Showing posts with label திரும்பிபார்க்கிறேன். Show all posts
Showing posts with label திரும்பிபார்க்கிறேன். Show all posts

Friday, August 18, 2023

திரும்பி பார்க்கிறேன் பகுதி- 4

ஹைதை ஸ்டேஷனில் எங்களை ரிசீவ் செய்ய அயித்தானின் நட்புக்கள் குழு.
கூடவே வந்து எங்கள் வீட்டில் விட்டுவிட்டு என்னை பயப்படுத்த பார்த்து முடியாமல் சிரித்து மகிழ்ந்து நட்புக்களாகி, காபி நல்லா போடறீங்க, சமையல் எப்படின்னு பார்க்கணும்னு மெனு கொடுத்துட்டு போன கதை வலைப்பூவில் எழுதியிருக்கேன். 

ஹைதையில்  (ஹைதராபாத்) தான் தங்கும் நாட்கள் குறைவு என்றாலும் எலிவலையாலும் தனிவலையென தனக்கென ஒரு வலையை அமைத்து வைத்திருந்தார் அயித்தான். கார் ஷெட்டிற்கு மேலே இருக்கு ஒரு போர்ஷன் அவ்வளவுதான். அட்டாச்ட் பாத்ரூம் இருக்கும் ஒரு தடுப்பரை இந்தப்பக்கம் சமையல், அந்தப்பக்கம் ஹால், பெட்ரூம் எல்லாம் அதுதான். ஆனால் ஃபுல் ஃபர்னீஷ்டு ஹவுஸ் :)) போர்ட்பிள் டீவி, நல்ல சவுண்ட் சிஸ்டம், வாஷிங் மெஷின், கேஸ் அடுப்பு எல்லாம் இருந்தது.

மாதத்தில் 20 நாள் போல் டூர். பொதுவாக நட்புக்களுடன் இருப்பார். சில சமயம் இங்கே. திருமணத்திற்கு வீடு மாறவில்லை. 3 மாதத்தில் பெங்களூருக்கு மாற்றல் இருக்கும் (நானும் டிரான்ஸ்பர் ஆர்டர் என் கம்பெனியில் வாங்கி வந்தேன்) அப்படி இல்லையென்றால் வேறு வீடு பார்க்கலாம் என இருந்தார்.

ஹைதையில் ஒரு ரிஷப்ஷன் முடிந்ததும் வேலைக்கு போக ஆரம்பித்தவர் டூருக்கு போனார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் அனைவருமே நல்லவர்கள். அந்த சூழல்தான் பிரச்சனை. என் நிலையும் அப்படித்தான். வீட்டில் குறைந்த பட்சம் 7 பேர் இருந்தோம். வேலைக்கு போய்வந்து, ரயில் சிநேகம் என பேசி பேசி டயர்டாகும் ரகம். ஆனால் இங்கோ தனிமைதான். இப்போ வரை நான் அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் :)))

சம்சாரம் அது மின்சாரம் லட்சுமி சொல்வது போல் ,” ம்ம்ம்ம் இனி நான் இப்படி இருக்க பழகிக்கனும்” என்று முடிவு செய்துகொண்டேன். பெங்களூர் மாற்றல் இல்லை. அதனால் ஹைதையிலேயே வேறு வீடு பார்த்து குடி பெயர்ந்தோம். எனக்கு ஹைதைக்கு மாற்றல் தரமாட்டேன் என்று சொல்ல வேலையை விட்டாச்சு.

அடுத்த வருடம் அன்னபைய்யா பிறந்துவிட  என வாழ்க்கை இருந்தது. சவால் என்னவென்றால். மாமியாருக்கு பார்க்கின்சம். இன்று இதற்கு சிறப்பான மருத்துவம் இருக்கு என்கிறார்கள். அன்று ரொம்ப கஷ்டம். இருந்த இடத்திலேயே டாய்லட் எல்லாம் செய்துவிடுவார்கள். இரவு தூக்கதில் சிறுபிள்ளை போல் பாத்ரூம் போய்விட காலையில் நாம் எழுப்பி சுத்தம் செய்யும் பொழுதுதான் தன் நிலையே தெரியும். 10 அடி தூரம் நடக்க் 15 நிமிடங்கள் ஆகும். 

இவரையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அயித்தானுக்கோ டூரிங் ஜாப். பழைய துணிகளை வீட்டில் போட்டுவிட்டு புதுத்துணிகளை எடுத்துச்செல்ல வருபவர் என்று சொல்லலாம்.  One women armyயாக செயல்பட வேண்டிய நிர்பந்தம். 

