Total Pageviews

Friday, October 15, 2010

தெலங்கானா பகுதியில் நவராத்திரி

நவராத்திரி சக்தி வழிபாடு ஒவ்வொரு மாநிலத்திலும்
ஒவ்வொரு விதமாக இருக்கும். அன்னையவளை
ஆடிப்பாடி, பூஜை செய்து உபவாசம் இருந்து
பொம்மை கொலுவைத்து என பலவிதமாக பூஜை
செய்வர். இங்கே ஆந்திராவில் அதுவும் தெலங்கானா
பகுதியில் வாழ்வை தந்த “பதுக்கம்மா பண்டுக”(Bathkamma)
எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.


வண்ணமயமான பூக்களை கொண்டு ஒவ்வொரு வருடமும்
அம்மனை வடிவமைத்து 10 நாள் பூஜை செய்வார்கள்.
பூக்களின் நடுவில் மஞ்சள் பிடித்து வைத்து அதை கொளரி
அம்மனாக பாவித்து பூஜைகள் நடக்கும்.
இது பெண்கள் செய்யும் பூஜை. தன் குடும்பத்தின் நலன்
கருதி, நல்வாழ்வை வேண்டி இந்த பூஜை செய்வார்கள்.



பெண்கள் பட்டுப்புடவை கட்டி பாந்தமாக அலங்கரித்திருப்பர்.
சின்னப் பெண்கள் பாவடை, சட்டை, வயது வந்த
பெண்கள் தாவணி அணிந்து பாரம்பரிய உடையில்
பூஜை செய்வர். துர்காஷ்டமி அன்று இந்த பூஜையை
முடிப்பர். இந்த முறை வெள்ளிக்கிழமை அதாவது
இன்று துர்காஷ்டமி என்பதால் வெள்ளிக்கிழமை
அம்மனை அனுப்ப விரும்பாதவர்கள் நேற்றே
விசர்ஜனம் செய்தார்கள். அதை பதுக்கம்மா நிமர்ஜனம்
என்று சொல்வார்கள்.




பத்தாம்நாள் தன் வீட்டு வாசலில் வைத்து பெண்கள்
எல்லாம் சேர்ந்து கும்மி அடித்து சுற்றி நடனமாடி
தலையில் அம்மனை ஏந்தி நதிதீரத்தில் கரைப்பார்கள்.

இப்போது வீட்டு வாசலுக்கு பதில் அருகில் இருக்கும்
கோவிலுக்குச் சென்று அங்கே சேர்ந்து நடனம் செய்து,
பாட்டுப்பாடி அம்மனை நதியில் கரைக்கிறார்கள்.

இந்த வீடியோவை பாருங்கள் அருமையாக இருக்கிறது.


இந்த பூஜை வந்ததற்கு ஒரு கதையும் உண்டு. தர்மாங்கதா எனும்
அரசனுக்கு பிள்ளைகளே இல்லாமல் இருந்து பல பூஜை விரதங்களுக்கு
பிறகு இளவரசி லட்சுமி பிறக்கிறாள். அவள் பலவித விபத்துக்களிலிருந்து
தப்பித்து வளர்கிறாள்.அதனால் பதுக்கம்மா (பதுக்கு-வாழ்க்கை) என
பெயரிட்டனர் பெற்றோர். அப்பொழுதிலிருந்து கன்னிப்பெண்கள்
நல்ல கணவன் வேண்டியும், பெண்கள் தீர்க்க சொளமாங்கல்யத்திற்காகவும்,
தன் குடும்பத்தின் நலன் வேண்டியும் பதுக்கம்மா பூஜை செய்வது
தெலங்கானா பகுதியில் வழக்கமாயிற்று.

நிஜமான கோலோகலத்தை பார்க்க வேண்டுமானால் வராங்கல்
எனும் ஊர்தான் சிறந்தது என்கிறார்கள் இங்கிருப்பவர்கள்.

எப்படியோ அந்த பதுக்கம்மா அனைவருக்கு நல்வாழ்வினை
தந்து நல்லபடியாய் வைக்க நாமும் பிரார்த்தனை செய்வோம்.




Thursday, October 14, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 14/10/10

சானியா மிர்சா, லியாண்டர் ஆகியோர் அதிர்ச்சி தோல்விகளைத்
தந்தாலும் எப்படியோ 3ஆவது இடத்தில் இந்தியா. தங்க, வெள்ளி,
வெண்கல பதக்கங்களை வென்று தலை நிமிரச் செய்த தங்கங்களுக்கு
ஒரு ராயல் சல்யூட்.

