Total Pageviews

Thursday, March 31, 2011

ஹோலிப்பண்டிகையா? கிலிப்பண்டிகையா???

குளிர்காலம் முடிந்து வெயிலின் துவக்கத்தை கொண்டாடுவதற்காக,
வசந்தத்தை வரவேற்கும் ஒரு பண்டிகையாக மகிழ்ச்சியுடன்
அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகைதான் ஹோலி.
ஆனால் காலச்சக்கரத்தில் இந்த ஹோலிப்பண்டிகை எத்தனையோ
மாற்றங்களை சந்தித்து இன்றைக்கு கிலிதரும் பண்டிகையாகி இருக்கிறது.


கண்ணன் பிறந்த மதுரா, பிருந்தாவனம், நந்தகாவ் ஆகிய இடங்களில்
தான் ஹோலிப்பண்டிகை கொண்டாட ஆரம்பித்தனர். இன்றளவும்
16 நாட்களுக்கு ஹோலி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர், ராதை
மற்றும் கோபிகைகர்களுடன் ஹோலி கொண்டாடியதாக சொல்கிறார்கள்.


பிரகலாதனின் அத்தை ஹோலிகா, நெருப்பு சுடாத வரம் பெற்றவள்.
ஹிரண்யகசிபு பிரகலாதனை நெருப்பில் போட உத்திரவு இட்ட பின்
தன் தங்கை ஹோலிகாவை அழைத்து தன் மகனை பத்திரமாக
காத்து வரச்சொல்ல, அவ்வாறே செய்யும் ஹோலிகாவை நெருப்பு
சுட்டு பொசுக்கிவிடுகிறது. (நெருப்பு அவள் மட்டும் தனியாக இருந்தால்
ஒன்றும் செய்யாதாம்) அதனால்தான் முதல் நாள் ஹோலிகா தகனம்
செய்கிறார்கள். மறுநாள் ஹோலி கொண்டாடுகிறார்கள் என்றும்
புராணக்கதை சொல்கிறது.

எது எப்படியோ! கொண்டாடப்படும் பண்டிகைகள் காலவர்த்ததேசமான
மாறுதல்கள் பெற்றுள்ளது என்றாலும் ஹோலி அளவுக்கு இல்லை.
பிருந்தாவனத்தில் தற்போது ஹோலி சகதி ஹோலியாகி விட்டது.
வண்ண வண்ணக் கலர்களை கரைத்து ஹோலி ஆடியது போய்,
சாணி, சாக்கடைத் தண்ணீர் ஆகியவற்றில் கூட நடக்கிறதாம்.
அன்று யாரும் யாரையும் அடிக்க தடையில்லையாம். அதனால்
பகை தீர்க்கும் நாளாகவும் இதை சொல்கிறார்கள். போலீஸால்
கூட ஏதும் செய்ய முடியாதாம்!!! பெண்கள் ஹோலி விளையாட
வருவதே இல்லையாம். காரணம் குடித்து கும்மாளமிட்டு
கலாட்டா செய்யும் ஆண்கள். இதில் படித்தவர்கள், மேல்வர்க்கத்தினர்
இப்படி செய்வதில்லை என்றும் சராசரிக்கும் கீழ் உள்ள மக்கள்தான்
இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்றும் புலம்புவதை கேட்க நேர்ந்தது.

பர்ஸானா என்னும் இடத்தில் லாத் மார் ஹோலி ப்ரபலம்.


ஆண்களை பெண்கள் அடித்து துரத்துவார்களாம். ஆண்களும்
பெண்களை கலாட்டா செய்து பாடல்கள் பாடுவார்களாம்.
இன்று குஜ்ஜர் இன பெண்கள் ஹோலி அன்று குடித்தும்
மயங்கிக்கிடக்கும் கணவனை அடிப்பார்களாம். வருடம்
முழுதுவதும் துன்புறுத்தும் கணவனை பகைத் தீர்த்துக்கொள்ளூம்
நாளாக நினைப்பதாக மதுராவில் ஒரு பெண் சொன்ன பொழுது
உலக மஹா அதிர்ச்சி எனக்கு!!!


தில்லியில் கூட ஹோலி பயம் தான். இந்த முறை பெண்கள் அமைப்பும்,
காவல்துறையும் சேர்ந்து கல்லூரி பெண்களுக்கு “விசில்” கொடுத்திருக்கிறார்கள்.
ஏதாவது பிரச்சனை என்றால் விசிலானால் ஒலி எழுப்பி உதவிக்கு
ஆள் அழைக்க ஏற்பாடு!!! ஹோலி பயத்தில் மக்கள் யாரும அதிகமாக
வெளியே வரவில்லை. காலை 6 முதல் மதியம் 2 மணி வரை
மெட்ரோ ரயில் கூட ரத்து செய்து வைத்திருந்தார்கள்.


இயற்கை கலர்களை உபயோகப்படுத்துவது போய் தற்போது
சிந்தடிக் கலர்கள் உபயோகிக்கிறார்கள். அது தோல் அலர்ஜி
தருகிறது. தலையில் ஊற்றப்படுவதால் முடியும் பாதிக்கப்படுகிறது.
கண்கள் 4 நாள் ஆனாலும் சிகப்பாய் தெரியும் அளவுக்கு
இந்த சிந்தடிக் கலர் இருக்கிறது. இயற்கை கலர்கள் விலை
கொஞ்சம் ஜாஸ்தி என்பதால் சர்வசாதரணமாக சிந்தடிக் கலர்கள்
உபயோகிக்கிறார்கள். இவை உடலில் ஒட்டிக்கொள்கின்றன.

மார்ச் 20ஆம் தேதி ஹோலி. ஊரடங்கு உத்தரவு போட்டது போல
கடைகள் எல்லாம் அடைப்பு. ஆமை போல் ஊறும் வாகனங்களைப்
பார்த்திருந்த எனக்கு அன்று காலியாக அங்கும் இங்கும் ஏதோ
சில வாகனங்கள், அது கூட ஏர்போர்டுக்கு அருகில் மட்டும்
கொஞ்சம். மாநகரப்பேருந்துக்கள் கூட இயக்கப்படவில்லை!!!
மதியம் 2 மணிக்கு மேலே ஆரம்பித்தது டிராபிக்.


நண்பர்களுடன், உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக
கொண்டாட வேண்டிய பண்டிகையை இப்படி ஊரடங்கு
உத்தரவு போட்டு கொண்டாடும் நிலைக்குத் தள்ளியவர்களால்
பண்டிகைக்கான கோலாகலம் போய் பீதி கிளப்பும் நாளாக
ஆனதே என்ற வருத்தம்தான் இந்தப் பதிவு போடக் காரணம்.


Tuesday, March 29, 2011

யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே.....

காலையில் 7 மணிக்கெல்லாம் போனாத்தான் சரியா இருக்கும்னு
டிரைவர் சொன்னதால கரெக்டா 7 மணிக்கு காரில் ஏறிட்டோம்.
நாங்க தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து 2 கிமீ தொலைவில்
அந்த உலக அதிசயம். கிட்ட நெருங்க நெருங்க நெஞ்சுக்குள்
ஒரு குதூகலம். நாமே நாமான்னு எல்லோரும் கேட்டுகிட்டோம்.
1கிமீ தொலைவுலையே வாகனங்களை நிப்பாட்டிடறாங்க.
அங்கேயிருந்து தாஜ்மஹால் பார்க்க போகணும்னா பேட்டரி
ஆப்பரேட்டட் கார்கள், குதிரைவண்டிகள், ரிக்‌ஷா இப்படித்தான்
போகணும். மாசுகட்டுப்பாட்டுக்காக இந்த ஏற்பாடாம்.
பார்கிங் கிட்டத்தான் டிக்கெட். இந்திய பிரஜைகளுக்கு 25 ரூபாய்.
வெளிநாட்டினருக்கு 250 ரூபாய் அதுக்காக அவங்களுக்கு
ஒரு 1/2லிட்டர் மினரல் பாட்டிலும் காலுக்கு ஷூபோல துணியால
செஞ்சது 1 ஜோடியும் தர்றாங்க. நம்ம மக்களுக்கும் கொஞ்சமா
காசு கூட வாங்கி அது மாதிரி ஒண்ணு தரலாம்.

தாஜ்மஹால் உள்ள போகும்போது செருப்பை கழட்டி வெச்சிட்டு
வெறுங்காலோட நடக்கும்பொழுது வெயில் தாக்குது!! இந்த
வெயிலைத் தவிர்க்கத்தான் 7 மணிக்கே போகணும்னு டிரைவர்
சொன்னது. (திரும்பும் பொழுது 8.30 மணிக்கே கொஞ்சமா
சூடு ஏறுது)



தில்லி வந்தது முதல் விமானம், கார், ரயில், ரிக்‌ஷா
எல்லாம் ஏறியாச்சு. குறை எதுக்குன்னு ஜட்கா வண்டி பேசினோம்.
அப் அண்ட் டவுன் 200 ரூபாய்!! என் வண்டி நம்பர் 1, இதை
ஞாபகம் வெச்சுக்கோங்கன்னு ஜட்கா வண்டித்தம்பி சொல்ல,
அத விடுப்பா, உன் பேரு என்னன்னு சொல்லுன்னு!” கேட்டேன்,
முகத்துல சந்தோஷத்தோட அமர்னு சொன்னாரு. தாங்க்ஸ்னு
சொல்லிட்டு உலக அதிசயத்தை பாக்க நுழைஞ்சோம்.

