Showing posts with label healthcare. Show all posts
Showing posts with label healthcare. Show all posts

Tuesday, September 24, 2013

என்ன செய்து விடுகிறோம் நாம்!!!!

எந்த ஒரு செயலுக்கும் ஏதாவது ஒரு எதிர்செயல்பாடு இருக்கும்னு சொல்வாங்க. சில சமயம் நம்ம செயல்பாடுகள் இடியாப்ப சிக்கலில் நம்மை மாட்டி வைத்துவிடும். “Speak when you are angry and you’ll make the best speech you’ll ever regret.” ~Laurence J. Peter. எவ்வளவு அழகா சொல்லியிருக்கார்ல.  ஏதாவது ஒரு பிரச்சனையின் போதோ வாக்குவாதத்தின் போதோ நாம எப்படி அந்த சமயத்துல நடந்துப்பதுன்னு தெரியாமலேயே தவறா செயல்பட்டுடறோம்.

சூழ்நிலைக்கு தக்க நடந்துக்கணும்னு என்பதையும் விட அந்த சூழ்நிலையில் நாம எப்படி செயல்படறோம் என்பது முக்கியம். ஆங்கிலத்தில் 
Respond Instead of Reacing   அப்படின்னு ஒரு வாக்கியம் இருக்கு. ரெண்டுக்கும் என்ன பெருசா மாறுதல் இருக்கு. ஒரே அர்த்தம் தானேன்னு தான் நாம நினைப்போம்.  இரண்டுக்கும் ஒரே அர்த்தம் இல்லை என்பதுதான் நிஜம்.

Respond  : அப்படின்னா பதில்கொடுப்பது. நாம என்ன மாதிரி பதில் சொல்றோம், அல்லது பதில் கொடுக்கறோம்னு வெச்சுக்கலாம்.

 React : இதற்கு சரியான அர்த்தம் “எதிர்செயல் ஆற்று” அதாவது எதுவும் யோசிக்காம , பின் விளைவுகளைப்பத்தி யோசிக்காம நடந்துப்பதை தான் ரியாக்‌ஷன்.



பொதுவாவே நாம ஏதாவது ஒரு தருணத்துல  முறையா பதில் சொல்வதற்கு பதில்  ரியாக்ட் ஆகிடுவோம். ஒரு சூழ்நிலை அல்லது பிரச்சனையின் போது நாம எப்படி   Respond   செய்றோம் என்பது அவரவரின் மனமுதிர்ச்சியைப் பொறுத்த விஷயம்னு உளவியாளாலர்கள் சொல்றாங்க. ஆனா நாம கோபத்துல  உணர்ச்சி வேசத்துல எதிரா செயல்பட்டு சூழ்நிலையை மோசமாக்கிடறோம். இதை புரிஞ்சுகிட்டு எப்படி தவிர்ப்பதுன்னு தெரிஞ்சிகிட்டா பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

 கூட்டமான ஒரு இடத்துக்கு போறோம் அங்கே தெரியாம எதிர்ல வருபவர் மேல மோதிடறோம். உடனடியா  எதிர்ல வந்தவர் கோபப்பட்டு சண்டைக்கு வர்றார் - இது தான் சிச்சுவேஷன். இப்ப இதுல ரெஸ்பாண்ட் எது ரியாக்‌ஷன் எதுன்னு பார்க்கலாம்.

ஏதோ ஒரு பிரச்சனை செய்யணும்னு நினைப்பிலயோ,  அதீதமான கோவத்தினாலோ,யோசிக்காம  எதிர்ல வந்தவர் உடனடியா சண்டைக்கு வந்தது ரியாக்‌ஷ்ன்.  ஆனா அதுவே அவர் உடனடியா செயல்படாம சில விநாடிகளாவது பொறுத்திருந்தார்னா, தெரியாம மோதினதிற்காக மன்னிப்பு கேட்கபட்டிருக்கலாம். அந்த  சிலவினாடிகள் தாமதிக்கும்போது நமக்கு கோபம் குறைந்து நாம செய்வது என்ன? இதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும்னு யோசிக்கறோம், எப்படி இதை சரி செய்யலாம் என யோசிக்கும் தன்மை நமக்கு வந்துவிடும். இது தான் சிறப்பான செயல்பாடு.

கோபத்தை நம் கட்டுக்குள் கொண்டு வர உதவுவது  Respond. உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் நாம உந்தப்பட்டு நாம் செய்யும் நடவடிக்கை ரியாக்‌ஷன்.

கோபத்தோட நாம் செய்யும் செயல்கள், பேச்சுக்களும் பின்னாளில் நாம் வருத்தப்பட நேரும். இது தான் உண்மை.

வாழ்க்கையில் நமக்கு நேரும் எத்தனையோ இன்னல்கள், பிரச்சனைகளை பத்தியே நாம அதிக நேரம் நினைச்சுகிட்டு இருக்கோம். அதனால நாம  சீக்கிரமா புலம்பலுக்கு தள்ளப்படறோம். புலம்பம்பல் இருப்பதால அன்பா பேசும் தன்மையை இழந்திடறோம். நமது வாழ்வின் வேதனைகளையும், துன்பங்களையும் அசைபோட்டுகிட்டு இருப்பதில் ஆனந்தப்படாம இருந்தா நமது செயல்கள், பேச்சுக்கள் நல்லதாவா இருக்கும்.

சில சமயம் மனசுல இருக்கறதை கொட்டிட்டா நல்லதுன்னு நினைச்சு பேசிடறோம், ஆனா பேசினதுக்கப்புறம் சொல்லாமலே இருந்திருக்கலாமோ எனும் சூழல் தான். கோபத்துல அடுத்த வங்க மேலே கத்தி தீத்திடுவாங்க சிலர்.  அதன் விளைவுகளை சரிசெய்வது அவ்வளவு சுலபமான விஷயமில்லை.


நமக்குள்ளே கோபம் கொந்தளிச்சுகிட்டு வரும்போது நாம உண்மை பேசுவதில்லைன்னு அறிஞர்கள் சொல்றாங்க. நம்ம விரக்தியும் வேதனையும்தான் அப்போ வெளிப்படுது. அது வெளிப்படுவதனால எந்த பயனும் இல்லை.  கோபம் குறைஞ்ச பிறகு நாம சொல்ல நினைச்சதை சொல்லும் பொழுது நம்மால் உண்மை அழகா சொல்ல முடியும். நம் தரப்பு நியாயத்தை சொல்ல முடியும்.  நம்மளுடைய பயத்தை வெளிப்படுத்துவதை விட நம் நியாயத்தை வெளிப்படுத்துவதுதானே சரி.

நாம நமக்கு சொல்லிக்கொடுத்துக்க வேண்டிய விஷயம் இதுதான். எந்த ஒரு சூழ்நிலையின்  போதும் உடனடியா செயல்படாம, சிந்திச்சு செயல்படுவோம் என்பதுதான்.


Wednesday, January 23, 2013

நல்ல தூக்கமே வருக!! வருக!!!

இப்படில்லாம் குண்டக்க மண்டக்க யோசிக்காம பதிவை படிங்க. :) இது  தூக்கத்தைப் பத்திய பதிவு.  டயர்டா இருக்கு! எப்படா வீட்டுக்கு போய் தூங்குவோம்னு சிலருக்கு இருக்கும் (மத்த சிலர் ஆபீசில, ஸ்கூல்ல தூங்கிடுவாங்கல்ல)

மெல்ல மெல்ல இருட்டத் துவங்கியதுமே நமக்கு தூங்கும் நேரத்திற்கான எதிர்பார்ப்பு இருக்கும். அந்த நேரம் நாம ஓய்வு எடுக்கறோம். நல்ல தூக்கம் கிடைக்கும் பொழுதுதான் நம் உடல் உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுது. தூங்கி எந்திரிச்சா தலைவலி, உடல்வலி எல்லாம் ஓடிப்போயிட காரணம் நாம அசந்து தூங்கும் நேரத்தில் தான் உடலில்  மெயிண்டெனஸ் வொர்க் நடக்கும். ஏதும் ரிப்பேர் இருந்தா அது சரியாகும். அதனால் தான் நாம தூங்கி ஏந்திரிச்சதும் ஃப்ரெஷ்ஷா இருப்போம். இதெல்லாம் நமக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா அதென்னவோ படுக்கையில போய் படுத்தா கொஞ்ச நேரம் தூங்குவோம். அப்புறம் பாதி ராத்திரிக்கு கொட்ட கொட்ட முழிச்சிக்கிடுவோம்.


இதைப்படிக்கும் போது ஆஹா எனக்கும் இப்படித்தானே நடக்குதுன்னு தோணுதா, வாங்க ஃப்ரெண்ட் வாங்க, இது உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல
தூக்கமில்லாம அவதிப்படும் எத்தனையோ இந்தியர்கள் நமக்கு துணையா இருக்காங்க. 

வயசானவங்க தான் தூக்கமில்லாம அவதிப்படுவாங்க. ஆனா இப்ப இள வயதினரும் தூக்கத்தை தொலைச்சிட்டுத்தான் இருக்காங்க. உடம்பு அசதியா இருந்தா தூங்கிடுவாங்கன்னு சொல்வாங்க. ஆனா அந்த அசதி மறைய வரை தூங்கிட்டு அப்புறம் முழிச்சிடுவாங்க சிலர். கண்ணைத்திறந்து பார்த்தா பாதி ராத்திரி மணி 1 அல்லது 2 அதுவும் இல்லாட்டி விடியாக்காலை மணி 3 ஆ இருக்கும். தூங்க முயற்சி முடியாம போய் சிலர் எந்திரிச்சி ஆபிஸ் வேலை பாத்துக்கிட்டு இருப்பாங்க. இல்லாட்டி டீவி, கம்ப்யூட்டர்னு இருப்பாங்க.

இப்படி தூக்கமில்லாம இருப்பது பல்வேறு காரணத்தால இருக்கலாம், ஏதேனும் நோயின் அறிகுறியா கூட இருக்கலாம்.



தூக்கமில்லாம இருக்கும் இந்தக்குறை 3 வாரம் முதல் நாலு வாரம் வரைக்கூட போகும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. ஆனா இதனால மறதி, மனச்சோர்வு, எரிச்சல், இவைகளோட இதய நோய்களும் தாக்கும்னு சொல்றாங்க. நல்ல தூக்கம் ரொம்ப அவசியமான ஒரு விசயம்.

பிரச்சனைன்னா அதுக்கு தீர்வும் இருக்கும்ல!!! மருத்துவர்கள் என்ன சொல்றாங்கன்னு பாப்போம்.

1. மாலை 6 மணிக்கு மேல காபி குடிக்க கூடாது. காபியில் இருக்கும் கஃபைன் தூக்கத்தை விரட்டி அலர்டா வெச்சிடும். அப்ப இரவு தூங்க முடியாது.

2. மாலை  உடற்பயிற்சி ஏதாவது செய்வது நல்லது. நடை கூட போதும்.