************************************************************

எந்திரன் பாத்தாச்சு. ரஜினியின் கெட்டப் பிடிச்சிருந்தது. வில்லன்
ரோபோ மூன்றுமுகம் ரஜினி கெட்டப்பில் சில மாற்றங்களுடன்
பாக்கும் பொழுது நன்றாக இருக்கிறது. ரொம்ப நாளைக்கப்புறம்
ஹீரோ & ஆன்டி ஹீரோவாக ரஜினி. கலக்கித்தான் இருக்கிறார்.
எனக்கென்னவோ ஐஸ்வர்யா ராய்க்கு வயதானது நன்றாகவே
தெரிவது போல் இருக்கிறது!!!! படத்தை பத்தி எல்லோரும்
விமர்சனம் எழுதி முடித்துவிட்டார்கள். ரஜினியின் நடிப்பு
இந்தப் படத்தில் மிகச்சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
டெக்னிக்கலாக மிகவும் உழைத்திருக்கிறார்கள்.

***********************************************************
கோன் பனேகா க்ரோர்பதி அமிதாப் அவர்களின் பிறந்தநாள்
அன்று ஆரம்பமானது (11 அக்டோபர்) 68 வயது முடிந்தும்
அந்த ஸ்டைல், அந்த லாவகம் படையப்பா படத்தில் நீலாம்பரி
ரஜினிக்கு சொல்லும் டயலாக் இவருக்கும் பொருந்தும்.
”வயசானாலும் ஸ்டைலும், அழகும் இன்னமும் குறையலை!!”

இந்த முறை கோன் பனேகா கொஞ்சம் வித்தியாசமாகவே
இருக்கு. லைஃப் லைன்களில் மாற்றம், ஜாக்பாட்டாக 5 கோடி
எல்லாவற்றுடன் ரொம்ப ”செண்டியாக” ஷோ இருக்கிறது.
ரியாலிட்டி ஷோக்களில் எனக்கு பிடிக்காதது இதுதான். கேபிஸி
இதற்கு விதிவிலக்காக இருந்தது. இப்ப இங்கயுமா!!! என
நினைக்கத் தோணினாலும் குஜராத்தில் சிறிய கிராமத்திலிருந்து
வந்த பள்ளி ஆசிரியர் 25 லட்சம் ஜெயித்தது சூப்பர்.
***************************************************

கொலை, கொள்ளைகள் அதிகமாகி இருப்பதை தினமும்
செய்தித்தாள்களில் படிக்கிறோம். சமீபகாலமாக கற்பழிப்பு
சம்பவம், சின்ன வயதுப்பிள்ளைகள் பலியாவது என்றும்
படிக்க நேரும்பொழுது மனது வலிக்கிறது. இவற்றுக்கிடையில்
குல கவுரவுத்துக்காக காதலர்களை கொல்லும் பெற்றோர்கள்
எனும் எண்ணிக்கையும் கூடுகிறது!!! ஏன் இந்த நிலை
இறைவா? நண்பர் நர்சிம் கூறியிருப்பது நல்ல தீர்வு!


******************************************************

நவராத்திரி முடியப்போகிறது. அசுரனை அழித்து அன்னை
அனைவரையும் காத்த நந்நாள் விஜயதசமி. நாமும்
நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்ல
எண்ணங்களை வளர்த்து அழகான வாழ்வு வாழவேண்டும்.
அனைவருக்கும் விஜயசதமி/தசரா நந்நாள் வாழ்த்துக்கள்


*****************************************************

Wednesday, October 13, 2010

யாதுமாகி நின்ற அம்மம்மாவுக்கு பிறந்த நாள்

இன்று என் ராஜலட்சுமி அம்மம்மாவுக்கு பிறந்த நாள்.
நவராத்திரியில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்யும்
அன்றுதான் அம்மம்மாவின் பிறந்தநாள். இன்று
அந்த நந்நாள். படிக்காத மேதை என் அம்மம்மா.

எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.
என்னைப் பெறாத அந்தத் தாய்க்கு என் வணக்கங்கள்.
இன்று போல் என்றும் வாழ அந்த இறைவனைப்
பிரார்த்திக்கிறோம்.

