Showing posts with label கொண்டாட்டம். Show all posts
Showing posts with label கொண்டாட்டம். Show all posts

Friday, November 30, 2012

வாழ்த்து சொல்லும் நேரமிது....... :)))

போன வருஷமே இந்த டென்ஷன் ஆரம்பமானிச்சு. தான் மேலே படிக்கணும்னு அயித்தான் ஆசைப்பட்டாக. இலங்கையில் இருந்தப்பவே எம்பிஏ சேர்ந்தாங்க. அப்பத்தான் இங்க மாத்தலாகி வர அது அப்படியே நின்னு போச்சு. ஐஐஎம்ல கோர்ஸ் ஜாயிண்ட் செய்யலாம்னு முயற்சி செஞ்சாரு. 800 அப்ளிகேஷன் வந்ததுல 80 பேர்தான் செலக்ட்டானங்க. அயித்தானுக்கும் அட்மிஷன் கிடைச்சதுல ரொம்பவே மகிழ்ச்சி. ரொம்ப பெருமையாவும் இருந்துச்சு.

 ஜனவரி2ஆம்தேதி வகுப்பு ஆரம்பமானிச்சு. முதல் கிளாஸ்லேயே அடுத்த 11 மாதங்கள் உங்கள் வாழ்க்கை அடுப்பில் இருக்கும் பிரஷர் குக்கர் மாதிரிதான்!!!!னு குண்டு போட்டாங்களாம். வேலை + ஆன் கேம்பஸ் வகுப்பு + ப்ராஜக்ட்கள் + பரிட்சைகள் எல்லாம் இருக்கே. 3 மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் முழுதும் வகுப்பு. இதைத் தவிர சனிக்கிழமைகளில் மாதத்திற்கு (2)வகுப்புக்கள். அட்டெண்டென்ஸும் முக்கியம். ஆபிஸ் வேலையும் விட முடியாது. அதுவும் ஒரு கம்பெனிக்கு CEO போஸ்ட்ல உக்காந்துகிட்டு இருக்கும் போது ஒரு வாரம் ஆள் ஆபிஸில் இல்லைன்னா போன் கால் மேல போன் கால்தான்.

இங்கேயிருந்து கிளம்பி பெங்களூர் போய் சேர்ந்த உடன் ஆரம்பிக்கும் போன் கால்... அயித்தானோட கிளாஸ்மேட்கள் இருவருக்கு பிரஷர் தாங்க முடியாமல் உடல்நிலை சரியில்லாம போயிடிச்சு. ஒருவருக்கு ஹார்ட் அட்டாகே வந்திருச்சு. மார்ச்மாதம் வரைக்கும் கூட தாங்க முடியலை. இப்ப படிக்க சேர்ந்து தப்பு பண்ணிட்டோமோன்னு அயித்தான் யோசிக்க ஆரம்பிச்சாங்க.

 நான் மாண்டிசோரி கோர்ஸ் படிச்ச போது அயித்தான் தான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பசங்களை பாத்துக்கிட்டு உதவி செஞ்சது. இப்ப நம்ம டர்ன் ஆச்சே.. :)) களத்துல குதிச்சேன். பசங்க கிட்ட பேசினேன். சனிக்கிழமை இரவு வெளியே செல்வது என்பது எங்க வீட்டுல எழுதப்படாத விதி. ஆனா இப்ப அயித்தானின் வகுப்பு இருப்பதால முடியாது. தவிர அயித்தானுக்கு தான் கால்ல சக்கரத்தை கட்டி விட்டாமாதிரி டூர் இருக்குமே. இதனால பிள்ளைகள் வெளியே போக முடியலையேன்னு வருத்தப்பட்ட போது பசங்களை உட்கார வெச்சு பேசினேன்.

 இப்ப நம்ம சப்போர்ட் அப்பாவுக்கு ரொம்ப முக்கியம். உங்களுக்கு பரிட்சை வருதுன்னா நானும், அப்பாவும் எவ்வளவு அட்ஜஸ்ட் செஞ்சுக்கறோம். இப்ப நீங்க உங்க பங்களிப்பை செய்யணும். ஐஐஎம் மாதிரி இடத்துல அட்மிஷன் கிடைக்கறதே பெருசு. அதுல அப்பா இந்த வயசுல படிக்கறாங்க. சின்ன வயசுல படிக்க முடியலை. ஆனா அந்தக்கனவை நனவாக்க அவர் பாடுபடறார். நாமளும் ஒத்துழைச்சாதான் முடியும்னு சொன்னேன். பசங்க அப்பாகூட வெளிய போக முடியலையேன்னு புலம்பாம புரிஞ்சுகிட்டாங்க. (ஞாயிற்றுக்கிழமை காலை அப்பாவைக்கட்டிக்கிட்டு 1 மணிநேரம் கிடப்பாங்க. அது கூட முடியாம சனிக்கிழமை வகுப்பு முடிஞ்சு ட்ரையின் பிடிச்சு ஞாயிறு காலைதான் வருவார்)