இப்பொழுது நினைத்தாலும் நானே அதெல்லாம் செய்தேன் என்று மலைப்பு.
2 வருடத்தில் சென்னைக்கு மாற்றலாக அதிக பட்ச  வெயிலோடு  உறவாடும் மே மாதத்தில் சென்னைக்கு வந்தோம். அது 1998.

தொடரும்
கலா ஸ்ரீராம்
18/8/23

Wednesday, August 16, 2023

திரும்பி பார்க்கிறேன் - பகுதி 3

மும்பை வாழ்க்கை 2 வருடங்களில் முடிவுக்கு வந்தது. 1000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன். வெளிவரும்பொழுது 3500/- அப்போ அது ரொம்ப பெரிய்ய தொகை (1995).
ஏன் இந்த அல்பாயுசு?  என் படிப்புக்கும் மங்களம் பாடிய அவ்வாவின் உடல்நிலை  நான் வேலைக்கு சென்றபொழுது என்னாச்சு என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அதாவது சடனாக ஒரு நாள் நீ காலேஜ் போய் கிழிச்சதெல்லாம் போது. அவ்வாவுக்கு உடம்பு சரியில்லை. நீ இருந்து பார்த்துக்கோ என சொல்லப்பட்டது. இரண்டாவது செமஸ்டருடன் மங்களம் பாடப்பட்டது.

காலையில் பரிட்சை முடிந்து இனி நான் வீட்டில் தான் என நினைத்திருந்த பொழுது மாலையில் அம்மாவந்து நாளை முதல் இந்திராகாந்தி 
ஸ்கூலில் வேலை உனக்கு. மாதம் 300 சம்பளம். ட்யூஷன் எடுக்கணும். அதற்குத்தனி மொத்தம் 500 ரூபாய் வரும் எனச்சொல்ல இப்ப நான் வேலைக்கு போனால் அவ்வாவை யார் பார்ப்பது? இதற்கு நான் படிக்க போகலாமே? என கேட்க பதில் இல்லை. வரவும் வராது. பள்ளத்தூரில் படிக்க போக தினம் 10 ரூபாய் பஸ் காசு. படிப்பை நிப்பாட்டினால் அது மிச்சம். இப்ப வேலைக்கு போனால் வருமானம். இந்த நிலையில் தான் மும்பைக்கு வேலைத்தேடி அனுப்பட்ட பட்டது. 

இந்த முறை அவ்வாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக எங்கே பேத்தி கல்யாணம் பார்க்காமல் போய்ச்சேர்ந்துவிடுவோமோ என்ற எண்ணம் வர அவர் மகனிடம் சொல்லி மாப்பிள்ளை பார்க்கும் கட்டம் இனிதே ஆரம்பம்.

அப்பொழுது என்னுடன் நல்ல உறவில் இருந்த தாய்மாமன் பொங்கி எழுந்துவிட்டார். ஆனால் பெற்றவருக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நல்ல சம்பந்தமாக இருந்தால் மட்டுமே ஒத்துக்கொள்வேன் என்று சொல்ல பல மாப்பிள்ளைகளை அவரே ரிஜக்ட் செய்தார் (எல்லாம் குப்பையும் கூர்வாளமும் தான். மாமா செய்தது சரியே)

அயித்தான் எங்களுக்கு முன்பே உறவு என்பதால் அவருக்கும் வேலை பர்மனெட் ஆகிவிட்டது (ஹிந்துஸ்தான் லீவர்) என்பதால் கேட்டு பார்ப்போம் என்று ஆரம்பிக்க ராஜலட்சுமியிடம் வளர்ப்பு என்று தெரிந்ததும் அந்த ஒரு தகுதியில் ஜாதகம் பொருத்தம் பார்க்கப்பட்டு பொருந்தவே வேற பெண்களில் ஜாதகங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு “ ராஜம் பேத்திதான் நம் வீட்டுக்கு மருமகள்” என வருங்கால மாமியார் சொல்லிவிட அயித்தான் தலையெழுத்து பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார்.

ஏப்ரலில் பெண் பார்த்தார்கள். முன்னாடியே தெரிந்த உறவுக்கு இதெல்லாம் எதற்கு என்று கோவத்துடன் மும்பையிலிருந்து வந்தேன். பின்னே கரஸ்பாண்டன்சில் விட்ட படிப்பை படித்துக்கொண்டிருந்தேனே. மே மாதமும் லீவு கேட்டால் மேனேஜர் லீவு கொடுக்கணுமே எனும் கவலை எனக்கு.

