Total Pageviews

Wednesday, August 25, 2010

இறைவனுக்கு நன்றி!!!


மும்பை எனக்கு பிடிச்ச ஊர்னு எல்லோருக்கும் தெரியும்.
ஆனா அது அயித்தானுக்கு பிடிக்காது. :)

அயித்தானுக்கு பிடிச்ச ஊர் சென்னை. நமக்கு அது
ஆகவே ஆகாது. :)))

ஆனா ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்ச இடம்னா அது
ஹைதை. எங்கள் திருமண வாழ்க்கை துவங்கியது இங்கேதான்.
இந்த சூழ்நிலை, தட்பவெட்பம், மக்கள் இதனாலேயே
ரொம்ப பிடிக்கும்.

இங்கே வீடு வாங்க வேண்டுமென்பது 15 வருட கனவு.
நியாயமான கோரிக்கைகளை இறைவன் நிறைவேற்றுவான்
என்பது உண்மை. எங்களின் இந்தக் கனவை இறைவன்
நிறைவேற்றி இருக்கிறான். ஹைதையில் ஒரு அப்பார்ட்மெண்ட்
வாங்கி வரும் 30ஆம் தேதி புதுமனைப்புகுவிழா.

நம்ம நட்புக்கள் சொந்த பந்தங்கள் எல்லார்கிட்டயும்
சந்தோஷத்தை பகிர்ந்துக்காட்டி எப்படி?? ஊர்லேர்ந்து
உறவினர்கள் வர ஆரம்பிச்சாச்சு. அம்மம்மா, தாத்தா,
அத்தை வந்துட்டாங்க. அம்மா,அப்பா கிளம்பியாச்சு.
ஞாயிற்றுக்கிழமை இன்னும் சில உறவுகள் வர்றாங்க.

இந்த நேரத்துல பதிவுல உக்கார முடியாது. அதனால
ஒரு வாரத்துக்கு லீவு சொல்லிக்கறேன்.


Monday, August 23, 2010

நம்ம ஊர் சேனல்காரங்க கொஞ்சம் உக்காந்து யோசிக்கலாமே!!!!

டீவி பார்க்கறேன்னு சொல்லிக்கவே வெட்கப்படும் அளவுக்கு
டீவியில் எப்பப்பாரு ஏதாவது சீரியல்கள் சீரியஸா வந்து
நம்மளை சீரியஸாக்கிடும். இல்லாட்டி காமெடின்னு சொல்லி
ஏதாவது கூத்து, அதுவும் இல்லாட்டி சினிமா சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சி. இதை விட்டா வேற எதுவும் கிடையாது.
ஒரு காலத்துல தூர்தர்ஷனைத் திட்டிகிட்டு இருந்ததற்கு
நல்ல பனிஷ்மெண்ட்.:((

நல்ல உபயோகமான நிகழ்ச்சிகளா எதுவும் கிடையாது.
எனக்கு பல சேனல்களை பார்க்கும்போது நம்ம ஊர்
சேனல்களில் தான் பகல் நேரங்களில் அதிகமா சீரியல்ஸ்
காட்டுறா மாதிரி தெரியுது. அதை விடுங்க. மேட்டருக்கு
வர்றேன்.

நம்ம மக்கள்ஸ் பிட்சா, பர்கர்னு மாறிட்டங்க. ஆலு சாட்,
கோல்கப்பாஸ்னு கலந்தடிக்கறாங்க. நம்ம பாரம்பரிய
உணவுகளை சமைப்பதை காட்டினா பலரும் கத்துக்க
ஈசியா இருக்கும். நம்ம தமிழ்நாட்டில் ஓவ்வொரு வட்டார
மொழி இருப்பது போல வகைவகையா சமையல்களும்
இருக்கு. பஞ்சு பஞ்சு குழிப்பணியாரங்கள், இடியாப்பம்,
என நிறைய்ய வகை.

எல்லா சேனல்களிலும் சமையல் நிகழ்ச்சி இருக்கு. ஆனா
அது ஏதோ ஒரு நிபுணரை மட்டும் வெச்சு நடத்தறாங்க.
அவங்களை விடவும் திறமையானவங்க சமையற்கட்டில்
ஒரு ராஜ்ஜியமே நடத்திகிட்டு இருக்காங்க. அந்த மாதிரி
சமையல்களை தேடி கண்டுபிடிச்சு, அதை ஒரு நிகழ்ச்சியா
தயாரிச்சா சீரியல்களை விடவும் அதிக வருடம் போகும்.

