Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Tuesday, January 13, 2015

கொண்டாடுவோம் தை மகளை

வீடுகளில் பண்டிகை காலம். வரிசையாக போகி,தைப்பொங்கல்,கணுப்பொங்கல்னு கொண்டாட்டமான வாரம். பொங்கலுக்கு எல்லாம் ரெடியாகி கிட்டு இருப்பாங்க. பொங்கல்னா எங்க ஊர்ல நடந்ததுதான் ஞாபகம் வரும்.  வீதியில யார் வீட்டுல எல்லாம் இந்த வருஷம் பெயிண்ட் அடிச்சிருக்காங்க என்பது பெரிய விஷயமா இருக்கும். இப்ப மாதிரி பெயிண்ட் எங்க டிஸ்டம்பர்னு ஒண்ணு அடிப்போம்.

சில வருஷம் வீட்டுக்குள்ள ஒதுங்க வெச்சு, சுத்தமாக்கிட்டு வெளியில  வீட்டு முகப்புக்கு மட்டும் சுண்ணாம்பு அடிப்போம். அதுலயும் கோவில்ல இருக்கற மாதிரி கீழே மட்டும் காவி அடிப்பாங்க பாருங்க அதுவே அழகா இருக்கும். தனி வீடுன்னா எம்புட்டோ சொளகர்யம் தான்.

மார்கழி மாசம் தெருவையே அடைச்சு கோலம் போட்டவங்க தான். கோலப்போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்துக்குவோம். ஆனா இப்ப அப்பார்ட்மெண்ட் வாசியானதுக்கப்புறம் சின்ன கோலத்தோட சரி. நாளு கிழமையில்  சின்ன கோலத்துலயும் கலர் கோலம் போட்டு சந்தோஷ பட்டுக்க வேண்டியது தான்.

ஆனா பாருங்க சிலர் இதையும் கிண்டலடிப்பாங்க. சமீபத்துல ஒரு புத்தகத்துல படிச்சேன். “ குக்கரில் பொங்கல் வெச்சு, சாப்பிட்டு தூங்க வேண்டியதுதான்” அப்படிங்கற ரீதியில ஒருத்தர் எழுதியிருந்தார். தனி வீட்டுல இருக்கறவங்க இஷ்டப்படி வெட்ட வெளியில பொங்கல் வெச்சு சாமி கும்பிடலாம். நகரங்களில் அதுவும் அப்பார்ட்மெண்டில் இருக்கறவங்க எங்கன போய் பொங்க வைக்க?  கியாஸ் அடுப்பில்தான் வைக்க முடியும். விறகு அடுப்பை எங்க போய் தேட சொல்லுங்க. முடிஞ்சவங்க கியாஸ் அடுப்பில் வெங்கலப்பானை வெச்சாவது பொங்கல் செய்வாங்க. வெங்கலப்பானை எல்லாம் உபயோகப்படுத்தாதவங்க குக்கரில் பொங்கல் வைக்கறாங்க. இதுல என்ன தப்பு இருக்கு.





திரு நாள் அன்னைக்கு பால் பொங்கிச்சா, வீடு சுபிஷமடைஞ்சுச்சான்னு பாத்தா போதும்னு நினைக்கிறேன். பண்டிகையை விடாம கொண்டாடுறாங்களேன்னு சந்தோஷப்படுறதை விட்டுட்டு குக்கரில் வைக்கறாங்க, கியாஸ் அடுப்புல வைக்கறாங்கன்னு புலம்ப இப்ப நாம இருப்பது தனி வீடுகளில் இல்லை என்பதை புரிஞ்சு இந்த மாதிரி எதிர்மறையா பேசும்போது/ எழுதும்போது  மக்கள் மனசு வருத்தப்பட்டு அதையும் செய்யாம போயிட வாய்ப்பு இருக்கு.

அப்பார்ட்மெண்ட்களில் மொட்டை மாடியில் வைக்கலாம்னு சிலர் சொல்லலாம். அதுக்கு மண்ணெணெய் அடுப்பு மாதிரி தேடனும்.  கியாஸ் அடுப்பில் பொங்கல் செஞ்சிட்டு மொட்டை மாடிக்கு எடுத்து போய் பூஜை செய்யலாம். இல்லையா வீட்டு பால்கனியில் சூரியன் ஹாய் சொன்னா அங்கயே வெச்சு பூஜை செஞ்சாலும் சரிதான். பண்டிகையை விடாம கொண்டாடும் மனசு, முறையா செய்ய ஆசை இருந்தாலும், முடிஞ்சதை செய்யும் உள்ளம் இவைகள் போதும் ஆனந்தமா பண்டிகை கொண்டாட.
என் மனசுல பட்டதைதான் சொல்லியிருக்கேன்.


ஆஷிஷ் அண்ணா பண்டிகைக்கு வர்றாப்ல. வழக்கம் போல பிறந்த வீட்டு சீதனப்பணம் வந்திருச்சு. சூப்பரா புது வெங்கலப்பானை வாங்கியிருக்கேன். அதுல ஆனந்தமா பொங்கல் வெச்சு அந்த போட்டோக்களோட வர்றேன். அனைவருக்கும் ஆனந்தமான பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.


Sunday, February 26, 2012

நன்றி... நன்றி

எல்லோரும் நல்லா இருக்கீகளா??? ரொம்ப நாளாச்சு பேசி.
சென்னைக்கு போய் வந்தாலே இப்படித்தான் ஆகுது எனக்கு.
ஒரு திருமணத்திற்காக சென்னை ட்ரிப் அடிக்க வேண்டி இருந்தது.
ஊருக்கு திரும்பும் பொழுது ட்ரையினில் இருந்தே ஜுரம் ஆரம்பம்.
வைரல் ஃபீவர். என்னோடு ஹைதைக்கு வந்த அம்மா, அப்பாவுக்கும்
ஜுரம். அம்மா, அப்பா ட்ரீட்மெண்ட்ற்காக ஹைதை வந்திருக்கிறார்கள்.
ஜுரம் சரியாகி அதன் பிறகு அவர்களை மருத்துவத்திற்கு அழைத்து
சென்றேன். இதோ நாளை அவர்கள் கிளம்புகிறார்கள்.

