Total Pageviews

Thursday, April 21, 2011

கண்டேன்... கண்டேன்... சீதையையை....

கண்டியில் இருக்கும் பெரதனியா பொடானிக்கல் கார்டன் மிக
அழகு. பார்த்திபன் கனவு படத்தில் வரும் ஆலங்க்யில் பாட்டு
இங்கேதான் எடுத்திருக்காங்க.



பாட்டு ரசிச்சாச்சா!!. அவ்வளவு பெருசு இல்லாட்டியும் நுவரேலியாவில்
இருக்கும் ஹக்கல பொடானிக்கல் கார்டனும் பார்க்க வேண்டிய ஒண்ணு.

இந்த தோட்டத்துக்கு கொஞ்சம் பக்கத்தில் தான் சீதையம்மன்
கோவில் இருக்கு. சீதாஎலிய என்று இந்த இடத்துக்கு பெயர்.
சீதை இருந்த அசோகவனத்தில் இப்போ ஸ்ரீராமர்,சீதை,லட்சுமணன்
கோவில் இருக்கு. அந்தக் குளு குளு இடத்தில் பின்னால் ஓடும்
அருவியின் சலசல சத்தம் காதில் ஒலிச்சுகிட்டே இருக்கு.




சீதையை பார்த்து கண்டேன் சீதையைன்னு அனுமன்
பரவசம் அடைந்து மரத்திலிருந்து குதிக்க அவருடைய
கால்தடங்கள் பதிந்த இடம் இங்கதான்.

கொஞ்சமா கீழே இறங்கிப்போனா கோவில் ப்ரகாரம். அனுமன்
காலடி பதிந்த இடமெல்லாம் வரும். இதான் கோவிலின் முகப்பு.

அனுமனின் காலடி பதிந்த இடம் இது:

ஃப்ளைட்டிலிருந்து இந்தியா இலங்கையை சேரும் அழகை பார்க்க
ரொம்பப்பிடிக்கும். நெட்டில் தேடிய பொழுது இந்தப் படம்
அந்த அழகை கண்முன் நிறுத்துது!!!


இராவண எல்ல என்று ஒரு நீர்வீழ்ச்சிக்கு பெயர். எல்ல என்றால்
நீர் வீழ்ச்சி. இராவணன் குகை Bandarawela, Senapitiya at Halagala, Ramboda, Labookelle, Wariyapola/Matale, and Sitakotuwa/Hasalaka. ஆகிய
இடங்களில் இருக்கு. இதில் பண்டாரவெல குகைக்கு அருகில் தான்
இராவணன் நீர்வீழ்ச்சி. அடர்ந்த மலைக்குள் இருந்து வரும் அருவியைப்
பார்ப்பதே சுகம்.



அடுத்த பதிவில் சிவன் கோவில்பத்தி பாப்போம்.

Wednesday, April 20, 2011

டீ குடிக்க வாரீகளா!!!

2001ல் போனப்பவே அயித்தான் கிட்ட சீதாதேவி வனவாசம் இருந்த
இடத்தைப் பாக்கணும்னு கேட்டேன். அது ரொம்ப தூரம் (4 மணிநேரப்
பயணம் தான்) போகணும்னு சொல்லிட்டாரு. அந்த ட்ரிப்ல ஒரு மாசம்
தான் கொழும்பில் இருந்தேன். தவிர அப்ப அதிகம் கர்ஃப்யூ இருந்தது.
கதிர்காமத்துக்கு ஆயிரம் கஷ்டப்பட்டு போனோம். கிளம்ப நினைச்ச
அன்னைக்கு முதல் நாள் பெட்டா பகுதியில் ஏதோ களேபரமாகி
அடுத்தநாள் ஊரடங்கு இல்லாட்டாத்தான் வெளியவே தலைகாட்ட முடியும்
எனும் நிலை!!!!

ரெசிடண்ட் விசா வந்து அங்கயே இருக்கப்போறன்னதும் திரும்ப ஜிவ்வுன்னு
சந்தோஷம்!! விட்ட இடத்தையெல்லாம் பாத்திடலாமே. இந்த வாட்டி
அயித்தான் விசாரிச்சு வெச்சு ட்ரிப் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.
ஆஹா நினைத்தாலே இனிக்கும்!! அப்படின்னு பாடத்தோணும் ஒரு
பயணம். நம்ம ஊட்டி மாதிரியான மலைப்ரதேசம் நுவரேலியா.
கொழும்பிலிருந்து 4 மணிநேரப்பயணத்தில் நுவரேலியா. போகும் வழியில்
இன்பயமான ஆச்சரியம். ரம்போட அனுமான் கோவில். சின்மயா மிஷன்
அவர்களின் கோவில் சுத்தமாக நிசப்தமான மலை உச்சியில். தரிசிக்காம
இருக்க முடியுமா. இறங்கி ஒரு கும்பிடு போட்டோம்.


st.clairs நீர்வீழ்ச்சி. நுவரேலியா போகும் வழியில் இரண்டு
நீர்வீழ்ச்சிகள் இருக்கும். st.clairs டீ ஃபேக்டரியோட டீஷாப்பில்
ஆனந்தமா டீ குடிக்க ரொம்ப பிடிக்கும்.

இப்ப இந்த நினைவுச்சின்னம் அங்கே இல்லை. இடிச்சிட்டாங்க.
வெறுமையான அந்த இடம் மனசை என்னவோ செய்யுது.


நுவரேலியா டீ ரொம்ப பேமஸ். தேயிலை எவ்வளவு உயரத்தில் விளையுதோ
அதோட ருசியும் அவ்வளவு ஜாஸ்தி. கண்டியைவிட அதிக உயரம் என்பதால்
நுவரேலியா டீயும் ருசி தான்.

இலங்கைக்கு போன புதுசுல அங்க இருக்கற டீயெல்லாம் வாங்க மாட்டேன்.
நமக்கு எப்பவும் வாஹ் தாஜ்! தான். அதனால இங்கேயிருந்து எடுத்துகிட்டு
போவேன். இப்ப அதே கதை உல்டா ஆகிடிச்சு. சிலோன் டீ என்னவோ
தங்கக்கலரில் சூப்பரா இருக்கும். ப்ளாக் டீ குடிக்க பழகினது அங்கேதான்.
என்ன ஒரு ருசி!!!!



தேயிலை தயாரிக்கும் இடத்துக்கு போகணும்னு ஆசை. வழியில்
Glenloch ஃபேக்டரி போனோம். இனிமையான உபசரிப்பு.



BOPF இதுதான் பெஸ்ட் வெரைட்டி. டஸ்ட் டீ வகையைவிட ருசியும்
கலரும் சூப்பரா இருக்கும்.


டீஃபேக்டரின்னு ஒரு ஹோட்டலே இருக்குத் தெரியுமா!!!
Aitken spence grup in இந்த ஹோட்டல் ரொம்ப பேமஸ்.
பழைய டீ பேக்டரி உருமாற்றி ஹோட்டலா ஆக்கியிருக்காங்க.
இந்த ஹோட்டலே விசித்ரம்னா அதுக்குள்ள இன்னொரு
விசித்ரமும் இருக்கு. என்னன்னு தெரியணுமா?
இங்க போய் பாருங்க.


இது ஹோட்டலின் உள்ளே!


பெஸ்ட் டீ வேணும்னா, அது இந்த ஹோட்டலில் தயாரிக்கப்படும்
டீ தான். ஏன்னு கேக்கறீங்களா? மலை உச்சியில் கிடைக்கும் டீ தான்
பெஸ்டுன்னு சொல்லிருந்தேன்ல. இந்த ஹோட்டல்தான் நுவரேலியாவின்
உச்சி. அங்கே விளைவிக்கப்படும் தேயிலை தான் டாப்!!!

