Showing posts with label நெடுந்தொடர் கதை. Show all posts
Showing posts with label நெடுந்தொடர் கதை. Show all posts

Wednesday, July 23, 2014

சீதா கல்யாண வைபோகமே - 9

முந்தைய பாகங்கள் மற்றும் கதை சுருக்கத்திற்கு இங்கே

பத்திரிகைகள் அடிக்க ஏற்பாடு செய்யதால் அதையும் கையோடு எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டு ரூபா குழந்தை புண்யாசனமும் அட்டெண்ட் செய்த மாதிரி இருக்குமே” என பத்மா சொல்ல அதுவும் சரிதான் என்று மாடல் பத்திரிகை எழுதியிருந்ததை எடுத்து சரி பார்த்துக்கொண்டார்கள். ”இங்கிலிஷ் பத்திரிகை அவங்க அடிச்சுக்கொடுக்கறாங்க. நாம ட்ரடிஷனல் மஞ்சள், ரோஸ் பத்திரிகை தான் அடிக்கப்போறோம் அதையும் கொஞ்சம் அழகா பண்ணலாமேன்னு,” சீதா சொல்ல உன் ஐடியாவை சொல்லும்மா என்றார் தியாகு.

”நல்ல மாடல் பத்திரிகையை செல்கட் செய்வோம். அதற்குள்ளே நம்ம ட்ரடிஷனல் பத்திரிகையை வெச்சு அனுப்புவோம். பார்க்கவும் நல்லா இருக்கும்,” என்றாள் சீதா.  எனக்கு ஒரு ஆசை என பத்மா சொல்ல “சொல்லும்மா என்றாள் சீதா.

ஆர்டிஸ்ட் மாயா  அவங்க அழகா பத்திரிகை டிசைன் செஞ்சிருக்காங்க. அதுல ஷ்பெஷல் என்னன்னா, பத்ததிகள் அது செய்ய வேண்டிய  காரணம் எல்லாமும் கூட இருக்கற மாதிரி செஞ்சிருக்கார். ஜீலகர பெல்லம் வைப்பதன் அர்த்தம் என்னன்னு பலருக்கு தெரியறது இல்லை. அதைப் பத்தில்லாம் அழகா புரியறா மாதிரி இருக்கற பத்திரிகை அனுப்பினா எல்லோருக்கும் தெரிஞ்சிக்க வசதியாய் இருக்குமே!” என்று சொல்லவும்,

“ நானும் பார்த்திருக்கிறேன். இத்தனை நாள் தமிழ் பத்ததி மட்டும் தான் கார்டுகள் இருந்தது. சமீபமா தெலுகு பத்ததிக்கும் கார்டு போட்டிருக்காங்க” என ஷ்யாம் சொல்லவும், “ அருமையான ஐடியா அப்படியே செய்யலாம்மா. வித்தியாசமா இருக்கும்!! என்னப்பா சொல்றீங்க என சீதா கேட்க தியாகுவும் ஓகே சொன்னார். “நீயும் ஷ்யாமும் போய் அந்த வேலையை உடனே முடிச்சிட்டு வாங்க, எனக்கும் அம்மாவுக்கும் தில்லி போக ட்ரையின் டிக்கெட் புக் செஞ்சிடறேன் என்று  சொல்ல. நேரமிச்சமாகும்பா இந்த வாட்டி ஃப்ளைட்ல போயிட்டு வாங்க. கன்ஷஷனல் ஃபேர் போட்டிருக்காங்கன்னு சொல்லி மகன் புக் செய்து கொடுத்துவிட்டு தங்கையை அழைத்துக்கொண்டு போனான்.


3 நாளில் பத்திரிகை ரெடி. முதல் பத்திரிகை குல தெய்வம் கோவிலுக்கும், இஷ்ட தெய்வ கோவில்களுக்கு எழுதி அனுப்பி விட்டு சம்மந்தி வீட்டினருக்கு தேவையான பத்திரிகைகளை எடுத்து வைத்துக்கொண்டனர். ரூபாவின் குழந்தைக்கு சின்ன பரிசும், உடைகளும் சீதா ஆபிஷ் விட்டு வரும்போது வாங்கி வந்திருந்தாள். ஷ்யாம் அம்மா அப்பாவை ஏர்போர்ட்டில்  இறக்கி விட்டு ஆபிஸ் போனார். ஏர்போர்ட்டிற்கு சம்மந்தி கார் அனுப்பியிருந்தார்.

குழந்தையின் பெயர் வைக்கும் வைபவம் சிறப்பாக நடந்தது.  குழந்தைக்கு வாங்கியிருந்த பரிசு எல்லோருக்கும் பிடித்திருந்தது. சின்ன மோதிரம் + கிளாஸ் வளையல் மோதிரம் குழந்தை விரல் சப்பினால் வாய்க்குள் போய்விடாத படி குட்டி சங்கிலி மோதிரத்திற்கும் வளையலையும் இணைத்து என சீதா பார்த்து பார்த்து வாங்கியிருந்தாள்.

பத்திரிகை பார்த்து மணிக்கு மிகவும் சந்தோஷம். பத்ததிகளை அழகாக விவரித்து இருப்பது மிகவும் பிடித்திருந்தது. திருமணத்திற்கும் இன்னும் 3 மாதமே இருப்பதால் மத்த வேலைகளை பார்க்க வேண்டுமென தியாகுவும், பத்மாவும் கிளம்பினர். பத்மாவுக்கும் தியாகுவுக்கும், துணிமணிகள் கொடுத்து மரியாதை செய்தனர். அப்பொழுது ரூபா ஒரு பார்சலை பத்மாவிடம் கொடுத்து இது சீதாவுக்கும், ஷ்யாமுக்கும் என்று சொன்னாள். உள்ளே அழகான லக்னோவி சுடிதார் செட் சீதாவுக்கும், வெள்ளியில் டிசைன் செய்த பேனா ஷ்யாமுக்கும் இருந்தது.

தொடரும்......


Friday, November 29, 2013

சீதா கல்யாண வைபோகமே-8!!!!!!

சீதா கல்யாண வைபோகம் தொடர்கதையில் பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. இனி அப்படி நடக்காது என உறுதி கூறிக்கொண்டு முந்தைய பதிவுகளின் லிங்குகளுடன் தொடர்கிறது சீதா கல்யாணம். :)

 இப்படித்தான் இந்த கதை ஆரம்பமானது. 

  சீதா கல்யாண வைபோகமே - 1

சீதா கல்யாண வைபோகமே -2

சீதா கல்யாண வைபோகமே - 3

சீதா கல்யாண வைபோகமே - 4

சீதா கல்யாண வைபோகமே - 5

 சீதா கல்யாண வைபோகமே - 6

சீதா கல்யாண வைபோகமே - 7

சத்திரம் புக் செய்தாகிவிட்ட விஷயத்தை சம்மந்தி மணிக்கு போன் போட்டு சொன்னார் தியாகு. “ ரொம்ப சந்தோஷம். சத்திர முகவரியை இமெயில்ல அனுப்பிடுங்க. எங்களுக்கு பத்திரிகை பிரிண்ட் பண்ண வசதியாய் இருக்கும்னு” மணி சொல்ல ஓகே அப்படியே அனுப்பி வெச்சிடறேன்னு சொன்னார் தியாகு. சில வீடுகளில் இருவீட்டார் அழைப்புன்னு போட்டு பெண்வீட்டாரே பத்திரிகை அடிச்சு மாப்பிள்ளை வீட்டார்க்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பத்திரிகை கொடுப்பாங்க. ஆனா இங்கே மணி எங்க பத்திரிகையை நாங்க அடிச்சிக்கிறோம்னு சொல்லியிருந்தார்.

கொஞ்ச நேரத்தில் சமையல் காண்ட்ராக்ட்காரர் வந்துவிட்டார். வந்தவருக்கு குடிக்க தண்ணீர் , காபி கொடுத்து பேச ஆரம்பித்தனர்.
”இப்பல்லாம் A to Z காண்ட்ராக்தான் சார்” உங்களுக்கு எந்த மாதிரின்னு சொல்லுங்க என்றது,”தெலுகு பத்ததி” அப்படின்னார் தியாகு.

”அவ்ளோதானே! என்று சொல்லி கையில் கொண்டு வந்திருந்த ஃபைலில் இருந்து பிரிண்ட் செய்த பேப்பரை கொடுத்தார். “தெலுகு பத்ததின்னா இன்னின்னது வேணும்னு ஒரு லிஸ்டே எங்க கிட்ட இருக்கு. தெலுங்கு பத்ததி தெரிஞ்ச தம்பதிகள் ரெண்டு பேரை உங்களுக்கு உதவிக்கு போடறேன். அந்தந்த ஃபங்ஷனுக்கு அந்தந்த சாமான் டக்கு டக்குன்னு வந்திரும்!! போதுமா!” என்றார். லிஸ்டை பத்மாவிடம் கொடுத்தார் தியாகு. பத்மாவும் பானுபின்னியும் படித்து பார்த்தனர். எல்லாம் சரிதான். “மாப்பிள்ளை வீட்டு சைட்ல சாட்டவாயனம் டப்பா& செட் அவங்களே வாங்கிக்கறதா சொல்லியிருக்காங்க, அதை குறைச்சிடுங்க.  தலைக்கு வைக்கும் பூ குறைவே இல்லாம இருக்கணும்னு சொன்னதும்,” அப்படியே செய்யலாம்மா. இந்த போட்டோக்களை பாருங்க. உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அந்த மாதிரி மண்டப அலங்காரம் & மாலை ஆர்டர் பண்ணலாம் என்று சொல்ல அந்த போட்டோவை ஷ்யாம் வாங்கி சீதாவிடம் கொடுத்து இருவரும் பார்க்க ஆரம்பித்தனர்.

மெனு லிஸ்ட்டை காட்டி எதோ வேணுமோ அப்படி சொல்லுங்க செஞ்சு கொடுத்திடறேன் என்று சொல்ல, மெனு டிசைட் செய்தார்கள். ஜானவாசம் மாப்பிள்ளை அழைப்பு அன்று ரிஷப்ஷனும் இருப்பதால் நார்த் இண்டியன் வெரைட்டி சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்தார்கள். ‘ அநாவசியமா சாப்பாடு வேஸ்ட் ஆக கூடாது. இலையில் சாப்பிட முடியாத அளவுக்கு வெரைட்டிகளூம் கூடாது. திருப்தியா சாப்பிடும்படி இருக்கணும். மனசும் வயிறும் நிறையணும் ‘ என பத்மா சொல்ல “அவசியம். அப்படியே செய்யறேன் என்றார் கல்யாண காண்ட்ராக்காரர்.

