Showing posts with label கொசுவத்தி. Show all posts
Showing posts with label கொசுவத்தி. Show all posts

Monday, November 30, 2015

மழைக்கால கொசுவத்தி

இந்த முறை மழை ரொம்ப அதிகமா பெய்ஞ்சு பாதிப்புகள் அதிகம். ஆனா ரொம்ப சந்தோஷ பட்ட வர்க்கம் மாணவர்கள் தான்.  வானிலை ஆய்வாளர் ரமணனை தெய்வமா கொண்டாடுறாப்ல பல மீம்கள் வந்திச்சு.  இப்ப திரு. ரமணன் அவர்கள் தான் ஹீரோ.

 நான் படிக்கும் காலத்திலயும் மழையால் ஸ்கூல் லீவு விட்டிருக்காங்க. 3 அல்லது 4 கிளாஸ் படிக்கும்போது செம மழை. நரிமேட்டுக்கிட்ட இருக்கற குளம், ஐயர் குளமெல்லாம் கரை உடைஞ்சு தண்ணி ரோட்ல. ஆனா எங்க ஊர்ல கால்வாய்லாம் உண்டு.  வீட்டுக்கும் ரோட்டுக்கும் நடுவுல அந்த கால்வாய் வெட்டி அழகா இருக்கும். சிலர் அதில் இருக்கும் மண் வீட்டு கழிவுநீர் குழாய்ல வந்திடும்னு சிமிண்டெல்லாம் போட்டு வெச்சிருப்பாங்க. அதனால தண்ணி திபு திபுன்னு போறதை பாக்கலாம்.

  அப்ப நாங்க இருந்தது கீழ3ல செட்டியார் கடைக்கு எதிர் வீடுல. படிச்சது சுப்பராமய்யர் ஸ்கூல் (அம்மாவோட தாத்தா ஆர்ம்பிச்ச ஸ்கூல்) சுப்பராமய்யர் ஸ்கூல்க்கு ரெண்டு ப்ரான்ச். சின்ன ஸ்கூல் 5 கிளாஸ் வரைக்கும். எதிர்ல இருக்கற பெரிய ஸ்கூல் 8 கிளாஸ் வரைக்கும் அப்ப. இப்ப 10 வந்திருச்சுன்னு கேள்வி பட்டேன். நான் 5 ஆம் வகுப்பு வரைக்கும் சுப்பராமய்யர் ஸ்கூல். அப்புறம் ராணி ஸ்கூல். சரி மேட்டருக்கு வருவோம்.

இப்பல்லாம் ஸ்கூல் லீவுன்னா டீவில உடனுக்குடன் நியூஸ் வந்திருது. இல்லாட்டி ஸ்கூல்லயே எஸ் எம் எஸ் அனுப்பிடறாங்க. ஆனா அப்பல்லாம் அந்த மாதிரி அறிவிப்புக்கள் கிடையாதே! ஸ்கூல் வாசல்ல போர்ட்ல எழுதி போட்டிருப்பாங்க. அதை போய் பாத்துட்டு திரும்பி வர்ற பசங்க மூலமா தெரிஞ்சிக்கலாம். போர்டுல எழுதி போட்டிருந்தாலும் எங்கள் அன்பான லீவு சார் வாசல்லயே நின்னு வர்ற பசங்களை எல்லாம் திருப்பி அனுப்புவார். அவர்தான் எங்களுக்கு ரமணன் மாதிரி.

 ஸ்கூல் லீவுன்னு சர்க்குலர்லாம் அனுப்ப மாட்டாங்க. பெரிய ஸ்கூல்லில் வேலை பார்த்த. திரு ராமச்சந்திரன் சார் தான் வந்து லீவ் சொல்வார். காப்பரிட்சை, அரைப்பரிட்சை, வரலட்சுமி விரதம் இப்படி எதுக்கு லீவுன்னாலும் சார்தான் வந்து சொல்வார். ஒவ்வொரு கிளாஸா போய் ஸ்கூல் லீவுன்னு சார் சொல்வார். அவர் ஒவ்வொர் கிளாசுக்கா போகும்போது பசங்க கோரஸா கத்தி வரவேற்பு கொடுப்பாங்க. (இப்ப ரமணனை டீவில பாக்கும்போது எம்புட்டு குஷியாவுராங்க பசங்க அந்த மாதிரி ) ஹீரோ வொர்ஷிப் நடக்கும் அவருக்கு.   ஏதாவது நாள்கிழமைன்னா லீவான்னா நாங்க எங்க கிளாஸ் டீச்சர்களை கேட்டா லீவு சார் வரலைல்லா, வந்தாதான் லீவுன்னு சொல்ற அளவுக்கு.  சில குறும்புக்கார பசங்க சாதாரண நாள்ல கூட சாரைப்பாத்தா “ இன்னைக்கு லீவா சார்னு” கேட்பாங்க. :)

அம்மாவோட தாத்தா குட்டிசார் ( குட்டையா இருப்பார் அதனால வந்த பெயர்) ஸ்கூலுக்கு ஒட்டின வீட்டுலதான் இருப்பார். அதனால அவரும் வர்ற பசங்களை திருப்பி அனுப்பிட்டு யாராவது பசங்க கிட்ட ,” போறப்ப ரத்னா டீச்சர் வீட்டுல ஸ்கூல் லீவுன்னு சொல்லிட்டு போங்கன்னு ”மெசஜ் சொல்லி அனுப்பிடுவார். அம்மா அந்த ஸ்கூல்ல அரிச்சுவடி (அந்த கால எல்கேஜி) டீச்சரா இருந்தாங்க. அப்புறம் பெரிய ஸ்கூல்ல கிளார்க்கா வேலைக்கு சேர்ந்தாங்க. ஆனா அம்மாவுக்கு ரத்னா டீச்சர்னுதான் பேர்.  கீழ 3லதான் ஸ்கூலும் இருந்தது.

மழை பேஞ்சதுக்கு மறுநாள்  ஸ்கூல் இயங்க ஆரம்பிச்சாலும்  அட்டண்டென்ஸ் கம்மியாத்தான் இருக்கும். அக்க பக்க கிராமங்களில் நல்ல மழை பெஞ்சிருக்கும். பஸ்ல வர முடியாம இருக்கும். தவிர பெரிய ஸ்கூல்ல தான் பெஞ்செல்லாம். சின்ன ஸ்கூல்ல தரையில உக்காந்துதான் பாடம். மழை அதிக்மா இருந்ததால தரையில் எல்லாம் நீர் வந்திருக்கும். சிமிண்ட் தரைதான். தண்ணி  உப்பரிச்சுக்கும். வெயில் அடிச்சாதான் அது அடங்கும். அதுவரைக்கும் ஸ்கூலுக்கு லீவு விட முடியாதே. வீட்டுலேர்ந்து கித்தான் சாக்குன்னு சொல்ற உர சாக்குகள் கொண்டு போய் போட்டு உக்காந்து படிச்சதெல்லாம் ஒரு அனுபவம். ஒரு சில கிளாஸ்ல ஒழுகும். அதனால ரெண்டு அல்லது 3 கிளாஸ் சேர்ந்து உக்காந்து படிக்க வேண்டிய கட்டாயம். பாடம் நடத்தமாட்டாங்க. டிக்டேஷன், வாய்ப்பாடு ஒப்பிக்கறது, கதை சொல்றதுன்னு செம எண்டர்டெயின்மெண்டா இருக்கும். இதுக்காகவே மழை வறாதான்னு ஏக்கமா இருக்கும்.

மழை, வெள்ளத்தால தொத்து நோய் பாதிப்பு வந்திடக்கூடாதுன்னு கார்ப்பரேஷன்லேர்ந்து வந்து தடுப்பூசி போடுவாங்க. கண்டிப்பா ஜுரம் வரும். அதுக்காக லீவுன்னு . மழை எப்பவுமே பசங்களுக்கு கொண்டாட்டம் தான். காலங்கள் மாறினாலும் மாறாத விஷயமா  இப்பவும் வானிலை ஆய்வாளர் ரமணனை கொண்டாடுறதை பார்க்கும் போது எங்க லீவு சார்தான் நினைவுக்கு வர்றாரு.




Friday, October 04, 2013

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி.........

இந்த ஜல்ஜல் சலங்கை ஒலி வியாழக்கிழமை மதியம் முதலே கேட்க ஆரம்பிச்சிடும். கொம்புகளை ஆட்டி ஆட்டிக்கிட்டு மாடுகள் போகும் அழகே அழகு. எங்க புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை சந்தை. அந்த சந்தைக்கு மாடு,ஆடு எல்லாம் பக்கத்து கிராமத்திலிருந்து வரும்.எங்க வீடு அப்ப வடக்கு 4ஆம் வீதியில் இருக்கும்.  கீழவீதி, மேலவீதி, தெற்குவீதி, வடக்குவீதி எல்லாம் ரிப்பன் வெச்சு அளந்தாப்ல இருக்கும். ராஜா காலத்துல அம்மன் வீதி உலாவா இல்ல ராஜா பவனி வரும் காரணத்திற்காக இப்படி அழகா திட்டம் போட்டி கட்டிருப்பாங்க.

வடக்கு 4 அப்படின்னா ஐயர்குளம் இறக்கத்துலேர்ந்து தஞ்சாவூர் ரோட் தாண்டி அப்புறம் நீள்ள்ள்ள்ளமா வடக்கு 4 தான்.  தஞ்சாவூர் ரோட் தான் மெயின் ரோட். அங்கே நெய்க்கொட்டான் மரம் ஸ்டாப்பிங்கில் ரைட் திரும்பினா வடக்கு 4. இந்த பாதையில போனா மெயின் ரோட் கரைச்சல் இல்லாம ஆடு,மாடை கூட்டிகிட்டு போகலாம்னு சந்தைக்கு போறவங்க இந்த வீதியை தேர்ந்தெடுப்பாங்க. அதென்னமோ வடக்கு3, வடக்கு 2க்கெல்லாம் இந்த பாக்கியம் கிடைக்காது. சில சமயம் பிருந்தாவனம் ஸ்டாப்பிங் பக்கம் ஏதும் மீட்டிங், தர்ணான்னா பஸ் ரூட்டாவும் மாறிடும் எங்க வீதி.

சரி மேட்டருக்கு வருவோம். எங்க வீட்டு வாசல்ல ஒரு முருங்கை மரம் உண்டு. வடக்கு 4 திருப்பம் திரும்பினதும் எங்க வீடு தான் முதல் வீடுன்னு சொல்லலாம். எதிர் வரிசையில் வீடுகள் இருந்தாலும் கொஞ்சம் உள்ளே தள்ளி எங்க வீடு ஆரம்பிச்சதும் வலது பக்கத்துல வேற வீடுகள் இல்லாததாலும் எங்க வீடு தான் முதல் வீடு கணக்கு. வாசலில் காத்தாட உட்காற கட்டை கட்டி வெச்சிருப்போம். எங்கம்மா நல்லா மெழுமெழுன்னு சாணி தெளிச்சு எங்க வீடு எவ்ளோ அகலமோ அவ்ளோ அகலதுக்கு மெழுகினாப்ல வாசற் தெளிச்சு சுத்தமா வெச்சிருப்பாங்க. (அந்த வாச தெளிக்க ரெண்டு தேக்சா தண்ணியும் 1 சட்டி சாணமும் தேவைப்படும் என்பது தனிக்கதை. அவங்க மாதிரி நாம வாச தெளிக்காட்டா கோவப்படுவாங்க, நமக்கு டென்ஷனாகும் இந்த கொடுமை எதுக்குன்னு ராத்திரி தண்ணி தவலையை கொண்டாந்து வைப்பதோட நம்ம கடமை முடிஞ்சிடும்.) :))

எங்கம்மா இவ்ளோ கஷ்டப்பட்டு செஞ்சு வெச்சா காத்தாட உட்கார வசதியா இருக்குன்னு மாட்டை மரத்துல கட்டிட்டு அதுக்கு பக்கத்துலேயே துணியை விரிச்சு சாப்பிடுவாங்க, இல்ல தூங்கியே போயிடுவாங்க. மாடு சும்மா இருக்குமா.  அதோட காலால அசஞ்சுகிட்டே இருக்கும். எங்கம்மா கஷ்டபட்டு வாசல் தெளிச்ச இடம் கொஞ்சம் பள்ளமாயிருக்கும். :(( வேலை முடிஞ்சு வந்து அம்மா பாத்துட்டு கோவ படுவாங்க. ஆனாலு இதையெல்லாம் ஒண்ணும் சொல்லிட முடியாது பாருங்க.

எங்க ஊரு டவுன் தாங்கறதால கிராமத்துக்கான அழகும் இருக்கும், அதே சமயம் கொஞ்சம் பெரிய ஊருக்கான சாயலும் இருக்கும். வியாழக்கிழமை எங்க வீதி ரொம்ப பிசியா இருப்பதில் எனக்கென்னவோ ரொம்ப பெருமையா இருக்க்கும். புதுக்கோட்டை சந்தை பெருசு, எங்க கிராமத்துலேர்ந்து அங்க தான் வருவோம்னு பக்கத்து கிராமத்துலேர்ந்து வந்து படிக்கற பசங்க பெருமையா சொல்வாங்க. ஆனா இப்ப வரைக்கும் சந்தையை போய் பாத்தது இல்லை.  மந்தை மந்தையா ஆடுகள் போகும். கருப்பு ஆடுகளா ஒரு தடவை போகும். அடுத்து வெள்ளாடு. அதுல ஏதாவது ஒரு குட்டி பள்ளத்துல இறங்கிரும். அதை மேலே எழுப்பி கூட்டிகிட்டு போவாக.  அந்த ஓடிபிடிச்சு வெளையாட்டுல ஆட்டோட சத்தம் கூட இப்பவும் என் காதுல கேட்டுகிட்டுத்தான் இருக்கு. பெரிய பெரிய கொம்புகளோட மாடுகள், வெள்ளை வெளேர்னு சில, பழுப்பு கலர்லன்னு பார்க்க ஆனந்தமா இருக்கும்.

ஹேய்,ஹோய்னு சத்தம்..... ஆடு கத்துற சத்தம், மாட்டோட ஜல் ஜல் சத்தம் இதெல்லாம் என்னவோ எங்க வீதிக்கு ஒரு புனிதத்தை கொடுக்கறாப்ல ஒரு ஃபீலிங்க்ஸாஃப் வடக்கு4 தான் போங்க. கோழிகளை சைக்கிளில் வெச்சு கட்டி எடுத்து போவாங்க அதான் கஷ்டமா இருக்கும். மாட்டு வண்டிகளில் சாமான்கள் எடுத்துக்கிட்டு போவாங்க. அப்பவும் ஜல் ஜல் தான். மெயின் ரோட்டில் வண்டிகளுக்கு பயந்து எங்கயும் ஒதுங்காம தடிகொண்ட ஐயனார் மேட்டுல சல்லுன்னு இறங்கி வந்து நம்ம வீதியிலதான் இளப்பாறல். பல சமயம் “கொஞ்சம் தண்ணி கொடுங்கம்மா!!” நீச்சத்தண்ணி இருக்கு கொஞ்சம் உறப்பா ஏதாவது இருந்தா கொடுங்கன்னு” கதவை தட்டி கேப்பாங்க.

வியாழக்கிழமை ஆரம்பிக்கும் இந்த ஜல்ஜல் சலங்கை ஒலி வெள்ளிக்கிழமை சாயந்திரம் திரும்ப கேட்கலாம். சந்தை முடிஞ்சு வியாபாரம் ஆகாத மாடோ, இல்ல வியாபரம் முடிஞ்சதையோ இந்த பக்கத்தான் திரும்ப கூட்டி போவாக. 5.30 மணிக்கு மேலே ஆரம்பிக்கும் இந்த சத்தம் பல சமயம் ராவு வரைக்கும் இருக்கும். வடக்கு 3ஆம் வீதியில் ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு. அந்த சாமிக்கு பூச்சொரிதல் விழா நடக்கும். காப்பு கட்டு அம்மன் புறப்பாடு, மஞ்சத்தண்ணி ஊத்த வர்றது இப்படி அந்த சமயத்துல வடக்கு 2, வடக்கு3, வடக்கு4 ரொம்ப புனிதமா இருக்கும். அதுக்கு இணையா ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் இந்த பிராணிகள் எங்க வீதியில் போவதும் எனக்கு
புனிதம்.

இப்பவும் வியாழக்கிழமை வந்தா  என் மனசு இன்னமும் எங்க வடக்கு4ஆம் வீதி வீட்டுக்கு போயிரும் !!! வாசல்ல உட்கார்ந்து படிச்சிகிட்டோ, ரேடியோ கேட்டுக்கிட்டோ மாடுகள் போவதையும், வருவதையும் நான் பார்த்துக்கிட்டு இருப்பது போலவே இருக்கும். இப்ப சந்தை அந்த அளவுக்கு நடக்குதுன்னும் தெரியாது, அந்த வீதி பக்கம் தான் மாடுகளும், ஆடுகளும் போகுதான்னும் தெரியாது. ஆனா பாருங்க என் நினைவுகளில் சந்தை, ஜல்ஜல் ஒலி இதெல்லாம் ரிங்காரம் மீட்டிக்கிட்டு இருக்கு.



