Total Pageviews

Friday, July 29, 2011

புளி மஹாத்மியம்!!!!

புளிப்புச்சுவை - அறுசுவையில் ஒன்று. எலுமிச்சையிலும்
புளிப்பு இருக்கு என்றாலும் புளியில் கிடைக்கும் அந்த சுவையே தனிதான்.
புளி அதிகமாக சாப்பிட்டால் பிரச்சனையாகும் என பலர் நினைப்பதுண்டு.
வெயில் காலத்தில் அதிகம் சாப்பிட்டால் உடல் அதிகமாக சூடாகும்.
ஆனால் அதுவே மழைக்காலம், குளிர்காலங்களில் புளியை உணவில்
சேர்த்துக்கொண்டால் இதமான சூடு உடலுக்கு கிடைக்கும்.

ஜுரம் இருக்கும் பொழுது அல்லது ஜுரம் விட்ட 4 நாட்களுக்கு
புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. ”போன காய்ச்சலை புளியிட்டு
அழைச்ச மாதிரி” என்பார்கள் பெரியவர்கள். ஜுரம் திரும்ப வாய்ப்பு
அதிகம் என்பதால்தான் புளியை தவிர்க்கச் சொல்வார்கள். ஆனால்
அந்த சமயத்தில் புளிப்பாக சாப்பிட விரும்பினால் எலுமிச்சம்பழம்
சேர்க்கலாம்.

புளிக்கும் மருத்துவ குணம் இருக்கு. காலில் சுளுக்கு ஏற்பட்டால்
புளியை ஊறவைத்து நன்கு திக்காக கரைத்துக்கொண்டு மஞ்சள்
தூள் சேர்த்து வாணலியில் கொதிக்க விட்டு இளம் சூடாக பத்து
போல போட்டு வந்தால் வலி, வீக்கம் குறைந்து சுளுக்கும் குறையும்.
இது என் அம்மம்மா கைமருத்துவம். என் அனுபவம். :))

விக்கிப்பீடியாவில் இதன் மருத்துவ குணங்களாக சொல்லப்பட்டிருப்பதை
தருகிறேன். தமிழாக்கம் செய்ய நேரமில்லை.
Anthelminthic (expels worms), antimicrobial, antiseptic, antiviral, asthma, astringent, bacterial skin infections (erysipelas), boils, chest pain, cholesterol metabolism disorders, colds, colic, conjunctivitis (pink eye), constipation (chronic or acute), diabetes, diarrhea (chronic), dry eyes, dysentery (severe diarrhea), eye inflammation, fever, food preservative, food uses (coloring), gallbladder disorders, gastrointestinal disorders, gingivitis, hemorrhoids, indigestion, insecticide, jaundice, keratitis (inflammation of the cornea), leprosy, liver disorders, nausea and vomiting (pregnancy-related), paralysis, poisoning (Datura plant), rash, rheumatism, saliva production, skin disinfectant/sterilization, sore throat, sores, sprains, sunscreen, sunstroke, swelling (joints), urinary stones, wound healing (corneal epithelium).
ஸ்ஸ்ஸ்ஸ் எம்மாம் பெரிய்ய்ய லிஸ்ட் இல்ல.

சரி புளியை வெச்சு எம்புட்டோ சமைப்போம். நான் ஆந்திரா ஸ்டைல்
புளியோதரையும், ரசவாங்கிக்கான ரெசிப்பி சொல்றேன்.

புளியோதரை:
ஆந்திரா ஸ்டைல் புளியோதரை நல்லா சூப்பர் டேஸ்டா இருக்கும்னு
முன்பே சொல்லியிருக்கேன்.
முதலில் காய்கறிகளுக்கு போடும் பொடி செஞ்சு வெச்சுக்கோங்க.
(இதை கத்திரிக்காய, வாழக்காய், உருளை, வெண்டக்காய் ஆகிய
கறிகள் செய்யும் பொழுது போட்டால் சூப்பரா இருக்கும்)

1 பங்கு கடலைப்பருப்பு, 1 பங்கு உளுத்தம்பருப்பு, 3/4 பங்கு தனியா,
15 மிளகாய் வற்றல், கொஞ்சம் வெந்தயம். இதை வெறும் வாணலியில்
அல்லது கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்து ஆறியதும் பொடிசெய்து
வைத்துக்கொள்ளவும்.

புளியை ஊறவைத்து நன்கு பிசைந்து மிக்சியில் ஒரு சுத்து எடுத்தால்
நல்ல புளி பேஸ்ட் கிடைக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,
வேர்க்கடலை, பெருங்காயம் மி.வற்றல் 2 எல்லாம் போட்டு தாளிக்கவும்.
தாளிதம் கொஞ்சம் கூடவே வேண்டும். அதில் முக்கால் பங்கு தனியாக
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மீதி இருக்கும் தாளிதத்தில் அரைத்து வைத்திருக்கும் புளி, மஞ்சள்தூள்,
கறிவேப்பிலை, உப்பு, நீளவாக்கில் இரண்டாக அரிந்துவைத்திருக்கும்
பச்சைமிளகாய்3 எல்லாம் போட்டு கொதிக்க விடவும். எண்ணெய்
பிரிந்து வரும்பொழுது 4 ஸ்பூன் காய்கறிப்பொடி சேர்த்து மேலும்
கொதிக்கவிடவும். நன்கு கெட்டியாகி எண்ணெய் மிதக்கும். அம்புட்டுதான்
புளி மிக்ஸ் ரெடி.



சாதம் கலக்கும் பொழுது உதிர் உதிராக வடித்த சாதத்தில் சூடாக
இருக்கும்பொழுதே பச்சை கறிவேப்பிலை போட்டு கலந்தால் கறிவேப்பிலையின்
ஜூஸ் அதில் இறங்கும். சாதம் சூடு ஆறியதும் தேவையான அளவு
புளி மிக்ஸ், உப்பு கலந்து தனியாக எடுத்து வைத்திருக்கும் தாளித்த
பொருட்களைச் சேர்த்தால் சூப்பர் புளியோதரை ரெடி. சாப்பிடும் பொழுது
அந்த பருப்புக்கள் கடுக் முடுக் என கடிபடும் ருசியே தனி. :))

அடுத்து ரசவாங்கி பாப்போம்:

ரொம்ப சிம்பிள் இது. கால்கிலோ கத்திரிக்காய். அதுவும்
எண்ணெய் கத்திரிக்காய் சைசில் இருந்தால் எண்ணெய் கத்திரிக்காய்க்கு
கீறுவது போல 4 ஆக கீறிக்கொள்ளவும்.
பெரிய கத்திரிக்காய் என்றால் குழம்புக்கு போடுவது போல பெரிதாக
வெட்டிக்கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து
நன்கு நீர்க்க கரைத்து வைத்துக்கொள்ளவும்.

மசாலாவுக்கு: அரைத்துவிட்ட குழம்புக்கு அரைப்பது போல
கடலைப்பருப்பு, தனியா, மிளகாய்வற்றல் வறுத்து தேங்காய் சேர்த்து
அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து கத்திரிக்காயைப் போட்டு
நன்கு வதக்கவும். புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள் சேர்த்து
நன்கு கொதிக்க விடவும். கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்து
வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விட்டால்
ரசவாங்கி ரெடி.



(கத்திர்க்காய், வெண்டக்காய், சொளசொள ஆகிய காய்களிலும்
செய்யலாம்.)

