Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Friday, August 09, 2013

முதன் முதலில் பார்த்தேன்....... காதல் வந்தது!!!!!

முதல் கணிணி அனுபவம் பத்தி எழுதச்சொல்லி ஆதி அழைப்பு அனுப்பியிருந்தாங்க. இதோ பதிவு. இங்கிலீஷ் டைப்ரடைட்டின் ஹையர்,லோயர் பாஸ் செஞ்சு முடிச்சாச்சு. தமிழ் கீஸ் ஸிஃப்ட் போட்டு அடிக்க கஷ்டமா இருக்குன்னு சொல்லி மாட்டேன்னு சொல்லிட்டேன். ஷார்ட் ஹேண்ட்ரைட்டிஙெல்லாம் வேணாம்னு ஃபிரியா இருக்க நினைச்ச நேரம். விதி வலியது.  ஒரு நாள் அப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், நம்ம பிருந்தாவன் ஸ்டாப்பிங் கிட்ட “மிதுன் கம்ப்யூட்டர் செண்டர்னு” இருக்குல்ல அங்க போய் பூங்குழலின்னு என் ஃப்ரெண்டோட மகள் இருப்பாங்க. அவங்க கிட்ட பேசி நாளைக்கு பணம் கட்டிடறேன். கம்ப்யூட்டர் கிளாசுக்கு போ” அப்படின்னு அப்பா சொல்ல  ஹை கம்ப்யூட்டர்னு சந்தோஷமா இருந்தாலும், நம்மளை ஃப்ரியாவே இருக்க விடமாட்டாங்களான்னு கோவம்.

கோவமெல்லாம் வெளில காட்டினோம் “கெட் அவுட் தான்”. மிதுன் கம்ப்யூட்டர்ட் செண்டர்தான் புதுகையில் புதுசு, மொதோ செண்டர்லாம். அதோட ஓனர் அம்மாவோட வேலை பார்த்த டீச்சரின் தம்பி கனகசபாபதி சார்.
அடுத்த நாள் காலேஜ் முடிச்சு வந்ததும் மிதுன் கம்ப்யூட்டர் செண்டர் போய் பூங்குழலி அப்படிங்கறவங்க யாருன்னு கேட்டு விசாரிச்சு போய் நான் சுய அறிமுகம் செஞ்சுகிட்டதும் அந்த அக்கா தான் எனக்கு கிளாஸ் எடுக்க போறதை சொன்னாங்க.


கம்ப்யூட்டர் இருக்கும் ரூமுக்கு கூட்டிபோய் காட்டினாங்க.  கன்னாபின்னா சூடாகிடும். ஏசி இல்லாட்டி ஃபேன் ஓடிகிட்டே இருக்கணும்னெலலாம்சொன்னாங்க. ஏதோ மொதோ நாள்லேர்ந்து கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார போறதா நினைச்சிருந்தேன். ஃப்ளோ சார்ட்,
அதுஇதுன்னு ஏதோ சொல்லிகொடுத்தாங்க. வாரத்துக்கு ஒருநாள் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காரலாம்.  அங்கே பேசிக்ஸ் கோர்ஸ் முடிச்சேன்.

மும்பையில் வேலை கிடைச்சு போயாச்சு. அங்கே ஒரு வருஷம் டைப்ரைட்டிங் வேலை. புது ஆபிஸுக்கு போன நேரம் என்னை கம்ப்யூட்டர்
டிபார்ட்மெண்ட்டுக்கு மாத்தினாங்க. பேசிக்ஸ் தெரியும் என்பதால இல்லை கீ போர்டை பார்க்காம கடகடன்னு அடிச்சு தள்ளுவேன் எனும் தகுதிதான்.
( டேடா எண்ட்ரி) அங்கே கூட வேலை பார்த்த கல்யாண் அண்ணா ஃபாக்ஸ்ப்ரோல எப்படி வேலை செய்வதுன்னு சொல்லிகொடுதாப்ல. அப்பதான் மோடம் வெச்சு இமெயில் அனுப்புவது அமலுக்கு வந்தது. ஃபேக்ஸ் மாதிரியே போன் அடிக்கும். எடுத்தா கட் ஆகிடும். இந்த மாதிரி காமெடிகள் அடிக்கடி நடக்க காட்கோபரில் இருக்கும் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டுக்கு போன் போட்டு ஐயா, நாங்க இமெயில் அனுப்பறோம், யாரும் போனை எடுத்து அட்டெண்ட் செய்யாம பாத்துக்குங்கன்னு சொல்லி போனுக்கு ஒரு காவலாளி போட்டு வெச்சு மெயில் அனுப்புவோம். அந்த மோடம் வேலை செய்ய ஆரம்பிச்சதும் கொடுக்கும் சவுண்ட் ஒரு மாதிரியா இருக்கும்.  கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டில் நாம ஒரு பெண்புலியா இருந்தது பலருக்கு காண்டு. கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்ல ஆண்கள் மட்டுமே எங்க ஆபிஸில் இருந்த காலகட்டத்துல மும்பை ரீஜனல் ஆபிஸில் ஒரு பெண் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்ல இருக்கறதுன்னா சும்மாவா!!! :))


கல்யாணம் ஆச்சு. ஹைதை அப்புறம் சென்னை போயிட்டோம். 2001ல அயித்தானுக்கு ஆபிஸ்ல கம்ப்யூட்டர் வாங்க லோன் கொடுத்தாங்க.  அவங்க வேலைகளுக்கு உதவியா இருக்கும்னு கம்ப்யூட்டர் வாங்கினோம். அதை வாங்கின உடனேயே அயித்தான் மட்டும் இலங்கை போயிட்டாரு. அப்புறம் கணிணி நம் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. :)) அப்பவே ஹாட்மெயில், யாஹூ மெயில்லாம் வெச்சு காண்டாக்ட் செஞ்சுகிட்டு இருந்தோம்.

கொழும்பு போனதக்கப்புறம் பசங்களுக்கும் ரொம்ப உதவியா இருக்கும் என்பதால (எடகஸல் கோர்ஸ் கட்டாய பாடம் அவங்களுக்கு) கணிணி அத்தியாவசிமாகிடிச்சு.அயத்தானுக்கு கம்பெனியே் லாப்டாப் கொடுக்க,
எந்த தடையும் இல்லாம :) கணிணி பகல் நேரத்தில் நம்ம ஆளுகைக்கு வந்து,

 எத்தனையோ விதமா கணிணி எனக்கு உதவியா இருக்கு. இப்போ என்னை பதிவராவும் ஆக்கி கூடிய சீக்கிரமே 1000 பதிவு கண்ட சிகாமணியா ஆக்க இருக்கு.

விட்ட குறை தொட்ட குறையா கடந்த 22 வருஷமா கணிணி என் வாழ்வில் பின்னி பினைஞ்சிருக்கு.

தன்னுடைய அனுபவங்களை பகிர நினைக்கிற யாரும்  தன் முதல்கணிணி அனுபவத்தை பதிவிட அழைக்கிறேன்.






Thursday, July 14, 2011

முத்தான மூன்று- தொடர் பதிவு

முக்கனிகள், மூவேந்தர், முத்தமிழ், மூன்றுமுடிச்சு, முக்கண்ணன் என 3க்கு
இருக்கும் சிறப்புக்கள் எவ்வளவோ!!! அதனால்தான் நம் வலையுலகில் ரொம்ப
நாளைக்கப்புறம் (ரொம்ப நாளைக்கப்புறம் நான் மாட்டிகிட்டதால என தெரியாம
இருந்திருக்கலாம்) தொடர் பதிவு.

இந்த 3 பத்தி பேசும்போது எனக்கு மூனைத் தொட்டது யாருங்கற கேள்விக்கு
ஆம்ஸ்ட்ராங்னு பதில் சொல்லி பளார்னு அறைவாங்கின வடிவேலுவும்,
”மூனைத் தொட்டது அமிர்தலிங்கம்”னு சொல்ற காமெடி நினைவுக்கு வருது. :))

சகோ வெங்கட் நாகராஜ் தொடரச் சொல்லி அழைச்சிருக்காரு. இதோ
என்பதில்கள் முன்னாலே!! பாத்து மார்க் போடுங்க. :)))

1. நீங்கள் விரும்பும் 3 விஷயங்கள்.

1.அப்பவும்,இப்பவும், எப்பவும் கானக்கந்தர்வனின் குரல்.
2. ஊர் சுத்துவது ( அட பயணங்களைச் சொன்னேங்க)
3. மழலைகளுடன் பொழுதை கழிக்க முடிந்தால் ஆனந்தமே!

2. விரும்பாத 3 விஷயங்கள்:

1. பணத்தை கண்டு குணம் மாறுபவர்கள்
2.ரோட்டில் வெக்கம் மானம் இல்லாம பிஸ் அடிக்கும்
ஆண்கள்.
3. தீவிரவாதம்

3. பயப்படும் 3 விஷயங்கள்:

ஆஹா!!!

1. கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்தேதான் என் வேலைகளைச்
செய்கிறேன்.
2.பல சமயங்களில் நான் மிகவும் ரசிக்கும் தனிமையே எனக்கு
சில சமயங்களில் பயத்தை தருவது ஏன்னு புரியலை!!!
3. தெனாலி மாதிரி வீட்டை விட்டு இறங்கி திரும்ப வீடு வந்து
சேரும் வரை பயமால்ல இருக்கு. (நான் வெளியில போவது
பத்தி இல்ல, வீட்டு நபர்கள் பத்திரமா வீடு வந்து சேரும் வரை
திக் திக் தான். காலம் கெட்டு கிடக்கு!)


4. உங்களுக்கு புரியாத 3 விஷயங்கள்:

1. தெலுங்கானா தருவாங்களா? மாட்டங்களா?
2. திடும் திடும்னு ராஜினாமா செய்யும் அரசியல்வாதிகளை
நம்பி ஓட்டு போட்ட மக்கள் தன்னோட நேரத்தை இவர்கள்
வீணாக்கினாங்களேன்னும், திரும்ப எலெக்‌ஷன் வெச்சு
பணச்சுமையை அதிகமாக்குவாங்களேன்னும் கோர்ட்ல
கேஸு போடலாமா? இல்லை இப்படி செஞ்சா “கட்டுபடி
ஆகாதுண்ணே, கட்டுப்படி ஆகாதுண்ணு” வாக்குச் சாவடிக்கு
செல்லாம தடுக்க ஏதும் செய்யலாமா?
3. இந்த வருஷம் மார்ச் வரைக்கும் சில இடங்களில் மழை
பெஞ்சும், இந்த வருஷம் மழை கம்மின்னு சொல்றாங்களே!!
அது ஏன்? எப்படி? ம்ஹூம்.

5.உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்:

மணலில் வீடு கட்டி விளையாடும் என் செல்வங்களின்
புகைப்படம், கடிகாரம், செல்போன்.