Thursday, March 29, 2012

ராம சிலகா

புது இடம் என்பதால் ஆரம்பத்தில் ராமுடுவுக்கு கோவம்
அதிகமாக இருந்தது. கடித்து வைத்துவிடும். மெல்ல
மெல்ல நாங்கள் வீட்டில் இருக்கும் நேரம் கூண்டை திறந்து
வைத்திருப்போம். மெல்ல கீழே இறங்கி அங்கே இங்கே என
நடை பழகுவதை பார்க்க அப்படி ஒரு ஜோர்.

மிளகாய்ப்பழம் கொடுத்தால் பேச்சுவரும் என்று சொன்னார்கள்
என அப்பப்போ கொடுத்தோம். 10 நாளிலேயே அப்பளத்தை
அழகாக ஒரு காலில் பிடித்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தது
ராமுடு.

அம்மா, அப்பா என அழைக்க வந்த அன்று எனக்கும் தம்பிக்கும்
அவ்வளவு சந்தோஷம்.நான் கல்லூரியில் இருந்து வந்ததும்
கூண்டை திறந்து விடுவேன். என் கையில் உட்கார்ந்து கொண்டு
உதட்டில் மூக்கை வைத்துக்கொண்டு தூங்கும் அழகே அழகு.

தம்பி பெயர் கார்த்தி. அவ்வா சில சமயம் கார்த்தி குட்டி என்று
அழைப்பார். ராமுடுவும் அப்படியே அழைக்க ஆரம்பித்தது.
காலை 6 மணிக்கு ஆரம்ப்க்கும் கார்த்தி குட்டி எந்திரி,
கார்த்தி குட்டி குளி இப்படி அவன் ஸ்கூல் போகும் வரை
கத்தல் தான். ஓசை ரொம்ப பிடிக்கும். :) தோசைதான் ராமுடு
டிக்‌ஷனரியில் ஓசை. கார்த்திஸ்கூல் பஸ் வரும் வரை
அவனுடன் விளையாட்டுத்தான். தம்பிதான் ராமுடுக்கு
குளிப்பாட்டுவது எல்லாம். அவன் ஸ்கூல் பஸ் வரும் முன்
கூண்டில் போட்டுவிட்டு கிளம்புவான். ஸ்கூல் பஸ்
சத்தம் கேட்டும், கார்த்தி வரவில்லை என்றால் கார்த்தி
குட்டி பஸ் என கத்தி தீர்த்துவிடும்.

அவ்வாவுக்கு ராமுடுவுக்கு ஒத்தே போகாது. காலையில்
எல்லாரும் போன பின் அவ்வாவும் ராமுடுவும் மட்டுமே
வீட்டில். அவ்வா மதியம் கண் அசரும் நேரம். கீச் கீச்
என்று கத்தி தூக்கத்தை கெடுப்பான். இல்லையென்றால்
சீட்டி அடிப்பான். அவ்வா கோவத்தில் தண்ணீர் எடுத்து
தெளிப்பார்கள். அதனால் அவ்வாவைக்கண்டாலே ஆகாது.
அதே மாதிரி சாயந்திரம் 6 மணிக்கு ராமுடுவின் கூண்டு
இருக்கும் வராந்தாவில் மாடவிளக்கு ஏற்றிவிடவேண்டும்.
அது இல்லாவிட்டால் ஏனோ சத்தம் தான்.

நாங்கள் வீட்டிற்கு வந்தபின் கூண்டிலிருந்து வெளியே வந்து
கொட்டம் அடிப்பான். நானும் கார்த்தியும் பாடம் படித்துக்
கொண்டிருந்தால் பேப்பரை இழுத்து ஒரே கலாட்டாதான்.
அப்பா ஆபீஸ் வேலை பார்க்க பெரிய பேட் வைத்து
எழுத ஆரம்பித்தால் பேடில் ஏறி உட்கார்ந்து கழுத்தை
வளைத்து, வளைத்து பார்க்கும். குச்சு குச்சுவென போய்
பேப்பரை இழுக்கும். அப்பாவை அமனி என்று அழைக்கும்.
ரமணி அமனி ஆகிவிட்டது.

அப்பா மஞ்சள் பையில் கடலை மிட்டாய், அடுத்த நாள்
பூஜைக்கு பூ என வாங்கி வருவார். 8.30மணிக்கு ராமுடுவை
கூண்டில் போட்டுவிட்டு தோங்கப்போவோம். அதற்கு
அப்புறம் அப்பா வருவார். திரும்ப கூண்டைத் திறந்து
வெளியே விட்டு அந்தப்பையை ராமுடு குடைந்தாக
வேண்டும். இல்லாவிட்டால் அமனி அமனி என்று கத்தி
தூங்க விடாமல் செய்யும்.

அதன் பிறகு நான் மும்பை போய்விட்டேன். ஒரு நாள்
பள்ளி செல்லும் அவசரத்தில் தம்பி ராமுடுவின் கூண்டு கதவு
மூட மறந்துவிட்டான். வாயில் கதவும் திறந்த நிலையில்
கூண்டை விட்டு வெளியே போன ராமுடு மெல்ல
படிதாண்டி வெளியே சென்று விட்டான்.
கார்த்தி குட்டி, கார்த்தி குட்டி என்று அவனது சத்தம் கேட்டு
அம்மா, அப்பா வந்து பார்க்கையில் சத்தம் மட்டும்தான் வந்தது.
எங்கே இருக்கிறான் என்பதே தெரியவில்லை. ஏதோ மரத்தின்
உச்சியில் சத்தம் வர எடுக்க மரம் ஏறினால் அங்கேயிருந்து
பறந்துவிட்டான் ராமுடு. வீட்டிற்கு திரும்ப வர வழி தெரியாத
நிலையில் வடக்கு 4ஆம் வீதியே கேட்கும் அளவுக்கு கார்த்தி
குட்டி என்று கத்திக்கொண்டே இருந்திருக்கிறான்.

அதன் பிறகு அம்மா வேறொரு கிளி கொண்டு வந்திருக்கார்.
அதற்கு தம்பி மீனாட்சி என்று பெயர் வைத்திருந்தான்.
இதுக்கும் அவ்வாவுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகவே
வேறு வழியில்லாமல் திரும்ப கொண்டு போய்
கொடுத்துவிட்டார்கள். ராமுடுவை நினைத்துப்பார்த்து
நானும் தம்பியும் கொசுவத்தி சுத்திக்கொள்வோம்.

இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பாட்டை
பாடும் பொழுது (சில சமயம் ட்யூனுக்கு தக்க
சீட்டி அடிக்கும்) :)
ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டு தூங்கும் அழகு,
தலை தலையை திருப்பி பார்க்கும் அழகு, தம்பியின்
இரு கால்களுக்கு இடையில் குச்சுகுச்சுவென
நடந்து போய் தண்ணீர் தொட்டியில் தலையை விட்டு
ப்ரோக்சனம் செய்து குளியல் செய்யும் ராமுடு என
நினைத்து பார்த்துக்கொள்வோம்.

எங்கள் இனிய நினைவுகளில் ராமுடுவுக்கு எப்போதும்
இடம் உண்டு.


Wednesday, March 28, 2012

ராம சிலகா!!!!!!!!

பிள்ளைகள் எப்போதும் ஏதாவது ஒரு செல்லப்பிராணி வளர்க்க
வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நானும்
மறுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளேன். பார்த்துக்கொள்வது
கஷ்டம் என்றாலும் என் மனதில் இருக்கும் ஒரு வருத்தம்தான்
இதற்கு காரணம்.

எங்கள் ஊரில் புதுக்கோட்டை கூட்டறவு வங்கி (அதான் எங்க
அப்பா வேலை பார்த்த பேங்க்) பக்கத்தில் ராமுடு ஜோசியர் என்று
ஒருவர் இருந்தார். தெலுங்கர் தான். அம்மா அவரை பார்க்க
சென்ற ஒரு நாளில் என்னையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார்.
வாசலிலேயே கிளிக்கூண்டு. ஒற்றைக்காலில் நின்றுக்கொண்டு
ரொம்ப ஸ்டைலாக அப்பளத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்ததை
பார்க்க பிடித்திருந்தது.

அம்மா அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் வேறு
யாரோ வர,” ஐயர் வீட்டுல இல்ல போடா!!!!” என்று
கிளி திட்டியது. எனக்கு செம ஷாக். கிளி பேசப்பழக்கலாம்
என்று தெரியும் ஆனால் அன்றுதான் காதார கேட்டது.

அம்மாவிடம் எங்களுக்கும் ஒரு கிளி வேண்டும் என்று
தொணத்த ஆரம்பித்தோம். தம்பிக்கும் என் அனுபவத்தை
சொல்ல அவனும் சேர்ந்து கொண்டான். அப்பாவுக்கு
அவ்வளவாக இஷ்டம் இல்லை. ஆனால் எங்கள் அவ்வாவுக்கு
சுத்தமாக இஷ்டமே இல்லை. ராமதாஸ் முன் ஜென்மத்தில்
கிளியை கூண்டில் வைத்து அடைத்த பாவத்திற்குத்தான்
சிறையில் இருக்க நேர்ந்தது என சொல்லி ஒரே எதிர்ப்பு.

அவ்வாவை மீறி அம்மாவாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதனால் மெல்ல அப்பாவிடம் கெஞ்ச ஆரம்பித்தோம்.
எல்லா நேரமும் கூண்டில் வைக்க வேண்டாம். நாம்
வீட்டில் இருக்கும் நேரத்தில் சுதந்திரமாக உலாவ விடலாம்.
என்று சொன்னோம். அப்பா யோசித்து சொல்வதாக
சொன்னார். அப்படி இப்படி என ஒருவழியாக சிக்னல்
கொடுத்தார்.

அம்மா தன் பள்ளி நண்பர்கள் மூலமாக கிராமத்தில்
சொல்லிவைத்து ஒரு சுபயோக சுபதினத்தில் வீட்டிற்கு
கிளியார் வந்தார். ஆண் கிளி. அழகனாக இருந்தான்.
என்ன பெயர் வைக்கலாம் என்று அதிகம் மண்டையை
குடையாமல் “ ராம சிலகா” என பெயர் வைத்தோம்.
தெலுங்கில் சிலகா என்றால் கிளி. ராமுடு என நானும்
தம்பியும் அழைத்தோம்.

அவருக்காக ஒரு கூண்டு தயாரானது. சாப்பாட்டிற்கும்,
தண்ணீருக்கும் தனித்தனி சின்ன அலுமினியம் கிண்ணம்
வாங்கினோம். எங்கே மாட்டுவது?? வராந்தாவில்
மாட்டினால் கண்ணில் படுமாறு இருக்கும், காற்றோட்டமும்
கிடைக்கும் என முடிவு செய்து மாட்டினோம்.

அப்புறம் என்ன நடந்தது?? அதுதான் சுவாரசியம்
அந்தக்கதை அடுத்த பதிவில்.

இப்போதைக்கு தொடரும்.

Thursday, January 27, 2011

சம்பங்கி பூவும்.... தாத்தாவின் நினைவுகளும்.

காட்டுபாக்கம் தாத்தாவுக்கு காடுபோல தாடியாம் எனும் பாட்டை
ஞாபகப்படுத்தும் தும்பைபூ தலைமுடி + தாடி, கெச்சலான உருவம்
இதுதான் முருக்கூர் தாத்தா. அவரது உண்மையான பெயர்
மகாலிங்கம். நான் வைத்த பெயர் முருக்கூர். புதுகைக்கு அருகில்
இருக்கும் முருக்கூரில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார்.
தான் மட்டுமே அங்கே இருப்பார். விடுமுறை கிடைத்தால்
தனது மகள்கள் இருக்கும் திருச்சிக்கும், புதுகைக்கும் வந்து
செல்வார். வேலை ஓய்வு பெற்ற பின் அம்மம்மாவிடம் இருந்தார்.

அதிகாலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் அவரது நாள். கிணற்றில்
தடால் என வாளி போட்டு தண்ணீர் இறைத்து பல் தேய்த்து
அந்த தண்ணீரை குடித்துவிட்டு ஆரம்பிப்பார் நாமஸ்மரனை.
காளி... காளி பத்ரகாளி.. இப்படி அதிகாலையில் சொல்லி
அடுத்தவர் தூக்கத்தை கெடுத்துவிடுவதைப் பத்தி தாத்தா
யோசித்ததே இல்லை. காபி குடித்துவிட்டு பூக்கள் பறிப்பார்.
குளித்து பூஜை சாப்பாடு, காலாற நடை, கொஞ்சம் பூனைத்தூக்கம்
மதியம் 3 மணிக்கு காபி, பிறகு விரும்பினால் எங்கேயாவது
சென்றுவருவார்( என் அம்மாவை பார்க்க வருவார்)
இரவு ஒரே டிபன் தான் அதை மாற்றி ஏதும் வித்தியாசமாக
ஏதும் கொடுத்தால் சாப்பிட மாட்டார். கோபம் ஜாஸ்தி.
இரவு உணவு அரிசி உப்புமா + தயிர். அலுக்காமல் சலுக்காமல்
அவர் எப்படி தினமும் சாப்பிட்டாரோ!!!

ஆடி வெள்ளி, தைவெள்ளிக்கள் பூஜை அமலோகப்படும்.
கேசரி,வடை, சக்கரை பொங்கல் அம்மம்மா செய்துவைக்க
பூஜை செய்வார் தாத்தா. உள்ளூரில் இருக்கும் என் அம்மா
வரவேண்டும் என கண்டிப்பாய் சொல்லிவிடுவார். என் அம்மாவென்றால்
தாத்தாவுக்கு ரொம்ப இஷ்டம். என் அம்மம்மாவின் சிறுவயதிலேயே
அவரது அம்மா இறந்துவிட தாத்தா மறுகல்யாணம் எல்லாம் செய்து
கொள்ளாமல் உறவினர் உதவியுடன் தனது பிள்ளைகளை வளர்த்தார்.

என் அம்மா அவரது மிக அபிமான பேத்தி. அம்மாவுக்கு பிடிக்குமென
கிராமத்திலிருந்து பழுத்த விளாம்பழம் கொண்டு வந்து அதை தட்டி
வெல்லம் சேர்த்து பக்குவமாக பிசைந்து கொடுப்பார். அம்மா
வர முடியாவிட்டால் சின்ன மாமாவிடம் டப்பாவில் போட்டு கொடுத்தனுப்புவார்.
இலங்கையில் விளாம்பழம் ஜூஸ் கிடைத்த பொழுது அம்மாவிற்காக
வாங்கி வைத்திருந்து கொடுத்தேன். அம்மா அப்போது நினைத்தது
முருக்கூர் தாத்தாவைத்தான்.

நான் பிறக்கும் முன் தாத்தாவின் மனைவி கனவில் வந்து செய்தி
சொல்லி அவசர அவசரமாக என் அம்மாவை பார்க்க வந்தாராம்.
என் நட்சத்திரமும் ஜாதகப்பெயரும் அந்த அவ்வாவுடையது என்பதில்
தாத்தாவுக்கு ரொம்ப சந்தோஷம். என் மீதும் மிகப் பிரியம்.
என் பெயர் சொல்லி கூப்பிடமாட்டார். “காளி” என்றுதான் அழைப்பார்.
தாத்தாவுக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் இருந்தது.



எனக்கு பூக்களில் வாசம் இருந்தால் தான் பிடிக்கும். சம்பங்கி பூ
மிக இஷ்டம். அம்மம்மாவீட்டில் சம்பங்கி இருந்தது. அதை
பறித்து,கோர்த்து கவரில் போட்டு சின்ன மாமாவிடம் கொடுத்தனுப்புவார்.
புதுகை டவுன் பக்கம் வரும் வேலை இருந்தால் சரி. இல்லாவிட்டாலும்
கண்டிப்பாக போய் கொடுத்துவிட்டு வா என சொல்வார். மாமா
கோவமெல்லாம் அவர் முன் செல்லாது. திட்டி அனுப்பி விடுவார்.
முனுமுனுத்துக்கொண்டே மாமா கொடுத்து செல்வார்.

அப்பா வடக்கு4ஆம் வீதியில் வீடு வாங்கிய பொழுது அதை கொஞ்சம்
மராமத்து செய்ய வேண்டி இருந்தது. காண்ட்ராக்டில் வேலை செய்ய
கொடுத்திருந்தோம். இங்கே வேலை நடப்பது தெரிந்து தாத்தா வந்து
விட்டார். வந்தவர் சும்மா இருக்காமல் தார்பாய்ச்சி கட்டிக்கொண்டு
கூரை மேலே ஏறி கொத்தனாருடன் சண்டை. “கலவை சரியில்லை!!
ஓடு சரியாவெக்கலை..” என சத்தம் போட்டிருக்கிறார். கலவை
கலக்கும் பொழுது தான் சொல்லும் ரேஷியோவில்தான் சிமெண்ட்+
மண் கலக்க வேண்டுமென சொல்ல அவன் அப்படி போட்டால் கட்டாதுன்னு
சண்டை. இவர் இருந்தால் வேலைக்கு வரமாட்டேன் என்று கொத்தனார்
போயே விட்டார். தாத்தாவை வீட்டை விட்டா விரட்ட முடியும்!!
மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் காண்ட்ராக்டரை
வரச்சொல்லி தாத்தா அவருடன் பேசி தாத்தா சொல்படி கட்டுவதாக்
சத்தியம் வாங்கிய பிறகுதான் தாத்தா அம்மம்மா வீட்டுக்கு கிளம்பினார்.
வடக்கு 4 வீட்டை விற்றபொழுது இந்த நினைவுகள் வருத்தத்தை
தந்தன.