பெண் பார்க்கும் படலம் உறவினரிடம் அதிகம் பழகியிராத தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த அயித்தானின் அண்ணன் ( இன்று வரை நான் மிகவும் மதிக்கும் அன்பான சுப்ரமண்ய மாமா) மற்றும் அவரது  குடும்பத்தினருக்காக. சென்னையில் இருந்த எங்கள் உறவினர் வீட்டில் நடந்தது. வரதட்சனை தர மாட்டேன் ( அப்புறம் அதற்கு வேறு என்னால் ஏற்பட்ட  தண்ட செலவு என சொல்லபட கூடும் என்பதால் முன்பிருந்த இந்த கண்டீஷன்), பட்டுப்புடவை கட்ட மாட்டேன். இது இன்றளவும் நடைமுறையில் எங்கள் குடும்பங்களில் இருக்கும் ஒரு கொள்கை.  ஆனால் இந்த பட்டுப்புடவையில் ஒரு பிரச்சனை வந்தது.

தெலுங்கு சம்பிரதாயத்தில் முகூர்த்தம் நேரம் வெள்ளை புடவையை மஞ்சளில் ந்னைத்து காயப்போட்டு அதைத்தான் உடுத்துவார்கள். பிறகு மஞ்சள் கலரிலோ அல்லது கேரளா காட்டன் புடவைகளோ கட்டும் பழக்கம். இதனால் நாகவல்லி எனும் சடங்கிற்கு பட்டுதான். என்னிடமும் அந்த சடங்கிற்கு நாங்கள் பட்டு வாங்குவோம் அதை கட்டித்தான் ஆகவேண்டும் எனச் சொல்ல. அப்படின்னா இந்த சம்பந்தம் வேண்டாம்மான்னு அம்மம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

இந்த ஒரு புடவை மட்டும் அதுவும் நாகவல்லியிலும் தாலி கட்டும் நிகழ்வு இருப்பதால் கட்டாயம் அன்று மட்டும் உடுத்தி கொள்ளட்டும் அப்புறம் வேணாம் என இறங்கி வர என் அம்மம்மாவோ இந்த ஒரு பட்டுப்புடவைக்காக நல்ல(!)  சம்பந்ததை விட்டு விடாதே எனக் கெஞ்ச சரியென்று ஒத்துக்கொள்ள நிச்சயதார்த்தம் பாக்கு வெத்தலை மாற்றுதல் போன்ற எந்த சடங்கும் இல்லாமல் திருமண வேலைகள் பார்க்க ஆரம்பித்தனர்.

டிசம்பர் 1 1995 பழநியில் திருமணம் நடந்தது. சென்னை வந்து திரும்ப ரிஷப்ஷனுக்கு புதுகை போய் டிசம்பர் 16 1995 ஹைதை மாநகரம் வந்து இறங்கினோம்.

தொடரும்
அன்பும் நன்றிகளுடன்
புதுகைத்தென்றல்
17/8/23

Tuesday, August 15, 2023

திரும்பி பார்க்கிறேன் - பகுதி 2

புதுகை அவ்வளவு ஒன்றும் பெரிய ஊர் இல்லை. இன்றும் ஒரு டவுன் தான். கள்ளமில்லா உள்ளம் கொண்ட மக்கள்னு சொல்லலாம். தன்மையானவர்கள்.

பெரிய நகரத்தில் வளர்வதற்கும் புதுக்கோட்டைப் போன்ற சிறிய ஊரில் வளர்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதிலும் ஊரிலேயே புகழ்பெற்ற பள்ளியின் குடும்பத்து வாரிசு என்பதால் பலருக்கும் தெரியும். 

அங்கேயிருந்து மும்பைக்கு போனது என் வாழ்வில் மட்டுமல்ல என்னிலும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

மும்பைக்கு முன் மும்பைக்கு பின் எப்படி இருந்தது என்று சொல்வதை விட மும்பைக்கு போயிருக்காவிடில் இப்பொழுதைய நான் சாத்தியமே இல்லை என்று சொல்லலாம். 

அப்பாவின் ராஜ்ஜியத்தில் அதிகம் யாருடன் பேசக்கூடாது, வீட்டிற்கு யார் வந்தாலும் தண்ணீர் கொடுப்பதோடு அல்லது அப்பா வீட்டில் இல்லாத பட்சத்தில் வந்தவர் பற்றிய தகவல் தெரிந்து சொல்ல வேண்டும் என்ற அளவில் தான் அடுத்தவர்களுடன் பழக்கம். சிரித்து பேசி, மகிழ்ந்து அனுபவத்தி இதெல்லாம் ரொம்ப அரிதான் விஷயம். பசங்க 2 படத்தில் “ யாருக்கும் தெரியாம நாம பாட்டுக்கு வாழ்ந்துட்டு போயிடனும்யான்னு” ஒரு பெற்றவர் சொல்வர். என் அப்பாவும் அப்படித்தான் வளர்த்தார்.