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:

1.நல்ல காமெடி, நகைச்சுவை பதிவுகள்.
2. எங்க பக்கத்து வீட்டு வாண்டு செய்யும் சேஷ்டைகளை பார்க்கும்
பொழுது மனம்விட்டு சிரிக்கிறேன்.
3. இங்கே(ஆந்திரா) நடக்கும் அரசியல் பார்க்கும் பொழுது நல்லா
தமாஷா இருக்குப்பா

7. தாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்:

1. ஆஷிஷ் 10த் என்பதால் அதிகமா ஸ்ட்ரெஸ் ஆகிடக்கூடாது,
அதே சமயம் டீல்லயும் விட்டுடக்கூடாது. இந்த டாஸ்க்கை எப்படி
செய்வதுன்னு யோசிச்சு நிதானமா அதை செயல் படுத்திக்கிடு இருக்கேன்.
2. ரொம்ப நாளைக்கப்புறம் நான் படிச்ச மாண்டிசோரி படிப்புக்கு
சின்ன வேலை. எஸ்ஸு. எங்க பக்கத்து வீட்டு வாண்டுக்கு என்னால
ஆன உதவிகளை செய்ய ஆரம்பிச்சிருக்கேன்.
3. நடுவுல உடம்பு சரியில்ல, அது இதுன்னு ரொம்ப டயர்டாகி,
அதனால ஸ்ட்ரெஸ்ஸுன்னு ஒரு மாதிரியா இருந்தேன். இப்ப
அதுலேர்ந்து வெளியில வந்து மறுபடி என்னை நான் லவ் செய்ய
ஆரம்பிச்சிருக்கேன்.
!!! :))

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்:

1. என் பிள்ளைகள் எல்லாவிதத்திலும் தன் காலில் தானே நின்று
சுயமாக தன் வேலையை செய்துகொள்ள பழக்க வேண்டும் எனும்
வேலை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
2. துள்ளித் திரியும் வயதில் விளையாட்டாக பிள்ளைகள்
கல்வி கற்கும் விதத்தில் ஒரு பள்ளி ஆரம்பித்து நல்லாசிரியைன்னு
பேர் வாங்கணும்.!!!
3. பெயர் சொன்னால் தரம் எளிதில் விளங்கும்னு சொல்வது போல
புதுகையில் எங்க குடும்பத்தினரின் பேர் சொன்னா போதும். அதே போல
என் வாழ்நாளிற்கப்புறமும் கூட நான் பழகிய, பேசிய நட்புக்கள்,
உறவினர்கள் என்னை மறக்கக்கூடாது. நல்ல தருணத்தில் என்னை
நினைத்து பார்ப்பது போல என்னால முடிஞ்சதை செய்யணும்.

9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:

1. இந்த சிலிண்டர் தீந்து போச்சுன்னா அயித்தானையோ இல்லை
வேறயாரையோ தான் கூப்பிட்டு மாத்தச் சொல்றேன். எத்தனையோ
வாட்டி சொன்னாலும் மண்டைல ஏனோ ஏத்திக்க மாட்டேங்குறேன்.
அதை கத்துக்கணும்.
2. ஜெட் வேகத்துல வந்துகிட்டு இருந்த என் பதிவுகள் யார் கண்ணு
பட்டுச்சோ!!!! ரொம்ப ஸ்லோவா வருது. இப்போ 779 பதிவுகள்
ஆகிருக்கு சீக்கிரம் 1000 அடிக்கணும்.
3. இலவசமா கல்வி சொல்லிக்கொடுக்க திட்டம் இருக்கு.

10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:

1. இன்னும் நிறைய்ய புது புது ரெசிப்பிக்கள் கத்துக்கணும்.
(அயித்தானுக்கு நான் இப்படி சொல்லும் பொழுதெல்லாம்
வயிற்றில் புளி கரைச்சா மாதிரி இருக்கும். கல்யாணத்துக்கு
முன்னாடி ஒல்லியா இருந்தேன். என்னை இப்படி குண்டாக்கினது
பத்தாதுன்னு இன்னும் வகைவகையா கத்துக்கறேன்னு சொல்றியே
இது நியாயமா?தர்மமான்னு? கேப்பாரு :)) ) ஆனாலும் கத்துக்கணும்.

2. அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் அதுக்கு ரியாக்ட் ஆகாம
இருக்கணும்னு பாக்குறேன்.ம்ஹூம்.

3. டீன் ஏஜி வயசில் பிள்ளை வளர்ப்பது எப்படின்னு
இன்னும் நிறைய்ய கத்துக்கணும்!!

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்:

1. அடுத்தவங்க சமைச்சு போட்டா அடிபிடிச்சிருந்தா கூட அது அமிர்தம் தான். :))
2. பனீர் டிக்கா அதுவும் இலங்கை மேங்கோட்ரீ ஹோட்டலில் இருந்து
வாங்கியிருந்தா.
3. நல்ல ரசம்.

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பா.

1. பொறுமை இல்லாம கேட் திறக்கறதுக்குள்ள ஹார்ன் அடிச்சுகிட்டே
இருக்கும் பக்கத்து வீட்டு ஜீப் சத்தம்.....
2. பொண்ணுக்கு/பையனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்தோம்.
சரிவரலை பிரிஞ்சிட்டாங்க!!! என பெற்றோர்கள் சொல்லும் அவலம்!!!
3. அயித்தானோட மொபைல் ரிங்கிங்... :)) (நேரம் காலம் இல்லாம
அது ஒரு தொந்திரவு. எங்க மாமியார் சரியா அதுக்கு பேரு வெச்சாங்க.
கர்ணனின் கவசகுண்டலம் மாதிரி மொபைலும், கார்ட்லெஸ்ஸும்னு
சொல்வாங்க)

13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்:

1. பூந்தேனில் கலந்து பொண்வண்டு எழுந்து.... ஏணிப்படிகள்
படத்துல சூப்பர் பாட்டு.
2. கோயி காத்தா மே சோ ஜாத்தா.... யேசுதாஸோட குரலில்
இந்தப் பாட்டு மனத்தை அப்படியே ஒரு வருடு வருடும்.
3. உப்பொங்கலே கோதாவரி... (கோதாவரி தெலுங்கு படத்தோட
பாட்டு, இந்தப் பாட்டு அப்படியே என் மனசுல ஒரு பொங்கி
பொங்கி ஆனந்தத்தை தரும்)

14. பிடித்த 3 படங்கள்:
1.BAAWARCHI ராஜேஸ் கன்னா நடிப்பு சூப்பரா இருக்கும்.
இந்த படம் பார்க்கும் பொழுது ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கும்.
2. வானமே எல்லை- அதென்னவோ இந்தப் படம் ரொம்ப
பிடிக்கும்.
3. காதலிக்க நேரமில்லை - என் பிள்ளைகள் ரொம்ப விரும்புவதால
இந்தப் படம் பிடிக்கும்.

15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:

1. தன்னம்பிக்கை- அது இல்லாட்டி நான் மட்டுமில்ல யாருமே இல்லை.

2. ஸ்ட்ரெஸ் அதிகம் இருக்கும் இந்த காலகட்டத்தில் மனதை ரிலாக்ஸ்
செய்து கொள்ள தெரிவது ரொம்ப முக்கியம். (தவறான பாதைக்கு
போகாம, நல்ல வழியில் மனதை கொண்டு செல்ல தெரிஞ்சிருக்கணும்)

3. புத்தகம்- ஏதாவது படிக்காட்டி மண்டை காய்ஞ்ச மாதிரி இருக்கும்.
என்னை நான் அப்டேட் செய்துகொள்ள உதவியா இருப்பது என்
புத்தகம் படிக்கும் பழக்கம்னு சொல்வேன்.

16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேரு:

மாட்டி விட்டேன்னு திட்டினாலும் இதை அவங்க தொடர்வாங்கன்னு
நம்பறேன்.

ஹுசைனம்மா

அன்புடன் அருணா

சேட்டைத் தம்பி


Wednesday, July 21, 2010

பதிவுலகில் நான்!!!!

தொடர் பதிவு எழுத விதூஷ் கூப்பிட்டிருக்காங்க.
இதோ என் பதில்கள்:

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
புதுகைத் தென்றல்

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் நிஜப் பெயர் .கலா ஸ்ரீராம். பிறந்த ஊர் புதுக்கோட்டை.
புதுகையில் பெயர் சொன்னால் புரிந்து கொள்ளக்கூடிய குடும்பத்திலிருந்து
வந்தவள். அதை என் அடையாளமாக்கிக்கொள்ள ஊரின் பெயரை
பேருல சேத்தேன். ”தென்றல்” சில சமயம் புயலாகவும் வீசும். :)


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இம்சை அரசியோட வலைப்பூ விகடன் வரவேற்பரையில்
வந்ததைப் படிச்சு வேடிக்கை பாக்க வந்தேன், பினாத்தல் சுரேஷ்
வைஃபாலஜி எழுதி கலாய்ச்சுகிட்டு இருந்தாரு. அதைப்பாத்து
பொங்கி எழுந்து ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா எழுத
ஆரம்பிச்சேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஹஸ்பண்டாலஜி வகுப்பில் நடந்த ஹாட் ஹாட் பின்னூட்டங்கள்
மூலம் என் எழுத்து எல்லோருக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்புன்னு
நினைக்கிறேன். அதைத்தவிர பிரபலமாகன்னு ஏதும் பெருசா செஞ்சிடல.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

PRE MENSTURAL SYNDROME போன்ற சில பெண்களுக்கே உண்டான
பிரச்சனைகள் வெளியே பலருக்கும் தெரியாது. (தனக்கு இருப்பது
பெண்களுக்கே தெரியாது) அதை ஆண்களும் உணரணும்னு என்னோட
நிலையை எழுதி அதைப்பத்தி புரிஞ்சிக்க வெச்சதை பெருமையா
நினைக்கிறேன். என்னுடைய சில அனுபவங்கள் பலருக்கு உதவும்னு
அதை பகிர்ந்ததும் உண்டு. அதனால நல்ல விளைவுகள்தான்
இருந்திருக்கு.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவு எழுதுவதை பொழுது போக்கா எப்பவும் நினைக்கலை.
எனது இந்த வலைப்பூவிலும் சரி பேரண்ட்ஸ் கிளப் வலைப்பூவிலும் சரி
ஒரு ஆசிரியையாக பெற்றோர்களிடமிருந்து என்ன எதிர் பார்ப்பார்களோ
அதை, ஒரு தாயாக என் அனுபவப்பகிர்வை, எனது ஆசிரியைப்
பயிற்சி அனுபவங்களை, பயண அனுபவங்களை பலருக்கு
உபயோகப்படும் என்பதால் பகிர்கிறேன். நட்பு, அன்பு
உறவுகளும் இப்போ என் பேங்க் பேலன்சில் நிறைய்ய்ய்ய்ய்ய இருக்கு.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

எனக்காக என் புதுகைத் தென்றல்

சமூகத்திற்காக பேரண்ட்ஸ் கிளப்

யேசுதாஸ் அவர்களின் பாடல்களின் தொகுப்பு
வலைப்பூவான கானக்கந்தர்வன் - இவை நான்
ஆரம்பித்தது.

