Showing posts with label அப்டேட்ஸ். Show all posts
Showing posts with label அப்டேட்ஸ். Show all posts

Tuesday, July 21, 2015

வணக்கம் நட்புக்களே

என்ன எல்லோரும் சொளக்கியமா? இங்கே நானும் ஓரளவுக்கு நலம். பிசியோதெரபி ஆரம்பிச்சு வெற்றிகரமாக 1 மாசம் ஓடிடிச்சு. ஆரம்பத்துல சின்ன சின்ன அசைவுகளுக்கே சதை பிடிப்பு பிடிச்சு ஒரே அவஸ்தை. ஐஸ் ஒத்தடம், வெந்நீர் ஒத்தடம்னு கொடுத்து, ரெஸ்ட் கொடுத்துன்னு உடம்பு ஒரு வழி(லி)யா ட்ரீட்மெண்டை ஏத்துக்கிட்டது.


ஆனா அதிகமா வேலை செய்ய கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதனால அடக்கி வாசிச்சுகிட்டு இருக்க வேண்டிய சூழல். மொதல்ல கூட வலி இருந்ததால ஏதும் செய்யலை. இப்ப பழகிடிச்சு. ரொம்பவே ஃப்ரீயா இருப்பது போல தோண என்னுடைய இன்ஸ்ட்ரக்டரை நச்சரிச்சு க்ரோஷா கொஞ்சமா செய்யறேன்னு கேட்டு தொல்லை செய்வதை தாங்காம சரி ஆனா ரொம்ப நேரம் கூடாது 10 நிமிஷம் தான் செய்யணும்னு சொன்னாங்க.

சரின்னு நேத்து ரொம்ப சந்தோஷமா ஊசியையும் நூலையும் எடுத்தேன். எங்க 5 நிமிஷத்துக்கே கையில் வலிக்க ஆரம்பிச்சதும் எடுத்து வெச்சிட்டேன். :(
இன்னும் ரொம்ப தூரம் போகணும்னு இன்ஸ்ட்ரக்டர் சொன்னது சரிதான். நாம அவசரப்படக்கூடாது என்பது நேத்து கத்துகிட்ட பாடம்.

இப்போதைக்கு இந்த போஸ்ட் டைப் செய்யக்கூடிய அளவுக்கு கை பரவாயில்லை. :) அதுவே ஆனந்தம்.  ஸ்ட்ரெத்தனிங் எக்ஸசைர்ஸ் எல்லாம் செஞ்சு கையையும் காலையும் திடமாக்கிகிட்டு  விஜயதசமியிலிருந்து பழைய படி வலைய வருவேன்.

அப்பப்ப வந்து நலம் விசாரிப்பேன். அதுவரைக்கும் ஆனந்தமா இருங்க. மறந்துடாதீங்க. :))

Monday, May 04, 2015

வெசாக் நல் வாழ்த்துக்களுடன் திரும்ப வந்திருக்கேன்.

இன்னைக்கு புனிதமான வெசாக். அனைவருக்கும் அமைதியும் சமாதானமும் நிறைந்ததாக இருக்க என் வாழ்த்துக்கள்.



 இதுவரை ஹைதையிலிருந்து வீசிக்கொண்டிருந்த இந்த தென்றல் இனி சென்னையிலிருந்து வீச ஆரம்பிச்சிருக்கு. ஆமாம் ஹைதையை விட்டு கிளம்பி வர மனசில்லாம கிளம்ப வேண்டியதா போச்சு.

அயித்தானுக்கு சென்னை மாற்றல்.  இந்த ந்யூஸ் கேள்வி பட்ட உடனேயே அழுவாச்சி தான்.  சொந்த வீட்டை விட்டு வரணும் என்பதை விட, சென்னைக்கு.... சென்னைக்கு மாற்றல். அதுதான்.  ஆஷிஷ்  ஹாஸ்டலில் தங்க வேணாம். வீட்டுக்கு வந்திடலாம். பிரிச்சுவிட்டதுல தெலங்கானா ஒரு வழி ஆகிகிட்டு இருக்கு. இதுல அம்ருதா மேல் படிப்பு வேணாம் அது இதுன்னு ப்ரையின் வாஷ் ( இருக்கு. கொஞ்சமாவது இருக்கு. :) ) செஞ்சு அயித்தான் இட்டாந்திட்டாக. வந்து ஒரு மாசம் போகுது.

அம்ருதா பரிட்சை முடிந்த கையோட வந்து  இங்கே வீடு தேடினோம்.  வீடு முடிவு செஞ்சு அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் எடுத்து போய் மத்த வேலைகளை செஞ்சு வெச்சுகிட்டோம். முக்கியமா இந்த அதார் அட்டையில எங்க புது வீட்டு அட்ரஸ் வாங்கிகிட்டு வந்தது நாங்க செஞ்ச நல்ல காரியம்.