ஆஷிஷ் அண்ணாவுக்கு மார்ச் 2 முதல் தேர்வு ஆரம்பம். அம்ருதம்மாவுக்கும்
அதே நாளில் துவங்குகிறது. இதனால்தான் பதிவு பக்கம் வரமுடியாமல்
போய்விட்டது.

நண்பர் வேங்கடஸ்ரீநிவாசன் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்.
மிக்க நன்றி சகோ.

எனக்கு பிடித்த ஏழு விஷயங்களை சொல்ல வேண்டுமா??!!! சரி
சொல்றேன் கேட்டுக்கோங்க.

1. பாட்டு: எப்போதும் பாடல் கேட்க ஆசை. கானக்கந்தர்வனின்
குரலில் பாடல்கள் என்றால் கூடுதல் சந்தோஷம்.

2. குழந்தைகளுக்கு இனி விடுமுறை. ஆனந்தமாய் அவர்களுடன்
அளவளாவும் அந்த இனிமையான தருணங்கள் ரொம்ப இஷ்டம்.
மீ த வெயிட்டிங் ஃபார் த ஹாலிடேஸ் :))

3. டீவி விளம்பரங்களாகட்டும், மருத்துவமனை, தியேட்டர்
போன்ற இடங்களில் ஆகட்டும் பச்சிளம் குழந்தைகளை
பார்க்க ரொம்ப பிடிக்கும். அந்தக்குழந்தைகளின் ஒவ்வொரு
செய்கையும் ஒரு ஆனந்தம்.

4. நட்புக்களுடன் அளவளாவ ஆசை.

5. பயணம் தரும் சுகமே சுகம்.

6. படிப்பது. புத்தகம், இணையம் என எங்கே படிக்க வாய்ப்பிருக்கிறதோ
அங்கே நான் தொலைந்து போவேன் :)

7.

இந்த விருதினை 5 பேருடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.



துளசி டீச்சர்: இந்த விருது கனகச்சிதமாக பொருந்துவது இவருக்கு
என்பதில் சந்தேகமே இல்லை.

அமைதிச்சாரல்: கேமிரா, கைவண்ணம், கதை, கவிதைன்னு கலக்கறாங்க.

ராமலக்‌ஷ்மி: இவங்க கேமிரா பார்வைக்கு, கவிதைக்கு நான் அடிமை.

தீராத விளையாட்டுப்பிள்ளை ஆர்வீஎஸ். இவரது நகைச்சுவை பதிவுகள்
மிக அருமை.

என் இனிய இல்லம் சிநேகிதி. கைவேலைப்பாடுகள் பதிவுகள் ரொம்ப அருமை.

விருது பெற்று பகிர்வதில் மகிழ்ச்சி அடையும் இந்த வேளையில்
இன்னொரு சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
விகடன் வலையோசையில் எனது வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நண்பர் அப்பாஜி பீடிஎஃப் அனுப்பியிருந்தார். ஹுசைனம்மா மடல்
அனுப்பியிருந்தார். இலங்கையிலிருந்து சுபாஷினியும் மடல் அனுப்பி
வாழ்த்து சொல்லியிருந்தார். நான் இன்னும் புத்தகம் பார்க்கவில்லை.
அப்பாஜி அனுப்பியிருந்த பீடிஎஃப்தான் பார்த்தேன்.

விகடனுக்கும் நண்பர்களுக்கும் தம்பி அப்துல்லாவுக்கும் மிக்க நன்றி
















Thursday, January 19, 2012

மண்ணில் வந்த நிலவே!!! என் மடியில் பூத்தமலரே!!!!!!



எங்க அம்ருதம்மாவுக்கு இன்று பிறந்த நாள்.



வழக்கம் போல டிசம்பர் முதலே கவுண்ட் டவுன்
ஆரம்பமாயிருச்சு. இந்த வாட்டி இன்னமும் கூட.
காரணம் மேடத்துக்கு இது 12ஆவது பிறந்தநாளாம்.
ப்ரீடீனாம்!!! (எனக்கு இப்பத்தான் ப்ரீகேஜியில சேர்த்தது
மாதிரி இருக்கு)

சென்னை போயிருந்த பொழுது ஆர் எம் கேவியில்
பர்ச்சேஸ் செய்து அந்த பில்லை அண்ணன் தலையில்
கட்ட நினைச்சிருந்தாங்க மேடம். தானே வந்து
ஆஷிஷ் அண்ணாவை காப்பாத்திருச்சு!!!

இந்த வாட்டி எனக்கு ட்ரடிஷனல் ட்ரெஸ் வேணாம்
என பெப்ஜீன்ஸும் ஒரு டாப்பும் எடுத்துகிட்டாங்க.
கேக் ஆர்டர் செஞ்சாச்சான்னு ஒரே டார்ச்சர் தான்.

மெனு இட்லி வித் வேர்க்கடலை சட்னி, மதியம்
சீஸ் பாஸ்தா... ரவா கேசரி. டின்னர் அவங்க
கேட்ட இடத்தை விட்டு மத்த எல்லா இடமும்
சொல்லிக்கிட்டு இருக்கோம். :)) தாதூஸ் ஜரோக்கா
(ஏற்கனவே பதிவு போட்டிருக்கேன்) போகணுமாம்.

இந்த வாட்டி அம்மாவுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ப்ரஸண்ட்.
அவங்க ஆசைப்பட்ட கீ போர்ட் கம் பியானோ. ஒரு வாரம்
முன்னாடியே ஆர்டர் செஞ்சு நேத்து சாயந்திரமே கூட்டிகிட்டு
போய் வாங்கி வந்தோம். செம குஷி. டிரினிட்டி காலேஜ்
லண்டன் கோர்ஸ் படிக்கறாங்க. 8 கோர்ஸும் முடிக்கதிட்டம்
போட்டிருக்காங்க.

போனமாசம் மேத்ஸ் ஒலிம்பியாட் பரிட்சை எழுதறேன்னு
சொல்லி பணம் வாங்கிப்போய் கட்டினாங்க எங்க
அம்ருதம்மா. ஸ்கூல் லெவலில் 6ஆவது ரேங்க். ஸ்டேட்
லெவலில் 1186த் ரேங்னு நேத்துதான் ரிசல்ட் நெட்டுல
பாத்தோம்.


அதற்காகவும் பிறந்த நாளுக்காகவும் எங்கள் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

நல்ல ஆரோக்கியத்தோடு, எல்லா வளமும் பெற்று
வாழ ஆசிகள்.

