Showing posts with label புலம்பல்கள். Show all posts
Showing posts with label புலம்பல்கள். Show all posts

Thursday, June 13, 2013

தீயாய் வேலை செய்த தென்றல்!!!!

என்ன நட்புக்களே எல்லோரும் சுகமா?? வெயில் ஓரளவுக்கு குறைஞ்சிருக்கா?? எங்க ஊர்ல இந்த வாட்டி கரெக்டா வருண பகவான் அட்டெண்டென்ஸ் போட்டதோட மட்டுமில்லா கட்டடிக்காம தினமும் ஒழுங்கா வந்துக்கிட்டு இருக்காரு. அதனால கூல் கூல் கிளைமேட்டில் இருக்கோம் என்பதை வெயிலில் வாடி வதங்குபவர்கள் காதில் புகை வருவதற்காக சொல்லிக்கொள்கிறேன்!!!


அதென்ன அப்படி ஒரு தலைப்புன்னு கேக்கறீங்களா??!!! கன்னாபின்னான்னு வேலைப்பளு ஏற்பட்டு போச்சு. நெஜமாவே தீயாய் வேலை செஞ்சேன். இந்த லீவுலயாவது ரெஸ்ட் எடுக்கணும்னு நினைச்சது போய் எப்பத்தையும் விடவும் ஃபுல் ஸ்விங்கில் வேலை!!!

முதல்ல ஆஷிஷிற்கு அம்மை வார்த்தது. அக்னி நட்சத்திர வெயிலோடு அம்மையும் சேர்ந்து கொள்ள பிள்ளை தவிச்சுத்தான் போச்சு.  சில நாள் ராத்திரியில் பிள்ளைக்கு வேப்பிலையால் விசிறிக்கிட்டு இருக்க, பாவம் அம்மான்னு என்னை எழுப்பாம பிள்ளை முழிச்சிக்கிட்டு உக்காந்திருந்தது.
ஆயி மகமாயி மனசு குளிர்ந்து  நல்லா இறங்கினதும் ஏழாம் நாள் முதல் தண்ணி விட்டேன்.

இரண்டாவது தண்ணி விட வேண்டிய அன்னைக்கு காலேயிலிருந்து அயித்தான் எழும்பவே முடியாம  கஷ்டப்பட்டாங்க.  வயிற்றைப்பு புரட்டிகிட்டு வாந்தியா எடுக்கறாரு!!!  7 மணியிலேர்ந்து 7.45 வரை இந்த கஷ்டம். மருத்துவ நண்பருக்கு போன் போட்டு நிலமையைச் சொல்ல இது  BPPV அப்படின்னு சொல்லி ஒரு மருந்தை எஸ் எம் எஸ் அனுப்பி வாங்கி கொடுத்து கொஞ்சம் சரியானதும் ஆஸ்பத்திரிக்கு கூட்டியாரச் சொன்னாரு.

எதிர் வீட்டில் இருப்பவங்க ஓடிப்போய் மருந்து வாங்கியாந்து கொடுத்தாப்ல.
அதுக்கு முன்னமே கொஞ்சம் எந்திரிச்சி உட்கார முடிஞ்சது அயித்தானால.
மணி 8.30 ஆகியும் அவர் எதுவுமே சாப்பிடலை!!! ரெண்டு ப்ரட் மட்டும் சாப்பிட்டு மாத்திரையை போட்டுக்கிட்டார். வாந்தி வருவது நின்னு கொஞ்சம் ஓரளவுக்கு  நார்மலா இருந்தாரு. அவசர அவசரமா சமையலை செஞ்சிட்டு, அயித்தானோட ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அண்ணனுக்குத் துணையா தங்கச்சி இருந்து பாத்துக்கிட்டாப்ல.

மருத்துவ நண்பர் இன்னொரு டாக்டருக்கு எழுதி கொடுத்து போய் பார்க்க சொன்னாப்ல. பிபி லோவா இருந்தது மட்டுமில்லாம நண்பர் சொன்ன அதே

BPPV தான் இந்த தலை சுத்தலுக்கு காரணம்னு சொன்னாரு. அப்படின்னா என்னான்னு கேட்க, நம்ம காதுகள் கேட்பதற்கு மட்டுமில்ல, அதுல ஒரு லிக்விட் இருக்கும். அதுதான் நம்மை பேலன்ஸிங்கா வெச்சுக்க உதவும். அந்த
லிக்விட் கொஞ்சம் மேலேழும்பி வந்தா இந்த மாதிரி இருக்கும்.  இப்போதைக்கு பயப்படும் படி ஏதும் இல்லைன்னு சொன்னாப்ல. விக்கிபீடியா அதைப்பத்தி என்ன சொல்லுதுன்னு இங்க போய் பாருங்க தெரியும்!!


15 நாளா அயித்தான் கன்னாபின்னான்னு டூர் போனது, ஓவர் ஸ்ட்ரெஸ் உடம்புக்கு ரெஸ்ட்டே இல்லை. ஃப்ளைட், கார், ரயில்னு பயணம்.... பயணம்தான்.  ஹலோ மிஸ்டர் ரெஸ்ட் எடுங்கன்னு உடம்பு கொடுத்த வார்னிங் அதுன்னு சொல்லிட்டு மாத்திரையோட டாக்டர் பிரிஸ்கிரிப்ஷனில் 3 நாள் ரெஸ்ட்.... நோ ட்ரைவிங் அப்படின்னு எழுதி கொடுத்தாரு.


