Total Pageviews

Wednesday, September 29, 2010

பெற்றோர்களுக்கு அவசியமான ஒரு வலைப்பூ

குழந்தை வளர்ப்பில் முக்கியமான பங்கு பெற்றோர்களுக்கு
இருப்பது போல குழந்தை நல மருத்துவருக்கும் இருக்கு.
குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆரம்பிக்கிரது இவர்களது
வேலை. மிகவும் ஸ்ட்ரெஸ் தரும் மருத்துவத்துறையில்
இருப்பதாலோ என்னவோ பல மருத்துவர்கள் எதையும்
பெற்றோர்களிடம் அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
நோய்க்குண்டான மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு
அனுப்பி விடுவார்கள்.

என் அம்மாவின் ஒன்று விட்ட தம்பி ஒரு குழந்தை
நல மருத்துவர். அம்ருதா பிறந்த உடன் தலையை இஞ்ச்
டேப் வைத்து அளந்து பார்த்து, கைகளில் பென்சில் கொடுத்து
பிடிக்கிறாளா என்றெல்லாம் செக் செய்தார். 1 1/2 நாளிலேயே
அம்ருதாவுக்கு ஜாண்டிஸ் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்து
உடன் போட்டோதெரப்பி கொடுக்க ஏற்பாடு செய்தார்.

அப்போதுதான் எனக்கு குழந்தை நல மருத்துவரின்
முக்கியத்துவம் புரிந்தது. தலையின் அளவை வைத்து
மூளையின் சைஸை கண்டுபிடிப்பார்களாம்! கையில்
கொடுப்பதை பிடிக்கும் சக்தி, திறன் இவற்றை சோதித்து
ஏதும் பிரச்சனை என்றால் ஆரம்பித்திலேயே கண்டு
பிடிப்பார்கள் என குழந்தை நல மருத்துவரின் பங்கு
சொல்லிவிட முடியாது. வெறும் காய்ச்சலுக்கும், ஜுரத்துக்கும்
மட்டும் மருந்து கொடுக்கும் மருத்துவர் போல இல்லை.

சரி இவ்வளவு ராமாயணம் ஏன்? எனது சென்ற பதிவுக்கு
ஒரு குழந்தை நல மருத்துவரிடமிருந்து வந்திருந்த
பின்னூட்டத்தை தொடர்ந்து அவரின் வலைப்பூக்களை
சென்று பார்த்தேன். வியந்தேன். எப்படிப்பட்ட நிகழ்வுகள்
பெற்றவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ அவற்றை
மிக அழகாக தொகுத்து தனது வலைப்பூவில் தந்திருக்கிறார்
டாக்டர்.ராஜ்மோஹன்.

பலருக்கும் உதவும் என்பதால் அவரின் வலைத்தளங்களை
இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.

குழந்தை நலம் வலைப்பூ:

உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

குழந்தையின் ஜிப் அவிழ்க்கும் போது மாட்டிக்கொண்டால்?

உங்கள் குழந்தையின் உயரத்தைக் கணிக்க 
 
இப்படி நிறைய்ய்ய இருக்குங்க அவரது வலைப்பூவில்.

இந்தப் பதிவின் மூலம் மதிப்பிற்குரிய டாக்டர்.ராஜமோஹன்
அவர்களுக்கு நமது பேரண்ட்ஸ் கிளப்பில் இணைந்து
பெற்றோர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து
வைத்து பதிவு போட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.





வம்சம்

மொதோ படத்துக்கு இன்னமும் விருது வாங்கிக்கிட்டு இருக்கும்
இயக்குனரின் இரண்டாவது படம். எப்படி இருக்குமோ???ன்னு
பயம்மா இருந்துச்சு. படம் பார்க்க பயமில்லை. நம்ம ஊர்க்காரர்
செயிச்சுப்பிடணும்ங்கற ஆதங்கத்தோட கூடிய பயம் அது.

ஹைதையில் இருப்பதால சீடியில தான் பாக்கக் கிடைச்சது.
மொதல்ல இந்தப் படத்தை பாத்தது அப்பாதான். கூட்டுறவு
பேங்குல வேலை பாத்ததால புதுகையைச் சுத்தி இருக்கும்
பல கிராமங்களுக்கு போன அனுபவம் அப்பாவுக்கு இருக்கு.
ஹை இதுபுலிவலம், மான்கொம்பு,பேரையூர் அது இதுன்னு அப்போவோட
சத்தத்தை கேட்டுட்டுத்தான் பொறுமையா ஒரு நாள் இந்தப்
படத்தை பாக்கணும்னு நினைச்சிருந்தேன். அப்பாவுக்கு
ரொம்ப பிடிச்சிருந்தது படம்.

ஹீரோ தமிழரசு (அவரோட உண்மையான பேரும் மறந்து
போச்சு, கலைஞரோட பேரன் என்பதற்காக எதையும் மாத்தாம
பக்காவா எங்க ஊர்க்கார பையன் மாதிரி காட்டியதற்கு
பாண்டிராஜுக்கு ஷ்பெஷல் பாராட்டுக்கள். சுனைனாவா அது.
அடி ஆத்தி!! எங்க ஊர் பக்க புள்ளைங்க மாதிரி சைடு வாகு
எடுத்து வாஞ்ச போஞ்சன்னு பேசிக்கிட்டு ஆஹா நான் +2 படிச்ச
காலத்துக்கு போய்வந்தா மாதிரி ஒரு சந்தோஷம்.



கதை அதை உருவாக்கின விதம் எல்லாம் அருமை. பசங்க
படத்துல வர்ற ஸ்கூல் மாஸ்டர் சசிகுமார் படங்களுக்கு
அக்ரிமெண்ட் போட்டுட்டாரு போல. இந்தப் படத்துலயும்
அவரு.(இதுக்கு முன்ன நாடோடிகள்ல நடிச்சிருந்தாரு)
வில்லனாம். பரவாயில்லை. ஏத்துக்கலாம்!!

