Thursday, January 17, 2013

THE IMMORTALS OF MELUHA - SHIVA TRILOGY

தம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃப்ரெண்ட் இந்த புக்கை படிச்சுக்கிட்டு இருந்ததா சொன்னாங்க. சரின்னு ஆன்லைன்ல ஆர்டர் செய்யலாம்னு பாத்தேன். (எனக்கு என்னவோ புக்கை கையில வெச்சுக்கிட்டு நாம இஷ்டப்பட்ட இடத்துல உக்காந்துக்கிட்டு, பொறுமையா படிச்சாத்தான் படிச்சா மாதிரி இருக்கும்)

 THE IMMORTALS OF MELUHA இதோட தொடர்ச்சியா THE SECRETS OF NAGAS அதுவும் வெளிவந்து ரொம்ப நாளாச்சு. ரெண்டும் சேர்த்து எனக்கு ஆஃபர் விலையில் ஃபிலிப்கார்ட்டில் கிடைச்சது. :) ரெண்டாவது நாளே புக் வீட்டுக்கு வந்திடிச்சு. ஆனா என்னவோ கையில எடுத்து படிக்க நேரம் கிடைக்கலை. 4 நாள் கழிச்சு 15ஆம்தேதி மதியம் அந்த புக்கை படிக்க எடுத்தேன்.

 சிவனை பத்தி உனக்கு என்னத் தெரியுமோ அது அத்தனையும் மறந்திட்டு புதுசா இந்தப் புத்தகத்தை படிச்சாதான் ரசிக்க முடியும் அப்படின்னு தம்பி முன்னாடியே சொல்லியிருந்தாப்ல. திபெத்திலிருந்து தனது குடியினருடன் மெலுகாவிற்கு குடிபெயர்கிறார் சிவன்னு ஆரம்பிக்குது கதை. படிக்க படிக்க சுவாரசியமா இருக்கு. மெலுகாவின் மருத்துவர் ஆயுர்வதி புதிதாக வந்திருப்பவர்களுக்கு குடிக்க ஒரு பானம் கொடுத்து, அதை குடித்த உடன் அவர்களுக்கு ஜுரம் வருவதும், அதைத் தொடர்ந்து நடப்பவைகளை படிக்கும் போது நானும் அங்கே போய் உட்கார்ந்திருப்பது போலவே இருந்தது.


சோமபானம் குடித்த சிவாவின் கழுத்து நீல நிறமாக மாற தாங்கள் ஆண்டாண்ட்டு காலமாக காத்திருந்த தங்களின் தலைவர் நீலகண்டர் வந்துவிட்டார் என மெலுகா மக்களும் அதன் பேரரசர் தக்‌ஷனும் கொண்டாடி மகிழ்வதை ஏற்க முடியாமல் சிவா தவிப்பதும், அவருக்கு அங்கங்கே வசுதேவ பண்டிதர்கள் வந்து சந்தேகம் தீர்ப்பதும் சுவாரஸ்யம்.

 
சிவன் போரிடுவது, அவரது அழகை வர்ணிக்கும் இடம்,  தேவகிரி செல்லும் வழியில் சதியை பார்ப்பது, கண்டதும் காதல் , புஜபலபராக்ரமத்தோடு இருக்கும் சிவா நடனத்தில் தனது திறமையை காட்டுவது என பல வித உணர்ச்சிகளின் கலவையா இருக்கு. மெலுகாவில் இருக்கும் நேர்த்தியான அமைப்பு, ஒழுங்கான மக்கள் என எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் சிவா, ”சோமபானம்” அவர்களை வயதாகாமல் வைத்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் அதே வேளையில் தாம் மெலுகா வந்ததும் தமக்கும், தன் குடியினருக்கும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சோமபானம் கொடுத்து ஏமாற்றியது தவறு என்று சொல்கிறார்.