 அப்பா வகுப்புக்கு கிளம்பினா ஆல் த பெஸ்ட், எஞ்சாய்னு சொல்லி வழி அனுப்ப ஆரம்பிச்சாங்க. அயித்தான் கிட்ட மோடிவேஷனா பேசினேன். உங்களுக்கு இது நல்ல சான்ஸ். 800 அப்ளிகேஷன்ல நீங்கல் செலக்டாகி இருக்கீங்க. எந்த ரெக்கமண்டேஷனும் இங்க வேலை செய்யாது. உங்க இத்தனை வருட எக்ஸ்பீரியன்ஸுக்கு கிடைச்ச அங்கீகாரம் இது. நானும், பசங்களும் எங்களால ஆன ஒத்துழைப்ப கொடுக்கிறோம்.

 இந்த படிப்புக்காக உங்க நண்பர் அலுவல வேலையை விட்டு படிக்கப்போனாரு. ஆனா உங்களுக்கு உங்க கம்பெனி அந்த நேரத்துல விடுப்பு எடுத்துக்க அனுமதி, சில சலுகைகள் எல்லாம் கொடுத்திருக்கு. கஷ்டமாத்தான் இருக்கும். நான் மாண்டிசோரி படிச்சபோது அந்த ப்ராஜக்ட் வேலைகள் ரொம்ப கஷ்டம். ஆனாலும் சின்னக்குழந்தைகளை வெச்சுக்கிட்டு செஞ்சு முடிச்சேன். உங்களாலும் முடியும்னு சொன்னேன்.

 மேமாதம் விடுமுறைக்கு பெங்களூர் போயிருந்த போது பசங்க ஐஐஎம் சுத்தி பார்க்க போனபோது, அப்பாவின் வகுப்பு, அவர் படிக்கறது எல்லாம் பாத்துட்டு, சூப்பர் நாநான்னு பாராட்டு. பெருமையா இருக்குப்பா உங்களை நினைக்கும்போதுன்னு சொல்ல, அவருக்கு இன்னும் எனர்ஜியா இருந்தது.

வேலைப்பளு, பயணம் அதோடு குறிப்பிட்ட நேரத்தில் ப்ராஜக்ட் செஞ்சு அனுப்பனும், அதிலும் குரூப்பா செய்யணும். மார்க்கட்டிங் ப்ராஜக்ட் வந்தபோது அயித்தான் ரொம்ப ஈசியா செஞ்சாரு. ஏ கிரேட் கிடைச்சது அவங்க குரூப்புக்கு. “எப்படின்னு உடன் படிக்கறவங்க வியக்க, என்னுடைய இத்தனை வருட எக்ஸ்பீரியன்ஸே மார்க்கட்டிங் & ஸ்டேர்டஜிலதானான்னு சிரிச்சார். 3 ப்ராஜ்க்ட்ல ஏ கிராட், 2 எழுத்து தேர்வுல பி கிரேட்ன்னு வர நாங்க வீட்டுல அயித்தானுக்கு ட்ரீட் கொடுத்தோம். :))

 இதோ இந்தவாரத்தோட வகுப்பு முடியுது. இன்றைக்குத்தான் கடைசி வகுப்பு. ஓடினதே தெரியலைன்னு இப்ப நினைக்கறோம் ஆனா..... அவ்வளவு ஈசியா இருக்கலை. தன்னோட கனவை நனவாக்கி இந்தியாவின் மதிப்பு மிக்க ஐஐஎம் பெங்களூருவில் அயித்தான் EGMP course செர்ட்டிஃபிகேஷன் இன்னைக்கு வாங்கறாங்க. இந்த நேரத்துல அயித்தானுக்கு வாழ்த்து சொல்லிப்பதில் மட்டில்லாத மழிச்சி.
காலையில் வகுப்புக்கு கிளம்பும் முன்னாடி போன் செஞ்சப்பவே “ஹேப்பி மாப்பிள்ளை அழைப்பு டேன்னு “ வாழ்த்து சொன்னேன்.
நாளை எங்களுடைய 17ஆவது திருமண நாள். இப்படி ஒரு உன்னதமான மனிதர் என் வாழ்வில் வந்தது எனக்கு கிடைச்ச பரிசு. இறைவனுக்கு நன்றி. க்ராஜுவேஷனுக்கும், திருமணநாளுக்கும் அயித்தானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ( ஆஹா இன்னையோட டென்ஷன் முடிஞ்சிச்சுன்னு சொல்றேன், இல்ல பிஹெச்டி பண்ணலாம்னு பாக்கறேன்னு சொல்றாரு மனுஷன். சாமி 2 வருஷம் கேப் கொடுங்க. ஆஷிஷுக்கும் அம்ருதாவுக்கும் முக்கியமான நேரம் இதுன்னு சொல்ல சிரிச்சுகிட்டே, ஓகே, ஓகே, எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவைன்னு சொல்றாரு) :)) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Monday, November 05, 2012