கஞ்சா கருப்பு அடிக்கிற லூட்டி தாங்க முடியல. ஊரைவிட்டு
வேற ஊர்ல இருக்கறவங்க ஒரு ஹோட்டலுக்கு போய்
கஞ்சா கருப்பு “முட்டை புரோட்டான்னு” ஆர்டர் செய்யும்பொழுது
நாக்குல தண்ணி ஊத்திருக்கும். எங்க ஊர் ஷ்பெஷல் ஆச்சே!
சில்லி புரோட்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

டவர் கிடைக்காம மரத்து மேல ஏறி உக்காந்து பேசுறது,
அதே டவர் கிடைக்காம மேலேர்ந்து ஹெட்போனை கட்டிவிட்டு
பேசுறதுன்னு செம ஜாலி. மாடு விடு தூது புதுசா இருக்கு.
நான் ஊருக்கு போயிருந்த போது ஷூட் பண்ணிகிட்டு இருந்தாங்கன்னு
சொன்ன டாடா கோல்ட் ப்ள்ஸ் சீனும் வந்துச்சுல்ல. :))

கலைஞரின் பேரன் அருள்நிதிக்கு ஆரம்பமே அமர்க்களமா
எங்க ஊர் டைரக்டர் கையால நல்ல ரோலில் நடிப்பு
ஆரம்பமாகியிருக்கிறது.

கதாபாத்திரங்கள் அதை உணர்ந்து நடிச்சிருப்பது ரொம்ப சிறப்பு.
இசை எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தது படத்துக்கு
கூடுதல் பலம். எங்க ஊர் டைரக்டரும் நடிகராகிட்டாரு.
ஆமாங்க இரண்டு மூணு இடத்துல லுங்கியை மடக்கி கட்டிகிட்டு
வாரது, பைக்ல சுனைனாவா கூட்டிகிட்டு போறதுன்னு தலையை
காட்டி தானும் நடிகராகிட்டாரு. வாழ்த்துக்கள் பாண்டிராஜ்.
இந்த முறையும் நம்ம ஊரைக்கண்ணுல காட்டி, அந்த
மக்களோட வாழ்க்கையை திரையில காவியமா காட்டி
அசத்திட்டீங்க.

ரொம்ப எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த வம்சம் படம்
அதை பூரணம் செஞ்சிருக்கு. வம்சம் வளரட்டும்.
பாண்டிராஜ் இதேபோல நல்ல படங்களை கொடுத்து
புதுகையின் பெயரை சிறப்பிக்கவேண்டும்.




Saturday, September 25, 2010

அழையா விருந்தாளியை அன்புத்தோழி ஆக்குவோமா!!!!

வயது வித்தியாசமில்லாம எல்லா பெண்ணும் சலிச்சுக்கும்
விஷயம் இது. யாரு கூப்பிட்டா இந்த அழையா விருந்தாளிய?
எப்ப வேணாம்னு நினைக்கிறோமோ அப்ப கரெக்டா வந்திடும்?
இப்படி அர்ச்சனை வாங்குவது வேற யாருமில்லை மாதாமாதாம்
வரும் மாதவிடாய்க்குப் பெயர் தான் அழையா விருந்தாளி.

ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள்னு சொன்னாலே பாவம்! இன்னும்
35 வயசுக்கு கஷ்டப்படணும், தலையெழுத்து!!! நல்லவங்களுக்குத்தான்
40ல நிக்கும்!! என ஏஏஏகப்பட்ட சொலவடைகள் சொல்லி
டெர்ரர் ஆக்குவதே வேலையா இருக்கும். இது மனோதத்துவ
ரீதியில பாதிச்சு மனசுல செட்டாகி மாதவிடாய் என்றாலே
ஏதோ ஒரு வியாதி மாதிரி ஆகி அதனாலே கூட அந்த
சமயங்களில் உபாதைகள் அதிகமா இருக்காம்.

இப்பெல்லாம் பெண் குழந்தைகள் மிக சீக்கிரமாக பூப்பெய்திடறாங்க.
அதனால அவங்களுக்கு எல்லாம் சொல்லி வைக்க வேண்டியது
அவசியம். என்னைப்பொறுத்தவரைக்கும் இதை ஒரு
mental preparation அப்படின்னு சொல்வேன். இப்படி செய்வதால
அழுது, பயந்து, மயக்கமாகின்னு பசங்க கஷ்டப்படாம இருக்கும்.
தனது வகுப்பில் ஒரு ஃப்ரெண்ட் பூப்படைந்ததை அம்ருதா
சொல்வதற்கு முன்னே அவளிடம் பேசிக்கொண்டு தான்
இருந்தேன். ஆனாலும் அவள் எதற்கோ தயங்குவது போல
தெரிந்தது.

“நான் தான் எல்லாம் சொல்லியிருக்கேனே பாப்பா! உங்களுக்கென்ன
பயம்?” அப்படின்னு கேக்கவும் அம்மா ஆரம்பிச்சாங்க.
“இல்ல!!! வந்து.... பீரியட்ஸ் வந்தா நானும் உங்களை மாதிரி
கஷ்டப்படுவேனா??? அதை நினைச்சாலே பயம்மா இருக்கு!!இது ஏந்தான்
பெண்களுக்கு வரணும்? ஏம்மா இந்தக் கஷ்டம்??”
நான் இந்தக் கோணத்தில் யோசிக்கலையே. என் நிலை
மகளுக்கு பயம் தரும்னு நினைக்கலையே!!! பெற்றவர்கள்
ஆன பிறகு கற்பதுதானே நிறைய்ய...

பக்கத்தில் உக்கார வெச்சு பேசினேன். இந்த மாதிரி எல்லோருக்கும்
இருக்காது, என் வயசென்ன? உன் வயசென்ன? அப்படி எல்லாம்
இருக்காது! போன்ற பதில்கள் சமாதானம் ஆக்கவில்லை. தேவையாம்மா
இப்படி ஒரு பீரியட்ஸ்? அதனால என்ன பலன்? அப்படின்னு கேட்டாள்.
நானும் முன்பு மாதவிடாய் காலங்களில் பாரதியாரின் பாடல்வரிகளை உல்டா
செஞ்சு “மங்கயராகப் பிறப்பதற்கே மாபாதகம் செய்திடல் வேணுமடா””ன்னு பாடியிருக்கேன்.


எல்லாத்தையும் சொல்லிட முடியுமா??? ஆனா சிலதை அழகாச்
சொல்லலாமேன்னு முயற்சி செஞ்சேன். குழந்தையின் மனதிலிருந்து
பயத்தை எடுப்பது தான் என் நோக்கம்.

அம்ருதம்மா, PUBERTY ஆண்டவன் பெண்களுக்கு கொடுத்திருக்கும்
வரம். ஹார்மோன்ஸ் சேஞ்சாகி சின்னக்குழந்தைக்கும்-
பெரிய பெண்ணிற்கும் இடைபட்ட இந்த நிலை ரொம்ப
முக்கியம். மாதாமாதம் சின்ன சின்ன கஷ்டம் இருக்கும்.
இல்லைன்னு சொல்லலை. இது கிளைமேட்
சேஞ்சானா எப்படி தும்மல், ஜுரம் வருதோ அதுமாதிரி தான்.
அதுக்காக மழைக்காலமே வேணாம், குளிர்காலமே வேணாம்னு
சொல்வோமா!!