கடைக்கு போவேன், சாமான்கள் வாங்குவேன். தனியாக சைக்கிளில் போய் அரிசி மூட்டை சுமத்தல் போன்ற வேலைகள் அதாவது வெளி வேலைக்கு பழக்கியிருந்தார். ஆனால் யாருடனும் பழக பேச தெரியாது. ஓரளவுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்த சமயம் அது. 

அப்படி இருந்த என்னை என் கூட்டை உடைத்து 360 டிகிரி மாற்றம் என்று சொல்வார்களே அப்படி ஒரு மாற்றத்தை எனக்கு மும்பை வாழ்க்கை தந்தது. அதில் முக்கிய பங்கு என் தாய்மாமா திரு. சத்யநாரயணனையே சாரும்.

மும்பையில் வாழ்ந்தவர்களுக்கு வேறெங்கும் போய் செட்டிலாக ஈசி என்பார்கள். அவ்வளவு அனுபவங்களை கொடுத்துவிடும். ரயிலில் பயணம், திட்டமிட்ட பயணம். ஒரு நொடி தவறினாலும் மிஸ்ஸாகும் ரயிலால் ஏற்படும் தாமதம் என ஒரு ஒழுங்கமைப்பு.

பண்டிகை கொண்டாட்டங்கள் ஆகட்டும், தினந்தோறும் ரயில் பயணங்கள், ரயில் பயணிக்களுடன் நட்புக்கள் அவர்களின் மூலம் கற்றல்னு எனக்குள் நிறைய்ய தாக்கத்தை கொடுத்து என்னை மேம்படுத்திக்கொள்ள உதவியது.

நான் வேலை பார்த்த இடத்திலும் நிறைய்ய சவால்கள். என்னை அறியாமாலேயே என்னிடம் 4 பேர் பார்க்கும் வேலையை கொடுத்து செய்ய வைத்து தவறும் பொழுது .திறம்பட செய்யவில்லை என குற்றம் சுமத்துவார்கள். பொறுத்தது போதும் பொங்கியெழுன்னு நான் குற்றமில்லை என்பதை நிரூபிப்பேன். “வடு மாங்காய் கடிப்பது போல் பதில் சொல்லாட்டாதான் என்ன” என்ற மேலதிகாரியின் கேள்விக்கு அப்படி பதில் சொல்ல வைத்தது நீங்கள் தான் என்று சொல்லும் வகையில் என் தன்னம்பிக்கை பெறுகியது.

நான் யார்? என் திறமை என்ன? எனக்கு வேண்டியது என்ன? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது? இதை உணர்வதுதான் நம் தேவை. இதை மட்டும் நாம் உணர்ந்துவிட்டால் அப்புறம் நமக்கு நாமே தான் எஜமானன்.

இந்த உள்நோக்கிய பயணம் புரிதல் எனக்கு மும்பை வாழ்க்கை தந்ததோடு இன்றளவும் மறக்க முடியாத ரயில் பயணங்கள், ரயில் சிநேகங்களைத் தந்து என்னை அரவணைத்து, ஆதாரித்து.

மாமா எனக்கு பர்சனாலிட்டி டெவலப்மெண்டிற்கு வழி வகுத்தார்  என்றால் அம்மம்மா என்னை ஆற்றுப்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும். எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்ற கேள்வியின் பின்னால் இருக்கும் கடினமான தருணங்கள் எனக்குள் நிறைய்ய கோபத்தை விதைத்திருந்தது. காயங்களின் ஆறாத நிலையும் அதற்கு இன்னும் எண்ணெய் ஊற்றியது. அம்மம்மாவின் வழிகாட்டுதல், உன் கடைமையை மட்டும் செய்து விடு, அடுத்தவர்கள் செய்ய வேண்டியது பற்றி நீ என்னாதே போன்ற வாழ்க்கை பாடங்களும் இன்றளவும் எனக்கு வழிகாட்டுகிறது.

ராஜலட்சுமியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா எனப் பாடிக்கொண்டு எனக்குள் என்ன மாற்றம் நிகழ்த்திக்கொள்ள வேண்டுமோ அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று இருந்தது எனக்கு பலவிதத்தில் உதவி செய்தது.

பகிர இன்னும் இருக்கு
தொடரும்


அன்பும் நன்றிகளுடன்
புதுகைத்தென்றல்
15/8/23