ஆனந்தம்... அபிஷேகம்.... கனகாபிஷேகம்....

அடுத்தபதிவு இவ்வளவு தாமதா வருவதற்கு மாப்பு கேட்டுக்கறேன். விஜயதசமி வேலைகள், ஊருக்கு போனபோது கொஞ்சமா வெயிட் தூக்கியது, வேலைக்காரம்மா 4 நாளைக்கு ஜூட் வுட்டது எல்லாம் சேத்து கை வலி அதிகமாக்கிடிச்சு. அதான் மேட்டர். :) தாத்தாவுக்கு தற்போது 84 வயது. அவரால் உட்கார்ந்து பூஜை செய்ய முடியான்னு தெரியலை. ஆனா மாமாக்கள் ரெண்டு பேரும் விருந்தினர்களை கவனிக்க வேண்டும் என்பதால் தானே உட்கார்ந்து பூஜை செய்வதாய் சொல்லிவிட்டார் தாத்தா. பூஜை, ஹோமம் எல்லாம் நல்லா நடந்தது. அபிஷேகத்திற்கு உட்காருவதற்கு முன் பிறந்தவீட்டிலிருந்து சீர்புடவை வேஷ்டி கொடுக்க வேண்டும். அதைத்தான் அபிஷேகம் முடிந்து கட்டிக்கொள்ள வேண்டும். நானும் அயித்தானும் அம்மம்மா தாத்தாவிற்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து புடவை கொடுத்து நமஸ்கரித்தோம். அபிஷேகம் செய்ய அம்மம்மாவை பேத்திகளும், தாத்தாவை பேரனும் அழைத்து சென்றோம்.
அபிஷேகம் முடிந்ததும் அம்மம்மாவை அழைத்துச்சென்று புடவை மாற்றிக்கொள்ள உதவினோம். ஆப்பரேஷன் முடிந்து 10நாளே ஆனே நிலையில் நீர் உள்ளே போய்விடாமல் மேலே கவர் வைத்து கட்டியிருந்தார் டாக்டர். பெரிய மாமா மகள் சசி ஆயுர்வேதா டாக்டருக்கு படிக்கிறாள். அவளும் கூட வந்து உதவிசெய்தால். தனக்கு இத்தனை பேர் கவனிப்பது அம்மம்மாவுக்கு கஷ்டமாக இருந்தது. நாங்கள் சின்னக்குழந்தையாக இருந்த பொழுது கவனிக்காமல் விட்டிருக்க வேண்டியதுதானே அம்மா!! இப்பொழுது நாங்கள் செய்தால் மட்டும் கஷ்டமா இருக்கோ என சொன்னவுடன் புன்னகைத்துக்கொண்டே பேசாமல் இருந்தார் அம்மம்மா.

 ஆஷிஷ் அம்மம்மாவிற்கு பெல்ட் எடுத்துவர வீட்டிற்கு சென்றிருந்தான். ஆனால் அவன் வந்தால்தான் அடுத்த ஃபங்ஷன். :)). சாஸ்திரிகளிடம் தாத்தா ஆஷிஷ் வரும்வரை காத்திருப்போம் என சொல்ல ஆஷிஷ் ஆஷிஷ் என அங்கே பல குரல். ஆஷிஷ் வந்ததும் தனது கொள்ளு தாத்தா, பாட்டிக்கு கனகாபிஷேகம் செய்தான். பொதுவாக மகன் வயிற்று பேரனை வைத்துத்தான் கனகாபிஷேகம் செய்வார்கள். ஆனால் மூத்த பேத்தியான என் மகனை வைத்து கனகாபிஷேகம் செய்ய விரும்புகிறோம் என்றதும் அம்மம்மா தாத்தாவுக்கு ஒரே சந்தோஷம். “கொடுத்து வைத்திருக்க வேண்டும். நடக்கட்டும்!!” என ஆசிர்வதித்தனர் இருவரும்.