வீட்டுல பாஸ் (என்னைத்தான்) ப்ரஷரா!!! ஆபிஸ் பாஸ் ப்ரஷரான்னு டாக்டர் ஜோக் அடிக்க, சார்!! நான் பாஸ் எல்லாம் இல்ல. அயித்தானுக்கு நான் தான் அந்தரங்க காரியதரிசி, ரெப்ரஸ்ண்டேடிவ். இந்த வேலையைத்தான் ஒழுங்கா இத்தனை வருஷமா செஞ்சுகிட்டு வர்றேன்னு சொல்ல, மாசத்துக்கு எத்தனை நாள் டூர் போவிங்கன்னு அயித்தானைக்கேட்க, வீட்டுல இருக்கறது எத்தனை நாள்னு கேட்டா கரெக்டா சொல்ல முடியும் சார்னு சொல்ல, டாக்டர் என்னைப் பார்த்து நீங்க செக்கரட்டரின்னு சொன்னது கரெக்ட்தான்னு சொல்லி சிரிச்சாரு.

 நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும்னு கண்டிப்பா சொல்லி அனுப்பினாரு. அந்த டாக்டருக்கு ட்ரீட் தரணும்னு நினைச்சுக்கிட்டேன். இல்லாட்டி அயித்தானாவது சேர்ந்தாப்ல 3 நாள் லீவு போட்டு வீட்டுல இருக்கறதாவது.
இதுல இன்னொரு மேட்டர் என்னன்னா வூட்டுல இருந்தாலும்  போன் அடிக்காம இருந்தது பெரிய விஷயம்.  இந்த களேபரம் முடிஞ்சு அயித்தான் திங்கள்கிழமை ஆபீஸ் போக ஆரம்பிச்சாரு. வீட்டுக்கு கிட்டத்துல தான் ஆபிஸ் ஆனாலும் மதிய சாப்பாட்டுக்கு ஒருவாட்டி வண்டியில வந்து போறது வேணாம்னு சாப்பாடு கட்டி கொடுக்க ஆரம்பிச்சேன்.

அடுத்த நாள் சாயந்திரம் அம்ருதம்மாவிற்கு அம்மை போட்டிருந்தது தெரிஞ்சது!!!  ம்ம்ம் முடியல!! ம்ம்ம் முடியலன்னு கத்தணும் போல இருந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது. 3 நாள் லீவு போட்டிருந்ததால அயித்தானாலும் சீக்கிரம் வீட்டுக்கு வந்து ஹெல்ப் பண்ண முடியலை. ஆஷிஷும் அப்பதான் தேறிக்கிட்டு இருந்ததால .......... எப்படியோ கஷ்டப்பட்டு
வேலைகளை தீயாய் பாத்துக்கிட்டு இருந்தேன். இப்போ அம்ருதம்மாவுக்கு தண்ணி ஊத்தி ரெஸ்ட் எடுத்து ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சாச்சு.

ஆஷிஷ் அண்ணாவுக்கும் காலேஜ் திறந்திட்டாங்க.

அதனால இனிமேல் ஆண்டவன் அருளோட தாய்லாந்து பதிவுகள் தொடரும்.
சைக்காலஜி பதிவுகளையும் சீக்கிரமே ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறது.
எல்லாம் ஆண்டவன் சித்தம்.



Monday, January 21, 2013

மெட்ரோ......

மெட்ரோ ரெயில் பத்தின பதிவோன்னு நினைச்சீங்களா!!! இல்லீங்க. வால்மார்ட் வந்திருச்சு. சென்னையில் வேற பேர்ல இயங்கறாங்க. ஆள் பிடிக்கறா மாதிரி வளைச்சு வளைச்சு கார்ட் கொடுக்கறாங்கன்னு நிறைய்ய பத்திரிகைகளில் எழுதனது படிச்சப்பவே இந்தப் பதிவு எழுதணும்னு நினைச்சேன். ஆனா நேரம் இப்பத்தான் கூடி வந்தது. (எழுதத்தான் :)

 இது இங்கே ஹைதையில் இருக்கும்  METRO CASH & CARRY பத்திய பதிவு.
இதுக்கு தலைமையகம் பெங்களுரூ. இந்தியாவில் வேற சில இடங்களிலும் கடை இருக்கு. நான் இங்கே ஹைதைக்கு வந்து 2 வருஷம் கழிச்சு வேற அப்பார்ட்மெண்ட் போனோம். அங்கே ஒரு தோழி அடிக்கடி நான் மெட்ரோ போயிட்டு வந்தேன். அங்கதான் மாச சாமான்லாம் வாங்குவேன்னு சொல்வாங்க.

