Showing posts with label cooking. Show all posts
Showing posts with label cooking. Show all posts

Tuesday, October 22, 2013

இட்லி மஹாத்மியம் - இறுதிப்பகுதி

ஹைதையிலிருந்து சென்னை வந்தோம். அப்பதான் ஏதோ ஒரு புஸ்தகத்துல “அம்மி” அப்படிங்கற வெட் கிரைண்டர் பத்தி படிச்சேன். டேபிள் டாப். (1998 மாடல்) அது வாங்கி கொடுத்தார் அயித்தான். சூப்பரா அரைச்சு மாவு கரைச்சு வெச்சதுக்கப்புறம் அது புசுபுசுன்னு மேலெழும்பி வரும் அழகே அழகு. ஆனாலும் அந்த மாவு 2 நாளைக்குத்தான் இட்லியா வந்தது. அப்புறம் தோசைக்குத்தான் லாயக்கு.

 இந்த நிலையில் 2000மாவது ஆண்டு கோடம்பாக்கத்துக்கு வீடு மாறினோம். பக்கத்து வீட்டுல நோபல் அம்மான்னு ஒரு நல்ல தோழி கிடைச்சாங்க. அவங்க பேரு என்னவோ லீனா. ஆனா அவங்க சின்னமகன் பேரு நோபல். அவங்க வீட்டுல காலையில சுட்ட இட்லி மதியம் ஆனாலும் சாஃப்டா இருக்கும். அவங்க கிட்ட மெல்ல ரெசிப்பி கேட்டேன். ”நீங்க மாவு பொங்கி வந்ததும் கடகடன்னு கரண்டியால கலக்கி டப்பால போட்டுடறீங்க. அதான் மொதோ 2 நாள் மட்டும் இட்லி ஊத்த முடியுது.” அப்படின்னு சொன்னவங்க சொல்லிக்கொடுத்த ரெசிப்பி படிதான் இந்த 13 + வருடங்களா இட்லி செய்யறேன். (அதே மாவுதான் தோசைக்கும்) 6 நாளைக்காவது மாவு இருக்கும். 6ஆம் நாள் கூட இட்லி செய்யறேன். :))

தெரிஞ்சவங்களா போயிட்டீங்க. சரி வாங்க உங்களுக்கும் அந்த ரெசிப்பி சொல்றேன். அரிசி 3 + 1 உளுந்து . நான் பத்து  கிளாஸ் அரிசி போடுவேன்.  இதுல 4 பச்சரிசி, 6 புழுங்கரிசி.  உளுந்து முழு உளுந்துதான் உபயோகிக்கறேன். அது 3 கிளாஸ். இதுதான் ரேஷியோ.   அரிசி, உளுந்து களையும் போதுதான் இருக்கு முக்கியமான விஷயம்.  உளுந்தை ஒரு தரம் மட்டும் கழுவி நிறைய்ய தண்ணி ஊத்தி ஃபிரிட்ஜல வெச்சிருங்க. அது நல்லா ஊறிக்கும். அரிசி இரண்டையும் ஒண்ணா போட்டு 2 தடவை நல்லா கழுவி தண்ணி ஊத்தி வெளிய ஊற வெச்சிடுங்க.

அரைக்கும்போது கல்லுரல்/கிரைண்டரில் முதலில் உளுந்தை ஆட்டிக்கணும். ஃப்ரிட்ஜில் வெச்ச அதே ஜில்லு தண்ணி ஊத்தியே உளுந்தை ஆட்டிக்கணும் என்பது முக்கியம். இதனால உளுந்து சூடாகாம குளுகுளுன்னு இருக்கும். உளுந்து நல்லா கொட கொடன்னு ஆட்டி மாவை அள்ளினதக்கப்புறம்,  3 ஸ்பூன் உப்பு போட்டு பாத்திரத்தில் மூடி வெச்சிடுங்க. அரிசியை போட்டு ஆட்டி ரொம்ப மைய இல்லாம ரொம்ப கொரகொரன்னு இல்லாத பதத்துல ஆட்டி உளுந்தோட சேத்து நல்லா கலக்கி  வெச்சிட்டா மாவு நல்லா பொங்கி வரும்.
மாவு சூடாவதால தான் புளிப்பது, சரியா செட்டாகதது எல்லாம் நடக்குது.

பொங்கி வந்த மாவை கரண்டி ஏதும் போட்டு கலக்காம நல்ல டப்பர்வேர் டப்பாவில் போட்டு வெச்சிட்டா அப்படியே இருக்கும். ஒருவாரம் ஆனாலும் புளிக்காது. கடைசி நாள் வரை இட்லி ஊத்திக்கலாம். இப்ப எங்க வீட்டுல சூப்பரா இட்லி சும்மா சாஃப்ட்டா மெத் மெத்னு ஜமாய்க்கறேன்.

எங்க அவ்வா தட்டுல இட்லி ஊத்தி கொடுப்பாங்க. கொஞ்சம் குழிவான தட்டுல எண்ணெய் தடவி 2 கரண்டி மாவை ஊத்தி டோக்ளாவுக்கு வைப்பது போல அப்படியே வேக வெப்பாங்க. அதென்னவோ ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டு பசங்களுக்கு குக்கர் செப்பரேட்டரில் (சின்னது) இட்லி ஊத்தி மேலே வெங்காயம் தக்காளி எல்லாம் வதக்கி போட்டு பிட்சா இட்லின்னு கொடுப்பேன். :)) கர்னாடகாவுல இந்த  இட்லிக்கு பேரே தட்டே இட்லியாம். (தட்டே -தட்டு)



 எங்க அப்பாவுக்கு அடுக்கு தீபாரதனையில் இட்லி ஊத்தினா அவ்ளவா பிடிக்காது. அது என்ன அடுக்கு தீபாரதனைன்னு கேக்கறவங்களுக்கு. (நம்ம மாமுல் இட்லி ஸ்டாண்ட் தான்) :)


 எங்கப்பாவுக்கு துணியில சுடுவதுதான் ரொம்ப பிடிக்கும். விரும்பி ரெண்டு கூட சாப்பிடுவாங்க. (அம்மியில் அரைச்ச சட்னின்னா ரொம்ப இஷ்டம்). ஆனா எனக்கு மட்டும் என்னவோ துணியில இட்லி ஒட்டிப்பது, அதை சோப்பு போட்டு கசக்கினா சோப்பு வாசம் இட்லியில பிடிக்குமோன்னு ஒரு யோசனை. அதனால அடுக்கு தீபாரதனை தான். :)


 
 இதுலயும் சில கன்ஃப்யூஷன். இண்டாலியத்துல உபயோகிக்காதீங்க. சில்வர்தான் நல்லதுன்னு சொல்றாங்க. ஆனா சில்வர் ஸ்டாண்ட்ல குழி ஏந்தலாத்தான் இருக்கும். இட்லி உப்பி வர்றது இல்லை. சில சமயம் இந்த தட்டுகளில் இட்லி ஊத்தும்போது மேலே எழும்பி மேல் தட்டுல ஒட்டிக்கும். அதை எடுக்கும்போது பாதி இட்லிதான் மிஞ்சும்.

ஆனா ஹாக்கின்ஸ் குக்கருக்கு மாமுல் இட்லி ஸ்டாண்டை உள்ளே வைக்க முடியாது. அதுக்குன்னு ஒரு தனி மாடல் இருக்கு. அந்த மாடல் இட்லி ஸ்டாண்ட்டில் இட்லி ஒட்டாம அழகா கும்முன்னு வருது.