அம்மாக்களின் வலைப்பூக்கள், சாப்பிடவாங்க,
தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி, இவற்றிலும்
அவ்வப்போது எழுதுவேன்.

தெலுங்கு பாடல்களுக்கு மதுர கீதாலு,

ஹிந்தி பாடல்களுக்கு வசய்லோக்கல்.
அம்புட்டுதாங்க.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் எல்லாம் எப்பவும் இருந்தது இல்லை. எல்லார் மேலயும்
பொறாமை மட்டும் உண்டு. ஒவ்வொருவருவரும் தனது
பார்வையில் கோர்வையா எழுதும் விதம், தனக்கென ஒரு
பாணி அமைச்சு எழுதுவது ரொம்ப பிடிக்கும். நாம எழுத
நினைச்சதை அதைவிட அழகா எழுதிட்டாங்களேன்னு
பொறாமை பட்டிருக்கேன். அனைவரின் ரசிகை நான்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

 மை ஃப்ரெண்ட் அனு, மங்களூர் சிவா, ரசிகன், இப்படி
நிறைய்ய பேர் என்னை ஊக்குவிச்சிருக்காங்க. இவர்களோட
ஊக்குவித்தல்கள்தான் என்னை எழுத வெச்சது. ஆனா
ரொம்ப நன்றி சொல்ல வேண்டியது பினாத்தல் சுரேஷ்
அண்ணாவுக்குத்தான். அவருக்கு எதிரா வகுப்பு ஆரம்பிக்க
போய் இப்ப 3ஆவது வருஷம் முடியப்போகுது + 650 போஸ்டும்
போட்டாச்சு. (ஹஸ்பண்டாலஜி பேராசிரியையா நிறைய்ய
பேர்கிட்ட திட்டு வாங்கிகட்டிகிட்டிருக்கேன். ரங்கமணிகளுக்கு
எதிரா பதிவு போடுவதாலும் நல்ல பேரெல்லாம் இல்லை)  :)

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தம்பி அப்துல்லா தன் பதிவுல சொல்லியிருப்பது போல
நம்ம வலைப்பூவை படிக்க வந்ததே பெருசு. இதுல
என்னைப்பத்தி இன்னும் வேற என்னத்த சொல்ல.
மேலே சொல்லியிருக்கும் பதில்களிலேயே என்னியப்பத்தி
எல்லோருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கும். :))


ஒரு குழந்தையின் வளமான எதிர்காலம்  பெற்றோர்
இருவரின் கைகள்களில்தான் என்பதை உணர்ந்து
அதை நடைமுறைப்படுத்தி என் குழந்தைகளுக்கு
இனிதான குழந்தைப்பருவத்தை தர முயற்சி செய்து
கொண்டிருக்கும் ஒரு தாய்.



***************************************************************
சரி சிலரை மாட்டி விடணுமாமே! செஞ்சிடுவோம்.

பரிசல்காரன்

அப்பாவித் தங்கமணி

கயல்விழி முத்துலெட்சுமி

அமைதிச்சாரல்

சர்வேசன்




Tuesday, May 18, 2010

நான் ரசித்த படங்கள்

எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும்னு இல்ல. ஆனா
பிடிக்கும். பாட்டுதான் ரொம்ப இஷ்டம்.செலக்ட்
செஞ்சுதான் சினிமா பாப்பேன். டிரைக்டர், நடிகர்,
நல்லகதையம்சம், இசையமைப்பாளர் அப்புறம்
யேசுதாஸ் ஒரு பாட்டாவது பாடியிருந்தால்
சந்தோஷம்னு  ஒவ்வொண்னா பாத்து பாத்து
சினிமா போவதால மனசுல சிம்மாசனம் போட்ட
படங்கள் அதிகம்.

எதைவிட எதைச் சொல்லன்னுதான் தெரியலை.


அப்பல்லாம் மற்ற மொழி படங்கள் பாக்க வேண்டும்
என்றால் டீடீயில் ஞாயிற்றுக்கிழமை மதியத்
திரைப்படத்துக்காக காத்திருக்க வேண்டும்.
அப்படிப் பார்த்துதான் எனக்குத் தெலுங்குபடங்கள்
பரிச்சயமானது.

குடும்பம் ஒரு கதம்பம்:


விசு என் ஃபேவரீட் டைரக்டர். அவரின் எல்லா
படங்களையும் பாத்திருக்கேன். குடும்பம் ஒரு
கதம்பம் இப்பவும் பாக்கலாம். அதே போல
வேலைக்கு போகும் பெண்ணின் கஷ்டம்,
வேலைக்குப்போகாம வீட்டில் இருக்கும் கஷ்டம்,
பொண்டாட்டி வேலைக்கு போக தான் ஒரு
ஊரில் வேலைப்பார்க்க லெட்டரில் மட்டுமே
குடும்பம் நடத்தும் கணவன், வேலை வெட்டி
செய்யாம வெட்டியா இருக்கும் புருஷன்,
அடுப்படியில் வெஞ்சு அவியும் மனைவி,
தன்னை அம்ஜத்கானா நினைக்கும் மகனுக்கு
நல்லது செய்யும் அப்பான்னு சூப்பரா இருக்கும்
படம். ஒவ்வொருத்தரும் தன் பாத்திரத்தை
உணர்ந்து நடிச்சிருப்பாங்க.


ஸ்வர்ணகமலம்: (telugu)
எனக்கு மிகவும் பிடித்த தெலுங்கு இயக்குனர்
கே.விஸ்வநாத் அவர்கள் இயக்கத்தில் 1988ஆம்
ஆண்டு வெளிவந்தப்படம். பரதம், பானுப்ரியா
இரண்டும் எனக்குப் பிடித்த விஷயம். பானுவின்
நடனத்துக்கு நான் ரசிகை. அருமையான பாடல்கள்,
தேர்ந்தெடுத்த நடிகர்கள்னு கலவையான படம்.
விக்டரி வெங்கடேஷ்  நடிப்பு அருமையா இருக்கும்.
டான்ஸ் கிளாஸ் நடக்கும் இந்த சீன் பாருங்கள்
தெரியும். இசை இளையராஜா




 உன்னால் முடியும் தம்பி: 1988
பாலச்சந்தர் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.
கமல், சீதா,மனோரமா இவர்களுடன்
பிலஹரி மார்த்தாண்டம்பிள்ளையாக எங்க
ஊரு ப்ரபலம்  ஜெமினி கணேசன் அவர்கள்
நடிச்ச படம். என் குருநாதர் யேசுதாஸ் பாடல்களும்
இருப்பது ஷ்பெஷல்.  இந்தப்படத்தில் ஜனகராஜ்
காமெடி மறக்க கூடியதா!!

அப்பா மகனுக்கு இடையில் நடக்கும் இந்த
சம்பவம் சூப்பர்.


 TEZAB: hindi

அனில்கபூர் சோ ஸ்வீட்டா இருப்பார்.
ek do theen னு மாதிரி ஆட்டம் போட்ட படம்.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது. இந்தப்பாட்டை
பாடதவங்க உண்டா!!!

மைனே ப்யார் கியா: 1989

இப்ப சல்மானைப் பாக்க பயம்மா இருக்கு. ஆனா
இந்த படத்தில் ரொம்ப அருமையா இருப்பார்.
பாலுவின் குரலில் சூப்பாரா இருக்கும் பாடல்கள்.
போனவருஷம்னு நினைக்கிறேன் இந்தப்படத்தை
நானும் அயித்தானும் சிலாகித்து பாத்துகிட்டு
இருந்தோம். கொஞ்ச நேரமே பக்கத்துல உக்காந்து
பாத்துகிட்டு இருந்த அம்ருதா “ஐயோ! இது
சம்திங் சம்திங்! படமாச்சேன்னு” சொல்லவும்தான்
பிரபுதேவா இயக்கத்தில் தெலுங்கில் ஹிட்டாகி,
தமிழிலும் வெளிவந்தப்படம் மைனே பியார் கியாவின்
ரீமேக்குன்னே எனக்குப் புரிஞ்சிச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தேவர் மகன்: 1992
இந்தப்படத்தைப்பத்தி நான் என்ன சொல்ல. எல்லோருக்கும்
தெரிஞ்ச படம். பரதன் இயக்கத்தில் வெளிவந்தப் படம்.
இஞ்சி இடுப்பழகி பாட்டு யாரும் அவ்வளவு சீக்கிரத்தில்
மறந்திருக்க முடியாது. ஜானகியம்மா கலக்கியிருப்பாங்க.
இந்தப்படம் தான் எந்த கஷ்டமும் படாம நாங்க கேட்டு
அப்பா ஓகே சொல்லின்னு படம் வெளிவந்த 3ஆம் நாளே
புதுகை வெஸ்ட் டாக்கீஸில் பாத்தது.

 ரங்கீலா: 1995

மாமாவிடம் கெஞ்சிக் கூத்தாடி என் தோழிகளுடன்
மும்பையில் தியேட்டரில் நான் பார்த்த ஒரே படம்.
இந்தப்படத்தின் அத்தனை பாடல்களூம் எனக்கு
பிடிக்கும். அமீர்கான் மாதிரி
“ஜரா ஏசிக்கோ குமா( jara  ac ko guma) ”
அப்படின்னு இப்பவும் டயலாக் அடிப்போம்.




yaaroon sunlo jara பாட்டும் ரொம்ப பிடிக்கும். கேட்டுப்பாருங்க.

 சதிலீலாவதி: 1995

கல்யாணத்துக்கு முன்னாடி நான் என் ஃப்ரெண்ட் சுபத்ரா,
தம்பி கார்த்தி நாங்க 3 பேர் மட்டும் தியேட்டருக்கு போய்
பாத்த படம். பாலுமகேந்திராவுக்கு உரிய ரெண்டு பொண்டாட்டி
கதை. கல்பனா புருஷனை கேள்வி கேட்கும் இடம்
அருமையா இருக்கும்.



Mr.pellam 1993 telugu:

தெலுங்கில் நான் விரும்பும் நடிகர் சிரஞ்சீவிக்கு
அடுத்து மிக மிக விருப்பமானது ராஜேந்திர பிரசாத்.
ராஜேந்திர பிரசாத் ஆமனி நடிப்பில் வெளிவந்த
இந்தப்படம் என் ஹஸ்பண்டாலஜி பாடத்திலும்
வந்தது. ஆமாம் வேலைக்கு போன போது ஐயா
அடிச்ச அதிகாரம், வேலை போன பிறகு மனைவி
வேலைக்கு போக வீட்டில் நடக்கும் கூத்துன்னு
தத்ரூபமா இருக்கும் காட்சிகள். இதை என் ஹஸ்பண்டாலஜிக்கு
சிறப்பு பாடமா வெச்சிருக்கேன். :))


சுபலக்னம்:

தமிழில் இரட்டை ரோஜான்னு ஒரு படம்
வந்துச்சு. எனக்குச் சுத்தமா பிடிக்கல. ஆனா
தெலுங்கில் இந்தப்படம் ஆமனி, ரோஜா,
ஜகபதி பாபு நடிப்பில் சூப்பரா இருக்கும்.
படத்தோட ஹைலைட் இந்தப் பாட்டு
எனக்கும் அயித்தானுக்கும் ஆல்டைம் ஃபேவரிட்.