ஹைதையில் சாமான்களை பேக் செய்ய அயித்தான் பேக்கர்ஸ் கிட்ட பேசிவெச்சிருந்தாங்க.   பேக்கர்ஸ் அன் மூவர்ஸ் வந்தாங்க.  ஆகா நாம சும்ம உக்காந்திடலாம்னு மட்டும் யாரும் நினைச்சிடாதீங்க. பேக்கர்ஸ்லேர்ந்து வர்றவங்க ஆளூக்கு ஒரு அயிட்டம் பேக்கிங்கினு கிளம்பிடறாங்க. அவங்களுக்கு பதில் சொல்லி எடுத்து கொடுக்க வேண்டியது நாம தான்.  அயித்தான், நான், அம்ருதா மூணு பேர்தான். வந்தவங்க 6 பேர். பர  பரன்னு பேக்கிங் செய்ய ஆரம்பிச்சாங்க.   ஏற்கனவே வேணாம்ங்கற சாமானை எல்லாம் ஒழிச்சு வெச்சிருந்தேன்.  அதனால ஓரளவுக்கு வசதியா போச்சு.   எப்படியோ பேக்கிங் செஞ்சு 4 மணிக்கெல்லாம் சாமானை வண்டியில ஏத்தியும் முடிச்சிட்டாங்க.

அடுத்த நாள் ஃப்ளைட் பிடிச்சு நாங்க சென்னை வந்து ஹோட்டலில் தங்கினோம். அதற்கு அடுத்த நாள் பால்காய்ச்சி பூஜை செஞ்சு  கிட்டு இருக்கும்போது வண்டி பூந்தமல்லி வந்திருச்சுன்னு போன் செஞ்சாங்க. சரிதான்னு  ரெடி ஆனோம். 12 மணிக்கெல்லாம் சாமான் வந்திருச்சு. வீட்டுல கொண்டு வந்து வெச்சிட்டு, அன் பேக்கிங்கினு ஆரம்பிச்சாங்க.  இப்பவும் அதே 3 பேர் தான் இருக்கோம். ஆனா அவங்க 6 பேர். பர பரன்னு எல்லா பெட்டியையும் ஓபன் செஞ்சு இதை எங்க வைக்க, அதை எங்க வைக்கன்னு???? கூப்பிட்டு கூப்பிட்டு எல்லாத்துக்கு நானே ஓட வேண்டியதா போச்சு. நல்ல வேளையாக சாமான் பேக்கிங் செய்யும் போதே அட்ட பெட்டிகளில் எந்தெந்த ரூம் சாமான்னு எழுதி வெச்சிருந்தேன்.

அதை வெச்சு அந்தந்த ரூம்ல வெச்சாச்சு. அன் பேக்கிங் செஞ்சா அப்படியே உடனடியா எடுத்து வைக்கணூம்னா கஷ்டம். அதனால முக்கியமான அயிட்டங்கள், பாத்திரங்கள் எல்லாம் எடுத்து கொடுக்க சொல்லி வெச்சோம். மேலே ஏத்த வேண்டியதுகளை சொன்னா அதையும் ஏத்திடுவோம்னு சொல்ல, சாமி ஒவ்வொரு பொட்டியா திறந்து பாத்து செய்யணும். சாமிகளா ஆளை விடுங்க. இப்பவே இதெல்லாம் செய்ய முடியாதுன்னு சொன்னேன்.

இப்பெல்லாம் அட்டை பெட்டிகளையும் திரும்ப கொடுக்கணுமாம். கொஞ்சமாவது வேணும்னு சொல்ல சிலபெட்டிகள் திறந்து அவைகளை காலி செஞ்சு கொடுத்தோம். பத்து நாள் டைம் கொடுங்க சாமிகளா, மத்ததையும் காலி செஞ்சு தர்றோம்னு சொல்ல சரின்னு விட்டுட்டு போனாங்க.

பாக்கிங் செய்யறப்ப கூட இம்புட்டு கஷ்ட படலை. அந்தந்த இடத்துலேர்ந்து அவங்களே எடுத்து  செஞ்சதாலன்னு நினைக்கிறேன். அன்பேக்கிங் அவங்க ஓபன் செஞ்சு கொடுத்தாலும் வைப்பது நாமதான். மெல்ல மெல்ல ஒரு வாரத்துல நானும் அம்ருதம்மாவும் ஒழுங்கு செஞ்சோம். காஸ் சிலிண்டர் உடனடியா மாத்த முடியாத காரணத்தால கிச்சனுக்கு கட்டாய லீவு கொடுத்திருந்தேன். :))

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணா இங்க தான் பக்கத்துல இருக்காங்க. அவங்க சாப்பாடு செஞ்சு அனுப்புவாங்க. வெளியில் வாங்கிக்கிறதுன்னு ஓட்டினோம்.  கேட்டரிங்ல் சொன்னா கொண்டு வந்து கொடுக்கறாங்க. அதுவும் நல்லா இருக்கு. ஹோட்டல் சாப்பாட்டுக்கு வீட்டு சாப்பாடுன்னு அதுவும் வாங்கிகிட்டோம். இருந்த Induction  அடுப்புல காபி, டீ போட்டு ஒப்பேத்திகிட்டு
மெல்ல மெல்ல சென்னை வாழ்க்கைக்கு தயாரானோம்.

