சொன்னேன்.
குழந்தையுடன் விளையாடும்பொழுது அழியாத
பொட்டே இல்லை!! அம்மாகிட்ட பால் குடிக்கும்பொழுது
குழந்தையின் கை தானாக தாலிக்கொடியை பிடிச்சுக்கும்.
அதனால சில சமயம் அறுந்து போகும்!! தாலியறுக்கன்னு
இதைத்தான் சொன்னேன்.



எந்த வீட்டுலயும் போடப்படும் கோலத்தை குழந்தை
வந்து அழிக்கும். குழந்தைக்கு அது ஒரு விளையாட்டு
மாதிரி.” நான் சொன்னது இதைத்தான். அர்த்தம் புரியாம
தப்பா எடுத்துக்கிட்டு கோபப்படுறியே தாயின்னு!!”
சொன்னாங்களாம். எப்படி இருக்கு ஏடாகூட ஆசிர்வாதம்!!!


இதைச் சொல்லிட்டு அம்மம்மா சொன்னதுதான் ஹைலைட்டு.
“ச்ராவணகுமாரனின் அப்பா, அம்மா தசரதனுக்கு “நீ புத்ரசோகத்தால்
இறப்பாய்னு” சாபம் கொடுத்தாலும் வம்சம் தழைக்க குழந்தை
பிறக்க மறைமுகமா ஆசிர்வதிச்சிருக்காங்கன்னு” சொன்னாங்க.

நாகரிகமாக மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப்தி டே சொல்றோம்.
படிக்காத பாமரமக்களின் வாழ்த்துக்கள் ஆசிர்வாதமாக
இருக்கு.

Tuesday, September 15, 2009

FREE DELIVERY!!!!!!!

ஏதாவது சாமான் வாங்கினா கைவலி எடுக்க மூட்டை
தூக்கிகிட்டு வந்தது அந்தக்காலம்!!

சுண்டைக்காய் காப்பணம், சுமைக்கூலி முக்காப்பணம்
எனும் பழமொழி மாதிரி வண்டிக்கு பணம் கொடுப்பதை
விட தூக்கிகிட்டு வருவது நல்லதுன்னு சாமானை
நாமளே தூக்கிகிட்டு வருவோம்.

நான் சின்னதா இருந்த பொழுது மாச சாமான் வாங்க
அம்மாகூட போவேன். கீழ 2ல இருக்கற அர்பன் ஸ்டோர்லதான்
வாங்குவோம்.ரேஷன் கடை. சாமான் சுத்தமா தரமா
இருக்கும். 1 மாதம் க்ரெடிட் கிடைக்கும் என்பது
எக்ஸ்ட்ரா. சாமான் ஜாஸ்தியா
இருந்தா ரிக்‌ஷாவுல போட்டு எடுத்துகிட்டு போவோம்.
இல்லாட்டி அம்மா என்னை சாமானுக்கு காவலா வெச்சிட்டு
சாமானை கொண்டு போய் வீட்டுல போட்டுட்டு வருவாங்க.
அடுத்த ட்ரிப்ல அம்மாகூட சாமனை எடுத்துகிட்டு நானும்
போவேன்.......

இப்ப எங்க போனாலும் சாமானை தூக்குற வேலையில்லை.
சில சூப்பர் மார்க்கெட்டுகளில் சாமான்களை வாங்கி
அங்கேயே வைத்துவிட்டு ஹோம்டெலிவரி என்று
சொல்லிவிட்டால் நமது விலாசம் எல்லாம் வாங்கிகிட்டு
அவங்களே கொண்டுவந்து வீட்டுல கொடுத்திடுவாங்க.
ரொம்ப வசதி.

பர்னீச்சர்கள் இப்பல்லாம் ஃப்ரி ஹோம் டெலிவரிதான்.

சூப்பர் மார்கெட்டுகள் தவிர சில மளிகை கடைகளும்
ஃப்ரி ஹோம் டெலிவரி தர்றாங்க. போன் செஞ்சு
தேவையானவற்றை போதும் சாமான் வீட்டுக்கு வந்திடும்.