எல்லா வேலைகளும் தெரியும் தாத்தாவுக்கு. வயல் வைத்திருந்ததால்
அந்த வேலைகளும் செய்வார். சிறுவாச்சூர் மதுரகாளி தாத்தாவின்
இஷ்ட தெய்வம். எப்போதும் சுறு சுறுப்பு, அளவான சாப்பாடு என
ஆரோக்கியமாக இருந்தார். இறக்கும் பொழுது 96 வயதென நினைக்கிறேன்.
பாலை விட பாலாடை ருசி என்பார்கள். என் அம்மாவிடம்
தாத்தாவிற்கு மிக அன்பு. கொள்ளுப்பேத்தியான என் மேலும் அவர்
அன்பில் செலுத்தியது அதை பெரும் பாக்கியத்தை கொடுத்தது
இறைவன் அருளே!!

கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும் என்பதற்கு
தாத்தா நல்ல உதாரணம்.


Thursday, September 23, 2010

பிள்ளையார் சதுர்த்தி கொசுவத்தி




பிள்ளையார் சதுர்த்திக்கு அப்பா எந்த சைஸ்ல பிள்ளையார்
வாங்குவாங்கன்னு ஆசையா இருக்கும். அம்மா வேலை
பார்த்த ஸ்கூல்ல வெளியே ஒரு பகுதியை பிள்ளையார்
செய்யறவங்க தங்கி பிள்ளையார் செய்ய கொடுத்திடுவாங்க.
மார்கெட்டுக்கு பக்கம் என்பதால் இந்த ஏற்பாடு.

களிமண்ண வெச்சு அச்சுல வார்த்து விதம் விதமா
சின்னதும் பெரிதுமா பிள்ளையார் செய்வாங்க. ஸ்கூல்ல
தான் செய்வாங்க என்பதால் அம்மா சொல்லிவெச்சு
மொதோ நாளே கொண்டு வந்திடுவாங்க. சில பேர்
வீட்டுல அன்னைக்கு காலேலதான் காஞ்சும் காயம
இருக்கும் பிள்ளையாரை பலகைல வெச்சு எடுத்துகிட்டு
வருவாங்க. நானும் அப்பா கூட போய் எருக்கன் பூ மாலை,
அருகம்புல், கெஞ்சி கூத்தாடி நான் என் உண்டியல்லேர்ந்து
தர்றேன்னு சொல்லி பிள்ளையாருக்கு குடை எல்லாம்
வாங்கி வருவோம்.



அன்னைக்கு சாயங்காலமே புனர் பூஜை செஞ்சு குளத்துல
கரைச்சிடுவோம். கொழுக்கட்டை வகையராக்களுடன்
பிள்ளையர் சதுர்த்தி முடிஞ்சிடும். 14 வயசு இருக்கும் போது
ஒரு வாட்டி ஹைதையில் இருந்த உறவினர் வீட்டுக்கு
வந்தபோது கலர் கலரா பெயிண்டடிச்சு பெரிய்ய்ய்ய்ய
சைஸ்ல பிள்ளையார் எடுத்துகிட்டு போறதை பாத்ததும்
நம்ம ஊர்ல என்ன பூஜை செய்யறோம்னு நினைச்சேன்.
10 நாள் வெச்சிருந்து 11ஆம் நாள் தான் கரைப்பாங்கன்னு
கேள்விப்பட்டதும் செம ஆச்சரியம். ஆனா இப்ப பூமியைக்
காப்பாத்த அதே களிமண் பிள்ளையார்கள் இக்கோ ஃப்ரெண்ட்லி
விநாயகான்னு விக்கப்படுது. இதுதான் காலத்தின் சுழற்சியோ!!


மும்பையில் இருந்த பொழுது அங்கே நடந்த பூஜைகள்,
கொண்டாட்டங்கள் நல்லதொரு அனுபவம். விசர்ஜனத்துக்காக
லீவு விடும் அளவுக்கு இருக்கும். இப்போ ஹைதையில்
அதே போலத்தான். நேற்று விசர்ஜன். (இங்கே கணேசா
நிமர்ஜனம்னு சொல்வாங்க). எங்க அப்பார்ட்மெண்டிலும்
இந்த வருடமும் கணேச சதுர்த்தி நல்லா நடந்துச்சு.



எல்லோரும் பணம் போட்டு பெரிய்ய கணேசா வாங்கி
வந்து பூஜை. அம்மா அப்பா இங்கே இருந்ததால முதல்
நாள் பூஜை அவங்களை செய்யச் சொன்னோம். யார்
வீட்டு பூஜையோ அவங்க பிரசாதம் செஞ்சு கொண்டு 
வரணும். சும்மா கொஞ்சமில்லை கிட்டத்தட்ட 65 பேருக்கு
காணும் அளவுக்கு. :)))


நானும் அம்மாவும் வெண்பொங்கல், கொத்சு, வடை, சட்னி,
கடலைப்பருப்பு பாயசம், தயிர்சாதம் எல்லாம் செஞ்சிருந்தோம்.
என்னுடைய கொத்சு இங்கே ரொம்ப ஃபேமஸ்.  ( அதுக்கு
அப்பார்ட்மெண்ட் தோழிகள் வெச்சிருக்கும் பேரு பருப்பில்லாத
சாம்பார். :)) ரோசய்யாவை கூப்பிட்டு இப்படி எல்லாம் சாம்பார்
வெச்சு சமையலறை பட்ஜட்டை கட்டுப்பாட்டில் வெச்சிருப்பதாக
சொல்லி பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செஞ்சு அதை லைவ்
டெலிகாஸ்ட் செய்ய டீவி 9 வேற கூப்பிடறதா சொல்லிக்கிட்டு
இருந்தாங்க.)



ஃப்ரண்ட் வீட்டு கணேசா

மொத்தம் 7 நாள் கணேசா வெச்சிருந்தோம். ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வீட்டு பிரசாதம். பலவீட்டு சோற்று ருசியில்
கட்டுண்டு கிடந்தோம். போன வருஷம் பூஜை முடிந்ததும்
ஆஷிஷும், அம்ருதாவும்தான் கணேசா ஸ்லோகம்
சொன்னாங்க. இந்த முறை அதே ஸ்லோகத்தை
எல்லோரும் சொல்லும் வண்ணம் ப்ரிண்ட் எடுத்து
ஜெராக்ஸ் போட்டு எல்லோர் கையிலயும் கொடுத்து
சொல்ல சொல்லிட்டேன். ( அடுத்த வருஷம் நான் இந்த
அப்பார்ட்மெண்ட்ல இல்லாட்டியும் என் ஞாபகம் கொஞ்சமாவது!!!
வரும்ல) :))



ganesha 2010

6ஆவது நாள் அப்பார்ட்மெண்டில் இருந்த ஆண்குழந்தைகள்
அனைவரையும்  உட்கார  வைத்து  பூஜை செய்யச் சொன்னோம்.
7ஆவது நாள்  அன்று நாங்கள் விசர்ஜனம் செய்ய திட்டம்.
அன்று வெள்ளிக்கிழமையாகவும் இருக்க பெண்குழந்தைகள்
அனைவரையும் உட்கார வைத்து பூஜை செய்ய சொன்னோம்.

அனைவரும் மாடர்ன் ட்ரெஸ் இல்லாமல் ட்ரெடிஷனல்
ட்ரெஸ்ஸில் வரவேண்டும் என்று சொன்னதும் முறைத்தார்கள்.
”நான் அடுத்த வருடம் இங்கே இருக்க மாட்டேன்ல!!” எனக்காக
கண்ணுங்களா!!” என்ற கெஞ்சலுக்கு மதிப்பு இருந்தது.
அழகாக பாவடை தாவணி, குட்டி பெண்கள் பாவடை, சட்டையில்
வந்து கலக்கினார்கள். ஆரத்தி முடிஞ்ச அடுத்த கணம் எல்லாம்
அப்ஸ்காண்ட். :)) எல்லாம் ட்ரெஸ் சேஞ்சுக்குத்தான்.




உட்டி அடிக்க வேண்டுமே!!! மேள வாத்தியம் முழங்க
எங்கள் தெருவே அதிர ஆனந்த நடனமாடி தண்ணீர் அடித்து
விளையாடி குழந்தைகள், ஆண்கள், பெண்கள் எல்லாம்
ஆட்டம் போட்டோம்.





எல்லாம் முடித்து உடை மாற்றி அப்பார்ட்மெண்ட் நண்பர்
ஒருவர் ஏற்பாடு செய்திருந்த  சாப்பாடு  சாப்பிட்டு கணேசனை
லாரியில் ஏற்றிக்கொண்டு ஹுசைன் சாகர் நோக்கி பயணம்.
இந்த முறை மிக அதிசயமாக அயித்தான் ஊருக்கு ஏதும்
போகாமல் 7நாளும் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நாமளும் விசர்ஜனுக்கு போவோமான்னு கேக்க!! சரின்னு
சொல்ல எல்லாம் லாரியில் ஏறிக்கிளம்பினோம். அந்தாக்‌ஷரி
பாடிக்கொண்டு செம ஆட்டத்துடன் நடு நடுவில் பேண்ட்
வாத்யத்துடன் வரும் கணேசாவுக்கு “கண்பதி பப்பா மோரியா”
என கத்திக்கொண்டு போனோம்.

7ஆம் நாள் என்பதால் ரொம்ப நேரம் எடுக்காமல் சீக்கிரம்
ஹுசைன்சாகரை அடைந்தோம். க்ரேன்கள் ஏறபாடு
செய்து வைத்திருக்கிறார்கள். ஊஞ்சலில் ஆடிக்கொண்டே
கணேசர் தண்ணீரில் மூழ்குவதுபோல இருக்கு. விக்ன
விநாயகனை அனுப்பி வைக்க மனசுதான் இல்லை.






அப்பார்ட்மெண்ட் வந்ததும் எல்லோரு மனதிலும் ஒரு சோகம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை வருத்தம்.
”நாளேயிலேர்ந்து நம்ம வீட்டுலதாம்பா டின்னர். மறந்த
வாக்குல யாரும் கீழேன்னு நினைச்சு சமைக்காம இருந்திடாதீங்க!!!”
என்று ஒரு ஃப்ரெண்ட் ஜோக் அடிக்க, நிஜமாகவே இந்த 7 நாட்களும்
அனைவரும் வசுதேவ குடும்பகமாக ஒன்றாக சேர்ந்து
பூஜித்து, மகிழ்ந்து இருந்தது ஞாபகத்துக்கு வந்தது.

இதற்காகத்தான் பெரியவர்கள் பண்டிகைகளை கண்டுபிடித்தார்களோ
என்னவோ!!! நாங்களும், இன்னொரு குடும்படும்  எங்க சொந்த அப்பார்ட்மெண்டை வாடகைக்கு விட்டு இங்கேயே இருந்து விட வேண்டுமாம்.
அனுப்ப மாட்டோம் என சில தோழிகள்.  பிறந்த வீட்டுக்கு
வருவது போல நாங்கள் இரண்டு குடும்பமும் வந்து விடுகிறோம்
கவலையே படாதீர்கள்!! என்று சொல்லி பிரிய மனமில்லாமல்
அவரவர் வீட்டுக்கு சென்று படுத்த போது அதிகாலை 1 மணி.

Friday, July 02, 2010

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களும் சில ஞாபகங்களும்

ஹுசைனம்மா ஊருக்கு போறதா சொல்லி மடல் அனுப்பியிருந்தாங்க.
நல்லா எஞ்சாய் செஞ்சுட்டு வாங்க ஹுசைனம்மா!!

அவங்க மடல் பாத்ததுக்கப்புறம்தான் எனக்கும் கொசுவத்தி
சுத்தினிச்சு. இலங்கையில் இருந்தப்போ ஜூலை, ஆகஸ்ட்
மாதங்களுக்காக காத்திருப்போம். அப்போதான் அங்கே
வருட கடைசி பரிட்சை முடிந்து பிள்ளைகளுக்கு
லீவு. அப்பத்தான் இந்தியா வருவோம். வருடத்துக்கு
ஒரு முறை மட்டும்தான் வருவோம் என்பதால
நல்லா ப்ளான் செஞ்சு எங்கே போகவேண்டும், யார் யாரை எல்லாம்
பாக்க வேண்டும்னு திட்டம் போட்டு வருவோம்.

15 நாள்தான். அயித்தானோட வந்து அவரோடவே ஊருக்கு
திரும்பிடுவோம். அவருக்கு சோத்துக்கும் கஷ்டம் வரப்டாதில்லை.
அவருக்கும் 15 நாள் லீவு. சோ நோ போன் கால்ஸ்!, நோ லேப்டாப்!
ஜாலியோ ஜாலின்னு இருக்கும். அப்பா, அம்மா எங்க வருகைக்கு
காத்திருப்பது போல எங்களுக்காக காத்திருக்கும் இன்னொரு ஜீவன்
மறைந்த சுப்பிரமணியன் மாமா(அயித்தானோட அண்ணன்)

அநேகமா திருச்சிக்குத்தான் வந்து இறங்குவோம். அம்மாவீட்டுக்கு
ஒரு மணிநேரத்துல போய் சேர்ந்திடலாமே! அப்புறம் சென்னையிலிருந்து
கிளம்ப வசதியாக இருக்கும்னுதான். அப்பா அம்மா கார் எடுத்துகிட்டு
திருச்சி ஏர்போர்டுக்கு வந்து காத்திருப்பாங்க. பசங்க பாஞ்சு ஓடி
கட்டிக்குவாங்க. ”தாத்தா ஏன் அம்பாசிடர் கொண்டுவந்தீங்கன்னு?”
செல்லமா சண்டை போட்டுகிட்டே ஆஷிஷ் வருவான்.

கிளம்புமுன்னாடியே அம்மம்மாவுக்கு ஆர்டர் போட்டிருப்பாங்க
பசங்க. இட்லி மிளகாப்பொடி, ரவா லட்டு, தீபாவளி லேகியம்
எல்லாம் செஞ்சு வெக்கச் சொல்லி. அதை விடவும் ஆஷிஷுக்கு
புதுகை போறோம்னாலே குமார் அண்ணா கடை தோசை!

எங்க வடக்கு 4 வீட்டுக்கு பக்கத்துல டீ கடை வெச்சிருந்தாரு
குமார் அண்ணா. இப்ப அதோட டிபன் கடையும் நடக்குது.
உலகத்துல எங்கயும் அந்தக் கடைக்கு ஈடா ரோஸ்டட் தோசை
கிடைக்காது என்பது ஆஷிஷோட ஒபீனியன். இப்பவும் புதுகை
போனா கடைக்கு போயிடுவான். “வா மாப்பிள்ளைன்னு” இவனுக்காக
ரோஸ்ட் போட்டு கொடுப்பாரு.

இந்தியா வரும்போது பிள்ளைகளுக்கு நம்ம தேசத்தை சுத்தி
காட்டுவதுன்னு கட்டாயமா வெச்சிருந்தோம். நம்ம தேசம்
அவர்களுக்கு அந்நியப்பட்டுடக்கூடாது + நம் கலாசாரமும்
தெரிஞ்சிக்கணும்ல்..

இப்படி ஒரு ஆகஸ்ட் மாத பயணத்தின் போதுதான் அயித்தானோட
அண்ணா, அண்ணி, அக்கா, மாமா, நாங்க நாலு பேரும்
கொடைக்கானல் போனோம். ஒரு பெரிய வீடு வாடகைக்கு
எடுத்து தங்கினோம். ரொம்ப எஞ்சாய் செஞ்சோம். அதுவும்
அயித்தானோட அண்ணா, பசங்க கூட இருந்த அந்த நேரம்
ரொம்ப பிடிச்சிருந்ததா சொன்னாரு. “வருஷத்துக்கு ஒருவாட்டி
நம்ம மொத்த குடும்பமும் இந்த மாதிரி வெளில வரணும்,
சேர்ந்து போகணும்டா”அப்படின்னு தம்பிகிட்ட சொன்னாரு.