நிபுணர்கள் சொல்வது சரி. ஆனா அந்தந்த ஊருக்கு போய்
மண்ணின் மணத்தை சொல்லும் சமையலை தேடி
கண்டு பிடிச்சு வருங்கால சந்ததிக்கு எடுத்துச் சொல்லலாமே!!
எங்க ஊரு பக்கம் கடப்பான்னு ஒண்ணு போடுவாங்க.
சூப்பரா இருக்கும். காரக்குழம்புக்கு வறுத்தரைச்சு செய்வாங்க
பாருங்க!! சுள்ளுன்னு சூப்பரா இருக்கும். ( இதே காரக்குழம்பை
சென்னையில் 10 வருடங்களுக்கு முன்னாடி ஒருத்தர்
குருமான்னு சொன்னாரு :( ) வித்தியாசமான சமையல்கள்,
அதோட பக்குவம் இதெல்லாம் கத்துக்கலாமில்ல. அத்தவிட்டு
எப்பப்பாரு ஏதோ சீரியல்தான்.

இங்கே மா டீவி, இ டீவி, ஜி டீவி, எல்லாவற்றிலும்
12 மணிக்கு சமையல் நிகழ்ச்சி தான். மா ஊரி வண்ட(எங்க ஊரு
சமையல்), மீ இண்டி வண்ட( உங்க வீட்டு சமையல்)
அபிருச்சி( அருமையான ருசி) அப்படிங்கற பேர்ல நிறைய்ய
கத்துக்க முடியுது. ஊறுகாய் நேரத்துல வகை வகையா
ஊறுகாய், இப்ப நோன்பு சீசன்ல அதுக்கு தகுந்த மாதிரி
இப்படி எப்பவும் வெரைட்டி நல்லா இருக்கு.

colors சேனலில் கிச்சன் சாம்பியன் நல்லா இருக்கு.
நல்லா உக்காந்து யோசிங்க மக்கள்களே!!!


Wednesday, August 18, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி- 18.8.10

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. திறமையான ஒரு ஆள்தான்
இந்த வருடத்தின் INDIAN IDOL என்பதுலதான அந்த
சந்தோஷம். ஹைதையைச்சேர்ந்த ஸ்ரீராம்சந்த்ரா
இறுதிக்கட்டப்போட்டிக்கு வெற்றி பெற்றதும்
லோக்கல் சேனல்களிலிருந்து, அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க,
ஸ்ரீராமை தெரியாதவங்க கூட எஸ் எம் எஸ் அனுப்பி
கேட்டுகிட்டது ஸ்ரீராமுக்கு ஓட்டு போடுங்க என்பதுதான்.

சென்ற முறை கருணா எனும் பெண் தகுதியானவளாக
இருந்தும் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
இந்த முறை அனைவரும் வாக்களித்து ஸ்ரீராம் ஜெயிச்சாச்சு.
ஆந்திராவுக்கு மட்டுமல்ல இது தென்னிந்தியாவுக்கே
பெருமை! இந்த நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெற்ற
முதல் தென்னிந்தியர் ஸ்ரீராம் மட்டும்தான்.
இன்னொருக்கா என்னோட வாழ்த்துக்கள்.


**********************************************************
நேற்று சாயந்திரம் 3 மணி வரைக்கும் அக்னி நட்சத்திரம் மாதிரி
வெயில்!!! சாயந்திரம் 4 மணிக்கு மழை ஆரம்பிச்சு பின்னி
எடுத்திருக்கு. பஞ்சாராஹில்ஸ், ஜுப்ளி ஹில்ஸ், பஞ்சகுட்டா,
குக்கட்பள்ளி, பாலநகர் எல்லா ஏரியாவும் வெள்ளக்காடு.
90 நிமிஷ மழைக்கு வெள்ளம். பின்ன சும்மாவா
90 நிமிஷத்துல 8 செ.மி மழை பெஞ்சு சாதனையில்ல
படைக்கப்பட்டிருக்கு.

ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் நெருடுது. மழைபெஞ்சா
அழகா தண்ணி வடிஞ்சு கால்வாய்க்கு போறமாதிரி நம்ம
ஊர்ல சாரி நாட்டுல எப்ப நடக்கும்???!!!!
***************************************************

நேற்று முன் தினம் பள்ளி விட்டு வந்ததும் எப்போதும்
போல அம்ருதம்மா என் கிட்ட வந்து பேசினாங்க.
“எங்க ஸ்கூல்ல ஏவி ரூம்ல் (ஆடியோ வீடியோ ரூம்)
கேர்ல்ஸுக்கு மட்டும் ஒரு ஷோ நடத்தினாங்கம்மா!
பீரியட்ஸ் பத்தி எல்லா டீடெய்ல்ஸும் சொன்னாங்க.
“விஸ்பர்” கம்பெனியிலேர்ந்து வந்திருந்தாங்க,
பீரியட்ஸ் வரும் காரணம்,அந்த நேரத்துல இருக்கும் பயம்,
உடல் உபாதை, மன உளைச்சல்,ஹைஜீனிக்,
சிம்ப்டம்ஸ், பேட் எப்படி வைத்துக்
கொள்வது! எல்லாம் பத்தி சொன்னாங்க. என்றாள்.
மிகவும் விரிவாகவே பிள்ளைகள் பயப்படாத
வகையில் இருந்திருக்காம் நிகழ்ச்சி.
நானும் மகளுக்கு அவ்வப்போது இதைப்ப
பற்றி பேசுவதனால் அவளுக்கு அவர்கள் சொன்னது
மேலும் தெம்பை தந்திருக்கு.

இதை மற்றப் பள்ளிகளும் பின்பற்றலாமே!!!

பெண் பிள்ளைகளிடம் இது பற்றி பேசும் நாம்
ஆண்பிள்ளைகளிடம் இதைப்பற்றி மூச்!! ஏன் இப்படி?
அவர்களுக்கு இயற்கையாக இந்த மாற்றத்தில்
பெண்களுக்குள் ஏற்படும் உபாதைகள் புரிந்தால்
நல்லதுதானே!! என் மகனுக்கு 11 வயதாக இருக்கும்
பொழுது மொத்தமாக இல்லாவிட்டாலும் மாதாந்திர
பீரியட்ஸ், அதனால் ஏற்படும் மூட் ஸ்விங் இது
எனக்கு மட்டுமல்ல உன் வகுப்பு ஆசிரியை, உடன்
படிக்கும் தோழிகளுக்கும் உண்டு. அவர்களின்
பேச்சில் மாற்றம் தெரிந்தால் பொறுமையாக
இரு! என்று புரிய வைத்திருப்பதால் எவ்வளவு
உதவியாய் இருக்கிறது என்பது நான் உணர்ந்திருக்கிறேன்.
நல்லதொரு புரிதலை அவர்களுக்குள் விதைக்க
இது சிறந்த தருணம்.

***********************************************

”தாத்தா எப்ப இங்க வர்றீங்க?”

”என் பொண்ணு பர்த்டேவுக்கு அங்க இருப்பேன்!

”இப்பவே கிளம்பி வாங்க!!”

“நானும் அம்மம்மாவும் இப்பவே வரணும்னா
ஃப்ளைட்லதான் வரணும்! நீயும் உன் தங்கச்சியும்
உங்க பாக்கெட் மணியிலேர்ந்து ஆளுக்கு 5ஆயிரம்
அனுப்பி வெச்சா உடனே அடுத்த ஃப்ளைட் பிடிச்சு
அங்க இருப்போம்!!!

“இல்ல தாத்தா நீங்க கஷ்டப்பட வேண்டாம்.
பொறுமையா அடுத்த மாசமே வாங்க!!!””

இது தாத்தா ரமணிக்கும் பேரன் ஆஷிஷுக்கும்
நடந்த பேச்சு வார்த்தை :))

ஒண்ணும் சொல்லுவதற்கில்லை.
*************************************************

கல்வியமைச்சர் சிபில்," TEACHERS NEED BETTER FACILITIES
TO DO BETTER" அப்படின்னு சொல்லியிருக்காரு. ஒரு டீயும்
அதோட ஒரு போண்டா இல்லாட்டி பன்னைத்தவிர வேறென்ன
FACILITI கிடைக்குது ஆசிரியைகளுக்கு.

சமீபத்துல மனநல மருத்துவ நண்பர் ஒருத்தர்கிட்ட
பேசிகிட்டு இருந்தப்போ,” child psychology படிச்ச
ஆசிரியைகள் இல்லாதது ரொம்ப வருத்தம்னு சொன்னார்”
கபில் சிபில் ஆசிரியைகளுக்குத் தேவையான வசதிகளில்
இதற்கான பயிற்சியை கட்டாயமாகவும் இலவசமாகவும்
செஞ்சார்னா வருங்காலத் தூண்களை ரொம்ப ஸ்ட்ராங்கா
செய்யலாம்!!!! நடக்குமா????!!!!



