Total Pageviews

Wednesday, August 31, 2011

வினை தீர்க்கும் விநாயகனே!!!

மஞ்சளாக பிடித்து வைத்தால் போதும் ஆனந்தமாக வந்து அமர்ந்து கொள்வார்.





அருகம்புல் வைத்தால் கூட மனமிறங்கி விடுவார். சிகப்பு பூ வைத்தால்



இன்னமும் மனமிறங்கிடுவார். மோதகப்பிரியர். மூஷிக வாகனர்.
பலருக்கும் இஷ்ட தெய்வம் இவர்.





இவரை வணங்கி விட்டு எந்த
காரியத்தையும் துவங்க வேண்டும். நம் இன்னல்கள் தீர இதை
விட சுலபமான வழி ஏது??





ஆமாம் அது என்ன 10 நாள் விநாயகர் வைத்து வழிபாடு. சாரதா நவராத்திரி,
வசந்த நவராத்திரி மாதிரி இது விநாயகர் நவராத்திரி. அதனால்தான் 10
நாள் வழிபாடு.


ஆனந்தமாக அந்த யானைமுகனை போற்றுவோம்!!
அவனடி பணிந்து அவன் அருள் பெருவோம்!!!







கானகந்தர்வனின் குரலில் வினைதீர்க்கும் விநாயகனே பாடலை
கேட்டு மகிழ கானகந்தர்வன் வலைப்பூவுக்கு வாருங்கள்.

Tuesday, August 30, 2011

தட்டிக்கேட்டோம்!!! வெற்றிக்கண்டோம்

திவான் படுத்திய பாடுன்னு பதிவு போட்டிருந்தேன்ல. ஒருவழியா
அந்த திவான் அம்மாவீட்டுக்கு போய் சேர்ந்திருச்சு. ஒருவழியான்னு
சொல்றேனே தவிர அதுக்கு நிறைய்ய போராட்டம் செய்யவேண்டி இருந்தது.

நம்ம சகபதிவர் எங்கள் புதுகை ப்ளாக்கர்களின் தலைவர் சுரேகா
ஒரு பதிவு போட்டிருந்தார். அதெல்லாம் சாத்தியமில்லீங்கன்னு
என்னுடைய திவான் பதிவுக்கு லிங்க் கொடுத்தேன். படிச்சிட்டு
சேர்ந்து குரல் கொடுப்போம்னு சொன்னாரு. அப்படீங்கறீங்கன்னு!!!
நம்பிக்கை இல்லாமத்தான் விவரங்கள் கொடுத்தேன்.

திவான் படுத்தும் பாடு பதிவில் திவான் பெங்களூர் போய் ஒரு
கஸ்டமர் வீட்டில் இருக்குன்னு சொன்னாங்கன்னு சொன்னேன்ல.
அந்த கஸ்டமடி வீட்டில் தப்பா இறக்கி வெச்சது வரைக்கும் நிஜம்.
தப்பா இறக்கி வெச்சா அதை ஏன் அந்த கஸ்டமர் தரலை. அவருக்கு
அவர் கஷ்டம். அவருடைய சாமான்கள் சரியா பேக் செய்யப்படாததால்
உடைஞ்சு போயிருந்ததாம். அதனால அவரு சென்னை பேக்கர்ஸுக்கு
நீங்க எனக்கு பணம் கொடுத்தாதான் இந்த திவானை எடுக்க விடுவேன்னு
சொல்லி வீட்டைப்பூட்டிக்கிட்டு போயிட்டாரு!!! இவங்கதான் கஞ்சப்பிசினாரிங்க.
ஆச்சே!! திவானை அப்படியே விட்டுட்டானுங்க. அயித்தான்
பெங்களூர் போயிருந்த பொழுது பெங்களூரில் இருக்கும் சென்னை
பேக்கர்ஸ் ஆபிஸில் பேசி அந்த கஸ்டமர் போன் நம்பர் வாங்கி
அவரிடம் பேசினால் அவர்தான் மேலே சொல்லியிருக்கும் விவரத்தை
சொன்னது!! அப்புறம் அயித்தான் பெங்களூர் ஆபிஸ்காரங்களுக்கு
கெடு கொடுத்து” இன்னைக்கு சாயந்திரம் எனக்கு திவானை அவங்க
வீட்டிலேர்ந்து எடுத்து அனுப்புற வழிய பாருங்க!! அதுக்கு மொதல்ல
அந்த கஸ்டமருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அவரு
எனக்கு போன் செய்யணும்” அப்படின்னு சொல்ல நல்ல புள்ளைங்க
மாதிரி அவருக்கு பணத்தை கொடுத்து திவானை கொண்டு வந்திட்டாங்க.


அப்புறமும் உடனே திவானை அனுப்பலை!!!! சேலம் அனுப்புறேன்னாங்க,
திருச்சிக்கு அனுப்புறேன்னாங்க. திரும்ப சென்னைக்கே அனுப்பிட்டோம்னாங்க.
போன் மேல போன் செஞ்சுகிட்டே இருந்தோம். இந்த சமயத்துல
நம்ம புதுகை ப்ளாக்கர் சுரேகா அவர்கள் பதிவு பாத்து என்னோட
சோகத்தை சொன்னேன். விவரம் தாங்க. கண்டிப்பா செய்வோம்னாரு.

அவரு நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலச் செயலாளர்!. எங்ககிட்ட கம்ப்ளையெண்ட் கொடுத்திருக்காங்கன்னு!! அவர் ஆரம்பிக்க அதுவரைக்கும் போலிஸ்
ஸ்டேஷன் போனா போன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க. இந்தா
அந்தோன்னு புதுகைக்கு பக்கத்தாப்ல ஊருக்கு ஏதானும் வண்டி
போகுதான்னு பாத்து 15 நாள் முன்னாடி மதுரைக்கு அனுப்பிட்டாங்க.
புதுகை-மதுரை 3 மணிநேரம் தான் பயணம். ஆனா புதுகைக்கு
இந்த திவானை அனுப்ப அவங்களால முடியலை.

அப்புறம் சுரேகா ஐடியா கொடுத்து திவானை கேபிஎன் பார்சல்
சர்வீஸ்ல போட்டு அனுப்புங்கன்னு சொன்னா. அனுப்பிடறேன்
சார்! அவங்களை போய் எடுத்துக்க சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க.
“இந்த பாரு! வீட்டு வரைக்கும் கொண்டு போய் கொடுக்கறேன்னுதான்
காசு வாங்கியிருக்க! இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ நஷ்ட
ஈடு கொடுத்துக்கறேன்னு நினைக்கும்பொழுது நான் ஒண்ணும்
செய்ய முடியாதுன்னு சொல்ல” ஆஹான்னு ஆகியிருக்கு அவங்களுக்கு.

இதுக்கு நடுவுல நாங்களும் திரும்ப எங்க திவான் என்னாச்சுன்னு
கேட்டுகிட்டே இருக்க. ஹைதை ஆபிஸில் அந்த ஆளு டென்ஷன்
ஆகிட்டாம்.”என்ன அதுக்குள்ள(!!!)) ஃபேஸ்புக்ல் எல்லாம்
எழுதிட்டீங்க(பதிவு போட்டது சொல்றாப்ல) கன்ஸ்யூமர் கோர்டுக்கு
ஏன் போனிங்கன்னு கத்த, சுரேகா சொல்லிக்கொடுத்த படி பேசினதை
அயித்தான் ரெக்கார்ட் செஞ்சு வெச்சுகிட்டாரு.