 அடுத்து ஒவ்வொருவராக ஆசிர்வாதம் பெறவந்தார்கள். முதலில் அம்மா,அப்பா, சித்தி,சித்தப்பா குடும்பமாக நின்று ஆசிர்வாதம் பெற்றனர். அப்பா வாங்கியிருந்த ஜரிகை அங்கவஸ்திரத்தில் தாத்தாவுக்கு தலைப்பகையாக கட்ட தாத்தா அழகாக இருந்தார். :)) விழாவுக்கு வந்திருந்தவர்கள அத்தனைப்பேரும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற அம்மம்மா கையில் குங்குமக்கிண்ணத்தை வைத்து பொட்டு வைத்தார். தாத்தாவோ ஹோமம் ரட்சையை அனைவருக்கும் வைத்து ஆசிர்வதித்தார். தாத்தாவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவே இல்லை!!!!!!


 கேரளா ஸ்டைல் பால்பாயசத்துடன் அருமையான விருந்துக்கு மாமா ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த அனைவரும் சொன்ன ஒரே டயலாக். உணவு அருமை. சாப்பிடத்தான் வயிறு போதவில்லை!!! எக்ஸ்ட்ராவாக கிடைத்திருந்தால் நல்லா இருக்கும். :)) எல்லோரும் வீட்டுக்கு வந்தோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்ததும் மாமாவின் சின்னமகளிடம் பணம் கொடுத்து அனுப்பினேன்.

யாருக்கும் சொல்லாமல் நாங்கள் பேரன் பேத்திகள் எல்லோரும் சேர்ந்து அம்மம்மாவிற்காகா கேக் ஆர்டர் செய்திருந்தோம். அம்மம்மாவிற்கு மெழுகுவர்த்தி ஊதுவது பிடிக்காது. விளக்கை அணைத்து செய்வது பிடிக்காது. அதனால் இன்றளவு என் பிள்ளைகள் பிறந்தநாளுக்கு கேக்வெட்டும் முன் ஒன்று மெழுகுவத்தி ஏற்றுவது, இல்லாவிட்டால் சாமியிடத்தில் விளக்கு ஏற்றுவது என வைத்திருக்கிறேன். இதெல்லாம் எதுக்கும்மா என்றார்!” எல்லாம் பேரன் பேத்திகள் ஆசை என்றதும் ஒன்றும் சொல்ல்வில்லை.


மெல்ல வந்து உட்கார்ந்தார். தாத்தாவை மெல்ல எழுப்பி மேட்டர் சொன்னேன். உணர்ச்சி வசப்பட்டு இருந்த தாத்தாவிற்கு கையாலகவில்லை. தாத்தாவுக்கு புதுசட்டை போட்டு காலையில் தலைப்பாகை கட்டியிருந்த அங்கவஸ்திரத்தை தோலில் போட்டு புதுகையில் சுப்பராமய்யர் பள்ளியில் ஆசிரியராக கலக்கிய சுந்துசாரை மெல்ல அழைத்து வந்தேன். அப்புறம் போட்டோ செஷன்!!!


 மாமாக்கள் இருவரும் தனியாக, குடும்பத்துடன், அம்மா, சித்தி குடும்பத்துடன், நாங்கள், தவிர அம்ருதா, நான், அம்மா, அம்மம்மா மட்டும் (4 தலைமுறை), என் மாமாக்கள், தம்பி கார்த்தியுடன், ஆஷிஷ் என மாமன், மருமகன்கள், குருப்போட்டோ என போட்டோ எடுத்தோம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக நாங்கள் பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன், பேத்திக்கள் மட்டும் அம்மம்மா தாத்தாவுடன் போட்டோ எடுத்து நினைவுகளை பதிந்து கொண்டோம்.


அம்மம்மா கைபிடித்து நாங்கள் கேக் கட் செய்தோம். அம்மம்மாதாத்தாவிற்கு கேக் ஊட்டி மகிழ்ந்தோம். போட்டோ செஷனை எல்லோரும் மிகவும் சிலாகித்து சொன்னார்கள். ஜமாய்ச்சிட்டீங்க என பேரன் பேத்திகளுக்கு அம்மம்மா,தாத்தா வாழ்த்து சொல்ல ட்ரயினிக்கு கிளம்ப ரெடியானோம்.

