Monday, July 05, 2010

THE KARATE KID

வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித், ஜாக்கி சான் நடித்திருக்கும்
இந்தப் படம் 1984 ஆண்டு வெளிவந்த THE KARATE KID ன் ரீமேக்.


டெட்ராய்ட்டை விட்டு ஷெர்ரி பார்கரும் அவரது மகன் Dre பார்கரும்
பீய்ஜிங்கிற்கு கிளம்புகிறார்கள். கணவன் இறந்த பிறகு தனது
புது வாழ்க்கையை மகனுடன் அங்கே தொடங்குகிறார் ஷெர்ரி.
புது இடத்தில் மொழி புரியாமல் அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கும்
அதே வேளையில் வீட்டுக்கு எதிரில் இருக்கும் பார்கில்
Mei Ying எனும் இளவயது வயலினிஸ்ட் பெண்ணுடன் ஏற்படும்
சிநேகம் சங் எனும் பையனுடன் விரோதமாகிறது.

அந்தப் பெண்ணும் Dre படிக்கும் பள்ளியில் படிக்கிறாள்
என சந்தோஷமடையும் வேளையில் அவனது விரோதி கூட்டமும்
அந்தப் பள்ளியில் படிக்கிறது என்பது அவனை மேலும்
பயமாக்குகிறது. அவர்கள் அவனை துன்புறுத்துகிறார்கள்.
சாப்பிடவிடாமல் தட்டை தட்டிவிடுவது, புத்தகைப்பையை
பந்தாடுவது என ஒரு வெளிநாட்டு மாணவன் எதிர் கொள்ளும்
அவஸ்தைகளை அழகாக படமாக்குயிருக்கிறார்கள்.

மனம் நொந்து போய் தனது தாயிடம் தான் இங்கே
சந்தோஷமாக இல்லை என்றும் தனது நாட்டிற்கு
திரும்பி போக விரும்புவதாகவும் குமுறும் இடம்
துக்கப்படும் குழந்தையின் மனநிலையை அழகாக
படம் பிடித்து காட்டுகிறது.


பயப்படும் அதே வேளையில் சமயோஜிதமாக அவர்களுக்கு
பதிலடி கொடுக்கவும் செய்கிறான். அப்படி ஒரு அடிதடியில்
Dreக்கு எக்கச்சக்கமாக அடிபட அவன் வசிக்கும் பகுதியின்
ப்ளம்பராக இருக்கும் ஜாக்கி சான் வந்து காப்பாற்றுகிறார்.
அவனது காயத்துக்கு பாரம்பரிய சீன வைத்திய முறைப்படி
சிகிச்சை அளித்து குணமாக்க, அவரை தனக்கு கராத்தே
சொல்லிக்கொடுக்கும்படி கேட்கிறான் Dre. முடியாது என
மறுக்கிறார் ஜாக்கி சான். மறுக்கும் சான் டெரியை குங்ஃபூ
பயிற்றுவிக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். சாங்
குங்ஃபூ கற்கும் இடத்துக்கு சென்று அவரது ஆசிரியரிடம்
பேசி சமாதானம் செய்துவைக்க நினைக்கையில் அதை
மறுக்கும் ஆசிரியர், இங்கிருந்து வெளியே செல்ல வேண்டுமானால்
இருவரில் ஒருவர் தனது மாணவர்களுடன் மோத வேண்டும்!!
எனச் சொல்ல ஜாக்கிசான் போட்டியில் Dre மோதுவான்
என்றும் அதுவரை அந்த மாணவர்கள் அவனை ஏதும் செய்யக்கூடாது
என்றும் சொல்கிறார். இவர்கள் சைனா மொழியில் பேசிக்கொள்வது
எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு டெரி நிற்கிறான்.


Dreயிடம் நடந்ததை விவரித்து அவனுக்குத் தான் கற்றுக்கொடுப்பதாக
சொல்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது கல கலப்பு. ஒரு ஆசிரியராக
நின்று ஜாக்கி சான் கராத்தே வகுப்பெடுக்கப்போகிறார் என நினைத்திருக்கும்
வேலையில் Dreயை தனது கோட்ஐ கழட்டி, கீழே போட்டு, அதை
ஸ்டாண்டில் மாட்டுவதையே 1 வாரத்துக்கு செய்ய வைக்கிறார்.
இவர் கராத்தே சொல்லிக்கொடுக்கப்போகிறார் என நினைத்தால்
இப்படி செய்கிறாரே என்று கோபப்பட்டாலும் வேறு வழியில்லாமல்
அவர் சொல்படி செய்கிறான்.

வீட்டுக்கு போனதும் இன்று என்ன கற்றாய்? என கேட்கும் அம்மாவிடம்
பதில் சொல்லாமல் உள்ளே போகிறான். ஆனால் கோட்ஐ எப்போதும்
போலே கீழே போடாமல் ஸ்டாண்டில் மாட்டும் மகனை ஆச்சரியமாக
பார்க்கிறாள். இடையே அந்த வயலின் பெண்ணுடன் நட்பு தொடர்கிறது.

குத்துக்களும், அடிகளும் தற்காப்பு கலையை வளர்க்காது.
மெச்சூரிட்டி,அன்றாட வாழ்க்கையில் செய்யும் செயல்களை
பொறுமையாக செய்வது ஆகியவைதான் கற்க வைக்கும்
என்று Dreக்கு ஜாக்கி சான் புரிய வைக்கும் இடம் அருமை.
வுடாங் மலைக்கு டெரியை அழைத்துச் செல்லும்
பொழுது அங்கே காணும் காட்சிகள் அற்புதம். அங்கே
அவன் கவனிக்கும் ஒரு காட்சி கிளைமாக்ஸில் ஜாக்கிசானையே
புருவத்தை உயர்த்த வைக்கும் இடம் ரொம்பவே அருமை.