10 நாளைக்கு முன்னாடி சுரேக்கா கேட்டபொழுது நாளைக்கு காலேயில்
டெலிவரி ஆகிடும் சார்னு சொல்லியிருக்காங்க. எத்தத்தினா பித்தம்
தெளியும்னு தெரியாத நிலைன்னு சொல்வாங்க. அதுபோல என்ன
செய்வதுன்னே தெரியாத ஒரு நிலையில இருந்தோம். சுரேகாவும்
அடிக்கடி போன் போட்டு அவங்களை காய்ச்சிகிட்டே இருந்திருக்காரு.
(அவரோட வேலைப்பளுகளுக்கு இடையே இதுவும் ஒரு பாரம்னு
எங்களுக்கும் ரொம்ப வருத்தம்)

போன வாரத்துல ஒரு நாள் திடும்னு சுரேகா போன் செஞ்சு
“அவங்க நீங்க கொடுத்த அட்ரஸ், சலான் எல்லாம் தொலைச்சிட்டாங்க.
அப்பா வீட்டு அட்ரஸ் கொடுங்கன்னு சொன்னாரு!!!” அடக்கொடுமையேன்னு
ஆகிப்போச்சு. அப்பா அட்ரஸ், போன் நம்பர் அனுப்பியிருந்தேன்.

சனிக்கிழமை அனுப்பிடறதா திரும்ப சொல்லியிருக்காங்க மதுரை
ஆபிஸ்ல. கடைசியில சுரேகா மதுரை ஆபிஸ்ல யாரை தொடர்பு
கொள்ளணுமோ அவரு நம்பர், கேபிஎன்ல போட்டு அனுப்பினாங்களே!
அந்த நம்பர் எல்லாம் அயித்தானுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினாரு.
அந்த நம்பர்ல தொடர்பு கொண்டு பேசினோம். சனிக்கிழமை ராத்திரி
9.30க்கு போன் செஞ்சு சார் இப்ப கொண்டு போய் டெலிவரி கொடுக்கவா!!
கேட்க “சாமிகளா! அவங்க வயசானவங்க. இந்நேரம் படுத்திருப்பாங்கன்னு”
சொல்ல நேற்று 29-8-11 திங்கள்கிழமை சுபயோகசுபதினத்தில் மதியம்
1.30 மணிக்கு திவான் அம்மா வீட்டுக்கு போய் சேர்ந்திருச்சுங்க.

அங்க தூக்கிப்போட்டு இங்க தூக்கிப்போட்டுன்னு கேபி என்ல போடும்
வரைக்கும் நல்லா இருந்த திவானின் 2 புஷ் போய் கொஞ்சமா
டான்சாடிகிட்டு ஓரளவுக்கு பத்திரமாவே வந்து சேர்ந்திருக்கு.
சுரேகாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

தட்டிகேட்டால் கிடைக்கும்னு அவர் சொன்னது நிஜமாயிடிச்சு.
விழிப்புணர்வு வரணும். உபயோகதராரா நம்மளூடைய உரிமையை
நாம தெரிஞ்சுகிட்டு உரிமை மறுக்கப்பட்டால் தட்டுவதில் தப்பே இல்லீங்க.




திவான் புதுகைக்கு பத்திரமா ஒரு வழியா போய்ச்சேர்ந்த சந்தோஷத்தோட
இன்னொரு சந்தோஷமும். எங்க வீட்டுக்கு ஹேப்பி பர்த்டே!!! :))

சென்ற வருஷம் ஆகஸ்ட் 30தான் இந்த வீட்டுக்கு கிரஹப்ரவேசம் செஞ்சோம்.
அதுக்கும் சேர்த்துதான் ட்ரீட்.

Thursday, August 25, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி - 25/8/11

அரசியல்ல எதுவேணாம் நடக்கலாம்னு சொல்லுவாங்க. வெக்கமே
இல்லாதது இந்த அரசியல்வாதிகள் கூட்டம்தான்.
மறைந்த ஆந்திர முதல்வர் YSR மகன் ஜகன் மோகன் ரெட்டியின்
அபார சொத்து குவிப்பு பத்தி சீபிஐ விசாரிக்க ஆரம்பிச்சது
பழைய நியூஸ். லேட்டஸ்ட் நியூஸ் அவங்க அப்பா முதல்வரா
இருந்த பொழுது அவருடைய அருளால பலர் சொத்து சேத்திருக்காங்க
அப்படின்னு கண்டுபிடிச்சு அவரையும் குற்றவாளியா சேத்திருக்காங்க.

மருத்துவரா இருந்து முதல்வரான ராஜசேகர ரெட்டி சொத்து
எப்படி சேத்தாரு? அதிகார வர்க்கத்துல இருக்கறவங்களை
ஒண்ணும் செய்ய முடியாது. அவங்களே எதிர்க்கட்சி ஆனாத்தான்
உண்மைகள் தோண்டி எடுக்கப்படுமா????????
**************************************************************
ஆந்திரா காங்கிரஸும் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி
கேலிக்கூடமா ஆகிடும் என்பதுல டவுட்டே இல்ல.
ராஜசேகர ரெட்டி பேரை குற்றவாளி லிஸ்ட்டில் சேத்ததுல
கோவமான காங்கிரஸ் எம்பிக்கல் 26 பேர்கள் ராஜினாமா செஞ்சாங்க.
(எத்தனை வாட்டி செய்வாங்க? ஏற்கனவே தெலங்கானா பிரச்சனைக்காக
ராஜினாமா செய்ததா ஞாபகம்) டீவில ஒரு ஷோவுல பேசிக்கிட்டதைக்
கேட்டு எனக்கு சிரிப்பும், கோவமும் தாங்கலை.

போபர்ஸ் ஊழலை பத்தி ஆரம்பிச்சாலே மறைந்த ராஜிவ்காந்தி
அவர்கள் பேர் வருவதை தடுக்க முடியாது!!! அவர் முன்னள்
பிரதம மந்திரி. அதுக்காக நாங்க ஏதும் சொல்லலியே. ராஜசேகர
ரெட்டி முன்னாள் முதல்வர் தான் அப்படின்னு ஸ்டேட்மெண்ட்
விட்டிருக்காரு ஒரு காங்கிரஸ் கட்சி கரைவேட்டி.

மொத்தத்துல என்ன சொல்ல வர்றாங்க? காங்கிரஸ் கட்சி
ஊழல்களின் மொத்த உருவம்னா?????
************************************************************
அன்னா ஹசாராவை தேவையில்லாம அரெஸ்ட் செஞ்சு அதுகப்புறம்
அவருக்கு உண்ணாவிரதத்துக்கு அனுமதி கொடுத்து, இப்ப
பேச்சு வார்த்தைக்கு ரெடின்னு லெட்டர் எழுதி(எதுக்கு லெட்டர்
எல்லாம் எழுதணும்??) நேத்து பேச்சு வார்த்தை நடந்திருக்காங்க.
அன்னா ஹசாரா கேட்டுக்கிட்ட படி சில பல மாறுதல்களைச்
செய்வோம்னு சொல்லியிருக்காங்க. பிரதமரை லோக்பால்
பில்லில் சேர்ப்பதில் என்ன தப்பு?? கனிமொழி சொல்லியிருப்பது
போல உள்துறை அமைச்சரும், பிரதமரையும் சாட்சி ஆக்கி
ரெண்டு தட்டு தட்டி விசாரிச்சா உண்மை வெளிவரும். அப்ப
லோக்பால் பில்லில் யார் யாரு பேரெல்லாம் கண்டிப்பா சேக்கணும்னு
முடிவு செய்யலாம்.

இந்த அரசுதான் ஊழல் மிகுந்து இருக்குன்னு அடுத்தவங்களுக்கு
ஓட்டு போட்டா அவங்க ஏதும் நல்லது செய்ய போறாங்களா?
ஒரு குப்பையும் இல்ல. அவனவன் அவனவன் ஜோலியைத்தான்
பாக்கிறான்!!

இதுல சூப்பர் காமெடி என்னன்னா? அன்னா ஹசாரே போராட்டுத்துல
எங்க தெலங்கானா பிரச்ச்னையை எப்படி முன்னுக்கொண்டு போறதுன்னு
தெரியாம தலைகள் சைலண்ட் ஆகிட்டாங்க!!!!!!!
*********************************************************

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!!!!!!

விலை வாசி ஏறிப்போச்சு அது இதுன்னு புலம்பிக்கொண்டு இருக்கும்
மக்களுக்கு தேனொழுகும் செய்தி ஒன்று காத்திருக்கு!!!
இனி ஒரு குடும்பத்துக்கு வருஷத்துக்கு 4 சிலிண்டர்தான் ரேஷன்.
அதுக்கு மேல வேணும்னா ஒரு சிலிண்டர் ரூபாய் 650 கொடுக்கணும்.

