Showing posts with label முக்கியமானவை. Show all posts
Showing posts with label முக்கியமானவை. Show all posts

Monday, January 30, 2012

PARENTING!!!!!!

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு கலை. என் மகளின் பள்ளி ஆசிரியை
சொல்வது போல குழந்தை பிறந்த பிறகுதான் பிள்ளை வளர்ப்பு
பயிற்சி ஆரம்பமாகிறது. எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருளை
வாங்கினாலும் அத்துடன் ஒரு மேனுவல் புத்தகம் இருக்கும்.
எப்படி பழகுவது என்று தெரியும். ஆனால் குழந்தை வளர்ப்பு
அப்படி இல்லை. நாமே தவறு செய்து கற்று தேர்வதுதான்
நிஜம். முதல் குழந்தை பிறந்த பொழ்து பெற்றோர் பயிற்சி
ஆரம்பமாகி அடுத்த குழந்தை பிறக்கும் பொழுது எக்ஸ்பர்ட்
ஆகிவிடுவோம். வளர்ந்த குழந்தை வளர்ப்பு எப்படி இருக்கும்?
அதென்ன வளர்ந்த குழந்தை? அதை பற்றித்தான் இந்தப் பதிவு.

பிள்ளைகளை வளர்க்க தன் ஆயுளை செலவழித்து, பல
தியாகங்களை செய்த அம்மா, அப்பாவிற்கு இணையான
தெய்வம் உலகில் ஏதுமில்லை. அவர்களின் வழிகாட்டுதலினாலும்
அழகான வளர்ப்பு முறையினாலும்தான் ஒரு நல்ல
குடிமகனாக/மகளாக பிள்ளை வளர்கிறது. அதிலும்
அன்னையின் பங்கு சொல்லிவிட முடியாது. கணக்கு
போட்டு செட்டில் செய்து விட முடியாத ஒரு செயல்
பெற்றோர்களின் சேவை.

ஒவ்வொரு குழந்தைக்கும் தன் அப்பாதான் ஹீரோ!!
அம்மாதான் ஹீரோயின். திருமணமாகி குழந்தை
பெற்ற பிறகு கூட ஆணோ பெண்ணோ அவரவர்
அன்னை மடி தரும் சுகமே சுகம்.

சின்னக்குழந்நதையை வளர்ப்பது ஒரு சுகமான
சுமை என்றால் வயது முதிர்ந்த பெற்றோரை
பார்த்துக்கொள்வதும் அது போலத்தான். (இவர்கள்
தான் நான் சொன்ன வளர்ந்த குழந்தைகள்) ஓடி ஓடி
உழைத்தவர்கள் இன்று தள்ளாமையால் குழந்தைக்கு
சமமான உடல்நிலையில் இருந்தாலும் அதே குழந்தை
போல் பிடிவாதம், கோவம் என படுத்துவதும் உண்டு.
சின்னக்குழந்தைகளையாவது அடித்து, மிரட்டி என
ஒரு வழியாக காரியம் சாதிக்க முடியும். ஒரு காலத்தில்
நம் ரோல் மாடல்களாக மிடுக்குன வளைய வந்தவர்களை
ஒரு சொல் கூட சொல்ல முடிவதில்லை.

அதுவும் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல்
போய்விட்டால் அவ்ளவுதான்!!! மருந்து எடுத்துக்
கொள்ள கூட பிடிவாதம் பிடிப்பார்கள் சிலர். மருத்துவரிடம்
வரமாட்டேன் என அடம்பிடிக்கும் சிலர். விட்டுவிடவும்
முடியாமல், அவர்களை என்ன செய்ய என்று புரியாத
ஒரு சூழல்!! என் தாத்தா மும்பையில் இருக்கிறார்.
அவருக்கு கண்ணில் காண்ட்ராக்ட் ஏற்பட்டு அறுவை
சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள்
சொல்லிவிட தாத்தாவோ முடியாது என மறுத்துவிட்டார்.
இரண்டு மாமாக்களும், அம்மம்மாவும், அத்தைகளும்
எடுத்து சொல்லியும் சண்டை போட்டு முடியாது என்று
சொல்லிவிட்டார்.

நான், அம்மா, தம்பி, சித்தி என எல்லோரும் எவ்வளவோ
பேசிப்பேசி, மாமாக்களும், அம்மம்மாவும் தினமும் பேசி
பேசி சரியென ஒத்துக்கொண்டார். 2 மாத இடைவெளியில்
இரண்டு கண்ணுக்கும் ஆப்பரேஷன் முடிந்தது. ஒரு
ஆப்பரேஷன் கடந்த 18ஆம் தேதி நடந்தது. இன்னமும்
கூலிங்கிளாஸ் போட்டுத்தான் வளையவருகிறாராம்
தாத்தா. இதில் அரைமணிநேரம் தான் டீவி பார்க்கலாம்
என மருத்துவர்கள் சொல்ல தாத்தாவோ இரண்டு மணி
நேரத்திற்கும் மேலே கூட டீவி பார்க்கிறாராம். கூடாது
என்றால் கோவம் வருகிறது. இந்த வளர்ந்த குழந்தைகளை
வளர்ப்பது ரொம்ப கஷ்டம் என ஏன் சொன்னேன் என்று
இப்பொழுது புரிகிறதா?!!! இது எங்களுடைய அனுபவம்
மட்டுமல்ல பலரின் அனுபவமாகவும் இருக்கக்கூடும்.

எப்படி எடுத்துச் சொல்வது? புரிய வைப்பது எப்படி?
எல்லாம் ரொம்ப கஷ்டம். நேற்று பார்க்கில் வாக்கிங்
போகும் பொழுது 60 வயதான முதியவர் ஒருவர்
85 வயதான தன் அப்பாவை கை பிடித்து வாக்கிங்
அழைத்துச் சென்று கொண்டிருந்தார். இருவரில்
யாருக்கும் இளமை இல்லை. ஆனாலும்......

என் மாமியாருக்கு பார்க்கின்ஸம்ஸ் தாக்கி இருந்தது.
தினமும் மாடிப்படிகள் ஏறி, இறங்கவேண்டும்,
வீட்டுக்குளேயே நடைபயிற்சி செய்ய வேண்டும்
என்றெல்லாம் மருத்துவர் சொல்லியிருந்தார். அவரை
மாடிப்படி ஏறச்சொன்ன பொழுதெல்லாம்,” என்னை ஏன்
இப்படி கொடுமை செய்கிறாய்!!” என்று அழுவார்.
ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் நடக்கச் சொன்னால்
சத்தம் தான். கைக்குழந்தையுடன் நான் கடந்த அந்த
தருணங்கள் ஞாபகத்துக்கு வருகிறது.

மாமா போனில் தாத்தா பற்றி சொல்லிக்கொண்டிருந்த
பொழுது என் அனுபவத்தையும் யோசித்துக்கொண்டிருந்தேன்.
நேற்று சண்டே க்ரோனிக்கலில் அனும்பம் கேர் அவர்களின்
கட்டுரை இந்த டாபிக்கில் தான் இருந்தது. 3 நாளாக
அவரது தகப்பனார் ஆகாரமே இல்லாமல் இருந்தாராம்.
என்ன காரணம் என்று தெரியவில்லை!! மருத்துவமனைக்கு
அழைத்தாலும் வரவில்லையாம். அவரது உணர்ச்சிக்கு
மதிப்பு கொடுத்து சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை என்று
இருப்பதா? இல்லை சாப்பிட வைப்பதுதான் தன் கடமையா
என புரியாமல் குழம்பி, கடைசியில் அப்பாவை அணைத்து
காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் கட்டாயமாக
உணவை ட்யூப் மூலமாக உள் செலுத்த முடிவு செய்திருப்பதாக
சொல்லியிருந்தார்.

”ஒவ்வொருவருக்கும் வாழ்வில் இரண்டு முறை கடவுளாகும்
வாய்ப்பு. (கடவுள் எல்லா இடத்திலும் இருக்க முடியாது
என்பதனால்தானே தாயை படைத்திருக்கிறான்) ஒன்று
தான் பிள்ளை பெறும்பொழுது, இன்னொன்று தன்னைப்
பெற்றவருக்கு தாயாய் சேவை செய்யும் பொழுது” என
தன் கட்டுரையில் அனுபம் கூறியிருந்தார். (மகன்
சேவை செய்யும் பொழுது கூட அவனுள் தாயுள்ளம்
ஏற்பட்டுவிடுகிறது)


உண்மைதான்!!! ஆனால் இந்த பிள்ளை
வளர்ப்பு என்பதும் கடினதமானதகவே இருக்கிறதே!!!!

Thursday, July 14, 2011

மீண்டும் பயங்கரம்

நேற்று 7.30 மணிவாக்கில் எதேச்சையாக செய்தி சேனல் பார்க்க
உட்கார்ந்தேன். அப்பொழுதுதான் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு
பற்றி தெரியும். ஜவேரிபஜார்,தாதர்,ஒபேரா ஹவுஸ் ஆகிய 3 இடங்களில்
12 நிமிடங்களுக்குள் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. மீண்டும் மும்பை
ரத்தம் கசிய!!!!

அயித்தான் மும்பையில் இருப்பதால் போன் போட்டால் ம்ஹூம் ரீச்சே
இல்லை. என் மாமாக்களுக்கு போன் செய்தேன் அவர்கள் வீட்டில் தான்
இருந்தார்கள். அயித்தானுக்கு அவர்களும் ட்ரை செய்து பார்த்து கடைசியில்
நான் மாமாவுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சின்ன மாமாவுக்கு
லைன் கிடைத்து அயித்தானிடம் பேசும் வரை உயிரில்லை. போரிவிலி
ஷ்டேஷனிலிருந்து வசாய் செல்ல ரயில் ஏறிக்கொண்டிருந்தார் அயித்தான்.

wednesday படத்தில் நஸ்ருதின் ஷா சொல்வது போல நம் உறவினர்கள்தான்
என்று இல்லை முகம் தெரியாத அந்த மனிதர்கள் பலியாவது கூட வருத்தத்தை
தருகிறது. இன்று செய்தித்தாள்களில் நடந்த பயங்கரத்தை விடவும்
பயங்கரமாக உடலில் ரத்தம் கசிய, ரத்தக்குளத்தில் தன் கால் போய்,கைபோய்
கிடக்கும் மனிதர்களின் படங்களை பார்க்கும் பொழுது மனம் கொந்தளித்து
போகிறது. இதுவரை 21பேர் தன் உயிரை இழந்திருக்க,140 பேர் படுகாயம்
அடைந்திருக்கின்றனர்.

எந்த தீவிரவாத அமைப்பும் தாங்கள் செய்ததாக மார்தட்டிக்கொள்ளவில்லை
என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்படியானால் கள்ளன் நம்
நாட்டுக்குள்ளேயேவா?? நமக்கு மோசமான அண்டைநாடுகள் இருக்கிறது
நிஜம்தான் என்றாலும்.....

உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து
விட்டு இருப்பதை விட அரசு வேறு என்ன செய்திருக்கிறது? முழங்காலுக்கு
கீழே துண்டாகி உயிர்பிழைத்து அடுத்தவர்களுக்கு பாரமாகவும், நடந்த
குண்டு வெடிப்பின் சாட்சியாகவும் மிச்ச காலத்தை அவஸ்தையுடன்
வாழப்போகும் இவர்களின் காலம் எவ்வளவு கொடூரமானது.
ஏதாவது ஒரு தீர்வு கிடைத்த பாடில்லை. உலகத்தின் ஏதாவது
ஒரு பாகத்தில் ஏதாவது ஒரு நாடு குண்டு வெடிப்புக்கு ஆளாவதுதான்
இப்பொழுதைய தலைப்புச் செய்தியாகிவிட்டது. இதுவும் கடந்து போகும்
என இந்த நிகழ்வுகளுகு சொல்ல முடியாது.

இயற்கை பாதிப்பு,தீவரவாத தாக்கம் என எத்தனை அடிகள் பட்டாலும் அடுத்த நாளே
மும்பை எழுந்து நடப்பதுதான் இப்பொழுதும் நடக்கிறது. NDTV24*7 சேனலில்
குண்டு வெடிப்பு நடந்த இடத்தை ஒட்டி இயக்கம் அவ்வளவாக இல்லை
என்று மதியச் செய்தியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

மும்பையில் மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் ரயில் போக்குவரத்து
இல்லை. தஹிசர்-மிராரோட் பகுதியில் மழையால் தண்ணீர்க்குழாய் பாதிக்கப்பட்டு
ஒரு பாலத்தில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் தரை மார்க்கமாகவும் பயணம்
பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் மக்கள் நடமாட்டம் குறைவாக
இருக்கிறதே தவிர பயந்து போய் யாரும் வீட்டில் அமர்ந்துவிட வில்லை.

மும்பை மட்டுமல்ல இந்தியாவின் எந்த ஒரு மாநிலமும் பாதுகாப்பானது
அல்ல என உள்துறை அமைச்சர் கொடுத்திருக்கும் பேட்டி சாமானியனின்
மனதில் இன்னமும் எரிச்சல் கொடுக்கிறது.

நிச்சயமில்லாத ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோன்
என்பதை இந்த மாதிரி நிகழ்வுகள் நமக்கு அடிக்கடி சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றன.

உயிரிழந்தவர்களுக்கு என் இதய அஞ்சலிகள்!!
உயிர்பிழைத்தோருக்கு வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுபட
என் பிரார்த்தனைகள்.

Tuesday, June 21, 2011

மாம்பழமாம்!! மாம்பழம்....

ஒண்ணாங்கிளாஸ்ல படிச்ச பாட்டு ஞாபகம் இருக்கா??
மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்,
சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்,
உங்களுக்கு வேணுமா? இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு திங்கலாம்!! :))

மே மாதம் தான் ஆந்திராவில் மாம்பழ சீசன் என்றாலும் இந்தத்தடவை
ஜூன் கடைசி வரைக்கும் மஞ்ச மஞ்சேருன்னு மாம்பழங்கள் கிடைக்குது.
மாம்பழம். அதோட ருசியே அலாதி. முக்கனியில் ஒரு கனி இந்த
மாம்பழம். அந்தக் கலரே அழகு. மஞ்சளில் இருக்கும் நிறைய்ய ஷேட்களில்
மாம்பழ மஞ்சள் கண்ணுக்கு அழகு.



இந்த வாட்டி மாம்பழம் கிலோ 25 ரூவாய்தான். இங்க கிடைக்கும் நிறைய்ய
வகைகளுக்கு பெயரே தெரியவில்லை. தெரிஞ்ச கொஞ்சத்தை சொல்றேன்.
பங்கனபள்ளி, தோத்தாபுரி(கிளி மூக்கு) ரசால்லு,சுவர்ணரேகா, நீலம்.
மல்கோவா,அல்போன்சாவும் கிடைக்கும். கேசர்னு ஒரு வகை கூட
சூப்பர் மார்க்கெட்ல பார்த்தேன். ரசால்லுன்னு சொல்லும் வகை மாம்பழத்தை
கட் செஞ்சில்லாம் சாப்பிட முடியாது. ஜுர்ருன்னு ஜுர்ரிக்க வேண்டியதுதான்.:)
ஃபுல்லா மாம்பழ ரசமா இருக்கும். அதனாலத்தான் ரசால்லுன்னு பேரு.


