Total Pageviews

Friday, June 24, 2011

நமோ நாரசிம்ஹா... ப்ரபோ ஸ்ரீநிவாசா!!!!!

நினைத்தை விட சீக்கிரமாகவே கனகதுர்கம்மாகோவிலில் பூஜையும்
தரிசனமும் முடிந்துவிட அயித்தான் மங்களகிரி சென்று வரலாம்
என்று சொல்ல எனக்கு செம ஷாக். ஆனாலும் சனிக்கிழமை
பெருமாள் கோவிலில் கூட்டம் இருக்குமே என ஒரு பயம்.
துணிந்து கிளம்பினோம்.

ஆஷிஷ் குட்டியாக இருந்த பொழுது பாட்டிலில் கொடுத்தாலும் சரி,
டம்ப்ளரில் கொடுத்தாலும் சரி பாலை கொஞ்சம் மிச்சம் வைத்துவிடுவான்.
அதனால் இங்கே பலரும் “உன் மகன் என்ன பானக நரசிம்மரா! மிச்சம்
வைக்க” என்று கேட்பார்கள். எனக்கு அதுவரை மங்களகிரியைப் பற்றியும்
தெரியாது, பானக நரசிம்மரைப் பற்றியும் தெரியாது. விஜயவாடாவிலிருந்து
18 கிமீ தொலைவில் இருக்கிறது மங்களகிரி.

கீழே நரசிம்மரை முதல் நாளே தரிசனம் செய்திருந்ததால் மலைக்குச்
சென்றோம். வாகனங்கள் மேலே வரை செல்கிறது.
நான் நினைத்ததைப்போல நெட்டிமுட்டும் கூட்டமில்லை.
இங்கே இருக்கும் மலை யானைவடிவில் இருக்கும். அதில்தான்
பானக நரசிம்மர் கோவில். கோவிலில் சிலை ஏதும் கிடையாது.

15 செமீ அளவில் வாய்போன்ற அகண்ட துவாரம் மட்டும் தான்.
அதற்கு வெள்ளியில் நரசிம்மர் போல் கவசம் போட்டு வைத்திருப்பார்கள்.
பானகம் நைவேத்தியம் செய்யவேண்டும் என்று சொன்னால் 30 ரூபாய்க்கான
சீட்டு ஒன்று தருவார்கள். அதை வாங்கிக்கொண்டு சந்நிதி சென்றால்,
சின்னச் சின்ன தேக்சாக்களில் பானகம் கரைத்து வைத்திருப்பார்கள்.
அதை நைவேத்தியம் செய்து அர்ச்சகர் அந்த பானகத்திலிருந்து கொஞ்சம்
எடுத்து நரசிம்மரின் வாயில் ஊற்றுவார். ஆனால் முன்பெல்லாம்
எவ்வளவு பெரிய பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ அதில் பாதி மிச்சம்
இருக்கும். ஊற்ற ஊற்ற யாரோ பருகும் சத்தம் கேட்குமாம். சின்ன
டம்ப்ளாரில் ஊற்றினாலும் அதில் பாதி தான் உள்ளே போகும் என்று
தெரிந்தவர்கள் சொல்லக் கேள்வி.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் அத்தனை பானகம் உபயோகப்படுத்தினாலும்
சந்நிதியிலோ ஒரு எறும்பு கூட இல்லை!!! இந்தியாவிலேயே வெல்லம்
உபயோகித்தும் அங்கே ஒரு எறும்பு கூட இல்லை என்பது மங்களகிரியில்
மட்டும்தான்!!!!! எப்பொழுது எறும்புக்களும், ஈக்களும் இந்த இடத்தில்
வருகிறதோ அப்பொழுது இந்த யுகம் முடிவுக்கு வரும் என அர்த்தமாம்.

அப்பண்ணாவாக கந்த அலங்காரத்தில் விசாகப்பட்டிணத்தில் தரிசனம்
தரும் நரசிம்மர் இங்கே என்ன பானக நரசிம்மராக அருள் புரிகிறார்.
கதை கொஞ்சம் பார்ப்போம்.

மங்களகிரி - பெயரே சொல்கிறது மிக புனிதமான மலை என்று.
தேவர்கள் வந்து பூஜிப்பதாக கருதுவதால் கோவில் காலை முதல்
மதியம் வரை மட்டும்தான் திறந்திருக்கும்.
நுமுச்சி எனும் அசுரன் ஈரமாகவும் இல்லாமல்/காய்ந்தும் இல்லாத
வகையில் தன் சாவு இருக்க வேண்டும் என வரம் வாங்கிக்கொண்டு
படாத பாடு படுத்திக்கொண்டு எறும்பு உருவில் இந்த மலையில்
தங்கி இருந்தான். அவனை சுதர்சன நரசிம்மராக விஷ்ணு கொல்கிறார்.
அந்த அசுரனின் உடலில் இருந்து வந்த ரத்தம் ஒரு குளம் போல
ஆகிவிட மஹாவிஷ்ணுவின் உக்ர சூட்டைத் தாங்க முடியாமல்
கிருதயுகத்தில் அவருக்கு தேனையும்,த்ரேதாயுகத்தில் நெய்யும்,
துவாரபயுகத்தில் பாலும் தற்போது கலியுகத்தில் பானகமும் கொடுத்து
சாந்தப் படுத்துவதாக ஐதீகம்.



முன்பு இந்த மலை ஒரு எரிமலை என்றும் அது பொங்கி விடாமல்
இருக்க பானகத்தை ஊற்றி குளிர்விக்கிறார்கள் என்றும் தகவல்.
கோவிலின் பின்னே லட்சுமி கோவில் இருக்கிறது. இங்கே இறைவனின்
திருநாமம் ஸ்ரீ பானகால லட்சுமி நரசிம்மர்.

கீழே ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் இருக்கிறது. இறைவனுக்கு
சாத்தப்படும் 108 சாலிக்கிராமங்களால் ஆன மாலை மிக பிரசித்தி.
தக்‌ஷ்ண்விருத சங்கம் இது ஸ்ரீ கிருஷ்ணரால் உபயோகப்படுத்தப்பட்டு
பின்னர் தஞ்சை சரபோஜி மன்னரால் கோவிலுக்கு சமர்க்கிப்பட்டது
தற்போதும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கோவில் ஸ்தலவிருட்சம் க்‌ஷீர விருக்‌ஷம். அதாவது பால்மரம்.
அதற்கும் ஒரு கதை உண்டு. சசிபிண்டி எனும் அரசனை
அவன் மனைவி,குழந்தைகளை தன் பாதுகாவலில் விட்டு
தவம் செய்ய செல்ல நாரதர் சொன்னதைக் கேட்டு அந்த அரசனின்
மனைவி நாரதரை க்‌ஷீரவிருக்‌ஷமாக சபிக்கிறாள். நாரதர் இன்றளவும்
அங்கே இந்த மர வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இதுதான் அந்த மரம்.


சனிக்கிழமை இங்கே கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமை
அம்மையை தரிசிப்பதை விட்டு இங்கே வரத்திட்டம் போட்டிருந்தேன்.
வெள்ளிக்கிழமை அம்மையை ஆனந்தமாக தரிசிக்க வைத்து சனிக்கிழமை
தன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய அருள் புரிந்து அவனை தரிசிக்க
வேண்டும் என் பலநாள் கோரிக்கையை தீர்த்துவிட்டான்.

இந்தக் கோவில் பிள்ளைகளுக்கு செம ஆச்சரியம்!!!!
பானகத்தின் சுவை சொல்லில் அடங்காது. வெளிப்பிரகாரத்தில்
நாம் கொண்டு செல்லும் பாத்திரத்திலிருந்து ப்ரசாதத்தை டம்ப்ளரில்
போட்டு குடிக்கக் கொடுக்கிறார்கள். பாட்டிலில் ஊற்றி வீட்டுக்கும்
எடுத்து வரலாம்!! இதோ உங்களுக்கும் கொஞ்சம்.

மதியம் வேறு ஏதும் சாப்பிட மனமில்லை. பானகம் குடித்தே
வயிறு நிரம்பியிருந்தது.:) கனகதுர்கம்மா கோவில் ப்ரசாதத்துடன்
மதிய சாப்பாட்டை முடித்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ஹைதைக்கு
புறப்பட்டோம். இரவு 12 மணிக்கு ஹைதை வந்து சேர்ந்தோம்.

Thursday, June 23, 2011

சாந்தி இல்லா பிரசாந்தி நிலையம்!!!!!!!!!!

பகவான் சத்ய சாயி பாபா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல்
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதிலிருந்து புட்டப்பர்த்திதான் நியூஸ்
சேனல்களுக்கு தீனி. இப்பொழுது அது மாபெரும் தீனியாகிவிட்டிருக்கிறது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பொழுது என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்?
அவரது உடம்புக்கு என்ன? என எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
தற்பொழுது சாயி பாபா அவர்களின் சகோதரி மகள் தந்த பேட்டியில்
“ராகு காலம் முடிவதற்காக வெயிட் செய்து பிறகு ஆப்ரேஷன் செய்தார்கள்.
அதனால்தான் அவருக்கு இப்படி ஆனது!!” என்று சொல்கிறார்.
குடும்ப உறவினர்களுக்கும் என்ன நிலமை என்று தெரியாதாம்!!
அப்படி என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்கள்? புட்டபர்த்தியில் இருக்கும்
சத்ய சாயி மல்டிஷ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தான் பாபாவுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மெடிக்கல் ரெக்கார்ட் ஏதுமில்லை!!
அதை வெளியிடவில்லை. அரசும் கேட்காது ஏன்?? புரியவில்லை.

யுகாதிக்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்றும், சில நடவடிக்கைகள்
எடுக்க வேண்டி இருந்ததால் சிகிச்சை பெறுவதாக கூறி மருத்துவமனையில்
வைத்தார்கள் என்றும் மீடியா சொல்கிறது. அதை ஊர்ஜிதம் செய்வது போல
இருக்கிறது இன்னொரு செய்தி. ஏப்ரல் 28ஆம் தேதியே பெங்களூரில் இருக்கும்
கம்பெனி ஒன்றில் கண்ணாடி சவப்பெட்டி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அதே
சமயத்தில் தான் புட்டபர்த்தியிலிருந்து ஒரு ட்ரக்கில் நகைகள் சென்றதாக
சொல்கிறார்கள்.

இத்தனை நாள் கழித்து இப்பொழுதுதான் யஜுர் மந்திரம் எனும் பாபாவின்
அறை திறக்கப்பட்டுள்ளது. பணக்கட்டுக்கள், நகைகள், வைரங்கள் என
ஒரு கஜானாவைப்போல தெரிகிறது.மீடியாவோ, அரசுத்துறையைச்
சார்ந்தவர்களோ உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 15 மாணவர்கள்
இங்கே இருந்த பணங்களை எண்ணியதாகச் செய்தி.
இப்பொழுது மீடியா நம் நாட்டின் ஸ்விஸ் பேங்க் இந்த அறை
என்றும், பல பெரிய தலைகளின் கறுப்புப் பணம்
இங்கேதான் பதுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்கிறது.

கடந்த ஞாயிறு அன்று அனந்தபுரத்தில் போலீஸ் அதிகாரிகளால்
கைப்பற்றப்பட்ட ட்ரஸ்டுக்கு சம்பந்தப்பட்ட வாகனத்தில் 35 லட்சம்
பணம் இருந்திருக்கிறது. முதலில் மார்பிள் வாங்க அனுப்பிய
பணம் என்று சொல்லி ட்ரஸ்ட், வேன் டிரைவர் ட்ரஸ்டைச் சேர்ந்த
ஒருவரின் பெயரைச் சொல்ல இப்பொழுது போலீச் ரத்னாகர் (இவர்
தான் இறுதிச் சடங்கு செய்தவர், பாபா அவர்களின் அண்ணன் மகன்)
மற்றும் இன்னொரு நிர்வாகியான ஸ்ரீநிவாஸ் என்பவரையும் விளக்கம்
கேட்டிருக்கிறது.