இதுல என்ன நல்ல செய்தி அப்படின்னு கேட்டா. தங்கமணிகளுக்கு
கட்டாய ஓய்வு கொடுக்க அரசாங்கம் முடிவு செஞ்சிருக்குன்னு
புரிஞ்சிக்கணும். சிலிண்டர் இருக்கும் வரைக்கும்தான் சமைக்க
முடியும். இல்லாட்டி!!! எஸ்ஸு ஹோட்டல்தான் கதி.

வரும்போது மறக்காம வாங்கிட்டுவாங்கன்னு சாமான் லிஸ்ட்
கொடுக்க வேண்டியது இல்ல. என்னென்ன வேணும்னு மெனு
மட்டும் கொடுத்திடலாம். (வார மெனுத்திட்டம் கூட போட்டுக்கிடலாம்ங்க)
சமையலறை எப்பவுமே சுத்தமா இருக்கும்.!!!!!!

வீட்டுவேலைக்காரம்மா வரலைன்னு டென்ஷன் வேண்டாம்.
பெண்களின் மேன்மைக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் நமக்கு
கிடைச்சிருக்குன்னு சந்தோஷப்படுங்க. ரங்குகளுக்கு இப்ப
ரொம்பவே சந்தோஷமா இருக்கும். (வூட்டு சாப்பாட்டிலேர்ந்து
தப்பிக்கலாம் பாருங்க!!)

**********************************************************************
டிஸ்கி: சிலிண்டர் ரேஷன் பத்தி எங்கம்மா கிட்ட சொன்னேன்.
அவங்க அடிச்ச கமெண்ட்,” இண்டக்‌ஷன் அடுப்பு காரங்க கிட்ட காசு
ஏதும் வாங்கிட்டாங்களோ!!!” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சரி க்யாஸ்தான் ரேஷன். கரண்டாவது உபயோகிக்கலாம்னு
நினைச்சுகிட்டு இருந்தேன். அதுக்கு வெச்சிட்டாங்க ஆப்பு.
”ஒண்ணரையானா காய்கறி எல்லாம் ஒண்ணார்ரூவா ஆக்கிப்புட்டாண்ணேன்”
ஒரு யூனிட் கரண்ட் இனி ரூ4.15.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



Wednesday, August 24, 2011

மங்களகிரி காட்டன் புடவைகள்

ச்சும்மா ஒரு மெஜஸ்டிக் லுக் அப்படின்னு சொல்வாங்களே
அதுமாதிரியான ஒரு லுக்கைத் தரும் புடவைகள் இந்த மங்கள்கிரி
காட்டன் புடவைகள். இது தூய பருத்தியால் ஆனது. ஜரி உபயோகிப்பார்கள்.
அடர்த்தி பார்டராக இல்லாமல் பார்க்கவும், உடுத்தவும் மெத்தென
இருக்கும் இந்த வகை புடவைகள் சின்ன ஃபங்க்‌ஷன்களுக்கு,
அலுவலகத்திற்கு கட்டிச் செல்ல ஏதுவானது.
கண்ணைக்கவரும் வண்ணங்களில் தயாராகிறது இந்தப் புடவைகள்.

இது பக்கா கைத்தறிப்புடவை. இன்றளவும் கையால்தான் நெசவு
செய்யப்படுகிறது. அது என்ன மங்களகிரி புடவைவகை?
மங்களகிரி எனும் ஊரில் தயாரிக்கப்படும் புடவை இது.
விஜயவாடாவிலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கிறது மங்களகிரி.
இங்கே பானக நரசிம்ம மூர்த்தி எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவு
பிரசித்தம் மங்களகிரி காட்டன். மெலிதான ஜரிபார்டர் தான் அதிகம்
கிடைக்கும் என்றாலும் ஆர்டர் செய்தால் இவ்வளவு அழகான
புடவையும் கிடைக்குமாம். சில கடைகளில் இவ்வளவு அழகிய
வேலைப்பாடு கொண்ட புடவைகள் கிடைக்கும்.

ஆத்திர அவசத்திரத்திற்கு புடவை கட்டுவது இயலாது என
ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு (என்னையும் சேர்த்துதான்) ஒரு
குட் ந்யூஸ். மங்களகிரி வெரைட்டியில் ட்ரெஸ் மெட்டீரியலும்
கிடைக்கும். காண்ட்ராஸ்ட் கலரில் சன்ன ஜரி போட்ட ட்ரெஸ்
மெட்டீரியல் 400 ரூபாய்க்கே கிடைக்கும்.


கொஞ்சம் 750 ரூபாய் வரை செலவு செய்தால் இந்த மாதிரி எம்ப்ராய்டரி
போட்ட மெட்டீரியல் கிடைக்கும்.

பார்க்கவும் சுகமாக இருக்கும் மங்களகிரி வயது வித்தியாசமில்லாமல்
அனைவரும் அணிந்து மகிழும் ஒரு வெரைட்டி என்பதில் ஐயமில்லை.

Monday, August 22, 2011

தீராத விளையாட்டுப்பிள்ளை....

வரலட்சுமி விரதம் முடிந்து மாயக்கண்ணன் வீட்டுக்கு வந்தான்.
வரலட்சுமி விரதத்திற்கு வைக்கும் அம்மன் முகம் ரொம்பவே
சின்னதாக இருந்தது. இத்தனை வருடம் பூஜித்த அம்மனை என்ன
செய்வது? வெள்ளிக்கிழமை பூஜைக்கு அவளை வைத்துவிட்டு
புதிதாக அம்மன் முகம் வாங்கினேன். (அவளுடைய அருளே அருள்.
நான் வாங்கிய அன்று கிராம் 51 இப்போது 61 ரூபாய்)

(படத்தை அப்லோட் செய்ய விடாமல் ப்ளாக்கர் படுத்துகிறது. இன்னொரு
சமயத்தில் கண்டிப்பாய் போடுறேன். லட்சுமி அம்புட்டு அளகு)

சித்தி கோலம் போடுவதில் எக்ஸ்பர்ட். கோலமாவு, காட்டன் பட்ஸ்
கொண்டு சித்தி போட்ட கோலம் இது.


கிருஹப்ரவேசத்திற்கு வாங்கியிருந்த தஞ்சாவூர் பெயிண்டிங்கில்
வரலட்சுமியையும் தோதாக வைத்து பூஜை நடந்தது.

என்னுடைய சின்ன கிருஷ்ணன் வீடு மாற்றும் பொழுது காணாமல்
போய்விட்டான்!! மார்ச் மாதம் மதுரா போயிருந்த பொழுது
இந்த லட்டு கோபாலை வாங்கிவந்தேன். பீதாம்பரிக்கு மஞ்சள்
உடையும், மகுடம், மாலை எல்லாம் வாங்கி வைத்திருந்தேன்.

சனிக்கிழமை முதல் வீட்டில் விருந்தினர். சித்தியும் அவர்களின்
நட்புக்களும் டப்பர்வேட் மீட்டிஙிற்காக வந்திருந்தனர். அவர்களுடன்
பிர்லா மந்திர் போயி, ஷாப்பிங் அழைத்துச் சென்று ரொம்ப
டயர்டாகிவிட்டேன். அவர்கள் 4 மணி ட்ரையினில் ஊருக்கு
கிளம்பினார்கள். ஆஷிஷ்தான் அலங்காரம் செய்தான். பூஜை
அப்பாவுடன் சேர்ந்து செய்தான்.


சென்றவாரம் ஒரு ஷார்ட் ட்ரிப்பாக சென்னை போயிருந்தார் அயித்தான்.
வரும்போது சீடை, முறுக்கு வாங்கி வந்திருந்தார். அத்தோடு தயிர்,அவல்,
வெண்ணெய் வைத்து பூஜை முடிந்தாகிவிட்டது.

