Total Pageviews

Wednesday, June 30, 2010

லீவு லெட்டர் யார் கிட்ட கொடுக்க??!!!

ஆஷிஷையும் அம்ருதாவையும் கடைக்கு கூட்டிகிட்டு
நடந்து போய்க்கிட்டு இருந்தேன். அவங்களுக்கு ஷூ வாங்கத்தான்.
ரொம்ப டயர்டா இருந்துச்சு. அதோட கால் வலி வேற.
10 நாளா கால் எப்ப பிசகினிச்சுன்னு தெரியாமலேயே
கணுக்கால்கள் இரண்டுலயும் வலி. பத்தாததுக்கு
குதிங்கால் வலியும் சேர்ந்துக்குச்சு. எங்க அவ்வா
ஒரு டயலாக் சொல்வாங்க. “அழுதழுது பெத்தாலும்
பிள்ளை அவதானே பெறணும்னு” அதென்னவோ எனக்கு
எப்பவுமே அப்படித்தான். வலியோ என்ன கொடுமையோ
என் வேலையை யார் தலையிலையும் கட்ட முடியாது!:(


As I am suffering from severe leg pain i need 3 days
rest. kindly grant me the same and treat my absence
as leave அப்படின்னு ஆபீஸ்ல வேலை செஞ்சா லெட்டர்
எழுதி கொடுக்கலாம். நான் லெட்டர் எழுதி யார் கிட்ட
கொடுக்க? கொடுத்தாலும் நமக்கேது ஓய்வுன்னு ஆஷிஷ்
அம்ருதாகிட்ட பேசிகிட்டே நடந்துகிட்டே இருந்தேன்.

நீ லெட்டர் எல்லாம் எழுத வேண்டாம்மா! எங்ககிட்ட
சொன்னா போதும் நாங்க பாத்துப்போம் - இது ஆஷிஷ்.

உங்களுக்கு ஸ்கூல் திறந்தாச்சே, நீங்க இப்ப பிசி கண்ணான்னு
சொல்ல ஆமாம்லன்னு அம்ருதா. அப்பா கிட்ட சொல்வோம்
அப்படின்னு சொன்னாங்க. அவர் கிட்ட சொல்லலாம் பாவம்
அவரு என்ன செய்வாரு? வேலையோ வேலைன்னு அவர்
சுத்திகிட்டு இருக்காரு.

நீ சமைக்க வேணாம்னு வேணாம் சொல்லலாம். சாப்பாடு
வெளியில் பாத்துக்கலாம். ஆனா இந்த இஸ்திரி, வேலைக்காரங்க
டும்மா அடிக்கறது, போன் கால்ஸ், கொரியர் இதுக்கெல்லாம்
எந்திரிச்சு வந்துதானே ஆகணும்!!. வெறுத்தே போச்சு.
எல்லா கொடுமையும் அந்த வலி இருக்கும்போதுதான் வரணுமான்னு
செம கோபம் வந்து என்ன செய்ய.

எங்க அம்மம்மா சரியாத்தான் சொன்னாங்க. ஆபீஸ் வேலைக்கு
கூட 58 வயசுல ரிட்டய்ர்மெண்ட் கிடைக்கும். ஆனா வீட்டுல
வேலைக்கு ரிட்டயர்மெண்ட், லீவு எல்லாம் கிடையாதுன்னு.
அம்மம்மா வாயில சக்கரை தான் போடணும்.

அம்மம்மா ஞாபகம் ஜாஸ்தியாகி பசங்க கிட்ட நேத்து
”நான் போய் ஒரு வாரம் எங்க அம்மம்மா கிட்ட இருந்துட்டு
வர்றேன்ன்னு” சொன்னேன். தாரளமா போம்மா, கூடவே
நாங்களும் வர்றோம்!!! அப்படின்னு இரண்டு பேரும் கோரஸா.
இதுக்கு நான் எதுக்கு அங்க போகணும்.:)

சின்ன வயசுல எங்க அப்பா சும்மாநானாச்சுக்கும் நான் வீட்ட
விட்டு ஓடிப்போறேன், உங்க தொல்லை தாங்கலைன்னு சொல்வார்.
“உடனே நான் அப்பா நீங்க இல்லாம எனக்கு ஜுரம் வந்திடும்
நானும் உங்க கூட வர்றேன் அப்படின்னு சொல்ல, தம்பி,
அம்மாவும் கூட வர்றதா சொல்வோம்” உங்க கிட்ட இருந்து
தப்பிக்கத்தான் நான் வீட்டை விட்டு போறேன்னு சொல்றேன்,
நீங்களும் கூட வர்றதா இருந்தா நான் ஏன் ஓடிப்போகணும்னு”
வீட்டுக்குள்ள வந்து உக்காந்திருவாரு. :)) இப்ப என் கதையும்
அப்படித்தான் இருக்கு.

ஹோம் மேக்கர்கள் எல்லோருக்கும் இந்த நிலைதான்.
ஆனா அசால்டா வீட்டுல இருக்கறவங்களுக்கு என்ன வேலை?
எப்ப பாரு டீவி பாத்துகிட்டு, தூங்கிகிட்டு இருப்பாங்கன்னு
சொல்ற கூட்டமும் இருக்கத்தான் செய்யுது.

கொஞ்சம் யோசிங்க பாஸ். உடம்பு சரியில்லாட்டியும் லீவு
லெட்டர் கொடுத்தோ, கொடுக்காமையோ பங்க் அடிச்சிட்டு
ரெஸ்ட் எடுக்க கூடிய வேலை இல்லை ஹோம் மேக்கர்.
ஹவுஸ் வொய்ஃபா இருப்பது ஈசி இல்லை.


Monday, June 28, 2010

இடம் கொடுத்தா என்ன????!!!!!

எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம் மண்டைய குடைஞ்சு கிட்டு இருக்கு.
அதுக்கு எப்படியாவது வழி கண்டுபிடிக்கணும். அதுக்குத்தான் இந்த
போஸ்ட்.( பதிவு போடவும் மேட்டர் எப்படி எல்லாம் தேத்தறாங்கன்னு
யாரோ சொல்வது காதுல கேக்குது :) )

நல்ல நாளிலேயே பொண்டாட்டியைக்கண்டா ரங்க்ஸுகளுக்கு
ஒரு மாதிரிதான். ”இதுல மனைவிக்கு இடம் கொடேல்”!
அப்படின்னு பெரியவங்க சொல்லி வெச்சிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்.
இந்த ”இடம் கொடேல்” இரண்டு விதமா அர்த்தம் புரிஞ்சிக்கலாம்.

1. இடத்தை கொடுப்பது. அதாவது நம்ம பொண்டாட்டியாச்சே,
அப்படின்னு இடம் கொடுத்து நல்லா பாத்துகிட்டா எங்க அவங்க
அதிகாரம் செஞ்சுபுடுவாங்களோன்னு ஒரு பயம்.

2. இரண்டாவது இடது பாகம். சரியா சொல்றேன் இருங்க.
கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு வலப்பக்கம்தான் மணப்பொண்ணு
உக்காரணும். இது எதுக்கு எனக்கு புரியலை. கேட்டா மனைவி
கணவனுக்கு இடப்பக்கம் இருக்கக்கூடாது.

எனக்கு குழப்பமே இங்கதான். நம் தமிழ்நாட்டில் மட்டும்தான்
என் சிற்றறிவுக்கு தெரிஞ்ச அளவுல இந்தப் பழக்கம் இருக்கு.
ஒரு சமயம் பிரபல மடத்துக்கு போயிருந்தோம். குடும்ப சகிதமாத்தான்.
தம்பதிகளாச் சேர்ந்துதான் அந்த பூஜை செய்யணும். நான் அயித்தானுக்கு
வலப்பக்கம் நின்னுகிட்டு இருந்தேன்.(அப்படித்தானே நம்ம ஊர் பழக்கம்)
மடாதிபதியோ சைகையில என்னை இடப்பக்கம் நிக்கச் சொன்னாரு.
அவர் சொல்வதைக் கேட்பதா, இல்ல பெரியவங்க சொன்னதை கேப்பதான்னு
புரியமா அவங்க இடத்துல அவங்க சொல்படி கேப்போம்னு இடப்பக்கமே
நின்னு பூஜை செஞ்சேன்.