இங்க வந்த பிறகு நாங்க சேர்ந்து தில்லி போகத்திட்டம்
போட்டிருந்தோம். ஆண்டவனோட திட்டம் வேறயா இருந்து
மாமாவை தன் கிட்ட கூட்டிகிட்டாரு. :(  (ஸ்டைலா கூலிங்கிளாஸ்
எல்லாம் போட்டுகிட்டு நிப்பதுதான் மாமா. ஆஷிஷை கட்டிகிட்டு
நிக்கிறாரு)

மாமாகூட நெல்லூருக்கு போனது அங்கே பக்கத்தில்
இருக்கும் இடங்களை சுத்தி பாத்ததுன்னு ஒரே கொண்டாட்டமா
இருக்கும். அம்மா அப்பா கிட்ட இரண்டு நாள் இருந்துட்டு
மாமா,அத்தை கூட 3 நாள் இருப்போம். எங்களை ஃப்ளைட்
ஏத்திவிட முடிஞ்சா மாமா ஒரு எட்டு சென்னை வராம
இருந்ததில்லை.

இப்பவும் இந்த நினைவுகளை அசைபோடாம இருக்க
முடியறதில்லை. ஜூலை 8 மாமாவுக்கு பிறந்தநாள்.
பசுமை நினைவுகள் எப்போதும் இனிக்கும். அதை
நினைச்சு பாப்பதே ஒரு சுகானுபவம்.




Tuesday, April 20, 2010

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு.....

சிட்டுக்குருவி படத்தில் வரும் “என் மன்னவன் உன் காதலன்”
பாட்டு ரொம்ப பிடிக்கும். அந்த படத்தை பார்த்திராத
பருவத்திலிருந்து இன்னமும் அதன் மேல் இருக்கும்
காதல் போகவில்லை.” இந்தம்மா கருவாட்டுக்கூட
முன்னால போ” போன்ற வசங்கள் பாடலுக்கு நடுவுல
வரும்.

அம்மம்மாவீடு லோக்கலில். அங்கே பள பள சில்வர்
கலர் டவுன் பஸ்ஸில் போகணும்னு ஆசை. 10பைசாதான்
டிக்கெட் ஆனா நடந்து போனதுதான் ஞாபகம். ஆனால்
கல்லூரி சென்ற அந்த வருடமும் பஸ்தான். புதுகை-காரைக்குடி
போகும் பஸ். பள்ளத்தூரில் என் காலேஜ்.
தினமும் காலேல 8.15க்கு போகும் பஸ்ஸில்
ஏறுவேன், சாயந்திரம் 4.5க்கு வரும் பஸ் பிடித்து
புதுகையில் 5 மணிக்கு வந்திடுவேன்.

மூகூர்த்த நாட்களில் கூட்டமாக இருக்கும் பஸ்.
கானாடுகாத்தான் அழகப்பா இன்ஸ்டிடியூட் மாணவர்கள்
அந்த பஸ்ஸில் தான் வருவாங்க. செம சவுண்ட்
பார்டிகளாக இருப்பாங்க. புதுகையிலிருந்து நானும்
இன்னொரு பெண் மாலதி மட்டும்தான் அந்த்க்
காலேஜுக்கு என்பதால் மும்பை ட்ரையினில் கொட்டம்
அடித்த அளவுக்கு இல்லாமல் வாய்மூடி மவுனமாகவே
காலேஜுக்கு போயிட்டு வந்தேன்.

மழைக்காலங்களில் ஜன்னோலர சீட்டில் உக்காந்து
போற சுகம் என்ன ஒரு சுகமோ தான்....

திருச்சிக்கு தனியா பஸ்ஸுல போனது, மதுரையில்
இருக்கும் சித்தி & அத்தை வீட்டுக்கு என பஸ்
பயணம் நிறைய்ய்... ஆனால் பஸ் பயணம் என்றால்
நினைவுக்கு வருவது நானும் என் மகளும் மட்டும்
பயணம் செஞ்சதுதான்.

“அம்மா! என்னை ஒரு தடவை பஸ்ஸுல கூட்டிகிட்டு
போங்க!” என அம்ருதா கேட்ட பொழுது அம்மாவுக்கு
7 வயசு. அப்பாவைக்கேட்டு கூட்டிகிட்டு போறேன்னு
சொல்லிருந்தேன். அயித்தான் நோ தான் சொல்வார்.
அப்போ நாங்க இருந்தது கொழும்புவில். பஸ்களில்
குண்டு சர்வசாதாரண விஷயம் என்பதால் இலங்கையில்
இருந்தவரை ரயில், பஸ் பிரயாணங்களை அயித்தான்
விரும்பினதில்லை.



மக கேட்டு அழைச்சு போக முடியவில்லையேன்னு
வருத்தம். ரோடில் அந்த சிகப்பு நிற பஸ்ஸை
பாக்கும்போதெல்லாம் ஏக்க பார்வையுடன் அம்ருதம்மா
”எப்பம்மா! கூட்டிகிட்டு போறீங்க”ன்னு கேட்பாள்.
பஸ் கண்டக்டர் கண்டிப்பாக சிங்களத்தில்தான்
பேசுவார். அங்கே ஆங்கிலம் எடுபடாது. அதனால்
சில பேஸ் வொர்க்குகளை செஞ்சு வெச்சுகிட்டேன்.
எங்க வீட்டு வேலைக்காரம்மாகிட்ட கேட்டு
எந்தெந்த ஸ்டாப்பிங், எப்படி கேட்பது எல்லாம்
தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன்.

ரொம்ப நாளா கெஞ்கிக்கூத்தாடி அயித்தானை
ஒரு வழியா சம்மதிக்க வெச்சேன். ரொம்ப
தூரமெல்லாம் போகக்கூடாதுன்னு சொன்னார்.
“இல்லப்பா! நம்ம வீட்டுலேர்ந்து இரண்டு ஸ்டாப்.
அங்கேயிருந்து டிக்மன்ஸ் ரோடுவழியா
கால் ரோட் போய் அங்கேயிருந்து மெஜெஸ்டிக்
சிட்டி ஷாப்பிங் மால் போகப்போறேன்னு!”
சொன்னேன். உடனே சிரிச்சார்.” நம்ம வீட்டுலேர்ந்து
நடந்தே போனாலும் 2 கிமீ கூட இருக்காது.
இதுக்கு ஆட்டோல போகவேண்டியதுதானே!
எதுக்கு பஸ்ஸுல சுத்தணும்னு”. அம்ருதாக்காக!
அப்படின்னு சொன்னேன். ஜாக்கிரதை, போயிட்டு
வந்து போன் செய்ங்கன்னு சொல்லிட்டு போனார்.
ஆனால் அம்ருதாவிடம் சொல்லவில்லை.

அண்ணாவுக்கு ஸ்கூல் இருந்து அம்ருதம்மாவுக்கு
மட்டும் லீவு இருந்தது ஒரு நாள். அன்னைக்கு
”மெஜஸ்டிக் சிட்டி போகலாமா அம்ருதான்னு” கேட்டேன். ஓ
போகலாமேன்னு ரெடியாகி வந்ததும் கிளம்பினோம்.
எப்பவும் ஆட்டோ பிடிக்கும் இடத்துக்கு பக்கத்துலதான்
பஸ் ஸ்டாப். அதே வழியில கூட்டிகிட்டு போனேன்.
ரவி அங்கிள கூப்பிடவான்னு கேட்டா வேண்டாம்
பஸ்ஸுல போகலாம்னு சொல்லவும் முகத்தில்
அப்படியொரு சந்தோஷம்.

எங்க நல்ல நேரம் உடனேயே பஸ் கிடைச்சிடுச்சு.
அதுவும் புது பஸ். நடுவில் தானியங்கி கதவுடன்.
லும்பினி ஸ்டாபில் இறங்கி மயூராட்பேளேஸ்
கோவில் அருகில் பூ வாங்கிக் கொண்டு அங்கேயிருந்து
காலி வீதிக்கு பஸ் பிடிச்சோம். பம்பலபிட்டிய
ஸ்டாப்பில் இறங்கி அங்கேயிருந்து மெஜஸ்டிக்
சிட்டி மாலுக்கு பஸ். கால் ரோட் மெயின் வீதி
என்பதால் எல்லா பஸ்ஸும் போகும் பாதை.

ரொம்ப சந்தோஷமாகவும், த்ரில்லிங்காகவும்
முகம் வெச்சுகிட்டு எங்க அம்ருதம்மா
பயணம் செஞ்சது இப்பவும் கண்ணு முன்னால
இருக்கு. ஆட்டோவில் போய் வந்திருந்தால்
இலங்கை பண மதிப்பில் 60 ரூபாய் ஆகியிருக்கும்.
ஆனால் அன்று செலவழித்தது 20 ரூபாய் கூட
இல்லை. என் மகளின் ஆசையை தீர்த்த சந்தோஷம்
எனக்கு. தான் விரும்பிய படி பஸ்ஸில் பயண
சந்தோஷம் அவளுக்கு.

ரொம்ப நாளைக்கு அண்ணாவிடம் “நாங்க இந்த
பஸ்ஸுல போனோமேன்னு” பெருமையா சொல்லிக்கிட்டு
இருந்தா.

ஒரு முறை நானும் பிள்ளைகளும் மட்டும்
மதுரை- புதுகை பஸ்ஸில் 3 மணிநேரம்
பிரயாணம் செஞ்சதை ஆஷிஷ் ரொம்ப
ரசிச்சாப்ல. திருப்பத்தூரில் முறுக்கு,
பலாப்பழம், பஸ்ஸில் காதலிக்க நேரமில்லை
சினிமான்னு ரொம்ப ரசிச்சான் மகன்.

அல்ப சந்தோஷங்கள் கூட தீர்க்க முடியாவிட்டால்
அப்புறம் என்ன வாழ்க்கை. சென்ற டிசம்பரில்
திருச்சி ரயில்வே ஷ்டேஷனிலிருந்து பஸ்ஸ்டாண்டுக்கு
பஸ்ஸில் போகலாம்னு சொல்லி அண்ணனும் தங்கையும்
பஸ்ஸில் ஓடி ஏறிட்டாங்க. ”காலங்காத்தால பஸ்ஸுல
போவது நல்லாயிருக்கும்மா, அதோட காசும் சேமிக்கலாம்ல”
அப்படின்னு மகன் சொன்னது இன்னமும் காதுல கேக்குது.


எல்லா இடங்களுக்கும் கார்ல போயிருக்கோம். அதே
இடத்துக்கு பஸ்ஸுல போகும்போது வித்தியாசமா
இருக்கறாப்ல இருக்கும்மா என்று ஆஷிஷ் சொல்வது
உண்மைதான்.
பஸ் பத்தில் பலரின் கொசுவத்தி தொடர்பதிவா
படிச்சபோது என் மனதில் ஓடியது இந்தக் கொசுவத்திதான்.


Friday, April 09, 2010

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சித்திகிட்ட பேசலாம்னு போன் செஞ்சேன்,
மொதல்ல நான் பேசறேன்னு வந்தா பெரிய தங்கை.
நல்லா அர்ச்சனை செஞ்சிட்டு போனை சித்திகிட்ட
கொடுத்திட்டா... :(( அர்ச்சனை எதுக்கு?

முந்தா நேத்து புளிப்பொங்கல் செஞ்சிருக்காங்க வீட்டுல.
எல்லோரும் சாப்பிட உக்காந்திருக்காங்க. எங்க
சித்தப்பா,” இது என் மூத்த பொண்ணுக்கு பிடிச்சதுன்னு!!!”
சொல்ல அதுக்கு அப்ப ஏற்பட்ட கோபத்தை நான்
போன் செஞ்சதும் அர்ச்சனை செஞ்சா தங்கச்சி.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதுக்குத்தான்.

அந்த மூத்த பொண்ணு நான் தான். எஸ் மீ ஒன்லி.
(இதுக்கும் கத்துவாங்க இரண்டு தங்கைகளும்)

ஒரு சாப்பாட்டு ஐட்டம் கூட உன் பேரு சொல்லாம
சாப்பிட விடமாட்டேங்கறாங்க அக்கா!!”” அப்படின்னு
ஒரே புலம்பல்ஸ்.

என் சித்தி திருமதி. உமா. இவங்க என்னை வளத்தவங்க.
கண்டிப்பு கறாரும் ஜாஸ்தி. வெள்ளிவிழா வாணிஸ்ரீ போல
என்னைக் கடிதங்களாலேயே மேம்படுத்தினவங்க. அம்மா
வேலைக்கு போனதால் அதிகமாக அம்மம்மா வீட்டுலயே
இருந்தேன். அப்ப சித்தி தான் வளத்தது. எங்க போனாலும்
அவங்க கொடுக்கு மாதிரி கூடவே போவேன்.

ஊர்ல எல்லோரும் என்னை அவங்க சொந்த பொண்ணுன்னே
நினைச்சிருந்தாங்க.” உமா உன் பொண்ணான்னு கேட்டா!!
ஆமாம் என் பொண்ணுதான், என் அக்கா பொண்ணுன்னா
என் பொண்ணு இல்லையான்னு!! பதில் சொல்லிட்டு போவாங்க”



(சென்ற வருடம் டப்பர்வேர் மேனேஜர்ஸ் மீட்டுக்காக
சித்தி ஹைதை வந்திருந்தாங்க.(சித்தியும் மேனஜர்ல)
அப்போ என் மொபைலில் நான் கிளிக்கிய சித்தி போட்டோ இது.)

அசப்புல அவங்க மாதிரி இருப்பேன்னு பாத்தவங்க
சொல்வாங்க. ஆனா மும்பையில பாட்டிவீட்டுக்கு
பக்கத்துவீட்டுல ஒரு மாமி, “உமா ஏன் எங்கூட பேசலைன்னு!!”
எங்க அம்மம்மா கூட சண்டை போட,”உமா வரவே இல்லைன்னு!!”
அம்மம்மா சொல்ல அங்க வந்த என்னை பாத்து கை காட்ட
“இது என் பேத்தி அப்படின்னு!!” அம்மம்மா அறிமுகம் செஞ்சு
வைக்கும் கூத்து நடந்திருக்கு.

சித்திக்கு அழகா கோலம் போடத்தெரியும். தையல் தெரியும்.
இப்படி ஏகப்பட்ட தெரியும்கள். இன்னைக்கு எனக்கு ஏதாவது
தெரியும்னா அதுக்குக் காரணம் சித்திதான்.

எவ்வளவோ திட்டு வாங்கியிருக்கேன். துணி சரியா மடிக்க,
துணி அலசும் போது பல டெக்னிக்குகள், காய்கறிகளை
கழுவிவிட்டுதான் வெட்டணும், பாத்திரங்களை கழுவி
கவுக்கும் விதத்திலேயே அந்த பாத்திரங்கள் காற்று
உள்ளே போய் சீக்கிரம் காய்ந்து விடவேண்டும்,
உள்ளாடைகள் வெளியே தெரியாமல் காயப்போட
வேண்டும்(அதே சமயம் தேவையான சூரிய ஒளி
உள்ளாடைக்கும் போக வேண்டும்) ம்முச்சு விட்டுக்கறேன்.
இப்படி பல பயிற்சிகள். சரியா செய்யாட்டி திட்டுதான்.

”நீ பர்ஃபெக்டா இருக்கணும், செய்யும் வேலையிலும்
அது தெரியணும்” சித்தி சொல்லிக்கொடுத்தது இது.


சித்தியோட பல குணாதிசயங்கள் என் கிட்டயும் இருக்குன்னு
நல்லாத் தெரியும். ரேடியோ கேட்டுகிட்டே வேலை செய்யும்
குணம், நிறைய்ய படிப்பது,சூடா இல்லாட்டி சோறே வேணாம்னு
பட்னி கிடப்பது, ஏன் இப்ப கோர்வையா எழுதுவது
எல்லாம் அங்கேயிருந்து வந்ததுதான்.(சித்தியும் பல இதழ்களுக்கு
எழுதியிருக்காங்க.) அவங்களை மாதிரி நான்னு எல்லோரும்
சொல்லி சொல்லி அப்படியே ஒரு வாரிசாக நான் ஆகிட்டேன்.

இதெல்லாம் என்னாத்துக்கு இப்பன்னு கேக்கறீங்களா??
எங்க சித்திக்கு தினமும் டெய்லி அர்ச்சனை நடக்குது.
அப்பப்ப சித்தப்ஸுக்கு நடக்குது. :)) நடத்துபவர்கள்
என் அருமை தங்கைகள் தான். காரணம்??? அங்க தான்
இருக்கு மேட்டர். காலேல எழுந்துலேர்ந்து ஒரு நாளாவது
அவங்க பேரைச் சொல்லி சித்தி கூப்பிட்டதே இல்லை. :))
ஆரம்பிக்கும் போதே கலா.... தான்.