நான் பொதுவா இட்லி குக்கர்னு தனியா வெச்சுப்பது இல்லை.  எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்தான் எனக்கு இட்லி குக்கர். தண்ணி ஊத்தி  இட்லி ஸ்டாண்டை உள்ளே வெச்சிருவேன். குக்கிங் மோட்ல  10 நிமிஷத்துல ரெடி. குக்கரை மத்த வேலைகளுக்கு உபயோகிக்கும்போது இட்லி செய்யணும்னா கவலையே படாம எலக்ட்ரிக் குக்கரில் இட்லி செய்யுங்க. ( கரண்ட் இருக்கணும் அது தனிக்கதை)

இட்லியில் எத்தனை வகைகள் இருக்குன்னு பல பதிவுகள் போடலாம் போல இருக்கு.













காபி கலப்பது என்பது ஒவ்வொரு வீட்டுக்கும் தனி ரெசிப்பி தான். அது போல இட்லி ரெசிப்பியும். எனக்கு நோபல் அம்மா ரெசிப்பி சரியா வந்தது. அதை உங்க கிட்டயும் பகிர்ந்துகிட்டேன். உங்களுக்கு சரியா வந்தா ஜமாயுங்க.

ALL THE BEST..... HAPPY EATING.

Monday, October 21, 2013

இட்லி மஹாத்மியம்.......

 இட்லி இந்த ஞாபகம் வந்தாலே என் மனசுல கொசுவத்தி சுத்தி ஓடும் இடம் “தனம் அத்தை” வீடு. எங்க பக்கத்து வீட்டுக்காரங்க. தினமும் மாமாவுக்கு இட்லிதான் வேணும்னு அத்தை மெத்மெத்துன்னு இட்லியும் தொட்டுக்க அம்மியில் அரைச்ச காரச்சட்னியும் செஞ்சு வெச்சிருப்பாங்க. நமக்கு காலை சாப்பாடு அத்தை வீட்டுல தான். மாமா சாப்பிடும்போது மறக்காம “மருமவளை கூப்பிடுன்னு” அழைப்பு விட்டு நடராஜ் அண்ணா (தனம் அத்தை மகன்) வந்திருவாங்க.  இப்ப வரைக்கு என் ஞாபகத்துல அந்த சூப்பர் இட்லிதான்!!
   
பிறந்த வீட்டில் காலை டிபன்லாம் கிடையாது. டைரக்ட்டா லன்ஞ் தான். காலையும் மதியமும் சாப்பாடு. ராத்திரி இட்லி!!! தினம் தினம் தினம் இட்லி.... அலுப்பா இருக்கும் இந்த அரிசிகட்டியை சாப்பிட. ஆனா வேற டிபன்லாம் எப்பவாவதுதான் என்னா? அம்மா வேலைக்கு போறவங்க. அவ்வாவால இட்லிதான் அடுக்கு தீபாரதனை மாதிரி ஏத்தி வெக்க முடியும். தொட்டுக்கவா இருக்கவே இருக்கு கன்பவுடர்!!!!





நமக்கு சூடா இருந்தாத்தான் பிடிக்கும் என்பதால ஆறிபோன சோறு சாப்பிட இட்லி எம்புட்டோ தேவலாம்னு ஓட்டுவேன்.  இந்த இட்லிக்கு மாவரைக்கற வேலை இருக்கே!!!! அப்பப்பா..... கஷ்டம். அம்மா வேலைக்கு போவதால இட்லிக்கு அரைக்கபோடுவது என்னவோ பெரிய விஷயமா இருக்கும். அம்மாம் பெரிய கல்லை எடுத்து கழுவணுமே!! அதைவிடவும் கொடுமை அரிசியை களைவது. இல்லாட்டி அரைக்கும்போது கல்லு கல்லுல பட்டு நரநரன்னு சத்தமா இருக்கும்.


மும்பை போனப்பறம் இந்த வேலையெல்லாம் எனக்கு  வைக்காம அம்மம்மாவும், அத்தையுமே செஞ்சிடுவாங்க.  கல்யாணம் ஆகி ஹைதைக்கு வந்ததற்கப்புறம் தான் ”காலைச்சாப்பாடு என்ன??!!”” எனும் பிரச்சனையை நேரடியா சந்திக்கும் வாய்ப்பு. அப்ப எங்க கிட்ட மிக்சிதான் இருந்தது. அந்த பெரிய  கல்லு இருக்கும் கிரைண்டர் வாங்கவேணாம்னு நானும் அயித்தானும் முடிவா இருந்தோம். மிக்சியில் இட்லிக்கு மாவரைச்சா தோதா வராது.


அரைக்கும்போதே மாவு சூடாகிடும். கிரைண்டரில் அரைப்பது போல உளுந்தை அழகா அரைக்க மிக்சியால் முடியவே முடியாது. (இல்ல எனக்கு தெரியாது!)  இங்கே ஆந்திராவில் இட்லிக்கு போடுவதுன்னு ரொம்ப சுலபமான வேலை அவங்களுக்கு. தோசைக்கு அரைக்கணும்னா தான் மெனக்கெடுவாங்க. அதாவது உளுந்து மட்டும் ஊறவெச்சு அரைச்சிட்டு, ஊற வெச்ச  இட்லி ரவையை சேர்த்து கலக்கிடுவாங்க. அவ்ளோதான் வேலை. ஆனா நம்ம தமிழகத்து இட்லி மாதிரி சாஃப்ட்டால்லாம் இருக்காது. ஏதோ ரவா இட்லி சாப்பிட்டாமாதிரிதான் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் ருசியில் அரிசி இட்லி சாப்பிட்டமாதிரி இருக்கும்.


ஆஷிஷ் சின்ன குழந்தையா இருந்த பொழுது இட்லிதான் தினமும் தருவேன். உளுந்து உடலுக்கு பலம்னு தினம் காலை இட்லி. ஆனா அது  தயிர் வெச்சு கொடுப்பேன் என்பதால ஒண்ணும் பெருசா தெரியலை ஆஷிஷுக்கு. ஆனா அயித்தானுக்கு இட்லி ரவாவில் செஞ்ச இட்லி விரும்பி சாப்பிட மாட்டார். சரின்னு அந்த ரவையை ஊற வெச்சு அதை திரும்ப மிக்சியில் அரைச்சுன்னு என்னன்னவோ செஞ்சு பாத்தேன்..... ம்ஹூம் இட்லின்னு சொல்லிகலாம். ஆனா டிகிரி காபி மாதிரி “டிகிரி இட்லியா” வந்ததே இல்லை.