HUM AAPKE HE KAUN: 1994
 ஹா!! அழகான மாதுரி. அருமையான
கதை, ராஜஸ்ரீ ப்ரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பு.
பிரம்மாண்ட வெற்றிப்படம். உறவுகளை
விட்டு பிரிஞ்சு வந்திட்டதா நினைப்பு வரும்
பொழுது இந்த சீடி போட்டு உக்காந்திருப்பேன்.


தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே:

என் திருமணத்துக்கு 2 மாசம் முன்னாடித்தான்
இந்தப்படம் வெளிவந்தது. காஜல், ஷாருக்
நடிப்பில் ரொம்ப அருமையா இருக்கும்.
இந்தப் படத்தை நான் அப்போ பார்க்கலை.
திருமணத்துக்கு அப்புறம் நாங்க பார்த்த
இரண்டாவது படம் இது. ஹைதை பரமேஸ்வரி
தியேட்டரில் பார்த்தோம். கடைசி சீனை பாக்காம
பைக் எடுக்கணும் கூட்டி வந்திட்டீங்கன்னு
எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பேன்னு
எனக்கா ஒரு சீடியே வாங்கிக்கொடுத்திட்டாரு
அயித்தான். இப்பவும் நான் அனுபவிச்சு பாக்கும்
படம் இது.

எல்லாப்பாட்டும் பிடிக்கும். ஆனா இது சம்திங்
ஷ்பெஷல்.




அநன்யா தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தாங்க.
நான் பதிவெழுத ஆரம்பிச்சு பதிவெழுத அதிக
நேரம் எடுத்துகிட்ட பதிவு இது தான். இரண்டரை
மணிநேரம் ஆகியிருக்கு. :))
எழுத ஆரம்பிக்க நிறைய்ய படங்கள் ஞாபகத்துக்கு
வந்து ரொம்ப செலக்ட் செஞ்சு கொடுத்திருக்கேன்.

நான் யாரையும் அழைக்கலை. யாருக்கு விருப்பமோ
அவங்க தொடரலாம்.

Monday, November 09, 2009

தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்

தொடர்பதிவான்னு ஓடிடாதீங்க. வாங்க ப்ளீஸ்.
இது உபயோகமான தொடர் பதிவு.


விகடன் வரவேற்பரையில் நம்ம பேரண்ட்ஸ்கிளப்
வந்ததும் எல்லோரும் தெரிஞ்சிருக்கும். (எனக்கு
முதலில் போன் போட்டு சொன்னது அமித்து அம்மாதான்.
நன்றி).

விகடன் இந்த வலைப்பூவில் இருக்கும் திருக்குறள்
கதையை வெகுவாக பாராட்டியிருக்கிறது.
அந்த திருக்குறள் கதையை மறுபடியும்
தொடரலாம்னு நினைக்கிறேன்.

விருப்பம் இருக்கறவங்க கதை எழுதி பேரண்ட்ஸ்கிளப்பிலோ,
இந்த வலைப்பூவிலோ லிங்க் கொடுத்தால் அதை
வலைப்பூவில் சேர்த்திடலாம். அத்தனையையும்
புத்தகமாக்கும் ஐடியா இருக்கிறது.

தயங்காமல் வாங்க. இந்த வருடம் முடிவதற்குள்
எத்தனை நல்ல கதைகள் உருவாகின்றன
என பார்ப்போம். கடைசி தேதி டிசம்பர் 30.

31 அன்று அத்தனை கதைகளையும் தொகுத்து
பதிவு வரும்.

இதற்கு முந்தைய திருக்குறள் கதைகளின்
தொகுப்பு பேரண்ட்ஸ்கிளப் வலைப்பூவில் இருக்கிறது.

ஆதரவது தருவது மட்டுமல்லாமல் கதையும்
எழுத வேண்டுகிறேன்.

Thursday, November 05, 2009

பாசக்கார நட்புக்களின் அன்புத் தொல்லை ஜாஸ்தியா போச்சு...

வடிவேலு சொல்ற மாதிரி “விட்டுட்டு சாப்டமாட்டங்கேறாங்களேப்பு”!
மாதிரி விட்டுட்டு பதிவெழுத மாட்டேங்கறாங்களேய்யா....
இப்படி சொல்லிக்க வேண்டியதுதான். :)))

ஹுசைனம்மா என்னிய தொடர் பதிவுல கோத்துவிட்டாங்க.
பதிவு எழுதுவீங்களான்னு வேற கேட்டிருந்தாங்க. கேட்டுப்புட்டா
மனசு தாங்காதுல்ல அதான் பதிவு.

1.அரசியல் தலைவர்:
பிடித்தது :வேற யாரையும் பிடிக்காததால் பிடித்த அரசியல்வாதின்னு எடுத்துகிட்டு
இந்த பதில்- எங்க ஊரு முன்னாள் எம்.பி.திரு.முகம்மது கனி.
பிடிக்காதவர்: இவரும் எங்க ஊர் தான். திருநாவுக்கரசு(ராணிஸ்கூல்
ஆண்டுவிழாவுக்கு வந்த மனுஷன், என் இரண்டாவது மனைவியும்
உங்க ஸ்கூல்தான்னு சொன்னதானலையே பிடிக்கல)

2.குடும்பத் தலைவர்:

பிடித்தவர் : M.G.R
பிடிக்காதவர் : வேற யாரு கலைஞர் தான்

3.நடிகர்:

பிடிச்சது: நான் சின்னபுள்ளயா இருந்தப்ப ரஜினி, அப்புறம்
நிலவே மலரே ரஹ்மான், இப்போ அப்பப்ப அஜீத்.
பிடிக்காதவங்க: பெரிய லிஸ்டே இருக்கு. சொல்லி அடி
வாங்குவானேன். :))

4. நடிகை:

ரேவதி- பாந்தமான உடை, அருமையான நடிப்பு,
பானுப்ரியா, நதியான்னு இதுலயும் கொஞ்சம் லிஸ்ட் ஜாஸ்தி.

பிடிக்காதவர்: இப்பத்த எந்த நடிகையையும் பிடிக்கலீங்க.
அப்பல்லாம் குலுக்கு நடிகைகள்னு ஒரு குரூப் இருப்பாங்க.
அவங்க போடற உடை, நடிப்பு எல்லாம் ஐடம் கேர்ள் மாதிரி
இருக்கும். இப்ப ப்ரதான நடிகைகளே அந்த ரேஞ்சுக்கு உடை
உடுத்தி, உரிச்ச கோழிகளாக மட்டும் வலம் வருவதால்.
(நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேக்கறாங்கப்பா??)

5.வசனகர்த்தா:

பிடிச்சது: க்ரேஸி.

பிடிக்காதது: இப்பல்லாம் யாரு வசனம்னு கூர்ந்து
பாக்கறதில்லீங்க.

6.இசையமைப்பாளர்:

பிடித்தது: எம்.எஸ்.வீ
பிடிக்காதது: தேவா

7.ஓவியர்:
பிடித்தது: மாருதி
பிடிக்காதவர்: யாருமீல்லீங்க. ஓவியம் எனக்கும்
மிகவும் பிடிக்கும்.

8.எழுத்தாளர்:

பிடித்தது: லட்சுமி அவர்களின் கதைகள், சுபா, பிகேபி,சுஜாதா
பிடிக்காதவர்: செலக்ட் செஞ்சு பிடிச்சவங்க எழுதினது மட்டும்தான்
படிப்பதால் வேற யாரும் தெரியாது.

9.கவிஞர்:
பிடித்தது: அந்தக் கால வாலி.
பிடிக்காதது: பா.விஜய்

10.பதி்வுலகம்:

பிடித்தது: சும்மா வலைப்பூ துவங்கினவங்களையும்
உசுப்பேத்தி உருப்படியா எழுத வைக்கும் நட்புக்கள்.

பிடிக்காதது: கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக
கண்டபடி கமெண்டுவது, நாவடக்கம் இல்லை.. இல்லை
கையடக்கம் இல்லாமல் கமெண்டுவது.

போதும்பா. ம்ம்முடியல

இப்பவே எல்லோருக்கும் விதிமுறைகள்
தெரிஞ்சிருக்கும் என்பதால், இரண்டு
பேரை மட்டும் கூப்பிடறேன்.

ரங்கா

அன்புடன் அருணா

சீக்கிரம் பதிவு போடுங்கப்பு..

Thursday, July 23, 2009

நானும் ஸ்கூலுக்கு போவேன்!!!!

கயல்விழியின் இந்த கொசுவத்தியை படிச்சதும்
எனக்கும் (அதான் எப்பவுமே சுத்துதே!) கொசுவத்தி
சுத்த ஆரம்பிச்சிருச்சு. :))

எனக்கும் என் தம்பிக்கு 8 வயது வித்யாசம்.
அதனால் வீட்டில் வேறு யாரும் இல்லாமல் போரடித்துக்
கொண்டு கிடப்பேன். புதுகையில் சுப்பராமய்யர் பள்ளி
அம்மாவின் தாத்தாவுக்கு சொந்தமான பள்ளி.
தாத்தா அங்குதான் வேலைப்பார்த்தார். சித்தி
அரிச்சுவடி(அந்தக்கால எல்.கே.ஜி) டீச்சர்.


எங்கள் வீட்டின் வழியாகத்தான் சித்தி வேலைக்குச்
செல்ல வேண்டும். தனியாக போரடித்துக்கொண்டு
வீட்டில் இருப்பதை விட தன்னுடன் பள்ளிக்கு
அழைத்துச் சென்றார். 31/2 வயதுதான்.
சின்ன தூக்குச்சட்டியில்
சோறு எடுத்துக்கொண்டு வாசலில் ரெடியாக
காத்திருக்க சித்தி அழைத்துச் செல்வார்.
சாயந்திரம் திரும்ப வருவதும் அவரோடு தான்.
அப்பா, அம்மா தடுத்தாலும் நானும் ஸ்கூலுக்கு போவேன்
என்று அடம்பிடித்து செல்வேனாம். (அப்பாடி
தலைப்பை பிடிச்சாச்சு)

என் முதல் ஆசிரியை சித்திதான். (இன்றளவும்
எனக்கும் ஏதாவது தெரியும் என்றால் என்னை
செதுக்கிய சிற்பிகளில் சித்தியும் முக்கியமானவர்)

புதுகையில் பிரபலமாக இருந்த child jeasus convent
பள்ளியில் என்னை சேர்க்க முடியாவிட்டாலும்
அதே போன்ற ஒரு யூன்பார்ம், டக்டக்கென
நான் நடக்க ஷூ, அலுமினியப்பெட்டி
ஆங்கில ரைம்ஸ் புக்(எம்.ஜே.சார் பைண்டிங்
செஞ்சது. பார்க்க ஒரு சாயலில் எம் ஜி ஆர்
அவர்கள் போலிருந்ததால் அவருக்கு என் நாமகரணம்)
என என்னை அடுத்த வருடமே அழகு படுத்தி
பார்த்தார் சித்தி.