” ஒரு வேளை மிஞ்சிய சாப்பாட்டை திரும்ப உபயோகப்படுத்த மாட்டோம்மா. பக்கத்துல இருக்கும் அனாதை ஆசிரமம், முதியோர் இல்லத்துக்கு உடன் அனுப்பிடுவேன். அந்த சார்ஜ் கூட உங்களுக்கு வராது” என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி பட்சணங்கள் என்னென்ன தேவைன்னு கேட்க, பானுபின்னி, “ 5 சுத்து முறுக்கு, 7 சுத்து முறுக்கு (கை முறுக்கு), தேன்குழல், முள்ளுமுறுக்கு, லட்டு, சோமாசி,  மைசூர் பாகு இவை சீர் வைக்க எவ்வளவு, நம் தேவை எவ்வளவு, வருபவர்களுக்கு முறுக்கு லட்டு போட்ட பாக்கெட் எவ்வளவு எல்லாம் கரெக்டா கணக்கு போட்டு சொல்லும்மா பத்மா என்று சொல்ல, தன் கையிலிருந்த டைரி பார்த்து எவ்வளவு வேணும் என்று பானுபின்னியிடமும், தியாகுவிடமும் சரிபார்த்து சொல்ல காண்ட்ராக்ட் காரரும் குறித்துக்கொண்டார்.

எல்லா விவரமும் பேசியாச்சு. நீங்க பொண்ணை அழைச்சுக்கிட்டு சத்திரத்துக்கு வாங்க. எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எல்லாம் செஞ்சு கொடுக்கறேன். என்று சொல்லி அட்வான்ஸ் தொகை வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

ஷ்யாம் லாப்டாப்பை கொண்டு வந்து தான் போட்டு வைத்திருக்கும் எக்ஸல் ஷீட்டில் எல்லாவற்றையும் அப்டேட் செய்து கொண்டான். மெனு, பட்சண வகைகள், எல்லாமே எழுதிக்கொண்டார். வாங்கி பார்த்த சீதா,”ரொம்ப நல்லாயிருக்கு அண்ணா” என்றார். “எங்க காட்டு என தியாகுவும், பத்மாவும் வர சீதா காட்டினாள். எக்ஸல் ஷீட்டில் பொதுவான விவரங்கள், ஜவுளி விவரம், கல்யானமஹால் விவரங்கள், காண்ட்ராக்ட் எல்லாம் தனி தனி ஷீட்டில் அழகாக டைப் செய்து வைத்திருந்தான் ஷ்யாம். அழைப்பவர்கள் லிஸ்ட்டும் ஏரியா வைஸாக அதில் இருந்தது. இது கைல இருந்தா போதும்மா எல்லா வேலையும் செக் பண்ணி கரெக்டா முடிச்சிடலாம். செக்லிஸ்ட்டும் ரெடி செஞ்சுகிட்டு இருக்கேன்” என ஷ்யாம் சொல்ல ரொம்ப தேங்க்ஸ் கண்ணா என்றாள் பத்மா.

பத்மாவின் தம்பி மகன் பூணலுக்கு பானுபின்னி, தியாகு, பத்மா எல்லாரும் ரெண்டு நாள் முன்னாடியே போனார்கள். ஷ்யாமும், சீதாவும் ஃபங்க்‌ஷனுக்கு முதல் நாள் கிளம்பி போனார்கள். பூணல் முடிந்து எல்லோரும் ஓய்வாக உட்கார்ந்திருந்த நேரம் தியாகுவின் மொபைல் அழைக்க எடுத்து பேசினார்.
“அப்படியா!! ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள். ரூபாவுக்கும் சொல்லிடுங்க “என்று சொல்லிவிட்டு சந்தோஷ முகத்துடன்  வந்து எல்லோருக்கும் தகவல் சொன்னார். “டில்லியில மாப்பிள்ளையின் அக்கா ரூபாவிற்கு பெண்குழந்தை பிறந்து தாயும் சேயும் நலம்” என்றதும் ரொம்ப நல்ல விஷயம் என்று சொல்லிக்கொண்டே சென்னைக்கு புறப்பட தயாரானார்கள்...

தொடரும்


Saturday, September 21, 2013

சீதா கல்யாண வைபோகமே!!!....-7

வளைகாப்பு முடிந்து மணி,லீலா, சுந்தரி அவ்வா ரூபாவை பிரசவத்திற்கு அழைத்து சென்றார்கள். ரூபாவின் கணவர் அகிலும் அலுவலக வேலை இருப்பதால் அவர்களுடன் சென்றார்.

சத்திரம் பார்க்க போவதை பத்தி பேச ஆரம்பித்தார் தியாகு, உடனேயே ஷ்யாம்
” அப்பா, வர்றவங்க சொளகர்யம் முக்கியம். ரொம்ப பெருசா இருக்கேன்னு ஊர் கோடியில வெச்சா சிட்டியிலேர்ந்து வந்து போக கஷ்டம். அதனால நமக்கும் வசதிபட்டாப்ல இருக்கணும். அந்த மாதிரி பாக்கலாம்னு நினைக்கறேன்” அப்படின்னு சொன்னதும்,”சரிப்பா. அதுக்கென்ன ஒவ்வொரு சத்திரமா பாக்கத்தானே போறோம்!” என்றார் தியாகு.

அது டைம் வேஸ்ட்ப்பா. நம்ம பட்ஜட் என்ன? எத்தனை நாளைக்கு வேணும்? என்ன மாதிரி இருக்கணும் இது ப்ளான் பண்ணிக்கிட்டோம்னா, அந்த மாதிரி சத்திரங்களை மட்டும் பாத்தா சீக்கிரம் வேலை முடியும். அநாவசிய அலைச்சல் இருக்காதுப்பா, என்றதும் பத்மா,”ஷ்யாம் சொல்வதும் சரிதான். நாம சில விசேஷங்களுக்கு அந்த சத்திரங்கள் எப்படின்னு பாத்திருக்கோம்ல, அதை வெச்சு எந்த சத்திரம் நமக்கு தோது படும்னு பாக்கலாம்!!” என்றதும்
பேப்பர் பேனா எடுக்க போனான் ஷ்யாம். “இதுக்கும் பேப்பரா!! என தியாகு கேட்க, எல்லாமே எழுதி வெச்சுகிட்டா நல்லதுப்பா!” என்று சொல்லி தேவைகள் என்னவென எழுத ஆரம்பிக்க, பத்மா பானுபின்னியை பார்த்து கேட்டால்,” அத்தே! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தங்க ரூம் வசதியும் இருக்கணும், அதே சமயம் வீட்டுக்கிட்டே இருந்தாதான் பால்பழம் கொடுக்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு வர வசதியா இருக்கும்னு நினைக்கிறேன்! நீங்க என்ன சொல்றீங்க? அப்படின்னு கேட்க ,

பானு பின்னி சொன்னார்,”ஆமாம்மா. நம்ம வீடே கொஞ்சம் புறநகர் பகுதிதான். அதனால இங்க பக்கத்துல இருக்க சத்திரங்கள் நல்லா இருக்கும்னா பார்க்கலாம் என்றது சீதா ஒரு சத்திரத்தின் பெயரை சொல்ல, ஷ்யாமும், பத்மாவும் கூட சத்திரத்தின் பெயர்கள் சொல்ல இவைகளை எழுதிக்கோ ஷ்யாம், அதோட இன்னும் ரெண்டு சத்திரமும் இருக்கு. இங்க போய் பார்ப்போம். நமக்கு பிடிச்ச சத்திரம் என்றாலும் டேட்ஸ் காலியா இருக்கணும். அதனால நேரே போய் பார்ப்போம் என்று சொல்ல, சமையலை முடிச்சு கிளம்பலமா என்றார் பத்மா.

“நீங்க கிளம்புங்கப்பா, என்னால அலைய முடியாது. நான் வீட்டுலதானே இருக்கேன். சிம்பிளா ஒரு சமையல் செஞ்சிடறேன்” என்றார் பானுபின்னி. “உங்களால முடியுமா அத்தே!” என்றார் பத்மா. மெல்ல சமைக்கலாம்மா நீ கிளம்பு என்று சொல்ல எல்லோருக்கும் சூடாக குடிக்க கலக்க போனாள் சீதா. பிறகு எல்லோரும் ரெடியாகி சத்திரம் பார்க்க போனார்கள். ஷ்யாம் வண்டி ஓட்ட பக்கத்தில் தியாகு உட்கார்ந்து கொண்டார். பின்னால் சீதாவும், பத்மாவும் உட்கார்ந்து கொண்டார்கள்.

வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சத்திரத்திற்கு போனார்கள். சாப்பாட்டு தளம் கல்யாண தளத்திற்கும் மேலே. ஏறி இறங்க சிரமமாக இருக்கும் என்பதால் வேண்டாம் என்றார் பத்மா. “லிஃப்ட் இருக்கேம்மா!! என்றான் ஷ்யாம்,” நிர்மலா அத்தை சொன்னாங்கப்பா... கூட்டம் ஜாஸ்தியா இருந்தா லிஃப்ட்டையும் ஆஃப் செஞ்சு வெச்சிருவாங்களாம்”! என்றதும் அடுத்த சத்திரத்திற்கு கிளம்பினார்கள். அங்கே இவர்கள் கேட்ட தேதியில் சத்திரம் காலியில்லை. இன்னொரு சத்திரம் 2 கிமீ தூரத்தில் இருந்தது. அங்கே வசதியும் நன்றாக இருந்தது.  திருமணம் நடக்கும் இடத்திலேயே 6 ரூம். மணவறைக்கு பக்கத்திலேயே மணமகன், மணமகள் அறைக்கு தவிர 4 ரூம் இருந்தது. மேலே 12 ரூம்களும் விசாலமான ஹாலும் இருந்தது.

சாப்பாட்டு தளம் கீழேயே இருந்தது. இந்த அமைப்பு எல்லோருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. கீழே கார் பார்க்கிங் போல பெரிய இடம் இருந்தது அங்கேயே
காசியாத்திரை ஆகியவை செய்யவும் வசதியாக இருக்கும் என்பதுடன் பட்ஜட்டிற்குள்ளும் அடங்கவே  3 1/2 நாளுக்கு புக் செய்தார்கள். சமையல் கட்டும் நீட்டாக இருந்தது. எண்ணெய் பிசுக்கு இல்லாமல் நீட்டாக வைத்திருந்ததுடன் கேஸ் அடுப்பு, மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருந்தது. வாடகையுடன், பாத்திர வாடகையும் சேர்த்து தான் என்பது கூடுதல் வசதி.
எக்ஸ்ட்ரா தலையணை, போர்வை, ஜமக்காளத்திற்கும் அவர்களே ஏற்பாடு செய்து தருகிறார்கள் என்ற கூடுதல் தகவலும் உதவியாக இருந்தது. அட்வான்ஸ் கொடுத்து சத்திரத்தை புக் செய்துவிட்டு வீடு சேர்ந்தார்கள்.