இத்தனை குற்றச் சாட்டுக்கள் வெளிவந்தாலும் அதை மறுக்கவோ,
எதிர்த்தோ ஒரு செய்தியும் ட்ரஸ்ட் வெளியிடாத மர்மம் என்ன?
வாய் மூடி மவுனமாக இருப்பதால் புட்டபர்த்தியின் மேல்
நல்ல மதிப்பைக் கொண்டவர்கள் எத்தனையோ பேரின் மனதில்
சங்கடத்தை உட்படுத்தி இருக்கிறது.

திருப்பதி மலையில் வெங்கடேசனுக்கு சேரும் காணிக்கைகள்
எவ்வளவோ அத்தனையும் தணிக்கை செய்யப்படுகிறது. எந்த ஒரு
கோவிலும் தணிக்கைக்கு உட்பட்டதே. அப்படியிருக்க புட்டப்பர்த்தி
மட்டும் தணிக்கைக்கு உட்படுத்த படவில்லை. விதிவிலக்கு
அளித்துள்ளதாம் அரசு!!! அது ஏன்??

சீரியஸாக செயலில் இறங்கி அரசு என்னதான் நடக்கிறது? அல்லது
நடந்தது என விசாரனையில் இறங்காததும் ஏன் என்பதும் இறைவனுக்கே
வெளிச்சம்.

புட்டப்பர்த்தியின் செக்யூரிட்டி அதிகாரியான ப்ரதான் என்பவரை
போலீஸ் விசாரித்திருக்கிறது. மீடியாவுக்கு இவர் தந்த பேட்டியில்
வெளிநாட்டு யுவதிகள் காணாமல் போனதும் உண்டு என்று
இன்னொரு அதிர்ச்சித் தகவலை சொல்கிறார்.

இத்தனை பூகம்பளுக்கு இடையே நேற்று வெளியான இன்னொரு செய்தி
வெளிநாட்டு பக்தரான ஐசக் தந்த அதிர்ச்சி. சாயி பாபா அவர்களின்
பிரியமான இந்த கோடீஸ்வரர் தான் புட்டபர்த்தியின் வளர்ச்சிக்காக
400 கோடி கொடுத்திருக்கிறார். இவர் தற்போது கொளித்திப்போட்டிருக்கும்
செய்தி,” பாபா உயில் ஏதும் எழுதவில்லை என ட்ரஸ்ட் நிர்வாகிகள்
சொல்வது பொய். தான் உயில் எழுதியிருப்பதாக என்னிடம் சொன்னார்.
என்னிடம் சில ரகசியங்களையும் சொல்லியிருக்கிறார். 6 வாரத்தில்
ஆதாரங்களுடன் அவற்றை பக்தர்களுக்கு சொல்கிறேன்!!” என்று
சொல்லியிருக்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தபட்டவர்களை கைது செய்து
இருக்கிறது சி.பி.ஐ. ஆனால் அந்த 200 கோடி ரூபாய் என்ன ஆச்சு?
அந்தப் பணம் இப்படி அனாமத்தாக இருக்கும் பல பணங்களை
ஒருங்கே சேர்த்து நாட்டு நலத்திட்ட பணிகளுக்கு செலவழித்தால்
பொருளாதாரம் மேம்பட்டுவிடுமே. இதற்கெல்லாம் நம் அரசியல்
தலைவர்களுக்கு நேரமில்லை. ஒரு அன்னா ஹஜாரே போதாது.
வீதிக்கு ஒரு அன்னா ஹஜாரே வந்தால்தான் நம் நாடு உருப்படும்.

பின்குறிப்பு: நான் சாயி பாபா பக்தை என்றோ, அல்லது அவருக்கு
எதிராக இந்த பதிவை எழுதி அவருக்கு அவமரியாதை செய்து
விட்டோன் என்றோ யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
மனதில் எழும் கேள்விகளுக்கு விடை கிடைக்கவிட்டால் யாரும்
குழம்பத்தான் நேரிடும். புட்டப்பர்த்தியின் அபிவிருத்திக்கு மிகவும்
உழைத்த மனிதர், தண்ணீர் பிரச்சனையை தீர்த்தவர் என்ற
விதத்தில் அவரை நான் மதிக்கிறேன். தயவு செய்து யாரும்
தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம். உலகமெங்கும் வியாபித்திருக்கும்
புட்டப்பர்த்தி ட்ரஸ்டின் முக்கிய இடமான புட்டபர்த்தியின் நிர்வாகிகள்
மீது இப்பொழுது எழுந்திருக்கும் சந்தேகங்களை முன் வைப்பதே
இந்தப் பதிவின் நோக்கம்.





ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி....

இந்தக்கோவிலின் கதை கொஞ்சம் பார்ப்போமா?
கீலா எனும் யட்சன் அன்னையின் அருள் வேண்டி தவம் செய்ய
அவன் தவத்துக்கு மனமிறங்கிய அன்னை அருள் செய்ய வந்த
பொழுது,’ என் மனதை விட்டு நீங்காமல் என்னுடன் இரு தாயே!
என்று கேட்கிறான். நீ இங்கே கிருஷ்ணா நதி தீரத்தில் மலையாக
இரு. அசுர சம்ஹாரம் முடித்து இங்கே வந்து நான் கோவில்
கொள்கிறேன் என வாக்கு கொடுக்கிறாள்.

மஹிஷாஷுரனை வதம் செய்த பிறகு மஹிஷாஷுர மர்தினியாக
கீல மலையில் அன்னை கோவில் கொள்கிறாள். கோடி சூரிய பிரகாசமாய்
ஜொலிக்கும் அன்னையின் அழகைக் கண்டு கனக துர்க்கை என
நாமம் சூட்டப்படுகிறாள். கனக- பொன்.
கீல மலை இந்திரகீலாதரி ஆனது எப்படி? இந்திராதிதேவர்கள் வந்து செல்லும்
இடமாக இந்த மலை இருக்க இந்த மலை இந்திரகீலாதரி ஆனது.

அம்மை கோவில் கொண்டு விட்டாள், அப்பனும் அங்கேயிருந்தால் நல்லது
என நினைத்த இந்திரன் அஸ்வமேத யாகம் செய்து சிவனை பூஜிக்க
மனம் குளிர்ந்த சிவன் ஜோதிர்லிங்கமாக இந்த மலையில் தங்கிவிடுகிறார்.
முதல் தடவை இந்திரன் மல்லிகைப்பூ கொண்டு சிவனை பூஜிக்க
மல்லிகேஸ்வரர் என நாமம் சிவனுக்கு. இந்த சிவனை நினைத்து
இங்கே தவம் செய்து தான் அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றது.

அம்மையும் அப்பனும் இங்கே சுயம்புவாக இருப்பதைப் போல இன்னொரு
விசேஷும் இந்தக் கோவிலுக்கு உண்டே. பொதுவாக இறைவனின்
இடப்புறத்தில் தான் இறைவி. ஆனால் மல்லிகேஸ்வரருக்கு வலப்பக்கம்
அன்னையின் கோவில் இருக்கிறது. இந்திரக்கீலாதரியில் சக்தியின்
ஆட்சி என்பதை இது சொல்கிறது.



அன்னைக்கு எந்த பூஜை செய்தால் சந்தோஷப்படுவாள். அதிலும்
அவளின் இருப்பிடமாக கருத்தப்படும் ஸ்ரீ சக்ரம் பூஜை மிக விசேஷம்.
இந்திரகேலாதரி மலையில் கனக துர்கையாக வீற்றிருக்கும் அன்னைக்கு
அனுதினமும் சமர்க்கிப்படும் பூஜைகளை ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியாகவே
ஏற்கிறாள். ஸ்ரீ சக்கரத்திற்கு செய்யப்படும் பூஜை அன்னைக்கு செய்ததற்கு
சமானம் என்பார்கள்.




கனகதுர்கா கோவிலில் அனுதினமும் ஸ்ரீ சக்ர நவாவர்ணர்ச்சன பூஜை
நடைபெறுகிறது. ஸ்ரீ சக்கரத்திற்கு அபிஷேகம் செய்து, அர்ச்சனை
நடக்கும். சங்கல்பத்தின் பொழுது பணம் கட்டியவர்கள் பெயர்கள்
சேர்த்துக்கொள்வார்கள். உட்பிரகாத்திற்கு வெளியே இந்த பூஜை
நடைபெறும். இதற்குத்தான் பணம் கட்டியிருந்தேன்.

இதைத் தவிர கோவிலில் சண்டிஹோமம், லட்ச குங்குமார்ச்சனை
(லலிதா சஹஸர்நாமம் சொல்லி), சாந்திக் கல்யாணம் ஆகிய
சேவைகளும் நடக்கின்றன. ருத்ராபிஷேகம் ,கட்கமாலா அர்ச்சனை கூட உண்டு.


சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் அன்று ஏதோ ஒரு
அரசாங்க விடுமுறை தினமுமாக இருக்க சரி கூட்டம்.
9 மணிக்குத் துவங்கிய அபிஷேகம் 11.30 மணிக்கு முடிந்தது.
உடன் தரிசினத்திற்குச் சென்றோம். தள்ளு முள்ளூத்தான்!!
அதனால்தான் முதல்நாளே நல்ல தரிசனம் தந்தாளோ என்னவோ!
மனதார வேண்டிக்கொண்டு பிரஹாரத்திற்கு வந்தால் பிரசாதம்
கொடுத்தார்கள். கிட்டத்தட்ட 1 கிலோவுக்கு மேல சுடச்சுட
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, 1 லட்டு.

ப்ளாஸ்டிக் பையில் கொடுத்தார்கள். அதுதான் கொஞ்சம் வருத்தம்.
கொஞ்சம் கூட பணம் வசூலித்தால் கூட பரவாயில்லை எவர்சில்வர்
தூக்கில் கொடுத்திருக்கலாம். நெய் டொக் டொக்குன்னு சொட்டியது!!!


தொடரும்....

Wednesday, June 22, 2011

திவான் படுத்தும் பாடு!!!!

இப்படி கூட நடக்குமான்னுல்லாம் நாம யோசிக்க முடியாத அளவுக்கு
நிகழ்வுகள் இருக்குது! மேட்டர் என்னன்னு சொல்றேன் கேளுங்க.

எங்க அம்மாவுக்கு பாக்ஸ் டைப் திவான் வாங்கிப்போடணும்னு ஆசை.
ஆனா எங்க புதுகையில் அதெல்லாம் கிடைக்காது. அப்பா,அம்மாவுக்கு
அன்புப் பரிசா இருக்கட்டும்னு ஹைதையிலிருந்து வாங்கி அனுப்ப
முடிவு செஞ்சோம். அயித்தானும்,நானும் கடைக்குப் போய் நல்லதா
பாத்தோம். அவங்களையே புதுகைக்கு அனுப்பச் சொல்லிக்கேட்டோம்.
சாரிங்க! அந்த ஊருக்கெல்லாம் எங்களுக்கு சர்வீஸ் இல்லை. சென்னை
வரை மட்டும்தான்னு சொன்னாங்க. இப்ப என்ன செய்யலாம்னு
முடிவு செஞ்சப்பதான் “Chennai packers” இங்கே இருப்பது
ஞாபகம் வந்து அவங்களுக்கு போன் செஞ்சு கேட்டோம்.

டிரான்ஸ்போர்ட் சார்ஜ் திவான் விலையில் முக்கால் பாகம்! இருந்தாலும்
பரவாயில்லை அப்படின்னு சொன்னோம். 4 நாள்ல அனுப்பிடுவோம்னு
சொன்னாங்க! சரின்னு ஏற்பாடு செஞ்சு பணத்தை முன்னமே கட்டச் சொல்ல
அதையும் கொடுத்து பக்காவா பேக் செஞ்சிருந்த திவானையும் எடுத்துகிட்டு
போயிட்டாங்க.