சித்தி அந்த வேலையை விட்டு விட அம்மா
அங்கே டீச்சரானார். அம்மாவிடமிருந்தால்
தகராறு செய்வேன் என்று அவர்களாக நினைத்து
பக்கத்து வகுப்பான (கிளாஸ் ரூமைச் சொன்னேன்)
ஒண்ணாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த டீச்சர் ஈஸ்வரி டீச்சர்.
இவரது கணவர் புதுகை அரசு மருத்துவமனையில்
வேலை பார்த்தார். டீச்சர் காலை ஆட்டிக்கொண்டே
சொல்லிக்கொடுக்கும் பாணி ரொம்ப பிடிக்கும்.
கையில் குச்சி வைத்திருப்பார். அந்தக் குச்சி
தரையில் தட்டி பயத்தை உண்டாக்க மட்டுமே.
நான் மாண்டிசோரி ஆசிரியை ஆன போது
என் ஒண்ணாம்கிளாஸ் ஈஸ்வரி டீச்சரின்
முறையில்தான் எடுத்தேன். 24 வருடங்களுக்கு
பிறகும் அவரை என்னால் மறக்கவே முடியவில்லை.

சரியாக 6வயது ஆனதும் அப்பா வந்து முறையாக
அப்ளிகேஷன் எழுதி, எல்லோருக்கும் ஆரஞ்சு
மிட்டாய் கொடுத்து திரும்பவும் அதே கிளாசில்
உட்கார்ந்து ஒண்ணாம் வகுப்பு!!!!

ஹோட்டல் வைத்திருக்கும் ஒருவரின் மகன்
என்னோடு ஒண்ணாம் கிளாசில் படித்தான்.
அவன் தினமும் பள்ளிக்கு வர சாம்பார்
தூக்குச் சட்டி நிறைய்ய கொடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அழுகைதான். அதனால்
அவனுக்கு சாம்பார் என்றே பெயர் சூட்டினோம்.
கிளாசில் எப்போதும் தூங்கி வழியும் அவனை
ஒரு முறை ஒரு நண்பன் சொன்னான் என்று
சீண்டி தோப்புக்கரணம் போட்டேன். அதுவும்
பசங்க படத்தில் வருமே அது போல் ஒருத்தர்
தோளை ஒருத்தர் பிடிக்க “உன்னாலே நான்
கெட்டேன், என்னால நீ கெட்ட” என்று
பாடிக்கொண்டு அப்படியே தான். :)) (அப்படி
உக்கி போடும் போது என் காது தோட்டை
ஒருத்தி இழுத்துவிட ஓட்டை பெரிதானது.
அதை +2 படிக்கும்போதுதான் தைத்தோம்.
அந்த சீனை பார்க்கும் போது தானாக என்
கைகள் காதைத் தொட்டு பார்ததது)


இரண்டாம் வகுப்பு பெரிய்ய ஸ்கூலிலிருந்து
சின்ன ஸ்கூலுக்கு. அதாவது 1ஆம் வகுப்பு
இருந்தது 6,7,8 வகுப்புக்கள் இருந்த பெரிய
கட்டிடத்தில். 2,3,4,5 வகுப்புக்கள் இருந்தது
சின்ன கட்டிடம்(சின்ன ஸ்கூல், பெரிய்ய ஸ்கூல்)
இராமமூர்த்தி சார் கிளாஸ். வேட்டி கட்டிக்கொண்டு
டிபிகல் வாத்தியாராக ஆனால்” என்ன கலா!
என்னாச்சு, நீ படிக்கற பிள்ளையாச்சே! என்று
ஊக்கம் தரும் சார்” "சும்மா பிள்ளைய திட்டாத
ரத்னா!" என அம்மாவை திட்டுவார்.(அம்மாவும்
அவுங்க ஸ்டூடண்ட்)



3ஆம் வகுப்பு பட்டு டீச்சர். இவரது வகுப்பில்
படிக்கும்போது நடந்த ஒரு மறக்க முடியாத
நிகழ்வால்தான் எனக்கு அருமையான தாத்தா
ஒருவர் கிடைத்தார்.(அதெல்லாம் அடுத்த போஸ்ட்ல)


4 சுவாமியப்பன் சார் கிளாஸ். புதுகையில்
நடனப்பள்ளி வைத்திருந்தார். கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.
ஆங்கில கற்க ஆரம்பித்தது இங்கே தான். நான் தமிழ் மீடியத்தில்
தான் படித்தேன். அதுவும் அரசு உதவிபெரும் பள்ளியில்

5ஆம் வகுப்பு. எனக்கு மிகவும் பிடித்தது இந்த
வகுப்புதான். காரணம் கனகாம்புஜம் டீச்சர்.
அன்பாலே என்னை வென்றவர். இந்த வகுப்பில்தான்
நோட் புக்கில் எழுத பழகியது. அது வரை ஸ்லேட்தான்.
வேறு செக்‌ஷனில் இருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி
ராவ் சார்தான் வரலாறு,புவியியல் ஆசிரியர். குடுமி
வைத்திருக்கும் சார்தானேன்னு வாலாட்ட முடியாது
கம்பெடுத்து முதுகு பட்டையை உரிச்சிடுவார்.
(புதுகைக்கு பெருமை சேர்க்கும் அதிஷ்டானம்
புவனேஸ்வரி கோவிலில் மந்திரம் சொல்லிக்கொண்டு
சாயங்கால நேரங்களில் இருப்பார்)

ராமச்சந்திரன் சார் என்று ஒருவர். அவருக்கு
நாங்கள் வைத்த பெயர் லீவு சார். வி்டுமுறை
என்றால் அதை ராமச்சந்திரன் சார் வந்துதான்
சொல்வார். அவரைக்கண்டாலே லீவு எப்ப சார்?
என்று கேட்டு முறைப்பை பதிலாக பெற்ற
குறும்பு மாணவர்களும் உண்டு. :))
என் ஆரம்பப்பள்ளி வரை எங்கள் குடும்பத்தில்
அனைவருமே படித்தது இந்தப் பள்ளியில்தான்.


எனக்கு மிகவும் பிடித்த முக்கியமான விஷயம்
என் சின்ன தாத்தா(அம்மாவின் சித்தப்பா) அதே பள்ளியில்
ஹெட்மாஸ்டராக இருந்தாலும், அந்த பள்ளியே
எங்களுக்கு சொந்த மான பள்ளியாக இருந்தாலும்
தனி மரியாதை, ஷ்பெஷல் ட்ரீட்மெண்ட் ஏதுமில்லாமல்
மற்ற மாணவர்களோ்டு என்னையும் ஒரு சேர
பார்த்தது. பாகுபாடு இல்லாமல் அனைத்து
ஆசிரியர்களும் நடந்து கொண்டார்கள்.



புதுகையில் நடந்த என் திருமண ரிஷப்ஷனுக்கு
அம்மாவுடன் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளாக
அனைவரும் ஆஜர். அதனால் இன்றளவும் விரும்பும்
நேரத்தில் வீடியோவில் இவர்களை பார்க்க முடியும்.


ராணிஸ்கூலில் ஆறாம் வகுப்பு சேர்ந்த பிறகும்
ஓடி வந்து டீச்சர்களைப் பார்ப்பேன்.
அப்போது என் கனகாம்புஜம் டீச்சர் அடித்த
கமெண்ட்,” உங்க பேட்ச்சோட டீச்சருக்கு
இருக்கற மரியாதையே போயிடிச்சு கலா!!
உங்களுக்கெல்லாம் படிப்பு சொல்லிக்கொடுக்க
இஷ்டமா இருக்கும். இப்பல்லாம் ரொம்ப
கஷ்டமா இருக்கு!!!”

:))) வாத்தியார் மெச்சும் மாணாக்கர்கள் நாங்கள்.

Monday, July 06, 2009

தோட்டம் பார்க்க வாங்க..

வடக்கு 4ல் (புதுகையில் எங்கள் வீடு) இருந்த பொழுது
மிகச்சிறிய இடம். அதில் கறிவேப்பிலை, வாழை,
துளசி, செம்பருத்தி ஆகிய செடிகள் இருந்தன.

எப்போதும் காய்க்கும் முருங்கைமரமும் உண்டு.

பச்சை பசேல் என்ற இயற்கை அழகு கண்ணிற்கு
குளிர்ச்சி தரும். இலங்கையை எனக்கு மிகவும்
பிடித்ததன் காரணமே அதன் பசுமை தான்.



அங்கே மிகச் சிறிய வீடுகளில் கூட கண்டிப்பாய்
செடி வைத்திருப்பார்கள். நாங்கள் இருந்த வீட்டில்
எப்போதும் பூக்கும் நந்தியாவட்டை பூ, துளசி
சில க்ரோட்டன்ஸ் வகைகள் வைத்திருந்தேன்.
வாழை, கறிவேப்பிலை எல்லாமும் உண்டு.

எங்கள் வீட்டு வேலைகாரம்மா மேரி அந்த
கறிவேப்பிலையின் வாசத்தை மிகவும் மெச்சிக்கொள்வார்.

இவைகளை விட்டு வர மனசில்லாமல் வந்தேன்.

இங்கு வந்த பிறகு இதற்கு முன் இருந்த வீட்டில்
வைத்திருந்த செடிகள் இங்கே வந்த பிறகு அதிக
வெயிலுக்கு காய்ந்து போய்விட்டன.

புதிதாக தோட்டம் போட முடிவு செய்தேன்.
அந்த நேரத்தில்தான் அமுதாவின் இந்தப் பதிவு.
ஆஹா!! இதையும் ஒரு தொடர் பதிவாக்கலாமே
என்று போட்டோ எடுத்து உங்களுக்காக இதோ...


பால்கனியை விட காலியாக இருக்கும் காரிடாரில்
வைத்தால் கதவு திறந்ததும் கண்ணிர்க்கு குளிர்ச்சியாக
இருக்குமென என் தோட்டம் இங்கே..

வெண்டக்காயும், கத்திரிக்காயும் விதை இன்னும்
முளைக்கவில்லை.



வரவேற்க வாசற்படியில் ரெடியாய் ஒரு செடி




வரவேற்பரையிலும் பசுமைக்காக ஒரு சின்ன ஏற்பாடு:


பூத்துக்குலுங்கும் செடிகள்:






ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)
அப்படின்னு கயல்விழி கேட்டிருந்தாங்க.

கயல்விழி, அமுதா எங்கிருந்தாலும் வாங்க.
மற்ற நண்பர்களும் எங்க வீட்டு தோட்டத்தை பார்க்க
வந்திருக்காங்க.

தோட்டம் வெச்சிருக்கறவங்க எல்லோரையும் தொடர் பதிவுக்கு
அழைக்கிறேன். உங்க தோட்டத்தையும் பார்க்க ஆவல்..