சாமான்களுக்கு அடுத்து உணவு. போன் செஞ்சா போதும்
தேவையான உணவு வீட்டுக்கு வந்திடும். பிட்சா டெலிவரி
மாதிரி நம் தெந்நிந்திய உணவுவகைகள், வட இந்திய
உணவுவகைகள் எல்லாமும் ஃப்ரீ ஹோம் டெலிவர்
லிஸ்ட்ல இருக்கு. பெரிய பெரிய நகரங்களில் இது தான்
நடை முறை.


நெட்டுல ஃப்ரி ஹோம் டெலிவரின்னு போட்டு தேடினா
எம்புட்டு சைட்கள். இண்டியன் ஃபுட்னு போட்டாலும் வருது!!!
போன்லாம் வேணாம் ஆன்லைன்லயே சொல்லி சாப்பாடை
வரவழைச்சிடலாம்.

இலங்கையில் இருந்தப்ப, திடும்னு முடிவெடுத்து நாட்டை
விட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க என் ஃப்ரெண்ட். வீட்டுக்கு
சாப்பிட கூப்பிடவும் முடியாது. நேரமே இல்லை. பிட்சாஹட்டுக்கு
போனைப்போட்டு பிட்சா ஆர்டர் செஞ்சு டெலிவர் அட்ரஸ்
ஃப்ரெண்ட் வீட்டுது கொடுத்து பணம் வந்து என் கிட்ட வாங்கிக்கிட
சொல்லிட்டேன். அழகா பசி நேரத்துக்கு பிட்சா டெலிவரி
செஞ்சாங்க. நான் ஆர்டர் செய்யவேயில்லையேன்னு!! அவங்க
ஆச்சரியமா குழம்ப போனைப்போட்டு தாக்கலை சொல்ல அவங்களுக்கு
ரொம்ப சந்தோஷம். ஃப்ரி ஹோம் டெலிவரினால நல்லதுதான்.


சரி இப்ப இதனால் என்ன வந்துச்சு??!! ஃப்ரீ ஹோம் டெலிவரினால
அலைச்சல் இல்லை, வண்டிக்கு தண்டமா அழத்தேவையில்லை,
ஆத்திரம் அவசரத்துக்கு சாப்பாடு வந்திடுது.... அப்புறமென்ன???

இதனால நாம கொஞ்சம் சோம்பேறி ஆயிட்டோமோன்னு தோணுது.

சாப்பாடு, சாமான்கள், வீட்டுக்கு உபயோகமான பொருட்கள் எல்லாம்
ஹோம் டெலிவரி செய்யப்படுவது சரி..

எனக்கு வந்த போன்கால் தான் இந்தப் பதிவுக்கு காரணம்!!!

ஏதோ ஒரு பார்மஸிலேர்ந்து போன் செஞ்சு ,”நாங்க மருந்துகளை
உங்க வீட்டுக்கு வந்து கொடுக்கறோம், 10 பர்சண்ட் விலை
கழிவுல தர்றோம்” அப்படின்னு சொன்னாங்க. இதப்பார்றா!!
நல்லா இருக்கேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.

15 நாள் கழிச்சு அந்த மருந்துக்கடையி்லேர்ந்து போன் செஞ்சு
”என்னங்க! நீங்க மருந்து ஏதும் வாங்கலியா!!!” அப்படின்னு
கேக்க அடப்பாவிகளா! மருந்து என்ன அடிக்கடி வாங்க
வேண்டிய சாமானா!! போனப்போட்டு மருந்து வாங்கங்குன்னு
சொல்ற அளவுக்கு போயிடிச்சேன்னு நினைச்சேன்.

இன்னொரு கடையிலேர்ந்து போன் செஞ்சு,”மேடம்
நாங்க ட்ரைஃப்ரூட்ஸ் உங்க வீட்டுக்கே டெலிவரி தர்றோம்.
வேணுங்கறபோது கண்டிப்பா போன் செய்ங்க, தரமானது,
நல்ல சகாயவிலையில தர்றோம்னு”!! சொன்னாங்க....

அவ்வ்வ்வ்வ்வ் ட்ரைப்ரூட்ஸ் என்னாவிலை!!

இப்படியே போன இன்னும் யார் யாரெல்லாம் ஃப்ரி ஹோம்
டெலிவரி தர்றோம்னு போன் செய்வாங்கன்னு யொசிச்சு
பாத்தேன்......... மண்டை காயுது.