அன்புடன்
அம்மா, அப்பா, ஆஷிஷ் அண்ணா

டிஸ்கி:
இந்தப் பாட்டில் P.G.MARTIN கடையை பார்க்கும் போதெல்லாம்
”ஐயோ அப்படியே வலது பக்கம் திரும்பினால் திம்பரிகஸ்யாய,
நம்ம வீட்டுக்கு போயிடலாம்னு இருக்கு”!!!! என்பாயே
அம்ருதம்மா அதற்காக இந்தப் பாட்டு.


Friday, December 23, 2011

color of the year 2012!!!!!!!!!!

நாலஞ்சு வருஷமாத்தான் எனக்கு ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு கலர்
இருக்குன்னு தெரியும். (டீவி9 புண்ணியம்) ஒவ்வொரு வருடமும்
டிசம்பர் மாதம் Pantone அறிவிக்கும் கலர் பற்றி தெரிஞ்சுக்க ஆவலா
இருப்பேன்.

நம்ம அழகர் ஆற்றில் இரங்கும் பொழுது கட்டி வரும் ஆடையை
வெச்சு அந்த வருஷ மழை, மகசூல் பத்தி சொல்வாங்கன்னு
அவ்வா சொல்வாங்க.

இந்த முறை திருக்கார்த்திகையின் போது எங்கம்மா இங்க
இருந்தாங்க. திருவண்ணாமலை ஜோதியின் போது க்ஷணநேரத்திற்கு
ஆடி வரும் அர்த்தநாரீஸ்வரர் கட்டிவரும் ஆடை வெச்சு
இனி வரப்போகும் காலத்தை பத்தி சொல்வாங்கன்னு அம்மா சொன்னாங்க.

Pantone நிறுவனம் வரப்போகும் 2012 ஆம் வருடத்திற்கு ரொம்பவே
அழகான ஒரு கலரை தேர்ந்தெடுத்திருக்காங்க. அழகு கொஞ்சும் அந்த
கலருக்கு பெயர் “Tangerine Tango” :))


சிவப்பு கலந்த இந்த ஆரஞ்சு வர்ணம் தான் வரும் வருடத்தை
ஆளப்போகிறது.


இந்த நிறம் ரொம்ப ஆழமானதா சொல்றாங்க இந்த நிறுவனத்தினர்.
இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் கலந்திருப்பதா தெரிஞ்சாலும் வேறு
சில வர்ணங்களையும் தனக்குள்ளே வெச்சிருக்கு.

அந்திநேரத்துச் சூரியனின் சிவப்போடு, மனதுக்கு இதத்தையும்
நட்பான பாவனையும் தரும் இளம் மஞ்சளையும் தனக்குள்
வெச்சிருக்கு. அதாவது சுருக்கமா சொன்னா
இந்த நிறம் HEAT AND ENERGYயின் அடையாளம்.



பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பனிமூட்டத்தை நீக்க
இந்த நிறம் உதவும்னு Pantone நம்புது. மூடு பனியை
மெல்ல விலக்கி நமக்கு சரியான பார்வையை தர
சூரியனின் வெளிச்சம், சூடு, சக்தி வேண்டுமே.
அருமையான தேர்வுதான்.

இந்த நிறத்தைப் பற்றி பார்க்கும் பொழுது நமக்கு மிகவும்
பரிச்சயமான ஒரு மலரின் வர்ணம் ஞாபகத்திற்கு வருது.
ஆமாம். கனகாம்பரம். இந்த பூவுக்கு வாசமிருக்காது.
அதனால எனக்கு பிடிக்காது. ஆனா அந்தக் கலர்
மயக்கும் அழகு.

இந்தக் கலரில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வீட்டுல வெச்சுக்கோங்க.
(புடவை, சுடிதார்லாம் வாங்கினாகூட தப்பில்லை.) தோட்டம் போட
வசதி இருக்கறவங்க கனகாம்பரச் செடி வளர்க்கலாம். தினம் இந்தக்
கலர் கண்ணில் படுவது போல இருந்தால் மனதுக்கு நல்லது.

இதோ வரப்போகிறது கிறிஸ்துமஸ் தினம். எனக்கு மிகவும்
பிடித்த ஒரு பண்டிகை. தொழுவதில் எனக்கு எந்த வேறு பாடும்
இல்லை. இறைவன் ஒருவனே என்பது என் அப்பா எனக்கு
சொல்லித் தந்தது.






என்னை மறக்கச் செய்யும் கானகந்தர்வன் குரலில் இந்தப் பாடல்
கேட்கும் பொழுது இன்னும் இளகும் மனது.



நட்புக்களுக்கும், உடன் பிறப்புக்களுக்கும் என் மனமாந்த
கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள்.

அட்வான்ஸா பதிவு போட்டதன் காரணம் ஹி ஹி... ஒரு வாரம் லீவு.


Friday, October 07, 2011

HAPPY BIRTHDAY DEAR ASHISH

தாத்தாவுக்கும் அம்மம்மாவுக்கும் பெருமை தாங்கவில்லை. பேரன்
பள்ளி சுற்றுலாவில் குல்லு மணாலி சென்று வந்ததிருக்கிறார் என்று.
ஆஷிஷ் கிளம்புவதற்கு முதல் நாள் போன் போட்டு ஸ்வெட்டர் வாங்கிக்
கொடுத்தாயா, குளிருக்கு இதமான உடைகள் எடுத்துக்கொண்டானா?
அவசரமான மருந்துகள் கொடுத்தாயா என குடைந்து எடுத்துவிட்டார்
தாத்தா. பாலைவிட பாலாடை ருசிக்கும்!!! ம்ம்ம்ம்ம் :)))

எனக்கு டில்லியிலிருந்து அழகான புடவை வாங்கிவந்திருக்கிறான்.
அப்பாவுக்கு ஷர்ட், தங்கைக்கு வாட்ச். என் குட்டி குட்டி ஆஷிஷ்
இன்று தனியாக பர்ச்சேஸ் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டான்
என்பதை நம்பமுடியாமல் நம்பிக்கொண்டிருக்கிறேன்.


