Total Pageviews

Tuesday, September 27, 2011

போராட்டங்களுடன் ஒரு போராட்டம்!!!!!!!!!

இன்றோடு பதினைந்தாவது நாளை அடைந்திருக்கிறது தெலங்கானா போராட்டம்.
தனித்தெலங்கானா கேட்டு தெலங்கானாவாதிகள் நடத்தும் இந்தப் போராட்டத்தால்
மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.

அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், சிங்கரேனி ஊழியர்கள் என
மெல்ல ஆரம்பித்த போராட்டம் மெல்ல மெல்ல மற்றவர்களையும் உள்ளே
இழுத்தது. கட்டாயமாக வேலை நிறுத்தம் செய்தே ஆகவேண்டும் என
நிர்ப்பந்தப்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் தெலங்கானா
ராஷ்ட்ரிய சமிதியும் ஜேயிஸி ஆட்களும்.

செப்டம்பர் 16 முதல் பள்ளிகளில் முதல் டர்ம் பரிட்சைகள். பள்ளிகளையும்
மூடவேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு பள்ளிகள் அல்லது
ஸ்டேட் போர்ட் சிலபஸை பின்பற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்தார்கள்.
அதுவும் தசரா விடுமுறை என கூறி. அக்டோபர் 9க்கு பிறகு பள்ளி
திறக்கப்படும் என அறிவிப்புடன் மூடப்பட்டது. ஆனால் செண்ட்ரல் போர்ட்
பள்ளிகள் அப்படி செய்யவும் முடியாது. பரிட்சை நடத்தியே ஆகவேண்டிய
கட்டாயம்! சில பள்ளிகள் மாணவர்களை யூனிபார்ம் இல்லாமல் சாதாரண
உடையில் பள்ளிக்கு வருமாறு சொல்லியிருந்தன. புத்தகப்பை இல்லாமல்
கேரி பேக் போன்ற சாதாரண பையை கொண்டு வரச்சொல்லி வகுப்புக்கள்
நடந்தன.

என் பிள்ளைகளின் பள்ளி ஒரு படி மேலே போய் விட்டது.
யூனிபார்ம் உண்டு, புத்தகப்பை உண்டு. ஆனால் பரிட்சை எழுதும் நேரம்
அதிகாலை 7.15 முதல் 10.15 வரை. அதாவது தெலங்கானா அண்ணாக்கள்
மெல்லத் துயிலெழுந்து 11 மணிக்கு மேல்தான் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்
என்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் சில இடங்களில் ஸ்கூல் பஸ்ஸையும்
மறித்து ஆர்ப்பாட்டம் செய்ததால் நாமே கொண்டு போய் விட்டு அழைத்து
வரும் சூழல்.

20ஆம் தேதி பரிட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தால் மகள். முதல் நாள்
இரவு 9.30 மணிக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. நாளை நர்சரி முதல் 8ஆம்
வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை என்று.பரிட்சைக்கு
தயாராகி அதை எழுத முடியாத ஒரு டென்ஷன் பிள்ளைகளிடம்.
9 & 10 மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அந்தந்த தேதிகளில்
பரிட்சை வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் மேலே சொல்லியிருந்த
நேரப்படி பரிட்சை முடிந்தது. இந்த சூழலில் அயித்தான் வளமை போல்
டூர்!!! எப்படி இருந்திருக்கும் பாருங்கள். அயித்தான் ஏர்போர்ட்டிற்கு
கிளம்பும் முன் 6.30மணிக்கே மகனை அழைத்துச் சென்று பள்ளியில்
விட்டு வந்து பிறகு ரெடியாகி ஏர்ப்போர்ட்டுக்கு ஓடியிருக்கிறார்! 2 அல்லது
3 பிள்ளைகள் சேர்ந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். பிள்ளைகள்
வீடு வந்து சேரும் வரை டென்ஷன் தான்.

மற்ற வகுப்புக்கள் எல்லாம் பரிட்சை அக்டோபர் 9க்கு மேல்!! ஆன்லைனில்
பாடங்களை டவுன்லோட் செய்து வீட்டிலேயே பிள்ளைகளைத் தயார்
செய்யும் நிலை பெற்றோர்களுக்கு. பல பள்ளிகள் ஆன்லைன் கோச்சிங்
அளித்து பாடத்தில் இருக்கும் டவுட்களை க்ளியர் செய்தது தனிக்கதை.
இத்தனை பிரச்சனைகளுக்கு இடையே பெட்ரோல் பங்க் பந்த், ஆட்டோ
ஸ்ட்ரைக், ஆர்டீசி பஸ்(மாநகரப்பேருந்து) ஸ்ட்ரைக் என ஓடியது.