இங்க ஆந்திராவிலும் எந்த பூஜை செய்தாலும், திருமணத்தின் போதும்
மனைவி கணவனின் இடப்பக்கம்தான் நிக்கணும். ஆந்திராவை விடுங்க
கடவுள்கள் படத்தை பாருங்க சிவ பெருமான் உமையவளுக்கு தன்
இடப்பாகத்தைத்தான் தந்திருக்காரு. வலப்பாகம் கொடுக்கலை.
பத்ராசலத்துலதுல கூட ஸ்ரீராமர் சீதாபிராட்டியை தனது இடது
மடியில் தான் உக்கார வெச்சுகிட்டு தரிசனம் தர்றாரு.


 கண்ணனும் ராதையும் காதல் தம்பதிகள் அவர்களையும்
பாருங்கள்.


நரசிம்மரும் லட்சுமியை தனது இடது மடியில் தான் வெச்சு
தரிசனம் தர்றாரு. தனது இதயத்தில் இடம் கொடுத்தார்
மகா விஷ்ணு. இதயம் இருப்பது இடது பாகத்தில் தானே இருக்கு!!?

மனைவி இடது பாகத்தில் அல்லது இடது பக்கத்தில் இருப்பது
பல நன்மைகளைத் தருமாம். லட்சுமி எப்படி மஹா விஷ்ணுவின்
ஹ்ருதயகமல வாசினியாக இருக்கிறாளோ அப்படி தனது
கணவனின் இருதயகமலத்தில் ஒர் நிரந்தரமான இடத்தைத்தான்
எந்த மனைவியும்  விரும்புகிறாள்.

கணவன் மனைவிக்குள்ள சண்டை சச்சரவுகள் அதிகம் ஏறபடும்போது
அவங்க நிக்கிற பொஷிஷனை கொஞ்சம் கவனமா கூர்ந்து
பாருங்களேன்.  கணவனின் வலது பக்கம் நிக்கும் போது
கூடுதலா கோவம் வருமாம். (அப்போ மனைவியின் இடது பக்கம்
கணவன் நிக்கிறாருதான் ஆனா அதைப்பத்தியெல்லாம் ரங்க்ஸ்கள்
உணர மாட்டார்கள். இதை நான் சொல்லலை. ஆராய்ச்சியாளர்களே
பெண்களுக்கு உணரும் தன்மை அதிகம்னு சொல்லியிருக்காங்க)
எப்போதோ புத்தகத்துல படிச்சேன். இடது பக்கம் பாசிடிவ் எனர்ஜியை தருகிறதாம்.

கணவனின் இடது பக்கத்தில் மனைவி இருந்தால் அன்பு நிறைந்திருக்குமாம்.
நம்ம ஊர்ல இடது பக்கம் ஏன் மனைவி இருக்கக்கூடாது என்பதற்கு
காரணம் தெரிஞ்சவங்க சொல்லிட்டு போங்க. தெரிஞ்சிக்கறேன்.
கோபமா இருக்கற ஒரு நேரம் ரங்க்ஸுக்கு இடது பக்கம் உக்காந்து
பாத்து ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருப்பது சரியான்னும்மெயில்
எழுதுங்க.

இப்போதைக்கு டா டா!


Monday, June 21, 2010

அம்பலமாகும் அந்தரங்கங்கள்!!!

எங்க ஊர்ல ”தாரகை சில்க்” அப்படின்னு ஒரு கடை ஆரம்பிச்சாங்க.
அதுக்கு முன்னாடி வரை வாழைமரத்துச் ஜவுளிக்கடை தான் ஃபேமஸ்.
தாரகை சில்க் துவக்கத்துக்கு ஊரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும்
வரவேற்பு அட்டை அனுப்பியிருந்தாங்க. அட வித்தியாசமா இருக்கே!ன்னு
நினைச்ச அதே நேரம் ஊரில் இருக்கும் அத்தனை பேரின் விலாசங்களும்
எப்படி இவங்களுக்கு கிடைச்சிருக்கும்?? அப்படிங்கற யோசனையும்
கூடவே வந்துச்சு.


ஆனா இப்பவும் அதே நிலமைதான். நம்ம டெலிபோன், மொபைல், இமெயில்,
வீட்டு விலாசம் எதுவும் ரகசியமாக இல்லாம வேண்டப்படாத
இடங்களிலிருந்து விளம்பரங்கள் வருது. தேவையோ தேவையில்லையோ
லோன் கொடுக்கறேன்னு போன், மொபைல்களில் எஸ் எம் எஸ்களாக
வரும் விளம்பரங்கள், செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டுவிட்டு
ஓடிவந்து போனை எடுத்தால் அது விளம்பரக் காலாக இருக்கும்!!

இமெயில் நமக்கென வைத்து அதன் பாஸ்வேர்டு வைத்துக்கொண்டாலும்
அதையும் உடைத்து காட்டுகின்றன சில வெப் சைட்டுக்கள். ஹேக்கிங்
இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது.

நம் கையில் இருக்கும் செல்லை வைத்து நாம் எங்கே செல்கிறோம்
என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியுமாம். படித்த போது பகீர் என்றாகிவிட்டது.
விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது என்று நாம் ஆனந்தப்பட்டுக்
கொண்டிருக்கிறோம், ஆனால் அதே விஞ்ஞானம் நமக்கு அந்தரங்கமே
இல்லாமல் எல்லாவற்றையும் அம்பலம் செய்துவிடுகிறது எனும்
பொழுது நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதையும்
கற்க வேண்டியது அவசியமாகிறது.

இவர்களுக்கு நம் எண்களை யார் தருகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி?
பிரபலமானவர்கள் தான் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்
என்றல்ல சராசரி மனிதனுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கிறது.

நாம் சாதரணமாக பார்க்கும் டீவி சீரியல் நாம் எத்தனையாவது
நபராக பார்க்கிறோம் என்று செய்தியை தந்து டீ ஆர் பீ ரேட்டிங்
ஏற்ற வைக்கிறது.

ஆன்லைனில் நாம் ஏதும் விற்று வாங்கி, அல்லது சில சைட்டுக்களை
ப்ரவுஸ் செய்து பார்க்கும் பொழுது நமது ஐடிக்கள் விற்பனைக்காக
ட்ராக் செய்யப்படுகிறது.

ஹாஸ்பிடல், இன்ஸுயூரன்ஸ் பாலிசி, பேங்க லோன்,
போன்ற இடங்களில் நாம் கொடுக்கும் விபரங்கள் செல்போன் ஆப்பரேட்டர்கள்,
கிரெடிட் கார்டு கம்பெனிகள், ஆகியவற்றிற்கு விற்கப்படுகின்றனவாம்.

social sightகளான பேஸ்புக், ஆர்குட் போன்ற தளங்களில் நாம்
வைத்திருக்கும் போட்டோக்கள் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தும்
நபர்கள் வலைத்தளங்களில் அதிகம்.

தங்களை கேமிரா மூலம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் என
சொல்லாமல் சொல்கின்றன ஏர்போர்டுகள், மால்கள், தியேட்டர்கள்,
ஏன் திருப்பதி கோவிலிலும் கூட இருக்கிறது இத்தகைய கேமிராக்கள்.

wi-fi இருக்கும் இடங்களில் நிம்மதியாக லேப்டாப்பை வைத்துக்கொண்டு
வேலை பார்ப்பார்கள் சிலர். ஆனால் தனது மடிக்கணிணிக்குள் கள்ளன்
புகுந்து சில முக்கியமான டாக்குமண்டுகளை திருடி விடக்கூடும் என்பது
பலருக்கு தெரியாது.

ப்ளூடூத் வசதி கொண்ட போன்களை பொது இடத்தில் ப்ளூடூத்
வசதியை ஆன் செய்யாமல் இருப்பது நலம்.

மால்கள், சூப்பர் மார்க்கெட் வாசல்களில் லக்கி ட்ரா, உங்க
டீடெயிலை எழுதி போட்டீங்கன்னா பரிசு காத்திருக்குன்னு சொன்னா
பேசாம நகந்து வந்துடுங்க. Restaurantகளில் கூட நமது
டீட்டெய்ல்களை கொடுக்காமல் இருப்பது நல்லது.

நமது கைப்பேசி எண்ணை யாருக்கும்
கொடுக்கும் முன் யோசித்து கொடுங்க. விசிட்டிங் கார்டுகளில்
நம்பரை பிரிண்ட் செய்வதையும் தடுக்கலாம். லேண்ட் லைன்
நம்பரை சில சமயம் கொடுக்கலாம்.