இன்று எங்கள் செல்லத்திற்கு பிறந்தநாள். 14 வசந்தங்கள் முடிந்து
15ஆவது வசந்த்ததில் அடி எடுத்துவைக்கும் இந்த நந்நாளில் இறைவன்
அவனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்வான வாழ்வையும்,
நல்ல குடிமகனாக, நல்ல மனத்தோடு,உடலோடும் வைக்க பிரார்த்தித்து
வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்ளும் அன்பான அப்பா, அம்மா.

ஆஷிஷ் அண்ணா பர்த்டே ஷ்பெஷல்:

காலை டிபன் : இட்லி + சாம்பார் (வடநாட்டு டூர் அடித்து வந்திருப்பதால்)
மதியம் : மிக்ஸ்ட் வெஜிடபிள் புலாவ் (ப்ரெட்டெல்லாம் சேர்த்து நான்
செய்யும் ஷ்பெஷல்)
ஸ்வீட்: ஆஷிஷுக்கு பிடித்த ரஸமலாய்.
டின்னர் வளமை போல அவுட்டிங். அண்ணா சாய்ஸ்.

Wednesday, September 14, 2011

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்

இன்று என் அம்மம்மா, தாத்தா தங்களது 62ஆவது திருமண நாளைக்
கொண்டாடுகின்றனர்.
புதுகை சுப்பராமய்யர் பள்ளி வாத்தியார் சுந்துசார் என்று சொன்னால்
பலருக்கும் தெரியும். தாத்தாவிடம் பயின்றவர்கள் இன்று பல பெரிய
பொறுப்பான வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்ற கொசுவத்தியும்
உண்டு.

சுந்துசார்,ராஜலக்‌ஷ்மி தம்பதியருக்கு எங்கள் வணக்கங்களுடனான
திருமணநாள் வாழ்த்துக்கள்.


இன்று என் சித்தி உமாவிற்கும் திருமணநாள்.
சென்றமாதம் சித்தி ஹைதை வந்திருந்த பொழுது தன் நண்பிகளிடம்
சித்தியின் திருமணம் முடிந்து மதுரைக்கு கிளம்பிக்கொண்டிருந்த
நேரத்தில் புதுகை பஸ்ஸ்டாண்டுக்கு அழுகையுடன் ஓடிவந்த என்னைப்
பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். சித்தியை விட்டு பிரிகிறோம்
(முன்பு மும்பையில் இருந்தாலும் சித்திக்கு விருப்பப்பட்டால் வர
இயலும். திருமணமாகிப்போனால் அப்படி வரமுடியாதே என வருத்தம்)
என்ற வருத்தம் அதிகமாகி பஸ்ஸ்டாண்டில் சித்தியை கட்டிக்கொண்டு
அப்படி ஒரு அழுகை.

இன்று சித்தி சித்தப்பா தங்களது 23ஆவது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்.
வணக்கங்களுடன் எங்கள் அன்பு வாழ்த்துக்களும்.

இந்த மகிழ்வான நேரத்தில் இன்னுமொரு சந்தோஷமான செய்தியை
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் அம்ருதம்மா
சென்றமாதம் Trinity college of London piano exam செய்துவிட்டு
மஹா டென்ஷனுடன் ரிசல்ட்டுக்காக காத்திருக்க, ரிசல்ட் வந்தே
விட்டது. அம்ருதம்மா DISTINCTION ல் பாஸ் செய்து இருக்கிறாள்.
அண்ணா,அப்பா, அம்மா அனைவரின் அன்பான பாராட்டுக்கள் அம்ருதா

KEEP UP THE GOOD WORK.


Wednesday, April 13, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கும் புத்தாண்டு எல்லோருக்கும் எல்லா நன்மைகளையும்
அளித்து ஆனந்தமானதொரு ஆண்டாக மலர பிரார்த்திக்கிறேன்.




அண்ணபூர்ணாவின் மகளைப்போல இந்த நேரத்தில் இலங்கையில்
இல்லையே என்ற வருத்தம் எங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு.
சுதர்ஷிணி பார்சல் அனுப்பி வெச்சா நல்லா இருக்கும். :))




எங்கள் குடும்பத்தினர் சார்பாக அனைவருக்கும் இதயம் கனிந்த
தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த வருடத்தில் பெயர்
”கர”. இனிதாக அமைய ஆண்டவன் அருள் புரிவானாக.




Sunday, April 03, 2011

இந்தியா வெற்றிக்கு வாழ்த்தும், யுகாதி வாழ்த்தும்!!

எங்க வீட்டுலேயே இந்தியாவுக்கு பெட்டிங் நடந்துச்சு!!!
நடத்தியது ஆஷிஷும், அம்ருதாவும். பெட்டிங் செஞ்சது
அவங்க மாமாகிட்ட. இந்தியா ஜெயிக்காதுன்னு சும்மானாச்சுக்கும்
சொன்ன மாமனை இந்தியா ஜெயிச்சா எங்களுக்கு...... வாங்கிக்கொடுக்கணும்னு
சொன்னதைக்கேட்டு தம்பி ஷாக். அது என்னன்னு கடைசில சொல்றேன்.

நேற்றைய சாதனை அபாரமானது. டென்ஷனை தலையில்
ஏற்காமல் தோனி விளையாடியது அவரது பொறுப்பை காட்டுகிறது.
சேவாக்கும் சச்சினும் அவுட்டானதும் இந்தியா தோற்றுவிடுமோ
என்ற அச்சம் தலை தூக்கியதென்னவோ நிஜம் தான். தோனிக்கு
பாராட்டுக்கள். இந்திய வெற்றியை சச்சினுக்கு சமர்ப்பித்த அணியினரின்
மனம், அவரைத் தங்களின் தோள்களில் தூக்கி வலம் வந்தது எல்லாம்
பார்த்து மனம் நெகிழ்ந்தது. சின்னக்குழந்தை போல குதூகலித்த
சச்சினைப்பார்க்க பார்க்க பரவசம்.

மீண்டும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!


நாளை கர வருஷப்பிறப்பு. தெலுங்கு, கன்னட, மராட்டியர்களுக்கான
புத்தாண்டு. இந்த ஆண்டு எல்லோருக்கும் எல்லாவித மகிழ்ச்சியையும்
தரும் நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள். யுகாதி ஷ்பெஷல்
யுகாதி பச்சடி. வெல்லம்,புளி,வேப்பம்பூ, மாங்காய் எல்லாம் சேர்த்து
செய்யப்படும் இந்தப் பச்சடிதான் முதலில் உட்கொள்ளப்படும்.
வாழ்வில் எல்லா சுவையும் கலந்துதான் இருக்கும். அதை ஏற்கும்
மனதை ஆண்டவன் தரவேண்டும் எனும் நினைப்பு ஏற்படத்தான்
புளிப்பு,துவர்ப்பு,கசப்பு, எல்லாம் சேர்ந்த இந்த யுகாதிப்பச்சடி.