நானாக நானில்லை தாயே! நல்வாழ்வுத் தந்தாயே நீயே!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அம்மம்மாவுக்கு கமல்ஹாசன் பிடித்த நடிகர்.
கமலின் நடிப்பில் இந்தப் பாடல் எப்போதும் என்
அம்மம்மாவுக்காக:

அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி

ஹேப்பி பர்த்டே அம்மம்மா

அன்புடன் பேத்திகள், பேரன்கள், கொள்ளுப்பேத்தி & பேரன்





Tuesday, October 12, 2010

அம்மம்மா வீடு (அடுத்த பதிவு)

முந்தைய பதிவுக்கு

லீவு விட்டா அம்மம்மா வீட்டில்தான் இருப்பேன். அப்பா, அம்மா திட்டினாலும்
தஞ்சம் புகுவது அம்மம்மாவிடம் தான். ஒரு முறை ஏதோ பெரியவர்களுக்குள்
ஏதோ சண்டையாகி அந்தக் கோபத்தை என் மேல் காட்டி,அம்மா என்னை”வீட்டை
விட்டு வெளியே போ”!! என்று சொல்லிவிட்டார். அவ்வளவுதான்
நாலு ட்ரெஸ் எடுத்து கூடையில் வைத்துக்கொண்டு கோப கோபமாக
சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்பி அம்மம்மா வீட்டுக்குத்
தனியாக போய்விட்டேன். 12 வயது அப்போது. அம்மம்மாவிடம் அழுதுகொண்டே போய்
நின்றேன். என்னைத் தேடி யாரும் வரவில்லை. கழுதை கெட்டா
குட்டிசுவரு என்று பெத்தவங்களுக்குத் தெரியும். :)) என்னை கூப்பிடவும்
வரவில்லை. மாமா போய் நான் இங்கே இருப்பதாக தகவல் மட்டும்
சொல்லி வந்தார்.

5 நாள் வைத்திருந்து என் கோபத்தை தணித்து அம்மம்மாதான் சமாதானம்
செய்து அப்பா அம்மாவிடம் கொண்டு போய் விட்டார்.

அம்மம்மாவை எத்தனை பிடிக்குமோ அதில் பாதி அம்மம்மா வாழ்ந்த
அந்த வீட்டையும் பிடிக்கும். பெரிய வீடு கிடையாது. ஒரு வராண்டா,
சின்ன ஹால், சமையலறை, சாமி அறையில் பீரோ வைத்து
தடுத்த ஒரே ஒரு ரூம். இவ்வளவு சின்ன வீடுதான். உள்ளே நுழையும்
நிமிடத்திலிருந்து ஆரம்பிக்கும் ஆனந்தம். அம்மம்மா வீட்டை
உள்ளேஅடக்கி கட்டிவிட்டு சுத்தி தோட்டம் வைத்திருந்தார்.

கொழக்கட்டை மந்தாரைபூ, குண்டு மல்லி, ரோஜா, அடுக்கு செம்பருத்தி,
ஒத்த செம்பருத்தி, மாதுளம்பழம், மாமரம், வாதாமரம்,நடக்கும் வழிக்கு
இருபக்கமும் கத்திரிக்காய், வெண்டைக்காய், ப.மிளகாய், பொன்னாங்கன்னி
போன்ற கீரை வகைகள் இருக்கும். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள்
அப்போது பறித்து சமைக்கும் வகையில் இருக்கும். பூஜைக்கு நிதமும்
பூ பறித்து வைப்பதுதான் காலை எழுந்ததும் முக்கியமான வேலை.
30 நிமிடத்துக்கும் மேலாகும் பறித்து முடிக்க. பாசமாக பார்த்து
பார்த்து அம்மம்மா பராமரித்ததற்கு வஞ்சனை இல்லாமல் எல்லா
மரமும் பூத்துக் குலுங்கும். தனக்கு போக தான தர்மமும் செய்வார்
அம்மம்மா.

வாசலுக்கு மதில் சுவர் கிடையாது. முள்கம்பி வேலிதான். கதவுக்கு
பதில் தட்டி கதவு. அதன் மேல் ஒரு வளைவு. அதில் வாசமிகு
சம்பங்கி பூ. கதவை திறந்து வருபவர்கள் அந்த வாசனையில்
சொக்காமல் இருக்க மாட்டார்கள். இரண்டு மருதாணி மரம் உண்டு
அம்மம்மா வீட்டில். எனக்கு மருதாணி வைக்க வேண்டும் என்று
சொன்னால் போதும் வீட்டில் வேலை செய்யும் செல்லாயி இடம்
சொல்லி அரைத்து கொடுக்கச் சொல்லி அம்மம்மா வைத்து விடுவார்.
மருதாணி பறித்துக்கொடுத்து விடுவேன். மருதாணி பூ வாசம்....
மறக்க முடியுமா??