இல்ல சொல்ல மாட்டோம். வீ வில் எஞ்சாய் த கிளைமேட் வித் த
கிளைமேடிக் சேஞ்ச் என்றாள் அம்ருதம்மா.

ஆமாம். உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாறுதல்களை சகிச்சுகிட்டாத்தான்
அழகான பெண்மை ஏற்படும். இதுதான் உனக்கு அழகைத் தரும்.
அழகான உடலமைப்பு, நல்ல சத்துள்ள எலும்புகள் எல்லாத்துக்கும்
உன்னை பாதுகாக்கும் ஒரு ஃப்ரெண்டா பீரியட்ஸ் இருக்கு
45-50 வயது வரைக்கும் கூட வரும் இந்த ஃப்ரெண்டால தான்
நம் எலும்புகள் வலுவா இருக்கு. இதனால நமக்கு எத்தனையோ
நன்மைகள் இருக்கும்மா” என சொன்னதும் கண்களை
அகல விரித்து இவ்வளவு இருக்கா!!
தெரியலையே அம்மா! என்றாள்.

இப்பச் சொல்லு இந்தப் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும்
வேணுமா? வேண்டாமா?

கண்டிப்பாய் வேணும்மா! நீங்க எப்பவும் சொல்வது போல்
with out pain no gain புரிஞ்சுகிட்டேன்! அப்படின்னு சொல்லியும்
மனசு பூர்த்தியா நிறைஞ்ச மாதிரித் தெரியலை.

இனிமே பீரியட்ஸை ஃப்ரெண்டுன்னு சொல்லிக்குவோம்.
அந்த ஃப்ரெண்ட் இல்லாட்டி நமக்கு கஷ்டம் தானே.
ஆக பெண்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் பீரிட்யட்ஸ். சரியா?
என்றேன். சரிம்மா என்ற கண்களில் இருந்த ஒளி மனதுக்கு
நிம்மதியை தந்தது.

எல்லா பெண்களும் மாதவிடாயின் போது
படும் துயரங்களை வீட்டில் இருக்கும் மகளும் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறாள் என்பதை நினைவில் வைய்யுங்கள். அதற்காக
வலி பொறுத்து நடிக்க வேண்டுமென்பதில்லை. அந்த
நேரத்தை வேண்டா வெறுப்பான நேரமாக்கி விடாதீர்கள்.

நாம்தான் நம் பிள்ளைகளுக்கு முன்னுதாரனங்கள். நாமே
வெறுப்பு உமிழ பேசினால் அது அவர்களுடைய மனதிலும்
பசுமரத்தாணி போல உட்கார்ந்துவிடும்.

இப்பொழுதெல்லாம் அம்ருதம்மா நான் அதிக டயர்டாக
இருந்தாலோ இல்லை பீ எம் எஸ் சிம்ப்டங்களுடன்(இப்போது
எவ்வளவோ குறைந்துவிட்டன)இருப்பதை உணர்ந்தாலோ,
“ஏம்மா டயர்டா இருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் வந்தாச்சா??”
என்று கேட்கிறாள். பூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் மகளிடம் பேசுவதும்
ஒரு சுகம். பகிர்ந்துகொள்ள ஒரு தோழி கிடைத்தது போல்
இருக்கிறது.


மாதவிடாயை அழையா விருந்தாளி எனச் சொல்லி வெறுத்து
ஒதுக்காமல் அன்புத்தோழி ஆக்கி ஆனந்தமாக இருப்போம்.

ஒவ்வொரு வீட்டில் பிள்ளைகளும் வேறுபடலாம். ஆனால்
எனக்கும் எனது மகளுக்குமிடையேயான இந்த உரையாடல்
சிலருக்கு உதவலாம் என்பதால் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.


Thursday, September 23, 2010

பிள்ளையார் சதுர்த்தி கொசுவத்தி




பிள்ளையார் சதுர்த்திக்கு அப்பா எந்த சைஸ்ல பிள்ளையார்
வாங்குவாங்கன்னு ஆசையா இருக்கும். அம்மா வேலை
பார்த்த ஸ்கூல்ல வெளியே ஒரு பகுதியை பிள்ளையார்
செய்யறவங்க தங்கி பிள்ளையார் செய்ய கொடுத்திடுவாங்க.
மார்கெட்டுக்கு பக்கம் என்பதால் இந்த ஏற்பாடு.

களிமண்ண வெச்சு அச்சுல வார்த்து விதம் விதமா
சின்னதும் பெரிதுமா பிள்ளையார் செய்வாங்க. ஸ்கூல்ல
தான் செய்வாங்க என்பதால் அம்மா சொல்லிவெச்சு
மொதோ நாளே கொண்டு வந்திடுவாங்க. சில பேர்
வீட்டுல அன்னைக்கு காலேலதான் காஞ்சும் காயம
இருக்கும் பிள்ளையாரை பலகைல வெச்சு எடுத்துகிட்டு
வருவாங்க. நானும் அப்பா கூட போய் எருக்கன் பூ மாலை,
அருகம்புல், கெஞ்சி கூத்தாடி நான் என் உண்டியல்லேர்ந்து
தர்றேன்னு சொல்லி பிள்ளையாருக்கு குடை எல்லாம்
வாங்கி வருவோம்.



அன்னைக்கு சாயங்காலமே புனர் பூஜை செஞ்சு குளத்துல
கரைச்சிடுவோம். கொழுக்கட்டை வகையராக்களுடன்
பிள்ளையர் சதுர்த்தி முடிஞ்சிடும். 14 வயசு இருக்கும் போது
ஒரு வாட்டி ஹைதையில் இருந்த உறவினர் வீட்டுக்கு
வந்தபோது கலர் கலரா பெயிண்டடிச்சு பெரிய்ய்ய்ய்ய
சைஸ்ல பிள்ளையார் எடுத்துகிட்டு போறதை பாத்ததும்
நம்ம ஊர்ல என்ன பூஜை செய்யறோம்னு நினைச்சேன்.
10 நாள் வெச்சிருந்து 11ஆம் நாள் தான் கரைப்பாங்கன்னு
கேள்விப்பட்டதும் செம ஆச்சரியம். ஆனா இப்ப பூமியைக்
காப்பாத்த அதே களிமண் பிள்ளையார்கள் இக்கோ ஃப்ரெண்ட்லி
விநாயகான்னு விக்கப்படுது. இதுதான் காலத்தின் சுழற்சியோ!!