இட்லியில் என்ன இருக்குன்னு நினைக்கறவங்களுக்கு. மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேர்னோ, மெத்மெத்துன்னோ இட்லி சாப்பிட்டதான் இட்லி. மத்ததெல்லாம் இட்லி எனும் டிகிரிக்கு கீழ வராது. இட்லியே பிடிக்காதுன்னு சொன்னியே இப்ப என்ன?ன்னு கேக்கறவங்களுக்கு. தினம் இட்லி சாப்பிட்டா போரடிக்கும். ஆனா அதுவே சரியான கூட்டணியோட  வாரத்துக்கு 3 நாள் கூட சாப்பிடலாம். :))  மேலும் சில இட்லி ரெசிப்பிக்களுக்கு இங்கே






இட்லிக்கு பல வீடுகளில் சட்னி அரைக்க சோம்பிகிட்டு பொடியோட காலதள்ளுவாங்க. மிளகாய்ப்பொடி எண்ணெயில் கலந்து இட்லியை அதில் புரட்டி எடுத்துகிட்டு போவது டூருக்கோ, ட்ரையினுக்கோ ஓகே.... ஆனா வீட்டுல சாப்பிடும்போது சாம்பார், சட்னி தான் பெஸ்ட். இதுல வேர்க்கடலை சட்னி, புதினா சட்னி, வெங்காய சட்னி, காரசட்னின்னு எதுவும் சூப்பரா இருக்கும்.


ரவா இட்லிக்கு கொத்சு சூப்பர் காம்பினேஷன்.  பட்டன் இட்லி தட்டில்  இட்லி வார்த்து சுடச்சுட சாம்பார் செஞ்சு அதில் இந்த இட்லிகளை மிதக்க விட்டு கொடுத்தால் குட்லி ரெடி (எங்க வீட்டுல பட்டன் இட்லிக்கு பேரு குட்லி).  சட்னீஸுன்னு ஒரு ஹோட்டல் இங்கே ஹைதையில் அதை பத்தி சொல்லியிருக்கேன். அங்கே விஜயவாடா பாபாய் ஹோட்டல் இட்லின்னு ஒண்ணு கிடைக்கும். சூடான இட்லி தலையில வெண்ணெய் வெச்சு கொடுப்பாங்க. சும்மா........ சூப்பர் ருசி.









காஞ்சிபுரம் இட்லியோட ருசி சூப்பரா இருக்கும். இவ்ளோ சொன்னேனே எனக்கு இட்லி சரியா போட வந்ததா இல்லையா!!!


தொடரும் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.


அடுத்த பதிவு நாளை....





Friday, February 22, 2013

முட்டைக்கோஸ் சாதம்

பரிட்சை நேரத்துல பசங்களுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கும். அதற்கு அரிசி பதார்த்தம் சாப்பிட்டால் மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்குமாம்.ஆனா பாருங்க இந்த சாம்பார், ரசம் போர் அடிக்கும். சத்தான சாப்பாடும் அவசியம். என்ன செய்ய???? வீட்டுல இருந்தது முட்டைக்கோஸ் மட்டும்தான். கடைக்கு போகும் மூட் இல்லை.  வந்தது ஐடியா. இதான் இன்றைய லன்ச்.

ரெசிப்பி பாப்போம்.

தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1/4 கிலோ (நீளவாக்கில் பொடியா நறுக்கியது
பெரிய வெங்காயம் - 1 நீளவாக்கில் நறுக்கியது
பட்டாணி விருப்பப்பட்டால்
தாளிக்க ஜீரகம், கொஞ்சமாக கசூரி மேத்தி,
லவங்கம் - 2,
ஏலக்காய்-2,
பட்டை - சின்ன துண்டு,
பிரிஞ்சி இலை - சின்னது,
நெய் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - 1ஸ்பூன்,
பாஸ்மதி அரிசி - 2கப்
உப்பு - தேவையான அளவு.

சாமான்லாம் ரெடி இனி செய்ய ஆரம்பிப்போம். இன்னைக்கு ரொம்ப பொறுமையா போட்டோல்லாம் எடுத்து சமைச்சேன். அதனால ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோஸ் வருது பாருங்க. :)

பாஸ்மதி அரிசியை ஒரு தடவை நல்லா கழுவிட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி ஊறவைக்கணும். ஊறவைப்பதால சீக்கிரம் சமைக்க முடியும் + சோறு  நீள நீளமா அழகா வரும்.








வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், கசூரி மேத்தி தாளிக்கவும்.
வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வறுக்கணும். அப்புறம் நறுக்கி வெச்சிருக்கும் முட்டைக்கோஸை போட்டு நல்லா வதக்கிக்கணும். வேகவெச்ச பட்டாணியையும் சேர்த்து கொஞ்சமா உப்பு போட்டு நல்லா வதக்கி வெச்சுக்கணும்.

இன்னொரு கடாயில் நெய் ஊத்தி ட்ரை மசாலாக்களை போட்டு வதக்கிகிட்டு





தண்ணி ஊத்தி கொதி வந்ததும் கழுவி வெச்சிருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்த்து கொதிக்க விடணும்.





சாதம் உதிரி உதிரியா வெந்ததும் கொஞ்ச நேரம் ஆற விடணும். மசாலா வாசத்துடன் சாதம் ரெடி...


ஆறிய சாதத்தில் முட்டைகோஸ், பட்டாணி மிக்ஸை கலந்து மேலே கொஞ்சமா உப்பு சேர்த்து கலக்கினா முட்டைக்கோஸ் சாதம் ரெடி.
விரும்பினா கொஞ்சம் மிளகுத்தூள் கலந்துக்கலாம்.

முட்டைக்கோஸ் கறியா சாப்பிட விரும்பாதவங்களுக்கும் கூட இந்த சாதம் பிடிக்கும். பசங்களுக்கு மேலே சீஸ் துருவிப்போட்டு கொடுக்கலாம். ரய்தா, இல்லாட்டி சாஸோட பரிமாறலாம். விரும்பறவங்க காய் வதக்கும் போது ஒரு குடமிளாகாயை சேர்த்து வதக்கலாம். (பட்டாணி இருப்பதால ப்ரோட்டின் சத்து நிறைந்த சாதம் இது)




பசங்க பரிட்சையில பிசியா இருக்கலாம்.  சாப்பாட்டை தவிக்கலாம். இப்படி செஞ்சுக்கொடுத்தா கலாட்டா இல்லாம சத்தான சாப்பாடு உடம்பில் சேரும். அப்பத்தானே நல்லா கவனமா படிக்க முடியும்.

Tuesday, August 07, 2012

ஹோம்மேட் சாக்லெட் செய்யலாமா!!!!!

உங்களுக்கு சாக்லெட் பிடிக்குமா??!!!
எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே
இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடுதல்னு நினைக்கறவங்க மேலே லிங்குல
ஒரு கிளிக் செஞ்சு பதிவை படிச்சு பாத்திட்டு வாங்க. எதுவுமே
அளவா இருந்தா நல்லதுதான்?

கொழும்புவில் கலதாரி ஹோட்டலில் சாக்லெட் ரொம்ப சுவையா
இருக்கும். அதுவரைக்கும் எனக்கு கடைகளில் கிடைக்கும்
கேட்பரிஸ் வகைகள்தான் தெரியும். பூ மாதிரி, உள்ளே ட்ரைஃபுரூட்
வெச்சு, மில்க் அண்ட் சாக்லெட்னு வகை வகையா சுவையா இருக்கும்.
நண்பர்கள் கிஃப்டா அனுப்புவதும் சாக்லெட்டா தான் இருக்கும். எனக்கும்
அந்த மாதிரி சாக்லெட் வீட்டில் செய்யணும்னு ஆசை. ஆனா அந்த
ஆசை சமீபத்தில்தான் நிறைவேறியது. (2 வருஷமாச்சு :) )

கடந்த முறை ஊட்டி பயணத்தில் ஹோம்மேட் சாக்லெட் சாப்பிட்டோம்.
பசங்க நான் செய்வதைப்போலவே இருக்குன்னு சொல்வாங்க.
(அந்த பதிவுல ஹுசைனம்மா ரெசிப்பி கேட்டிருந்தாங்க) இதோ
இந்தப் பதிவுல சாக்லெட் செய்யலாம் வாங்க.