வீட்டிற்கு பின்புறம் ஒரே ஒரு தென்னை மரம், எலுமிச்சை மரம்,
துளசி மாடம், நார்த்தங்காய் மரம். நார்த்தாங்காய்களை சுருள் சுருளாக
நறுக்கி உப்பு போட்டு ஊற வைத்து, வெயில் காயவைத்து
அம்மம்மா வைத்திருப்பார். ஜுர நேரத்தில் கஞ்சிக்கு சரியான
ஜோடி அந்த நார்த்தங்காய்தான். சும்மாவே கூட கேட்டு வாங்கி
சப்புகொட்டி சாப்பிட்டுக்கொண்டிருப்பேன்.

வெயில் காலத்தில் தாத்தா சில சமயம் கயிற்று கட்டில் போட்டுக்
கொண்டு வெளியே படுத்திருப்பார். அது போல ஒரு சமயம்
படுத்திருந்த பொழுது எதேச்சையாக தண்ணீர் குடிக்க எழுந்தவர்
தலைமாட்டில் ஏதோ அசைவது தெரிய பார்த்தால்.... மிஸ்டர்
கருநாகம் படமெடுத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.
நல்லவேளை..... அவர் ஏதும் செய்யாமல் தானகவே
சென்றுவிட்டார். மாமா வந்து சொன்ன பொழுது குலையே
நடுங்கிவிட்டது.

அம்மம்மா வீட்டை சுத்த படுத்துகிறார்கள் என்றால் எனக்கும்
என்ன சின்ன மாமா குமார் மாமாவுக்கும் ஜாலி. கரப்பான்
பூச்சிகளை அம்மம்மா வெளியேற்ற நானும் மாமாவும் அவற்றை
சம்ஹாரம் செய்து ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு யார்
அதிக எண்ணிக்கையில் அடித்தது என்று போட்டி போடுவோம்.
செத்த கரப்பான்களை மீசையைப் பிடித்து ஊஞ்சல் போல
ஆட்டிக்கொண்டு போய் குப்பையில் போடுவேன். பொறுத்து
பொறுத்து பார்த்து செல்லாயி அத்தனையையும் அள்ளி
கொண்டு போய் கொட்டுவார்.

என் நீண்ட தலைமுடிக்கு(முன்பு) அம்மம்மாவின் மெனக்கெடல்தான்
காரணம். நல்ல அடர்த்தியான, அதே சமயம் நீண்ட கரு கருவென
முடி. பஞ்சு போல் இருக்கும். அம்மம்மா ஷாம்பு போட்டு குளிக்க
விட்டதே இல்லை. செம்பருத்தி இலையை அரைத்து அதில்
சிகைகக்காய் போட்டு தானே தலைக்கு குளிப்பாட்டுவார். திருமண
நாள் அன்று எண்ணெய்க்குளிய்ல் கூட ஷாம்பு போடவிடாமல்
சிகைக்காய் பேஸ்ட் வாங்கி வரச் செய்து தானே குளிப்பாட்டினார்.
நான் முடியை வெட்டி விட்ட பொழுது அம்மம்மா வருத்தப்பட்டார்.
”கல்யாணம் செஞ்சு அனுப்பி விட்டுட்டீங்க.நானே எல்லாம் செஞ்சுக்கணும்.
இதுல முடியை கவனிக்க முடியலை அம்மா, கூட நீங்களும் வந்திருக்கலாம்!!”
என்று சொன்னாலும் அம்மம்மா சமாதானம் ஆகவில்லை. 78 வயதில்
இப்போதும் அம்மம்மாவுக்கு நீளள...மான முடி.

அம்மம்மாவுக்கு எங்க வீட்டு வைத்தியர் என்று பெயரே உண்டு.
துந்நூத்திப்பச்சிலை, துத்தி இலை, கருந்துளசி,ஓமவள்ளி
எல்லாம் வீட்டிலேயே வைத்திருப்பார். ஓமவாட்டர் தானே தயாரித்து வைத்திருப்பார்.
வயிறு உப்பசமா ஓமவாட்டர் கொடுத்திடுவார். துத்தி இலையை
எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்திருப்பார். அது சர்வரோக
நிவாரணி மாதிரி. வீக்கமா, அடி பட்டிருக்கா, காயமா எல்லாத்துக்கும்
அது போட்டால் சரியாகி விடும். எல்லாவற்றிற்கும் கை வைத்தியம் தான்.