3.  ராத்திரி எத்தனை மணியானாலும் டீவி சீரியல், கணினி, மொபைல்னு இருக்கறவங்களா நீங்க உங்களுக்குத்தான் இந்த பாயிண்ட்.

ஸ்மார்ட் ஃபோன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப், டீவி இவைகளிலிருந்து வெளிவரும்  அதிக  வெளிச்சம் கொண்ட திரைகளைப் பார்ப்பது இரவு நேரத்தில் சுரக்கும்  melatonin  என்கிற ஹார்மோன் சுரைப்பதை அமுக்கிடுது.
இந்த ஹார்மோன் தான் நமக்கு நல்ல தூக்கம் கிடைக்க காரணம்.

அதனால் தான் பெட்ரூம்களில் டீவி, கம்ப்யூட்டர் வைத்துக்கொள்ள வேண்டாம்னு சொல்றாங்க.  அதனால நல்ல தூக்கம் வேணும்னா தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி டீவி, கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ஃபோன் எல்லாத்துக்கும் “ குட் நைட்” சொல்லி ஆஃப் செஞ்சு வெச்சிடணும்.

4. சின்னக் குழந்தைகள் தூங்கணும்னா ரூம் லைட்டை ஆஃப் செஞ்சிட்டு படுக்க வைப்போமே, அது மாதிரி தேவையில்லாத விளக்குகளை ஆஃப் செஞ்சு வெச்சிட்டு குறைவான வெளிச்சம் அதுவும் தேவைப்படும் இடங்களுக்கு மட்டுமே இருக்கும் படி செஞ்சா தூங்க முடியும்னு சொல்றாங்க.

அதாவது இரவா, பகலான்னு புரியாம மண்டை குழம்பி போகும் அளவுக்கு வெளிச்சமா இரவில் இருந்தா தூக்கம் வராது.

5. தூங்குவதற்கு முன் சிலருக்கு குளிக்க பிடிக்கும். ஆனா ஜலக்ரீடை செய்யாம, ஜஸ்ட் க்விக் ஷவர் எடுத்துக்கொள்வதுதான் நல்லது. ரொம்ப சூடான தண்ணில குளிச்சா உடம்பும் சூடாகும். அத்தோட போய் தூங்கினா வேர்த்து விறுவிறுத்து போகும்.

6. தூங்கப்போகும் முன் இடம் சூடான பால் குடிக்கலாம்.

7. ரொம்ப முக்கியமான விஷயம் தூங்கும் நேரம். நம்ம உடம்பில் BIOLOGICAL CLOCK   இருக்கு.  ( An innate mechanism that controls the physiological activities of an organism that change on a regular cycle.) நம்ம உடம்புகளில் இருக்கும் செல்கள் இதை வெச்சுத்தான் நேரத்தை உணர்வது.  இந்த கடிகாரம் சூரிய ஒளி மற்றும் தட்பவெட்பத்தை வைத்து இயங்குகிறது.  அதிக வெளிச்சம், அதிக இருட்டு இரண்டும் இதன் இயக்கத்தை மாற்றிப்போடும்.



8. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கப்போய்விடுவது நல்லது . அதற்கு முன் தூக்க நேரத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வதை வழக்கமா வெச்சுக்கணும்னு மருத்துவர்கள் சொல்றாங்க. குறைந்த பட்சம் 7 மணிநேர தூக்கம் அவசியம் என்பதால அதுக்கு தகுந்தவாறு நாம்  இரவு தூங்கப்போகும் நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு டீவி, கம்ப்யூட்டர் எல்லாவற்றிலிருந்தும் விலகி, இனிமையான பாடல்கள் கேட்கலாம், புத்தகம் படிக்கலாம்.

பின் இயல்பா தூக்கம் வரும் என்றும் இதனால் மதியம் தூங்க தேவையிருக்காது என்றும் ஒரு வாரம் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்க முடியும் என்றும் சொல்றாங்க. ஆனந்தமா தூங்கி ஆரோக்யமா வாழ்வோம்.




 ஆவ்வ் பதிவையும் நேரம் கிடைக்கும் போது படிங்க








 

Friday, March 09, 2012

சத்தாத்தான் சாப்பிடறோமா???!!!!!!!!!!!

அந்தக்காலத்து ஆளுங்க சாப்பிடுவதே ஒரு கணக்காத்தான் இருக்கும்.
உடல் உழைப்பு அதிகம் என்பதால வஞ்சனை இல்லாம சாப்பிடுவாங்க.
சாகுவரைக்கும் கிழங்கு மாதிரி எந்த நோய் நொடியும் இல்லாம
வாழ்ந்திருக்காங்க. எங்க அம்மாவோட அம்மாவோட அப்பா சாகும்பொழுது
வயசு 98!!! இந்தக் காலத்துல ரொம்ப சின்ன வயசுல இருக்கறவங்க
கூட மாரடைப்பு, பீபின்னு அவதி படும் சூழல். காரணம் என்னவா
இருக்கும்னு எனக்கு ரொம்ப நாளா ரோசன.

சத்து குறைவா சாப்பிடறோம். இப்ப காய்கறிகள், பழங்கள்
ஆகியவற்றில் தான் நமக்குத் தேவையான விட்டமின் சத்துக்கள்
கிடைக்குது. ஆனா இன்றைக்கு ரசாயன உரங்கள், சீக்கிரம் பழுக்க
கெமிக்கல்கள், சீசன் இல்லாத காலத்தில் அல்லது முன்பே
சீசன் காய்கறி பழங்கள் கிடைக்குது. இதனால நமக்கு நல்லா
தெரிஞ்சிக்க கூடிய விஷயம் உடலில் தேவையான சத்துக்கள்
செல்வதே இல்லை. பாலில் கூட கலப்படம் நடக்கும் கலியுகத்துல
நாம நல்ல பால்தான் சாப்பிடறோமான்னு சந்தேகத்துடன் தான்
ஜீவிக்கிறோம்.சரி தீர்வுதான் என்ன?

ஒரு பெண்மருத்துவர் தன்னுடைய பேட்டியில் அழகுப்போட்டிக்கு
நடுவராக தன்னை அழைச்சிருந்ததாகவும் அங்க போயிருந்தப்ப
மதிப்பெண்கள் போடுவதற்கு பதில் அவர்களுக்கு மருந்து எழுதத்தான்
கை போனதா படிச்சிருக்கேன். ஒல்லியா இருக்க வேண்டும் என்பதற்காக
உணவைக்கு குறைப்பதுதான் இப்ப ட்ரண்ட். உணவின் அளவை
குறைச்சாலும் பேலன்ஸ்ட் டயட்டா சாப்பிடணும்னு சொல்லிக்
கொடுப்பதில்லை. குழந்தைகள், பதின்மவயது பிள்ளைகள்,
கருவுற்றிருக்கும் தாய்மார்கள், மெனோபாஸ் வயது பெண்கள்,
மிடில் வயது மாதவன்கள், வயதானவர்கள் என அவரவர் நிலையை
பொறுத்து எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வேறுபடும். மேலே
சொல்லியிருப்பது போல சத்துக்குள் குறைஞ்ச உணவை நாம
எடுத்துக்கும் பொழுது உடம்புக்கு தேவையான சத்து கிடைக்காம
ஒல்லிகுச்சி உடம்பாகவோ அல்லது அதீத பருமனாகவோ இருக்க
வாய்ப்புக்கள் இருக்கு.


நாம சாப்பிடும் காய்கறிகளில் தேவையான சத்து கிடைப்பது
இல்லை. சரி என்ன செய்வது? இருக்கும் வரைக்கும் நல்லா
இருக்கணும். ஆனா பொதுவா மருத்துவர்கள் இந்த மல்ட்டி
விட்டமின் மாத்திரைகளை எழுதுவதே இல்லை. எனக்கு
சின்ன வயதில் ரொம்ப ரேராக ஆண்டிபயாடிக் சாப்பிட நேர்ந்த
பொழுது அத்துடன் ஒரு மாதத்துக்கு மல்டி விட்டமின் மாத்திரை
எடுத்துக்கொள்ளச் சொல்லி மருத்துவர் சொன்னது ஞாபகம் இருக்கு.
ஜுரம், மஞ்சள்காமாலை இப்படி எந்த நோய் வந்தாலும் நோய்
தீர்ந்த பிறகு கொஞ்ச காலம் இந்த சத்து மாத்திரைகள் கொடுப்பது
பழக்கமா இருக்கு. ஆனா சில வருஷங்களா இந்தப் பழக்கம்
மருத்துவர்களுக்கு இல்லாம போயிடிச்சு.

சமீபகாலமா எனக்கு அடிக்கடி லோ பீபி,அசதின்னு படுத்திகிட்டு
இருந்தது. எப்ப டாக்டரைக்கேட்டாலும் சத்தா சாப்பிடுங்கன்னு
சொல்லிட்டு விட்டுடுவாங்க. சென்றமாதம் வைரல் ஜுரம் வந்தப்போ
பெட்ரெஸ்ட்ன்னு பிரிஸ்கிரிப்ஷனில் எழுதும் அளவுக்கு உடல்
ஆகிடிச்சு!!! அத்தோடு டாக்டர் மல்ட்டி விட்டமின் மாத்திரை
ஒண்ணை எழுதிக்கொடுத்திருந்தாரு. தொடர்ச்சியா வேலை செஞ்சா
ரொம்ப டயர்டா ஃபீல் செஞ்சுகிட்டு இருந்த நான் ஜுரம் வந்த
சமயம் அம்மா, அப்பாவும் இங்கே இருக்க (அவங்களுக்கு ஜுரம்)
அவங்களையும் கவனிச்சு மகனுக்கு ப்ரீபோர்டுக்கு உதவிகிட்டிருந்தேன்.

ஒரு வேளை செஞ்சே ஆக வேண்டிய கட்டாயத்தால மனோதைரியத்தை
செஞ்சுகிட்டு இருக்கேன்னுதான் நினைச்சேன். ஆனா ஏதேச்சையா
வெயிட் மிஷினில் ஏறிப்பார்த்தா என் வெயிட் குறைஞ்சிருந்தது.
என்னென்னவோ செஞ்சும் குறையாம இருந்த வெயிட் ஒரு வாரம்
மாத்திரை சாப்பிட்டதில் எப்படி குறையும்!!! அடுத்த வாரம்
செக்கப்புக்கு திரும்ப டாக்டரிடம் போனப்பா என்னுடைய சந்தேகத்தைக்
கேட்டேன். வேலை செஞ்சாதல உங்க எடை குறையல, ஜுரத்தாலையும்
இல்ல. உங்க உடம்புக்கு போதிய சத்து கிடைக்காம இருந்ததால் உடல்
ஊதி போயிருந்தது தேவையான சத்து கிடைக்கவும் அது இயல்பா
இயங்குதுன்னு சொல்லி அந்த மருந்தை 3 மாசம் தொடர சொன்னார்.