இங்கே ஒரு மழலையர் பள்ளியில் ஜன்மாஷ்டமி சிறப்பு நிகழ்ச்சிக்கு
போயிருந்தேன். அங்கே ராதையுடன் கண்ணன் அருமையாக புல்லாங்குழல்
இசைத்துக்கொண்டு இருந்தான். சுட்டுக்கொண்டு வந்துவிட்டேன்.






ஆயர்பாடி மாளிகையில் பாடல் அந்தக் கண்ணனுக்காக


எல்லாம் அந்த மாயக்கண்ணனுக்கே அர்ப்பணம்

GADWAL SAREES

பார்க்க ரிச் லுக் வேணும். பட்ஜட்டுக்குள்ள புடவை வாங்கணும்.
பட்டு கூடாது. இப்படி விரும்புறவங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் கத்வால் புடவைகள் தான்.

ஆந்திராவின் மெஹபூப் ஜில்லாவில் இருக்கும் கத்வால் கிராமத்தில்
தயாரிக்கப்படும் இந்தப் புடவைகள் இன்றளவும் கைத்தறியில் தான்
நெசவு செய்யப்படுகிறது. மிஷின்களின் பயன்பாடு சுத்தமாக கிடையாது.
பொதுவாக காட்டனில் புடவையும் பார்டரும், முந்தியும் மட்டும்
பட்டு நூல் கொண்டு செய்கிறார்கள். பட்டு நூலை தவிர்க்க விரும்பினால்
காட்டன் ஜரி கொண்டு நெய்யப்படும் புடவைகளும் கிடைக்கும்.



பட்டு/பருத்தி நூலில் மிக அழகாக சாயம் சேர்ப்பதில் ஆரம்பிக்கிறது
இந்த புடவையின் ஆரம்பம். புடவை கலர் சரியாக சீராக அமைய
பலதடவை வெந்நீரில் நூலைப் போட்டு சாயம் தோய்த்து எடுக்கிறார்கள்.
அதன்பிறகு அதை சின்ன குச்சியில் தனித்தனியாக கட்டி நெசவு
ஆரம்பிகிறார்கள்.

புடவையில் செய்யவேண்டிய டிசைனை முதலில் ஒரு தாளில்
வரைந்து வைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக அந்த டிசைனை
புடவையில் வரவைக்கிறார்கள். பார்டரில் மட்டும் ஜரி கொண்டு
டிசைன் செய்வதால் புடவை ஜொலிக்கிறது. அதிக பாரமில்லாமல்
தயாரிக்கப்படும் கத்வால் புடவை கட்டிக்கொள்ள மெத்தென்று
இருக்கும். சில புடவைகளை தீப்பெட்டிக்குள் சுருட்டி வைத்துவிடலாம்
என்று சொல்வார்கள். பல்லு என்று சொல்லப்படும் முந்தானையில்
மட்டும் அதிக வேலைப்பாடு இருக்கும்.



சிகோ என்று சொல்லப்படும் பட்டு,பருத்தி கலந்த புடவையும்
கிடைக்கும். கல்யாணம், விஷேஷம் போன்றவற்றிற்கு
மிக கிராண்டாக இருக்கும் இந்தப் புடவை என்பது விசேஷம்.
காட்டனில் ரிச்சாக ஜரி போட்டு இருக்கும் புடவை 2000-2500
வரை வாங்கலாம். கத்வால் காட்டன் ஜரி புடவைகள் 450க்கே
கிடைக்கும். கத்வால் புடவையில் போடப்பட்டிருக்கும்
எம்ப்ராய்டரி தங்க ஜரி அல்லது செம்பு ஜரியால் போடப்பட்டதாகும்.


ஹைதராபாத்தில் கத்வால் புடவை நெசவாளர்கள் சொசைட்டி
இரண்டு அடுக்கு மாளிகையில் இந்தப் புடவைவகளை விற்பனை
செய்கிறார்கள். பெரிய்ய பெரிய்ய புடவை கடைகள் முதல்
ஹோல்சேல் ஏரியாக்களிலும் கிடைக்கும். நம் சென்னையிலும்
இந்த வகை புடவைகள் பெரிய்ய கடைகளில் கிடைக்கிறது.

Address:

Sri Gadwal Weavers Society
# 6-3-803/1/13
SSS Chambers, 1st Floor
Opp: Hanuman Temple
Ameerpet 'X' Road
Hyderabad
Phone: 91-040-55756469




Friday, August 19, 2011

கலம்காரி புடவைகள்


புடவைவகைகளைப்பத்தி பாத்துக்கிட்டு இருந்தோம். அதுல ஒரு ப்ரேக்
விழுந்து போச்சு. இனி தொடர்வோம். இன்றைக்கு நாம பார்க்க இருப்பது
கலம்காரி வகை. கலம் என்றால் பேனா. இது பேனா கொண்டு வரையப்படும்
டிசைன்கள். ரொம்ப கிராண்டா ஜரி எல்லாம் இருக்காது. ஆனா ஒரு நல்ல
லுக் கிடைக்கும்.


இந்த கலம்காரி டிசைனில் இரண்டு வகை இருக்கு. ஒண்ணு ஸ்ரீகாலஹஸ்தி ஸ்டைல்.
மத்தது மச்சிலிபட்டிணம் டிசைன். இரண்டு ஊருமே ஆந்திராவில்தான் இருக்கு.
காலஹஸ்தி ஸ்டைலில் அங்கே இருக்கும் கோவில் பத்தினதா இருக்கும்.
அந்த கோவிலுக்கு தேவையான சித்திரங்கள் வரைந்தார்கள். இந்த ஸ்டைலில்
கிருஷ்ணர், ப்ரம்மா, கணேஷா,லட்சுமி, ராமா,பார்வதி கடவுள்களை மட்டும்
வரைவாங்க.



மச்சிலிபட்டிணம் ஸ்டைலில் இரானியர்கள், மொகலாயர்கள் சாயல் இருக்கும்.
கலம்காரி டிசைனில் இயற்கை வர்ணங்கள் உபயோகிக்கிறாங்க.இந்த வகை
டிசைனை பெட்ஸ்ப்ரெட்கள்,உடுப்புக்கள்,திரைச்சீலைக்களில் பயன்படுத்துவாங்க.
ரொம்ப புராதனமான இந்த கலை கோல்கொண்டா சுல்தான்களால் பெரிதும் வளர்க்கப்பட்டது. இந்த வகைப்புடவையை எப்படி தயாரிக்கறாங்கன்னு
தெரிஞ்சிக்க இங்க போய் பார்க்கலாம்.


ப்ளைன் புடவை வாங்கி அதில் கலம்காரி டிசைன் மோத்திஃப்களை பார்டர்
போல, முந்தியில் என ஒட்ட வைத்து (கிட்டத்தட்ட அப்ளிக் ஒர்க் என்பார்களே
அது போல) செய்து கட்டுவது ஒரு ஸ்டைல். சுடிதார்களிலும் வைத்து
தைக்கலாம். கலம்காரி புடவைகள் கொஞ்சம் காஸ்ட்லி என்பதால் இந்த மாதிரி
செய்யும் பொழுது டிசைனர் புடவை போல இருக்கும். நம் பட்ஜட்டிலும்
வரும். 600 ரூபாய்க்கு ஒரு முழு செட் கிடைக்கும். நல்ல ரிச் லுக்
கொடுக்கும். இந்தக் காட்டன் புடவைகள் மிக அழகாக எடுப்பாக இருக்கும்


Sunday, August 14, 2011

சுதந்திர தின சிறப்புப் பதிவு

”ஆர்ட் எக்சிபிஷனுக்கு ஏதேனும் படம் வரைந்து கொடு!” என்று
ஆசிரியை கேட்க ஆஷிஷ் வரைந்தது இந்தப் படம்.


வரைந்த இடம் கொழும்புவில் இருக்கும் பள்ளியில். அவனது ஆசிரியை
அவனை மிகவும் மெச்சினார். 6 1/2 வயதுக்குழந்தைக்கு தன் தேசத்தின்
மீது இருக்கும் மதிப்பு பற்றி மகிழ்ந்து அந்தப்படத்தை எக்சிபிஷனில் வைத்தார்
அவனது ஆசிரியை.