ஒரு வாரமாகியும் திவான் போகலை. அப்ப ஆரம்பிச்சிச்சு அவங்களுக்கு
போன் செய்யும் வேலை. இதோ போயிருங்க! நீங்க கவலைப்படாதீங்க,
நாங்க டோர் டெலிவரி செஞ்சிடறோம் இப்படியே ஹைதை ஆபிஸில்
பதில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. 20 நாள் ஆச்சு. ம்ஹூம்.
1 மாசமும் ஆச்சு. நிறைய்ய வாட்டி போன் செஞ்சிருந்ததால நம்ம
நம்பரை பாத்தாலே அவங்க எடுப்பதில்லை. சரின்னு ஆபிஸுக்கு
ஆள் அனுப்பி கேட்டா இங்கேயிருந்து அனுப்பிட்டோம். பெங்களூரில்
இருக்கு. அங்கேயிருந்து திருச்சி போய் அப்படியே புதுகைக்கு அனுப்பிடறோம்னு
சொன்னாங்க. அவங்க பேசும் விதமே சரியில்லை. தெனாவெட்டா
பேசுறாங்க. பாவமே பணத்தைக்கொட்டி அனுப்பிருக்காங்களே! அப்படின்னு
ஒரு ஃபீலிங்க்ஸே இல்லை!! பேசும் விதத்தைப்பாத்து சாமானை ஏதும்
உடைச்சு அனுப்பிடுவாங்களோன்னு பயந்தே கொஞ்சம் பொறுமையா
இருந்தோம்.


நடுவில் சென்னை அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு விசாரிச்சா
இந்தோ அந்தோன்னாங்களேத் தவிர அங்கயும் ஒரு ஸ்டெப் எடுக்கலை.
என்னோட இமெயில் எந்த கிடப்புல இருக்குன்னு தெரியலை. ஒரு
ரிப்ளை கூட கிடையாது. அயித்தான் டென்ஷனாகி என்னதான் ஆச்சு
திவானுக்கு? போலீஸ் ஸ்டேஷன் போகவான்னு கேக்க உண்மை
வருது.

திவானை தவறுதலா வேறு வீட்டுல இறக்கியிருக்காங்க. அவங்க
வாங்கி வெச்சிட்டு வெளியூருக்கு போயிட்டாங்களாம். அவங்க வந்து
கதவைத் திறந்து எடுத்துக்கொடுத்தாத்தான் உண்டாம்! இது எந்த
அளவுக்கு நிஜமோ புரியலை. வெறுத்துப்போய் நீங்க திவானை
கொடுக்க வேண்டாம். உங்களுக்கு போன் செஞ்சு வாழ்க்கையே
வெறுத்துப்போகுது,” திவான் + டிரான்ஸ்போர்ட் செலவு + அநாவசிய
போன் கால் செலவு எல்லாம் சேர்த்து 10,000 கொடுத்திடுங்கன்னு”
சொன்னோம்.

நாளைக்கு திவானா! பணமான்னு சொல்றோம்னு சென்னை ஆபிஸில்
சொன்னாங்க. அடுத்த நாள் போன் செஞ்சு 2000 தர்றோம். திவான்
அந்த வீட்டுக்காரங்க வந்தாதான் தர முடியும்னு சொல்ல வெறுத்துப்போயி
நுகர்வோர் கோர்ட்டுக்கு அப்ளை செஞ்சிருக்கோம்.

மதர்ஸ்டேக்கு போயிடும்னு நினைச்சோம். ஃபாதர்ஸ்டே கூட போயிடிச்சு!!
திவான் எப்ப வருமோன்னு பாவம் அவங்க எங்கயும் ஊருக்கு கூட
போக முடியாம 1 மாசம் கஷ்டபட்டாங்க.

இப்படி கூட கஸ்டமர்களோட கஷ்டம் புரியாத ஒரு கூட்டம்.
கடவுளே!!!!!!!!!!!!

அன்னை துர்கையே!! எங்கள் கனக துர்கையே!!!

சில இடங்களுக்கு நாம போகணும்னு நினைச்சாலும் அது நடக்க
அருள் இருக்கணும். ரொம்ப வருஷத்துக்கு முன்னால விஜயவாடா போனது.
அதாவது ஆஷிஷ் குட்டியா இருந்தப்ப. அதுகப்புறம் போகும் வாய்ப்பே
கிடைக்கல. போன வருஷம் போக ப்ளான் போட்டு ட்ரையினில் டிக்கெட்
எல்லாம் புக் செஞ்சாச்சு, அயித்தானுக்கு அவசரமா மிக முக்கியமான
அலுவல் வந்து கேன்சல் செஞ்சோம். உனக்கு மனசிருந்தா உன்னை
பாக்க அருள் புரின்னு விட்டுட்டேன்.

ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் திடும்னு அயித்தான் நான் வேலை விஷயமா
விஜயவாடா போறேன் வர்றியான்னு? கேட்டார். ட்ரையின் டிக்கெட்
புக் செய்யலியேன்னு யோசிச்சேன். ட்ரையின்ல போகலை, கார்ல
போறோம்னு சொன்னாரு. ”வருவேன். ஆனா இந்த வாட்டி கண்டிப்பா
மங்களகிரி நரசிம்மரை பாக்காம வரக்கூடாதுன்னு” அப்படின்னதும்
சரி ஒரு நாள் முன்னதாகவே கிளம்புவோம்னு சொன்னாரு. பசங்களுக்கும்
அப்பத்தான் ஸ்கூல் முடிஞ்சிருந்தது. மேமாதம் போனா அது விஜயவாடா
இல்ல ப்ளேஸ்வாடா. சும்மா தகிக்கும்.

வெள்ளிக்கிழமை கிளம்பி, சனிக்கிழமை இரவு வந்துவிடுவதாக திட்டம்.
டிரைவருக்கு ஏற்பாடு செஞ்சாச்சு. சீக்கிரமாவே கிளம்பலாம்னு நினைச்சு
5 மணிக்கே எந்திரிச்சு ரெடியாகி 6 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்ப
நினைச்சோம். வெள்ளிக்கிழமை கனகதுர்க்கையைப் பார்க்க கூட்டம்
ஜாஸ்தி. அதனால அன்னைக்கு மங்களகிரியில் தரிசனத்தை முடிக்கணும்.
அதுவும் பகல் ஒரு மணிக்குள்ள போனாத்தான் பானகம் ஊத்த முடியும்!!
அதனால சீக்கிரமா கிளம்பி மங்களகிரி தரிசனம் முடிச்சு விஜயவாடா
வந்து ரெஸ்ட் எடுத்துகிட்டு அடுத்த நாள் சனிக்கிழமை கனக துர்க்கை
தரிசனம் செய்யலாம் என்பது எங்கள் ப்ளான்.

6 மணிக்கு வரவேண்டிய டிரைவர் வரும் வழியைக்காணோம்! மணி
7.30 தாண்டியதும் நான் காலை டிபன் செய்யும் வேலையில் இறங்கிட்டேன்.
நாங்க சாப்பிட்டு முடிச்சு 8 மணிக்கு வந்தாரு டிரைவர். அவரும் டிபன்
சாப்பிட்டதும் கிளம்பினோம். எங்க வண்டியில கேஸ் ஃபிக்ஸ் செஞ்சிருக்கோம்.
போன தடவை எங்கயோ அயித்தான் போனபோது அது கொஞ்சம் ப்ராப்ளம்
கொடுத்திச்சு. அதனால அதை கொஞ்சம் சரி செஞ்சிட்டு போகனும்.
போறவழிலதான் என்பதால அங்க போய் வண்டியைக் கொடுத்தா
1/2 மணியில ரெடியாகிடும்னு சொன்னாரு அயித்தான். லேசா டென்ஷன்!!!
5 மணிநேரப்பயணம்னு சொல்வாங்க. அப்பிடி இப்படின்னு 6 மணிநேரம்
ஆனாலும் மங்களகிரி மிஸ்ஸாகிடும்! நாளைக்கு கனகதுர்க்கம்மா கோவிலில்
பூஜைக்கு பணம் கட்டியாச்சு. அதை மாத்தவும் முடியாதே! இந்த
வாட்டியும் பானக நரசிம்மரை பார்க்கமலேயே வரணுமேன்னு வருத்தம்.

வேற வழியில்லை. அவ்வளவு தூரம் பயணம் எனும்போது வண்டி
நல்ல நிலையில் இருக்கணும். அதுவும் இது திட்டமிடாம உடனடியா
போறதால முன்னாடியே வண்டியை கொடுத்து சரி செய்யவில்லை.
சரி நடப்பது நடக்கட்டும்னு விட்டுட்டேன். ஒரு வழியா 10 மணிக்கு
கிளம்பினோம்.

விஜயவாடா-ஹைதைக்கு நடுவில் புது ரோடு போடறாங்க. அந்த
வேலை முடிஞ்சதுன்னு சும்மா சல்லுன்னு 4 மணிநேரத்துல விஜயவாடா
போயிடலாம். ஆனா வேலை நடந்துக்கிட்டு இருக்கும் பொழுது......
ஒரு பக்கம் ரோடு அகலமா இருக்கும், இன்னொரு பக்கம் சிங்கிள் ரோடு
மாதிரி போகும். ஹைவே என்பதால லாரிகளின் போக்கு வரத்து
அதிகம். சில இடங்களில் மண்போட்டு சமன் செஞ்சுகிட்டு இருக்காங்க.
கரணம் தப்பினா மரணம் என்பது போல ஒரு பயணம்.

மதியம் 3.30 மணி வாக்கில் விஜயவாடா போய்ச்சேர்ந்தோம்.
மங்களகிரி மலை போக முடியாது. சாயந்திரம் அங்கே பூஜை கிடையாது.
கோவிலை மூடிடுவாங்க. கீழே இருக்கும் நாராயணன் தரிசனம் மட்டும்தான்.
அது எப்ப வேணாம் பாக்கலாம். வெள்ளிக்கிழமை முழுவதும் கனகதுர்க்கை
கோவில் திறந்திருக்குமாம்!! முடிஞ்சா இன்னைக்கும் ஒரு தடவை
தரிசனம் செய்யலாம்னு அயித்தான் சொன்னாரு. அவருக்குத் தெரிஞ்சவர்
அங்கே வேலை செய்யறாரு. அவருக்கு போன் போட்டு பாத்தா எடுக்கவேயில்லை.
கோவில் கொஞ்ச தூரம் தான் எனும் பொழுது போன் போட்டா எடுத்தாரு!
வாங்க சார்! தரிசனம் செய்யலாம்னு சொன்னார்.

போனா மதியம் 4 மணி என்பதால கூட்டம் குறைஞ்சு மிக அற்புதமான
தரிசனம். இந்த கோவிலில் அப்படி என்ன விசேஷம். அன்னை
இந்திரகேலாதரி மலையில் உட்கார்ந்து தன் பக்தர்களை அருள் பாலிக்கிறாள்.
கீழே கிருஷ்ணா நதி தீரம். மேலே அன்னையின் தரிசனம்.
மஹிஷாசுரனை அழித்துதே இங்கே தான். அன்னை சுயம்புவாக
எழுந்தருளி இருப்பதால் இன்னமும் சக்தி அதிகம்.

அர்ஜுனன் இந்த மலையில் நின்றுதான் சிவனை நினைத்து தவம் புரிந்து
பாசுபதாஸ்த்ரம் பெற்றான். அவன் விஜயம் பெற்றதால் இந்த ஊரும் விஜயவாடா என ஆயிற்று.


