Total Pageviews

Friday, December 23, 2011

color of the year 2012!!!!!!!!!!

நாலஞ்சு வருஷமாத்தான் எனக்கு ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு கலர்
இருக்குன்னு தெரியும். (டீவி9 புண்ணியம்) ஒவ்வொரு வருடமும்
டிசம்பர் மாதம் Pantone அறிவிக்கும் கலர் பற்றி தெரிஞ்சுக்க ஆவலா
இருப்பேன்.

நம்ம அழகர் ஆற்றில் இரங்கும் பொழுது கட்டி வரும் ஆடையை
வெச்சு அந்த வருஷ மழை, மகசூல் பத்தி சொல்வாங்கன்னு
அவ்வா சொல்வாங்க.

இந்த முறை திருக்கார்த்திகையின் போது எங்கம்மா இங்க
இருந்தாங்க. திருவண்ணாமலை ஜோதியின் போது க்ஷணநேரத்திற்கு
ஆடி வரும் அர்த்தநாரீஸ்வரர் கட்டிவரும் ஆடை வெச்சு
இனி வரப்போகும் காலத்தை பத்தி சொல்வாங்கன்னு அம்மா சொன்னாங்க.

Pantone நிறுவனம் வரப்போகும் 2012 ஆம் வருடத்திற்கு ரொம்பவே
அழகான ஒரு கலரை தேர்ந்தெடுத்திருக்காங்க. அழகு கொஞ்சும் அந்த
கலருக்கு பெயர் “Tangerine Tango” :))


சிவப்பு கலந்த இந்த ஆரஞ்சு வர்ணம் தான் வரும் வருடத்தை
ஆளப்போகிறது.


இந்த நிறம் ரொம்ப ஆழமானதா சொல்றாங்க இந்த நிறுவனத்தினர்.
இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் கலந்திருப்பதா தெரிஞ்சாலும் வேறு
சில வர்ணங்களையும் தனக்குள்ளே வெச்சிருக்கு.

அந்திநேரத்துச் சூரியனின் சிவப்போடு, மனதுக்கு இதத்தையும்
நட்பான பாவனையும் தரும் இளம் மஞ்சளையும் தனக்குள்
வெச்சிருக்கு. அதாவது சுருக்கமா சொன்னா
இந்த நிறம் HEAT AND ENERGYயின் அடையாளம்.



பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பனிமூட்டத்தை நீக்க
இந்த நிறம் உதவும்னு Pantone நம்புது. மூடு பனியை
மெல்ல விலக்கி நமக்கு சரியான பார்வையை தர
சூரியனின் வெளிச்சம், சூடு, சக்தி வேண்டுமே.
அருமையான தேர்வுதான்.

இந்த நிறத்தைப் பற்றி பார்க்கும் பொழுது நமக்கு மிகவும்
பரிச்சயமான ஒரு மலரின் வர்ணம் ஞாபகத்திற்கு வருது.
ஆமாம். கனகாம்பரம். இந்த பூவுக்கு வாசமிருக்காது.
அதனால எனக்கு பிடிக்காது. ஆனா அந்தக் கலர்
மயக்கும் அழகு.

இந்தக் கலரில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வீட்டுல வெச்சுக்கோங்க.
(புடவை, சுடிதார்லாம் வாங்கினாகூட தப்பில்லை.) தோட்டம் போட
வசதி இருக்கறவங்க கனகாம்பரச் செடி வளர்க்கலாம். தினம் இந்தக்
கலர் கண்ணில் படுவது போல இருந்தால் மனதுக்கு நல்லது.

இதோ வரப்போகிறது கிறிஸ்துமஸ் தினம். எனக்கு மிகவும்
பிடித்த ஒரு பண்டிகை. தொழுவதில் எனக்கு எந்த வேறு பாடும்
இல்லை. இறைவன் ஒருவனே என்பது என் அப்பா எனக்கு
சொல்லித் தந்தது.






என்னை மறக்கச் செய்யும் கானகந்தர்வன் குரலில் இந்தப் பாடல்
கேட்கும் பொழுது இன்னும் இளகும் மனது.



நட்புக்களுக்கும், உடன் பிறப்புக்களுக்கும் என் மனமாந்த
கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள்.

அட்வான்ஸா பதிவு போட்டதன் காரணம் ஹி ஹி... ஒரு வாரம் லீவு.


Thursday, December 22, 2011

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ்

நான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை
முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில்
சமையல் செய்ய ரொம்ப ஈசியா இருக்கும். நேரமும் மிச்சமாகும்.
இதைப்பார்த்த எனக்குத் தெரிஞ்சவங்க சிலர்,”வேலைக்கு போறவங்க
தான் இந்த மாதிரி செஞ்சு பாத்திருக்கேன். வீட்டுல இருக்கறவங்க
கூடவா இப்படி செய்வதுன்னு” கேப்பாங்க. வீட்டுல இருந்தாலு
நேரத்துல எல்லா வேலையும் முடிக்கணும்னு இவங்களுக்கு புரியாது.
காலை 6.30 மணிக்குள்ள டிபன், சமையல் எல்லாம் ரெடி
ஆகணும்னா கொஞ்சம் ப்ளானிங் அவசியம்ல. அவங்களை
விடுங்க.

நான் டப்பர்வேர் டப்பாக்கள் பத்தி பதிவு போட்டிருந்தேன்ல.
அதுக்கு தேவையான போட்டோக்கள் எடுக்க இணையத்துல தேடும்பொழுது
ஒரு டப்பர்வேர் கன்சல்டண்ட் டப்பர்வேருக்காகன்னே ஒரு
வலைப்பு வெச்சிருக்காருன்னு லிங்க் கொடுத்திருந்தேன்.
அவங்களுடைய சமீபத்திய பதிவு ரொம்ப பிடிச்சிருந்தது.
அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கி இங்க நம்ம தோழிகள்
எல்லாருக்கும் உதவும்னு பதியறேன். இனி நேரம்
நம் கையில். :))

அவங்க தன்னுடைய அந்த பதிவுக்கு வைத்திருக்கும் பெயர்
I Save Time, Eat Fresh and Feel Organized. Thanks to… டப்பர்வேர்.

இவங்க கொடுத்திருக்கும் டிப்ஸ் நான் கடைபிடிப்பதுதான்.
ஆனா எனக்குத் தெரியாததும் இங்க கத்துகிட்டேன்.