இந்தியாவை விட்டு வெளிநாட்டில் இருக்கும்பொழுது நமக்கு ஜாதி,மதம்,
பேதம் இருப்பதில்லை. யாருடைய கையிலாவது இந்தியன் பாஸ்போர்ட்டை
கண்டாலே உள்ளம் பொங்கும். எங்காவது நம் தேசத்து மொழி காதில்
கேட்டால் ஏதோ உறவினரைப் பார்த்தது போல இருக்கும் அந்த உணர்வு
உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் புரியும்.

இங்கே இந்தியாவுக்குள் இருப்பவர்களுக்கு நாற்றுப்பற்று இல்லாமல்
போய்விடவில்லை. குளத்தில் அழுக்கு சேர்ந்திருப்பது போல ஏதோ ஒரு
மாயை, தடையை நமக்கு நாமே போட்டுக்கொண்டுள்ளோம். அதை
களைந்து நாம் அனைவரும் ஒருவர் எனும் எண்ணம் வந்தால் நமக்குள்
பிரிவினை என்பது ஏது?



கையில் இருப்பதை தொலைத்துவிட்டு தேடி பின்பு கிடைத்திருக்கிறது
இந்தச் சுதந்திரம். மறுபடியும் அதை அடமானம் வைத்துவிடாமல்
ஒற்றுமையாக இருந்து நம்மை நாமே
காத்துக்கொள்வோம்.

அருமையான இந்தப் பாடலைக் கேட்க

இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு..
திசைதொழும் துலுக்கர் என் தோழர்…
திசைதொழும் துலுக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்
எல்லா மதமும் என் மதமே ..
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்

கங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்
ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம்
எங்கள் அன்னை பூமி பாரதம்
இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித்த பாவன சீத்தராம்

இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
இதிகோ இதிகோ இக்கட பாருங்கோ
சுந்தர தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்பிடி நடனங்கள் ஆடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
ஷிரீசைலம் திருப்பதி சேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ
கல் மோகன ரங்கா பாடுங்கோ…..

ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
காவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு
ப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..
நீ நோடு மைசூரு…
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு
ஏனு சுவாமி… ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு

படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹு அல்லா
ஞானும் இவளும் ஜனனம் எடுத்தது
கேரளம் திரிசூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவிடே நோக்கணும் நீங்க..
தேயிலை மிளகு விளைவதை பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க..
படைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்
அல்லாஹ்..எங்கள் அல்லாஹ்…
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்
அல்லாஹ் ஒ.. அல்லாஹ்

சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப் வாலா கீத் சுனோ
பஞ்சாப் வாலா கீத் சுனோ
தங்க கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ…
ம்ம்..ஆஹா தேக்கோ தேக்கோ…

ஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ…ஆவோ..
ஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ
ஆவோ..ம்ம்..ஹா…ஹா… ஆவோ…
ஆவோ ஆவோ…………….
பஞ்சாப் சிங்கம் லால லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்நாடு
பகத்சிங் பிறந்த பொன்நாடு
யாஹூ.. யாஹூ.. ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…
யாஹூ.. யாஹோ…

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்
(எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்)
பாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து
பேசி பழகும் கிள்ளைகள்
(பேசி பழகும் கிள்ளைகள்)
சத்தியம் எங்கள் வேதம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதை பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்…
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்..
வந்தே மாதரம்….வந்தே மாதரம்
வந்தே மாதரம்………….

Friday, August 12, 2011

தாமரைப்பூவில் அமர்ந்தவளே!!!!



வெள்ளிக்கிழமை என்றுமே விஷேஷம். அதிலும் இன்று வரலட்சுமி விரதம்.
வேண்டிய வரங்களைத் தந்தருளும் வரலட்சுமியாக அன்னை இன்று நம்
வீட்டிற்கு வந்து அமர்ந்து அருள் புரிகிறாள்.



வேண்டுபவருக்கு வேண்டியதை வரமாக அருள்பவள் ஆதலால் அவள்
பெயர் வரலட்சுமி.

திருவிளக்கை ஏற்றிவைத்து பூஜை செய்தால் போதும். தீபத்தில்
குடி கொண்டு நம்மை அருள்பாளிப்பாள் அன்னை.



இந்த வாட்டி நிவேதனம் மைசூர்பாக் அதுவும் மைக்ரோ அவனில். :))
ரெசிப்பிக்கு tadka corner வந்தா கிடைக்கும்.


அன்னையவளை பூஜித்து அவளருள் பெருவோம்.
அனைவருக்கும் அன்னை எல்லா வளத்தையும் தந்து ஆசிர்வதிக்கட்டும்.

Tuesday, August 09, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி - 9/8/11

ஆன்னா பந்த், ஊன்னா பந்துன்னு இருக்கு தெலங்கானா ஏரியா.
இவங்களை கேக்க ஆளே இல்லையான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
ச்சும்மா சும்மா பந்த் நடத்தறாங்கன்னு யாரோ ஒரு புண்ணியவன்
தெலங்கானா ராஷ்ட்ர கமிட்டி தலைவர் கே.சி.ஆர் மேல கேஸ்
போட்டிருக்காங்க. (நாளைக்கு பந்தாம்ல!!)
தவிர மார்ச்மாதம் மில்லியன் மார்ச்ன்னு ஒண்ணு நடத்தி அராஜகம்
செஞ்சாங்க. அதுக்கு போலீஸ் நல்லா கவனிக்கப்போகுதாம்.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. ராமுலம்மாவுக்கு (விஜயசாந்தி)
நேரம் எப்படி இருக்கோ??!!!!

டிசம்பர் 09 லேர்ந்து இதுவரைக்கும் 16 பந்த் நடந்திருக்கு. நாளைய
பந்தை சேர்த்தா 17ஆம். இதுலயும் சாதனை படைப்போம்ல!!!


****************************************************************
இந்த வாட்டி பெருசா மழையில்லை. போனவருஷம் கொட்டி தீத்துச்சு.
அந்த மழையால எங்க வீட்டு வேலை முடியாம திண்டாடினோம்.
இப்ப மேகம் கருக்குது, மழை வரப்பாக்குது, வீசி அடிக்குது காத்துன்னு
தான் இருக்கு. ஆனா போன வாட்டி மாதிரி இல்ல. :((

வருண பகவான் கண்ணு தொறந்து பாரு ராசா!!!!!
***************************************************************
தங்கம், வெள்ளி விலை எங்கயே போயிடிச்சு. 3000 ரூபாய்ல 8 கிராம்
தங்கம் வாங்கினது போயி இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கிராம் 3000
ஆகப்போகுதாம்!! அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார
மாற்றத்தால (இதான் மொதோ தபாவாமே, இப்படி லேசா சரிஞ்சதுக்கே
இந்த மாற்றம்னா?!!) ஷேர் மார்க்கெட் அடி வாங்கிருக்கு. இதனாலயும்
இன்னும் தங்கம் விலை ஏறுமாம். போறபோக்கப்பாத்தா மாங்கல்யம்
மட்டும் தங்கத்துல போடுறோம். பொண்ணு பேர்ல ஃபிக்ஸட்டா
போட்டுடறோம்னு சொல்லும் காலம் வரும். 1981ல வெளிவந்த
மணல்கயிறு படத்துல விசு ஒரு வசனம் சொல்வாரு,” ஒரு குந்துமணி
தங்கத்துக்கூட ஆசைபடக்கூடாதுன்னு!!” இது இனி சாத்தியம் ஆகிடும்.