Saturday, August 14, 2010

நாகபஞ்சமி ,கருட சதுர்த்தி சிறப்பு பதிவு

ஆடி அமாவாசை பண்டிகை கொண்டாட்டங்களை ஆரம்பித்துக்
கொண்டு வருகிறது. ஆடி அமாவாசை அன்று நோன்பு நோர்ப்பது
கணவருக்கு என்றால் நாக சதுர்த்தி அன்று விரதம் மக்களுக்காக.
”மக்களைப்பெற்ற மகராசிகளும் பெறப்போகும் மகராசிகளும்”
தன் பிள்ளைகளின் நல்வாழ்வு கோரி விரதம் செய்வார்கள்.
பாம்பு புற்றுக்கு பால் வார்த்து பூஜை செய்து எந்த வித
தோஷமும் இல்லாமல் வம்சம் தழைத்தோங்க பூஜை.
இன்று துள்ளரிசியும், வெல்லமும் எள்ளும் சேர்த்தரைத்த
பிரசாதம் நைவேத்யம் செய்து எறும்புகள் சாப்பிட
போட்டு விடுவோம். எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது.
பிள்ளைகள் நலனுக்காக உப்பில்லாமல் சாப்பாடு.
அடுத்த நாள் கருட பஞ்சமி. இது கிட்டத்தட்ட எங்களுக்கு
(தெலுங்கர்களுக்கு) ரக்‌ஷா பந்தன் போல.

இந்த நோன்புக்கு ஒரு கதையும் உண்டு.
ஒரு வீட்டில் 7 அண்ணன் தம்பிகள் அவர்களுக்கு
கறிவேப்பிலை கொத்துப்போல ஒரே ஒரு தங்கை.
அம்மா, அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட
தங்கையைக் கண்போல பார்த்தக்கொள்வது அண்ணன்கள் தான்.
அண்ணன்கள் காலையிலேயே வயலுக்கு சென்று விட
வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தங்கை அண்ணன்களுக்கு
கஞ்சி எடுத்துச் செல்வாள்.

அன்றும் அப்படித்தான் கருட பஞ்சமி என்றுத் தெரியாமல்
வீட்டை சுத்தம் செய்து, ஒட்டடை அடித்து துவாரங்களை
எல்லாம் அடைத்துவிட்டு கஞ்சி கலயத்தை தலையில்
சுமந்துக்கொண்டு வயலுக்கு செல்கிறாள். அப்போது
ஆகாய மார்கமாக கருடன் ஒன்று பாம்பை கவ்விக்கொண்டு
செல்கிறது. இறுக்கமான பிடி தாளாமல் பாம்பு விஷத்தைக்
கக்க அது கஞ்சி கலயத்தில் விழுகிறது. அது தெரியாமல்
அதை அவர்களுக்குகொடுத்துவிட அவர்களும் குடித்து
இறக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக 7 அண்ணன்களும்
இறந்துவிட தானும் அதைக் குடித்து இறக்க முற்படும்
பொழுது ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் வந்து
அவளைத் தடுத்து கருட பஞ்சமி விரதம் செய்வித்து
அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின்
வலது காது, வலது புஜத்தில் வைக்கச்சொல்ல அவர்களும்
உயிர்தெழுகிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லி நாங்களும் உடன் பிறந்தவர்களுக்காக
வேண்டிக்கொண்டு 7 முடி போட்ட தோரம் அணிந்து
புற்றுமண் கொண்டு வந்து உடன் பிறந்தவர்களின்
வலது காது, புஜத்தில் வைத்து பூஜை செய்து அவர்களுக்கு
பரிசளித்து வேண்டி பூஜை செய்வது வழக்கம்.

நம்ம உடன்பிறப்புக்கள் எல்லாம் வெளி நாட்டில் வெளியூரில்
தானே! அதனால் அவர்களுக்கெல்லாம் சேர்க்கும் படி
சாமிக்கே வைத்து பூஜை செஞ்சாச்சு. அம்ருதா அண்ணனுக்கு
பூஜை செஞ்சு ட்ரெஸ் வாங்கிக்கொடுத்திட்டாங்க.






அன்புத் தம்பிகளுக்கு என்னோட அன்பளிப்பு. எல்லோரும்
சண்டை போடாம எடுத்துக்கோங்க.
ஆண்டவன் எல்லாவித சந்தோஷத்தையும் கொடுக்கட்டும்.

Wednesday, August 04, 2010

நாங்களும் மனிதர்கள் தான்!!!!