சப்பாத்தி, தோசை, இட்லிக்கு நல்ல சைட் டிஷ். சோற்றில்
போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

எப்பொழுது புளியோதரை செய்ய ரெடிமேட் மிக்ஸை எடுக்கும்
நான் இன்றைக்கு மேலே சொன்ன ஆந்திரா புளியோதரை செய்தேன்.
செம ருசி. :)) கூடவே ரசவாங்கி செய்தேன். இட்லியோடு
செம காம்பினேஷனாக இருக்கு.

அனைவருக்கும் வீக் எண்ட் வாழ்த்துக்கள்

Thursday, July 28, 2011

ஹைதை ஹாட் டாபிக்ஸ்..

சென்ற மாதம் தில்லியில் சூடுகிளப்பிய பிரச்சனை ஒன்று நடந்தது.
தெலங்கானாவுக்காக தன்னை மாய்த்துக் கொண்ட ஒரு இளைஞனின்
சவத்தை ஆந்திரா பவனில் வைத்து மரியாதை செய்ய வேண்டும் என
தெலங்கானா தலைவர்கள் சொல்ல அதற்கு முன்னதாகவே அப்படியெல்லாம்
செய்ய முடியாது என்று சொல்லி தடுக்க கோரி அதிகாரிகள் தில்லி
போலீசுக்கு கடிதம் எழுத. வெகுண்டு எழுந்து குதித்தார்கள் தெலங்கானா
கட்சிக்காரர்கள். ஆந்திராபவனில் இருந்த அதிகாரி ஒருவரை அடித்து
அவமாரியதை செய்துவிட்டு, ஏதோ ஆவேசத்தில் அப்படி செய்து
விட்டேன்!!! என்று மன்னிப்பு கேட்டார் அடித்த ஆள்.

வலதுபக்கத்தில் இருப்பவர் அடிவாங்கிய அரசு அதிகாரி!!!!

இது எப்படி இருக்கு?? இறந்தவருக்கு மரியாதை செய்ய வேண்டும்,
மனிதாபிமானம் வேண்டும் என்று சொல்லும் இவர்கள் உயிருடன்
இருப்பவர் பற்றி ஆலோசனையே இல்லையே. இவர்கள் கையில்
ஆந்திராவைப் பிரித்துக் கொடுத்தால்!!!!!!! அவ்வ்வ்வ்வ்வ் தான்.
***********************************************************

ஒருத்தருக்கு எப்போது எப்படி பிரச்சனை துவங்கும் என்று
சொல்லவே முடியாது. அப்பா சம்பாதித்த சொத்தை ஆனந்தமாக
அனுபவித்து வந்தார் ஜகன்.(மறைந்த முன்னாள் முதல்வர்
ராஜசேகர ரெட்டியின் மகன்)

ஹைதையிலேயே இப்பொழுது பெரிய்ய்ய்ய வீடு ஜகனுடையதுதான்.
லோட்டஸ் மஹல் என்று பெயர்!!!! 90,000 சதுர அடி வீடு.


இதைத் தவிர ரொம்ப ஆடம்பரமாக தனது கட்சிக்கு ஒரு அலுவலகமும்
பளபளன்னு துவங்கினார். திருஷ்டி பட்டுடிச்சு போல!!!
ஜகனிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பு எவ்வளவுன்னு சீபிஐ
விசாரிச்சு நீதிமன்றத்திடம் ரிப்போர்ட் கொடுத்திருக்கு. சட்டத்துக்கு
புறம்பா எம்புட்டு சம்பாரிச்சிருக்காங்கன்னு வெட்ட வெளிச்சம் ஆகப்போகுது.
இரண்டு வருஷத்துல டபுளாகிடிச்சாம்ல சொத்து!!!!!
நாம முதலமைச்சர் ஆகிடலாம்னு கனவு கண்டுகிட்டு இருக்கும் ஜகன்
மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம இருக்காரு.


ஓதாரிப்பு யாத்ரான்னு ஒண்ணு ஜகன் போவாரு. அதாவது ஆறுதல் சொல்வது.
இப்ப கோர்ட் கேஸுன்னு அலையப்போற ஜகனுக்கு யாரு ஓதாரிக்கிறது????
**************************************************************

தெலங்கானா காரங்க கிட்டயும், ஆந்திரா காரங்க கிட்டயும் ஆசாத்
பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்காரு. ஆந்திராகாராங்க மனசையும்
தெரிஞ்சிகிட்டுத்தான் முடிவு எடுக்க முடியும்னு சொல்லியிருக்காரு.
இதுல முக்கியமான பிரச்சனை இருக்கு. தெலங்கானா பகுதியில்
நதியே கிடையாது!!! தனியா பிரிச்சா அவங்க கோதாவரியை
திருப்பிட்டாங்கன்னா காய்ஞ்சு போய் கிடக்க வேண்டியதுதான் தெலங்கானா.

ஆந்திரா மக்களும் ஹைதையில் நிறைய்ய முதலீடு செஞ்சிருக்காங்க.
ஹைதராபாத்தை விட்டுக்கொடுத்தா அந்த முதலீடுகள் பாடு கஷ்டம்.
இதையெல்லாம் ஆசாத்துக்கு எடுத்துச் சொல்லி நதியையும், ஹைதையும்
பங்கு போட்டுக்கச் சொல்வாங்க போல இருக்கு.
**************************************************************

தெலங்கானா வரும் வராது பிரச்சனைய விட கொடுமையா இருக்கு
அவங்க திடும் திடும்னு அறிவிக்கும் பந்த். ஆன்னா பந்த் ஊன்னா பந்த்.
தில்லி ஆந்திரா பவனில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதியில்லைன்னு
சொல்லி அடுத்த நாள் பந்த்.

ரயில் ரோகோன்னு ஒண்ணு நடத்தி தெலங்கானா பக்கம் எந்த டிரையினும்
வராம செஞ்சாங்க. அதுல செம நஷ்டம். மக்களுக்கும் ரொம்ப சிக்கல்.
ஒண்ணா தெலங்கானா தரேன்னு சொல்லி தந்திடணும். இல்ல மாட்டேன்னு
சொல்லிடனும். இரண்டும் செய்யாம இழுபறி செய்யுது காங்கிரஸ் அரசு.
இதுல இழுபறி ஆவது பள்ளி செல்லும் குழந்தைகளின் எதிர்காலம்!!!
இந்த ஸ்திரமில்லாத தன்மையால ஹைதையில் வரவேண்டிய முதலீடுகள்
ஓசை படாம தமிழகத்துக்கு வருதுன்னு சொல்றாங்க.

முன்னாடி அம்மா ஆட்சி நடக்கும்பொழுது சென்னையில் அமைந்திருக்க
வேண்டிய ஐமேக்ஸ், அவங்க அப்ப பழிவாங்குவதில் பிசியாக இருக்க
ஹைதைக்கு கொண்டு வந்திட்டாரு சந்திரபாபு நாயுடு. இப்ப காட்சி மாறுது.

இனி ஆந்திராவை அந்த கோவிந்தன் தான் காப்பத்தணும்னு சொல்லலாம்னா
அவன் சொத்தை அவன் பாதுக்காக்கவே அவனுக்கு நேரம் சரியா இருக்கும்.
திருமலையைப் பத்தி நாளொரு செய்தி, பொழுதொரு பிரச்சனை வந்து
கிட்டே இருக்கு.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியலை!!!!!


Tuesday, July 26, 2011

வானவில்லின் வர்ணங்கள்...