மாம்பழத்தை பலரும் ருசிக்கணும்னு நினைக்கும் பொழுது கூடவே ஒரு
பயம். மாம்பழம் சாப்பிட்டா வெயிட் போட்டுடுவோம் என்பதுதான்.
ஆனா மாம்பழம் அதிகமா சாப்பிட்டத்தான் சரியா செரிமாணம் ஆகாம,
மாந்தம்னு சொல்லும் அஜீரணம் ஏற்படும். அளவோட சாப்பிட்டா மாம்பழம்
ஒரு அருமருந்து. அதுல உடலுக்குத் தேவையான சத்துக்கள் இருக்கு.



விட்டமின் ஏ,சி,பொட்டாஷிச்யம், காப்பர், அமினோ அமிலம்,
இப்படி நிறைய்ய இருக்கு. உடம்புக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி
மாம்பழம் சாப்பிடுவதால கிடைக்குது.

நம்ம தேசிய பழம் இந்த மாம்பழம் தான். அது தெரியுமா?
பாகிஸ்தானுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் கூட இதுதான் தேசிய பழம்.
பங்களாதேஷுக்கு தேசிய மரம் மாமரம் என்பது கூடுதல் தகவல்.

நம்ம இந்தியாவுலத்தான் அதிகமா மாம்பழம் தயாராகுது. ஆனா
நாமளே அதிகம் உபயோகம் செஞ்சிடறதால ஏற்றுமதியில் முதலிடம்
பாகிஸ்தானுக்கு போயிடிச்சு.

இப்ப வீட்டுல நுழைஞ்சதுமே சும்மா கும்முன்னு மாம்பழ வாசனை
தூக்குது. விசாகப்பட்டிணத்துலேர்ந்து வந்த உறவினர் கொண்டு வந்த
பழத்தோட, நேத்து அப்பார்ட்மெண்டில இருக்கறவங்க அவங்க
தோட்டத்துல விளைஞ்சதுன்னு மொத்த அப்பார்ட்மெண்டுக்கும்
கொடுத்திருக்காங்க. :)))

ஆம் ரஸ் பூரி இந்த சீசன்ல நிறைய்ய வாட்டி செஞ்சாச்சு. பூரிக்கு
மட்டும்தான் ஆம்ரஸ்னு இருந்த ஆஷிஷ், அம்ருதா மேத்தி சப்பாத்திக்கும்
ஆம்ரஸ் சாப்பிடறாங்க.

மாம்பழத்தை அளவா சாப்பிட்டு அதோட நற்பலன்கள் நம்ம உடலுக்கு
சேர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. உடல் சூடாகிடாம இருக்க பால்
ஒரு டம்ப்ளர் கண்டிப்பா எடுத்துக்கணும்.



Wednesday, April 06, 2011

இளைச்சவங்களுக்கு மட்டுமில்ல.........

அதென்னமோ தெரியலை. அப்படி ஒரு இளக்காரம். இல்லாடி
ஒரு பயம். சிலருக்கோ பிடிக்காது. அதனால இதை அதிகமா
உபயோகப்படுத்தவும் மாட்டாங்க. அப்படியே செஞ்சாலும்
பித்ரு காரியங்கள் எனப்படும் திவசம் அன்னைக்குத்தான் செய்வாங்க.
ஆனா இதுல இருக்கும் நலன்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டா நீங்களும்
கண்டிப்பா உணவுல சேத்துக்குவீங்க.

இந்த எள்ளைத் தாங்க சொல்றேன். கடலை உருண்டை சாப்பிடுவாங்க,
ஆனா எள்ளுருண்டைக்கு “நோ!”நோ”! தான். இதுல இன்னொரு
மேட்டரும் சொல்வாங்க யார் வீட்டுலயாவது எள்ளுருண்டை அல்லது
எள் சம்பந்த பட்டது சாப்பிட்டா அவங்களுக்கு நாம வேலை செஞ்சுக்
கொடுக்கணும். இதெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு பலர் எள்ளை
தொடுவதே இல்லை.

தீவளிக்கு தீவளியாவது எண்ணெய் தேச்சு குளிக்கும் பொழுது
உபயோகிக்கப்படுவது நல்லெண்ணெய் தான். இதுலதான் மஹாலட்சுமி
இருப்பதாக புராணம் சொல்வது. நெய்க்கு அடுத்து பூஜைக்கு பயன்படுவது
நல்லெண்ணெய் தான். ஆயுர்வேதத்தில் எள்ளு மிகச் சிறப்பான இடம் இருக்கும்.
நல்லெண்ணையை தேய்த்து, மசாஜ் செய்து குளிப்பதால்
உடல் சூடு தணியும்.



சாம்பார் செய்யும் பொழுது ரீஃபைண்ட் ஆயில் உபயோகித்து தாளிப்பதற்கு
பதில் நல்லெண்ணெயில் தாளிதம் செய்தால்.... சாம்பார் வாசம்
வீசும். காரக்குழம்பு, வத்தக்குழம்பு, வெந்தயக்குழம்பு இதெல்லாம்
சாப்பிடும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டால் நல்ல ருசி + உடலுக்கும்
நல்லது. சுடச்சுட இட்லி அதன் மேல ஜோதிகா மாதிரி இல்லாட்டியும்
1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டா...... உடலுக்கும் நல்லது,
நாவுக்கும் நல்லா இருக்கும்.

வயிற்றுப்புண் அல்லது வாய்ப்புண் இருந்தால் முதல் கவளமாக
சூடான சோற்றில் நல்லெண்ணெய் + கொஞ்சம் உப்பு சேர்த்து பிசைந்து
சாப்பிட சரியாகும். ஊறுகாய்களுக்கும் நல்லெண்ணெய் தான் பெஸ்ட்.
எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய்க்கு இவ்வளவு மருத்துவ
குணம் இருக்கும் பொழுது மூலமான எள்ளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும்.

ஆனா இளைச்சவங்களுக்கு எள்ளு, கொளுத்தவங்களுக்கு கொள்ளுன்னு
வசனம் சொல்லிட்டு எள்ளை தவிர்த்திடுவோம். கொள்ளையும் சாப்பிட
மாட்டோம். (குதிரைக்குத் தானே கொள்ளுன்னு சிலர் கிண்டல் செய்வாங்க)



எள்ளில் இரும்பு, மங்கனீசியம், காப்பர், கேல்சியம் ஆகிய சத்துக்கள்
இருக்கின்றன. விட்டமின் பி1, விட்டமின் இ ஆகியவையும் அடங்கி
இருக்கு. மூர்த்தி சிருசுன்னாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்றாப்ல
இந்தச் சின்ன வித்துக்குள் எவ்வளவு சக்தி கிடைக்குது பாருங்க.
எள்ளு கசப்பா இருக்கும் என்பதால பலர் அதை சாப்பிட மாட்டாங்க.
வெல்லம் சேர்த்து உருண்டை செய்யலாம். காரப்பொடி மாதிரி
செஞ்சு காய்கறில தூவி பிரட்டி எடுத்தா சுவையா இருக்கும்.
இட்லிப்பொடி செய்யும் போது அதுல சேத்துக்கலாம். திருநெல்வேலி
இட்லிப்பொடி சாப்பிட்டிருக்கீங்களா? எள்ளு வாசனையோட சூப்பரா
இருக்கும்.



பூப்படையும் பருவத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு எள்ளை
உணவில் சேர்த்துக்கொடுப்பதால நல்ல பலன் இருக்கும். பெண்களிலிருந்து
எல்லோரும் தினமும் இரண்டு உருண்டை சாப்பிடுவதால் (எள்ளு+ வெல்லம்
சேர்த்தது) உடம்புக்குத் தேவையான கால்சியம், இரும்புச்சத்து
சேர்ந்திடுது. ஆண்களுக்கும் கொடுக்கலாம். தவறே இல்லை.
கேன்சரை தடுக்கும் காரணிகள் எள்ளில் இருக்கு. கறுப்பு எள்ளு +
வெள்ளை எள்ளு இரண்டையும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்து
உட்கொண்டால் ரொம்பவும் நல்லது.

பெண்மையின் அழகுக்கு அழகு சேர்க்க உதவும் எள்ளு ஆண்மைக்கு
வளத்தையும், எனர்ஜியையும் தருகிறதுன்னு மருத்துவர்கள்
சொல்றாங்க.


மேலை நாடுகளில் ப்ரட்டில் எள்ளு போடுவார்கள். மெக்டொனால்ட்
ப்ரட்டில் பார்க்கலாம். நம் நாட்டில் மட்டுமில்லாமல் மேலை நாடுகளில்
கூட எள் சர்வ சாதரணமாக உபயோகிக்கப்படுகிறது.


இனியாவது எள்ளை உணவில் சேர்த்துக்கொள்வோம், ஆரோக்கியமான
வாழ்க்கை வாழ்வோம்.


Thursday, March 31, 2011

ஹோலிப்பண்டிகையா? கிலிப்பண்டிகையா???

குளிர்காலம் முடிந்து வெயிலின் துவக்கத்தை கொண்டாடுவதற்காக,
வசந்தத்தை வரவேற்கும் ஒரு பண்டிகையாக மகிழ்ச்சியுடன்
அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகைதான் ஹோலி.
ஆனால் காலச்சக்கரத்தில் இந்த ஹோலிப்பண்டிகை எத்தனையோ
மாற்றங்களை சந்தித்து இன்றைக்கு கிலிதரும் பண்டிகையாகி இருக்கிறது.


கண்ணன் பிறந்த மதுரா, பிருந்தாவனம், நந்தகாவ் ஆகிய இடங்களில்
தான் ஹோலிப்பண்டிகை கொண்டாட ஆரம்பித்தனர். இன்றளவும்
16 நாட்களுக்கு ஹோலி கொண்டாடப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணர், ராதை
மற்றும் கோபிகைகர்களுடன் ஹோலி கொண்டாடியதாக சொல்கிறார்கள்.


பிரகலாதனின் அத்தை ஹோலிகா, நெருப்பு சுடாத வரம் பெற்றவள்.
ஹிரண்யகசிபு பிரகலாதனை நெருப்பில் போட உத்திரவு இட்ட பின்
தன் தங்கை ஹோலிகாவை அழைத்து தன் மகனை பத்திரமாக
காத்து வரச்சொல்ல, அவ்வாறே செய்யும் ஹோலிகாவை நெருப்பு
சுட்டு பொசுக்கிவிடுகிறது. (நெருப்பு அவள் மட்டும் தனியாக இருந்தால்
ஒன்றும் செய்யாதாம்) அதனால்தான் முதல் நாள் ஹோலிகா தகனம்
செய்கிறார்கள். மறுநாள் ஹோலி கொண்டாடுகிறார்கள் என்றும்
புராணக்கதை சொல்கிறது.

எது எப்படியோ! கொண்டாடப்படும் பண்டிகைகள் காலவர்த்ததேசமான
மாறுதல்கள் பெற்றுள்ளது என்றாலும் ஹோலி அளவுக்கு இல்லை.
பிருந்தாவனத்தில் தற்போது ஹோலி சகதி ஹோலியாகி விட்டது.
வண்ண வண்ணக் கலர்களை கரைத்து ஹோலி ஆடியது போய்,
சாணி, சாக்கடைத் தண்ணீர் ஆகியவற்றில் கூட நடக்கிறதாம்.
அன்று யாரும் யாரையும் அடிக்க தடையில்லையாம். அதனால்
பகை தீர்க்கும் நாளாகவும் இதை சொல்கிறார்கள். போலீஸால்
கூட ஏதும் செய்ய முடியாதாம்!!! பெண்கள் ஹோலி விளையாட
வருவதே இல்லையாம். காரணம் குடித்து கும்மாளமிட்டு
கலாட்டா செய்யும் ஆண்கள். இதில் படித்தவர்கள், மேல்வர்க்கத்தினர்
இப்படி செய்வதில்லை என்றும் சராசரிக்கும் கீழ் உள்ள மக்கள்தான்
இப்படி நடந்துக்கொள்கிறார்கள் என்றும் புலம்புவதை கேட்க நேர்ந்தது.

பர்ஸானா என்னும் இடத்தில் லாத் மார் ஹோலி ப்ரபலம்.


ஆண்களை பெண்கள் அடித்து துரத்துவார்களாம். ஆண்களும்
பெண்களை கலாட்டா செய்து பாடல்கள் பாடுவார்களாம்.
இன்று குஜ்ஜர் இன பெண்கள் ஹோலி அன்று குடித்தும்
மயங்கிக்கிடக்கும் கணவனை அடிப்பார்களாம். வருடம்
முழுதுவதும் துன்புறுத்தும் கணவனை பகைத் தீர்த்துக்கொள்ளூம்
நாளாக நினைப்பதாக மதுராவில் ஒரு பெண் சொன்ன பொழுது
உலக மஹா அதிர்ச்சி எனக்கு!!!


தில்லியில் கூட ஹோலி பயம் தான். இந்த முறை பெண்கள் அமைப்பும்,
காவல்துறையும் சேர்ந்து கல்லூரி பெண்களுக்கு “விசில்” கொடுத்திருக்கிறார்கள்.
ஏதாவது பிரச்சனை என்றால் விசிலானால் ஒலி எழுப்பி உதவிக்கு
ஆள் அழைக்க ஏற்பாடு!!! ஹோலி பயத்தில் மக்கள் யாரும அதிகமாக
வெளியே வரவில்லை. காலை 6 முதல் மதியம் 2 மணி வரை
மெட்ரோ ரயில் கூட ரத்து செய்து வைத்திருந்தார்கள்.


இயற்கை கலர்களை உபயோகப்படுத்துவது போய் தற்போது
சிந்தடிக் கலர்கள் உபயோகிக்கிறார்கள். அது தோல் அலர்ஜி
தருகிறது. தலையில் ஊற்றப்படுவதால் முடியும் பாதிக்கப்படுகிறது.
கண்கள் 4 நாள் ஆனாலும் சிகப்பாய் தெரியும் அளவுக்கு
இந்த சிந்தடிக் கலர் இருக்கிறது. இயற்கை கலர்கள் விலை
கொஞ்சம் ஜாஸ்தி என்பதால் சர்வசாதரணமாக சிந்தடிக் கலர்கள்
உபயோகிக்கிறார்கள். இவை உடலில் ஒட்டிக்கொள்கின்றன.

மார்ச் 20ஆம் தேதி ஹோலி. ஊரடங்கு உத்தரவு போட்டது போல
கடைகள் எல்லாம் அடைப்பு. ஆமை போல் ஊறும் வாகனங்களைப்
பார்த்திருந்த எனக்கு அன்று காலியாக அங்கும் இங்கும் ஏதோ
சில வாகனங்கள், அது கூட ஏர்போர்டுக்கு அருகில் மட்டும்
கொஞ்சம். மாநகரப்பேருந்துக்கள் கூட இயக்கப்படவில்லை!!!
மதியம் 2 மணிக்கு மேலே ஆரம்பித்தது டிராபிக்.


நண்பர்களுடன், உறவினர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக
கொண்டாட வேண்டிய பண்டிகையை இப்படி ஊரடங்கு
உத்தரவு போட்டு கொண்டாடும் நிலைக்குத் தள்ளியவர்களால்
பண்டிகைக்கான கோலாகலம் போய் பீதி கிளப்பும் நாளாக
ஆனதே என்ற வருத்தம்தான் இந்தப் பதிவு போடக் காரணம்.


Tuesday, March 15, 2011

ஏ குருவி!! சிட்டுக்குருவி

இலங்கையைவிட்டு கிளம்புகையில் எத்தனையோ விஷயங்கள்
இனிக்கிடைக்காது என்று மனது கணத்த விஷயங்களில் மிகவும்
முக்கியமானது காலை எழுந்ததும் கேட்கும் இந்த சத்தம்.
பகல் முழுதும் கூட ஏதோ ஒரு பறவையின் சத்தம் வீட்டைச்
சுத்தி இருக்கும். வீட்டைக்காலி செய்வதற்கு முன்
முழு வீட்டையும் வீடியோ எடுத்த பொழுது பேக்ரவுண்ட் ம்யூசிக்
போல் அந்தச் சத்தம் தான் இருந்தது.