சாக்லெட் கம்பவுண்ட் வாங்கும் பொழுது முக்கியமா பார்க்க
வேண்டியது இருக்கு. 3 வகை கிடைக்குது. டார்க் சாக்லெட்,
மில்க் சாக்லெட்,வொயிட் சாக்லெட்.


டார்க் சாக்லெட் உடம்புக்கு ரொம்ப நல்லது. அதிக இனிப்பு
இருக்காது. அதனால குழந்தைகள் விரும்ப மாட்டாங்க.
பெரியவங்களுக்கு ரொம்ப நல்லது. டார்க் சாக்லெட்டுக்கு
மருத்துவ குணங்கள் இருக்குன்னு சொல்றாங்க. இங்க
போய் ஒரு எட்டு பாருங்க.



அடுத்து மில்க் சாக்லெட். இது இனிப்பா இருக்கும்.
நாம பொதுவா சாப்பிடும் சாக்லெட் மில்க் சாக்லெட்தான்.
இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.
டார்க் சாக்லெட்டும், மில்க் சாக்லெட்டும் கலந்து
உருக்கி சாக்லெட் செஞ்சா அழகான கலர்ல சுவையான
சாக்லெட் நல்லா இருக்கும்.

கடைசி வகை வொயிட். இதைத்தான் பலர் மில்க்
சாக்லெட்டுன்னு நினைப்பாங்க. கடைகளில் மில்கிபார்னு
விற்பது வொயிட் சாக்லெட்தான். கோகோ அதிகமா
வேணாம்னு நினைக்கறவங்க இந்த வகை சாக்லெட்
எடுத்துக்கலாம். (இது கோகோ பட்டரிலிருந்து
தயாரிக்கப்படுது)


முதலில் தேவையான பொருட்கள்:

choclate compound இது பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில்
கிடைக்கும். இந்த கம்பெனி நல்லா இருக்கும்.

அடுத்து மோல்ட். இதுல நிறைய்ய வெரைட்டிகள் இருக்கு.
நமக்கு வேண்டியதை செலக்ட் செஞ்சு வாங்கி வெச்சுக்கலாம்.
இதையே பலமுறை உபயோகப்படுத்திக்கலாம்.



சாமான் ரெடி. எப்படி செய்வது. இங்கதான் ரொம்ப கவனமா
செய்யணும். அடுப்பில் நேரடியா பாத்திரத்தை வெச்சு அதில்
மெல்ட் செய்யக்கூடாது. அதைவிட double boiling அப்படிங்கற
மெத்தட்ல செய்யலாம்.

double boiling கம்ப சூத்திரம்லாம் இல்ல. ஒரு பாத்திரத்தில்
தண்ணி வெச்சு அந்த தண்ணியின் சூட்டிலேயே இன்னொரு
பாத்திரத்தில் சாக்லெட் போட்டு உருகவைப்பதுதான்.

வீட்டில் மைக்ரோஅவன் இருந்தா இன்னும் சுளுவு. கண்ணாடி
பாத்திரத்தில் போட்டு 1 நிமிஷம் வெச்சு எடுத்து கரண்டியால
கலக்கினா மெல்டட் சாக்லெட் ரெடி.

இப்ப உருக்கிய சாக்லெட்டை ஸ்பூனில் எடுத்து மோல்டில்
ஊத்தவேண்டியதுதான். ஒட்டிக்குமேங்கற கவலை வேண்டாம்.
ஒட்டாது. எடுக்கவும் கஷ்டம் இருக்காது. அதனால மோல்டில்
நெய் தடவ தேவையே இல்லை.


மோல்டில் ஊத்தியதும் மோல்டை மெல்ல கையில் எடுத்து
தட்டினா சமமாகும். இல்லாட்டி இடையில் காத்து புகுந்து
பபிள்ஸ் வந்திடும். மோல்டை ஃப்ரிடிஜில் குறைஞ்சது 2 மணிநேரம்
வைக்கணும். அப்புறம் எடுத்து ஒரு ப்ளேட்டில் தட்டினீங்கன்னா
அழகான் சாக்லெட்டுகள் ரெடி.

இதுதான் பேசிக் முறை. இதில் உங்களுக்கு பிடித்த, உங்கள்
கற்பனையை சேத்து வெரைட்டி சாக்லெட் உருவாக்கலாம்.
நடுவில் ட்ரை ஃப்ரூட்ஸ் வைப்பது. ஒரு லேயர் மில்க்,
ஒரு லேயர் வொயிட் ஊத்தலாம். கற்பனை உங்கள் சாய்ஸ்!! :))
ஒரு வாட்டி உருக்கியது மொத்தம் மோல்டில் ஊத்திடுங்க.
மிச்சம் வெச்சு அடுத்தவாட்டி ஊத்திக்கலாம்னா வராது.
மோல்ட் பாக்கி இல்லாட்டி தட்டுல உங்களுக்கு விருப்பமான
ஷேப்ல ஊத்தி ஃப்ரிட்ஜில் வைக்கலாம். எங்க வீட்டுல
இன்னொன்னு செய்வோம் :))



பிஸ்கட் துண்டுகள் எடுத்து சாக்லெட்டில் பிரட்டி ஃப்ரிட்ஜில்
வைத்துவிடுவோம். மேரி, மில்க் பிகிஸ் போன்றவற்றில்
இதுமாதிரி செய்யலாம்.



நாமே வீட்டில் செஞ்சோம் எனும் திருப்தி. பரிசளிக்க பெஸ்ட்.
கிறிஸ்துமஸ் சமயங்களில் ஹோம்மேட் சாக்லெட் செஞ்சு
விற்பனை செய்யலாம். பர்த்டே பார்ட்டிகளிலும் ஆர்டர்
கிடைக்கும். (நான் இதெல்லாம் செய்யலை. ஒரு ஐடியாவுக்கு
சொல்றேன். :) )

நேத்துதான் சாக்லெட் செஞ்சேன். உடன் இருந்து படம் பிடிச்சது
அம்ருதம்மா. பசங்களுக்கு பரிட்சை, டெஸ்டுன்னு இருக்கும்
சமயம் வீட்டில் சாக்லெட் இல்லாட்டி எப்படி?

நான் கோகோ சாக்லெட் சாப்பிடுவதை தற்காலிகமா நிறுத்தி
வெச்சிருக்கேன். (நேர்த்தி :)) அதனால இன்னைக்கு வொயிட்
சாக்லெட் செய்யப்போறேன். நீங்களும் செஞ்சு பாருங்க.

தொடங்கலாமா இனிப்புடன் ஆரம்பம்.





Tuesday, January 31, 2012

CHEESE MACRONI

எங்க அம்ருதம்மா பிறந்தநாள் அன்னைக்கு இதுதான் செஞ்சு கொடுத்தேன்.
ஜூஸி ஜூஸியா வெஜிடபிள்ஸ் இல்லாம வேணும்னு அம்ருதம்மா
ஆர்டர் செஞ்சிருந்தாங்க. ரெசிப்பி தெரியாதவங்களுக்காக இங்கே
கொடுக்கறேன்.