சீதாதேவி வனவாசம் இருந்த இடத்தைப் பத்தி சொல்றேன்னு
டீ புராணம் சொல்ல ஆரம்பிச்சிட்டேனே!! என்ன செய்ய.
தேத்தண்ணியோட ருசியே ருசி. அதைப் பத்தி சொல்ல
ஆரம்பிக்க ட்ராக் எங்கயோ போயிடிச்சு.

சரி. சூடா டீ குடிச்சிட்டு வாங்க. அடுத்த பதிவுல கண்டிப்பா
சீதாதேவி வனவாசம் இருந்த இடத்தைப் பத்தி சொல்றேன்.

Friday, April 15, 2011

இராவணன் வசித்த இடம்.....

திரிகோணமலை,இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருக்கும் துறைமுக நகரம்.
முக்கோணமலையில் முக்கண்ணனை பூஜித்தான் இலங்கேஸ்வரன்
இராவணன்.

இப்போது இருக்கும் லிங்கம் இராவணன் பூஜித்தது இல்லை.
கோவத்தில் கோவிலுடன் ஒரு சின்ன மலையையும் வெட்டி
பக்கத்திலே இருக்கும் கடலில் போட்டுவிட்டாராம்!! ஏன் இந்த
கோபம்! யார் மேல கோவம்!! கொஞ்சம் புராணக்கதை
பார்க்கலாம்.
இதுதான் கோவிலின் முகப்பு. முகப்புக்கு கொஞ்சம்
முன்னால் புள்ளி மான்கள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது
இப்போது கண்ணுக்குள்ளேயே இருக்கு!! திரிகோணமலைக்கு
தக்சிண கைலாசம் (தென் கைலாயம்) என்று பெயர் உண்டு.


தற்போது இருக்கும் சிவலிங்கம்.

சிறந்த சிவ பக்தன். அதனால் தான் ஈஸ்வர பட்டம் பெற்றான் இராவணன்.
பார்வதிக்காக ஈசன் வடிவமைத்த இந்த இலங்கையை தனக்கு வேண்டி
இறைவனிடமிருந்து இராவணன் பெற்றதாகவும், அதனால் சினம் கொண்டு
அம்மை அந்த இடத்தில் நிம்மதி இல்லாமல் போகக்கடவதுன்னு சாபம்
இட்டதாலும் அதனால் தான் அங்கே அப்படி ஒரு சூழல் என்றும் சிலர்
சொல்லக் கேள்வி!! கைலயங்கிரியை தன் கட்டைவிரலால் தூக்கி
சிவனையே பயமுறுத்திய வீரன்.

அந்த சிவன் மீதே கோவம் ஏற்பட்டது. காரணம் இராவணனின் அன்னையார்
இறப்பு. என் தாய் இறக்கலாமா? என கோவப்பட்டு கோவிலை வெட்டி
தூக்கி எறிந்துவிட்டு, அதே அடங்காத கோவத்துடன் வாளால் வெட்டிய
இடங்கள் இன்றும் இராவணன் வெட்டு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அவை வெந்நீர் கிணறுகளாக மாறிவிட்டன. தன் அன்னைக்கு அங்கேதான்
அந்திமக்கிரியைகளைச் செய்ததாக வாயிலில் இருக்கும் பலகைச் சொல்கிறது.


கோவிலுக்கு பின்னாடி:


திரிகோணமலையில் கொழும்புவைப்போல வானிலை இருக்காது.
சென்னையைப்போல கொஞ்சம் கசகசவென இருக்கும். நிறைய்ய
தமிழ் பெயர்களை பலகைகளில் பார்க்கலாம். தமிழ் பேசும் மக்கள்
அதிகம் இருக்கும் இடம். நானறிந்த வகையில் இங்கே இருக்கும்
சில சிங்களர்கள் கூட சரளமாக தமிழ் பேசுவார்கள்.

துறைமுக நகரமாதலால் பேக்வாட்டர்ஸுடன் சில இடங்கள் அழகாக
இருக்கும். அதிலும் நிலாவெளி பீச். அங்கே கடலுக்குள் இரண்டு
கிமீ வரை நடந்து செல்லலாம். தவிர அந்த பீச்சின் மணல் வெள்ளை
நிறத்தில அழகாக இருக்கும்.

நாங்கள் தங்கியிருந்தது கிளப் ஓஷியானிக் ஹோட்டலில்.
சின்னச் சின்ன குடில்கள் போல இருந்த அறை ஒன்றை எடுத்து
தங்கியிருந்தோம்.



கொழும்பு நகரம் இலங்கையின் மேற்குப்பகுதியில் இருக்கிறது. அங்கே சூரிய
அஸ்தமனம் தான் பார்க்க முடியும். இங்கே சூரிய உதயம் அருமை.
கடல் அலைகளைப் பார்த்துக்கொண்டு, பிள்ளைகளுடன்
சூரிய உதயத்தை பார்தது என ரொம்ப ரசித்தோம். 2004ல் ஏற்பட்ட
சுனாமியில் நாங்கள் தங்கியிருந்த குடில்கள் சேதமடைந்தன
என தெரிந்த பொழுது செம ஷாக்!!!!!

திரிகோணமலையை தரிசித்து கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த
பொழுதுதான் என் தோழி அண்ணபூர்ணா போன் செய்து தாங்கள்
குழுவினராக ஜாஃப்னா செல்லப்போவதாக சொல்லி எங்களையும்
அழைத்தார்! அப்பொழுத்தான் நெடுந்தூரப் பயணம் முடித்து
களைப்புடன் இருந்ததாலும், அயித்தானுக்கு உடன் வெளிநாடு
செல்லும் வேலை இருந்ததாலும் தவற விட்ட ஜாஃனா பயணம்
அங்கேயிருந்து கிளம்பும் வரை ஏற்படாமலேயே போய்விட்டது!!!

மனதில் ஓரத்தில் இருக்கும் ஒரே குறை நல்லூர்க் கந்தனை
தரிசிக்கும் நந்நாள் எந்நாளோ!! என்பதுதான். நான் மட்டும்
விரும்பி புண்ணியமில்லையே. தரிசனம் தர அவனுக்கும்
மனம் வேண்டுமே!! இப்பொழுது ஜாஃப்னா செல்ல முடியுமாம்.
பார்ப்போம்.

இராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் போன இடம், சீதா வனவாசம்
இருந்த இடம் இதெல்லாம் பத்தி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

Wednesday, April 13, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மைகளையும்
அளித்து ஆனந்தமானதொரு ஆண்டாக மலர பிரார்த்திக்கிறேன்.




அண்ணபூர்ணாவின் மகளைப்போல இந்த நேரத்தில் இலங்கையில்
இல்லையே என்ற வருத்தம் எங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு.
சுதர்ஷிணி பார்சல் அனுப்பி வெச்சா நல்லா இருக்கும். :))




எங்கள் குடும்பத்தினர் சார்பாக அனைவருக்கும் இதயம் கனிந்த
தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் பெயர்
”கர”. இனிதாக அமைய ஆண்டவன் அருள் புரிவானாக.