Tuesday, June 09, 2009

கேள்வியும் நானே!!! பதிலும் நானே!!!!

கேள்வி பதில் தொடரில் மாட்டமலேயே இருக்கோமேன்ன்
சந்தோஷப்பட்டுகிட்டே இருந்தேன். சொக்கன் விடலை!!
பட்டாம்பூச்சியாரின் வடிவத்தில் வந்து மாட்டி விட்டுடுச்சு.

சரி, சரி வாங்க என்ன பதில் சொல்லியிருக்கேன்னு
பாப்பீக.


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

என்ன பெயர் வைக்கலாம்னு யோசித்து பிறந்த ஊருக்கு
”பெருமை”!! சேப்போமேன்னும், புயலா வீசும் நாம
பேருலையாவது தென்றல் இருக்கட்டுமேன்னும் நானே
நாமகரணம் செஞ்சுகிட்டதுதான். என் நிஜப் பெயர் பிடிக்கும்.
அதில் அயித்தானும் பேரையும் சேர்த்த பிறகு ரெம்பவே
பிடிக்கும். :))



2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் அழுததுதான் எல்லோருக்கும் தெரியுமே.
20.3.09 மாமா இறந்த பொழுது கண்கள் குளமல்ல...
நாகார்ஜுன சாகர் அணையை திறந்த மாதிரி
அழுதேன். :((


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு பிடிக்கும். மத்தவங்களுக்குகொஞ்சம்
டவுட்டுதான். :)


4).பிடித்த மதிய உணவு என்ன?

சோறு இல்லாம எதுன்னாலும் சரி தான். (அடுத்தவங்க
சமைச்சுபோட்ட சோறானாலும் சந்தோஷம் தான்) சுத்த சைவம்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என் விருப்பத்தை விட அடுத்தவங்க விருப்பமும்
தெரிஞ்சுக்கணும்ல. அவங்களுக்கு ஓகேன்னா எனக்கும்
ஓகே தான். ஆனா ஒரே ஒரு கண்டீஷன் மட்டும்
எனக்கு நானே வெச்சிருக்கேன். உண்மையான
நட்பா இருப்பேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் குளிக்கலாம். ஆனால் அலையை நினைச்சு பெம்மா இருக்கும்.
குற்றால அருவியில குளிச்சது மறக்க முடியாத அனுபவம்.



7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்ணைப்பாத்து பேசாட்டி அவங்க மனசை படிக்க முடியாதே!
ஆக கண் தான்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
என் பிடிவாதம் எனக்கு பிடிச்ச விஷயம். பிடிவாதத்தினாலேயே
நிறைய்ய கற்றுக்கொண்டுள்ளேன்.

என் கோபம் எனக்கு பிடிக்காது. ஆனால் பல விடயங்களில்
விசுவாமித்திரரின் நேரடி வாரிசாகத்தான் இருந்திருக்கிறேன்.

அடுத்தவங்களைப்பத்தி அதிகமா கவலைப்பட்டு அவங்களுக்காக
நல்லது செய்யறேன்னு செஞ்சு இ.வாவாவே இருப்பது.
(மாத்தவே முடியலை.)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : ரெம்ப நல்லவர், என்னால் பிரிந்திருக்க முடியாத
அளவு பாசமானவர்.

பிடிக்காத விஷயம் : அதிகமா டூர் போறது :(((((


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?.
பிறந்த வீட்டில் அன்பு அம்மம்மா, புகுந்த வீட்டில்
மறைந்த சுப்ரமண்ய மாமா(கணவரின் அண்ணன்)


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
கருப்பு பேண்ட் , ரெட் டீஷர்ட்


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கூன் பரி மாங்க் எனும் ஹிந்தி படத்திலிருந்து
எனக்கு மிகவும் பிடித்த “ஹஸ்தெ ஹஸ்தே கட் ஜாயே
ரஸ்தே ஜிந்தஹி யூ ஹி சல்தி ரஹே”

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு!!

14.பிடித்த மணம்?
மழை பெய்ததும் கிளர்த்து எழும் மண்ணின் மணம்,
பிறந்த குழந்தையின் வாசம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நானானி: சின்னச் சின்ன விடயத்தையும் வித்தியாசமான கோணத்தில்
பார்த்து பதிவெழுதுவது. அட இத மறந்துட்டோமேன்ன்னு நாம
யோசிக்கும் விதத்தில் இருக்கும் இவரது பதிவுகள்.

தேவா: காரைக்குடி டாக்டர். தமிழ்த்துளியில் அப்பச்சியை பற்றி
கதையும் எழுதுவாரு, பார்கின்சம் பற்றி மருத்துவக் குறிப்பும்
கொடுப்பாரு.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

வண்ணத்துப்பூச்சியாரின் திரைப்படங்கள் பற்றிய அறிமுகம்
மிக மிக பிடிக்கும். பல மொழிப் படங்களையும் அறிமுகப்
படுத்துவதற்காக ஷ்பெஷல் பாராட்டு.

17. பிடித்த விளையாட்டு?
அப்பாவுடன் அமர்ந்து சீட்டு விளையாடுதல் பிடிக்கும். இப்போ
பிள்ளைகளுடன் ஓடி பிடித்து விளையாட்டு, நொண்டிஆட்டம்.


18.கண்ணாடி அணிபவரா?
வீட்டை விட்டு வெளியே போனால் கூலிங் கிளாஸ்
இல்லாமல் போக மாட்டேன்.


19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
மனதுக்கு இதம் தரும், குடும்பத்தினருடன் அளவளாவிக்கொண்டு
பார்க்கக்கூடிய திரைப்படங்கள்

20.கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டர்ல பசங்க. டிவிடியில சுவராபிஷேகம்.


21.பிடித்த பருவ காலம் எது?
மழை மனதுக்கு மிகவும் இதமான பருவம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
செம பிசியா இருந்ததால 1 மாசமா புத்தகம்
ஏதும் படிக்கலை. வாரப்புத்தகங்கள் தான்.



23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அது அயித்தான் மற்றும் மகனின் டிபார்ட்மெண்ட்.


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சப்தம் : மெல்லிய இசை
பிடிக்காத சப்தம்: அதிக இரைச்சலான எதுவும் பிடிக்காது.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
நாடோடி கூட்டத்துல ஒரு கூட்டமா அலைஞ்சு கிட்டு
இருக்கோம். இதுல வீடுன்னு எதைச் சொல்ல??
இலங்கை, சிங்கை, மலேஷியா வரை போயாச்சு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
செய்யும் வேலையை சிறப்பாச் செய்வது என் தனித்
தி்றமைன்னு சொல்லிக்கொள்வதில் பெருமை.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
உதட்டளவில் நட்பு கொள்ளல், நம்பிக்கைத் துரோகம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அயித்தானைக் கேட்டால் நிறைய்ய சொல்வார்.:)
என் கோபம் தான் எனக்குள் இருக்கும் சாத்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அந்தமானுக்குச் சென்று அந்த மானைப் பாருங்கள்
அழகுன்னு பாடணும்னு ஆசை இருக்கு.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இருக்கும் இந்த நிலையிலிருந்து கீழே இறங்காமல்
இருந்தால் போதும்.

31.கணவர் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
அவரில்லாம ஒர் அணுவும் அசையாது என்பதால்
இந்தக் கேள்வியை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

மனம்போல் வாழ்வு!!

Thursday, March 26, 2009

பழமொழிகள்..

அம்மா யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமென்றால்
எடுப்பது இண்டல்ண்ட் லெட்டர் அல்ல. பரிட்சைக்கு
எழுதுவோமே அது போல ஒரு பெரிய தாள்.
சில சமயம் 4 பக்கம் கூட வரும். :))
”ரத்னாகிட்டேயிருந்து ராமாயணம் வந்திருச்சுன்னு”
சொல்லிகிட்டேதான் எல்லோரும் லெட்டர் படிப்பாங்க.
அம்மாவோட இந்தப் பழக்கம் தான் என்னிய பதிவெழுத
வெச்சிருக்குன்னுநினைக்கிறேன்.
அப்பாவுக்கு ரதன்ச்சுருக்கமா லெட்டர் எழுதினாத்தான்
பிடிக்கும்.

வீட்டில் பழமொழிகள் சர்வசாதரணமாக உபயோகிப்பாங்க.

அதைக் கேட்டு கேட்டு நானும் இப்போ சொல்ல
ஆரம்பிச்சிட்டேன்.

எனக்குத் தெரிந்த பழமொழிகளை இங்கே கொடுக்கிறேன்.

மாட்டிவிட்ட தூயாவுக்காக இதோ பதிவு.(தெலுங்கு
ஹீரோயின்ல கொஞ்சம் ஓவரு!!!)


டெஸ்டுக்கு படிச்சுகிட்டிருந்த தம்பியை அவனது
ஃப்ரெண்டு வந்து கூப்பிட ரெண்டு பேரும் சேர்ந்து
வெளியில போனாங்க. போனவுங்க ஆளையே காணோம்!!
2 மணி நேரம் கழிச்சு திரும்ப வந்தாங்க.
அம்மா செமையா திட்டினாங்க. ”இல்லம்மா! டீ.எல்.ஸி
ஸ்கூல் க்ரவுண்ட்ல சினிமா ஷூட்டிங் நடக்குதுன்னு
சொன்னாங்க பாக்கப்போனோம். ஒருத்தரையும் காணோம்!”
அப்படின்னு சொல்ல அம்மா சொன்னது
“கேப்பையில நெய் ஒழுகுதுன்னா கேப்பாருக்கு
மதி எங்க போச்சு!!”


(நந்தா படத்துல வரும் பல காட்சிகள் எங்க ஊருதான்.
காலேஜ், புதுகை அரண்மனை(இப்ப கலெக்டரேட்டு),
லொடுக்கு பாண்டி திருடுவது ராஜகோபாலபுரம் ஹவுசிங்
போர்டு. நிறைய்ய படங்களில் எங்க ஊரு வரும்.
இப்போ லேட்டஸ்டா சுசிகுமாரோட ஒரு படத்துல
எங்க ஊரு வாண்டுகள் நடிக்கறாங்களாம்.)

**********************************************

அதிகமாக பிடிவாதம் பிடிப்பவர்களை பாத்து
சொல்லப்படும் பழமொழி “மனுஷன் பிடிச்ச முயலுக்கு
மூணேகால்னு சொல்றவராச்சே
”.

***************************************

முனுக்கென்றால் அழுபவர்களைப் பாத்து
சொல்வது “நீலிக்கு கண் நெத்தியிலே!”