சிங்க்ரேனி ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தல் மின் தட்டுப்பாடு
அமோகமா இருக்கிறது. அதனால் இப்பொழுது எங்களுக்கு அறிவிக்கப்பட்டு
2 மணிநேரம் கட்டாயம் மின் வெட்டு. அது இல்லாமல் அவர்கள்
விரும்பும் நேரத்திலும் மின் வெட்டு. இருக்கும் மின்சாரத்தை சிக்கனமாக
உபயோகிக்க வேண்டிய சூழல். மாநகரப்பேருந்து ஸ்ட்ரைக், சிங்க்ரேனி
ஸ்ட்ரைக் என பல ஸ்ட்ரைக்குகளால் ஏற்பட்டிருக்கும் நஷ்டம் பல
கோடிகள். இதெல்லாம் எங்கள் தலையில்தான் வந்து விடியும் என்ற
எண்ணம் இல்லாமல் நாட்டை கூறுபோட கூப்பாடுபோட்டுக்கொண்டிருக்கிறார்கள்.



48 மணிநேர ரயில்ரோக்கோவை சக்ஸச்புல்லாக நடத்தி முடித்தார்கள்
தெலங்கானா அண்ணாக்கள். ரயில்வே ஷ்டேஷனில் தனித்தெலங்கானா
வேண்டி ஹோமம், ஸ்டேஷனில் கபடி ஆடுதல், ரயில் ட்ராக்கில்
ஆர்ப்பாட்டம் என ஆடியது போதாமல் தேசிய நெடுஞ்சாலையிலும்
மறியல் ஆர்ப்பாட்டம் என ஒரு மார்க்கமாக இருந்தது. ட்ரைவிங்
லைசன்ஸ் டெஸ்ட் என எதுவும் நடக்கவில்லை. ஊழியர்கள் இருந்தால்தானே!
இந்த மாதம் வேலை செய்த நாட்கள் மொத்தம் 12. அந்த நாட்களுக்கு
மட்டுமே சம்பளம் என அரசு அறிவித்திருக்கிறது. அதை கையெழுத்து
போட்டு சலான் பாஸ் செய்து எல்லாம் செய்யக்கூட அரசு அலுவலகத்தில்
ஆள் இல்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு
சம்பளம் கிடையாது.

இலங்கையில் இருந்த பொழுது மங்களூர் சிவாதம்பி கலவர பூமியில்
எப்படிக்கா இருக்கீங்க? சீக்கிரம் வாங்க இந்தியாவுக்குன்னு சொல்வாரு!
நம்ம இந்தியா மட்டும் நலமான்னு கேப்பேன். இப்ப அது பக்காவா
ஆயிடிச்சு. பாக்யநகரம் இப்பொழுது பாக்யங்களை இழந்து விடும்
சூழல். ஐடி கம்பெனிகளால்தான் ஹைதை இவ்வளவு வளர்ச்சி
பெற்றது. அவர்கள் மூடிக்கொண்டு போய்விடும் சூழல் இருப்பதால்
புதிதாக எந்த ப்ராஜக்ட்டும் இல்லையாம்!!!

நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட
புழிதியில் எறிவதுண்டோ!! சொல்லடி சிவசக்தி!!”

என அவளிடம் கேட்கலாம் என்றால் பாவம் அவள்.
பந்த் கோவில்களுக்கும் தான்.
கிட்டத்தட்ட 1500 கோவில்களுக்கு மேல் கடந்த 15 நாட்களாக
கோவில் திறந்த உடன் அபிஷேகம், நைவேத்யம் முடித்து உடன்
கோவிலை மூடிவிடவேண்டுமென கண்டீஷன் போட்டிருக்கிறார்கள்
தெலங்கானா வாதிகள். அதுவும் இன்று மஹாளய அமாவாசை.
இன்று முழு அடைப்பாம்!!!!!!!!! பூஜாரிகளையும் பந்தில்
ஈடுபடுத்தும் வேலை நடக்கிறது.

சாமியே நடந்து போகுதாம்! இதுல பூசாரிக்கு புல்லட் கேக்குதோன்னு!
சொல்வது போல இருக்கு நிலமை.

தெலங்கானா அமைப்பு தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
நாளை ரஸ்தா ரோக்கோ, 29 ராஜினாமா செய்யாத அமைச்சர்கள், எம்பிக்கள்,
வீடுகளைத் தாக்குதல், 30 பந்த், 2 ஆம்தேதி டோல்கேட்டுகள் முற்றுகை,
அக்டோபர் 9,10,11 ரயில்ரோக்கோ. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில்
சட்டம் ஒழுங்கே இல்லை. இத்தனை கூத்துக்கள் நடந்தும் அதை
போலீஸ் கைகட்டி பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.
144 தடை மட்டும் போட்டால் போதுமா? மக்களின் இன்னல்களுக்கு
தீர்வு இல்லையே!

மத்தியில் இருக்கும் அரசு ஏதேனும் விரைவான முடிவு எடுத்தால்தான்
உண்டு. மாநிலத்திற்கு பொருளாதாரா ரீதியாக ஏற்பட்டிருக்கும் நஷ்டத்துடன்
பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும். வகுப்புக்கள் முறையாக
நடக்காவிடில் பரிட்சை எழுதி பாஸ் செய்வது எப்படி? எனும் கேள்வி
எல்லா பெற்றோர்கள் மனதிலும் இருக்கிறது.

தீர்வு என்ன? விஜயதசமி அன்று அன்னை அசுரனை அழித்து
நல்லது செய்தாள் என்று சொல்வார்கள். இந்த பிரச்சனையை ஒழித்து
அன்னை தன்னையும் காத்து எங்களையும் காத்தருள வேண்டும்!!