இப்ப எப்பவும் தூக்கம் தூக்கமா வர்றது இல்ல. சிடு சிடுப்பு குறைஞ்சிருக்கு.
என்னால ஓடியாடி பழையபடி வேலை செய்ய முடியுது. தொடர்ச்சியா
மருந்து எடுத்துகிட்டு இருக்கேன். அதே சமயம் உண்ணும் உணவும்
பேலன்ஸ்டா இருக்கும்படி பாத்துக்கறேன். இப்ப 3 கிலோ குறைஞ்சு
தெம்பா இருக்கேன். நியுரோபியான் இஞ்சக்‌ஷன் ஒரு நாள்விட்டு
ஒருநாள் எடுத்த பொழுதும் இதேமாதிரிதான் இருந்தது. ஆனா இப்ப
அதைவிடவும் இயல்பா வேலை செய்ய முடியுது. ஊசிகுத்திக்கும்
வேலை இல்லை. தினமும் ஒரு மாத்திரை. இந்த சமயத்துலதான்
எனக்கு யோசனை வந்து நெட்டை குடைஞ்சேன். ஆமாம் நாம
உண்ணும் உணவில் கிடைக்கும் சத்து போதாது ஆகவே மல்ட்டி
விட்டமின் கண்டிப்பா சப்ளிமெண்டா தேவைன்னு படிச்சேன்.

எனக்கு கடந்த 2 வருஷமா இருக்கும் கியாஸ்ட்ரபிள் கூட குறைஞ்சு
கொஞ்சம் நிம்மதி கிடைச்சிருக்கு.

இங்கே போய் படிச்சு பாருங்க


இங்கேயும் படிக்கலாம்

எனக்கு ஃபைரோமயோல்ஜியா அது இதுன்னு டாக்டர் பயமுறுத்தி
ஹெவி டோசேஜ் மருந்து கை மற்றும் நடுமுதுகு வலிக்கு
கொடுத்தும் வலி தீராம வேற ஒரு டாக்டர் வெறும் கால்சியம்
மாத்திரை மட்டும் கொடுத்து வலியே இல்லாம செஞ்சது ஞாபகத்துக்கு
வந்தது. நம்ம உடம்புக்குத் தேவையான சத்தை தனியா எடுத்துக்கிட்டே
ஆகவேண்டிய சூழல். பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி
மாணவர்கள் பலர் உணவை சரியா சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கும்
இந்த மல்ட்டி விட்டமின் கண்டிப்பா உதவும்

ரொம்ப சத்து குறைவா இருப்பவர்கள் 3 மாசம் எடுத்துகிட்டு நடுவில்
கொஞ்சம் ப்ரேக் விட்டு பிறகு தொடரலாம். இல்லாட்டி மருந்துக்கு
உடம்பு பழகிடும். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுதானே!!

எல்லோரும் ஆரோக்கியமா வாழ ஒரு நல்ல வழி இதுன்னு நினைக்கிறேன்.

Wednesday, November 23, 2011

ஊரெல்லாம் உன் பேச்சுத்தான்!!!!!:(( :)

அம்ருதம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. பள்ளியில் வாமிட் செய்து
விட்டதாக சொன்னாள். வீட்டிற்கு வந்து எது சாப்பிட்டாலும் வயிற்றில்
தங்கவில்லை. சில சமயம் நேரத்துக்கு சாப்பிடாவிட்டால் வாயுக்கோளாறு
ஏற்பட்டு இப்படி ஆகும் (முதல் நாள் சத்தியநாராயண விரதத்திற்குச்
சென்று சாப்பாடு ரொம்ப லேட்டானது). சரி என்று அதற்கான மருந்து
கொடுத்தேன். அதன் பிறகு தொந்திரவு இல்லாமல் இருந்தாள்.

காலை எழுந்தது முதல் வயிற்றுப்போக்கும் சேர்ந்து கொள்ள டாக்டரிடம்
அழைத்துச்சென்றால் அங்கே நிறைய்ய குழந்தைகள் இதே சிம்ப்ட்ம்ஸுடன்.

ரெயின்போ மருத்துவமனை எனக்கு மிகவும் பிடித்தது. சுகாதாரமாகவும்
இருக்கும். மருத்துவர்களும் நல்லவர்கள். ஆரம்பமே ஆண்டிபயாடிக்
கொடுத்து டார்ச்சர் செய்ய மாட்டார்கள். (இந்த ரெயின்போ மருத்துவமனை
ப்ரதேயகமாக தாய்மார்கள், மற்றும் குழந்தைகளுக்காக மட்டுமே)

அம்ருதாவிற்கு என்ன உபாதை என்று சொன்னதுமே டாக்டர் பொறுமையாக
“இப்பொழுது ஊரில் இப்படி ஒரு தொற்றுவியாதி பரவியிருக்கிறது.
வாந்தி, பேதி இத்துடன் ஜுரமும் சேர்ந்து கொள்ளும்.” என்று சொல்லி
அதற்கான மருந்தை எழுதிக்கொடுத்து 3 நாளில் சரியாகிவிடும் என்று
சொன்னார்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாருக்கு உடல்நிலை சரியில்லை
என்று மருத்துவரிடம் போனாலும் நான் கேட்டுக்கொள்ளும் முதல்
கேள்வி,” என்ன டயட் கொடுக்கலாம்?” இது ரொம்ப முக்கியம்.
சில சமயம் நாம் சாப்பிடும் உணவு அந்த நேரத்துக்கு உகந்ததாக
இல்லாமல் இருக்கும். குறிப்பாக அம்ருதாவிற்கு தற்போது பால்,
பழங்கள், பழச்சாறு கொடுக்ககூடாது. காரம்,எண்ணெய் கூடாது.

நம் ஊர் பக்கம் என்றால் இடியாப்பம் கூட வாங்கி கொடுக்கலாம்.
ஆரோருட் மாவு கஞ்சியும் ரொம்ப நல்லது. இங்கே அதைத்
தேட முடியாது. அதனால் சாதத்தை மறு உலைபாய்ச்சி (திரும்ப
தண்ணீரில் கொதிக்க வைத்து கஞ்சி பதத்திற்கு கொண்டு வருவதால்
செரிமானம் சீக்கிரம் ஆகும்) கொஞ்சமாக தயிர் ஊற்றிக் கொடுக்க
திட்டமிட்டிருந்தேன். அம்மாவிற்கு போன் செய்த பொழுது
வயிற்று பிரட்டல் நிற்க ஒரு பொடி செய்து அதைக் கலந்து
கொடுக்கச் சொன்னார். பலருக்கும் உதவும் என்பதால் அதை இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்.

ஓமம்பொடி:

தேவையான பொருட்கள்:
10 மிளகு, 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 100 கிராம் ஓமம், பெருங்காயம் கொஞ்சம்.

செய்முறை:
மேல் சொன்னவற்றை வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து
உப்பு சேர்த்து பொடித்து சூடான சாதத்தில் கலந்து முதல் கவளம்
இந்த பொடி சாதத்தைக்கொடுப்பதால் வயிற்று பிரட்டல் டாடா
காட்டி விடும்.

வயிறு சரியில்லாத சமயத்தில் அதிகம் சிரமம் கொடுக்காமல் இதமான
உணவு இட்லி, கஞ்சி இப்படி கொடுத்தல் நலம். ஆனால் காய்கறிகள்
இல்லாததால் உடம்புக்கு சத்து இல்லாமல் போய்விடும்.

இன்றைக்கு காய்கறி கஞ்சி செய்து கொடுக்கப்போகிறேன்.

கறிவேப்பிலை 4, கொஞ்சம் கேரட், பீன்ஸ் நறுக்கி தண்ணீரில்
கொதிக்க வைத்து அதே தண்ணீரில் அரிசி ரவையை போட்டு
நன்கு வேகும் வரை வேகவைத்து கஞ்சி பதத்தில் உப்பு,சீரகம்,மிளகு கொஞ்சம்
சேர்த்தால் சுவையும் நல்லா இருக்கும். உடம்புக்கும் நல்லது.
இத்தோடு விரும்பினால் கொஞ்சமாக தயிரும் சேர்க்கலாம்.


இந்த மாதிரி சமயத்தில் ப்ரெட் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது
நல்லது. தயிரும் காலையில் தோய்த்து மதியம், மதியம் தோய்த்து
இரவுக்கு என ஃப்ரெஷ்ஷாக செய்து கொள்ள வேண்டும். (சளித்தொல்லை
இருப்பவர்கள் குளிர்காலம் முழுதும் இதே போல் தயிர் சாப்பிடலாம்.
ஃப்ரிட்ஜில் வைக்கும் தயிர்தான் சாப்பிடக்கூடாது.)

இந்தக் குளிர் காலத்தில் தயிரை தோய்ப்பது ரொம்ப கஷ்டம். வெயில்
இல்லாமல் இருப்பதால் சீக்கிரத்தில் தோயாது. நான் எப்போதும் கைப்பற்றும்
பழக்கம் ஹாட்பேக்கில் இதமான சூட்டில் பாலை ஊற்றி, 1 ஸ்பூன் தயிரை
சேர்த்து நன்கு கலக்கி மூடி வைத்துவிட்டால் 1 மணிநேரத்தில் தயிர் ரெடி.
(எந்தக்காலத்திலும் இந்த ஐடியா ஒர்கவுட் ஆகும்) :))

இன்னைக்கு எங்க அம்ருதம்மா ஓகே. ஆனாலும் வீக்காக இருப்பதால்
பள்ளி செல்லவில்லை. நானும் என் அம்மாவும் எஞ்சாயிங் டுகதர். :))
சேர்ந்திருப்பது ஒரு சுகம் தானே!

Monday, August 08, 2011

5க்குள்ளே இருக்கு நம் ஆனந்தம்

சென்ற பதிவிற்கு இங்கே:

நமக்கும் நம்ம மனசுக்கும் அதிகம் சேதாரம் இல்லாமல் பார்த்துக்கணும்.
அது எப்படின்னு பாப்போம்னு போன பதிவுல சொல்லியிருந்தேன்.
கீதையின் சாரம் தான் அது. ஆனா அதைப் படிக்கும் பொழுது நல்லா
இருக்கும். இதெல்லாம் எப்படி செயல் முறைப் படுத்திப்பதுன்னு
மனசு லேசா குழம்பும். நாமும் ஆமாம்லன்னு அப்படியே விட்டுட்டு,
திரும்ப பாரங்களை சுமக்க ஆரம்பிச்சுடுவோம்.

வாழும் கலைப் பயிற்சியில் இந்த 5 கொள்கைகளைச் சொல்லிக்கொடுத்தாங்க.
அதை பத்தி உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். இதுவும் கீதாசாரத்திலிருந்து
எடுக்கப்பட்டதுதான். ஆனா நம்ம மனசை கட்டுப்படுத்திக்க இது உதவும்.