****************************************
எங்க பாட்டி சரியான கறார் பேர்வழி.
வீட்டுல வேலை செய்யற மாரி எப்பவும்
ஒரு பித்தளை தூக்குச்சட்டியை தூக்கிகிட்டு
வந்துபாட்டிகிட்ட அடகு வைப்பாங்க. 50 ரூபாய்தான்.
அதுக்கு வட்டி எல்லாம் கணக்கு சரியா வெச்சிருப்பாங்க.
அவங்க சம்பள கணக்குத் தனி இது தனின்னு சொன்னாலும்
அடிச்சு பேசி மாசாமாசம் கரெக்டா வட்டி(2 ரூபாய்தான்)
வாங்கிகிட்டு சீக்கிரமே தூக்குச் சட்டியை மூட்டுக்கச்
சொல்வாங்க. என்ன பாட்டி இவ்வளவு கறாரா
இருக்க?ன்னு கேட்டா பாட்டி சொல்வது
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா
இருக்கணும்
” ம்ம்ம் இதெல்லாம் நமக்கெங்க தெரியப்போகுது!!

**************************************************

அம்மா கூட பிறந்தவங்க 2 பேர் ஒரு சித்தி, ஒரு மாமா
(சின்ன மாமா ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்தாங்க)
அம்மம்மா எந்தப் பலகாரம் செஞ்சாலும் அதை 3 பேருக்கும்
சமமா கொடுப்பாங்களாம். எங்கம்மாவுக்கு அம்புட்டா
வெவரம் பத்தாது. தன் பங்கை பத்திரமா டப்பாவுல
போட்டு வெச்சிருவாங்களாம். சித்தியும் மாமாவும்
சேர்ந்து அம்மாவோட பங்கை சுட்டுடுவாங்களாம்.
இது எப்பவும் வாடிக்கை. அம்மம்மா சொல்வாங்களாம்.
“கொடுத்தப்பையே சாப்பிட்டிருக்க வேண்டியதுதானே!
இப்ப உள்ளதும் போச்சுடா லொள்ளக் கண்ணா”ன்னு
உக்காந்திரு
! :)

*****************************************
தம்பிகிட்ட ஒரு வேலை செய்யச் சொன்னா போதும்
அந்த வேலை கண்டிப்பா நடக்காது.
இதோ செய்யுறேன், அதோ செய்யறேன்னு
போட்டு வெச்சிட்டு ஐயா மேட்ச் பாப்பாரு.
அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழி.
உதடு தேயுறதற்கு உள்ளங்கால் தேயலாம்”
இவன் கிட்ட சொல்லுவதற்கு பதில்
நானே போய் செஞ்சிடலாம். :))
சூதனமான புள்ள.

தெரிஞ்சதை எழுதிட்டேன் தூய்ஸ்

பழமொழிகளை மறக்காமல் பதிவாக்க விரும்புறவங்க
யார் வேணாம் பதிவு போடுங்கப்பா. எனக்கு
ஒரு லிங்க் மட்டும் கொடு்ங்க.
(யாரையும் மாட்டிவிட்டு திட்டு வாங்க
நான் ரெடியில்லை. :))))))

Friday, February 20, 2009

TOP 10/10

என்ன எனக்கும் 10/10 ஜுரம் வந்திருச்சுன்னு பாக்கறீங்களா?

இல்லை இதுவரைக்கும் வந்திருக்கும் 10/10 கேள்விகளின்
தொகுப்பு தான் இந்தப் பதிவு. இதுலயும் 10 போஸ்ட்கள்
இருக்கு. :))


பரிசல் ஆரம்பிச்சு வெச்ச கேள்வி ஜுரம்
அதுக்கப்புறம் வந்த எசப் பதிவுகளின் சுட்டி இங்கே
இருக்கு. படிக்காதவங்க படிக்க வசதியாய்.

பரி்சல்காரன்


தாமிரா


அப்துல்லா

அறிவிலி


அம்பி

அபிஅப்பா


mrs.டவுட்


பப்புவின் ஆச்சி

கார்க்கி


தமிழர்

கடைசியா இளையபல்லவன்.

இது இப்போதைய நிலவரம். இதற்கப்புறம்
போடப்படும் பதிவுகளையும் சேத்துஒரு
பதிவு வரும்.

எஞ்சாய். :)))

Tuesday, December 16, 2008

நானும் சினிமாவும்!!!

நானும் சினிமாவும் தொடர் பதிவில் என்னை
கோப்பதாகச் சொன்னபோது வேண்டாம் என
கெஞ்சினேன். புரிந்துக்கொண்ட நண்பர்களுக்கு
நன்றி. ஆனாலும் சினிமா பற்றிய என் நினைவுகள்
இந்தப் பதிவு.

நான் முதன் முதலில் பார்த்தத் திரைப்படம் என
என் நினைவுகளில் இருப்பது கல்யாண ராமன் தான்.

புதிதாக சினிமா வந்திருக்கிறது என்பது சுவரொட்டி
பார்த்து தெரிந்துக்கொள்வேன், அல்லது ரோட்டில்
மைக் கட்டி அறிவித்து செல்வார்கள் அதைப் பார்த்து
தெரிந்துக்கொள்வேன். உடன் அம்மாவிடம் போய்
நிற்பேன். அம்மாதான் சினிமாவுக்கு அழைத்துச்
செல்வார்.
அப்பாவுடன் சினிமா என்பதெல்லாம்
கனவில். (நானும் அப்பாவும் மட்டும் பார்த்த
திரைப்படம் என்றால் அது மகாகவி காளிதாஸும்,
சம்பூர்ண ராமாயணமும் தான். அப்போது எனக்கு
8 வயது(எப்படி ஞாபகம் இருக்குன்னு கேக்கறீங்களா!
முருங்கைக்கீரை அதிகமாக ஆய்ந்து கொடுத்ததற்காக
காளிதாஸ் படம் (செல்லம் டாக்கீஸில்) இரண்டாவது
குர் பானி படம் பார்க்கவேண்டும் என்று கேட்டதர்கு
முடியாதென அழைத்துச் சென்ற படம் ராமாயணம்)
பெரிய மாமாவிற்கு திருமணமான பிறகு
அத்தைக்காக கேளடி கண்மணி திரைப்படம் பார்க்க
அப்பாவும் உடன் வந்து சாந்தி தியேட்டரில் படம்
பார்த்தோம்.


மற்றபடி அப்பா சினிமாவுக்கெல்லாம் அழைத்துச்
சென்றதுமில்லை, உடன் வந்ததுமில்லை. :(

அம்மா வேலைக்குச் சென்றதால்
அவருக்கு அதிகம் வேலை இல்லாத பொழுதுதான்
சினிமா. அந்த ஒரு சினிமாவும் பார்த்தது பசுமரத்தாணி
போல் மனதில் பதியும் அதற்கு காரணங்கள்
அதிகம்.

நான் கேட்கும் எல்லா படத்திற்கும் அம்மா அழைத்துச்
செல்ல மாட்டார்! நல்ல படமா? எல்லாம் பார்த்து
தான் அழைத்துச் செல்வார். அது எப்படி?

முன்பெல்லாம் புதுகை பழநியப்பா தியேட்டர்,
வெஸ்ட் டாக்கிஸீல் வரும்
படங்கள் நல்ல படம் (100 நாள் ஓடும் படங்கள்)
அதற்கப்புறம் சாந்தி தியேட்டரில் எந்தப் படம்
வருதோ அதுவும் சூப்பரான படமாக இருக்கும்.
எஸ்.வி.எஸ் தியேட்டர் படங்களும் ஓகே.
(சாந்தி தியேட்டரும், S.V.S உம் ஒரே உரிமையாளரது
தான் என்பதால் இரண்டு தியேட்டரிலும் ஒரே படம்
ஓடும்)அதற்கப்புறம் ஆர்.கே.பியில்தான் நல்ல
படம் ஓடுகிறது என்று சொன்னார்கள்.



இந்தத் தியேட்டரை வைத்து பார்ப்பதை விட
அம்மா படங்களைத் தெரிவு செய்வது அழகு.
படத்தின் பெயரைச் சொன்னாலும் அம்மா
"யாரு நடிச்சிருக்காங்க? டிரைக்டர் யாரு?
இசையாரு? எல்லாம் பாத்துகிட்டு வா"
என்பார் அம்மா. இந்தக் காம்பினேஷன்
நன்றாக இருந்து,
படத்தின் பெயரை வைத்து தான்
வேலைப் பார்க்கும் இடத்தில்
மற்றவர்களின் கருத்தைக் கேட்டு
பிள்ளைகளை அழைத்துச் செல்லலாம்
என்றால் மட்டுமே அம்மா
அப்பாவிடம் பேசுவதாகச் சொல்வார்.

அப்பா அவ்வளவு சீக்கிரம் வரம்
தர மாட்டார். சில சம்யங்களில்
சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி
வரம் கொடுக்க மாட்டார், அல்லது
பூசாரிக்கு மனம் இருந்தாலும் சாமி
வரம் கொடுக்க மாட்டார். இவர்கள்
பேசி முடிப்பதற்குள் அந்த சினிமா
தியேட்டரை விட்டே போயிருக்கும்.:((

நல்ல சினிமாவாக இருந்தால் பார்க்க வை
சாமி! என்று ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்
நானும் தம்பியும்!

அம்மாவிடமிருந்து கற்றதனால்தான்
கொஞ்சம் பெரிதான பிறகு நல்ல படமாக
இருந்தாலும் எனக்குப் பிடித்தால் மட்டும்தான்
போவது என்று முடிவு செய்தேன்.

அம்மாவும் தம்பியும் மட்டுமோ, அல்லது
அப்பா,அம்மா, தம்பி மூவருமோ சினிமாவுக்குச்
சென்றால் எனக்கு டிக்கெட்டிற்கான பண்த்தை
கொடுத்துவிடவேண்டும். நான் வீட்டிலேயே
இருந்துக்கொள்வேன். பாட்டி துணைக்கு
இருப்பார்கள்.


சரவணா தியேட்டரில் சினிமாவி்ற்கு
போகிறார்கள் என்றால் மட்டும் உடன் செல்வேன்,
ஆனால் தியேட்டருக்கு போகாமல் பின்னாலிருக்கும்
அம்மம்மாவீட்டிற்கு போய் விடுவேன். படம்
முடிந்தோ அல்லது அடுத்த நாளோ வீட்டிற்கு
வருவேன்.(இப்போது அந்தத் தியேட்டரும் இல்லை,
அம்மம்மாவும் மும்பையில் இருக்கிறார்கள்)


வெளியே போவதாகச் சொல்லி பிள்ளைகளைச்
சஸ்பென்ஸாகத் திரைப்படத்திற்கு அழைத்துச்
செல்வது எனக்கும் அயித்தானுக்கும் பிடித்த ஒன்று.
போகும் இடம் வரும் வரை சினிமாவா? பார்க்கா?
என்று பிள்ளைகள் சின்ன டென்ஷனுடன் வருவார்கள்.
தியேட்டரில் நிறுத்தியவுடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும்
படத்தைப் பார்த்து சந்தோஷமடைவார்கள். :))

தா ரா ரம் பம்,தாரே ஜமீன் பர், தாஸ்விதானியா ஆகிய
படங்கள் பார்த்து விட்டு பி்ள்ளைகள்,
"எப்படி அம்மா செலக்ட் செய்யறீங்க!
சூப்பரா இருக்கு! சொல்லி கழுத்தை கட்டிக்கொண்டு
முத்தமிடுவார்கள்," தேங்கஸ்ப்பா!" என்று
அப்பாவுக்கும் முத்த மழைதான்.