DEBIT CARD, CREDIT CARD உபயோகப்படுத்தும்பொழுது
கவனம் தேவை. தனது கணிணியில் கார்டை ஸ்வைப் செய்து
நமது தொடர்பு முகவரி, நம்பரை அவர்கள் எடுக்கும்
வசதி இருக்கிறது.

do not call என ரிஜஸ்டர் செய்திருந்தாலும் www.donotcall.gov.
எனும் வலைத்தளத்திலும் ஒரு முறை பதிவு செய்வது
நல்லது.

ப்ரவுசிங் செண்டர்களில் கணினி உபயோகித்த பின்னர் குக்கீஸ்களை,
ப்ரவுஸிங் ஹிஸ்டரிக்களை அழித்துவிடுவது நல்லது.

வீட்டுக்கு வரும் கடிதங்களை முகவரி தெரியாமல் நன்றாகக்
கிழித்து போடும்படி சின்ன வயதில் அப்பா சொல்வார். தவறானவர்கள்
கையில் நம் முகவரி சிக்கி ஏதும் பிரச்சனை ஆகிவிடக்கூடாது
என்பதனால் எந்த ஒரு காகிதத்தையும் நன்றாக கிழித்துப்போடுவதை
பழக்கமாக்கிக்கொள்வது கூட நம் அந்தரங்கத்தைக் காக்கும்.


Friday, June 18, 2010

எம்டன் வாழ்க :)

”லீவு எடுத்து 3 நாள் ஆச்சு, இன்னும் லீவு லெட்டர் தரலை! சீக்கிரமா
கொண்டுவந்து கொடு!” லலிதாம்பாள் டீச்சர் கறாரா சொன்னாங்க.
சரின்னு விடுமுறை விண்ணப்பம் எழுதிக்கொண்டு போய் கொடுத்தேன்.

தலையில அடிச்சுகிட்டாங்க. :((” படிக்கறது இங்கிலீஷ் மீடியம்,
தமிழ்ல லெட்டர் கொடுத்தா?? இங்கிலீஷ்ல எழுதிக்கொண்டுவா!”
அப்படின்னு திட்டினாங்க.

4ஆம் வகுப்புல தான் ஆங்கிலமே படிக்க ஆரம்பிச்சேன். 6ஆவது
ஆங்கில மீடியத்துல் ராணி ஸ்கூல்ல சேத்துட்டாங்க. அங்க இருப்பது
எல்லாம் சைல்ட் ஜீஸஸ் கான்வெண்ட்ல ப்டிச்சிட்டு வந்தவங்க.

வீட்டுல போய் அப்பாவை கேட்டேன். அம்மாவுக்கு அம்புட்டு
இங்கிலீஷு தெரியாது. ”லெட்டர் எல்லாம் நான் எழுதித் தர
மாட்டேன், நீயா எழுது!!” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்குத்
தெரியலைப்பா! ஒரு வாட்டி சொல்லிக்கொடுங்க. அடுத்த
வாட்டியிலேர்ந்து நானா எழுதறேன்!” ம்ம்ஹூம் மனுஷன்
கேக்கலை. அம்மாவை வழியில் பாத்து லலிதாம்பாள் டீச்சர்
சொல்லி அம்மா அப்பாகிட்ட கெஞ்சி அப்புறம் பேப்பர்
எடுத்துகிட்டு வான்னு சொன்னார் அப்பா.

அவருதான் எழுதித் தரப்போறாருன்னு நினைச்சு பேனாவையும்
பேப்பரையும் கொடுத்திட்டு கொஞ்சம்தான் நகர்ந்திருப்பேன்
எந்திரிச்சு வந்து சீப்பை திருப்பி உச்சந்தலையில் ஒரு
“டொட்டொய்ங்” அடிதான் வேற என்ன. அப்பா ஸ்டைல்
சீப்பின் கணமான பகுதியில் உச்சந்தலையில் அடிப்பது
மட்டும்தான்.

அழுதுகிட்டே அப்பா சொல்ல எழுதி அதை கரெக்‌ஷன்
செஞ்சு கொடுக்கச் சொல்லி சரியா வேற பேப்பரில் எழுதி
அப்பா கையெழுத்து வாங்கி கிட்டு டீச்சரிடம் கொடுத்தேன்.
அந்த லீவ் லெட்டரை ஒரு காப்பி தனியா என் கிட்ட
வெச்சிருந்தேன். அடுத்த வாட்டி லீவு எடுத்தா உதவுமே!!

அதுக்கப்புறம் வீட்டுக்கு யார் லெட்டர் போட்டாலும் உடனே
போஸ்ட் ஆபீஸ் போய்(பாய் கடைல வாங்கினா 10 பைசா
சாஸ்தி கொடுக்கணும்) இன்லெண்ட்லெட்டரோ, போஸ்ட்கார்டோ
(மேட்டரைப் பொறுத்து) வாங்கி வந்து அப்பா, அம்மா, பாட்டி
சொல்படி எழுதி போஸ்ட் போடுவது என் வேலை. அதையும்
தபால் பெட்டியில் போடுவது என் வேலைதான். இவங்க
யாருக்கும் எழுத மாட்டாங்க. ஆனா உடன் பதில் கேட்டு
எழுதிப் போடாட்டி திட்டு, அடி விழுகும். :(

இதுல திருப்பதில இருக்கற அத்தை பையன் இங்கிலீஷ்லதான்
எழுதுவாரு. அவருக்கு தமிழ் தெரியாது நமக்கு தெலுங்கு
படிக்கத் தெரியாது அதான் ரீசன். (அப்பா பேருக்கு வர்ற சாதாரணமான லெட்டர்தான். அத்தை பையன்ன உடனே கற்பனையை தட்டி விட்டுக்காதீங்க!)
அவருக்கு இங்கிலீஷில் பதில் லெட்டர் எழுத அப்பா கொஞ்சம் உதவுவார். இப்படி படாத கஷ்டமெல்லாம் பட்டு லெட்டர் எழுதறதுல எக்ஸ்பர்ட்
ஆனேன். வீட்டில் உறவினருக்கு, இல்லை வேறெதுக்குமோ
கடிதம் எழுதணும்னா அது நாந்தான் செய்யணும்னு
எழுதப்படாத சட்டம் போட்டுட்டாரு அப்பா!!!

அப்போ இங்க்லீஷில் வொர்க் புக்குன்னு ஒண்ணு இருக்கும்.
அதுல நிறைய்ய லெட்டர் ஃபார்மேட்டுக்கள் இருக்கும். அதை
பத்திரமா வெச்சிருந்து கவர்ண்மெண்டுக்கு எப்படி லெட்டர்
எழுதறது, வீபீபில புக் எப்படி வரவைக்கறது, அப்படின்னு
ஃபார்மல், இன்ஃபார்மல் லெட்டர்ஸ் எல்லாம் எழுத பழக்கம்
ஆனது. (மிஸ்டர் ரமணி (அதான் எங்கப்பா) என்னை
கத்துக்க வெக்க நினைச்சது இதுதான். ஆனா ஐயா
எப்பவுமே அதிரடி மன்னன்) :)) அப்போ அப்பா புதுக்கோட்டை
கூட்டுறவு வங்கியில கிளார்க்கா வாழ்க்கையை ஆரம்பிச்சு
ரிட்டயர்ட் ஆகும்போது மேனேஜர். நடுவில் அதிகாரிக்கு
பர்சனல் செக்கரட்டரியாவும் இருந்திருக்காரு. கையெழுத்து
அவ்வளவு அழகா இருக்கும். லெட்டர் ட்ராஃப்டிங்கில் அப்பாதான்
கிங். அடிச்சு சொல்லிக்கொடுப்பது அப்பாவோட ஸ்டைலா
இருந்துச்சு. ஆனா அது எனக்கு ரொம்பவே ஹெல்பாவும்
இருந்திருக்கு. எங்கே எப்போ என்ன லெட்டர் எழுதணுமோ
நிமிஷத்துல ரெடி.

என்னை BSRB எக்ஸாமுக்கு பயிற்சி வகுப்பில் சேர்த்திருந்தாரு அப்பா.
அப்ஜக்டிவ் டைப் கேள்விகள் தவிர ஆங்கிலத்தில் ஏதாவது
ஒரு டாபிக் கொடுத்து அதுக்கு நாம லெட்டர் எழுத வேண்டும்.
அதுக்கு ப்ராக்டிஸும் அதுல கொடுப்பாங்க. இப்போ புதுகை
ஸ்டேட் பாங்க்ல வேலை பாக்கும் எங்களுக்குத் தெரிஞ்ச
அண்ணாவோட அப்பாதான் ஆங்கிலம் ட்ரையினிங்.