வெள்ளிக்கிழமை அவளை தரிசனம் செய்ய முடியாது என நினைத்தேன்.
ஆனால் ஆனந்தமான தரிசனம். எட்டு கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கையாய்
அருள் பாலிக்கிறாள். அங்கேயிருந்து ஒரு எட்டு மங்களகிரி போய்ப் பார்க்கலாம்
என போனோம். 11 கிமீ என்கிறார்கள். போய்க்கொண்டேஏஏஏஏஏஏ
இருக்கிறது. இதுதான் பிரகாசம் பேரேஜ்.கிருஷ்ணா நதியில்
கட்டப்பட்டிருக்கும் 1223.5 மீட்டர் நீளமுள்ள இந்தப்
பாலம் தான் கிருஷ்ணா மாவட்டத்தை இணைக்கிறது.

மங்களகிரி போனோம். கீழே அனந்த சயனனை தரிசித்து கோவிலில்
விசாரித்தால் 3 மணிவரை மலைக்கோவிலுக்கு அனுமதி உண்டு என்றும்
அதுவரை பானகம் ஊற்ற அனுமதிப்பார்கள் என்றும் சொன்னார்கள்.
மங்களகிரி கோவிலின் வலைத்தளம் அப்டேட் செய்யப்படாமல் பழைய
தகவல்களைக்கொண்டு இருந்ததைப் படித்ததால் வந்த வினை. சரி
நாளைப் பார்த்துக்கொள்ளலாம் என விஜயவாடா வந்து நாங்கள்
ஹோட்டலில் செக்கின் செய்தோம்.

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு அயித்தான் தன் ஆபீஸ் வேலையைப்
பார்க்க போய்விட்டார். இரவு அவர் வந்ததும் வெளியே சென்று
டிபன் சாப்பிட்டு வந்து கட்டையை சாய்த்ததுதான் தெரியும்.




Tuesday, June 21, 2011

மாம்பழமாம்!! மாம்பழம்....

ஒண்ணாங்கிளாஸ்ல படிச்ச பாட்டு ஞாபகம் இருக்கா??
மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,
சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்,
உங்களுக்கு வேணுமா? இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு திங்கலாம்!! :))

மே மாதம் தான் ஆந்திராவில் மாம்பழ சீசன் என்றாலும் இந்தத்தடவை
ஜூன் கடைசி வரைக்கும் மஞ்ச மஞ்சேருன்னு மாம்பழங்கள் கிடைக்குது.
மாம்பழம். அதோட ருசியே அலாதி. முக்கனியில் ஒரு கனி இந்த
மாம்பழம். அந்தக் கலரே அழகு. மஞ்சளில் இருக்கும் நிறைய்ய ஷேட்களில்
மாம்பழ மஞ்சள் கண்ணுக்கு அழகு.



இந்த வாட்டி மாம்பழம் கிலோ 25 ரூவாய்தான். இங்க கிடைக்கும் நிறைய்ய
வகைகளுக்கு பெயரே தெரியவில்லை. தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்றேன்.
பங்கனபள்ளி, தோத்தாபுரி(கிளி மூக்கு) ரசால்லு,சுவர்ணரேகா, நீலம்.
மல்கோவா,அல்போன்சாவும் கிடைக்கும். கேசர்னு ஒரு வகை கூட
சூப்பர் மார்க்கெட்ல பார்த்தேன். ரசால்லுன்னு சொல்லும் வகை மாம்பழத்தை
கட் செஞ்சில்லாம் சாப்பிட முடியாது. ஜுர்ருன்னு ஜுர்ரிக்க வேண்டியதுதான்.:)
ஃபுல்லா மாம்பழ ரசமா இருக்கும். அதனாலத்தான் ரசால்லுன்னு பேரு.


மாம்பழத்தை பலரும் ருசிக்கணும்னு நினைக்கும் பொழுது கூடவே ஒரு
பயம். மாம்பழம் சாப்பிட்டா வெயிட் போட்டுடுவோம் என்பதுதான்.
ஆனா மாம்பழம் அதிகமா சாப்பிட்டத்தான் சரியா செரிமாணம் ஆகாம,
மாந்தம்னு சொல்லும் அஜீரணம் ஏற்படும். அளவோட சாப்பிட்டா மாம்பழம்
ஒரு அருமருந்து. அதுல உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கு.



விட்டமின் ஏ,சி,பொட்டாஷிச்யம், காப்பர், அமினோ அமிலம்,
இப்படி நிறைய்ய இருக்கு. உடம்புக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி
மாம்பழம் சாப்பிடுவதால கிடைக்குது.

நம்ம தேசிய பழம் இந்த மாம்பழம் தான். அது தெரியுமா?
பாகிஸ்தானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் கூட இதுதான் தேசிய பழம்.
பங்களாதேஷுக்கு தேசிய மரம் மாமரம் என்பது கூடுதல் தகவல்.

நம்ம இந்தியாவுலத்தான் அதிகமா மாம்பழம் தயாராகுது. ஆனா
நாமளே அதிகம் உபயோகம் செஞ்சிடறதால ஏற்றுமதியில் முதலிடம்
பாகிஸ்தானுக்கு போயிடிச்சு.

இப்ப வீட்டுல நுழைஞ்சதுமே சும்மா கும்முன்னு மாம்பழ வாசனை
தூக்குது. விசாகப்பட்டிணத்துலேர்ந்து வந்த உறவினர் கொண்டு வந்த
பழத்தோட, நேத்து அப்பார்ட்மெண்டில இருக்கறவங்க அவங்க
தோட்டத்துல விளைஞ்சதுன்னு மொத்த அப்பார்ட்மெண்டுக்கும்
கொடுத்திருக்காங்க. :)))

ஆம் ரஸ் பூரி இந்த சீசன்ல நிறைய்ய வாட்டி செஞ்சாச்சு. பூரிக்கு
மட்டும்தான் ஆம்ரஸ்னு இருந்த ஆஷிஷ், அம்ருதா மேத்தி சப்பாத்திக்கும்
ஆம்ரஸ் சாப்பிடறாங்க.

மாம்பழத்தை அளவா சாப்பிட்டு அதோட நற்பலன்கள் நம்ம உடலுக்கு
சேர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. உடல் சூடாகிடாம இருக்க பால்
ஒரு டம்ப்ளர் கண்டிப்பா எடுத்துக்கணும்.



Wednesday, June 15, 2011

நாம ஒண்ணு நினைச்சா............

எப்பவும் பாசிட்டிவ்வாவே நினைக்கனும் என்பது என்னோட பாலிசி.
முடிஞ்சவரைக்கும் அப்படியே நினைச்சு நடந்துக்குவேன். ஆனா
சில சமயம் நாம நியாயமா ஆசைப்படுவது கூட நடக்காம போயிடுது.
அப்பத்தான் இந்த நெகட்டிவிட்டு மண்டையில வந்து குடையுது.

அயித்தான் உசுப்பி விட்டு கார் டிரைவிங் கத்துக்க கட்டாயப் படுத்தினாரு.
ரொம்ப யோசிச்சு.... ஒரு வழியா டிரைவிங் கிளாஸ்ல சேர்க்க சம்மதம்
சொன்னேன். மாருதி டிரைவிங் ஸ்கூல்ல சேத்தாரு. அவங்களுடைய
சொல்லித்தரும் டெக்னிக் ரொம்ப பிடிச்சது. தியரி,சிமுலேஷன்,அப்புறம்
ப்ராக்டிக்கல்னு நல்லா ப்ளாண்டா இருக்கும்.

தியரி கிளாஸ் ரொம்ப பிடிச்சிருந்தது. என தப்பு செஞ்சிடக்கூடாதுன்னு
அழகா வீடியோல காட்டி இருக்கும் பாடம். டக்கு டக்குன்னு நான்
பதில் சொல்வதைப் பார்த்து அந்த இன்ஸ்ட்ரக்டர் (கொஞ்சம் வயசானவர்)
உனக்கு நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கும்மான்னு!! பாராட்டினார்.

சிமுலேஷன்ல வீடியோ கேம் மாதிரி ப்ராக்டிஸ் செஞ்சு பார்த்திட்டு
அப்புறம் ப்ராக்டிகல். எப்படா அந்த நந்நாள்னு காத்திருந்தேன்.
முதல் நாள் நான் ரோட்டில் கார் ஓட்டப்போறேன்னு ரொம்பவே
ஆர்வமா இருந்தேன். காலை 8.30-9.30 டைமிங் எடுத்திருந்தேன்.
டிரைவிங் ஸ்கூல்லேர்ந்து கொஞ்ச தூரத்துல இருக்குற நெக்லஸ் ரோடுக்கு
வண்டியை எடுத்துகிட்டு போய், அங்க ஓட்டப் பழகணும்னு சொன்னாரு
இன்ஸ்ட்ரக்டரு. சரின்னு கிளம்பினோம்.

வண்டியை ஓட்ட ஆரம்பிச்சது இன்ஸ்ட்ரக்டருதான் (இது வேற ஆளு). வண்டியை
ரோட்ல எடுக்க ஆரம்பிச்ச உடனே அவருக்கு போன் வந்தது.
கேர்ள் ப்ரெண்டோ/லவ்வரோ தெரியலை. ஆனா சூடான வாக்குவாதம்.
15 நிமிஷ பயணத்துல நாங்க நெக்லஸ் ரோடு போரவரைக்கும்
தொடர்ந்துதது.....

வேகன் ஆர் கார். இப்ப நீங்க ஓட்டுங்கன்னு சொல்லி, என்ன
செய்யணும்னு சொன்னாரு. மெல்ல இஞ்சினை ஸ்டார்ட் செய்து
வண்டியை மூவ் செய்ய வெச்சு லேசா கார் ரோட்ல மூவ் ஆன
அந்த தருணம் ஏதோ ஒரு சாதிச்ச திருப்தி எனக்கு.

நான் கார் ஓட்டுறேன்! அதுவும் நெக்லஸ் ரோட்ல!! என்னால்
அந்த சந்தோஷத்தை எப்படி சொல்லத் தெரியலை. ஸ்மூத்தா
ஓட்டினேன். சிமுலேஷன்ல வண்டியைத் திருப்ப கஷ்டப்பட்ட
நான் ச்சும்மா அநியாசமா வண்டியை ட்ர்ன் செஞ்சேன்.
பக்கத்துல உக்காந்திருந்த அந்த இன்ஸ்ட்ரக்டர் இப்படி பண்ணுங்க,
அப்படி பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே வந்தாரு. அதுவும்
அந்த ரோட்ல சின்னதா ஒரு ப்ரிட்ஜ் வரும் பாருங்க... அதுல
ஏத்தி இறக்கினது... சூப்பர் கலான்னு எனக்கு நானே பாராட்டு
பத்திரம் வாசிச்சுக்கிட்டேன்.

அங்கேயிருந்து வண்டி மினிஸ்டர் ரோட் வழியா வந்து பேகம் பெட்
ஃப்ளை ஓவர் கீழே வந்து, பழைய ஏர்போர்டுக்கு முன்னாடி திருப்பி
மெயின் ரோட்ல இருக்கும் மாருதி டிரைவிங் ஸ்கூலுக்கு போகணும்னு
சொன்னாரு. முதல் தடவை ஓட்டும்போது அந்த மாதிரி பிசி ரோட்ல
சாத்தியமில்லை. அதுவும் மினிஸ்டர் ரோட், பேகம் பெட் ஏரியால்லாம்
காலை நேரத்துல செம ட்ராபிக் இருக்கும். என்னால இன்னைக்கு
முடியாதுங்க! வேற ரூட்ல ஓட்டுறேன்னு சொன்னேன். அந்த ஆளு
கேக்கலை. இப்படி பயப்பட்டா கஷ்டம். வண்டியை ஓட்டினாத்தான்
நல்லதுன்னு சொல்ல. சாரிங்க. பழகினதுக்கப்புறம் தானா ஓட்டலாம்
முதல் நாளே இப்படி பிசி ரோட்ல ஓட்டுவேன்னு எதிர்பார்க்கறீங்களேன்னு!
சொன்னேன்.