வாரத்துக்கு ஒரு தடவை காய்கறிகள் வாங்கி வந்து டப்பர்வேர் டப்பாவில்
போட்டு வெச்சிடுவாங்களாம். ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது என்னுடைய
அனுபவமும்.
இந்த டப்பாவுக்கு பேர் ஃப்ரிட்ஜ் ஸ்மார்ட். பேருக்கேத்த மாதிரியே
ஸ்மார்ட்தான். ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கும். கேரட், பீன்ஸ்
இப்படி எல்லாத்தையும் அழகா உள்ள வெச்சிடலாம்.

தனித்தனியா வெச்சிடறதால தேடாம எடுத்து உடன் சமையலை
முடிக்கலாம். இன்னொரு ஐடியா சொல்லியிருக்காங்க பாருங்க.
தக்காளியை தோலுரிச்சு
இந்த க்ரேட்டரில் துருவினா டொமட்டோ ப்யூரி ரெடி.

கால நேரத்துல மிக்சி போட்டு சுத்தி கஷ்டப்பட்டுகிட்டு
இருக்க வேணாம் பாருங்க
சாம்பார், ரசம், காரக்குழம்பு எல்லாத்துக்கும்
உபயோகப்படுத்தலாம். டக்குன்னு சூப் கூட செய்யலாம். இதப்பாத்து
நானும் செஞ்சு வெச்சிருந்தேன். பசங்களுக்கு காலை அவசரத்துல
அசத்தலா டொமாட்டோ ஸ்பாகட்டி செஞ்சு கொடுக்க முடிஞ்சது. :))


மேலே சொல்லியிருக்கற பீலர் சூப்பர் கிச்சன் கில்லாடி.
எப்படிங்கறீங்களா? அதை வெச்சு கோஸ் நறுக்கிடலாம்.

வெங்காயத்தை வேக வெச்சு அரைச்சு டப்பாவில் போட்டு
வெச்சிட்டா, நம்ம கிட்ட டொமாட்டோ ப்யூரி இருக்கு.
வெங்காய பேஸ்ட் இருக்கு. நார்த் இண்டியன் டிஷ் டக்குன்னு
செஞ்சு அசத்தலாம்.
இப்படி தேவையானதை கட் செஞ்சு ரெடியா வெச்சுக்கிட்டா
வேலை ஈசியாகுது. இஞ்சி தட்டிப்போட்டு டீ கூட அடிக்கடி
செஞ்சுக்கலாமே.

பாகற்காய், பட்டானியை எம்புட்டு அழகா வெச்சிருக்காங்க பாருங்க.

கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, பாலக் எல்லாம்
இந்த மாதிரி சுத்தமாக்கி எடுத்து வெச்சுகிட்டா வேலை ரொம்ப
சுளுவா முடிஞ்சிடும்.

பொதுவா ஃப்ர்டிஜ்ல எல்லாம் நீட்டா மூடி வைக்கணும். அடச்சு
வைக்க கூடாதுன்னு சொல்வாங்க.

இப்படி வைப்பதால நாம காசு போட்டு வாங்கும் சாமான்களும்
பாழாகாது. நம்ம வேலையும் சீக்கிரம் முடியும்.

இதனால அடிக்கடி மார்க்கெட்டுக்கு போகும் வேலை இல்லை.
என்ன இருக்கு. என்ன இல்லைன்னு தெரிஞ்சிக்கவும் வாய்ப்பு
இருக்கு. எத்தனை வாட்டி ஃப்ரிட்ஜில் காய்கறி கூடையில்
காய்ஞ்சு போன எலுமிச்சம்பழம், ப.மிளகாய், சுண்டிப்போன
கேரட்னு குப்பை கூடையில் போட்டிருப்போம். இனி
நாம அழகா அடுக்கி வெச்சு, ஆனந்தமா சமைக்கலாம்.




கலர்ஃபுல் மலேசியா.... ரயில் பயணம்

நானும் அயித்தானும் மட்டும் மலேசியா போகும் அந்த ரயிலில் ஏறலாம்
என சிங்கப்பூரா ஸ்டேஷன் டிக்கெட் பரிசோதகர் சொன்னார்னு போன
பதிவுல சொல்லியிருந்தேன்ல. பசங்களை எங்க கூட அழைத்து போக
மறுத்துவிட்டார்!!! காரணம் பாஸ்போர்ட்.

எங்க ட்ராவல் ஏஜண்ட் (கொழும்புவில்) மலேசியா விசா முதலில் வாங்கி
விட்டார். அதற்கப்புறம் சிங்கப்பூர் விசா வாங்கும் பொழுது அவங்க பாஸ்போர்ட்
6மாதம் வரைக்கும் எக்ஸ்பயரி ஆகாம இருக்கணும்னு சொல்லிட்டாங்க.
எனக்கும் அயித்தானுக்கு பிரச்சனை இல்லை. பசங்க ரெண்டு பேருக்கும்
மைனர் பாஸ்போர்ட் என்பதால 5 வருஷத்துக்குத்தான் தருவாங்க.
உடனடியா இந்திய எம்பசில கொடுத்து புது பாஸ்போர்ட் வாங்கி
ட்ராவல் ஏஜண்ட்கிட்ட கொடுத்தோம். அவங்களும் அதுல சிங்கப்பூர்
விசா வாங்கி எங்க கிட்ட கொடுத்திட்டாங்க. பழசுல இருக்கற விசா
பழைய பாஸ்போர்ட் கேன்சல் ஆனதால விசாவும் கேன்சல் ஆன மாதிரியாம்.
அது எங்களுக்கும் தெரியாது. எங்க ட்ராவல் ஏஜண்டும் எதுவும் சொல்லலை.

புது பாஸ்போர்ட்ல சிங்கப்பூர் விசா இருந்ததால அங்க நுழைஞ்சாச்சு.
இப்ப பசங்களுடையது பழைய பாஸ்போர்ட்லதான் மலேசியா விசா
இருப்பதால பசங்களை அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆஹான்னு
ஆயிடிச்சு. அங்கேயிருந்துதான் எங்களுக்கு ஃப்ளைட்டுன்னு எங்க ஃப்ளைட்
டிக்கெட்டை காட்டினோம். 2 நாள்தான் மலேசியாவுல தங்குவோம்.
அப்படின்னு சொல்லி கெஞ்சினோம். கடைசி மணிய அடிச்சு, ரயில் ஹாரனும்
அடிச்சாச்சு. ப்ளாட்பாரத்துல எங்களைத் தவிர ஒரு ஈ,காக்கா இல்ல!!

அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியலை. நான் இங்க அனுப்பிடறேன்
மலேசியாவுல உங்களை கேள்வி கேட்டா உங்க பொறுப்புன்னு சொல்லிட்டார்.
அடிச்சு பிடிச்சு ஓடி ட்ரையினில் பொட்டிகளைப்போட்டு ஏறினோம்,
வண்டி ஸ்டார்ட் ஆகிடிச்சு.


சிங்கப்பூர் மலேசியா இடையே இந்த ரயில் பயணம் நல்லா இருக்கு.
முழுதும் ஏசிதான். ஆனா தமாஷான விஷயம் லோயர் பர்த்னா
டிக்கெட் விலை அதிகம். அப்பர் பர்த்னா கம்மி. (இருப்பது
இரண்டே பர்த்தான்) எங்களுக்கு புக் செய்யும் பொழுதே கரெக்டா
4 அப்பர் பர்த்தான் கிடைச்சது. ஏறி படுத்தோம். ஆனாலும் மனசு
திக் திக் தான் காரணம். இமிகிரிஷேன் ஸ்டாம்ப் வாங்க வுட்லண்ட்ஸ்
செக் பாயிண்டில் இறங்கும் பொழுதுதான் இருக்கு மேட்டர்.

வந்தாச்சு வுட்லண்ட்ஸ் செக் பாயிண்ட். ட்ரையினிலேயே அறிவிப்பு
சொன்னாங்க. உங்க மூட்டை முடிச்சுகளை எல்லாம் வண்டியிலேயே
விட்டுட்டு, டிக்கெட், பாஸ்போர்ட் மட்டும் எடுத்துக்கங்கன்னு சொன்னாங்க!!
மூட்டையை அப்படியே விட்டுட்டா!!!ன்னு ஷாக். எல்லாரும் இறங்கவே
வேறு வழியில்லாம பொட்டிகளை ட்ரையினில் விட்டுட்டு இறங்கி
இமிக்ரேஷன், எண்ட்ரி பாயிண்டில் வரிசையில் நின்றோம். எல்லோரும்
இறங்கிட்டாங்களானு செக் செஞ்சு, ப்ளாட் பாரத்தை பூட்டிட்டு
அப்புறம் கவுண்டரை ஓபன் செஞ்சாங்க. பக் பக்ன்னு வரிசையில்
நின்னுகிட்டு இருந்தோம். பாதி தூக்கத்துல எழுந்த பிள்ளைகளும்
ஆச்சரியத்துலயும், பயத்துலயும் இருந்தாங்க.

எங்க முறை வந்தது. எதுவும் பேசாமல் ஸ்டாம்ப் போட்டு
கொடுத்திட்டாங்க. ஒரு கேள்வி கேட்கலை. என்னப்பன்
கந்தப்பன் தான் காப்பாத்திவிட்டான். அவன் தரிசனத்துக்குத்
தானே போனது. கடைசி பேசஞ்சருக்கு ஸ்டாம்ப் போடும் வரை
ப்ளாட்பாரத்திற்கு செல்லும் கதவு திறக்கப்படவில்லை. எல்லாருக்கும்
எண்ட்ரி ஆனப்பிறகு கதவு திறக்கப்பட்டு, எங்க கம்பார்ட்மெண்டுக்கு
ஓடினோம். ஆச்சரியமா பொட்டி பத்திரமா இருந்துச்சு. அப்புறமா
தான் தெரிந்தது அந்த ஸ்டேஷனில் பல ஆயிரம் கேமிராக்கள்
வைச்சு கண்காணிச்சுகிட்டே இருப்பாங்களாம். டைட் செக்யூரிட்டி.

காலையில் ரயில் கோலாலம்பூரை சேர்ந்ததும் இறங்கி வெளியே
வந்ததும் தான் மூச்சு சீரா வந்தது. இங்கே ஹோட்டல் புக்
செய்திருந்தோம். கே எல் டவர்ஸுக்கு அருகிலேயே இந்த
ஹோட்டல். ஃப்ரெஷ்ஷப் ஆகி, ஹோட்டலில் இருந்த ட்ராவல்
டெஸ்க்கில் கார் அரேஞ்ச் செய்து கொண்டு ரப்பர் ட்ரீ,
லோக்கல் சைட் சீயிங் எல்லாம் பார்த்து கந்தப்பனை பார்க்க
ஓடினோம்.

lime stoneகளால் ஆன 400 மில்லியன் வருட புராதனமானது என சொல்லப்படுகிறது
இந்த பத்துமலை(batu caves) பத்துமலைப்பற்றிய விக்கீப்பீடியாவிற்கு


372 படிகள். 15 நிமிடத்தில் ஏறினோம். இதுவே தைப்பூச சமயமாக
இருந்தால் 3 மணிநேரத்திற்கு மேல் பிடிக்கும் என்றார் கோவில் பூசாரி.
படி ஏறிவந்ததும் வரவேற்கிறான் முருகன்

372 படி ஏறி வந்த பின்னும் இன்னும் கொஞ்சம் படி

ஆனந்தமான தரிசனம். என் ஆசை நிறைவேறிய சந்தோஷம்.
பிரச்சனையிலிருந்து காப்பாற்றி தன்னை தரிசிக்க வரவைத்தற்கு
அருள்புரிந்தவனை கண்ணார தரிசித்து வந்தோம்

நாங்கள் அங்கே சென்ற பொழுதுதான் பத்துமலையில் இந்த பெரிய
முருகன் சிலை தயாராகி தைப்பூசத்தன்று திறப்புவிழாவுக்கு
நாள் குறிந்த்திருந்தார்கள்.



Wednesday, December 21, 2011

JOYFULL SINGAPORE. COLORFUL MALAYSIA

எனக்கு சின்ன வயசுலேர்ந்து கோரிக்கை இருந்ததுன்னா
அதை கதிர்காம கந்தனை தரிசிக்கணும். அப்புறம் சிங்கப்பூர்
முருகன், மலேசியா பத்துமலை முருகன். மத்தது ரெண்டும்
நடக்குமான்னு ஒரு டவுட் இருந்தது.அதனால கதிர்காமனை
தரிசிக்கணும்னே பிரார்த்தனை செஞ்சுகிட்டு இருந்தேன்.
(அப்பா ஒரு முறை போய் வந்ததால பின்னாளில் நாமும்
போகலாம், தவிர இலங்கை “பக்கத்துல”தானே(!!!)
இருக்குன்னு ஒரு நினைப்பு.) இந்த பைத்தியமெல்லாம்
பிடிக்க காரணம் வருவான் வடிவேலன் சினிமாவும் தான்.