மும்பையில் இருந்த பொழுது அங்கே நடந்த பூஜைகள்,
கொண்டாட்டங்கள் நல்லதொரு அனுபவம். விசர்ஜனத்துக்காக
லீவு விடும் அளவுக்கு இருக்கும். இப்போ ஹைதையில்
அதே போலத்தான். நேற்று விசர்ஜன். (இங்கே கணேசா
நிமர்ஜனம்னு சொல்வாங்க). எங்க அப்பார்ட்மெண்டிலும்
இந்த வருடமும் கணேச சதுர்த்தி நல்லா நடந்துச்சு.



எல்லோரும் பணம் போட்டு பெரிய்ய கணேசா வாங்கி
வந்து பூஜை. அம்மா அப்பா இங்கே இருந்ததால முதல்
நாள் பூஜை அவங்களை செய்யச் சொன்னோம். யார்
வீட்டு பூஜையோ அவங்க பிரசாதம் செஞ்சு கொண்டு 
வரணும். சும்மா கொஞ்சமில்லை கிட்டத்தட்ட 65 பேருக்கு
காணும் அளவுக்கு. :)))


நானும் அம்மாவும் வெண்பொங்கல், கொத்சு, வடை, சட்னி,
கடலைப்பருப்பு பாயசம், தயிர்சாதம் எல்லாம் செஞ்சிருந்தோம்.
என்னுடைய கொத்சு இங்கே ரொம்ப ஃபேமஸ்.  ( அதுக்கு
அப்பார்ட்மெண்ட் தோழிகள் வெச்சிருக்கும் பேரு பருப்பில்லாத
சாம்பார். :)) ரோசய்யாவை கூப்பிட்டு இப்படி எல்லாம் சாம்பார்
வெச்சு சமையலறை பட்ஜட்டை கட்டுப்பாட்டில் வெச்சிருப்பதாக
சொல்லி பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செஞ்சு அதை லைவ்
டெலிகாஸ்ட் செய்ய டீவி 9 வேற கூப்பிடறதா சொல்லிக்கிட்டு
இருந்தாங்க.)



ஃப்ரண்ட் வீட்டு கணேசா

மொத்தம் 7 நாள் கணேசா வெச்சிருந்தோம். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வீட்டு பிரசாதம். பலவீட்டு சோற்று ருசியில்
கட்டுண்டு கிடந்தோம். போன வருஷம் பூஜை முடிந்ததும்
ஆஷிஷும், அம்ருதாவும்தான் கணேசா ஸ்லோகம்
சொன்னாங்க. இந்த முறை அதே ஸ்லோகத்தை
எல்லோரும் சொல்லும் வண்ணம் ப்ரிண்ட் எடுத்து
ஜெராக்ஸ் போட்டு எல்லோர் கையிலயும் கொடுத்து
சொல்ல சொல்லிட்டேன். ( அடுத்த வருஷம் நான் இந்த
அப்பார்ட்மெண்ட்ல இல்லாட்டியும் என் ஞாபகம் கொஞ்சமாவது!!!
வரும்ல) :))



ganesha 2010

6ஆவது நாள் அப்பார்ட்மெண்டில் இருந்த ஆண்குழந்தைகள்
அனைவரையும்  உட்கார  வைத்து  பூஜை செய்யச் சொன்னோம்.
7ஆவது நாள்  அன்று நாங்கள் விசர்ஜனம் செய்ய திட்டம்.
அன்று வெள்ளிக்கிழமையாகவும் இருக்க பெண்குழந்தைகள்
அனைவரையும் உட்கார வைத்து பூஜை செய்ய சொன்னோம்.

அனைவரும் மாடர்ன் ட்ரெஸ் இல்லாமல் ட்ரெடிஷனல்
ட்ரெஸ்ஸில் வரவேண்டும் என்று சொன்னதும் முறைத்தார்கள்.
”நான் அடுத்த வருடம் இங்கே இருக்க மாட்டேன்ல!!” எனக்காக
கண்ணுங்களா!!” என்ற கெஞ்சலுக்கு மதிப்பு இருந்தது.
அழகாக பாவடை தாவணி, குட்டி பெண்கள் பாவடை, சட்டையில்
வந்து கலக்கினார்கள். ஆரத்தி முடிஞ்ச அடுத்த கணம் எல்லாம்
அப்ஸ்காண்ட். :)) எல்லாம் ட்ரெஸ் சேஞ்சுக்குத்தான்.




உட்டி அடிக்க வேண்டுமே!!! மேள வாத்தியம் முழங்க
எங்கள் தெருவே அதிர ஆனந்த நடனமாடி தண்ணீர் அடித்து
விளையாடி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எல்லாம்
ஆட்டம் போட்டோம்.





எல்லாம் முடித்து உடை மாற்றி அப்பார்ட்மெண்ட் நண்பர்
ஒருவர் ஏற்பாடு செய்திருந்த  சாப்பாடு  சாப்பிட்டு கணேசனை
லாரியில் ஏற்றிக்கொண்டு ஹுசைன் சாகர் நோக்கி பயணம்.
இந்த முறை மிக அதிசயமாக அயித்தான் ஊருக்கு ஏதும்
போகாமல் 7நாளும் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாமளும் விசர்ஜனுக்கு போவோமான்னு கேக்க!! சரின்னு
சொல்ல எல்லாம் லாரியில் ஏறிக்கிளம்பினோம். அந்தாக்‌ஷரி
பாடிக்கொண்டு செம ஆட்டத்துடன் நடு நடுவில் பேண்ட்
வாத்யத்துடன் வரும் கணேசாவுக்கு “கண்பதி பப்பா மோரியா”
என கத்திக்கொண்டு போனோம்.

7ஆம் நாள் என்பதால் ரொம்ப நேரம் எடுக்காமல் சீக்கிரம்
ஹுசைன்சாகரை அடைந்தோம். க்ரேன்கள் ஏறபாடு
செய்து வைத்திருக்கிறார்கள். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே
கணேசர் தண்ணீரில் மூழ்குவதுபோல இருக்கு. விக்ன
விநாயகனை அனுப்பி வைக்க மனசுதான் இல்லை.