பல நாள் தங்கசிங்க பதிலே சொல்லாம் இருக்க, ஏண்டி
காட்டு கத்தல் கத்திகிட்டு இருக்கேன், பதில் பேசாம
இருக்கிங்க ரெண்டு பேரும்னு சித்தி சொல்ல, “நீங்க
கூப்பிட்டது உங்க அருமை பொண்ணை எங்களை இல்ல,
எங்க பேரைச்சொல்லி கூப்பிட்டா நாங்க வருவோம்,
உங்க பொண்ணு வரும் வரை வெயிட்டுங்க!!”” அப்படின்னு
சொல்லியிருக்காங்க. :))))

தங்கச்சிங்க பேரு நித்யா, ஸ்வேதா. பெரிய தங்கச்சி
காலேஜ் முடிக்க போறாங்க. சின்னவங்களுக்கு இன்னும்
ஒரு வருஷம் இருக்கு. இப்ப வரைக்கும் இதே கதைன்னா
என் பேர்ல கோவம் வரும் தானே!!! (செல்லக் கோபம் தான்)

நான் போன் பேசினா இன்னும் கோவம் வரும்.:))
காரணம் சித்தி லைன்ல வரும் போதே “கண்ணம்மா!”
அப்படின்னு கூப்பிடுவாங்க. (என்னைத்தான் :)) )
”ஒரு நாளாவது அப்படி எங்களை கூப்பிட்டிருக்காங்களா!”
அப்படின்னு புலம்பல்ஸ் தான் இரண்டு பேரும்.

சித்திக்கு கல்யாணம் நடந்த போது எனக்கு 16 வயசு.
கல்யாணம் முடிந்து சித்தி மதுரைக்கு பஸ்ல கிளம்பிட்டாங்க.
கல்யாண சத்திரத்தில் அவங்களை கட்டிகிட்டு உக்காந்திருந்து
பஸ்ல ஏத்திவிட்டு வந்தப்புறம் ஒரு வெறுமை. உடனே
ஓடினேன் பஸ்டாண்டுக்கு. நிஜமாவே ஓடினேன். 2 கிமீ
தூரம் இருக்கும். பஸ்ஸ்டாண்டில் இருந்த சித்தியை
கட்டிகிட்டு அழுதேன். எங்க சித்தப்பா இப்பவும்
இதை சொல்லிகிட்டு இருப்பாங்க.


பாவம் சித்தி. என்னால ரொம்ப திட்டு வாங்கறாங்க.:))
”வாயத்தொரந்தாலே உன் பேருதான் வருதும்மா, நான்
என்ன செய்யன்னு கேக்கறாங்க,!!””
பெற்றால்தான் பிள்ளையா!!! இல்லையே வளர்த்த பாசம்
இன்னும் அதிகமாச்சே. கிருஷ்ணனை பெற்றவளை விட
வளர்த்தவள் பாசம் பன்மடங்கு ஆச்சே. என்ன்னைப் பெத்த
மகராசி மேல என் மூத்த தங்கைக்கு பாசம் அதிகம்.
பெரியம்மா, பெரியம்மான்னே கிடக்கும்.

க்ராஸ் மல்டிபிளேகஷன் மாதிரி அன்பு க்ராசாகிடுச்சு இங்க.
அம்மாவின் மேல் வைத்திருக்கும் அந்த அன்பு, மரியாதை,
பாசம் என் சித்திமேலும் எனக்கு உண்டு.

என் தம்பிக்கும் சித்தி என்றால் ரொம்ப பிடிக்கும்.
சிங்கையிலிருந்தாலும் அடிக்கடி போன் போட்டு
பேசிவிடுவான். நானும் தம்பியும் சேர்ந்து சித்திக்கு
ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்தோம். சித்திக்கு
மகா சந்தோஷம். என் பசங்க வாங்கிக்கொடுத்தது
எனும் சந்தோஷம் அது.

என் சித்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதாலேயே
இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். அவங்களுக்காக
இந்தப் பாடல் இங்கே: (இந்தப் பாட்டு என் ஃபேவரீட்டுன்னு
எனக்கே மறந்துப்போச்சு என்பதுதான் சித்தியின் சமீபத்திய
கமெண்ட் :)))



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Wednesday, March 31, 2010

சிலேட்டுக்கு ஒரு கொசுவத்தி

பதின்மவயதுக்கு கொசுவத்தி, பொண்ணு பாக்க போனது/
வந்ததுக்கு கொசுவத்தி சுத்தறாங்க. ஆனா நாம் படிக்கும்போது
இருந்து இப்ப காணாம போன சிலேட்டுக்கு கொசுவத்தி
சுத்தலாம்னு ரொம்ப நாளா ஆசை. பதிவர் பட்டர்ஃப்ளை
சூர்யா சொல்லிகிட்டு இருந்தாரு. இப்ப ஆரம்பிச்சிட்டேன்.


நான் படிச்சது தமிழ் மீடியம் தான். 5 ஆம் வகுப்பு வரை
சிலேட்டு இல்லாமல் பள்ளிக்கு போக முடியாது. வீட்டுப்பாடம்
எழுதி அது அழிஞ்சிடாம இருக்கத் பைக்குள் வைக்காம
கஷ்டப்பட்டு கைவலிக்க தனியா தூக்கிக்கிட்டு போனது
எல்லாம் ஞாபகத்துக்கு வருது.

ஆங்கில மீடியத்தில் படித்த பொழுது எனக்கு இனிமை
நினைவுகள் இல்லை. என்னை அங்கு யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை.
எல்லாம் சைல்ட் ஜீஸஸ் பள்ளியிலே படித்து
பல வருட நட்பாக இருந்த கூட்டம், 6 ஆம் வகுப்பு
முதல் ராணி ஸ்கூலிலும் சேர்ந்தே இருந்தார்கள்.
தனித்துதான் அலைந்தேன். அதை விடுங்க.




சிலேட்டுக்கு வருவோம். 4ஆவது வரை எனக்கு
சிலேட்டு மட்டும் தான். நோட் புக் அதுவும் 80 பக்க
நோட் 4 நோட் அறிமுகம் ஆனது 4ஆவதில் தான்.
அதுவரை சிலேட்டு. எனாமல் சிலேட் மார்கட்டில்
இருந்தாலும் அம்மா ஏனோ கல்லு சிலேட்டு
வாங்கிக் கொடுத்தார் 1 ஆம் வகுப்பில். அது
பொணம் கணம் கணக்கும். ”வேற சிலேட்டும்மா!”
என்று கேட்டதுக்கு ,”அடுத்த வருஷம் பாக்கலாம்!!
என்பது தான் பதில்.

அந்த அடுத்த வருஷம் வரவேயில்லை. ச்சே சே
நான் பாஸானேன். ஆனா சிலேட்டு மட்டும் அம்மா
வாங்கிக்கொடுக்க மாட்டாங்க. ஒவ்வொரு வருஷமும்
நல்லா படிச்சு முதல் 3 இடத்தில் மதிப்பெண்
வாங்கினவங்களுக்கு ஆண்டுவிழாவுல சிலேட்டு
பரிசா கொடுப்பாங்க. 6ஆவது போன பிறகும்
வந்து என் முந்தைய வருட ப்ர்ஃபாமன்ஸுக்கு
சிலேட்டு பரிசா வாங்கின கொடுமை நடந்ததால
என் பள்ளிப்பருவம் கல்லு சிலேட்டோடவே
முடிஞ்சிடிச்சு. :(((




இந்த மாதிரி அழகா மணி வைச்சு சிலேட்டு
பெருமாள் கோவில் மார்கெட்டில் இருக்கும்
கீதா கபே வீட்டு கடையில் வெச்சிருப்பாங்க.
எல்லோரும் லைட் வெயிட்ல சிலேட்டு வெச்சிருக்க
எனக்கு மட்டும் கணமான சிலேட்டு.

அம்மா இந்த சிலேட்டு வாங்க சொல்லும்
காரணம்,” இந்தச் சிலேட்டுதான் பெரிசா இருக்கு,
எனாமல் சிலேட்டு துருபிடிச்சு எழுத முடியாம
போகுது” அது இதுன்னு.ம்ம்ம்

6 ஆம் வகுப்பு வந்ததும் தானே ப்ரோகரஸ்
ரிப்போர்ட் எல்லாம். அப்பல்லாம் காப்பரிட்சை,
முக்காப்பரிட்சை, முழுப்பரிட்சை எல்லாம்
சிலேட்டிலேயே எழுதியிருக்கோம்ல்...

கேள்விகளை டீச்சர் போர்டில் எழுதி வெச்சிருப்பாங்க.
அதைப்பாத்து பதிலை சிலேட்டில் எழுதுவோம்.
சிலேட்டில் எழுத இடமில்லாட்டி வரிசையில்
நின்னு டீச்சரிடம் கரெக்‌ஷன் செஞ்சு மார்க்கை சிலேட்டின்
இடது மூலையிலோ, வலது மூலையிலோ
எழுதி அனுப்புவாங்க. தொடர்ந்து எழுதுவோம்.
கடைசியில் எல்லா மார்க்கையும் சேத்து
100க்கு இவ்வளவு மார்க்குன்னு பெருசா சிலேட்டுல
அதுவும் தண்ணி தொட்டு சாக்பீஸால எழுதி
அனுப்புவாங்க.

அதை கர்வமா தலையில வெச்சுகிட்டு வீட்டுக்குப்
போய் அப்பா, அம்மா வரும் வரைக்கும் அழிபடாம
பாதுக்காத்து காட்டுவது ஒரு சுகம்.

அந்த சிலேட்டை பாதுகாத்தல். சரி இண்ட்ரஸ்டிங்கா
இருக்கும். கல்லு சிலேட்டுக்கு கரி பூசுதல் அது
ட்ரெஸ்ல ஒட்டுதல், ”கோவப்பழம் போட்டு தேச்சா
சிலேட்டு கறுப்பாவே இருக்கும்னு!!” ஃப்ரெண்ட் சொல்ல
அம்மாகிட்ட அனத்தி கோவாப்பழத்துக்கு சொல்லி
வைக்கச் சொல்லுவது. எச்சி தொட்டு அழிக்கக்கூடாது
எனபதால் பக்கத்திலேயே ஈரத் துணி வெச்சு அழிச்சு
எழுதி படித்தது எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.


DEO INSPECTIONக்கு வந்திருந்த பொழுது கணக்கு
டெஸ்ட் கொடுத்து அதை செஞ்சு DEO கிட்டயே
வெரி குட் வாங்கினது எல்லாமும் அந்த சிலேட்டில்தான்.

இந்தச் சுகம் இப்பத்த பிள்ளைங்களுக்கு இல்லை.
எல் கே ஜி யிலேயே நோட்புக் பென்சில்தான்.
என் சிலேட்டுக்கதை பிள்ளைகளுக்குச் சொன்னால்
“சிலேட்டில் பரிட்சை எழுதினீங்களா!!”” அப்படின்னு
ஆச்சரியாமா கேக்கறாங்க.

இதுவே ஆச்சரியம்னா ஆங்கில படிக்க ஆரம்பிச்சதே
4ஆம் வகுப்புல என்பதை எங்க போய்ச் சொல்ல.

சரி சரி அதை விடுங்க.

இப்ப இதைத் தொடர் பதிவாக்கணும்.
(அப்பாடி ஒரு தொடர் பதிவாவது நான்
ஆரம்பிச்சதா சரித்திரத்துல எழுதுவாங்கல்ல) :)))

தொடர நான் அழைப்பது

ஆயில்யன் பாஸ்

அப்துல்லா தம்பி


கண்மணி டீச்சர்


நர்சிம்

இதைத் தொடர வைக்கப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கு
என் நன்றிகள்.

Wednesday, March 03, 2010

ஒரு கொசுவத்தி

பழைய பாணியை திரும்ப கொண்டுவருவதுதான் இப்ப ட்ரெண்ட்.
ஆட்டோகிராப்பில் ஆரம்பித்த பீரியட் ட்ரெண்ட் இப்ப பல படங்களில்
பார்க்கலாம்.

அதுவும் சுப்பிரமணியபுரத்தில் கல் வைத்த டாலர் செயின்,
பெல்ஸ் என அந்த காலத்தை அப்படியே காட்டியிருப்பாங்க.
ஸ்பீக்கர் வெச்சு கட்டின ஆட்டோ, சினிமா விளம்பரம்னு
அப்ப இருந்த வாழ்க்கையை திரும்ப பாத்த மாதிரி இருக்கும்.

அப்போதைய சூப்பர்ஹிட் படங்களை இப்போதைய ட்ரெண்டுக்கு
தகுந்த மாதிரி மாடர்னா ரீமேக்கும் செஞ்சு அசத்தறாங்க.
சூப்பர்ஹிட் பாடல்கள் ரீமிஸாகி வருது.

இந்த நிலமை இங்கே மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் 70,80ல்
இருந்த ஹேர்ஸ்டைல், ட்ரெஸ் ஸ்டைல் எல்லாம் திரும்ப
கொண்டு வர்றாங்கன்னு படிச்சேன்.

பாலிவுட்டிலும் அங்கங்க இந்த பீரியட் சமாச்சாரங்கள்
வருது. பார்க்கும்போது சந்தோஷமா இருக்கும்.

இதைப்பத்தி நினைக்கும் பொழுது அப்போதைய
பாடல்காட்சிகள்!!! பிரம்மாண்ட செட்டுகள் போட்ட
பாடல்கள். அதிலும் டீ.ஆரின் பாடல் செட்டுக்கள்.
அருமையா இருக்கும். அரசியல் தான் அவருக்குத்
தெரியவில்லையே தவிர அருமையான கலைஞன்
அவர் என்பது என் எண்ணம்.



வாசமில்லா மலரிது இப்பவும் எல்லோருக்கும் பிடிக்கும்.


“இது குழந்தை பாடும் தாலாட்டு” என்னமா இருக்கும்
வரிகள். ஹேட்ஸ் ஆப்ஃ டு யூ டீ ஆர்.



கண்ணே கலைமானேன்னு ஒரு படம்.(சந்திரசேகர்
ப்ரொடெக்‌ஷன்ஸ்) ரகுமான் - அமலா ஜோடி.
அமலா டைப்பிஸ்ட் என்பதால் டைப்ரேட்டர் மாதிரி
வடிவமைச்சு பாட்டு இருக்கும்.

பிராம்மாண்ட செட் போட்டு பாடல்கள் எடுப்பதிலேர்ந்து
வித்யாசமா வெளிநாட்டுக்கு போய் படம்பிடிச்சாங்க.
அநேகமாக எல்லாநாடும் படம் பிடிச்சு முடிஞ்சு
போரடிச்சு திரும்ப செட் போடும் நாள் தூரத்துல
இல்லைன்னு நினைக்கிறேன்.

பட்டியாலா சுடிதார் அப்போ பானுமதிம்மா
போட்டு ஆடினதுதான். இப்ப பட்டியாலாதான்
பேமஸ். குட்டைகை, நீட்டகைன்னு ஜாக்கெட்
மாடல்கள் பதினைந்து வருஷத்துக்கு ஒருதரம்
ட்ரெண்டா மறுபடி வருது.

இந்தப் பதிவு என்னைப்போல அந்த பிரம்மாண்ட
செட்கள் உள்ள பாடல்களை ரசிப்பவர்களுக்குள்
ஒரு கொசுவத்தி சுத்தத்தான்.


திங்கள் கிழமை வரவேண்டிய பர்சனாலிட்டி
பதிவுகள் நாளைமுதல் கண்டிப்பா வரும்.


Thursday, January 07, 2010

அவருக்கு தூர்தர்ஷன்னா எனக்கு ரூபவாஹிணி :)

ஆண்டனா திருப்பி இவரு தூர்தர்ஷன் பார்த்த காலத்துல
ரூபவாஹிணி பாக்கவே இன்னொரு ஆண்டெனா ஃபிக்ஸ்
செஞ்சு ரூபவாஹிணி பாத்திருக்கோம்ல. கொசுவத்தி
சுத்தாட்டி தப்பாயிடும்.




அது என்ன கொடுமையோ தெரியாது!!! சென்னை தூர்தர்ஷன்
சரியா வந்ததே இல்லை. ஒரே க்ரெயின்ஸா கொட்டும்.
ஆனா கிளியரா தெரிவது ரூபவாஹிணி தான். அதிகம்
சிங்கள நிகழ்ச்சிதான் வரும்னாலும் சில சமயம் தமிழ்
பாடல்கள் வரும். சில சமயம் சனிகிழமைகளில் தமிழ் திரைப்படம்
வரும். பழைய படங்கள் தான் என்றாலும் ரூபவாஹிணில
பாத்தோம்..


லாட்டோன்னு ஒரு சீட்டிழுப்பு நிகழ்ச்சி. அதாவது நம்ம
லாட்டிரி மாதிரி. அந்த bollகள் உருண்டு வந்து விழும்
அழகே அழகு.(இப்பவும் இந்த நிகழ்ச்சி இருக்கு)




இலங்கைக்கு போனதும் சூப்பர் மார்கெட்டில் தேடியது
இந்த ANCHOR பால் பவுடரைத்தான். :))

இன்றளவும் என் பிள்ளைகளுக்கு பால்னா அதுஆங்கர் தான். அங்கேயிருந்து
யார் வந்தாலும் 4 பாக்கெட் கொண்டு வரச்சொல்லி விடுவார்கள்
பிள்ளைகள்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் ஸ்தாபனம்- இலங்கை வானொலி
இப்படி சொன்னதும் ஞாபகத்துல ஓடுறது அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது,
கே.எஸ் ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சதானந்தா...
வானொலி பிரியையான எனக்கு இவர்கள் குரல்கள் ரொம்ப
பிடிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு வரும் லலிதாவின்
பாட்டுக்குப்பாட்டை மறக்க முடியுமா???

அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது



இதுதான் எனது அபிமான கே. எஸ். ராஜா. இவரை எப்படியாவது
பார்த்துவிட வேண்டுமென நினைத்ததுண்டு. அவர் இறந்த துயரச்
செய்திதான் இலங்கையில் எனக்கு கிடைத்தது.




இப்பவும் உங்களால் கே. எஸ். ராஜா அவர்களின் குரலைக்
கேட்க முடியும். ஒரு வலைப்பூவையே அவருக்காக உருவாக்கி
வைத்திருக்கிறார்கள்.


ராஜேஸ்வரி சண்முகம் இவங்க தான்.


இந்தக் குரல்களுக்கு நானடிமை.

அசைபோட்டு பார்க்கும் அனுபவங்களை, நிகழ்ச்சிகளை தந்தவங்க
இவங்க. இலங்கையில் இருந்த பொழுது தற்செயலாம் என் வீடு
ரூபவாஹிணிக்கு மிக அருகில். அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம்
ஒரு பிரமிப்பு, பெருமை, கர்வம். இந்த இடத்திலிருந்து வந்த
நிகழ்ச்சிகளை நான் புதுக்கோட்டையில் உட்கார்ந்து கொண்டு
அனுபவித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன் என்ற சந்தோஷம்.

Sunday, December 13, 2009

புயலும், மழையும் பின்னே கொசுவத்தியும்...

புயல், மழைக்கெல்லாம் கொசுவத்தியான்னு!!! கேக்கறீங்களா?
ஆமாங்க எல்லாமும் நம்ம வாழ்க்கையில விளையாண்டிருக்குல்ல!!

ஒவ்வொரு வருஷம் நான் அசை போடும் நிகழ்வுகளில் இதுவும்
ஒண்ணு. டிசம்பர் 16 முதன் முதலில் ஹைதை வந்ததும் இந்த
நாளில்தான், குட்டி ஆஷிஷோடு ஹைதைக்கு முதன் முதலில்
வந்ததும் அந்த நாள் தான்.

13 வருடங்களுக்கு பிறகும் மனதில் அப்படியே சிம்மாசனம்
போட்டு இருக்குது அந்த நாள். காரணம்??? அதுதான் கொசுவத்தி.

அக்டோபர் 7 ஆஷிஷ் பிறந்தது. பேருக்கு 3ஆவது மாசம்
”நான் ஊருக்கு போவேன்னு: கிளம்பிட்டேன். அயித்தான்
மட்டும் தனியே இருப்பதால் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு
இருந்தாரு(கல்யாணத்துக்கு முன்னாடி ஹோட்டல்லதான் சாப்பிட்டுகிட்டு
இருந்தாலும், நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தியாச்சுல்ல!!)

குழந்தை பிறந்து மகளை கொண்டு விடுவதுன்னா சும்மாவா!
அப்பா, அம்மா கூட வந்தாங்க. அப்பா சென்னை வரை,அம்மா ஹைதை வரை.

சனிக்கிழமை இரவு இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் புதுகையிலிருந்து
நான், அப்பா, அம்மா குட்டி ஆஷிஷ் எல்லோரும் கிளம்பினோம்.
s4 கோச் முழுவதும் புதுகை கோட்டா. எங்க ஊர்க்காரவுங்க தான்
எல்லோரும். அப்பாவைத் தெரியாதவங்க உண்டா!!

“என்ன ரமணி சார், பாப்பாவை(!!) கொண்டு விட போறீங்களா?”
“பேரனா சார்! சந்தோஷம் சார்”னு எல்லாம் அப்பா கூட பேசிக்கிட்டு
இருந்தாங்க.

இரவு பேருக்கு படுத்து, தூங்காத ஆஷிஷுடன் போராடி
எப்பவோ தூங்கிப்போயி விடிஞ்சா சென்னையை சேர்ந்திருப்போம்னு
கண்ணத் தொறந்தா வண்டி நிக்குது சிதம்பரத்தில்!!!

”இதுக்கு முன்னாடி கிளம்பின கம்பன் எக்ஸ்ப்ரஸ் கூட அப்படியே
நிக்குது சார், மத்த ட்ரையினுங்களும் கூட நிக்குது”ன்னு அப்பாவோட
ப்ரெண்ட் வந்து சொன்னாங்க.

சரி நம்ம இந்திய ரயில் என்னைக்கு சீக்கிரமா போயிருக்குன்னு
இருந்தோம். வண்டி நகர்ற பாடே தெரியலை!!!

காலையில் சென்னையை சேர்ந்திடுவோம் என்பதால் கையில
சாப்பாடு ஏதும் எடுத்துக்கலை. வயிறு பசி. எங்க வண்டி
சிதம்பரம் ஷ்டேஷன் கிட்ட நின்னதால் தம் டீயாவது குடிக்க
கிடைச்சுது. கைவசம் பிஸ்கட் எப்பவும் இருக்கும் அதானால
அன்னைக்கு காலை உணவு டீயும், பிஸ்கட்டும்தான்னு
நினைச்சோம். மணி ஆவுது வண்டி கிளம்பற வழியைக்
காணோம். அப்புறமாத்தான் மேட்டர் தெரிஞ்சது.


பெஞ்ச மழையில ட்ராக் தண்ணியில மூழ்கிருக்கு.
வண்டி போவது கஷ்டம்னு!!! கைக்குழந்தையுடன்
ட்ரையினில் அம்மாடி அந்தக் கஷ்டம்!!!






ஞாயிறு மாலை 7 மணியாகியும் வண்டி சிதம்பரத்தை
விட்ட அகலல. அப்பா திங்கள்கிழமை காலை அப்பா
ஆபிஸ் போயே ஆகணும் அதனால,” அம்மாவும் நீயும்
சென்னை போயிடுங்கன்னு” அப்பா பாதிவழியிலேயே
புதுகைக்கு திரும்ப முயற்சி செய்ய கிளம்பிட்டார்.


வண்டில இருக்கறவங்க அக்கம் பக்கத்து ஊர்களுக்குள்ளாற போய் சாப்பாடு
ஏதும் கிடைக்குதான்னு பாக்கப்போனாங்க! கிடைச்சதை
கொண்டு வந்து எல்லோரும் பகுந்து சாப்பிட்டோம்.
அதுலயும் கைக்குழந்தைக்காரின்னு என் வயிறு நிறைய்யற
மாதிரி எல்லோரும் பாத்துக்கிட்டாங்க.அம்மாவுக்கு அவங்களே
வாங்கிக்குடுத்தாங்க. (இப்பல்லாம் புதுகைக்குன்னு ஒரே
கோச் போடுறதில்லை)


மெல்ல மெல்ல நகர்ந்த ட்ரையின் கடலூர் வந்துச்சு.
அங்க ஒரு 3 மணிநேரம் வாக்குல இருந்து திங்கள்கிழமை
அதிகாலை 6 மணிக்கு எக்மோர் ஷ்டேஷன் வந்து
சேர்ந்தோம். நாத்தனார் வீடு ரயில்வே குவார்டர்ஸ்லதான்.
நேரே அங்கேதான் போனோம்.

ஸ்ரீராமின் அண்ணா வியாசர்பாடியில இருந்தார். மாமியாரும்
அங்கேதான் இருந்தாங்க. அவங்க பேரனை பார்க்கணும்னு
ஆசைப்பட்டதா சொன்னாங்க.(உடல்நிலை சரியில்லாதவங்க)
எக்மோர்லேர்ந்து வியாசர்பாடி போகும் பாதை மழையில
பாதிப்பு, பிரிட்ஜ்ல தண்ணி. மணலி எல்லாம் சுத்தி
வியாசர்பாடிக்கு ஆட்டோல போய் பேரனை காட்டிட்டு
வந்து அன்றைக்கு சாயந்திரம் ட்ரையினில் ஹைதைக்கு
புறப்பட்டு 16ஆம் தேதி செகந்திராபாத்தில் காத்திருந்த
அயித்தானைப் பார்த்து அழணும்போல ஆயிடுச்சு.


நாங்க கிளம்பும்போது இல்லாத மழையும், புயலும்
சடனா வந்து 14மணிநேரத்தில் சென்னையில் சேரவேண்டிய
எங்களை 48 மணிநேரத்துல சேர்த்துச்சு. புதுகை-சென்னை
48 மணிநேரப்பயணம் கைக்குழந்தையுடன் இருந்தாலும்,
நடுவில் அப்பா ஊருக்குத் திரும்பும் அவசர சூழல் இருந்தாலும்
அதிகம் கஷ்டம் தராமல் இருந்தது அன்பு மிகு புதுகைவாழ்
மக்களால்தான்!!

எங்க ஊர் மக்களுக்கு என் நன்றி.

Tuesday, July 14, 2009

மும்பை மழையும் என் கொசுவத்தியும்...

மும்பை இந்தப்பெயர் எனக்குள் எப்போதும் கொசுவத்திதரும்.

மும்பையில் மழை என்று செய்தி பார்த்ததும் என்
கொசுவத்தி சுத்தோ சுத்துன்னு சுத்துது. :))

வாழ்க்கையில் எப்போது என்ன நடக்கும் என்று
நம்மால் சொல்ல முடியாது அது போலதான்
மும்பையில் மழைக்காலத்தை கட்டாயம்
சொல்லலாம்..

அலுவலகம் கிளம்பும் முன் என்றால் சரி என்று
வீட்டிலேயே இருந்து விடலாம். ஆனால் ஆபிஸ்
போய்விட்டால் மழை கணமாகினால் டிராக் நிரம்பிவிடு்ம்.
ரயில்போக்குவரத்து இல்லாவிட்டால் வீட்டுக்கு
செல்லவே முடியாது. அதுவும் மாமா வீடு
வசாய். புறநகர் பகுதியில் இருக்கிறது.




போரிவிலி தாண்டி எப்படியும் டிராக்குகள் நிரம்பி
விடும், இல்லாவிட்டால் ரயில் தடம்புரள வாய்ப்பு.
சர்ச்கேட் - தாதர் வரை கூட தண்ணீர் அதிகமாகும்.

மாமாக்களின் அலுவலகமோ அந்தேரிக்கு அருகில்தான்.
அந்தேரியில் தாத்தா(அம்மாவின் மாமா) வீடு இருக்கிறது
அங்கே போய்விடலாம். ஆனால் நான் சர்ச்கேட்டிலிருந்து
அந்தேரி வருவது அப்பாடி......

“மழை அதிகமாச்சு, டிராக் ரொம்பி போச்சு பஸ்
பிடிச்சு வந்திடுன்னு”மாமா மெசெஜ் கொடுத்திருவாங்க.
சர்ச்கேட்- அந்தேரி ரயிலில் 30 நிமிடம் தான்.
பஸ்ஸில் அதுவும் மழை நேர டிராபிக்கில்
4 மணிநேரம் ஆகும்.

கூட இருக்கும் தோழியுடன் மழையில் நடுங்கிக்கொண்டே
பஸ்ஸ்டாண்ட் வரை வந்து பொங்கி வழியும் பஸ்ஸில்
எப்படியோ ஏறி(ஓடும் ரயிலில் ஏறுவது கூட கஷ்டமில்லப்பா..
நிக்கற பஸ்ஸுல ஏறுறதுதான் கம்ப சூத்திரம் :)) )
பசி தாகத்தோட அந்தேரி வந்து சேர்ந்தால் மாமா
சுடச்சுட சாப்பாடு வாங்கி வைத்திருப்பார்.

அடுத்த நாளும் மழை பெஞ்சு ஆபிஸ் லீவு
விடணும்னு பிரார்த்தனையோட தூங்குவேன்.
நம்ம நேரம் இப்படியாகும்..



சில சமயம் முதல் நாள் மழையில் நனைஞ்ச
களப்புக்காக ஆபிஸூக்கு மட்டம் போடுவேன்.
“அந்தேரிதானே போன, அப்புறம் ஏன் லீவுன்னு”
அடுத்த நாள் கேட்கும் டேமேஜரிடம் “இல்லையே
வசாய்தான் போனேன்” என்று சொ்ன்னால்
“மாமாவுக்கு போன் வீட்டு விசாரிக்கறேன்”
(இதுக்கு ஸ்கூலே பராவாயில்லை:( ) அப்ப்டின்னு
சொல்வார்.

இதே போன்றதொரு மழை நாளில் பயந்தர்-மிராரோடு
இடையில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு
வசாய்க்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அந்தேரி வரை டிரையினில் வந்து நான், மாமாக்கள்
எல்லாம் ஷ்டேஷனிலேயே இருந்தோம்.(அந்தேரி
தாத்தா ஊருக்கு போயிருந்தார்) பசி, மழை.
அந்த நேரத்தில் மாமா சாப்பிட அழைத்துச் சென்றிருந்த
ஹோட்டலில் சாப்பிட்டதுதான் என் முதல்
கடாய் பனீர் டேஸ்ட். செம சூப்பர்.

இரவு 11.30 மணி வரை மூவரும் ஷ்டேஷனில்
உட்கார்ந்திருந்து வசாய் செல்லும் டிரையின்
அறிவிக்கப்பட்டதும் வீடு சேர்ந்த பொழுது மணி
1.

மழை கொட்டே கொட்டென்று கொட்டியது.
டிராக் ரொம்பி லீவு. இரண்டு நாளைக்கு
வீட்டில் கார்டு, அரட்டை, அந்தாக்‌ஷரின்னு
ஒரே அட்டகாசம்தான்.

இப்பயும் மும்பையில் மழை. மழைதரும்
அசொளகர்யங்களையும் மீறி மும்பை மழை
எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

Friday, July 03, 2009

பார்லே-- சில ஞாபகங்கள்

பார்லே பிஸ்கட் வாங்கி வந்து பிள்ளைகளுக்கு
கொடுத்த பொழுது என் நியாபகங்கள் பின்னோக்கிச் சென்றது.

பார்லே... இந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்.

மும்பையில் இருந்த பொழுது வசாய்- சர்ச்கேட்டுக்கான
என் பயணங்களில் விலே பார்லேவைத் தாண்டித்தான்
இருக்கும்.

அந்தேரி ஸ்டேஷன் தாண்டியதுமே ஆவலாக காத்திருப்பேன்.
அது விலே பார்லே ஷ்டேஷன் தாண்டியதும் வரும் பார்லே
கம்பெனியில் இன்று என்ன வாசம் வரும் என்று பார்க்கத்தான்.
:)))

ஏலக்காய் மணக்கும் ஒரு நாள், ஒரு நாள் குளுகோஸ்
மணம் காற்றில் வரும்.

ரயில்வே ட்ராக்குக்கு அருகிலேயே ஃபேக்டரியின்
சுவர்(பின்புறச்சுவராய்த்தான் இருக்கும்) இருந்ததால்
சுகந்த மான மணம்.

சனிக்கிழமை வேலை முடித்து வீடு போகும்போது
ஆகா நாளை “வாசம்” பிடிக்க முடியாதே!!
என நினைத்துக்கொள்வேன்.

பார்லேயின் இந்த விளம்பரம் நினைவிருக்கிறதா??




குளுகோஸ் பிஸ்கட்கள் என்றால் அது
பார்லேவினுடையதுதான்.




மாங்கோ பைட் வந்த போது அதை யார் போய்
வாங்கி வருவது என எனக்கும் தம்பிக்கும் சண்டையே
நடந்தது..


இவையெல்லாம் பார்லேயின் தயாரிப்புக்களில் சில.




சில விடயங்கள் சுகமான நினைவுகளாகும்.
பார்லே எனக்கு சுகந்தமான நினைவுகளாகி
எப்போதும் இருக்கிறது.

Wednesday, July 01, 2009

சிக்கி... சிக்கி..

அப்பாவால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது இது.
பாய்க்கடையில் 1 ரூ்பாய்க்கு வாங்கி வருவார் அப்பா. மேலே
தேங்காப்பூவெல்லாம் தூவி சூப்பரா இருக்கும்.

ஒழுங்கா சைக்கிள் ஓட்டினா, சொன்னபடி
வேலைகளை முடிச்சிருந்தா, ஹிந்தி எக்ஸாம்ல
பாஸ் செஞ்சா என எல்லாத்துக்கும் எனக்கு
அப்பா தரும் ட்ரீட் கடலை உருண்டை.

ஒரே ஒரு மாதம் பள்ளத்தூர் ஆச்சி காலேஜ்
ஹாஸ்டலில் தங்கி இருந்த என்னை பார்க்க
வந்த போது அல்லது பார்க்க வருபவர்களிடமெல்லாம்
அப்பா கொடுத்தனுப்பியதும் இது தான். :))

”ஏன்ப்பா கடலை உருண்டையே வாங்கித்தர்றீங்க”?
அப்படின்னு தெகிரியமா கேட்டப்போ அப்பா சொன்னது,
“இது உடம்புக்கு நல்லது. வெல்லம் இரும்புச் சத்து
தருது. வேர்க்கடலை உடலுக்கு நல்லது. சல்லிசான
விலையில உடலுக்கு நல்லதாச்சேன்னு வாங்கி
கொடுத்தேன். பிடிக்கலைன்னா வேற ஏதாவது
வாங்கித் தர்றேன்” என்றார்.