******************************************************************

அது ஏறுது, இது ஏறுது, வீட்டுக்கடன் வட்டி ஏறுது. கேஸ் 400 ரூபாய்
ஆகிடிச்சு. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்னு சொன்ன உடனே
ஆட்டோ மீட்டரே இல்லாம ஃப்ளாட் ரேட்டா ஓடுது.வரிகட்டி மாளல.
சாப்பிட போனா சாப்பிட்ட பில்லுல 25 சதவிகிதம் வட்டியா
கட்டற நிலமை. எல்லாம் சூப்பர் ஜெட் ஸ்பீட்ல ஏறுது. ஆனா இதுக்கு தகுந்த மாதிரி சம்பளத்தையும் ஏத்த மாட்டேங்கறாங்களே!! என்னென்னவோ மாற்றம் வரும்னு
சொல்றாங்களே அதுமாதிரி இந்த குடியாட்சி சரியாவரலைன்னுபழைய
படி மன்னராட்சி வந்தா சரியாகுமோ?!! :((((
****************************************************************
ஆகஸ்ட் 5 தெலங்கானாப்பத்தி கண்டிப்பா பேசுவேன்னு சபதம் போட்டு
சுஷ்மா சுவராஜ் கலக்கு கலக்குன்னு கலக்கி பேசினாங்க. கடைசில
தெலுங்குல வேற படிச்சாங்க. ஆனா அதுக்கு காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த எம்பி ஒருத்தர் கேட்ட கேள்விதான் ஹைலைட்டே.
“ஆந்திராவுல மருந்துக்கு கூட ஒரு எம்பி கூட இல்லாத பிஜேபி
தெலங்கானா பத்தி பேசுதேன்னு”. இப்படி பேசினாலாவாது அடுத்த
எலெக்‌ஷன்ல ஒரு ஆளாவது அவங்க கட்சியைச் சேர்ந்தவங்க
தேர்ந்தெடுக்கபப்டுவாங்கன்னு நினைச்சிருப்பாங்க போல பாவம்!!

*********************************************************************
புது வீடு கட்டியிருக்கேன். புது வலைப்பூ ஆரம்பிச்சிருக்கேன்.
கொஞ்சம் இங்கிலிபீசுலயும் தாளிக்கலாம்னு தாளிக்க ஆரம்பிச்சிருக்கேன்.
அங்கயும் அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்க.
இன்றைய ஷ்பெஷலா பாலக் பனீர் ரைஸ் பதிவு வந்திருக்கு.
ஒரு எட்டு வந்து பாருங்க. மிக்க நன்றி

Monday, August 08, 2011

5க்குள்ளே இருக்கு நம் ஆனந்தம்

சென்ற பதிவிற்கு இங்கே:

நமக்கும் நம்ம மனசுக்கும் அதிகம் சேதாரம் இல்லாமல் பார்த்துக்கணும்.
அது எப்படின்னு பாப்போம்னு போன பதிவுல சொல்லியிருந்தேன்.
கீதையின் சாரம் தான் அது. ஆனா அதைப் படிக்கும் பொழுது நல்லா
இருக்கும். இதெல்லாம் எப்படி செயல் முறைப் படுத்திப்பதுன்னு
மனசு லேசா குழம்பும். நாமும் ஆமாம்லன்னு அப்படியே விட்டுட்டு,
திரும்ப பாரங்களை சுமக்க ஆரம்பிச்சுடுவோம்.

வாழும் கலைப் பயிற்சியில் இந்த 5 கொள்கைகளைச் சொல்லிக்கொடுத்தாங்க.
அதை பத்தி உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். இதுவும் கீதாசாரத்திலிருந்து
எடுக்கப்பட்டதுதான். ஆனா நம்ம மனசை கட்டுப்படுத்திக்க இது உதவும்.

1. சிலருக்கு வெயிலைக்கண்டா பிடிக்காது. மழை கொட்டினா பிடிக்காது.
குளிரும் பிடிக்காது. அப்புறம் எப்படி? வெயில், மழை எல்லாம் வேணும்.
வெயில், மழை இருந்தாத்தானே விளைச்சல். இரவு வந்தா அடுத்தநாள்
கண்டிப்பா விடியும். வெளிச்சம் கிட்டும். நம்ம வாழ்க்கையும் அதுபோலத்தான்.
இன்பம். இன்பதுக்கு பின் துன்பம். அதற்கு பின் இன்பம். இது ஒரு
சுழற்சி போல சுத்திக்கிட்டே இருக்கும். அதுதான் இயற்கையின் நியதி.
படைத்தவன் நம்மை புடம்போட கொடுக்கும் பயிற்சி.
அதனால நாம துன்பத்துக்கு பின் இன்பம் நிச்சயம் எனும் நம்பிக்கையை
மனசுல ஏற்படுத்திகிட்டு துவழும் பொழுதெல்லாம் த்ரீ இடியட்ஸ்
படத்தில் அமீர் கான் சொல்லுவது போல, “நம் மனதை கொஞ்சம
முட்டாளாக்கி ஆல் இஸ் வெல், எல்லாம் நன்மைக்கே, நல்லது நடக்கும்”
அப்படின்னு அடிக்கடி மந்திரம் மாதிரி சொல்வதால நம்பிக்கையான
வாழ்க்கை கிடைக்கும்.

2. ”மாமியார் உடைச்சா மண்பானை மருமகள் உடைச்சா பொன்பானைன்னு”
ஒரு வசனம் சொல்வாங்க. நாம செஞ்சா அது தப்பில்லை. அதுவே
அடுத்தவங்க செஞ்சா மாபாதகம்னு ஒரு நினைப்பு எல்லோருக்கும் உண்டு.
அலுவலகத்துல அதிகாரி அப்படி நினைப்பதாலத்தான் அவருக்கு கீழ
வேலை செய்பவருக்கு மன உளைச்சல், கணவன்/மனைவி உறவில்
இப்படி ஒரு நிலை இருவரில் யாருக்கு வந்தாலும் அமைதி தொலைந்து
போகும். இப்படி நிறைய்ய சொல்லலாம். தீர்வு என்ன? அடுத்தவங்க
செய்வதில் குற்றம் மட்டுமே பாத்துகிட்டு இருக்கக்கூடாது. வேணும்னே
செஞ்சிருப்பாங்க அப்படின்னு சொல்வதால நமக்குத்தான் உளைச்சல் ஆகும்.
ஆக நம்ம வேலையை நாம நல்லபடியா செஞ்சுகிட்டு போய்க்கிட்டே
இருப்போம். “தன் மெய்வருத்தக் கூலி தரும்”னு வள்ளுவர் சொல்லிருப்பது
பொய்யாகாது.

3. நாம அழகா ஒரு புதுப்புடவை வாங்கியிருப்போம். கத்திரிப்பூ கலர்.
மேட்சிங்கா ப்ளவுஸும் தெச்சு அப்படியே சந்தோஷமா வெளிய வர
ஃப்ரெண்ட் ஒத்தங்க பாத்து,” ஐய! இந்தக் கலர் உனக்கு நல்லாவே
இல்ல!!” அப்படின்னு சொன்ன உடனே மனசு புஸ்ஸுன்ன் ஆகி
ஆசை ஆசையா எடுத்துகிட்டு புடவை பிடிக்காமலே போயிடும்!!

ரொம்ப ஆசைப்பட்டு ஒருத்தர் செல்போன் ஒண்ணு வாங்கினார்.
அதை மறுநாள் அலுவலகத்துக்கு எடுத்துகிட்டுப்போக நண்பர்
பாத்திட்டு விலை, எங்க வாங்கின எல்லாம் கேட்டுட்டு,”இந்த
மாடல் சரியில்லன்னு எனக்குத் தெரிஞ்சவர் சொன்னார்பா”!
சொல்ல ஐயோ தப்பு செஞ்சிட்டோமோன்னு குமைவார்.

மேலே சொல்லியிருக்கும் விஷயத்துலேர்ந்து என்ன புரியுது.
நாம இஷ்டமா செஞ்சாலும் அடுத்தவங்க சொல்வதை ரொம்ப
கேட்கும் பொழுது அதுவே நம்ம மன உளைச்சலுக்கு வழி
வகுக்கும். அவங்களுக்கு பிடிச்சிருந்தா என்ன? பிடிக்காட்டி
எனக்கென்ன? எனக்கு பிடிச்சிருக்கு. அம்புட்டுதான்.எல்லா
இடத்துலயும் இதை அப்ளை செஞ்சு பார்த்தா நல்ல
இம்பூரூவ் மெண்ட் இருக்கு. அதுக்காக பெரியவங்க
நமக்கு அட்வைஸ் செய்யும் பொழுது அதை எடுத்துக்காம
நம்ம இஷ்டத்துக்கு இருக்கக்கூடாது. அனுபவம் நல்ல
ஆசான்.

4. மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்.
ஒரே வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளும் வேற வேற விதம் தான்.
எல்லாம் ஒண்ணு போல இருந்துட்டா வித்தியாசம் இருக்குமா?
அதனால நம் சிந்தனை, செயல்பாடு எல்லாமே வேறு படும்.
அதனால நான் செய்வதுதான் சரின்னு சொல்ல முடியாது.
நாம சரின்னு நினைப்பது அடுத்துவங்களுக்கு தப்பா இருக்கலாம்.
அதனால தீர்வு என்னன்னா அவங்களை அவங்களாவே ஏத்துக்கறதைத்
தவிர வேற வழியில்லை. அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்
அப்படின்னு மனசுக்கு சொல்லிக்கொடுத்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்.

5. நம்ம மனசுக்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிக்
கொடுக்கணும். ரொம்ப முக்கியமானதுன்னு வெச்சுக்கோங்க. இதை
கண்டிப்பா பழக்கி கொடுத்திட்டா அப்புறம் ஆனந்தம் தான்.
மனசுலேர்ந்து வேண்டாத நினைவுகளை, நாம பட்ட அடிகளை
தூக்கி போடுவது லேசான விஷயம் இல்லை. உள்ளாறாம இருக்கும்
நாவினால் சுடப்பட்ட வடு. அது மேலேயே திரும்ப அடி விழும்பொழுது
புண் பெருசாகுது. நம்ம மனசு பாதிக்கப்படுவதாலத்தான் நம்ம உடம்புக்கும்
முடியாம வருது. இது உளவியாளர்கள் சொல்லும் கூற்று.

என்ன செய்யணும்? வந்ததை வரவில் வைப்போம், சென்றதை செலவில்
வைப்போம். அம்புட்டே தான். அப்படி நினைச்சுக்கிட்டு மனசு பழைய
பஞ்சாங்கத்தை புரட்ட ஆரம்பிக்கும் போதெல்லாம் ஒரு அதட்டல் போட்டு
ஏய்! நடைமுறைக்கு வா. இப்ப இந்த நிமிஷம் முக்கியம். இதை
எப்படி நல்லா செய்யணும்னு பாப்போம்னு சொல்லிக்கிடணும்.
அதாவது வாழும் இந்த நொடியை 100 சதவிகிதம் உணர்ந்துகொள்வது.
இதனால இன்னைய வேலையை மட்டும் பாக்கலாம்.

நடந்தது நடந்து போச்சு. நாளைக்கு எப்படின்னு அப்ப பாத்துக்கலாம்.
ஆனா இன்றைய இந்தப் பொழுது போனா வராது. அதனால இதுக்கு
முக்கியத்துவம் கொடுப்போம். சரிதானே?!!

இதைக் கத்துகிட்டேன். அதை ஆங்கிலத்தில் ரொம்ப அழகா
சொல்லிக்கொடுத்திருந்தாங்க. அந்த வரிகளை மனப்பாடம் செஞ்சுகிட்டா
நல்லது. அதைவிட சூப்பரா யோசிச்சு ஒரு வேலை செஞ்சேன்.
அதை அப்படியே பிரிண்ட் செஞ்சு கண்ணில் படுமாதிரி 3 இடத்துல
ஒட்டி வெச்சிட்டேன். அதைப் பார்க்க படிக்க மனசுல மாற்றம் நல்லாவே
தெரியுது.

நம்ம ஃப்ரெண்ட்ஸுக்கும் என் சந்தோஷம் கிடைக்கணும்ல அதான்
இந்தப் பகிர்வு. நான் ரெடி செஞ்சு வெச்சிருக்கும் மேட்டரையும் தர்றேன்.
நீங்களும் ப்ரிண்ட் எடுத்து வெச்சு எப்படி இருக்கு எஃபக்ட்ன்னு சொல்லுங்க.
அந்த 5 கொள்கையோட நான் ரெய்கி affirmationயையும் சேத்துகிட்டேன்.



ஏதோ தேடும்பொழுது இதுவும் கண்ணுல பட்டது. ப்ரிண்ட் எடுத்து
ஒட்டி வெச்சுக்கிட்டு கண்ணுல படும்பொழுதெல்லாம் படிக்கிறேன்.
இதனாலயும் எனக்கு உடம்புக்கு ஒண்ணுமே இல்லாத மாதிரி
உணர ஆரம்பிச்சிருக்கேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே. அதுவும் நமக்குன்னு கிடைச்சிருக்கும் இந்த
வாழ்க்கையை ஆனந்தமா வாழ்ந்திட்டு போவோமே!! என்ன நான் சொல்றது?!!
:))) இந்த வாரத்துவக்கம் எல்லோருக்கும் இன்பமயமாக அமைய
வாழ்த்துக்கள்

Saturday, August 06, 2011

ONE LIFE TO LOVE

ONE LIFE TO LOVE என்ன ஒரு அழகான வாக்கியம்.
நமக்குன்னு இருக்கும் ஒரு வாழ்க்கை இது. ஆனால் இதில் நாம்
தேவையில்லாம எத்தனையோ பாரங்களை சுமந்துகிட்டு திரிவதனால
பொதி அதிகமாகி வாழ்க்கையை வாழ்வதை விடுத்து ஏனோ தானோன்னுதான்
வாழறோம்.

வாழ்க்கையின் உசரத்துக்கு போகணும்னு இல்லாட்டியும் வாழ்வாதாரத்துக்கு
பங்கம் வந்திடக்கூடாதுன்னு கொடுப்பதுக்கு மேல கூவுற மாதிரி தான்
நாம் செய்யும் வேலைகள் இருக்கு. விட்டா நம்ம இடத்தை அடுத்தவங்க
பிடிச்சிடுவாங்கற பயத்துலேயே நேரம் காலம் பாக்காம, உடம்பை கூட
கண்டுக்காம எத்தனை பேர் வேல செய்யறாங்க.

உடலும் மனசும் துவண்டு போய் ஏதோ ஒரு மெஷின் போல
ஆயிடறதாலத்தான் கோவம், கையாலாகதத்தனம் அப்படி இப்படின்னு
ஒரு மாதிரியா ஆகிடறோம். நம்மை நாம் கவனிச்சுக்குவதே இல்லை!!
எங்கங்க இதுக்கெல்லாம் நேரம் இருக்குன்னு? சொல்லிட்டு ஓடிக்கிட்டே
இருக்கோம். ”என்னையும் கொஞ்சம் கவனியேன்னு!!” உடம்பும் மனசும்
கெஞ்சுவதை என்னிக்காவது நாம சட்டை செஞ்சிருக்கோமா? தன்னலம்
கூடாதுன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டதால வந்த வினைதான் இது.

நம்மளை நாம கவனிச்சுக்கிட்டாத்தானே அடுத்தவங்களையும் நல்லா
கவனிச்சு நாம சாதிக்க வேண்டியதை சாதிக்க முடியும். நமக்குன்னு
கிடைச்சிருக்கும் இந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
சுகபோகங்களால அனுபவிப்பதைச் சொல்லலை. ஒரு வேளை கஞ்சி
குடிச்சாலும் சந்தோஷமா இருக்கணும்னு! சொல்வாங்கள்ல அந்த
மாதிரி. இருப்பதை வெச்சு நாம சந்தோஷமா வாழணும்.