அவரு வங்கியில் இருக்கும் கணக்கை இன்னொரு ஊருக்கு
மாற்றலாகிப்போவதால் அந்த ஊருக்கு மாற்றிக்கொடுக்கும்படி
கேட்டு கடிதம் எழுதச் சொன்னாரு. சொன்ன 5ஆம் நிமிஷம்
நான் லெட்டரை எழுதி அவர் கையில் கொடுத்திட்டேன்.
(எம்டனோட ட்ரையினிங் அப்படி). கூட பயிற்சி எடுக்கறவங்க
எல்லாம் காலேஜ் படிச்சவங்க, படிக்கறவங்க. நானோ அப்பத்தான்
+2 முடிச்சிருந்தேன். எல்லோரும் எப்படி எங்க ஆரம்பிப்பதுன்னு
முழிச்சுகிட்டு இருந்தாங்க. சரியா முறையா எழுதியது நான்
மட்டுமே. மாஸ்டர் பாராட்டி நீதான் கரெக்டா செய்வேன்னு நினைச்சேன்,
உங்க அப்பா பேங்கல வேலை செய்வதால உனக்கு சொல்லிக்
கொடுத்திருப்பாருன்னு கெஸ் செஞ்சேன், சரியா இருக்கு”
அப்படின்னு சொன்னார். பேங் சிலிப்ஸ் எழுதுவது, எல்லாம்
அப்பா சொல்லிக்கொடுத்திருந்தாரு. பேங்க்ல இருக்கும் பழைய
ஃபார்ம் ரெண்டு கொண்டு வந்து கொடுத்து இதை ஃபில் அப்
செய் பாப்போம்னு! சொல்வார்.

இந்த மாதிரி ட்ரையிங்கினால தனியா தெகிரியமா
என்னால் கடிதம் எழுத முடியும், எந்த வங்கியோ, இல்லை
எந்த விதமான விண்ணப்ப படிவமோ அதை பூர்த்தி
செய்யும் திறனையும் காலேஜ் சேரும் முன்னரே
எனக்கு கை வரும்படி அப்பா சொல்லிக்கொடுத்திருந்தாரு.

என்ன கொஞ்சம் அன்பா சொல்லிக்கொடுத்திருந்திருக்கலாம்!
அவருக்கு தெரிஞ்சது அம்புட்டுத்தான். தன் தந்தையையே
பார்த்திராதவர். தாத்தா சாகும்போது அப்பாவுக்கு இரண்டு
வயசு. அவர் உணர்ந்திராததால் அந்த பாசத்தை எங்களுக்கும்
கொடுக்கத் தெரியவில்லை போல. அதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
ஆனாலும் எம்டனில் வளர்ப்பில்  நான் தனியாக,
எல்லாவற்றையும் செய்து கொள்ளும் திறனுள்ளவளாக
இருப்பதில் சந்தோஷமே! நன்றி அப்பா!!





20ஆம் தேதி தந்தையர் தினம். இந்த வாட்டி ரமணிசாருக்கு
இரண்டு வாழ்த்தா சொல்லணும். 20 ஆம் தேதி தந்தையர்தினம்.
21 அவரது திருமண நாள். 38 வருடங்கள் முடிகிறது.

எப்போதும் நீங்கள்திட்டியதையும், சீப்பின் கெட்டியான பாகத்தால் அடித்தையும்மறக்க முடியாத மகளிடமிருந்து  அன்பான
 தந்தையர் தின வாழ்த்துக்களுடன் இனிதான
திருமண நாள் வாழ்த்துக்களும்.


Thursday, June 17, 2010

பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!

என் பையன் சோறு சாப்பிடணும்னா போகோ, சுட்டி டீவி இருந்தா
போதும்!

என் பொண்ணு வந்ததும் டீவி முன்னாடி உக்கார ஆரம்பிச்சான்னா
பொழுது போவதே தெரியாது. எனக்கும் வேலை செய்ய வசதி!!

இப்படி சொல்லும் வகை பெற்றோரா! உங்கள் குழந்தை அதிக
நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறதா அப்படி என்றால்
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

ADD - ATTENTION DEFICIT DISORDER
அதாவது கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு
ஏற்பட்டு கவனக்குறைவு, குழப்பமான மனநிலை
ஆகியவற்றை உருவாக்கும். சில சமயம்
அதீதமாக ஆக்டிவாக இருப்பதும்,(hyperactive)
முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது(impulsive behaviour)
போன்ற குறைபாடுகளும் இருக்கும்.

இந்த ADD உளவியல் ரீதியான குறைபாடு. இது தற்போது
பல பிள்ளைகளையும் தாக்குகிறது. ஆனால் இது தான்
என்று புரியாமலேயே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

முறையான வைத்தியம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு
பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள்,
சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை
கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும்
நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால்
பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும்
இந்த மனோபாவம் தொடரும் என்பதுதான் உளவியாளர்கள்
அடிக்கும் எச்சரிக்கை மணி.

பரம்பரை ரீதியாகவும் இந்தக் குறைபாடு வருவதற்கு
சாத்தியம் இருக்கிறது
நாம் உண்ணும் உணவில் கலக்கப்படும் சில கலர்கள்,
உண்ணும் உணவு, மாசு பட்டுக்கிடக்கும் சுற்றுபுறச்சூழல்
ஆகியவையும் இந்தக் குறைபாட்டுக்கு காரணமாக
இருக்கக்கூடும்.



பல வருடங்களாகச் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி
குழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி
பார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி
பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு
கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி
வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்
காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து
இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.

நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்
பார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான
மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்
போகிறது. இந்த மாதிரிover stimulation மோசமான
பழக்க வழக்கங்களைத் தந்து விடும். தொலைக்காட்சி
அதிகமாக பார்ப்பதால் புத்தகம் படித்தல், puzzles விளையாடுதல்,
குறுக்கெழுத்து எழுதுதல், போன்றவற்றை செய்ய விடாமல்
செய்து விடும். மேற் சொன்னவை மூளையை ஒருங்கிணைத்து
ஒரு முகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள்.

தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம்,
நொடிக்குநொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது பாதிப்பைத் தருகிறது.
வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட
இதே விளைவைத் தருகின்றன.

கண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை
நிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை
ஏற்காது! நிஜவாழ்வில் இத்தகைய வேக இல்லாத
பொழுது தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய
உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

ADD - ATTENTION DEFICIT DISORDER இதன் அறிகுறிக்கள்:

சீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,
சீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு
தாவுதல்.

ஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய
முடியாது.

ஒரு விளையாட்டோ செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது
சில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.

முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்
செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்
அதை செய்ய மாட்டார்கள்.

ஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து
முடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.

பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை
காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம்
பெற்றோருக்கு வரும்.

பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.
குழப்பமான மனநிலை.

இவற்றிற்கு முறையான மருத்துவ கவனம தேவை.
தகுந்த உளவியாலர் (psychiatrist) உதவி பெற்று
ஆவன செய்வது உடனடித் தேவை. மருந்து, psychotherapy,
ட்ரைனிங் ஆகியவற்றின் மூலம் இந்த குறைப்பாட்டின்
அறிகுறிகளை குறைக்க முயற்சி செய்யலாம்.


ஆசிரியரும் பெற்றோரும் கூட இதில் கலந்து
குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து
அதற்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.
வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்.
அதிகம் கலர் கலராக இருக்கும் உணவுகளை
எடுத்துக்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட
சக்கரையை குறைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்களை
அதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முறையான மனநலமருத்துவரைச் சந்தித்து
தேவையான உதவிகளை குழந்தைக்குச் செய்வதனால்
குழந்தையின் வளர்ச்சி, சாதரணமான, ஆரோக்கியமான
வாழ்க்கையை குழந்தைக்கு வழங்கலாம்.


Wednesday, June 16, 2010

என் இடத்தில் நீ இருந்தால்!!!!

ஒரு திரைப்படத்தை அல்லது நாடகத்தை மிகவும் ரசித்து
பார்க்கிறோம். சில சமயம் அந்த நாயகன் நாயகிக்கு அந்த
கேரக்டரே பேராக அமையும் அளவிற்கு மிகச் சிறந்த
நடிப்பாக இருக்கும். ”சிவாஜி” கணேசன் என்று சொன்னாலே
கம்பீரமான நடிப்பு, கர்ஜிக்கும் குரல் எல்லாம் நினைவுக்கு
வரும். வெறும் கணேசன் என்று போட்டால் ஜெமினி கணேசனா
யாரு? என குழப்பம் ஏற்படும்.