பானுபின்னி சிம்பிளாக ஓமம் வத்த குழம்பு, மிளகு ரசம், கத்திரிக்காய் கூட்டு செய்து வைத்திருந்தார்.  சத்திரம் புக் செய்துவிட்டதை பானுபின்னியிடம் சொல்ல ரொம்ப சந்தோஷம்ப்பா என்றார். சாப்பாட்டு வேலை முடிந்ததும் பானுபின்னியின் பக்கத்தில் உட்கார்ந்து பத்மா சத்திரத்தை பற்றி சொன்னாள்.
பானுபின்னி தியாகுவிடம்,”சத்திரம் புக் செஞ்சிட்டோம்னு சொல்லி அவங்களுக்கு போன் போட்டு சொல்லிடுப்பா!!” என்றதும் சரி என்று போன் செய்து விவரத்தை சொல்ல,”ரொம்ப சந்தோஷம்! இனி பத்திரிகை வேலையை ஆரம்பிக்கலாம்!” என்று சொன்னார் மணி.

சாயந்திரமாக தியாகு மேரேஜ் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தும் தனது நண்பரை வரச்சொல்லியிருந்தார். 

தொடரும்

Tuesday, August 27, 2013

சீதா கல்யாண வைபோகமே- 6

காலிங் பெல் அடிக்கவே ஹாலில் உட்கார்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்த பானுபின்னி மெல்ல எழுந்து கதவை திறந்தார். தியாகுதான் வந்தது. பத்மா குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார், “ சம்மந்தி அம்மா சொல்லியிருந்த படி நாலு நல்ல நாள் பார்த்து குறிச்சுக்கொண்டு வந்திருக்கேன்” என்றார் “அவங்க பெண் ரூபா டெலிவரி முடிந்து ஊருக்கு கொண்டு போய் விடுவதற்குள் நாள் பார்க்க சொல்லியிருந்தார்களே!” என பத்மா கேட்க “ஆமாம், அப்படித்தான் பார்த்து வந்திருக்கேன். கரெக்டா 6 மாசம் டைம் இருக்கு.” என்றார் தியாகு.

”வர்ற வெள்ளிக்கிழமை ரூபாவுக்கு வளைகாப்பு. அதற்கு போகும்போது
இந்த நாள் குறிச்சு கொடுத்திருப்பதை பத்தி விவரமாக சொல்லிட்டு வந்திடலாம்” என்றார் பத்மா.  சாயந்திரம் சீதாவுக்கும், ஷ்யாமுக்கும் வேலையிலிருந்து வர ரொம்ப தாமதம் ஆனது. அண்ணனும் தங்கையும் சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

சாப்பாட்டு வேலை முடிந்தது  நாள் பார்த்திருப்பதையும், வெள்ளிக்கிழமை ஃபங்ஷனுக்கு போகும் போது இந்த விவரத்தை சொல்லவிருப்பதாக பத்மா சொல்ல, சீதாவிற்கு அப்பொழுதுதான் அந்த விவரம் ஞாபகத்திற்கு வந்தது.
“அம்மா, என்னால் வெள்ளிக்கிழமை ஃபங்க்‌ஷனுக்கு லீவ் போட முடியாது.
முக்கியமான மீட்டிங் இருக்கு,” என்று சொல்ல,” என்னடி? இப்படி சொல்ற!!
நான் அவங்க கிட்ட போய் எப்படி சொல்ல முடியும் என்றார் பத்மா.
”நானும் ரொம்ப ட்ரை செஞ்சு பார்த்தேன் அம்மா! நான் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்,” என்று சொல்ல, அவங்க என்ன நினைச்சுக்கப்போறாங்களோ!
என்று சங்கடப்பட்டுக்கொண்டே படுக்க போனார்.

காலையில் எழுந்தது தியாகு “ பார்க்கலாம்ம்மா, எப்படி நடக்கணுமோ அப்படி தான் நடக்கும்” என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினார். வெள்ளிக்கிழமை தியாகு, பத்மா இருவருடன் மிகவும் வற்புறுத்தி அழைத்தார்காளென பானுபின்னியும் புறப்பட்டார்கள். சீதா வரவில்லை என்பதால் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஷ்யாம் அவர்களை அங்கே இறக்கி விட்டு அலுவலகம் போவதாக ப்ளான்.

சத்திரத்தில் வைத்துதான் ஃபங்க்‌ஷன் நடக்கிறபடியால் அங்கே போனார்கள்.
சம்மந்தி மணி வாசலிலேயே நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். காரை விட்டு இறங்கும் வருங்கால சம்மந்தி அருகில் போய் கைபிடித்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். பேருக்கு உள்ளே வந்து 5 நிமிடம் இருந்து விட்டு ஷ்யாம் கிளம்பிவிட்டார். அவனுக்கும் மீட்டிங் அவசரம்.

லீலா தான், “சீதா எங்கே காணோமே! என்று கேட்டார்.  தப்பா நினைச்சுக்காதீங்கோ! ரொம்ப ட்ரை பண்ணா. லீவு எடுக்க முடியலை. மீட்டிங். இவ இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்,” என பயத்துடன் பத்மா சொல்ல , அதை கேட்டுக்கொண்டே அங்கே வந்த சுந்தரி அவ்வா,” ரகுவுக்கும் மீட்டிங்னு அவசரமா கால் வந்து நேத்து சாயந்திரம் கிளம்பி போயிட்டான். இதுக்கெல்லாம் நாம ஒண்ணும் செய்ய முடியாதும்மா. நீங்க உள்ள வாங்கோ!” என பானுபின்னியை கைபிடித்து அழைத்து சென்றார்.

பெரிய களேபரம் வெடிக்கும் என பயந்து கொண்டிருந்த பத்மா கொஞ்சம் ரிலாக்ஸானார். பானுபின்னி மெல்ல பத்மாவின் கைபிடித்து,”நல்லா புரிஞ்சுக்க கூடிய சம்மந்தி கிடைச்சிருக்காங்கம்மா உனக்கு.” என சொல்ல பத்மா சிரித்தார். வளைகாப்பு ரொம்ப நன்றாக நடந்தது. பத்மா ரூபாவிற்கு வெள்ளியில் கிண்ணம் சின்னதாகவும், புடவை, ரவிக்கையுடன், வளையலும் வாங்கி கொண்டு வந்திருந்தார். அதை வைத்து கொடுத்ததும் புடவை கலர் தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாக ரூபா சொன்னதைக்கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார் பத்மா

வளைகாப்பு முடிந்து கொஞ்சம் ஓய்வாக உட்கார்ந்த சமயத்தில் தியாகு சென்று மணியிடம் நாள் பார்த்து வந்திருப்பதாக சொல்ல,”அப்படியா அம்மாவையும் லீலாவையும் கூப்பிடறேன்   இருங்கோ” என சொல்லி அவர்களையும் அழைத்து வந்து பேசினார்கள். ”ரூபாவுக்கு டெலிவரி முடிந்து 3ஆம் மாதம் கொண்டு வந்து விடச்சொல்லியிருக்கிறார்கள்.அதனால் அந்த சமயத்தில் கல்யாணம் வைத்துக்கொண்டால் சொளகர்யமாக இருக்கும் என நினைத்தேன். நீங்களும் அதே மாதிரி நாள் பார்த்து கொண்டு வந்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம் ” என்று சொல்லி 6 மாதம் கழித்து வந்த முதல் முஹூர்த்தத்தை ஃபிக்ஸ் செய்து கொண்டு மாடல் கல்யாண பத்திரிகை எப்படி எழுதுவது என்று பேசி எழுதி கொண்டார்கள்.

“நாங்க எப்படியும் இங்கிலீஷ் பத்திரிகை அடிக்கறோம். அதுல உங்களுக்கு எத்தனை பத்திரிகை வேணுமோ அவ்வளவு அனுப்பி வைக்கிறோம் என்று மணி சொல்ல,” சம்ப்ரதாய பத்திரிகை ரோஸும், மஞ்சளும் கலந்த மாதிரி வருமே அது நாங்க அடிச்சு அனுப்பி வைக்கிறோம்” என்று சொன்னார் தியாகு.
 

அதைத் தவிர இருபக்கத்து முக்கியமானவர்கள் லிஸ்ட் எழுதிக்கொ சொன்னார் பானு பின்னி. “எதற்கு பின்னி” என தியாகு கேட்க, “ அவங்க பக்கத்து முக்கியபட்டவங்க மாப்பிள்ளையோட சித்தப்பா, அத்தை, மாமா, சம்மந்தி போன்றவர்களுக்கு நாமளும் பத்திரிகை அனுப்பனும். அதே மாதிரி அவங்களும் நம்ம பக்கத்து மரியாதைபட்டவங்களுக்கு அனுப்பறது முக்கியம்”  என பானுபின்னி சொல்ல ,” ஆமாம்,ஆமாம்! என்னதான் இருவீட்டார் அழைப்புன்னு போட்டாலும் இந்த மாதிரி மரியாதை செய்வது முக்கியம் என்றார் ”சுந்தரி அவ்வா.

பத்மா, தியாகு பானுபின்னி வீட்டிற்கு கிளம்பினார்கள். தாம்பூலம் கொடுத்துக்கொண்டே லீலா நல்ல நாள்பார்த்து வேலைகளை ஆரம்பிச்சிடலாம் என்று சொல்ல,” அப்படியே செய்வோம்” என சொல்லிவிட்டு பத்மா,தியாகு, பானுபின்னி புறப்பட்டார்கள்.

ரூபாவின் கணவர் வீட்டார் கோயம்புத்தூரில் வசிக்கிறார்கள். இருவருக்கும் ஏதுவாக இருக்கும் என்பதாலும், உறவினர்கள் வர சொளகர்யம் என்பதாலும் சென்னையில் வளைகாப்பு ஃபங்க்‌ஷன் வைத்தார்கள் சென்னையில் மணியின் தம்பி வசிக்கிறார். ஃபங்ஷன்முடிந்ததும் அங்கே போய் இரவு தங்கிவிட்டு
அடுத்த நாள் காலை ஃப்ளைட்டில் டில்லி போவதாக ஏற்பாடு.

சீதாவிற்கு் மீட்டிங் முடிய 7 மணி ஆகிவிட்டது. போன் செய்து அட்ரஸ் விசாரித்துக்கொண்டு ரூபாவின் சித்தப்பா வீட்டிற்கு சென்று தான் வரமுடியாத காரணத்தை சொல்லி கொஞ்ச  நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தாள்.
பாவம் டயர்டாக இருந்தாலும் மரியாதைக்காக வந்து பார்த்துவிட்டு போகிறாள் குழந்தை என சந்தோஷப்பட்டார் சுந்தரி அவ்வா. காலையில் போக முடியாவிட்டாலும் மாலையிலாவது போய்விசாரித்து வந்தாளே என்று பத்மாவும் மகிழ்ச்சி அடைந்தார்.