1. சிலருக்கு வெயிலைக்கண்டா பிடிக்காது. மழை கொட்டினா பிடிக்காது.
குளிரும் பிடிக்காது. அப்புறம் எப்படி? வெயில், மழை எல்லாம் வேணும்.
வெயில், மழை இருந்தாத்தானே விளைச்சல். இரவு வந்தா அடுத்தநாள்
கண்டிப்பா விடியும். வெளிச்சம் கிட்டும். நம்ம வாழ்க்கையும் அதுபோலத்தான்.
இன்பம். இன்பதுக்கு பின் துன்பம். அதற்கு பின் இன்பம். இது ஒரு
சுழற்சி போல சுத்திக்கிட்டே இருக்கும். அதுதான் இயற்கையின் நியதி.
படைத்தவன் நம்மை புடம்போட கொடுக்கும் பயிற்சி.
அதனால நாம துன்பத்துக்கு பின் இன்பம் நிச்சயம் எனும் நம்பிக்கையை
மனசுல ஏற்படுத்திகிட்டு துவழும் பொழுதெல்லாம் த்ரீ இடியட்ஸ்
படத்தில் அமீர் கான் சொல்லுவது போல, “நம் மனதை கொஞ்சம
முட்டாளாக்கி ஆல் இஸ் வெல், எல்லாம் நன்மைக்கே, நல்லது நடக்கும்”
அப்படின்னு அடிக்கடி மந்திரம் மாதிரி சொல்வதால நம்பிக்கையான
வாழ்க்கை கிடைக்கும்.

2. ”மாமியார் உடைச்சா மண்பானை மருமகள் உடைச்சா பொன்பானைன்னு”
ஒரு வசனம் சொல்வாங்க. நாம செஞ்சா அது தப்பில்லை. அதுவே
அடுத்தவங்க செஞ்சா மாபாதகம்னு ஒரு நினைப்பு எல்லோருக்கும் உண்டு.
அலுவலகத்துல அதிகாரி அப்படி நினைப்பதாலத்தான் அவருக்கு கீழ
வேலை செய்பவருக்கு மன உளைச்சல், கணவன்/மனைவி உறவில்
இப்படி ஒரு நிலை இருவரில் யாருக்கு வந்தாலும் அமைதி தொலைந்து
போகும். இப்படி நிறைய்ய சொல்லலாம். தீர்வு என்ன? அடுத்தவங்க
செய்வதில் குற்றம் மட்டுமே பாத்துகிட்டு இருக்கக்கூடாது. வேணும்னே
செஞ்சிருப்பாங்க அப்படின்னு சொல்வதால நமக்குத்தான் உளைச்சல் ஆகும்.
ஆக நம்ம வேலையை நாம நல்லபடியா செஞ்சுகிட்டு போய்க்கிட்டே
இருப்போம். “தன் மெய்வருத்தக் கூலி தரும்”னு வள்ளுவர் சொல்லிருப்பது
பொய்யாகாது.

3. நாம அழகா ஒரு புதுப்புடவை வாங்கியிருப்போம். கத்திரிப்பூ கலர்.
மேட்சிங்கா ப்ளவுஸும் தெச்சு அப்படியே சந்தோஷமா வெளிய வர
ஃப்ரெண்ட் ஒத்தங்க பாத்து,” ஐய! இந்தக் கலர் உனக்கு நல்லாவே
இல்ல!!” அப்படின்னு சொன்ன உடனே மனசு புஸ்ஸுன்ன் ஆகி
ஆசை ஆசையா எடுத்துகிட்டு புடவை பிடிக்காமலே போயிடும்!!

ரொம்ப ஆசைப்பட்டு ஒருத்தர் செல்போன் ஒண்ணு வாங்கினார்.
அதை மறுநாள் அலுவலகத்துக்கு எடுத்துகிட்டுப்போக நண்பர்
பாத்திட்டு விலை, எங்க வாங்கின எல்லாம் கேட்டுட்டு,”இந்த
மாடல் சரியில்லன்னு எனக்குத் தெரிஞ்சவர் சொன்னார்பா”!
சொல்ல ஐயோ தப்பு செஞ்சிட்டோமோன்னு குமைவார்.

மேலே சொல்லியிருக்கும் விஷயத்துலேர்ந்து என்ன புரியுது.
நாம இஷ்டமா செஞ்சாலும் அடுத்தவங்க சொல்வதை ரொம்ப
கேட்கும் பொழுது அதுவே நம்ம மன உளைச்சலுக்கு வழி
வகுக்கும். அவங்களுக்கு பிடிச்சிருந்தா என்ன? பிடிக்காட்டி
எனக்கென்ன? எனக்கு பிடிச்சிருக்கு. அம்புட்டுதான்.எல்லா
இடத்துலயும் இதை அப்ளை செஞ்சு பார்த்தா நல்ல
இம்பூரூவ் மெண்ட் இருக்கு. அதுக்காக பெரியவங்க
நமக்கு அட்வைஸ் செய்யும் பொழுது அதை எடுத்துக்காம
நம்ம இஷ்டத்துக்கு இருக்கக்கூடாது. அனுபவம் நல்ல
ஆசான்.

4. மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒருவிதம்.
ஒரே வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளும் வேற வேற விதம் தான்.
எல்லாம் ஒண்ணு போல இருந்துட்டா வித்தியாசம் இருக்குமா?
அதனால நம் சிந்தனை, செயல்பாடு எல்லாமே வேறு படும்.
அதனால நான் செய்வதுதான் சரின்னு சொல்ல முடியாது.
நாம சரின்னு நினைப்பது அடுத்துவங்களுக்கு தப்பா இருக்கலாம்.
அதனால தீர்வு என்னன்னா அவங்களை அவங்களாவே ஏத்துக்கறதைத்
தவிர வேற வழியில்லை. அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்
அப்படின்னு மனசுக்கு சொல்லிக்கொடுத்துட்டு போய்க்கிட்டே இருக்கணும்.

5. நம்ம மனசுக்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிக்
கொடுக்கணும். ரொம்ப முக்கியமானதுன்னு வெச்சுக்கோங்க. இதை
கண்டிப்பா பழக்கி கொடுத்திட்டா அப்புறம் ஆனந்தம் தான்.
மனசுலேர்ந்து வேண்டாத நினைவுகளை, நாம பட்ட அடிகளை
தூக்கி போடுவது லேசான விஷயம் இல்லை. உள்ளாறாம இருக்கும்
நாவினால் சுடப்பட்ட வடு. அது மேலேயே திரும்ப அடி விழும்பொழுது
புண் பெருசாகுது. நம்ம மனசு பாதிக்கப்படுவதாலத்தான் நம்ம உடம்புக்கும்
முடியாம வருது. இது உளவியாளர்கள் சொல்லும் கூற்று.

என்ன செய்யணும்? வந்ததை வரவில் வைப்போம், சென்றதை செலவில்
வைப்போம். அம்புட்டே தான். அப்படி நினைச்சுக்கிட்டு மனசு பழைய
பஞ்சாங்கத்தை புரட்ட ஆரம்பிக்கும் போதெல்லாம் ஒரு அதட்டல் போட்டு
ஏய்! நடைமுறைக்கு வா. இப்ப இந்த நிமிஷம் முக்கியம். இதை
எப்படி நல்லா செய்யணும்னு பாப்போம்னு சொல்லிக்கிடணும்.
அதாவது வாழும் இந்த நொடியை 100 சதவிகிதம் உணர்ந்துகொள்வது.
இதனால இன்னைய வேலையை மட்டும் பாக்கலாம்.

நடந்தது நடந்து போச்சு. நாளைக்கு எப்படின்னு அப்ப பாத்துக்கலாம்.
ஆனா இன்றைய இந்தப் பொழுது போனா வராது. அதனால இதுக்கு
முக்கியத்துவம் கொடுப்போம். சரிதானே?!!

இதைக் கத்துகிட்டேன். அதை ஆங்கிலத்தில் ரொம்ப அழகா
சொல்லிக்கொடுத்திருந்தாங்க. அந்த வரிகளை மனப்பாடம் செஞ்சுகிட்டா
நல்லது. அதைவிட சூப்பரா யோசிச்சு ஒரு வேலை செஞ்சேன்.
அதை அப்படியே பிரிண்ட் செஞ்சு கண்ணில் படுமாதிரி 3 இடத்துல
ஒட்டி வெச்சிட்டேன். அதைப் பார்க்க படிக்க மனசுல மாற்றம் நல்லாவே
தெரியுது.

நம்ம ஃப்ரெண்ட்ஸுக்கும் என் சந்தோஷம் கிடைக்கணும்ல அதான்
இந்தப் பகிர்வு. நான் ரெடி செஞ்சு வெச்சிருக்கும் மேட்டரையும் தர்றேன்.
நீங்களும் ப்ரிண்ட் எடுத்து வெச்சு எப்படி இருக்கு எஃபக்ட்ன்னு சொல்லுங்க.
அந்த 5 கொள்கையோட நான் ரெய்கி affirmationயையும் சேத்துகிட்டேன்.



ஏதோ தேடும்பொழுது இதுவும் கண்ணுல பட்டது. ப்ரிண்ட் எடுத்து
ஒட்டி வெச்சுக்கிட்டு கண்ணுல படும்பொழுதெல்லாம் படிக்கிறேன்.
இதனாலயும் எனக்கு உடம்புக்கு ஒண்ணுமே இல்லாத மாதிரி
உணர ஆரம்பிச்சிருக்கேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே. அதுவும் நமக்குன்னு கிடைச்சிருக்கும் இந்த
வாழ்க்கையை ஆனந்தமா வாழ்ந்திட்டு போவோமே!! என்ன நான் சொல்றது?!!
:))) இந்த வாரத்துவக்கம் எல்லோருக்கும் இன்பமயமாக அமைய
வாழ்த்துக்கள்

Saturday, August 06, 2011

ONE LIFE TO LOVE

ONE LIFE TO LOVE என்ன ஒரு அழகான வாக்கியம்.
நமக்குன்னு இருக்கும் ஒரு வாழ்க்கை இது. ஆனால் இதில் நாம்
தேவையில்லாம எத்தனையோ பாரங்களை சுமந்துகிட்டு திரிவதனால
பொதி அதிகமாகி வாழ்க்கையை வாழ்வதை விடுத்து ஏனோ தானோன்னுதான்
வாழறோம்.

வாழ்க்கையின் உசரத்துக்கு போகணும்னு இல்லாட்டியும் வாழ்வாதாரத்துக்கு
பங்கம் வந்திடக்கூடாதுன்னு கொடுப்பதுக்கு மேல கூவுற மாதிரி தான்
நாம் செய்யும் வேலைகள் இருக்கு. விட்டா நம்ம இடத்தை அடுத்தவங்க
பிடிச்சிடுவாங்கற பயத்துலேயே நேரம் காலம் பாக்காம, உடம்பை கூட
கண்டுக்காம எத்தனை பேர் வேல செய்யறாங்க.

உடலும் மனசும் துவண்டு போய் ஏதோ ஒரு மெஷின் போல
ஆயிடறதாலத்தான் கோவம், கையாலாகதத்தனம் அப்படி இப்படின்னு
ஒரு மாதிரியா ஆகிடறோம். நம்மை நாம் கவனிச்சுக்குவதே இல்லை!!
எங்கங்க இதுக்கெல்லாம் நேரம் இருக்குன்னு? சொல்லிட்டு ஓடிக்கிட்டே
இருக்கோம். ”என்னையும் கொஞ்சம் கவனியேன்னு!!” உடம்பும் மனசும்
கெஞ்சுவதை என்னிக்காவது நாம சட்டை செஞ்சிருக்கோமா? தன்னலம்
கூடாதுன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டதால வந்த வினைதான் இது.