தேவையான பொருட்கள்:
எல்போ மேக்ரோனி - 2 கப்
ப்ராஸஸ்ட் சீஸ் - துறுவியது 1/2 கப்.
மைதா மாவு - 2 ஸ்பூன்
பால் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள்( கறுப்பு மிளகுத்தூள் போட்டாலு வித்தியாசம் தெரியாது) கொஞ்சம்.
பார்ஸ்லி இலைகள் (காய்ந்தது) கொஞ்சம்.
ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன்.

எல்லாம் ரெடியா வெச்சுகிட்டாச்சா. இனி எப்படி
செய்வதுன்னு பாப்போம்.

முதல்ல இந்த மேக்ரோனியை வேக வெச்சுக்கணும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணியை வெச்சு தட்டை
போட்டு மூடி அடுப்புல வெச்சா தண்ணி டான்ஸ்
ஆடும் (அதான் கொதிப்பது) சமயத்துல் கொஞ்சம்
உப்பு, 1 ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து
அதில் இந்த மெக்ரோனியை சேர்த்து ஒரு தடவை
நல்லா கலக்கணும். இல்லாட்டி ஒரே இடத்துல
செட்டிலாகி கூட்டு குடும்பமா போயிடும்.

6 நிமிஷத்துல நல்லா வெந்திடும். எடுத்து
வடிகட்டில வடிகட்டும் பொழுதே பைப்லேர்ந்து
பச்சைத் தண்ணி (பச்சைக்கலர் தண்ணியான்னு
கேக்கக்கூடாது) மேலே விழும்படி செஞ்சோம்னா
மெக்ரோனி அதிகம் வெந்திடாமா, அதே சமயம்
ஒண்ணோட ஒண்ணு ஒட்டாம இருக்கும். அதை
அப்படியே வடிகட்டில போட்டு அடியில ஒரு
பாத்திரத்தை வெச்சிட்டு வாங்க. அடுத்த
வேலை பாப்போம்.

சீஸ் மெக்ரோனிக்கு ரொம்ப முக்கியம் வொயிட் ஸாஸ்
தயாரிப்பதுதான். ஒரு கடாயில் கொஞ்சம் பட்டர்
போட்டு, அதில் இந்த மைதாமாவைப்போட்டு
கொஞ்சம் வறுக்கணும். (ஹோட்டலில் இதோடயே
பாலை சேர்த்து கொதிக்க வைப்பாங்க) எனக்கு
அப்படி செய்யும் பொழுது கட்டிதட்டிடும். அதனால
பாலில் வறுத்து வைத்திருக்கும் மைதாவை போட்டு
நல்லா கலக்கி அடிச்சு அதை தவாவில் ஊற்றி
கொதிக்க விட்டேன். ஆனாலும் பாருங்க கொஞ்சம்
கட்டி தட்டிச்சு. சரின்னு வடிகட்டி திரும்ப கொதிக்க
விட்டேன். அத்துடன் துறுவிய சீஸ் சேர்த்து திக்காகும்
வரை கலக்கினால் வொயிட் ஸாஸ் ரெடி.

அடுத்து வேறொரு கடாய் எடுத்து அதில் ஆலிவ்
ஆயில் சேர்த்து சூடானதும் வேக வெச்சு வெச்சிருக்கும்
மெக்ரோனியைச் சேர்த்து இந்த வொயிட் ஸாஸையும்
சேர்த்து நல்லா கலக்கணும். கொஞ்சமா உப்பு,
மிளகுத்தூள் (ஜாஸ்தி போட்டுடாதீங்க) பார்ஸ்லி
இலை எல்லாம் சேத்து கலக்கி இறக்கிட்டா சீஸ் மெக்ரோனி
ரெடி.


விரும்பினா வேகவெச்ச சோளத்தை கொஞ்சமா
சேத்துக்கலாம்.

டிஸ்கி:
இன்னைக்கு காலை டிபன் பிட்சா இட்லி: :)
கொஞ்சம் குழிவான தட்டிலோ அல்லது
குக்கர் செப்பரேட்டர் கிண்ணத்திலோ எண்ணெய்
தடவி மாவு ஊற்றி ஸ்டீம் செய்தால் பிட்சா இட்லி
ரெடி. தொட்டுக்க காரம் சாரமா வேர்க்கடலை சட்னி.
அதை அப்படியே இட்லி மேலே ப்ரெட் ஸ்ப்ரெட்
மாதிரி போட்டு கொடுத்தா இன்னும் சூப்பர்.



Friday, July 29, 2011

புளி மஹாத்மியம்!!!!

புளிப்புச்சுவை - அறுசுவையில் ஒன்று. எலுமிச்சையிலும்
புளிப்பு இருக்கு என்றாலும் புளியில் கிடைக்கும் அந்த சுவையே தனிதான்.
புளி அதிகமாக சாப்பிட்டால் பிரச்சனையாகும் என பலர் நினைப்பதுண்டு.
வெயில் காலத்தில் அதிகம் சாப்பிட்டால் உடல் அதிகமாக சூடாகும்.
ஆனால் அதுவே மழைக்காலம், குளிர்காலங்களில் புளியை உணவில்
சேர்த்துக்கொண்டால் இதமான சூடு உடலுக்கு கிடைக்கும்.

ஜுரம் இருக்கும் பொழுது அல்லது ஜுரம் விட்ட 4 நாட்களுக்கு
புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. ”போன காய்ச்சலை புளியிட்டு
அழைச்ச மாதிரி” என்பார்கள் பெரியவர்கள். ஜுரம் திரும்ப வாய்ப்பு
அதிகம் என்பதால்தான் புளியை தவிர்க்கச் சொல்வார்கள். ஆனால்
அந்த சமயத்தில் புளிப்பாக சாப்பிட விரும்பினால் எலுமிச்சம்பழம்
சேர்க்கலாம்.

புளிக்கும் மருத்துவ குணம் இருக்கு. காலில் சுளுக்கு ஏற்பட்டால்
புளியை ஊறவைத்து நன்கு திக்காக கரைத்துக்கொண்டு மஞ்சள்
தூள் சேர்த்து வாணலியில் கொதிக்க விட்டு இளம் சூடாக பத்து
போல போட்டு வந்தால் வலி, வீக்கம் குறைந்து சுளுக்கும் குறையும்.
இது என் அம்மம்மா கைமருத்துவம். என் அனுபவம். :))

விக்கிப்பீடியாவில் இதன் மருத்துவ குணங்களாக சொல்லப்பட்டிருப்பதை
தருகிறேன். தமிழாக்கம் செய்ய நேரமில்லை.
Anthelminthic (expels worms), antimicrobial, antiseptic, antiviral, asthma, astringent, bacterial skin infections (erysipelas), boils, chest pain, cholesterol metabolism disorders, colds, colic, conjunctivitis (pink eye), constipation (chronic or acute), diabetes, diarrhea (chronic), dry eyes, dysentery (severe diarrhea), eye inflammation, fever, food preservative, food uses (coloring), gallbladder disorders, gastrointestinal disorders, gingivitis, hemorrhoids, indigestion, insecticide, jaundice, keratitis (inflammation of the cornea), leprosy, liver disorders, nausea and vomiting (pregnancy-related), paralysis, poisoning (Datura plant), rash, rheumatism, saliva production, skin disinfectant/sterilization, sore throat, sores, sprains, sunscreen, sunstroke, swelling (joints), urinary stones, wound healing (corneal epithelium).
ஸ்ஸ்ஸ்ஸ் எம்மாம் பெரிய்ய்ய லிஸ்ட் இல்ல.