ஒரு குறிப்பிட்ட நடிகர் தனது கதாபாத்திரத்துடன் ஒன்றி
சிறப்பாக நடித்தால்தான் முழுமை பெறும். போலீஸ்
என்று சொன்னாலே தங்கபதக்கம் சிவாஜி என்று அந்தக்கால
ரசிகர்களும் காக்க காக்க சூர்யா என இந்தக்கால ரசிகர்களும்
போற்றும் அளவுக்கு அந்த பாத்திரத்துடன் ஒன்றி உடலை
ஏற்றி, மெருகு கூட்டி நடித்திருப்பது புரியும்.

எத்தனையோ பேர் போலிஸாக நடித்திருந்தாலும் சிலரே
அந்தப் பாத்திரத்துக்கு பொருந்துவதன் காரணம் சில
எக்ஸ்ட்ரா மெனக்கெடல்கள். இதை ஆங்கிலத்தில்
method acting என்பார்கள். வில்லனாக நடிப்பது
எவ்வளவு கஷ்டம் என்பது அந்த பாத்திரங்களைச்
செய்தவர்களுக்குத்தான் தெரியும்.

அலுவலகத்திலோ, வீட்டிலோ பிரச்சனை ஏதும்
ஏற்பட்டால் உடனே வாயிலிருந்து வரும் டயலாக்
“என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்!” இது
சத்தியமான உண்மை. தலைவலியும் திருகுவலியும்
தனக்கு வந்தால்தான் புரியும் என்று பெரியவர்கள்
சொல்வார்கள். அனுபவம் தான் சரியான ஆசான்.

வாதம் விவாதமாகி பெரிய பிரச்சனையாகிடகாரணம்
பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் போவதே.
இது எந்த வித பிரச்சனையாகவும் இருக்கலாம்.
கோர்ட்டில் வாதிடும் போது வாதி, பிரதிவாதி என
குற்றம் சாற்றுபவர், குற்றம் சாற்றப்பட்டவர் என
இரண்டு பக்கமும் வக்கீல்கள் பேசுவார்கள். அன்றாடம்
நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் வக்கீல் வைத்துக்
கொண்டிருக்க முடியாது.

mono acting என்று ஒருவகை நடிப்பு உண்டு. இதில்
கூட யாரும் நடிக்க மாட்டார்கள். ஒருவரே வேறு
சில கதாபாத்திரமாகவும் நடிப்பார். மிகச்சிறந்த நடிப்பின்
வெளிப்பாடாக இது இருக்கும். இதே போல மற்றவரின்
இடத்தில் நாம் இருந்தால் நமது ரியாக்‌ஷன் எப்படி இருந்திருக்கும்
என ஒரு கணம் நம்மை அந்த தருணத்தில், இடத்தில்
நிறுத்தி வைத்துப்பார்த்தால் நிலமையின் தீவிரம் புரியும்.


ஆங்கிலத்தில் இதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

Always put yourself in others' shoes.
If you feel that it hurts you,
it probably hurts the other person, too.

ஆம் அடுத்தவரின் பக்க நியாயத்தை அறிய இதை விட
சிறந்த வழி இருக்காது.

25 வயதில் தந்தையைக் கண்டால் மகனுக்கு பிடிக்காது.
அம்ஜத்கானாகத்தான் தெரிவார். அந்த மகனுக்கும்
திருமணமாகி குழந்தை பிறந்து வளரும் பொழுது
தகப்பனாக தன்னை உணர ஆரம்பிக்கும் பொழுது
தன் தந்தையை மிகவும் நேசிக்கத் துவங்கி விடுவார்.
( மகன் உணர்ந்ததை அறிய முடியாத தூரத்துக்கு
தந்தை போயிருக்கக்கூடும்!!)


அம்மா என்பவள் ட்ரில் மாஸ்டர் போல் வீட்டில்
வேலை வாங்குகிறாள், கத்துகிறாள் என்றே
மகள் தந்தையின் துணையோடு அன்னையிடம்
அன்னியப்பட்டு போகிறாள். அவளும் தாயாகும்
பொழுதுதான் அன்னையாக இருப்பதன் கஷ்ட
நஷ்டங்கள் புரிய ஆரம்பிக்கும்.

தனக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை,
தனது கம்பெனி சரியில்லை, உயரதிகாரி
சரியில்லை என வருந்துபவர்கள் ஒரு கணம்
தன்னை அந்த உயரதிகாரியாகவும் தனக்கு
கீழ் ஒருவர் தன்னைப்போல(ஒரிஜனலாக)
வேலை செய்தால் எப்படி இருந்திருக்கும்
என கற்பனை செய்து பார்த்தால் தன் பக்கம்
இருக்கும் தவறு புரியும். தான் வாடிக்கையாளர்களிடமும்,
அலுவலக நண்பர்களிடமும் எப்படி நடந்துக்கொண்டிருக்கிறோம்
என்று தெளிவாகத் தெரியும். மாற்றம் எங்கேத்
தேவை என்பது வெளிச்சமாகும்.


கணவன் மனைவிக்குள் பலவித கருத்து
மோதல்கள் ஏற்படக் காரணமும் இத்தகைய
ஒரு உணர்தல் இல்லாத காரணமே. ஆண்
தனது கோணத்திலிருந்து மட்டுமே பார்த்து
தான் செய்வது நியாயம் என்று கூற பெண்ணும்
அதையே செய்யும் பொழுது நிலமைத் தீவிரமாகிறது.

இப்போது காலம் மாறிவிட்டது. பெண்கள் வீட்டுக்குள்ளேயே
அடங்கி கிடப்பதில்லை. உத்யோகம் புருஷ லட்சணம் என்று
ஆண்கள் மட்டும் வேலைக்கு போவது போய் இப்போது
இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூடவே சம்பாதிக்கிறார்கள்.

அதனால் இது ஆண் செய்யும் வேலை, பெண் செய்யும்
வேலை என்று ஏதும் தனியாக இருப்பதில்லை. ஆனால்
பல குடும்பங்களில் பிரச்சனை வெடிக்கத்தான் செய்கிறது.
சில நிமிஷம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து
அடுத்தவரின் இடத்தில் தன்னை நிறுத்திப்பார்த்தால்
தவறு எங்கே என்று புரிந்து விடும். திருத்திக்கொள்ள
முடியும். விளையாட்டாக கூட இதைச் செய்து பார்க்கலாம்
கணவன் மனைவியா, மனைவி கணவனாக அவரவர்
செய்யும் வேலையை மாற்றி செய்து பார்த்தால் புரியும்.


வேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும்
பெண்கள் எந்த விதத்திலும் குறைவில்லாதவர்கள் என்பதும்
வீட்டில் இருக்கும் பெண் இடத்தில் இருந்து பார்த்தால்தானே
புரியும்!!

Step into someone else's shoes to understand better
என்று உளவியாளலர்கள் சொல்கிறார்கள். செய்து பார்ப்போமா!??!!




Tuesday, June 15, 2010

வாழ்த்துக்கள் ஆஷிஷ் & அம்ருதா

கொழும்பு போனதிலிருந்தே மனசுக்குள்ள ஒரு பயம்.
திரும்ப எப்ப வேணாம் இந்தியா வரலாம். வந்தா
கண்டிப்பா பசங்களுக்கு சிலபஸ்ல பிரச்சனைதான்.
எப்படி சரி செய்வதுன்னு ஒரு பயம்!

நம் இந்திய பாடத்திட்டத்துல படிப்பு கொஞ்சம்
ஸ்ட்ரெஸ்ஸாவே இருக்கும். அதுதான் என் பயம்.
மத்த சப்ஜக்ட் அப்ப பாத்துக்கலாம்னு ஹிந்தி
மட்டும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன்.

சம்சாரம் அது மின்சாரத்துல விசு சொல்லறாப்ல
சொல்லிக்கொடுத்தேன், சொல்லிக்கொடுத்தேன்,
சொல்லிக்கொடுக்கிறேன், இன்னும் சொல்லிக்கொடுக்கிறேன்
நிலமைதான்.

ஹிந்தியில் உயிர் மெய் எழுத்துக்கள் மட்டும்தான்
படிச்சான் ஆஷிஷ். அம்ருதாவும் படிக்க ஆரம்பிச்சதும்
திரும்ப அ, ஆவன்னான்னே போனிச்சு. திரும்ப
வர்ற வரைக்கும் இருவரும் அதுக்கு மேல முன்னேறல. :(
அம்மா சொல்லிக்கொடுத்தா இப்படித்தான். நம்ம
அம்மாதானேன்னு சாய்ஸ்ல விட்டுடுவாங்க.
சரி எப்படி நடக்குதோ நடக்கட்டும்னு அதுக்கு மேல
வற்புறுத்தாம விட்டுட்டேன்.

