அவங்க மகன் தன் மனைவி, குழந்தையுடன் வந்ததும்
நேரா அப்பா இருக்கும் ரூமுக்கு போய் பார்த்தாரு.
டிரிப்ஸ் ஏத்தி இருந்தாங்க. முகம் கொஞ்சமா வாட்டமா
இருந்தது மகனைக்கண்டதும் ஜொலிக்க ஆரம்பிச்சது.
மகனைக்கட்டிகிட்டு அம்மா அழ, ஆதரவா அப்பா கைய
தடவிக்கொடுத்திட்டு மருத்துவரைப் பார்க்க நகரும் முன்
மனநல மருத்துவரே அங்கே வந்திட்டாரு.
“ஓ நீங்கதான் ராமசாமி சாரோட மகனா?” எல்லாம் கேட்டுட்டு
உங்க அப்பாவுக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்ல.
வயதான காலத்துல பெத்தவங்களுக்கு அன்பு அனுசரனையும்
தேவை. அவங்களை கவனிச்சுக்கறது ரொம்ப முக்கியம்”
அப்படின்னு சொல்ல....
கவனிச்சுக்கிட்டுத்தானே இருக்கேன் டாக்டர்” அப்படின்னு மகன்
சொல்ல....”என்ன மனுஷன் இவருன்னு?” எனக்கு கோவம்
வந்தது. அந்நியரான நம்மளை அங்கே இருக்கச் சொன்னதே
பெரிய மனசுன்னு நினைச்சு பேசாம இருந்தேன்.
”பெத்தவங்க தேவைகளை பக்கத்தில் இருந்து கவனிக்கணும்
மிஸ்டர் பாஸ்கர்!” அதுதான் அவங்களுக்கு முக்கியம்”
“என்னைப்பெத்தவங்களுக்கு மாசாமாசம் பணம் அனுப்பிகிட்டுத்தான்
இருக்கேன் டாக்டர்”னு சொன்னவரைப் பார்த்து அழறதா சிரிக்கிறதான்னு
புரியலை. டாக்டரும் இவர் புரிஞ்சுதான் பேசறாரா? புரியாமத்தான்
பேசறாருன்னு குழம்ப ஆரம்பிக்க,
“பணத்தை மட்டும் அனுப்பினா போதுமான்னு தானே கேக்கறீங்க?!!”
என்னைப் பெத்தவங்களுக்கு பணம் போதும். சின்ன வயசுலேர்ந்து
எங்களுக்கு அவங்க சொல்லிக்கொடுத்தது அதுதான். நானும்
அக்காவும் சாதாரண பள்ளியிலதான் படிச்சோம். ஒரு கட்டத்துல
அக்கா படிப்பை நிப்பாட்டி வேலைக்கு போகச்சொன்னாரு. பெரிய
படிப்பு படிக்கணுங்கற கனவுல இருந்த காலேஜ் அக்காவுக்கு
காலேஜ் கூட முடிக்காம அவசர அவசரமா
கல்யாணம் முடிச்சாங்க. நான் படிக்கும் போதுகூட “நீ நல்லா படிச்சு
நல்ல வேலைக்குப் போனாத்தான், நல்ல சம்பளம் கிடைக்கும். என்னையும்
அம்மாவையும் உக்கார வெச்சு சோறு போடலாம்னு” சொல்லியே
வளர்த்தாரு. அம்மாவும் பக்கத்துல இருந்த பள்ளிக்கூடத்துல
டீச்சர் வேலைப் பார்த்தாங்க!!!” என கோவமா சொன்னாரு.
“பெத்தவங்க கஷ்டப்பட்டு உழைக்கிறது பிள்ளைகளை நல்ல
நிலையில் வளர்க்கணும் என்பதற்காகத்தான் மிஸ்டர்.பாஸ்கர்.
தன் வாழ்க்கையையே தியாகம் செய்யறாங்க” என்றார் டாக்டர்.
”இரண்டு பேரும் வேலைக்கு போனாங்களே! எங்க வீட்டுல டீவி
கூட இருந்தது இல்ல. வெளியூர் எங்கயும் கூட்டிப்போனது
கிடையாது. அநாவசியமான செலவுகள் ஏதும் செஞ்சதே இல்லை.
இப்படி வயத்தக்கட்டி வாயக்கட்டி சேத்து வெச்ச பணத்தை
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு குடுத்து ஏமாந்தாங்க. அக்கா
சேத்து வெச்ச பணத்துலதான் அவங்க கல்யாணம் நடந்தது.
என் படிப்பு கூட ஸ்காலர்ஷிப்லதான்.” என்று முகம் சிவக்க
சொல்ல ராமசாமி அப்பா, கோகிலாம்மா கண்ணுலேர்ந்து
தாரை தாரையா கண்ணீரு.