 மேலும் அந்த இடத்தைப்பற்றி தெரிந்து கொள்ளும் போது படித்த ஒரு கருத்து மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விட்டது. மற்றவர்கள் இதை எதிர்க்கலாம். ஆனால் என் மனதுக்கு பிடித்ததால் சொல்கிறேன். நான்கு வர்ணங்களாக மக்களின் சாதியினர் பிரிக்கப்பட்டு இருந்தாலும், பிறப்பால் ஒருவர் அந்த சாதியினர் ஆகிவிட முடியாது. அந்த சாதியினரின் குணாதிசியம் இருப்பது அவசியம். அதனால் மெலுகாவில் ஒரு முறை இருக்கிறது.

அதாவது மெலுகாவில் கர்ப்பிணியான ஒரு பெண் உடன் மைக்கா எனும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். அவர் மட்டும்தான் அங்கே செல்ல வேண்டும். அவருடைய குடும்பத்தினர் யாருக்கும் அங்கே அனுமதி இல்லை. திறமையான மருத்துவர்கள் இருந்து அந்தப்பெண்ணிற்கு அங்கே பிரசவ காலம் வரை வைத்திருந்து பிரசவம் பார்ப்பார்கள். ஆனால் அந்தப் பெண் தான் பிரசவித்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும்!!!

அந்தக்குழந்தையை அங்கே இருக்கும் குருகுலத்தில் சேர்த்து பயிற்சி கொடுப்பார்கள். எல்லாவிதமான பயிற்சியும் எல்லா குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்கும். அதன் பிறகு தகுந்த வயது வந்ததும் எல்லா குழந்தைகளும் ஓர் போட்டி பயிற்சிக்கு ஆட்படுத்தபடுவார்கள். அந்தப் பயிற்சியில் அவர்களின் தேர்ச்சி அவருக்கு இருக்கும் அறிவை வெளிப்படுத்தும்.  அதன் பிறகு அந்தக்குழந்தைக்கு சோமபானம் கொடுத்து பிராமணனாகவோ, சத்ரியனாகவோ,  சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட சாதி குழந்தையாக உருவாகும்.

தனக்கு குழந்தை வேண்டும் என நினைக்கும் பெற்றோர், விண்ணப்பித்து தனது சாதி குழந்தையை எடுத்து வளர்க்கலாம்!!! அந்த திறமையை இயல்பிலேயே பெற்ற எந்த சாதிக்குழந்தையும் மாற்று சாதியாக இருந்தாலும் தகுதிக்கு ஏற்ப சாதி.... இதை படித்த பொழுது ரொம்பவே பிடித்திருந்தது. பிறப்பினால் மட்டும் ஒருவர் குறிப்பிட்ட சாதியினர் ஆக முடியாது என ஸ்ரீராமர் நினைத்து இப்படி ஒரு சட்டத்தை உருவாக்கியதாக இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அமீஷ் குறிப்பிட்டிருக்கிறார்.

சோமபானம் தயாரிக்கும் இடத்தை பார்க்க  செல்கிறார் சிவா, அங்கே ப்ரஹஸ்பதி நண்பனாகிறார்.  மெலுகாவின் மக்கள் சூரியவம்சிகள். சந்த்ரவம்சிகளுடன் பகை... என பலவித ட்விஸ்ட்களுடன், நாகா வம்சத்தினரின் அதிரடி தாக்குதல்கள், போர் செய்யும் உத்திகள் என பல நுணுக்கமான கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறார் அமீஷ்.

விகர்மா என ஒரு பிரிவினர் இருப்பதாகவும். அவர்களை தொட்டால் உடன் “சுத்தீகரன்” செய்து கொள்ளவேண்டும் என்று சொல்வதை சிவாவால் ஏற்க முடியவில்லை. முன் ஜென்ம விளைவால் இந்த ஜன்மத்தில் அவர்களுக்கு வியாதியோ, விபத்தோ நேர்ந்தாலும், குழ்ந்தை இறந்தே பிறந்தாலும் விகர்மா எனப்பட்டு அவர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் மட்டும்தான் சகஜமாக இருக்க முடியும்.  இதை சிவாவால் ஏற்க முடியவில்லை. காரணம் அவர் மனம் விரும்பும் சதியும் ஒரு விகர்மா பெண் என்பதுதான். ஆனாலும் சதியை எப்படி மணம் முடிக்கிறார், என்பதை படித்தால் தான் அனுபவிக்க முடியும்.