குக்கட்பள்ளி, உப்பல் ரெண்டு இடத்துலயும் இந்தக் கடை இருக்கு. இது ஒரு ஹோல்சேல் மார்க்கெட். ஆனா பிசினஸ் செய்யறவங்க மட்டும்தான் மெம்பராக முடியும். அந்த தோழியோட அப்பா ஏதோ பிசினஸ் செய்யறவரு அதை வெச்சு ஒரு கார்ட் வாங்கி மகளுக்கு கொடுத்திருக்காறாம்.  சரி மேட்டருக்கு வருவோம்.  உங்களையும் மெட்ரோவுக்கு அழைச்சுக்கிட்டு போகலாம், விலை கம்மி ஆனா எல்லாம் பல்காதான் வாங்கணும். ஒரு சோப் , ஒரு பேஸ்ட் வாங்க முடியாதுன்னு சொன்னாங்க. நான் வரலைன்னு சொல்லிட்டேன்.

10 சோப் இருக்கற பேக் வாங்கினா சோப்  கறைய குறைஞ்சது 3 மாசம் ஆகும். நாம சீசனுக்கு தகுந்தா மாதிரி சோப் உபயோகிப்போம். இந்த மாதிரி எல்லாம் பல்கா வாங்கிகிட்டு வந்தா கட்டுப்படியாவாதுன்னு பேசாம இருந்தேன். ஒரு நாள்  அயித்தான் இந்த மெட்ரோ கடைக்கு போயிட்டு அவுக CEOவா இருந்தாலும் ஹெட் இங்க இவுகதான்னு அவுகளுக்கு ஒரு மெட்ரோ கார்ட் வாங்கியாந்தாங்க. (ஓரு கம்பெனிக்கு ரெண்டு கார்ட்தான் அனுமதி)

ஒரு கார்டுக்கு ரெண்டு பெரியவங்க மட்டும்தான் அனுமதி. சின்ன பசங்களை கூட்டிக்கிட்டு போக முடியாது. அதனால நானும் அயித்தானும் மட்டும் எப்படித்தான் இருக்குன்னு பாக்க போனோம்.

பெரிய்ய்ய்ய்ய இடத்தை வளைச்சு கட்டியிருக்காங்க. பார்க்கிங் வசதி சூப்பர்.
உள்ளே போறதுக்கு முன்னாடி அந்தக்கார்டை காட்டணும். அதை வாங்கி கம்ப்யூட்டருக்கு காட்டிட்டு நம்மளை உள்ளே அனுப்புவாங்க. அம்மாம் பெரிய்ய ட்ராலிகளை அன்னைக்குத்தான் நான் பாத்தேன்!!!! எல்லாம் ஹோல்சேல் விலைகள். எண்ணெய், நெய், எல்லாம் மார்க்கெட் விலையைவிட கணிசமான குறைவு. கடைகளூக்கு டோர் டெலிவரி உண்டுன்னு  போட்டிருந்தாங்க.  1/2 கிலோ பேக்கிங்கே கிடையாது. எல்லாம் ஒரு கிலோ தான். கத்திரிக்காய் வாங்கினா 1 கிலோ தான் வாங்கணும்.


எண்ணெய், நெய்யெலாம் பரவாயில்லை ஆனா துவரம்பருப்பு, பாசிப்பருப்பு என எல்லா வகையும் ஹோல்சேல் விலையில் வாங்கலாம். ஆனா குறைஞ்ச பட்சம் ஒரு கிலோ தான் தருவாங்க. அங்கேயே காய்கறிகள், எலக்ட்ரானிக் ஐட்டங்கள், ப்ளாஸ்டிக், மளிகை, அரிசி,  எவர்சில்வர் பாத்திரங்கள் எல்லாம் இருக்கு. மார்க்கெட்ல என்ன விலை? அதுவே மெட்ரோவில் என்ன விலைன்னு விவரமா எழுதியிருந்தாங்க.


முன்ன மாதிரி இல்லாம பிஸ்கட், சோப், ஷாம்பு எல்லாம் பல்கா வாங்கத்தேவையில்லாம 1 யூனிட் கூட வாங்கிக்கலாம்னு இருந்துச்சு. அந்த மாசம் அங்கே பர்ச்சேஸ் செஞ்சோம். வெளியில வாங்கறதுக்கும் மெட்ரோவுல வாங்கறதுக்கும் நல்ல வித்தியாசம். அதே தரமான பொருள்  ஹோல்சேல் விலைக்கு கிடைக்கும். ஆனா எல்லாம் யூனிட்ல வாங்க முடியலை. சிலது 6 அல்லது 10 வாங்கற மாதிரி தான் இருக்கு.

 
அடுத்த மாசம் அங்கே போகலாமான்னு பாத்தப்போ, அயித்தானுக்கு வேலை வந்திருச்சு. அவரு டூர் போயிட்டு வர்ற வரைக்கும் சாமான் வாங்காம முடியாது. சரி நாம மெட்ரோ  போகலாம்னா, ஆட்டோல போயி ஆட்டோல வந்தா பழுத்திடும். எங்க வீட்டுலேர்ந்து 10 கிமீ தூரத்துக்கும் மேல இருக்கும் உப்பல். எப்பவும் வாங்கற மளிகைக்கடையிலேயே வாங்கினோம். அதுவும் ஹோல்சேல் கடைதான். ஆனா மெட்ரோ அளவுக்கு விலை வித்தியாசம் இருக்காது. சூப்பர் மார்க்கெட்டுக்கும், மெட்ரோவுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் இருக்கும்.