பொட்டி கட்டி 2 வருஷம் முன்னாடி இந்தியா வந்தாச்சு.
மத்த பாடங்களை விட ஹிந்திதான் கஷ்டமா இருந்துச்சு.
காரணம் ஆஷிஷ் அப்ப 7த். டீச்சர் போர்டில் எழுதிப்போட
மாட்டாங்க. டிக்டேட் செஞ்சு அதை பசங்க எழுதும்
அளவுக்கு வகுப்பில் ஹிந்தி இருந்துச்சு. டீச்சரிடம்
ஷ்பெஷல் பர்மிஷன் வாங்கி ஆஷிஷ் டீச்சர் சொல்வதை
ஹிந்திலிஷ் (அதாங்க டங்கிலீஷ் தமிழ் வார்த்தைகளை
ஆங்கிலத்தில் எழுதுவோமே) அதுமாதிரி எழுதி வீட்டுக்கு
கொண்டு வந்து அதை நான் ஹிந்தியில் ரஃப் நோட்டில்
எழுதிக்கொடுக்க அய்யா ஃபேர் நோட்டில் காப்பி செய்வார்.

பரிட்சைகளின் போது ரொம்ப கஷ்டம். வார்த்தைகளை
கோர்த்து படிச்சு பரிட்சை எழுதி மார்க் வாங்கி. இப்போதும்
நான் சொன்னது மார்க் பத்தி கவலைப்படாதே, முதலில்
மொழி புரியட்டும். அம்ருதாவுக்கு பரவாயில்லை போர்டில்
எழுதிப்போடுவார்கள். ஆனாலும் படிச்சு பரிட்சை எழுத
ஆரம்பத்தில் கஷ்டபட்டாள். தனியாக திரும்ப உட்கார
வைத்து சின்ன சின்ன வார்த்தைகள் சொல்லிக்கொடுத்தேன்.
அர்த்தம் புரிந்தால் தானே, மொழியின் அருமை புரியும்!

அப்போ அம்ருதா ஆஷிஷ்கிட்ட ஒரு நாள் சொன்னது,
“அம்மா சொன்ன்படி கேட்டு நாம ஒழுங்க ஹிந்தி
படிச்சிருந்திருக்கலாம்! இப்ப கஷ்டப்படறோம்!”

இலங்கையில் இருக்கும்பொழுதே ஹிந்தி பாட்டுக்கள் கேட்பது
படங்கள் பார்ப்பதுன்னு பழக்கம் வெச்சிருந்தேன். நான்
ஹிந்தி பேசக்கற்றது இப்படித்தான். ஹைதை வந்ததன்
முக்கிய நோக்கமே பிள்ளைகளுக்கு ஹிந்தி மொழி அறிவு
வந்துவிடும். தெலுங்கு தெரியாவிட்டாலும் கூட
ஹிந்தி இருந்தால் இங்கே பிழைக்க முடியும். பள்ளி
டிரைவரிடம் ஹிந்தியில் பேச வேண்டிய நிர்ப்பந்தம்
பிள்ளைகளுக்கு.

அம்மா வீட்டில் எங்களுடன் ஹிந்தியில் மட்டுமே
பேசவேண்டும் (இது நான் முன்னாடி சொன்னது)
என்று அம்ருதாவும் ஆஷிஷும் கோரிக்கை வெக்க
சரின்னு பேச ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சம்
பேசுவது புரிய ஆரம்பமானது. துக்கடா துக்கட
ஹிந்தியில் பதில் சொல்ல ஆரம்பித்தனர்.

அப்பார்ட்மெண்டிலிருக்கும் சம வயது நண்பர்களும்
ஹிந்தியில் பேச மெள்ள பிக்கப் ஆச்சு. இப்ப
சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு. அம்ருதா
ஹிந்தியில் 90க்கு குறையாமல் மதிப்பெண் எடுக்கிறாள்.
அம்ருதாவுக்கு படிக்க சீக்கிரமே வந்துவிட்டது.

ஆஷிஷ் பற்றிதான் கொஞ்சம் மெனக்கட வேண்டுமோ
என்று நினைத்துக்கொண்டிருந்த நேரம் முதல்
டெஸ்ட் மார்க் வந்திருக்கு.ஹிந்தியில் ஐயா தான் டாப்பர்.

இரண்டே வருடத்தில் இவ்வளவு தூரம் முன்னேற்றம்
எனக்கே ஆச்சரியம். என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
இருவருக்கும். இறைவனின் ஆசி என்றும் இருக்க
பிரார்த்தனைகள்.



Monday, June 14, 2010

வலைப்பதிவர் தின வாழ்த்துக்களும் விருது வழங்கலும்

தோழி அமைதிச்சாரல் எனக்கு இந்த விருதை
கொடுத்திருக்காங்க. வைரம். வைரம் வாங்குவதுன்னாலே
எனக்கு ஏனோ பயம். அதனால இத்தனை நாள்
அயித்தான் பர்ஸ் தப்பிச்சிச்சு. :))

அதனால தோழி கொடுத்திருப்பதுதான் என்னோட
முதல் வைரம். ரொம்ப நன்றிப்பா. இத்தனை நாளா
இதுக்கு பதிவு போட தள்ளிபோட்டுகிட்டே இருந்தேன்.
இன்னைக்கு போடலாம்னு முடிவு செஞ்சேன். அதுவும்
நல்லதுக்குத்தான். இன்னைக்கு 14.6 வலைப்பதிவர்
தினமாம். சுவரொட்டி பாத்து தெரிஞ்சுகிட்டேன்.

நட்புக்கள், உறவுகள், புதிதாய் வந்தவர்கள் என பரந்து விரிந்திருக்கும்
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த நந்நாளில்
என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கறேன்.

வைரத்தை வாங்கி நான் மட்டும் வெச்சுகிட்டா
சரி இல்லை. பகிர்ந்துக்க வேண்டும்.



அப்பாவி தங்கமணி

தம்பி அப்துல்லா

ஹுசைனம்மா

அனந்யா மஹாதேவன்

கோமா

இவங்க எல்லோருக்கும் வைரத்தை பரிசளிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.







Sunday, June 13, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி- 13.6.10

”ரெடி” அப்படின்னு ஒரு தெலுங்குப்படம். ஃபேமலி மூவி.
நம்ம நாசர்கூட அதுல நடிச்சிருக்காங்க.கதையும் கொஞ்சம்
வித்தியாசமா நல்லா இருக்கும். நகைச்சுவை ப்ரம்மா
ப்ரம்மானந்தம் அவர்களின் காமெடி கலக்கலா இருக்கும்.

இந்தப் படம் தமிழ்ல வரப்போகுதாம். விஜய்க்கு அடுத்து
தெலுங்குப்படங்களின் ரீமேக்குகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும்
தனுஷ் தான் ஹீரோ. ஹீரோயின் ஜெனீலியா(தெலுங்கிலும்
இவர்தான்). ப்ரம்மானந்தம் கேரக்டரை விவேக்
செய்யறார். படம் எப்படி வரப்போகுதோ!!!??!!

நல்ல கதையம்சம், நல்ல நடிகர்களாக போட்டு
நல்ல குடும்ப படத்தை கொடுங்கப்பா!

*********************************************
தி நகர் கடைகளுக்கு போகணும்னாலே கடுப்பா
இருக்கும். அயித்தான்  வரவே மாட்டாங்க.
அதுவும் ரெங்கநாதன் தெரு கடைகளுக்கு
நோ நோ தான்.  பாண்டிபஜார், உஸ்மான்
ரோடு கடைகள்னா ஓகே சொல்வார்.

ரெங்கநாதன் தெருவில் இருக்கும் ஜவுளி
மாளிகைகளுக்குப் போயிருக்கிறேன்.
விற்பனை பிரிவில் இருக்கும் பெண்களும்
சரி ஆண்களும் சரி ஒரு வித கடுப்பாவே
இருப்பாங்க. நாம இலவசமா வாங்க வரலை,
காசு கொடுத்துதானே வாங்கப்போறோம்,
இப்படி நடந்துகிட்டா எப்படின்னு?
அதனாலே அங்கே போவதை விட்டுவிட்டேன்.