 சிவா எனும் ஒரு மனிதன் எப்படி எல்லோரும் போற்றி வணங்கும் தெய்வமாக ஆகிறான் என்பதை படம் பிடித்து காட்டுகிறது இந்த புஸ்தகம். 1 1/2 நாளில் இந்தப்புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். கீழே வைக்க மனதே வரவில்லை. படித்து முடித்த பிறகும் அதன் தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. முதல்பாகத்தின் மிக முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டார் அமீஷ். :)) அடுத்த புத்தகமான THE SECRETS OF NAGASல் தொடர்கிறது கதை.... படிக்க ஆரம்பித்திருக்கிறேன். கொஞ்சம் மெல்ல படிக்க திட்டம். இதன் 3ஆவது பாகமான oaths of vayuputra வும் வாங்கிடணும்.

எனது பார்வையில் அருமையான புத்தகம்THE IMMORTALS OF MELUHA!!! இதை எழுதியிருக்கும் அமீஷிற்கு வயது 37தானாம். நல்ல திறமை. வாழ்த்துக்கள் அமீஷ்.





8 comments:

வெங்கட் நாகராஜ் said...

நானும் படிக்க முயல்கிறேன். ஏற்கனவே நண்பர் ஒருவர் The Secret of Nagas புத்தகம் பற்றி சொன்னபோதே படிக்க நினைத்திருந்தேன்.....

வல்லிசிம்ஹன் said...

அச்சோ சூப்பர் மா. இப்பதான் ஷிவம்னு ஒரு சீரியல் பார்த்து வருகிறேன் விஜய் டிவியில். .மிகவும் பிடித்திருக்கிறது.
இப்பொ பார்த்தால் நீங்கள் அதே போல ஒரு புத்தகத்தைச் சொல்லுகிறீர்கள்.

தரவிறக்கம் செய்யப் பார்க்கிறேன்.
ரொம்ப நன்றி பா. தென்றல்.

pudugaithendral said...

வாங்க சகோ,

முதல் புக்கை படிச்சிட்டு அடுத்த புக் படிங்க அப்பதான் தொடர்ச்சி புரியும்.

வருகைக்கு மிக்க நன்றி

மாதேவி said...

நீங்கள் எழுதியதைப் படிக்கும்போதே சுவாரஸ்யமாக இருக்கின்றது.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

அந்த சீரியல் போல இது இல்லை. இது வேற மாதிரி இருக்கும். ஆனா சுவாரஸ்யம். :)


வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாதேவி

Thenammai Lakshmanan said...

மெய்யாலுமே புக் பிடிச்சிருந்துச்சா தென்றல்

என் பையன் எனக்குக் கொடுத்தான். ரெண்டு சாப்டர் கூடப் படிக்க முடியல.. தூக்கிப் போட்டுட்டேன்.

ஒரு வேளை சிவனை அவங்க முதல்ல சாதாரணமனுஷனா ட்ரீட் பண்ணது எனக்குப் பிடிக்கலையோ என்னவோ.

pudugaithendral said...

வாங்க தேனக்கா,

மெய்யாலுமே ரொம்ப நல்லா இருக்கு. நமக்கு தெரிஞ்ச சிவபுராணத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு புதுசா தெரிஞ்சிக்கற மாதிரி நினைச்சு படிங்க. ரொம்ப ரசிப்பீங்க. மஹாபாரதம் எழுதறாராம் இதே ஆசிரியர். மீ த வெயிட்டிங்.