அந்த கந்தன் மனசு வெச்சா நடக்காதது ஏதும் உண்டா.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் என்னப்பன் கந்தப்பனை தரிசிக்க போய்விடுவோம் கதிர்காமத்திற்கு. (இப்போதும் நல்லூர்
கந்தனை பார்க்க ஒரு பயணம் கண்டிப்பாய் இலங்கை
செல்வேன் எனும் நம்பிக்கை இருக்கிறது) இலங்கையில்
இருக்கையில் சிங்கை செல்லும் விமானப் பயண மதிப்பு
குறைவாக (இலங்கை பணமதிப்பில்) இருக்கவே
”இந்தியா போயிட்டா முடியாதுப்பா. இங்கேயிருந்தே
போயிட்டு வந்திடலாம். எனது சின்ன வயசு ஆசை
பூர்த்தியான மாதிரி இருக்கும். பிள்ளைகளுடன்
ஒரு வெளிநாட்டு பயணம் போனாமாதிரியும் இருக்கும்!”ன்னு
சொல்ல அயித்தான் ப்ளான் போட்டார். அந்த வருடம்
எங்கள் பத்தாவது திருமண வருடமா இருக்க
கதிர்காமம் தரிசனம் முதல் வாரத்தில் ஒரு வாரம்
கழித்து சிங்கப்பூர், மலேசியா பயணம்.


சிங்கையில் ஹோட்டலில் தங்கவில்லை. என் தோழி ஒருவரின்
ஐடியா படி paying guest accommodation தங்கினோம்.
அந்த வீட்டின் உரிமையாளர் மும்பை
பாந்த்ரா பகுதியைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு
பிறகு சிங்கை வந்திருக்கிறார். மவுண்ட்பேட்டன் பகுதியில்
அந்த பங்களாவில் அவர் மட்டும் வசிக்கிறார்.
மற்ற அறைகளை இந்த மாதிரி வாடகைக்கு விடுகிறார்.
ஒரு நாளுக்கு எங்கள் நால்வருக்கும் சிங்கை டாலர் 70 வாடகை.
அதில் காலை ப்ரெட்& டீ கொடுத்துவிடுவார்.


நமக்கு ஊர் சுற்றிவிட்டு படுக்க இடம் கிடைத்தால் போதும். ஹோட்டலைவிட
மிக சுதந்திரமாக இருந்தது இந்த இடம். பட்ஜட்டுக்கும் பங்கமில்லா ஒரு பயணம்.
அந்தம்மாவிடம் மிகுந்த கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி சின்ன ரைஸ்குக்கரில்
சோறு சமைத்து டப்பாவில் போட்டுக்கொள்வேன். வழியில் தயிர் வாங்கி பகல்
போஜனத்தை செல்லும் இடத்தில் வைத்துக்கொள்வோம். இரவு சரவணபவன்,
வுட்லெண்ட்ஸ் ரெஸ்ராண்டுகளில் சாப்பிடுவோம். அமிர்தாவுக்கு காரம் ஆகாது,
என்பதாலும் கையில் இருந்தால் பசி எடுத்ததும் சாப்பிட கொடுத்துவிடலாம் என்பதாலும்
பெரும்பாலும் என் சின்ன ரைஸ் குக்கர் இல்லாமல் பயணம் செய்ததே இல்லை.

அப்பொழுது என் அனில் அண்ணாவும் சிங்கையில்தான் இருந்தார். செண்டோசா
பார்க்க அண்ணா தன் குடும்பத்தினருடன் வந்து காரில் அழைத்து சென்றார்.
லூஜில் பயணித்து கார் ஓட்டி வந்தது இப்பொழுதும் நினைவில் இனிக்கிறது.

சயன்ஸ் சிட்டி, ஜுராங் பார்க், மெர்லைன் எல்லாம் ரசித்தோம்.
சிங்கப்பூர் நதியில் படகு சவாரியும் மிக அருமையாக இருந்தது.
சிங்கப்பூர் முருகன் கோவில் சென்று தரிசனம் செய்தோம்.
பிள்ளைகள் மிகவும் ரசித்தனர் அந்தப் பயணத்தை. முஸ்தபாவில் பர்ச்சேசிங்.
எல்லாம் முடிந்தது. சிங்கப்பூர் பயணம் இனிதாக முடிந்து மலேசியா செல்ல
வேண்டும். சிங்கையிலிருந்து மலேசியா ரயிலில் பயணம் செய்தோம்.
சிங்கப்பூர் எவ்வளவு தூய்மை, அழகு!!! ஆனால் சிங்கப்பூரில் இருக்கும்
அந்த ரயில்வே ஷ்டேஷன் பார்த்து ஷாக். மலேசிய அரசால் பராமரிக்கப்படுகிறது
என்பதற்காக இப்படியா??? அழுக்கும் அறுவறுப்புமாக இருந்தது. நம்ம ஊர்
ஷ்டேஷன்களுக்கு திருஷ்டி சுத்தி போடவேண்டும் என நினைத்தேன்.

நம் இந்திய ரயில்களுக்கு சற்றும் குறைவில்லாமல் தாமதமாக ரயில் வந்தது.
இங்கே பரிசோதகரிடம் நம் பாஸ்போர்ட், விசா, ட்ரையின் டிக்கெட் எல்லாம்
காட்ட வேண்டும். பரிசோதகர் எங்களைப் பார்க்கிறார்!!
பாஸ்போர்ட்டை பாக்கிறார்!!! கொஞ்சம் நேரம் அவர் ஏதும்
பேசவில்லை. ஏதோ பிரச்சனை என்று புரிகிறது.
என்னவென்று தெரியவில்லை. அயித்தான் விசாரிக்க,
” நீங்களும் உங்கள் மனைவியும் பயணிக்கலாம்.
பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியாது!!!! ”என்று சொல்ல
தலை கிர்ரென்று சுற்றியது. பிள்ளைகளை யாரிடம்
விட்டுச் செல்ல? தவிர நாங்கள் மலேசியாவில் வேறெங்கும் சுற்றிப்பார்க்க போவதில்லை. தலைநகரம் கொலாலம்பூர் மட்டுமே
பார்த்து உடன் அங்கிருந்து டைரக்ட் ஃப்ளைட்டில்
கொழும்பு போகத்திட்டம்.