தொடரும்

,

Wednesday, August 21, 2013

சீதா கல்யாண வைபோகமே - 5

ராஜி அம்மம்மா தான் அடுத்து பேசினார். ”ஒதினகாரு பொட்டு முடி சீர (நாத்தானார் தாலி முடிய புடவை) வாங்குவதை பத்தி பேசிடலாமே!” ”ஆமாம்மா, நல்லவேளை ஞாபகப்படுத்தின!” என்ற பத்மா லீலாவிடம், “ ரூபாவுக்கு என்ன புடவை வேணுமோ, அதை பாத்து நீங்களே வாங்கிடுங்க. அதுக்கும் நாங்க பணம் கொடுத்திடறோம். பட்டு புடவைன்னா பட்டு இல்லை வேற மாதிரி வேணும்னா அப்படி, விலையைப்பத்தி பாத்துக்க வேணாம். ரூபாவுக்கு மரியாதை கரெக்டா செய்யணும்” என்றதும் லீலா “சரிம்மா, ரூபாவை கூட்டிக்கிட்டு போய் அவளுக்கு என்ன வேணுமா வாங்கி அந்த புடவையை சத்திரத்துக்கு வந்ததும் உங்களுக்கு கொடுத்திடறேன். நீங்க ஓதியிட வசதியாய் இருக்கும் என்றதோடு, ராஜ கட்டணம், அடப்ப கட்டணத்திற்காக உங்க மகன் ஷ்யாமிற்கு நாங்க மோதிரம் வாங்கறோம். அவரோட அளவுக்கு நீங்க வாங்கிட்டு பணம் எவ்வளவுன்னு சொன்னா அதையும் கொடுத்திடலாம் என்றார்.

”ஆக பேச வேண்டியதெல்லாம் பேசியாச்சு. இனி எல்லாத்தையும்  லிஸ்ட் எழுதிட்டா போதும் அப்படின்னு ராஜி அம்மம்மா சொல்ல ,” ஒரு பேப்பரும் பேனாவும் கொடுங்கோ எழுதிடறேன்!” என்றார் மணி

 மணமகன் வீட்டார் வாங்க வேண்டியது:

 1. மஞ்சள் குங்கும புடவை, ரவிக்கை
2. நிச்சயதார்த்தம் - புடவை,ரவிக்கை
3. வரபூஜை - புடவை,ரவிக்கை
 4. நாகவல்லி - பட்டு புடவை,ரவிக்கை
5. சாந்தி முஹூர்த்தம் - புடவை,ரவிக்கை & வேஷ்டி, அங்கவஸ்த்திரம்
6. திங்கள் நாகவல்லி- புடவை, ரவிக்கை & வேஷ்டி, அங்கவஸ்த்திரம்
 7. சம்பந்திக்கு புடவை, வேஷ்டி, பேண்ட்
 8. செளபாக்ய கந்தா புடவை (பெண்ணின் தாயாருக்கு)
 9. கொண்டு வந்து விடுபவர்களுக்கு புடவை, ரவிக்கை, பேண்ட் & ஷர்ட்
 10. மணமகள் சகோதரனுக்கு டிரஸ்/ தங்க காயின் அல்லது மோதிரம். (வசதிப்படி)
 11. பொட்டு, சுட்டு (மெட்டி), பில்லாண்ட்லு, நானுகோலு, குண்டுதாலியில் கோர்க்க.
12. நல்ல பூசலு ( கருகமணி செயின்), வங்கி மோதிரம்.
 13. கொளரி பூஜை சாட்டவாயனம், கோலு தரி முத்யாதலு சாட்டவாயனம்.
14. சாட்டவாயன சாமான் & டப்பா - 5 செட் (1 முறம் கண்டிப்பாக வாங்க வேண்டும்)

”எல்லாம் சரியாக எழுதிக்கொண்டு விட்டேன் அம்மா ரொம்ப தேங்க்ஸ்”  என்றார் மணி. “பின்னி அப்படியே நாங்க வாங்க வேண்டியதையும் ஃபைனல் லிஸ்டா சொல்லிடுங்கோ, எழுதிடறேன்” என நோட்புக்கையும், பேனாவையும் ரெடியாக வைத்துக்கொண்டார். “சொல்றேன், எழுதிக்கோ என பானுபின்னி சொல்ல ஆரம்பித்தார்,



மணமகள் வீட்டார் வாங்க வேண்டியது:

லக்னப்பத்திரிகை: பேண்ட் & ஷர்ட்

ஜானவாசம்: (கோட்/சூட்/ ஷர்வாணி), ஊஞ்சலடி துப்பட்டா. ஷூ அல்லது ஜூத்தி.

மாங்கல்ய தாரண(மதுபர்க்கம் )மஞ்சள் அல்லது கேரளா காட்டன் வெள்ளை புடவை, ரவிக்கை, உத்தரிக்காத 9x5 மயில்கண் வேஷ்டி அங்கவஸ்திரம்

நாகவல்லிக்கு பட்டு மயில்கண் வேஷ்டி, உத்தரிய அங்கவஸ்திரம்.

கிருஹப்ரவேசம்:  புடவை, ரவிக்கை, வேஷ்டி, அங்கவஸ்திரம்.

சாட்டவாயன சாமான்கள் & 5 டப்பா.

ஒதினகாரு பொட்டு முடி புடவை, ரவிக்கை (கல்யாணமாகி இருந்தால் அவரின் கணவருக்கும் ட்ரஸ் எடுக்க வேண்டும். அதை தனியாக தரவேண்டும்)

சம்பந்திக்கு புடவை, ரவிக்கை, பேண்ட்& ஷர்ட்.

பருப்புத் தேங்காய் (நிச்சயதார்த்தம், மாங்கல்ய தாரணம், நாகவல்லி,
கிரஹப்ரவேசம், சாந்தி முகூர்த்தம்.) மொத்தம் 5 செட்.

சீர் பட்சண வகைகள். ( 7 சுத்து முறுக்கு, 5 சுத்து முறுக்கு, லட்டு, மைசூர்பா, தேன்குழல், முள்ளுமுறுக்கு வகைகள்)



”எல்லாம் சரியா எழுதிக்கொண்டாச்சு. இனி நாம கல்யாண வேலையை ஆரம்பிச்சுக்கலாம். நீங்க நல்ல நாள் பார்த்து சொல்லுங்க.  எங்க சொளகர்யம் பாத்து டேட் ஓகே பண்ணிக்கலாம்” என்றார் மணி. “வளைகாப்பிற்கு வரும்போதே 4 நல்ல நாள் பார்த்து கொண்டு வர்றேன். நீங்க முடிவு செஞ்சு சொன்னதும் சத்திரம் புக் செய்ய வசதியாய் இருக்கும்” என்றார் தியாகு. ஓகே என்று சொல்லிவிட்டு,” அப்ப நாங்க கிளம்பறோம் மத்த வேலைகள் பாக்கி இருக்கு” என புறப்பட்டனர்.

சமையல் வேலை முடிந்து சீதாவும் வெளியே வந்து அவர்களை வழியனுப்பி வைத்தாள்.
ஷ்யாம் உள்ளே சென்று எல்லோருக்கும் ஜூஸ் கலந்து எடுத்து வந்தான்.


பானு பின்னி பத்மாவை பார்த்து,”  தங்கம் 25 பவுன் வாங்கியிருக்கேன்னு சொன்னியேம்மா!! என்னென்ன வாங்கி இருக்க? “ எனக்கேட்க ”இருங்க எடுத்துகிட்டு வந்து காட்டறேன்” என சொல்லி,” ஷ்யாம் கொஞ்சம் உள்ளே வந்து பரண்லேர்ந்து எடுத்துக்கொடுப்பா ”என கூப்பிட்டாள். இரண்டு பைகளை கீழே இறக்கி தந்தான் ஷ்யாம்.

அதற்குள் தியாகு பானுபின்னியிடம்,”பின்னி, சும்மா சொல்லக்கூடாது பத்மாவை!! சீதாவிற்கு 12 வயசு ஆறதுக்குள்ள சேர்த்து வெச்சிடணும், அப்பதான் பையன் படிப்புக்கு பார்க்க முடியும்னு வெள்ளி, தங்கம் சேர்த்து வெச்சிருக்கா” என பெருமையாக சொன்னார்.  “ அதான்ம்பா நல்லது. ஆனா இது புரியாம சில பேர் இந்த பொம்பளைகளுக்கு நகைமேல ஆசை, வருஷா வருஷம் நகை வாங்க சொல்லி சண்டை போடறாங்கன்னு கோப படுவாங்க. உண்மைக்கு இதுவும் ஒரு சேமிப்பு!” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே பைகளுடன் ஷ்யாமும், பத்மாவும் வர சீதா அவர்களுக்கு உதவியாக வாங்கி வைத்தாள்.

தங்கத்தில் தான் வாங்கி வைத்திருந்த ஹாரம், நெக்லஸ், செயின், ஒரு பெரிய வளையல், 4 சிங்கிள் வளையல்கள், குடை ஜிமிக்கு, செயின் 2 எல்லாம் காட்டினார். “எல்லாம் ரொம்ப நல்லா இருக்குமா. உன் சாமர்த்தியத்தை ரொம்ப மெச்சறேன்.” என்றதும் “எல்லாம் எங்கம்மா சொல்லிக்கொடுத்தது தான் அத்தா” என்றபடி வெள்ளி பாத்திரங்களை காட்டலானார் பத்மா. (அதை நாங்களும் பார்க்க வேண்டாமா என கேட்கும் நேயர்களுக்காக இதோ படங்கள் :) )

                                                     பஞ்ச பாத்திரம், உத்தரணி



                                                     காமாட்சி தீபம், குங்கும பரணி,






                                                       மஞ்சள் குங்குமம் கிண்ணங்கள்










                                                        ஆரத்தி தீபம்- ப்ளேட்





தவழும் கண்ணன்

வரலட்சுமி அம்மன் & கலசம்











”எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும்மா.  பொண்ணுக்கு ஆசை ஆசையாய் அத்தனையும் பார்த்து செஞ்சிருக்க. எக்ஸ்ட்ராவா அந்த மணியும், அகர்பத்தி ஸ்டாண்டும் கூட வாங்கியிருக்க. ரொம்ப அழகுனா அது ஜோங்காடே கிருஷ்ணடு தான். சாதாரணமாக வெங்கலத்தில் தான் வாங்குவாங்க. நீ வெள்ளியிலேயே வாங்கியிருக்க “ என பானு பின்னி பாராட்ட, “எல்லாம் ஒரே நாள்ல வாங்க முடியாதுல்ல அத்தை. அதான் கையில பணம் இருக்கும் போது வாங்கிடுவேன். பசங்க சின்னதா இருந்த போது பக்கத்துல இருக்கற ஹைஸ்கூல்ல வேலை போயிட்டு இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கா அத்தை?!! அந்த சம்பளத்தில் நகைச்சீட்டு கட்டுவேன். 10த் பரிட்சையின் போது சூப்பர்வேஷன் பண்ணப்போவேன். அதுல வரும் 300 ரூவாய்க்கு வெள்ளி சாமான் வாங்கி வைச்சிடுவேன். இப்படித்தான் அத்தே சேர்த்தேன்!!” என்றார் பத்மா.