Wednesday, September 14, 2011

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்

இன்று என் அம்மம்மா, தாத்தா தங்களது 62ஆவது திருமண நாளைக்
கொண்டாடுகின்றனர்.
புதுகை சுப்பராமய்யர் பள்ளி வாத்தியார் சுந்துசார் என்று சொன்னால்
பலருக்கும் தெரியும். தாத்தாவிடம் பயின்றவர்கள் இன்று பல பெரிய
பொறுப்பான வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்ற கொசுவத்தியும்
உண்டு.

சுந்துசார்,ராஜலக்‌ஷ்மி தம்பதியருக்கு எங்கள் வணக்கங்களுடனான
திருமணநாள் வாழ்த்துக்கள்.


இன்று என் சித்தி உமாவிற்கும் திருமணநாள்.
சென்றமாதம் சித்தி ஹைதை வந்திருந்த பொழுது தன் நண்பிகளிடம்
சித்தியின் திருமணம் முடிந்து மதுரைக்கு கிளம்பிக்கொண்டிருந்த
நேரத்தில் புதுகை பஸ்ஸ்டாண்டுக்கு அழுகையுடன் ஓடிவந்த என்னைப்
பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். சித்தியை விட்டு பிரிகிறோம்
(முன்பு மும்பையில் இருந்தாலும் சித்திக்கு விருப்பப்பட்டால் வர
இயலும். திருமணமாகிப்போனால் அப்படி வரமுடியாதே என வருத்தம்)
என்ற வருத்தம் அதிகமாகி பஸ்ஸ்டாண்டில் சித்தியை கட்டிக்கொண்டு
அப்படி ஒரு அழுகை.

இன்று சித்தி சித்தப்பா தங்களது 23ஆவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்.
வணக்கங்களுடன் எங்கள் அன்பு வாழ்த்துக்களும்.

இந்த மகிழ்வான நேரத்தில் இன்னுமொரு சந்தோஷமான செய்தியை
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அம்ருதம்மா
சென்றமாதம் Trinity college of London piano exam செய்துவிட்டு
மஹா டென்ஷனுடன் ரிசல்ட்டுக்காக காத்திருக்க, ரிசல்ட் வந்தே
விட்டது. அம்ருதம்மா DISTINCTION ல் பாஸ் செய்து இருக்கிறாள்.
அண்ணா,அப்பா, அம்மா அனைவரின் அன்பான பாராட்டுக்கள் அம்ருதா

KEEP UP THE GOOD WORK.


Tuesday, September 13, 2011

வேகம் தந்திருக்கும் சோகம்

கடந்த ஞாயிறு அன்று நடந்திருக்கிறது இந்த விபத்து. முன்னாள்
கிரிக்கெட் வீரர் அஜாரூதின் அவர்களின் இளையமகனும்(அயாஜ்), அஜாருதினீன்
சகோதரி மகனும் அயாஜின் புதிய Suzuki GSX R1000 bike வண்டியை
ஹைதராபாத்தின் அவுட்டர் ரிங் ரோடில் ஓட்டியிருக்கிறார்கள். 250கிமீ
வேகத்தை தொடமுயன்ற வண்டி கண்ட்ரோல் இழந்து விபத்துக்குள்ளாகி
அஜாருதினீன் சகோதரி மகன் அந்த இடத்திலேயே மரணத்தை தழுவ
அஜாருதினீன் மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

அஜாருதினீன் 19 வயது இளையமகன் ஓட்டிய பைக் இதுதான்.

அஜாருதீனின் முதல் மனைவி நொளருதீன் மகன் இந்த அயாஜ்.
(முதல் மனைவியைப் பிரிந்து நடிகை சங்கீதா பிஜ்லானியை
திருமணம் செய்து கொண்டார் அஜாருதீன்.


ஹைதையின் அவுட்டர் ரிங் ரோடில் சமீபத்தில் தான் பயணம் செய்திருக்கிறேன்.
8 லேன் பயணம். வேகமாக போக வேண்டும் எனும் எண்ணம்
எவருக்கும் வரவைக்கும் சுமூகமான பாதை. சர்வ சாதாரணமாக
அனைவரும் 100க்கு மேலே சென்று கொண்டிருந்தனர். கார் ரேசில்
கொசு பறப்பது போன்ற சத்ததுடன் ஜூயுங் என வாகனங்கள் போகுமே
அப்படி பறக்கும். சில சமயம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
வாகனங்களே இருக்காது. டிராபிக் தொல்லை இல்லாமல்
பயணத்தை அனுபவிப்பதை விட்டு அந்தப் பாதையில் வேகமாக
சென்று தன் மரணத்துக்குத் தானே விண்ணப்பம் போடும் மனிதர்களை
என்ன வென்று சொல்வது. (இப்படி வேறு ஊர்களிலும் இருக்கலாம்!)


அஜாருதீனைப்போல மகனும் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகிக்கொண்டிருந்தார்.
ஞாயிறு அன்று அதிகாலை 6.30 மணிக்கு வீட்டினருக்குத் தெரியாமல்
வண்டியை எடுத்துச் சென்று அவுட்டர் ரிங் ரோடில் ஓட்டும் பொழுது
இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. அயாஜின் தாயார் சவுதியில்
இருக்கிறார். தாத்தாவிடம் இருந்து வருகிறார் அயாஜ்.