(யாரவது யோசிச்சு யார்யாரெல்லாம் ஃப்ரி ஹோம் டெலிவரி
தர்றோம்னு சொல்வாங்கன்னு பதிவு போடுங்கப்பு)

நெட்டுல இந்த கார்ட்டூன் கிடைச்சது........




ஒண்ணும் சொல்ற மாதிரி இல்ல........

Wednesday, September 09, 2009

THE MANGO TREE

இந்த ஹோட்டலுக்கு போகாமல் இலங்கை பயணம்
பூர்த்தி அடையாதுன்னு நினைக்கற அளவுக்கு
சூப்பர் ஹோட்டல் இது.

THE MANGO TREE இது தர்மபால மாவத்தையில்
இருக்கும் இந்திய உணவகம்.


இந்த உணவின் சுவை எங்கேயும் கிடைக்காது!!!
வட இந்திய உணவகம். பஞ்சாபிக்காரர் ஒருவர்
வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார்.

அந்த சுவை, தரம் இந்தியாவில் கூட எந்த ஹோட்டலிலும்
நாங்கள் சாப்பிட்டதில்லை. இங்கே ஹைதையில் இருக்கும்
அங்கித்தி கூட அந்த சுவையோடு ஒப்பிடுகையில் பரவாயில்லை ரகம் தான்.

ட்ரைஃப்ரூட் லஸ்ஸி, பனீர் டிக்கா, தால் மக்கானி
ஒவ்வொன்றும் ஸ்ஸ்... வாயில் நீர் ஊற வைக்கும்.




ஒரு ஹோட்டலின் தரம் நல்லா இருக்கு என்பதற்கு
அர்த்தம் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை.



வயது முதிந்தவர்கள் முதல் சின்னக்குழந்தை வரை
இந்த ஹோட்டலை விரும்புவார்கள். நாங்கள் போயிருந்த போது
வீல் சேரில் ஒரு முதியவர் உணவு உண்ண வந்திருந்தார்.
மாங்கோ ட்ரீயில் சாப்பிட வேண்டும் என்ற அவரது
விருப்பத்திற்காக குடும்பத்தினர் அழைத்து வந்திருந்தனர்.


இந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் பஞ்சாபிக்காரர்
நமக்கு நண்பர் தான். சுற்றிப்பார்க்க வந்த போதும்
விருந்து்ண்ண தன் ஹோட்டலுக்கு வந்ததை பெருமையாக
நினைப்பதாகச் சொன்னார்.

பிள்ளைகள் அவருடன் பேசி உணவு மிகவும் ருசியாக
இருப்பதாகவும் இந்தியாவில் அதுவும் ஹைதையில் ஒரு
ப்ராஞ்சும், நைரோபியில் ஒரு ப்ராஞ்சும் ஆரம்பிக்கச்
சொல்லி கேட்டார்கள். பிள்ளைகள் பெரிதும் விரும்பியது
அவருக்கு மிக மிக திருப்தி.

THE MANGO TREEயின் இந்தியாவுக்கு ஆஷிஷும், நைரோபிக்கு
பானுவும் ப்ராண்ட் அம்பாசிடர்கள் ஆக்கிடலாம் என்றார் அவர்.

:)))

இனிதான பயணம், இனிமையான உணவோடு முடிக்க எண்ணம்.
அதான் கிளம்புவதற்கு முதல் நாள் இரவு மாங்கோ ட்ரீ
விஜயம்.
THE MANGO TREE WEBSITE

Address:
THE MANGO TREE
no.82,Dharmapala mavatha,
colombo-03,
Srilanka

Tel.94 11 5819790/1

Tuesday, September 08, 2009

கதம்ப மாலை

நண்பர் பதிவர் ஹரி திருமண வாழ்வில் இணைந்துள்ளார். 23.8.09 அன்று கோயம்புத்தூரில் திருமணம் நடந்தது.
5.9.09 ஹைதையில் வரவேற்பு நடந்தது.
சென்றிருந்தேன். திருமணத்திற்கே வாழ்த்து பதிவு போட வேண்டும்
என்று நினைத்திருந்தேன். கைவலி அதிகமாகி முடக்கி விட்டது.

ஹரி ஆர்த்தி தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துக்கள்.
சிரித்தமுகமும், நட்பாக இருக்கும் ஆர்த்தி நல்ல சாய்ஸ்
ஹரி. ஆல் தி பெஸ்ட்.