அம்மா அன்று கற்றுத் தந்த வழியில்தான்
நான் இன்றும் பார்க்க வேண்டிய படங்களைத்
தெரிவு செய்கிறேன்.

ஊருக்குப் போய் அம்மாவைக் கட்டிக்கொண்டு
நானும் நன்றி சொல்ல வேண்டும்.

Saturday, August 30, 2008

கால ஓட்டத்தில் காணாமல் போனது...

கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி
பதிவிடுங்களேன். அப்படின்னு சுரேகா கூப்பிட்டிருக்காரு.
தலைவர் சொல்லி கேக்காம இருக்க முடியுமா!! :)

இதோ என் பதிவு.

அம்மாவுடன் பிறந்தவர்கள் 2 தம்பி, 1 தங்கை.
இதைத் தவிர அம்மாவின் பெரியம்மா பிள்ளைகள்
என்று மொத்தம் 4 மாமா, 3 சித்தி. இவர்கள்
அனைவரும் சேர்ந்தாலே வீடு திருவிழாக்கோலம்
கொண்டுவிடும்.


இந்த 8 பேருக்குள்ளும் அப்படி
ஒரு பாசம். இவர்கள் அடித்த லூட்டிகள்,
வாங்கிய அடிகள் என இவர்களின் கதைகள் தான்
சோறு சாப்பிடும் நேரக் கதைகள்.


வெகு நாட்களுக்கு அம்மாவின் உடன் பிறந்தவர்கள்
தான் அனைவரும் என்றே நினைத்திருந்தேன். எந்த
வித்தியாசமும் இருந்ததில்லை.

இப்படி ஒரு பெரிய குடும்பமாக பெரியம்மா, பெரியப்பா,
சித்தி, அத்தை போன்ற உறவுகள் தரும் இதம்,
சுகம் சுகம்.

ஆனால் இன்று இந்த உறவுகள் எல்லாம் டிக்‌ஷனரியில்
மட்டும்தான் காணலாம் போல.

நாம் இருவர் நமக்கிருவர் என்றார்கள்.

வீட்டிற்கு ஒரு மரம் போல் வீட்டிற்கு ஒரு பிள்ளை
என்றார்கள்.

இப்போது பாதி பேர் நமக்கு நாமே திட்டத்தில்தான்
இருக்கிறார்கள்.


இதனால் உறவுகள் தொலைந்து போயின.
பெரியப்பா என்றால் யார்? என்றோ மச்சினன் என்றால்
யாரு என்றோ பிள்ளைகள் கேட்கும் காலம் வெகு
தூரத்தில் இல்லை.



திருமணம் செய்து கொடுத்துவிட்டதனால் பெண்ணிற்கு
பிறந்த வீட்டிலிருந்து தொடர்பு அறுந்து விடாமல் இருக்க
தான் சீர் கொடுக்கும் பழக்கம் வைத்தார்கள்.
ஒய்யாரமாக மேள வாத்தியத்துடன் கர்வமாக
மாமன் சீர் செய்து கொண்டு வருவது இனி இருக்குமா?


அத்தைமடி மெத்தையடி எனும் சுகங்கள் பிள்ளைக்கு
கிடைக்குமா?

காலப்போக்கில் மாறிப்போன லிஸ்டில் உறவுகளும்
இருப்பது சோகம்.


லீவுக்கு அத்தை வீட்டிற்கு சென்று அவர்கள்
பிள்ளைகளுடன் விளையாடுவது என்றால்
இந்தக் கால பிள்ளைகளுக்கு தெரியாதே!


யாரும் யார் வீட்டிற்கும் போவதும் இல்லை
வருவதும் இல்லை.
யாரும் இருக்கும் இடத்தில்
இருந்துவிட்டால் எல்லாம் சொளக்யமே
என்பதை
தவறாக புரிந்து கொண்டுவிட்டார்களோ!


விருந்தினர் போற்றுதலும் இல்லை.
உறவை வளர்ப்போமும் இல்லை.
யந்திரமயமாகிப்போனது இந்த வாழ்க்கை.

இந்தப் பாட்டைக் கேட்டுட்டு போங்க.

மானூத்த மந்தையில மான் குட்டி பெத்த மயிலே
பொட்ட புள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில்
கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி- அவன்
தங்க கொலுசு கொண்டு தாராண்டி...
சீர் சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே...

மாமன் பாட்டு:


எழுத நான் அழைப்பது 2 பேரை:

1. பரிசல்காரன்
2. கானா பிரபா.

Wednesday, July 16, 2008

காதல் எனப்படுவது யாதெனில்.............

பரமபத விளையாட்டில் பாம்பு வாயில் கடிபட்டு
இறங்காமல் வருவது கஷ்டம். அது மாதிரி
நம்ம வலையுலகில் டாக்கில் மாட்டாமல்
இருப்பதும் கஷ்டம். நானும் மாட்டிட்டேன். :(

மாட்டிவிட்ட சென்ஷி நல்லா இருங்க (வாழ்த்துதான் :) )

காதல். உச்சரிக்கும்போதே உள்ளத்தில் ஒரு உற்சாகம்.

காதலில் தோல்வி அடைந்திருந்தாலும் பரவாயில்லை,
ஆனால் காதிலில் விழாதது கொடுமை
என்று எங்கோ எப்போதோ படித்திருக்கிறேன்.

காதல் அவசியமானது.
நீரின்றி மட்டுமல்ல காதல் இன்றிக்கூட அமையாது உலகு.


காதல் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியம், இனிமை.

திருமணத்திற்கு பிறகு வரும் காதல் மிக அழகானது.
(காதல் திருமணங்களில் திருமணத்திற்கு பிறகு காதல்
காணாமல் போய்விடுகிறதே..)

ஆனாலும் என்னைக் கவர்ந்த காதல் வயோதிக் காதல் தான்.

இளமைக்காலத்தில் வேலை, பிள்ளை வளர்ப்பு என்று தன் துணையுடன்
நேரம் செலவிட முடியாமல் போகிறது.

வயதான பிறகும் காதல் மிச்சமிருந்தால்
வேறு என்ன வேண்டும்.

50 வயதிற்கு பிறகு அன்னியோன்யாமாக ஒருவர் கைபிடித்து
ஒருவர் நடக்க,

ஒருவருக்கு ஒருவர் துணையாக ஆஹா, நினைத்துப்பார்கையில்
மனம் சிலிரிக்கிறது.

இதோ உங்களுக்காக இந்த வீடியோ.




காதல் அவசியமானது, கட்டுப்பாடுகள் அற்றது.

காதல் காதல் காதல். காதல் போயின் சாதல்.


காதலியுங்கள் உங்கள் வேலையை, பிள்ளைகளை
மட்டுமல்ல. மனைவியையும் தான்.

சரி நான் தொடர அழைப்பது
புதுகை அப்துல்லாவை.

Wednesday, March 05, 2008

தொடர் விளையாட்டு

இது ஸ்கூல்ல படிச்ச பாட்டுக்கள்.நெறைய
இருந்தாலும் இது சாம்பிள் மட்டும்தான்.
இது மாதிரி ஸ்கூல்ல படிச்ச பாட்டுக்கள்
[கதைகள் இப்ப வேனாம் அடுத்த டேக் குக்கு]
எழுதி தொடருங்கள்.இதையே கொசு வர்த்தியா
நெனச்சு 'தொடர் விளையாட்டு' ஆரம்பிப்போமா'?

அப்படின்னு கேட்டு கண்மணி என்னையும்
தொடர் விளையாட்டுல கூப்பிட்டுடாங்க.

ஒரு மாண்டிசோரி டீச்சரா இருந்துகிட்டு
இதுக்கு பதிவு போடாட்டி எப்படி?

போட்டுட்டோம்ல............. :)

காட்டுப்பாக்கம் தாத்தா:

காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு
காடு போல தாடியாம்,
மாடி மேலே நிக்கும் போது
தாடி மண்ணில் புரளுமாம்,

ஆந்தை இரண்டு, கோழி மைனா,
அண்டங்காக்கை, குருவிகள்
பாந்தமாக தாடியுள்ளே பதுங்கிக் கொண்டிருந்தன.

உச்சி மேலே நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு! அச்சு! என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

நம்பர் ரைம்ஸ்:

ஒன் டூ பக்கிள் மை ஷூ
த்ரீ ஃபோர் ஷட் தி டோர்
ஃபைவ் சிக்ஸ் பிக் அப்ஸ்டிக்ஸ்
செவன் எயிட் லே தெம் ஸ்டிரைட்
நைன் டென் எ பிக் ஃப்பேட் ஹென்.

இது நான் பிள்ளைகளிடமிருந்து
கற்றுக்கொண்ட பாடல்.

அதோ பாரு காரு
காருக்குள்ள யாரு
நம்ம நாட்டு நேரு
நேரு என்னச் சொன்னாரு?
எழுதப் படிக்கச் சொன்னாரு.

இதைச் சொல்லும்போது


டெடி பியர் டெடி பியர்
ட்ர்ன் அரவுண்ட்

டெடி பியர் டெடி பியர்
டச் த கிரவுண்ட்

டெடி பியர் டெடி பியர்
பாலிஷ் யுவர் ஷூஷ்

டெடி பியர் டெடி பியர்
ஆஃப் டு ஸ்கூல்.


சரி இதைத் தொடர நான் அழைப்பது:

ஆஷிஷ் அம்ருதா

சுரேகா

நிஜமா நல்லவன்

மங்களூர் சிவா


:))))))))))

Friday, January 18, 2008

புத்தாண்டு சபதம் TAG

நம்ம மங்களூர் சிவா புத்ததண்டு சபதம் போட்டு எனக்கு டாக் போட்டிருக்காரு.



நான் சபதம் போடனுமாம். "சபதமெல்லாம் எனக்குப் போடத் தெரியாது" அப்படின்னு பாட்டு பாடிடலாம்னா, மங்களூர் சிவா, சாமான்யன் சிவா, பொடியன் எல்லோரும் முறைக்கறாங்க.



எதைப் பத்தி சபதம் போடலாம்னு யோசிச்சாலே மண்டை காயுது.


நான் இந்த ஆட்டத்துக்கு வரல. சபதம் எல்லாம் எடுத்து, அதை காப்பபத்தம் போனா உம்மாச்சி கோச்சுக்கும். அதனால சபதம் ஏதும் எடுக்கறது இல்லன்னு வேணா, சபதம் எடுக்கலாம்.



சரி நான் TAG கொடுக்கும் அந்த 4 பேரு:



1.பாசமலர்

2.ரசிகன்

3.சஞ்சய்

4.கானா பிரபா

வாங்க வந்து கலக்குங்க. (ஆப்பு வெச்சதா நினனச்சு திட்டாதீங்க பிளீஸ்) :))

அன்புடன்
புதுகைத் தென்றல்.