சினிமாவிலும் புகைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருந்த
இந்த அழகை நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எனும் நினைப்பே
சந்தோஷமாக இருந்தது. போட்டொக்கள் எடுத்து தள்ளினோம்.
எங்கள் நால்வரையும் யாராவது எங்கள் கேமிராவில் எடுத்தால்
பரவாயில்லைன்னு நினைச்சு கேக்க வாயெடுக்கும்முன்னரே
வெளிநாட்டுக்காரர் ஒருவர் நானெடுத்து தர்றேன்னு வந்தாரு.
சரின்னு போட்டோ எடுத்துகிட்டோம்.



நல்ல கூட்டம். அதிகமாக வெளிநாட்டினர் இருந்தனர்.
கட்டிடக்கலையை ரசிச்சுகிட்டே உள்ளே போய் பார்த்தோம்.



யமுனை நதியை மதுராவிலும் பார்க்கலை, இங்கயாவது
பார்த்துவிட வேண்டும்னு தாஜ்மஹலின் பின்புறம் போனோம்.
சுழிச்சு ஓடும்னு நினைச்சேன். இம்புட்டுதான். :(

கிளம்ப மனசே இல்லை. ஆனாலும் திரும்பி திரும்பி பாத்துகிட்டு
அங்கேயிருந்து கிளம்பினோம். மணி 8.30 ஆகிடிச்சு. வெயில்
லேசா காலை பதம் பாக்க ஆரம்பிச்சிருந்தது. அதனால சரி
ஹோட்டலுக்கு போய் ப்ரெக்ஃபாஸ் சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்து தில்லி கிளம்பவேண்டும். அன்னைக்குத்தான் ஹோலிகா
தகனம் வேற. எம்புட்டு சீக்கிரம் முடியுமோ அம்புட்டு சீக்கிரம்
தில்லி போய் சேர்ந்திடணும் தவிர அயித்தானுக்கும் தோள்பட்டை
வலி அதிகமா இருந்தது. மருந்து போட்டு, ரெய்கி செஞ்சு
கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்தாரு அயித்தான். அதற்கு அப்புறம்
கிளம்பினோம். அதனால வேற எங்கயும் போகலை.

நாங்க தங்கியிருந்த ஹோட்டலின் டைனிங் ஏரியாவைப்பத்தி
கண்டிப்பா சொல்லணும். ஹோட்டல் புஷ்ப் வில்லா அப்படிங்கற
ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். இங்கே ரெஸ்டாரண்ட்ல
ப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிட்டு கிட்டு இருக்கும் பொழுது தாஜ்மஹலின்
மேல் கோபுரம் தெரிஞ்சிச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா
தெரியாலை!! என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சு கிட்டு இருக்கும்பொழுது,
அம்ருதா அம்மா கால்ல வைப்ரேஷன் ஆகுது!!ன்னு சொல்ல
கவனமா பாத்தா ரெஸ்டாரண்ட் சுத்துது!!! மெர்ரிகோரவுண்டாம்.


ரொம்ப வேகமா இல்லாட்டியும் மெள்ள சாப்பாட்டு மேஜை
சுத்துது. நல்லா இருந்தது அந்த அனுபவம். அதுவும் வேர்ல்ட்கப்
ஜுரம் அந்த ஹோட்டலில் எல்லா இடத்திலும் தெரிஞ்சது.
அந்த தீமில்தான் ரெஸ்டாரண்டில் போட்டோக்கள் வெச்சிருந்தாங்க.

ஃபதேபூர்சிக்ரில்லாம் போகலை. 11மணிக்கு ஹோட்டலிலிருந்து
கிளம்பினோம். மதுராவில் பேடா பிரசித்தம். ஆக்ராவில் peta.
அதுவும் அதெற்கென ஷ்பெஷலாக ஒரு கடை (எல்லா இடத்திலும்
கிடைக்குதுன்னாலும் இங்கே தான் பெஸ்டாம்)


அங்கூரி, கேசரி, ப்ளைன்னு நிறைய்ய வெரைட்டி இருக்கு.
கிலோ 60 எங்க ஊர்ல டபுள் ரேட். நண்பர்களுக்காக வாங்கினோம்.
இனிப்பு அதிகம் சாப்பிடாத அயித்தானுக்கும் பிடிச்சிருந்தது.


இந்த தாபாவுல சாப்பாடு நல்லா இருக்கும்னு நம்ம பீமசேனர் சொல்ல
சரின்னு சாப்பிட போணோம். கொஞ்சம் ருசியாவே இருந்துச்சு. பணம்
கொடுக்க பில்லைப் பாத்தா செம ஷாக். நாங்க நாலு பேரும் சாப்பிட்ட
பணமும் ஒண்ணு பீமசேனர் சாப்பிட்ட பணமும் ஒண்ணு. என்னய்யான்னு?
கேட்ட கொஞ்சமே கொஞ்சம் பாகற்காய் கறி நல்லா இருக்குன்னு போடச்சொன்னேன்,
அதுக்கு ஒரு ப்ளேட் சார்ஜ் செஞ்சிட்டான்னு சொன்னார். பில்லை வாங்கி
செக் செஞ்சேன். 150 ரூபாய் எக்ஸ்ட்ராவா போட்டிருந்தக் கடைக்காரரை
உண்டு இல்லைன்னு செஞ்சேன். நியாயமா காசு சம்பாரி, அப்படின்னு
மிரட்டினதும் 150 ரூபாயை திரும்ப கொடுத்தார்.

அதற்கப்புறம் நம்ம பீமசேனர் அதிகமா வாயைத் தொறக்கலை. :))
ஒரே ஒரு கமெண்ட் மட்டும் அடிச்சார்.,” மேடம் திக்தேதோ என் ஆர் ஐ,
மூ கோலே தோ லக்தே இந்தியன் நாரி!!” ( வாயைத் திறக்காத
வரைக்கும் வெளிநாட்டுக்காரங்க மாதிரி இருக்கீங்க. வாயைத் திறந்த
நம்ம இந்தியப் பெண்ணா இருக்கீங்க) :)) எப்ப வாயைத் திறக்கணுமோ
அப்பத்தான் திறப்பேன்னு!! பதில் கொடுத்ததும் மனுஷன் சுப் சாப்!!

4 மணி வாக்கில் தில்லி (குர்காவ்) வந்து சேர்ந்தோம். அடுத்த நாள்
கொஞ்சம் டென்ஷன். எஸ்ஸு அன்னைக்குத்தான் ஹோலி! நாங்க
ஊர் திரும்பும் நாளும்!!!
என்ன நடந்துச்சு அடுத்த பதிவுல!!


Monday, March 28, 2011

கண்ணனை நினைத்தால் நல்லது நடக்கும்...

கிளம்பும்போதே.... மனசு திக் திக்குன்னு இருந்துச்சு. எல்லார்
கிட்டயும் நல்லா கன்பார்ம் செஞ்சேன். உறுதியானச்சு. ஆனாலும்
டிக்கட்டை மாத்த முடியாத காரணத்தாலும் பயணத்தை தள்ளிவைக்க
முடியாததாலும் நடப்பது நடக்கட்டும்னுதான் டில்லி கிளம்பினோம்.

எதுக்கு இந்த பில்டப்பு? எல்லாம் ஹோலிக்குத்தான். மும்பையில்
இருந்த காலத்தில் அழுகிய முட்டைஹோலி, தக்காளிஹோலி
எல்லாம் பார்த்த ஆளுதான் நான். ஆஷிஷும் அம்ருதாவும் கூட
கடந்த இரண்டு வருஷமா ஹோலி கொண்டாடி கலர்புல்லாத்தான்
வீட்டுக்கு வருவாங்க. ஆனா அயித்தானுக்கு இந்த ஹோலி அலர்ஜி.
ஆனாலும் பயணத்துக்கு போன இடத்துல ஹோலி கலர்களோடு
இருக்கறது கஷ்டம் + ஹோட்டல்களில் நுழையக்கூட விடமாட்டாங்க,
இந்த குலால் கலர் அவ்வளவு சீக்கிரம் போகாது. இதெல்லாமும்
டென்ஷனாக்கி ஹோலி சமயத்துல மதுராவில் மாட்டிக்கிறோமேன்னு
இருந்துச்சு.