இதெல்லாம் எனக்கும் ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சுதுன்னு வெச்சுக்கோங்க.
என்னை நான் உணர்ந்து, என்னை நான் விரும்ப ஆரம்பிச்சதுதான்
முதல் படி. இப்ப நமக்கு பிடிச்சது ஒண்ணு இருக்குன்னு வெச்சுக்கோங்க.
அதை எப்படி பொத்தி பொத்தி பாதுகாப்போம்!! எந்த பங்கமும் வராம
பாத்துக்குவோம்ல. ஏன்! நம்ம பசங்க, நம்ம பெத்தவங்க இவங்க்
கஷ்டப்படக்கூடாதுன்னுதானே ஓய்வொழிச்சல் இல்லாம சம்பாதிப்பது.
எங்கே அவங்களை திண்டாட விட்டுடுவோமோன்னு தானே வாழறோம்.
அதே மாதிரி நம்மை நம் உடம்பை, நம் மனசையும அப்பப்ப கவனிக்கணும்.



ஒரு அழகான குளம் இருக்குங்க. அதுல தண்ணி அழகா ஓடிக்கிட்டு இருக்கு.
ஆனா ஒரு மழை வெள்ளம் வந்தா கரை உடைஞ்சு தண்ணி வெளிய
வந்தா ஊரே வெள்ளக்காடாயிடும் தானே! கரைக்குள் அடங்கி நடந்தத்தான்
அந்த குளம் அழகானது.

ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் ....அப்படின்னு ஒரு பிரபல பாடலே இருக்கே.

கரைக்கட்டி நாமாவைச் சொல் அப்படின்னு பெரியவங்க சொல்வாங்க.
அதாவது நாம் இறைவனை பெயர்ச்சொல்லி வணங்கும் பொழுது
அந்த மந்திரம் அல்லது பேருக்கு முன்னாடி ஓம் என்றும் கடைசியில்
நமஹ என்றும் சொன்னால்தான் மந்திரத்தின் பலனே இருக்கும்.

நம் மனசையும் இப்படி கட்டி காக்க முடிஞ்சா எம்புட்டு நல்லாயிருக்கும்.
இருக்கும் அதுக்கும் வழி இருக்கு. நான் கத்துகிட்டதை உங்களுக்கும்
பகிர்வதில் சந்தோஷம்.

இந்த 5 முக்கியமான விஷயங்களை இப்ப நான் பிரிண்ட் எடுத்து
வீட்டில் கண்ணில் படும் சில இடங்களில் வைத்து பார்த்து பார்த்து
என் மனதுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அதுவரைக்கும் தலைப்பில் சொல்லியிருக்கும் அந்த ஆங்கில வார்த்தைக்கான
அர்தத்தை கொஞ்சம் யோசிச்சு உங்களுக்கு என்னவெல்லாம் தோணுதுன்னு
பாருங்க. வார விடுமுறைதானே! கொஞ்சமாவது நேரம் கிடைக்கும்.
திங்கள் கிழமை பதிவோடு வர்றேன்.

டிஸ்கி:
NDTV GOOD TIMESல ONE LIFE TO LOVE அப்படிங்கற பேர்ல ஒரு நிகழ்ச்சி
வரும். அதுவும் ரொம்ப நல்லா இருக்கும். நிறைய்ய கத்துக்கலாம்.
ஆனா அந்த நிகழ்ச்சிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால அதையும், அந்தப்
படத்தையும் மட்டும் இங்கே சேர்த்திருக்கிறேன்.

Wednesday, August 03, 2011

ஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு

ஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி
நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான்.
ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளி என
எத்தனையோ விசேஷங்கள் இந்த ஆடி மாதத்தில்.

இன்று ஆடிப்பெருக்கு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் அம்மா எனக்கு ஆடி 18க்கு புத்தாடை கட்டாயம் வாங்கி
வைத்திருப்பார். ஆடிப்பெருக்கு அன்று வீட்டுப்பெண்ணிற்கு
புத்தாடை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வாங்கி
சில சமயம் அம்மாவே தைத்துக்கொடுப்பார். வயலட் நிற
வெல்வெட் துணியில் அடுக்கடுக்காய் இருக்கும் கவுன் ஒருமுறை
அம்மா தைத்துக்கொடுத்து அதைப் போட்டு வாஷிங் பவுடர்
நிர்மா பெண் போல் சுத்தியது கொசுவத்தி சுத்துது.

ஆடிப்பட்டம் தேடிவிதைன்னு சொல்வாங்க. ஆடிப்பெருக்கும்
அப்படித்தான். அது என்ன ஆடிப் பெருக்கு? ஆடி மாதத்தின்
18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. மழைக்காலத்தை
வரவேற்கும் ஒரு நிகழ்ச்சி. இன்று நதிக்கரை,குளக்கரைக்குச்
சென்று பூஜித்து படையல் படைத்து, நோன்புக்கயிறு
கட்டிக்கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்கள் கூட கழுத்தில்
மஞ்சள் நூல் கட்டுவது இன்று மட்டும் தான்.


இந்த நந்நாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும்
சொல்லலாம். காதோலை, கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும்
கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.
திருமணமான பெண்ணோ தன் மாங்கல்யம் நிலைத்து நிற்க பூஜை செய்வாள்.

சில இடங்களில் முளைப்பாரி எடுத்துச் சென்று நதி தீரங்களில் அல்லது
குளங்களில் கரைப்பது வழக்கம். எங்கள் புதுகையில் குளத்திற்கு ஒன்றும்
பஞ்சமே இல்லை. பல்லவன் குளம், ஐயர்குளம், ராஜாக்குளம் என
பல குளங்கள். இங்கெல்லாம் குடும்பத்துடன் மக்கள் வந்து பூஜை செய்ததைப்
பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் அம்மா இன்று அன்னைக்கு பூஜை செய்து கலந்த சோறு
செய்வார். புத்தாடை அணிந்து இன்று கண்டிப்பாய் பாடம் படிக்கச் சொல்வார்.
ஏதேனும் புதிய வகுப்பில் சேர்வதாக இருந்தால் இன்றைய தினம் மிக
விசேஷம். ஆடிப்பெருக்கில் ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு நல்ல காரியமும்
பெருகும் என்பது ஐதீகம்.


ஆடித்தங்கம் கூடும் என நகைக்கடைக்காரர்கள் ஆரம்பித்திருக்கிறாகள்.
ஆடித்தங்கம், அட்சய திருதியைத் தங்கம், தன் த்ரேயஸ் தங்கம் என
எல்லா நாளும் தங்க நகை வாங்கிக்கொண்டிருந்தால் அம்பேல்தான்.
நல்ல மனத்தோடு இறைவனை பூஜித்து, நிவேதனம் சமர்ப்பித்து
இருப்பதுதான் பண்டிகை. ஆடித்தங்கம் கண்டிப்பாய் வாங்க வேண்டும்
என்றெல்லாம் கொள்கை வைக்காமல் ஆடி 18க்கு அம்மனுக்கு
பூஜை செய்து மாங்கல்யம் தழைக்க, மங்களவாழ்வு கூட, பிரார்த்திப்பதே சரி.

பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை என்பது போல
ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு நீருக்கு நன்றி
சொல்லும் ஒரு நந்நாள்.

ஆடிப்பெருக்கு பாடல்களில் என்றும் நீங்காத நினைவில் இருக்கும்
இந்தப் பாடலை கேளுங்கள்.

மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி.



இயற்கையை பூஜித்து இன்பமான வாழ்வை பெறுவோம்.


இன்றைய தினம் நாகசதுர்த்தியும் கொண்டாடப்படுகிறது. நாகசதுர்த்தி அன்று
தெலுங்கர்கள் தங்கள் மக்கள் செல்வத்திற்காக பூஜை செய்வார்கள்.
ஏழேழு ஜன்மம் எடுத்தாலும் கல்லைப்போல் இருக்காமல் கருப்பையில்
குழந்தையை சுமக்க வேண்டும் எனும் பிரார்த்தித்து அந்த மக்களுக்காக
விரதம் இருந்து பூஜை செய்வார்கள்.


தாலிக்கொடி பெரிதா? தொப்புள் கொடி பெரிதா என்று பட்டிமன்றம்
வைத்தால் இரண்டுமே பெரிது என்று தான் தீர்ப்பாகும்.
கணவனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளும் நந்நாள் இன்று.

அனைவரின் வாழ்வும் நலன் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.