4 வருடங்களுக்கு முன்னால நடந்தது இது. சென்னையின்
பிசியான மாம்பலம் உஸ்மான் ரோடில் இந்தப் பக்கத்திலிருந்து
எதிர் திசைக்கு போக வேண்டும். அப்போது இந்தப் புது
தொல்லையான மேம்பாலம் கிடையாது.(இந்த மேம்பாலம்
கட்டினதுக்கப்புறம் அந்த இடமே கொச கொசன்னு ஆன
மாதிரி இருக்கு எனக்கு)

ரோட்டை கிராஸ் செய்ய பயந்து நின்னுகிட்டு இருந்தேன்.
கொஞ்சம் தைரியம் செஞ்சு கிராஸ் செய்யப்போகையில
வேகமா வந்த வண்டியைப்பாத்து அயித்தான் என்னை
இழுத்திருக்காட்டிப்போனா என் படத்துக்கு மாலை போட்டு
பூஜை நடந்திருக்கும்!!!

பாதசாரிகளுக்கு மரியாதையே கிடையாது. பாதுகாப்பு
அதைவிட கிடையாது. இது தான் நம்ம ஊர் சாலைகள்
நிலைமை. வண்டீயில போறவங்க சர் புர்ர்ன்னு மிரட்டிகிட்டு
போவாங்க. பெடஸ்ட்ரியன் க்ராஸ் இல்லாத இடத்துல எப்படி
ரோட்டை கிராஸ் செய்வது????

இலங்கையில் இருந்தவரைக்கும் என் அனுபவம் பாதசாரிகளை
வண்டி ஓட்டிக்கள் மதிக்க வேண்டும். நீங்க எம்புட்டு ஸ்பீடா
வந்தாலும் பாதசாரிகள் கடந்து போனா நிறுத்தித்தான் ஆகணும்.
நம்ம ஊர்ல அந்த நினைப்புல ரோடை கிராஸ் செய்யப்போயித்தான்
அடி படத் தெரிஞ்சேன்.

ரோடு எல்லோருக்கும் தான். இது எங்கப்பன் ரோடுன்னு சொல்லாம
சொல்லி வண்டி ஓட்டறாங்க. நடந்து போறவன் கதி என்ன இதுல?
சென்னை மட்டுமல்ல இங்க ஹைதையிலும் இதே கதிதான்.
பாம்பேயிலயாவது கையைக்காட்டிகிட்டு போயிகிட்டே இருக்கலாம்.
நாம கை காட்டுவதைப்பாத்து கொஞ்சம் ஸ்லோவா வருவாங்க.

சமீபத்துல ஒரு புத்தகத்துல சைக்கிள் ஓட்டுறது நல்லது. அது
சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்குதுன்னு மேட்டரோட எழுதியிருந்தாங்க.
ஆபிஸுக்கு கூட சிலர் சைக்கிள் ஓட்டிகிட்டு போறது பத்தி
எழுதியிருந்தாங்க. நல்லதுதான். ஆனா நம்ம ஊர்ல பிசியான
ரோட்ல இது சாத்தியமா? ஜப்பான்ல சைக்கிள் ஓட்டணும்னா
லைசன்ஸ் வேணுமாம். என் ஃப்ரெண்ட் சைக்கிள் ஓட்டத்
தெரியாது. ஆனா அங்க அதுதான் பெஸ்ட் ட்ரான்ஸ்போர்டுன்னு
சைக்கிள் ஓட்டக்கத்துகிட்டு லைசன்ஸ் வாங்கினாங்க.

நம்ம ஊர்லயும் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்தி
அவங்களுக்குத் தக்க பாதுகாப்பு(போலிஸ் பாதுகாப்பு இல்ல,
சைக்கிள், பாத சாரிகளை மதிச்சு எப்படி வண்டி ஓட்டுறதுன்னு
கார், பைக் ஓட்டுறவங்களுக்கு வகுப்பு எடுப்பது)
செஞ்சா எரிபொருள் சேமிப்பு மாத்திரமில்ல, உயிர்பலிகளையும்
தடுக்கலாம். ஆனா யாரு செய்வாங்க? நம்ம அரசியல்வாதிகளுக்கு
இதுக்க்கல்லாம் நேரம் இருக்குமா? அவங்களை குத்தம் சொல்லலை.
ஆனா இதையும் யோசிச்சு நடவடிக்கை எடுத்தா நல்லதுதானே.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு
கார், பைக்கை உபயோகப்படுத்தி சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாம,
உடலை ஆரோக்கியமா வெச்சுக்க எளிய வழி நடை + சைக்கிள்
பயணம். மும்பையில் பாண்ட்ரா ஏரியாவில் சல்மான் கான்
சைக்கிள் ஓட்டிப்போறாரு, அமெரிக்காவிலா ஜூலி சைக்கிள்ல
தான் போறாங்கன்னு படிச்சேன். இலங்கையில நான் சர்வ சாதரணமா
ரோட்டை கிராஸ் செஞ்சு போயிருக்கேன். புதுகையில் சைக்கிளில்தான்
சுத்தியிருக்கேன். இப்ப எங்கயும் இது சாத்தியமில்லைன்னு தோணுது.