ஜாக்கி சான் குடித்து விட்டு அவர் உருவாக்கிய காரை
அடித்து நொறுக்கும் காட்சியை பார்த்து அவரிடம் பேசி
அன்று அவரின் மனைவி மற்றும் மகனின் இறந்த நாள்
என்பதை தெரிந்து கொள்கிறான்.(கார் ஓட்டும் பொழுது
கோபப்பட்டு மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்ததால்
நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டிருக்கிறது)

போட்டி நடக்கும் நாளும் வருகிறது. மெல்ல மெல்ல Dre
முன்னேறுகிறான். சாங் கடைசி சுற்றுக்கு தகுதி பெறுகிறான்.
அதற்கு முன்னால் சாங்குடன் பயிலும் இன்னொரு மாணவனுடம்
Dre மோத வேண்டும். அந்த மாணவனின் ஆசிரியர் டெரியின்
எலும்பை முறித்து விடச் சொல்கிறார். அப்படியே நடக்கிறது.
Dreக்கு 2 நிமிடங்கள் தரப்படுகிறது. அதற்குள் அவன் மேடைக்கு
வரவில்லை என்றால் சாங் வெற்றி பெற்றவனாக அறிவிக்கப்படுவான்.

Dre போட்டிக்கு வந்தானா? எப்படி வந்தான்? அது திரையில்
பார்த்து அனுபவிக்க வேண்டிய அருமையான காட்சிகள். தந்தை
வில் ஸ்மித்தையும் மிஞ்சிவிட்டான் மகன் ஜேடன் ஸ்மித். அதிரடி
மன்னனாக அறியப்பட்ட ஜாக்கிசான் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்டை
போல மிக நிதானமாக, அழகாக ஒரு ஆசானாக தன் பங்கை
மிக அழகாகச் செய்திருக்கிறார். எனக்கென்னவோ ஒவ்வொரு
தடவை அவரை ஸ்கீரினில் பார்க்கையில் கிழட்டுச் சிங்கம்
போல் தெரிந்தது. கம்பீரம் குறையாத கிழட்டுச் சிங்கம்!!!

அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படமாக
இதை நினைக்கிறேன். மிக மிக அருமை.

டிஸ்கி:
 இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்க இன்னொரு காரணமும்
உண்டு. இலங்கைக்கு சென்ற புதிதில் ஆஷிஷ் பள்ளியில்
சந்தித்த கஷ்டங்களுக்கு அவனுக்கு தன்னம்பிக்கை வரவைக்க
அருகில் இருந்த கராத்தே பள்ளியில் சேர்த்தோம். மாஸ்டர்
பூஸோ போட்டிக்கெல்லாம் அனுப்ப மாட்டேன், தன்னைக்
காத்துக்கொள்வதை விட தன்னம்பிக்கையும், ஒருங்கிணைப்பு
தன்மையும் குழந்தைக்கு கிடைக்கும். அதுவே அவன் தன்னைக்
காத்துக்கொள்ள வைக்கும் என்று சொன்னார். கராத்தே, குங்ஃபூ,
தாய்ச்சி என கலவையாக கலந்து சொல்லிக் கொடுத்தார்.
ஆஷிஷ் ப்ரவுன் பெல்ட் வரை வந்தது படம் பார்க்கையில்
நினைவுக்கு வந்தது.

12 comments:

கோபிநாத் said...

படம் ஓகே தான் அக்கா...ஆனா ஜாக்கியோட நடிப்பு எனக்கு ஒரே காமெடியாக இருந்துச்சி...அதுவும் அவரோட நடை யப்பா..;)))))

வல்லிசிம்ஹன் said...

அன்பு தென்றல், கதையை விட நீங்கள் அதைச் சொல்லி இருக்கும் விதம் மிக நன்றாக இருக்கிறது.

ஜாக்கி சான் எனக்கு மிகவும் பிடிக்கும். கிழட்டுச் சிங்கம் தான். வெரி ஸ்வீட் சிங்கம்.:)
அந்தப் பையனோட நடிப்பை நீங்கள் விவரித்திருக்கும் விதம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டு ம் என்ற ஆசையை வளர்க்கிறது.

Thamira said...

நல்லதொரு ரிவ்யூ.

Vidhya Chandrasekaran said...

தெளிவான விமர்சனம். படம் பார்க்கத் தூண்டுகிறது.

pudugaithendral said...

வாங்க கோபி,

இது ஜாக்கிசான் படமா இருந்தா அதிரடி மன்னனா வந்திருப்பாரு. ஆசிரியரா வந்திருப்பதால அடக்கி வாசிசிச்சிருக்காருன்னு நினைக்கிறேன். ஆனாலும் ஜாக்கி சானுக்கும் வயசாயிடிச்சு பாருங்க.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

கண்டிப்பா பாருங்க. உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.

pudugaithendral said...

நன்றி ஃப்ரெண்ட்

Ungalranga said...

நல்ல விமர்சனம்,

ஜேடாவும், ஜாக்கியும் நல்ல காம்பினேஷன்.
படம் சூப்பர்!!

8/10 போடலாம்!! :)

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வித்யா

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ரங்கன்

CS. Mohan Kumar said...

நான் டிவிடியில் பார்த்துட்டு சுருக்கமா எழுதினேன். அதனை வாசிக்க இந்த லிங்கை பார்க்கவும்

http://veeduthirumbal.blogspot.com/2010/12/blog-post_17.html

pudugaithendral said...

இதோ வந்து படிக்கிறேன்..