அம்மம்மா வீட்டில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை வேப்பிலையை
ஓமம் வைத்து அரைத்து கல் உப்பு வைத்து சாப்பி கொடுத்துவிடுவார்.
குமார் மாமா அலறி ஓடி திட்டு வாங்கி சாப்பிடுவார். வேப்பிலை
கசப்பு கூட எனக்குத் தெரியாது. அம்மம்மா கொடுத்தது என்று
சாப்பிட்டுவிடுவேன். வயிற்றில் பூச்சி வராமல் இருக்க அம்மம்மாவின்
மருந்து இது. கொழக்கட்டை மந்தாரை இலையை அரைத்து
தயிரில் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

வீட்டில் இருக்கும் மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலி இவைகளை
அரைத்து அம்மம்மா தேங்காய் எண்ணெய் காய்ச்சுவார். தலைக்கு
இதைவிட சூப்பர் எண்ணெய் கிடைக்கவே கிடையாது. தமிழ்நாடு
அரசின் “டாம்ப்கால்”எண்ணெயை விட இந்த எண்ணெய் சூப்பர்.
பலரும் அம்மம்மாவிடம் வாங்கிச் செல்வார்கள். தேங்கா எண்ணெய்
மட்டும் அவர்கள் வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

ஒரு முறை தீபாவளிக்கு சர்பரைஸாக குஜராத்தில் வேலை பார்த்துக்
கொண்டிருந்த சித்தி,அம்மாவின் பெரிய்யம்மா பையன்கள்
(என் ராமு மாமாவும் இன்னொரு மாமாவும்) மும்பையிலிருந்த சத்யா மாமா
தீபாவளி அன்று காலையில் வந்திறங்கி ஆச்சிரியப்படுத்தினார்கள்.
இரண்டு மருதாணி மரத்துக்கும் இடையே கயிறு கட்டி ட்ரெயின் விட்டது
அப்போதுதான். அந்தத் தீபாவளி படு ஜாலியாக இருந்தது.

நான் அக்காவாக ப்ரோமஷன் அடைந்த விஷயத்தை சித்தி எனக்குச்
சொல்லியது அந்த வீட்டில்தான். ஒவ்வொரு வருடமும் புது
வகுப்புக்கு போகும்பொழுது முதல் நாள் இரவே தாத்தா வாங்கி
வந்திருக்கும் புது புத்தகங்களுடன் என்னை எழுப்பி சித்தி கொடுப்பது
வழக்கம். ஒருமுறை பெரிய்ய்ய்ய பேனா ஒன்று அதற்கு மூடி
கை போல் இருக்கும். பார்த்து பார்த்து சித்தி செய்வார்.

ஸ்ரீநிவாஸ நகர் ஏரியாவில் அம்மம்மாவீடு இன்னொரு விஷயத்துக்கும்
பிரபலம். அது ஒவ்வொரு பொளர்ணமி அன்றும் நடை பெறும்
சத்யநாராயண விரதம். காலை முதல் விரதமிருந்து சாயந்திரம்
பூஜை நடக்கும். 2 மணி நேரம் பூஜை. பிரசாதம் எல்லோருக்காகவும்
செய்வார் அம்மம்மா. கிட்டத்தட்ட 30 பேராவது கலந்து கொள்வார்கள்.

அம்மம்மா தாத்தாவின் சஷ்டி அப்த பூர்த்தி நடந்தது இந்த வீட்டில்தான்.
தண்ணீருக்கு கஷ்டமாகும் என்று டேங்கர் வரவழைத்து ட்ரம்கள்
வாடகைக்கு வாங்கி நீர் நிரப்பி வைத்திருந்தோம். சஷ்டி அப்த பூர்த்தி
அன்று பெய்தது பாருங்கள் ஒரு மழை.... அதில் அம்மம்மாவீட்டுக்
கிணற்றில் தண்ணீரை கையாலே மொண்டு எடுத்துக்கொள்ளும்
அளவுக்கு நீர் நிறைந்தது!!! 1988ஆம் ஆண்டு பெய்த அந்த மழையைப்
போல புதுகையில் அவ்வளவு பெரிய மழை பெய்தது இல்லை.

வந்திருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பக்கத்து வீட்டு மாடியில் சாப்பாடு .
நனைந்து கொண்டே சுடச்சுட உணவுகளை கொண்டு சென்றது ஒரு
அனுபவம். எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள் அந்த வீட்டுக்கும்
எனக்கும்.

சின்ன வயதில் செலக்டிவாகத்தான் சினிமா பார்ப்பேன். அப்பா,
அம்மா, தம்பி மட்டும் போனால் நான் டிக்கெட்டுக்கான
காசை வாங்கி என் உண்டியலில் போட்டுக்கொண்டு வீட்டில்
அவ்வாவுடன் இருந்துவிடுவேன். தொந்திரவு இல்லாமல்
ரேடியோ கேக்க முடியுமே!! :)) அம்மம்மா வீட்டுக்கு
பக்கத்தில் இருக்கு சரவணா தியேட்டருக்கு போனால் மட்டும்
கூடவே போய் அம்மம்மாவீட்டில் இருப்பேன். அப்பா அம்மா
வீடு திரும்பும் போது அவர்களுடன் திரும்ப வருவேன்.

