Wednesday, June 16, 2010

என் இடத்தில் நீ இருந்தால்!!!!

ஒரு திரைப்படத்தை அல்லது நாடகத்தை மிகவும் ரசித்து
பார்க்கிறோம். சில சமயம் அந்த நாயகன் நாயகிக்கு அந்த
கேரக்டரே பேராக அமையும் அளவிற்கு மிகச் சிறந்த
நடிப்பாக இருக்கும். ”சிவாஜி” கணேசன் என்று சொன்னாலே
கம்பீரமான நடிப்பு, கர்ஜிக்கும் குரல் எல்லாம் நினைவுக்கு
வரும். வெறும் கணேசன் என்று போட்டால் ஜெமினி கணேசனா
யாரு? என குழப்பம் ஏற்படும்.

ஒரு குறிப்பிட்ட நடிகர் தனது கதாபாத்திரத்துடன் ஒன்றி
சிறப்பாக நடித்தால்தான் முழுமை பெறும். போலீஸ்
என்று சொன்னாலே தங்கபதக்கம் சிவாஜி என்று அந்தக்கால
ரசிகர்களும் காக்க காக்க சூர்யா என இந்தக்கால ரசிகர்களும்
போற்றும் அளவுக்கு அந்த பாத்திரத்துடன் ஒன்றி உடலை
ஏற்றி, மெருகு கூட்டி நடித்திருப்பது புரியும்.

எத்தனையோ பேர் போலிஸாக நடித்திருந்தாலும் சிலரே
அந்தப் பாத்திரத்துக்கு பொருந்துவதன் காரணம் சில
எக்ஸ்ட்ரா மெனக்கெடல்கள். இதை ஆங்கிலத்தில்
method acting என்பார்கள். வில்லனாக நடிப்பது
எவ்வளவு கஷ்டம் என்பது அந்த பாத்திரங்களைச்
செய்தவர்களுக்குத்தான் தெரியும்.

அலுவலகத்திலோ, வீட்டிலோ பிரச்சனை ஏதும்
ஏற்பட்டால் உடனே வாயிலிருந்து வரும் டயலாக்
“என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்!” இது
சத்தியமான உண்மை. தலைவலியும் திருகுவலியும்
தனக்கு வந்தால்தான் புரியும் என்று பெரியவர்கள்
சொல்வார்கள். அனுபவம் தான் சரியான ஆசான்.

வாதம் விவாதமாகி பெரிய பிரச்சனையாகிடகாரணம்
பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் போவதே.
இது எந்த வித பிரச்சனையாகவும் இருக்கலாம்.
கோர்ட்டில் வாதிடும் போது வாதி, பிரதிவாதி என
குற்றம் சாற்றுபவர், குற்றம் சாற்றப்பட்டவர் என
இரண்டு பக்கமும் வக்கீல்கள் பேசுவார்கள். அன்றாடம்
நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் வக்கீல் வைத்துக்
கொண்டிருக்க முடியாது.

mono acting என்று ஒருவகை நடிப்பு உண்டு. இதில்
கூட யாரும் நடிக்க மாட்டார்கள். ஒருவரே வேறு
சில கதாபாத்திரமாகவும் நடிப்பார். மிகச்சிறந்த நடிப்பின்
வெளிப்பாடாக இது இருக்கும். இதே போல மற்றவரின்
இடத்தில் நாம் இருந்தால் நமது ரியாக்‌ஷன் எப்படி இருந்திருக்கும்
என ஒரு கணம் நம்மை அந்த தருணத்தில், இடத்தில்
நிறுத்தி வைத்துப்பார்த்தால் நிலமையின் தீவிரம் புரியும்.


ஆங்கிலத்தில் இதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

Always put yourself in others' shoes.
If you feel that it hurts you,
it probably hurts the other person, too.

ஆம் அடுத்தவரின் பக்க நியாயத்தை அறிய இதை விட
சிறந்த வழி இருக்காது.

25 வயதில் தந்தையைக் கண்டால் மகனுக்கு பிடிக்காது.
அம்ஜத்கானாகத்தான் தெரிவார். அந்த மகனுக்கும்
திருமணமாகி குழந்தை பிறந்து வளரும் பொழுது
தகப்பனாக தன்னை உணர ஆரம்பிக்கும் பொழுது
தன் தந்தையை மிகவும் நேசிக்கத் துவங்கி விடுவார்.
( மகன் உணர்ந்ததை அறிய முடியாத தூரத்துக்கு
தந்தை போயிருக்கக்கூடும்!!)


அம்மா என்பவள் ட்ரில் மாஸ்டர் போல் வீட்டில்
வேலை வாங்குகிறாள், கத்துகிறாள் என்றே
மகள் தந்தையின் துணையோடு அன்னையிடம்
அன்னியப்பட்டு போகிறாள். அவளும் தாயாகும்
பொழுதுதான் அன்னையாக இருப்பதன் கஷ்ட
நஷ்டங்கள் புரிய ஆரம்பிக்கும்.