இரண்டு நாளா நொய்நொய் டிரைவர் ரோதனை தாங்காம டிராவல்ஸ்
காரங்க கிட்ட சொன்னதுல வேற டிரைவர் மாத்திருந்தாங்க. வந்தது
பீமசேன மஹாராஜா!! பேரு பீம்சிங். சும்மா ஒரே லொடலொட.
பலசமயங்களில் ”வம்சம்” பட டயலாக்கை ஞாபகம் வர வெச்சாரு.
(பெருமை பீத்தகளையனா இருக்காறேப்பா” :)) பதினோரு மணி
வாக்குல தில்லியிலேர்ந்து கிளம்பினோம். மனசு எல்லாம் ரொம்ப
எதிர் பார்ப்பு. கண்ணன் பிறந்த இடம், வளர்ந்த இடமெல்லாம்
பாக்கப்போறேமேன்னு சந்தோஷப்பட்ட்டேன். பழைய டிரைவர்
தந்த தப்பான இன்பர்மேஷனால பதினோருமணிக்கே கோவில்
சாத்திடுவாங்க அதனால 4 மணி கோவில் திறக்கும் பொழுது
அங்கே இருக்கறாப்ல போனா போதும்னு நினைச்சு 11 மணிக்கு
கிளம்பினோம். அப்புறமாத்தான் தெரிஞ்சுச்சு கோவில் 1 மணி
வரை திறந்திருக்கும்னு. 3 மணிக்கே பிருந்தாவனம் சேர்ந்தாச்சு.
4.30க்கு கோவில் திறக்கும் வரை தேவுடு காத்து கிடந்தோம்.

மதுராவிலிருந்துதான் ஹோலிப்பண்டிகை ஆரம்பித்தது என்பதால
எல்லோரும் கலர்ஃபுல்லா இருந்தாங்க. கயல்விழி வேற பழைய
ட்ரெஸ்ஸு போட்டுக்கங்கன்னு சொல்லியிருந்தாங்க. போட்டோல்லாம்
எடுத்தா ட்ரெஸ் நல்லா இருக்காதுன்னு நல்ல ட்ரெஸ்ஸா போட்டுகிட்டாச்சு!
கோவில் திறந்துமே கலர் அடிப்பாங்க! கலர் இல்லாம நீங்க வறவே
முடியாது அப்படி இப்படின்னு டிரைவர் பயமுறுத்த காரைவிட்டு
இறங்கவா வேணாமான்னு யோசனை! குரங்குகளின் ராஜ்ஜியமா
இருக்கு பிருந்தாவனம். மதுரா போயிடலாம்பா! அப்படின்னு அயித்தான்
சொல்ல வந்தது வந்தாச்சு, என்ன ஆனாலும் சரி தரிசனம் செஞ்சிட்டு
போகலாம்! இதுக்காகன்னு திரும்ப வர முடியாதுன்னு சொல்லிட்டேன்.

4 மணிவாக்குல இறங்கி கோவிலுக்கு கிளம்பினோம். இங்க ஒரு
விஷயம் சொல்லணும். நான் நினைச்சு பார்த்திருந்த பிருந்தாவனம்
வேற, இங்க இருக்கற பிருந்தாவனம் வேற! கொசகொசவென
சின்னச்சின்ன சந்துகள், புனித பூமியில் சுத்தமே இல்லை,
கடைகள்தவிர இங்கே ஏகப்பட்ட கிருஷ்ணர் கோவில்கள். இஸ்கான்
கோவிலும் இருக்கு. அதனால் கோவில் எங்கன்னு கேட்டாக்க?
எந்தக்கோவில்னு எதிர்க்கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது.


இந்தக்கோவில்தான் பிரதானமான கோவில். காத்திருந்தோம்.
காத்திருந்த இடத்திலேயே ஒவ்வொருவரின் கைகளில் இருந்த
கலர்களைப்பார்த்து ஆஷிஷ்,அம்ருதா ஜெர்க்கானார்கள். “சூப்பர்
ட்ரெஸ் போட்டிருக்கேன்ம்மா! இதை இன்னியோட மறந்திட
வேண்டியதுதான்னு” ரெண்டு பேரும் புலம்பல்.
கண்ணனை நினைத்தால் நல்லது நடக்கும்...ஆண்டவனை
பிரார்த்தனை செய். மத்ததெல்லாம் நல்லாவே நடக்கும்னு
சொன்னேன்.

கதவைத் திறந்ததும் திபுதிபுன்னு கூட்டம் உள்ளே நுழைய
மெள்ள போகலாம்னு அயித்தான் சொன்னாரு. சரின்னு
மெள்ள சைட்ல நுழைஞ்சு சேஃபா மேலே ஏறி நின்னோம்.
இதுதான் கண்ணன் இருக்கும் இடம். அந்தத் திரையை
விலக்கியதும் எல்லோரும் கலரை கண்ணன் மேல
கொட்ட ஆரம்பிச்சாங்க. அவன் வரைக்கும் போக முடியாதவங்க
முன்னால நிக்கறவங்க தலையில கொட்டிகிட்டு இருந்தாங்க.


திரைவிலக்கியதும் பூ அலங்காரத்துக்கிடையே பளிச்சின்னு இரண்டு
கண்கள்!! தரிசனம் செஞ்சதும் அப்படியே நைசா கீழேயிறங்கி
ஓரேஒரமா ஒரே ஓட்டம்.:) வெளியே வரும்போது கொஞ்சமே கொஞ்சம்
கலர் ரொம்ப ஸ்லைட்டா... அம்புட்டுதான். அங்கேயிருந்து
ஓடி வந்திட்டோம். திரைவிலக்கியதும் போட்டோ பிடிச்சிகிட்டுருந்தவங்களை
ஒருத்தர் அடிச்சிடுவேன்னு மிரட்டிகிட்டு இருந்தாரு. அதனால பேசாம
கேமிராவை உள்ளே வெச்சிட்டேன். இந்தப் படம் நெட்டில் சுட்டது.


கலர்புல்லா வருவோம்னு நினைச்சிருந்த டிரைவருக்கு ஷாக்.
நாங்க மும்பைக்காரங்கப்பு, இதுக்கெல்லாம் பயப்படமாட்டோம்!
ஹோட்டல்ல விடமாட்டங்களேன்னுதான் யோசைனைன்னு சொன்னேன்.

ஃப்ரெஷ்ஷா பேடா செஞ்சுகிட்டிருந்தாங்க ஒரு அம்மா. போட்டோ
எடுக்கவான்னு கேட்டதும்,”எம் பையனை எடுங்கன்னு!”சொன்னாங்க.
சுடச்சுட தயாராகுது பேடா. இந்தோ உங்களுக்கும்.

சின்னக்கண்ணன் லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தில் பாலுக்கு
பஞ்சமில்லை. லஸ்ஸி கீரிமி கீரிமாயக் சூப்பர் சுவை.
மாடர்ன் மத்து:

யம்மி லஸ்ஸி.

அருகில்தான் கோவர்தன கிரி. இந்த மலையைத்தான் கிருஷ்ணன்
சுண்டுவிரலால் தூக்கியது. 20கீமி தொலைவுதான். நேரமாகிவிட்டதால்
கிருஷ்ணரின் ஜன்ம பூமியான மதுராவை பார்க்கப்போனோம். 20 கிமீ
தொலைவில் இருக்கிறது மதுரா.

இதுதான் மதுரா கோவிலின் முகப்பு. இங்கே டைட் செக்யூரிட்டி செக்கிங்.
மொபைல், கேமிராக்கள் அனுமதி இல்லை. ஆண்களுக்கு தனி
பெண்களுக்குத் தனி செக்கிங்.

உள்ளே போனால் வலது பக்கத்தில் பெரிய படிக்கட்டு. அதில் ஏறி
சென்றால் அழகான ஓவியங்கள் சீலிங்கில் படைக்கப்பட்ட
இடத்தில் கண்ணன் ராதையுடன் அழகாக ஜொலிக்கிறான்.


கீழே இறங்கி வந்தால் கண்ணன் பிறந்த சிறை இருந்த இடம்
என்று போட்ட போர்டு பார்க்கலாம். அங்கே போனால் கிருஷ்ணரின்
உருவம் பொதித்த பொம்மை கூட இல்லை. ராம ஜன்ம பூமிக்கு
பக்கத்தில் மசூதி இருப்பது போல இங்கேயும் பின்சுவர் மசூதியினுடையதுதான்!!!

சுத்தமாக இருக்கிறது கோவில். கண்ணனின் பக்தர்கள் தாளம்போட்டு
பாட்டுப்பாடி பக்தி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.பிருந்தாவனதில்
இருப்பது போல இங்கே ஹோலி இல்லை. எந்தக் கலரும்
படாமல் கண்ணனின் தரிசனம் இனிதே நடந்த மகிழ்ச்சியில்
அவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு டாகூர் என்று அவ்வூர்
மக்கள் அன்பாய் அழைக்கும் தவழும் கண்ணனின்
விக்கரகம் ஒன்றை ஞாபகார்த்தமாய்
வாங்கிக்கொண்டு புறப்பட்டோம்.