அப்பார்ட்மெண்ட் வந்ததும் எல்லோரு மனதிலும் ஒரு சோகம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை வருத்தம்.
”நாளேயிலேர்ந்து நம்ம வீட்டுலதாம்பா டின்னர். மறந்த
வாக்குல யாரும் கீழேன்னு நினைச்சு சமைக்காம இருந்திடாதீங்க!!!”
என்று ஒரு ஃப்ரெண்ட் ஜோக் அடிக்க, நிஜமாகவே இந்த 7 நாட்களும்
அனைவரும் வசுதேவ குடும்பகமாக ஒன்றாக சேர்ந்து
பூஜித்து, மகிழ்ந்து இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

இதற்காகத்தான் பெரியவர்கள் பண்டிகைகளை கண்டுபிடித்தார்களோ
என்னவோ!!! நாங்களும், இன்னொரு குடும்படும்  எங்க சொந்த அப்பார்ட்மெண்டை வாடகைக்கு விட்டு இங்கேயே இருந்து விட வேண்டுமாம்.
அனுப்ப மாட்டோம் என சில தோழிகள்.  பிறந்த வீட்டுக்கு
வருவது போல நாங்கள் இரண்டு குடும்பமும் வந்து விடுகிறோம்
கவலையே படாதீர்கள்!! என்று சொல்லி பிரிய மனமில்லாமல்
அவரவர் வீட்டுக்கு சென்று படுத்த போது அதிகாலை 1 மணி.

Wednesday, September 22, 2010

HAPPY BIRTHDAY அயித்தான்

என்னவருக்கு இன்றைக்கு பிறந்த நாள். இரவு
12 மணிவரை முழித்திருந்து வாழ்த்து சொல்லியாச்சு.
என்னுடைய பரிசாக honda activa (ஓட்டப்போவது
என்னவோ நான் தான்னு வெச்சுக்கோங்க) இரண்டு டீ ஷர்டுகள் வாங்கி
கொடுத்தேன். அயித்தானுக்கு பிடித்த சேமியா பாயசம் ரெடி.
காலை டிபன் சுடச்சுட இட்லி வித் வெங்காயச் சட்னி.
இதற்கு மேலும் வேறெதுவும் செய்து தண்டனை தரவேண்டாம்
என்பதால் மதியம் லஞ்சுக்கு வீ த கோயிங் அவுட். :)))

பிள்ளைகள் எவ்வளவோ வற்புறுத்தியும்
தற்போது வேறெதுவும் வேண்டாம் என்று சொல்ல
ட்ரெஸ் வாங்கிக் கொடுத்து பூக்கள் கிஃப்டாக கொடுத்திருக்கிறார்கள்.

அயித்தானுக்கு மிகவும் பிடித்த இந்தப்பாடல் அவரது
அண்ணனின் ஆசிர்வாதம் அவருக்கு எப்போதும் கிடைக்க
வேண்டும் என்ற விருப்பத்தில்





happy birthday.

Monday, September 20, 2010

DADUS JHAROKA

பிறந்த நாள் ரொம்ப நல்லதாவே இருந்துச்சு.
அயித்தான் ஒரு அழகான தோடு பரிசளிச்சிருந்தாரு.
பசங்க இருவரும் சேர்ந்து டைட்டன் ராகா கைக்கடிகாரம்
கொடுத்தாங்க. காலையில் எங்கப்பன் முருகனை தரிசிச்சேன்.
இந்த வருடம் கூடுதல் சிறப்பாக மாண்புமிகு ரமணி சாரும்,
அவங்க மனைவியும் (அதாங்க எங்க அப்பா, அம்மா :) )
இருந்தது சிறப்போ சிறப்பு.

இரவு விருந்து மட்டும் இந்த ஹோட்டலில் தான்
வேணும்னு சொல்லியிருந்தேன். ஹிமாயத்நகரில்
இருக்கும் DADU'S  JHAROKA தான் அந்த ஹோட்டல்.
வழக்கமான இட்லி, தோசை, போரடித்து விட
வித்தியாசமாக இந்த ராஜஸ்தானி ஹோட்டல்.
கம்பீரமான நுழைவு வாயில். சல்யூட்டெல்லாம்
சூப்பரா இருக்கு. அன்னைக்கு ஒரே ஒரு விஷயம்
மிஸ்ஸிங் அது, பி ப்பீ ந்னு ராஜஸ்தானி வாத்யம்
ஒன்னை வெச்சு ஊதிகிட்டே ஒரு ஆளு ரவுண்ட்
அடிச்சுகிட்டு இருப்பாரு.



நுழைவு வாயில்





இதுதான் பேரு



உள்ளே அலங்காரம் எல்லாம் ராஜஸ்தானி ஸ்டைல்ல
நல்லா இருக்கும்.
உள்ளே அலங்காரம்
இது மெனு கார்டோட அட்டை. சூப்பரா இருக்குல்ல.
நாங்க அன்னைக்கு ஆர்டர் செஞ்சது டொமடோ சூப்,
பனீர் டிக்கா, தால் bati, வெஜிடபிள் மக்கன் வாலா,
பட்டர் நான். ராஜஸ்தான் ஸ்பெஷல் மாவா, மால்புவா
இல்லைன்னு சொன்னதால டெசர்ட் வேணாம்னு
பெரிய மனது செஞ்சு விட்டுட்டேன். குலாப்ஜாமுன்
எத்தனை வாட்டி சாப்பிடறது!!



மெனுகார்ட்





நெய்யில் மிதக்கும் bati




ராஜஸ்தான் தாலுடன் அந்த உருண்டை போட்டு சாப்பிட வேண்டும். செம ருசி



தாலி மீல்ஸும் இருக்கிறது. அதில் எல்லா வகை
ராஜஸ்தான் உணவுகளும் அடக்கம். ராஜஸ்தானி கடி,
சூர்மா. விலை 395 ரூபாய். சில சமயம் அன்றைய ஸ்பெஷல் தாலி
295க்கும் இருக்கும்.
சாப்பாட்டுக்கு பிறகு கை கழுவுவதுதான் ஹைலட். வாஷ் பேசின்
எல்லாம் இருக்கு. ஃபிங்கர் பவுல் கேட்டால் கன்யாதானம் எஃபக்ட்டில்
இப்படி இருக்கும் :)
கன்யாதானம் போல் கை கழுவும் ஸ்டைல் :))

மொத்தத்தில் நல்ல ருசியான உணவுடன் ஆனந்தமாய்
முடிந்தது இந்த வருட பிறந்த நாள். சுவரொட்டியில் நம்ம
அபி அப்பா எனக்காக வாழ்த்து போட்டிருந்தாரு. அவருக்கு
நன்றி. எனது சென்ற வருடம் எப்படி இருந்தது அப்படின்னு
பதிவு போடும்படியும் ஆனா அதை தொடர் பதிவா ஆக்கிட
கூடாதுன்னு சர்வேசன் சொல்லியிருந்தாரு. ஆமா நான்
தொடர் பதிவுக்கு கூப்பிட்டுட்டா உடனே எல்லோரும்
பதிவு போட்டுட்டுத்தான் மறுவேலை பாக்கப்போறாங்க.