************************************************

இந்த ஒரு வாரத்திற்குள் 2, 50ஆவது திருமண நாள்
விழாவில் கலந்து கொண்டு பெரியவர்களின் ஆசி பெற
வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஞாயிறன்று நடந்த
அயித்தானின் நண்பரின் பெற்றோரின் 50ஆவது
திருமண நாள் விழா மிக அருமையாக இருந்தது.

வித்தியாசமாக பேரன், பேத்திகள் நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கினார்கள். மூத்தமகன் பேசும்போது
நெகிழ்ந்து போனார்.”பெற்றவர்கள் செய்த தியாகத்தை
மக்கள் மறந்து போகக்கூடாது!” என்று சொன்னது
பகிர்ந்து கொள்ள வேண்டிய விடயமாக கருதுகிறேன்.

**********************************************

தஞ்சாவூர் பெயிண்டிங், டூவீலர் ஓட்டக் கற்றல்
என எல்லா ஆசைகளையும் கைவலி நிறுத்தி
வைத்துவிட்டது. சுத்தமாக விலகிவிடாமல்
அவ்வப்போது பதிவிடுவேன். வந்து
ஆதரவு தாருங்கள். சீக்கிரம் 500 அடிக்க
போகிறேன். :)))

*********************************************

எங்கள் அபார்ட்மெண்டில் பிள்ளையார் சதுர்த்தி
வெகு சிறப்பாக நடந்தது.
எங்கள் அபார்ட்மெண்டில் பூஜித்த பிள்ளையார்.
இதோ:


7 நாள் வைத்திருந்தோம். தினம் ஒரு குடும்பத்தினர்
பூஜை,நைவேத்தியம் பொறுப்பு. மிக விமர்சையாக
நடந்தது. இதில் முக்கியமான விசயம், எங்கள்
அபார்ட்மெண்ட் பிள்ளைகள் பூஜை முடிந்ததும்
பிரசாதத்தை விநியோகம் செய்தது. ஒருவர்
தட்டு எடுத்து கொடுக்க, மற்றவர் பரிமாற
என ஆளுக்கு ஒரு வேலை செய்தனர். 6 வயது
குட்டி பாப்பா ஸ்பூன் எடுத்துக்கொடுத்து தன்
பங்கிற்கு வேலை செய்தது. பெரியவர்களை
அருகில் விடாமல் தாங்களே முன்னின்று
செய்த பிள்ளைகளுக்கு மனமார்ந்த
பாராட்டுக்கள்.

7ஆம் நாள் சனிக்கிழமை அன்று விசர்ஜன்.
உட்டி அடித்தல், ஆட்டம் என விமரிசைதான்.
எல்லோர் மேலும் தண்ணீர் அடித்து மொத்த
அப்பார்ட்மெண்டும் ஆட்டம் போட்டதை
மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
தெருவே அதிர்ந்தது. :))



சென்னையில் அப்பார்ட்மெண்டில் வசித்து
நொந்து நூலான எனக்கு பலவருடங்கள்
கழித்து மும்பையி்ல் வசித்த நாட்களுக்கு
சென்றது போல் இருந்தது.

அனைவரும் கூடி பேசி, சிரித்து மகிழ்ந்து
என நன்றாக இருந்தது. விசர்ஜன் முடிந்ததும்
எல்லோரும் சொன்ன வார்த்தை,”ஞாயிற்றுக்கிழமையிலிருந்து
இரவு வீட்டில் சமைக்கணும்பா, கீழே டின்னர் என்று
இருந்து விடப்போகிறோம்” :)))))))))))))))))



Saturday, September 05, 2009

கொம்பனித் தெரு முருகன் தரிசனம்

லக்சல- இங்கே கைவினைப் பொருட்கள் நன்றாக இருக்கும்.
நண்பர்களுக்கு பரிசளிக்க வாங்கிக்கொண்டேன். வெகு நாட்களாக
தனியாக ஆடிக்கொண்டிருந்த கண்டி ஆண் நடனக் கலைஞருக்கு,
ஜோடி இப்போது தான் கிடைத்தது. இருவரும் சேர்ந்து ஆடும்
அழகைப் பாருங்கள்...