NDTV GOOD TIMES எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சேனல்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் ROUTES எனும் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.
மாற்றுமருத்துவம் பற்றிய நிகழ்ச்சி.

அன்று நிறங்களைப் பற்றிய நிகழ்ச்சியாக இருந்தது என்னை மிகவும்
கவர்ந்தது. சரி என்று பார்க்கத் துவங்கினேன். மைக்ரேன் தலைவலியால்
அவதிப்பட்டவர் எத்தனையோ மருத்துவங்கள் பார்த்து சரிவராமல்
கடைசி முயற்சியாக கலர்தெரப்பியில் முயன்று பார்த்திருக்கிறாராம்.
(கலர் தெரப்பி கற்று அதை உபயோகிக்கும் முறை தெரிந்தவர்கள்
இருக்கிறார்கள்.) பச்சை நிறத்திற்கு குணமாக்கும் தன்மை உண்டு
என்பதால் அவரது அறை திரைச்சீலைகள், தலையணை,விரிப்பு என
இளம் பச்சை கலரில் மாற்ற சொல்ல அப்படியே செய்து நல்ல முன்னேற்றம்
இருப்பதாக சொல்ல செம ஆச்சரியம்.

கலர் தெரப்பி பற்றி தெரிந்து கொள்ள

ரெய்கி மெடிடேஷனில் ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு கலர் உண்டு.
பொதுவாக நான் வீட்டுக்குள் வர்ணம் அடிக்கும்பொழுது சில கலர்களை
அதுவும் மென்மையான கலர்களை உபயோகிக்கும் பொழுது வீட்டில்
இருப்பவர்களின் மனோபாவங்கள் மாறும் என்பதை படித்திருக்கிறேன்.
குமுதம் சிநேகிதி என்று நினைக்கிறேன். நமக்கு ஏற்ற நிறம் என்ன
என்பதை பற்றி ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. அதில் நாம்
அணியும் உடையின் நிறம் நம் மனதை பிரபதிலிக்கிறது என்று
சொல்லியிருந்தார்கள்.

நேற்று சாயந்திரம் முதல் எனக்கு சரியான தலைவலி. கிட்டத்தட்ட
மைக்ரேன் போலத்தான். வலி அதிகமானால் தலையை சாய்த்து
படுக்க கூட முடியாது. வலி நிவாரணி மாத்திரைகள் எல்லாம் கூட
எடுபடாது. வலியும் நோவும் அதிகமாக இருக்கும் பொழுது என்னால்
எனக்கே ரெய்கி செய்து கொள்ளவும் முடியாது. ரொம்பவே துடித்து
என் உறவினரை ரெய்கி செய்யச் சொல்லி மெசெஜ் அனுப்புவேன்.

இரவு 10 மணி தாண்டியும் வலி குறையவில்லை. படுக்கவும்
முடியாத நிலை. நேற்று அந்த நிகழ்ச்சி பார்த்தது நினைவுக்கு வந்து கண்ணை மூடிக்கொண்டு பச்சை இலைகள், பசுமை தோட்டம், அதன் நடுவில் நான் என
என்னைச் சுற்றி பசுமையாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டே
இருந்தேன். வலி மெல்லக் குறைந்து ஆழ்ந்த தூக்கம் கிடைத்தது.
காலையில் ஃப்ரெஷ்ஷாக எழுந்து வேலை செய்தேன்.
(வேலைக்காரம்மா வரவில்லை. எல்லா வேலையும் முடித்து
கானக்கந்தர்வனில் இன்று ஒரு பாட்டும் போட்டு இங்கேயும் பதிவெழுத
முடிந்தது ஆச்சரியம்!!)

இதை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு.
உங்களுக்கும் இந்த கலர் தெரப்பி உதவக்கூடும். எப்பொழுது
எந்த கலரை உபயோகப்படுத்துவது என்று தெரிய வேண்டுமே!!
இதோ இந்தக் கலர் சார்ட்டை பாருங்கள்.


மருந்து மாத்திரைகள் தரும் சைட் எஃப்கட்டுகளிலிருந்து தப்பிக்க
மாற்று மருத்துவத்தைத்தான் பலரும் தற்போது நாடுகின்றன.
ரெய்கி,பிரானிக்ஹீலிங் வகையில் இப்பொழுது வர்ணங்களும்
இருக்கின்றன.

உங்கள் வாழ்விலும் வர்ணங்கள் சேர்ந்து இந்தநாள் ஒரு இனிதான
நாளாக அமைய வாழ்த்துக்கள்.
colour therapyஇந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்


Monday, July 25, 2011

தடா!! பிளாஸ்டிக்குக்கு தடா!!!

வரும் வராதுன்னு தெலங்கானா பிரச்சனை மாதிரி இந்தத்தடாவும்
வருமா வராதான்னா பலரும் ஆருடம் சொல்லிக்கிட்டு இருக்க
Greater hyderabad municipal corporation ஜூலை 1 முதல் தடா
போட்டாங்க. அதாவது 40 மைக்ரானுக்கு குறைவா இருக்கும்
ப்ளாஸ்டிக் பைகளுக்குத் தடா.

எங்கும் எதிலும் வியாபித்திருந்த ப்ளாஸ்டிக் பயன்பாடு இதனால
கொஞ்சம் குறையும்னு நம்பிக்கை இருக்கு. பல சூப்பர் மார்க்கெட்டுகளில்
நாம் பை எடுத்துகிட்டு போனாத்தான் சாமான் தருவாங்க. இல்லாட்டி
அவங்க கொடுக்கும் பேப்பர் பேக்குக்கு ஒரு பைக்கு 3 ரூவா சார்ஜ்
செய்வாங்க.

தப்பி யாராவது விற்பனையாளர் ப்ளாஸ்டிக் பையில் கொடுத்தாங்கன்னா
ரூ 500 முதல் 5000 வரை தண்டம் கட்ட வேண்டி வரும். 2 வருஷமாவே
எங்க போனாலும் பையை எடுத்துப்போய் பழகிட்டேன். அதனால
பிரச்சனையா தெரியலை. ஆனா பலரும் ஞாபக மறதியா சூப்பர் மார்க்கெட்டுக்கு
வெறுக்கையோட வந்திட்டு அந்த தம்மாத்தூண்டு பேக்குக்கு 3 ரூபாய்
பணம் கொடுக்க மனசில்லாம வீட்டுக்கு திரும்ப போன கதைகள் நடந்துச்சு.
இப்ப கொஞ்சம் பரவாயில்லை. எல்லோரும் ஏதோ ஒரு ஷாப்பிங்
பேக்கை எடுத்துகிட்டுத்தான் வீட்டை விட்டே கிளம்புவாங்க.