அதனால் உங்க ஆசையை அதி விரைவில் நிறைவேற்றி
வைக்கிறேன் சர்வேசன்.


Friday, September 10, 2010

நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா!!!!!

எந்த ஒரு நல்லநாள் என்றாலும் அப்பொழுதெல்லாம் ரேடியோவில்
அதற்கான சிறப்புத் திரைப்படப்பாடல்கள் வரும். அதைக் கேட்டு
கேட்டு இப்போது அது இல்லாத நல்ல நாள் ஏதோ ஒன்று குறைவது
போலவே இருக்கிறது.

இன்று முஸ்லீம் சகோதர சகோதரிகள் ரமலான் திருநாளைக்
கொண்டாடும் வேளையில் என் வாழ்த்துக்களை பாடல்
கொசுவத்திக்களாகத் தர விருப்பம்.

நாகூர் ஹனீபா: இந்தக் குரலுக்கு நான் அடிமை.
மதங்கள் வேறுபட்டாலும் ”இறைவனிடம் கையேந்துங்கள்”
எனும் இவரது பிரபலமான பாடல் எந்த மதத்தினருக்கும்
பொருந்துவது போல அமைந்திருக்கும்.



அடுத்த பாடலுக்கு வீடியோ கிடைக்கவில்லை.
ஆனால் அந்த பாடலின் வரிகள் என் மனதில் எப்போதும்
ஓடிக்கொண்டிருக்கும்.

ஊன் பிறையை நோக்கிடுவோம்! குரானை ஓதிடுவோம்
மேன்மைமிகு மெக்காவின் திசை நோக்கிப் பாடிடுவோம்
மேன்மைமிகு மெக்காவின் திசை நோக்கிப் பாடிடுவோம்!
நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டாவா!

யார் யாருக்கு எது கொடுத்தால் தகுமென்று நீ நினைத்தாய்
வாராத பதவிக்கெல்லாம் வாய்பிளக்கும் மனிதருண்டு
ஊர் குருவி சிலநேரம் பருந்தென்று நினைப்பதுண்டு
ஊர் குருவி சிலநேரம் பருந்தென்று நினைப்பதுண்டு!

யாரும் வருவார் யாரு தொழுவார் நாகூர் ஆண்டவன் சந்நிதியில்
நீயும் ஒன்று நானும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில்

நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டாவா!

இந்தப் பாடலின் அடுத்த சரணங்கள் மறந்துவிட்டன.

எஸ்பீ பால சுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடல்
ஒன்றை கோவை ரவி அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்.
அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

வானுக்கு தந்தை எவனோ?
மண்ணுக்கு மூலம் எவனோ?
யாவக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தையில்லை
அல்லா பெற்ற பிள்ளை யாரும்

அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை
லாயிலாஹி இல்லல்லாஹு முஹம்மதுரூச்ல்லாஹி
லாயிலாஹி இல்லல்லாஹு முஹம்மதுரூச்ல்லாஹி

அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை
அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை


இந்தப் பாடலின் தொகுப்பை இங்கே கேட்கலாம்.

உலகத்தில் சமாதனாமும், மனிதமும் பெருகி
எல்லோரும் எல்லா வளமும் பெற மனமார்ந்த
ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.



Thursday, September 09, 2010

இரண்டு அருமையான காணொளிகள்

சில விடயங்கள் மனதை தொட்டுவிடும். அப்படித்தான் இந்த
காணொளியும். ஃபேஸ்புக்கில் இந்த வீடியோவை பார்த்தபோதும்
அப்படித்தான் ஆனது. நண்பர்களுடன் பகிர்வதுதானே முறை!
இதோ நீங்களும் ரசிக்க:



பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே
பல மொழிகள் கற்ற இந்தச் சிறுவனைப்பற்றி அயித்தானின்
ஃபேஸ்புக்கில் பார்த்தேன். தனியாக வீடியோ எடுக்க முடியவில்லை.
அதனாலே இந்த லிங்க் தருகிறேன். நீங்களும் இதை விரும்புவீர்கள்.

really a jwell



Wednesday, September 08, 2010

முரளிக்கு அஞ்சலி

ரொம்ப பாவமாக இருக்கிறது. இத்தனை காலமாக காலேஜுக்கு
போய்க்கொண்டிருந்த நடிகரின் வாரிசு நடிக்க வந்து முதல்
படம் ரிலீஸாகி இருக்கும் இந்த நேரத்தில் இன்று அவர்
மாரடைப்பில் இறந்துவிட்டதாகச் செய்தி. அவரது
குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இறங்கல்கள்.
இரண்டு வாரத்துக்கு முன்பு தான் காபி வித் அனுவில்
மகனுடன் வந்து கலந்து கொண்டிருந்தார் முரளி.

மிக அருமையாக இருந்தது நிகழ்ச்சி. சக்ஸஸிற்கான
காரணம் கடினமான உழைப்பு என்று சொன்னார்.
கன்னட தேசத்திலிருந்து வந்து தமிழ்நாட்டில் தன்னை
நிலைநாட்டிக்கொண்டு மைக் முரளியாக எல்லோர்
மனதிலும் இடம் பிடித்தவர்.

இதயம் படத்தில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த
ஒன்று.



தஞ்சாவூர் மண்ணெடுத்து இந்தப் பாடல் விரும்பாதவரும்
உண்டா!!!


48 வயதில் உதிர்ந்து விட்ட இந்தக் கலைஞனுக்கு என்
இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

Monday, September 06, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 6/9/10

ஹைதைக்கு இன்னொரு புகழ் கிடைத்திருக்கிறது. ஹைதை
ஷ்பெஷல் ஹலீம்க்கு இப்பொழுது உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
ரம்ஜான் நேரத்தில் “ஹலீம்” எனப்படும் ஷ்பெஷல் உணவு தயார்
செய்யப்படும். ஹைதையில் கிடைக்கும் எத்தனையோ ஷ்பெஷல்
உணவுகளில் ஹலீமுக்குத்தான் முதல் முறையாக GI (geographical indication)
அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. திருப்பதி லட்டு, டார்ஜிலிங் டீ, கோவா ஃபினி,
பனாராஸ் பட்டு வரிசையில் இனி ஹைதை ஹலீமூம். ஹலீம் தயாரிப்பாளர்கள்
சங்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

***********************************************************

சென்ற வருடம் மழையே பெய்யாமல் வரண்ட மாநிலமாக
அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் பேய் மழை பெய்து புயல்,
வெள்ளம். ஆனால் இந்த வருடம் உல்டா. ஆரம்பம் முதலே
சரி மழை. புயல், வெள்ளத்தால் பாதிப்பு. பல இடங்களில்
விளைச்சல் பாதிப்பாம். பெஞ்சாலும் கஷ்டம், காஞ்சாலும்
கஷ்டம்!!! வாழ்க்கை ரொம்ப குஷ்டமப்பா!!!!!
******************************************************