ஹபரானா....... ஆனந்தம்

த்ரிலோக சஞ்சாரி மாதிரி அயித்தான் ஊர் ஊரா சுத்திகிட்டு இருப்பாரு.
ஆனா அவரோட அதிகமா சுத்தினதில்லை. ஆபிஸ் வேலையா போகும்பொழுது
நாமும் போனா அவருக்கு தொந்திரவா இருக்கலாம் என்பதால்தான் இப்படி.
இல்லாட்டி நிறைய்ய இடங்கள் பாத்திருக்கலாம்:(

தொடர்ந்தாப்ல ரொம்பவே டூர் போய்க்கிட்டு இருந்த ஒரு சமயம்,
பசங்களுக்கும் விடுமுறையா இருக்க, திரும்ப வந்த உடனும்
வெளிநாடு போவதால எங்களையும் தன்னுடன் ஹபரானா அழைத்துச் சென்றார்.
அநுராதபுரத்தில் இருக்கும் ஓர் ஊர் ஹபரானா. அங்கே cinnamon hotelsன்
THE LODGE ஹோட்டலில் தங்கினோம். பேர் தான் லாட்ஜ். ஆனா சூப்பர்
ஹோட்டல். சுத்தியும் பசுமை... பசுமையே!!
ரூம் இப்படித்தான் இருக்கும்.



கொழும்புவிலிருந்து 6 மணிநேரத்தில் ஹபரானா. ரோட் சும்மா சூப்பரா
இருக்கும். எங்களை ரூமில் விட்டுட்டு அவரு தன் வேலையை பார்க்க
போயிட்டாரு. வீட்டு வராண்டா மாதிரி இருக்கும் ரூம் வாசலில்
சேர் போட்டு நான் பசங்களோட கதை பேசிகிட்டு இருந்தோம். அப்போ
எங்களுக்கு எதிரில சும்மா சர்வ சாதாரணமா நடந்து போய்க்கிட்டு
இருந்தது உடும்பு!!!!! ஆஷிஷ்க்கு அதை பள்ளி மாணவர்களோடு
சேர்ந்து சிங்கள பெயரில் தான் தெரியும். கப்பரகோயானாம்!!
அம்ருதா அப்ப ரொம்பவே சின்னது என்பதால கெட்டியா
பிடிச்சுகிட்டு அண்ணாகிட்ட விவரம் கேட்டுகிட்டு இருந்தாப்ல.
அண்ணா ஸ்கூல் பக்கம் அப்பப்போ வரும்!!!!

ஹபரானாவில் இன்னொரு விஷயம் ரொம்ப பிடிச்சது Elephant safari.
இலங்கையில் யானை பார்த்து தீராது. அவ்வளவு இருக்கும். இங்கே
காட்டுக்குள்ள ஜீப்ல போய் யானையை பார்ப்பது செம த்ரில்.
சரின்னு போணோம். வழியிலேயே தென்படும்னு டிரைவர் சொன்னாரு.
ம்ஹூம்... நம்ம நேரம்!!! கொஞ்சம் உள்ளே போனதும் தண்ணி
குடிக்க சின்ன ஓடைகிட்ட இருந்த யானைகளைப் பார்த்து பசங்களுக்கு
செம குஷி.




ஹபரானா வரை வந்திட்டோம். அங்கேயிருந்து கிட்டத்தான் திரிகோணமலை.
வந்தது வந்தோம் கோணேஸ்வரரை தரிசனம் செஞ்சிடலாம்னு சொல்லி
அயித்தான் அடுத்த நாள் லீவு போட்டு அங்கே கூட்டிகிட்டு போனாரு.
அடிச்சது லக்குன்னு ஜாலியா இருந்தது.

ஹபரானாலேர்ந்து திரிகோணமலைக்கு 1 மணிநேரத்துல போயிடலாம்.
அந்தப் பாதை காட்டுப்பாதை!!! அங்கங்கே யானைகளின் படம் வெச்சு
”நிதானமா போங்க, நீங்க உபயோகிச்சுகிட்டு இருப்பது அவர்களின்
வழக்கமான பாதைன்னு!”” எச்சரிக்கைல்லாம் இருந்தது. எங்க
வண்டிக்கு முன்னாடியும் பின்னாடியும் கண்ணுக்கு எட்டின தூரம் வரை
வேற வண்டிகளும் இல்லை. கொஞ்சம் பக்குன்னு தான் இருந்துச்சு.
கொஞ்ச தூரம் போயிருப்போம். சலசலன்னு சத்தம் கேட்டு அயித்தான்
வண்டியை அப்படியே நிப்பாடினாங்க!!! பாத்தா!!!!!!!!
தப தபன்னு சின்னதும் பெரியதுமா 25க்கும் மேற்பட்ட யானைகள்!!!!

வலது பக்கத்துலேர்ந்து இடது பக்கத்துக்கு போய்க்கிட்டு இருந்துச்சு.
அப்ப கார்ல இருந்த ரேடியோவுல என்ன பாட்டுங்கறீங்க!!
“அப்படிப்போடு.... போடு... அசத்திப்போடு” யெஸ்ஸு கில்லி
பாட்டு!! :)) மெல்ல வால்யுமையும் குறைச்சாரு அயித்தான்.
ஒரு சின்ன யானை நின்னு திரும்பி பார்க்க....... அதை கூப்பிட
இன்னொரு பெரிய யானையும் திரும்ப வற காரை ரிவேஸ் எடுக்க
ரெடியானாரு அயித்தான். கூட்டமா போனா பிரச்சனையில்லையாம்.
தனியானைக்கிட்ட மாட்டினோம் அம்புட்டுத்தான். நல்லவேளை.
சின்ன யானை கூட்டத்தோட சேர ஓட, பெரிய யானையும்
அதோட போயிடிச்சு.

சிச்சுவேசனுக்கு தகுந்த பாட்டுன்னு அம்ருதா கமெண்ட் அடிக்க,
ஆஷிஷோட கமெண்ட்,”நேத்து காசு கொடுத்து பாக்கப்போனாக்க
கொஞ்சமே கொஞ்சம் யானை இருந்துச்சு. ஆனா இங்க ஃப்ரியா
ஒரு கூட்டமே பாத்தோம்ல!!!””

யானைப்பாகனோட நடந்து வரும் யானையைப் பார்ப்பது ஒரு
சுகம்னா, காட்டுல கூட்டமா யானைப் பார்ப்பதும் சுகம்.
இலங்கையில் நிறைய்ய இடங்களில் இந்த மாதிரி பார்க்க
கிடைக்கும். கதிர்காமம் போகும் பொழுது கூட உடவளவுல
காசு போட்டு பாக்க கூட்டமா வந்திருப்பங்களுக்கு தண்ணி
காட்டிட்டு காட்டுப்பகுதியில் மின்வேலிக்கிட்ட வந்து காத்திருக்கும்.

நாளை திரிகோணமலைப் பயணத்தை பத்தி சொல்றேன்.

Monday, April 11, 2011

பாஹி ராமப்ரபோ.... பாஹி ராமப்ரபோ...

ஸ்ரீராம கானாம்ருதங்கள் சில.

ஸ்ரீராமதாஸ் படத்தில் அருமையான பாடல்: அந்தா ராம மயம். ஜகமந்த ராமமயம்




மானச சஞ்சரரே!!!




ப்ரோச்சேவாரெவருரா!!! ரகுவரா...



கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில் வெளிவந்த சுவாதி முத்தியம் தமிழில்
சிப்பிக்குள் முத்து படத்தில் இந்தப் பாடல் பத்ராசலத்தில் படமாக்கப்பட்டது.


என் பிள்ளைகள் கற்றுக்கொள்ள எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.
குரங்கை கூட ஞானியாக்கும் உன் நாமம் என்பது எவ்வளவு சரி.
ஜயது ஜயது மந்த்ரம்!!! ஜன்ம சாபல்ய மந்த்ரம்


நா தரமா!! பவ சாகர மீதனு நளின தளேக்‌ஷன ராமா!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin



திக்...திக்... காட்டுக்குள்ளே!!!!