வாழ்வில் பூரணம் இருக்க வேண்டும். அந்த முழுமை கிடைக்க
பூரணம் நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பது பழக்கம்.
பூரண போளி யுகாதிப் ஷ்பெஷல். :)



டிஸ்கி: ஆஷிஷும் அம்ருதாவும் மாமாவிடம் கேட்டது
ஐபோனும், தங்க ஒட்டியாணமும். :( :))).



Friday, April 01, 2011

ஐ லவ் மை இந்தியா!!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிக்கு
எப்போதும் மவுசு அதிகம் தான். இந்த முறை நடந்த போட்டியை
நானும் பார்த்தேன். கிரிக்கெட்டே வேண்டாம் என்று இருந்தேன்.
இந்தப் போட்டி என்னை மிகவும் கவர்ந்திழுத்து உட்கார வைத்திருந்தது.
இருவரும் சமமாக போட்டி இட மேட்சும் ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இருந்தது. கபில்தேவ்
தலைமையில் ஒரு அணியாக இல்லாமல் ஒரு குடும்பம் போல
கலந்து இருப்பார்கள் வீரர்கள். இந்த போட்டியில் அப்படி ஒரு உணர்வு
எனக்கு ஏற்பட்டது. எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாமல்
தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று தோனி இருந்தது
பிடித்திருந்தது. வாழ்த்துக்கள் தோனி.

உலக அதிசயமாக அயித்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க அரை நாள்
விடுப்பு எடுத்து வீட்டில் உட்கார்ந்திருந்தார்!!! அன்றைக்கு ஹைதையில்
ஏதோ பந்த் போல ரோடுகள் வெறிச்சோடி கிடந்தன. 6 மணிக்கு முதல்
இன்னிங்ஸ் முடிந்த பிறகு கொஞ்சம் போல மக்களை வெளியே
பார்த்தேன். அதன் பிறகு ம்ம்ஹூம்.. எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்
இருக்கும் பார்க்கில் கிரிக்கெட் விளையாடும் பொடிசுகள் கூட வெளியே
வரவில்லை.

நாளை இறுதிப்போட்டி. இலங்கையுடன் இந்தியா மோதுகிறது.
இதுவும் மற்றொரு விருவிருப்பான போட்டியாகத்தான் இருக்கும்.
தில்ஷானையும், தரங்கவையும் சீக்கிரம் அனுப்பிவிட்டால்
நிம்மதியாக இருக்கும்.

யே துனியா எக் துல்ஹன் துல்ஹன் துல்ஹனிக்கி மாதேகி பிந்தியா
யே மேரா இந்தியா... ஐ லவ் மை இந்தியா...




நம் பிரார்த்தனைகள் நம் வீரர்களின் வெற்றிக்காக. இந்த வெற்றி
நம் ஒவ்வொருவரின் வெற்றியாக நாம் கொண்டாடுகிறோம்.

இந்த சக் தே இந்தியா பாடலும் அவர்களுக்காகத்தான்!!!





கபில் தேவும் அவரது அணியினரும் சேர்ந்து 1983ல் படைத்த
அந்த வரலாறு.... நாளை மீண்டும் இந்த வரலாறுச் சாதனை
நடை பெற எங்கள் வாழ்த்துக்கள் நம் இந்திய அணிக்கு.





வென்று சரித்திரம் படைத்து வாருங்கள் தோழர்களே!!
இறைவன் உங்களுக்குத் துணை இருப்பான்!



என்னுடைய இந்த 750ஆவது பதிவை வெற்றி வாகை சூடிய
கபில்தேவுக்கும், நாளை வெற்றி வாகை சூடப்போகிற இந்திய
அணிக்கு சமர்ப்பணம்.

Wednesday, January 19, 2011

HAPPY BIRTHDAY AMRUTHA

அம்மா நல்லா ப்ரே செஞ்சுகோங்க!!

எதுக்கு??

19த் தெலங்கானா பந்த் ஏதும் வந்து ஸ்கூல் லீவு விட்டுடக்கூடாது!!!
ஏன் அன்னைக்கு என்ன?
என்னோட பர்த்டேம்மா!!

பர்த்டேதானேன்னு சும்ம சொன்னேன். முறைத்த முறையில்
நான் பஸ்மம் ஆகிப்போயிருப்பேன். :))

ஜனவரியில் வரும் பிறந்த நாளுக்கு டிசம்பரிலேயே நச்சரித்து
ட்ரெஸ் வாங்கி வைத்தாகிவிட்டது!!

அண்ணா ஒரு ட்ரெஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.



என்ன மெனு இன்னைக்கு? என கேட்டதற்கு
மதியம் லஞ்சிற்கு பாக்கெட் புளியோதரை(எம்டிஆர்)சோற்றில்
கலந்து வேணும். கேசரி. சரி. அத்தோடு காலை டிபனாக
காஞ்சிபுரம் இட்லியும் காஸ்ட்லி சட்னி(அதாங்க வெங்காய சட்னி)
ஆச்சு.

இரவு டின்னருக்கு எங்க போகப்போறோம்? எனக்கேட்டாள்.
நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கற கார்னர் ஷாப்பில் பாவ்பாஜி.
அதுவும் உனக்கு பிடித்த சீஸ் பாவ்பாஜி. போதும்தானேன்னு
நானும் அண்ணாவும் கலாய்த்து கொண்டிருக்கிறோம். :))

இத்தனையும் எங்கள் அன்புச் செல்லம் அம்ருதாவின்
பிறந்தநாளுக்குத்தான். ஒபாமா வந்தது சென்றதைவிடவும்
பக்கா ப்ளானிங் முன்னகூட்டியே நடக்குது. எங்கம்மா
ரொம்ப முன்னேறிட்டாங்க!!!

இந்த நந்நாளில் எல்லா வளமும் பெற்று, நோயற்ற
வாழ்வும், குறைவற்ற செல்வமும் அடைந்து மகிழ்ச்சியோடு
வாழ வாழ்த்தும்.

