Showing posts with label திரும்பிபார்க்கிற. Show all posts
Showing posts with label திரும்பிபார்க்கிற. Show all posts

Sunday, August 13, 2023

திரும்பி பார்க்கிறேன் - பாகம் 1

வணக்கம் நட்புக்களே!!

நலம் நலமறிய ஆவல். ரொம்ப நாளாச்சு வலைப்பூவில் எழுதி.

இன்னும் சரியாக 29ஆவது நாளில்  என் 50ஆவது பிறந்த நாள். ரொம்ப நாளாகவே என் வாழ்க்கை பயணம் கதையாக எழுதவேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. நேரம் வாய்க்கவில்லை. 

என் சுய சரிதை பதியப்படவேண்டிய ஒன்றா என்ற தேவையில்லாத கேள்விகள் எல்லாம் இல்லை. கட்டாயம் பகிரப்பட வேண்டிய ஒன்றுதான் என எனக்கு நிச்சயமாக தெரியும். கடந்து வந்த பாதைகள் யாரேனும் ஒருவருக்கு நிச்சயம் உதவும். 

இந்த 29 நாளில் என் வாழ்வின் சில முக்கிய பகுதிகளை பதிந்து வைக்கப்போகிறேன்.

1993 ஆம் வருடம் எனது 20 ஆவது பிறந்தநாள் மும்பையில் கொண்டாடினேன். கொண்டாடினேன் என்றால் ரொம்ப சிறப்பாக அதாவது பெரிய அளவில் ஏதுமில்லை. வேலை தேடிக்கொண்டிருந்த தருணம். 
மும்பையில் இருக்கும் பெரிய மாமாவீட்டில் அம்மம்மா,தாத்தாவுடன
இருந்தேன். 

அன்று கூடுதல் மகிழ்ச்சி நாளெல்லாம் அம்மம்மாவுடன் இருக்கலாம் எனும் சந்தோஷம். (புதுகையிலிருந்து அம்மம்மா கிளம்பும் முன்னான சமயங்களில் அரை நாள், கால் நாள் தான் இருக்க கிடைக்கும்). அம்மம்மா கையால் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி புத்தாடை, பாயசம் சாயந்திரம் மாமா, அத்தை, மாமா மகள் மற்றும் அம்மம்மாவுடன் வசாயில் இருந்த ஐயப்பன் கோவில் தரிசனம். 

அதற்கு அடுத்தநாள் சந்தித்த மாமாவிற்கு தெரிந்தவர் மூலம் மும்பையில் பாம்பே சமாச்சார் மார்கில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது.

எடுத்த உடன் 20ஆவது பிறந்த நாள் ஏன்? 

அதற்கு முன் அவ்வளவு சுவாரசியம் ஏதுமில்லை. மறந்து விட முயன்று கொண்டிருக்கும் தேவையில்லாத ஆணிகள் அதிகம் அதைப் பகிர்ந்து என்ன ஆகப்போகிறது. :))

ஆக என் வாழ்வில் பொன் எழுதுக்களால் பொறிக்கப்படவேண்டிய தருணங்கள் என நான் நினைக்கும் மும்பை நாட்களுடன் என் திரும்பி பார்க்கிறேனை ஆரம்பித்திருக்கிறேன்.

இதுதான் எழுத வேண்டும் என்ற திட்டமிடல் ஏதுமில்லை. பதியும் நேரம் மனதில் என்ன எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அதைப்பகிர போகிறேன். அசை போடப்போகும் தருணங்கள் மகிழ்ச்சியானதா? வலியின் அளவுகோல் எங்கே இருக்கும் எனத்தெரியாது. 

ஆனால் என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்கு  எப்பொழுதும் போல் சுவாரசியமானதாக தான் இருக்கும்.

என்றும் ப்ரியங்களுடன்
புதுகைத்தென்றல்
13/8/23