Friday, March 25, 2011

ரயிலே!!! ரயிலே!!! மெட்ரோ ரயிலே!!!

சகோ வெங்கட் நாகராஜ் அவர்கள் கிட்ட ஆஷிஷ் இன்பர்மேஷன்
எங்க பர்ச்சேசிங் செய்ய பெஸ்ட்ன்னு விசாரிச்சு வெச்சிருந்தாரு.
ஆனா இடத்தை மறந்திட்டாரு. காலையில் அவருக்கு போனைப்போட்டு
இடத்தை விசாரிச்சேன். இரண்டு இடம் சொன்னாரு. ஆனா நம்ம
நொய்நொய் அதெல்லாம் ரொம்ப தூரம் அது இதுன்னு புலம்ப
சரோஜினி நகர் மார்க்கெட்டுக்கு வண்டியை விடுய்யான்னு சொன்னோம்.

பர்ச்சேசிங்கிற்கு சூப்பரா இருக்கு ஏரியா. வெயில் கொளுத்த
நல்லா சுத்தி பர்ச்சேஸ் கொஞ்சமா செஞ்சோம்.

முதல் நாள் அக்‌ஷர்தாம் எதிரில் சர்புர்ன்னு மெட்ரோ
ரயில் போவதைப் பார்த்து “நானா,கண்டிப்பா மெட்ரோவுல
கூட்டிகிட்டு போங்கன்னு!!” பசங்க ரெக்வஸ்ட் வெச்சிருந்தாங்க.
அதனால் டிரைவர் கிட்ட பக்கத்துல இருக்கும் மெட்ரோ ஷ்டேஷனில்
எங்களை விட்டுட்டு அவரை பொட்டிகளை எடுத்துகிட்டு
குர்காவ் வரச் சொல்லிட்டோம். அங்கதான் இரவு தங்கல்.

சரோஷினி நகருக்கு பக்கதில் தில்லி ஹாட் வந்தாரு டிரைவர்.
வந்தது வந்தோம் அங்கயும் ஒரு எட்டு பாத்திட்டு அப்புறம்
ட்ரையின் ஏறலாம். டிரைவர் காரில் வந்து சேர நேரமாகும்னு
ப்ளான் செஞ்சு தில்லி ஹாட் போனோம்.


விலைகள் கிட்டகூட போகமுடியாதபடி இருக்கு. சும்மா ஒரு
ரவுண்ட் மட்டும் அடிச்சோம். உள்ளே ஒவ்வொரு மாநில
உணவகங்கள் இருக்கு. டீ குடிக்கும் நேரம் என்பதால் டீ
குடிப்போம்னு ஆர்டர் செஞ்சோம். ஆந்திரா ரெஸ்டாரண்டில்
15 ரூபாய் அந்த டீ. தமிழ்நாட்டு கடையில் 10ரூபாய். :)

தில்லி ஹாட்டுக்கு பக்கத்து ஷ்டேஷன் INA (INDIAN NATIONAL ARMY)
அங்கேயிருந்து குர்காவ் போக டிக்கெட் எடுத்தோம். இறங்கவேண்டியது
குர்காவில் இருக்கும் குரு த்ரோணாச்சாரியா ஷ்டேஷன்.

அதுவும் அம்ருதாவுக்கு சப்வேயில் போகும் ட்ரையின் வேணும்னு
ஆசை. அந்த ஷ்டேஷனில் எண்ட்ரி அப்படித்தான். அங்கேயிருந்து
5 ஷ்டேஷனுக்கு சப்வேயில் போய் அப்புறம் மேலே வருவது
அழகு.

உள்ளே நுழைகிறோம்.




இதுதான் டிக்கெட். இதைக் காட்டினால் அதாவது அந்த
மிஷினில் மீது வைத்தால்தான் கதவுதிறந்து வழிவிடும்.
விமானநிலையம் போல செக்கிங் எல்லாம் ஜாஸ்தி.



இதோ ஷ்டேஷனில் ரயில் வந்துவிட்டது. எத்தனை நிமிடத்தில்
அடுத்த ரயில் என எல்லாம் பக்காவாக டிஸ்ப்ளே செய்கிறார்கள்.
வெளிநாட்டில் இருப்பது போல இருந்ததே தவிர இந்தியாவில்
இருப்பது போல தோணவில்லை. (மலேசியா ஞாபகம் வந்தது)

ஒவ்வொரு ஷ்டேஷன் வருவதற்கு முன்னர் அறிவிப்பு செய்கிறார்கள்.
எந்தப் பக்கம் ஷ்டேஷன் வரும், கதவு எந்தப் பக்கம் திறக்கும்
என்று சொல்கிறார்கள்.( ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும்)
தவிர கதவுக்கு மேலே இருக்கும் ரூட் மேப்பில் அந்தந்த
ஷ்டேஷன் கடந்ததும் சிகப்பு விளக்கு எரிகிறது. பார்த்தும்
தெரிந்து கொள்ளலாம்.
குதுப் மினார் ஷ்டேஷனிலிருந்து கூட குதுப் மினார்
பார்க்க முடிகிறது.



GURGAON இந்த இடம் ஹைதையின் ஹைடைக் சிட்டி மாதிரி.
மிக அழகான நேர்த்தியான கட்டிடங்கள்.
ஹரியானாவில் இருக்கும் இந்த இடம் இந்தியாவின் 6ஆவது
பெரிய நகரம். வாழ்வதற்கும் வேலைபார்ப்பதற்கு சிறந்த நகரமாக
பிஸினஸ் டுடே நாளிதழ் இந்த இடத்தைத்தான் குறிப்பிடுகிறது.
Airtel, American Express, EXL, IBM, Microsoft, Sapient, DLF, Maruti Suzuki, Hero Honda, Infosys, Ericsson, Oracle, Bank of America, American Airlines, The Coca-Cola Company, Nokia போன்ற கம்பெனிகளின் கால்செண்டர்கள் இங்கேதான்
இருக்கிறது.

அது என்ன குரு த்ரோணாச்சாரியா ஷ்டேஷன் என யோசித்துக்கொண்டிருந்தேன்.
சமீபத்தில் தான் இந்த ஊருக்கும் புராணகாலத்திற்கும் இருக்கும் சம்பந்தம்
புரிந்தது. மஹாபாரத காலத்தில் குரு த்ரோணாச்சாரியரின் ஊராக
இருந்தது தான் தற்போதைய குர்காவ்.கொளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்
பாடம் சொல்லிக்கொடுத்ததற்காக தட்சிணையாக த்ரோணாச்சாரியருக்கு
இந்த இடத்தை கொடுத்தாக வரலாறு சொல்கிறது.

இவ்வளவு இருந்தாலும் இங்கே பிரச்சனைகள் இருக்கிறது.
ரோடுகள் அவ்வளவாக நல்லாயில்லை. பொல்யூஷன் ஜாஸ்தி.
ஒவ்வொரு 4 மணிநேரத்திற்கும் 1 கார் திருடப்படுகிறதாம்.
போதிய தண்ணீர் வசதி இல்லை. 10 கிமீ தூரத்தில் இருக்கும்
துவாரகாவில் கடும் தண்ணீர் பஞ்சம். நிலத்தடி நீர் உப்புகரிக்கிறது.
(உறவினர் வீட்டுக்கு போய் பாத்தோம்ல)

ஹல்திராம்ஸ் ஸ்னாக்ஸ் ஞாபகம் இருக்கா. அந்த ஃபேக்டரி
இங்கேதான் இருக்கு. எங்க அனில் அண்ணாவும் இப்ப இங்கதான்
இருக்காரு. அவரு விடுமுறைக்காக வெளிநாட்டுக்கு போயிருந்ததால
அவரை சந்திக்க முடியலை. அது ஒண்ணுதான் வருத்தம்.


குரு த்ரோணாச்சாரியா ஷ்டேஷனில் இறங்கினோம். பசங்களுக்கு
மட்டுமல்ல எங்களுக்கும் இந்த பயணம் ரொம்ப பிடித்திருந்தது.
ஹைதையிலும் மெட்ரோ ரயில் பணிகள் ஆரம்பித்திருக்கிறது.
டிரைவர் ஷ்டேஷனில் காத்திருந்தார். (ஷ்டேஷனுக்கு வெளியே
பார்க்கிங் வசதி இருக்கு) ஏறிக்கொண்டு கெஸ்ட் ஹவுஸ் சென்று
ரிலாக்‌ஸ் ஆகி அடுத்த நாளின் பயணத்திற்கு காத்திருந்தோம்.


Thursday, March 24, 2011

அடுத்த நாள் தில்லி ரவுண்ட்அப்.....