”உன்னை மாதிரி மனைவி கிடைக்க தியாகு கொடுத்து வெச்சிருக்கணும்!” என பானுபின்னி சொல்ல, “ எங்க மாப்பிள்ளைக்கு மட்டும் என்ன குறைச்சல். பத்மா சொன்னதை புரிஞ்ண்டதாலத்தானே பத்மாவால இதெல்லாம் செய்ய முடிஞ்சதும். இது பத்மா அதிர்ஷ்டம் “ என சொல்ல தியாகு சிரித்தார்.


ஆஹா! அது சரி. இப்ப மத்த விஷயம் பேசுவோமா அப்பா? என ஷ்யாம் கேட்க,
சொல்லுப்பா, என்றார் தியாகு. கல்யாணத்திற்கு தேவையான பணம்.. அதைப்பத்தி என சொல்ல. நகை, வெள்ளிப்பாத்திரம் இருக்கு. சத்திரம், சாப்பாடு, வர்றவங்களுக்கு துணிமணி இதுக்குத்தான். சீதாபேர்ல போட்டிருந்த மேரேஜ் எண்டோவ்மெண்ட் பாலிசி மெச்சூரிட்டி ஆன பணம் வந்ததை ஃபிக்ஸட்ல போட்டிருக்கேன் என தியாகு சொன்னதும். “ என் சம்பளத்தையும் அம்மா பாங்குலதான் போட்டு வெச்சிருக்காங்க. அதையும் எடுத்துக்கலாம் என சீதா சொல்ல,” வேணாம் சீதா. மீதத்திற்கு நான் இருக்கேன். எனக்கும் கடமை இருக்கு. அப்பாவுக்கு தோள் கொடுக்கணும்,” என்று சொல்லிவிட்டு ஷ்யாம் தொடர்ந்தான்.

“அப்பா, அம்மா, சீதா சம்பளப்பணத்தை அவ பேரிலேயே ஃபிக்ஸட்டில் போட்டு வைக்கலாம். எதிர்காலத்தில் சீதா வேலையை விட்டுவிட்டாள் என்றாள் இந்த பணம் அவள் கைச்செலவுக்கு உதவும். மாப்பிள்ளை நல்லவர். ஆனாலும் தான் வேலைக்கு போய் பழகியவளுக்கு இந்த பணம் உதவியாய் இருக்கும். நான் லோன் போடறேன். அதை வெச்சு சமாளிக்கலாம் என்றதும் பெற்றவர்கள் இருவரும் மகனின் மனமுதிர்ச்சியை கண்டு அதிசயத்து ,”சரிப்பா உன் இஷ்டம் போலவே செய்வோம் என்றவர் சீதாவிடம் திரும்பி ,”ஆமாம்மா சீதா உன் வேலையையைப் பத்தி என்ன முடிவு செஞ்சிருக்க? என கேட்டார்.

”நேத்திக்கு நானும் மிஸ்டர் ரகுவும் தனியா போய் பேசியதே அதைப்பத்திதான் பா. வேலை உன் விருப்பம்னு சொல்லிட்டார். நான் என்ன உதவி செய்யணுமோ செய்யறேன் அப்படின்னு சொல்லிருக்கார்பா. என் கம்பெனி வேலையில் ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும். முடிந்த வரை செய்து பார்க்கறேன். என்னால் மேனேஜ் செய்ய முடியாது என தோணும் போது விட்டுவிடுகிறேன் அப்படின்னு சொல்லிருக்கேன்பா!” என்றாள். ”ஆமாம் சீதா வேலைக்கு போவது என்பது அவரவர் சூழலை பொறுத்த விஷயம். சரியான முடிவுதான்” என தங்கையை பாராட்டினான் ஷ்யாம்.

“நேரம் ஆச்சும்மா, சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாதான் நீங்க ஊருக்கு கிளம்ப முடியும். ஷ்யாம் உங்களை  ஏத்தி விட வருவான்” என சொல்ல எல்லோரும் சாப்பிட போனார்கள்.

தொடரும்


Tuesday, August 20, 2013

சீதா கல்யாண வைபோகமே - 4

பானுபின்னி குளித்து ரெடியாகி வெளியே வரும்போது சீதா துளசி பூஜை செய்துகொண்டிருந்தாள். பார்த்ததும் பானுபின்னிக்கும் ரொம்ப சந்தோஷம். பூஜை முடித்து வந்தவளை கண்ணம் வழித்து முத்தமிட்டார். ”என்ன ஸ்லோகம் சொன்ன?” என்றதும் “அம்மம்மா சொல்லிக்கொடுத்த ஸ்லோகம் தான்.

 தேவேந்த்ரானி நமஸ்துப்யம், தேவேந்திர ப்ரியபாமினி ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யம், பத்ரு லாபம்ச தேஹிமே” இதை சொல்லிட்டு துளசிக்கு தண்ணீர் ஊத்துவேன் என்றாள்.

அப்பொழுது அந்த பக்கம் வந்த ராஜி அம்மம்மா, ”கல்யாணத்தன்னைக்கு கொளரிபூஜை செஞ்சு எனக்கு நல்ல புருஷனைக்கொடுன்னு கேட்பதைவிட அந்த பூஜை என்னவோ அதை முன்னாடியிருந்தே ச்ரத்தையா செஞ்சா நல்லதுன்னு சொல்லிக்கொடுத்தேன். துளசி பூஜையும் ஆச்சு, கொளரி பூஜையும் ஆச்சு” என்றார். ரொம்ப நல்ல விஷயம்மா என்றார் பானுபின்னி.


 சீதா இந்தக்காலத்து பெண் தான். படித்தவள், நல்லவேலையில் இருக்கிறாள். ஆனால் பூஜைகள் ரொம்ப பிடிக்கும். சமையலிலும் கை தேர்ந்தவள். ”நீ என்ன படித்து, வேலை பார்த்தாலும் சமையலையும் கத்துக்கறது அவசியம்னு “ அவங்க அம்மா பத்மா வளர்த்திருக்காங்க. குளிச்சுட்டு சமயலறைக்கு போகப்போன அம்மாவை தடுத்து நிறுத்தி,” நீங்க நேத்து நிறைய்ய வேலை செஞ்சுட்டீங்க. இன்னைக்கு சமையல் நான் பாத்துக்கறேன். அம்மம்மா சாயந்திரம் ஊருக்கு போறாங்க. உக்காந்து பேசுங்கன்னு” அனுப்பி வெச்சுட்டு. காலையில் டிபன் வேணாம்னு எல்லோரும் சொல்லிட்டதால சூப்பரா டீ போட்டு பிஸ்கட்டோட எல்லோருக்கும் கொடுத்திட்டு சமையலை ஆரம்பிக்க போனாள் சீதா.

தியாகுவின் செல்போன் அழைக்கவே போய் எடுத்து பார்த்தார். நேற்று பெண் பார்த்துவிட்டு போன ரகுராமின் அப்பா மணிதான் அழைத்திருக்கிறார். “சொல்லுங்க சார்!” என்றதும் எதிர் முனையிலிருந்த மணி,” சில விவரங்கள் உங்க கிட்ட பேசணும். எங்கம்மா சொல்ல சொன்ன விஷயங்களை சொல்லணும்.  அந்த பக்கம் கொஞ்சம் வேலை இருக்கு.நானும் என் மனைவியும்  வர்றோம். ஓகேயான்னு” கேட்க வாங்க சார் என்றார் தியாகு.

என்னவாக இருக்கும்? என்று பெரியவர்கள் கொஞ்சம் குழம்பினாலும் சரி வரட்டும் பார்த்துக்கலாம் என்று யோசனை ஒரு பக்கம் இருக்க பெரியவர்கள் மத்த கல்யாண விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தார்கள். விவரங்கள் அனைத்தையும் குறிப்பாக எழுதிக்கொண்டால் நல்லது என ஷ்யாமிற்கு தோன்றியது. ஒரு புது நோட்புக்கை சாமியிடம் வைத்து எடுத்துக்கொண்டு ,” அப்பா பிள்ளையார் சுழி போட்டு எல்லா விவரத்தையும் இதுல எழுதிக்கோங்க. நான் அப்புறம் இதை லேப்டாப்பில் எக்ஸல் ஷீட்டாக போட்டு வைக்கறேன். உதவியாக இருக்கு என்று சொல்ல, “அதுவும் சரிதாம்பா என தியாகு எழுத ஆரம்பித்தார்.

”வருங்கால சம்மந்தி வர்றேன்னு சொல்லிருக்கார். அவர் வந்ததுக்கப்புறம் மத்த விவரங்களை எழுதிக்கலாம். முதல்ல அழைப்பவர்கள் லிஸ்ட் எழுதுங்கோ. ஒவ்வொரு ஊரா ஆரம்பிச்சு அந்த ஊர்ல இருக்கற சொந்தக்காரங்க பேரை எழுதுங்க. அப்புறம் அந்த ஊர்ல ஏரியா வைஸ், சென்னைன்னா அங்கே கோடம்பாக்கம், மாம்பலம் இந்த ஏரியாவுல் இருக்கற சொந்தக்காரங்க, நட்புக்கள் இப்படி விடாம எழுதிக்கோங்க. அப்புறம் அதுல நீங்க யாரையெல்லாம் கூப்பிட நினைக்கிறங்களோ அதை தனியா எழுதலாம்” என ஐடியா சொன்னார் ராஜி அம்மம்மா. அம்மம்மா சொன்னமாதிரியே செஞ்சிடலாம் என்றான் ஷ்யாம். அவர்கள் லிஸ்ட் போட்டு முடிக்கவும் மணியும் அவர் மனைவிலீலாவும் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

வந்தவங்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரிப்பு நடந்தது. சீதா சமையலறையிலிருந்து வந்து வணக்கம் சொன்னாள். கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு உள்ளே போய் வருங்கால மாமியாருக்கு டீயும், மாமனாருக்கு காபியும் கொறிக்க முறுக்கும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு
தான் சமையலை பார்க்க போவதாக புன்முறுவலுடன் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

“பேசணும். வர்றோம்னு சொன்னதும்” பயந்துட்டீங்களா? ஒண்ணும் பிரச்சனை இல்லை. சில விஷயங்களை நாம முன்னகூட்டியே பேசி முடிவு பண்ணிக்கறது நல்லது. அதான் நேரிலயே பேசிக்கலாம்னு வந்தோம் என்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்,”  நாங்க யஜுர் வேதம், நீங்க ரிக் வேதம். அதனால சில பத்ததிகள் (சடங்குகள்) மாற்றம் இருக்கு. அது இதுன்னு குழப்பிக்காம உங்க ரிக் வேத பத்ததி படியே இந்த கல்யாணம் நடக்கட்டும்னு அம்மா சொல்ல சொன்னாங்க. ஏதோ ஒரு வழியில எந்த சண்டை சச்சரவும் இல்லாம நல்லபடியா நடக்கணும் அதுதான் முக்கியம் “ என மணி சொன்னதும் ஆமாம், நீங்க சொல்றது சரிதான் என்றார் தியாகு.