அம்புட்டுதான். அந்த ஆளு லேடீஸ் வண்டி ஓட்டவே வரக்கூடாதுங்கற
மாதிரி லெக்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சாரு. பொறுமையா இருந்தேன்.
உங்களைச் சொல்லி குத்தமில்லீங்க! இத்தனை வருஷம் வீடு குடும்பம்னு
இருந்துட்டீங்க, இப்பத் திடும்னு இந்த மாதிரி வெளியுலகத்துக்கு
வர்றதுன்னா கஷ்டம்... அது இதுன்னு தன்னோட கேர்ள்ப்ரண்டு
மேல இருந்த கோவத்தை எல்லாம் காட்டி கத்த, எனக்கு செம கோவம்.
எல்லோருமே வீட்டுக்குள்ளயே இருக்கறதில்லை, அவங்க எப்படி ஏதுன்னு
தெரிஞ்சிக்காம ஏதோ கோவத்துல பொத்தாம்படையா பேசுறது சரியில்லை.
அதை அப்பச் சொல்லவும் முடியாது.

மினிஸ்டர் ரோட் சிக்னலுக்கு கொஞ்சம் முன்னாடி வண்டியை ஓரங்கட்டி
நிப்பாட்டிட்டு, டக்குன்னு இறங்கினேன். என்னாச்சு மேடம்னு கேக்க?
உங்க பேரு என்னன்னு கேட்டேன்? சொன்னாரு. இதுக்குமேல நான்
வண்டி ஓட்ட மாட்டேன். அப்படின்னு சொல்லிட்டு வந்த ஆட்டோவை
பிடிச்சு வீட்டுக்கு வந்திட்டேன். அயித்தான் அப்ப ஊர்ல இல்ல.
அவரு வந்ததும் நடந்ததைச் சொன்னேன். ஆனா பெண்களுக்கு மரியாதை
தராத ஜன்மங்கள் இருக்கும் இடத்துக்கு போகக்கூடாதுன்னு முடிவு
செஞ்சிருந்தேன். ஒரு அவமானப்படுத்தப்பட்டது போல உணர்வு.

அயித்தான் மாருதி டிரைவிங் ஸ்கூலுக்கு போய் பேசறேன்னு சொன்னாரு.
நீங்க பேசுங்க நானும் பேசணும்னு சொன்னேன். அங்க போய் ரிஷப்ஷன்ல
இருந்தவங்க கிட்ட மேட்டரைச் சொல்ல,”ஐயோ! இப்படி நடந்திருக்குன்னு
தெரியாது?வேற இன்ஸ்ட்ரக்டரை வெச்சு வேணாம் சொல்லித்தர
சொல்றேன்னு சொன்னாங்க.” நான் அந்த ஆளுகிட்ட பேசணும்னு சொல்லி
போன் செஞ்சு,”ஐயா சாமி, சொல்லிக்கொடுப்பதுன்னா உன் மண்டையில
இருப்பதை அடுத்தவங்க மண்டைல ஏத்தறது இல்லை. அடுத்தவங்களுக்குள்
இருக்கும் திறமையை வெளிக்கொணர்வது தான். நான் ஒரு டீச்சர்.
நான் என்னவோ ஒண்ணுமே தெரியாம படிக்காத முட்டாள் ரேஞ்சுக்கு
பேசின. அன்னைக்கு நானும் சொல்ற நிலையில இல்லை. நீயும் கேக்கற
நிலையில இல்ல. அதான் இப்ப சொல்றேன். யூ ஆர் நாட் ஃபிட் டுபி அ
இன்ஸ்ட்ரக்டர்னு” சொன்னேன். பதிலே இல்லை. மாருதி ஸ்கூல்லேர்ந்து
அப்புறம் 3 தடவை போன் வந்திச்சு. பட் எனக்கு அந்த இடத்து மேல
இருந்த மதிப்பு போயிடிச்சு.

நிஜமா எனக்கிருந்த கோவத்துக்கு அந்த அமைப்பின் மீதும், அந்த ஆளின்
மீதும் கம்ளெய்ண்ட் கொடுக்கலாமான்னு இருந்தேன். தொலையுதுன்னு
விட்டுட்டேன்.

கோதாவரின்னு ஒரு தெலுங்குப்படம். அதுல கதாநாயகி ஒரு பொட்டீக்
வெச்சு நடத்துறவங்க. தன்னோட டிசைனைக்காட்டப்போன இடத்துல
ஒரு ஆளு கையப்பிடிச்சு இழுக்க, வீட்டுல அப்பா கத்தி கடையை
பூட்டிடறதாச் சொல்வாரு. அப்ப கதாநாயகி சொல்வாங்க,”ஒரு ஆம்பிளையால
என் கடையை மூட வேண்டிய நிலமை வந்திருக்குன்னு!” இந்த மாதிரி
தருணங்களாலத்தான் ஆண்கள் அப்படீன்னாலே வெறுக்கும் ஒரு மனப்பான்மை
வருது. பெண் என்றால் இளக்காரம்னு நினைக்கிற ஜன்மங்கள் இன்னமும்
இருக்காங்க என்பதுதான் நிஜம். இத்தனைக்கும் அந்த இன்ஸ்ட்ரக்டருக்கு
மிஞ்சிப்போன 26 வயசு தான் இருக்கும்.

காலை நேரங்களில் அங்கே நிறைய்ய லேடீஸ்தான் கோச்சிங்கிற்கு வருவாங்க.
என் நேரம் எனக்கு இப்படி ஒரு ஆளு சொல்லிக்கொடுக்க வாச்சிருந்தது.
குரங்கு புத்தி. பெண்கள் மேல அப்படி ஒரு இளக்காரம். ஏதோ இந்த ஒரு
ஆளு மட்டும்தான் அப்படின்னு இல்ல. இப்படி பலரும் இருக்காங்க. அவங்க
வீட்டுலயும் அம்மான்னு ஒருத்தி இருக்கான்னு நினைப்பே இருக்காது போல்.
தன் தாய், சகோதரி கிட்ட பக்குவமா நடந்துக்கும் ஆணுக்கு இப்படி
பெண்களை மட்டமா நினைக்கும் புத்தி வராது.

இப்பவும் மினிஸ்டர் ரோட்ல போகும் பொழுது நான் ஆனந்தமா
வண்டி ஓட்டின தருணத்தை நினைச்சு பாத்துப்பேன். அவ்வளவு
ரசிச்சு ஓட்டினேன் அன்னைக்கு.

இந்த உலகம் ஆண்கள் உலகம் தான். அப்படின்னு சொல்ல இதுவும்
ஒரு காரணம்.


பாட்டு கேக்கணுமா???

ஒரு 15 அல்லது 20 வருஷத்துக்கு முன்னாடி, எல்லார் வீட்டுலயும்
காலையில் எந்திரிச்சதும் மொதல்ல காபி போடுவதோடு ரேடியோவையும்
ஆன் செய்வது வழக்கமா இருக்கும். பக்திமாலை, செய்திகள் இதோடு
7.30க்கு திரைப்படப்பாடல்கள் (திருச்சி வானொலியில்) அப்புறம்
விவிதபாரதியில் 9 - 10 ... ஆஹா என்ன ஒரு சுகமான அனுபவமா
இருந்துச்சு.

ரேடியோ கேட்டுகிட்டே தண்ணி பிடிச்சு ஊத்துவது, மத்த வேலைகளைச்
செய்வதுன்னு எந்த வேலையும் தங்கு தடையில்லாம ஓடிக்கிட்டு இருக்கும்.
அத்தோட அலுப்பு தெரியாம இருக்க ரேடியோ. வம்சம் படத்துல ஒரு
சீன் வரும் அதை ரொம்ப ரசிச்சேன். கதாநாயகி ரேடியோவுல பாட்டு
கேட்டுகிட்டு இருக்க, பக்கத்து வீட்டு பாப்பா வந்து,” எங்கம்மா
ரேடியோவை சத்தமா வெக்கச் சொன்னங்கன்னு” சொல்லும். கரண்ட்
கட்டானா பேட்டரி ரேடியோ வெச்சிருக்கவங்க வீட்டுக்கு ஓடிப்போய்
நாடகவிழா நாடகங்கள் கேட்டவங்க அதிகம்.

இப்படி நிறைய்ய கொசுவத்தி நமக்குள்ள இருக்கும். திரைப்படபாடல்கள்
இப்பொழுதையதைப் போல இல்லாமல் நெஞ்சை வருடும், மனதை
மயக்கும் ஒரு முக்கியமான காரணியா இருந்திருக்கு. படம் நல்லா
இல்லாட்டியும் பாடல்களால கலெக்‌ஷன் நிறைய்ய பாத்த படங்களும்
இருக்கு.

பாட்டு கேக்க இப்ப ரேடியோவை நம்பித்தான் இருக்கணும்னு இல்லை.
டேப்ரெக்கார்டரைத் தாண்டி, சிடி தாணி கைவிரலைவிடவும் சின்னதான
ஐபாட்டில் எம்புட்டோ பாடல்களை வெச்சுக்கிட்டு கேக்கலாம். ஆனாலும்
இந்தக் காதுல ஹெட் போன் வெச்சு கேப்பதை விட பேக்க்ரவுண்ட்ல
பாட்டு ஓடிக்கிட்டே இருக்கணும், நாம நம்ம வேலையை செய்யணும்.
அதுதான் சூப்பர். அதுவும் ஹெட்போன் அதிகமா உபயோகிச்சா தலைவலி
வர்றதோட காது சீக்கிரம் கேக்காம போகவும் வாய்ப்பு இருக்கு.

வலைத்தளத்துல நமக்குத் தேவையான பாடல்களை செலக்ட் செஞ்சு
கேக்க எத்தனையோ தளங்கள் இருக்கு.

WWW.Dhingana.com அப்படின்னு ஒரு வலைத்தளத்துல பாடல்கள் கிளாரிட்டி
நல்லா இருக்கு. தமிழ், ஹிந்தி, பக்தி பாடல்கள் இருக்கு. இதோ ஒரு
பாட்டு உங்களுக்காக.


எந்திரன் படத்து இந்த பாட்டு கிளாரிட்டி சூப்பர்!!!!


எப்பவும் வலைத்தளத்திலேயே கிடப்பவர்களுக்கு வேலையுடன்
பாடல் கேட்க இந்தத் தளமும் இருக்கிறது என்று சொல்ல ஆசைப்பட்டேன்.

எஞ்சாய்!!!!!

Tuesday, June 14, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 14/6/11

இடி மின்னலோட மழை பெஞ்சுகிட்டு இருக்கும்பொழுது சர்தார்ஜி
ஒருத்தர் அடிக்கடி வெளியே வந்து வானத்தை பார்த்து சிரிச்சாராம்.
எதுக்குன்னு கேட்டா,”யாரோ போட்டோ பிடிக்கறாங்க!!அதான் வெளிச்சம்
வருது. அதுக்காகத்தான் சிரிச்சேன்” அப்படின்னு
சொன்னாரம்!!!

இப்ப ஹைதையிலயும் சிலர் வண்டி ஓட்டவா?சிரிக்கவான்னு
குழம்பி அதனால ஆக்சிடண்ட் ஆகக்கூடிய சாத்தியங்கள் இருக்கு. :))
டிராஃபிக் கான்ஸ்டபிள்ஸ் கையில கேமிராவை கொடுத்து
வெச்சிருக்காங்க. பி.சி.ஸ்ரீராம்னு நினைச்சு ஓடியாடி, புகுந்து
போட்டோ பிடிக்கறாங்க. டிராபிக்கை மதிக்காம போகற வாகனங்களை
போட்டோ பிடிச்சு, அந்த வண்டி நம்பருக்கு “லவ் லெட்டர்” அனுப்புறாங்க.
பேப்பர்ல யார் யாருக்கெல்லாம் லவ் லெட்டர் போனிச்சுன்னு அறிவிப்பு
வேற வருது.