அடுத்த நாள் காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு ரவுண்ட்ஸுக்கு
கிளம்பியாச்சு. அதே நொய்நொய் டிரைவர்தான் :(
ரூமைக்காலி செஞ்சிட்டு வேற இடத்துக்கு போறதால
பொட்டிகளை காரில் ஏத்திகிட்டு கிளம்பினோம்.முதலில்
சென்றது தாமரைக்கோவில். தாமரைவடிவில் அமைஞ்சிருப்பதால
இந்தப் பெயர். ஆனா உண்மையில் அதற்கு பெயர் பஹாய்கோவில்.


பெரிய நிலப்பரப்பில் அருமையான கண்ணுக்கு குளிர்ச்சி தரும்
பசுமையுடன், பூக்களால் வடிவமைத்த தோட்டம். அதற்கு
நடுநயமாக தாமரைப்பூ வடிவம். படிக்கட்டில் ஏறி உள் நுழைகையில்
உள்ளே வரிசையாக நிற்க வைத்து அனுப்புகிறார்கள். உள்ளே
அப்படி ஒரு நிசப்தமான அமைதி. எந்தவித மதசார்பும் இல்லாத
அனைவருக்கும் தியானம் செய்ய ஏற்ற ஒரு இடமாக இருக்கிறது
பஹாய். நாங்கள் நால்வரும் அமர்ந்து தியானம் செய்தோம்.
தியானத்தின் போது உடலில் ஒருவித வைப்ரேஷன் ஏற்பட்டதை
உணர்ந்தேன். மனதுக்கு இதமாக ஃப்ரெஷ்ஷாக இருந்தது. உள்ளே
எந்த வித சப்தமும் இல்லை. வெளியில் வந்து புகைப்படங்கள்
எடுத்துக்கொண்டோம்.

அருகில் இருக்கும் இஸ்கான் கோவிலுக்கு அழைத்துச்செல்லச்
சொன்னால் அந்த டிரைவர் காதிலேயே விழாத மாதிரி வண்டியை
நேராக ராஜ்காட்டுக்கு விட்டார்.


தேசப்பிதா மஹாத்மா காந்தி, ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி,
சரண்சிங் என பல தலைவர்களின் சமாதி இங்கேதான் இருக்கிறது.
இந்த இடமும் மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.
பசுமைமிகு தோட்டமாக பராமரித்து வருபவர்கள் எங்கெங்கே
எந்தெந்த தலைவர்களின் சமாதி இருக்கிறது என்பதை கொஞ்சம்
கண்ணுக்குத் தெரியும்படி வைக்கலாம். அவ்வளவு பெரிய
இடத்தில் ஒரேஒரு வரைபடம், அதுவும் கம்பிகளுக்கு அப்பால்.

ராஜீவ்காந்தி அவர்களின் சமாதி பக்கத்தில்தான் இந்திராகாந்தி
அவர்களின் சமாதி இருக்கிறது. ஆனால் அது வெளியே
வந்ததும் தான் தெரிந்து கொண்டோம். அது சரி மஹாத்மா
காந்தியின் சமாதிக்கு செருப்புடன் செல்லக்கூடாது என்று
சொல்லி செருப்பை வாங்கி வைப்பவர்கள் அங்கிருந்து
செல்லும் பாதையில் சுவற்றில் இருக்கும் பான் கரையையே
சுத்தம் செய்யாமல் வைத்திருக்கிறார்கள். மாபெரும்
தலைவரின் சமாதியை பார்க்க வரும் வெளிநாட்டினருக்கு
இதெல்லாம் தெரியாது. நம்மவர்களுக்குத் தெரியும்தானே?
அங்கேபோய் கூட பான் கரையா??? என மனம் நொந்தோம்.
அயித்தான் அந்த செருப்புக்களை பாதுகாப்பவர்களிடம்
சொல்லவே செய்தார். அந்த ஆள் முகத்தில் எந்த ரியாக்‌ஷனையும்
காணோம். :((


ராஜ்காட்டிலிருந்து ஜும்மா மசூதி சென்றோம். நம்ம டிரைவர்தான் நொய்நொய்
ஆச்சே. ”நான் ஜும்மாவில் இறக்கிவிட்டு வண்டியை ரெட்ஃபோர்ட்டில்
பார்க்கிங்கில் வைத்து காத்திருக்கிறேன். எல்லா இடமும் பக்கத்தில்
தான்... ரிக்‌ஷாவில் போய்வந்திவிடுங்கள்னு”சொல்லிட்டு போயே
விட்டார் :((

தொலைந்துபோன்னு நாங்க ஜும்மா போனோம். கேமிரா,வீடியோவுக்கு
250 ரூபாயாம். அது மொபைல் கேமிராவா இருந்தாலும் சரின்னு
போர்டு போட்டிருந்தது. ஹிந்துக்களுக்கு அனுமதி உண்டுன்னாலும்
அங்க போய் பெருசா எதுவும் பாக்கமுடியாது. மசூதி மூடியிருக்கும்.
அங்க மட்டும் காலையிலும் மாலையிலும் தொழுகை நேரத்தில்
கொஞ்ச தூரத்தில் நின்னு பார்க்க அனுமதியாம். அயித்தான் வெளியேவே
இருக்கேன்னு சொல்ல நானும் பசங்களும் மட்டும் போனோம்.
பெர்முடாஸ் போட்டிருந்தா மேலே ஒரு லுங்கியை சுத்தி விடறாங்க.
ஸ்லீவ்லெஸ் இல்லாட்டி துப்பட்டா இல்லாத குர்தியா இருந்தா
லாங்கவுன் மாதிரி ஒண்ணை மாட்டிக்க கொடுக்கறாங்க. வெளிநாட்டினரை
லுங்கியோட பாத்தப்ப விஜய் படம் ஒண்ணில் போர்டர்கள் மாதிரி
வருவாங்க அது ஞாபம் வந்துச்சு. :))


அங்கேயிருந்து ரிக்‌ஷாவில் சாந்தினிசவுக் பக்கத்துலேயேதான் இருக்கு
அங்க போனோம். பர்ச்சேஸிங் செய்யலாம்னு போனோம். பெருசா
எதுவும் அட்ராக்ட் செய்யவில்லை. ஆனாலும் எதுவும் வாங்காம
வந்தா சாமி குத்தமாகிடுமே :)) போனா போகட்டும்னு எனக்கும்
அம்ருதாவுக்கும் லக்னோவி வேலைப்பாடு செஞ்ச டாப்ஸ் வாங்கினோம்.
ஆஷிஷும் அயித்தானும் வருத்தப்படக்கூடாதுன்னு பெர்முடாஸ்,டீ ஷர்ட்ஸ்
வாங்கினோம். எதிர்லேயேதான் ரெட்ஃபோர்டுன்னாலும் வெயில் தாங்கவில்லை.
ரிக்‌ஷாவில் போனோம். எங்க எல்லோருக்கும் இந்த ரிக்‌ஷா ரெய்ட் ரொம்ப
பிடிச்சிருந்தது. ஒரே ரிக்‌ஷாவில் நாலு பேரும் உக்காருவதுபோல சூப்பரா
இருக்கு.

ஆக்ரா போரடிச்சு போனதக்கப்புறம் தனது தலைநகரமா தில்லியை ஷாஜகான் மாத்தினதக்கப்புறம் கட்டியதுதான் இந்த செங்கோட்டை.
உள்ளே அருங்காட்சியகம் இருக்கு.


ராஜாவுக்கு என்ன கஷ்டம்? பல்லக்குல போவாரு இல்லாடி
குதிரை, ரதம். அதனால அம்மாம் பெரிய இடத்தை நடப்பது
நமக்குத்தான் கஷ்டமா போச்சு. ஏம்ப்பா தில்லியில இப்படி
எல்லா இடத்தையும் பெரிய பெரிய இடத்தை ஆக்ரமிச்சு
கட்டி வெக்கறாங்க!!! இங்க ஹைதையிலும் சிகந்திராபாத்
ஷ்டேஷன்லேர்ந்து 3 கிமீ தூரத்துலேயே மிலிட்டரி
ஏரியா துவங்கிடும். அதைச் சுத்திதான் ஊரே இருக்கு.
எங்கபோனாலும் அவங்க ஏரியா வந்திடும். தில்லியிலும்
பிரதமர் அலுவலகம், மந்திரி சபை, அவங்க வீடுகள்,
தவிர இந்த மாதிரி முக்கியமான இடங்களுக்கு அப்புறம்
தான் சாதரணமா மக்கள் வாழும் இடங்கள் வருது.