ஏழு வருஷத்துக்கு முன்னாடி நடந்த இந்தக் கதை இப்பவும்
நினைச்சுப்பாத்தா திக்.. திக்..தான்.

அழகான ஞாயிற்றுகிழமையில் அர்த்தராத்திரி!! 6.30 மணிக்கு
போன் அடிச்சிச்சு. எந்திரிச்சு போய் எடுக்கக்கூட யாரும் தயாரில்லை!
மொதோ நா ராத்திரி சினிமா பாத்துட்டு தூங்கப்போகையில மணி1!!

விடாம அடிச்சுகிட்டிருந்த போனை வேற வழியில்லாம எடுக்கப்போனேன்.
போனில் என் தோழி தான்.” இன்னைக்கு ஜாலியா!! வெளியில
சுத்தப் போகலாமா!”ன்னு கேட்க எங்க? என்னன்னு விசாரிச்சுகிட்டோம்.
அயித்தான் கிட்ட நான் மேட்டரைச் சொல்ல, அவரு என் தோழியோட
கணவர்கிட்ட டீடெயில்ஸ் கேட்டு சரி போயிட்டு தான் வரலாமேன்னு
முடிவாச்சு!! அவங்க அவங்க காரில் பயணம். ஆஷிஷ், அம்ருதாவுக்கு
ஜாலி. அவங்க ஃப்ரெண்ட் பானுவும் தேஜுவும் வர்றாங்களே!!


”ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு”! என்னை தோழி
அண்ணபூர்ணா கூப்பிட்டாங்க. வெளிநாட்டுல இருக்கும்பொழுது
நட்புக்கள்தான் உறவினர். அந்த வகையில நிறைய்ய சொந்தங்கள்
இருந்தாலும் அண்ணபூர்ணா, தாஜ் விஜி மேடம் இவங்க நெருங்கிய
சொந்தங்கள் போல. நாம மட்டும் போறமே! எப்பவும் ஹோட்டல்லையே
இருக்காங்களேன்னு மேடத்துக்கு போன் போட்டு மேட்டரைச் சொன்னேன்.
அவங்களும், அவங்க மகளும் ரெடியா இருந்தாங்க. “ நீங்க ஊர் சுத்திட்டு
வாங்க, நான் நல்லா தூங்கறேன்னு!!!” அவங்க மகன் டிக்ளேர் செஞ்சிட்டு
முக்காடு போட்டு தூங்க ஆரம்பிச்சிட்டாரு. “வருதா பாரு!!”ன்னு
புலம்பிக்கிட்டு மேடம் எங்க கூட வந்தாங்க.

மதிய சாப்பாட்டுக்கு நானும் அண்ணபூர்ணாவும் ஆளுக்கொண்ணு
செஞ்சு எடுத்து பேக் செஞ்சுகிட்டோம். மேடம் ஹோட்டலில்
கேக் ஆர்டர் செஞ்சு அதைக் கொண்டு வந்திருந்தாங்க. டெசர்ட்
இல்லாமலா!! கண்டிப்பா ஷூ போட்டுக்கோங்கன்னு அண்ணபூர்ணா
சொல்லியிருக்க எல்லோரும் ரெடி. அவங்களும் வந்ததும் கிளம்பினோம்.



கொழும்பிலிருந்து சபுர்காமவ மாவட்டத்தில் இருக்கும் Rain forest.
அங்க தான் போக திட்டம். 10 நாளைக்கு முன்னாடி பெய்த
மழையில சாலை சரியில்லைன்னு சொன்னாங்க. ஆனா இப்ப
சரியாகிருக்கலாம்னு ஒரு நம்பிக்கையில் கிளம்பிட்டோம். இலங்கையில்
எங்கே சுத்தினாலும் கண்ணுக்கு குளிர்ச்சியா அந்தப் பச்சை பசேல்...
சூப்பரா இருக்கும். சாலையின் இரண்டு பக்கமும் பச்சை பசேல்.
இரண்டு மணிநேரத்தில் வனப்பகுதிக்கு கிட்ட வந்திட்டோம். எங்களுக்கு
முன்னாடி அண்ணபூர்னா கார் போய்க்கிட்டு இருந்தது நின்னுடிச்சு!!!

என்ன ஆச்சுன்னு புரியலை!! அயித்தான் காரை ஓரமா நிப்பாட்டிட்டு
என்னன்னு விசாரிக்க போனவரும் ஷாக் ஆகிட்டாரு!! ஒண்ணுமில்லை
10 நிமிஷ பயணத்தில் வனப்பகுதி ஆரம்பம் வந்திடும். ஆனா அது
கொஞ்சம் மலைப் பிரதேசம். அந்த இடம் போகும் பாதை மழையால
பாதிக்கப்பட்டு ஒவ்வொரு கல்லும் ஷார்ப்பா நிக்குது!!!! டயர்
பஞ்சராகக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதனால எல்லோரும்
இறங்கி நடந்து வந்திடுங்க. வண்டியை மட்டும் ஓட்டிகிட்டு
வந்திடுவோம்னு சொல்ல. தத்தக்கபித்தக்கான்னு நடந்து டிக்கெட்
கொடுக்கும் இடத்தை சேர்ந்து உக்காந்திட்டோம். அண்ணபூர்னாவின்
கணவருக்கோ பக் பக்குங்குது. டயர் போச்சுன்னா ஒவ்வொரு டயரும்
இலங்கை மதிப்பில் 50,000...” ஒவ்வொரு கல்லுமே எனக்கு
50,000 தெரியுதுன்னு!!”” கமெண்ட் அடிச்சுகிட்டு பயப்பட்டு வண்டி
ஓட்டிகிட்டு வந்தாரு. சொந்த வண்டியாச்சே!!! நமக்கு அப்படி இல்ல.
rent a car. அதனால அயித்தான் ஜாக்கிரதையா பாத்து ஒட்டிகிட்டு
வந்து நிப்பாட்டிட்டாரு. இவரு வண்டி ஓட்டினதை பார்த்ததும் அவருக்கும்
தெகிர்யம் வந்து எப்படியோ மெல்ல டயருக்கு சேதாரமில்லாம வந்து
சேர்ந்து அப்பாடான்னு பெரு மூச்சு விட்டாரு!!



21 கிமீ பரப்பளவில் தான் இந்தக் காடு இருக்குன்னாலும், அடர்த்தி அதிகம்.
அதனால அவ்வளவு எளிதில் விலங்குகளை பார்த்து விட முடியாது.
டிக்கெட் வாங்கிகிட்டு உள்ளே நுழைஞ்சோம். கொஞ்ச நேரத்துல
“ஆஆ...னு” அலறல். தேஜு (அண்ணபூர்னாவின் சின்ன மகள்)
குரல் மாதிரி இருக்குன்னு பின்னாடி மெல்ல வந்துகிட்டு இருந்த
என் மக சொல்ல.... அடுத்த அடி எடுத்து வைக்க பயமா இருந்துச்சு.
காரணம் ஆஷிஷும் கத்த ஆரம்பிச்சாச்சு. தேஜு கத்தினதுக்காக
கத்தலை. ஆனா அதே காரணம்!! :)) லீச்சஸ் காலில் இருந்து
ரத்தம் எடுக்க ஆரம்பிச்சிருந்தது. ஷூவுக்குள் நுழைந்த மர்மம்
என்னன்னு யோசிச்சுகிட்டே மெல்ல கட்டையால அடிச்சு கீழே
தள்ள... அடுத்து ஒவ்வொருதரும் ரத்த தானம் தர ஆரம்பிச்சாச்சு.
ஆ... ஊ... அம்மான்னு அலறல்கள் தான். சின்னப்பசங்க தானே!
ரொம்பவே பயந்து போயிருந்தாங்க. பெரியவங்க எங்களுக்கும்
பதட்டமாத்தான் இருந்தது. வனப்பகுதியில் இருந்த குளிர்ச்சியை
அனுபவிக்ககூட முடியலை. எதிரில் கொஞ்சம் மக்கள் வந்து
கிட்டிருந்ததைப் பார்த்து கொஞ்சம் மனசுக்கு தெம்பாகி நடந்தோம்.