ட்ராபிக் கான்ஸ்டபிள் ஓடியாடி போட்டோ பிடிப்பது சரி, ஆனா சில
இடங்களில் சிக்னிலேயே கேமிராவை வெச்சிருக்காங்க. பளிச் பளிச்சின்னு
போட்டோ பிடிக்குது அந்த கேமிரா. அதுலயும் இரவு நேரத்துல இந்த
வெளிச்சத்துனால வண்டி ஓட்டுனருக்கு கஷ்டம் இருப்பதை புரிஞ்சிக்கிறமாதிரி
தெரியலை!!!

*******************************************************************

அனுபம் கெர். ஹிந்தியில் வில்லன்,குணசித்திர நடிகர். அவரு நடிப்பு
பயிற்சிக்காக ஒரு பள்ளி தொடங்கி நடத்திகிட்டு இருக்காரு. நடிப்போட
இன்னொரு பயிற்சியும் அங்கே கிடைக்குது. அது THE POWER WITHIN.
அந்த பயிற்சி பத்தி தெரிஞ்சிக்க இங்கே போய் பார்க்கலாம்.
Deccan chronicle நாளிதழில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவர்
எழுதும் கட்டுரையை தவறாம படிக்கிறேன். ஒவ்வொண்ணும் அற்புதம்.

வாழ்த்துக்கள்.

****************************************************************

நீதா அம்பானி- முகேஷ் அம்பானி அவர்களின் மனைவி. எப்படி
ஸ்லிம்மா,ட்ரிம்மா இருக்காங்கன்னு அவங்களை பாக்கும் போதெல்லாம்
ஆச்சரியம்மா யோசிப்பேன். தன்னோட உடம்பை மெயிண்டென்
செய்வது ரொம்ப முக்கியம்னு நினைச்சு கட்டுகோப்பா வெச்சிருக்காங்கன்னு
சந்தோஷப்பட்டிருக்கேன். இந்த ஃபோட்டோவி பார்க்கும் வரை
அவங்கமேல ஒரு மதிப்பு இருந்துச்சு. மேல அவங்க போட்டோவை
பாத்தீங்கள்ல!! கீழே இருக்கும் போட்டோவை கொஞ்சம் பாருங்க.

இது முகேஷ்-நீதா தம்பதிகளின் மகன்கள். தன்னை மட்டும் கவனிச்சா
போதாது, தன் பசங்களையும் கொஞ்சம் கவனிக்கணும்னு அவங்களுக்கு
யார் புரிய வைப்பது????
*********************************************************************
ஆந்திரா அரசியல் ரொம்ப கேவலமா இருக்கு!! என்ன நடக்குதுன்னே புரியலை.
காங்கிரஸ் ஆட்சி Y.S.R செத்ததுக்கப்புறம் ரொம்ப கேவலமா இருக்கு.
(அதுக்கு முன்ன கேவலமா இருந்துச்சு) எதிர் கட்சியான தெலுகு தேசத்தில்
வாரிசு உருவாக்குவதுல பிசியா இருக்காரு சந்திரபாபு நாயுடு. தன்
மகன் லோகேஷை முன்னிறுத்தும் வேலையில் இருப்பதால் ஆந்திராவைப்
பத்தி அவரும் கவலைப்படலை. பிராஜ ராஜ்யம் ஆரம்பிச்சாரு சிரஞ்சீவி.
கேப்டன் கணக்கா ஏதும் செய்வாருன்னு பாத்தா அவரு காங்கிரஸோட
இணையப்போறாரு!!!

நாங்க மட்டும் சும்மா இருப்போமான்னு தெலங்கானா கட்சி காரங்க்
பந்த்,போராட்டம் தீவிரமா இருக்கும்னு அறிவிச்சிருக்காங்க.
ஒரு காலத்துல முன்னனி மாநிலமா இருந்த ஆந்திரா ஒரு 15 வருஷம்
பின் தங்கிடிச்சு!!!
*******************************************************************

ஐ.ஐ.டி,ஏ,இ.இ. பரிட்சை எழுதினவங்க/எழுதப்போறவங்களுக்கெல்லாம்
புது பிரச்சனை ஒண்ணு வந்திருக்கு. இதுவரைக்கும் நுழைவுத்தேர்வில்
கணக்கு,அறிவியல் மட்டும்தான் இருந்தது. ஆனா அதுல டாப் ரேங்க்
வாங்கினவங்களுக்கு கூட ஆங்கில அறிவு அம்புட்டா இல்லயாம். அதனால
கல்லூரில சேரும் முன் ஆங்கில அறிவு சோதிக்கும் பரிட்சை எழுதணுமாம்!
அதுல ஃபெயில் ஆகிட்டா, காலேஜுல சேத்துகிட்டு முதல் செமஸ்டருக்குள்
ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துகிட வேணுமாம். இந்தக் கொடுமைக்கு
ஆங்கில மார்க்கும் முக்கியம்னு அதுக்கும் சேர்த்தே டெஸ்ட் வெக்கலாமே,
இல்லாட்டி நுழைவுத் தேர்வையே எடுத்திட்டு +2 மதிப்பெண்ணை வெச்சே
அட்மிஷன் கொடுக்கலாம். உனக்கு அறிவியல் தெரியுது! ஆங்கிலம் தெரியலைன்னு
பசங்களை குழப்ப வேணாமே!!
****************************************************************************

நவாப்பழம் சிலருக்கு பிடிக்காது. அதோட துவர்ப்பு சுவை ஒருபக்கம்,
நாக்கு கலர் மாறுது, தொண்டை கட்டும் அப்படின்னு சிலர் சொல்வாங்க.
ஆனா நவாப்பழம் சாப்பிடுவது ரொம்ப நல்லது. சர்க்கரை வியாதிக்கு
சிறந்த மருந்தா ஆயுர்வேதம் சொல்வது நவாப்பழத்தைத்தான். சர்க்கரை
வியாதி இல்லாதவங்களும் சாப்பிடுவதால நோய் வரும் வாய்ப்பு குறைவுன்னு
மருத்துவ உலகம் சொல்லுது.

சீசன் பழங்களில் கிடைக்கும் சத்துக்கள் உடம்புக்கு முறையா கிடைக்கணும்.
அந்தந்த சீசனுக்கான பழத்தை கண்டிப்பா சாப்பிடுவதுன்னு கொள்கை
வெச்சுகிட்டாலே போதும்.

நவாப்பழத்தை கழுவி, உப்பு போட்டு பிசிறி வெச்சிருக்கேன். நான் போய்
எஞ்சாய் செய்யறேன்.

Monday, June 13, 2011

பூண்டு ஊறுகாய் ஆந்திரா ஸ்டைல்

ரொம்ப நாளாக எப்பம்மா செய்யப்போறன்னு? ஆஷிஷ் கேட்டுகிட்டு இருந்தாப்ல.
தொணதொணப்பு ஜாஸ்தியாகி ஒரு வழியா செஞ்சு கொடுத்திட்டேன். :))
எங்க அப்பாவுக்கு பூண்டுன்னா ரொம்ப பிடிக்கும். ஆஷிஷும் அதே மாதிரிதான்.
பூண்டில் என்ன செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவான். அதிலும்
அவனுக்கு ரொம்ப பிடிச்சது பூண்டு குழம்பு/ பூண்டு ஊறுகாய்.

இந்த ஊறுகாய் போடுவது ரொம்ப சிம்பிள் (பூண்டு உரிப்பது ஒண்ணு தான்
கஷ்டம்). தேவையான பொருட்களை பாப்போம்.

உரித்த பூண்டு - 300 கிராம்,
மிளகாய்த்தூள் - 3/4 கப்,
உப்பு - 1/2 கப்
எலுமிச்சை ரசம் - 1 கப்
எண்ணெய் - 1 கப்
பெருங்காயம் - கொஞ்சமாக
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை.
வறுத்து பொடிக்க:
வெந்தயம் - 1/2 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
தனியா - 1/2 ஸ்பூன்,

செய்முறை பாப்போம்:

வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் தனியா, சீரகம்,
வெந்தயம் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்சியில் கொஞ்சம்
நர நரவென பொடித்துக்கொள்ளவும்.



பூண்டை தண்ணீர் விடாமல் குக்கரில் வைத்து ஸ்டீம் செய்து
எடுக்கவும். தண்ணீர் விடாமல் ரெண்டு விசில் விட்டால் கூட
போதும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு
சேர்த்து வெடித்ததும் பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

உடன் பூண்டு சேர்த்து நன்கு கலந்ததும், காரத்தூள், உப்பு,
பொடித்து வைத்திருக்கும் பொடி சேர்த்து உடன் அடுப்பை
அணைத்துவிடவும். நன்கு கிளறிவிட்டு எலுமிச்சை ரசத்தை
ஊற்றி கிளறவும். முதலில் மிக கெட்டியா இருக்கும். கொஞ்ச
நேரத்தில் எண்ணெய் பிரிந்து வந்து விடும்.

சுவையான, பூண்டு ஊறுகாய் ரெடி. காற்று புகாத பாட்டிலில்
போட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். 3 மாதம் வரை கெடாது.
ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை.


Friday, June 10, 2011

நம்மை காக்கும் தேவதைகள்!!!!

காலங்காலமாக நம் முன்னோர்கள் நமக்குச் சொன்னதில் முக்கியமானது
நல்லவற்றையே சொல்ல வேண்டும். ஏன் நல்லதையே சொல்லவேண்டும்?
என்று கேட்டாள், “நமக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றி தேவதைகள்,
தேவதூதர்கள் இருப்பார்கள். நாம் சொல்வதற்கெல்லாம் ”ததாஸ்து”
(அப்படியே ஆகுக!) என சொல்வார்கள். நாம் நல்லதையே சொன்னால்
நல்லதே நடக்கும். எண்ணம் நல்லதாக இருந்து, பேசுவதும் நல்லதாக
இருந்தால் பிரச்சனையே இல்லை என்பதைத்தான் பெரியவர்கள் இப்படி
சொன்னார்கள்.

ஆனால் உண்மையில் நம்மை சுற்றி தேவர்கள், தேவதைகள்,தேவ
தூதர்கள் இருக்கிறார்களா??? நம்பிக்கைதான் வாழ்க்கை. அப்படி
நம்புபவர்களுக்கு ஆம் இருக்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள்
மேற்கொண்டு தயவு செய்து படிக்க வேண்டாம் என தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.

என் உறவினர் ஒருவரின் மூலமாக எனக்கு இந்த விஷயம் தெரிய
வந்தது. நம்பிக்கை இல்லாமலேயே இருந்தேன். என் அனுபவம்
என்னை நம்ப வைத்தது. அந்த அற்புதத்தை பகிர ஆசைப்படுகிறேன்.
யான் பெற்ற இன்பம் இவ்வயகமும் பெற இந்தப் பதிவு. Angel therapy
எனும் புத்தகத்தையும் பரிசளித்து சென்றிருந்தார் அந்த உறவினர்.

இந்தப் புத்தகம் பெரிய புத்தகக்கடைகளில் கிடைக்கிறது. இதை
வாங்கிப் படித்தால் கூட நாம் புரிந்துக்கொள்ள முடியும்.