சுத்தமான காற்றை மாசுபடாத சூழ்நிலையைத் தரணும்னு ஆசைபடற மாதிரி
பிள்ளைகள் பயப்படாம ரோட்டை கிராஸ் செய்ய, சைக்கிளில் செல்லணும்னு
நினைப்பது நடக்காது போல இருக்கு.

இந்த நாட்டின் குடிமகன்களாக நாங்களும் தான் இருக்கோம்.
நாங்களும் மனிதர்கள்தான். அரசாங்கம் எந்திரம் ரொம்பத் தாமதம்தான்.
அதனால வாகன ஓட்டிகள் எங்களையும் மதிச்சு வண்டி ஓட்டி
நாங்களும் ரோடில் போக உரிமை உண்டு என்பதை புரிஞ்சு வண்டி
ஓட்டணும்!!!!

நடக்குமா???!!!!!????


பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!!!

சமீபத்துலதான் இவங்களைப்பத்தி புத்தகத்துல படிச்சேன்.
ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு. இதுவும் சாத்தியமான்னுதான்
நினைச்சேன். ஆனா இன்னைக்கு அவங்க ஷோவை டீவில
பாத்ததும் நம்பமுடியாததை நம்பித்தான் ஆகணும்னு ஆகிடுச்சு.


ஃபேஷன் டிசைனிங்கில் வாழ்க்கையின் உச்சத்தை தொடணும்னு
நினைச்ச பொண்ணுக்கு வாழ்க்கை இப்போ வீல்சேரில்.
தலையும் கைகளையும் தவிர உடம்பில் எந்த பாகத்தையும்
இவங்களுக்கு உபயோகத்துல இல்லை. ஆனா டீவில இவங்க
ஷோ பாக்கும்போது அப்படி ஒரு குறைபடே இல்லாத மாதிரி
தெரியுது. தன்னம்பிக்கையோட, சிரிச்ச முகத்தோட சூப்பரா ஷோ
நடத்துறாங்க. பிரபலங்களை பேட்டிக்காணும் CLOSE ENCOUNTER
WITH SUZY எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இன்னாள் சுஜி,
முன்னாள் சுஜாதா. இந்த நிகழ்ச்சிக்காக சேர்ந்தாப்ல உட்காருவதால
தனக்கு தீவிரமான முதுகுவலி வருவதாக பேட்டியில் சொல்லியிருந்தாங்க.

சாதாரண தலைவலிக்கே முக்கி முனகுவோம். ஆனா
இந்தப் பொண்ணை பாத்தா சத்தியமா அந்த முனகலை அப்படியே
விழுங்கிட்டு எந்திரிச்சு வேலை பாக்கப்போயிடுவோம்னு தோணுது.
இந்தப்பொண்ணையும் ஒருத்தன் பணத்துக்காக ஏமாத்திட்டு
போயிருக்கான் என்பது இன்னொரு சோகமான விஷயம்.
ஆனாலும் தன் தன்னம்பிக்கையை இழக்காம உலகத்துக்கே
மெசெஜ் சொல்லும்படி வாழும் சுஜிக்கு என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

தெலுங்கில் அவரோட பேட்டி வீடியோ ஒன்றை இங்கே
தருகிறேன். பாஷை புரியாவிட்டாலும் பாருங்கள். அவரின்
தன்னம்பிக்கை, வலியை மறைத்துக்கொண்டு வாழும்
மனோபாவம் புரியும்.




இவருடன் பேட்டி முடிந்த பின்னர்தான் இவருடைய உண்மை
புரிந்து பாலகிருஷ்ணா, பிரகாஷ் ராஜ் மற்றும் நாகார்ஜுனா
அதிர்ந்தே போனார்களாம்!!!!

தன்னம்பிக்கைக்கு மறுபெயர் இனி சுஜிதான்.