ஒரு 4 கிமீ உள்ளே நடந்திருப்போம்... அங்கேயிருந்து மேலே
ஏறிப்போய் பாக்கலாம்னு அண்ணபூர்ணா சொன்னாங்க. நான்
வரலைப்பான்னு அங்கேயே பத்திரமா ஒரு இடம் பாத்து
உக்காந்திட்டேன். ஆஷிஷும், அம்ருதாவும் போட்டோ எடுக்கணும்னு
சொல்ல அயித்தான் கொஞ்சம் முன்னாடி போயிருந்தாரு. அந்த
நேரத்துல ஒரு காட்டுக்குரங்கின் சத்தம்!!!!!!!!!!!! அப்படியே
உறைஞ்சு போயிட்டோம். பசங்க அப்பாவை அப்படியே கட்டிகிட்டு
சப்த நாடியும் அடங்கினா மாதிரி ஆகிட்டாங்க. 2 குரங்குகளுக்கிடையே
சண்டை வேற!!!! வேணாம்பா போயிடலாம்னு சொல்லி கிளம்ப
ஆரம்பிச்சிட்டேன்.

அண்ணபூர்ணா வீட்டில் அடிக்கடி பாம்பு வரும். அது படம் எடுக்க
இவங்க அதை படம் எடுத்துகிட்டு இருப்பாங்க. கொஞ்சம் தெகிரியமான
ஆளு. சுத்தி பாக்கலாம்னு அவங்க சொல்ல. “நா மாட்டேன்னு
அவங்க பொண்ணுங்களும்” சேர்ந்துக்க பாதி வழி கூட போகாம
திரும்ப வந்திட்டோம். காட்டுக்குள்ள நடந்து போனது செம த்ரில்.
தண்ணீர் பாம்பு மட்டும் தான் பார்த்தோம்.

மழைநேரத்துல எங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கும் தோட்டத்தில்
கீரிச்சண்டை நடக்கும்!!! க்ரில் கேட்டுக்குள் புகுந்து வந்து
சண்டைப்போடும். அடுத்த நாள் அனேகமாக அங்கே ஏதாவது
ஒரு வகை நாகராஜாவின் தோல் கிடக்கும்!!!! நம்ம வீடே
ஒரு ரெயின் ஃபாரஸ்தான்னு ஆஷிஷ் கமெண்ட் அடிக்க,
மறுபடியும் சில லீச்சஸ்களுக்கு ரத்த தானம் செஞ்சுகிட்டே
மெல்ல வெளியே கார் பார்க் ஏரியாவுக்கு வந்த பிறகுதான்
எங்க முகத்தில் ஒரு நிம்மதி!!!

அதக்கப்புறம் கொண்டு போயிருந்த சாப்பாட்டை நல்லா
ஃபுல் கட்டு கிட்டிட்டு, கேக்கையும் சாப்பிட்டு நடக்க
ஆரம்பிச்சோம். அந்த கல்லு துருத்திக்கிட்டு இருக்கும்
நடந்து கடந்து மெயின் ரோட்டில் வந்து காரில் ஏறினோம்.
அழகா தூங்கிக் கழிச்சிருக்க வேண்டிய ஞாயிற்றுக்கிழமை
இப்படி இரத்ததானம் செய்றாப்ல! ஆகிடிச்சேன்னு ஆரம்பத்துல
நினைச்சாலும்..... சின்ஹராஜா ரெயின் ஃபாரஸ்டுக்கு
நாங்களும் போயிட்டு வந்தோம்லன்னு பெருமை படக்கூடிய
விஷயமா இருந்தது.

விஜி மேடம் ஹோட்டலுக்கு போய் ரத்தம் வடிந்த இடங்களை
தொடைச்சு, மருந்து போட்டுக்கிட்டு இருக்க அவங்க மகன்,
“ஹெ ஹெ”ன்னு ஒரே சிரிப்பாம். அவரு தப்பிச்சிட்டாராம்!!!
அதற்கப்புறம் நாங்க எல்லோரும் சந்திக்கும் பொழுதெல்லாம்
இதைப் பத்தி கண்டிப்பா பேசிக்கிட்டோம்.

அப்புறமாத்தான் ஒரு மேட்டர் தெரிஞ்சது. அந்த காட்டுக்குள்ள
3 யானைகளும், 15 சிறுத்தைகளும் இருக்காம்!!! ரொம்ப
அபூர்வமா அது வெளிப்படுமாம்.....
கந்தன் தான் காப்பாத்திருக்கான்.

சின்ஹராஜா வலைத்தளம்

Thursday, April 07, 2011

கற்றல் இனிமை ஆகிறது!!!

”பாட்டோட ட்யூன் ஆரம்பிச்சதும் எப்படித்தான் அந்தப் பாட்டை
சரியா பாடுறீங்களோ!! அதே மாதிரி யாராவது பாடத்தையும்
ட்யூன் போட்டுக்கொடுத்தா வசதியா இருக்கும் உங்களுக்குன்னு”
எங்க கண்ணகி டீச்சர் அடிக்கடி சொல்வாங்க. மனப்பாடம்
செய்யணும்னா கஷ்டமா இருக்கும். அதுக்கு பதில் அதையே
காதால கேட்டா எவ்வளவு ஈசியா மனசுல பதியும்.

ஆஷிஷுக்கு இங்கே வந்த புதிதில் ஹிந்தி பாடங்களை
(கேள்வி, பதில்களை)டேப்ரெக்கார்டரில் ரெக்கார்ட்
செய்து கேட்க வைத்து மனதில் பதிய வைத்திருக்கிறேன்.

IIT/IIM Alumniகளான Ram Gollamudi,Prasanna Boni,
Sravan Narasipuram,Ramesh Karra இந்த நான்கு நண்பர்களும்
சேர்ந்து கல்வி கற்பதை இனிதாக ஆக்கியிருக்கிறார்கள்.
இந்த நால்வர்க்குழு சேர்ந்து ஒரு கருவியை கண்டு பிடித்திருக்கிறார்கள்.


இதுதான் அந்தக் கருவி. பெயர் EDUTOR. தற்போது CBSC பாடத்திட்டதில்
உள்ள பாடங்களை கற்கும் வகையில் தயார் செய்திருக்கும் இவர்கள்
ஸ்டேட் போர்ட் மற்றி ஐசிசி பாடத்திட்டங்களையும் தயாரிக்கும் முயற்சியில்
இருக்கிறார்கள். பள்ளிகளில் கலந்து பேசி பாடத்திட்டங்களை எளிதாக
புரியும் வண்ணம் தயாரித்திருக்கிறார்கள்.

ஆப்பிள் என்று சொல்லிக்கொண்டிருப்பதை விட ஆப்பிளையோ,
ஆப்பிளின் படத்தையோ காட்டி சொல்லிக்கொடுக்கும் பொழுது மனதில்
இலகுவாக பதியும். இந்த முறைதான் இவர்கள் பின்பற்றுவது.
இந்த வீடியோவை பாருங்கள். ஐ போன் போலிருக்கும் இந்தச்
சாதனம் எப்படி எல்லாம் உதவுகிறது என்பது புரியும்.