 நான் உடனேயே கிளம்புவதில் அம்மம்மாவுக்கு வருத்தம்தான். என்னுடன் இருக்காமல் ஓடுகிறாயே என்று செல்லமாக திட்டினார். நவராத்திரி சமயத்தில் கொலுவைக்காம, பூஜை செய்யாமல், விளக்கு ஏற்றாமல் வீட்டை பூட்டிவைப்பது நல்லது என்றால் டிக்கட்டை கேன்சல் செய்துவிடுகிறேன்.... ஆனால் என்னை நீ அப்படி வளர்க்கவில்லையே அம்மா,என்றதும் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தது இப்போதும் ஈரமாக இருக்கிறது.....


ஊருக்கு வந்து பூஜை எல்லாம் முடிந்து, கைவலியும் கொஞ்சம் குறைந்ததும், அம்மா,சித்தி, மாமாக்கள் குடும்பத்தினரை போட்டோவை ஒரே போட்டாவாக இணைத்து ஆளுக்கொரு காப்பி பிரிண்ட் எடுத்து சர்ப்பரைஸாக கொரியர் செய்தேன். அம்மா இப்போது என்னுடன் தான் இருக்கிறார். கையோடு லேமினேட் செய்துவிட்டார். மாமாக்களும், சித்தியும் கூட ரொம்ப சந்தோஷப்பட்டு போட்டோவை லேமினேட் செய்யக்கொடுத்துவிட்டார்கள். :)) இனிமையான நினைவுகளின் ஞாபகங்கள்  எல்லோர் வீட்டிலும்............ :))))))

Friday, October 26, 2012

இப்படித்தான் ஆரம்பமாச்சு.....

மாமாவின் அந்த ஐடியா ரொம்ப நல்லா இருந்துச்சு. ஹை ஜாலின்னு சந்தோஷமா இருந்தது. முதலில் சின்ன அளவில் தான் செய்ய நினைச்சோம். ஆனா நான் வர்றேன், நீ வர்றேன்னு கூட்டம் கூட மாமா ஹால் புக் செய்ய வேண்டிய கட்டாயம் ஆகிடிச்சு.

 என் அம்மாம்மா திருமதி. ராஜலக்‌ஷ்மி சுந்தரேசனுக்கு 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆண்களுக்கு மட்டும்தான்80ஆவது பிறந்தநாளை சதாபிஷேகம் செய்து கொண்டாடுவாங்க. 2008ல் தாத்தாவுக்கு செஞ்சோம். அம்மம்மாவின் பிறந்தநாளையும் இப்படி கொண்டாடனும்னு ஆரம்பிச்சோம். சதாபிஷேகம் தான் ஆனா தாலிக்கட்டுவதெல்லாம் கிடையாது மத்தபடி ஹோமம் எல்லாம் உண்டு.


அம்மம்மாவுக்கு முதலில் இஷ்டம் இல்லை. தனது விருப்பத்தையும் சரியா சொல்லலை. ஆகஸ்ட் மாதம் சத்யாமாமா இங்கே வந்திருந்த பொழுது சிங்கையில் இருக்கும் தம்பிக்கு போன் போட்டு பேசி மேட்டரைச் சொன்னோம். அவன் எங்க கூட வெப்கேமில் சாட் செஞ்சுகிட்டே அம்மம்மாவுக்கு போன் போட்டான்.”என்னம்மா, பிறந்தநாள் வருது. கொண்டாடலாம்னு இருக்கோம். உன் ஐடியா என்னன்னு?, கேட்க மாமா சொல்றாருப்பா ஆனா பெருசா வேணாம்னு தோணுதுன்னு சொல்ல. உன் இஷ்டத்தை சொல்லும்மான்னான். நீ வருவியான்னு? அம்மம்மா கேட்க, நீ செஞ்சுக்கறதா இருந்தா டிக்கெட் புக் செய்யறேன்னு!!” கொக்கி போட்டான். பேரன் வர்றான்னு சொன்னதும் குஷி. சரின்னு ஒத்துக்க வேலைகள் ஆரம்பமானது.

 நவராத்திரி சமயத்தில் வரும் மூல நட்சத்திரம் (சரஸ்வதி ஆவாகனம்) அன்று அம்மம்மா பிறந்தநாள். அக்டோபர் 20 சனிக்கிழமை நாள் குறித்தாகிவிட்டது. ஆகஸ்ட் மாதமே டிக்கட் புக் செய்துவிட்டோம்.