தனக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை,
தனது கம்பெனி சரியில்லை, உயரதிகாரி
சரியில்லை என வருந்துபவர்கள் ஒரு கணம்
தன்னை அந்த உயரதிகாரியாகவும் தனக்கு
கீழ் ஒருவர் தன்னைப்போல(ஒரிஜனலாக)
வேலை செய்தால் எப்படி இருந்திருக்கும்
என கற்பனை செய்து பார்த்தால் தன் பக்கம்
இருக்கும் தவறு புரியும். தான் வாடிக்கையாளர்களிடமும்,
அலுவலக நண்பர்களிடமும் எப்படி நடந்துக்கொண்டிருக்கிறோம்
என்று தெளிவாகத் தெரியும். மாற்றம் எங்கேத்
தேவை என்பது வெளிச்சமாகும்.


கணவன் மனைவிக்குள் பலவித கருத்து
மோதல்கள் ஏற்படக் காரணமும் இத்தகைய
ஒரு உணர்தல் இல்லாத காரணமே. ஆண்
தனது கோணத்திலிருந்து மட்டுமே பார்த்து
தான் செய்வது நியாயம் என்று கூற பெண்ணும்
அதையே செய்யும் பொழுது நிலமைத் தீவிரமாகிறது.

இப்போது காலம் மாறிவிட்டது. பெண்கள் வீட்டுக்குள்ளேயே
அடங்கி கிடப்பதில்லை. உத்யோகம் புருஷ லட்சணம் என்று
ஆண்கள் மட்டும் வேலைக்கு போவது போய் இப்போது
இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூடவே சம்பாதிக்கிறார்கள்.

அதனால் இது ஆண் செய்யும் வேலை, பெண் செய்யும்
வேலை என்று ஏதும் தனியாக இருப்பதில்லை. ஆனால்
பல குடும்பங்களில் பிரச்சனை வெடிக்கத்தான் செய்கிறது.
சில நிமிஷம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து
அடுத்தவரின் இடத்தில் தன்னை நிறுத்திப்பார்த்தால்
தவறு எங்கே என்று புரிந்து விடும். திருத்திக்கொள்ள
முடியும். விளையாட்டாக கூட இதைச் செய்து பார்க்கலாம்
கணவன் மனைவியா, மனைவி கணவனாக அவரவர்
செய்யும் வேலையை மாற்றி செய்து பார்த்தால் புரியும்.


வேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும்
பெண்கள் எந்த விதத்திலும் குறைவில்லாதவர்கள் என்பதும்
வீட்டில் இருக்கும் பெண் இடத்தில் இருந்து பார்த்தால்தானே
புரியும்!!

Step into someone else's shoes to understand better
என்று உளவியாளலர்கள் சொல்கிறார்கள். செய்து பார்ப்போமா!??!!




26 comments:

  1. Step into someone else's shoes to understand better/
    Rightly said!

    ReplyDelete
  2. எப்போதுமே

    'என்' இடத்தில் 'நீ' இருந்தால்ன்னு தான் யோசிக்கிறோம்

    'உன்' இடத்தில் 'நான்' இருந்தால்ன்னு யோசிப்போமே

    நல்ல இடுக்கை ...

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி அருணா

    ReplyDelete
  4. 'உன்' இடத்தில் 'நான்' இருந்தால்ன்னு யோசிப்போமே//

    ஆமாம் அழகா சொல்லியிருக்கீங்க

    ReplyDelete
  5. ஓவர் அட்வைஸாக இருக்கிறதே.. ஹிஹி.. (நல்ல அட்வைஸ்தான் நமக்கு புடிக்காதே)

    ReplyDelete
  6. இன்றுதான் அம்மாவைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் எப்பவும் எனக்குக் கொடுக்கும் அட்வைஸ் இதுதான். அவர்கள் நிலைமையை யோசித்துப் பார்த்தியா. எப்பவும் உன்னையே யோசித்தால் எப்படி என்பார்கள். கசப்பாக இருக்கும்.
    இப்போது அநேகமாக எல்லாம் புரிவது போலத் தோன்றுகிறது.

    நல்ல இடுகைப்பா தென்றல்.

    ReplyDelete
  7. "வேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும்
    பெண்கள் எந்த விதத்திலும் குறைவில்லாதவர்கள்" என்மனைவியை மேலும் நேசிக்க வைத்துவிட்டீர்கள் நன்றி தோழி .

    ReplyDelete
  8. செய்துட்டா போச்சு...அவசியமான பதிவு..

    ReplyDelete
  9. ஆனா, எங்க வீட்ல தங்கமணி ஷூ என் காலுக்கு பொருந்தாதே, அப்புறம் எப்படி அவுங்க ஷூவை நான் போடறது????