நம்மளை நாம கவனிச்சுக்கிட்டாத்தானே அடுத்தவங்களையும் நல்லா
கவனிச்சு நாம சாதிக்க வேண்டியதை சாதிக்க முடியும். நமக்குன்னு
கிடைச்சிருக்கும் இந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.
சுகபோகங்களால அனுபவிப்பதைச் சொல்லலை. ஒரு வேளை கஞ்சி
குடிச்சாலும் சந்தோஷமா இருக்கணும்னு! சொல்வாங்கள்ல அந்த
மாதிரி. இருப்பதை வெச்சு நாம சந்தோஷமா வாழணும்.

இதெல்லாம் எனக்கும் ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சுதுன்னு வெச்சுக்கோங்க.
என்னை நான் உணர்ந்து, என்னை நான் விரும்ப ஆரம்பிச்சதுதான்
முதல் படி. இப்ப நமக்கு பிடிச்சது ஒண்ணு இருக்குன்னு வெச்சுக்கோங்க.
அதை எப்படி பொத்தி பொத்தி பாதுகாப்போம்!! எந்த பங்கமும் வராம
பாத்துக்குவோம்ல. ஏன்! நம்ம பசங்க, நம்ம பெத்தவங்க இவங்க்
கஷ்டப்படக்கூடாதுன்னுதானே ஓய்வொழிச்சல் இல்லாம சம்பாதிப்பது.
எங்கே அவங்களை திண்டாட விட்டுடுவோமோன்னு தானே வாழறோம்.
அதே மாதிரி நம்மை நம் உடம்பை, நம் மனசையும அப்பப்ப கவனிக்கணும்.



ஒரு அழகான குளம் இருக்குங்க. அதுல தண்ணி அழகா ஓடிக்கிட்டு இருக்கு.
ஆனா ஒரு மழை வெள்ளம் வந்தா கரை உடைஞ்சு தண்ணி வெளிய
வந்தா ஊரே வெள்ளக்காடாயிடும் தானே! கரைக்குள் அடங்கி நடந்தத்தான்
அந்த குளம் அழகானது.

ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் ....அப்படின்னு ஒரு பிரபல பாடலே இருக்கே.

கரைக்கட்டி நாமாவைச் சொல் அப்படின்னு பெரியவங்க சொல்வாங்க.
அதாவது நாம் இறைவனை பெயர்ச்சொல்லி வணங்கும் பொழுது
அந்த மந்திரம் அல்லது பேருக்கு முன்னாடி ஓம் என்றும் கடைசியில்
நமஹ என்றும் சொன்னால்தான் மந்திரத்தின் பலனே இருக்கும்.

நம் மனசையும் இப்படி கட்டி காக்க முடிஞ்சா எம்புட்டு நல்லாயிருக்கும்.
இருக்கும் அதுக்கும் வழி இருக்கு. நான் கத்துகிட்டதை உங்களுக்கும்
பகிர்வதில் சந்தோஷம்.

இந்த 5 முக்கியமான விஷயங்களை இப்ப நான் பிரிண்ட் எடுத்து
வீட்டில் கண்ணில் படும் சில இடங்களில் வைத்து பார்த்து பார்த்து
என் மனதுக்கு சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அதுவரைக்கும் தலைப்பில் சொல்லியிருக்கும் அந்த ஆங்கில வார்த்தைக்கான
அர்தத்தை கொஞ்சம் யோசிச்சு உங்களுக்கு என்னவெல்லாம் தோணுதுன்னு
பாருங்க. வார விடுமுறைதானே! கொஞ்சமாவது நேரம் கிடைக்கும்.
திங்கள் கிழமை பதிவோடு வர்றேன்.

டிஸ்கி:
NDTV GOOD TIMESல ONE LIFE TO LOVE அப்படிங்கற பேர்ல ஒரு நிகழ்ச்சி
வரும். அதுவும் ரொம்ப நல்லா இருக்கும். நிறைய்ய கத்துக்கலாம்.
ஆனா அந்த நிகழ்ச்சிக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால அதையும், அந்தப்
படத்தையும் மட்டும் இங்கே சேர்த்திருக்கிறேன்.

Tuesday, July 26, 2011

வானவில்லின் வர்ணங்கள்...

NDTV GOOD TIMES எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு சேனல்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் ROUTES எனும் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.
மாற்றுமருத்துவம் பற்றிய நிகழ்ச்சி.

அன்று நிறங்களைப் பற்றிய நிகழ்ச்சியாக இருந்தது என்னை மிகவும்
கவர்ந்தது. சரி என்று பார்க்கத் துவங்கினேன். மைக்ரேன் தலைவலியால்
அவதிப்பட்டவர் எத்தனையோ மருத்துவங்கள் பார்த்து சரிவராமல்
கடைசி முயற்சியாக கலர்தெரப்பியில் முயன்று பார்த்திருக்கிறாராம்.
(கலர் தெரப்பி கற்று அதை உபயோகிக்கும் முறை தெரிந்தவர்கள்
இருக்கிறார்கள்.) பச்சை நிறத்திற்கு குணமாக்கும் தன்மை உண்டு
என்பதால் அவரது அறை திரைச்சீலைகள், தலையணை,விரிப்பு என
இளம் பச்சை கலரில் மாற்ற சொல்ல அப்படியே செய்து நல்ல முன்னேற்றம்
இருப்பதாக சொல்ல செம ஆச்சரியம்.

கலர் தெரப்பி பற்றி தெரிந்து கொள்ள

ரெய்கி மெடிடேஷனில் ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒரு கலர் உண்டு.
பொதுவாக நான் வீட்டுக்குள் வர்ணம் அடிக்கும்பொழுது சில கலர்களை
அதுவும் மென்மையான கலர்களை உபயோகிக்கும் பொழுது வீட்டில்
இருப்பவர்களின் மனோபாவங்கள் மாறும் என்பதை படித்திருக்கிறேன்.
குமுதம் சிநேகிதி என்று நினைக்கிறேன். நமக்கு ஏற்ற நிறம் என்ன
என்பதை பற்றி ஒரு தொடர் வந்து கொண்டிருக்கிறது. அதில் நாம்
அணியும் உடையின் நிறம் நம் மனதை பிரபதிலிக்கிறது என்று
சொல்லியிருந்தார்கள்.

நேற்று சாயந்திரம் முதல் எனக்கு சரியான தலைவலி. கிட்டத்தட்ட
மைக்ரேன் போலத்தான். வலி அதிகமானால் தலையை சாய்த்து
படுக்க கூட முடியாது. வலி நிவாரணி மாத்திரைகள் எல்லாம் கூட
எடுபடாது. வலியும் நோவும் அதிகமாக இருக்கும் பொழுது என்னால்
எனக்கே ரெய்கி செய்து கொள்ளவும் முடியாது. ரொம்பவே துடித்து
என் உறவினரை ரெய்கி செய்யச் சொல்லி மெசெஜ் அனுப்புவேன்.

இரவு 10 மணி தாண்டியும் வலி குறையவில்லை. படுக்கவும்
முடியாத நிலை. நேற்று அந்த நிகழ்ச்சி பார்த்தது நினைவுக்கு வந்து கண்ணை மூடிக்கொண்டு பச்சை இலைகள், பசுமை தோட்டம், அதன் நடுவில் நான் என
என்னைச் சுற்றி பசுமையாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டே
இருந்தேன். வலி மெல்லக் குறைந்து ஆழ்ந்த தூக்கம் கிடைத்தது.
காலையில் ஃப்ரெஷ்ஷாக எழுந்து வேலை செய்தேன்.
(வேலைக்காரம்மா வரவில்லை. எல்லா வேலையும் முடித்து
கானக்கந்தர்வனில் இன்று ஒரு பாட்டும் போட்டு இங்கேயும் பதிவெழுத
முடிந்தது ஆச்சரியம்!!)

இதை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ளவே இந்தப் பதிவு.
உங்களுக்கும் இந்த கலர் தெரப்பி உதவக்கூடும். எப்பொழுது
எந்த கலரை உபயோகப்படுத்துவது என்று தெரிய வேண்டுமே!!
இதோ இந்தக் கலர் சார்ட்டை பாருங்கள்.


மருந்து மாத்திரைகள் தரும் சைட் எஃப்கட்டுகளிலிருந்து தப்பிக்க
மாற்று மருத்துவத்தைத்தான் பலரும் தற்போது நாடுகின்றன.
ரெய்கி,பிரானிக்ஹீலிங் வகையில் இப்பொழுது வர்ணங்களும்
இருக்கின்றன.

உங்கள் வாழ்விலும் வர்ணங்கள் சேர்ந்து இந்தநாள் ஒரு இனிதான
நாளாக அமைய வாழ்த்துக்கள்.
colour therapyஇந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்


Friday, June 10, 2011

நம்மை காக்கும் தேவதைகள்!!!!

காலங்காலமாக நம் முன்னோர்கள் நமக்குச் சொன்னதில் முக்கியமானது
நல்லவற்றையே சொல்ல வேண்டும். ஏன் நல்லதையே சொல்லவேண்டும்?
என்று கேட்டாள், “நமக்குத் தெரியாமல் நம்மைச் சுற்றி தேவதைகள்,
தேவதூதர்கள் இருப்பார்கள். நாம் சொல்வதற்கெல்லாம் ”ததாஸ்து”
(அப்படியே ஆகுக!) என சொல்வார்கள். நாம் நல்லதையே சொன்னால்
நல்லதே நடக்கும். எண்ணம் நல்லதாக இருந்து, பேசுவதும் நல்லதாக
இருந்தால் பிரச்சனையே இல்லை என்பதைத்தான் பெரியவர்கள் இப்படி
சொன்னார்கள்.

ஆனால் உண்மையில் நம்மை சுற்றி தேவர்கள், தேவதைகள்,தேவ
தூதர்கள் இருக்கிறார்களா??? நம்பிக்கைதான் வாழ்க்கை. அப்படி
நம்புபவர்களுக்கு ஆம் இருக்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள்
மேற்கொண்டு தயவு செய்து படிக்க வேண்டாம் என தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.

என் உறவினர் ஒருவரின் மூலமாக எனக்கு இந்த விஷயம் தெரிய
வந்தது. நம்பிக்கை இல்லாமலேயே இருந்தேன். என் அனுபவம்
என்னை நம்ப வைத்தது. அந்த அற்புதத்தை பகிர ஆசைப்படுகிறேன்.
யான் பெற்ற இன்பம் இவ்வயகமும் பெற இந்தப் பதிவு. Angel therapy
எனும் புத்தகத்தையும் பரிசளித்து சென்றிருந்தார் அந்த உறவினர்.