பாடங்களை எளிதாக புரியும் வகையில் அனிமேஷன் செய்து
வழங்குவதால் பிள்ளைகள் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு கேட்ஜட் வாங்கி அதை 2 பிள்ளைகளின் பாடத்திட்டத்தை
படிக்கும் படி செய்ய முடியும்.
தற்போது ஹைதையில் மட்டும் கிடைக்கும் இந்த EDUTOR
விரைவில் சென்னை போன்ற பிற நகரங்களில் கிடைக்குமாம்.

சரி இந்த சாதனத்தில் ஒரு டெமோ பார்க்கலாமா!!
இங்கே சென்று பாருங்களேன்.......


இவர்களை தொடர்பு கொள்ள:

இந்த EDUTORன் விலை 6400. அறிமுக விலையாக 5000ற்கு
கொடுக்கிறார்கள். பாடத்திட்டம் கொண்ட மெமரி சிப் 1400.
ஒவ்வொரு வருடமும் பாடத்திட்டத்திற்கு ஏற்ப புதிது
வாங்கிக்கொள்ளலாம்.
பள்ளிகளும் நிர்வாகிகளும் இந்த நல்ல சாதனத்தை
பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தினால் கற்பது என்பது
இனி கடினமாக இருக்காது.


Wednesday, April 06, 2011

இளைச்சவங்களுக்கு மட்டுமில்ல.........

அதென்னமோ தெரியலை. அப்படி ஒரு இளக்காரம். இல்லாடி
ஒரு பயம். சிலருக்கோ பிடிக்காது. அதனால இதை அதிகமா
உபயோகப்படுத்தவும் மாட்டாங்க. அப்படியே செஞ்சாலும்
பித்ரு காரியங்கள் எனப்படும் திவசம் அன்னைக்குத்தான் செய்வாங்க.
ஆனா இதுல இருக்கும் நலன்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டா நீங்களும்
கண்டிப்பா உணவுல சேத்துக்குவீங்க.

இந்த எள்ளைத் தாங்க சொல்றேன். கடலை உருண்டை சாப்பிடுவாங்க,
ஆனா எள்ளுருண்டைக்கு “நோ!”நோ”! தான். இதுல இன்னொரு
மேட்டரும் சொல்வாங்க யார் வீட்டுலயாவது எள்ளுருண்டை அல்லது
எள் சம்பந்த பட்டது சாப்பிட்டா அவங்களுக்கு நாம வேலை செஞ்சுக்
கொடுக்கணும். இதெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு பலர் எள்ளை
தொடுவதே இல்லை.

தீவளிக்கு தீவளியாவது எண்ணெய் தேச்சு குளிக்கும் பொழுது
உபயோகிக்கப்படுவது நல்லெண்ணெய் தான். இதுலதான் மஹாலட்சுமி
இருப்பதாக புராணம் சொல்வது. நெய்க்கு அடுத்து பூஜைக்கு பயன்படுவது
நல்லெண்ணெய் தான். ஆயுர்வேதத்தில் எள்ளு மிகச் சிறப்பான இடம் இருக்கும்.
நல்லெண்ணையை தேய்த்து, மசாஜ் செய்து குளிப்பதால்
உடல் சூடு தணியும்.



சாம்பார் செய்யும் பொழுது ரீஃபைண்ட் ஆயில் உபயோகித்து தாளிப்பதற்கு
பதில் நல்லெண்ணெயில் தாளிதம் செய்தால்.... சாம்பார் வாசம்
வீசும். காரக்குழம்பு, வத்தக்குழம்பு, வெந்தயக்குழம்பு இதெல்லாம்
சாப்பிடும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டால் நல்ல ருசி + உடலுக்கும்
நல்லது. சுடச்சுட இட்லி அதன் மேல ஜோதிகா மாதிரி இல்லாட்டியும்
1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டா...... உடலுக்கும் நல்லது,
நாவுக்கும் நல்லா இருக்கும்.

வயிற்றுப்புண் அல்லது வாய்ப்புண் இருந்தால் முதல் கவளமாக
சூடான சோற்றில் நல்லெண்ணெய் + கொஞ்சம் உப்பு சேர்த்து பிசைந்து
சாப்பிட சரியாகும். ஊறுகாய்களுக்கும் நல்லெண்ணெய் தான் பெஸ்ட்.
எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய்க்கு இவ்வளவு மருத்துவ
குணம் இருக்கும் பொழுது மூலமான எள்ளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும்.

ஆனா இளைச்சவங்களுக்கு எள்ளு, கொளுத்தவங்களுக்கு கொள்ளுன்னு
வசனம் சொல்லிட்டு எள்ளை தவிர்த்திடுவோம். கொள்ளையும் சாப்பிட
மாட்டோம். (குதிரைக்குத் தானே கொள்ளுன்னு சிலர் கிண்டல் செய்வாங்க)



எள்ளில் இரும்பு, மங்கனீசியம், காப்பர், கேல்சியம் ஆகிய சத்துக்கள்
இருக்கின்றன. விட்டமின் பி1, விட்டமின் இ ஆகியவையும் அடங்கி
இருக்கு. மூர்த்தி சிருசுன்னாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்றாப்ல
இந்தச் சின்ன வித்துக்குள் எவ்வளவு சக்தி கிடைக்குது பாருங்க.
எள்ளு கசப்பா இருக்கும் என்பதால பலர் அதை சாப்பிட மாட்டாங்க.
வெல்லம் சேர்த்து உருண்டை செய்யலாம். காரப்பொடி மாதிரி
செஞ்சு காய்கறில தூவி பிரட்டி எடுத்தா சுவையா இருக்கும்.
இட்லிப்பொடி செய்யும் போது அதுல சேத்துக்கலாம். திருநெல்வேலி
இட்லிப்பொடி சாப்பிட்டிருக்கீங்களா? எள்ளு வாசனையோட சூப்பரா
இருக்கும்.



பூப்படையும் பருவத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு எள்ளை
உணவில் சேர்த்துக்கொடுப்பதால நல்ல பலன் இருக்கும். பெண்களிலிருந்து
எல்லோரும் தினமும் இரண்டு உருண்டை சாப்பிடுவதால் (எள்ளு+ வெல்லம்
சேர்த்தது) உடம்புக்குத் தேவையான கால்சியம், இரும்புச்சத்து
சேர்ந்திடுது. ஆண்களுக்கும் கொடுக்கலாம். தவறே இல்லை.
கேன்சரை தடுக்கும் காரணிகள் எள்ளில் இருக்கு. கறுப்பு எள்ளு +
வெள்ளை எள்ளு இரண்டையும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்து
உட்கொண்டால் ரொம்பவும் நல்லது.

பெண்மையின் அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எள்ளு ஆண்மைக்கு
வளத்தையும், எனர்ஜியையும் தருகிறதுன்னு மருத்துவர்கள்
சொல்றாங்க.


மேலை நாடுகளில் ப்ரட்டில் எள்ளு போடுவார்கள். மெக்டொனால்ட்
ப்ரட்டில் பார்க்கலாம். நம் நாட்டில் மட்டுமில்லாமல் மேலை நாடுகளில்
கூட எள் சர்வ சாதரணமாக உபயோகிக்கப்படுகிறது.


இனியாவது எள்ளை உணவில் சேர்த்துக்கொள்வோம், ஆரோக்கியமான
வாழ்க்கை வாழ்வோம்.


Tuesday, April 05, 2011

இந்தத் தொல்லை எப்போது போகும்??!!!