ஒரு 22 வருஷம் முன்னால எங்க தாத்தாவுக்கு 60 கல்யாணம் நடந்துச்சு.
அப்பதான் எங்க பெரிய மாமா மும்பையிலிருந்து 5 கிலோவரை தாங்கக்கூடியதுன்னு
ப்ளாஸ்டிக் கேரி பேக்கை கொண்டு வந்தாங்க. அதை ரொம்ப ஆச்சரியமா
பாத்தோம். அது எப்படி பாரத்தைத் தாங்கும்னு? யோசனை. மும்பையில்
இப்ப காய்கறிகடைக்கு கூட யாரும் பேக் எடுத்துகிட்டு போறதில்லை. இந்த
மாதிரி பேக்ல கொடுப்பாங்கன்னு மாமா சொல்ல, நான் மும்பையில் இருந்தப்ப
இந்த வசதியை அனுபவிச்சிருக்கேன். ஆனா இந்த ப்ளாஸ்டிக் பேக்குகளால்
பூமி இவ்வளவு மாசுபடும்னெல்லாம் அப்போ தெரியாது. ஒரு காலத்தில் நதியா தோடு,நதியா ஹேர்பின்னு ப்ளாஸ்டிக்கில் ஒரு ஃபேஷனே இருந்துச்சு.
ஒரு பேட்டியில் நதியா சொன்னாங்க,”இப்ப அந்த மாதிரி இருந்தா தடா தான்.
ஈகோ ஃப்ரெண்ட்லியாதான் இப்ப இருக்கணும்னு” அதுமாதிரி அப்ப மஞ்சப்பையை
எடுத்துகிட்டு யாராவது வந்தாங்கன்னா, இல்ல மஞ்சப்பையில ஏதும் கொண்டு
போகணும்னா சங்கடமா இருக்கும். கேலி பேசுவாங்க.

இப்ப அது ஈகோ ஃப்ரெண்டிலின்னு சொல்லிக்கிறோம். யார் கிண்டல் செஞ்சாலும்
பரவாயில்லைன்னு இந்த மாதிரி துணிப்பையை உபயோகிப்பதை வழக்கமா
வெச்சிருக்கோம். Hyderabad goes green அப்படிங்கற ஒரு தளத்தில்
நாம துணிப்பைகளை வாங்க முடியும். இந்த அமைப்பில் நானும்
இணையனும்னு வெச்சிருக்கேன். பாப்போம். என்னால முடிந்ததை
இந்த பூமிக்கு செய்ய ஒரு வாய்ப்பா இது இருக்கும்.

BLUE CROSS HYDERABAD - இந்த அமைப்பை அமலாவும்-நாகார்ஜுனாவும்
1992ல் துவங்கி ரொம்ப சக்ஸஸ்ஃபுல்லா நடத்திகிட்டு வர்றாங்க.
அந்த தளத்தை இங்க பார்க்கலாம்.
சமீபத்துல ப்ளாஸ்டிக் பேக்குகளுக்கு தடா வந்ததும் SAVE
அப்படிங்கற அமைப்போட சேர்ந்து துணிப்பைகளை குறைவான விலைக்கு
விற்கும் வேலையையும் அமலா தன்னை இணைச்சுகிட்டாங்க.



பிள்ளையார் சதுர்த்திக்கு முன்னாலயே அம்மா ஸ்கூல்ல
களிமன் பிள்ளையார் செய்யும் குடும்பம் வந்திரும். பக்கத்துலேயே
பெருமாள் கோவில் மார்க்கெட் என்பதால அங்க வெச்சு விப்பாங்க.
களிமன் பிள்ளையார் அவருக்கு குடை மட்டும் கலர்ஃபுல்லா
இருக்கும். இப்படி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடியிருந்த எனக்கு
ஹைதையில் நான் பார்த்தது வித்தியாசம். நம்ம ஊர்லயும்
இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு ஆசை பட்டிருக்கேன்.


9ஆவது படிக்கும் பொழுது முதன் முதலா ஹைதை வந்திருந்தேன்.
அப்போ கணேஷ் சதுர்த்தி சமயம். மெகா சைஸ் பிள்ளையார்கள்
கலர்கலரா எடுத்துகிட்டு போவதை பார்த்து அதிசயத்திருக்கேன்.
நவராத்திரி கொலு பொம்மைகள்தான் இவ்வளவு கலர்ஃபுல்லா
இருக்கும். மும்பை,ஹைதை என இப்ப எல்லா இடத்துலயும்
கலர்ஃபுல் கணேசாதான். ஆனா அந்த கலரில் இருக்கும்
கெமிக்கல்களால் தண்ணீர் மாசுபடும் என்பதால் திரும்ப அந்த
களிமண் பிள்ளையாருக்கே எல்லோரும் ஓட்டு போடும் நிலை.

இப்பொழுது சின்ன சைஸ் 1 ரூபாய்- பெரிய்ய்ய் சைஸ் 1000
ரூபாய் விலையில் இந்த வகை களிமண் பிள்ளையார்கள்
ஹைதையில் இந்த முறை கிடைக்கும்.

நம்மை அறியாமலேயே நாம் இயற்கைக்கு எதிரா எப்படி
சதி செஞ்சிருக்கோம். படிச்சிருக்கோம்னு சொல்லிக்கிற நமக்கே
சில விஷயங்கள் அறியாம புரியாம தப்பு செஞ்சிருக்கோம்.
இனி இந்த நிலை மாறணும். அதனால நமக்கு நாமே
ஒரு சங்கல்பம் செஞ்சுக்குவோம்.



யாரும் தடை போடும் முன்னால நம்மால என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம்.
ப்ளாஸ்டிக் பைகளுக்கு, கலர்ஃபுல் கணேசாவுக்கு, கலர் ஹோலிகளுக்கு
தடா சொல்லிட்டு இயற்கை முறைக்கு மாறுவோம். இதுதான்
நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய
சொத்தா இருக்கும்.

ஃபேஸ்புக்கில்



Wednesday, July 20, 2011

ரிச் தக்காளி சாதம்!!!

தக்காளி சாதத்துல என்ன ரிச் தக்காளி சாதம் ரிச்சா பலோட் தக்காளி சாதம்னு
கேக்கறீங்களா? :)) செஞ்சு சுடச்சுட சாப்பிட்டு பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க.

இன்னைக்கு என்ன சமயல் இதுதான் பலரின் மண்டை குடைச்சல் கேள்வி.
சமைச்சதேயே திரும்ப சமைக்க போரடிக்கும் என்னை மாதிரி ஆளுங்களுக்கு
ரொம்பவே கஷ்டம். வெரைட்டியா சாப்பிடணும்னு சிலருக்கு இருக்கும். எனக்கு
வெரைட்டி வெரைட்டியா சமைக்க பிடிக்கும்.

தக்காளி சோறு செய்யலாம்னு ப்ளான்னு பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட சொன்னேன்.
உடனே அவங்க ஒரு ரெசிப்பி சொல்லி செஞ்சு பாக்க சொன்னாங்க. அவங்களும்
என்னிய மாதிரி தான். சேம் ப்ளட். (வெரைட்டி சமைக்கும் கேசுங்க நாங்க)
சரி செஞ்சு பாக்கலாம்னு பாத்தா செம ருசி!! ஆஷிஷ் அம்ருதாவுக்கும்
ரொம்ப பிடிச்சு போச்சு. சரி சரி. மேட்டருக்கு வருவோம்.




தேவையான பொருட்கள்:

சமைத்த சோறு - 2 கப்
தக்காளி - 1/4 கிலோ,(கழுவி நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்)
வெங்காயம் 1 அல்லது 2 (நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.
வேர்க்கடலை - 2 ஸ்பூன்,
கசகசா - 1 ஸ்பூன்,
வெள்ளை எள்ளு - 1 ஸ்பூன்.
காரம் - 1 அல்லது 1/2 ஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப

தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை:

வாணலியில் முதலில் வேர்க்கடலை, எள்ளு, கசகசா தனித்தனியாக
போட்டு வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். வேர்க்கடலை
தோல் நீக்கி எல்லாம் ஒன்றாக சேர்து கொஞ்சம் பேஸ்ட் போல
அரைத்து வைத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம் போட்டு
நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு
வதக்கவும். தக்காளி நன்கு வெந்தபின் உப்பு, காரம் சேர்த்து மேலும்
சில நிமிடங்கள் வதக்கவும். நன்கு வெந்ததும் அரைத்து வைத்திருக்கும்
விழுதை சேர்த்து நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும்
சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கலந்து கொத்துமல்லி
தூவி இறக்கினால் ரிச் தக்காளி சாதம் ரெடி!!!