வேலைகள் மும்மரமா நடந்துகிட்டு இருக்கும் பொழுது அம்மம்மாவிற்கு
உடம்பு சரியில்லாமல் போய் டாக்டரிடம் காட்டினால் ஹெரன்யா
ஆப்பரேஷன் உடனடியாக செஞ்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க.
ஃபங்ஷனுக்கு 15 நாள் இருக்கும்பொழுது ஆப்பரேஷன். எல்லா ஏற்பாடு
நடக்குது. நிப்பாட்டிடலாமான்னு நினைச்சோம். ஆனா டாக்டர் ஒண்ணும்
பிரச்சனை இல்லைன்னு சொன்னாரு. அம்மம்மாவும் ஆரம்பிச்சாச்சு
நிப்பாட்ட வேணாம்னு சொன்னாங்க. ஏதோ ஒரு தைரியத்தில் தொடர்ந்தோம்.


 அந்தேரி தாத்தா முன்பு மும்பையில் அந்தேரி பகுதியில் ஸ்ரீராம் நகர் காலனி எனும் ஏரியாவில் இருந்தார். அங்கே பாலக்காட்டுக்காரர்கள் தான் அதிகம். பகவதி சேவை எனும் பூஜை ரொம்ப சிறப்பாக நடைபெறும். அம்மம்மா சதாபிஷேகத்திற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமையாகவும், நவராத்திரியாகவும் இருக்க மாமா வீட்டில் பகவதி சேவை செய்வது என முடிவு செய்திருந்தார். அயித்தானின் வேலை காரணமாகவும், ஆஷிஷின் அரைப்பரிட்சை நடந்து கொண்டிருந்ததாலும் பூஜைக்கு போக முடியவில்லை.


 வெள்ளிக்கிழமை கிளம்பி சனி அதிகாலை கல்யாண் ஷ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு வசாய் போய் சேர்ந்தோம். அம்மா, சித்தி, தம்பி எல்லோரும் முன்னமே போய்விட நான் மட்டும் தான் கடைசியில்!!!


 வீட்டுக்கு பெரிய பேத்தி நான். ஆனா இந்த நிகழ்ச்சிக்கு நான் பேத்தியா போகவில்லை!!! என் புகுந்த வீடு அம்மம்மாவின் பிறந்தவீடு. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அம்மம்மாவின் உடன்பிறப்பு அந்தேரி தாத்தா இறந்துவிட அம்மம்மாவிற்கு பிறந்தவீட்டு சீர் எடுத்துச் சென்றது நானும் அயித்தானும். அதனால் பெண் வீட்டுக்காரங்க எல்லாம் லேட்டாத்தான் வருவோம். கல்யாணத்துக்கு அப்புறம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்கதான் ஏற்பாடு செஞ்சு சம்பந்திவீட்டுக்காரங்களை நல்லா கவனிக்கணும்னு கலாய்ச்சுகிட்டு இருந்தோம். இதோ சீர் வைத்த படம். இதற்காகத்தான் ஆரத்தி தட்டுக்கள் செய்திருந்தேன். வந்திருந்தவர்கள் சீரை எடுத்துவைத்துவிட்டு தட்டுக்களை போட்டோ எடுத்தார்கள். இன்னொரு தட்டில் ஸ்வீட்டை வைக்கும் முன் போட்டோ எடுத்துவிட்டார்கள். :)

Monday, February 23, 2009

வீக் எண்ட் கொண்டாட்டம் .....













பிள்ளைகள் பரீட்சைக்கு தயார்

ஆகிக்கொண்டிருப்பதால் கொஞ்சம் ப்ரேக்

கொடுக்க வெளியே அழைத்து சென்றோம்.





NTR GARDENSசென்றதே

பிள்ளைகளுக்கு ஒரே சந்தோஷம்.


ட்ரையினில் ஒரு ரவுண்ட்,
பவுண்டைன்கள், பச்சை பசேல்
தோட்டம் என மிக அழகாக இருந்தது.

சாமந்தி பூத்தோட்டத்தின் நடுவில்
புகைப்படம் என மகிழ்ந்தனர்.


முன்னாள் ஆந்திர முதல்வரும், நடிகருமாகிய
என்.டீ.ராமராவ் அவர்களின் நினைவு மண்டபத்திற்கு
அருகில் அவரது பெயரால் இந்த இடம்.
மிக அழகாக இருக்கிறது.



போன்சாய் தோட்ட புகைப்படங்களுக்கு

டெசர்ட்


அங்கிருந்து நேராக உறவினர் வீட்டிற்குச்
சென்று விட்டு நாராயணகுடாவில் இருக்கும்
தாஜ்மஹால் ஹோட்டலில் உணவருந்தினோம்.

பக்கத்து கட்டிடம் சினிமா தியேட்டர் எனச்
சொன்னார் அயித்தான். போலாமாப்பா!
என்றனர் குழந்தைகள். பாப்போம் என்று
இருந்துவிட்டார்.