Doreen virtue என்பவர் எழுதிய புத்தகம் இது.
ஏஞ்சல் திரப்பி பயிற்சியில் இவரது பயிற்சிதான் சிறந்தது
என்கிறார்கள். இதுவும் ஒரு வகை ஹீலிங் தெரப்பி.
நம் இந்தியாவில் இவரது சிஷ்யை
ஒருவர் டெல்லியில் அனுமதி பெற்று வகுப்புக்கள் எடுப்பதாக
கேள்விப்பட்டேன். பயிற்சி எல்லாம் கூட இல்லாமல் நம்மால்
தேவதைகளை உணர முடியும். எப்படி என்கிறீர்களா? வாருங்கள்
அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.



இந்த தேவதைகள் கடவுளின் தூதர்கள். நம்மைச் சுற்றி
எப்போதும் இருக்க பணிக்கப்பட்டவர்கள். நாம் பேசுவதை எல்லாம்
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் அழைத்தால்
உதவிட ஆசையோடு காத்திருக்கிறார்கள்.

நாம் பிறக்கும் பொழுதே நமக்கே நமக்கென ப்ர்தயேகமான
காக்கும் தேவதையுடன் தான் நாம் பிறக்கிறோம். ஆனால் நமக்கு
அது தெரியாது. அவரை அறிந்து அந்தப் பெயரைக்கொண்டு
அழைத்தால் நம் பிரச்சனையை, குறையை தீர்க்க ஓடோடி
வருவார்கள் என Angel therapy பயிற்ச்சி பெற்றவர்கள்
சொல்கிறார்கள்.

நம் guardian angel யை அறிந்துக்கொள்வது எப்படி??
அமைதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, தேவைப்பட்டால்
மெலிதான இசையை ஓட விடுங்கள் இல்லையேல் மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்து தியானம் செய்வது போல சுவாசத்தை தொடர்ந்து
கவனித்துக் கொண்டே இருங்கள். மனதையும் உடம்பையும் ரிலாக்ஸ்
செய்து கொண்ட பின் வேறெந்த எண்ணங்களும் மனதில் ஓடாமல்
ஆல்ஃபா லெவலை அடைந்து (புருவங்களுக்கு இடையே கவனத்தை
செலுத்தி, மனதை ஒருநிலை படுத்தி 10லிருந்து 1 வரை
எண்ணிக்கொண்டு வந்தால் மனம் ஆல்ஃபா லெவலுக்கு செல்லும்)
அந்த சூழலில் நாம் பிறந்த தேதியை சொல்லிக்கொண்டு
“என்னைக் காக்கும் என் ப்ர்த்யேக தேவதையை உன் பெயரை
நான் அறிந்துக்கொள்ள வைத்திடு என்று கேட்க வேண்டும்.

எந்த பெயர் அடிக்கடி வருகிறதோ அதுவே நம் காக்கும் தேவதை.
ஒரு தேவதையின் பெயர் நமக்கு காதில் சொல்வது போல
இருக்கலாம், சில தேவதைகள் பெயர்கள் ரொம்பவே வித்தியாசமாக
இருக்கும். அந்தப் பெயர் தெரிந்ததும் அந்த தேவதையை அழைத்தால்
நமக்கு தேவையானதை செய்து கொள்ள முடியும்.

guardian angels, angels இவர்களை மேற்பார்வையாளராக இருந்து
கவனிப்பது archangels. இவருக்கு சர்வ வல்லமையும் உண்டு.
முக்கியமான archangels பற்றி பார்ப்போம்.



1. Arch angel Michael, Gabriel, Uriel, Raphel. இவர்கள்
முக்கியமானவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு.
அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே செல்லவும்.

கிறிஸ்துவர்களுக்கு இந்த தேவதைகளின் பெயர்கள் புதிதல்ல.
புனித நூலான பைபிளில் இந்த தேவ தூதர்கள் பற்றி இருக்கிறது.

டொரின் விர்ச்சு அவர்களின் தளத்தில் காலிங் கார்ட்ஸ் எனப்படும்
தேவதைகள் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் எனும் பக்கம்
கிடையாது. ஆனால் இந்தத் தளத்தில் நமக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏதேனும் குழப்பம்,பிரச்சனை இருக்கும் நேரத்தில் இந்த தளத்தை
நாடி தேவதைகள் நமக்குத் தரும் செய்தி என்ன என்பதை தெரிந்துக்
கொள்ளலாம்.இதற்கு ஏதும் பணக் கட்டத் தேவையில்லை.
(கவனம்: ஏஞ்சல் கார்ட் ரெக்வஸ்ட் என்று இருப்பதை அழுத்தி
நம் தேவையைச் சொன்னால் அதற்கு பணம் கேட்பார்கள்)
அவர்கள் அழைத்தால் வந்து சொல்லும் தேவதை நமக்கும் உதவும்
என்பதால் இடைத் தரகர்கள் யாருமில்லாமல் நாமே தெரிந்துக்
கொள்ளலாம். தேவதையிடமிருந்து செய்திக்கு இங்கே போய்
பார்க்கவும்.

இங்கேயும் ஒன்று இருக்கிறது.


இந்தத் தளத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த நீர்வீழ்ச்சி தியானம்.


healing prayer

free healing card

angel healing

ப்ரானிக் ஹீலிங், ரெயிகி ஹீலிங், கிறிஸ்டல் ஹீலிங் வகையில் இந்த
ஏஞ்சல் தெரப்பியும். பாசிட்டிவிட்டியை பரப்பும் நல்ல செயலாக
இதைக் கருதுகிறேன்.

துயரத்தைச் சொன்னால் மனப்பாரம் குறையும் என்பார்கள். மனிதர்களிடம்
சொல்லி சில சமயம் தீர்வு கிடைக்காமல் சிக்கல் தீவரமாகிவிட வாய்ப்புக்கள்
ஏராளம். நாம் சொல்வதை தேவதைகள் கேட்கிறார்கள், நமக்கு சரியான
பாதையைக் காட்டுவார்கள் என்று நம்புவதில் தவறில்லையே.

guardian angels, angels இவர்களை மேற்பார்வையாளராக இருந்து
கவனிப்பது archangels என்றால் இவர்கள் அனைவரையும் மேற்பார்வை
செய்வது நாம் கடவுள் என பூஜித்து மகிழும் தெய்வம். தெய்வ அருள்
பெற்று நமக்காக நம்மை சுற்றி வரும் தேவதைகள் நமக்கு உதவுகிறார்கள்,
உதவுவார்கள் என்ற நம்பிக்கையை பகிர எண்ணி இந்தப் பதிவு.

விரும்பியவர்கள் செய்து பார்த்து சொல்லுங்க. நம்பிக்கை இருந்தால் மட்டுமே.




Wednesday, June 08, 2011

100%love

காதலின் பொன் வீதியில்.... என்ன இருக்கும் காதல்
மட்டும்தானா??? பிரச்சனைகளும் இருக்குமே. காதலுக்கும்
எதிரிகளாக பெரியவர்களையே காட்டி காட்டி அலுக்க வைத்துவிட்ட
இயக்குனர்களின் மத்தியில் காதலர்களுக்கு இடையே இருக்கும்
ஈகோவை வில்லனாக்கி இயக்குனர் சுகுமார் எடுத்திருக்கும்
படம் தாம் 100%லவ்.

இதயத்தை திருடாதே ஹீரோ நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா,
தமன்னா ஜோடியில் வெளி வந்திருக்கும் இப்படத்தின் பாடல்கள்
ஆகட்டும், படமாகட்டும் சக்கப்போடு போடுகிறது.



தமிழில் மார்க்கெட் போன நடிகை தமன்னாவுக்கு தெலுங்கில் இந்தப் படம்
சூப்பர் இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கிறது. தனது கதாபாத்திரத்தை
உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் தமன்னா. டயலாக் டெலிவிரி,
உணர்ச்சி பூர்வமான நடிப்பு என அசத்தியிருக்கிறார் தமன்னா. நாகசைதன்யாவும்
குறைவில்லை.

கதை என்ன? கிராமத்திலிருந்து வரும் அத்தைமகள் மகாலட்சுமி (தமன்னா)
மாமன் மகன் பாலு (நாகு ஜூனியர்) படிக்கும் கல்லூரியில் சேர்கிறார்.
கல்லூரியில் ஃபர்ஸ்டாக இருக்கும் பாலு படு ஸ்ட்ரிக்ட் பார்ட்டியாக
காட்டிக்கொள்கிறார். அது ஏதும் இல்லாவிட்டாலும் போகப்போக தமன்
படிப்பில் முன்னேறி பாலுவை பீட் செய்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது
ஈகோ. மஹாலட்சுமியின் அப்பா மகளுக்கு ஒரு வரன் பார்க்க அவரை
மணக்க மறுக்கிறார். பாலுவின் உதவியோடு அந்த சம்பந்தத்தை தட்டிக்
கழிக்கிறார் மஹாலட்சுமி. பாலுவும் மஹாலட்சுமியும் காதலிக்க துவங்கும்
பொழுது மஹாலட்சுமி பாலுவின் ஈகோவை தாக்கிட இருவரும் பிரிகிறார்கள்.
இருவரும் இணைகிறார்களா????? வெள்ளித் திரையில் பார்க்க வேண்டிய
ஒரு படம்.



இப்போதைய யூத்களின் காலர் ட்யூனாக மட்டுமல்ல அவர்களின்
மனதை சொல்லும் வரிகளாக இந்தப் பாடல். :))




தமன்னாவுக்கும், பாலுவுக்கும் வெவ்வேறு வரன்களுடன் நிச்சயதார்த்தம்
முடிந்துவிட்ட சூழலில் பாலுவின் கம்பெனிக்கு ஏற்படும் நஷ்டத்தை
தடுத்து நிறுத்த இரவும் பகலும் பாலுவுடன் சேர்ந்து தோள் கொடுக்கிறார்
தமன்னா. தமன்னாவின் வருங்காலக் கணவன் வந்து ,”இப்படி நேரம்
கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வருவது தவறு!” என சொல்லும் பொழுது
தமன்னா,” நம் திருமணம் நாளை கழித்துதான். என் கழுத்தில் தாலி
ஏறும் அந்த நொடி வரை நான் இந்த வீட்டு மகள். என் கடமையை
நான் செய்ய வேண்டும். நீயும் புரிந்துகொண்டு, உன் வீட்டினருக்கும்
புரியவைக்க வேண்டும்!” என தழுதழுக்கும் குரலில் கூறும் இடம் சூப்பர்!!

பாலுவின் பாட்டி தாத்தாவாக கே.ஆர்.விஜயா, விஜயக்குமார் ஜோடி.
இருவரின் பிரிவுக்கும் கூட காரணம் இந்த ஈகோ தான். இடைவேளைக்குப்
பிறகான சினிமாவின் பகுதியில் குடும்ப உறவுகளும், அதன் முக்கியத்துவத்தையும்
கூறும் படி அழகாக அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

அதுவும் லேப்டாப்பில் தன் மனைவியின் வீடியோவை பார்க்கும் விஜயகுமார்,
கணவரின் வீடியோவை பார்க்கும் கே.ஆர்.விஜயா காட்சி மனதில் நிற்க்கிறது.


மெலடி,சோகம் என பாடல்கள் இருந்தாலும் டைட்டில் சாங் போல
வரும் இந்தப் பாட்டை பாடியது யார் என்று சொன்னால் அசந்து போவீர்கள்.
கண்கள் இரண்டால் பாட்டில் கண்களால் கவிதைச் சொன்ன சுவாதியை
பாடகியாக்கி இருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.
Get this widget | Track details | eSnips Social DNA


இளைஞர்கள் இந்தப் படத்தின் மீது 100%காதல் கொள்ள வைக்கும்
என்பதில் சந்தேகமே இல்லை. பாடல்களும் அருமை.


ஹைதை ஆவக்காய பிரியாணி - 8/6/11

ரொம்ப நாளாச்சு பிரியாணி போட்டு. அதான் ஆரம்பமே
ஆவக்காய பிரியாணி.