இந்தப் புத்தகம் பெரிய புத்தகக்கடைகளில் கிடைக்கிறது. இதை
வாங்கிப் படித்தால் கூட நாம் புரிந்துக்கொள்ள முடியும்.

Doreen virtue என்பவர் எழுதிய புத்தகம் இது.
ஏஞ்சல் திரப்பி பயிற்சியில் இவரது பயிற்சிதான் சிறந்தது
என்கிறார்கள். இதுவும் ஒரு வகை ஹீலிங் தெரப்பி.
நம் இந்தியாவில் இவரது சிஷ்யை
ஒருவர் டெல்லியில் அனுமதி பெற்று வகுப்புக்கள் எடுப்பதாக
கேள்விப்பட்டேன். பயிற்சி எல்லாம் கூட இல்லாமல் நம்மால்
தேவதைகளை உணர முடியும். எப்படி என்கிறீர்களா? வாருங்கள்
அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.



இந்த தேவதைகள் கடவுளின் தூதர்கள். நம்மைச் சுற்றி
எப்போதும் இருக்க பணிக்கப்பட்டவர்கள். நாம் பேசுவதை எல்லாம்
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் அழைத்தால்
உதவிட ஆசையோடு காத்திருக்கிறார்கள்.

நாம் பிறக்கும் பொழுதே நமக்கே நமக்கென ப்ர்தயேகமான
காக்கும் தேவதையுடன் தான் நாம் பிறக்கிறோம். ஆனால் நமக்கு
அது தெரியாது. அவரை அறிந்து அந்தப் பெயரைக்கொண்டு
அழைத்தால் நம் பிரச்சனையை, குறையை தீர்க்க ஓடோடி
வருவார்கள் என Angel therapy பயிற்ச்சி பெற்றவர்கள்
சொல்கிறார்கள்.

நம் guardian angel யை அறிந்துக்கொள்வது எப்படி??
அமைதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, தேவைப்பட்டால்
மெலிதான இசையை ஓட விடுங்கள் இல்லையேல் மெழுகுவர்த்தி
ஏற்றி வைத்து தியானம் செய்வது போல சுவாசத்தை தொடர்ந்து
கவனித்துக் கொண்டே இருங்கள். மனதையும் உடம்பையும் ரிலாக்ஸ்
செய்து கொண்ட பின் வேறெந்த எண்ணங்களும் மனதில் ஓடாமல்
ஆல்ஃபா லெவலை அடைந்து (புருவங்களுக்கு இடையே கவனத்தை
செலுத்தி, மனதை ஒருநிலை படுத்தி 10லிருந்து 1 வரை
எண்ணிக்கொண்டு வந்தால் மனம் ஆல்ஃபா லெவலுக்கு செல்லும்)
அந்த சூழலில் நாம் பிறந்த தேதியை சொல்லிக்கொண்டு
“என்னைக் காக்கும் என் ப்ர்த்யேக தேவதையை உன் பெயரை
நான் அறிந்துக்கொள்ள வைத்திடு என்று கேட்க வேண்டும்.

எந்த பெயர் அடிக்கடி வருகிறதோ அதுவே நம் காக்கும் தேவதை.
ஒரு தேவதையின் பெயர் நமக்கு காதில் சொல்வது போல
இருக்கலாம், சில தேவதைகள் பெயர்கள் ரொம்பவே வித்தியாசமாக
இருக்கும். அந்தப் பெயர் தெரிந்ததும் அந்த தேவதையை அழைத்தால்
நமக்கு தேவையானதை செய்து கொள்ள முடியும்.

guardian angels, angels இவர்களை மேற்பார்வையாளராக இருந்து
கவனிப்பது archangels. இவருக்கு சர்வ வல்லமையும் உண்டு.
முக்கியமான archangels பற்றி பார்ப்போம்.



1. Arch angel Michael, Gabriel, Uriel, Raphel. இவர்கள்
முக்கியமானவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு.
அவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கே செல்லவும்.

கிறிஸ்துவர்களுக்கு இந்த தேவதைகளின் பெயர்கள் புதிதல்ல.
புனித நூலான பைபிளில் இந்த தேவ தூதர்கள் பற்றி இருக்கிறது.

டொரின் விர்ச்சு அவர்களின் தளத்தில் காலிங் கார்ட்ஸ் எனப்படும்
தேவதைகள் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் எனும் பக்கம்
கிடையாது. ஆனால் இந்தத் தளத்தில் நமக்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏதேனும் குழப்பம்,பிரச்சனை இருக்கும் நேரத்தில் இந்த தளத்தை
நாடி தேவதைகள் நமக்குத் தரும் செய்தி என்ன என்பதை தெரிந்துக்
கொள்ளலாம்.இதற்கு ஏதும் பணக் கட்டத் தேவையில்லை.
(கவனம்: ஏஞ்சல் கார்ட் ரெக்வஸ்ட் என்று இருப்பதை அழுத்தி
நம் தேவையைச் சொன்னால் அதற்கு பணம் கேட்பார்கள்)
அவர்கள் அழைத்தால் வந்து சொல்லும் தேவதை நமக்கும் உதவும்
என்பதால் இடைத் தரகர்கள் யாருமில்லாமல் நாமே தெரிந்துக்
கொள்ளலாம். தேவதையிடமிருந்து செய்திக்கு இங்கே போய்
பார்க்கவும்.

இங்கேயும் ஒன்று இருக்கிறது.


இந்தத் தளத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த நீர்வீழ்ச்சி தியானம்.


healing prayer

free healing card

angel healing

ப்ரானிக் ஹீலிங், ரெயிகி ஹீலிங், கிறிஸ்டல் ஹீலிங் வகையில் இந்த
ஏஞ்சல் தெரப்பியும். பாசிட்டிவிட்டியை பரப்பும் நல்ல செயலாக
இதைக் கருதுகிறேன்.

துயரத்தைச் சொன்னால் மனப்பாரம் குறையும் என்பார்கள். மனிதர்களிடம்
சொல்லி சில சமயம் தீர்வு கிடைக்காமல் சிக்கல் தீவரமாகிவிட வாய்ப்புக்கள்
ஏராளம். நாம் சொல்வதை தேவதைகள் கேட்கிறார்கள், நமக்கு சரியான
பாதையைக் காட்டுவார்கள் என்று நம்புவதில் தவறில்லையே.

guardian angels, angels இவர்களை மேற்பார்வையாளராக இருந்து
கவனிப்பது archangels என்றால் இவர்கள் அனைவரையும் மேற்பார்வை
செய்வது நாம் கடவுள் என பூஜித்து மகிழும் தெய்வம். தெய்வ அருள்
பெற்று நமக்காக நம்மை சுற்றி வரும் தேவதைகள் நமக்கு உதவுகிறார்கள்,
உதவுவார்கள் என்ற நம்பிக்கையை பகிர எண்ணி இந்தப் பதிவு.

விரும்பியவர்கள் செய்து பார்த்து சொல்லுங்க. நம்பிக்கை இருந்தால் மட்டுமே.




Wednesday, February 10, 2010

பருப்பிலே இருக்கு பலவித சத்துக்கள்

வாங்க வாங்க, ஆளுக்கு கொஞ்சம் எடுத்துகிட்டு அப்படி சோபாவுல
உக்காருங்க. சாப்பிட்டுகிட்டே பேசிக்குவோம்.




எடுத்துக்கோங்க.
என்னது? ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதா!

ஆமாங்க நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா நிஜம் அது இல்லையே.

நானா எதுவும் சொல்லலீங்க. எனக்கு Nutrition பரிந்துரை செஞ்ச
டயட் சார்ட்ல தினமும் 2 வால்நட் சாப்பிடணும்னு இருந்துச்சு.
”அந்த பேரையே இப்பத்தான் கேள்விப் படறேன். இதெல்லாம்
காஸ்ட்லி அயிட்டம். நான் மாட்டேன்பான்னு ”!!சொல்லிட்டு கூலா
இருந்தேன். விதி விட்டுச்சா? 6 மாசத்துக்கு முன்னாடி கைவலில
அவதி பட்டதுதான் உங்களுக்குத் தெரியுமே!!

ஸ்பாண்டிலைடிசிஸ்னாங்க, ஃபைரோமயாலஜியான்னாங்க. கடைசியில
விட்டமின் டி குறைவு. அதனால்தான் வலின்னு சொல்லிட்டாங்க.

அதைப் பத்தி அதிகம் தெரிஞ்சிக்கலாம்னு கூகுள் ஆண்டவர்கிட்ட
கேட்டேன். அருவியா கொட்டுது விஷயம். அதுல Walnut
உடலில் எடையை கூட விடாம செஞ்சு, கொலஸ்ட்ராலை குறைக்கும்னு
சொன்னார் ஆண்டவர். அதுமட்டுமா புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க்,
கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு எல்லாம்
இருக்குன்னு தெரிஞ்சிச்சு. அட கொடுமையே இதை தானே மாத்திரையா
கொடுத்திருக்காங்க. இதை முன்னாடியே சாப்பிட ஆரம்பிச்சிருந்தா
பிரச்சனை கொஞ்சமா இருந்திருக்குமேன்னு தோணிச்சுங்க.




கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம்தான்னாலும் நல்லதுன்னு
உடனே தினமும் 2 வால்நட் சாப்பிட ஆரம்பிச்சேன்.




மத்த பருப்புங்கள்லயும் ஏதேனும் சத்து இருக்கணுமேன்னு மனசு
தோணிச்சின்னாலும அதை தெரிஞ்சிக்கவும் புத்தி வேலை செய்யணுமே.
பசங்களுக்கு தினமும் 2 பாதம் பருப்பு கொடு. அது மூளையை நல்லா
வேலை செய்ய வைக்கும்னு அத்தை சொல்வாங்க. பசங்களுக்கு மட்டும்
வாரத்துக்கு 4 தடவை கொடுத்துகிட்டு இருந்தேன். நாமும் 2 சாப்பிடுவோம்னு
சாப்பிட ஆரம்பிச்சேன்.

அந்த நேரம் பார்த்து prevention அப்படின்னு ஒரு புத்தகத்தை கடையில்
பாத்து வாங்கிகிட்டு வந்தேன். அதில் உடல் எடையை குறைக்கும் டயட்டில்கூட
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரச்சொல்லி ஒருத்தருக்கு
அறிவுரை சொல்லி அவரும் சாப்பிட்டு நல்லா தெம்பா இருப்பதா சொல்லியிருந்தாங்க.
பாதாம் சாப்பிடுவது நல்லதுன்னு அப்பத்தான் தெரிஞ்சிச்சு.

protein, vitamin E, monsaturated fats, as well as magnesium, potassium, and calcium இந்த சத்துக்களெல்லாம் பாதாமில் இருக்காம். இதைத் தவிர
sodium, and vitamins like vitamin B1, B2, and B3 or niacinவும் இருக்காம்.