ம்ம்முடியலைன்னு அடிக்கடி சொல்ல வைக்கிறது இந்த வேர்வை. இருக்கற எல்லா எனர்ஜியும் அதுலயே போயிடுது.  இதோ இன்னையிலிருந்து அக்னி நட்சத்திரம் வேற. ஆண்டவன் தான் காப்பாத்தணும்.

எல்லோருக்கும் அதிக வெயில் கொடுமை இல்லாத “அக்னி நட்சத்திரம்” காலம் அமைய வாழ்த்துக்கள்.

Tuesday, March 10, 2015

காணமேன்னு தேடினவங்களுக்கு

அன்பான நட்புக்களுக்கு.

 மாலத்தீவு பதிவு தொடராம அப்படியே கிடக்கு!! காணாம போயிட்டேனோன்னு தேடினீங்களா. ரொம்ப ரொம்ப சாரி. மகளுக்கு பத்தாம் வகுப்பு பரிட்சை ஆரம்பமாகியிருக்கு. இன்னைக்கு இரண்டாவது பரிட்சை சோஷியல். 12ஆம் தேதி ஹிந்தி முடிச்சாச்சுன்னா நான் ஃப்ரியாகிடுவேன். கணக்கும் ஆங்கிலமும் நான் ஏதும் செய்ய வேண்டியது இல்லை.

அதுக்கப்புறமும் முக்கியமான வேலை இருக்கு. ஆனாலும் நடு நடுவில் வந்து எட்டி பார்க்கிறேன். மொபைலில் பார்க்க முடிவதால இப்போதைக்கு முகநூலில் மட்டும் அவைளபில்.

அதனால சீக்கிரமே வருகிறேன்னு சொல்லி விடைபெறுகிறேன்.

Thursday, May 21, 2009

தென்றல் அப்டேட்ஸ் 21/5/09

4 நாள் வந்ததும் தெரியவில்லை. போனதும்
தெரியவில்லை. :)

பெரிய மாம்ஸ், சின்ன மாம்ஸ், அவர்களது
குடும்பத்தினர், அம்மம்மா, தாத்தா என
செம ஜாலியாக இருந்தோம்.

பழங்கதைகளை தூசி தட்டி ஞாபகப்படுத்தி
பேசிக்கொண்டோம்.

திருமணத்துக்கு முந்தைய சமையல் பயிற்சியில்
நொந்து போயிருந்த மாம்ஸ்கள் இப்போதைய
என் கைப்பக்குவத்தில் மலைத்துவிட்டார்கள். :))

ஆந்திரா ஸ்டைல் மிளகுக் குழம்பு செய்திருந்தேன்.
மிளகு காட்டு சூப்பரா இருக்கு இன்னும் கொஞ்சம்
போடு என்று கேட்டு வாங்கி பெரிய மாமா சாப்பிட்டார்.

***************************************

என் திருமண வீடியோவை மாம்ஸ் மற்றும்
அனைவரும் இப்போதுதான் முதல் முறையாக!!!
பார்த்தனர். அப்போது 9 மாதக் குழந்தையாக
இருந்த பெரிய மாம்ஸின் இரண்டாவது மகள்
தன்னை, தான் அடித்த லூட்டிகளை வெட்கத்துடன்
பார்த்தாள்.

விவரம் புரியாமல் என் தம்பியை திருமணம்
செய்து கொள்வதாக சொல்லி அவனை அப்போது
கலங்கடித்துக்கொண்டிருந்த பெரிய(மாமா) மகள் சசி
இப்போது கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கப்போகிறாள்.
“பாவம் பாவா! என்னாள் மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்”
என்று பரிதாப்பட்டாள்.
************************************
சின்ன மாமாவுடன் செல்லச் சண்டையும் நடந்தது. :)))

ஞாயிற்றுக்கிழமை அதி காலையே மற்றவர்கள் வந்து
விட சின்ன மாம்ஸும், பெரிய மாம்ஸின் மகளும்(
அவளுக்கு ஏதோ எண்ட்ரன்ஸ் எக்சாம் இருக்க அதை
முடித்து வந்தாள்) ஞாயிற்றுக்கிழமை இரவுதான் வந்தார்கள்.
அதனால் திங்கள் கிழமை சின்ன மாம்ஸை ஷ்பெஷலாக
கவனிக்க திட்டம் போட்டு வைத்திருந்தேன்.