அந்த வாகனத்தை இன்னும் ரெஜிஸ்டர் கூட செய்யவில்லை. இருவரும்
சேர்ந்து டெஸ்ட் ட்ரைவ் செய்து கொண்டிருந்தார்கள். :((

கிட்னியிலிருந்து, நுரையிரலிருந்தும் ரத்தம் வழிந்து கொண்டிருந்ததாம்.
அயாஜின் மூளைக்கு எவ்வளவு நேரம் ரத்தம் செல்லவில்லை
என்பதை மருத்துவர்களால் அறிய முடியவில்லை. இதனால்
மூளை எவ்வளவுதூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை சொல்ல
முடியவில்லையாம். ஞாயிறன்று நடந்த விபத்து. இப்பொழுது
வரை நினைவு திரும்ப வில்லை. உடலில் எந்த அசைவும்
இல்லாத நிலை. 19 வயதில் அந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு
அவஸ்தை!!

வேகம் தரும் த்ரில்லுக்காக இளைஞர்கள் தங்கள் உயிரைப் பற்றி
நினையாமல் இப்படி வண்டி ஓட்டி தங்கள் உயிரை இழக்கின்றனர்.
25 வயதுக்கு உட்பட்ட வாகன ஓட்டிகளால்தான் விபத்துக்கள் அதிகம்
நிகழ்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. பெற்றவர்கள் சொன்னாலும்
பிள்ளைகள் கேட்பது இல்லை.

சென்ற வருட தந்தையர் தினத்தன்று தன் மகனுக்கு நடிகர்
கோட்டா ஸ்ரீநிவாஸராவ் (சாமி படத்தில் வில்லனாக வருவாரே!)
ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார். மகன்
வண்டியை ஓட்டிக்கொண்டு முன் செல்ல மருமகள் மற்றும்
குடும்பத்தினருடன் பின்னாலேயே காரில் தொடர்ந்து கொண்டிருந்த
கோட்டா ஸ்ரீநீவாஸிற்கு கண் முன்னாலேயே மகனின் வண்டி
விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தது மகா சோகம். இந்த
விபத்து நெக்லஸ் ரோட் (ஹுசைன் சாகருக்கு இந்தப் பக்கம்)
நடந்தது. தன் ஒரே மகனை இழந்த சோகத்திலிருந்து இன்னமும்
அவர் மீளவில்லை. :((


கடவுளே! எப்பொழுது இந்த இளைஞர்களுக்கு பொறுப்பை தரப்போகிறாய்?
தன்னை காத்துக்கொள்ளும் தன்மையை எப்பொழுது தரப்போகிறாய்?
தெரிந்து சில தெரியாமல் பல என எத்தனையோ பெற்றோர்களின்
துயரத்தை நிறுத்த வழிதான் என்ன??

நெஞ்சம் நிறைந்த பிரார்த்தனைகள் அயாஜிற்காக.



Friday, September 09, 2011

உக்கிரான அறை

எங்க புதுகையில் நரசிம்ம ஜெயந்தி கல்யாணமண்டபம் ரொம்ப
பிரசித்தி. மே மாதம் வரும் நரசிம்ம ஜெயந்தி விழா நடக்க என
கட்டி விட்டிருக்கிறார்கள். அந்த மாதம் தவிர மற்ற நாட்களில்
அங்கே திருமணங்களும் நடக்கும். ஊருக்கு நடுவே பெரிதாக
இருக்கும் கல்யாண மண்டபம் என்பதால் பல திருமணம் அங்கே
நடக்கும். அப்புறம் தான் லேனா எல்லாம் வந்தது.

நரசிம்ம ஜெயந்தி கல்யாணமண்டபத்தில் சமையலறைக்கு எதிரே
உக்கிரான அறை (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா மன்னிச்சிடுங்க)
அப்படின்னு எழுதி ஒரு ரூம் இருக்கும். அங்கே காய்கறிகள்,
பழங்கள், மளிகை சாமான்கள் எல்லா வெச்சிருப்பாங்க. அந்த
ரூம் வாசலிலேயே ஒருத்தர் சேர் போட்டு உட்கார்ந்திருப்பார்.
எல்லோரும் திருமண விழாவில் பிசியா இருக்கும் பொழுது
இவர் மட்டும் இங்கே உட்கார்ந்திருப்பார். முஹூர்த்த நேரத்தில்
மட்டும் யாராவது ஒரு நிமிடம் வந்து நிற்க இவர் போய்
அட்சதை போட்டு வருவார். ஒவ்வொரு திருமணத்திற்கும்
அங்கே உட்காரும் ஆள் மாறும்பொழுது இது சத்திரக்காரர்கள்
சேர்ந்த ஆள் இல்லை என்று புரிந்தது. அந்த அறைப்பற்றியும்
அங்கே உட்காருபவர் பற்றியும் அம்மாவிடம் கேட்டேன்.