தாத்தாவுக்குப் போனை போட்டு வாங்க வாங்கன்னு சொல்லிக்கிட்டு
இருந்தாங்க பசங்க. அவங்க தாத்தா, அம்மம்மா மட்டுமில்லாம
எங்க அம்மம்மா, தாத்தா, மாமா வந்ததுல இரண்டு பேருக்கும்
செம குஷி. ஒரே கொஞ்சல்ஸ்தான். அவங்கள்லாம் ஊருக்கு
போனதும் இப்ப எங்க அப்பா அம்மாவை விடலை. ஸ்கூலுக்கு
போயிட்டு வர்ற நேரம் தப்ப மிச்ச நேரமெல்லாம் தாத்தா, அம்மம்மா
கழுத்தை கட்டிகிட்டு கிடக்கறாங்க. மெத்தயை கொண்டு வந்து
கீழே ஹாலில் போட்டுகிட்டு அம்மம்மா, தாத்தகூடத்தான்
படுப்பதும். அடுத்த வாரம் ஊருக்கு போறாங்க. டிக்கெட்டை
கேன்சல் செஞ்சிடுங்க!!!ன்னு புலம்ப ஆரம்பிச்சாச்சு.
அவங்க ஊருக்கு போனதுக்கப்புறம் கந்தன் தான் என்னை
காப்பாத்தணும்!!!!

************************************************************
பட்டாலும் சிலருக்கு புத்தி வராது. அந்த லிஸ்ட்ல உஸ்மானியா
பல்கலைக்கழக மாணவர்களும் இருக்காங்க. தாமதமான ரிஸல்ட்ஸ்,
அதனால தாமதமாகும் பட்டமளிப்பு, ஸ்ட்ரைக்கால வேலை
கிடைக்க கஷ்டம்னு அவங்க நிலை இருந்தாலும், திரும்பவும்
தெலுங்கானா பிரச்சனையை கிளப்பிக்கிட்டு இருக்காங்க.
இந்தப் பசங்களை வெச்சு அரசியல் நடத்தியாவாது தன்
செல்வாக்கை அந்தக் கட்சி காட்டிக்கணுமா??? இவர்களின்
வாழ்க்கையை காவு வாங்கி வாழத் துடிப்பது நியாயமா???
சொல்லுங்க நல்லவங்களே!!! வருங்காலத் தூண்களின்
எதிர்காலத்தை சிதச்சிட்டு அதன்மேலேயா ஒரு மாநிலத்தை
உருவாக்கப்போறீங்க!???!!!!
***************************************************
ஆரம்பமாகப்போகிறது விநாயகச்சதுர்த்தி. பெரிய பெரிய
உருவத்தில் பிள்ளையார் பார்க்கலாம். வைசாக்கில் ஒரு
ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் ஹைதை கைரதாபாத்தில்
செய்யப்படும் பெரிய பிள்ளையாருக்காக மிகப்பெரிய
சைஸில் லட்டு ஒன்றை செஞ்சு ஷ்பெஷல் வண்டியில்
அனுப்பி வைக்கப்போறாராம். அதற்காக 50 கிலோ சர்க்கரை,
25 கிலோ நெய் அப்படின்னு படிச்சேன். ஆனந்த
விநாயகர் ஆனந்தமா எல்லாரையும் வெச்சுக்கட்டும்.
***************************************************

Sunday, September 05, 2010

அறிவுக்கண்ணை திறப்போருக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்களும் வந்தனங்களும்

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் பெரியோர்.
உடலும் உயிரும் தந்த பெற்றோருக்கு அடுத்து குருவை
வைத்து போற்றி வந்தார்கள். தெய்வத்திற்கு கூட குருவுக்கு
அடுத்த இடம் தான். எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
என்றும் சொல்வார்கள்.

ஆசிரியைப்பணிக்கு உண்டான சிறப்பு அத்தகையது.
அறிவுக்கண்ணை திறந்து பிள்ளையின் வளர்ச்சிக்கு
உதவும் மிகப்பெரிய கடமையைக் கொண்டதொரு
தன்னலமற்றப்பணி அது.



வீட்டை விட்டு முதன் முறையாக வெளியே வரும்
சின்னக்குழந்தை தனது ஆசிரியையில் தனது தாயைக்
காண்கிறான். ஆசிரியைக்கும் மாணவனுக்கும் இடையே
இருக்கும் பந்தம் உணர்வுப்பூர்வமாக உணரக்கூடிய ஒன்று.

தெரிந்தோ தெரியாமலோ இன்றைய காலக்கட்டத்தில்
ஆசிரியருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை சரியாக
இல்லை. ஆசிரியர் மாணவர் இடையே இருக்கும் உறவும்
நல்லதாக இல்லை. இதனாலேயே சரியானதொரு வளர்ச்சியை
பிள்ளை பெறத்தவறுவதாக நான் நினைக்கிறேன்.

பெற்றோர்களே என்ன நடந்தாலும் சரி தயவு செய்து
பிள்ளைகள் எதிரில் ஆசிரியர்களைப்பற்றி தவறாக
பேசாதீர்கள். ஏதும் பிரச்சனையிருந்தால் நேறாக
பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் பேசுங்கள். இது
என் பணிவான வேண்டுகோள்.

என்னை வழிநடத்திய நடத்திக்கொண்டிருக்கும்
என் ஆசிரியர்களுக்கும், என் பிள்ளைகளுக்கு
கிடைத்த, கிடைத்துகொண்டிருக்கும் மரியாதைக்குரிய
ஆசிரியர்களுக்கும் மற்றும் இந்த உலகமெல்லாம்
தன்னலமற்ற சேவையை செய்து கொண்டிருக்கும்
ஆசிரிய சமூகத்தினர் அனைவருக்கும் ஆசிரியர்
தின நல்வாழ்த்துக்கள்.




தனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதி தனது
கல்விப்பணியைச் செய்யும் ஆசிரியைக்கிடைப்பது
பிள்ளைகள் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம்.
அப்படி ஒரு அருமையான வரத்தை பிள்ளைகள்
அடைய ஆசிரிய சமுதாயம் அருள வேண்டுமெனம்
என்பது என் பிரார்த்தனை.

Friday, September 03, 2010

வேலை பிடித்தவனின் காலைப்பிடித்தவருக்கு வேதனை இல்லை மனமே!!!