அம்மா, அப்பா & ஆஷிஷ் அண்ணா.







Tuesday, December 28, 2010

fruit & milkஐ ஹேண்டினில் ஏந்தி!!!!

எங்க மாமா ஒருத்தர் இந்தப் பாட்டை
அருமையா பாடினார். ஆனா கேட்டமாதிரி
ட்யூன் இருக்க நடுவுல ஆங்கில கலந்த மாதிரி இருக்கேன்னு
ஆச்சரியப்பட்டேன். இந்த பாட்டு முக்கால்வாசி
மாமா இந்த மாதிரி பாடுவார்.


fruit & milkஐ handinil ஏந்தி
பவள mouthil Smilenai சிந்தி
கோல peocock போல யூ வருவாயே
கொஞ்சும் parrote அமைதி கொள்வாயே...

இப்படி அந்தந்த ட்யூன்களில் நாமே பாடல்களை
எட்டுகட்டுவது ஒரு சுகம். அப்படி சில பாடல்கள்
இதோ...
**********************************************
நாங்க தாக்குவது நிர்மாவை
(எல்லோரும் இப்படித்தான்னு நினைக்கிறேன்)
வாஷிங் பவுடர் நிர்மா..
ஆயாவீட்டுல குருமா!!
மணமணக்கும் குருமா
பூரியோடு வருமே!!
வளைச்சு அடிப்போம் நாமே!!
ஆயாவீட்டுல குருமா!!

********************************************
மேரே சொப்பனோக்கி ராணி கப் ஆயேகி தும்
அருமையான ஆராதனா படப் பாட்டு.
ஆனா தம்பி அதை
அவனுக்கு மிகவும் பிடித்த மிளகு ரசம்
வெக்கும் அன்னைக்கெல்லாம் இப்படி பாடுவான்!!

“ஜீரகால மிரிகால சாறு! சாறு!”
ஹோய் ஜீரகால மிரிகால சாறு சாறு.


*******************************************

என் ஃப்ரெண்டோட தங்கச்சியை அவங்க ஆயா
எப்பவும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
பொறுத்து பொறுத்து பாத்த அந்தப் பொண்ணு
பாட்டு படிச்சு பாட்டியை கடுப்பேத்திடிச்சு.
இப்பவும் மறக்க முடியாத பாட்டு அது.

பூஞ்சிட்டு குருவிகளா
புதுமெட்டு தருவிகளா
பாடத்தான் போறேன் பாட்டு
புதுக்கோட்டை கிழவியைப் பாத்து
அம்மாடி ஆத்தாடி பொல்லாத கிழவியடா
டொய் டொய்ய்ய்...

:))))))))))) எங்க அவ்வாவையும் நாங்க இந்தப் பாட்டு பாடி
கலாய்ச்சது தனிக்கதை!!

************************************************
அயித்தானும் சாதராணம் இல்லை.

ஆஹா இன்ப நிலாவினிலே பாட்டில் ஒரு வரி
வருமாம். அதை இப்படி பாடுவாங்களாம்.
அனுதினம் செய்வார் போளி... அதை நாம் ரசிப்போம் ஜாலி
அப்படின்னு அவங்க ஸ்டைல் பாட்டு.

நீங்களும் இந்த மாதிரி எட்டுக்கட்டி பாடியிருப்பீங்களே!!
அதை பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க.

அனைவருக்கும் மனமார்ந்த ஆந்கில புத்தாணு நல்வாழ்த்துக்கள்.
பிறக்கும் ஆண்டு எல்லாவித வளங்களையும், மனமகிழ்ச்சியும்
தருமொரு ஆண்டாக மலர இறைவனை பிரார்த்திக்கிறேன்.









Get Your Own Hindi Songs Player at Music Plugin

videoku:






Tuesday, November 30, 2010

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!! இன்பத்தில் ஆடுது என் மனமே!!

என் திருமண வீடியோவில் இந்தப்பாட்டு இருக்கு. இந்தப் பாடலின்
வரிகள் ரொம்பவே இஷ்டம்.

“மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமுகமோ”
சிம்பிளி சூப்பர்.

புதுவீட்டுக்கு சனிக்கிழமை வந்தோம். வீட்டுக்கு வந்ததும்
முதல் கொண்டாட்டம் எங்கள் திருமண நாள். இந்த வருடம்
எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் நாங்கள் இருவரும் கொடுத்துக்
கொண்ட அன்புப் பரிசு, எங்கள் 15 வருட கனவு எங்கள் 15ஆவது
திருமணநாள் பரிசாக இந்த வீடு.

10ஆவது திருமணநாளை இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
என சுத்தி அங்கங்கே இருக்கும் முருகன் கோவிலை தரிசித்து
கொண்டாடினோம்.

நாளை எங்கள் திருமண நாள்.இந்த வருடம் இங்கே
புதுவீட்டில் சிம்பிளாக கொண்டாட திட்டம்.
அயித்தானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.




டிஸ்கி: இனி தொடர்ந்து பதிவுகள் வரும் என்று அறிவித்துக்கொள்கிறேன். :)))



Wednesday, November 17, 2010

பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆச்சுடா பட்டாபி!!! அப்படின்னு ஒரு டயலாக் எஸ்.வீ.சேகரின் நாடகம்
ஒன்றில் வரும். அது மாதிரி நானும் வலைப்பூ துவங்கி 3 வருஷம்
ஓடிடிச்சு. கொஞ்சம் தாமதமாத்தான் பிறந்த நாள் கொண்டாட்டம்.



ஒரு நாளைக்கு 4 பதிவு போட்டுகிட்டு இருந்தேன்னு யாரோ கண்ணு வெச்சிட்டாங்க
போல :)) அதான் இந்த வருஷம் 750 பதிவாவது போடணும்னு வெச்சிருந்த டார்கெட்டை
எட்ட முடியலை. அதுக்கென்ன வட்டியும் முதலுமா அடுத்த வருஷம் அடிச்சு ஆடிடலாம்.