சிட்டுக்குருவி எனும் இனமே அழியும் சூழலில் இருக்கிறது.
மரங்கள் போய் மாடிவீடுகள் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய
வாழ்வில் கூடுகட்டி வாழ அதற்கென ஒரு இடமில்லை.
அங்கங்கே தொங்கும் ஒயர்கள், செல்போன் டவர்கள் அந்த
சின்ன உயிரை எடுக்கும் எமன்களாகிவிட அந்த இனிய
சத்தம் எழுப்பும் ஜீவன் இனி இருக்கவே இருக்காதோ என
அச்சம் ஏற்படுகிறது.



மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு அம்மாவிடம் கதை
பேசுதோ என நினைக்க வைத்த அந்த சிட்டுக்குருவி
இப்போது எங்கே சென்றது? இந்த நினைவு இப்பொழுதுதான்
உலக மக்களிடையே வந்திருக்கிறது. எதையோ இழந்த
அந்த குருவியின் சத்தமற்ற நேரங்கள் தந்த வலியால்
உலகம் விழித்துக்கொண்டு இந்தச் சிட்டுக்குருவிகளுக்காக
ஒரு விழிப்புணர்வு நாளைக்கொண்டு வந்துள்ளது.
மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகளின் தினம்.


இந்தக் குருவிகளைக் காக்க நாம் என்ன செய்யலாம்!!
நம்மால் ஆன சிலவற்றை பார்ப்போம்:
இதுபோல வீட்டுக்கு வெளியே கூடும், சுத்தமான தண்ணீருடன்
சில நெல்மணிகள் வைக்கலாம்.

மொட்டைமாடியில் சில தானியங்களை போட்டுவைக்கலாம்.

முகநூலில் சேர்ந்து என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு
நம்மால் இயன்றதை செய்யலாம்



கெமிக்கல் உரங்களை உபயோகிப்பதை நிறுத்திக்கொண்டால்
அந்த நெல்மணிகளை தின்று அவை இறக்காமல் இருக்கும்.

சமீபத்தில் படித்த ஒரு கதையை இங்கே சொல்ல ஆசைப்படுகிறேன்.
நிலத்தில் விளைந்திருக்கும் நெர்க்கதிர்களை தின்ன வரும் காக்கா,
குருவிகளை விரட்ட சோலக்காட்டு பொம்மை தயார் செய்து கொண்டிருந்த
தாத்தாவைப் பார்த்து பேரன் என்ன செய்கிறார் என கேட்க,
சோலக்காட்டு பொம்மை செய்வதை சொல்வார்.

“அந்தச் சின்ன ஜீவன் எவ்வளவு சாப்பிடப்போகிறது 2 கிலோ கூட
ஆகாது. அதற்குப்போய் 300 ரூபாய் செல்வழிக்கிறீர்களே!!” என்று
சொல்ல தாத்தா தான் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு
யோசிப்பதாக ஒரு பக்க கதை அது.



சிட்டுக்குருவிகளுக்கு பல்வேறு மொழிகளில் பெயர்கள் என்னென்ன
என்று தெரிஞ்சிக்கலாமா!!

தமிழிலும், மலையாளத்திலும் குருவி, தெலுங்கில் “பிச்சுக”pichhuka,
கன்னடத்தில் குப்பாச்சி gubbachchi, பஞ்சாபியில் chiri சிர்,
ஜம்முகஷ்மீரில் செஎர் chaer , வங்காளத்தில் சராய் பாகி Charai Pakhi ,
ஒரியத்தில் கராச்சிட்டியா gharachatia, உருதுவில் சிரயா chirya,
சிந்தி மொழியில் ஜிர்கி. ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும்
மணக்கும். இந்தச் சிட்டுக்குருவியும் அப்படித்தான்.

அழிந்துவரும் இந்த இனத்தைக் காக்க நம்மால் ஆனதைச் செய்வோம்.
இல்லையெனில் வருங்காலக்கவிஞர்களுக்கு கூட சிட்டுக்குருவி
என ஒரு இனம் இருந்ததாம் எனத் தெரியாது.
“ஏ குருவி! சிட்டுக்குருவி”
”சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே!”
என பாடல்கள் வராமலே போய்விடும்.




மறக்காம ஓட்டு போடுங்க. நன்றி

Monday, March 14, 2011

ரொம்ப நாளைக்கப்புறம் பின்னூட்டம் பதிவாக....

தில்லிவாழ் தமிழர்களின் ரிஷப்ஷன்னு- நம்ம சகோ வெங்கட் நாகராஜ்
பதிவு போட்டிருந்தார். அவர் சொல்லியிருப்பது அம்புட்டும் நிஜம்.

திருமண வைபவத்துல ஆடம்பரத்தை குறைச்சா நல்லது. வட நாட்டவங்க
எந்த ஊருல இருந்தாலும் தங்கள் பாரம்பரியத்தை விடறதேயில்லை.
மெஹந்தி, டிரஸ், டான்ஸ், உணவு, மந்திரங்கள் என எதுவுமே
குறைவில்லை. நமக்கு அந்த பழக்க வழக்கம் பிடிச்சிருந்தா
அதை அளவோட செய்யலாம். உருண்டை உருண்டையா
மருதாணி வைக்காம டிசைன் மெஹந்தி வெச்சுக்கலாம்.
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முன்னாடி சின்னதா டான்சும்
ஆடலாம். ஆனா இந்த பாட்டுக்கச்சேரின்னு ஒண்ணு வெப்பாங்க
பாருங்க..... காது ஜவ்வு கிழிஞ்சிடுமோன்னு இருக்கும்.

நண்பர்கள், உறவினர்கள் கலக்கும் இந்த இடத்துல அவங்க
பேசி மகிழ வாய்ப்பு இல்லாம காதை கிழிக்கும் “மெல்லிசைக்
கச்சேரி”!!!! நடக்கும். வேற வழியே இல்லாம வந்தவங்க
கம்முனு உக்காந்திருக்கணும். அதுவும் மண்டபம் சின்னதா
இருந்துச்சுன்னு வைய்ங்க... அம்புட்டுதான்.

சாப்பாடு ரொம்ப ஆடம்பரமா இல்லாம வயிற்றுக்கு இதமா,
ருசியா இருக்கணும். அதைவிட்டு நிறைய்ய வெரைட்டி போட்டு
அதை வேஸ்டாக்கிட்டு எந்திரிச்சு போறவங்கதான் ஜாஸ்தி.
இந்த இடத்துல தன்னோட பதிவுல சகோ சொல்லியிருக்காப்ல
அனாதை விடுதிகளுக்கு கொடுப்பது பெஸ்ட்.

அதுவும் இந்த ”ஸ்டாக் பார்ட்டி” கண்டிப்பா இருந்தே
ஆகணும்னு ஒரு ட்ரண்ட் கொண்டு வந்திட்டாங்க. மாப்பிள்ளை
அழைப்பு அன்னைக்கு மணமகனோட நண்பர்கள், சில
நெருங்கிய உறவினர்களுக்கு இதற்கான வசதியை
மணமகளோட அப்பா செஞ்சு கொடுத்தே ஆகணும்ங்கற
அளவுக்கு இருக்கு நிலமை. ஒண்ணும் சொல்லமுடியாம
கண்டும் காணாம விடும் நிலமை அவர்களுக்கு. வேற
இடத்துல நடக்கும் பார்ட்டிக்கு தனியா சாப்பாட்டை அனுப்பி
வேற வெக்கணும்.

சமீபத்துல ஒரு புத்தகத்துல கல்யாணத்துக்கான செலவுகளில்
ஆடம்பரம் இல்லாம இருக்கணும்!! செலவு குறைக்கும்
விஷயங்களில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒத்துக்கணும்னு
ஒருத்தங்க சொல்லியிருந்தாங்க. சொன்னா யாருங்க கேக்கறாங்க??

எங்க வீட்டுலயே எடுத்துக்கோங்க. என் தம்பிக்கு பெண் பாக்க
ஆரம்பிச்சிருக்கோம். தெலுங்கு சம்பிரதாயத்தில் தாலிமுடியும்
பொழுது மணமகன், மணமகள் இருவரும் அணிவது
பருத்தி ஆடைகள்தான். மணமகள் அணியும் புடவை மஞ்சளில்
நனைக்கப்பட்டதாகவோ, மஞ்சள் கலரிலோ இல்லை
கேரளா புடவைப்போலவோ இருக்கும். முக்கியமான தருணத்திலேயே
பட்டுக்கு மதிப்பில்லாத பொழுது பூச்சியைக் கொன்று தயாரிக்கப்படும்
பட்டுப்புடவையை கட்டுவதை எங்கள் குடும்பத்தில் தவிர்க்கிறோம்.

இந்தப் பட்டுப்புடவை நல்ல கிராண்டாக 25ஆயிரம் வரை
செலவு செய்து வாங்கப்படுவது அனாவசிய செலவு இல்லையா?
இந்தக் காலத்தில் புடவை கட்டுவதே அரிதாகப் போன நிலையில்
பட்டுப்புடவை எப்பொழுதோ ஒரு முறை கட்டப்போறாங்க.
என் தம்பிக்கு வரும் மனைவியும்(நான், அத்தைகள்,
அம்மம்மா,அம்மா,சித்தின்னு யாருமே கட்டுவதில்லை)
பட்டுப்புடவை கட்டுவதை தவிர்க்க வேண்டும்,
வரதட்சணை வேண்டாம்னு கொள்கையோட
இருக்கோம்ங்க. இது குத்தமா போச்சு!!!

ஒரு பொண்ணு வீட்டுல எங்க பொண்ணு எங்க வீட்டு ஃபங்க்‌ஷனுக்கு
வரும்போது கட்டிக்கட்டும். உங்க வீட்டுல வேணாம்! அப்படின்னு
சொன்னாங்க. ஆடம்பரம் வேணாம், உயிர்வதை வேணாம்னு
சொல்றோம். ஆனா அதை என்னவோ எங்களுக்கு வாங்கிக்
கொடுக்க வக்கில்லாதவங்கற ரேஞ்சுக்கு பேசினாங்க. அந்தப் பொண்ணு
ஒத்துக்கிட்டு, அவங்கம்மா இப்படி பேசினதுதான் மேட்டர்.

பத்திரிகையில் ஒரு அம்மா கேட்டிருந்தபடி நாம செலவைக் குறைச்சு
பொண்ணு வீட்டுக்காரங்களை கசக்கி பிழியாம கல்யாணத்தை
நல்லபடியா நடத்தலாம்னாலும் ஆடம்பரம், கவுரவம்னு மக்கள்
மனசு இருக்கும் வரைக்கும் ரொம்ப கஷ்டம்... நம்ம பாரம்பரியத்தை
விடக்கூடாது, நாம எந்த ஊருல, எந்த நாட்டுல இருந்தாலும்
நம் கலாச்சரம் நம் ரத்தத்தில் இருக்கணும்.

மனோபாவம் மாறி வீணான ஆடம்பரத்தை குறைச்சுக்காட்டி
கஷ்டம். என்ன மாதிரி விசேஷங்களுக்கு போகும்போது
சகோ சொன்ன மாதிரி மனசு ஒட்டாம, வேண்டா வெறுப்பாத்தான்
போக வேண்டி இருக்கு.

மாற்றம் வரவேண்டிய எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று.



Tuesday, January 25, 2011

UN SUNG HEROINES!!!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பெண் ஒரு பெண் உண்டுன்னு எல்லாம்
நல்லாச் சொல்வாங்க ஆனா எல்லா பெண்களுக்கும் புகழாரம் கிடைக்கறதில்லை.
இராமனோடு காட்டுக்கு போன சீதைக்கு பெயர் கிடைச்ச மாதிரி,
14 வருடம் தன் அண்ணனை காக்க நானும் காட்டுக்குபோவேன்னு போன
லட்சுமணனின் மனைவியின் தியாகம்... அதைப்பத்தி பெருசா
யாருக்குமே தெரியாது! அவளோட சோகம், தனிமை, பிரிவு இதெல்லாம்
கட்டாயம் பாராட்டப்பட்டு சரித்திரத்துல இராமாயணம்னு சொல்லும் பொழுதே
சீதையின் பெயரோடு லட்சுமணனின் மனைவி ஊர்மிளையின் பேரும்
சொல்லப்படணும். ஆனா இல்லை. இந்த மாதிரி மறக்கப்பட்ட
ஹீரோயின்கள் தான் UN SUNG HEROINES.

ஆரம்பம் முதலே நாட்டுக்காக உயிர்விட்ட தியாகிகளைப்பற்றி அதில்
சில பெண்கள் இருந்தால் அவர்களைப்பற்றி படிச்சு அவங்க தைரியம்
பார்த்து வியந்திருக்கிறோம், மரியாதை செலுத்தறோம். ஆனா
அந்த ஆண்கள் தன் வீட்டையும் மறந்து நாட்டின் மீது அக்கறை
செலுத்த காரணம் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்கள்.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லைன்னு
பாட்டு எழுதிகிட்டு பாரதியார் இருந்தார். ஆனா அவங்க மனைவி
அடுத்த வேளை சோறு சமைக்க முடியாமல் கஷ்டப்பட்டு குடும்பத்தை
எப்படியோ காப்பாத்தினாரே!!

இப்படி எத்தனையோ பேர்!!! அப்படி பட்ட பெண்களாலும் தான்
நமக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதால் அத்தகைய பெருமைமிகு
பெண்களுக்கு “ராயல் சல்யூட்”.

ஹைதையே ஆர்மி ஏரியாவுக்குச்சுற்றிதான் இருக்கிறது. ஒவ்வொருமுறை
அந்தப்பாதையை கடக்கும் பொழுதும் அந்த காவலர்களை பார்க்கும்பொழுதும்
இந்த லட்சுமணர்கள் தன் கடமையை ஆற்ற அவரை அனுப்பி வைத்திருக்கும்
ஊர்மிளையின் ஞாபகம்தான் வரும். பலர் அன்னையின் அனுமதி பெற்று
வந்திருப்பார்கள். எப்போது ஊருக்கு போவோம் எனும் எண்ணம் அவர்களுக்கு
இருக்கும். தன் கணவன் வந்து செல்லும் நாளுக்காக காத்திருக்கும் அந்த
காதல் மிகுந்த மனைவியின் ஏக்கமும் தான் நம்மை சுதந்திரமாக
பயமில்லாமல் வாழ வைக்கிறது என எண்ணும் பொழுது அவர்களின்
தியாகத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. மரண நேரக்கூடும்
என தெரிந்தும் தைரியமாக தேசிய படையில் சேர்ந்திருக்கும் காவலர்களுக்கு
தன் மகளை கொடுத்திருக்கும் அந்த மகான்களுக்கும் என் வந்தனம்.

பார்டர் படத்தில் இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் என்னுடைய
இந்த நினைப்பு இன்னும் அதிகமாகும்.

ஊரிலிருந்து வந்திருக்கும் கடித்தத்தில் தங்கள் நல்வரவை எதிர்பார்க்கிறேன்
என எழுதிருப்பாள் அந்தக் காதலி. கர்ப்பமான மனைவியை அருகிலிருந்து
பார்த்துக்கொள்ள வேண்டிய நேரத்திற்கு கூட இருக்க முடியாமல் எல்லையிலிருந்து
நாட்டைக் காக்கும் அந்த காவலர்களுக்கு என் வணக்கங்கள்.