தியேட்டர் உரிமையாளர் தாத்தாவுக்குத் தெரியும் என்பதால்
டிக்கெட்டுக்கு சொல்லி வைத்துவிட்டு 3ஆவது பெல் அடித்த
பிறகு தான் போவோம். நான் ,சித்தி, குமார் மாமா மூவர்
மட்டும் மூன்று முகம் ரஜினி படம் பார்த்தது என நிறைய்ய
கொசுவத்தி.

மாமரத்திலிருந்து விழும் பூக்களின் வாசம், வாதம்பழம்,
சம்பங்கி பூ, மருதாணி பூ என பூக்களின் வாசத்துடன்
அந்த வீட்டை என் ராஜலட்சுமி அம்மம்மா ராஜ்ஜியம்
நடத்தியதை இப்போதும் நினைத்து பார்த்துக்கொண்டு
இருக்கிறேன். அந்த வீட்டை விற்றுவிட்டு அம்மம்மா
மும்பைக்கு போனதில் எனக்கு ரொம்பவே வருத்தம்.
நினைத்தால் அம்மம்மாவிடம் போக முடியாது என்பதுடன்
அந்த வீடு நமது இல்லை என்பதும் தான்.


Monday, October 11, 2010

அம்மம்மா வீடு

அம்மம்மா... இந்த பெயரை உச்சரிக்காத நாளே இருக்காது
எனக்கு. ஒவ்வொன்றுக்கும் அம்மம்மாவுடன் ஏதோ லிங்க்
இருக்கும். என் அம்மாவுக்கு தாய்வீடும் உள்ளூரிலேயே
அமைந்துவிட நான் எப்போதும் இருந்தது அம்மம்மாவிடம் தான்.
அது ஏதோ ஒரு அதீத அன்பு அம்மம்மா மேல். ”அம்மம்மா வீடு”
என எனக்கு நினைவு இருப்பது எல்லாம் புதுகை தஞ்சாவூர் ரோடில் மச்சுவாடி
தாண்டி சென்றால் வரும் ஸ்ரீநிவாஸ நகர் வீடு. நான் சின்ன
பிள்ளையாய் இருந்த பொழுது அங்கே வீடு கட்டினார்கள்.
6 அல்லது 7 வயதிருக்கலாம்.

அம்மம்மா அங்கே இடம் வாங்கிய பொழுது சுத்தி பொட்டல்காடு.
செம்மண் சாலைதான் இருக்கும். வீடு கட்டும்பொழுதே
நரியை பார்த்திருப்பதாக சொல்வார்கள். அம்மம்மா வீடு
கட்டி முடித்த பொழுது  அதி தொலைவில் ஏதோ இரண்டு
அல்லது மூன்று வீடுகள் இருக்கும். அம்மம்மாவீட்டுக்குச்
சென்றால் நிஜமாகவே நரி முகத்தில் முழிக்கலாம்.

நல்ல தண்ணிக் குழாய் கிடையாது. கிணற்றில் கொஞ்சம்
உப்புத் தண்ணீர்தான். கொஞ்ச தூரம் சென்று அங்கே
இருக்கும் குளத்தில் குடிதண்ணீர் கொண்டு வந்து
அதிலும் படிகாரம் போட்டு வைக்க வேண்டும். கலங்கலாக
இருக்கும் தண்ணீரை தெளியவைத்து வடிகட்டி குடி
தண்ணீர் ரெடி செய்வார் அம்மம்மா. கடை ஏதும் கிடையாது.
பஸ்ஸுக்கு பிரச்சனையில்லை. டவுன் பஸ் இருக்கும்.

அப்புறம் சில வீடுகள் வந்தன. கிணற்றில் தண்ணீர் இறைக்கும்
பொழுது சித்தியின் காலின் மேலேறி பச்சைப்பாம்பு செல்லும்!
ஓலைப்பாம்பு நெளிந்து நெளிந்து போய்க்கொண்டிருப்பதை
பார்த்துக்கொண்டிருப்பேன். நானும் சின்ன மாமாவும்
எத்தனை பாம்புகள் பார்த்தோம் என கணக்கு வைத்துக்
கொள்வோம். ஒரு முறை பிரண்டை செடியில் பச்சைப்
பாம்பு சுத்திக்கொண்டு கிடந்தது. துவையலுக்கு பிரண்டை
பறிக்க போன அம்மம்மா சொன்னார்.

