Monday, October 01, 2012

ஆடி கழிச்ச அஞ்சா நாள்.....

ஆடி கழிச்ச அஞ்சா நாள் இல்ல, அதுக்கும் மேலயே ஆயிடிச்சு. :)) விநாயக சதுர்த்தி பதிவுதான். நம்ம கணிணிக்கு சீக்கு வந்திடிச்சு. இப்பதான் சரியாச்சு. விநாயக சதுர்த்தியும் கெளரி பூஜையும் சிறப்பா நடந்துச்சு. முதல்நாளே தேங்காய்பூரணம் செஞ்சு பொறிச்சாச்சு. மைதாமாவு மேல்மாவு. சின்ன சின்ன பூரிகளா தேய்க்காம இப்படி பெருசா செஞ்சு,
கிண்ணத்தை வெச்சு அழுத்தினேன். சின்ன பூரி ரெடி.
அதில் பூரணம் நடுவில் வெச்சு பொறிச்சுக்கிட்டேன்.
அடுத்த நாள் பிரசாதங்களில் முக்கியமா கொழுக்கட்டைகள் தான். கெளரிக்காக பருப்பு பூரணம் செய்யணும். பிள்ளையாருக்கு தேங்காய் பூரணம் ரெடி. தவிர எள்ளு, உளுந்து பூரணம், வடை எல்லாம் செய்யணும். போன வாட்டி மும்பை போயிருந்தப்ப அமைதிச்சாரல் பதிவுல படிச்ச ஞாபகத்துல ஞாபகமா மோதகம் மோல்ட் வாங்கியாந்தேன்.
மும்பையில் பிள்ளையார் சதுர்த்தி சமயங்களில் பேடாவில் மோதகம் கிடைக்கும். ஆனா இங்க கிடைக்கலை. அதுக்காக விட்டுட முடியுமா!!! கேசர் பேடா வாங்கியாந்து அதை மோல்டில் வெச்சு பேடா மோதகமும் ரெடி!!
மற்ற மோதகங்களை செப்பு செஞ்சு அதுக்குள்ள பூரணம் வெச்சு மூடினாத்தான் உண்டு. ஏரோப்ளேன் (அதான் உளுந்து பூரணம்)செய்வதற்குள்ள தோள்பட்டை செம வலி. கொஞ்சமாக எள்ளு பூரணம் மோதகம் செஞ்சேன். பருப்பு பூரணத்துக்கு கொஞ்சம் மேல்மாவு எடுத்து வெச்சிட்டு மீதம் இருக்கும் மேல்மாவில் உளுந்து பூரணம், உப்பு, கொஞ்சம் சாம்பார் பொடி போட்டு கலந்து காரக்கொழுக்கட்டை செஞ்சேன். அம்மணிக்கொழுக்கட்டைன்னு சொல்லப்படும் இந்த கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல செம டிமாண்ட் இருக்கும். பருப்பு பூரணத்தை நானும் என் பொண்ணுமா சேர்ந்து செஞ்சோம். எப்படி பாருங்களேன்!!  மேல்மாவை உருண்டை செஞ்சு நடுவில்
பூரணத்தை அம்ருதம்மா வெச்சுக்கொடுக்க, அதை மோல்டில் வெச்சு மூடினால் கொழுக்கட்டை ரெடி....

கைவலி இல்லாம ஒவ்வொரு செப்பா செஞ்சுகிட்டு இருக்காம ஈசியா
வேலை முடிஞ்சிருச்சு.

 மோல்ட்  ஐடியா கொடுத்த அமைதிச்சாரலுக்கு நன்றி :)

 முதல்நாளே கெளரி பூஜை செய்யணும். ஆனா இந்த வாட்டி முடியலை. அதனால விநாயக சதுர்த்தி அன்னைக்கு காலையில் முதல் பூஜை கெளரி. மஞ்சளில் மின்னும் கெளரி.
கணபதியும் ரெடியாகிட்டார்...
அம்மாவும் மகனும் அழகா கொலுவிருக்காங்க!!
எங்க அப்பார்ட்மெண்டிலும் இந்த வருஷம் விநாயகசதுர்த்தி செஞ்சோம். 5ஆம் நாள் தெருவே அதிரும் படி தாளம் தட்டி, உரி அடிச்சு வழி அனுப்பி வெச்சோம். 5 நாளும் ஒவ்வொத்தங்க வீட்டிலேர்ந்து சாப்பாடுன்னு செம கலக்கலா இருந்தது அப்பார்ட்மெண்ட்.