தன்னுடைய ஒவ்வொரு சின்னச்சின்ன சந்தோஷத்தையும் விட்டுவிட்டு
ஏக்கங்களுடன் வாழும் சிப்பாய்களின் தாய்கள், மனைவி இவர்களுக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.



உடனிருக்கும் சிப்பாய்களே தன் உறவினர்களாக நினைத்து தங்கள் கடமையை
அவர்கள் நிறைவேற்ற, கண்கண்ட தெய்வமான கணவனையும், மகனையும்
தேசத்துக்கு அர்ப்பணித்து பெரிய கடமையைச் செய்து அந்த மன நிறைவில்
வாழ இவர்களின் தியாகத்தில் நாம் வாழ்கிறோம். இதை நம் பிள்ளைகளுக்கும்
எடுத்துச் சொல்லி அவர்களுக்கும் புரியவைப்போம் தியாகம் எவ்வளவு
பெரியதென்பதை!!!

ஜெய் ஹிந்த். வந்தே மாதரம்.

Friday, January 21, 2011

டச்சிங்!!... டச்சிங்!!!...டச்சிங்!!!...

அன்னையின் கதகதப்பை மறக்க முடியுமா!! தந்தையின் தோளில் ஆடியதை
மறக்க முடியுமா!! தாத்தாவின் கைபிடித்து நடந்தது!! இவை எல்லாவற்றிலும்
ஒரு ஒற்றுமை. அது தொடுதல் எனும் சுகம். பாசத்தோடு அம்மா வாரி
அணைத்துக்கொள்ளும் பொழுது அந்த சுகானுபவமே சரி.



படகோட்டி படத்தில் அருமையான இந்தப் பாடல்.
”தொட்டால் பூ மலரும்.. தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை”

என்ன அருமையான வரிகள்.



நிஜமும் அதுதான். கைகளால் தொட்டு அனுபவிக்காமல் நம்மால்
கற்கக்கூட முடியாது. மாண்டிசோரி முறைக்கல்வியில் பாடங்கள்
ஐம்புலன்களைக் கொண்டு கற்பதாக இருந்தாலும் அதில் முதலில்
கைகளால் தொட்டு உணர்ந்து கற்பதாகவே இருக்கும்.




பள்ளிப்பாடங்களில் கூட செய்முறை மிக முக்கியம். அதனால்தான்
”சித்திரமும் கைப்பழக்கம்” என்று சும்மாவா சொன்னார்கள்.

அலுவலக மீட்டிங்குகளில் கைகொடுத்தல் என்பது முக்கியமான
நிகழ்வு. ஒருவர் கைகுலுக்கும் ஸ்டைலை வைத்தே அவர்
எப்படி பட்டவர் என அறிந்துக்கொள்ள முடியும்.

வடக்கே பெரியவர்களைக்கண்டால குனிந்து அவர்கள் காலைத்தொட்டு
வணங்கும் பழக்கம் இருக்கிறது. இறைவனிடம் கூட சரணாகதிதான்
பெஸ்ட். வேலை பிடித்தவனின் காலை பிடித்துக்கொண்டால்தான்
வேதனை இல்லாத மனம் கிடைக்கும். வளர்ந்த பெரியவர்கள் கூட
ஓடிப்போய் அம்மாவின் மடியில் படுக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
காரணம் அந்த கதகதப்பு.

திருமண பந்தத்தில் கூட கைபிடித்து தான் பல சடங்குகள்.
தலையில் ஜீரகம்+வெல்லம் கலந்த கலவையை வைப்பதுதான்
தெலுங்கு சம்பிரதாயத்தில் முக்கியம். தாலிகட்டுவதெல்லாம் கூட
இரண்டாம்பட்சம்தான்.

தோழிகளைக்கண்டால் கட்டிக்கொள்ளும் போது பெருமையாக இருக்கும்.
ஆண்களுக்கும் அப்படித்தான். “டேய் மச்சான்” என்று தோள் சேருவார்கள்.
இத்தனை நல்லது இருந்தும் பலருக்கு தொடுவதே பிடிக்காது.
பிள்ளைகள் வந்து கட்டிக்கொண்டால் கூட எட்ட நில்லு என்றே சொல்வார்கள்.

பிள்ளைகளுக்கு வயது ஆக ஆக அவர்களை கட்டிக்கொள்வதை ஏறக்கட்டி
விடுகிறோம். ”ஏழு கழுதை வயசாச்சு! இன்னும் என்ன கொஞ்சல்” என்று
எகிருவார்கள். உண்மையில் பதின்மவயதுக்குழந்தையை கட்டி அணைத்தால்
தனக்கு தன் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என நம்பிக்கை இருக்கும்.
சின்னதாக இருக்கும்பொழுது எந்தக் கையை பற்றிக்கொண்டு நடந்தார்கள்
அந்தக் கை தன்னோடு எப்போதும் இருப்பதை உணரும்பொழுது அவர்களின்
தன்னம்பிக்கை வளர்கிறது.


அனைத்து தொடுதலிலும் புனிதமானது கணவன் மனைவி உறவு.
ஆனால் ஏனோ பலருக்கு பகலில் அருகருகே அமர்வது கூட
பிடிக்காது. இந்த நிலையில் தொட்டுக்கொள்வதாவது?? யாரும்
தவறாக நினைத்துவிடுவார்களோ! வயது வந்த பிள்ளை இருக்கிறானே!
என ஏகப்பட்ட பயங்கள்தான் பெரும்பான்மை காரணம். இரவில் மட்டும்
நெருங்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். காரணம்
பெண்ணுக்குத் தேவை அன்பு, அனுசரணையுடன் நானிருக்கிறேன் என
தன் அருகாமையை எப்போதும் உணர்த்தும் கணவன். மற்றதெல்லாம்
கடைசிதான்.

வயதான காலத்தில் அன்புக்குரிய துணையோடு கைபிடித்து
உனக்கு நான் எனக்கு நீ என நடக்கும் பெரியவர்களை பார்க்கும்பொழுது
மனதிற்கு இதமாக இருக்கும் தானே!! அவர்கள் கைபிடித்து
நடக்கும் அழகே அழகு!!!!!

கடைசியாக உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் எப்போது கட்டியணைத்தீர்கள்!!!
நினைவுப்படுத்திப்பாருங்கள். உங்களின் தொடுதலுக்காக, அதில் பொங்கும்
அன்புக்காக அவர் ஏங்கிக்கொண்டிருக்கலாம். அந்த அன்புக்குரியவர் உங்கள்
வளர்ந்தக் குழந்தை, மனைவி/ கணவன், அம்மா,அப்பா, அக்கா, தங்கை
என பெரிய லிஸ்டே இருக்கலாம்!! அன்பெனும் செடிக்கு தொட்டணைப்பது
தண்ணீர் ஊற்றுவது போல!

வசூல்ராஜா எம்பீபீஎஸ் படத்தில் கமலின் “கட்டிப்பிடி வைத்தியம்” உண்மை.
ஆனால் அதை வெளியாருக்கு செய்வதை விட நம் வீட்டில் இருக்கும்
நம்மவர்களுக்கு செய்து அவர்களை குஷிப்படுத்தலாமே!!!
நம் வீட்டில் நம்முடன் இருப்பவர்களைப் பற்றி நாம் பெரிதாகக்
கவலைப்படுவதில்லை காரணம் ஆங்கிலத்தில் அழகாக
சொல்வது போல “WE ARE TAKING THEM FOR GRANTED"
இந்த ஒற்றைவரி சொல்லிவிடும் எல்லா விஷயங்களையும்.

தொட்டால் சிணுங்கி போல சுருங்கிவிடாமல் தொட்டால் மலரும்
பூக்களாய் அன்பை வளர்ப்போம். தயங்காமல் டச்சிங்.. டச்சிங்க..


Tuesday, December 21, 2010

இந்த மாற்றம் தேவைதானா????!!!!!????????

பெண்ணுக்கு படிப்பெதற்குன்னு சொல்லி வீட்டில் அடுப்பங்கரையே
உலகம்னு வெச்சிருந்தாங்க. பெண் குடும்பத்தை பாத்துகிட்டா
போதும்னு அவளோட திறமைகளை அடக்கி ஒடுக்கி உருத்தெரியாம
ஆக்கினாங்க. அதுலயும் பிரகாசித்தது ரொம்ப கொஞ்சம் பேருதான்.
பெண்களோட இந்த நிலைக் கண்டு மீசைக்கார கவிஞனுக்கு மீசை
துடித்து கோபம் வந்து,” நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்”
பெண்களுக்கு வேணும். படிப்பு மிக மிக அவசியம். என்றெல்லாம்
சொன்ன பாரதியின் கனவு நனவாகி பெண்கள் பாரதி கண்ட
புதுமைப் பெண்களாக திகழ் வேண்டும் என எத்தனையோ
பாடுபட்டு மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்தது.

மாற்றங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து விடவில்லையே!! மெல்ல
மெல்ல இந்த நிலையை அடைய 3 தலைமுறை ஆகியிருக்கிறது.
ஆனால் இப்பொழுது இருக்கும் நிலை... இந்த மாற்றம்
மகிழ்ச்சிக்கு பதில் வெட்கத்தை தருகிறது.

அனைவரும் இப்படி இல்லை. ஆனால் ஒரு சிலரின் நடவடிக்கைகளால்
பெண் இனத்துக்கே அவமானம். தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ள
முடியாமல் அப்படி என்ன ஒரு குணம்?? சமீபத்தில் நாளிதழ்
ஒன்றில் படித்ததில் நெஞ்சு குமுறியது.

கணவன் வெளிநாட்டில் இருக்க கணிணி வலைத்தளம் மூலம்
நட்பான ஒருவனுக்காக வெப்கேமராவில் தன்னை துகிலுரிந்து
காட்ட அவன் அதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு
மிரட்ட வீட்டிலிருந்து பணத்தையும் நகையையும் திருடி
அவனிடம் கொடுத்திருக்கிறாள். அந்தப் பணமும் போதாமல்
வேறொருவனுக்கு தனது புகைப்படங்களைக்காட்டி அதன்
மூலம் பணம் பெற்று தருவதாக செய்தி. என்ன கொடுமை இது
கடவுளே!!

மிஸ்டுகால் கொடுத்து நட்பான ஒருவனுடன் சாட்டிங், போட்டோக்கள்
பகிர்வு என ஒரு பெண் அவதிபட்டதாகவும் படித்தேன். இப்படி
எத்தனையோ வெளியுலகிற்கு தெரியாத பல விஷயங்கள்.
தன்னோடு அலுவலகத்தில் வேலைபார்ப்பவருக்கு
ஃபார்வேர்டு மெசெஜ் அனுப்பி வைக்கும் பழக்கம் ஒரு பெண்ணுக்கு
உண்டு. அந்த சாதாரண ஃபார்வேர்டு மெசெஜ்ஜே அந்த ஆணின்
மனைவிக்கு சந்தேகம் உண்டாக்கி இருவருக்கும் சண்டை
முற்றி விவாகரத்து வரை போய்... இந்தப் பெண் தான்
காரணம் என அலுவலகத்துக்கு சென்று அனைவரின் முன்னிலும்
அவமானப்படுத்தி... போலிஸுக்கு போவதாக மிரட்டி
எல்லாம் நடந்தது.

இந்த மாதிரி விஷயங்களில் திருமணமான பெண்களும்
மாட்டிக்கொள்ளும்பொழுதுதான் பிரச்சனை அதிகமாகிறது.
எனக்குத் தெரிந்து பல சம்பவங்கள் இருக்கின்றன. சம்பந்த
பட்ட கணவன் மற்றும் குடும்பத்தாரின் நிலையை பார்க்கும்
பொழுது பாவமாக இருக்கிறது.
விவாகரத்துக்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்திருக்கிறது.

நமக்கான எல்லை எது என புரிந்து ஆணும்,பெண்ணும்
நடந்து கொண்டால் பிரச்சனையே இல்லை. அல்ப சந்தோஷங்களுக்கு
அடிமை ஆகாமல் ,மனதை அலைபாய விடாமல் நல்ல
நட்பு கொள்ள தெரியாதா??? நட்பிற்கு இலக்கணம் வள்ளுவர்
சொல்லியிருக்கிறாரே!! அவற்றையெல்லாம் மனனப்பகுதி
மதிப்பெண்களுக்காக மட்டும்தான் பள்ளியில் படிக்கிறார்களா?????

பெண்ணை மட்டும் குற்றம் சொல்ல முடியாது!!! இந்த
காலகட்டத்திலும் பெண்ணை அடிமையாக்கி,, பேசி மயக்கி
செய்யும் குள்ளநரிகள் பேச்சுக்கு மயங்குவதைத் தவிர
அவர்கள் செய்யும் குற்றம் வேறொன்றுமில்லை.அது
ஒன்றே அவர்களை எழ விடாமல் செய்து விடுகிறது.
குள்ளநரியின் தந்திரத்தை புரிந்து கொள்ளும் தன்மையை
பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.எந்த காலகட்டத்திலும்
இந்த வகை ஆண்கள் இருப்பார்கள்தான். நாம்தான்
நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதை படிக்கும் பொழுது
சில ஆண்களுக்கு கோவம் வரலாம். நண்பர்களே, நல்ல
உள்ளங்களே உங்களை சாட வில்லை. பொதுவாக
சொல்வது போல சொன்னேன்.

தவறு செய்யும் சில பெண்களால் பெண் சமூகத்துக்கே
அவப்பெயர் வருவது போல சில ஆண்களால் ஆண்
சமூகத்துக்கும் அவப்பெயர் வருகிறது.

ஷாப்பிங் மால்களில்.. ஹோட்டல்களில் டூ வே மிர்ரர்
பயங்கரம், தவறானவர்கள் கையில் இருக்கும் செல்போன்
கேமரா என நம்மை எப்போதும் இரு ஜோடி கண்கள்
உத்து பார்த்துக்கொண்டே இருக்கின்றன என வருத்தப்பட்டுக்
கொள்ளும் சூழலில் தாமகவே வலிய சென்று வம்பை
விலைக்கொடுத்து வாங்கிக்கொள்ளும் அவலம் ஏன்???

மீண்டும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்து
கொடுமை படுத்த ஆரம்பித்து விடும் சூழ்நிலை உருவாகிடுமோ
என அச்சம் ஏற்படுகிறது!! இது அனாவசியாமனது என்றும்
சொல்லிவிட முடியாது. அரிதாக கிடைத்த பெண் சுதந்திரத்தை
தவறாக பயன்படுத்தி களங்கத்தை ஏற்று பரிதவிக்க்கும்
இந்த மாற்றம் தேவைதானா????!!!!

கிடைத்த சுதந்திரத்தை அளவாக உபயோகித்து தக்க வைத்துக்கொள்ள
வேண்டும். பெற்றோர்களும் முக்கிய பங்கு எடுத்து பார்க்க
வேண்டும். தோளுக்கு மிஞ்சிய பிள்ளையை கொஞ்சம்
நோட்டம் வைத்து பார்ப்பதும் நல்லது. பிள்ளை வழிதவறுகினா/ளா
என கண்கொத்தி பாம்பு போல பார்த்துக்கொண்டே இருக்கவேண்டிய
ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

நான் எந்த ஈயவாதியும் இல்லை. ஒரு சாதாரணப் பெண்ணின்
மனநிலையாக இந்தப் பதிவு..


Monday, December 13, 2010

கலக்கல் போட்டோக்கள் செய்யலாம் வாங்க!!!!