சுத்தி சுத்தி வந்து டயர்டாகிடிச்சு. இதுக்குமேல டிரைவர நம்பி
எங்கயும் சாப்பிட போக முடியாது. சாந்தினி சவுக்ல சுத்தும் பொழுதே
ஒரு ரெஸ்டாரண்ட் பாத்து வெச்சிருந்தேன். அங்க போயிடலாம்னு
சொல்லி கூட்டிகிட்டு போனேன். சாந்தினி சவுக்ல இருக்கும் ஜெயின்
கோவில், கொளரிசங்கர் கோவிலுக்கு கொஞ்சம் எதிர்ல இருக்கு
வினீத் அப்படிங்கற ரெஸ்டாரண்ட். தில்லிவாழ் தமிழர்களுக்கு அதுவும்
ஷ்பெஷலா நம்ம ஊரு இட்லி,தோசை எதிர் பார்ப்பவங்களுக்கு
சந்தோஷமான செய்தி என்னன்னா இந்த ஹோட்டலில் இட்லி,தோசை
கிடைப்பது என்பதுதான். :) நாங்க நார்த் இண்டியன் மீல்ஸ் சாப்பிட்டோம்.
அளவுச்சாப்பாடுதான்! 1 பராத்தா, கொஞ்சமா வெஜிடபிள் ரைஸ்,
மிக்ஸ்டு வெஜிடபில், பனீர் பட்டர் மசாலா, ஒரே ஒரு குலாப்ஜாமூன்,
ஒரே ஒரு தஹிபல்லா. :))

செம வெயில்... தாங்க முடியலை. ஆனா அடுத்த இடத்துக்கும்
போயிட்டு அப்புறமா ரூமுக்கு போக திட்டம்.

வெயிலையும் பொருட்படுத்தாமல் போன இடம்...
யெஸ்ஸு அடுத்த பதிவில்.


Wednesday, March 23, 2011

அம்மாடி!!!!!! எம்மாம் பெரிய இடம்!!!

இந்த இடத்துக்கு போகவேணாம்னு திட்டம் போட்டிருந்தேன்.
விதி வலியது :)) பதிவர் சந்திப்பு நடக்க அந்த இடத்தை தாண்டிதான்
போகணும்னு சொன்னதும் அப்படியே அந்த இடத்தையும் பாத்திடலாம்னு
அயித்தான் சொன்னார்.

உள்ளே மொபைல்,ஹேண்ட்பேக்குகள் எதுவும் அனுமதி கிடையாது.
நல்லா செக்யூரிட்டி வெச்சு செக்கிங் செஞ்சுதான் அனுப்புறாக. அதுவும்
ஆண்கள் வெளியே வர லேட்டாகும்!! ஜான் பிள்ளைன்னாலும் ஆண்பிள்ளை
என்பதை இங்கே கண்கூடா பாக்கலாம். குட்டியா இருந்தாலும்
ஆண்களின் வரிசையில் இருந்துதான் வரவேண்டும். பெல்ட், ஷூ
எல்லாம் கழட்டி செக்கிங் நடக்குது! ஆஷிஷ் அடித்த கமெண்ட்,
“நல்லவேளை! பேண்டை கழட்டுங்கன்னு சொல்லாம விட்டாங்களே!!:(
லாக்கர் வசதி இருக்கு. அங்கே வெச்சிட்டு திரும்ப வந்து எடுத்துக்கலாம்.
கொடுப்பது ஒரு இடம்னா அதுக்கு பின்னாடி திரும்ப பெறும் படி
கூட்டத்தை தவிர்க்க வரிசை, எந்த நம்பர் டோக்கன் எந்த கவுண்டர்
என எல்லாம் பக்கா ப்ளான் படி நடக்குது அங்கே.


நீங்க இங்கபோய் பாக்கலாம்.


பெர்முடாஸ், தோள் தெரியும் உடைகள், ஷார்ட் ஸ்கர்ட்ஸ் அனுமதி
இல்லை. இவற்றிற்கு மேல் சுத்திக்கொள்ள துணிகள் 20ரூபாய்க்கு
வாடகைக்கு தருகிறார்கள். 7மணியோடு சரி. திங்கள்கிழமை
விடுமுறை. நாங்கள் போனது அந்தி சாயும் மாலை.

பாதுகாப்பு தேவைதான். இந்த ஷூ,செருப்புக்களை வெளியவே
போட வெச்சிட்டா கொஞ்சம் செக்கிங் வேலை குறையுமில்ல.
அப்படி எங்கங்க போனோம்? அக்‌ஷர்தாம் லக்‌ஷ்மி நாராயண
கோவில். பிரம்மாண்டமான கோவில். கேமிரா அனுமதி
கிடையாது என்பதால் கண்களால் படம் பிடிச்சுகிட்டோம்.
அளவான மின்னொளியில் ஜொலிக்கும் அக்‌ஷர்தாமை அந்த நேரத்தில்
பார்ப்பதுதான் சரி என எனக்குப் படுகிறது. அக்‌ஷர்தாமுக்கு
அருகிலேயே மெட்ரோ ஷ்டேஷன் இருக்கிறது.

ஒருவழியா செக்கிங் முடிச்சு கோவில் உள்ள நுழைஞ்சா
பிரம்மாண்டமான தோட்டத்திற்கு நடுவே இருக்கு கோவில்.
சுத்தம்.. சுத்தம்.. அப்படி ஒரு சுத்தம்!! கோவில் ப்ரகாரம்
வரைக்கும் செருப்போட போகலாம். செருப்பு வைக்க
தனி இடம். ஷீரடி மாதிரி இங்கேயும் சாக்கு பைகளில்
கட்டி தொங்க விட்டுடறாங்க. கண்ட இடத்துல செருப்புக்கள்
இறைஞ்சு கிடக்கும்னு நினைச்சேன், அழகா அதுக்குன்னு
தனி இடம் இருக்கும்மான்னு ஆஷிஷ் சொன்னாப்ல.
ஆனா அங்கயும் ஒரு இக்... பொதுவா பல ஆண்கள் ஷூவோட
தான் வெளியவாச சுத்துவோம்னு கங்கணம் கட்டிகிட்டு
இருப்பாங்க. ஆனா அவங்ககிட்ட இருக்கும் ஒரே கெட்ட குணம்
ஒரே சாக்ஸை3 நாளைக்கும் போடுவது.ஷூ கழட்டிட்டு
சாக்ஸை கழட்ட/திரும்ப போட சோம்பேறித்தனம். அதனால
அந்த சாக்ஸோடவே சுத்துவாங்க பாருங்க. அந்த நாத்தம் :(
இது கோவில் உள்ளே ஏத்திவெச்சிருக்கும் ஊதுபத்தியையும்
தாண்டி ”மணக்குது”. சாக்சை கழட்டி வையுங்கன்னு தனியா
யாராவது உத்தரவு போட்டாதான் இந்த நாத்தம் போகும்.
(நம் மக்களுக்கு அடுத்தவங்க பத்தி கவலையே கிடையாது)

உள்ளே ஸ்வாமி நாராயண் அவர்களின் சிலை இருக்கு. ப்ரகாரம்
மொத்தமும் நுண்ணிய வேலைப்பாடுகள். அதுவும் மேலே
சீலிங்கில் விதம் விதமாய அழகா செஞ்சு வெச்சிருக்காங்க.
வெளிப்ரகாரத்தில் சுத்தி யானைகளா இருக்கு. கிட்டத்தட்ட 48 வகை பிள்ளையார்
செதுக்கி வெச்சிருக்காங்க. இப்படி எத்தனையோ பிரம்மாண்டங்கள்
இருக்கு. சுவாமி நாராயண் எனும் குருவுக்காககட்டப்பட்ட இடம்.
5 வருஷமாச்சாம் இந்தக்கோவிலை கட்டி முடிக்க.
ம்யூசிக் ஃபவுண்டைன் எல்லாம் பாக்கவில்லை. மணி 6.55.
7 மணிக்கு வர்றேன்னு கயல்விழி முத்துலட்சுமிகிட்ட சொல்லிருந்தேன்.
அவங்க வீட்டுலதான் பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.