அப்பதான் அந்த மளிகைக்கடை அண்ணாச்சிக்கிட்ட கேட்டேன், நீங்க மெட்ரோவுலேர்ந்து வாங்கியாந்துதான் விக்கறீங்களான்னு?” அதுக்கு அவர் சொன்னார்,” மெட்ரோவா!!! அங்க வாங்கினா உங்களுக்கு லாபமா இருக்கும். கடை முதலாளிகளுக்கு இல்லை!! நாங்க டைரக்டா கம்பெனிகள் கிட்டேயிருந்து வாங்குவோம்னு சொன்னாரு. மெட்ரோவுல வாங்குறதே நமக்கு விலை ரொம்ப குறைச்சலா இருக்குன்னா, இவரு கம்பெனிகிட்டேயிருந்து வாங்கினார்னா இன்னும் எவ்வளவு லாபம் இருக்கும்னு யோசிச்சேன்.

””டேடி எனக்கொரு டவுட் ரேஞ்சுல!”” நான் புரிஞ்சுகிட்டது இதுதான். வியாபரிகளுக்கு லாபம் இல்லாம வியாபரம் செய்ய மாட்டாங்கதான்னாலும்,  400 கிமி கார்ன்ஃப்ளக்ஸ் டப்பாவிலையில் 7.50 குறைச்சு  மெட்ரோவுல விக்கறதுலயே அவங்களுக்கு லாபம் இருக்குதுன்னா, நம்ம மளிகைக்கடை அண்ணாச்சிகளுக்கும் எம்புட்டு லாபம் இருக்கும்.  இப்ப வால்மார்ட் வந்ததும் எல்லோரும் ஏன் கடுப்பாறாங்கன்னு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு.

ப்யூட்டி பார்லர் வெச்சிருந்தா கூட கூப்பிட்டு அட்டை கொடுக்கறாங்க. அவங்க அங்க போய் வாங்க ஆரம்பிச்சிட்டா மளிகை கடைக்கு யாரும் வரமாட்டாங்க,
அப்படின்னு சொல்லி கட்டுரை எழுதறாங்க. அவங்க வயத்துல அடிக்குது வால்மார்ட்னு சொல்றாங்க. நான் வால்மார்ட் மாதிரி கம்பெனிகளுக்கு சப்போர்ட் செஞ்சு பேசலை. ஆனா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

வாடிக்கையாளர்கள் நலன் கருதி விலையில் தள்ளுபடி செஞ்சு கொடுக்கணுமா இல்லையா? அப்பத்தானே வாடிக்கையாளர்கள் விட்டுப்போகாம இருப்பாங்க. ஒரு சாமான் வாங்கும்போது 4 கடையில் விசாரிச்சு எங்கே விலை கம்மியா இருக்கோ அங்கே வாங்குவதுதானே இயல்பு.!!! இதை நான் சொன்னா சிலருக்கு கோவம் வரலாம்.


உதாரணம் சொல்றேன் பாருங்க. முன்னாடில்லாம் நாம மருந்துக்கடையில மருந்து வாங்கினா டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாது.  டோர்டெலிவரில்லாம் கிடையாது.   இந்த மெட்ப்ளஸ், ஹீத்ரூ மாதிரி பார்மஸிகளில்  உறுப்பினருக்கு 10 சதவிகிதம் விலையில் தள்ளுபடி உண்டு.  அதை நீங்க விலையில் கழிச்சுக்கலாம், இல்லாட்டி உங்க அக்கவுண்டில் பாயிண்டா வரவு வைக்கப்பட்டு மொத்தமா சேர்ந்ததும் அதுக்கு தக்க கிஃப்ட் ஏதாவது வாங்கிக்கலாம்னு இருக்கு. இந்த மாதிரி மருந்துக்கடைகள் டிஸ்கவுண்ட்டோட, டோர் டெலிவரியும் செய்வாங்க. அவங்க கிட்ட மருந்து இல்லைன்னா, அவங்க கிளைகள்ல எங்க இருந்தாலும் வாங்கியாந்து நமக்கு கொடுத்திருவாங்க.

இதுக்கப்புறம் இங்கே ஹைதையில் மற்ற மருந்துக்கடைகளிலும் 10% டிஸ்கவுண்ட் + டோர் டெலிவரி தர ஆரம்பிச்சிருக்காங்க. போட்டி போட்டு சாதாரண கடைகளும் தன் விற்பனைக்காக மாற ஆரம்பிச்சிருக்காங்க. எங்க ஏரியாவுல சூப்பர் மார்க்கெட்களும் இருக்கு. மளிகை கடைகளும் இருக்கு. சூப்பர் மார்க்கெட்ல வாங்கறதை விட கொஞ்சம் குறைஞ்ச விலையில் மளிகை கடையில் வாங்கிடலாம். டோர் டெலிவரியும் சில மளிகைக்கடை காரங்க இலவசமாவே தர்றாங்க. எந்த மளிகை கடைக்கும் மூடு விழா நடக்கலை.