எங்க அவ்வா ஒரு வசனம் சொல்வாங்க. என்ன அவ்வா! இப்படியா
நடந்துக்குவாங்கன்னு? கேப்பேன். அவங்க சொல்வதுல இருக்கும் அர்த்தம்
வளர வளர புரிஞ்சது. அவ்வா சொல்லும் வசனம் வந்த அன்னைக்கு
வாழை இலை, மறுநாள் தையலை, அடுத்த நாள் கையில!!!

விருந்தாளியாப்போனா மொதோ நாளு ராஜஉபசாரம் நடக்கும்.
தலைவாழை இலைப்போட்டு சாப்பாடு. அதான் வந்த அன்னைக்கு
வாழை இலை. மக்கா நாள் தையல் இலையில சாப்பாடு. மூணாம்
நாளு கையில தானாம். விருந்தாளியா போறவங்களுக்கும் ஒரு
வரைமுறையோட நடந்துக்கத் தெரியணும். அது இல்லாட்டி
ரொம்ப கஷ்டம்.

நான் 8த் படிச்சுகிட்டு இருந்த பொழுது எங்க வீட்டுக்கு ஒரு உறவினர்
வந்திருந்தாரு. அவ்வாவுக்கு தூரத்துல தம்பி சொந்தம். வந்தவங்களை
உபசரிப்பதுதானே நம்ம பண்பாடு!! அன்னைக்குத்தான் அவ்வா
மாவாட்டி வெச்சிருந்தாங்க. அதிகம் புளிப்பில்லாத மாவு. இட்லி
சும்மா பஞ்சு மாதிரி இருந்துச்சு. எங்களுக்கு 1 ஈடு அதாவது 24 இட்லி
போதும்னு அவ்வா ஊத்தி இறக்கிகிட்டு இருக்கும் பொழுதுதான் இந்த
உறவினர் வந்தாரு!! வந்தவங்களுக்கும் சேர்த்து இருக்கட்டும்னு
அவ்வா அந்த இட்லியை எடுத்து அடுத்து ஒரு ஈடு அடுப்பில
ஏத்தினாங்க. கையோட நல்ல டிகிரி காப்பி போட்டு கொடுத்தாங்க.
குடிச்சிட்டு பேசிக்கிட்டு இருக்கும்பொழுது அம்மாவும் அப்பாவும்
வேலையிலேர்ந்து வந்தாங்க.

சாப்பிடலாமான்னு!! கேக்க தட்ட வெக்கும் முன்னாடி அம்மாவுக்கு
என்னவோ தோணி எதுக்கும் இருக்கட்டும்னு இன்னொரு ஈடு
அடுப்புல வெச்சாங்க. எதுக்கு வெக்கறன்னு அவ்வா அம்மாவை
வைய்ய, தேங்காய்ச் சட்னி அரைச்சுகிட்டு இருந்தேன். அவ்வாவேற
அன்னைக்கு மதியம் தான் ஒரு கிலோ ஹார்லிக்ஸ் பாட்டிலில்
இட்லி பொடி செஞ்சுவெச்சிருந்தாங்க! சாப்பிட தட்டு வெச்சாச்சு.
சூடான இட்லி தொட்டுக்க, தேங்காய்ச்சட்னி, காரசாரமான
இட்லிப்பொடி எல்லாம் இருந்தா கூட இரண்டு இட்லி சாப்பிடத்தோணும்.


வந்தவரு நீயும் போட்டுக்க ரமணின்னு!! சொல்லி அப்பாவுக்கு
பரிமாறிட்டு தானும் சாப்பிட ஆரம்பிச்சாரு. அப்பா,தம்பி வந்தவரு
3 பேரும் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. வந்தவரு அன்னைக்கு
சாப்பிட்டது 48 இட்லி!!!! தம்பி தான் உக்காந்து எண்ணிக்கிட்டு
இருந்தான். தன்னைத் திட்டின அவ்வாவை அம்மா இப்ப பாத்த
பார்வை சூப்பர்!! அவங்க மட்டும் இன்னொரு ஈடு ஊத்தி
வெச்சிருக்காட்டி சாப்பிட இன்னும் காத்திருந்திருக்க வேண்டி இருந்திருக்கும்!!
1 கிலோ ஹார்லிக்ஸ் பாட்டிலில் வெச்சிருந்த இட்லிப்பொடி பாதி
பாட்டில் காலி.” சும்மா சொல்லக்கூடாது! நல்லா செஞ்சிருக்கக்கா”ன்னு
அவ்வாவுக்கு பாராட்டு வேற.


அரைச்சு வெச்சிருந்த மாவு அரைபக்கட் ஒரே நாளில் காலி!!
ஒரு வாரத்துக்காவது வரக்கூடிய மாவு அது! அவ்வாவுக்கும்
ரொம்ப வேலை செய்ய முடியாது. அம்மாவும் வேலைக்கு போறவங்க.
இதுல அடுத்த நாள் அப்பாவுக்கு ஆபிஸ் வேலையா சென்னைக்கு
போகவேண்டியது இருக்கலாம்னு நிலமை. இதுல விருந்தாளி
இரண்டு நாள் இருக்கப்போவதாகச் சொல்ல அவ்வாவுக்கு தலை
சுத்த ஆரம்பிச்சிடிச்சு!!! இராத்திரி டிபனுக்கு பட்ட அல்லோகலமே
தாங்க முடியலை! இதுல இன்னும் இரண்டு நாள்னா!!!

வேற வழியில்லாம உள்ளூரில் இருந்த அம்மாவின் அவ்வாவுக்கு
உடல்நிலை சரியில்லாத்தால் நாங்க எல்லோரும் அங்க போறோம்னு
சொன்னாங்க. ஐயோ அவங்களை எனக்குத் தெரியுமே! நானும்
வர்றேன்னு சொல்ல பக்குன்னு ஆகிடிச்சு. அப்புறம் அப்பா ஏதோ
நைச்சியமாச் சொல்லி தம்பியும் அப்பாவுமா பஸ்ஸ்டாண்ட் போய்
பஸ் ஏத்திவிட்டு வந்தாங்க. ஒரு வேளை திரும்ப வந்தாலும்
வரலாம்னு அவ்வா பீதியைக் கிளப்ப அந்த அர்த்த ராத்திரியில்,
ஸ்ரீநிவாச நகரில் இருக்கும் அம்மம்மா வீட்டுக்கு போய்
இரவு தூங்கி காலேல எந்திருச்சு வீட்டு வந்தோம்!!

நான் இலங்கையிலிருந்த பொழுது அயித்தானோட அக்கா கணவரின்
நண்பர்கள் சுத்தி பார்க்க வந்திருந்தாங்க. எனக்கு அவங்களை முன்னபின்ன
தெரியாது! ஆனாலும் வீட்டுக்கு வர்றவங்களை வேணாம்னா சொல்வோம்!
வந்தவங்க ரொம்ப நல்ல டைப். என் வீட்டு பாத்ரூம் எப்பவும் ட்ரையா
இருப்பதை தெரிஞ்சுகிட்டு குளிச்சவுடன் அந்த அங்கிள் தானே மாப்ஸ்டிக்
போடுவாரு! “நான் செஞ்சுக்கறேன்னு!” சொன்னாலும் மத்த வேலையை
கவனிம்மா!! அப்படின்னு சொல்லிடுவாங்க. அந்த ஆண்டிக்கு முழங்கால்
வலி. ஆனா சோபால காலை நீட்டின மாதிரி உக்காந்துகிட்டு காய்கறி
நறுக்கிக் கொடுப்பாங்க. 5 நாளும் ஏதோ என் உறவினர் இருந்த மாதிரி
தான் இருந்தது. அந்நியமாத் தெரியலை. சிரிச்சு பேசி மகிழ்ந்து அவங்களோட
ஊர் சுத்தினதுன்னு ஜாலியா இருந்ததுச்சு. கிளம்பும் அன்னைக்கு
அவங்க சொன்னது இப்பவும் மனசுல இருக்கு,” என் சொந்த மகள் வீட்டுல
இருந்த மாதிரி இருந்ததும்மா” அப்படின்னு சொன்னாங்க.