சனி, ஞாயிறு ஹோலி என்பதால் யாரும் வெளியே வரும்
உத்தேசமில்லை. பிரச்சனையாகும் என்பதால அதிகம் பேர்
வரமுடியாது என்று புதன் கிழமை இரவு கயல்விழி வீட்டில்
சந்திப்புக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. கயல்விழி, நான்,
விக்னேஷ்வரி, சகோ வெங்கட் நாகராஜ், கோவை2தில்லி
கனாக்காதலன் எல்லோரும் சந்திச்சோம். கோவை2தில்லி உடல் நிலை
சரியில்லாத நிலையிலும் வந்தது நெகிழ்வா இருந்துச்சு.
விக்னேஷ்வர் பட்டர்பனீர் மசாலா செஞ்சு கொண்டுவந்திருந்தாங்க.
கயல் இட்லி,தக்காளி ரைஸ், தயிர் சோறு, கீர், தேங்காய்ச் சட்னி,
சாம்பார் எல்லாம் செஞ்சு வெச்சிருந்தாங்க. வந்தார்கள்
சென்றார்கள் மாதிரி போனோம் பேசிகிட்டே டின்னர் சாப்பிட்டோம்,
கிளம்பிட்டோம்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசலாம்னா எங்க டிரைவர்
ஒரு நொய்நொய் பிச்சையாய் வந்து வாச்சிருந்தாரு. ஹமே
தேர் ஹோரஹி ஹை! போன் போட்டு கிளம்ப வெச்சிட்டாரு.
கிளம்புவதற்கு முன்னாடி கயல்விழி வீட்டு ஊஞ்சலையும்
திண்ணையையும் பாத்திட்டு கிளம்பினோம். மாதினி எங்களை
ரிசீவ் செய்ய தெருமுனைக்கே வந்திருந்தாப்ல. சபரி கிட்ட
சரியா கூட பேச முடியலையேன்னு வருத்தம் எனக்கு.
பசங்க நல்லா ஜெல்லாகிட்டாங்க. சகோ வெங்கட் நாகராஜோட
மகள் ரோஷிணி,அம்ருதா, சபரி,மாதினி எல்லாம் சேர்ந்து
கேரம் விளையாடிகிட்டு இருந்தாங்க. ஆஷிஷ் தான்! எங்க பக்கமும்
இல்லாம அவன் பக்கமும் ஆள் இல்லாம ஒரு மாதிரி ஓட்டினான்.

ஒரு மணிநேரம் நடந்த பதிவர் சந்திப்பில் முடிஞ்சவரைக்கும்
ஹஸ்பண்டாலஜி பத்தி விக்னேஸ்வரிக்கு, வெங்கடகிரி புடவை/
சுடிதார் பத்தி கோவை2தில்லிக்கு (போட்டுகிட்டு போய் மாடலை
காட்டி நல்லா சொல்லிக்கொடுத்தேன் :)) எல்லாம் விவரமா
செய்ய வேண்டிய வேலை கணகச்சிதமாக செஞ்சாச்சு. :)))
போற இடத்துல நம்ம வேலையை கரெக்டா செய்யணுமில்ல!!

கேட்டுகிட்டுத்தான் இருக்கேன்னு சகோ வெங்கட் நாகராஜ்
குரல் கொடுத்துகிட்டே அயித்தானோட அளவளாவிகிட்டு இருந்தார்.
நாங்க மகளீர் அணி கிச்சனில் பேசிக்கிட்டு இருந்தோம்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பேசிருக்கலாம்ங்கற
எண்ணத்தோடயே கிளம்பினேன். அப்புறம் ரூமுக்கு போய்
இடுப்பை சாச்சதுதான் தெரியும். அடுத்த நாள் அதுக்குள்ள
விடிஞ்சிருச்சு. டூருக்கு போன இடத்துல தூங்கிகிட்டு இருந்தா
எப்புடி? பசங்களை கிளப்பி டிபன் சாப்பிட்டு ரூமை காலி
செஞ்சு கிளம்பியாச்சு.....

போன இடம் எங்கேப்பா???? அடுத்த பதிவுல சொல்றேன்பா.....


குதுப்மினார்... இண்டியாகேட்..

ஏர்போர்டிலிருந்து ஹோட்டலுக்கும் போகும் வழியில் கொஞ்ச
தூரம் சென்றால் முதலில் குதுப்மினார் வருதுன்னு அயித்தான்
சொன்னார். மண்டைய பிளக்கும் வெயிலா இருந்தாலும் சரின்னு
வண்டியை குதுப்மினாருக்கு விட்டோம்.

டெல்லியில் ஆஹா என்ன ஒரு ட்ராபிக்!!! சும்மா சொல்லக்கூடாது.
நத்தை ஊறுவது போலத்தான்! ஹைதையில் தான் ராங் ரூட்டுல
வருவாங்க, கன்னாபின்னான்னு ஓட்டுவாங்கன்னு சிலர் சொல்வாங்க.
தலைநகரும் இதுக்கு விதிவிலக்கு இல்ல. கரெக்டா ஸ்பீடா
எதிர் திசையில் வர்றாங்க. டூ வீலர்களுக்குன்னு தனி லைன் இருக்கு.
ஆனா சைக்கிள் கூட அதுல போறதில்லை!!! அப்படில்லாம் ஒழுங்கா
இருந்திட்டா அது இந்தியா இல்லைன்னு நமக்குத் தெரியும் :)) அதனால்
அத்த விட்டு குதுப்மினாருக்கு வருவோம்!!

அஸ்திவாரம் போட்டது ராஜபுதினர்கள். ஆபகனிஸ்தானின் மினாரைப்போல
ஒன்று கட்டவேண்டும் என்று ஆசைப்பட்டு டெல்லியின் முதல் முஸ்லீம்
மன்னர் 1193 முதல் தளம் வரை அமைத்தார்.

அடிபாகத்தில் சுற்றளவு 14.32மீ, கோபுரத்தில் சுற்றளவு 2.75, உயரம்
மொத்தமா 72.5மீ. இவ்வளவு அழகா இருக்கும் இந்த மினாரை
மேலும் இரண்டு தளங்கள் அமைத்து கட்டி முடித்தது ஐபக்கின்
மருமகன் Iltutmish. சூரிய ஒளி மினாரில் விழுவது போல
இருக்கும் இந்தப் போட்டோவின் கோணம் பார்த்தது ஆஷிஷ். :)

சந்திரகுப்த விக்கரமாதித்ய மன்னர் கட்டியதாகச் சொல்லப்படும்
இரும்புத் தூண் இந்த குதுப் காம்ப்ளக்ஸில்தான் இருக்கிறது.
6 டன் எடையும் 22 அடி உயரமும் இருக்கும் இந்த இரும்பு
1600 வருஷமா துருபிடிக்காமத்தான் இருந்துச்சு. ஆனா
இப்ப இருக்கும் சுற்றுச்சூழல் மாசுல கொஞ்சமா துரு பிடிக்க
ஆரம்பிச்சிருக்குன்னு சமீபத்தில டீவி நிகழ்ச்சி ஒண்ணுல
பாத்தேன்!!



ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டு
3 மணிக்கு கிளம்பியாச்சு அடுத்த ரவுண்டுக்கு. எனக்கும்
அயித்தானுக்கும் மொளனராகம் படம் ரொம்ப பிடிக்கும்.
அந்த படத்துல தான் எனக்கு விவரம் தெரிஞ்சு டெல்லியைக்
காட்டினது. அயித்தானுக்கு மொளனராகம் படத்துல மோகன்,
ரேவதி வீடு போல ஒரு வீடு வேணும்னு ஆசை. சொந்த
வீடு அந்த மாதிரி வாங்க முடியாட்டாலும் 7 வருஷம்
ஆசை தீர அதே மாதிரி காரில் உள்ளே நுழைஞ்சு வீட்டுக்கு
போவது போல ஒரு வீடு இலங்கையில் வாழ்ந்தது போதும்.

ஆசை படத்துல கூட ப்ரகாஷ்ராஜும் நிழல்கள் ரவியும்
மார்னிங் ஜாகிங் போவதுபோல காட்சி வரும் இடம்
இண்டியா கேட்டும் அதற்கு எதிரில் இருக்கும் ராஷ்ட்ரபதிபவனும்தான்.




சுற்றி பார்க் மாதிரி வெச்சிருக்காங்க. நாங்க அங்க இருந்த பொழுது
ரவுண்ட்ஸிற்காக ஒரு மிலிட்டரிவேனில் நிறைய வீரர்களுடன்
வந்ததைப் பார்த்த பொழுது ஒரு நிமிடம் எல்லோரும் இலங்கைக்கு
போன மாதிரி ஒரு ஃபீலிங். அங்க தான் சர்வசாதாரணமா
துப்பாக்கியோட ஆர்மிகாரங்க பாக்கலாம். ( ட்ராபிக் போலீஸ் கூட
துப்பாக்கியோட நிப்பதை இந்த ஊருலதான்க்கா பாக்கறேன்னு
புதுசா கொழும்பு வந்த ஒரு தம்பி பயந்ததை நினைச்சுகிட்டோம்)


அங்கபோய் நின்னப்ப நாமே! நாமான்னு எங்களுக்குள்ள ஒரு
சின்ன குதூகலம். உயிர் நீத்த போர்வீரர்களுக்காக கட்டப்பட்டு
இப்பவும் அங்கே ஒரு ஜோதி ஏத்தி வெச்சு காவலுக்கு இரண்டு
ஜவான்களையும் போட்டிருக்காங்க. அந்த நினைவுச்சின்னத்தை
கிட்ட போய் (ரொம்ப கிட்ட விடமாட்டாங்க) பார்த்தா உயிர்
நீத்த பல ஜவான்களின் பெயர்களை பதிச்சிருக்காங்க.

இண்டியாகேட்டிலிருந்து ராஷ்ட்ரபதி பவன்:


ராஷ்ட்ரபதி பவன் பக்கத்திலிருந்து இண்டியாகேட்டின் அழகு.