மாலையில் முருகனை தரிசிக்க திட்டம்

slave island அல்லது கொம்பனித் தெரு முருகன்
கோவில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.
முருகனுக்கு என இருக்கும் கோவில். மற்ற
தெய்வங்களும் இருக்கின்றன என்றாலும் ப்ரதானமாக
முருகன். 2001 பயணத்தின் போதிலிருந்தே இந்தக்
கோவில் பிடித்தமானதாக ஆகிவிட்டது.


செவ்வாய்க்கிழமைகளில் சஷ்டி கவசம் படித்தல்,
என எப்போதும் கோவிலில் கூட்டம் கணிசமாக இருக்கும்.
நான் சென்றது 16.8.09.
அதற்கு முதல் நாள் தான் தேரோட்டம் நடந்து முடிந்திருந்தது.
அருமையான தரிசனம். ஊஞ்சல் உற்சவம் நடந்து கொண்டிருந்தது.


மேரி எங்கள் வீட்டுப் பணியாளராக இருந்தவர். அவருக்கு போன்
செய்த பொழுது கொம்பனித் தெரு கோவில் வாசலில் காத்திருப்பதாகச்
சொன்னார். ஹோட்டலிலிருந்து நாங்கள் கிளம்பும் முன் அம்ருதாவுக்கு
தலைவலி அதிகமாக இருந்தது. மருந்து கொடுத்து சற்று படுக்க
வைத்து பிறகு செல்லாம் என திட்டம். எல்லோரும் தயாரா
என்று பார்க்க வந்த தேஜு அம்ருதா படுத்திருப்பதைப் பார்த்து
“என்னாச்சு?”என்று கேட்டு அம்ருதா பக்கத்திலேயே இருந்தாள்.

மழை வருவது போலிருந்தது. மேரி வேறு அங்கே காத்திருப்பாரே!!
அதனால் நான்,ஆஷிஷ்,அன்ணபூர்ணா,பானு நால்வரும் முதலில்
ரவி அண்ணா ஆட்டோவில் சென்று விட்டோம்.

தேஜு,அம்ருதா, பாலகிருஷ்னா, அயித்தான் கொஞ்சம் தாமதமாக
சுனில் ஆட்டோவில் வருவதாகச் சொன்னார்கள்.

கோவில் வாசலில் மேரி காத்திருந்தார். பார்த்ததில் ஒரே சந்தோஷம்.
ஆஷிஷை கண்டதும்,”தம்பி நல்லா வளந்துட்டீங்க. இனி என்னால்
உங்களுக்கு தலைக்கு எண்ணை வைக்க முடியாது” என்று சொன்னார்.
அம்ருதா எங்கே என்று கேட்க”தலைவலி கொஞ்சம் தாமதமாக வருவார்
என்று சொல்ல அம்ருதாவையும் பார்த்துவிட்டு போவதாகச் சொன்னார்.

10 நிமிடத்தில் அம்ருதாவும் வந்துவிட கட்டித்தழுவி முத்த மழைதான்.
எங்கள் வீட்டில் ஒரு நபராக இருந்தார் மேரி. மேரியப் பற்றி
முன்பே சொல்லியிருக்கிறேன்.

அங்கிருந்து இரவு உணவுக்கு செல்ல திட்டம்.
இந்த இடத்தில்சாப்பிடாமல் இலங்கை பயணம் முடிவடையக்
கூடாதுஎன்பது எங்கள் 8 பேருக்கும் எண்ணம்.:)

எங்கே போனோம் என்பதை அடுத்த பதிவில் சொல்றேன்.
அதற்கு முன் உணவகத்தில் காத்திருந்த நேரத்தில்
தேஜு எங்களுக்கு அளித்த கடிதம் இது.





”என்ன தேஜு!! ஒரே செண்டிமெண்டா லெட்டர்?” என்று கேட்க
”ஆமாம், அம்ருதா என் பெஸ்ட் ஃப்ரெண்ட்! சின்ன வயதிலேர்ந்தே
நாங்க ஒண்ணா இருக்கோம்ல, அம்ருதாவுக்கு உடம்பு சரியில்லைன்னா
கஷ்டமா இருக்கு!!!” என்றாள்.

தோழியின் தலைவலிக்கு வருந்தும் நட்பு. ஆண்டவன் அருள்.