இப்ப எல்லாம் டிஜிட்டல் போட்டோக்கள்தான் நிறைய்ய.
இணையம் உதவியோட அந்த போட்டக்களை விதம்விதமா
செஞ்சுக்கலாம்.

ஒரு புத்தகத்தின் கவர் போட்டோவா நம்ம போட்டோ
எப்ப வரும்னு யோசிச்சிருப்போம். நாமளே அந்த மாதிரி
செஞ்சுக்கலாம். எப்புடி??? அதை வாங்க பாப்போம்.

  இந்த மாதிரி போட்டோக்கள் வலைத்தளங்களின்
உதவியோடு தயார் செய்வது எப்படின்னு பாப்போம்.

இந்த வலைத்தளத்தில் போய் நமக்கு பிடித்த டிசைனை





செலக்ட் செய்து நம் புகைப்படத்தை அப்லோட் செய்தால் நிமிடத்தில்
படம் ரெடியாகி விடும். கணிணியில் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.




அடுத்து கவர் போட்டோ.  Fake magazine cover   
எனும் இந்தத்தளத்துக்குப்போய் புகைப்படத்தை அப்லோட்
செய்து நமக்குப்பிடித்த நாழிதழின்(ஆங்கில இதழ்கள்)
முகப்பில் வரும்படி செய்துக்கொள்ளலாம்.


நீங்களும் செஞ்சு பார்த்து சொல்லுங்க. (தெரியாதவங்களுக்குத்தான்
இந்தப் பதிவு. தெரிஞ்சவங்க இதுக்கெல்லாம் ஒரு பதிவான்னு
திட்டாதீங்க :)) )


Wednesday, November 17, 2010

ஆமாம்ப்பு!! நாங்க அந்தக்காலம்தேன்!!!

அந்தக்காலம்னு ஆரம்பிச்சாலே ஏதோ வயசானவங்க டயலாக் மாதிரி
ஆக்கிட்டாங்க. ஆனா ”அந்தக்காலம்” மறக்க முடியாத பொற்காலம்னு
பலரும் கொசுவத்தி சுத்துவோம். எங்க அப்பா கருப்பு,வெள்ளை
திரைப்படங்களா பாத்தப்பா இதையெல்லாம் போயி பாத்துகிட்டு
இருக்காறேன்னு நினைச்சிருக்கேன். ஆனா அதுல கிடைச்ச பல
விஷயங்கள் இப்ப மைனஸ். :( எனக்கு பிடிச்ச இடைக்கால
படங்கள் இப்பத்த பொடிசுகளுக்கு அந்தக்கால படங்கள் ஆனாப்லதான்.

ஆனா இந்த “அந்தக்காலம்” ரொம்பவே நல்லா இருந்துச்சுல்ல.
சமீபத்துல ஒரு இமெயில் வந்துச்சு. அதை எல்லோர்கிட்டயும்
பகிர்ந்துக்கவே இந்தப் பதிவு.

1930-1979 வருடம் வரை பிறந்து வளர்ந்தவர்களா நீங்க
அப்ப இந்தப் பதிவு படிக்கும் போது கண்டிப்பா “சேம் ப்ளட்”
சொல்லிப்பீங்க படிச்சு பாருங்க!!

குப்புற படுத்து தூங்கி, படுத்தது
ஒரு இடம், எந்திரிச்சது ஒரு இடம்னு குட்டி கரணம் போட்டு
தூங்கிய சந்தோஷம் ஆஹா!! (இப்ப எல்லாம் கட்டில்தான்!!)

மருந்துகளை குழந்தைகள் கைக்கு எட்டும் வைக்கும் விதத்தில்
வைக்காதீர்கள்!! அப்படின்னு சொல்லும் வாக்கியங்களோ,
மருந்துகளுக்கு ஷ்பெஷலான சீல்களோ இருந்ததில்லை.
சைக்கிளோ பைக்கோ ஓட்டும்போது ஹெல்மெட்டெல்லாம்
யாரும் போட்டதே இல்லை.

கார் இருக்கும் வீட்டுப்பசங்க கூட சீல்ட்பெல்ட்,பூஸ்டர் சீட்,
இல்லாத காருலதான் பயணம் செஞ்சிருப்பாங்க. ஏன் சில சமயம்
காருக்கு ப்ரேக்கூட இல்லாம இருந்திருக்கும்!! :))

குழாய்த்தண்ணி, கிணத்துத்தண்ணி தான் குடிச்சிருக்கோம்.
பிஸ்லரி தண்ணி எல்லாம் கிடையவே கிடையாது. ஆனாலும்
நோய்வாய்ப்படாம நல்லாத்தான் வாழ்ந்தோம்.

ஒரு கூல்ட்ரிங்க்ஸை 4 ஃப்ரெண்ட்ஸுங்க சேர்ந்து குடிச்சிருக்கோம்,
ஆனா யாரும் அதனால செத்ததில்லை.

கப் கேக்கு, வெண்ணெய் போட்ட கேக்குன்னு வகை வகையா,
சாப்பிட்டிருக்கோம். ஆனா யாரும் உடல்பருமனோட இருக்கலை.
காரணம் நதியோடி விளையாடி, கரையோரம் விழுந்தாடின்னு
வீதியில வந்து விளையாடி ஆரோக்கியமா இருந்ததுதான்.

காலேல பள்ளிக்கு கூடத்துக்கு நடந்துதான் போயிருப்போம்.
காலேலேயே போயிட்டு சாயந்திரம் விளக்கு வெச்சுத்தான்
வீட்டுக்கு வந்திருப்போம். ஆனா பயப்பட தேவையில்லாம
இருந்துச்சு. படிப்போடு விளையாட்டுக்கும் இடம் இருந்திச்சு.

செல்போன்,போன் இதெல்லாம் இல்லாத ஒரு ஆனந்தமான
வாழ்க்கை அப்ப இருந்துச்சு. லீவு போட்டுட்டு போனா
அந்த மனுஷரை கண்டுபிடிப்பதே கஷ்டம்னு ஆபிஸ்ல
டயலாக்லாம் வரும்.

டயர் வண்டி, நுங்கு வண்டி, கோலி, கில்லி, பாண்டி,
நொண்டி விளையாடுதல்னு ரொம்ப பிஸியான நாட்கள்.
கீழே விழுந்து அடிபட்டுன்னு இருக்கும். விழுப்புண்
இல்லாத உடம்பே கிடையாது!! இதுக்காக வேற
வீட்டுல அடி விழும். கீழே விழுந்த வலி, அடிபட்ட
வலின்னு இரண்டுக்கும் சேத்து அழுதவங்களும் உண்டு.
ஆனா அதுக்காக யாரும் புகார் எல்லாம் செஞ்சதில்லை.


இப்ப இருக்கும் மாடர்ன் விளையாட்டு சாதனங்களோ,
150 சேனல்களோ, நாள் முழுக்க போரடிக்கும் ரேடியோக்களோ
இல்லை. டீவிடி போட்டு படம் பாக்க முடியாது. வீசி ஆரில்
புதுப்படம் வர 6 மாசமாகும்!! கம்ப்யூட்டர், லேப்டாப்,
செல்போன், இணையம் இதெல்லாம் இல்லை ஆனா
“நண்பேன்டா” என சொல்லிக்கொள்ளும் நட்புக்கள்
இருந்தாங்க. வீட்டை விட்டு வெளியே வந்து நல்ல
நட்புக்களை தெரிவு செய்துகொண்டோம். உறவுகள்
பலப்பட்டு இருந்தது.

ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு சைக்கிளை எடுத்துகிட்டு போயி
பார்த்து பேசுறது என்பது சர்வ சாதாரண் விஷயம்.
போன் போட்டு வரட்டுமான்னு???!! கேட்டு போனதில்லை.

ஆனா இந்தத் தலைமுறையில்தான் நல்ல அதிகாரிகள்,
மேனேஜர்கள், பிரச்சனை தீர்க்கும் வல்லவர்கள்,
ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுவது மாதிரி
என அனாயாசமான ரிஸ்க் எடுத்து சாதித்தவர்கள்,
கண்டுபிபிப்பாளர்கள் என பலர் பிறந்துள்ளனர்.

கடந்த 50 வருஷமா எத்தனையோ புதிய கண்டுபிடிப்புக்கள்.
இப்போதைய பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட சந்தோஷங்கள்
கிடையாது. கம்ப்யூட்டர் கேம்ஸ், எக்ஸ்பாக்ஸ் சந்தோஷங்கள்
தவிர வேறென்ன??!!!

நமக்கான சுதந்திரம் இருந்தது, தோல்விகள், சந்தோஷங்கள்,
சாதனைகள், பொறுப்புக்கள் எல்லாம் சரிவிகிதமாக இருந்தது.
இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்து கொள்ளும்
தருணங்கள் இருந்தன.

என்ன இப்படிப்பட்ட சந்தோஷங்களை அனுபவித்தவர்களில்
நீங்களும் ஒருவரா???!!! வெல்கம்!! வெல்கம்!!

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!





Wednesday, August 04, 2010

நாங்களும் மனிதர்கள் தான்!!!!

4 வருடங்களுக்கு முன்னால நடந்தது இது. சென்னையின்
பிசியான மாம்பலம் உஸ்மான் ரோடில் இந்தப் பக்கத்திலிருந்து
எதிர் திசைக்கு போக வேண்டும். அப்போது இந்தப் புது
தொல்லையான மேம்பாலம் கிடையாது.(இந்த மேம்பாலம்
கட்டினதுக்கப்புறம் அந்த இடமே கொச கொசன்னு ஆன
மாதிரி இருக்கு எனக்கு)

ரோட்டை கிராஸ் செய்ய பயந்து நின்னுகிட்டு இருந்தேன்.
கொஞ்சம் தைரியம் செஞ்சு கிராஸ் செய்யப்போகையில
வேகமா வந்த வண்டியைப்பாத்து அயித்தான் என்னை
இழுத்திருக்காட்டிப்போனா என் படத்துக்கு மாலை போட்டு
பூஜை நடந்திருக்கும்!!!

பாதசாரிகளுக்கு மரியாதையே கிடையாது. பாதுகாப்பு
அதைவிட கிடையாது. இது தான் நம்ம ஊர் சாலைகள்
நிலைமை. வண்டீயில போறவங்க சர் புர்ர்ன்னு மிரட்டிகிட்டு
போவாங்க. பெடஸ்ட்ரியன் க்ராஸ் இல்லாத இடத்துல எப்படி
ரோட்டை கிராஸ் செய்வது????

இலங்கையில் இருந்தவரைக்கும் என் அனுபவம் பாதசாரிகளை
வண்டி ஓட்டிக்கள் மதிக்க வேண்டும். நீங்க எம்புட்டு ஸ்பீடா
வந்தாலும் பாதசாரிகள் கடந்து போனா நிறுத்தித்தான் ஆகணும்.
நம்ம ஊர்ல அந்த நினைப்புல ரோடை கிராஸ் செய்யப்போயித்தான்
அடி படத் தெரிஞ்சேன்.

ரோடு எல்லோருக்கும் தான். இது எங்கப்பன் ரோடுன்னு சொல்லாம
சொல்லி வண்டி ஓட்டறாங்க. நடந்து போறவன் கதி என்ன இதுல?
சென்னை மட்டுமல்ல இங்க ஹைதையிலும் இதே கதிதான்.
பாம்பேயிலயாவது கையைக்காட்டிகிட்டு போயிகிட்டே இருக்கலாம்.
நாம கை காட்டுவதைப்பாத்து கொஞ்சம் ஸ்லோவா வருவாங்க.

சமீபத்துல ஒரு புத்தகத்துல சைக்கிள் ஓட்டுறது நல்லது. அது
சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்குதுன்னு மேட்டரோட எழுதியிருந்தாங்க.
ஆபிஸுக்கு கூட சிலர் சைக்கிள் ஓட்டிகிட்டு போறது பத்தி
எழுதியிருந்தாங்க. நல்லதுதான். ஆனா நம்ம ஊர்ல பிசியான
ரோட்ல இது சாத்தியமா? ஜப்பான்ல சைக்கிள் ஓட்டணும்னா
லைசன்ஸ் வேணுமாம். என் ஃப்ரெண்ட் சைக்கிள் ஓட்டத்
தெரியாது. ஆனா அங்க அதுதான் பெஸ்ட் ட்ரான்ஸ்போர்டுன்னு
சைக்கிள் ஓட்டக்கத்துகிட்டு லைசன்ஸ் வாங்கினாங்க.

நம்ம ஊர்லயும் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்தி
அவங்களுக்குத் தக்க பாதுகாப்பு(போலிஸ் பாதுகாப்பு இல்ல,
சைக்கிள், பாத சாரிகளை மதிச்சு எப்படி வண்டி ஓட்டுறதுன்னு
கார், பைக் ஓட்டுறவங்களுக்கு வகுப்பு எடுப்பது)
செஞ்சா எரிபொருள் சேமிப்பு மாத்திரமில்ல, உயிர்பலிகளையும்
தடுக்கலாம். ஆனா யாரு செய்வாங்க? நம்ம அரசியல்வாதிகளுக்கு
இதுக்க்கல்லாம் நேரம் இருக்குமா? அவங்களை குத்தம் சொல்லலை.
ஆனா இதையும் யோசிச்சு நடவடிக்கை எடுத்தா நல்லதுதானே.

ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு
கார், பைக்கை உபயோகப்படுத்தி சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாம,
உடலை ஆரோக்கியமா வெச்சுக்க எளிய வழி நடை + சைக்கிள்
பயணம். மும்பையில் பாண்ட்ரா ஏரியாவில் சல்மான் கான்
சைக்கிள் ஓட்டிப்போறாரு, அமெரிக்காவிலா ஜூலி சைக்கிள்ல
தான் போறாங்கன்னு படிச்சேன். இலங்கையில நான் சர்வ சாதரணமா
ரோட்டை கிராஸ் செஞ்சு போயிருக்கேன். புதுகையில் சைக்கிளில்தான்
சுத்தியிருக்கேன். இப்ப எங்கயும் இது சாத்தியமில்லைன்னு தோணுது.

சுத்தமான காற்றை மாசுபடாத சூழ்நிலையைத் தரணும்னு ஆசைபடற மாதிரி
பிள்ளைகள் பயப்படாம ரோட்டை கிராஸ் செய்ய, சைக்கிளில் செல்லணும்னு
நினைப்பது நடக்காது போல இருக்கு.

இந்த நாட்டின் குடிமகன்களாக நாங்களும் தான் இருக்கோம்.
நாங்களும் மனிதர்கள்தான். அரசாங்கம் எந்திரம் ரொம்பத் தாமதம்தான்.
அதனால வாகன ஓட்டிகள் எங்களையும் மதிச்சு வண்டி ஓட்டி
நாங்களும் ரோடில் போக உரிமை உண்டு என்பதை புரிஞ்சு வண்டி
ஓட்டணும்!!!!

நடக்குமா???!!!!!????


பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!!!

சமீபத்துலதான் இவங்களைப்பத்தி புத்தகத்துல படிச்சேன்.
ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு. இதுவும் சாத்தியமான்னுதான்
நினைச்சேன். ஆனா இன்னைக்கு அவங்க ஷோவை டீவில
பாத்ததும் நம்பமுடியாததை நம்பித்தான் ஆகணும்னு ஆகிடுச்சு.


