ஆமாங்க எல்லாமும் நம்ம வாழ்க்கையில விளையாண்டிருக்குல்ல!!
ஒவ்வொரு வருஷம் நான் அசை போடும் நிகழ்வுகளில் இதுவும்
ஒண்ணு. டிசம்பர் 16 முதன் முதலில் ஹைதை வந்ததும் இந்த
நாளில்தான், குட்டி ஆஷிஷோடு ஹைதைக்கு முதன் முதலில்
வந்ததும் அந்த நாள் தான்.
13 வருடங்களுக்கு பிறகும் மனதில் அப்படியே சிம்மாசனம்
போட்டு இருக்குது அந்த நாள். காரணம்??? அதுதான் கொசுவத்தி.
அக்டோபர் 7 ஆஷிஷ் பிறந்தது. பேருக்கு 3ஆவது மாசம்
”நான் ஊருக்கு போவேன்னு: கிளம்பிட்டேன். அயித்தான்
மட்டும் தனியே இருப்பதால் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு
இருந்தாரு(கல்யாணத்துக்கு முன்னாடி ஹோட்டல்லதான் சாப்பிட்டுகிட்டு
இருந்தாலும், நாம வந்து ”நல்லதா” சமைச்சு போட்டு பழக்கப்படுத்தியாச்சுல்ல!!)
குழந்தை பிறந்து மகளை கொண்டு விடுவதுன்னா சும்மாவா!
அப்பா, அம்மா கூட வந்தாங்க. அப்பா சென்னை வரை,அம்மா ஹைதை வரை.
சனிக்கிழமை இரவு இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் புதுகையிலிருந்து
நான், அப்பா, அம்மா குட்டி ஆஷிஷ் எல்லோரும் கிளம்பினோம்.
s4 கோச் முழுவதும் புதுகை கோட்டா. எங்க ஊர்க்காரவுங்க தான்
எல்லோரும். அப்பாவைத் தெரியாதவங்க உண்டா!!
“என்ன ரமணி சார், பாப்பாவை(!!) கொண்டு விட போறீங்களா?”
“பேரனா சார்! சந்தோஷம் சார்”னு எல்லாம் அப்பா கூட பேசிக்கிட்டு
இருந்தாங்க.
இரவு பேருக்கு படுத்து, தூங்காத ஆஷிஷுடன் போராடி
எப்பவோ தூங்கிப்போயி விடிஞ்சா சென்னையை சேர்ந்திருப்போம்னு
கண்ணத் தொறந்தா வண்டி நிக்குது சிதம்பரத்தில்!!!
”இதுக்கு முன்னாடி கிளம்பின கம்பன் எக்ஸ்ப்ரஸ் கூட அப்படியே
நிக்குது சார், மத்த ட்ரையினுங்களும் கூட நிக்குது”ன்னு அப்பாவோட
ப்ரெண்ட் வந்து சொன்னாங்க.
சரி நம்ம இந்திய ரயில் என்னைக்கு சீக்கிரமா போயிருக்குன்னு
இருந்தோம். வண்டி நகர்ற பாடே தெரியலை!!!
காலையில் சென்னையை சேர்ந்திடுவோம் என்பதால் கையில
சாப்பாடு ஏதும் எடுத்துக்கலை. வயிறு பசி. எங்க வண்டி
சிதம்பரம் ஷ்டேஷன் கிட்ட நின்னதால் தம் டீயாவது குடிக்க
கிடைச்சுது. கைவசம் பிஸ்கட் எப்பவும் இருக்கும் அதானால
அன்னைக்கு காலை உணவு டீயும், பிஸ்கட்டும்தான்னு
நினைச்சோம். மணி ஆவுது வண்டி கிளம்பற வழியைக்
காணோம். அப்புறமாத்தான் மேட்டர் தெரிஞ்சது.
பெஞ்ச மழையில ட்ராக் தண்ணியில மூழ்கிருக்கு.
வண்டி போவது கஷ்டம்னு!!! கைக்குழந்தையுடன்
ட்ரையினில் அம்மாடி அந்தக் கஷ்டம்!!!

ஞாயிறு மாலை 7 மணியாகியும் வண்டி சிதம்பரத்தை
விட்ட அகலல. அப்பா திங்கள்கிழமை காலை அப்பா
ஆபிஸ் போயே ஆகணும் அதனால,” அம்மாவும் நீயும்
சென்னை போயிடுங்கன்னு” அப்பா பாதிவழியிலேயே
புதுகைக்கு திரும்ப முயற்சி செய்ய கிளம்பிட்டார்.
வண்டில இருக்கறவங்க அக்கம் பக்கத்து ஊர்களுக்குள்ளாற போய் சாப்பாடு
ஏதும் கிடைக்குதான்னு பாக்கப்போனாங்க! கிடைச்சதை
கொண்டு வந்து எல்லோரும் பகுந்து சாப்பிட்டோம்.
அதுலயும் கைக்குழந்தைக்காரின்னு என் வயிறு நிறைய்யற
மாதிரி எல்லோரும் பாத்துக்கிட்டாங்க.அம்மாவுக்கு அவங்களே
வாங்கிக்குடுத்தாங்க. (இப்பல்லாம் புதுகைக்குன்னு ஒரே
கோச் போடுறதில்லை)
மெல்ல மெல்ல நகர்ந்த ட்ரையின் கடலூர் வந்துச்சு.
அங்க ஒரு 3 மணிநேரம் வாக்குல இருந்து திங்கள்கிழமை
அதிகாலை 6 மணிக்கு எக்மோர் ஷ்டேஷன் வந்து
சேர்ந்தோம். நாத்தனார் வீடு ரயில்வே குவார்டர்ஸ்லதான்.
நேரே அங்கேதான் போனோம்.
ஸ்ரீராமின் அண்ணா வியாசர்பாடியில இருந்தார். மாமியாரும்
அங்கேதான் இருந்தாங்க. அவங்க பேரனை பார்க்கணும்னு
ஆசைப்பட்டதா சொன்னாங்க.(உடல்நிலை சரியில்லாதவங்க)
எக்மோர்லேர்ந்து வியாசர்பாடி போகும் பாதை மழையில
பாதிப்பு, பிரிட்ஜ்ல தண்ணி. மணலி எல்லாம் சுத்தி
வியாசர்பாடிக்கு ஆட்டோல போய் பேரனை காட்டிட்டு
வந்து அன்றைக்கு சாயந்திரம் ட்ரையினில் ஹைதைக்கு
புறப்பட்டு 16ஆம் தேதி செகந்திராபாத்தில் காத்திருந்த
அயித்தானைப் பார்த்து அழணும்போல ஆயிடுச்சு.
நாங்க கிளம்பும்போது இல்லாத மழையும், புயலும்
சடனா வந்து 14மணிநேரத்தில் சென்னையில் சேரவேண்டிய
எங்களை 48 மணிநேரத்துல சேர்த்துச்சு. புதுகை-சென்னை
48 மணிநேரப்பயணம் கைக்குழந்தையுடன் இருந்தாலும்,
நடுவில் அப்பா ஊருக்குத் திரும்பும் அவசர சூழல் இருந்தாலும்
அதிகம் கஷ்டம் தராமல் இருந்தது அன்பு மிகு புதுகைவாழ்
மக்களால்தான்!!
எங்க ஊர் மக்களுக்கு என் நன்றி.