அம்மம்மா வீட்டு கிணற்றை வெட்டும்பொழுது, அதில்
உரை இறக்கியது என எல்லாமே அதிசயம் எனக்கு.
ஊற்றில் தண்ணீர் குபு குபுவென வந்து கிணறு
நிறைவதை பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆனால்
ரொம்ப தண்ணீர் இருக்காது. தேவைக்கு இருக்கும்.

சமையலறையை ஒட்டியவாரே சாமி அறை.
அம்மம்மா ஸ்லோகம் சொல்லிக்கொண்டே சமையல்
செய்யும் அழகே அழகு. எல்லா வேலைகளையும் முடித்து
விட்டு பின் கதவுபக்கம் பலகையை தலைக்கு வைத்துக்
கொண்டு அம்மம்மா கதை புத்தகங்கள் படிப்பார்,
ஸ்வெட்டர் பின்னுவார், அரிசியில் நெல் எடுப்பது
எல்லாம் அப்போதுதான். மதியத் தூக்கம் கிடையாது.


அம்மம்மாவீட்டுக்கு மிக அருகில் ஸ்ரீநிவாஸா தியேட்டர்
கட்டியபொழுது போட்ட ஆழ்குளாய் கிணறை வாய்பிளந்து
பார்த்துக்கொண்டிருந்தேன். தண்ணீர் பீய்ச்சி அடித்து
வந்ததை இப்போதும் மறக்க முடியாது.

அதன் பிறகுதான் பல வீடுகள் வந்தன. நிறைய்ய
நட்புக்கள். ஆனாலும் செம்மண் சாலைதான். கால்வாய்
கிடையாது. மழை பெய்தால் சாலை கொழ கொழவென
கால் வைக்க முடியாத படி ஆகிவிடும். ஆனால்
அம்மம்மாவீடு என்றால் இவைகளைத்தவிரவும்
வேறு சில ஞாபகங்கள் உண்டு. அம்மம்மா அந்த
வீட்டை விற்று 20 வருடங்கள் ஆன பிறகு என்
நினைவு விட்டு அகலாத அந்த வீட்டின் அழகு....
அவை அடுத்த பதிவில்




Thursday, October 07, 2010

HAPPY BIRTHDAY ASHISH

பிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு
இன்று பிறந்த நாள்!!!



எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு
வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம்.

 வளரும் பையனிவனாக என் குட்டிச் செல்லம் வளர்ந்து
எனக்குத் தோழனாக இருப்பது சந்தோஷம். ”நீ தான்மா
என் ஃபர்ஸ்ட் கேர்ள் ஃப்ரெண்ட்”! என்று சொல்லும் பொழுது
பெருமையாக இருக்கிறது.

கேக் ரெடி. மெழுகுவர்த்தி ஏற்றி ஊதுவதை விட ஏற்றி
வைப்பது சிறந்தது என்பதால் ஏற்றி வைத்து பார்ட்டிக்காக
காத்திருக்கிறோம்.  அனைவரும் வந்துவிடுங்கள்.



எங்கள் அன்பு பரிசாக ஆஷிஷ் + அம்ருதாவின் தற்போதைய
காலம் வரையிலான படங்களை கொலாஜாக செய்து
பரிசளித்தோம். ஆஷிஷும் அம்ருதாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.





Tuesday, October 05, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 05.10.10

எதுலதான் அரசியல் செய்யுறதுன்னு இல்ல. பண்டிகை விடுமுறையில்
கூட அரசியல் செய்வது எப்படின்னு ஆந்திராவுல கத்துக்கலாம்.
தெலங்கானா பகுதிகளில் தீபாவளியைவிடவும் சிறப்பா கொண்டாடப்படுவது
தசராதான். பள்ளிகளுக்கு இப்பதான் 15 நாள் லீவு கிடைக்கும். அரைப்பரிட்சை
லீவுன்னு வெச்சுக்கலாம். இப்ப தெலங்கானா கட்சித்தலைவர்
கே.சீ.ஆரோட பொண்ணு கல்லூரிகளுக்கும் 15 நாள் லீவு கொடுக்கணும்!
எங்க பண்டிகையை கொண்டாட விடாம செய்யறது தப்புன்னு
போர்க்கொடி தூக்கியிருக்காங்க. கல்லூரிகளுக்கு 5 நாள் விடுமுறை
கொடுப்பது போதாதாம். லீவு லீவா விட்டு, போராட்டம் பந்துன்னு
போயிகிட்டு இருக்கற நேரத்துல பெத்தவங்க பிள்ளைங்க படிப்ப
முடிக்குமா முடியாதான்னு பயப்படுவது இவங்களுக்கு எங்க புரியப்போகுது??