ஃபேஷன் டிசைனிங்கில் வாழ்க்கையின் உச்சத்தை தொடணும்னு
நினைச்ச பொண்ணுக்கு வாழ்க்கை இப்போ வீல்சேரில்.
தலையும் கைகளையும் தவிர உடம்பில் எந்த பாகத்தையும்
இவங்களுக்கு உபயோகத்துல இல்லை. ஆனா டீவில இவங்க
ஷோ பாக்கும்போது அப்படி ஒரு குறைபடே இல்லாத மாதிரி
தெரியுது. தன்னம்பிக்கையோட, சிரிச்ச முகத்தோட சூப்பரா ஷோ
நடத்துறாங்க. பிரபலங்களை பேட்டிக்காணும் CLOSE ENCOUNTER
WITH SUZY எனும் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இன்னாள் சுஜி,
முன்னாள் சுஜாதா. இந்த நிகழ்ச்சிக்காக சேர்ந்தாப்ல உட்காருவதால
தனக்கு தீவிரமான முதுகுவலி வருவதாக பேட்டியில் சொல்லியிருந்தாங்க.

சாதாரண தலைவலிக்கே முக்கி முனகுவோம். ஆனா
இந்தப் பொண்ணை பாத்தா சத்தியமா அந்த முனகலை அப்படியே
விழுங்கிட்டு எந்திரிச்சு வேலை பாக்கப்போயிடுவோம்னு தோணுது.
இந்தப்பொண்ணையும் ஒருத்தன் பணத்துக்காக ஏமாத்திட்டு
போயிருக்கான் என்பது இன்னொரு சோகமான விஷயம்.
ஆனாலும் தன் தன்னம்பிக்கையை இழக்காம உலகத்துக்கே
மெசெஜ் சொல்லும்படி வாழும் சுஜிக்கு என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

தெலுங்கில் அவரோட பேட்டி வீடியோ ஒன்றை இங்கே
தருகிறேன். பாஷை புரியாவிட்டாலும் பாருங்கள். அவரின்
தன்னம்பிக்கை, வலியை மறைத்துக்கொண்டு வாழும்
மனோபாவம் புரியும்.




இவருடன் பேட்டி முடிந்த பின்னர்தான் இவருடைய உண்மை
புரிந்து பாலகிருஷ்ணா, பிரகாஷ் ராஜ் மற்றும் நாகார்ஜுனா
அதிர்ந்தே போனார்களாம்!!!!

தன்னம்பிக்கைக்கு மறுபெயர் இனி சுஜிதான்.



Monday, June 21, 2010

அம்பலமாகும் அந்தரங்கங்கள்!!!

எங்க ஊர்ல ”தாரகை சில்க்” அப்படின்னு ஒரு கடை ஆரம்பிச்சாங்க.
அதுக்கு முன்னாடி வரை வாழைமரத்துச் ஜவுளிக்கடை தான் ஃபேமஸ்.
தாரகை சில்க் துவக்கத்துக்கு ஊரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும்
வரவேற்பு அட்டை அனுப்பியிருந்தாங்க. அட வித்தியாசமா இருக்கே!ன்னு
நினைச்ச அதே நேரம் ஊரில் இருக்கும் அத்தனை பேரின் விலாசங்களும்
எப்படி இவங்களுக்கு கிடைச்சிருக்கும்?? அப்படிங்கற யோசனையும்
கூடவே வந்துச்சு.


ஆனா இப்பவும் அதே நிலமைதான். நம்ம டெலிபோன், மொபைல், இமெயில்,
வீட்டு விலாசம் எதுவும் ரகசியமாக இல்லாம வேண்டப்படாத
இடங்களிலிருந்து விளம்பரங்கள் வருது. தேவையோ தேவையில்லையோ
லோன் கொடுக்கறேன்னு போன், மொபைல்களில் எஸ் எம் எஸ்களாக
வரும் விளம்பரங்கள், செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டுவிட்டு
ஓடிவந்து போனை எடுத்தால் அது விளம்பரக் காலாக இருக்கும்!!

இமெயில் நமக்கென வைத்து அதன் பாஸ்வேர்டு வைத்துக்கொண்டாலும்
அதையும் உடைத்து காட்டுகின்றன சில வெப் சைட்டுக்கள். ஹேக்கிங்
இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது.

நம் கையில் இருக்கும் செல்லை வைத்து நாம் எங்கே செல்கிறோம்
என்றெல்லாம் கண்டு பிடிக்க முடியுமாம். படித்த போது பகீர் என்றாகிவிட்டது.
விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது என்று நாம் ஆனந்தப்பட்டுக்
கொண்டிருக்கிறோம், ஆனால் அதே விஞ்ஞானம் நமக்கு அந்தரங்கமே
இல்லாமல் எல்லாவற்றையும் அம்பலம் செய்துவிடுகிறது எனும்
பொழுது நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதையும்
கற்க வேண்டியது அவசியமாகிறது.

இவர்களுக்கு நம் எண்களை யார் தருகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி?
பிரபலமானவர்கள் தான் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்
என்றல்ல சராசரி மனிதனுக்கும் இந்த பிரச்சனைகள் இருக்கிறது.

நாம் சாதரணமாக பார்க்கும் டீவி சீரியல் நாம் எத்தனையாவது
நபராக பார்க்கிறோம் என்று செய்தியை தந்து டீ ஆர் பீ ரேட்டிங்
ஏற்ற வைக்கிறது.

ஆன்லைனில் நாம் ஏதும் விற்று வாங்கி, அல்லது சில சைட்டுக்களை
ப்ரவுஸ் செய்து பார்க்கும் பொழுது நமது ஐடிக்கள் விற்பனைக்காக
ட்ராக் செய்யப்படுகிறது.

ஹாஸ்பிடல், இன்ஸுயூரன்ஸ் பாலிசி, பேங்க லோன்,
போன்ற இடங்களில் நாம் கொடுக்கும் விபரங்கள் செல்போன் ஆப்பரேட்டர்கள்,
கிரெடிட் கார்டு கம்பெனிகள், ஆகியவற்றிற்கு விற்கப்படுகின்றனவாம்.

social sightகளான பேஸ்புக், ஆர்குட் போன்ற தளங்களில் நாம்
வைத்திருக்கும் போட்டோக்கள் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தும்
நபர்கள் வலைத்தளங்களில் அதிகம்.

தங்களை கேமிரா மூலம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் என
சொல்லாமல் சொல்கின்றன ஏர்போர்டுகள், மால்கள், தியேட்டர்கள்,
ஏன் திருப்பதி கோவிலிலும் கூட இருக்கிறது இத்தகைய கேமிராக்கள்.

wi-fi இருக்கும் இடங்களில் நிம்மதியாக லேப்டாப்பை வைத்துக்கொண்டு
வேலை பார்ப்பார்கள் சிலர். ஆனால் தனது மடிக்கணிணிக்குள் கள்ளன்
புகுந்து சில முக்கியமான டாக்குமண்டுகளை திருடி விடக்கூடும் என்பது
பலருக்கு தெரியாது.

ப்ளூடூத் வசதி கொண்ட போன்களை பொது இடத்தில் ப்ளூடூத்
வசதியை ஆன் செய்யாமல் இருப்பது நலம்.

மால்கள், சூப்பர் மார்க்கெட் வாசல்களில் லக்கி ட்ரா, உங்க
டீடெயிலை எழுதி போட்டீங்கன்னா பரிசு காத்திருக்குன்னு சொன்னா
பேசாம நகந்து வந்துடுங்க. Restaurantகளில் கூட நமது
டீட்டெய்ல்களை கொடுக்காமல் இருப்பது நல்லது.

நமது கைப்பேசி எண்ணை யாருக்கும்
கொடுக்கும் முன் யோசித்து கொடுங்க. விசிட்டிங் கார்டுகளில்
நம்பரை பிரிண்ட் செய்வதையும் தடுக்கலாம். லேண்ட் லைன்
நம்பரை சில சமயம் கொடுக்கலாம்.

DEBIT CARD, CREDIT CARD உபயோகப்படுத்தும்பொழுது
கவனம் தேவை. தனது கணிணியில் கார்டை ஸ்வைப் செய்து
நமது தொடர்பு முகவரி, நம்பரை அவர்கள் எடுக்கும்
வசதி இருக்கிறது.

do not call என ரிஜஸ்டர் செய்திருந்தாலும் www.donotcall.gov.
எனும் வலைத்தளத்திலும் ஒரு முறை பதிவு செய்வது
நல்லது.

ப்ரவுசிங் செண்டர்களில் கணினி உபயோகித்த பின்னர் குக்கீஸ்களை,
ப்ரவுஸிங் ஹிஸ்டரிக்களை அழித்துவிடுவது நல்லது.

வீட்டுக்கு வரும் கடிதங்களை முகவரி தெரியாமல் நன்றாகக்
கிழித்து போடும்படி சின்ன வயதில் அப்பா சொல்வார். தவறானவர்கள்
கையில் நம் முகவரி சிக்கி ஏதும் பிரச்சனை ஆகிவிடக்கூடாது
என்பதனால் எந்த ஒரு காகிதத்தையும் நன்றாக கிழித்துப்போடுவதை
பழக்கமாக்கிக்கொள்வது கூட நம் அந்தரங்கத்தைக் காக்கும்.


Wednesday, June 16, 2010

என் இடத்தில் நீ இருந்தால்!!!!

ஒரு திரைப்படத்தை அல்லது நாடகத்தை மிகவும் ரசித்து
பார்க்கிறோம். சில சமயம் அந்த நாயகன் நாயகிக்கு அந்த
கேரக்டரே பேராக அமையும் அளவிற்கு மிகச் சிறந்த
நடிப்பாக இருக்கும். ”சிவாஜி” கணேசன் என்று சொன்னாலே
கம்பீரமான நடிப்பு, கர்ஜிக்கும் குரல் எல்லாம் நினைவுக்கு
வரும். வெறும் கணேசன் என்று போட்டால் ஜெமினி கணேசனா
யாரு? என குழப்பம் ஏற்படும்.

ஒரு குறிப்பிட்ட நடிகர் தனது கதாபாத்திரத்துடன் ஒன்றி
சிறப்பாக நடித்தால்தான் முழுமை பெறும். போலீஸ்
என்று சொன்னாலே தங்கபதக்கம் சிவாஜி என்று அந்தக்கால
ரசிகர்களும் காக்க காக்க சூர்யா என இந்தக்கால ரசிகர்களும்
போற்றும் அளவுக்கு அந்த பாத்திரத்துடன் ஒன்றி உடலை
ஏற்றி, மெருகு கூட்டி நடித்திருப்பது புரியும்.

எத்தனையோ பேர் போலிஸாக நடித்திருந்தாலும் சிலரே
அந்தப் பாத்திரத்துக்கு பொருந்துவதன் காரணம் சில
எக்ஸ்ட்ரா மெனக்கெடல்கள். இதை ஆங்கிலத்தில்
method acting என்பார்கள். வில்லனாக நடிப்பது
எவ்வளவு கஷ்டம் என்பது அந்த பாத்திரங்களைச்
செய்தவர்களுக்குத்தான் தெரியும்.

அலுவலகத்திலோ, வீட்டிலோ பிரச்சனை ஏதும்
ஏற்பட்டால் உடனே வாயிலிருந்து வரும் டயலாக்
“என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்!” இது
சத்தியமான உண்மை. தலைவலியும் திருகுவலியும்
தனக்கு வந்தால்தான் புரியும் என்று பெரியவர்கள்
சொல்வார்கள். அனுபவம் தான் சரியான ஆசான்.

வாதம் விவாதமாகி பெரிய பிரச்சனையாகிடகாரணம்
பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் போவதே.
இது எந்த வித பிரச்சனையாகவும் இருக்கலாம்.
கோர்ட்டில் வாதிடும் போது வாதி, பிரதிவாதி என
குற்றம் சாற்றுபவர், குற்றம் சாற்றப்பட்டவர் என
இரண்டு பக்கமும் வக்கீல்கள் பேசுவார்கள். அன்றாடம்
நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் வக்கீல் வைத்துக்
கொண்டிருக்க முடியாது.

mono acting என்று ஒருவகை நடிப்பு உண்டு. இதில்
கூட யாரும் நடிக்க மாட்டார்கள். ஒருவரே வேறு
சில கதாபாத்திரமாகவும் நடிப்பார். மிகச்சிறந்த நடிப்பின்
வெளிப்பாடாக இது இருக்கும். இதே போல மற்றவரின்
இடத்தில் நாம் இருந்தால் நமது ரியாக்‌ஷன் எப்படி இருந்திருக்கும்
என ஒரு கணம் நம்மை அந்த தருணத்தில், இடத்தில்
நிறுத்தி வைத்துப்பார்த்தால் நிலமையின் தீவிரம் புரியும்.


ஆங்கிலத்தில் இதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

Always put yourself in others' shoes.
If you feel that it hurts you,
it probably hurts the other person, too.

ஆம் அடுத்தவரின் பக்க நியாயத்தை அறிய இதை விட
சிறந்த வழி இருக்காது.

25 வயதில் தந்தையைக் கண்டால் மகனுக்கு பிடிக்காது.
அம்ஜத்கானாகத்தான் தெரிவார். அந்த மகனுக்கும்
திருமணமாகி குழந்தை பிறந்து வளரும் பொழுது
தகப்பனாக தன்னை உணர ஆரம்பிக்கும் பொழுது
தன் தந்தையை மிகவும் நேசிக்கத் துவங்கி விடுவார்.
( மகன் உணர்ந்ததை அறிய முடியாத தூரத்துக்கு
தந்தை போயிருக்கக்கூடும்!!)


அம்மா என்பவள் ட்ரில் மாஸ்டர் போல் வீட்டில்
வேலை வாங்குகிறாள், கத்துகிறாள் என்றே
மகள் தந்தையின் துணையோடு அன்னையிடம்
அன்னியப்பட்டு போகிறாள். அவளும் தாயாகும்
பொழுதுதான் அன்னையாக இருப்பதன் கஷ்ட
நஷ்டங்கள் புரிய ஆரம்பிக்கும்.

தனக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை,
தனது கம்பெனி சரியில்லை, உயரதிகாரி
சரியில்லை என வருந்துபவர்கள் ஒரு கணம்
தன்னை அந்த உயரதிகாரியாகவும் தனக்கு
கீழ் ஒருவர் தன்னைப்போல(ஒரிஜனலாக)
வேலை செய்தால் எப்படி இருந்திருக்கும்
என கற்பனை செய்து பார்த்தால் தன் பக்கம்
இருக்கும் தவறு புரியும். தான் வாடிக்கையாளர்களிடமும்,
அலுவலக நண்பர்களிடமும் எப்படி நடந்துக்கொண்டிருக்கிறோம்
என்று தெளிவாகத் தெரியும். மாற்றம் எங்கேத்
தேவை என்பது வெளிச்சமாகும்.


கணவன் மனைவிக்குள் பலவித கருத்து
மோதல்கள் ஏற்படக் காரணமும் இத்தகைய
ஒரு உணர்தல் இல்லாத காரணமே. ஆண்
தனது கோணத்திலிருந்து மட்டுமே பார்த்து
தான் செய்வது நியாயம் என்று கூற பெண்ணும்
அதையே செய்யும் பொழுது நிலமைத் தீவிரமாகிறது.

இப்போது காலம் மாறிவிட்டது. பெண்கள் வீட்டுக்குள்ளேயே
அடங்கி கிடப்பதில்லை. உத்யோகம் புருஷ லட்சணம் என்று
ஆண்கள் மட்டும் வேலைக்கு போவது போய் இப்போது
இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூடவே சம்பாதிக்கிறார்கள்.