சுடச்சுட சாப்பிட்டால்தான் ருசியே. தொட்டுக்கொள்ள வெங்காய ரய்தா,
சிப்ஸ் இருந்தால் ஜமாய்க்கலாம்!!

இந்த வகையில் சோறு உதிர் உதிராக இல்லாமல் கொஞ்சம் மெத்தென்று
இருக்கும். கொஞ்சமாக சாப்பிட்டாலும் போதும்.

Thursday, July 14, 2011

மீண்டும் பயங்கரம்

நேற்று 7.30 மணிவாக்கில் எதேச்சையாக செய்தி சேனல் பார்க்க
உட்கார்ந்தேன். அப்பொழுதுதான் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு
பற்றி தெரியும். ஜவேரிபஜார்,தாதர்,ஒபேரா ஹவுஸ் ஆகிய 3 இடங்களில்
12 நிமிடங்களுக்குள் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. மீண்டும் மும்பை
ரத்தம் கசிய!!!!

அயித்தான் மும்பையில் இருப்பதால் போன் போட்டால் ம்ஹூம் ரீச்சே
இல்லை. என் மாமாக்களுக்கு போன் செய்தேன் அவர்கள் வீட்டில் தான்
இருந்தார்கள். அயித்தானுக்கு அவர்களும் ட்ரை செய்து பார்த்து கடைசியில்
நான் மாமாவுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சின்ன மாமாவுக்கு
லைன் கிடைத்து அயித்தானிடம் பேசும் வரை உயிரில்லை. போரிவிலி
ஷ்டேஷனிலிருந்து வசாய் செல்ல ரயில் ஏறிக்கொண்டிருந்தார் அயித்தான்.

wednesday படத்தில் நஸ்ருதின் ஷா சொல்வது போல நம் உறவினர்கள்தான்
என்று இல்லை முகம் தெரியாத அந்த மனிதர்கள் பலியாவது கூட வருத்தத்தை
தருகிறது. இன்று செய்தித்தாள்களில் நடந்த பயங்கரத்தை விடவும்
பயங்கரமாக உடலில் ரத்தம் கசிய, ரத்தக்குளத்தில் தன் கால் போய்,கைபோய்
கிடக்கும் மனிதர்களின் படங்களை பார்க்கும் பொழுது மனம் கொந்தளித்து
போகிறது. இதுவரை 21பேர் தன் உயிரை இழந்திருக்க,140 பேர் படுகாயம்
அடைந்திருக்கின்றனர்.

எந்த தீவிரவாத அமைப்பும் தாங்கள் செய்ததாக மார்தட்டிக்கொள்ளவில்லை
என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்படியானால் கள்ளன் நம்
நாட்டுக்குள்ளேயேவா?? நமக்கு மோசமான அண்டைநாடுகள் இருக்கிறது
நிஜம்தான் என்றாலும்.....

உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து
விட்டு இருப்பதை விட அரசு வேறு என்ன செய்திருக்கிறது? முழங்காலுக்கு
கீழே துண்டாகி உயிர்பிழைத்து அடுத்தவர்களுக்கு பாரமாகவும், நடந்த
குண்டு வெடிப்பின் சாட்சியாகவும் மிச்ச காலத்தை அவஸ்தையுடன்
வாழப்போகும் இவர்களின் காலம் எவ்வளவு கொடூரமானது.
ஏதாவது ஒரு தீர்வு கிடைத்த பாடில்லை. உலகத்தின் ஏதாவது
ஒரு பாகத்தில் ஏதாவது ஒரு நாடு குண்டு வெடிப்புக்கு ஆளாவதுதான்
இப்பொழுதைய தலைப்புச் செய்தியாகிவிட்டது. இதுவும் கடந்து போகும்
என இந்த நிகழ்வுகளுகு சொல்ல முடியாது.

இயற்கை பாதிப்பு,தீவரவாத தாக்கம் என எத்தனை அடிகள் பட்டாலும் அடுத்த நாளே
மும்பை எழுந்து நடப்பதுதான் இப்பொழுதும் நடக்கிறது. NDTV24*7 சேனலில்
குண்டு வெடிப்பு நடந்த இடத்தை ஒட்டி இயக்கம் அவ்வளவாக இல்லை
என்று மதியச் செய்தியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

மும்பையில் மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் ரயில் போக்குவரத்து
இல்லை. தஹிசர்-மிராரோட் பகுதியில் மழையால் தண்ணீர்க்குழாய் பாதிக்கப்பட்டு
ஒரு பாலத்தில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் தரை மார்க்கமாகவும் பயணம்
பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் மக்கள் நடமாட்டம் குறைவாக
இருக்கிறதே தவிர பயந்து போய் யாரும் வீட்டில் அமர்ந்துவிட வில்லை.

மும்பை மட்டுமல்ல இந்தியாவின் எந்த ஒரு மாநிலமும் பாதுகாப்பானது
அல்ல என உள்துறை அமைச்சர் கொடுத்திருக்கும் பேட்டி சாமானியனின்
மனதில் இன்னமும் எரிச்சல் கொடுக்கிறது.

நிச்சயமில்லாத ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோன்
என்பதை இந்த மாதிரி நிகழ்வுகள் நமக்கு அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றன.

உயிரிழந்தவர்களுக்கு என் இதய அஞ்சலிகள்!!
உயிர்பிழைத்தோருக்கு வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுபட
என் பிரார்த்தனைகள்.

முத்தான மூன்று- தொடர் பதிவு

முக்கனிகள், மூவேந்தர், முத்தமிழ், மூன்றுமுடிச்சு, முக்கண்ணன் என 3க்கு
இருக்கும் சிறப்புக்கள் எவ்வளவோ!!! அதனால்தான் நம் வலையுலகில் ரொம்ப
நாளைக்கப்புறம் (ரொம்ப நாளைக்கப்புறம் நான் மாட்டிகிட்டதால என தெரியாம
இருந்திருக்கலாம்) தொடர் பதிவு.

இந்த 3 பத்தி பேசும்போது எனக்கு மூனைத் தொட்டது யாருங்கற கேள்விக்கு
ஆம்ஸ்ட்ராங்னு பதில் சொல்லி பளார்னு அறைவாங்கின வடிவேலுவும்,
”மூனைத் தொட்டது அமிர்தலிங்கம்”னு சொல்ற காமெடி நினைவுக்கு வருது. :))

சகோ வெங்கட் நாகராஜ் தொடரச் சொல்லி அழைச்சிருக்காரு. இதோ
என்பதில்கள் முன்னாலே!! பாத்து மார்க் போடுங்க. :)))

1. நீங்கள் விரும்பும் 3 விஷயங்கள்.

1.அப்பவும்,இப்பவும், எப்பவும் கானக்கந்தர்வனின் குரல்.
2. ஊர் சுத்துவது ( அட பயணங்களைச் சொன்னேங்க)
3. மழலைகளுடன் பொழுதை கழிக்க முடிந்தால் ஆனந்தமே!

