Showing posts with label பிள்ளை வளர்ப்பு. Show all posts
Showing posts with label பிள்ளை வளர்ப்பு. Show all posts

Thursday, November 17, 2011

பக்கத்து வீட்டு “பரு”வ மச்சான்!!!

பிள்ளை வளர்ப்பில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு ரகமாக பிரச்சனைகள்
அதான் உடல் உபாதைகள் வரும். பதின்ம வயதில் ரொம்ப முக்கியமானது
“பரு”. இது பெண்குழந்தைக்கு மட்டுமில்லாது ஆண்குழந்தைகளுக்கும் வரும்.

அதுவரை உலர்ந்த சருமமாக இருந்த குழந்தைக்கு அடலஸன்ஸ் வயதில்
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் பருவை வரவழைக்கிறது.
இதே ஹார்மோன் மாற்றங்களால் வேறு சில பிரச்சனைகளும் வருகிறது,

அடலசன்ஸ் வயதில் குழந்தைகளை ஆரோக்கியமாகவும் அதே சமயம்
சுகாதாரமாகவும் இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இந்த வயதில்
வியர்வை துர் நாற்றம், வாய் துர்நாற்றம் எல்லாம் தலை எடுக்கும்.
இவற்றிற்கு நல்லதொரு சரும மருத்துவ நிபுணரை தொடர்பு கொள்வது
அவசியம். இதெல்லாம் இந்த வயசுல சகஜம் தான் என்று சொல்லி
தீர்வு காணாமல் விட்டால் ரொம்ப கஷ்டம்.

வாரம் இரு முறை முடிந்தால் ஒரு நாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது
பொடுகை தூரத்தில் வைக்கும். வாரத்திற்கு ஒரு முறை ஹாட் ஆயில்
மசாஜ் வீட்டிலேயே செய்விக்கலாம். சூடான எண்ணெய் மசாஜ் கொடுத்து
ஸ்டீமரால் மயிர்கால்களுக்கு ஆவி கொடுத்து, 30 நிமிடம் கழித்து
நல்ல தரமான ஷாம்பு அல்லது சிகைக்காய் போட்டு கழுவ வேண்டும்.
முக்கியமாக கண்டீஷனர் உபயோகிக்க தவறக்கூடாது. கண்டீஷனர்
உபயோகிக்கும் பொழுது மயிர்க்கால்களில் படாமல் கூந்தல் மேல்
மட்டும் படும்படி தடவி 10 நிமிடங்கள் ஊறி பின் அலசுவதனால்
கூந்தல் பராமரிக்க ஈசியாக இருக்கும்.

சில குழந்தைகளுக்கு ஹார்மோன் மாற்றத்தால் நிறம் மங்க ஆரம்பிக்கும்.
டேனிங் என்பார்கள். நீச்சல் பழகும் பிள்ளைகளுக்கு உடல் நிறம்
மாறுவதுபோல இருக்கும். இதற்கு வீட்டில் தயிரில் கடலைமாவு,
எலுமிச்சை ரசம் சேர்ந்து கலந்து உடல் முழுதும் தடவி ஊறவிட்டு
குளித்தால்மாற்றம் தெரியும். பெண் குழந்தைகள் ஸ்நானப்பவுடர்
தயாரித்து அதை உபயோகிக்கலாம். இங்கே ஆந்திராவில் நலுகுபொடி
என்று கிடைக்கும். அதில் வேப்பிலை எல்லாம் சேர்த்து தயாரிப்பார்கள்.
நம் ஊரில் ஆண்டாள் ஸ்நானப்பவுடர் கிடைக்கும். அத்துடன் கொஞ்சம்
கடலை மாவு கலந்து உபயோகிக்கலாம்.

பரு விஷயத்துக்கு வருவோம். அழகான முகத்தில் இந்த பரு ஒரு
வடுவையே தந்து விடும். பரு, பால் உண்ணி எல்லா வற்றிற்கும்
சிறந்த தோல் மருத்துவ நிபுணரிடம் அழைத்துச்செல்வது மிக முக்கியம்.

பரு என்றாலே நாம் உடன் கடைக்கு ஓடி கிளியரிசல் வாங்கி வருவோம்.
அதானெல்லாம் சரியாகாது. ஒரு வகை பேக்டேரியாவால் உருவாவதுதான்
பரு. (பொடுகு கூட அப்படித்தான்) சரும நிபுணர் அதற்கு சில மாத்திரை
கொடுத்து நல்ல ஃபேஸ்வாஷ் (மெடிகேடட்) க்ரீம் கொடுப்பார்.