ஸ்டேஷனில் இருந்தவர்கள் அனைவரும் ஏறிவிட்டார்கள்!!! எங்களைத்
தவிர யாருமில்லை. என்னப்பா? என்னப்பா இந்த சோதனை? என குழம்ப
அவர் என்ன சொல்லியும் கேட்காமல் பிள்ளைகளை அனுப்ப மறுக்கிறார்.
ஷ்டேஷன் மாஸ்டர் மணி அடித்து, கொடி அசைக்க ஹாரணும் அடித்து
விட்டார்கள்!!!!!!!!!!!!!

ஏன் அனுப்ப மறுத்தார்?
பயணம் போனோமா???

தொடரும்..............


பதினாறு வயதினிலே!!!!

பெரியவங்க வாழ்த்தும் போது கூட என்றும் பதினாறுன்னு வாழ்த்துவாங்க.
மார்க்கண்டேயர் போல என்றும் இளமையுடன் நல்ல வாழ்வு வாழ்க என
அர்த்தம்.

பருவ வயதுகளில்”16” க்கு ஒரு ஷ்பெஷல் இடம் தான். ஸ்வீட் 16 என
கொண்டாப்படும் அந்த தளிர் இளம் பருவம் ஒரு சுகானுபவம். படிப்பு,
எக்ஸாம் என கொஞ்சம் டென்ஷன் இருந்தாலும் நாம் ஸ்வீட் 16 எனும்
நினைப்பே அதிக இளமையாக காட்டும்.

இப்ப 16க்கு என்னன்னு கேக்கறீங்களா. 20 நாளைக்கு முன்னால எங்க
திருமண வாழ்க்கை 16ஆம் வயதில் அடி எடுத்து வைத்த நந்நாள்.
(அப்ப போட நினைச்ச பதிவு இம்புட்டு லேட்டா போடுறேன்)



வாழ்த்து சொல்லும் பொழுதே அயித்தானிடம் இன்னைக்கு நம்ம
கல்யாண நாளுக்கு ”ட்ரைவிங் லைசன்ஸ் அப்ளை செய்யலாம்பா”.
தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெறும் வயது வந்திருச்சுன்னு ஜோக்
அடிச்சேன். சூப்பரா ஒரு சுடிதார், அயித்தானுக்கு பேண்ட் ஷர்ட்
எடுத்து முன்னாடியே ரெடி செஞ்சு வெச்சாச்சு.

இது மட்டும் போதுமா?? 16 வயசாச்சே!!! என்ன செய்யலாம்னு
மண்டை குடைச்சலுடன் நெட்டை குடைஞ்சேன். கூகுள் ஆண்டவர்
புண்ணியத்தில் ஐடியாக்கள் கிடைச்சது. Traditional anniversary
gift லிஸ்டில் 16 வருடத்திலிருந்து ஏதும் பெருசா கிடையாது.
ஆனா மாடர்ன் கிஃப்ட் லிஸ்டில் hallow silverware/silver.

வெள்ளியில் ஆண்களுக்கு என்ன பரிசு கொடுப்பது? மோதிரம்
வாங்கலாம்னு ப்ளான் செஞ்சா “நான் என்ன தவில் காரரான்னு”
கேப்பாரு. வாட்ச் ஃபாதர்ஸ் டேக்கு பசங்க வாங்கிக்கொடுத்திருக்காங்க.
சம்திங் ட்ஃபரண்டா இருக்கணும்னு யோசனை. சர்ப்ரைஸா இருக்கணும்.
ஜெர்மன் சில்வரில் அழகான பொளல் ஒன்று வாங்கி வைத்தேன்.
டெக்கரேட்டிவா நல்லா இருக்கும்.

இரண்டு நாள் முன்னாடியே அயித்தானுக்கு பிடித்த பட்டர்ஸ்காட்ச் கேக்
ஆர்டர் செய்து வைத்திருந்தேன். சில்வர் தீம் என்பதால் சில டெக்கரேட்டிவ்
ஐட்டங்கள் வாங்கி வைத்திருந்தேன். டிசம்பர் 1 மில்க் மெய்ட் சேமியா
பாயசம், பிசிபேளாபாத் செய்தேன். அயித்தானுக்கு மிகவும்பிடித்தது.
மதியம் லன்சுக்கு வீட்டுக்கு வந்த சென்ற உடன் பிள்ளைகள் வந்ததும்
கடகடவென டெக்கரேட் செய்து ரெடி செய்தோம். ஓடிப்போய் கேக்
வாங்கி வந்தேன். சில்வர் கலர் பெல், சில்வர் கலர் டெக்கரேடிவ்
ஐட்டங்கள் என வீடே ஜொலித்தது.

5மணிக்கு வீட்டுக்கு வந்தார். டெக்கரேஷன் பார்த்து அசந்து போனார்.
:)) கேக்கை கொடுத்து கட் செய்தோம்.பிள்ளைகள் எனக்கு
புடவை வாங்கி கொடுத்தார்கள். அயித்தானுக்கு டீ ஷர்ட். கேக்
கட்டிங் முடிந்ததும் ஜெர்மன் சில்வர் கிஃப்ட் கொடுத்து 16 ஆம் வருடத்தின்
தீம் படி செய்திருக்கிறேன் என்றேன். ஒரே சந்தோஷம் அயித்தானுக்கு.
குடும்பத்திற்காக அல்லும் பகலும் பாடு படும் அந்த ஜீவனுக்கு என்னால்
முடிந்த ஒரு சந்தோஷத்தை தந்த திருப்தி.

இரவு டின்னர் GREEN PARK HOTELல் இருக்கும் ONCE UPON A TIME
RESTAURANT
ல். இங்கே உணவும் சுவையாக இருக்கும். நம் பர்ஸும்
இளைக்காது. :))

திருமணநாள் பரிசு ஐடியாக்களுக்கு இந்த வலைத்தளங்கள் பார்க்கலாம்.

வலைத்தளம் 1


வலைத்தளம் 2

வலைத்தளம் 3

FOR TRADITIONAL AND MODERN GIFTS TABLE



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, December 20, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 20/12/11

பதிவு போட ஆரம்பித்து 4 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்
இந்த மாதம் தான் மிகக்குறைவான பதிவுகள். :) அதான் பிரியாணி
போட வந்திட்டேன்.

பிரிந்தவர் மீண்டும் சேர்வதுபோலன்னு கேள்விபட்டிருக்கோம். சேர்ந்தவர்
மீண்டும் மீண்டும் பிரிதல் என்பதுதான் இப்ப லேட்டஸ்ட். உடன்பிறாவா
தோழிக்கு கல்தா கொடுத்திருக்கும் அம்மாவைப் பத்திதான் சொல்றேன்.
இதற்கு பின்னாடி இருக்கும் மர்மமென்ன? இதற்கு காரணம் சோ ராமசாமி
அவர்கள்னு வேற பகிரங்கமா போடறாங்க. ஏதோ நடக்கிறது என்பதற்கு
இது கட்டியமா? இல்ல??? புரியலை.