இது மாதிரி மத்த இடங்களிலேயும் செஞ்சா நம்மளோட  பாசமா பாத்து, பேசுற அண்ணாச்சியை விட்டு (அப்படித்தான் கட்டுரைகளில் எழுதியிருக்காங்க) ஏன் மத்த இடத்துல ஏன் போய் வாங்கப்போறாங்க. இப்ப இருக்கற விலைவாசி ஏத்தத்துல கால் ரூவாயாவது மிச்சம் பிடிக்க முடியாதான்னு தான் மக்கள் யோசிப்பாங்க.  வால்மார்ட், மெட்ரோ மாதிரியான கடைகள் ஊருக்கு வெளியிலதான் கடை போட முடியும். ஏன்னா அவ்வள்வு பெரிய இடம் வேண்டும். ஒவ்வொரு வாட்டியும் அங்கே போகணும்னா ஆவுற காரியம் இல்லை. அதனால மளிகைக்கடையில் சாமான் வாங்கினாலும் காசு மிச்சம் பிடிக்க முடிஞ்சா, “சுண்டக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்னு” சொல்வாங்களே அதுமாதிரி அம்மாம் தூரம் போய் ஏன் சாமான் வாங்கப்போறோம் சொல்லுங்க?????!!!!



என் மனசுல பட்டதை, என் அனுபவத்தோட சொல்றேன். அம்புட்டுதான். உங்களுக்கு மாத்து கருத்து இருந்தா கண்டிப்பா சொல்லுங்க. தெரிஞ்சிக்கலாம். சண்டைல்லாம் வேணாம்!!

 

Tuesday, January 08, 2013

ஹலோ ஹலோ சுகமா???

நட்புக்கள் எல்லோருக்கும் மிகமிக தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள். மனசுல வாழ்த்து சொல்லிக்கிட்டு இருந்தேன். பதிவா போட முடியவில்லை.

2012 முடிஞ்சா போதும்னு நினைக்கற அளவுக்கு 75% மோசமான ஒரு ஆண்டா இருந்தது. உடல் நிலை சரியில்லை, மன உளைச்சல்கள்னு ஒரு மார்கமா இருந்துச்சு. சாப்பிட கூட முடியாம இருந்து மெல்ல சாப்பிடும் நிலைக்கு வந்திருக்கேனேனு சந்தோஷத்துல தண்ணி ஊத்த திரும்ப வலி.

 இந்த வாட்டி கால் வலி. நிக்க கூட முடியாம உளைச்சலா வலி. மெல்ல மெல்ல கைக்கும் வலி பரவ ஆரம்பிக்க டாக்டர் கிட்ட போனா, அதே பழைய பல்லவி. (பாவம் ஆஷிஷ் அம்ருதாதான் வழக்கம் போல உதவினாங்க. ராத்திரி படுக்கும் முன் ஆஷிஷ் வெந்நீர் டப்புல கொண்டாந்து கொடுத்து, உப்பு போட்டு காலை வெச்சுக்க சொல்லிட்டு போய் பேக்கிங் (அடுத்தநாளைக்கு) செஞ்சுகிட்டு வந்து தண்ணிய எடுத்து கொட்டுவாப்ல. அம்ருதம்மா பக்கத்துல ரெடியா தைலத்தை வெச்சுகிட்டு உக்காந்து தேச்சு விடுவாங்க. அப்பதான் காலேல எந்திரிச்சு அவங்களை ஸ்கூலுக்கு அனுப்ப முடியும். அயித்தான் ஊர்ல இருந்தா அவங்க கூட மாட உதவி செய்வாங்க. இந்த 3 சப்போர்டிங் சிஸ்டம் வீட்டுல இருக்கும்போது பிரச்சனை இல்லை. :))


 விட்டமின் டி குறைவு. திரும்ப கால்சியம் மருந்து சாப்பிட ஆரம்பிச்சு இப்ப கொஞ்சமா பரவாயில்லை. வெளிய வாசல்னு நடமாடுறேன். :)) கைக்கு அதிகமா வேலை கொடுக்காம இருக்கத்தான் முடியலை. வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தமனியமாவும், போன மனியமாவும் இருக்காக. வர்றவங்களை வேணாம்னு சொல்லவா முடியும். இப்ப ஆஷிஷ் அம்ருதாவுக்கு பரிட்சை நேரம். இனி நான் 100% அவங்களுக்குத்தான் நேரம் ஒதுக்க முடியும். ஆனா அதுக்கு முன்னால எனக்கு ஓய்வு தேவைன்னு அயித்தான் முடிவு செஞ்சு எங்கயாவது ட்ரிப் போயிட்டு வரலாம்னு சொல்ல மக்கள்ஸ் ஒத்து ஊத (ட்ரிப் போய் அம்மாவுக்கு ரெஸ்ட் கொடுக்காட்டி போனா ட்ரிப்ஸ் ஏத்தற நிலமை வந்திடும்னு டயலாக் வேற.