நம் முகத்தில் நமக்குத் தெரியாமல் கிருமிகள் இருக்கும். வெளியே
சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் ஹேண்ட்வாஷால் கைகளை
கழுவிய பிறகு தரமான ஃபேஸ்வாஷ் கொண்டு முகம் கழுவுவது
அவசியம்.

எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்கள் 4 முறை கூட கழுவலாம்.
பருவை எந்தக்காரணம் கொண்டும் கையால் கிள்ளிவிடக்கூடாது.
இது பேக்டேரியாவை பரப்பிவிடும்.

பரு தழும்பு போக முள்ளங்கி ரசத்தை தடவுவது, பூண்டு ரசம்
தடவுவது எல்லாம் கூடாது. சிலர் நான் இப்படி செய்தேன் என்பார்கள்.
உண்மையில் இந்தப் பொருட்களில் இருக்கும் காரம் முகத்தை
பதம் பார்த்து பரு தழும்பை நீங்காமல் செய்துவிடும்.

10 நாளைக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்து கொள்வது அவசியம்.
க்ளன்சிங் மில்க் கொண்டு முகத்தை துடைத்து, ஃபேஸ்வாஷால்
கழுவி, ஸ்க்ரப் செய்யாமல், முகத்தை கொஞ்சம் தூரமாக வைத்துக்
கொண்டு ஆவி பிடித்து, முல்தானி மட்டி அல்லது துளசி பேக்
அல்லது நீம் பேக் போட்டுக்கொண்டால் பருவினால் அதிகம்
தொல்லை இல்லாமல் இருக்கும்.

பருவுக்கு ஆண்/பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.
அதனால் ட்ரீட்மெண்ட் இருபாலரும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள
வேண்டும். வீட்டுக்குறிப்புக்களுடன் முறையான மருத்துவ
பரிசீலனையும் அவசியம்.

முகம் நம் அகம் காட்டும் கண்ணாடி. “இந்த வயசுல படிப்புல
மட்டும் கவனம் செலுத்தினா போதும். அலங்காரம் வேண்டாம்”!!
என்று சொல்லாமல் தேவையான உதவிகளை பிள்ளைக்கு
செய்து கொடுப்பதால் குழந்தை தன்னம்பிக்கையுடன் வாழும்.






Thursday, June 17, 2010

பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!!

என் பையன் சோறு சாப்பிடணும்னா போகோ, சுட்டி டீவி இருந்தா
போதும்!

என் பொண்ணு வந்ததும் டீவி முன்னாடி உக்கார ஆரம்பிச்சான்னா
பொழுது போவதே தெரியாது. எனக்கும் வேலை செய்ய வசதி!!

இப்படி சொல்லும் வகை பெற்றோரா! உங்கள் குழந்தை அதிக
நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருக்கிறதா அப்படி என்றால்
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

ADD - ATTENTION DEFICIT DISORDER
அதாவது கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு
ஏற்பட்டு கவனக்குறைவு, குழப்பமான மனநிலை
ஆகியவற்றை உருவாக்கும். சில சமயம்
அதீதமாக ஆக்டிவாக இருப்பதும்,(hyperactive)
முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது(impulsive behaviour)
போன்ற குறைபாடுகளும் இருக்கும்.

இந்த ADD உளவியல் ரீதியான குறைபாடு. இது தற்போது
பல பிள்ளைகளையும் தாக்குகிறது. ஆனால் இது தான்
என்று புரியாமலேயே பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

முறையான வைத்தியம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு
பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள்,
சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை
கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும்
நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால்
பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும்
இந்த மனோபாவம் தொடரும் என்பதுதான் உளவியாளர்கள்
அடிக்கும் எச்சரிக்கை மணி.

பரம்பரை ரீதியாகவும் இந்தக் குறைபாடு வருவதற்கு
சாத்தியம் இருக்கிறது
நாம் உண்ணும் உணவில் கலக்கப்படும் சில கலர்கள்,
உண்ணும் உணவு, மாசு பட்டுக்கிடக்கும் சுற்றுபுறச்சூழல்
ஆகியவையும் இந்தக் குறைபாட்டுக்கு காரணமாக
இருக்கக்கூடும்.