அதனால் இது ஆண் செய்யும் வேலை, பெண் செய்யும்
வேலை என்று ஏதும் தனியாக இருப்பதில்லை. ஆனால்
பல குடும்பங்களில் பிரச்சனை வெடிக்கத்தான் செய்கிறது.
சில நிமிஷம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து
அடுத்தவரின் இடத்தில் தன்னை நிறுத்திப்பார்த்தால்
தவறு எங்கே என்று புரிந்து விடும். திருத்திக்கொள்ள
முடியும். விளையாட்டாக கூட இதைச் செய்து பார்க்கலாம்
கணவன் மனைவியா, மனைவி கணவனாக அவரவர்
செய்யும் வேலையை மாற்றி செய்து பார்த்தால் புரியும்.


வேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும்
பெண்கள் எந்த விதத்திலும் குறைவில்லாதவர்கள் என்பதும்
வீட்டில் இருக்கும் பெண் இடத்தில் இருந்து பார்த்தால்தானே
புரியும்!!

Step into someone else's shoes to understand better
என்று உளவியாளலர்கள் சொல்கிறார்கள். செய்து பார்ப்போமா!??!!




Friday, June 11, 2010

சரித்திரம் மாறுதோ!!!!!!

ஒரு மேகசின்ல இந்த மேட்டரைப் படிச்சதும் ஆச்சரியமா இருந்துச்சு.
ஓடம் ஒரு நாள் கரைமேலேன்னு சொல்வாங்க. அதுமாதிரில்ல
ஆகிப்போச்சு!!!

வியாபாரம் செய்யும் நோக்கிலே இந்தியாவுக்குள் அடியெடுத்து
வெச்சு மெல்ல மெல்ல நம்மையே ஆள ஆரம்பிச்சாங்க
ஆங்கிலேயர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

East India Company அப்படிங்கற பேர்லதான் மொதல்ல
வந்தாங்க. ஆனா இப்ப இந்தக் கம்பெனிக்கு உரிமையாளர்
நம்ம இந்தியர். ஆச்சரியமாவும் அதே சமயம் கொஞ்சம்
கர்வமாவும் இருக்குல்ல.

சஞ்சீவ் மெஹத்தா எனும் இந்தியர் இந்தக் கம்பெனியை
வாங்கி லண்டனில் ஒரு கடையையும் திறந்திருக்காரு.
கம்பெனியை வாங்கிய பொழுது வானவில்லின் ஓரத்தில்
தங்கம் இருப்பது போல தெரிஞ்சாலும் மனதுக்குள் ஒரு
இந்தியனாக நம்மை முன்பு ஆண்டவர்களின் கம்பெனியை
வாங்கியிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறது என்று
சொல்லியிருக்காரு.

லண்டனில் கடை தொறந்தாச்சு. சீக்கிரமாவே
அதாவது இந்த வருடத்துக்குள் இந்தியாவிலும்
East India Company கடை திறக்கப்படுமாம்.

fine foods, furniture, real estate, health and hospitality
இவற்றிற்கான கடையாக கிழக்கு இந்திய கம்பெனி
இருக்குமாம்.

வலைத்தள முகவரி
ஒரு இந்தியனாக சஞ்சீவ் மெஹத்தா நம்மை
தலை நிமிரச் செய்திருக்கிறார்.


வாழ்த்துக்கள் சஞ்சீவ் புதிய சரித்திரம் படைத்து
காட்ட வாழ்த்துக்கள்





Wednesday, May 19, 2010

கடமையைச் செய்

”நாம நம்ம கடமையை விடாமச் செய்யணும்!!”
அப்படின்னு அம்மம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க.
எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கும். என்ன கடமையை?
விடாமச் செய்யணும்? 

அம்மம்மா அன்பின் திரு உருவம். எல்லார்கிட்டயும்
அன்பாத்தான் இருப்பாங்க. மத்தவங்க கிட்ட குத்தம்
பாக்கத் தெரியாது. அடுத்தவங்க அவங்க மனசை
புண்படுத்தினாக்கூட “அவங்களுக்குத் தெரிஞ்சது
அவ்வளவுதான்னு!” மனசு வருத்தப்பட்டுகிட்டு
இருப்பாங்க. தவிர சண்டை போட மாட்டாங்க.

நான் சொன்னதை நீ எப்பவும் விடாம செய்யணும்!
அப்படின்னு அம்மம்மா சொன்னாங்க. யோசிச்சு
பாத்தா அதை நடைமுறைப் படுத்த ரொம்ப
சிக்கல் இருக்கும் போல இருந்துச்சு.

நாம் நம்ம கடமையைச் செய்யும்போது அதை
அடுத்தவங்க ஏத்துக்கணும், நம் மேலே அன்பு
காட்டணும்னு தோணுவது இயல்பு. அதுஇல்லாத
பட்சத்துல தூக்கி போட்டுட்டு போயிடலாம்னு
தோணும். இது சராசரி மனித இயல்பு.

ஆனா அம்மம்மா சொல்வது எதிராளி நம்ம கிட்ட
எப்படி இருந்தாலும் நீ அவங்களுக்குச் செய்ய
வேண்டியக் கடமையை விடாதே!

என்னம்மா இப்படி சொல்றீங்க. என் மனசு
கஷ்டப்படுமே.

நம்ம மனசு கஷ்டப்படும் என்பதற்காக நாம்
செய்யவேண்டியக் கடமையைச் சரியா
செய்யாட்டி நீ பாவத்தை சுமப்ப!! இது அம்மம்மா.

உன் கை சுத்தமா இருக்கணும். உன் வேலையை
நீ செஞ்சிடு. எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காம
உன் கடமையைச் செஞ்சிடு. காலம் பார்த்துக்கும்.

ஏதோ வேதாந்த கிளாஸ்ல இருக்கறாப்ல இருக்குன்னு
சொன்னாலும் அன்பா அம்மம்மா சொல்வதைக்
கேட்டாத்தான் என்னன்னு? ஒரு எண்ணம்.

ஆண்டவன் என்றால் கொஞ்சம் பயப்படும் ரகம் தான்.
நாளைக்கு கணக்கு சொல்லும்பொழுது என் கைசுத்தம்,
யார் என்ன செய்தாலும் நான் என் வேலையை ஒழுங்கா
செஞ்சிட்டேன்னு சொல்லாமேன்னு ஒரு எண்ணம்.
அம்மம்மா சொன்னது மனசுல அப்படியே பதிஞ்சு போச்சு.

அன்பா அம்மம்மா கேட்கும் போது அதை கேட்டு
நல்ல பேத்தியாக என் கடமையைச் செய்வதை முதல்
வேலையா ஆரம்பிச்சேன். அன்னியிலேர்ந்து
என் வேலையை மகளாக, அக்காவாக, டீச்சராக
என்ன செய்ய வேண்டுமோ அதை கரெக்டா செஞ்சிடுவேன்.
திருமணத்துக்கு அப்புறமும் அதே குணம் தொடர்ந்துச்சு.

யார் என்ன சொன்னாலும் என் வேலை என் பொறுப்பில்
இது நான் செய்திருக்க வேண்டுமானால் அதை
செஞ்சிருப்பேன். என்ன செய்யணும்னு தெரியாட்டி
அம்மம்மாவை கேட்டு செஞ்சிடுவேன்.

ஒரு சமயம் புகுந்த வீட்டில் பிரச்சனை. அன்பே உருவான
மாமா ஏதும் சொல்ல முடியாத நிலை. அயித்தானும்
பெரியவர்களை ஏதும் சொல்ல முடியாத நெருக்கடி.
மாம்பலம் ரெங்கநாதன் தெருவில் என் அப்பாவின்
எதிரில் வைத்து என்னை அவமானப் படுத்தியது
ஒரு சொந்தம். கோவம் வந்தது. அது என் இயல்பு.
பேசாமல் போய்விட்டேன். ஏச்சுக்கள் பேச்சுக்கள்
எல்லாம் சுவாதீனமாக எடுத்துக்கொண்டேன்.

2 வருடங்கள் கழித்து என்னைத் திட்டியவரின்
மகளுக்குத் திருமணம். அம்ருதாவை கருவுற்றிருந்த நேரமது.
என்னைவிடப் பெரியவர் என்றாலும் சடங்குகள்,
சம்பிரதாயங்கள் தெரியாது. அதனால் திருமணத்தை
நடத்த வேண்டியது என் பொறுப்பானது.
கருவுற்றிருந்த நேரத்தில் என் உடலையும்பாராமல் அயித்தானுடன் பைக்கில் சென்று ஒவ்வொரு
உறவினரையும்  பத்திரிகை வைத்து அழைத்தேன்.(இல்லாட்டி
சொந்தக்காரங்க மரியாதைக்குறைவாக நினைப்பாங்க)2 வயது ஆஷிஷ், வயிற்றில் 5 மாத கருவோடு திருமணத்தை முன்னின்று
நடத்தி மாமா கையில் 50ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடித்துக்
கொடுத்தேன்.  மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு என்
உபசரிப்பு ரொம்ப பிடித்திருந்தது. ரொம்பவும்  புகழ்ந்து
சொல்லியிருக்கிறார்கள். மாமாவுக்கு எப்போதும்
என் மீது அன்பு. அது அப்போது மிக அதிகமானது.


அம்ருதா பிறந்த பிறகு வீட்டிற்கு வந்து
சண்டைபோட்ட சொந்தம்  வந்து சொன்ன வார்த்தை,” நீதான்
என் முதல் மருமகள், நீ என் சொந்தம் என்று
சொல்லிக்கொள்வதில் பெருமை,” என்றார்.
எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாதுன்னு
அம்மம்மா ஏற்கனவே சொல்லிக்கொடுத்திருந்ததால்
நான் ஏதும் பேசவில்லை. “வந்ததை வரவில்
வைப்போம், சென்றதை செலவில் வைப்போம்”
எனும் மனநிலை 25 வயதிலேயே வர காரணம்
அம்மம்மா.

அதன்பிறகு அந்த உறவினர் நான் இல்லாமல்
ஏதும் செய்ய மாட்டார். என்னை தான் எதற்கும்
முன்னிருத்துவார். என் மீது அதீத பாசம்
காட்ட ஆரம்பித்தார். அப்போதும் என் கடமை
எதுவோ அதை செய்தேன். எதையும் அம்மாவீட்டுக்கு
சொல்லும் பழக்கம் எனக்கு கிடையாது.
ஆனால் அந்த உறவினரே அம்மம்மாவிடம்
நடந்தவற்றைச் சொல்லியிருக்கிறார்.

என் அம்மம்மாவுக்கோ ரொம்ப மகிழ்ச்சி.
அம்மம்மா சொல்படி நான் கேட்டதற்கு.
எனக்கும் மகிழ்ச்சி, எங்க அம்மம்மா சந்தோஷமா
இருக்க நானும் காரணம் எனும் மகிழ்ச்சி அது.

கீதையின் சாரம் கடமையைச் செய் பலனை எதிர்பாரேதே.
ஆனால் அதை கீதாசாரமாக எடுத்துக்கொண்டு
நான் செயல்படுத்திருப்பேனா என்பது சந்தேகமே.
அம்மம்மாவின் வாக்கு அவர் சொன்ன விதம்,
இன்றும் மனதில் ஆழ பதிந்து விட்ட விஷயமா
இருக்கு.

என் கோபமோ, மன வருத்தமோ என் கடமையை
செய்ய என்னைத் தடுக்காமல் பார்த்துக்கொள்வேன்.
உடம்பு நல்லாயில்லாம இருந்தாலும் சரி,
கரண்ட் கட்டுன்னாலும் சரி, லைலா புயல் அடிச்சிகிட்டு
இருந்தாலும் சரி பதிவு போடுவதே என் கடமைன்னு
நான் இருக்க காரணம் அம்மம்மாதான்ன்னு
சொல்லிகிடறேன். :)))))

Friday, April 23, 2010

அம்மா.. வயிறு வலிக்குதே...

ஒவ்வொரு திங்கக்கிழமையும் ஸ்கூல் வேனிலிருந்து
இறங்கும்பொழுதே ஆரம்பமாகிவிடும் வயிற்றுவலி.
காரணம் வேறொன்றுமில்லை. அன்று வெள்ளவத்தையில்
இருக்கும் டீச்சர் வீட்டில் ஆங்கில ட்யூஷன். இதற்கு
elocution என்று பெயர்.

ஆங்கிலம் ஆஷிஷுக்கு பிடித்த பாடம்தான். ஆனா
அந்த டீச்சர். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்ட்ரிக்ட். இதை
(இன்வேர்டர் கமாஸ் போட்டு, போல்ட்லெட்டரில்
போட்டு படித்துக்கொள்ளவும்)

வாரம் ஒரு முறை மட்டும் elocution வகுப்பு. அதுவும்
ஒருமணிநேரம் என்று பேர்தான். ஆனால் பல நாட்கள்
4 மணிநேரம் கூட காத்திருந்திருக்கிறேன். கிட்டத்தட்ட
8 புத்தகங்கள். அவற்றை முடிக்காமல் விடமாட்டார்.
அந்த டீச்சர் சொல்லிக்கொடுக்கும் டெக்னிக் கொஞ்சம்
வித்தியாசமானது.

கணக்கு மாடல் சம் சொல்லிக்கொடுத்து மற்றவற்றை
நீங்களே போடுங்கள் என்று சொல்வார்களே அந்த ரகம்.
ஆங்கிலமும் அப்படித்தான் இவரிடம். ”நீ டிக்‌ஷனரி தேடு,
என்னவோ செய் ஆனால் எனக்கு விடை வேண்டும்”
அதற்குத் தேவையான டிக்‌ஷனரி,தெசாரஸ் போன்ற
புத்தகங்களும் வகுப்பில் வைத்திருப்பார். அதைத் தேடி
விடையைக் கண்டு பிடிக்க வேண்டும். சில சமயம் 2
மணிநேரத்தில் முடித்து விடுவார் அண்ணா. சில சமயம்
ஆஷிஷை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு அம்ருதாவை
மட்டும் அழைத்து வந்திருக்கிறேன். பிறகு போய் அழைத்து
வருவேன்.

ஒரு நாள்,”வெள்ளவத்தை கிளாசுக்கு நான் இனி
வரமாட்டேன்!” என்று அண்ணா சொல்லிவிட்டார்.
அவனுக்கு பிடிக்கவில்லை என்று பியானோ, நீச்சல்,
கம்ப்யூட்டர் வகுப்புக்களை நிறுத்தினேன். ஆனால்
என்ன ஆனாலும் சரி இலங்கையை விட்டு வரும்
வரை இந்த வகுப்பை மட்டும் விட மாட்டேன் என்று
கங்கணம் கட்டி இருந்தேன்.

”அம்மா உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்துவதற்காக
திட்டிக்கொண்டு இருந்தாலும் இருப்பாய். இப்போது
வருத்தப்படும் நீ பின்னாளில் இதற்காக மகிழ்வாய்.
அதனால் இந்த வகுப்பிலிருந்து மட்டும் நாம்
உன்னை விலக்க மாட்டேன்!” என்று கறாராய்ச்
சொன்னேன்.

வீட்டில் ஆங்கில புத்தகங்கள்,இதழ்கள் வாசிக்கச்
சொன்னேன். vocabulary முன்னேற்றத்துக்கு இது
உதவும். அப்போது ஒவ்வொரு வருடமும் வரும்
elocution பரிட்சை வந்தது. IWMS COLOMBOவால்
நடத்தப்படும் பரிட்சை இது. மொத்தமும் வாய்மொழி
தேர்வு. poem, அப்புறம் சில வார்த்தைகள் (things in
the bedroom, things in the kitchen) போன்றவற்றை
திக்காமல் திணறாமல் டகடகவென சொல்ல வேண்டும்.