மாமாவுக்கு பிடித்த சமையல் முடித்து வெங்காய
பக்கோடாவும், ரஸமலாயும் சர்ப்ரைஸாக வாங்கி
வரச் சென்று வருவதற்குள் மாமா சாப்பிட ஆரம்பித்து
விட்டார்.” உனக்காகத்தானே மாமா! வாங்கப்போனேன்.
சேர்ந்து சாப்பிட வருவதற்குள் என்னை விட்டு ஏன்
தனியாக சாப்பிட்டாய்” என்று சண்டை போட்டேன்.

“ஐயோ தெரியாதேடா! கண்ணம்மாவுக்கு என்
பக்கத்திலேயே இலையை போடு!!!” என்று
அத்தைக்குச் சொல்ல 7 வயது மாமா மகள்
“அதென்ன அண்ணியை கண்ணம்மா
என்று கூப்பிடறீங்க!!!” என்று ஆச்சரியமாக
கேட்டாள். “நான் தூக்கி வளர்த்த பெண்ணாச்சே!”
என்று ஒரே பாசமழை தான்:))) எல்லாவற்றையும்
புதிதாக பார்த்துக்கொண்டிருந்தார் அத்தை.
(சின்ன மாமாவுக்கு திருமணமாகி 9 வருடங்கள்தானே
ஆகிறது)

*****************************************

சில்க்கூரி பாலாஜி கோவிலுக்குச் சென்று
திரும்பும் பொழுது சர்ப்ரைசாக 5 கிலோ
மாம்பழங்களுடன் வந்தார் பெரிய மாம்ஸ்.
”உனக்கு பிடித்த ஆம்ரஸ் செய்து கொடுக்கவேயில்லை
என்று உன் பூவாஜி”!!(பெரிய மாம்ஸின் மனைவியை
அப்படித்தான் அழைப்பேன். பூவா என்றால் அத்தை
(அப்பாவின் தங்கை) என்று அர்த்தம். என் அப்பாவுக்கு
தூரத்து உறவில் தங்கை முறை)என்று சொல்லிவிட்டு
மிக்ஸியில் போட்டு அடிக்காமல் தன் கைகளாலேயே
மாம்பழத்தை பிழிந்து அருமையார ஆம் ரஸ்
செய்து வைத்தார் மாமா. இரவு உணவுக்கு பிறகு
அருமையாக ஆனந்தமாக மாமா செய்து கொடுத்த
ஆம் ரஸ் அனைவரும் சாப்பிட்டோம்.
எனக்கு மட்டும் அதிகம் இனித்த மாதிரி இருந்தது.

பாசம் அதிமாயிடுச்சோ!!!!

*****************************************

வெளியில் செல்ல திட்டமிட்டிருந்த பொழுது
வருணபகவானும் வெளியில் வந்து பார்வை இட
திட்டமிட்டுவிட்டார். அதனால் வீட்டுக்குள்
இருக்க நேர மாலை 7 மணி துவங்கி நள்ளிரவு
ஒரு மணி வரை சந்தமாமா, ஆ நலுகுரு ஆகிய
தெலுங்கு படங்கள் பார்த்தோம்.

குடும்பத்தினர் அனைவரும் ஒரு சேர அமர்ந்து
சிரித்து, கமெண்டடித்து படம் பார்த்தோம்.

தூங்கப்போகும் முன் பெரிய மாம்ஸ் சொன்னது,
“இப்படி அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு, மகிழ்ந்து,
சினிமா பார்த்து எத்தனை நாளாச்சுடா!! இந்த
சந்தோஷம் காசு கொடுத்து வாங்க முடியுமா!!”

*************************************

Monday, May 11, 2009

தென்றல் அப்டேட்ஸ்

சென்றவாரம் மழையால் நனைந்த ஹைதை

இந்த வாரம் இசைமழையால் நனைந்தது.

நேற்று பாரேட் க்ரவுண்டில் 1.6 லட்சம்
பாடகர்கள் இணைந்து அன்னமாச்சாரிய
கீர்த்தனைகள் பாடினார்கள்.

பாடல்களால் பரமனை குளி்ர்வித்த
அன்னமாச்சரியரின் 601ஆவது ஜன்மதினத்திற்காக
இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல புகழ்பெற்ற பாடகர்கள் இணைந்து
பாடினார்கள்.