பழகிபோயிவிட்டாதல் கடலை உருண்டை பிடித்த
பண்டமாகிவிட்டது.

மும்பையிலிருந்து கிளம்பும்போதே மாமா
ஞாபகமா சொல்லி அனுப்புவார். ”புனேல
லோனாவாலா சிக்கி கிடைக்கும். தூங்கிடமா(!!)
வாங்கிகிட்டுவா!”

எல்லா இடத்திலும் கடலைமிட்டாய், கடலை
உருண்டை கிடைக்கிறது. ஆனாலும் லோனாவாலாவில்
புகழ் பெற்றது.
லோனாவாலாவின் இருக்கும் புகழ்பெற்ற சிக்கி
கடையின் போட்டோ இது.




முப்பது வகையான சிக்கிக்கள்.
(பலதுக்கு பேருதான் தெரியாது)

பாதாம், பிஸ்தா, எள்ளு என
பல வகைகள்



சிக்கி பற்றியவிக்கிப்பீடியா:


சென்ற முறை மாமா வந்திருந்த போது
5 பாக்கெட் சிக்கி வாங்கி வைத்திருந்தேன்.
மாமா வந்ததும் கையில் கொடுத்த போது
சின்ன பிள்ளையாய் “ஹை என்னோட
ஃபேவரீட்!! இன்னும் ஞாபகம் இருக்கா உனக்கு?!”
என ஆச்சரியப்பட்டார்.

சென்ற வாரம் இங்கே லோக்கலில் இருக்கும்
அத்தை மகள் வீட்டுக்கு சென்றிருந்தேன்.
அக்காக்கு பூ, அக்காவின் மகளுக்கு பிறந்த
நாள் என்பதால் உடை எல்லாம் வாங்கிக்கொண்டேன்.
ஞாபகமாக 2 சிக்கி பாக்கெட். இது பாவாவுக்கு(அக்கா
கணவர்).

கையில் கொடுத்ததும் ,”விலையுயர்ந்த ஸ்வீட் வாங்கிக்
கொண்டுவந்திருந்தால் கூட இவ்வளவு சந்தோஷ
பட்டிருக்க மாட்டேன். எனக்கு மிகவும் பிடித்ததை
கொண்டு வந்து கொடுத்திருக்காய்” என அக மகிழ்ந்தார்.

அல்ப காசுக்கு வாங்கின பொருளாக என நினைக்காமல்
அவர்களுக்கும் சந்தோஷம். அவர்களின் சந்தோஷம்
கண்டு எனக்கும் சந்தோஷம்.

சரி யாருக்கெல்லாம் கடலை மிட்டாய் பிடிக்கும்?
ஆளுக்கொன்னு எடுத்துக்கோங்க.:))

Thursday, June 25, 2009

ஏதோ நினைவுகள்...

வீட்டில் வயதானவர்கள் இருந்தால் கிடைக்கும்
சுகமோ சுகம். அவ்வா வீட்டில் இருந்ததால்தான்
அப்பாவும், அம்மாவும் எங்கள் கவலையில்லாமல்
வேலைக்கு போனார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அவ்வாவுக்கு காலை உணவு சாப்பிட்டு பழக்கமில்லை.
மதியம் 11 மணி வாக்கில் மீல்ஸ் சாப்பிடுவார். பிறகு
இரவு டிபன் தான். வயதானவர்கள் குழந்தையை போல.
சிறு திண்டி தின்ன அதிகம் விருப்பம் காட்டுவார்கள்.
செரிமான சக்தி குறைவு என்பதால்
உணவின் அளவு குறைத்து சாப்பிடுவதால் வரும் பசி இது.

சாப்பாட்டிற்கு பிறகு ஒரு குட்டித்தூக்கம் போட்டு எழுந்த
பின்னர் நான் பள்ளியிலிருந்து வருவேன். தம்பியும்
வந்து சாப்பிட்டு விட்டு திரும்ப பள்ளி செல்வான்.
2 மணி வாக்கில் அப்பா சாப்பிட வருவார். பல நாட்கள்
கையில் பக்கோடா கொஞ்சமாக காராபூந்தியுடன் தான் வருவார்.

அப்பா கொஞ்சமாக எடுத்துக்கொண்டு மீதியை எங்களூக்கும்
பாட்டிக்கும் தருவார். பாட்டிக்கு அந்த ருசி அதாவது
தூங்கி எழுந்தவுடன் ஏதாவது சாப்பிட வேண்டும் எனும்
எனும் வாய்க்கு அந்த ருசி பிடிக்கும்.

அப்பா பக்கோடா வாங்கி வராத நாட்களில் அல்லது
ஊருக்கு போய்விடும் நாட்களில் காலையில் செய்த
கறியில் கொஞ்சமாக தன்க்கென எடுத்துவைத்துக்கொள்வார்
பாட்டி. அதை சாப்பிடுவார்.



எனக்கும் தம்பிக்கும் விடுமுறையாக இருக்கும் நாட்களில்
ஏதாவது சாப்பிடவேண்டுமென தோன்றும். சோறு தின்னச்
சொன்னால் விளக்கெண்ணெய் குடித்தது போல் முகம் மாறும்.

தம்பி அவ்வாவை தாஜா செய்வான். ”சரி! இந்தா உங்களுக்கு
பிடிச்சது வாங்கிக்கோங்க, எனக்கும் பூந்தி வாங்கிட்டு வா”
என்பார் பாட்டி. அதுவும் குறிப்பிட்ட கடைதான்.

கீழ் 3ஆம் வீதியில் ஒரு வீட்டில் இது போன்ற திண்பண்டங்கள்
தயாரிப்பார்கள். அவர்களது டேஸ்ட் நன்றாக இருக்கும்.
அது எங்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம் என்பதால்
அப்பா ஆபீசுக்கு எதிரில் இருக்கும்(இப்போ அந்தக் கடை
இல்லை) தெலுங்கு மாமா கடையில் வாங்குவோம்.

அப்பாவுக்கு விடயம் தெரிய வேண்டாம். தெரிந்தால்
அனாவசியாமாக செலவு என திட்டுவார் என பாட்டி நினைத்து
அப்பாவுக்குத் தெரியாமல் வாங்கி வரச் சொல்வார்.

ஊருல எங்களைத் தெரியாதவங்களூம் உண்டா?
இந்த லட்சணத்தில் அப்பா ஆபீஸுக்கு எதிரில் இருக்கும்
கடையில் வாங்கினால்??? அந்த கடை மாமாவை
அப்பா, அம்மா, பாட்டி அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் போனாலே அந்த மாமா வேண்டியதை
பொட்டலம் கட்டி கொடுத்துவிடுவார். காசுகொடுத்தால்
அப்பாவோட அக்கவுண்ட்ல!!! சேத்திடறேன்!!!! என்பார்.

அக்கவுண்டில் அதிகமாக பணம் ஏறும் என்பதால்தான்
அப்பா திட்டுகிறார் என்று தெரிந்து பாட்டியே ஒரு முறை
கடைக்கு வந்து,” நான் பணம் கொடுத்தனுப்பினால் அதை
வாங்கிக்கொள்ளுங்கள்!! என்று சொல்லிவிட்டார்.


பாட்டிக்கு தோன்றும் போது எடு சைக்கிளை! என்று
கிளம்பிவிடுவோம். சில சமயம் அப்பா ஆபீஸுக்கு போய்
பாட்டி வாங்கி வரச்சொன்னார் என சொல்ல கோபத்துடன்
அக்கவுண்டில் வாங்கிகோ! என்பார் அப்பா.




பாட்டிக்கு பல் கிடையாது. அதனால் காராபூ்ந்திதான்
சாப்பிடுவார். ஒரு முறை தயிரில் ஊறவைத்த பக்கோடா
வாய்க்கு மெதுவாக இருக்க அப்போது முதல் பக்கோடாவும்
சாப்பிட ஆரம்பித்தார்.
இன்று ஊரில் எத்தனையோ கடைகள் இருக்கின்றன. ஆனால்
சில இடங்களில் அந்த டேஸ்ட் இன்னமும் மாறாமல் இருக்கிறது.
அதில் ஒன்று கீழ 2ஆம் வீதியில் பெரிய படிக்கட்டுகள் வைத்த
வீட்டு வாசலில் விற்கப்படும் பஜ்ஜி.


இன்னமும் மாலை 6 மணிக்கு் அங்கே சுடச்சுட பஜ்ஜி வியாபாரம்.
வாழை இலையில் சுற்றி தருவார்கள். அங்கேயே சாப்பிடுபவர்கள்
தான் அதிகம். அவர்களின் தேங்காய்சட்னி மிக ருசி.




சேட்டுக்கடை ஒன்று கீழ ராஜவீதியில் முன்பு இருந்தது
இப்போது கோர்ட் பக்கம் கடை வைத்திருக்கிறார்களாம்.
அவர்களின் சப்பாத்தியை விட பிரபலம் அல்வா. சுடச்சுட
அப்பா வாங்கி வருவார். இதன் முன் திருநெல்வேலி
அல்வால்லாம் ஒன்றுமே இல்லை என்று எங்கள் ஊர்க்காரர்கள்
சொல்வார்கள். சிவப்புக்கலரில் நெய் மினுமினுக்க சூப்பர் டேஸ்ட்.

அம்மாவுக்கு கை வலி என்பதால் அப்பா சப்பாத்தி சாப்பிடவேண்டுமென்று
தோன்றினால் சேட்டுக்கடைக்கு போய் சப்பாத்தி வாங்கிக்கொள்வார்.

போனில் பேசும்போது அப்பா,” சேட்டு கடைக்கு போயிருந்தேம்மா!!
அல்வாவைபாத்தேன். உங்க ஞாபகம் வந்துச்சு” எனச்சொல்லும்போது
மனதில் ஏதோ உருளும் !!

Tuesday, April 07, 2009

என்னால் மறக்கமுடியாத ஒரு நாள்!!!

அன்று ஆஷிஷ்ற்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்காக
மாம்பலம் பீ.எஸ்.மூத்தா பள்ளிக்கு செல்லவேண்டிய நாள்.
பெற்றோர் இருவரும் உடன் வரவேண்டும் என்று
கட்டாயம் போட்டிருந்தார்கள். ஆனால் சென்றது
ஆஷிஷும் ஸ்ரீராமும் மட்டுமே!!!!

ஆஷிஷின் முறை வந்ததும் தந்தையும், மகனும்
மட்டும் உள்ளே சென்றார்கள். குறிப்பிட்டு
சொன்ன பிறகு தாய் வரவில்லையே என்ற
யோசனையில் பிரின்சிபல் அவர்கள்
“அம்மா எங்கே? ஏன் வரவில்லை?”
என்று கேட்க, ஸ்ரீராம் வாய் திறக்குமுன்னரே
ஆஷிஷ்,” அம்மாவுக்கு இன்னைக்கு ஆபரேஷன்!
ஆஸ்பிடலில் இருக்காங்க. நீங்க சீக்கிரம்
இண்டர்வியூ முடிச்சிட்டீங்கன்னா, நான்
போய் அம்மாவிடம் இருப்பேன்னு” சொல்ல
ஆசிரியர் அதிர்ச்சி ஆகிவிட்டார்.

வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல்
”அட்மிட்டட்” என்று சொல்லி விட்டார்.
அப்படி என்ன ஒரு ஆப்பரேஷன்?

1.15 நாளாக அவதியுற்ற டைபாய்டு
வயிற்றில் ஒரு கட்டியாக உருமாறிவிட்டிருந்தது.

2. சிஸ்டோசில் என்று சொல்லப்படும்
சிறுநீர்ப்பை இறக்கம்(ஆஷிஷை உண்டாகியிருக்கும்பொழுது
அதிக கணமான் என் மாமியாரை தூக்கி சேவை
செய்ததனால் வந்தது)

3. அப்பண்டிசைட்ஸ் வெடித்து உடல் முழுதும்
பரவி விட்டது.


ஏப்ரல் 19 2000ஆம், வருடம் அன்றுதான்
ஆஷிஷின் இண்டர்வியூ + எனக்கு ஆப்பரேஷன்
நடந்தது. தாம்பரத்தில் இருக்கும் வீ.என்.ஹாஸ்பிடல்
அங்குதான் அட்மிட் ஆகி நடந்தது. இது என்
மாமாவுக்குச் சொந்தமானது.(அம்மாவுக்கு தூரத்து
உறவு)

வயிறு பெரிதாக ஊதி, அதி பயங்கர வாந்தி
ஏதும் உண்ணமுடியாத நிலையில் அனுமதிக்கப்பட்டேன்.
மூக்கில் ட்யூப் போட்டு ”பைல்” கலெக்ட்
செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

ஆப்பரேஷன் சக்ஸஸ். ஆனால் என்ன காரணமோ
என்னால் கண்ணைத் திறக்கமுடியாமல் மயக்கமாகவே
கிடந்தேன்.

எல்லாம் சரியாக நடக்க இது என்ன சோதனை?
உடம்பிலிருந்து ஏதோ வெள்ளை வெள்ளையாக
பஞ்சுபோல் வெளியாகிக்கொண்டிருந்தது!!!

நிலமை தீவிரமாகிவிட்டதை உணர்ந்து
மேலும்சிறப்பு மருத்துவர்களை வரவ்ழைத்தார்
மாமா.(அப்போது மாமா ராமசந்திராவிலும்
வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.மாமா
குழந்தைகள் மருத்துவ நிபுணர்)

ஆப்பரேஷன் ஃபார்மாலிட்டியாக உறவினர்களிடம்
”கையெழுத்து” வாங்குவார்கள். ஆப்பரேஷ்ன்
முடிந்த பிறகும் இருக்கும் என் உடல்நிலையால்
“முடிந்தால் காப்பாற்றுவோம்” என மறுமுறை
அயித்தானிடம் கையெழுத்து வாங்க வேண்டிய
நிலை.

எல்லோரும் ஒருநாள் சாகவேண்டியதுதான்
ஆனாலும் நான் இறந்தால் 3 மாதக் கைக்குழந்தையான
அம்ருதாவையும், 31/2 வயது ஆஷி்ஷையும்
வைத்துக்கொண்டு அயித்தான் என்ன கஷ்டப்படப்
போகிறாரோ??!! என்பதுதான் என் கவலையாக
இருந்தது. அந்தக் கஷ்டம் அவர் படக்கூடாது
என போராட ஆரம்பித்தேன். நான் இறக்க
மாட்டேன்! பிழைத்து வருவேன்! என
திடமாக நம்பினேன்.


பேச முடியாது, மூக்கில் ட்யூப்! பசி எடுக்கும்
ஆனால் சாப்பிட முடியாது.(டாக்டர்.நாகராஜ்
மாமா வந்து என்னை பார்க்கும்போதெல்லாம்
”பசிக்குதுமாமா!” என்பேன். மாமாவின் வீடு
ஆஸ்பிடலுக்கு மேலே தான். பாட்டியிடம்
போய்”எனக்கு சாப்பாடு வேண்டாம். கீழே
பசிக்கு சாப்பிடமுடியாமல் கலா அவஸ்தை
படுகிறாள்” என் அழுவாராம். :( )

அத்தை மகளீர் மருத்துவ நிபுணர். அம்ருதாவின்
பிரசவம் பார்த்ததும் அத்தைதான். பல மருத்துவர்கள்
வந்து பார்ப்பார்கள். பல ஸ்பெஷலிஸ்டுகள்!!
”முடிந்தவரை பார்ப்போம்!!” என்று சொல்லி
கொஞ்சம் கொஞ்சம் கை விரிக்க ஆரம்பித்தார்கள்.


3 மாதக் குழந்தை அம்ருதா என் நாத்தனார் வீட்டில்.
யாரிடமும் போகமாட்டேன் என்று ஆஷிஷ் அப்பாவுடன்
அலுவலகம், சில நாள் தான் மட்டும் அப்பா வரும்வரை
வீட்டில் தனியாக இருப்பது என இருந்த நிலை கேட்டு
கண்ணீராக வரும். ”குழந்தைகளைப் பார்த்தே
ஒரு வாரமாகிவிட்டது”! அத்தையிடம் கண்ணீர் விட
அறைக்கு வெளியே அம்ருதாவின் முகத்தைக் காட்டினார்கள்.
ஆஷிஷ் வந்து பார்த்துவிட்டு,” நான் அப்பா கூட இருக்கேன்.
சீக்கிரம் வாம்மா!!” என்றான்.