தெய்வ பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் சின்ன வயதிலிருந்தே
பக்தி அதிகம்.அப்பா 27 வருடங்கள் சபரி மலைக்கு சென்று வந்தவர்.
ஒரு நாள் என் அம்மம்மா(அம்மாவின் அம்மா)
எல்லா சாமியையும் கும்பிடறே, ஆனால் ஏதோவொரு சாமியை
மட்டும் கும்பிடு. அவரே சரணாகதி என்று இருந்தால் கண்டிப்பாய்
காப்பாற்றுவார்னு சொன்னாங்க. எனக்கு எப்பவுமே அம்மம்மா சொல்வது
வேத வாக்கு! ஆஹா ரொம்ப சரின்னு யோசிச்சு என்னப்பன் கந்தனை
ரொம்ப தீவிரமா கும்பிட ஆரம்பிச்சேன். சும்மா கன்னாபின்னா
பாசம். முருகனை என் அப்பாவாக நினைப்பேன். (மகள்களுக்கு
எப்பவுமே அப்பா மேல்தானே பாசம் ஜாஸ்தி)

எங்கும் முருகன் எதிலும் முருகன் தான். பித்தம் ரொம்பவே
ஜாஸ்தியா இருந்துச்சு. 10வயசுல எங்கப்பாவுக்கு தெரியாம
சஷ்டி கவசம் மனப்பாடமா கத்துகிட்டு தினமும் காலையில்
அவருடன் சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சேன். என் விஷயத்தில் அப்பா
முதன் முதலில் புருவம் உயர்த்தினது இதற்குத்தான். சஷ்டி கவசம்
சொல்லாத நாளேது சுடர் மிகு வடிவேலா! என்றே இருப்பேன்.

நடக்கும்போது, தூங்கும்போது, மனது வேதனையாக
இருக்கும்பொழுது என எந்த நேரமும் அவனுடன் பேசிக்
கொண்டிருப்பேன். சஷ்டி கவசம் தான் எனக்கு மருந்து.
தேள்கொட்டியபொழுது, ஜுரம் வந்தால் என எப்போதும்
மருந்தாக அவன் நாமம். அவனது திருநீறுதான். இந்த
நிலையைப்பார்த்து அம்மம்மாவே பயந்து போயிருப்பார்.
அடி ஆத்தா! கல்யாணமாகிப்போனா அவங்க வீட்டுத்
தெய்வத்தைத்தான் கும்பிடணும். உங்கப்பாவீட்டு சாமியை
அதிகமா கும்பிடமுடியாது!! அப்படின்னு சொனனங்க.
பயமாகிடிச்சு. முருகன் பேரை மட்டும்தான் சொல்வேன்.
சில சமயம் ஐயப்பன் திருநாமம். இதைவிட்டா வேறெதுவும்
சொல்லவே மாட்டேன்னு கங்கணம் கட்டியிருக்கும்போது
இதென்ன சோதனை!! ஆனாலும் அம்மம்மாகிட்ட சவால்
விட்டேன். திருமணமாகிப்போனால் அங்கேயும் என்னப்பன்
வருவான் பாரு என்பதுதான் அந்த சவால்!!

என் திருமணம் யாருடன் என்பதை நான் நிச்சயப்பதைவிட
அவனுக்குத் தெரியும் எனக்கு உகந்தவர் யாரென்பது, அதனால்
அவனே எனக்குக் காட்டித்தருவான் என்றும், என் திருமணத்தில்
அவன் கண்டிப்பாய் இருப்பான் என்றும் நம்பினேன். அப்படியே
நடந்தது. அயித்தான் வீட்டுத் தெய்வம் முருகன் தான். என்
திருமணம் நடந்தது பழநியில்! என்னப்பன் எப்போதும் என்னுடன்
இருப்பதை உணர்ந்தேன்.

அயித்தானின் அண்ணனைப்பற்றி பலதடவை சொல்லியிருக்கிறேன்.
என் தந்தைக்கு நிகரான ஸ்தானத்தில் அவரை வைத்திருந்தேன்.
அப்படி ஒரு உத்தமர். அவரது பெயரும் சுப்ரமணியம். ஒரு பெண்ணுக்கு
புகுந்த வீட்டில் கிடைக்க வேண்டிய கதகதப்பான பாதுகாப்பை
ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து எனக்கு தந்துகொண்டிருந்தது
என்னப்பன் கந்தப்பன் என்றே நம்புகிறேன்.

ஆகஸ்ட் 30 நடந்த புதுமனைபுகுவிழா மிகச்சிறப்பாக நடந்தது.
என் அம்மம்மா மிகுந்த சந்தோஷப்பட்டார். உடல் நிலை
சரியில்லாத நிலையிலும் வந்திருந்தார். அப்பா,அம்மா,சித்தி
குடும்பம், மாமா குடும்பம், அயித்தானின் அண்ணி எல்லோரும்
வந்திருந்தனர். இங்கு இருக்கும் சில உறவினர்களும் வந்திருந்தனர்.
நல்லதொரு வீட்டை எனக்கு கிடைக்கச் செய்ய வேண்டியது உன்
வேலைதான் என வேலைப்பிடித்தவனிடம் வேண்டி இருந்தேன்.
அவனருளால் அப்படியே அமைந்தது.

தெய்வத்தால ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி
தரும்.ஆகையால் நீ தெய்வத்தையும் நம்பு, உன் முயற்சியையும்
விடாதே என்று அப்பா சொல்லிக்கொடுத்திருக்கிறார். இன்றளவும்
இவை இரண்டும் தான் என்னை வழி நடத்திக்கொண்டிருக்கிறது.



பூக்களால் அலங்காரம்


படிக்கு பூஜை செய்து கிருஹப்ரவேசம்




பூஜை அறை


அம்மம்மா

 
பால் பொங்கியாச்சு



சத்யநாராயண பூஜை

அப்பார்ட்மெண்டிற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. ஆனால்
எங்கள்வீட்டிற்கு பெயர் கல்யாண நிலையம். என் மாமனார்
பெயர் கல்யாணம், மாமியார் பெயர் கல்யாணி. இருவரின்
நினைவாக இந்தப் பெயரை செலக்ட் செய்தோம்.
புகைப்படங்கள் எடுத்தது ஆஷிஷ். கிருஹப்ரவேச நினைவாக
அதற்கு முதல்நாள் அம்ருதாவுக்கு மூக்கு குத்தும் படலம்
நடந்தது.

இன்னும் இரண்டு மாதத்தில் புதுவீட்டிற்கு போய்விடத்
திட்டம்.  எல்லாம் அவன்கையில் இருக்கிறது.