2. விரும்பாத 3 விஷயங்கள்:

1. பணத்தை கண்டு குணம் மாறுபவர்கள்
2.ரோட்டில் வெக்கம் மானம் இல்லாம பிஸ் அடிக்கும்
ஆண்கள்.
3. தீவிரவாதம்

3. பயப்படும் 3 விஷயங்கள்:

ஆஹா!!!

1. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்தேதான் என் வேலைகளைச்
செய்கிறேன்.
2.பல சமயங்களில் நான் மிகவும் ரசிக்கும் தனிமையே எனக்கு
சில சமயங்களில் பயத்தை தருவது ஏன்னு புரியலை!!!
3. தெனாலி மாதிரி வீட்டை விட்டு இறங்கி திரும்ப வீடு வந்து
சேரும் வரை பயமால்ல இருக்கு. (நான் வெளியில போவது
பத்தி இல்ல, வீட்டு நபர்கள் பத்திரமா வீடு வந்து சேரும் வரை
திக் திக் தான். காலம் கெட்டு கிடக்கு!)


4. உங்களுக்கு புரியாத 3 விஷயங்கள்:

1. தெலுங்கானா தருவாங்களா? மாட்டங்களா?
2. திடும் திடும்னு ராஜினாமா செய்யும் அரசியல்வாதிகளை
நம்பி ஓட்டு போட்ட மக்கள் தன்னோட நேரத்தை இவர்கள்
வீணாக்கினாங்களேன்னும், திரும்ப எலெக்‌ஷன் வெச்சு
பணச்சுமையை அதிகமாக்குவாங்களேன்னும் கோர்ட்ல
கேஸு போடலாமா? இல்லை இப்படி செஞ்சா “கட்டுபடி
ஆகாதுண்ணே, கட்டுப்படி ஆகாதுண்ணு” வாக்குச் சாவடிக்கு
செல்லாம தடுக்க ஏதும் செய்யலாமா?
3. இந்த வருஷம் மார்ச் வரைக்கும் சில இடங்களில் மழை
பெஞ்சும், இந்த வருஷம் மழை கம்மின்னு சொல்றாங்களே!!
அது ஏன்? எப்படி? ம்ஹூம்.

5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்:

மணலில் வீடு கட்டி விளையாடும் என் செல்வங்களின்
புகைப்படம், கடிகாரம், செல்போன்.

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:

1.நல்ல காமெடி, நகைச்சுவை பதிவுகள்.
2. எங்க பக்கத்து வீட்டு வாண்டு செய்யும் சேஷ்டைகளை பார்க்கும்
பொழுது மனம்விட்டு சிரிக்கிறேன்.
3. இங்கே(ஆந்திரா) நடக்கும் அரசியல் பார்க்கும் பொழுது நல்லா
தமாஷா இருக்குப்பா

7. தாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்:

1. ஆஷிஷ் 10த் என்பதால் அதிகமா ஸ்ட்ரெஸ் ஆகிடக்கூடாது,
அதே சமயம் டீல்லயும் விட்டுடக்கூடாது. இந்த டாஸ்க்கை எப்படி
செய்வதுன்னு யோசிச்சு நிதானமா அதை செயல் படுத்திக்கிடு இருக்கேன்.
2. ரொம்ப நாளைக்கப்புறம் நான் படிச்ச மாண்டிசோரி படிப்புக்கு
சின்ன வேலை. எஸ்ஸு. எங்க பக்கத்து வீட்டு வாண்டுக்கு என்னால
ஆன உதவிகளை செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.
3. நடுவுல உடம்பு சரியில்ல, அது இதுன்னு ரொம்ப டயர்டாகி,
அதனால ஸ்ட்ரெஸ்ஸுன்னு ஒரு மாதிரியா இருந்தேன். இப்ப
அதுலேர்ந்து வெளியில வந்து மறுபடி என்னை நான் லவ் செய்ய
ஆரம்பிச்சிருக்கேன்.
!!! :))

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்:

1. என் பிள்ளைகள் எல்லாவிதத்திலும் தன் காலில் தானே நின்று
சுயமாக தன் வேலையை செய்துகொள்ள பழக்க வேண்டும் எனும்
வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
2. துள்ளித் திரியும் வயதில் விளையாட்டாக பிள்ளைகள்
கல்வி கற்கும் விதத்தில் ஒரு பள்ளி ஆரம்பித்து நல்லாசிரியைன்னு
பேர் வாங்கணும்.!!!
3. பெயர் சொன்னால் தரம் எளிதில் விளங்கும்னு சொல்வது போல
புதுகையில் எங்க குடும்பத்தினரின் பேர் சொன்னா போதும். அதே போல
என் வாழ்நாளிற்கப்புறமும் கூட நான் பழகிய, பேசிய நட்புக்கள்,
உறவினர்கள் என்னை மறக்கக்கூடாது. நல்ல தருணத்தில் என்னை
நினைத்து பார்ப்பது போல என்னால முடிஞ்சதை செய்யணும்.

9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:

1. இந்த சிலிண்டர் தீந்து போச்சுன்னா அயித்தானையோ இல்லை
வேறயாரையோ தான் கூப்பிட்டு மாத்தச் சொல்றேன். எத்தனையோ
வாட்டி சொன்னாலும் மண்டைல ஏனோ ஏத்திக்க மாட்டேங்குறேன்.
அதை கத்துக்கணும்.
2. ஜெட் வேகத்துல வந்துகிட்டு இருந்த என் பதிவுகள் யார் கண்ணு
பட்டுச்சோ!!!! ரொம்ப ஸ்லோவா வருது. இப்போ 779 பதிவுகள்
ஆகிருக்கு சீக்கிரம் 1000 அடிக்கணும்.
3. இலவசமா கல்வி சொல்லிக்கொடுக்க திட்டம் இருக்கு.

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:

1. இன்னும் நிறைய்ய புது புது ரெசிப்பிக்கள் கத்துக்கணும்.
(அயித்தானுக்கு நான் இப்படி சொல்லும் பொழுதெல்லாம்
வயிற்றில் புளி கரைச்சா மாதிரி இருக்கும். கல்யாணத்துக்கு
முன்னாடி ஒல்லியா இருந்தேன். என்னை இப்படி குண்டாக்கினது
பத்தாதுன்னு இன்னும் வகைவகையா கத்துக்கறேன்னு சொல்றியே
இது நியாயமா?தர்மமான்னு? கேப்பாரு :)) ) ஆனாலும் கத்துக்கணும்.

2. அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் அதுக்கு ரியாக்ட் ஆகாம
இருக்கணும்னு பாக்குறேன்.ம்ஹூம்.

3. டீன் ஏஜி வயசில் பிள்ளை வளர்ப்பது எப்படின்னு
இன்னும் நிறைய்ய கத்துக்கணும்!!

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்:

1. அடுத்தவங்க சமைச்சு போட்டா அடிபிடிச்சிருந்தா கூட அது அமிர்தம் தான். :))
2. பனீர் டிக்கா அதுவும் இலங்கை மேங்கோட்ரீ ஹோட்டலில் இருந்து
வாங்கியிருந்தா.
3. நல்ல ரசம்.

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா.