அப்பொழுதெல்லாம் இந்த காண்ட்ராக்ட் மேரேஜ் கிடையாதே.
அதனால் ஆளுக்கு ஒரு வேலையை பகிர்ந்து செய்து
கொடுப்பார்கள். அதில் முக்கியமானது இந்த உக்கிரான அறை
ட்யூட்டி. சமையல்காரர் எந்த நேரமும் எந்த சாமான் வேண்டுமானாலும்
கேட்கலாம் என்பதால் அங்கேயே இருக்க வேண்டும். பூட்டிக்கொண்டு
போய்விட முடியாது. சாமான்களுக்கு அவர்தான் ஜவாப்தாரி
என்பதால் நம்பிக்கையான ஆளை மட்டுமே அங்கே உட்கார
வைக்க முடியும். மொய் எழுத உட்கார்வதற்கும் நெருங்கிய
சொந்தமோ, அல்லது நம்பிக்கையான ஆளோதான் ஏற்பாடு
செய்வார்கள். என்று அம்மா சொன்னார்.

இவ்வளவு மேட்டர் இருக்கா என வியந்தேன்.
இந்த உக்கிரான அறை எனும் எழுத்து
இன்னமும் என் கண்முன் நரசிம்ம ஜெயந்தி கல்யாண மண்டபத்தில்
படித்தது ஓடிக்கொண்டே இருந்தது. பொறுப்பாக செய்ய ஒருவர்
இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். மானிட சேவை
எவ்வளவு நல்ல சேவை என்றெல்லாம் யோசித்துக்கொண்டே
இருந்தேன். அந்த பதத்தின் மீது எனக்கு அப்படி ஒரு
ஈடுபாடு எப்படி வந்தது என்றே தெரியவில்லை!!!

ஆனால் என்னையும் அப்படி ஒரு தன்மையான,நம்பிக்கைக்கு
பாத்திரமுள்ள, இவளிடம் கொடுத்தாள் இந்த வேலை நன்கு
செய்வாள் என்று சொல்லும் பொறுப்பையும் ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும் எனும் எண்ணத்தை வளர்தது உக்கிரான அறைதான்!!!
நம் மீது நம்பிக்கை வரவைப்பது ரொம்ப கஷ்டம். அதே போல
செய்வதை திருந்தத்தான் செய்கிறோமா என்பதையும் அடுத்தவர்கள்
புரிந்து கொள்ள் வைப்பதும் கடினம்.

எனக்கு 18 வயது ஆன பொழுது அப்பா,அம்மா வீட்டு விஷயங்களில்
கலந்து பேசுவார்கள். அது எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக
இருந்தது. நம் எண்ணத்தையும் கேட்கிறார்கள் (செயல்படுத்துகிறார்களா
இல்லையா என்பது வேற பிரச்சனை) என்ற எண்ணமே நம்பிக்கையைத்
தந்தது. எனக்குள் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்தது. உறவினர்களுக்கு,
நட்புக்களுக்கு பிடித்தது என்ன என்பதை பேச்சுவாக்கில் கேட்டு ஞாபகத்தில் வைத்திருப்பேன்.
அவர்களுக்கு அதையே அன்பளிப்பாக கொடுப்பேன். அவர்களும் அக
மகிழ்வர். என் அம்மம்மாகூட,”யாருக்கு என்ன பிடிக்கும்னு கலாவை
கேட்டால் தெரியும்! என்றோ இவங்களுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்?
என்றோ கேட்டு அதன்படி செய்வது உண்டு. ஆக என் செயல்பாடுகள்
இவர்களுக்கு ஏதோ ஒரு நல்ல செய்தியை தந்திருக்கிறது அதனால்தான்
என்மீது நம்பிக்கை வைத்து என் எண்ணத்தை கருத்தில் எடுத்து
கொள்கிறார்கள்.சந்தோஷமாக இருந்தது. அப்போதும் அந்த உக்கிரான
அறையை நினைவில் வைத்திருந்தேன்.

திருமணமாகி ஆஷிஷ் பிறந்து அம்ருதாவை கருவில் சுமந்துகொண்டிருந்த
பொழுது அயித்தானின் அண்ணன் மகள் திருமணம். மாமாவும், அத்தையும்
வேலைக்கு போவதால் பல பொறுப்புக்களை எடுத்து செய்ய வேண்டிய
கட்டாயம். வயது ஜஸ்ட் 25!! மண்டபம் பார்க்க,பத்திரிகை வைக்க,
சாமான் வாங்க,என ஓடிக்கொண்டி இருந்தேன். போட்டோகிராபர்
ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். நான் இருந்த வீட்டிற்கு கீழ்
இருப்பவர். அவரது வேலை மிக அருமையாக இருந்தது. திருமணம்
முடிந்து உடனே ஆல்பம் கொடுத்துவிட்டார். சீடியும் மிக அருமையாக
வந்திருந்தது. அமெரிக்கா செல்ல விசா நடவடிக்கைகளின் பொழுது
சில சமயம் நிறைய்ய புகைப்படங்கள் பார்ப்பார்களாம். ஆனால்
அயித்தானின் அண்ணன் மகள் காட்டிய ஆல்பத்தின் முதல் பக்கம்
மட்டும் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே திருப்பி கொடுத்துவிட்டார்கள்.
(விசாவும் தான் :))

“ரொம்ப நல்ல போட்டோகிராபி சித்தி. உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்!”
என பலமுறை சொல்லிக்கொண்டிருந்தாள்.