அப்பா தினமும் கடலமிட்டாய் வாங்கி கொடுப்பார்.
ஏதாவது சாதிச்சாலும் கடலைமிட்டாய் தான் ட்ரீட். வெல்லமும் சேர்த்து
செய்வதால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லி சொல்லியே
சாப்பிட வெச்சிடுவார். அந்த பழக்கத்துல இப்ப தினமும் மதியச் சாப்பாட்டுக்கு
பிறகு 2 கடலை மிட்டாய் சாப்பிடறதை பழக்கமா வெச்சிருக்கேன்.

இந்த கடலை(peanuts)இது சல்லீசா கிடைக்குதுங்கறதாலேயே
நாம இதை மதிக்க மாட்டோம்.

இதுல கலோரி அதிகம் தான்னாலும்,vitamin E, B3, and B6 இருக்கு.
இதைத்தவிர பொட்டாசியம்,ஜிங்கும் இருக்கு.





சக்கரை பொங்கலிலோ, வெண்பொங்கலிலோ கண்ணுல படும் நெய்யில
வறுத்த முந்திரி பருப்பு என்ன டேஸ்ட்!! முந்திரி பருப்பை உடைச்சுக்
கொடுக்கும் சாக்கில் வாயில போட்டுகிட்டது, சக்கரை பொங்கல் முந்திரிக்கு
அடிச்சுகிட்டதுன்னு முந்திரி பருப்புக்கும் நிறைய்ய கொசுவத்தி.

அப்பா பேங்க்ல மீட்டிங்கின் போது ராதா கபே ஹோட்டலிலிருந்து
நெய்யில் வறுத்து, உப்பு போட்ட முந்திரி பருப்பு கொடுப்பாங்க.
அப்பா அதை சாப்பிடாம கொண்டு வந்து எனக்கும் தம்பிக்கும் தருவாங்க.

இந்த முந்திரி எங்க ஊருல ஃபேமஸான அயிட்டம். ஆதன்க்கோட்டை
முந்திரி அம்புட்டு ஃபேமஸ். முந்திரில என்ன சத்து இருக்குத் தெரியுமா?
செலீனியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து.



இந்த பாஸ்பரஸ் நம் உடம்புக்கு கிடைக்கும் கால்சிய சத்துக்கள்
முறையா எலும்புகள், பல் உற்பத்திக்கு போய் சேருதான்னு பாத்துக்குமாம்.


பெரிய பிஸ்தாவான்னு நீன்னு கேப்பாங்க. பெரிய ஆளான்னு கேக்கற
மாதிரின்னு வெச்சுக்கோங்க. நிஜமாவே இந்த பிஸ்தா பருப்பும் பெரிய
பருப்புதான்.

proteins, monosaturated fats, calcium and phosphorus இதுல இருக்கு.
விட்டமின் A&C யும் இருக்கு.


மொத்தத்துல இந்த NUTகளை சாப்பிட்டா நம்ம உடம்புகளின் NUT கழண்டு
போகாம இருக்கும்னு சொல்றாங்க. இந்த வகை பருப்புக்கள் விலை ஜாஸ்தின்னாலும்
உடம்புக்கு நல்லதுன்னா எவ்வளவு காஸ்ட்லி மருந்தானாலும் வாங்கி சாப்பிடற
மாதிரி சாப்பிடறது நல்லது.

அதிகமாகிவிடமா கொஞ்சமா, அதிகம் உப்பு சேர்க்காம மாலை நேரத்துக்கு
கொறிக்கறா மாதிரி குடும்பம் மொத்தமும் சாப்பிட்டா எம்புட்டு நல்லது.

அதுலயும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப முக்கியம். பெண்களுக்குன்னு
சொன்னதால இது ஏதோ தங்கமணி ஆதரவுன்னு நினைக்காதீங்க.

பெண்களுக்கு குழந்தை பிறப்பு, மெனோபாஸ், மாதாந்திர தொந்திரவுகள்னு
சத்துக்கள் நிறைய்ய இழந்திடறாங்க. அதனாலதான் சொன்னேன்.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடுன்னு பெரியவங்க
அப்பவே சொல்லியிருக்காங்க. நாமும் பெரியவங்க சொல்படி கேட்போம்.

அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க! ஒரு முக்கியமான விஷயம். நம்ம நானானிம்மா


பாதாம், முந்திரி சேத்து அடை செய்வது எப்படின்னு சொல்லியிருக்காங்க.

உங்க எல்லோருக்கும் என்னோட அன்பளிப்பா 1 கிலோ ட்ரை ஃப்ரூட்ஸ்.

ALL ENJOY!! BE HAPPY AND HEALTHY

Friday, January 22, 2010

எம்புட்டு சாப்பிடணும்??!!!

ஆந்திரா மிளகுக் குழம்புன்னு முந்தைய பதிவு போட்டுட்டு
எம்புட்டு சாப்பிடணும்னு பதிவா?? என்ன ஒரு வில்லத்தனம்!!
அப்படின்னு கேட்கப்போற நட்புக்களுக்கு மேட்டர் இருக்கு
அதான் இந்தப் பதிவு. :)))

ஆங்கிலத்துல ஒரு சொலவடை இருக்கு.
YOU WHAT U ARE EATING.நாம நல்ல சாப்பாடு அதாவது
பேலன்ஸ்டா சாப்பிட்டா நல்லா இருப்போம். அளவுக்கு அதிகமாக
சாப்பிட்டா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்தான் இருப்போம்.

டயட்டுன்னா இன்னான்னு ஒருபதிவு போட்டிருந்தேன்.
அதைப் படிச்சா டயட் பத்தி ஒருஐடியா கிடைக்கும்.

டயட்டுன்னா சாப்பிடாம இருக்கறது இல்லைன்னு தெரிஞ்சுச்சா!!
அதுலயும் முக்கியம் நம்ம உடம்புக்கு தேவையான அளவு
உணவு நாம சாப்பிடணும். இது தெரியாம ஃபுல் கட்டு கட்டினா
பிரச்சனைதான்.



நம்ம உயரத்துக்கு தகுந்த எடை இருந்தா நாம சரியான அளவுள
இருக்கோம்னு அர்த்தம்.

உயரம் அதிகம் எடை குறைவு, எடை அதிகம் உயரம் குறைவுன்னு
சிலருக்கு பிரச்சனை இருக்கும்.

நாம எம்புட்டு சாப்பிடணும்னு தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாடி
உங்க உயரம், எடை, வயது எல்லாம் ஒரு பேப்பர்ல குறிச்சு
வெச்சுக்கோங்க.

இப்ப கீழ நான் கொடுத்திருக்கும் லிங்க்ல போனா நம்ம உயரம்,
எடைக்கு நாம ஒரு நாளைக்கு எம்புட்டு கலோரி சாப்பிடணும்னு
கணிச்சு கொடுப்பாங்க. இலவசம் தான்.

அதை வெச்சு நம்ம டயட் ப்ளானை போட்டுகிட்டா ஆரோக்கியமான
உடம்பு ரெடி.


calorie counter your daily protein and calorie needs இருக்கற
இடத்துல உயரம், எடை கொடுத்தீங்கன்னா கணக்கு போட்டு
சொல்லிடும்.

உடல் இளைக்கணும்னா எம்புட்டு கலோரி சாப்பிடணும்,
உடல் பருமனை மெயிண்டென் செய்யணும்னா எம்புட்டு கலோரி
உணவுன்னு எல்லாம் தெரிஞ்சிக்கலாம்.

நமக்கு எடை கிலோவிலதான் தெரியும். பவுண்ட்ஸில் தெரிய இங்கே
போங்க.kilogram to pounds converter


calorie counterக்கு மேலே Burned Calories Calculator இருக்கு. அதில
நாம் செய்யும் வேலையில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுதுன்னு
தெரிஞ்சிக்கலாம்.

BMI CALCULATOR நம்ம எடையின் அளவு தெரிஞ்சிக்கலாம்.

இங்கேயும்


நம் உடம்புக்குத் தேவையான அளவு சாப்பிட்டு ஆரோக்கியமா
வாழ்வோம்.

HAPPY WEEKEND

Tuesday, October 20, 2009

மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்

ரிலாக்ஸ்- இந்த வார்த்தை சொல்லும்போதே அதுவும்
ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்
நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.

5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.

பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாத
எதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்கு
என்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’
இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என
வெறும் பேச்சாலையே அவரை புல்தடுக்கி பயில்வானாக்கிய
கதை அனைவருக்கும் தெரிந்ததே.


Positive thinking இது மிக முக்கியம்.
சோம்பி கிடக்கும் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி
Positive thinkingனால் கிடைக்கும். எப்படி?
ஆண்டவன் நமக்கு அளித்திருக்கும் கொடை கற்பனை.
அதிகம் சத்தமில்லாத ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கோங்க.
உங்களுக்கு மனதுக்கு பிடித்த காட்சி, இடம் இப்படி
ஏதாவது ஒண்ணை தேர்ந்தெடுத்து நீங்கள் அங்கே
போய் வருவது போல் கற்பனை செய்து பார்க்கணும்.





உதாரணமா, எனக்கு மிகவும் பிடித்தது கொழும்பு-கதிர்காமம்
பயணம். வலது புறம் கடலலைகள், இடது புறம் பச்சை பசுமை.
நடுவில் ஆனந்தமான பயணம். நீல நிறக் கடல்நீரில் வெயில்
பட்டு ஜொலிக்கும் அந்த ஜொலிப்பு.... இந்தப் பக்கம்
பச்சை பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் இயற்கை வளம்.
முள்ளும் மலரும் சரத்பாபு போல “செந்தாழம் பூவில் வந்தாடும்
தென்றல்னு” பாடிக்கிட்டே ஒரு லாங்க் ட்ரைவ்.

அந்த நினைவுகளில் அப்படியே மூழ்கி வெளியே வரும்போது
ச்சும்மா ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது ஒரு வகை.


மற்றொரு வகை தூங்கப்போகும் முன் அல்லது சோர்வாக
இருக்கும் நேரங்களில் செய்யலாம்.

சவாசனம் போல படுத்துக்கொள்ள வேண்டும். படுக்க விருப்பமில்லாதவர்கள்
ரிலாக்ஸ்டாக நாற்காலியில் அமர்ந்துகொள்வது நலம்.

மிக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து,வெளியேற்ற வேண்டும்.



சரியான மூச்சுவிடும் முறை எது தெரியுமா?
மூச்சு உள்ளே இழுக்கும்போது வயிறு முன்னே
வரவேண்டும். வெளியே விடும்பொழுது வயிறு
உள்ளே செல்லவேண்டும். இந்த சுவாச முறையில்
நுரையீரல்களில் தேவையான சுவாச காற்று
செல்லும்.

TAKE A DEEP BREATH AND RELAX என்று மந்திரம்
போல் சொல்லிக்கொள்வது நலம் தரும்.

கண்மூடி புருவமத்திக்கு மனதை ஒருங்கிணைத்து
10-0 தலைகீழாக எண்ணி ஆல்ஃபா லெவலுக்குச்
சென்று NOW MY MIND IS GETTING RELAXED, NO
MORE TENTION என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளவேண்டும்.