தொடரும்..

Friday, September 04, 2009

கொழும்பில் ஓர் உலா -2

ODEL - இது கொழும்பில் பிரபலமான இடம்.
துணிமணிகள், ஞாபகார்த்த பொருட்கள் என பலதும் கிடைக்கும்.
விலையும் மகா ஜாஸ்தி. ஆனால் அயித்தானுக்கும்,
பிள்ளைகளுக்கும் பிடித்த souvenior T.Shirtகள்

இங்கேதான் கிடைக்கும்.





ஹைதையில் 500 ரூபாய்க்கு வாங்கிய பை 2 மாதத்தில் கிழிந்து
விட்டது. :(( அதனால் பை அங்கேதான் வாங்க வேண்டும்
என்று முடிவு செய்தோம்.1000 ரூபாய்( இலங்கை பணம்)
இதன் தரம் பற்றி முன்பே தெரியும் இன்னும் 2 வருடத்திற்கு
கவலை இல்லை.


ARPICO - SUPER CENTER இங்கே என்னையும் குழந்தைகளையும்
இறக்கிவிட்டுவிட்டு அயித்தான் மீட்டிங்கிற்கு போய்விட்டார்.
இங்கே எல்லாம் கிடைக்கும். தேயிலை, மசாலா சாமன்கள்
எல்லாம் இங்கே வாங்கிக்கொண்டேன். அம்மா இதை
மறந்துட்டீங்க! என்று அண்ணனும் தங்கையும் ஆளுக்கொரு
பாக்கெட்டாக தூக்கிக்கொண்டுவந்தது:)


இங்கே இருந்த பொழுது பழகி விட்டார்கள். பானுவும் தேஜுவும்
கூட போன் செய்து தங்களுக்கும் வாங்கிவரச் சொல்ல
வாங்கி முடித்து வெளியே வருவதற்கு முன் ரவி
அண்ணாவுக்கு போன் அடித்தேன். 5 நிமிடத்தில் வந்துவிட்டார்.
அங்கிருந்து ஹோட்டலுக்கு போய் சாமான்களை வைத்துவிட்டு
பிள்ளைகளின் நண்பர்களுடன் மெக்டொனால்ட்ஸில் மதிய
உணவு. பிறகு அயித்தானும் வந்து சேர்ந்து கொண்டார்.

அங்கிருந்து பிள்ளைகளின் Elocution Teacher
Ms.Neetu desilva அவர்களை சந்தித்தோம்.
மிகவும் கண்டிப்பான ஆசிரியை. மிகவும் அன்பானவர்.
அவரால்தான் ஆஷிஷும், அம்ருதாவும்
கொழும்பு IWMS -INSITITUTE OF WESTERN MUSIC AND SPEECH
பரிட்சைகளில் 100/100 மதிப்பெண்கள் பெற்று
பெருமை மிகு BMICHல் கோப்பைகள் இரண்டுமுறை
வென்றனர்.

நம்மூரில் Elocution தனியாக எடுக்கப்படுவதில்லை.
ஆங்கில இலக்கணத்துடன் சேர்ந்து எடுக்கப்படுகிறது.
ஆனால் அங்கே ப்ரத்யேக Elocution வகுப்புக்கள்
நடைபெறும்.ஆங்கில புலமை அதிகமாக இருக்க
இந்தவகை வகுப்புக்கல் உதவுகிறது.
நானும் CALSDA அமைப்பில்
அங்கீகரிக்கப்பட்ட Elocution ஆசிரியை. :))

அண்ணபூர்ணா குடும்பத்தினரும் தங்களது
வேலைகளை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு
வந்துவிட்டனர். இரவு உணவு crescatல்.
ஆனால் இந்த முறை சண்முகாஸ் அல்ல.
இலங்கை உணவு.

இது crescatல் இருக்கும் இலங்கை உணவகம்.


இங்கே கொத்து (பரோட்டா) மிக சுவையாக இருக்கும்.
சுடச்சுட கொத்து ரெடியாகிறது.



கொத்து சாப்பிட்டுவிட்டு அளவளாவியபடி காலியாக
இருந்த ரோட்டில் நடந்து ஹோட்டலுக்கு வந்தோம்.

தூக்கம் கண்களை சுழற்றியது...