மணி 9.15 வெளியே வந்து தியேட்டரில்
என்ன படம் என்று பார்த்தால் நான்
பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த
சசிரேகா பரிணயம்(சசிரேகா திருமணம்)
ஆஹா, இந்தப் படமா? என்றேன்.
போகலாமா? என்றார் அயித்தான். எனக்கு
பயங்கர ஷாக்.



காரை உள்ளே விட்டார். படம் ஆரம்பித்து
10 நிமிடம் ஆகிறது என்றார்கள். சரி
பார்ப்போம் என்று உள்ளே நுழைந்தோம்.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு
நைட்ஷோ சினிமா... (அதற்கு முன்
வைசாக்கில் “மாவிடாகுலு” (மா+விடாகுலு
எங்கள் விவாகரத்து அல்லது மாவிலை தோரணம்
எனும் பெயர் வரும்படி படம்)
படம் பார்த்தோம்.


தருண், ஜெனிலியா நடிப்பில் கிருஷ்ணவம்சியின்
இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம்.
ஒருமுறை பார்க்கலாம்.

திட்டமிட்டு சில சமயம் போக முடியாமல் போவதுண்டு.
எந்தத் திட்டமும் இடாமல் நேற்று சினிமா
பார்த்தோம். மல்டிப்ளக்ஸுகளில் அதிகம்
பணம் செலவழித்து பார்ப்பதை விட
40ரூபாயில் பால்கனி டிக்கெட் வாங்கி
இந்த மாதிரி தியேட்டர்களில் பார்ப்பதும்
தனி சுகம் தான்..

மொத்தத்தில் சென்ற வார இறுதி
கொண்டாட்டமாக இருந்தது.

(காதுல புகை, வயிற்றெரிச்சல் இதெல்லாம்
பயங்கர வந்து தாக்கப்போகுதுன்னு நல்லாவே
புரிய்து) :)))


Monday, December 15, 2008

குத்தாட்டம், கோலாட்டம், கொண்டாட்டம்!!

குத்தாட்டம், கோலாட்டம், கொண்டாட்டம்!!
இப்படித்தான் இருக்கு இப்ப வீடு!!!

டிசம்பர் துவங்கியதிலிருந்து கவுண்டவுன்
ஸ்டார்ட் ஆகிடுச்சு. தங்களோட ரூமில்
செட்டிங் எல்லாம் மாத்திட்டாங்க.


என் தங்கை(கசின்) எங்ககூடத்தான் இருக்காங்க.
வேலைக்குபோறவங்க. என் பிள்ளைகளுடன் தான்
படுத்துக்கொள்வார். மூவரும் கதை பேசி, சிரித்து
மகிழ்ந்து கிடப்பார்கள்.

"சித்தி, டிசம்பர் 20 - 25 தேதி வரை உங்களுக்கு
இந்த ரூமில் நோ எண்ட்ரி தான்!! இது ஆஷிஷ்.

"எங்கடா போகச் சொல்றத் தம்பி?"
கம்ப்யூட்டர் ரூமில் படுத்துக்கவா? இது தங்கை

"அங்கையும் புக் செஞ்சாச்சு" இது அம்ருதா.

"என்னக்கா ஆச்சு இவங்களுக்கு?"ன்னு என்னிடம்
கேட்டாள், பதிலும் பசங்களே சொல்லிட்டாங்க.

"எங்க ஃப்ரெண்டு வர்றாங்க. அவங்க வந்தா
இந்த ரூமுக்குள்ள அம்மா, அப்பாவுக்கே
எண்ட்ரி இல்ல."

மிக மிக ஆவலுடன் தன்னுடைய நட்பைச்
சந்திக்க காத்துக்கிடக்காங்க.

எங்கெல்லாம் போகணும்? என்னென்ன
செய்யப்போறாங்க, பிரதம மந்திரியின்
டூர் போல் பக்காவா ப்ளானிங் செஞ்சுட்டாங்க.

இப்ப மட்டுமா?

கொஞ்சமா கொசுவத்தி சுத்திக்கறேன்.

அயித்தான் மட்டும் இலங்கையில் இருந்த
நாட்களில் பழக்கமானவர் பாலகிருஷ்ணா.
அவரது மனைவி அண்ணபூர்ணா.
அவர்களுக்கு இரண்டு மகள்கள். பெரியவள் பானு
ஆஷிஷைவிட 1 வயது மூத்தவள், சின்னவள்
தேஜு அம்ருதாவைவிட இரண்டு மாதமே பெரியவள்.
(நான் அம்ருதாவை அம்மா என்று அழைப்பதாள்
தேஜுவை பெரியம்மா என்றுதான் அழைப்பேன்.
அப்படி அழைத்தாள் அவளும் மிக மகிழ்வாள்)

நாங்களும் இலங்கைச் சென்ற பிறகு எனக்கும்
அண்ணபூர்ணாவுக்கும் நல்ல நட்பு. அடிக்கடி
சந்திப்போம். பல இடங்களுக்கு இரு குடும்பங்களும்
சேர்ந்தே செல்வோம். பிள்ளைகளுக்குள்ளும்
நல்ல நட்பாகிவிட்டது.