************************************************************************
போனவாரத்தில் ஒரு நாள் ஆஷிஷ் பள்ளியிலிருந்து கண்களில் நீர் தளும்ப
வந்தான். பள்ளியில் ஏதும் பிரச்சனையா? டீச்சர் திட்டிவிட்டாரா? என குழப்பம்.
(எப்பவும் ஒரே மாதிரி இருப்பது கஷ்டமாச்சே). என்னப்பா என்று கேட்டால்,
உள்ளே வந்து கட்டிக்கொண்டு ஒரே அழுகை. அவனது நண்பன் இறந்துவிட்டானாம்.
பாவம் ஒரே வகுப்பு மாணவன். குமுறி குமுறி அழும் ஆஷிஷை அன்று
தேற்றுவதற்குள் கஷ்டமாகிவிட்டது. அந்தப் பையன் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் மொட்டை
மாடியிலிருந்து கால்தவறி விழுந்தானா? தற்கொலையா தெரியவில்லை.
இன்னும் 15 நாளில் தனது பதினாறாவது பிறந்தநாளை கொண்டாட விருந்த
பிள்ளை இறந்துவிட்டான்.

சமீபத்தில் ஒரு நாளிதழில் கூட குழந்தை வளர்ப்பு ஷ்பெஷல் இதழ் வந்தது.
பதின்ம வயதில் பெண் குழந்தையை பேணுவதைப்பற்றித்தான் எல்லாம்
பேசுகிறார்களே தவிர இந்த அண்குழந்தைகளைப் பற்றி அவர்களது பிரச்சனைகள்
பற்றி அவ்வளவாக ஏதுமில்லை. பெண்குழந்தை பற்றி எவ்வளவோ பேசியாகிவிட்டது.
ஆண்குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. அதற்கு
போதிய கைடன்ஸ் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த மனத்தாங்கல்
எப்போது தீருமோ. பெற்றோர்களுக்கு தேவையான போதனை எப்போது கிடைக்குமோ?
**********************************************************************************

10த் போர்ட் எக்ஸாமா இந்த வருஷம்? பாத்து நல்லா படி? ஜாக்கிரதை!!!
என மிரட்டியதெல்லாம் வரும் மார்ச் மாத பொதுத் தேர்வோடு சரி.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இப்பொழுதே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
ஆப்ஷனல். விருப்பமென்றால் எழுதலாம். அடுத்த வருடம் அதாவது
2012-2013 கல்வியாண்டிலிருந்து 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குட்பை
சொல்லப்போகிறது சிபிஎஸ்சி. அதிகமான மனச்சோர்வுக்கு பொதுத்தேர்வு
வழிவகுக்கிறது என்பதால் இந்த முடிவாம்.

இப்பொழுது 9 ஆம் வகுப்பு மார்க்கையும் பத்தாம் வகுப்புக்கு எடுத்துக்கொள்கிறார்கள்.
எல்லாமே டெஸ்டாக எழுதாமல் ஆக்டிவிட்டி, ப்ராஜ்க்ட் என கொடுத்து
மதிப்பீடு செய்கிறார்கள். செமஸ்டர் சிஸ்டம் போல மதிப்பீடு நடக்கிறது.
10 ஆம் வகுப்பு முழுப்பரிட்சையும் போர்ட் எக்ஸாமாக இருந்தாலும்
80 மதிப்பெண்களுக்கு பரிட்சை எழுதுகிறார்கள் என்று கொஞ்சம் கன்ஃப்யூசிங்காகத்தான்
இருக்கு.

இது நல்லதா கெட்டதா? ஒரு அம்மாவாக “ஐ. ஜாலி! பசங்க தப்பிச்சாங்க.நமக்கு கிடைக்காத ஒரு ஆனந்தம் வருங்கால பிள்ளைகளுக்கு” ஒரு
ஆசிரியையாக “இது சரியான முடிவு தானா??!!”
உங்க கருத்தையும் சொல்லுங்க.
*****************************************************************************

எங்கேயும் எப்போதும், தெய்வத்திருமகள் இரண்டு படமும் சமீபத்தில்தான்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான படங்கள். எங்கேயும் எப்போதும்
சான்சே இல்லை. அஞ்சலியின் நடிப்பு அருமை. எப்போதும் கொறித்து
கொண்டே வரும் பெண்ணாக நாடோடிகளில் நடித்த அனன்யாவா இது என
இருக்கு. இந்தப் படம் இப்பொழுது ஜர்னி (Journey) என தெலுங்கு
பேச வந்திருக்கிறது.

டர்ட்டி பிக்சர் படம் சக்கை போடு போடுகிறது போல இந்தப் படத்தின் மூலம்
வித்யாவுக்கு நல்ல மார்க்கெட்டாம். 7 கோடி சம்பளமாம். ஆனால் இந்தப்
படத்துக்கு ப்ரமோஷன் என்ற பெயரில் பொது இடங்களில் அவர்கள் அடித்த
கூத்துதான் சகிக்கவில்லை.
********************************************************************************

நான் எழுதறேன்னு சொன்னது தப்புத்தான். என்னால முடியலை.
எதுக்கு இந்த டயலாக்குன்னு கேக்கறீங்களா? பர்வரிஷ் அப்படின்னு ஒரு ஹிந்தி
சீரியல் சோனியில் ஆரம்பமாகுது. அந்தத் தொடரை பற்றி பதிவெழுதறேன்னு
சொன்னேன்ல அதுதான் என்னால முடியலை. திரைப்படத்துக்கு விமர்சனம்
எழுதுவது போல இதுக்கு சான்சே இல்ல. சீரியல் ரொம்ப நல்லா இருக்கு.
கண்டிப்பான பெற்றோரா இருப்பது நல்லதா? நட்போட இருப்பது நலமான்னு
ஒரே குழப்பம்தான் நமக்கு. அதுக்கு இந்த சீரியல் தீர்வுன்னு சொல்ல முடியாட்டியும்
நாம என்ன தப்பு செய்யறோம்னு புரிய வைக்குது.

அத்தோட பெரியவங்களா நாம செய்ய வேண்டியது என்ன என்பதையும் சொல்லுது.
தொடர்ந்து பார்க்க முடியாததால சனிக்கிழமை முன்பகல் 10 மணியிலிருந்து
12.30 வரை மொத்த வார எபிசோட்டையும் பாக்கலாம்.

