Total Pageviews

Sunday, March 11, 2012

புதுமையாய்.... அணிந்து கொள்ள பெருமையாய்!!!!!

பட்டுப்பூச்சிக்களை கொன்று தயாரிக்கப்படுவதாலேயே பலர் பட்டைத்
தவிர்த்து வருகிறார்கள். கத்வால், வெங்கடகிரி,மங்களிகிரி மற்றும்
பாலியஸ்டர் சில்க் புடவைகளை அணிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.



பட்டுப்பூச்சிக்களை கொல்லாமல் அதாவது அந்தப் புழுக்களை ஹிம்சை
செய்து பட்டுநூல் எடுக்காமல், கூட்டைவிட்டு செல்லும் வரை காத்திருந்து
அந்த கூட்டிலிருந்து பட்டுநூல் எடுத்து தயாரிப்பது அஹிம்சா பட்டு.

இந்தியாவில் பெனாரஸ்,ஜார்க்கண்ட், முஷிராபாத், ஆந்திரா,
கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்த வகையில் பட்டு
தயாரிக்கிறார்கள்.


காந்தியக்கொள்கையை கொண்ட குசும ராஜய்யா எனும் ஹைதரபாத் வாசி
அஹிம்சா பட்டுத்துணி தயாரிப்பதை தனது தொழிலாக கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களின் துணைவியார்
திருமதி.ஜானகி வெங்கட்ராமன் அவர்கள் குசும ராஜய்யா அவர்களிடம்
பட்டுப்புழுக்களை கொல்லாமல் தயாரித்த புடவை ஏதும் இருக்கிறதா?
என கேட்டப்பொழுது அவர் யோசித்து இந்த வழியில் தயாரிக்க
ஆரம்பித்திருக்கிறாராம்.


இவரது மேற்பார்வையில் நல்கொண்டா மற்றும் அனந்தபூரின்
நெசவாளர்கள் அஹிம்சா வேட்டிகள் மற்றும் சில துணிகளைத்
தயாரிக்க கரீம்நகர் நெசவாளர்களின் அருமையான வேலைப்பாடுகளுடன்
புடவைகள் தயாராகின்றன. முழுதும் கைத்தறி நெசவுதான் என
பெருமையுடன் சொல்கிறார் குசும ராஜய்யா.

அஹிம்சா சில்க்கில் அந்த பளபளப்பு இருக்காது என்றாலும் பூச்சிக்களைக்
கொன்று தயாரித்த புடவை என்ற உறுத்தல் இல்லாமல் மனம் மகிழ்ந்து
அதனால் முகம் பளபளப்பாகலாம்.


பல பெரிய பெரிய கடைகளில் இது அஹிம்சா பட்டுத்தான் என
சொல்லி ஏமாற்றிவிடுகிறார்கள் அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

பலர் பட்டை ஏன் தவிர்க்கிறார்கள்?

காஞ்சி காமகோடி மஹாபெரியவர் சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி
ஸ்வாமிகள் தன்னிடம் தனது பெண்ணின் திருமணத்திற்கு
வாங்கியிருக்கும் பட்டுப்புடவையை ஆசிர்வதித்து தருமாறு
கேட்பவர்களிடம் மறுத்துவிடுவாராம். ஏன் என்று கேட்டதற்கு.
இந்த புடவை தயாராக எத்தனை புழுக்களைக் கொன்று
தயாரிக்கிறார்கள்?

உன்னதமான திருமணத்தில், வாழ்க்கையின் ஆரம்பத்தன்று
இந்த உயிர்வதை செய்யப்பட்ட புடவை அணிவதில் என்ன சுகம்
என்பது? அவரது கேள்வி.

இதை நியாயம் என நினைப்பவர்கள் இதை ஒரு கொள்கையாக
ஏற்று பட்டை தவிர்க்கிறார்கள். பெண்ணிற்கு திருமணம் என்றால்
பெற்றோர் பயப்படுவது வரதட்சணை, சீர் ஆகியவைதான். அதனால்தான்
பெண்சிசுக்கொலை ஏற்பட்டது. திருமணத்தின் போது மணமகள்
வீட்டாரைக் கசக்கி பிழியாமல் ஆண்கள் வரதட்சணை வாங்கமாட்டோம்!
எனும் கொள்கையை ஏற்றுக்கொள்வது சமூகத்திற்கு நல்லது என்பதும்
அவரது ஆசிர்வாதம்.


வேண்டுகோள்:

சென்னையில் உஷா ரகுநாதன் என்பவர் பெரியவரின் பேச்சினில்
ஏற்பட்ட மாற்றமாய் அஹிம்சா பட்டு தயார் செய்து விற்கிறார் என
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கட்டுரை இருக்கிறது.
மற்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. அவரது கடையின்
பெயர் ஊர்வஷி என்று மட்டும் சொல்லியிருக்கிறார். விவரங்கள்
யாரும் தேடி கொடுத்தால் உதவியாய் இருக்கும்.