அப்படியே கண்களை சுருக்கி(டைட்டாக) விரித்து
கண்கள் ரிலாக்ஸாவதாக சொல்லவும்.

முகமலற சிரித்து, புன்னகையை முகம் முழுதும்
செலுத்தி புன்னகை நிறைந்த முகமாக்கிக்கொண்டு
முகத்துக்கு புத்துணர்ச்சி தரவும்.

கழுத்து, பின் கழுத்துஆகிய பகுதியில் கவனம்
செலுத்தி தசைகளை தளர்ச்சி அடைய செய்யவும்.

தோள்பட்டைகளை உயர்த்தி அப்படியே ரிலாக்ஸாக
விடவும்.

கைவிரல்களை மடித்து டைட்டாக மடிக்கவும்.
பிறகு மெல்லத் திறக்கவும்.

இருதயத்தில் அன்பு நிறைந்திருக்கட்டும்.
அன்பே கடவுள், அன்பே சத்தியம் என்று
சொல்லி நெஞ்சுப்பகுதியை இலகுவாக்கிக்கொள்ளுங்கள்.

மேலே சொல்லியிருக்கும் சுவாசப்பயிற்சி போல்
வயிற்றை இலகுவாக்கிக்கொள்ளவும்.

இடுப்பு பகுதியில் கவனத்தை கொண்டு சென்று
இடுப்பு தசைகளை தளர விடவும்.

அப்படியே தொடை, முழங்கால்கள் என
நிதானமாக சென்று பாதத்தை கீழ் நோக்கி
அழுத்தவும். பிறகு ரிலாக்ஸ்டாக விடவும்.

இப்போது அந்த நிலையிலேயே 2 நிமிடம்
இருக்கவும். கண்மூடி உள்ளுக்குள் நிகழும்
மாற்றத்தை அவதானித்துக்கொண்டு இருக்கவும்.

தசைகளில் இருக்கும் இறுக்கத்தைக் குறைக்கும்
இந்தப் பயிற்சியினால் தசை, மனம் இரண்டும்
ரிலாக்ஸாகிறது.

செய்துதான் பாருங்களேன்!!!

Monday, October 19, 2009

ஆயுளைக்குறைக்கும் ஒரு சொல்!!!!

100 வயது வாழ்வதை தீர்க்காயுசுன்னு சொல்வாங்க.
வாழும் காலத்தில் நோய் நொடி இல்லாமல் வாழ்வதும்
தீர்க்காயுசு மாதிரிதான். நோய் நொடியைவிடவும்
கொடியது இந்தச் சொல்.

இதைச் சொல்லாதவங்களே
கிடையாது?? குழந்தைக்கும் கூட இது உண்டு
ஆச்சரியமா இருக்கா?





படத்தை பாத்தா நம்மையாரோ மறைஞ்சிருந்து போட்டோ
பிடிச்சிட்டாங்கப்பான்னு நினைக்கத் தோணுதா??

வாங்க வாங்க. இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.

மன அழுத்தம் இது தான் அந்தச் சொல். குழந்தைகளுக்கும்
ஸ்ட்ரெஸ் உண்டு என்பதை நாம் புரிந்துக்கொள்ளனும்



இதனால வர்ற பாதிப்பு பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
நம் அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும் வித்தை
மன அழுத்தத்துக்கு ரொம்பவே தெரிஞ்சிருக்கு.


சில பேர் மன அழுத்தம் அதிகமா இருக்கும் போது
அதிகமா சாப்பிடுவாங்க இல்லாட்டி சாப்பிடவே மாட்டாங்க.


தூக்கமின்மை,மலச்சிக்கல், வாய்ப்புண், அல்சர், பேதி,
தலைவலி, முதுகுவலி எல்லாம் மன அழுத்தம்
தர்ற கொடைதான்.


”எல்லாம் தெரியும் சாமி. யோகா, உடற்பயிற்சி,
மெடிட்டேஷன், பாட்டு இதெல்லாம் செய்ய நமக்கு
நேரமில்லை, இப்படியே இருந்திட வேண்டியதுதான்”
அப்படின்னு சொல்லிட்டா எப்ப்பூடி???

5 நிமிஷம் நேரம் ஒதுக்க முடிஞ்சா போதும்.
எளிதான பயிற்சி இருக்கு. 5 நிமிஷமா ட்ரை செஞ்சு
பாக்கறேன்னு சொல்றீங்களா? சரி அடுத்த பதிவுல
கண்டிப்பா சொல்றேன்.

அதுக்கு முன்னாடி ஒரு டெஸ்ட் செஞ்சு பாத்து
உங்க மன அழுத்தம் எந்தளவுக்கு இருக்குன்னு
பாத்து வெச்சுக்கோங்க. இல்லத்தரசி, வேலைக்குப்போறவங்க,
போகாதவங்க, பெரியவங்க, சின்னவங்க, எல்லோரும்
ஒருமுறை இந்த டெஸ்ட் செஞ்சு பாத்துகிட்டா நல்லது.

எங்க போய் டெஸ்ட் செய்ய? எனக்கு நேரமில்லைன்னு
ஓடாம, அப்படியே கம்ப்யூட்டர் பக்கத்துலேயே உக்காந்து
இந்த டெஸ்டை முடிச்சிடுங்க.

இங்கயும் டெஸ்ட் செஞ்சு பாக்கலாம்.

அடுத்த பதிவுல சந்திக்கறேன்.

Tuesday, January 13, 2009

டயடுன்னா இன்னா?

என்ன டயடுல இருக்கீங்களா? அப்படின்னு குறைவா
சாப்பிடறவங்களைப்பார்த்து பலர் எகத்தாளமா
கேப்பாங்க.
இப்படி அவங்க கேக்கறதை கேட்டா எனக்குச் சிரிப்பா
வரும். :) டயடுன்னா இன்னான்னு தெரியாமா
டயட்டான்னு? கேட்டா என்ன அர்த்தம்??

(குடும்பம் ஒரு கதம்பம் விசு மாதிரி
குழப்பறேன்னு சொல்றீங்களா?)


நாம் உண்ணும் உணவிற்கு பெயர் டயட்.
இன்னும் சொல்லப்போனால் சரிவிகித
உணவு.

உணவு பழக்கத்திற்கு பெயர் டயடரி ஹேபிட்ஸ்.

இது நம் கலாசாரத்தாலும், நம் உணவு முறையாலும்
ஏற்படும் பழக்கம்.

நமது உணவுப் பழகக்த்தை ஒரு தாளில்
குறித்துக்கொண்டு அதை கீழே இருக்கும்
பிரமிட்டோடு ஒப்பிட்டு பார்த்துக்கொண்டால்
நம் உணவுப் பழக்கம் சரியானதா? என்பதை
அறிந்துக் கொள்ளலாம்.





நம் உணவு பழக்கத்தில் இருக்கும் சில தவறான
பழக்கங்கள்.

அரிசி, கோதுமை போன்றவைகளை கார்ப்போஹைரேட்
சத்து என்போம். அதை அதிகமாக எடுத்துக்கொண்டால்
உடலில் கொழுப்பாக தங்கி விடக் கூடும்.

அரிசி( அரிசியால் செய்யப்பட்ட உணவுகள்)
கோதுமை (கோதுமையால் செய்யப்பட்ட
உணவு்வகைகள்)அளவைக் கு்றைத்து,
அதிகம் காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்ள
வேண்டும். பருப்பு, தானிய வகைகள்
இருக்க வேண்டும்.

பலருக்கும் சோறு சாப்பிடாவிட்டால் சாப்பிட்ட
மாதிரியே இருக்காது. ருசியால் அதிக அளவில்
சோறு சாப்பிட்டு விடுவோம். ஆனால்
அதற்குத் தகுந்த உடல் உழைப்பு இல்லாததால்
உடல் பருமன் ஏற்படுகிறது. மருந்தாகும்
உணவு பதிவில் நண்பர் ஒருவர்
சொல்லியிருந்தது போல் சோற்றின்
அளவைப் படிப்படியாக குறைத்து
வந்தாலே வித்தியாசம் தெரியும்.

அதிகமாக காபி/டீ குடிப்பதாலும்
உடல் பருமன் ஏற்படும். (சர்க்கரை)

சிலருக்கு ரவா உப்புமாவுடன் சர்க்கரை
மிக மிக பிடித்த காம்பினேஷன்.

வெள்ளைச் சர்க்கரை நம் உடல் பருமனை
கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரஜினி சொன்னது போல் வெள்ளை பண்டங்கள்
சிலவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள
வேண்டும். (அரிசி, சர்க்கரை,மைதா,
உப்பு, வெண்ணெய், நெய்...)

தயிர், மோர் உடலுக்கு மிகவ்ம் நல்லது.

இப்படி முறையான உணவு பழக்கம்
ஏற்படுத்திக் கொள்வது தான்
டயட் கண்ட்ரோல்.(நாம்
என்ன சாப்பிடுகிறோ? அது நம்
உடலுக்கு நல்லதா? என அறிந்து
நல்லதை மட்டுமே உண்பது)

டயட் கண்ட்ரோல்+ முறையான
உடற்பயிற்சி= ஆரோக்கியமான வாழ்க்கை.

எத்தனை நாளைக்குத்தான் இப்படி
சாப்பிடுவது என்பவர்களுக்கு.
வாரத்தில் 5 நாள் முறையான
உணவுப்பழக்கத்தில் உணவு
எடுத்துக்கொண்டு ஒரு நாள்
நம் மனதும், வாயும் விரும்பும்
உணவை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நாள் விரதம். அது எதுக்கு?
அடுத்த பதிவில் சொல்லட்டுமா????

Thursday, September 04, 2008

நடை எம்புட்டு நல்லதுன்னு தெரியுமா?

நடத்தல் உடம்புக்கு மிகச் சிறந்த பயிற்சி.
எத்தனை வயதானாலும் செய்யக்கூடிய
உடற்பயிற்சி.

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
சர்க்கரை வியாதியை அண்ட விடாமல்
செய்யும் என்பார்கள்.

அதுமட்டுமல்ல. இதையும் பாருங்கள்.




நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அங்கமும்
நமது பாதத்தில் முடிச்சிடப்பட்டுள்ளது.

அதனால் தான் பாதங்களுக்கு அக்குபிரஷ்ர்
வைத்தியம் வைத்தார்கள்.

வெதுவெதுப்பான நீரில் காலை வைத்தால்
தலைவலி போகும்.


நாம் அதிகம் நடந்தால் காலில் இருக்கும் அந்த
அக்குபிரஷ்ர் பாயிண்டுகள் அதிகம் அழுத்தம்
பெரும். அதனால் நாம் ஆரோக்கியமாக
இருப்போம். என்னே இறைவனின் படைப்பு.


ஆகாயல் இயன்ற வரை நடப்போம்.
நம்மை நாமே பாதுகாத்து ஆரோக்கியமாக
வைத்துக்கொள்வோம்.

வருமுன் காத்தல் தானே அழகு!

KEEP WALKING KEEP ON WALKING.