தொடரும்

Wednesday, September 02, 2009

அழகான ஹோட்டலிலே ஆச்சரியமான மனிதர்..

கொழும்புவில் தங்கியிருந்தது புகழ்பெற்ற GALLE FACE HOTELல்.
இந்த ஹோட்டல் 1864ல் துவங்கப்பட்டது. பிரிட்டீஷார்களால்
துவங்கபப்ட்டு இன்றளவும் பலரின் விருப்பமான இடமாக
இருக்கிறது.




மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி அவர்கள்
இலங்கை வந்த போது இங்கே தான் தங்கியிருக்கிறார்.
பழைய கட்டிடம் + புது கட்டிடம் என கால் ஃபேஸ்
இந்தியப் பெருங்கடலை பார்ப்பது போல் கட்டப்பட்டிருக்கிறது.
கொழும்பிவில் இந்த ஒரு ஹோட்டல் மட்டும் தான்
இந்தியப் பெருங்கடலை பார்ப்பது போல் இருக்கும்.





இங்கே காலை உணவு அருமை. continental breakfast,
ஸ்ரீலங்கன் உணவு எல்லாம் இருக்கும். சரி ருசி.
சுடச்சுட ஆப்பம் தொட்டுக்கொள்ள போல் சம்பல் அல்லது
லுனுமிரிச்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)) Danish pastry
ரொம்பப் பிடிக்கும். இனி இதெல்லாம் எங்கே... :((





ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் கெஸ்ட் புக்கை புரட்டிபார்த்தால்
ஒரு ஆச்சரியம். அந்த மனிதரை கட்டாயம் சந்தித்து பதிவு
எழுத வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

நாங்கள் தங்கியிருந்தது புதிய கட்டிடத்தில். அவரோ பழைய்ய
கட்டிடத்தில் தான் பொதுவாக இருப்பாரம். காலை உணவுக்குச்
செல்லும்பொழுது பார்க்கலாம் என்றார் அயித்தான்.

நான் சென்ற நேரம் அவர் தேநீர் அருந்த போய்விட்டார்.
அவரை சந்திக்காமல் இந்தியா திரும்புவதில்லை என்று
முடிவு செய்யும் அளவுக்கு யார் அவர்??

இந்த ஹோட்டலிலேயே அதிக சர்வீஸ் போட்ட
திரு.குட்டன் அவர்கள் தான் நான் சந்திக்க விரும்பிய
மனிதர்.


மல்லு தேசக்காரர்.
தனது 17ஆம் வயதில் இலங்கைக்கு வந்தவர். தற்போது
அவருக்கு வயது 88. இந்த ஹோட்டலில் 60 வருடங்களுக்கு
மேலாக வாயில்காப்போனாக இருக்கிறார்.

காலை 5 மணி வாக்கில் மாளிகாவத்தை எனும் இடத்திலிருந்து
ஹோட்டலுக்கு வந்து விடுகிறார். (சில சமயம் நடந்தும் வருவாராம்!!!)
சிரித்த முகத்துடன் கதவைத் திறந்து விடுகிறார்.

சாமான்கள் வாங்கிக்கொண்டு வந்த போது அவரைக்கண்டேன்.
பிள்ளைகளூக்கு அவரை அறிமுகப்படுத்தி அவருடன்
பேசினோம். தமிழ் அருமையாக பேசுகிறார்.

குருவாயூருக்கு பக்கத்தில் ஒரு ஊர்தான் குட்டன் அங்கிளின்
ஊர். ஓணத்துக்கு ஊருக்கு வருவதாகச் சொன்னார்.

குட்டன் அவர்களுக்கும் இன்று ஓணம் கொண்டாடும் நண்பர்கள்
அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல் வாழ்த்துக்கள்.



Hotelன் முதல் மாடியில் மியூஸியம் வைத்திருக்கிறார்கள்.
இள்வரசர் உபயோகித்த கார், யார் யாரெல்லாம் அங்கே
தங்கியிருக்கிறார்கள் போன்ற விவரங்கள் இருக்கு.

இந்தக்காரை அப்போது 12 பவுண்டிற்கு வாங்கினாராம் பிரிட்டீஷ்
இளவரசர்.

GALLE FACE WIKIPEDIA
கட்டாயம் படிங்க.