ஆனா ஹைதைக்கு வந்தப்புறம் வேற ஒரு கோஷ்டி வந்தாங்க.
அப்பா அவங்களோட நான் பட்டப்பாடு!!! சாமி ரங்கா!!!
ப்ரிட்ஜுல இருந்த பாதாம், முந்திரி, திராட்சை, சாக்லேட்டுகள்
எல்லாம் வந்த அன்னைக்கே காலி. அடுத்து என்ன டிபன்
செய்வ? எங்க கூட்டிகிட்டுப்போற? இதுதான் அவங்க கேள்வி?
ஆட்டோ செலவுக்கு கூட பணம் எடுக்க மாட்டாங்க. எங்களுக்கு
தெரிஞ்சவங்களும் இல்ல, உறவினரும் இல்ல!!! ஆனா
உறவினருக்கு தெரிஞ்சவங்கன்னு தங்க ஓகே சொன்னதுக்கு
நான், அயித்தான் குழந்தைங்களும் ரொம்ப கஷ்டப்பட்டோம்.
2 1/2 நாளில் போதும்டா சாமின்னு ஆகிடிச்சு!!

சரி இந்தக் கதையெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா?
சொல்றேன். போன வருஷம் ஆஷிஷுக்கு ஹிந்திப்பாடம்
ஒண்ணு. அதிதி தும் கப் ஜாஓகே! (விருந்தினரே எப்ப கிளம்புவீங்க?)
பாடத்தின் தலைப்பு இதான். தன் வீட்டுக்கு வரும் விருந்தினரை
நல்லா பாத்துக்கணும்னு நினைக்கும் ஆசிரியர், ஆனா விருந்தினரின்
நடவடிக்கையால எப்படா சாமி கிளம்புவாருன்னு!! யோசிச்சு
கிள்ப்ப திட்டம் போடுவது போல இருக்கும். அந்தப் பாடம்
எடுத்தப்பத்தான் ஆஷிஷுக்கு முதலில் சொல்லியிருந்த 48 இட்லி
சாப்பிட்டவர் வீட்டுக்கு வந்ததைச் சொல்லியிருந்தேன். 48 இட்லியா?
எப்படிம்மா சாப்பிட்டாருன்னெல்லாம் கேள்வி மேல கேள்வி.
அப்படிச் சாப்பிட்டவருக்கு அப்போ வயசு 45க்கு மேல இருக்கும்னு
சொல்ல செம ஷாக்.




நேற்று டீவியில இந்தப் படம் பாத்ததும் செம கொசுவத்தி.
ஆஷிஷின் பாடமாக படித்திருந்த கதையை கொஞ்சம்
மாடிஃபிகேஷன் செஞ்சு அஜய்தேவகன், கொங்கனா சென்,
பரேஷ் ராவல் நடிப்பில் கிளாஸாக இருந்தது. படத்தோட
கிளைமாக்ஸ்தான் சூப்பர். ஃபாள்ட் நம்பர் மாறி அஜய்தேவகன்
வீட்டில் உறவினராக வருகிறார் பரேஷ் ராவல். 20 வருடங்களாக
பார்த்தேயிராத உறவினர் இவர்தான்னு அஜயும் அவரது
மனைவியும் விருந்தோம்பல் செஞ்சு படும் அவஸ்தைதான்
கதை. நல்லாயிருக்கு. போன வருஷம் வெளிவந்தப் படம்.

இந்தப் பாட்டையும் ரசிப்பீங்க :)



இந்தப் படத்தில் பரேஷ் ராவல் சொல்லும் ஒரு டயலாக் ரொம்ப
பிடிச்சிருந்தது. நிதர்சனமான உண்மை அதுதான்.

“ விருந்தினரை தெய்வமாக போற்றுவது நம் பண்பாடு.
ஆனால் கடவுளே (கணேசா) 11ஆம் நாள் கிளம்பி விடும் பொழுது,
விருந்தினரை கடவுளாக போற்ற வேண்டும் என்றால் அவரும்
சீக்கிரம் கிளம்பினால் தான் நல்லது.” இது நாம் விருந்தினராக
போகும் பொழுதும் பொருந்துமோ!!

விருந்தும், மருந்தும் 3 நாளைக்குத்தான்னு சும்மாவா சொன்னாங்க!!!

Sunday, April 03, 2011

இந்தியா வெற்றிக்கு வாழ்த்தும், யுகாதி வாழ்த்தும்!!

எங்க வீட்டுலேயே இந்தியாவுக்கு பெட்டிங் நடந்துச்சு!!!
நடத்தியது ஆஷிஷும், அம்ருதாவும். பெட்டிங் செஞ்சது
அவங்க மாமாகிட்ட. இந்தியா ஜெயிக்காதுன்னு சும்மானாச்சுக்கும்
சொன்ன மாமனை இந்தியா ஜெயிச்சா எங்களுக்கு...... வாங்கிக்கொடுக்கணும்னு
சொன்னதைக்கேட்டு தம்பி ஷாக். அது என்னன்னு கடைசில சொல்றேன்.

நேற்றைய சாதனை அபாரமானது. டென்ஷனை தலையில்
ஏற்காமல் தோனி விளையாடியது அவரது பொறுப்பை காட்டுகிறது.
சேவாக்கும் சச்சினும் அவுட்டானதும் இந்தியா தோற்றுவிடுமோ
என்ற அச்சம் தலை தூக்கியதென்னவோ நிஜம் தான். தோனிக்கு
பாராட்டுக்கள். இந்திய வெற்றியை சச்சினுக்கு சமர்ப்பித்த அணியினரின்
மனம், அவரைத் தங்களின் தோள்களில் தூக்கி வலம் வந்தது எல்லாம்
பார்த்து மனம் நெகிழ்ந்தது. சின்னக்குழந்தை போல குதூகலித்த
சச்சினைப்பார்க்க பார்க்க பரவசம்.

மீண்டும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!


நாளை கர வருஷப்பிறப்பு. தெலுங்கு, கன்னட, மராட்டியர்களுக்கான
புத்தாண்டு. இந்த ஆண்டு எல்லோருக்கும் எல்லாவித மகிழ்ச்சியையும்
தரும் நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள். யுகாதி ஷ்பெஷல்
யுகாதி பச்சடி. வெல்லம்,புளி,வேப்பம்பூ, மாங்காய் எல்லாம் சேர்த்து
செய்யப்படும் இந்தப் பச்சடிதான் முதலில் உட்கொள்ளப்படும்.
வாழ்வில் எல்லா சுவையும் கலந்துதான் இருக்கும். அதை ஏற்கும்
மனதை ஆண்டவன் தரவேண்டும் எனும் நினைப்பு ஏற்படத்தான்
புளிப்பு,துவர்ப்பு,கசப்பு, எல்லாம் சேர்ந்த இந்த யுகாதிப்பச்சடி.


வாழ்வில் பூரணம் இருக்க வேண்டும். அந்த முழுமை கிடைக்க
பூரணம் நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பது பழக்கம்.
பூரண போளி யுகாதிப் ஷ்பெஷல். :)



டிஸ்கி: ஆஷிஷும் அம்ருதாவும் மாமாவிடம் கேட்டது
ஐபோனும், தங்க ஒட்டியாணமும். :( :))).