யேசுநாதர் உயிர்த்தெழுந்த
நந்நாள் அன்றுதான் பைல் வருவது நின்று மூக்கிலிருந்து
ட்யூபை அகற்றினார்கள். அதுவரை 110 பாட்டில்கள்
சலைன் மட்டுமே என் உணவாக இருந்தது. அன்றுதான்
முதன் முதலாக செரல் சாப்பிட்டேன். படுத்த
படுக்கையாக இருந்த நான் நடக்க ஆரம்பித்தேன்.
என் நம்பிக்கை வீணாகவில்லை. ஆம்
நானும் உயிர்த்தெழுந்தேன். ”பிழைப்பது கடினம்”
என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் பிழைத்தது
புனர்ஜென்மம் தான். அந்த மருத்துவமனையில்
வேலை பார்க்கும் ஜான் அண்ணாவும் அவரது
மனைவியும் எனக்காக தினமும் பிரார்த்தித்தார்களாம்.
ஈஸ்டர் அன்று நான் எழுந்ததில் அவர்களுக்கு
பெருமகிழ்ச்சி.


ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வுகளை என் மனம்
அசைபோடாமல் இரு்க்காது.

நான் உயிர்த்தெழுந்தது என் தன்னம்பிக்கையால்தான்
என டாக்டர் மாமா எப்போதும் சொல்வார்.

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாளன்று
மாமா என்னையும் அயித்தானையும் அழைத்து
தனியாகச் சொன்னது இப்போதும் என் காதில்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

“நீ தன்னம்பிக்கை பெண்தான். அதில் எந்த
மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் ஒரு குழந்தை
மருத்துவ நிபுணணாக நான் வியப்பது ஆஷிஷைப்
பார்த்துதான். தன் தாயை இவ்வளவு மோச
மான உடல்நிலையைப் பார்த்த பிறகும்
தைரியமாக உலாவருகிறான். இதுவே
மற்ற குழந்தையாக இருந்திருந்தால் அந்தக்
குழந்தையை அட்மிட் செய்யும் அளவுக்கு நிலமை
மோசமாக இருக்கும். ஐ அம் ரியலி ப்ரவுட்
ஆஃப் ஆஷிஷ் அண்ட் யூ” என்றார்.

தாயைப்போல பிள்ளை என்பார்கள். என்னைப் போல்
ஆஷிஷும் இருப்பதில் ஆண்டவனுக்கு நன்றி.

இது நடந்து 6 மாதத்தில் அயித்தானுகு இலங்கைக்கு
மாற்றலாகிவிட்டது. வேறு வேலைக்கு போகவும்
முடியாது(ஆஸ்பிடல் செலவு வேறு கன்னாபின்னாவென்று
ஆகிவிட்டிருந்தது) நானும் பிள்ளைகளும் மட்டும்
சென்னையில் தனியாக.


”எந்த தைரியத்தில் என்னை இப்படி தனியாக
விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்!!” என்று கேட்டபோது
அயித்தான் சொன்னது “உன் தன்னம்பிக்கை மேல்
எனக்கு பரிபூர்ண நம்பிக்கை” என்று. :))))

Monday, March 02, 2009

தூக்கத்தைகெடுத்த அம்மாவும், தேளும்

படிக்கும் காலத்தில்அதிக பட்சமா 8 மணிக்கு
இல்லாட்டி 8.30க்கு தூங்கப்போயிடுவேன்.

எங்கவீடு ஓட்டு வீடுதான்.

காலேல 3.30க்கு சரோஜாம்மா பால் கொண்டுவந்து
கொடுத்திட்டு என்னியத்தான் கூப்பிடுவாங்க.

அதை வாங்கி வெச்சிட்டு பல்லை விளக்கிட்டு
சமையற்கட்டு கேஸ் அடுப்பு மேடைல
உக்காந்து படிக்க ஆரம்பிப்பேன். 5 மணிக்கு
சங்கு ஊதற சத்தம் கேட்டதும் பாட்டி எந்திரிப்பாங்க.
அவங்க பல் விளக்கி, காலைக்கடன் முடிச்சு
வர்றவரைக்கும் சிம்மாசனத்தை விட்டு இறங்காம
கருமமே கண்ணாயிரமாக படிச்சிகிட்டு இருப்பேன்.

பாட்டி காபிப்போட வந்ததும் நான் தூங்கப் போயிடுவேன்!!
அப்புறம் பக்திமலரோடு எந்திரிச்சு மத்த வேலைகள்,
(தண்ணி பிடிக்கறது.... இத்யாதிகள்)


மதியம் தூங்கும்
பழக்கம் இல்லாததாலும், காலேல சீக்கிரம்
எழுவதாலும்,”எங்கடி சேச்சி? 8 மணிக்கே
அவுட்”ன்னு :)) சொல்ற மாதிரி தூங்கப்போயிடுவேன்.

எங்கம்மா அநியாயத்துக்கு படுத்துவாங்க.
அவங்களால சீக்கிரம் படுக்க முடியாது
என்பதால் என்னிய எப்பவும் சீக்கிரம் தூங்கப்போறேன்னு!
திட்டிகிட்டே இருப்பாங்க. அப்பா 8 மணிக்குத்தான்
வீட்டுக்கு வருவாரு. அதுக்கப்புறம் அவரு குளிச்சு
சாப்பிட வருவதற்குள் 8.45ஆகிடும். சாப்பாடு
சூடா இருக்கணும், ஹாட் பேக்கில் எல்லாம்
வைக்கக்கூடாது என்பதால் அப்பா சாப்பிட்ட
பிறகு அம்மா தான் சமையற்கட்டை சுத்தம்
செய்வாங்க. (அவங்க வேலைக்கு போறாங்கன்னு
பாட்டிதான் சமையல், தண்ணி மத்த வெளி வேலைக்கு
நான், பாத்திரம், துணிக்கு வேலைக்காரம்மா. இவுங்க
வந்து செய்யுறதே அப்பாவுகு சுடா பலகாரம் செஞ்சு,
மேடையைக் கழுவுறது. அதுக்கு தான் அதிகம்
வேலை செய்வதா திட்டிகிட்டே இருப்பாங்க!!! )


அன்னைக்கு (21st may 1991)
அப்படித்தான். வாழ்க்கையில ரொம்ப
சந்தோஷமா இருந்த நந்நாள். +2 பரிட்சை முடிவுகள்
வந்து 70% மேல மார்க் வாங்கி சந்தோஷமா இருந்தேன்.
எப்பவும் போல 8 மணிக்கு தூங்கப்போயிட்டேன்!!

கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து சீக்கிரம் குளிச்சிட்டு
சாப்பிட உக்காந்தாங்க. ஆரம்பிச்சாங்க அம்மா!!
வீட்டுல பொண்ணு இருந்தும் எல்லா(!!) வேலையும்
நானே செய்யணும். ஒரு நாளாவது 8 மணிக்கு
தூங்கப்போகாமல் சமையற்கட்டை கழுவி விட்டாத்தான்
என்னவாம்?? அதுஇதுன்னுபுலம்பிக்கிட்டே இருந்தாங்க.


அவங்க சாப்பிடற வரை காத்திருந்து, என் ரேடியோவோடு
போய்,”முதல்ல சமையற்கட்டை விட்டு
வெளியே போங்கன்னு” கோபமா கத்திட்டு விவிதபாரதி
கேட்டுகிட்டே கட கடன்னு அடு்ப்பைக் கழுவி,
மேடையையும் சோப்பு போட்டுக் கழுவிட்டு
அடுப்புகடியிலேர்ந்து கையால தண்ணியைத் தள்ளினா??
அவ்வ்வ்வ்... கையில என்னமோ டக்குன்னு குத்துச்சு!!!
செம வலி.. வாய் ஆடோ மேடிக்கா ஷ்ஷ்டி கவசத்தை
சொல்ல ஆரம்பிக்க, வாசல்ல உக்காந்திருந்த அம்மா
ஓடிவந்து என்ன ஆச்சுன்னு? கேக்க எல்லாம் உன்னாலதான்
ஒழுங்கா தூங்கிகிட்டுருந்தவளைத் திட்டினன்னு எந்திரிச்சு
வந்து அடுப்பைக் கழுவினேன். என்னவோ குத்திடுச்சி(??)
அப்படின்னு சொன்னேன்.

கட்டைவிரலுக்கு கீழே சரி வலி. அம்மா அடுப்பை எடுத்துப்
பார்த்தா???? அங்கே உக்காந்திருக்காரு மிஸ்டர்.வெள்ளைத்தேள்!!!!





அம்மாடி தேளுக் கொட்டிடுச்சேன்னு? அம்மா பதற
உன் வார்த்தை தந்த வலியோட தேள்கொட்டினது பரவாயில்லைன்னு
கோபமா சொல்லிட்டு வாசல்ல போய் உக்காந்துட்டேன்.

ராத்திரி நேரம் எந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிகிட்டு போகலாம்னு?
யோசிக்க, எதிர்வீட்டு செல்வராஜ் மாமா,”என்ன மருமகளே!
தூங்காம இங்க உக்கந்திருக்கன்னு? கேட்டாரு.

தேளுகொட்டிடுச்சு, அதான் எஞ்சாய் செஞ்சுகிட்டிருக்கேன்னு
சொல்ல, அவர் அரக்க பரக்க சைக்கிள்ள உக்கரவெச்சு
கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு(அவர் அங்கதான்
வேலை செய்யறார்) கூட்டிகிட்டு போய், தேளோட
கொடுக்கு கொஞ்சமா இருந்ததை எடுத்து, ஊசி போட்டு
கூட்டிகிட்டு வந்தாரு. கூட வர்றேன்னு சொன்ன அம்மாவை
“தேவையில்லை நானே போய்க்கிறேன்னு” சொல்லிட்டோம்ல.

11 மணி ஆகிடுச்சு. ஆஸ்பத்திரிலேர்ந்து வர்றவழியில
போலீஸ்டேஷ்ன்!! எப்பவும் இல்லாத திருநாளா
நிறைய போலீஸ். ஒவ்வொரு முக்குலையும்
நிக்குறாங்க!!!! என்ன பிரச்சனையோன்னு தெரியாம
மாமா பதமா பத்திரமா வீட்டுக்கு கொண்டுவந்து
சேத்தாரு. தூங்கறவளை எழுப்பி தேள் கொட்ட
வெச்சிட்டான்னு அப்பா நல்லா பாட்டு விட்டிருக்காரு.

வலி ஊசி மயக்கமெல்லாம் சேர்ந்து தூங்க
ஆரம்பிச்சேன். கை வலி மட்டும் குறையல.
நடுவுல கண் முழிச்சு பாத்தா? அம்மா, அப்பா,
செல்வராஜ் மாமா எல்லோரும் திண்ணையில
உக்காந்து பேசிகிட்டிருந்தாங்க.

அப்பா ரொம்ப திட்டாறாரோன்னு போய்
பாத்தா, செல்வராஜ் மாமா,” நல்ல வேளை
மருமகளே! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்.
ராஜிவ் காந்தி இறந்திட்டாரு” அதான் போலீஸ்
அங்கங்க நிக்குதுன்னு!!”’ தாக்கல் சொல்ல.

ஆஹான்ன்னு இருந்துச்சு.


இப்பவும் ராஜீவ் காந்தி இறந்த நாளை என்னால்
மறக்கவே முடியாது!!

இன்னமும் வலது கையில் அந்த வலி
இருந்துகிட்டே இருக்கு.(கூடுதல் உபயமா
ஹாஸ்டல்ல இருக்கும்பொழுது ராகிங்
செய்யறேனு கல்லை எடுத்து போட்டாங்க.
அது நேரே தேள் கொட்டின இடத்துல விழுந்து
கட்டைவிரல் மட்டும் துடிச்சிகிட்டே இருந்துச்சு!!)

இதே மாதிரி தூங்கிகிட்டிருத தம்பியையும்
அம்மா திட்ட அவனும் அவசரமா துணியை
எடுத்து வந்து பரபரன்னு துடைக்க அவனுக்கும்
தேள் கொட்டிச்சு. (நான் அப்போ மும்பைல
இருந்தேன்!!)


இப்ப என்ன திடும்னு இந்த கொசுவத்தின்னு
கேக்கறீங்களா? பாம்பை பத்தி படிச்சதும்
நம்ம தேள் ஞாபகம் வந்திருச்சு. அதான்.

கருநாகமும் 13ஆம் நம்பர் வீடும்.

Wednesday, February 18, 2009

தனியே தன்னந்தனியே!!!!

விடுமுறை நாட்கள் சோம்பேறித்தனமாக
இருக்கும்.
அம்மா ஏன் அப்படிச் செய்தார் என்று தெரியாது!!
ஆனால் அம்மா வேலைக்குச் செல்லும்பொழுது
என்னை வீட்டில் வைத்து பூட்டிவிடுவார்.
பாட்டியிடமும் கண்டிப்பாக,” வெளியே
விடக்கூடாது !” என்று சொல்லிவிடுவார்.
அப்பாவும் எதுவும் சொன்னதில்லை.

வீட்டிலும் விளையாட்டுச் சாமான்கள்
கிடையாது(அம்மா தானே களிமண்ணால்
செய்து கொடுக்கும் சொப்பு சாமன்கள்
மட்டும் தான்)!!

நாங்கள் குடியிருந்த வீட்டில் 3 குழந்தைகள்.
இங்கோ நானொருத்தி மட்டும்!! அவர்களுடன்
கூட விளையாட அம்மா அனுப்ப மாட்டார்கள்.
வேலைகள் முடிந்த பின் பாட்டியுடன்
பல்லாங்குழி, தாயம் விளையாடலாம்.
சாயங்களில் ராமாயணம், மஹாபாரதம்
போன்ற கதைகள் சொல்வார் பாட்டி.

அம்மம்மா வீட்டுக்குச் செல்லும் பொழுது தான்
அம்மம்மா அக்கம் பக்கத்துப் பிள்ளைகளுடன்
விளையாட அனுப்புவார்.

தனிமை! தனிமை!தனிமை தான். எப்படிக்
கழித்தேன் அந்த நாட்களை என்று புரியவில்லை.
எனக்கு 8 வருடங்கள் கழித்து தம்பி. அவனோடுதான்
விளையாடுவேன். ஒரு தாயாய் அவனைப் பார்த்துக்
கொள்ள மிகவும் பிடிக்கும்.

”ஒரு நாள் அம்மாவிடம் எனக்கு போரடிக்கிறது”
என்றேன். புத்தகம் படிக்கிறாயா? என்றார்.
சரிம்மா! என்றேன். மாலை வரும்பொழுது
தனது பள்ளி நூலகத்திலிருந்து சிறுவர்கள்
இதழ்கள் கொண்டுவந்துக் கொடுத்தார்.
அதில் அழ.வள்ளியப்பா ஆசிரியராக இருந்த
ஒரு சின்ன புத்தகமும் இருந்தது. அடுத்த
நாள் மதிய உணவுக்கு முன்னரே படித்து
முடித்துவிட்டேன்.(அதான் போரடித்துக்
கொண்டு இருந்தேனே!!)

அம்மாவின் பள்ளி நூலகத்து புஸ்தகங்கள்
அம்மாவால் ஃபில்டர் செய்யப்பட்டு
கொண்டு வரப்பட்டன. படிக்க படிக்க
இன்னும் இன்னும் என கேட்கும் நிலை
ஆனது. தினமும் தூக்கி வர அம்மா
கஷ்டப்படுவதைப் பார்த்து
“உங்களுக்குத் தொந்திரவு தராமல்
நானும் பள்ளிக்கு வந்து ஒரு ஓரத்தில்
அமர்ந்து எத்தனை புத்தகம் வேண்டுமோ
படிக்கட்டுமா?” என்றேன்.

ஒரு நாளைக்கு இவ்வளவு புஸ்தகம்
எடுக்கலாம் என்று வரம்பு இருக்கிறது,
ஆனாலும் வா பார்க்கலாம் என்றார்.

என் படிக்கும் ஆர்வத்தைப் பார்த்து
அம்மாவுடன் வேலைப் பார்க்கும்
ஆசிரியைகள் தனது கணக்கில்
எனக்கு புத்தகம் எடுத்துக் கொடுப்பார்கள்.

அம்மா எங்கும் வெளியே செல்ல நேர்ந்தால்
எனக்கு மிகவும் பிடித்த கனகாம்புஜம் டீச்சர்
வகுப்பில் அமர்ந்து படித்துக்கொண்டிருப்பேன்.

எத்தனையோ நாவல்கள்! விதம் விதமான
எழுத்தாளர்கள் எல்லாம் அப்போதுதான்
அறிமுகமானது.

படிக்கும் பழக்கத்தை அம்மாதான் ஏற்படுத்திக்
கொடுத்தார். என் தனிமை தீர்த்ததில், தீர்ப்பதில்
புத்தகங்களுக்கு முதல் இடம். அடுத்து என்
இனிய தோழி வானொலி.
:))

அன்று அம்மா என்னை வீட்டினுள் அடைத்து
வைத்ததும் நல்லதுக்குத்தான் என்று நான்
நினைக்கிறேன். இன்றுவரை வம்புபேச
யார் வீட்டுக்கும் சென்றதில்லை. அனாவசியமாக
வெளியே சுற்றுவதும் இல்லை.என்
வேலை முடிந்ததும் வேறு என்ன செய்யலாம்?
என்று யோசித்து அதை முடிப்பேன்.