இந்த கலேபரத்துல என்னுடைய சேம்சங்க் கேலக்ஸி மொபைல் தொலைஞ்சு போச்சு. அதுல இருந்த 300 போன் நம்பர்களும் அவுட். எப்படின்னு கேக்கறீங்களா. வூட்டலேயேதான் இருந்துச்சு. ஒரு நாள் வீட்டுக்கு உறவு, அவங்களோட உறவுகள்னு ஒரு 40 பேர் வந்திருந்தாங்க. அப்ப யாரோ அபேஸ் செஞ்சிட்டாங்க போல. :(( (இதுனால நட்புக்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்க மொபைல் நம்பர்லாம் என் கிட்ட இல்லை. அதனால ஒரு மெயில் அடிச்சு உங்க நம்பரை அனுப்பி வைக்கணும்னு கேட்டுக்கறேன்)



எங்க போகலாம்னு ரொம்பல்லாம் டென்ஷன் ஆகலை. இந்த வாட்டி தமிழ்நாட்டு பக்கம் ட்ரிப் இல்லைன்னு முடிவு முன்னாடியே செஞ்சிருந்ததால, வடக்கே தென்றலை வீசுவோம்னு முடிவு செஞ்சோம். ரொம்ப தூர பயணமாவும் இருக்கக்கூடாது என்பதால லோனாவாலா போகலாம்னு முடிவு செஞ்சோம். அயித்தானின் நண்பர் ஹோட்டல் ஃபரியாஸில் வேலை பார்க்கிறார். அவங்க கிட்ட  சொல்லி ரூம் புக்கிங் செஞ்சாரு. கிறிஸ்துமஸுக்கு முன்னாடி வர்ற  ஞாயிறு வந்து சேர்றமாதிரி டிக்கெட் புக் செஞ்சுக்க சொன்னாங்க. அதுக்கப்புறம் ஏதோ திருமணத்திற்காக மொத்த ஹோட்டலும்
புக் செஞ்சிருக்காங்களாம். டிக்கெட் வெயிட் லிஸ்டட் தான் கிடைச்சது. ஆனாலும் பரவாயில்லை அயித்தானுக்கு தெரிஞ்சவங்க மூலமா ஏற்பாடு
செய்யலாம்னு  முடிவு செஞ்சோம்.

காலைல, மதியம் சாயந்திரம், ராத்திரின்னு டிக்கெட் ஸ்டேட்ஸ் பார்த்துக்கிட்டு இருந்தோம். மெல்ல மெல்ல குறைஞ்சுகிட்டே வந்துச்சு. ஹை ஜாலின்னு செம சந்தோஷம். சனிக்கிழமை நைட் கிளம்பணும். பொட்டிகட்டி ரெடியானோம். ஆஹா  3 நாளைக்கு கிச்சனுக்கு மூடு விழான்னு நானும் செம ஜாலியா இருந்தேன்.

இரவு சாப்பாட்டுக்கு உப்புமா கொழுக்கட்டை + தேங்காய் சட்னி,  அடுத்தநாள்
காலை உணவுக்கு மெத்து மெத்துன்னு இட்லி அதை அப்படியே மிளகாய்ப்பொடியில் புரட்டி எடுத்து டப்பால போட்டு வெச்சேன்.  வேலைக்காரமமவை வரச்சொல்லி பாத்திரங்களை கழுவி எடுத்து வெச்சு 3நாளைக்கு லீவு வரவேணாம்னு சொல்லி அனுப்பினேன். பால், பேப்பர்காரங்களுக்கும் ஞாபகமா சொல்லிட்டு இருந்த 1/2 லிட்டர் பாலை எதிர் வீட்டுல இருக்கற நம்ம உறவுக்கு கொடுத்திட்டு  ரெடியாகி உக்காந்திருந்தோம்.

அயித்தானோட நண்பர்  டிக்கெட் கன்ஃபர்ம் செய்ய உதவி செய்பவர் ஃபோன்
வந்துச்சு. நான் ட்ரை செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னார். காச்சி குடா
ஷ்டேஷன் போகணும். இங்கேயிருந்து எப்படியும்  முக்கால் மணி நேரம் ஆகும். டேக்ஸி வந்திருச்சு. 7 மணிக்கு கிளம்பணும்.............

தொடரும்!!!
 
 

Monday, March 08, 2010

மகளீர் தின சிறப்பு பதிவு போடவில்லை.

மகளீர் தின சிறப்பு பதிவு போடவேண்டும் என நினைத்தேன்.
ஆனால் மனமே இல்லை. ஒரு நாள் மட்டும் மகளீர் தினம்
அது இது என்று சொல்லி நம்மை நாமே தேத்திக்கொள்கிறோமே
தவிர நிஜத்தில் நடப்பது என்ன? எத்தனையோ முன்னேற்றங்கள்
இன்றைய பெண்கள் வாழ்வில். மறுக்க வாய்ப்பில்லை. அதே
சமயம் சமூகத்தில் பெண் இப்போதும் போகப் பொருளாகத்தான்
பார்க்கப்படுகிறாள்.