சரி புளியை வெச்சு எம்புட்டோ சமைப்போம். நான் ஆந்திரா ஸ்டைல்
புளியோதரையும், ரசவாங்கிக்கான ரெசிப்பி சொல்றேன்.

புளியோதரை:
ஆந்திரா ஸ்டைல் புளியோதரை நல்லா சூப்பர் டேஸ்டா இருக்கும்னு
முன்பே சொல்லியிருக்கேன்.
முதலில் காய்கறிகளுக்கு போடும் பொடி செஞ்சு வெச்சுக்கோங்க.
(இதை கத்திரிக்காய, வாழக்காய், உருளை, வெண்டக்காய் ஆகிய
கறிகள் செய்யும் பொழுது போட்டால் சூப்பரா இருக்கும்)

1 பங்கு கடலைப்பருப்பு, 1 பங்கு உளுத்தம்பருப்பு, 3/4 பங்கு தனியா,
15 மிளகாய் வற்றல், கொஞ்சம் வெந்தயம். இதை வெறும் வாணலியில்
அல்லது கொஞ்சமாக எண்ணெய் விட்டு வறுத்து ஆறியதும் பொடிசெய்து
வைத்துக்கொள்ளவும்.

புளியை ஊறவைத்து நன்கு பிசைந்து மிக்சியில் ஒரு சுத்து எடுத்தால்
நல்ல புளி பேஸ்ட் கிடைக்கும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,
வேர்க்கடலை, பெருங்காயம் மி.வற்றல் 2 எல்லாம் போட்டு தாளிக்கவும்.
தாளிதம் கொஞ்சம் கூடவே வேண்டும். அதில் முக்கால் பங்கு தனியாக
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

மீதி இருக்கும் தாளிதத்தில் அரைத்து வைத்திருக்கும் புளி, மஞ்சள்தூள்,
கறிவேப்பிலை, உப்பு, நீளவாக்கில் இரண்டாக அரிந்துவைத்திருக்கும்
பச்சைமிளகாய்3 எல்லாம் போட்டு கொதிக்க விடவும். எண்ணெய்
பிரிந்து வரும்பொழுது 4 ஸ்பூன் காய்கறிப்பொடி சேர்த்து மேலும்
கொதிக்கவிடவும். நன்கு கெட்டியாகி எண்ணெய் மிதக்கும். அம்புட்டுதான்
புளி மிக்ஸ் ரெடி.



சாதம் கலக்கும் பொழுது உதிர் உதிராக வடித்த சாதத்தில் சூடாக
இருக்கும்பொழுதே பச்சை கறிவேப்பிலை போட்டு கலந்தால் கறிவேப்பிலையின்
ஜூஸ் அதில் இறங்கும். சாதம் சூடு ஆறியதும் தேவையான அளவு
புளி மிக்ஸ், உப்பு கலந்து தனியாக எடுத்து வைத்திருக்கும் தாளித்த
பொருட்களைச் சேர்த்தால் சூப்பர் புளியோதரை ரெடி. சாப்பிடும் பொழுது
அந்த பருப்புக்கள் கடுக் முடுக் என கடிபடும் ருசியே தனி. :))

அடுத்து ரசவாங்கி பாப்போம்:

ரொம்ப சிம்பிள் இது. கால்கிலோ கத்திரிக்காய். அதுவும்
எண்ணெய் கத்திரிக்காய் சைசில் இருந்தால் எண்ணெய் கத்திரிக்காய்க்கு
கீறுவது போல 4 ஆக கீறிக்கொள்ளவும்.
பெரிய கத்திரிக்காய் என்றால் குழம்புக்கு போடுவது போல பெரிதாக
வெட்டிக்கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து
நன்கு நீர்க்க கரைத்து வைத்துக்கொள்ளவும்.

மசாலாவுக்கு: அரைத்துவிட்ட குழம்புக்கு அரைப்பது போல
கடலைப்பருப்பு, தனியா, மிளகாய்வற்றல் வறுத்து தேங்காய் சேர்த்து
அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து கத்திரிக்காயைப் போட்டு
நன்கு வதக்கவும். புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள் சேர்த்து
நன்கு கொதிக்க விடவும். கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்து
வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விட்டால்
ரசவாங்கி ரெடி.



(கத்திர்க்காய், வெண்டக்காய், சொளசொள ஆகிய காய்களிலும்
செய்யலாம்.)

சப்பாத்தி, தோசை, இட்லிக்கு நல்ல சைட் டிஷ். சோற்றில்
போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.

எப்பொழுது புளியோதரை செய்ய ரெடிமேட் மிக்ஸை எடுக்கும்
நான் இன்றைக்கு மேலே சொன்ன ஆந்திரா புளியோதரை செய்தேன்.
செம ருசி. :)) கூடவே ரசவாங்கி செய்தேன். இட்லியோடு
செம காம்பினேஷனாக இருக்கு.

அனைவருக்கும் வீக் எண்ட் வாழ்த்துக்கள்

Tuesday, July 14, 2009

ஆஹா!! என்ன ருசி!!!

மழைக்காலத்தில் பிள்ளைகளுக்கு பசி கொஞ்சம்
ஜாஸ்தியா இருக்கும். சோறு, தோசைன்னா
முகம் சுளிப்பாங்க. ஏதாச்சும் சட்டுன்னு
செஞ்சு கொடுக்கணும்னா என்ன செய்வதுன்னு
குழம்புவோம்.

எனக்கு தோணிய இரண்டு ஐடியாக்களை சொல்றேன்.
உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு பாருங்க.

இட்லி மாவில், வெங்காயம், கறிவேப்பிலை,
சீரகம், மிளகு, கொத்தமல்லி இலை எல்லாம்
போட்டு கலந்து குழிப்பணியாரச்சட்டியில்
குழிப்பணியாரமா செஞ்சு எடுத்துக்கோங்க.

தக்காளி,வெங்காயச் சட்னி அரைச்சு தனியா
வெச்சுக்கோங்க.




தயாரான குழிப்பணியாரத்தை தட்டில்
வெச்சு அதில் வெங்காயச் சட்னி 1 ஸ்புன்
போட்டு மேலே காராபூந்தி, சேவ் ஆகியவை
தூவி கொடுத்தா சூப்பரா இருக்கும்.
விரும்பறவங்களுக்கு தயிர் கொஞ்சம் சேத்தா
தஹி பூரி போல சுவையோ சுவை.

*****************************************

காலேல செஞ்ச இட்லியை இட்லி உப்புமா
இல்லாட்டி இட்லி ஃப்ரை இது மாதிரி செய்வோம்.

இட்லியையும் மேலே சொன்ன மாதிரி
அலங்கரிச்சு கொடுத்தா பாராட்டு மழைதான்.

எங்க வீட்டு குட்டீஸ் ஆஷிஷ் அம்ருதா
சுவைல மயங்கி அன்னைக்கு முழுக்க எனக்கு
ஒரே பாராட்டு மழைதான் போங்க.