*****************************************************************
எம்புட்டு ஊழல் நடந்துச்சோ??!! அமைப்புகளில் என்ன குளருபடியோ?
காமன்வெல்த் விளையாட்டுக்கள் துவங்கியாச்சு. துவக்க விழா
கொஞ்ச நேரம் பார்த்தேன். 120 வகை தாள வாத்தியங்கள் சூப்பர்.
அதுவும் அந்தக் குட்டிப்பையனோட தபலா வாசிப்பு சூப்பர்.
பாராட்டுக்கள் அந்த இளம் கலைஞனுக்கு. எப்படியோ நம் நாட்டின்
பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சி இருந்தது
சந்தோஷம். வெள்ளி, வெங்கல பதக்கங்களோட ஆரம்பித்திருக்கும்
நம் இன்னிங்க்ஸ் தங்கம் வரைக்கும் போக பிரார்த்தனைகள்.
***************************************************************

காமன் வெல்த் விளையாட்டுக்களுக்காக தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை
விட்டாங்க சரி. ஆனா எதற்கு வணிக வளாகங்களை மூடச்சொன்னாங்க.
இந்த 10 நாளும் அவங்க வருமானம்??!!! அதற்கு ஈடா
அரசு ஏதாவது தரப்போகுதா???
**********************************************************
எத்தனைக்காலம் மாறினாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரா
நடக்கும் அட்டூழியங்கள் மட்டும் மாறாது போல. ஆந்திராவில்
இருக்கும் அனந்தவரம் கிராமத்தில் ஒரு அறிவில்லாத அறிவியல்
ஆசிரியர் தன் வகுப்பு மாணவியை பலமுறை கற்பழிச்சிருக்காரு.
14 வயதான அந்தப் பொண்ணை மிரட்டி வெச்சிருந்ததில்
தன் பெற்றோரிடமும் கூட சொல்லமுடியாத நிலை. இப்ப அந்தப்
பொண்ணு 5 மாச கர்பம்!!! ஆள் அப்ஸ்காண்ட். இதையெல்லாம்
படிக்கும்போது பிள்ளைங்களை பள்ளிக்கு அனுப்பவே பயமாயிடும்!!
கலியுகம் என்பது இதுதானா??? மாதா பிதாவுக்கு அடுத்து
வைத்து போற்றப்படும் ஆசிரியர் நடந்து கொள்ளும் விதம் இதுதானா??

பள்ளிப்பருவத்திலேயே ஆண்குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து
பெண்ணைப் போதைப்பொருளாக பார்க்கும் மனோபாவத்தை
மாற்ற அரசு கட்டாய சட்டம் போட்டால் என்ன? தொடர்ச்சியான கவுன்சிலிங்
நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.
**********************************************************
போதும் போதுமென நினைக்கும் அளவுக்கு இந்த வருடம்
மழை அதிகமாகவே இருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு
இந்த அளவுக்கு மழை பெய்திருக்கிறதாம். அது முடிஞ்சு இப்ப
வெயில் பிரிச்சு மேயுது!!!! 33 டிகிரி.... சரி இந்த ஆட்டம்
இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே!!! அப்புறம் ஊருக்கே
ஏசி போட்டாப்ல குளிர் காலம் வரப்போகுதே!! ஆஹா அதிகாலை
பனி!!! 10 மணி வெயில் கூட சூடே இல்லாமல் உனக்கையாக
இருக்கும்!!! மீ த வெயிட்டிங்!!!
***********************************************************
எந்திரன் படம் வந்தாச்சு. இன்னும் பாக்கலை. இங்க ஹவுஸ்புல்லாத்தான்
ஓடிகிட்டு இருக்கு. இங்க ஹிந்தி வர்ஷன், தெலுங்கு டப்பிங்,
தமிழ்ல எல்லாமே ஹவுஸ்புல்தான். ஆனா ஆரம்பவிழா
அன்னைக்கு 4000 லிட்டர் பாலபிஷேகம் எல்லாம் ரொம்பவே
ஓவரா இருந்துச்சு. முன்னாடியே தடுத்து நிறுத்திருந்திருக்கலாம்.
அதுக்கு பதிலா ஏழைகளுக்கு அன்னதானம் செஞ்சிருந்தாலும்
புண்ணியமா போயிருந்திருக்கும்!! என் ஆதங்கத்தைச் சொன்னேன்
அம்புட்டுதான்.
*****************************************************