ஒரு நாள் இரவு 9 மணி வாக்கில் நானும் அயித்தானும்
கடைக்குச் சென்றோம். அவர் ஒரு கடையில் வாங்கிக்
கொண்டு இருக்க 2 நிமிட தூரத்தில் இருக்கும் ஸ்வீட்
ஷாப்பில் தயிர் வாங்கப்போனேன். கொஞ்சம் இருட்டுதான்.
வேகமாக நடந்த என்னை எதிர் நோக்கி வந்த ஆண்
சொன்ன வார்த்தைகள் கை கால்கள் வெல வெலத்து
போய்விட்டன. தயிரை வாங்கி வந்து அயித்தானின்
கைபிடித்தபடிதான் வீடு வந்து சேர்ந்தேன்.நடந்ததை
அவரிடமும் சொன்னேன்.


திருமணமான, இரண்டுகுழந்தைக்கு தாயான எனக்கே
இந்த நிலை என்றாள் நாளை என் பெண் எப்படி?
தனியாக வளைய வருவாள். சமூகம் பாதுகாப்பாக
இல்லை.

என்னை 6 வயதில் அப்பா தனியாக கடைக்கு
அனுப்பி பழக்க படுத்தினார். இன்று என் மகளை
தனியாக அனுப்பி விட்டு நெஞ்சு அடித்துக் கொள்கிறது.
எத்தனை கதைகள் படிக்கிறோம்.

பெண் போதைப்பொருள் என்னும் எண்ணத்தை
ஆணின் மனத்திலிருந்து எடுக்காவிட்டால் எந்த
முன்னேற்றமும் வந்துவிடாது. 33% சதவிகிதம்
கொடுத்தால் மட்டும் முன்னேற்றம் வந்துவிடுமா?
அந்த எம் எல் ஏ, எம்பிக்கள் வேண்டுமானால்
சொத்து சேர்க்கலாம். வேறெதுவும் நல்லவிதமாக
நடக்கும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை.


காப்பி, சோப், இப்படி பல விளம்பரங்களுக்கு
கவர்ச்சியான உடையணிந்த படி வரும் பெண்களை
என்ன செய்தாலும் தகும். அப்படி உடை அணிய
மாட்டேன் என்று சொல்லாமல் இவர்கள் அணியும்
அரைகுறை ஆடைகள் மேலும் பெண்கள் மீது
தவறான எண்ணத்தையே தருகிறது. இவற்றுக்கெல்லாம்
ஒரு அமைப்பு இருந்து அப்படிபட்ட விளம்பரம்
எடுக்கப்படாமல் தடுத்தால் தான் உண்டு.

விஜய் மல்லய்யாவின் கிங்ஃபிஷர் காலண்டர்கள்
உலகப்ரசித்தம். அதுவும் அதில் எல்லாம் டூ பீஸ்
பெண்கள்தான். சென்ற வருட ஆள்பிடிப்புக்கு
நடுவர்களில் ஒருவர் நம்ம மாதவன். ஆளை செலக்ட் செய்வதை
டீவியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல்
பார்க்கும் படி சொல்லி கேட்டுக்கொண்டு போட்டார்கள்.
வந்த க்ளிப்பிங்க்ஸையே பார்க்க முடியவில்லை.

தன் உடலைக்காட்டிக்கொண்டு அந்தப் பெண்கள்
காசு சம்பாதிககாவிட்டால்தான் என்ன?

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை
குளியல் அறையில் நெறிக்க போக காப்பாற்ற
வந்த அவளின் தந்தையையும் கழுத்து அறுபட்டு
இறந்தார் என்பது செய்தி.அநாதையாய் பதின்மத்தில்
இருக்கும் அந்தக் குழந்தை பாவம். இன்றும் இத்தகைய
செய்திகளுக்கு ஒன்றும் குறைவில்லை.

ஆசிட் ஊத்தும் கயவர்களுக்கு 10 ஆண்டு
கடுங்காவல் தண்டனைக்கு இங்கே அமைச்சர்
சபீதா ரெட்டி சொல்லியிருக்கிறார். 10 ஆண்டு
கொடுக்காமல் ”ஷூட் அட் சைட்” சட்டம்
போடலாம். அப்பத்தான் அடுத்த ஆளுக்கு
அந்த எண்ணம் வராது.


மீரா குமார் பேச்சாளர், பிரதீமா பாடில் குடியரசு தலைவர்,
இங்கே சபீதா ரெட்டி, கீதா ரெட்டி ஆகியோர் அமைச்சர்கள்
எல்லாம் சரி. ஆனால் இரவில் ஒரு பெண்
தனியாக கடைக்கு போய் வர முடியவில்லை.
எனக்கு மட்டும்தான் இப்படி ஆகியிருக்கும் என்று
அர்த்தமில்லை. பலர் இருப்பார்கள். வெளியே
சொல்ல மறுத்திருப்பார்கள். தயக்கம். சொல்லி
ஆவப்போவது ஒன்றுமில்லை என்ற எண்ணம்.
நானும் சொல்லாமல் இருந்திருக்கலாம். நஷ்டம்
ஏதுமில்லை.

ட்யூஷன் செண்டர் ஒன்றில் தனது சகமாணவியை
தகாத கமெண்ட் அடித்து ஆசிரியர்(அவரும் ஒரு ஆண் )
தந்த மனஉளைச்சலால் என் தோழியின் மகள்
பட்ட கஷ்டம்!! அப்பப்பா, கவுன்சிலிங் கொடுத்து
அந்தக் குழந்தையை சரி செய்தோம்.