வீட்டுக்கு அருகேதான் பாரேட் க்ரவுண்ட்
என்பதால் பால்கனியிலிருந்தே பாடல்களை
கேட்டேன். பாவமுலோனா, பிரம்மகடிகின
பாதமு,தந்தநாநா,என பல பாடல்கள்
கேட்டேன். மொட்டைமாடிக்கு சென்று
நாங்கள் நால்வரும் இசைமழையில் நனைந்தோம்.

இந்த நிகழ்ச்சியில் ஒருமுக்கிய விடயம்.
இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனையில்
இடம்பிடித்துள்ளது.

1937ஆம் வருடம் 60,000 மக்கள் இணைந்து
தங்களது தேசிய கீதத்தை இசைத்ததுதான்
இதற்கு முந்தைய உலக சாதனை. அந்த
சாதனையை முறியடித்து அன்னமாச்சாரியாவுக்கு
ஆராதனை செய்துள்ளனர்.

அன்னமய்ய படக்குழுவினர் சிலர், பாலமுரளி
கிருஷ்ணா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில்
பங்குபெற்றனர்.

****************************************

அருமையான அன்னம்மய்ய பாடல் பார்க்க
தவறாதீர்கள்.

ப்ரம்மம் ஒகடே பர ப்ரம்ம ஒகடே


*****************************************

நேற்று நான் கண் திறக்குமுன்னரே பரிசுகள் மற்றும்
வாழ்த்து அட்டைகளுடன் வந்து பிள்ளைகள்
இருவரும் ”ஹேப்பி மதர்ஸ் டே” வாழ்த்து
சொன்னார்கள். முதல் நாளே அப்பாவை
அழைத்து சென்று பரிசு வாங்கிவந்து
சர்ப்ரைஸாக கொடுத்தார்கள்.

அருமையான வார்த்தைகள் அடங்கிய
வாழ்த்து அட்டைகள். சூப்பர் செலக்‌ஷன்.
**************************************

சர்ப்ரைஸாக இருவரையும் லஞ்சுக்கு
அழைத்து சென்றோம். அதைப் பற்றி
விரிவாக பதிவு போட்டு வயிற்றெரிச்சலைக்
கொட்டிக்கொள்ள வேண்டாமா!!! :))
******************************

வேறு என்ன பெயர் வைப்பது என்று
யோசித்து மண்டை காய்ந்து தென்றல் அப்டேட்ஸ்
என்றே வைத்துக்கொண்டேன். அமித்து அப்டேட்ஸ்
பதிவு போடும் அமித்து அம்மா
“ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி”

****************************

Wednesday, May 06, 2009

தென்றல் அப்டேட்ஸ்

கொதிக்கும் உலையாக கொதித்துக்கொண்டிருந்த ஹைதைக்கு
நேற்று வர்ணதேவன் எட்டிப்பாத்தான். ச்சும்மா ஜில் ஜில் காத்து,
இடி மின்னல் மழை என்னவோ கொஞ்சம் தான். 1 மில்லி மீட்டர்
மழை பெய்திருந்தது.

**********************************

பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஐமேக்ஸ்
சென்றிருந்தேன். சினிமா பார்க்க இல்லாமல்
அங்கே கேம்ஸ் விளையாட அழைத்துச்சென்றேன்.
ஒரே குஷி. (பர்ஸ் கொஞ்சமா இளைச்சிடுச்சு.)
***************************************

வெயிலுக்கு பயந்து அப்பா, அம்மா எங்கேயும்
வரவில்லை. கூலர், ஏசி ஓடினாலும்
உஸ் புஸ்ஸுன்னு தான் கஷ்டபட்டாங்க.

”உங்களை யாரு தாத்தா ரிடர்ன் டிக்கட் புக்
செஞ்சுகிட்டு வறச்சொன்னாங்கன்னு” பசங்க
சண்டை போட்டுகிட்டு இருக்காங்க.
இன்றைக்கு ஊருக்கு கிளம்பறாங்க.
****************************************

எல்லோரு என்னிய திட்டி தீர்த்திருப்பீங்க.
அப்துல்லா பாடின பாட்டை நான் மட்டும்
கேட்டுட்டேன்னு. கூடிய சீக்கிரம் அதை
எம்பி3 ஃபார்மேட்டுக்கு மாத்தி பதிவு
போட்டுவிடுகிறேன். அதுவரை
பொறுத்தருள வேண்டுகிறேன்.
************************************

லீவு முடிஞ்சு ஆட்டம் ஆரம்பமாகப்போகுதுன்னு
சொல்லத்தான் இந்த வெள்ளோட்ட பதிவு

:)))))))))))))))))))

Tuesday, April 28, 2009

தென்றல் அப்டேட்ஸ்

இன்னைக்கு Friday, நாளைக்கு saturday
sunday அன்னைக்கு சர்ப்ரைஸ்னு பிள்ளைகள
மண்டை காய வெச்சு புலம்ப விட்டாச்சு.