1. பொறுமை இல்லாம கேட் திறக்கறதுக்குள்ள ஹார்ன் அடிச்சுகிட்டே
இருக்கும் பக்கத்து வீட்டு ஜீப் சத்தம்.....
2. பொண்ணுக்கு/பையனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தோம்.
சரிவரலை பிரிஞ்சிட்டாங்க!!! என பெற்றோர்கள் சொல்லும் அவலம்!!!
3. அயித்தானோட மொபைல் ரிங்கிங்... :)) (நேரம் காலம் இல்லாம
அது ஒரு தொந்திரவு. எங்க மாமியார் சரியா அதுக்கு பேரு வெச்சாங்க.
கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி மொபைலும், கார்ட்லெஸ்ஸும்னு
சொல்வாங்க)

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்:

1. பூந்தேனில் கலந்து பொண்வண்டு எழுந்து.... ஏணிப்படிகள்
படத்துல சூப்பர் பாட்டு.
2. கோயி காத்தா மே சோ ஜாத்தா.... யேசுதாஸோட குரலில்
இந்தப் பாட்டு மனத்தை அப்படியே ஒரு வருடு வருடும்.
3. உப்பொங்கலே கோதாவரி... (கோதாவரி தெலுங்கு படத்தோட
பாட்டு, இந்தப் பாட்டு அப்படியே என் மனசுல ஒரு பொங்கி
பொங்கி ஆனந்தத்தை தரும்)

14. பிடித்த 3 படங்கள்:
1.BAAWARCHI ராஜேஸ் கன்னா நடிப்பு சூப்பரா இருக்கும்.
இந்த படம் பார்க்கும் பொழுது ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.
2. வானமே எல்லை- அதென்னவோ இந்தப் படம் ரொம்ப
பிடிக்கும்.
3. காதலிக்க நேரமில்லை - என் பிள்ளைகள் ரொம்ப விரும்புவதால
இந்தப் படம் பிடிக்கும்.

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:

1. தன்னம்பிக்கை- அது இல்லாட்டி நான் மட்டுமில்ல யாருமே இல்லை.

2. ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கும் இந்த காலகட்டத்தில் மனதை ரிலாக்ஸ்
செய்து கொள்ள தெரிவது ரொம்ப முக்கியம். (தவறான பாதைக்கு
போகாம, நல்ல வழியில் மனதை கொண்டு செல்ல தெரிஞ்சிருக்கணும்)

3. புத்தகம்- ஏதாவது படிக்காட்டி மண்டை காய்ஞ்ச மாதிரி இருக்கும்.
என்னை நான் அப்டேட் செய்துகொள்ள உதவியா இருப்பது என்
புத்தகம் படிக்கும் பழக்கம்னு சொல்வேன்.

16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:

மாட்டி விட்டேன்னு திட்டினாலும் இதை அவங்க தொடர்வாங்கன்னு
நம்பறேன்.

ஹுசைனம்மா

அன்புடன் அருணா

சேட்டைத் தம்பி


Thursday, July 07, 2011

இன்றைய இளைஞர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பெண்கள்தான் வேண்டும் என்றா சொல்கிறார்கள்????

மங்கயர்மலரில் ஆண்வாசகர் ஒருவர் மனம்விட்டு குமுறி
இருந்தார். முன்பு மணமகன் வீட்டார் படுத்திய போதெல்லாம்
மனதுக்குள் குமுறிய மணமகள் வீட்டார் விட்ட சாபமாக மாறி
இன்றைய தலைமுறை ஆண்மகன்கள் அவமானப்படுத்தப்பட்டு
கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதிப்படுவதாக சொல்லியிருந்தார்.
அதற்கு சில வாசகிகள் பதில் சொல்லியிருந்தார்கள்.

அதில் ஒருவர் சொல்லியிருந்தது என்னை மிகவும் யோசிக்க
வைத்தது. “நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களைத் தேடி
போனால் இப்படித்தான் அவமானப்பட நேரிடும்!!!!” என்று
சொல்லியிருந்தார். அவரின் இந்த வாக்கியம் எத்தனையோ
கேள்விகளை எழுப்பும்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று படிப்பு வாசனையே
இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்த காலம் போய் இன்று குடும்பவிளக்கான
பெண்ணுக்கு கல்வி முக்கியம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு
பல பெண்கள் பலத்துறைகளில் படித்து தேர்ந்துள்ளனர். படிப்புக்குத்
தகுந்த உத்தியோகமும் கிடைத்து விடுகிறது. இப்பொழுது பெண்கள்
பெரிய படிப்பு படிக்கத்தான் ஆசை படுகின்றனர். நல்லதொரு மாற்றம்தான்.

வெறும் கிராஜுவேஷன் மட்டும் படித்த பெண்கள் கிடைப்பது
குதிரைக்கொம்புக்கு சமானம்!! டபுள் கிராஜுவேஷன், போஸ்ட் கிராஜுவேஷன்,
இஞ்சினியரிங் என பெண்கள் அடைந்திருக்கும் உயர்ச்சி ஆண்மகன்களுக்கு
இல்லை. காரணம் என்ன ஏதுன்னு முன்பே இதைப்பத்தி பதிவெழுதியாச்சு.


ஆணோ, பெண்ணோ குழந்தைகளை ஆங்கில மீடியத்தில் படிக்க
வைப்பதையே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். விரும்பியோ
விரும்பாமலோ குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள்.

படித்த பெண்தான் வேண்டும் என ஆண்கள் கண்டீஷன் போட்டதுபோய்
தன் படிப்புக்கும் மேலே படித்த மணமகன் தான் வேண்டும் என
இளம்பெண்கள் ஆசைப்படுவது மட்டுமல்லாமல், தன் பெற்றோரையும்
வற்புறுத்துகிறார்கள். இப்பொழுது பிரச்சனை அதிகமாக படித்த
பெண் என்று சொன்னால் என்னை ஏதோ பெண்கள் முன்னேற்றத்திற்கு
எதிரி என்பது போல பேசுவார்கள். நிதானமாக யோசித்தால் உண்மை
என்னவென்று புரியும்.

நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் பெண்களாக இருப்பதில் தவறில்லை.
அவர்கள் விரும்புவது என்ன? அது கிடைக்குமா? இங்குதான் குழப்பமே.
எனக்குத் தெரிந்து இன்னொரு பிரச்சனை. பெண்கள் திருமணத்திற்கு
பிறகு வேலைக்குப் போவது. அது ஒன்றும் இமாலயக் குற்றம் என்று
சொல்லவில்லை. இரட்டை சக்கரத்தில் கால்வைத்து அழகாக
பயணம் செய்யத் தெரிந்த புத்திசாலிகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு என் அன்பு கலந்த மரியாதையான வாழ்த்துக்கள்.
அப்படி சமாளிக்கத் தெரியாதவர்கள்??? குடும்பம் பெரிதா/அலுவலகம்
பெரிதா? என பட்டிமண்டபம் வைத்தாலும் தீர்வு கிடைக்காது.

ஏற்றுக்கொண்ட வேலையை நிறைவாகச் செய்ய வேண்டும். அது
குடும்பமோ/அலுவலகமோ. குழந்தைகளை கிரச்சில் விட்டுவிட்டோ,
அல்லது பெற்றோரிடம் விட்டோதான் வேலைக்கு செல்ல நேரிடும்.
தகப்பனாக தன் கடமையை செய்ய ஆண் முன் வரும்பொழுது
இந்தப் பிரச்சனைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும். அது எத்தனை
பேருக்கு சாத்தியம்.