பல வருடங்களாகச் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி
குழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி
பார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி
பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு
கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி
வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்
காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து
இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.

நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்
பார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான
மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்
போகிறது. இந்த மாதிரிover stimulation மோசமான
பழக்க வழக்கங்களைத் தந்து விடும். தொலைக்காட்சி
அதிகமாக பார்ப்பதால் புத்தகம் படித்தல், puzzles விளையாடுதல்,
குறுக்கெழுத்து எழுதுதல், போன்றவற்றை செய்ய விடாமல்
செய்து விடும். மேற் சொன்னவை மூளையை ஒருங்கிணைத்து
ஒரு முகப்படுத்தி செய்ய வேண்டிய வேலைகள்.

தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம்,
நொடிக்குநொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட
நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது பாதிப்பைத் தருகிறது.
வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட
இதே விளைவைத் தருகின்றன.

கண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை
நிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை
ஏற்காது! நிஜவாழ்வில் இத்தகைய வேக இல்லாத
பொழுது தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய
உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

ADD - ATTENTION DEFICIT DISORDER இதன் அறிகுறிக்கள்:

சீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,
சீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு
தாவுதல்.

ஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய
முடியாது.

ஒரு விளையாட்டோ செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது
சில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.

முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்
செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்
அதை செய்ய மாட்டார்கள்.

ஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து
முடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.

பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை
காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம்
பெற்றோருக்கு வரும்.

பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள்.
குழப்பமான மனநிலை.

இவற்றிற்கு முறையான மருத்துவ கவனம தேவை.
தகுந்த உளவியாலர் (psychiatrist) உதவி பெற்று
ஆவன செய்வது உடனடித் தேவை. மருந்து, psychotherapy,
ட்ரைனிங் ஆகியவற்றின் மூலம் இந்த குறைப்பாட்டின்
அறிகுறிகளை குறைக்க முயற்சி செய்யலாம்.


ஆசிரியரும் பெற்றோரும் கூட இதில் கலந்து
குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து
அதற்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும்.
வாழ்க்கை முறையை மாற்றியே ஆக வேண்டும்.
அதிகம் கலர் கலராக இருக்கும் உணவுகளை
எடுத்துக்கொள்ளக் கூடாது. பதப்படுத்தப்பட்ட
சக்கரையை குறைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்களை
அதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முறையான மனநலமருத்துவரைச் சந்தித்து
தேவையான உதவிகளை குழந்தைக்குச் செய்வதனால்
குழந்தையின் வளர்ச்சி, சாதரணமான, ஆரோக்கியமான
வாழ்க்கையை குழந்தைக்கு வழங்கலாம்.


Friday, May 14, 2010

பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு

எங்க உறவுக்கார அக்கா ஒருத்தரை ரொம்ப வருஷம்
கழிச்சு பாத்தேன். அவங்களுக்கு ஒரே பொண்ணு.
அந்த பொண்ணை 5 வயசு பாப்பாவா பாத்தது.
இப்ப அந்த செல்லம் காலேஜ் படிக்குது. ரொம்ப
நாள் கழிச்சு பாத்ததுல சந்தோஷமா பேசிக்கிட்டு
இருந்தோம். ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.

”எம் பொண்ணு எப்பவும் கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ்
காலேஜ் தான் கலா!! ஆம்பிளைங்களுடன் பேசவே
சான்ஸ் இல்ல! ரொம்ப ஸ்ட்ரிக்டா வளக்கிறேன்!”
அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஒரே யோசனை.
”ஏங்கா உங்க பொண்ணை வேலைக்கு அனுப்பணும்னு
சொல்றீங்க! அப்ப கூட ஆண்களே இல்லாத
இடத்துக்குத்தான் அனுப்புவீங்களான்னு??” கேட்டேன்.
அவங்களுக்கு ஒரு மாதிரி ஆகிடிச்சு. எனக்கு
அந்தப் பொண்ணை நினைச்சு மனசு ரொம்ப வருத்தம்.

அப்பாவைத் தவிர வேறு ஆண்மகனுடன் பழக்கமே இல்லை.
ஆண்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தெரியாமலேயே
போய்விடும். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனாலும்
கொஞ்சம் கஷ்டம் தான். ஆண் நட்பே இல்லாத
காரணத்தால் கணவனிடம் நட்பு ஏற்பட வாய்ப்பில்லை.
கணவன் - மனைவி உறவில் ஆரம்பம் நட்பாகத்தான்
இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான புரிதல்
ஏற்படும்.