Tuesday, November 04, 2008

வாரத்திட்டம்- 6- பாலக் சூப்

இந்த சூப்பை பிள்ளைகளும் மிகவும் விரும்புவார்கள்.
பிள்ளைகளை மிகவும் கவர்ந்தது POPEYE.
இந்த சூப்பை சாப்பிட்டால் நீயும் பாப்பாய் மாதிரி
ஸ்ட்ராங்காக ஆகலாம் என்று சொல்லி சொல்லியே
குடிக்க வைத்துவிடலாம்.



பாலக் சூப் தேவையான பொருட்கள்:

பாலக்/பசலைக்கீரை - 1 கட்டு
இஞ்சி - 1 சிறிய துண்டு
தக்காளி - 1
ஃபரெஷ் கிரீம் 2 ஸ்பூன்.
எண்ணெய்/ பட்டர் 1 ஸ்பூன்

செய்முறை:
கீரையைச் சுத்தமாக்கி காம்பை
எடுத்துவிடவும்

வாணலியில் பட்டர் சேர்த்து
மேற்சொன்ன எல்லாவற்றையும் போட்டு
வதக்கவும்.

சற்றி ஆறியதும் மிக்ஸியில் போட்டு
மைய அரைக்கவும்.

அரைத்த விழுதை தேவையான அளவுத்
தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து
உப்பு, மிளகு சேர்த்தால் சூப் ரெடி.

விரும்புப்வர்கள் ஃபரெஷ் கிரீம் கொஞ்சம்
சேர்க்கலாம்.

டிப்ஸ்:

பாலக், முந்திரி சேர்த்து அரைத்தால் கொஞ்சம்
ரிச்சாக, திக்காக இருக்கும்.








Monday, October 13, 2008

சாலட்

தமிழ் சமையல் வலைப்பூ திரட்டிவாரத்திட்டம்:5ற்காக எனது பதிவு.

பழங்கள் சாலட் செய்தால் எனக்கு மிகவும்
பிடிக்கும். ஆனால் இந்த கஸ்டர் பவுடரை
கரைத்து சேர்ப்பது எனக்கு பிடிக்காது. :(




நான் செய்யும் சாலடிற்கான ரெசிப்பி இதுதான்.

உங்களுக்கு விருப்பமான பழங்கள்
(ஆப்பிள்-2, வாழைப்பழம் 2, பப்பாளி-1 ,
அன்னாசி -1, திராட்சை-100கி.ம் போன்றவை)
இவைகளில் திராட்சை தவிர மற்ற
பழங்களை கழுவி சதுரமாக நறுக்கி
வைத்துக்கொள்ளுங்கள்.

அதை ஒரு கிண்ணத்தில் போட்டு
1 ஸ்பூன் சர்க்கரை, 1/2 டம்பளர்
காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி
கொஞ்சம் (விரும்பினால்) சேர்த்து
நன்றாக கலக்கவும். 1 மணிநேரம்
கழித்து கிண்ணங்களில் போட்டு சாப்பிட
சாலட் ரெடி.




பால் சர்க்கரைக்கு பதில் 3ஸ்பூன் மில்க் மெய்ட்
சேர்க்கலாம்.

பிள்ளைகளுக்காக இந்த சாலட்டின் மேல்
வெந்நிலா ஐஸ்கிரிம் போட்டு கொடுக்கலாம்.

Thursday, August 28, 2008

நானானிக்காக ஒரு விருந்து

நானானி உங்கள் பிறந்த நாளுக்கு வித்தியாசமான( சற்று
தாமதமான) விருந்து
இது. வடை, பாயசத்தோடு கொடுதால் தான் விருந்தா.
எனக்கு மிகவும் பிடித்ததை(உங்களுக்கு நிச்சயம்
பிடிக்கும்) விருந்தாக கொடுக்கிறேன்.


மோர்க்களி:



தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 3/4 கப்,
புளித்த மோர் - 1 கப்
உப்பு, தேவையான அளவு.

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்க.

மோர் மிளகாய் - 4.
எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அரிசிமாவை, மோரில் உப்பு போட்டு கரைத்து
வைத்துக்கொள்ளவும். (கொஞ்சம் நீர்க்க
இருக்க வேண்டும்)

வாணலியில் எண்ணெய் விட்டு மோர்மிளகாயை
வறுத்துக்கொண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை தாளித்து, கரைத்து
வைத்திருக்கும் மாவை ஊற்றி நன்றாக
கிளறவும். பக்கங்களில் ஒட்டாமல் வந்ததும்
தட்டில் ஊற்றி வெட்டி கொள்ளலாம்.

( நான் தட்டி ஊற்று ஆறும் வரையெல்லாம்
வெயிட்ட மாட்டேன். கொதிக்க கொதிக்க
தட்டில் போட்டுக்கொண்டு ஒற்றை விரலால்
எடுத்து சாப்பிடாவிட்டால் மோர்க்களி
சாப்பிட்டதுமாதிரி இருக்காது)

மோர்க்களிக்கு சிறந்த காம்பினேஷன்
வெந்தயக் குழம்பு.



புளி - 1 சிறிய எலுமிச்சம்பழ அளவு
உப்பு - 1 1/2 ஸ்பூன்.
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
வற்றல் மிளகாய் - 4
பெருங்காயம் - 1 துண்டு
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை, தாளிக்க
உளுந்து அப்பளம் 6
எண்ணெய் தேவையான அளவு (ந.எண்ணெய்
வாசனை ஊரைத்தூக்கும்)


செய்முறை:

புளியை ஊறவைத்து
(2 டம்பளர் அளவு தண்ணீர் வருமாறு)

புளிக்கரைசல் தயாரித்துக்
கொள்ளவும்.


அப்பளத்தை மடித்து வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி
அப்பளத்தை பொறித்துவைத்துக்கொள்ளவும்.

மீதி இருக்கும் எண்ணெயில்
கடுகு, உளுத்தம் பருப்பு,
துவரம் பருப்பு, கறிவேப்பிலை
பெருங்காயம் தாளித்து சாம்பார்பொடி
உப்பு சேர்த்து பிரட்டவும்.

கரைத்து வைத்திருக்கும் புளிகரைசலை
ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க
விடவும்.

இறக்கி வைத்து பொறித்து
வைத்துள்ள அப்பளத்தை போட்டால்
சுவையான அப்பள வெந்தயக் குழம்பு ரெடி.

Tuesday, August 12, 2008

கொத்து பரோட்டா. இல்லை இல்லை கொத்து சப்பாத்தி செய்வது எப்படி?




நான் கொத்து பரோட்டா செய்வது எப்படின்னு பதிவு
போடுவதில்லை. கொத்து சப்பாத்தி செய்வது
எப்படின்னு தான் பதிவு போடப்போறேன்.

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 3
(நீங்க செஞ்சாலும் சரி, கடையில்
வாங்கிக் கிட்டாலும் சரி)
வெங்காயம்- 1 பொடியா நறுக்கியது
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது.
கறிவேப்பிலை, கடுகு, தாளிக்க எண்ணைய்.
உப்பு, பச்சை மிளகாய் - 1

தேங்காயப் பால் கட்டிப்பால் 1/4 டம்பளர்.

செய்முறை:

சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து
கடுகு, பச்சை மிளகாய் தாளித்து கறிவேப்பிலை
சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம், தக்காளி
சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு வெட்டி வைத்திருக்கும் சப்பாத்தியை
அதில் சேர்த்து பிரட்டி உப்பு சேர்க்கவும்.