”ஞாயிற்றுக்கிழமை காலையில ரயில்வே ஷ்டேஷன்
போறோம்”!
எதுக்கு?

”அப்பாவோட ப்ரெண்ட் வர்றாங்க!!” இப்படி நிறைய்ய
குழப்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் சார்மினாரில்
வந்திறங்கிய அம்மம்மா, தாத்தா பார்த்து ஒரேகுஷி.

“நான் அப்பவேநினைச்சேன்!! தாத்தா தான் வர்றாங்கன்னு”

அம்மா தாத்தா மாதிரி டயலாக் சொல்லும்பொழுதே
லேசா டவுட் வந்துச்சு!!!

என டயலாக் பேசி ஒரே சந்தோஷமான வரவேற்பு
தாத்தா, அம்மம்மாவுக்கு.

********************************************

அம்மம்மா, தாத்தா வந்ததிலிருந்து இரண்டு
நாளாக நம்மளை யாரும் கண்டுக்கவேயில்லை!!!
:((

இருங்கடீ!! எங்க அம்மம்மாவும் அடுத்த வாரம்
வருவாங்கள்ல!! அப்ப பாத்துக்கலாம்னு
சொன்னாலும்

பாம்பே அவ்வா எங்களுக்கும் அவ்வா,
நாங்க அப்பவும் எஞ்சாய் செய்வோம்!!”னு
என் கூட போட்டியாக அதிரடியாய் பதில் வருது.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

*****************************************

இந்த அப்பா அம்மாக்களே சுத்த மோசம்!!!

நாங்க சின்ன புள்ளைங்களா இருந்தப்ப நின்னா
குத்தம், உக்காந்தா குத்தம், சினிமா பாட்டு
பாடினா குத்தம்னு சட்டம் போட்டவங்க

இப்ப பேரன், பேத்தி செய்யறதெல்லாம் பாத்து
முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.

கேட்டாக்க” பாலைவிட பாலாடைதான் ருசின்னு!!”
டயலாக் வருது.

******************************************

அம்மா, அப்பா வந்திருப்பதாலும், விருந்தினர்கள்
வரப்போவதாலும் லீவு சொல்லிக்கறேன்.

1 வாரம்தான் லீவு அப்புறம் வந்திடுவேன். :)))

Monday, April 13, 2009

தென்றல் அப்டேட்ஸ்

எப்போதும் காலை பார்க்கில் வாக்கிங் போவேன்.
சில சமயம் வார இறுதியில் மாலை வேலைகளில்
பிள்ளைகளுடன் போவேன். அவர்கள் இருவரும்
கொஞ்ச நேரம் பூப்பந்து ஆட விட்டு நான் வாக்கிங்
போவேன். 4 ரவுண்ட் நடந்துவிட்டு பிள்ளைகளுடன்
ஓடிப்பிடித்து விளையாடுவேன். இருவருக்கும்
ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

இந்த முறை என் தங்கை, அத்தையின் பேத்தி
அனைவரும் அணியில் சேர செம ஆட்டம்தான்.

ஒரு அம்மா பிள்ளைகளுடன் வந்தார். பார்க்கினுள்
வந்த நொடியிலிருந்து போனை காதிலிருந்து
எடுக்கவேயில்லை....
புடவையை எடுத்துச் சொருகிக்கொண்டு
ஒரு கையில் செல்போன் வைத்து பேசிக்கொண்டெ
உடன் வந்தவருடன் பூப்பந்தாடினார்.
செம ஆட்டம்!! (அவரின் பிள்ளைகள் விளையாட
சான்ஸ் கேட்டபோதும் கொடுக்காமல் தான் மட்டுமே
விளையாடியது தான் எரிச்சலூட்டியது)

***********************************************

பூப்பந்தாட்டம் என்றால் எப்போதும் நினைவுக்கு
வருவது ஜானகிராம் மாமாதன். இவர்
அம்மா வேலை பார்த்த புதுகை ஸ்ரீ சுப்பராமய்யர்
பள்ளியி்ல் ப்யூனாக வேலை பார்த்தார்.

ப்யூன் வேலை பார்த்துக்கொண்டே மாமா
பூப்பந்தாட்டத்தில் பல டோர்னமெண்டுகள்
விளையாடி ஜெயித்திருந்தார். பள்ளி
வேலைகளுக்கு இடையே ப்ரேக் கிடைத்தால்
பூப்பந்து மட்டை பின்னிக்கொண்டிருப்பார்.
மாமாவின் கைகளால் பின்னப்பட்ட
மட்டைகள் புதுகையில் பலரின் கைகளில்
தவழ்ந்திருக்கிறது.