வரும் 19ஆம் தேதி நம்ம பதிவர் தோழி முத்துலெட்சுமிக்கு பிறந்தநாள்.
அட்வான்ஸா என்னோட வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்கிறேன். தோழிக்கு
பிடிச்ச பாடல்களை சென்ற முறை வாழ்த்தில் இருக்கு. ஒரு எட்டு போய்
பாடல்களை ரசிக்க

இறைவன் எல்லா வளத்தையும் கொடுத்து என்றும் இனிமையான
வாழ்வை தர பிரார்த்திக்கொண்டு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை
சொல்லிக்கொள்கிறேன்.


Wednesday, October 13, 2010

யாதுமாகி நின்ற அம்மம்மாவுக்கு பிறந்த நாள்

இன்று என் ராஜலட்சுமி அம்மம்மாவுக்கு பிறந்த நாள்.
நவராத்திரியில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்யும்
அன்றுதான் அம்மம்மாவின் பிறந்தநாள். இன்று
அந்த நந்நாள். படிக்காத மேதை என் அம்மம்மா.

எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம்.
என்னைப் பெறாத அந்தத் தாய்க்கு என் வணக்கங்கள்.
இன்று போல் என்றும் வாழ அந்த இறைவனைப்
பிரார்த்திக்கிறோம்.

நானாக நானில்லை தாயே! நல்வாழ்வுத் தந்தாயே நீயே!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

அம்மம்மாவுக்கு கமல்ஹாசன் பிடித்த நடிகர்.
கமலின் நடிப்பில் இந்தப் பாடல் எப்போதும் என்
அம்மம்மாவுக்காக:

அம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி

ஹேப்பி பர்த்டே அம்மம்மா

அன்புடன் பேத்திகள், பேரன்கள், கொள்ளுப்பேத்தி & பேரன்





Thursday, October 07, 2010

HAPPY BIRTHDAY ASHISH

பிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு
இன்று பிறந்த நாள்!!!



எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு
வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறோம்.

 வளரும் பையனிவனாக என் குட்டிச் செல்லம் வளர்ந்து
எனக்குத் தோழனாக இருப்பது சந்தோஷம். ”நீ தான்மா
என் ஃபர்ஸ்ட் கேர்ள் ஃப்ரெண்ட்”! என்று சொல்லும் பொழுது
பெருமையாக இருக்கிறது.

கேக் ரெடி. மெழுகுவர்த்தி ஏற்றி ஊதுவதை விட ஏற்றி
வைப்பது சிறந்தது என்பதால் ஏற்றி வைத்து பார்ட்டிக்காக
காத்திருக்கிறோம்.  அனைவரும் வந்துவிடுங்கள்.



எங்கள் அன்பு பரிசாக ஆஷிஷ் + அம்ருதாவின் தற்போதைய
காலம் வரையிலான படங்களை கொலாஜாக செய்து
பரிசளித்தோம். ஆஷிஷும் அம்ருதாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.





Wednesday, September 22, 2010

HAPPY BIRTHDAY அயித்தான்

என்னவருக்கு இன்றைக்கு பிறந்த நாள். இரவு
12 மணிவரை முழித்திருந்து வாழ்த்து சொல்லியாச்சு.
என்னுடைய பரிசாக honda activa (ஓட்டப்போவது
என்னவோ நான் தான்னு வெச்சுக்கோங்க) இரண்டு டீ ஷர்டுகள் வாங்கி
கொடுத்தேன். அயித்தானுக்கு பிடித்த சேமியா பாயசம் ரெடி.
காலை டிபன் சுடச்சுட இட்லி வித் வெங்காயச் சட்னி.
இதற்கு மேலும் வேறெதுவும் செய்து தண்டனை தரவேண்டாம்
என்பதால் மதியம் லஞ்சுக்கு வீ த கோயிங் அவுட். :)))

பிள்ளைகள் எவ்வளவோ வற்புறுத்தியும்
தற்போது வேறெதுவும் வேண்டாம் என்று சொல்ல
ட்ரெஸ் வாங்கிக் கொடுத்து பூக்கள் கிஃப்டாக கொடுத்திருக்கிறார்கள்.

அயித்தானுக்கு மிகவும் பிடித்த இந்தப்பாடல் அவரது
அண்ணனின் ஆசிர்வாதம் அவருக்கு எப்போதும் கிடைக்க
வேண்டும் என்ற விருப்பத்தில்





happy birthday.

Friday, September 10, 2010

நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா!!!!!

எந்த ஒரு நல்லநாள் என்றாலும் அப்பொழுதெல்லாம் ரேடியோவில்
அதற்கான சிறப்புத் திரைப்படப்பாடல்கள் வரும். அதைக் கேட்டு
கேட்டு இப்போது அது இல்லாத நல்ல நாள் ஏதோ ஒன்று குறைவது
போலவே இருக்கிறது.

இன்று முஸ்லீம் சகோதர சகோதரிகள் ரமலான் திருநாளைக்
கொண்டாடும் வேளையில் என் வாழ்த்துக்களை பாடல்
கொசுவத்திக்களாகத் தர விருப்பம்.

நாகூர் ஹனீபா: இந்தக் குரலுக்கு நான் அடிமை.
மதங்கள் வேறுபட்டாலும் ”இறைவனிடம் கையேந்துங்கள்”
எனும் இவரது பிரபலமான பாடல் எந்த மதத்தினருக்கும்
பொருந்துவது போல அமைந்திருக்கும்.



அடுத்த பாடலுக்கு வீடியோ கிடைக்கவில்லை.
ஆனால் அந்த பாடலின் வரிகள் என் மனதில் எப்போதும்
ஓடிக்கொண்டிருக்கும்.

ஊன் பிறையை நோக்கிடுவோம்! குரானை ஓதிடுவோம்
மேன்மைமிகு மெக்காவின் திசை நோக்கிப் பாடிடுவோம்
மேன்மைமிகு மெக்காவின் திசை நோக்கிப் பாடிடுவோம்!
நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டாவா!

யார் யாருக்கு எது கொடுத்தால் தகுமென்று நீ நினைத்தாய்
வாராத பதவிக்கெல்லாம் வாய்பிளக்கும் மனிதருண்டு
ஊர் குருவி சிலநேரம் பருந்தென்று நினைப்பதுண்டு
ஊர் குருவி சிலநேரம் பருந்தென்று நினைப்பதுண்டு!

யாரும் வருவார் யாரு தொழுவார் நாகூர் ஆண்டவன் சந்நிதியில்
நீயும் ஒன்று நானும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில்

நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து உன்னை நானும் வேண்டாவா!