எனது திருமணத்திற்கு அப்பா ஏற்பாடு செய்திருந்த மேரேஜ் காண்ட்ராக்டரையே
ஏற்பாடு செய்தோம். மிக அருமையாக எல்லாம் செய்து கொடுத்ததோடு
மட்டுமில்லாமல் எங்கள் பட்ஜட்டில் 45,000 மிச்சம் பிடித்து கொடுத்தார்.
1999ல் 45,000 மிச்சம் என்றால் பணத்தின் மதிப்பு பார்த்து கொள்ளுங்கள்.
மாமா என் கையில்தான் கிட்டத்தட்ட 3 லட்சம் பணம் கொடுத்து
எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருந்தார். அந்த
பணத்தை கையில் வாங்கும் பொழுது அந்த உக்கிரான அறை என்
கண்முன் வந்து சென்றதை தவிர்க்க முடியவில்லை.

என்னை நான் டெவலப் செய்துகொள்ள நரசிம்ம ஜெயந்தி கல்யாண
மண்டப உக்கிரான அறை ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்பதில்
எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.


Thursday, September 08, 2011

ஆஷிஷின் புது ஃப்ரெண்ட்!!!! :)))

என்ன ஒரு துணிச்சல்!! நான் இருக்கும்பொழுதே இந்த ஆட்டம்
போடுறாங்க ரெண்டு பேரும்!!! சில சமயம் ரொம்பவே ஆட்டம்
ஜாஸ்தியா இருக்கு. என்னால ஒண்ணும் செய்ய முடியலை! :((
அப்பார்ட்மண்ட் மொத்தம் இவங்க சத்தம் தான். தாங்க முடியலடா
சாமி!!!

பில்டப்பை பார்த்து என்னவொ ஏதோன்னு பயப்பட்டுட்டீங்களா?
ஆஷிஷுக்கு ஒரு புது ஃப்ரெண்ட் கிடைச்சிருக்கு. அதைப் பத்தி
பகிர்ந்துக்காட்டி எப்படி? அதான் இந்தப் பதிவு.

பிப்ரவரி மாத கடைசில எங்க தளத்துல கிரஹப்ரவேசம் செஞ்சு
குடிவந்தாங்க. மார்ச் மாசம் என் பசங்களுக்கு பரிட்சை, அப்புறம்
ஊர் சுற்றல், திரும்ப ஸ்கூல் அப்படி இப்படின்னு பிசியா இருந்தோம்.
அதனால அதிகம வெளியில வரலை. மே மாதம் லீவு என்பதால
மெல்ல பசங்க வெளியில வந்தாங்க. (ஆஷிஷ்,அம்ருதா இன்னொரு
பையன் தவிர எல்லாம் சுட்கூஸ் (அதாங்க குட்டீஸ்) அதனால
பசங்க ரொம்ப வெளியில வராம இருந்தாங்க)

அப்ப ஆரம்பிச்சுச்சு கலாட்டா! ஆஷிஷை கண்டால் போதும் அந்த
வாண்டுக்கு. முழுமையா பேச்சு வரலை அப்ப. 2 வயசு 2 மாசம்தான்.
ஆஷிஷ்... ஆஷிஷ்னு கூப்பிடும். அண்ணான்னு சொல்வதை
உள்ளேயே முழுங்கிடுவா!! :)) அவனைக்கண்டால் போதும் தூக்கிக்கொள்ளச்
சொல்லி அடம். அய்யா ஒசரமா இருப்பதால எல்லா இடமும்
நல்லாத் தெரியுதுன்னு அவனை தூக்கச் சொல்வாளோன்னு பேசிப்போம்.

அம்மையாருக்கு உடம்பு சரியில்லாம போனா ஆஷிஷுக்கு மருந்து
கொடுப்போம். அப்பதான் மேடம் குடிப்பாங்க. மேடத்தோட பேரு
சொல்ல மறந்திட்டேனே! சாய் சுடுதி. (சாயி ஸ்ருதி) இன்னும்
ர வரலை. மழலை மாறாத பேச்சு. ஆனா நல்ல எக்ஸ்பிரஷன்.
நொப்பு (நொப்பி-வலி), பெகுடு (பெருகு-தயிர்), கூட (கூர-காய்)
தோஸ்தா (தோசை- ப்ரெட்டுக்கும் அதேதான்)இப்படி எங்க வீட்டில் இப்போ ஸ்ருதி மொழிதான்.