மாமாவைப் பற்றி எழுதப் போகிறேன் என்று
அம்மாவிடம் சொன்னதும் அம்மா சொன்னது,
“ஜானகிராம் அண்ணா ப்யூனாக இருந்தாலும்
அலுவலகத்தில் ஒரு கிளார்க்காக வேலை பார்க்கத்
தகுதியுடைய்வராக இருந்தார். அனைத்தும்
கச்சிதமாக செய்யவேண்டும் என்ற எண்ணம்
கொண்டவர்” என்று பாராட்டினார்.

*********************************************
Dr. PRANATHI REDDY இவர்தான் தற்போது
என்னுடைய மருத்துவர். ஹைதையில் மிகச்
சிறந்த மகளீர் மருத்துவ நிபுணர்.
இவரின் கணிவான பேச்சுக்கு நான் அடிமை. ரெயின்போ
மருத்துவமனையில் இவரை சனிக்கிழமை
தொடர் மருத்துவத்திற்காக சந்தித்தேன்.

(டாக்டரை சந்திக்கும் முன் அவரது
அசிஸ்டென்டை சந்திக்க வேண்டும்
அவரை சந்திக்கச் சென்றது அயித்தானுக்கு
டென்ஷன். டாக்டர்.பிரணதி அவர்கள்
என் நிலையை மிகச் சரியாக புரிந்து
கொண்டுள்ளார். வேறு மருத்துவரை
மாற்ற வேண்டாமே என்று டென்ஷன்
பட்டுவிட்டதாக்ச் சொன்னார்.:)) )


இவரைப்பற்றி என் முந்தைய பதிவு இங்கே. மனதை மயிலிறகால்
வருடுவதுபோல் பேசும்பொழுது மருத்துவர்களின்
மேல் நம்பிக்கை வருகிறது. இன்னும் 6 மாதத்திற்கு
தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டு பிறகு
வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

*************************************
பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு காட்சி
தனது மகளுக்கு சளி உபாதைக்கு என்னென்ன
மருந்து கொடுத்தார் எனச் சொல்லும் இளவரசுக்கு
“அதெல்லாம் மருந்து கொடுக்கத்தான் நாங்க
படிச்சு மருத்துவரா இருக்கோம்னு” ஜெயராம்
சொல்வார். தானே மருத்துவம் பாத்துக்குவது
தவறுதான்னாலும் இப்போ இருக்கும் மருத்துவர்களை
பார்க்கும்பொழுது ஒரு பாட்டுதாங்க ஞாபகதுக்கு வருது
“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்”

ரமணாபட மருத்துவர்கள் தான் அதிகம்.
மருத்துவ காப்பீடு செய்திருக்கிறோம் என்று
தெரிந்தால் போதும் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்
என கூட்டி விடுவார்கள்.
சின்னச் சின்ன உபாதைகளுக்கும் பெரிய லிஸ்ட்
மருத்துவம், பெரி........ய்ய்ய்ய்ய்ய்ய லிஸ்ட்
டெஸ்ட்கள்.

என்னதான் செய்வது புரியலை!!! இதுதான் பலரின்
நிலை.

********************************

Thursday, April 02, 2009

அப்டேட்ஸ்...

ரயிலில் பயணிக்கும் பலருக்கு சமீபகாலமாக நிறைய
பிரச்சனைகள்!!! நாம் பயணச்சீட்டை பதிந்த பொழுது
கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணில் வேறொருவர் அமர்ந்து
கொண்டு “இந்த இடம் என்னிது”ன்னு குதிப்பார்.
நமக்கும் பயங்கர டென்ஷனாகும். பயணச்சீட்டு பரிசோதகர்
வந்து ”தீர்ப்பு” சொல்லும் வரை நிம்மதியாக உட்காரக்
கூட முடியாது.

எல்லாம் லல்லுவின் உபயமான ”சைட் பர்த்களிலும்
மிடில் பர்த்” திட்டத்தினால் வந்த குழப்பங்கள்.
அந்த மிடில் பர்த் கிடைத்தவர்கள் நிஜமாகவே
பாவப்பட்டவர்கள்தான். காற்றும்வராது. அந்த பர்த்தில்
ஏறி படுக்க தனித்திறன்!!! வேண்டும்.

நேற்று நெல்லூரிலிருந்து வந்த பொழுது அந்த
மிடில் பர்த்கள் மாயமாகிப் போயிருந்தது!!!!
அவை எடுக்கப்பட்டு விட்டனவாம்.
யார் செய்த புண்ணியமோ!! மக்களுக்கு
துயர் தந்த அந்த மிடில் பர்த்களை எடுக்கவைத்த
புண்ணியவன்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

****************************************


சென்றமுறை அவசரமாக நெல்லூர் செல்ல நேர்ந்த பொழுது
ரயிலில் டிக்கெட் இல்லாமல் காரில் செல்ல நேர்ந்தது.
முதன் முறையாக ஆந்திராவிற்குள் காரில் என் பயணம்.
மிக ரசித்தேன். சாலைகளின் இரு புறமும்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென்று
பயிர் விளைந்த பூமியாக இருந்தது.
ஹைதை-மிரியால்குடா, அத்தன்கி,
ஓங்கோல், காவாலி, நெல்லூர், சென்னை என சாலை
நீள்கிறது.