“அப்ப சொன்னபடியே எங்களுக்கு வரதட்சணை வேண்டாம். இவ்வளவு நகை, இவ்வளவு வெள்ளிபாத்திரம் என எதுவும் நாங்க கேட்கலை. அது உங்க இஷ்டம். ஆனா எங்க மருமகளுக்கு நாங்க 5 பவுன் நகை போடறோம்.” என்றதும் ராஜி அம்மம்மா,” குறுக்க பேசறேன்னு தப்பா நினைக்காதீங்கோ
நல்ல பூசலு நீங்க வாங்கறீங்களா? இல்லை நாங்க வாங்கணுமா என்றார்.
“ 5 பவுன் நகை போடறோம்னு சொன்னதால நல்ல பூசலு வாங்க மாட்டோம்னு சொல்லலைம்மா. அது மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் வாங்கணும். நாங்க நல்ல பூசலு, நெளிமோதிரம் (நிச்சயதார்த்திற்கு), ரெண்டு தாலி பொட்டு (சின்னது ஒண்ணு, பெருசு ஒண்ணு, ரெண்டும் சேர்த்து ஒரு பவுன்), நானுகோலு, குண்டு, மெட்டி, பில்லாண்ட்லு (சைட் மெட்டி), வாங்கறோம்.” இப்ப ஓகேவா என்றார் சிரித்துக்கொண்டே. சந்தோஷமென்றார் ராஜி அம்மம்மா.

நெளி மோதிரம்/வங்கி மொதிரம்



nallapusalu



thali bottu


metti/chuttu



pillandlu

மணி பானுப்பின்னியை பார்த்து, “மணப்பெண்ணிற்கு எடுக்க வேண்டிய புடவைகள் என்னென்ன உங்களையே கேட்டுக்க சொன்னாங்க அம்மா” என்றார். அப்படியா நல்லது எல்லாம் விவரமா சொல்றேன் என்றார் பின்னி.

 இப்ப நாங்க என்ன செய்யப்போறோம்னு சொல்றேன் என தியாகு ஆரம்பித்தார். எங்க பொண்ணுக்கு நாங்க 25 பவுன் நகை சேர்த்து வெச்சிருக்கோம்.  வெள்ளி பாத்திரங்களும் ரெடியா இருக்கு. அதைத் தவிர பொண்ணுக்கு நாங்க வேண்டிய ரெண்டு தாலி பொட்டு (சின்னது ஒண்ணு , பெருசு ஒண்ணு, ரெண்டும் சேர்த்து ஒரு பவுன்) மாப்பிள்ளைக்கு செயின், மோதிரம், ப்ரெஸ்லெட், ரிஸ்ட் வாட்ச் போடறோம். மாப்பிள்ளை அழைப்பு (ஜானவாசத்திற்கு) கோட் சூட், ஷூ/ ஷர்வானி , ஷூ எது மாப்பிள்ளைக்கு இஷ்டமோ அந்த செலவு எங்களது. காசியாத்திரை செப்பல் அளவு பார்த்து வாங்கிக்கிடட்டும். அந்த பில்லும், ஜானவாச ஷூ பில்லும்  எங்க கிட்ட கொடுத்திடுங்க நாங்க பணம் கொடுத்திடறோம். கல்யாணத்திற்கு என்னென்ன வஸ்த்திரம் எடுக்கணுமோ அதையும் மாப்பிள்ளைக்கு நாங்க எடுக்கறோம்.” என்றதும். ரொம்ப சந்தோஷம் என்றார் லீலா. 

ராஜி அம்மம்மா , “ என்னுடைய அபிப்ராயத்தை சொல்லிடறேன். நெளி மோதிரம்,  மாப்பிள்ளைக்கு போடற மோதிரம் ரெண்டும்  ஒவ்வொண்ணும் ஒரு பவுன் இருக்கணும் என்பது சிலரோட பழக்கம். சைஸ் சரியில்லாம போயிடும் என்பதால பொண்ணுக்கு நாங்க நெளிமோதிரமும், அதே எடைக்கும் நீங்க பையனுக்கு பிடிச்ச மோதிரமும் வாங்கிகிட்டா அதை சபையில கொடுக்கும்போது மாத்திக்கலாம். என்றார். “ இந்த ஐடியா நல்லா இருக்கே.  அப்புறம் கல்யாண மோதிரம் சைஸ் சின்னதா போச்சுன்னு வருத்தப்பட வேண்டாமே! அப்படியே செஞ்சுக்கலாம்.” என்றார் மணி. “ சீதா விரல் சைஸுக்கு மெட்டியும், பில்லாண்ட்லுவும் நீங்க வாங்கிட்டு பில்லை எங்ககிட்ட கொடுங்க. நாங்க பணம் கொடுத்திடுவோம். அதுவும் சைஸ் பெருசா, சின்னதா ஆனா போட்டுக்க கஷ்டம் என்றார் லீலா.

(பதிவு பெருசாக போவதால் மீதி அடுத்த பதிவில்)

தொடரும்


Saturday, August 17, 2013

சீதா கல்யாண வைபோகமே - 3

மாப்பிள்ளை ரகுராமின் அப்பா மணி பேச்சை அரம்பித்தார். ”நான் ஏற்கனவே உங்க கிட்ட சொன்னமாதிரி, வரதட்சணை எதுவும் வேண்டாம். எங்களுக்கு வரதட்சணை கொடுக்கும் பழக்கமில்லை, வாங்கும் பழக்கமும் இல்லை. சீர், நகை எல்லாம் உங்க இஷ்டம், சொளகர்யம்” என்றதும் சுந்தரி அவ்வா ஆரம்பித்தார்,” ஆமாம்பா! பொண்ணை பெத்தவங்களை கசக்கி பிழிவதில் அர்த்தம் ஏதுமில்லை. கல்யாணம் எனும் பந்தத்துல புருஷன், மனைவி உறவு மட்டும் ஆரம்பமாகலை. ரெண்டு குடும்பம் இணையுது.” என்றார். 

இந்த காலத்திலும் இப்படி பட்ட நல்லவர்கள் இருப்பதால்தான் நாட்டில் கொஞ்சமேனும் மழை பெய்யுது என அம்மம்மா ராஜி நினைத்தார். சுந்தரிஅவ்வா மேலும் தொடர்ந்தார்,” ஆனா எங்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கு!!!” என்றதும், எல்லோரும் வரதட்சணை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு புதுசா ஏதும் குண்டு போடுவாங்களோன்னு யோசித்து கொண்டிருந்தார்கள்.

 “பாருங்க, கல்யாணத்துக்கு விருந்தாளிகள் நிறைய்ய பேர் வருவாங்க. எங்க பக்கத்துலேர்ந்து குறைஞ்சது 150 பேராவது வருவாங்க.  நாங்க உங்ககிட்ட எதிர்பார்க்கறது ஒண்ணு தான். வர்றவங்களுக்கு போதிய வசதிகளுடன், நல்ல சாப்பாடு.  டீசண்டான மேரேஜ் பண்ணித்தரணும். கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க உங்க வீட்டுக்கு வந்து என்ன சாப்பிட போறோம்னோ, நீங்க எங்க வீட்டுக்கு வந்து என்ன சாப்பிட போறீங்கன்னோ யாருக்கும் தெரியப்போறதில்லை. கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு நல்ல சாப்பாடு இருக்கட்டும். அதுக்காக ஆர்ப்பட்டமெல்லாம் வேண்டாம்! அப்படின்னு சொல்ல தியாகு முகம் மலர அதெல்லாம் நல்லா ஜாமாய்ச்சுடலாம் என்றார்.

அப்போ நிச்சயதார்த்தம் உடனே வெச்சுக்கலாம். அடுத்தவாரம் எங்க பொண்ணுக்கு வளைகாப்பு இருக்கு. அதுக்கு முன்னயே இல்ல பின்னாடியோ வெச்சுக்கலாம். நிச்சயதார்த்தை முடிச்சுகிட்டு நாங்க ஊருக்கு கிளம்பலாம். லீவு இருக்காது ரகுவுக்கு  என்றார் லீலா.  ரொம்ப குறைச்ச டயத்துல எல்லா ஏற்படும் செய்யணும், நிச்சயதார்த்தம் என்றால் பெண்ணுக்கு மாமா இல்லாமலா என ராஜி, பத்மா, தியாகு குழம்பி கொண்டிருக்க, பானுபின்னி 
”நான் கொஞ்சம் பேசலாமா?!!” என்றார்.

“சொல்லுங்கம்மா ” என மணி சொன்னதும், “நிச்சயதார்த்தம்னு தனியா எங்களுக்கு செஞ்சு பழக்கமில்லை.  (சில குடும்பத்தில் நிச்சயதார்த்திற்கு தனியாக நாள் பார்த்து விசேடமாக செய்வார்கள்)  தவிர பத்மாவோட பெரிய தம்பி துபாய்ல இருக்காரு. நினைச்சதும் வர முடியாது. இன்னொரு தம்பி ஹைதராபாத்ல தான் இருக்கார். ரெண்டு பேருக்கும் பத்மா ஒரே ஒரு சகோதரிதான். அதனால ஆசையா மேனகோடலு( மருமகள்) நிச்சயதார்த்தம், கல்யாணம்னு பாக்கணும்னு இருக்காங்க. ஹைதராபாத்ல  இருக்கும் தம்பி பையனுக்கு அடுத்த மாசம் பூணல் என்பதால அவராலயும் லீவு போட்டு வரமுடியாது. தியாகுவோட  அக்கா பாம்பேயில இருக்காங்க. பொண்ணோட  மேனமாமலு (தாய்மாமாக்கள்), மேனத்தலு (அத்தைகள்) கண்டிப்பா இருக்கணும். அதனால இப்ப சிம்பிளா பாக்கு வெத்தலை மாத்திப்போம். சம்ப்ரதாயப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் லக்னபத்திர்கை நிச்சயதார்த்தம் வெச்சுப்போம்!” என்றார்.

ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்கோ, நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்னு சொன்னார் மணி. சுந்தரி அவ்வா, மணி, லீலா, ரூபா, அகில், ரகுராம் மட்டும் தனியா போய் பேசிட்டு 5 நிமிஷத்துல வந்து “நீங்க சொல்வதும் சரிதான். ரகுவோட மாமாவும், அத்தைகளும் கூட இருந்தா நல்லது. இப்ப வெற்றிலை பாக்கு மாத்திட்டு கல்யாண வேலைகளை ஆரம்பிச்சுப்போம். நீங்க சொன்னபடி வரபூஜைக்கு முன்னாடி லக்னபத்திரிகை வெச்சுப்போம். எல்லா சொந்தங்களும் கலந்துக்க முடியும்!!” என்றார் சந்தோஷத்துடன்.

”ரொம்ப தேங்க்ஸ்!” என்றார் பானுபின்னி. தன் உடன் பிறந்தவர்களுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாரே என பத்மாவுக்கும் பானுபின்னிமேல் ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது. அம்மம்மா ராஜி மெல்ல தன் கையால் பானுபின்னி கையை பிடித்துக்கொண்டார். பானு பின்னி முகம்மலர்ந்து சிரித்தார்.

”தாம்பூலம் மாத்திப்பதில் புடவை வைக்கணும் என்பது சம்ப்ரதாயம் இல்லை. ஆனா எங்களுக்கு எங்க மருமகளுக்கு புடவையும் வைத்து கொடுக்கணும்னு ஆசை. ஒரு அரை மணி கடைக்கு போய் புடவை வாங்கிட்டு வந்திடறோம்.
 வந்ததும் தாம்பூலம் மாத்திக்கலாம்” என்றனர் லீலாவும், மணியும்.  ரூபா அலையவேண்டாமென, ரூபாவும் சுந்தரி அவ்வாவும் மட்டும் இருந்து கொண்டார்கள்.

பானுபின்னி தியாகு, பத்மா, ராஜியை உள்ளே அழைத்து போனார். “அவங்க புடவை வைக்கறாங்க. அதனால நாமளும் மாப்பிள்ளை பேண்ட்& ஷர்ட் அல்லது வேஷ்டி அங்கவஸ்திரம் வைக்கணும்” என்றார், உடனே ஷ்யாம் “ பக்கத்துல தான் கடை அவ்வா. நானும் அப்பாவும் போய் வாங்கி வந்திடறோம் என்றதும் சந்தோஷம்பா, அதோட 5 தேங்காய்,  வாழைப்பழம் (மஞ்சள் கலர்), பழ வகைகள்,  ரவிக்கை 2, வெற்றிலை,பாக்கு,மஞ்சள், குங்குமம், ஸ்வீட் ஒரு கிலோவும் வாங்கிண்டு வந்திடுங்கோ என்றார் அம்மம்மா ராஜி. சரியா சொன்ன ராஜி. “பசுங்கம் (பசுபு (மஞ்சள்) குங்குமம்) வெச்சுதான் தாம்பூலம் மாத்தணும் என்றார் பானுபின்னி.

தியாகுவும் ஷ்யாமும் கடைக்கு போய் வேண்டியதை வாங்கிகொண்டு வந்தனர். உடனடியாக ராஜி தேங்காய்களுக்கு மஞ்சள் தடவிகுங்குமம் வைத்து ஒரு தாம்பாளத்தில் வைத்தார். அதே தட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வாழைப்பழம் வைத்தார். இன்னொரு தட்டில் ஸ்வீட் & பழங்கள் வைத்தார் பத்மா. ஷ்யாம் மாப்பிள்ளைக்கு ரெடிமேட் பேண்ட் ஷர்ட்டும், ஜரிகை வேஷ்டி, அங்கவஸ்திரமும் வாங்கியிருந்தான். அதையும் ஒரு தட்டில் வைத்து, பழவகைகள் ஒருதட்டிலும் வைத்து கொண்டிருந்த பொழுது வெளியே சென்றிருந்த மணமகன் வீட்டினரும் வந்து சேர்ந்தார்கள்.

pasunkam thenkaya

அவர்களும் பசுபுகுங்கும  வைத்த தட்டு,ஸ்வீட், பழவகைகளுடன் புடவை, ரவிக்கையுடன் பூவும் வாங்கி வந்திருந்தனர். இரு வீட்டினரும் ஹாலில் கொண்டு வந்து வைத்துக்கொண்டு சம்பந்திகள் இருவரும் எதிரும் புதிரும் அமர்ந்து தாம்பூலம் மாற்றிக்கொண்டார்கள். பெரியவர்கள் அனைவரும் அவர்களுக்கு அட்சதை போட்டு ஆசிர்வதித்தார்கள். ரூபா தனியாக சீதாவை அழைத்து சென்று ஒரு பார்சலை கொடுத்தாள். அதில் ரகுராம் தன் வருங்கால மனைவிக்கு எடுத்திருந்த சுடிதார் இருந்தது. கையில் திணித்த பேப்பரில் ரகுராமின் காண்டாக்ட் டீடெயில்ஸ். :))

இதை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்தார் பானுபின்னி. கல்யாணத்திற்கு நாள் குறித்து சொல்வதாக தியாகு சொல்லவும், தன் மகளின் வளைகாப்பிற்கு அனைவரும் வரவேண்டுமென குங்குமம் வைத்து அழைத்தார் லீலா. கட்டாயம் வருகிறோம் என்று சொல்ல தாங்கள் கிளம்புவதாக சுந்தரி அவ்வா சொன்னார். ஒரு நிமிஷம் இதோ வந்துவிடுகிறேன் என சொல்லி உள்ளே ஓடினார் பத்மா. வரும்போது கையில் ரவிக்கை, வெற்றிலைபாக்கு, பழம் குங்குமம் கொண்டு வந்து வந்திருந்த பெண்களுக்கு “விடம்” கொடுத்தார். (வெற்றிலை பாக்கு கொடுப்பதை விடம் என்பார்கள்)

எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் எல்லோருக்கும் பரமசந்தோஷம். பானுபின்னி சீதாவிற்கு திருஷ்டி சுத்தி போடும்படி சொல்ல அம்மம்மா ராஜி உப்பு சுற்றி போட்டார். “என்னம்மா இனி ரகுராமுடன் வாட்ஸப்பில் சாட்டிங்தான், ஸ்கைப் சாட்டிங் தான்!!!” என கிண்டலடிக்க, சீதா முகம் சிவந்தாள். அந்த காலத்திலேயே வெப்கேம் இருந்திருக்கே என சொல்ல “என்ன பாட்டி அந்த காலத்துல ஏது?” என ஷ்யாம் கேட்க. மாயாபஜார் படம் பாத்திருக்கையோ, அதுல வீடியோ சாட்டிங் இருந்ததே என சொல்ல எல்லோரும் சிரித்தனர்.

மாயா பஜார் படத்தில் வீடியோ சாட்டிங் :)






தொடரும்..



Wednesday, August 14, 2013

சீதா கல்யாண வைபோகமே- 2

                                             PELLI CHUPULU/ PILLA CHUPULU                              
                   
                                                     பெண்பார்க்கும் படலம்

காரில் வந்து இறங்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை பார்த்தார் தியாகு. ”கீழே போய் கூட்டிண்டு வாப்பா” என பானுபின்னி சொல்ல தியாகுவும், ஷ்யாமும் லிஃபிடில் போய் அவர்களை அழைத்து வந்தார்கள்.

சிரித்த முகத்துடன் பத்மா அவர்களை வீட்டுவாசலில் நின்று வரவேற்றார்.
அனைவரும் உள்ளே வந்ததும்  உட்கார வைத்து கொண்டிருந்தார் தியாகு.
ஷ்யாமும் , பத்மாவும் அனைவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

மணமகனின்  தாய்  கொண்டு வந்திருந்த பூ, பழம் ஆகியவற்றை பத்மாவிடம் கொடுத்தார். அதற்குள் கந்தம், குங்குமம், சர்க்கரை கொண்டு வந்தான் ஷ்யாம். அதை வாங்கி வந்திருக்கும் ஆண்களுக்கு தியாகுவும், பெண்களுக்கு பத்மாவும் கொடுத்தார்கள். மணமகனின் அப்பா மணி தான் பேச்சை ஆரம்பித்தார். “நமஸ்காரம், நான் தான் மணி, இதுதான் என் மனைவி லீலா.அது எங்க மாப்பிள்ளை அகில். இது என் மகள் ரூபா. இது எங்க அம்மா என அறிமுகம் செய்து வைத்தார்.  கூட இன்னும் சில உறவினர்களும் வந்திருந்தார்கள்.


தியாகு, ஷ்யாம், பத்மா தவிர உள்ளூரிலேயே இருக்கும் தியாகுவின் சகோதரியும், அவரது கணவரும் வந்திருந்தார்கள். இவர்களை அறிமுகம் செய்து வைத்துவிட்டு தனது பின்னியையும், மாமியாரையும் அறிமுகம் செய்துவைத்தார். பானுசித்தியை மாப்பிள்ளை பையனின் பாட்டிக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அவரது பக்கத்திலேயே வந்து உட்கார்ந்து கொண்டார். இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளை பையனின் அக்கா ரூபா கர்ப்பிணியாக இருந்தார். 7 மாதம் இருக்கும். பத்மாவின் அம்மா ராஜி மகளுக்கு உதவியாக கிச்சனில் சுடச்சுட பஜ்ஜி போட்டு கொண்டிருந்தார். பத்மா ஒரு தட்டில் பஜ்ஜியும், கப்பில் கேசரியும் வைத்து எல்லோருக்கும் கொண்டு போய் கொடுத்தார்.  எல்லோரும்
எடுத்துக்கொண்டார்கள். “வயசாச்சும்மா, தின்னா செரிமாணம் ஆகாது” என்று சொல்லி ஒரே ஒரு ஸ்பூன் கேசரி மட்டும் வாயில் போட்டுக்கொண்டார் மாப்பிள்ளை பையனின் அவ்வா சுந்தரி. ”பொண்ணை காபி கொண்டு வரச்சொல்லட்டுமா? எப்படி? என பானுபின்னி கேட்க, சுந்தரி அவ்வா,”அதெல்லாம் எதற்கு சும்மா வந்து உட்காரச்சொல்லுங்க போதும். காபி கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம் ”என்றார்.