இந்தப் பாடலின் அடுத்த சரணங்கள் மறந்துவிட்டன.

எஸ்பீ பால சுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடல்
ஒன்றை கோவை ரவி அவர்கள் அனுப்பி வைத்திருந்தார்.
அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

வானுக்கு தந்தை எவனோ?
மண்ணுக்கு மூலம் எவனோ?
யாவக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தையில்லை
அல்லா பெற்ற பிள்ளை யாரும்

அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை
லாயிலாஹி இல்லல்லாஹு முஹம்மதுரூச்ல்லாஹி
லாயிலாஹி இல்லல்லாஹு முஹம்மதுரூச்ல்லாஹி

அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை
அனாதி யாருமில்லை அவனே தான் தந்தை


இந்தப் பாடலின் தொகுப்பை இங்கே கேட்கலாம்.

உலகத்தில் சமாதனாமும், மனிதமும் பெருகி
எல்லோரும் எல்லா வளமும் பெற மனமார்ந்த
ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.



Saturday, August 14, 2010

நாகபஞ்சமி ,கருட சதுர்த்தி சிறப்பு பதிவு

ஆடி அமாவாசை பண்டிகை கொண்டாட்டங்களை ஆரம்பித்துக்
கொண்டு வருகிறது. ஆடி அமாவாசை அன்று நோன்பு நோர்ப்பது
கணவருக்கு என்றால் நாக சதுர்த்தி அன்று விரதம் மக்களுக்காக.
”மக்களைப்பெற்ற மகராசிகளும் பெறப்போகும் மகராசிகளும்”
தன் பிள்ளைகளின் நல்வாழ்வு கோரி விரதம் செய்வார்கள்.
பாம்பு புற்றுக்கு பால் வார்த்து பூஜை செய்து எந்த வித
தோஷமும் இல்லாமல் வம்சம் தழைத்தோங்க பூஜை.
இன்று துள்ளரிசியும், வெல்லமும் எள்ளும் சேர்த்தரைத்த
பிரசாதம் நைவேத்யம் செய்து எறும்புகள் சாப்பிட
போட்டு விடுவோம். எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது.
பிள்ளைகள் நலனுக்காக உப்பில்லாமல் சாப்பாடு.
அடுத்த நாள் கருட பஞ்சமி. இது கிட்டத்தட்ட எங்களுக்கு
(தெலுங்கர்களுக்கு) ரக்‌ஷா பந்தன் போல.

இந்த நோன்புக்கு ஒரு கதையும் உண்டு.
ஒரு வீட்டில் 7 அண்ணன் தம்பிகள் அவர்களுக்கு
கறிவேப்பிலை கொத்துப்போல ஒரே ஒரு தங்கை.
அம்மா, அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட
தங்கையைக் கண்போல பார்த்தக்கொள்வது அண்ணன்கள் தான்.
அண்ணன்கள் காலையிலேயே வயலுக்கு சென்று விட
வீட்டு வேலைகளை முடித்துவிட்டுத் தங்கை அண்ணன்களுக்கு
கஞ்சி எடுத்துச் செல்வாள்.

அன்றும் அப்படித்தான் கருட பஞ்சமி என்றுத் தெரியாமல்
வீட்டை சுத்தம் செய்து, ஒட்டடை அடித்து துவாரங்களை
எல்லாம் அடைத்துவிட்டு கஞ்சி கலயத்தை தலையில்
சுமந்துக்கொண்டு வயலுக்கு செல்கிறாள். அப்போது
ஆகாய மார்கமாக கருடன் ஒன்று பாம்பை கவ்விக்கொண்டு
செல்கிறது. இறுக்கமான பிடி தாளாமல் பாம்பு விஷத்தைக்
கக்க அது கஞ்சி கலயத்தில் விழுகிறது. அது தெரியாமல்
அதை அவர்களுக்குகொடுத்துவிட அவர்களும் குடித்து
இறக்கிறார்கள். ஒருவர் பின் ஒருவராக 7 அண்ணன்களும்
இறந்துவிட தானும் அதைக் குடித்து இறக்க முற்படும்
பொழுது ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் வந்து
அவளைத் தடுத்து கருட பஞ்சமி விரதம் செய்வித்து
அட்சதை, புற்றுமண் ஆகியவற்றை உடன்பிறந்தவர்களின்
வலது காது, வலது புஜத்தில் வைக்கச்சொல்ல அவர்களும்
உயிர்தெழுகிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லி நாங்களும் உடன் பிறந்தவர்களுக்காக
வேண்டிக்கொண்டு 7 முடி போட்ட தோரம் அணிந்து
புற்றுமண் கொண்டு வந்து உடன் பிறந்தவர்களின்
வலது காது, புஜத்தில் வைத்து பூஜை செய்து அவர்களுக்கு
பரிசளித்து வேண்டி பூஜை செய்வது வழக்கம்.

நம்ம உடன்பிறப்புக்கள் எல்லாம் வெளி நாட்டில் வெளியூரில்
தானே! அதனால் அவர்களுக்கெல்லாம் சேர்க்கும் படி
சாமிக்கே வைத்து பூஜை செஞ்சாச்சு. அம்ருதா அண்ணனுக்கு
பூஜை செஞ்சு ட்ரெஸ் வாங்கிக்கொடுத்திட்டாங்க.






அன்புத் தம்பிகளுக்கு என்னோட அன்பளிப்பு. எல்லோரும்
சண்டை போடாம எடுத்துக்கோங்க.
ஆண்டவன் எல்லாவித சந்தோஷத்தையும் கொடுக்கட்டும்.

Thursday, July 15, 2010

நிஜமா நல்லவனை வாழ்த்துவோம் வாருங்கள்


இப்போதுதான் தம்பி நிஜமா நல்லவன் போன் செய்தார்.
பெண்குழந்தை பிறந்திருக்கிறதாம். அவருக்கும் அவரது
மனைவி வென்னிலாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மருமகன் இளஞ்சேரனுக்கும் அண்ணன் ஆனதிற்கு
வாழ்த்துக்கள்.

இறைவன் எல்லா வளத்தையும் சுகத்தையும், சந்தோஷத்தையும்
நீண்ட ஆயுளையும் குழந்தைக்கும் குடும்பத்தாருக்கும் கொடுக்க
எங்கள் ஆசிகள்.