இண்டியாகேட்டுக்கு நேர் எதிரில் 2 கிமீ தொலைவில் ராஷ்ட்ரபதிபவன்
இருக்கு. அதற்கு வலதுபக்கத்தில் பிரதமரின் அலுவலகம். இடதுபக்கம்
நாடாளுமன்றம். அதற்கு பக்கத்திலேயே அமைச்சர்களின் அலுவலகங்கள்
அடங்கிய கட்டம். இதனால அங்கே டைட் செக்யூரிட்டி. வண்டியை
பார்க்கிங் செய்ய முடியாது. அதனால வண்டில இருந்துகிட்டே
போட்டோ பிடிச்சோம். ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாடி இறக்கிவிட்டு
டிரைவர் ஒரு ரவுண்ட் அடிச்சு வர்றதுக்குள்ள போட்டோ எடுத்தோம்.

இவற்றிற்கு கொஞ்சம் அருகிலேயே அமைச்சர்களின் வீடுகள் இல்லையில்லை
பங்களாக்கள். நமக்குத் தெரிஞ்ச லிஸ்டில் டீஆர் பாலு அவர்கள் வீடு,
ஏகே ஆண்டணி அவர்கள் வீடு இப்படி எல்லாம் சுத்தி சுத்தி வந்து
பார்த்தோம். பிரதமரின் வீட்டு வழியாத்தான் போனோம். அவரு
பிசியா இருந்திருப்பாருன்னு டிஸ்டர்ப் செய்யாம வந்திட்டோம்!!!

இந்தப் பதிவே இம்புட்டு பெரிசாகிடிச்சே!!! அடுத்து போன இடங்கள்
பத்தி..... ஆமாம் அடுத்த பதிவுல!!!

Monday, March 21, 2011

தலைநகரில் தரை இறங்கிய தென்றல்.... :))

குளிர் நடுக்கியது போய் வெயில் ஆரம்பிச்சிருக்கு அதனால்
ஒரு எட்டு வந்திட்டு போறதுன்னு மன்மோகன் சிங் ரொம்பவும்
கேட்டுகிட்டாப்ல. நாட்டை ஆள்பவர்(!!), கேக்காட்டி எப்புடி?? :))
சரின்னு டிக்கட்ட போட்டு கிளம்பியாச்சு. நாம ஒண்ணு நினைச்சா
கட்வுள் ஒண்ணு நினைக்கறாப்டி!! ஆஷிஷுக்கும் 11ஆம் தேதியே
பரிட்சை முடிஞ்சிடும்னு 12ஆம் தேதியே கிளம்பி 1 வாரம்
டூர் அடிக்க திட்டம்போட்டிருந்தேன். ஆனா திடும்னு கடைசி
பரிட்சையை 15ஆம் தேதி வெச்சிப்பிட்டாக. வேற வழியில்லாம
கொஞ்சமா ஆஷிஷையும் சீபிஎஸ்ஸி காரங்களை நிறையவும்
திட்டி டிக்கட்டை 16ஆம் தேதிக்கு மாத்தினோம். அதனால
போக நினைச்சிருந்த வாகாபார்டர் திட்டத்தையும் கைவிடும்படியா
ஆகிடிச்சு :((

எல்லாம் ஓகேன்னு நினைச்சுகிட்டு இருக்கையில மார்ச் 14&15
உடம்பு சரியில்லை!!! BP சும்மா ஆட்டம் காட்டுது.
94/54 இல்லாடி 97/60. ஊருக்கு கிளம்புவோமா? எல்லா
ஏற்பாடும் செஞ்சாச்சேன்னு டென்ஷன். என்ன ஆனாலும்
சரின்னு நல்லா ரெஸ்ட் எடுத்தேன். எப்படியோ கிளம்பும்
நாளும் வந்தாச்சு. உடம்பு ஓரளவு பரவாயில்லை.

ஹைதை ஷம்ஷாபாத் விமான நிலையம் எனக்கு ரொம்ப
பிடிச்சது. கார் பார்க்கிங்கே சூப்பரா இருக்கும். டிப்பார்சர்
மேலே, அரைவல் கீழே என பக்காவா ப்ளான் செஞ்சு இருக்கும்.
செக்கின் செஞ்சிட்டு திரும்பினா ஆஷிஷையும் அம்ருதாவையும்
பாத்துகிட்டே ஒருத்தங்க வந்து கிராஸ் செஞ்சு போனாங்க!!
யாரு அதுன்னு பாத்தா நடிகை ரோகிணி!!! அங்கேயிருந்து
நகர்ந்து வந்தா தெலுங்கு பட இயக்குனர் தாசரி நாராயணராவ்!!

நாங்க டிபன் சாப்பிட்டுகிட்டு உக்காந்திருந்த இடத்துல
ஒருத்தர் ஒரு வித கலரிங் தலையோட கிராஸ் செஞ்சு போனாரு!!
ஸ்டண்ட் மாஸ்ட் பீட்டர் ஹெயின்ஸ் அவரு. ஹைதையிலிருந்து
கோவைக்கு போய்கிட்டு இருந்தாரு. 4 தடவை ஃபைனல் கால்னு
சொன்னதுக்கப்புறம்தான் மனுஷன் கீழே இறங்கி தன் விமானத்துக்கு
போனாரு!! எங்க ப்ளைட்டுக்கு ஏரோபிரிட்ஜ் வழியா நுழைஞ்சோம்.
கரெக்டா 9.10க்கு புறப்பட்ட விமானம் டேக்ஆஃப் ரொம்ப
ஸ்மூத்தா இருந்துச்சு. 2 மணிநேரம் பயணம். போரடிச்சது
உண்மை.

டேக் ஆஃப் நல்லா இருந்துச்சேன்னு சந்தோஷப்பட்டதுக்கு
லேண்டிங் தடால்னு போட்ட பைலட்டை வெஞ்சுகிட்டே
இருந்தேன். அப்பதான் அயித்தான் T3 பத்தி சொல்லிகிட்டு
இருந்தாரு. எனக்கு இந்த பஸ்ஸுல கூட்டிகிட்டு போறது
பிடிக்காது. ஏரோ ப்ரிட்ஜா இருந்தா நல்லா இருக்கும்னு
நினைச்சுகிட்டு இருக்க அயித்தான் T3லதான் 78 aerobridge
இருக்குன்னு சொல்லிகிட்டே இருக்க என் அதிர்ஷ்டம்
T3ல ஃப்ளைட்ட நிப்பாட்டினாரு பைலட்.

ஏரோப்ரிட்ஜை கொண்டுவந்து விமானத்துல சேர்க்கும்
காட்சி ரொம்பவே சூப்பரா இருக்கும் இதைப்பத்தி
நம்ம பதிவர் தம்பி சஞ்சய்காந்தி பதிவு வீடியோவா
போட்டிருக்காரு.

”உங்களுக்கு நல்ல லக்!! இதுக்கு முன்னாடி கூட
நான் வந்திருக்கேன் ஆனா டி3 பாத்ததில்லை” அப்படின்னு
அயித்தான் சொல்ல ஆனந்தமா இறங்கி நடந்தோம்.
கார்ப்பட் ஒரேகலருல சூப்பரா இருக்கு. (கார்ப்பட்
மெயிண்டெனன்ஸ் ரொம்ப கஷ்டமில்ல!! அப்படின்னு
ஆஷிஷ் கமெண்ட் அடிச்சுகிட்டே வந்தாப்ல)



பேக்கேஜ் கலெக்‌ஷனுக்கு இறங்கும் இடத்தில் பரதநாட்டிய
அடவுகளை அழகா வெச்சிருக்காங்க.


பொட்டிகளை எடுத்துகிட்டு வெளியே வந்தா கார் பார்க் போகும்
இடத்துக்கு நடந்தோம்.... நடந்தோம்.... நடந்துகிட்டே இருந்தோம்!!!
ரொம்ப நடக்க தேவையில்லை. வாக்வே இருக்கு.
போட்டோ எடுக்க அனுமதியில்லையேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.
ஆனா நெட்டுல கிடைச்சிடிச்சு. இதுதான் டி3யின் Multi level car parking!!



அடுக்கடுக்கா இருக்கு!! அத்தோட கார் பார்க்கிங் காலியா இருக்கா? இல்லையான்னு?
சொல்ல பச்சை/சிவப்பு விளக்குகள் வெச்சிருக்காங்க. ரொம்ப சூப்பரா
இருந்துச்சு. சர்வதேச தரத்தோட டி3 சூப்பரோ சூப்பர்.

ஒரு வழியா சுத்தி சுத்தி வந்தோங்கன்னு ஏர்போர்ட் கார்பார்க்கிங்கிலேர்ந்து
வெளியே வந்தாச்சு. நல்ல வெயில்!!! இந்த இடத்துல தொடரும்னு
போட்டு நிப்பாட்டிக்கறேன்!!!