“ பெத்தவங்களைத் தவிக்க விடணும்னு எந்த பிள்ளையும்
நினைக்கறதில்லை. பெத்தவங்களூக்கு கூடிய மட்டும்
உதவியாய் இருக்கத்தான் பாக்கறோம். ஆனா அப்பாக்கு தான்
சின்ன வயசுல பணம் இல்லாம கஷ்டப்பட்டதால, தன்னை
யாரும் பெருசா மதிக்காம போயிட்டதால பணம் சம்பாதிக்கணும்
எனும் வெறியே உருவாகிடிச்சு. அம்மாவும் வேலைக்குப்போக
பக்கத்து வீட்டுல சாவி வாங்கிகிட்டுத்தான் நானும் அக்காவும்
வீட்டுக்கு வந்து காலையில் ஆக்கி வெச்சிருந்த சோத்தை
திம்போம்.
அப்பா ராத்திரி 11 மணிக்குத்தான் வருவாரு. நாங்க அவரோடு
சேர்ந்து விளையாடியது, கதை பேசியதுன்னு எதுவும் இல்லை.
அம்மா, அப்பா அரக்க பரக்க ஓடிக்கிட்டு இருந்தாங்க. நானும்
அக்காவும் ஒரு ஞாயிற்றுக்கிழமைக்காக எவ்வளவு ஏங்கி
இருப்போம் தெரியுமா? அன்னைக்குத்தான் ம்தியச் சோறு
எல்லோரும் சேர்ந்து திம்போம். பணம் சம்பாதிச்சாங்க.
ஆனா அதை அனுபவிக்கவும் இல்லை, எங்களையும்
அனுபவிக்கவும் விடலை. பணத்தை விடுங்க டாக்டர்.
என்னை ஒரு 6 வயசு பையனா மாத்த முடியுமா?
எங்க அப்பா,அம்மா கைய பிடிச்சுகிட்டு நான் நடக்க, எங்க
அக்காவும் கூட வர ஒரு கோவிலுக்கு கூட போனதில்லை!
நாங்க எங்கயும் சேர்ந்து போனதில்லை. அவங்க வேலைக்கும்,
நாங்க படிப்புக்கும் தான் ஓடிக்கிட்டு இருந்தோம்” அப்படின்னு
கண்ணுல தண்ணியோட சொல்லிக்கிட்டு இருக்க டாக்டருக்கு
என்ன பேசன்னு தெரியலை....
பாஸ்கர் அண்ணாவோட மகன் ஓடிவந்து அவரைக்கட்டிகிட
அவனை இழுத்து அணைச்சுகிட்டே,” இப்படி கூட எங்கப்பா
கிட்ட நான் நின்னதே இல்ல டாக்டர். எல்லா பிள்ளைகளுக்கும்
அவங்க பெத்தவங்கதான் ரோல் மாடல். எனக்கும் என்
பெற்றோர்தான் ரோல்மாடல். எதுக்குத் தெரியுமா? பிள்ளைகளிடம்
எப்படி நடந்துக்க கூடாது என்பதற்கு. அவரை மாதிரி
நானும் ஆகிடக்கூடாதுன்னுதான் என் குழந்தையின் பருவத்தை
அவனுடன் சேர்ந்து அனுபவிக்கணும்னு முடிவு செஞ்சிட்டேன்.
என் மகனின் பள்ளிப்ராயத்தில் நான் இழந்த சந்தோஷங்களை அவனுக்குத்
தரணும்.
என்னைப் பெத்தவங்களுக்கு பணம் இருந்தா போதும்.
அதனால அதை மட்டும் அனுப்பிகிட்டே இருப்பேன்.
வயசான காலத்துல மட்டுமில்ல டாக்டர் அறியாத வயசுலயும்
அன்பும் அனுசரணையும், அருகாமையும் ரொம்ப முக்கியம்.
எங்களுக்கு அதுகிடைக்கல. இப்ப என்னை குத்தவாளி
ஆக்கறாங்க. தன் பெற்றோரை சரியா கவனிக்காத மகன்
மீது பெத்தவங்க வழக்குத் தொடரலாம்னு சட்டம் சொல்லுது.
ஆனா குழந்தைதானேன்னு கண்டுக்காம விட்டு எங்க
மனசுல அன்புக்கான ஏக்கத்தை உருவாக்கின பெத்தவங்களை
என்ன செய்யலாம்??!!!! இதுக்கு ஏதும் சட்டம் இருக்கா?”
அப்படின்னு பாஸ்கர் அண்ணா கேட்ட கேள்விக்கு அங்க
இருந்த யாருக்குமே விடைத் தெரியலை!!!
உங்களுக்கு விடை தெரியுமா???