ஆனா அந்த கடு கடுப்பான முகத்துக்கு பின்னாடி
இருக்கும் நிஜம் “அங்காடித் தெரு” பாத்து
புரிஞ்சிக்கிட்டேன். அந்த மாதிரி சோறு,
தங்கும் இடம் கொடுத்து மாட்டை கொட்டகையில்
அடைக்கிறா மாதிரிதான் அந்த பசங்களின்
வாழ்வு இருக்குதுன்னா அந்த பசங்க
கஸ்டமர்கள் கிட்ட கஷ்டமத்தான் நடந்துக்குவாங்க!!
*****************************************************

சனிக்கிழமை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
மயிரிழையில் தப்பிச்சிச்சு. விக்ரவாண்டிகிட்ட
குண்டு வெச்சு தண்டவாளத்தை பேத்துட்டாங்க.
காரணம் ராஜபக்சே இந்தியா வந்ததாம்!
அவர் வந்த வண்டி இல்ல அவரு இருக்கற
இடத்துல வெச்சிருந்தா கூட ஏதோ நியாயம்னு
சொல்லலாம். அநியாயமா 2000 உயிர் போயிருக்கும்ல!!
ஏன் இந்த மர்டர் வெறி!!!
*****************************************************
பஸ்ல போனா அடிச்சு நொறுக்கறாங்க, எரிக்கறாங்க!
ரயில்ல போனா குண்டு பயம், திருடர் பயம்,
ஹி ஹி !! ஃப்ளைட்ல போனா!!! சொல்லவே
வேணாம். சென்ற வாரம் சென்னை போயிருந்தார்
அயித்தான். ஹைதையில் புறப்பட்டதிலிருந்து
சென்னை வரை ஏரோப்ளேன் ஏதோ தண்ணி
போட்டாமாதிரி டான்ஸாம். லாண்டிங் வேற
சரியில்லையாம்!( பைலட்டுகள் “ தாகசாந்தி”
செஞ்சுகிட்டுத்தான் வண்டி ஓட்டறாங்களாமே!
நிசமாவா!அவ்வ்வ்வ்வ்வ்) ரோட்ல நடந்து போறது
கூட பிரச்சனையாகிடிச்சு. நாம வாட்டுக்கு
ஓரமா போனாக்கூட அடிச்சு தள்ளிட்டு போயிடுது
வண்டி.

எங்கயும் போகாம வீட்டோட இருக்கலாம்னு
நினைக்கறீங்களா! ஹை ஹை அதெப்படி
அங்கயும் வெக்கறாங்கள்ல ஆப்பு. நேத்து
டீவி 9 சேனல்ல பாத்ததும் கலவரமாகிடிச்சு.

இந்த செல்போன்களுக்காக ஒவ்வொரு வீட்டுகள்லயும்
டவர் வெச்சுக்க அனுமதி தர்றாங்கள்ள அதுலேர்ந்து
வர்ற ரேடியேஷன் வீட்டுக்குள் இருந்தாலும் தாக்கி
விநோதமான நோய்களை வரவைக்குதாம்.

ஹைதையில் எங்கேயும் சேஃப்டி இல்லையாம்!
எல்லாம் ரேடியேஷன் மயம். தொலி சவுக்கி
அப்படிங்கற இடத்துல 4000த்துக்கு அதிகமா
பாயிண்ட் காட்டுது.

உங்க ஊர்ல யாரானும் இப்படி கண்டுபிடிச்சிருக்காங்களா?
**********************************************************

எப்பவும் டீவீ சீரியல்களில் மாமியார் மருமக குடுமிபிடி
சண்ட, ஓடிப்போன புருஷன் அப்படி இப்படின்னு நாராசமாவே
காட்டுவாங்க. டயாலக்கும் அப்படித்தான். ஆனா செம
ஆச்சரியம். வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு சேனல்
மாத்திகிட்டு இருந்தேன். சன் டீவில ஒரு சீரியல்.
கார் பெட்ரோல் பங்குல வந்து நிக்குது. உடனே கார்ல
இருக்கற அம்மா மொபைலை ஆஃப் செய்யறாங்க.
“நீங்க பேசுங்கம்மா!” அப்படின்னு டிரைவர் சொல்ல
”ரூல்ஸ்னா ரூல்ஸ்தான், பெட்ரோல் பங்குல மொபைலில்
பேசினா ஆபத்துன்னா நாம பேசக்கூடாதுன்னு”அந்தம்மா
சொல்றாமாதிரி காட்டியிருந்தாங்க.
நம்ம ஊரு சேனல்தானா இது!!????

****************************************************






Friday, June 11, 2010

சரித்திரம் மாறுதோ!!!!!!

ஒரு மேகசின்ல இந்த மேட்டரைப் படிச்சதும் ஆச்சரியமா இருந்துச்சு.
ஓடம் ஒரு நாள் கரைமேலேன்னு சொல்வாங்க. அதுமாதிரில்ல
ஆகிப்போச்சு!!!

வியாபாரம் செய்யும் நோக்கிலே இந்தியாவுக்குள் அடியெடுத்து
வெச்சு மெல்ல மெல்ல நம்மையே ஆள ஆரம்பிச்சாங்க
ஆங்கிலேயர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

East India Company அப்படிங்கற பேர்லதான் மொதல்ல
வந்தாங்க. ஆனா இப்ப இந்தக் கம்பெனிக்கு உரிமையாளர்
நம்ம இந்தியர். ஆச்சரியமாவும் அதே சமயம் கொஞ்சம்
கர்வமாவும் இருக்குல்ல.

சஞ்சீவ் மெஹத்தா எனும் இந்தியர் இந்தக் கம்பெனியை
வாங்கி லண்டனில் ஒரு கடையையும் திறந்திருக்காரு.
கம்பெனியை வாங்கிய பொழுது வானவில்லின் ஓரத்தில்
தங்கம் இருப்பது போல தெரிஞ்சாலும் மனதுக்குள் ஒரு
இந்தியனாக நம்மை முன்பு ஆண்டவர்களின் கம்பெனியை
வாங்கியிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறது என்று
சொல்லியிருக்காரு.

லண்டனில் கடை தொறந்தாச்சு. சீக்கிரமாவே
அதாவது இந்த வருடத்துக்குள் இந்தியாவிலும்
East India Company கடை திறக்கப்படுமாம்.

fine foods, furniture, real estate, health and hospitality
இவற்றிற்கான கடையாக கிழக்கு இந்திய கம்பெனி
இருக்குமாம்.

வலைத்தள முகவரி
ஒரு இந்தியனாக சஞ்சீவ் மெஹத்தா நம்மை
தலை நிமிரச் செய்திருக்கிறார்.


வாழ்த்துக்கள் சஞ்சீவ் புதிய சரித்திரம் படைத்து
காட்ட வாழ்த்துக்கள்





Thursday, June 10, 2010

தனிமை தனிமையோ! கொடுமை கொடுமையோ!!!

ஆஷிஷுக்கு ஹிந்தியில் ஒரு பாடம் சொல்லிக்கொடுத்தது
ஞாபகம் வருது. கிராமங்களை விட்டு மக்கள் பிழைப்புக்காக
நகரத்துக்கு வந்த பின்னால கிராமங்களில் நிலமை எப்படி
இருக்கும்னு? ஒரு பாடம்.

மாடுகள் எழுப்பிய புழுதிகள் இல்லை,  கிராமத்தின்
அஸ்திவாரனமான வயல்வேலை சத்தம் இல்லை,
என எத்தனையோ இல்லைகள்.

அதுமாதிரி இருக்கு இப்ப வீடு. என் ஃப்ரெண்ட்ஸ்
ரெண்டு பேருக்கும் நேத்து ஸ்கூல் திறந்தாச்சு.
அவங்க இரண்டு பேரும் வீட்டுல இருந்தவரைக்கும்
ரொம்ப நல்லா இருந்துச்சு. பிள்ளைகளின் இந்த
விடுமுறையை நல்லா எஞ்சாய் செய்யணும்னுதான்
பதிவு பக்கமே வராம இருந்தேன். இதோ அவங்க
ஸ்கூல் போனதுக்கப்புறம் எனக்கு நாதி இந்த
பதிவுகளும் இந்த நட்புக்களும் தான் :))

3 நேரமும் சேர்ந்துதான் சாப்பிடுவோம். சில சமயம்
அம்மா நான் தோசை சுடறேன், டீ போடுறேன்னு
அவங்க கைவண்ணமும் நடக்கும். ஆஷிஷ் அம்ருதா
ரெண்டு பேரும் லீவு மொத்தமும் வாஷிங் மெஷினில்
துணி போட்டு, காயபோட்டு, மடிச்சு வெச்சு, பாத்திரம்
எடுத்து கவிழ்த்துன்னு ட்ர்ன் போட்டு செஞ்சு கொடுத்தாங்க.