இப்ப கதவைத் திறந்தா போதும் ஆஷிஷ் அண்ணான்னு ஓடி வந்திடுவா. அவங்க வீட்டு
கதவை திறந்துகிட்டு வரத் தெரிஞ்சிருச்சு. ஜூலைலேர்ந்து ப்ரீஸ்கூல்
போக ஆரம்பிச்சிருக்கா. ஆஷிஷ் வீக் எண்ட்ல பிசியா இருந்து
போய் பார்க்க முடியலைன்னா போதும் அவனை விட்டு இறங்கவே
மாட்டா. எதிர் வீடுதான். ஆனா அண்ணாக்கு இந்த மாசம்
முதல் டர்ம் போர்ட் எக்ஸாம் என்பதால அவரு பிசி. சரி
கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வந்திடலாம்னு போனா விட
மாட்டாங்க மேடம். அம்டுதா (புரிஞ்சிருக்குமே) எஸ்ஸு
அம்ருதா கூடவும் நல்லா விளையாடுவா ஆனா ஆஷிஷ் அண்ணாவைக்
கண்டால் அது என்னவோ அப்படி ஒரு அன்பு மழைதான். அன்பு எம்புட்டு
தூரம்னா ஆஷிஷ் அண்ணா நான் படிக்க போறேன்னு சொன்னா,
”ஸ்டாண்டிங் லைன் ஒத்து”!! என்று சொல்லிவிடுவாள்.
அவள் படிப்பது ஸ்டாண்டிங் லைன். ஆஷிஷும் அதுதான் படிக்கிறான்
என்று நினைத்து நீ அதெல்லாம் படிக்க வேண்டாம், என்னுடன்
விளையாடு என்று மேடம் பேச்சு.

இல்லாட்டி தானும் படிக்கிறேன்னு பென்சிலை வைத்துக்கொண்டு
கிறுக்கி கொண்டிருப்பாள்!! பக்கத்தில் வீட்டில் இன்னொரு உழக்கு
இருக்கு. அவனை ஆஷிஷ் எடுத்துக்கொண்டால் ஸ்ருதிக்கு
பிடிக்காது!! சில சமயம் எங்க வீட்டுக்கு வந்துவிட்டு,”அம்மா
ஒத்து” (அம்மா வேண்டாம்) என்று சொல்லிவிடுவாள். அவங்க அம்மா வந்து
அழைத்து சென்றால் அழுகைதான். சரி ஆஷிஷ் கொண்டு போய்
விடலாம் என்றால் கழுத்தைக் கட்டிக்கொண்டு விட்டால்தானே.
சில சமயம் எங்க வீட்டு கதவை யாராவது திறந்து வைத்திருப்போம்.
அவங்க வீட்டு கதவையும் திறந்து வைத்து யாராவது நிற்போம்.
ஆஷிஷ் ஸ்ருதியை தூக்கிக்கொண்டு போய் கொஞ்சம் விளையாட்டுக்
காட்டி அவளுக்குத் தெரியாமல் தப தப என ஓடி வர ஒவ்வொரு
கதவாக மூடுவோம்!!மெல்ல மூடை மாற்றுவார் அவள் அம்மா.
கூடிய சீக்கிரம் ஆஷிஷ் இருக்கும் அப்பார்ட்மெண்ட் எது என்று
கேட்டாள் வீதியில் அனைவரும் அடையாளம் சொல்லிவிடுவார்கள்
என நினைக்கிறேன். :)) அண்ணாவை அம்புட்டு பாசமா கூப்பிடறாங்க
மேடம். சில சமயம் அம்ருதாவிடம் பேச நினைத்து முதலில்
ஆஷிஷை கூப்பிட்டு அப்புறம் அம்ருதாக்கா அப்படின்னு ஆரம்பிக்கும்
அளவுக்கு ஆஷிஷ் அண்ணா மேல அன்பு.

எங்க அப்பார்ட்மெண்ட்ல இந்த வாட்டி விநாயகர் வைத்திருந்தோம்.
பூஜையில் அண்ணாவும் இன்னொரு பையனுக்கும் கங்கணம்
கட்டி விட்டிருந்தார் பூஜாரி. அதனால் இருவரும் எல்லா நாள்
பூஜைக்கும் பிள்ளையார் அருகேயே இருக்கவேண்டும். அண்ணாவுடன்
இந்த அம்மையாரும் அண்ணாவுடனேயே சுற்றிக்கொண்டிருந்தாள்.

நம்ம மாண்டிசோரி படிப்பை உபயோகிச்சுகிட்டு இருக்கேன்னு
சொன்னேன்ல அது இந்த குட்டீஸுக்குத்தான். கைகளாலேயே
ஸ்டாண்டிங் லைன், ஸ்லீப்பிங் லைன் காட்டுவா. ரைம்ஸ்
அழகா சொல்லும். முழு வார்த்தை வரலை என்றாலும் சில
ரைம்ஸ் அழகா மழலையில் கேக்கணும்!! அவங்க மாதிரி
நானும் ரைம்ஸ், ஸ்டாண்டிங் லைன் ஸ்லீப்பிங் லைன் எல்லாம்
சொல்வேன் என்பதால நானும் அவளுடைய தோஸ்த்!!