எனக்குத் தெரிந்த தீர்வாக திருமண வயது வந்த உடன் ஆணோ/
பெண்ணோ அவர்களை மனதளவில் தயார் படுத்துதல் மிக
அவசியம். திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்கிறோமே
தவிர அந்தப் பயிர் வாடி வதங்காமல் காக்க என்ன செய்ய வேண்டும்
என்று யோசிப்பது இல்லை. புரிந்துக்கொள்ளும் தன்மை,
விட்டுக்கொடுத்து போதல் ஆகியவற்றை இருபாலினருக்கும் கற்றுக்
கொடுத்தல் அவசியமாகிறது. படிப்பு, அது முடிந்து வேலை என்று
ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அதற்கு நடுவே திருமண
வயதில் ஒரு பயிற்ச்சி வகுப்பு போல வைத்தால் மெத்த படித்தாலும்
மனதில் பக்குவம் கொண்டு வர முடியுமோ? அதிகம் படித்த
மனைவி வாய்த்தாலும் காம்பள்க்ஸ் வளர்த்துக்கொள்ளாமல்
கணவனும் மனைவியை புரிந்து ஒரு அன்பான வாழ்க்கையை
அவர்கள் வாழமுடியுமோ என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

கண்ணதாசன் அவர்களின் இரண்டு பாடல்கள் என்
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை!!!!!!!!


படித்தால் மட்டும் போதுமா படத்தின் இந்தப் பாடலும்:



Wednesday, July 06, 2011

180

நான் பார்த்தது தெலுகு வெர்ஷன் படம். காசியில் பார்த்த சின்னப்பையனின்
பெயரை தன் பெயராக்கிக்கொள்கிறார் ஹீரோ. அந்தப் பெயரோடு ஹைதையில்
வந்து இறங்குகிறார். எங்க ஏரியாவில்தான் ஷூட்டிங் நடந்திருக்கு.
தெரியவே இல்லை. அடடே நம்ம பார்க், நம்ம ஏரியான்னு படம் பாக்கும்
பொழுதுதான் தெரியுது.

எனக்கு இந்தப் படத்துல பல விஷயங்கள் பிடிச்சிருக்கு. காமிரா அழகு,
இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. காமெடிங்கற பேர்ல கொலை
நடக்கலை. அரைகுறை ஆடை நடனங்கள் இல்லை. பாடல்கள்
மெலடியாத்தான் இருக்கு (இன்னும் இரண்டு வாட்டி கேட்டா மனசுல
நிக்கும்னு நினைக்கிறேன்)

மொளலி-கீதா தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு குடி போகிறார்.
6 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்துவிடுகிறார். அதற்கு ஒரு நாள்
கூட அதிகம் இருக்க மாட்டேன் என்று சொல்லி மொளலியின் பைக்கையும்
வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார்.


பேப்பர் பையனுடன் சேர்ந்து பேப்பர் போடுவது, இஸ்திரி செய்வது
என தனது ஒவ்வொரு நாளையும் எஞ்சாய் செய்கிறார். வித்யா மேனன்
ஒரு பத்திரிகையின் போட்டோகிராபர். வித்யாசமான புகைப்படங்கள்
இவரது ஹாபி. சித்தார்த் தங்கியிருக்கும் வீட்டை கண்டுபிடிக்க
பைக் நம்பர் வைத்து அட்ரஸ் வாங்கி மொளலியை பார்த்து அதிர்ந்து
பிறகு சித்தார்த்தை சந்திப்பது சுவாரசியம். மொளலி தம்பதியினரின்
பணக்கஷ்டத்திற்கு மெஸ் ஆரம்பித்து கொடுப்பது என பல
உதவிகளை பலருக்கும் பல தருணங்களில் செய்யும் சித்தார்த்தின்
நடிப்பு நன்றாக இருக்கிறது.



பேப்பர் போடும் பையன்களை பள்ளிக்கு அனுப்ப நிதியுதவி பெற
வித்யாவை உதவச்சொல்லிக் கேட்க, தனது பத்திரிகையின் விளம்பரம்
செய்து அதன் மூலம் 10 லட்சம் பணம் பெற்று அந்தபிள்ளைகள்
படிக்க வழிசெய்கிறார். இதெல்லாம் வித்தியாசமாக நன்றாக
செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயேந்திரா. அந்த நிகழ்ச்சியின் இறுதியில்
வித்யா மேனன் சித்தார்த்தை காதலிப்பதாகச் சொல்ல அவரை
தவிர்க்க ஆரம்பிக்கும் சித்தார்த்தின் ஃபிளாஷ் பேக் விரிகிறது.



ப்ரியா ஆனந்த் அழகு தேவதையாக வருவதுடன் நல்ல நடிப்பிலும்
அசத்தியிருக்கிறார்.அமெரிக்க மருத்துவமனையில் சித்தார்த்
ஒரு டாக்டர். பேஷண்டாக வரும் ப்ரியாவுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்து
கல்யாணம் செய்து கொள்வது மிக அருமையாக சித்தரித்திருக்கிறார்
இயக்குனர். அவர்களது திருமணத்திற்காக அமெரிக்கவரும் சித்தார்த்தின்
தாயார், மகனுக்கு நல்ல துணை அமைந்துவிட்டது எனும் சந்தோஷத்தில்
இறந்து போகிறார். பிறகு திருமணம், ஆனந்தமான வாழ்க்கை என
போகும் வாழ்க்கையில் வில்லனாக வருகிறது கேன்சர்.

அதுவரை சித்தார்த்தின் நடிப்பு இயல்பாக அருமையாக இருக்கிறது.
தனக்கு கேன்சர் எனத் தெரிந்ததும் சித்தார்த்தின் நடவடிக்கைகள்
மெச்சூரிட்டி இல்லாதது போல இருக்கிறது. சோகமான சமயங்களில்
எக்ஸ்பிரஷனை கொஞ்சம் வித்யாசமாக செய்ய சித்தார்த் கற்றுக்
கொள்ள வேண்டும்.

வித்யா மேனனின் காதலை ஏற்க்க முடியாமல் அந்த வீட்டை
விட்டு காலி செய்து போகும் சித்தார்த்தை ஸ்கூட்டரில் சென்று
பிடிக்க நினைத்த வித்யாவிற்கு விபத்து ஏற்பட அந்த விபத்து
அவரது தண்டுவட ஆபரேஷன் வரை செல்கிறது. இதற்காக
அவரை சித்தார்த் அமெரிக்க அழைத்துச் சென்று தான் வேலை
செய்த மருத்துவமனையில் சிறப்பாக மருத்துவம் கிடைக்க
ஏற்பாடு செய்யும் வேளையில், தனது மனைவியைப் பார்க்க
நினைத்து அவர் வேலை செய்யும் அலுவலகத்துக்கு செல்கிறார்.
அவரைப் பார்த்தாரா? வித்யா மேனனை ஏற்றாரா என்பது
கொஞ்சம் ஜவ்வு மிட்டாயாக இருக்கிறது.

மருத்துவர் ஒருவர் தனக்கு தீராத நோய் வந்திருப்பதை அறிந்து
நடந்துக்கொள்ளும் விதம் இப்படித்தான் இருக்குமா? மனைவி
படும் வேதனையை தாங்க முடியாமல் அவளை விட்டு பிரியும்
கணவனாக சித்தார்த்தை சித்தரித்திருக்கும் இயக்குனர், கடைசி
நேரம் வரை தன் கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் என
காதல் மனைவி தவிப்பாள் என்பதை உணரவில்லை போலும்.

முடிவு எனக்கு பிடிக்கவில்லை. மனதுக்கு நிறைவான
முடிவாக இல்லை. படத்தை ரசித்து பார்க்கலாம்.