உச்சரிப்பு, நம் உடை, நாம் நடந்துகொள்ளும் விதம்,
மனன சக்தி இப்படி எல்லாம் பார்த்து மதிப்பெண் கிடைக்கும்.
அந்த தேர்வுக்கு இந்த டீச்சர் தனது மாணவர்களை
அனுப்புவார். வயதுக்கு ஏத்தமாதிரி பரிட்சை. அந்த
வயது மாணவர்கள் மட்டுமே அந்த பரிட்சை செய்வார்கள்.

அந்தத் தேர்வுக்கு ஆஷிஷை அனுப்பினார் ஆசிரியை.
அம்ருதாவும் தான். 3 மாதங்கள் கழித்து ரிசல்ட் வரும்.
அதுவும் டீச்சருக்குத்தான். சஸ்பென்சாக உள்ளே அழைத்தார்
ஆசிரியை போனேன். Do you know how much your son and
daughter scored?" என்றார். மொளனமாக இருந்தேன்.
மதிப்பெண் தாளை கொடுத்தார். இன்ப அதிர்ச்சி இருவரும்
100 மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர். இலங்கை மொத்தமும்
நடைபெறும் தேர்வில், மொத்த இலங்கையிலும் 400 பேர்தான்
100/100. அதிலும் இந்த டீச்சரின் வகுப்பிலிருந்து 10 பிள்ளைகள்
சென்றதில் ஆஷிஷ் மட்டும்தான் 100. அம்ருதா வயதுக்குழந்தைகளிலும்
அம்ருதாதான் 100.. ஆசிரியைக்குமிக சந்தோஷம்.

வெளிநாட்டிலிருந்து வந்து எங்கள் ஊர் தேர்வில்
உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்கள் உன் பிள்ளைகள்
என்று பாராட்டினார். இந்த மாதிரி ஒரு தருணத்துக்காகத்தான்
காத்திருந்தேன். இந்த பரிசு பெற்ற மாணவர்களை கொழும்புவில் இருக்கும்
BANDARANAYAKE MEMORIAL INTERNATIONAL CONFERENCE HALLல்
சான்றிதழும் கோப்பையும் கொடுப்பார்கள்.


பரிசளிப்பு விழாவுக்கு போய் அங்கே போட்டோவெல்லாம்
எடுத்து வீட்டுக்கு வந்ததற்கப்புறம் ஆரம்பித்தேன்.
“இப்போ எப்படி ஃபீல் செய்யற”
ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருக்கும்மா”

குட். நீத்து மிஸ் கிளாசுக்கு போகமாட்டேன்னு
சொன்னீங்க. அங்க போனதாலதான இந்த கொளரவம்!”

”ஆமாம்மா, அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கறதால
அப்படி சொன்னேன். ஆனா அவங்க அவ்வளவு
ஸ்ட்ரிக்டா இருப்பது என் நல்லதுக்குன்னு புரிஞ்சிச்சுமா!”

நல்லது. சரி வெள்ளவத்தை கிளாசை நிப்பாட்டிலாமா”

”ஐயோ! அடுத்த வருஷமும் நான் இதுமாதிரி பரிசு
வாங்கணும். நானும் அம்ருதாவும் கண்டிப்பா போறோம்”
பெருமை பொங்க ஆஷிஷும் அம்ருதாவும்.





இப்படி எல்லாம் பேசி அந்த வகுப்பை மட்டும்
விட்டுவிடாமல் அழைத்துச் சென்றதன் பலன்
இப்போது வகுப்பில் இருவரும் ஆங்கிலத்தில் கிளாஸ் டாப்பர்.
"Ashish excells in english" "Amrtha's vocabulary is good"
என்று ரிப்போர் கார்டில் வரும்பொழுது மறக்காமல்
நினைவு கொள்வது அவர்களது எலோக்யூஷன் டீச்சர்
திருமதி. நீத்து டிசெல்வா அவர்களைத்தான். போன் போட்டு
தங்களின் மகிழ்ச்சியை ஆசிரியையுடன் பகிர்ந்துகொள்வார்கள்
இருவரும். அவருக்கும் மகா ஆனந்தம். இன்னமும்
என்னை மறக்காமல் இருக்கிறீர்களே பிள்ளைகளே என
உருகுவார்.

ஆங்கில பரிட்சைக்குமுதல் நாள் மட்டும் டீச்சர்
இலங்கையில் பாடம் நடத்திய புத்தகங்களை
செய்வார்கள் இருவரும். அவ்வளவேதான்.
ரொம்ப மெனக்கடல் இல்லை. அதான்
அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்டு
வழியமைத்துக்கொடுத்துவிட்டாரே ஆசிரியை.

சென்றமுறை கொழும்பு போனபோது ஆசிரியையை மறக்காமல்
சந்தித்து வந்தோம். பிள்ளைகள் இருவரையும் கட்டித்தழுவிக்கொண்டார்.
”முன்பு என்னைக்கண்டாலே பயப்படுவார்கள்,
இப்போது என் தோழர்கள் போல போன் செய்து
பேசுகிறார்கள். " you both were angels in my class!" என்ற
ஆசிரியரை ஆச்சிரியமாக பார்த்தனர் இருவரும்.

ஈன்ற பொழுதில் பெரிதுவப்பது அன்னை. ஆனால்
அதே அளவு பெருமை கொள்வது ஆசிரியரும் தான்.
எந்த ஆசிரியரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்
,”என் ஸ்டூடண்ட் அங்கே பெரியவேலை, எப்படி
இருக்கிறான் தெரியுமா!!” என் பெருமை பொங்க
பேசுவார்கள். அது அன்னையின் பாசத்தைப்போன்றது.

இங்கே வந்த பிறகு அறிவியலுக்கும், கணக்குக்கும்
மட்டும் ட்யூஷன் வைத்தேன்.(இந்திய பாடத்திட்டத்தில்
படித்திராத காரணம், நமக்கு சொல்லிக்கொடுக்கும்
அளவுக்கு கணக்குத் தெரியாது என்பது முக்கிய
காரணம் :) ) ஆண்டவனருளில்
அவரும் மிக நல்ல திறமையான ஆசிரியையாக்
கிடைத்தார்.

இருவரின் வளர்ச்சியிலும் அவரின் பங்கு அபாரம்.
ஆஷிஷ் தன் கனவாக aeronautical engineering
படிப்பு என்று சொன்னதும் உன்னை BITS PILANI
கல்லூரியில் சேர்த்துவிட்டுத்தான் ஓய்வேன் என்று
சொல்லி அதற்காக ஏற்பாடுகள், பயிற்சி கொடுக்க
என்னென்ன செய்யலாம் என அவரே கேட்டு,
அறிந்து எல்லாம் செய்கிறார்.

”உன் கனவு நனவாக வேண்டும ஆஷிஷ்.
கை நிறைய்ய சம்பாதித்து, பெரிய வீடு
கட்டி வாழ வேண்டும். அப்போது நான் என்
பிள்ளைகளை அழைத்துவந்து இந்த அண்ணா
என் ஸ்டூடண்ட், நீயும் இவரைப்போல வரவேண்டும்
என சொல்வேன்” என்பார் ட்யூசன் டீச்சர் சந்தனா.

என்னைப்போலவே படிப்பு மட்டும் போதாது,
மற்ற குணாதிசயங்களும் நல்லவையாக இருக்க
வேண்டும் என நினைக்கும் ஆசிரியை இவர்.
அம்ருதாவுக்கு வெளியுலகோடு இன்னமும்
நிறைய்ய எக்ஸ்போஷர் வேண்டும் என்று
அடிக்கடி சொல்லி அவளுக்குத் தைரியம்
கொடுப்பார்.

நல்ல ஆசிரியர் கிடைப்பது ஆண்டவனருள்.
எனக்கு கிடைத்த இந்த இரண்டு ஆசிரியைகளையும்
சிறம் தாழ்த்தி வணங்குகிறேன். உன்னதமான
பணியில் தன்னை ஈடுபடுத்தி அதன் பெருமையை
உணர்ந்து அதை செயல்படுத்தி காட்டும் இவர்களைப்
போன்ற ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.

Thursday, April 22, 2010

சீத்தாராமன் தாத்தா ட்யூசன் சென்டர்

3ஆம் வகுப்பு படிச்ச போது நடந்த டெஸ்ட் ஒன்றில்
என் வகுத்தல் கணக்கு தப்பாகிப்போச்சு. அதுவரைக்கும்
டெஸ்டில் குறைந்த மார்க் எடுக்காததால் ரொம்ப
கஷ்டா இருந்துச்சு. வீட்டுக்குப்போய் அம்மாகிட்ட
ரொம்ப அழுதேன். ”என்னைவிட ஸ்ரீதர் மார்க் கூடம்மான்னு
சொல்லி அழுதேன்”. ஸ்ரீதருக்கு அவங்க தாத்தாதான்
ட்யூஷன் டீச்சர்னு தெரிஞ்சதும் எனக்கும் சொல்லித்தருவாங்களான்னு
கேக்க அம்மாவை தூதுவிட்டேன்.

பின்னாடித் தெருவில் அவங்க வீடு. அம்மாவுக்கும்
தெரிஞ்சவங்க தான். அதனால போய் கேட்க
தாத்தாவும் சரின்னு சொல்லிட்டார். தாத்தா கையில
பிரம்போட ட்யூஷன் நடத்திக்கிட்டு இருந்தார்.
வம்பை விலைகொடுத்து வாங்கிட்டோமோன்னு
இருந்துச்சு. வேணாம்னு சொன்னா மத்தளத்துக்கு
இரண்டு பக்கமும் இடி மாதிரி ஆகிடும். ஆனது
ஆகட்டும் கிளாசில் ஸ்ரீதரை பீட் செய்யணும்.

அங்க நிறைய்ய பசங்க குறைஞ்சது பத்து பேராவது
ட்யூஷன் படிச்சாங்க. பெரிய கிளாஸ் பசங்களும்
அடக்கம். சாயந்திரம் 6 மணிலேர்ந்து 8 மணிவரை
எல்லா சப்ஜக்டும் பாடம் நடக்கும். மனப்பாடம்
செஞ்சு அங்கயே சொல்லிடணும்.

தாத்தா செம ஸ்ட்ரிக்ட். கணக்கு சரியா போடலைன்னா
வீட்டுக்கு போக விடமாட்டார். நல்லா கத்துக்க
முடிஞ்சது. தாத்தா எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா
இருந்தார். பாடம் நடத்தும் போது கண்டிப்பாகவும்
அப்புறம் அன்பாகவும் அவரால இருக்க முடிஞ்சதை
இன்னை வரைக்கும் நானும் கடைபிடிக்கிறேன்.

என் பசங்களுக்கு பாடம் எடுக்கும்போது கறாரா
அம்மான்னு டிமிக்கி கொடுக்க முடியாது, இப்ப
நான் ஒரு டீச்சர். அப்படின்னு சொல்லி படிக்க
வைப்பேன்.

சரி தாத்தா ட்யூஷன் செண்டருக்கு வருவோம்.
அவங்க பேரப்பசங்க அங்க படிச்சாலும் ஷ்பெஷல்
ட்ரீட்மெண்டெல்லாம் கிடையாது. தப்பு செஞ்சா
அடிதான். கரண்ட் கட்டான ஹையான்னு ஒரு
சந்தோஷம் வரும் மனசுக்குள்ள. அந்த நேரத்தையும்
தாத்தாவிட மாட்டார். விடுகதை, மணக்கணக்கு,
வாய்ப்பாடை பாதியிலேர்ந்து கேப்பதுன்னு
வகுப்பு விடாம நடக்கும். அதனால் வாய்ப்பாடு
அப்பப்ப படிச்சு மறந்திடாம இருக்கணும்.

தாத்தாவை நினைக்கும் பொழுது மறக்காமல்
ஞாபகத்துக்கு வருவது அவங்க மருமக.
அவங்க வீட்டுல 4ம் பசங்க. பெரிய அண்ணா
ராஜா. அந்தக்கால நிழல்கள் ரவி மாதிரி இருப்பார்.
அதே ஹேர்ஸ்டைல், டிரெஸ் அப்படின்னு சூப்பரா
இருப்பார். இரண்டாவது சிவாண்ணா. அப்ப ஏதோ
ஹாஸ்டலில் தங்கி படிச்சார்னு நினைக்கிறேன்.
அப்புறம் என் வகுப்புத் தோழன் ஸ்ரீதர் அவன் தம்பி
பேர் மறந்துவிட்டேன்.

இப்படி வீட்டில் 4ம் பசங்களே இருந்ததால் நான்
என்றால் மாமிக்கு உயிர். வீட்டில் நடக்கும்
எந்த நிகழ்வுக்கும் நான் இருப்பேன். நல்ல நாள்
பெரியநாளுக்கு அவங்க வீட்டில் செய்யும் பலகாரங்கள்
எனக்காக வீட்டுக்கு வரும். ட்யூஷனில் கொஞ்சம்
ஃப்ரீயாக இருக்கும் நேரம் தாத்தா,” ட்யூஷன் முடிஞ்சதும்
மாமியை மறக்காம பாத்துட்டு போ” என்பார்.
அது வேறெதுக்குமில்லை. மாமி நெய் காய்ச்சி
இருப்பார். அந்த நெய்க்காயச்சும் பாத்திரத்தில்
அரிசிமாவு போட்டு சிவக்க வறுத்து, சர்க்கரை
சேத்து பொடி செய்வாங்க. நெய்பொடின்னு
பேரு. அது கூட எனக்காக எடுத்து வெச்சிருப்பாங்க.

நானும் இலங்கையில் இருந்த பொழுது சுத்தமான
எருமைப்பால் வாங்கி ஏடு எடுத்து நெய்க்காய்ச்சினேன்.
அந்த வாணலியில் மாமி ஞாபகமாய் நெய்பொடி
செய்தேன். அம்ருதாவுக்கு ரொம்ப பிடித்தது.
அவளுக்காக நெய்காய்ச்சும் பொழுது பொடி செய்வது
பழக்கமாக இருந்தது.

இங்கே வந்த பிறகு நல்ல பால் கிடைக்கவில்லை.
சமீபத்தில் நல்ல பால் கிடைத்து ஏடு எடுத்துவைத்து
வீட்டிலேயே நெய்காய்ச்சி பொடி செய்து கொடுத்தேன்.
அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.


சீத்தாராமன் தாத்தா பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாடம்
எடுக்கும் பாணி தனித்து இருக்கும். தாத்தாவிடம்
கண்டிப்பு படிப்புக்கு மட்டும்தான். மிரட்டலிலேயே
காரியம் சாதித்து விடுவார் தாத்தா.

பல நாட்களுக்குப் பிறகு அம்மாவிடம் தாத்தாவைப்
பற்றி கேட்ட பொழுது தாத்தாவுக்கு கண்பார்வை
இல்லாமல் போனதாகச் சொன்னார். தாத்தாவைப்
பார்க்க போயிருந்தேன். ஒரு சிங்கம் நடை தளர்ந்து
போயிருந்ததாக பட்டது. ஆசிர்வாதம் வாங்கிக்
கொண்டு வந்துவிட்டேன். தாத்தா இப்போது இல்லை.

இவரைப்பற்றி நினைக்காத நாளில்லை. அதே போல்
இன்னொரு ஆசிரியை. இவர் என் குழந்தையின்
ஆசிரியை. வாழ்நாள் இருக்கும் வரை மறக்கவே
முடியாத, மறக்கக்கூடாத ஒருவர். அவரைப்பற்றி
அடுத்த பதிவில்.

தொடரும் போட்டு ரொம்ப நாளாச்சு பாருங்க.