மாமியாரை எதிர்த்து மருமகளும் ஒன்றும் சொல்லவில்லை. ஆமாம் அப்படியே செய்யலாம். என்று சொல்ல சீதாவை அழைத்து வர பத்மா உள்ளே போனார். அதிக அலங்காரம் மேக்கப் இல்லாமல் சின்னதாக நெத்திசுடி, கழுத்தில் சின்ன நெக்லஸ், கைகளில் வளையல், தலையில் பூ என அம்சமாக நடந்து வந்தாள் சீதா. சீதா உட்கார்ந்திருந்த அறையை விட்டு வெளியே வரும்போது எதிரில் உட்கார்ந்திருக்கும் ரகுராமை பார்க்க நேர்ந்தது. மெல்ல சிரித்து தலைகுனிந்த படியே வந்து எல்லோருக்கும் வணக்கம் சொன்னாள்.

”எல்லோருக்கும் சேர்த்து ஒரு நமஸ்காரம் செய்மா போதும் என்றார் மணி. சீதாவும் அப்படியே செய்தாள். ரகுராமின் அம்மா எழுந்து சீதாவை கைபிடித்து அழைத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டாள். கொஞ்ச நேரம் ரூபா
சீதாவோடு பேசினாள்.  எல்லோரும் சகஜமாக இருந்தார்கள்.

லீலா தன் மாமியாரிடம் வந்து காதில் என்னவோ கேட்டாள். அதற்கு சுந்தரி அவ்வா சிரித்துக்கொண்டே தலையாட்ட கணவனுக்கு கண்ணாலே சைகை காட்ட மணி தியாகுவிடம்,”பையன் பொண்ணுகிட்ட தனியா பேசணும்னு ஆசைப்படறான்!” என்று சொல்ல அதுக்கென்ன சார் அப்படின்னு சொல்லி பக்கத்தில் இருந்த ரூமிற்கு மகளை அழைத்து செல்ல சொல்லி பத்மாவுக்கு சொன்னார். ரகுராமும் எழுந்து போய் சீதாவிடம் பேசினான்.


பானுபின்னியும், சுந்தரி அவ்வாவும் சேர்ந்து பேசிக்கொண்டிருப்பது பத்மாவுக்கு பிடிக்கவே இல்லை. அந்தம்மாவோட இந்தம்மாவுக்கு என கிச்சனில் இருந்த தன் அம்மாவிடம் புலம்பினாள். மகளை கண்களாலே அடக்கிவிட்டு,” நீ போடும் ஷ்பெஷல் ஃபில்டர் காபியை கலக்கு என்றார்”.
பத்மாவின் கைமணமே மணம். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கூட இவ்வளவு நல்ல காபி கிடைக்காது. காபியின் வாசனையே சூப்பராக இருக்கும்.

ரூபாவின் கணவருக்கும், சுந்தரி அவ்வாவுக்கும் மட்டும் டீ போட்டு (முன்பே கேட்டுக்கொண்டு வந்துவிட்டார்) ஃப்ளாஸ்க்கில் ஊற்றிவிட்டு, காபி கலந்து வைத்து விட்டு ஹாலுக்கு போனார். கூடவே அம்மம்மா ராஜியும் வந்து பானு பின்னி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

அதற்குள் ரகுராமும் சீதாவும் பேசி முடித்து வெளியே வந்தனர். பத்மா எல்லோருக்கும் காபி/டீ கொண்டு வந்து கொடுத்தார்.  சீதாவை உள்ளே அழைத்து செல்லலாமா என கேட்டார் தியாகு. வந்திருந்தவர்கள் சரியென்று தலையாட்ட சீதா அம்மம்மா ராஜியுடன் உள்ளே போனாள்.

மாப்பிள்ளையுடன் அவரது பாவா (அக்கா ரூபா கணவர்) அகில் எழுந்து வெளியே செல்ல, மெல்ல ரூபாவும் அவர்களை தொடர்ந்து வெளியே போனார். மூவரும் கூடி பேசியதும் அகில் வந்து மாமனார் காதில் ஏதோ சொல்ல, விஷயம் சுந்தரி அவ்வாவரை சென்றது.

சுந்தரி அவ்வா நானே சொல்லிடறேன்! என்று சொல்லி ”இத பாருங்கோ!
இந்த ஊருக்கு போய் சொல்றேன், லெட்டர் போடறே,இமெயில் அனுப்பறேன் எல்லாம் வேணாம். போட்டோவுல பிடிச்சுதான் பெல்லி சூபுலுகே வந்தோம். நேரிலும் சீதாவை ரகுவுக்கு பிடிச்சிருக்கு. சீதா அபிப்ராயம் என்னன்னு கேட்டு சொன்னா மத்ததை பேசலாம் என்றார்.

 தியாகுவும், பத்மாவும் உள்ளே வந்து மகளிடம்,”என்னம்மா? பிடிச்சிருக்கா? உன் அபிப்ராயம் என்ன” என கேட்க, ரொம்ப வெட்கமெல்லாம் படாமல் புன்முறுவலுடன் தன் சம்மதத்தை சொன்னாள் சீதா. முதலில் பானுபின்னியையும் ராஜியையும் உள்ளே அழைத்து விவரத்தை சொல்ல அம்மம்மா ராஜியே சொல்லட்டும் என்று சொல்ல மணமகன் வீட்டினரிடம் வந்து “ எங்க பேத்திக்கும் சம்மதம்!” என்று சொன்னார்.

ரொம்ப சந்தோஷம். இப்ப திரும்பவும் சர்க்கரை கொடுங்கன்னு சொல்ல எல்லோரும் ஆனந்தமா எல்லோரும் பேச ஆரம்பிச்சாங்க.



தொடரும்

Tuesday, August 13, 2013

சீதா கல்யாண வைபோகமே - 1

பத்ராசல ராமர் கல்யாண வைபோகத்தை டீவியில் பார்த்துக்கொண்டிருந்த பொழுது காலிங் பெல் அடிக்க எழுந்து போய் கதவை திறந்தார் தியாகு. “ரண்டி பின்னி!!” என முகமெல்லாம் சந்தோஷத்துடன் சித்தியை வரவேற்றார். ஃப்ளைட் கரெக்ட் டைமாப்பா? என மகன் ஷ்யாமை கேட்டுக்கொண்டே “ தண்ணி எடுத்துகிட்டுவாம்மா சீதா என மகளுக்கு சொன்னார்.

சீதா ஓடிப்போய் தண்ணி கொண்டு வந்து “அவ்வா!! இந்தாங்க தண்ணி” என்று கொடுத்துவிட்டு உனக்கும் வேணுமாண்ணா! என்று கேட்க அவன் வேண்டாம் என்று சொல்லவே பாட்டியை கட்டிக்கொண்டு உட்கார்ந்தாள்.

ஷ்யாம் பெட்டிகளை எடுத்துக்கொண்டு போய் சீதா  அறையில் வைத்தார். அம்மா முகம் பார்த்தான் பரவாயில்லை ரகத்தில் இருந்தது.“ரண்டி அத்தா!!” என அழைத்துவிட்டு காபி கலக்க சென்றுவிட்டாள் பத்மா.  (பின்னி - சித்தி, ரண்டி - வரவேணும்) 

”நாளைக்குத்தானே பெண்பார்க்க வர்றாங்க தியாகு”  என சீதாவின் முகத்தை வருடிய படியே கேட்டார் பானுபின்னி. “ஆமாம். சாயந்திரம் 4 மணிக்கு. அதான் உங்களை இன்றைக்கே அழைத்து வரச்சொன்னேன். இருந்து உங்க பேத்தி கல்யாணம் முடிச்சு கொடுத்திட்டுதான் போகணும்!!” என்று சொல்ல

அதுக்கென்ன! மஹா பாக்கியம்!” என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே
பத்மா காபியுடன் கொண்டு வந்து கொடுத்தாள். பானு பின்னியின் வரவு அவளுக்கு கொஞ்சம் இஷ்டமில்லை. மாமியாரே இல்லை. இந்த பானு பின்னி தியாகுவின் சித்தப்பா மனைவி. பத்மாவிற்கு சின்ன மாமியார். அவரை ஏன் அழைத்து வரச்சொன்னார், அதுவும் மும்பையிலிருந்து ஃப்ளைட்டில் என கோபம்.
                                                       மதியம் வாக்கில் பத்மாவின் அம்மாவும் வந்துவிட்டார்.  பத்மாவிற்குத்தான் வேற்றுமையே தவிர பானு பின்னிக்கும் பத்மாவின் தாயார் ராஜிக்கும் நல்ல நட்பு.

bhanu pinni


அடுத்த நாள் சீதாவை பெண் பார்க்க வருகிறார்கள். அதற்காகத்தான் இரு பெரியவர்களும் வந்திருக்காங்க. பையன் டில்லியில் ப்ரைவேட் கம்பெனியில் பெரிய வேலை. சீதாவும் பெரிய படிப்பு படித்திருக்கிறாள். வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 25 வயதுதான்.தியாகுவின் மூத்தமகன் ஷ்யாமும் ஒரு கம்பெனியில் உயரதிகாரி. தியாகு ரிட்டயர் ஆக 4 வருடம் பாக்கி இருக்கு. நல்ல குடும்பம்.

தியாகுவின் பெற்றோர் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். அதனால் வீட்டில் விசேஷம் எனும் பொழுது பெரியவர்கள் இருக்க வேண்டும் என நினைத்து விவரம் தெரிந்த பானு சித்தியை வரவழைத்தார்.

”என்னென்ன வாங்கி வைக்கணும் விவரமா சொல்லுங்க பின்னி” அப்படின்னு கேட்க ஷ்யாம் பேப்பரும் பேனாம் கொண்டு வந்து எழுத ரெடியானான். சீதா பாட்டி பக்கத்தில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தாள். தாய் ராஜியும் மகள் பத்மாவும் உள்ளே அறையில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

 அங்கே மணமகன் ரகுராம் வீட்டினர் டில்லியிலிருந்து கிளம்பி சென்னையில் இருக்கும் அவர்கள் உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அடுத்த நாள் காலை முதலே வீடு அல்லோல படுகிறது. பானு பின்னி பேத்தியை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு,” டென்ஷன் ஆகாதேம்மா. எல்லா நல்ல படியா நடக்கும்” என்று பேசி அவள் பயம் போக்கினாளென்றால், அம்மம்மா ராஜியோ
பேத்திக்கு தலை குளிப்பாட்டி, காயவைத்து என அவளை பார்த்துக்கொண்டாள்.

தியாகும் ஷ்யாமும் போய் வேண்டியதை வாங்கி வந்தனர். இரு சம்ம்பந்திகளும் பத்மாவுக்கு துணையாக சமையல்கட்டில் வேலை பார்த்து சாயந்திரத்திற்கு தேவையான பலகாரங்களை செய்து வைத்தார்கள். மதிய சாப்பாடும் முடிந்து கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்த பத்மா ஃப்ரெஷ்ஷாக டிகாக்‌ஷன் போட்டு, பாலை காய்ச்சி எல்லோரும் காபி கலந்து கொடுத்தாள்.

எல்லோரும் ரெடியானார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரும் நேரமாயிற்று.....

தொடரும்.