கடைசியில் தேங்காய்ப்பால் சேர்த்து
கிளறினால் கொத்துச் சப்பாத்தி ரெடி.

Friday, July 18, 2008

தமிழ் சமையல் வலைப்பூ திரட்டிக்காக என் படைப்பு.




இந்தவாரம் தயிரை வைத்துச் செய்யப்படும் உணவை
பதிவாக போட வேண்டும் என்பது தமிழ் வலைப்பூ சமையல்
திரட்டியின் வாரத்திட்டம்.


என்னுடைய பதிவு கடி பக்கோடி: KADI PAKODI

கடி இது தயிரில் தயாரிக்கப்படுவது. பாசிப்பருப்பு, அல்லது
மைசூர் பருப்பில் செய்யப்படும் கிச்சடி (பொங்கலுக்கு)
சூப்பர் ஜோடி இந்தக் கடி. கடிக்காகவே இன்னும் ரெண்டு
கரண்டி கிச்சடி சாப்பிடுவீங்க.

தேவையான பொருட்கள்:

கடி செய்ய:

தயிர் - 400 கிராம்.(கடைந்து வைத்துக்கொள்ளவும்)
கடலை மாவு - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிட்டிகை அளவு.
உப்பு தேவையான அளவு.
பச்சை மிளகாய் - 2
கடுகு,சீரகம் தாளிக்க எண்ணைய்.
தண்ணீர் 2 கப்.

பக்கோடி செய்ய தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/2 கப்
விரும்பினால் சோடா- 1 சிட்டிகை.
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.
கொத்தமல்லித்தழை கொஞ்சம்.(பொடியாக அரிந்தது)
பெருங்காயம் சிறிதளவு.
(விரும்பினால் மசித்த உருளைக்கிழங்கு 1/4 கப்)
பொறிக்க எண்ணைய்.

செய்முறை:

பக்கோடி செய்முறை. மேற்சொன்ன சாமான்கள்
அனைத்தையும் ஒன்றாக பிசைந்து (தேவையானால்
கொஞ்சம் நீர் சேர்த்து) உருண்டையாகவோ,
சிறிய தட்டையாகவோ தட்டி எண்ணையில்
பொறித்து வைத்துக்கொள்ளவும்.

கடி செய்முறை:
கடலைமாவில் நீர் சேர்த்து கலந்து அடுப்பில்
வைத்து கொதிக்க விடவும். பச்சை வாடை
போக கொதித்ததும், கடைந்து வைத்துள்ள
தயிரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி
வைத்து கடுகு, பச்சைமிளகாய், சீரகம் தாளிக்கவும்.

பரிமாறுவதற்கு சற்றுமுன் பக்கோடியைச் சேர்த்து
பரிமாறாவும்.

Friday, July 11, 2008

GUTHI VANKAYA ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர்

குத்தி வங்காய. சின்ன கத்திரிக்காய்.

புதுகை பக்கம் திருகட்லை என்கிற் ஊரில் சின்னக் கத்திர்க்காய்
ரொம்ப ப்ரபலம்.

சூப்பர் மார்க்கெட்டில் வைலட் கலர் கத்திறிக்காய் பார்க்கும்போதெல்லாம்
இந்தப் பாட்டுதான் ஞாபம் வரும்.

ஆஹா ஏமி ருசி அனரா மெய்மரிச்சி
ரோஜூ திந்தாமனி


ஆஹா என்ன சுவை!

மெய்மறந்து சொல்லமாட்டாரா
நாளும் தின்போம் என்று ...

இப்படி போகுது பாட்டு. பாட்டுக்கு மொழி எதற்கு?

பார்த்து ஆனந்தப்படுங்கள்






நம்ம துளசி டீச்சர் நோகாம நோன்பு கும்பிட சொல்லிக்
கொடுத்திருக்காங்க. அட. கத்திரிக்காய கறி செய்வதைத் தான் சொல்றேன்.
பாருங்க.

கத்திர்க்காய் சாதம் தெரியுமா? வாங்கிபாத்னு சொல்லுவாங்க.

தெரியாட்டி போகுது நான் சொல்றேன்.

துளசி டீச்சர் பதிவில சொல்லியிருக்கிற சாமான்கள் தான்.

காயை மட்டும் எண்ணையில் கடுகு தாளித்து, உப்பு சேர்த்து
வதக்கி வைச்சுக்கணும்.

வறுத்து பொடி செஞ்சு வெச்சுக்கணும்.

பொல பொலன்னு சோறு வடிச்சு, அதில் காயைப் போட்டு
அதற்குமேல செஞ்சு வெச்சிருக்கிற பொடியைத் தூவி,
மேல் உப்பு கொஞ்சம் சேத்து நல்லா கலந்தா
வாங்கிபாத் ரெடி.

விரும்பறவங்க 1 ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கலாம்.

அந்தப் பொடியை முதல் நாளே செஞ்சு ஃபிரிட்ஜ்ல
வெச்சிக்கலாம்.

ஆனந்தமாக வாங்கிபாத் சாப்பிட்டு
வார இறுதியைக் கொண்டாடுங்கள்

Tuesday, November 20, 2007

சமையற் குறிப்பு








திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மம்மாவிடம்தான் சமையல் கற்றுக்கொண்டேன். முதன் முதலில் அம்மா (நான் அப்படித்தான் அழைப்பேன்) தந்த சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.

1.அடுக்களையில் நுழையும் முன் உன் கோபதாபங்களை மூட்டை கட்டி வைத்து விடு.


2. மனது அமைதியாக இருந்தால் தான் சமையலில் மனம் லயிக்கும்.


3. ரசித்து சமை ! ருசியாக இருக்கும்.


4. தேநீர் கலந்தாலும் பால், சர்க்கரை, டீத்தூளுடன் 2 spoon அன்பையும் கலந்து பரிமாறு.


5. அன்பான, இனிமையான மனத்துடன் தயாரிக்கப்படும் எந்த உணவும் அமிர்தத்திற்கு சமானம். இல்லையேல் அது விஷமாகி விடும்.


இந்த சமையற்குறிப்பை நான் இன்று வரை கடை பிடிக்கிறேன்.



என் அடுக்களையைய் அலங்கரிக்கும் அடுக்களை பிரார்த்தனை. இதோ.

MY KITCHEN PRAYER
MY KITCHEN IS A HEAVEN THAT'S MINE AND MINE ALONE
BUT ALL WILL GET A WELCOME HERE, THE WARMEST THEY HAVE KNOWN.
SO, GOD I ASK YOU KINDLY TO BLESS THIS HALLOWED SPOT
WHERE I PERFORM GREAT MIRACLES WITH OVEN, PAN AND POT.
PLEASE ALSO BLESS MY COOKING SO THAT EACH MEAL I MAKE
BRINGS DEEPEST SATISFACTION TO ALL WHO MIGHT PARTAKE.
AND NOW GOD LET ME OFFER MY WARMEST THANKS TO YOU
FOR GRANTING US, OUR DAILY BREAD AND OTHER BLESSINGS TOO...
யாரோ சொன்னது:
A RECIPIE IS ONLY A THEME, WHICH AN INTELLIGENT COOK CAN PLAY EACH TIME WITH VARIATION".
புத்திசாலித்தனம், சுவை, கற்பனனத்திறன் ஆகியவை சமையற்கலையில் முழுதும் பயன் படுத்தபடுகிறது.