அத்தன்கி,எனும் இடம் தாண்டிய பிறகு வருகிறது

National Highway 5 (NH 5) .

அந்த தேசிய நெடுஞ்சாலையை கண்ட பொழுது என் கண்களையே
என்னால் நம்ப முடியவில்லை!!!!
வழுக்கும் சாலை. மீடியேட்டர்களில் பூத்துக்குலுங்கும் பூக்கள்,
குறைவான வாகனங்கள்.(லாரிகள்தான் அதிகம்)

ஆங்காங்கே பஞ்சாபி தாபாக்கள். நிஜ்மாகவே இவை
பஞ்சாபி தாபாதானா என்ற சந்தேகத்துடன் நாங்கள்
சென்ற இடத்தில் பஞ்சாபிக்காரர் அருமையாக
பாலக், தால், சுடச்சுட சாப்பிட கொடுத்தார்.
(என்னுடைய சுத்த ஹிந்தியைக் கேட்டு
சொந்த கதை, சோகக்கதை எல்லாம் சொல்ல
ஆரம்பித்தார். :)) அம்மாக்கு இங்கேயும் ஃப்ரெண்ட்
கிடைச்சிட்டாங்கன்னு!! பசங்க கிண்டல்தான்.)



இந்த அருமையான சாலைகள் நான் ஏதோ வேற்று நாட்டில்
பயணித்ததைப் போலிருந்தன. மலேசியா நகரத்திலிருந்து
விமான நிலையத்திற்கு செல்லும் பயண அனுபவம் போல்
மிக அருமையாக இருந்தது.

***********************************************

மாமாவி்ன் காரியங்கள் நல்லமுறையில் நடந்து முடிந்தது.
காரியம் நடைபெறும் நாளில் பலவித தானங்கள் கொடுப்பது
பழக்கம். இவைகளை விட மாமாவின் கண்களை தானமாக
கொடுத்திருப்பதுதான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.


மாமா சென்னை ட்ரஷரி டிபார்ட்மெண்டில்
கெஜடட் ஆபீசராக இருந்து ஓய்வு பெற்றவர்.
மாமா ரிடையர்ட் ஆவதற்கு 3 வருடங்கள்
முன்பு அவருக்கு உதவியாளராக வேலைக்குச்
சேர்ந்த திரு.விஜயகுமார் அவர்கள் மாமாவின்
செய்தி கேட்டு உடன் ஓடி வந்திருந்தார். 10 ஆம்
நாள் காரியங்களுக்கும் வந்திருந்து “சுப்ரமண்யம்
அவர்கள் எனக்கு தெய்வம் போல. என அவர்
வேலைக்குச் சேர்ந்திருந்த நாளான்று மாமா
அணிந்திருந்த உடையின் நிறங்கள் வரை
தனக்கு நினைவிருப்பதாகச் சொல்லி மாமாவின்
ஞாபகமாக அந்த உடைகளை வாங்கிச் சென்றார்.


நீத்தார் பெருமை கூறும் நாளில் உறவினர் ஒருவர்
“திரு.சுப்ரமண்யம் ஒரு நிறைவான வாழ்வை
வாழ்ந்திருக்கிறார். ச்ராவணக்குமாரன் போல் பெற்றோருக்கு
தன் கடமையை விடாது செய்திருக்கிறார், ராமன்
தன் தம்பிகளை தன் கண்களாக பார்த்துக்கொண்டதுபோல்
தனது தம்பியை வளர்த்திருக்கிறார். தந்தையாக,
கணவராக, நண்பராக, உறவினராக, தாத்தாவாக
தனது வேலையை நிறைவாகச் செய்து ஒரு பூர்ணமான
வாழ்வை வாழ்ந்திருக்கிறார். அவர் காட்டியிருக்கும்
வழியில் நாம் சென்று அவரைப்போல இருக்க முயல்வதாலேயே
அவரின் ஆத்மா சாந்தி அடையும் ” என்று சொன்னார்.
சத்தியமான வார்த்தைகள் என ஒவ்வொருவர்ம்
மனமார ஏற்றுக்கொண்டனர்.
*************************************
ஒரு வாரம் விடுமுறை முடிந்து விட்டது
வந்துவிட்டேன் என்று சொல்லவே இந்த அப்டேட்ஸ்.
வந்திட்டேன். வந்திட்டேன் வந்திட்டேன். :)))