இதை கொஞ்சம் விவரமா பாப்போம்.

ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எதிர்பாலினருடன்
தொடர்பே இருக்கக்கூடாது என பொத்தி பொத்தி
வளர்த்தால் அலுவலகத்தில் வீட்டில் பிரச்சனை
ஏற்பட சாத்தியங்கள் அதிகம்.

வீட்டில் ஒரே ஆண்குழந்தை என்று வைத்துக்கொள்வோம்.
உடன் விளையாட அக்கா, தங்கை இல்லாத பட்சத்தில்
அவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது.
பெண்ணின் பிரச்சனை தெரியாது, புரியாது. அவளின்
வருத்தங்கள் புரிந்துகொள்ள முடியாது. வெளியிலும்
அவனுக்கு நல்ல பெண் நட்பு (நட்பு மட்டுமே)
கிடைக்காத பொழுது சுத்தமாக பெண்வாசனையே
இல்லாமல் தன் தாயையை வைத்து மட்டுமே
பெண்களை எடை போடுவான்.

இப்படி பட்ட சூழ்நிலையில் வள்ர்ந்து
வேலைக்குச் செல்லும் பொழுது அங்கே சக
பணியாளராக பெண்ணோ, அல்லது உயரதிகாரியாக
பெண்ணோ இருந்தால் அந்த சூழ்நிலைக்கு தன்னை
அட்ஜஸ்ட் செய்து கொள்வது கஷ்டமாகிவிடும்.

இதேதான் பெண் குழந்தைகளுக்கும். எல்லோரும்
தன் தந்தையைபோல நல்லவர்/கெட்டவர் என்ற
முடிவுக்கு பெண் வந்துவிடுவாள். அதே கோணத்தில்
பார்த்து பார்த்து பிரச்சனை ஆகிவிடும். வேறு
விதமாக கூட ஆண்கள் இருப்பார்கள் என்று புரியாததற்கு
காரணம் ஆண்களிடம் பழக்கம் இல்லாமல் இருப்பது.
ஆண்களே சுற்றி இல்லாத சூழலில் வளர்ந்த
காரணத்தால் அலுவலகத்தில் தன்னை
பொறுத்திக்கொள்ள இயலாமல் போய்விடும்.
புகுந்த வீட்டில் கணவனைத்தவிர வேறு
ஆண்மகன்கள் இருந்தால் அவர்களுடன் சரியாக
பேசத்தெரியாமல் போய்விடும்.

நம் குடும்ப உறவுகள் தவிர வெளியாருடனும்
பழகத்தெரிவது அவசியம். மனிதர்களை படிக்க,
புரிந்து கொள்ள இது அவசியம்.

இதற்காக ஆண்களிடம் குழைந்து பேசி, மேலே
விழுந்து பழகச்சொல்வதாக நினைக்க வேண்டாம்.
ஆரோக்கியமான நட்பு இருபாலருக்கும் வேண்டும்.
அப்பொழுதுதான் எதிர் பாலினரை புரிந்து கொள்ள
முடியும். ”ஆண் பிள்ளைகளுடன் விளையாடினால்
காதறுந்து போகும்” என்று பயமுறுத்தியோ எங்கே
தன் மகள் காதல் வலையில் விழுந்துவிடுவாளோ
என்ற பயத்தினால் பொத்தி பொத்தி ஆண்வாசனையே
இல்லாமல் செய்வதனால் பெண்ணை காப்பாற்றுவதில்லை,
மாறாக அவளுடைய புரிதல் குணத்தை தடுத்து
நிறுத்துகிறோம்.

குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பொது இடத்தில் வாழ்வில்
அந்தப் பெண் ஆண்களை சந்தித்தாக வேண்டும்.
ஆண்களே இல்லாத உலகமோ, பெண்களே இல்லாத
உலகமோ சாத்தியப்படாத பொழுது சகஜமாக
பெண்/ஆண் குழந்தையை வளர்க்க வேண்டும்.

பொத்தி பொத்தி வளர்த்து அவர்களின் வாழ்க்கையை
கஷ்டமுள்ளதாக ஆக்க வேண்டாம். மலர்ந்து
நட்புக்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை
உருவாக்க கை கொடுப்போம்.