ஸ்கூலில் ஏதாவது ஃபங்ஷன் என்றால் போட்டுச் செல்லும்
ட்ரெஸ்ஸை வந்து எனக்கு காட்டிவிட்டுதான் செல்வாள்.
அப்படி காலையில் மிஸ் செய்துவிட்டேன் என்றால் மதியம்
ஸ்கூலிலிருந்து வந்ததும் நேராக என்னிடம் வந்து அன்றைய
விஷயங்கள் எல்லாம் பகிர்ந்துக்கொண்டால்தான் நிம்மதியாக
இருக்கும். என்ன சாப்பிட்டாள்? என்ன செய்தாள்? எல்லாம்
அழகாக சொல்வாள். சில நாள் கையில் ஸ்டார் வரைந்து
அனுப்பியிருப்பார்கள். அதை என்னிடம் கொண்டு வந்து
காட்டும் அழகே அழகு!! லிஃப்டை விட்டு இறங்கியதும்
அவங்க வீட்டுக்கு கூட போகாமல் என் வீட்டு கதவைத்
தட்டி,”ஆண்ட்டி! ஆண்ட்டி! ஸ்ருதி ஸ்கூல்!!” என
ஆரம்பித்துவிடுவாள். எடுத்துக்கொண்டு விவரம் கேட்டு
மெல்ல அவர்கள் வீட்டில் விடுவேன். தினமும் அவள்
என்ன செய்தாள் என்று லேட்டஸ்ட் அப்டேட்ஸ் கேட்பார்கள்
ஆஷிஷும் அம்ருதாவும்.

குழந்தைகளால் உலகம் அழகாகிறது. அது இப்போ
இன்னொரு முறை உறுதியாகி இருக்கு.

Thursday, September 01, 2011

கடனே இல்லாத வாழ்க்கை வாழ!!!!

எங்க வீட்டு வரலக்‌ஷ்மி போட்டோ அப்ப அப்லோட் செய்ய முடியலை.
இன்னைக்கு உங்களுக்கு தன் முகம் காட்ட வந்திருக்கா லட்சுமி.
தேங்காய் இல்லாத இந்த கலச அலங்காரம் அடியேன் செய்தேன்.
கிருஹப்ரவேசத்திற்கு வாங்கியிருந்த தஞ்சாவூர் பெயிண்டிங் லட்சுமி
போட்டோவுடன் அம்மன் முகம் வைத்து வரலட்சுமி நடந்தது.
(இந்த முறை கலசம் வைத்து பூஜை செய்யக்கூடாத சூழல்.
ஆனால் புதிதாக வாங்கியிருக்கும் முகத்தை பூஜையில் வைக்க
ஆசை. சொம்பில் ஸ்கேலை வைத்து அதில் அம்மன் முகம்
கட்டி அலங்காரம் செய்தேன்)




கடன் பெற்றார் நெஞ்சம் போல அப்படின்னு சொல்வாங்க.
வாங்கிய கடனை அடைத்து நிம்மதியான வாழ்வு வாழ தான்
எல்லார் மனசும் இருக்கும். குறைஞ்ச பட்சம் வீட்டு லோனாவது
நமக்கு இருக்கும்.

இதற்கு எவ்வளவோ ஸ்லோகங்கள் இருப்பதா பெரியவங்க
சொல்லியிருக்காங்க. அமாவாசை அன்று கொழுக்கட்டை
செய்து படைத்தால் ரொம்ப விசேஷமாம். என் அத்தை
(அப்பாவின் சகோதரி) சொல்லிக்கொடுத்தார். கிரஹ
தோஷம் நீங்க கூட இது நல்லதாம். என் அம்மம்மா
சொன்னது அமாவாசை அன்று கொழுக்கட்டை செய்து
நிவேதனம் செய்தால் கடனே இல்லாததொரு வாழ்க்கையை
மோதகப்பிரியன் நமக்கு அருள்வானாம்.

அமாவாசை கொழுக்கட்டை அவனுக்கு செய்து படைப்பது
கஷ்டமில்லை. பூர்ண கொழுக்கட்டைதான் வேண்டும் என
அடம் பிடிக்க மாட்டான். உப்பு கொழுக்கட்டை(உப்புமா
கொழுக்கட்டை, திதிப்பு கொழுக்கட்டை செய்தால் கூட போதும்)

இதுதான் அந்தக்கோலம். இந்தக்கோலத்தை போட்டு நமக்குத்
தெரிந்த கணபதி ஸ்லோகம் சொல்லி கொழுக்கட்டை நிவேதனம்
செய்ய வேண்டும்.


இன்றைக்கு விநாயக சதுர்த்தி பூஜை சிறப்பாக நடந்தது.
அம்மா கொளரி முதலில் வந்தாள்.(ஸ்வர்ண கொளரி விரதம்)
கூடவே மகனும் வந்துவிட்டான்.
அம்மாவை விட்டு பிரிந்து இருக்க முடியாதாம்!!



அம்மாவுக்கு கடலைப்பருப்பு பாயசம் செய்தேன். மகனுக்கு திதிப்பு
கொழுக்கட்டை, வடை போதும்னு சிம்பிளா செஞ்சேன். (ஏற்கனவே தொப்பை கணபதி.
இப்போ எல்லார் வீட்டுக்கும் போய் சாப்பிட்டு வந்தால் ஜீரணம்
கஷ்டம்!)ரெசிப்பி தட்கா கார்னரில் வரும்

டிஸ்கி:

இது என்னுடைய 800ஆவது பதிவு. :)) இந்த கணேசனுக்கு அர்ப்பணம்