ஒரு பெண் தனியாக ரோடில் சுதந்திரமாக பாதுகாப்பாக
நடக்கும் நாள்தான் நாம் உண்மையான சுதந்திரம்
அடைந்திருக்கிறோம் என்ற காந்தி பெருந்தகையின்
வார்த்தைகள் ஏனோ மனதுக்குள் வந்து போயின.


ஒரு பெண் தனியாக ரோடில் நடந்து போக முடியாவிட்டால் என்ன
மகளீர் தினம்? சமூகத்தில் இன்னும் இந்த அவல நிலை.
என்ன கொண்டாட்டம் போங்கள். :(


Saturday, November 21, 2009

அக்கா, அக்கா நீ அக்காயில்லை....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்ன ஆரம்பமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பாக்கறீங்களா?

ரொம்ப நாளா இதைப் பத்தி பதிவு போடலமா! வேணாமான்னு
யோசிச்சுகிட்டே இருந்தேன். நிலமை ரொம்ப மோசமா
போகுது. அதான் பதிவு போட்டிடலாம்னு முடிவு செஞ்சிட்டேன்.


பலரும் அன்பா என்னை அக்கான்னு கூப்பிடறீங்க. நெம்ப
சந்தோஷமா இருக்கு. என்னிய அக்கான்னு கூப்பிடறதால
நான் வயசானவளா நினைக்கலை. அன்பை வெளிப்படுத்தற
சொல்னு தெரியும். ஆனாலும் அக்கான்னு கூப்பிடும்போது
இவுங்க என்னிய விட பெரியவங்களா? சின்னவங்களான்னு
தெரியாம இப்படி கூப்பிடறாங்களேன்னு தோணும்.

இதுக்கு காரணம் இருக்குங்க. ரொம்ப நாளா ஒரு பதிவரோடு
சாட்டிகிட்டு இருந்தேன். அக்கா, அக்கான்னு தான் கூப்பிடுவார்.
ஒரு நாள் எதேச்சையா அவங்க வயச சொன்னாரு.
அவரு 40+ வயது. இதைக்கேட்டதும் எனக்கு பயங்கர ஷாக்
ஆகிடுச்சு. என்னங்க இது நீங்க என்னிய விட ரொம்ப ரொம்ப
பெரியவரு! என்னை இப்படி அக்கானு கூப்பிடறீங்களேன்னு
சொன்னேன்.”அப்படியே பழகி போயிடிச்சு, விடுங்க அக்கான்னு”
சொல்லிட்டாரு. என்ன கொடுமைங்க இது.

தராசு அண்ணன் கூட ஒரு முறை என் பதிவில் அக்கான்னு
பின்னூட்டம் போட்டிருக்க ஃப்ரெண்ட் ஆதி வந்து,”தராசு
உங்களை அக்கான்னு கூப்பிடறாரேன்னு” பின்னூட்டம்
போட்டிருந்தாரு. ஆமாங்க நம்மை விட பெரியவங்க
நம்மை அக்கான்னு கூப்பிடும்போது கொஞ்சம் ஒரு
மாதிரியா இருக்கு.

அப்துல்லா தம்பி, ஜீவ்ஸ் தம்பி, மங்களூர் சிவா
எல்லாம் எனக்குத் தம்பிங்க.

எனக்கு நிஜத்துல அண்ணாவும் கிடையாது, அக்காவும்
கிடையாது. இந்த வலையுலகிலயாவது ஒரு அண்ணா
கிடைக்க மாட்டாரான்னு பாத்துக்கினு இருந்தா..
என்னிய விட பெரியவங்க கூட என்னிய அக்கான்னு
கூப்பிடறது என்ன நியாய்ம்ங்க.

எனக்குத் தெரிஞ்சு இப்பத்திக்கு
நான் அண்ணான்னு கூப்பிட ஒரு ஆளுதான்
இருக்காங்க. நம்ம பினாத்தல் சுரேஷ் அண்ணாதான் அவங்க.
ரொம்ப சந்தோஷமா இருக்கு. (இவராலதான் நான்
வலையுலகில் எழுத வந்தது. ஃபைபாலஜி ப்ரொபசர்
அவர் :))

சில பல க்ளுக்கள் கொடுத்திருக்கேன்.:))
அதை வெச்சு நீங்க எனக்கு அண்ணனா, தம்பியா,
தங்கையான்னு முடிவு செஞ்சு அப்புறமா
என்னை “அக்கான்னு”(சரியா இருந்தா)
தாரளமா கூப்பிடுங்க.ரொம்ப சந்தோஷப் படுவேன்.

வயதுல பெரியவங்களை தம்பின்னு நினைச்சு
மரியாதை குறைவா பேசுறது தப்பு, அவுங்க
ஆயுசு குறையும்னு எங்க ஊரு பக்கம் சொல்வாங்க.
அந்த குத்தம் நான் செய்யாம நீங்க தான் காக்கணும்.

வருகைக்கு நன்றி