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்.
    :)

    ReplyDelete
  11. நன்றி வல்லிம்மா,

    எனக்கு அம்மம்மா சொல்லிக்கொடுத்தது இது. வருகைக்கு நன்றிம்மா

    ReplyDelete
  12. வாங்க ARAN,
    என்னோட ப்ளாக்குகளில் இருக்கும் லேபிலில் ஹோம்மேக்கர்னு இரண்டு பதிவு இருக்கு. அதையும் படிங்க. இன்னும் நேசிப்பீங்க.

    முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி அமுதா

    ReplyDelete
  14. வாங்க அண்ணன்,

    உங்க காலுக்கு அவங்க சைஸ் நுலையன்னாலும் நுழைக்க முயற்சி செஞ்சு பார்த்தாலே வலியும் வேதனையும் ஆட்டோமேடிக்கா புரியும்.

    ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீக. தாங்க்ஸ்

    ReplyDelete
  15. வாஸ்தவம் தான்! காலை எழுந்து என் மனைவி இரண்டு குழந்தகளையும் பள்ளிக்கு அனுப்புவதுக்குள் மதிய சமையலையும், காலை சமையலையும் ஒரு சேர முடித்து, குளிப்பாட்டி, தானும் குளித்து,ஷூ எல்லாம் போட்டு விட்டு(உலகம் முழுக்க ஏன் ஒரு கால் சாக்ஸ் மட்டும் காணாம போகுதோ)....அது வரை நான் ஹாயாக பேப்பர் பார்த்து, சுடேகு போட்டு அது புதன், வியாழனாக இருந்தால் சிரமப்பட்டு போட்டு அது சரியா வராட்டி சுடோகு கண்டு பிடித்த ஜப்பான் காரனை ஒரு கத்து கத்துவேன், அதோட என் மனைவிகிட்ட "நீ ஒரு நாள் என் நிலமையில் இருந்து பார்..இந்த சுடோகு போட்டு பார் அப்ப தெரியும்"ன்னு கத்துவேனே...லைட்டா இப்ப புரியுது ஒரே ஒரு நாள் நான் சாக்ஸ் தேடினால் என் நிலமை என்ன என்பது! குட் நல்லா எழுதியிருக்கீங்கப்பா!

    ReplyDelete
  16. வீட்டுல இருக்கறவங்களுக்குதான் வேலை அதிகம். அதான் வீட்டுல இருக்கியேன்னு எல்லா வேலையும் தேடி வரும்.

    ReplyDelete
  17. அருமையான இடுகை. எதையும் அடுத்தவங்க நிலையிலிருந்து யோசிச்சால்தான் அவங்க பக்க நியாயம் புரியும். சரியா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  18. /method acting/

    புது வார்த்தை தெரிந்துகொண்டேன்.

    /வில்லனாக நடிப்பது
    எவ்வளவு கஷ்டம் என்பது//

    உண்மைங்க.

    எல்லாமே ரொம்பச் சரியான வாக்குகள். நல்ல உதாரணங்கள், அழகான நடை!!

    ReplyDelete
  19. வாங்க அபி அப்பா,

    புரிஞ்சது ரொம்ப சந்தோஷம். வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி

    ReplyDelete
  20. அதான் வீட்டுல இருக்கியேன்னு எல்லா வேலையும் தேடி வரும்.//

    ஆமாம்பா நான் வீட்டுல சும்மாதான் இருக்கேன் அப்படின்னு சொல்லத்தான் ஆசை. ஆனா 24 * 7 வேலை எப்படியும் இருக்கு. :)

    வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  21. நன்றி அமைதிச்சாரல்

    ReplyDelete
  22. எல்லாமே ரொம்பச் சரியான வாக்குகள். நல்ல உதாரணங்கள், அழகான நடை!!//

    நன்றி ஹுசைனம்மா

    ReplyDelete
  23. இன்னொரு ஷூல நம்ம காலை நுழைக்கிறது இருக்கட்டும் நம்ம ஷூல அவங்க காலை தினிச்சி காமிக்கலாம்னு சில சமயம் கொலவெறி வருதே என்ன செய்ய??

    :))

    /
    ஓவர் அட்வைஸாக இருக்கிறதே.. ஹிஹி.. (நல்ல அட்வைஸ்தான் நமக்கு புடிக்காதே)
    /

    ஆதி உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  24. //Step into someone else's shoes to understand better
    என்று உளவியாளலர்கள் சொல்கிறார்கள். செய்து பார்ப்போமா!??!!//

    நிச்சியமா... நல்ல பதிவுங்க

    அப்போ கோர்ட் போலீஸ் எல்லாமும் இல்லாமையே போயிடுமோ

    ReplyDelete
  25. வருகைக்கு நன்றி சிவா

    ReplyDelete
  26. அப்போ கோர்ட் போலீஸ் எல்லாமும் இல்லாமையே போயிடுமோ//

    சாத்தியமானா எம்புட்டு நல்லா இருக்கும்!!

    வருகைக்கு நன்றி புவனா

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று