திடும்னு மம்மீஸ் டே அவுட் வித் கிட்ஸ்னு கிளம்பிடுவோம்.
எந்த சந்தேகமும் வராம சமையல் எல்லாம் செஞ்சு வெச்சிட்டு சர்ப்ரஸா
பசங்களை ஐமாக்ஸுக்கு கூட்டிகிட்டு போய் கேம்ஸ்
விளையாட வெச்சு லஞ்ச் மெக்டொனால்ட்ஸ்ல
கொண்டாடினது, சர்பரைஸா பார்க்குக்கு கூட்டிகிட்டு
போனது,  ஊருக்கு போனாலும் கோவில் குளம்னே
போயிடறோம்னு( பசங்களுக்காகன்னு நான் சொல்ல
எனக்கு ஓய்வுக்காகன்னு அயித்தான் சொல்ல) 35 கிமீ
தூரத்துல இருக்கற ரெசார்ட்ல போய் ரெண்டு நாள்
தங்கினோம்.

ரொம்ப நாளைக்கப்புறம் நாங்க நாலு பேரும் நீந்தி
விளையாடி சந்தோஷமா இருந்த தருணங்கள் அது.



இரண்டுமாசமா நாங்க அடிச்ச கொட்டம் எல்லாம்
அசைபோட்டுகிட்டு அடுத்த வருஷ லீவுக்காக
சக்கரவாகை பறவை மழைநீருக்காக காத்திருப்பது
போல காத்திருக்க வேண்டியதுதான்.

மதியம் சோறு தனியே தன்னந்தனியேன்னு தான்.
எப்படா மணி 2.45 ஆகும். பசங்க வருவாங்கன்னு
காத்திருப்புக்கள், காலை நேர அவசரங்கள் எல்லாம்
ஆரம்பமாகிடிச்சு. இப்ப அயித்தானுக்கு ஆபீஸ்
கிட்டத்துல தான்னாலும் நேரத்துக்கு வர மாட்டாரு.
ப்ரியமானவளே படத்துல விஜய் டயலாக் அடிக்கும்
முன்னாடியே கல்யாணமான புதுசுலேயே அயித்தான்
கராறா சொல்லிட்டாரு,” எனக்காக காத்திருந்து
உடலை கெடுத்துக்காதே, உனக்கு பசிச்சா சாப்பிடணும்னு!”
அவங்க வேலை அப்படி. சில நாள் ஊரில் பல நாள்
டூரில். தெலுங்கில் “பதுக்கு பஸ்ஸ்டாண்ட்” ஆகிடிச்சு
அப்படின்னு சொல்வாங்க. அதாவது வாழ்க்கை
பஸ்ஸ்டாண்டில் என்பது போல. அயித்தானுக்கோ
பதுக்கு முன்னே  ரயில்வே ஷ்டேஷன்களிலும்
இப்போ ஏர்போர்டுகளிலும்மு ஆகிப்போச்சு.

பசங்களுக்கு லீவு விட்டா பல வீட்டுல அலறுவாங்க.
எனக்கு அப்பத்தான் கொண்டாட்டம். :) இப்ப
இப்படி தனிமை தனிமையோன்னு புலம்பாம
வேலைக்கு போகலாம்னு தோணும். வாய்ப்புக்களும்
வருது. நல்ல ஸ்கூல்ல கூப்பிட்டாங்க. மனசு
வரலை. பதினம் வயதில் இருக்கும் பையன்,
10 வய்தில் மகள். இப்போது என் தேவை இவர்களுக்குத்தான்அதிகம் தேவை.

பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள்எவ்வளவோ
விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. தூக்கம்,
பசி, ஊர் சுற்றுதுல என பலதும்  குழந்தைகளின்
அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப எத்தனையோ
விட்டுக்கொடுப்புக்கள். அதனாலே தனிமையை
துணையாக்கிக்க கற்றுக்கொண்டுவிட்டேன்.

பள்ளிகள் விடுமுறை விட்டதும் ஒரு மாதிரியான
அமைதி இருக்கும். அங்கே இருக்கும் கரும்பலகைகளும்,
(இப்போ வொயிட் போர்டுகள்) பெஞ்சுக்களும்
பேச ஆளில்லாமல் தன்னை உபயோகிப்பாளர்
இல்லாமல் போரடித்து கதறி அழுமோ என நினைப்பேன்.
பள்ளிகள் திறந்ததும் அவற்றிற்கு சந்தோஷமாக
இருக்கும். 

ஆஷிஷுக்கு ஸ்கூல் லீவு விட்டால் பிடிக்காது.
ஒரு நாள் இரண்டுநாள் என்றால் சரி. ஆனால்
இப்படி தொடர்ச்சியாக லீவு கொடுத்தால் போரடிக்குது,
எப்பத்தான் என் ஃப்ரெண்ட்ஸுக்களைப் பார்ப்பேனோன்னு
இருக்கும்மா! என்பான்.  பிள்ளை பிராயத்தின் சந்தோஷமே
நட்புக்களுடன் தானே. நேற்று இரண்டும் சந்தோஷமாக
ரெடியாகி வேன் ஏறி கையசைத்து கிளம்பி விட்டார்கள்.

எனக்கு அப்படியே கொசுவத்திச்சு. 11 வருடங்களுக்கு
முன்னால் முதன் முதலாக ஆஷிஷை பள்ளிக்கு
அனுப்பி வைத்த அந்த நாள். நங்கநல்லூர் டீ.ஏ.வி
பள்ளிதான் ஆஷிஷ் முதலில் படித்தது. அட்மிஷன்
போட்டு ஸ்கூல் திறந்த அன்று  ஸ்கூல் பஸ்ஸில்தான்
போகவேண்டும். முதல் நாள் அழுது ஆர்ப்பாட்டம்
செய்வானோ என்று குழம்பிக்கொண்டிருந்தேன்.

நானும் அயித்தானும் எந்த உணர்ச்சிகளையும்
காட்டாமல் தயார் செய்து பஸ்ஸில் ஏற்றி
விட்டோம். அழகாக ஏறி உள்ளே சென்று
விண்டோ சீட்டில் உட்கார்ந்து கொண்டு
டாடா காட்டிவிட்டு போய்விட்டான்!!
வீட்டுக்கு வந்து அழுது தீர்த்தேன். முதன்
முதலில் குழந்தையை விட்டு பிரிந்த
அழுகை அது. ஆஷிஷ் ஆர்ப்பாட்டம் செய்திருந்தால்
நான் அழுதிருக்க மாட்டேனோ என்னவோ. :))

11 மணிக்கு பள்ளிக்குச் சென்று அழைத்து
வரப்போனேன். அவன் வகுப்பில் அனைவரும்
அழுது கொண்டிருக்க அடக்க முடியாமல்
ஆயாக்களும், ஆசிரியைகளும் கஷ்டப்பட
ஐயா ஹாயாக என்னைப்பார்த்து ஓடிவந்து
கட்டிக்கொண்டார். ஆஷிஷால் மட்டும்தான்
எங்களுக்கு பிரச்சனையில்லை என்றார் டீச்சர்.

அம்ருதாவும் ஸ்கூலுக்கு போக அழுததில்லை.
ஆனால் ஒரே ஒரு கண்டீஷன் தான். அண்ணா
போல தானும் வேனில் போகவேண்டும். அப்போது
நாங்கள்  இருந்தது கோடம்பாக்கத்தில். ஆஷிஷ்
பீ.எஸ் மூத்தா பள்ளியில் சேர்ந்திருந்தான். அம்ருதா
படித்தது டீ.ஏ.வீ சக்கரவர்த்தி பள்ளி. அருகே இருந்த
பள்ளிக்கு வேனில் சென்று வந்தாள்.

பிள்ளைகள் அழுவது எதனாலே? இப்போ நான் புலம்புவது
எதனாலே!?! எல்லாம் பிரிவு செய்யும் மாயம் தான்.
புலம்பினாலும் அந்தப் பிரிவை எதிர்கொள்ள
பெரியவர்கள் நமக்குத் தெரியும்.

பிள்ளைகள் அழாமல் பள்ளிக்குச் செல்வதுதான்
எல்லோருக்கும் நல்லது. அதற்கு எப்படி தயார்
செய்வது என்பதற்கான பதிவுகள் நாளை முதல்
பேரண்ட்ஸ் கிளப்பில் வெளியாகும்.


சீ யூ தேர்