அந்த சீரியலில் நடிப்பவர்களுக்கும், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்


****************************************************************************

கலி முத்தி போச்சுன்னு தான் சொல்லணும். பொம்பளைப்புள்ளைங்களை
வெளிய அனுப்பி வெச்சிட்டு வயிற்றுல நெருப்பைக்கட்டிகிட்டா மாதிரி
இருக்கோம்னு சென்ற தலைமுறை பெற்றோர்கள் சொன்ன டயலாக்கை இனி
ஆண் குழந்தைகளை பெற்றவங்க சொல்லும் நிலை வரும் போல இருக்கு.
ஆந்திராவின் குண்டூருக்கு அருகில் இரண்டு ஆசிரியைகள் தங்களது 8ஆம்
வகுப்பு படிக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று யாருக்கும் தெரியாமல்
திருமணம் செய்துகொண்டார்களாம்!!!!!!!!!!! இதை பேப்பரில் படித்த
பொழுது என்னவோ மாதிரி ஆகிவிட்டது.

பெண்களிடம் எந்த வேலை கொடுத்தாலும் பொறுப்பாக செய்வார்கள்.
ஆசிரியர் பணியில் பெண்களை அமர்த்தினால் தாயைப்போல பாதுகாப்பார்கள்
என பெண் இனம் மேலே எத்தனையோ நல்ல பெயர்கள். அவற்றுக்கு களங்கம்
விளைவிக்கும் கருவேலம் முற்கள் இப்பொழுது முளைக்கத் துவங்கி இருக்கின்றன.

இதை முளையிலேயே கிள்ளி எறிய ஏதாவது செய்யவேண்டிய தருணம்.
பிள்ளைதான் பள்ளி செல்கிறதே என்று விட்டுவிடாமல் நேரம் கிடைக்கும்
பொழுதெல்லாம் பிள்ளைகளுடன் அளவளாவி நீதி போதனைக்கதைகளை
சொல்லவேண்டும். பள்ளியில் தற்போது இத்தகைய வகுப்புக்கள் நடப்பது
இல்லை. பிள்ளையின் வளர்ப்பில் பெரும் பங்கு பெற்றோருக்குத்தான்.
************************************************************************************









நடந்தது இதுதான்.

அம்மா, அப்பா ஊரில் தனியாக இருப்பதால தினமும் ஒரு வாட்டி
போன் போட்டு நலம் விசாரிச்சிடறது பழக்கம். அவங்க தனிமைய
விரட்ட முடியாட்டி போனாலும், ஏதோ என் பங்களிப்பா இந்த வேலைய
செஞ்சுகிட்டு இருக்கேன். அன்னைக்கும் அப்படித்தான் அம்மாவுக்கு போன்
செஞ்சா ”அப்பாவுக்கு உடம்பு சுகமில்லை.நேத்து மூச்சு விட முடியாம
போயிடிச்சு. காலைல டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போனேன். ஜுரம் இருக்கு
மருந்து சாப்பிட்டு அப்பா படுத்திருக்காருன்னு சொன்னாங்க.” புதுகையில்
மழை அதிகமா பெஞ்சுகிட்டு இருந்துச்சுன்னு அம்மா சொன்னாங்க. மழை,
குளிர் காலங்களில் அப்பாவுக்கு மூச்சுத்திணறல் இருக்கும். ஆனாலும்
இங்க வந்தா நல்ல டாக்டர்கிட்ட செக்கப் செய்யலாமேன்னு சொன்னேன்.
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவங்களால தனியா டாக்டர்கிட்ட
ஓடி, வீட்டுக்கு வந்து செய்வதுன்னு முடியாதுன்னு ஹைதைக்கு கிளம்பி
வரச்சொன்னேன். பிள்ளைகளை விட்டு போகமுடியாத சூழல் இப்ப.

”அதெல்லாம் வேண்டாம். நான் நல்லாத்தான் இருக்கேன்” அப்படின்னு
அப்பா சொன்னாரு. இவரு இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருப்பாருன்னு
தம்பியாருக்கு போனைப்போட்டு மேட்டரைச் சொன்னேன். என் கிட்ட
சொல்லவே இல்லையேன்னு சொல்லிப்புட்டு சிங்கையிலிருந்து போன்
போட்டு அப்பாவை நல்லா திட்டி ட்ரையினில் டிக்கெட் ஏதும் கிடைக்காததால
அம்மா, அப்பா ரெண்டு பேரையும் ஃபிளைட்ல டிக்கெட் புக் செஞ்சு அனுப்பி வெச்சாப்ல.

வந்த மறுநாளே என்னுடைய எண்ட் டாக்டர் (அதான் ENT ) கிட்ட போனோம். :))
அவர் இது மூச்சு திணறல் இல்ல. பீபி அதிகமா இருக்கு. அப்படின்னு சொல்ல
அப்பாவுக்கு மூச்சு விட முடியாம இருந்ததற்கு அடுத்த நாள் அம்மா ஈசிஜி
எடுத்திருந்ததைக்காட்ட அதுல மேட்டர் தெரிஞ்சது. இது ஹார்ட் சம்பந்தப்பட்டது.
முதல் அலார்ம் அடிச்சிருக்கு. அதுதான் அன்னைக்கு ராத்திரி உங்களுக்கு
மூச்சு விட முடியாம போயிருக்குன்னு சொல்லி உடனடியா இருதய மருத்துவரை
பாக்கச் சொல்ல அங்கேயே இருந்த டாக்டர்கிட்ட காட்டி பீபி குறையனும் அப்படின்னு
சொல்லி அதுக்கு மருந்து கொடுத்தார். எக்கோ டெஸ்டில் ஏதும் பிரச்சனை இல்லாததால
நல்லதா போச்சு.

அம்மாவுக்கு சைனஸ் தொல்லை இருப்பதால அதுக்கு காட்டினோம். எல்லா
டெஸ்டும் எடுத்ததுல அம்மாவும் டேஞ்சர் ஜோன்ல இருப்பது தெரிஞ்சது.
அம்மாவுக்கும் பீபி ஹை, சுகர், கொலஸ்ட்ரால் எல்லாம் ஜூப்பரா ஜிவ்வுன்னு
ஏறிக்கிடந்தது தெரிய வந்து முன்னாடியே எடுத்துகிட்டு இருக்கும் மருந்துகளின்
அளவைக்கூட்டி தொடர்ந்து எடுக்கணும்னு சொன்னாங்க.

அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலை பாத்துகிட்டு இருந்து ரிடையர் ஆனவுங்க.
அப்பாவோட வேலை செம டென்ஷன் + பிசி + ட்ராவல்னு எந்த நேரமும்
இருந்தவர். அம்மா பள்ளியில எழுத்தாளரா இருந்தாலும் அவங்களும் அங்க
செம டென்ஷன்தான். உடலை கவனிக்காம ஓடிக்கிட்டே இருந்தவங்க இப்ப
வீட்டுல இருக்கும்பொழுது அவ்வளவு ஆக்டிவா இல்லாம இருப்பதும் ஒரு
காரணம். இப்ப அவங்களுக்கு உடலில் சக்தி இல்லாம இருப்பதால நமக்கு
வயசாகிடிச்சுன்னு ஒரு மனப்பான்மை வந்து உடல் உழைப்பு கம்மி ஆகிடிச்சு.

டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டு போய், டாக்டர், டெஸ்டிங்னு ஒரே
அலைச்சல். பசங்களுக்கும் டெஸ்ட் நடந்துகிட்டு இருந்த நேரம். எதையும்
விட முடியாம ஓடி செஞ்சே ஆகவேண்டிய கட்டாயம். நாம நல்ல நாளிலேயே
நாழிப்பால். இப்ப கேக்கணுமா. லோ லோ பீபி அப்படி இப்படின்னு ஒரு மாதிரி
ஆகிடிச்சு உடம்பு. ஆனாலும் மனசுல ஒரு நிம்மதி. அம்மா அப்பாவுக்கு சரியான
நேரத்துல ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வெச்சிட்ட திருப்தி. இரண்டு மாசத்துக்கு ஒருமுறை
வந்து டெஸ்ட் செஞ்சுக்க சொல்லி இருக்காங்க. அப்பாவுக்கு பீபி கண்ட்ரோலில்
வந்திட்டா போதும். அம்மாவுக்கு தான் சுகர், கொலஸ்ட்ரால், பீபி எல்லாம் நார்மலுக்கு
கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம். காரணம் பெண். ஆமாம் ஆணுக்கு
முடியவில்லை என்றால் ஓய்வெடுக்கலாம். மனைவி செய்வார். ஆனால் மனைவிக்கு!!
அப்பா உதவி செய்யும் ரகம் தான் என்றாலும் அவருக்கே உடல்நிலை சரியில்லாத
பொழுது அம்மாவுக்கு அது இன்னும் கொஞ்சம் டென்ஷனைக்கொடுக்கும்.


இந்த வருடத்தில் என்னுடைய மிகப்பெரிய சாதனைன்னு நான் ரொம்ப
சந்தோஷப்பட்டுக்ககூடிய விஷயம் நடந்திருக்கு. எம்புட்டு சொன்னாலும் கேக்க
மாட்டாரு மனுஷன். காலைச்சாப்பாட்டை அறவே தவிர்த்து டீயும் பிஸ்கட்டும்
மட்டும்தான் அப்பா சாப்பிடுவாரு. இப்ப இந்த மருத்துவம் நடப்பதால
காலையில் மருந்து சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்க டீ பிஸ்கட்
சாப்பிட்டே மருந்து சாப்பிடறென்னு சொல்லிகிட்டு இருந்தவரை திட்டி,
ஒரு வழியா காலையில் ரெண்டி இட்லி அல்லது ரெண்டு தோசை,
அல்லது கொஞ்சம் ஓட்ஸ் உப்புமா சாப்பிட வெச்சிட்டேன். :))))))))))))
வெச்சிட்டேன்னு சொல்லி ஸ்மைலி போட்டாலும் அதுக்கு நான் பட்ட
கஷ்டம்,ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பபாஆஆஆஆஆஆஆஆ ரகம்தான்.
இதுல பேத்தியின் பங்கும் இருக்கு. :)


ஆனா ஒரு விஷயம் என்னுடைய எண்ட் டாக்டர் கரெக்டா தான் சொன்னாரு.
அம்மாவுக்கு 180 இருந்தது பீபி. ஆனா தலை சுற்றல், மயக்கம் ஏதுமில்லை.
அப்பாவுக்கு அதே அளவுதான் ஆனால் அதுவே அவருக்கு பிரச்சனையாகிடிச்சு.

அப்ப டாக்டர் சொன்னது இதுதான்.”லேடிஸ் சும்மா இருக்க மாட்டாங்க. வீட்டு
வேலை ஏதும் செஞ்சுகிட்டே இருப்பாங்க. உடல் உழைப்பு அவங்களுக்கு அதிகம்.
ஆனா நாம் ஆண்கள் அப்படி இல்ல. வேலையில் மெண்டல் டென்ஷன் இருப்பதால்
நாம அதிகமா வேலை செய்வது போல நினைக்கிறோம். உண்மையில் நம்ம உடம்பு
உழைப்பே இல்லாமத்தான் இருக்கு. ரிடையர் ஆனவுங்க டீவி சீரியல்னு இருக்க
ஆரம்பிச்சிட உடம்பு மக்கர் செய்யுது.” உண்மை. உடல் உழைப்பு ரொம்ப அவசியம்.
ஏதாவது ஒரு உடற்பயிற்சி கண்டிப்பா அவசியம். வீட்டு வேலைதான் செய்றோமேன்னு
பெண்களும் அலட்சியமா இருந்திடக்கூடாது.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ அதை செய்து முடிக்கணும்னு எனும்
ஒரு பரபரப்பு, டென்ஷனோடவே வேலை செய்வோம். உடற்பயிற்சி அந்த ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடு படும் ஒரு மார்க்கம். யோகா, நடைப்பயிற்சி உடம்புக்கு,
மனதிற்கு மெடிட்டேஷன். இது ரெண்டும் கண்டிப்பா தேவை.

இம்புட்டு நாள் இப்படித்தான் பிசியா ஓடிக்கிட்டு இருந்தேன். போன வாரமே
அம்மா அப்பா ஊருக்கு போயிட்டாலும் நம்ம லோ பீபி என்னை படுக்க
வெச்சிருச்சு. :) நல்லா ரெஸ்ட் எடுத்து வந்திருக்கேன். நீங்களும் உங்க
உடம்பு சொல்வதை கவனிச்சு கேளுங்க. அதற்கு தேவையானத செய்யுங்க.

உயிர் இருக்கும் வரை நம்ம உடம்பும் நல்லா இருக்கணும்ல!!!