CELEBRITY CRICKET LEAGUE அப்படின்னு ஒண்ணு ஆரம்பிச்சு
கோலிவுட், சாண்டல்வுட், டோலிவுட், பாலிவுட் டீம்கள்
மேட்சு நடந்துச்சு பாத்தேன். நம்ம வலைப்பூக்களில் வருவதை
இப்ப எல்லா தரப்பினரும் ஆர்வமா படிப்பதால இந்த மேட்டரை
சொல்லி வைக்கிறேன். தெலுகு வாரியர்ஸ் டீம் டோலிவுட் நடிகர்கள்
இருக்கும் டீம்னு எல்லோருக்கும் தெரியும்.



அந்த டீம் மெம்பர்ஸுல ஒரு பையனை சேர்த்திருக்காங்க பாருங்க.
அதுதான் எனக்கு சரிப்பட்டு வரலை. தாத்தா பெரிய நடிகர்,
அப்பா பெரிய நடிகர், அம்மாவும் அந்தக்கால நடிகை என்பதாலேயே
இவர் விளையாடுவதைப் பத்தி யாரும் கேக்காம இருக்கலாம்!!! ஆனா
பச்சக்குழந்தையா இருந்தப்ப சுசீந்திரின்னு பேபீஸ் டே அவுட் படத்தை
தெலுங்கில் எடுத்தப்ப நடிச்ச ஒரே காரணத்துக்காக நாகார்ஜுனா-அமலாவின்
மகனை கிரிக்கெட்டில் சேத்திருக்காங்க. இதுல இன்னொரு மேட்டர்
என்னன்னா? அகில் கிரிக்கெட்டில் பயிற்சி பெற்ற ப்ளேயர். அவரை
நேஷனல் லெவலிலோ, ஸ்டேட் லெவலிலோ சேர்க்க முடியாட்டி
இப்படி டோலிவுட் டீம்ல் சேர்ப்பது எந்த ஊரு நியாயம்?????
நடிகர்கள் விளையாட்டுன்னு சொல்லிப்புட்டு இப்புடி சின்னப்புள்ளைய
சேர்த்துகிட்டு விளையாடுவது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!!

போன தடவை டோலிவுட்டுக்குள்ளே நடந்த கிரிக்கெட் மேட்சில்
நாகார்ஜுனா டீம் ஜெயிக்க அகில்தான் காரணம். இதெல்லாம்
நல்லாவா இருக்கு???

நம்ம சென்னை டீம் முதல் மேட்ச்சில் அற்புதமா விளையாடியதற்கு
வாழ்த்துக்கள்.
***************************************************************
இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்திருக்கு. வழக்கம்போல
ஆந்திரா தான் டாப்பு!!!! பட்டையக் கிளப்பறாங்க பசங்க.

எண்டரன்ஸ் எக்ஸாம்கள் எல்லாத்தையும் எடுத்திடலாமா? இல்லாட்டி
நேஷனல் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்டுன்னு ஒண்ணே ஒண்ணு வைக்கலாமான்னு
யோசிச்சுகிட்டு இருக்காங்களாம். ஆன்லைனில் ஓட்டெல்லாம்
போடச் சொல்லி கேட்டுகிட்டு இருக்குது அரசு.
ஆந்திராவும்,தமிழ்நாடும் மட்டும்தான் எதிர்க்கறாங்க.

பாப்போம்!!!
***************************************************************

வருண பகவான் ரொம்ப நாளைக்கப்புறம் சீக்கிரமா வந்திட்டாரு.
இந்த வாட்டி ஹைதையில் வெயில் 42 டிகிரியைத் தாண்டவில்லை.
அப்பப்போ சிறு தூறலும் போட்டதனால குளிரிச்சியவே இருந்துச்சு.

ஆனா போன தடவை பெய்த அதிக மழையால விளைச்சல்
குறைஞ்சு போச்சு!!! கிலோ 20 விக்கும் திராட்சைகள் இந்த தடவை
50,60 ரூபாய்க்கு வித்ததும் அதுவும் குறைவான அளவில்தான்
இருந்துச்சு. மாம்பழம் சீசன் நடக்குது. ஆனா அதுவும் மகசூல் கம்மிதான்.
விலையும் 30,60ன்னு தான் இருக்கு!!!

**********************************************************
2லேர்ந்து 3 வயசு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வேலையில்
சில பெற்றோர்கள் பிசியாக இருப்பாங்க. நாம நம்ம காலம் பரவாயில்லைன்னு
சந்தோஷப் பட்டுக்குவது போல ஆஷிஷ் வயசு இருக்கும் பசங்கள்லாமும்
சந்தோஷப்பட்டுக்க கூடிய இல்லாட்டி பேசக்கூடிய விஷயமா எனக்கு
தோணுவது நர்சரி, எல்கேஜி அட்மிஷன்!!!!

அப்பா அம்மாவுக்கு சும்மா ஒரு கலந்துரையாடல் மாதிரி வெச்சாங்க,
அப்புறம் அது நேர்முகத் தேர்வாக மாறி பெத்தவங்க வயித்துல
புளி கரைச்சிச்சுன்னா, இப்ப அட்மிஷம் ஃபீஸ். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஷிஷ் இப்ப 10த். ஐயாவுக்கு கூட எனக்கு அம்புட்டு செலவானதில்லை!
ஆனா நர்சரி பாப்பாவுக்கு பிரபல ப்ளே ஸ்கூலில் சேர்க்கணும்னா
வருஷத்துக்கு 30000!!!! இல்ல வேணாம் சாதாரணமான இடத்துல
சேக்கலாம்னா அது ஸ்கூல் மாதிரியே தெரியலை!! வீட்டுலயே ஒரு
ரூமை ஸ்கூலுக்குன்னு ஒதுக்கி(!!) வெச்சிடறாங்க. அந்த மாதிரி
ஸ்கூலுக்கும் மாசம் 1000 ரூபாயாம்!!!

எஞ்சினியரிங், டாக்டர் அட்மிஷன் எல்லாம் அப்புறம் ஆனா ஆவன்னா
கத்துக்கொடுக்க ஸ்கூலில் சேர்க்க சொத்துன்னு ஒண்ணு இருந்தா
அதை எழுதி கொடுத்திடச் சொல்லி கேப்பாங்க போல இருக்கே!!!
இந்தக் கால பெற்றோர் ரொம்பவே பாவம்!!!!!
***************************************************************
மகதீரா தெலுங்கு படம் தமிழ்ல டப்பிங் செய்யப்பட்டு வந்திருக்கு.
டப்பிங் படம் பார்ப்பது ஒரு கொடுமைதான். ஆனாலும் இந்தப்
படத்தை கண்டிப்பா பாருங்க. அரசர் காலம், இந்தக்காலம்னு
ஒரு நல்ல கலவையா இருக்கும் படம். காஜல் அகர்வால் ரொம்பவே
அழகா தெரிவாங்க. ராம் சரண் தேஜாவுக்கு இந்தப் படத்துக்கப்புறம்
அதிகமான ஃபேன்ஸ் சேர்ந்தாங்க.
***************************************************************
திஹார் ஜெயிலைப் பத்தி ஒரு மேட்டர் பார்ப்போம். சத்தியமா
இது கனிமொழி பத்தி இல்லை.
இந்த ஜெயில் ரொம்பவே வித்தியாசமானது. இங்கே இருக்கும்
கைதிகளை ஏதேனும் ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள வைக்கும்
நோக்கில் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து உள்ளேயே வேலை வாய்ப்பையும்
செய்யறாங்க. அதில் ரொம்பவே லாபம் கொடுக்கக்கூடியதா இருப்பது
பேக்கரி பொருட்கள். பிரட்,பிஸ்கட்ஸுன்னு வகைவகையா தயாராகுதாம்.



ஆரம்பத்தில் உள்ளே இருப்பவர்களின் தேவைகளுக்குன்னு தயார் செய்ய
ஆரம்பிச்சது இப்ப வெளி மார்க்கெட்டுக்கும் விற்பனைக்கு வருது.
அதில் கிடைக்கும் லாபத்தை வேலை பார்ப்பவர்களுக்கு கொடுக்கறாங்களாம்!
தரமும் சூப்பரா இருக்கு, விலையும் மலிவா இருப்பு என்பதுதான்
இதன் சிறப்பு.

TJ ஃபுட்ஸ் அப்படிங்கற பெயர்ல தில்லியிலும் அதன் சுற்று இருக்கும்
சில இடங்களிலும் இந்த பொருட்கள் கிடைக்கின்றன்.
வாழ்த்துக்கள்



Tuesday, June 07, 2011

வந்தேன்!! வந்தேன்!! வந்தேன்!!!!!!!!

எல்லோரும் சொளக்கியமா???
ஒரு வழியா லீவு முடிஞ்சிருச்சு. பசங்களுக்கு பள்ளிக்கூடம்
ஆரம்பிச்சாச்சு. சென்ற பதிவுல வந்து நான் பரிட்சை எழுத
வாழ்த்து சொன்ன அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றியைச்
சொல்லிக்கிறேன்.

ஆனா பரிட்சை எழுதலீங்க!!!! 3 மாசமாவே லோ பீபி ரொம்ப
ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்கு. அதுவும் ஏப்ரல், மே மாதத்துல
கிட்டத்தட்ட 10 நாளைக்கும் மேல பேசக்கூட முடியாம போயிடிச்சு.
ஸ்ட்ரிக்டா பெட் ரெஸ்ட்!!! காரணம் எல்லாம் பழசு தான்.
என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டா என் கூடவே ஒரு 8 வருஷமா இருக்கும்
PMS தரும் சைட் எஃபக்ட் தான் இது. :(( படும் கஷ்டத்தைப்
பார்த்து ஆஷிஷ் பரிட்சை எல்லாம் வேணம்மா! செப்டம்பரில்
உடம்பு நல்லா இருந்தா பாத்துக்கலாம்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாப்ல.

இந்த உடல் கஷ்டத்தால பசங்களை அதிகமா வெளியில கூட
கூட்டிகிட்டு போக முடியாட்டியும் வீட்டுலையே முடிஞ்ச வரைக்கும்
அவங்களோட அளவளாவிகிட்டு இருந்தேன். வழக்கம்போல
என் கண்மணிகள் இரண்டு பேரும் உதவியா இருந்தாங்க.
அப்பிடி இப்படின்னு அவங்க லீவு முடிஞ்சு நாளையிலிருந்து
வகுப்புக்கள் ஆரம்பம்.

இந்த லீவுல ஆஷிஷ் அண்ணா கிடார் கத்துகிட்டாரு. எனக்கு
பிடிச்ச சுராலியாகே தும்னே ஜோ தில்கோ பாட்டு வாசிக்கிறாரு.
அப்புறமா வாசிக்கிறதை ரெக்கார்ட் செஞ்சு அப்லோட் செய்யறேன்.
அம்ருதம்மாவுக்கு இந்த மாசம் இல்லாட்டி அடுத்த மாசம் வாக்குல
டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் எக்ஸாம் பியானோவுக்கு இருக்கும்.

இப்ப கொஞ்சம் பரவாயில்லை. அதனால வழக்கம்போல இல்லாட்டியும்
முடிஞ்சப்பல்லாம் பதிவெழுதுவேன். வழக்கம்போல உங்கள் ஆதரவுகளை
அள்ளித் தர கேட்டுக்கறேன். ச்சே. எலக்‌ஷ், அதுக்கப்புறம் ரிசல்ட்னு
பாத்து அதே மாதிரி டயலாக்கா வருது. :))))

சரி பட்டையை கிளப்ப நான் ரெடி. நாளை முதல் பதிவுகள் வரும்.
தங்கமணிக்கு எதிரா பதிவுகள் போடறவங்களுக்கு முக்கியமா
எச்சரிக்கை கொடுத்து வைக்கிறேன். :)))

வர்ட்டா... குட் நைட்.