ஹோட்டலில் விருந்து உண்வதற்குள்
4 பெரியவர்கள்(அதாங்க எங்க வீட்டு
குட்டீஸுகள்) மாநாடு போட்டு
யார்வீட்டுக்கு யார் போவதுன்னு
முடிவு செய்வார்கள்.


SLEEP OVER NIGHTS எங்கே என்பது
முடிவாகிவிடும். அந்த பிள்ளைகள் எங்கள்
வீட்டிற்கோ, இவர்கள் அங்கேயோ போய்
வார இறுதியை கழிப்பார்கள்.

இல்லாட்டி
போன் போட்டு "ஆஷிஷ் எங்க வீட்டுக்கு
வா" என்பாள் பானு. அங்கேயிருந்து போன்
வராவிடில் ஆஷிஷ் போன் போட்டு
பானுவையும், தேஜுவையும் எங்கள் வீட்டிற்கு
வரவழைத்துவிடுவான்.

விளையாட்டு, இஷ்டமான உணவு
என ஜாலியாக இருக்கும். 4 பேரும் ஒரே
அறையில் தூங்குவார்கள். இரவு முழுதும்
பேசிப்பேசி களைத்து நடு நசிக்கு மேல்தான்
தூங்குவார்கள். :) அப்படிப்பட்ட தோழிகள்
வரப்போகிறார்கள் என்பதால்தான் மேற்சொன்ன
ஆட்டமெல்லாம்.

அண்ணபூர்ணா எனக்கு மிக மிக நெருங்கிய
தோழி.பிள்ளைகளுக்கு அவர்கள் தன் வேலையைச்
செய்தால், வீட்டில் உதவினால் என்று நான்
பாயிண்ட்ஸ் கொடுத்து பாக்கெட் மணி அளித்து
அதை வங்கியில் போடும் பழக்கத்தை எனக்குச்
சொல்லிக்கொடுத்தவர். தனக்குத் தெரிந்தவற்றை
நாங்கள் இருவரும் பகிர்ந்துக்கொள்வோம்.

முதல் முறையாக என்னைவிட்டு அம்ருதா
தைரியமாக இருந்தது அண்ணபூர்ணாவிடம்தான்.

அவர்கள் நால்வரும் எங்கள் நால்வருக்கும்
நல்ல நட்பு. நானும் பாலகிருஷ்ணா அவர்களுக்கு
பிடித்த வாழைக்காய் பொடி செய்ய
வேண்டும், அண்ணபூ்ர்ணாவுக்கு பிடித்த
வெள்ளரிக்காய் ஆவக்காய், புளிமிளகாய்
எல்லாம் ரெடியாக வைத்துக்கொண்டு
காத்திருக்கிறேன். :)

ஐமேக்ஸில் சினிமா,தோலாரி தனி, சட்னீசில் சிரஞ்சீவி தோசா,
மெக்டோனால்ட்ஸ் என பிள்ளைகளும் திட்டத்துடன்
காத்திருக்கிறார்கள்

அயித்தானும் அவர்கள் இங்கே வருவதற்குள்
தன் டூரை முடித்துக்கொண்டு அவர்கள் இங்கே
இருக்கும்போது தன்னை ஃப்ரீயாக வைத்துக்கொள்ள
திட்டமிட்டுள்ளார்.

இதோ இந்த வாரம் பிள்ளைகளுக்கு பரிட்சை முடிந்து
அவர்கள் நண்பர்கள் வரும்பொ்ழுது விடுமுறை.
"இன்னும் 4 நாள் தான் இருக்கு, அதுக்கப்புறம்
இங்க என்ன நடக்குதுன்னு மட்டும் நீங்க பாருங்க
சித்தி" என்று சித்திக்கு டெர்ரர் மெசெஜ் கொடுத்து
கிட்டு இருக்காங்க.

"அவங்க ஊருக்குபோனதும் நீங்க என் கிட்டத்தானே
வரணும்" என்ற சித்திக்கு " அது அப்ப பாத்துக்கலாம்
என்ன அண்ணா சொல்ற?!!" என்கிறாள் அம்ருதா.