Showing posts with label 2016. Show all posts
Showing posts with label 2016. Show all posts

Thursday, November 17, 2016

அமிர்தசரஸ் பயணம் - 2

லால் மாதாகி மந்திர் போகலாம்னு நம்ம ட்ரைவர் ராஜாகிட்ட சொன்னதும் சரின்னு கூட்டிகிட்டு போனார்.

ஏதோ சாதாரணக்கோவில் தரிசனம் செஞ்சிட்டு வந்திடலாம்னு நினைச்சோம். செம எக்சர்சைஸ். மேலே ஏறி, குகைல நுழைஞ்சு, தண்ணில நடந்துன்னு கோவிலுக்குள்ளயே பல தெய்வங்களின் தரிசனம்.

பாதி வழியில திரும்ப முடியாது. உள் நுழைவது ஒரு வழின்னா வெளிய வர இன்னொரு வழி. மொத்தமும் பாத்துட்டு தான் வரமுடியும்.  ஆனா போரடிக்காம ஒவ்வொரு தெய்வத்தையும் அழகழகா அலங்காரம் செஞ்சு வெச்சிருக்காங்க.

இந்த கோவிலை கட்டிய லால் மாதாங்கற பெண்மணியின் பெயராலாயே அறியப்படுற இந்தக்கோவில் வைஷ்ணோ கோவில் மாதிர். அங்கே போக முடியாட்டி இந்த கோவிலுக்கு போயிட்டு வந்தா அங்க போய் வந்த பலன் இங்க கிடைக்குமாம்! சரி நம்ம 22 வருஷ வைஷ்ணோ தேவி வழிபாடு இப்போதைக்கு இங்கே தரிசனம் வரைக்கும் வந்திருக்குன்னு நினைச்சுகிட்டேன்.

பெண்கள் தலை மூடியிருக்க வேண்டும் என்பது கட்டாய விதி.


இதான் வீடியோ லிங்க்

மேல ஏறி கீழ இறங்கி, குனிஞ்சு குகையில தவழ்ந்து, தண்ணில நடந்துன்னு ஓவர் எக்சர்ஸைஸானதுக்கு அப்புறம் மத்த இடத்துக்கு போக தெம்பு இல்லை. காலையிலிருந்து பயணம். தலைவலி ஆரம்பிச்சிருச்சு. ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு பாத்துக்கலாம்னு வந்துட்டோம்.

நண்பர் போன் செஞ்சு 7 மணிக்கு வருவதாகவும், அடுத்த ப்ளானை பத்தி அப்ப டிஸ்கஸ் செஞ்சுக்கலாம்னு சொன்னார். சரின்னு கட்டைய சாய்ச்சு கொஞ்சம் ரெஸ்ட், எடுத்து ரெஃப்ரெஷ் ஆகி, 7 மணிக்கு நண்பருக்கு போன் செஞ்சா 7.30க்கு வர்றேன்னார். ஒரு வழியா 7.45க்கு வந்தார். கூட இன்னொரு நண்பரையும் அழைச்சுகிட்டு வந்திருந்தார்.



Friday, November 04, 2016

ஏ சூப்பருப்பா!!!

பதிவு எழுதியே ரொம்ப நாளாச்சு இப்பதான் ஆரம்பிச்சிருக்கேன். இந்த நிலையில என்னுடைய பழைய பதிவுகளை எடுத்து பாத்துக்கிட்டு இருந்தேன்.

ஒரு டயரியை புரட்டிப்பார்க்கறாப்ல  இருந்துச்சு. ம் பரவாயில்லை நல்லா தான் எழுதியிருக்கேன்னு எனக்கு நானே பாராட்டும் கொடுத்து கிட்டேன்.

பதிவுகளை படிக்கும் போது பல விஷயங்களில் என் மனசு மாறாம இப்பவும் அதே எண்ணம் இருப்பது புரிஞ்சது. சூப்பர்ல. வீக் எண்ட் ரவுண்டபெல்லாம் படிக்கும் போது ச்சே எவ்வளவு நல்லா இருந்துததுன்னு மனசு கொஞ்சம் வருத்தமாகுது. முன்ன மாதிரி எங்கயும் வெளிய போக முடியலை. பிள்ளைங்க படிப்பு, அதுவும் அம்ருதம்மா இந்த வருஷம் +2 எக்ஸாம் எழுதப்போறாங்க என்பதால வார இறுதியே இல்லாம போச்சு. :(
வெளில போகணும்னா ரொம்ப யோசிக்கணும். அம்ருதம்மாவுக்கு ஏதோ வேலை அது இல்லைன்னா ஆஷிஷ் அண்ணாக்கு, இவங்க ரெண்டு பேரும் ஃப்ரீன்னா அயித்தான் வேலைல பிசி இப்படி தான் இருக்கு. என்னுடைய பழைய பதிவுகளில் எனக்கு ரொம்பவே மனசுக்கு பக்கத்துல இருக்கறது இந்த பதிவு தான் அதை மீள் பதிவா போடறேன். சில மாறுதல்களுடன்:


எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே
இல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்
இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்
மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.

எது சாத்தியம்?
அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?
ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ள
எப்படி நேரம் இருக்கிறது?
இப்படி பலக் கேள்விகள்.

இவை எல்லாவற்றிற்கும் என் பதில் ஒன்றுதான்.
நான் நானக இருக்கிறேன். மகள், அக்கா, மனைவி,
தாய், ஆசிரியை இப்படி பல பதவிகள் வகித்தாலும்
என்னை நான் மறந்து விடவில்லை. எப்படி மேற்சொன்ன
பதிவிகளை சரியாக நான் வகிக்க தவறக்கூடாதோ
அதேபோல் நான் நானாக இருப்பதும் மிக அவசியம்
என்பது என் கொள்கை. (நான் மாண்டிசோரி
டிரையினிங் எடுத்துக்கொண்ட பொழுது மகள்
அம்ருதாவிற்கு 4 வயது. எப்படி சமாளிக்கிறாய்?
என்ற கேள்விக்கணை அனைவரிடமிருந்தும்
வந்தது)

நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் திட்ட மிட்டுக்கொள்வேன்.
நாளை செய்யலாம் என்று தள்ளிவைப்பது என்பது
கிடையவே கிடையாது. (அதனால் தான் ஒரே நாளில்
4 பதிவு கூட போட்டு உங்களை கஷ்டப்படுத்துவேன் :) )

நேரத்தை திட்டமிட்டுக்கொண்டாலும்
அதை சரியாக நிறைவேற்றிக்கொள்ள குடும்பத்தவர்களின்
உதவி மிக மிக அவசியமாயிற்றே!


அலுவலகமோ, வீடோ நிர்வாகம் செய்வதில்
திறமை வேண்டும். அனைத்து வேலைகளையும்
நாமே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து முடிப்பது
நிர்வாகத்திறன் ஆகாது என்று எங்கோ படித்திருக்கிறேன்.

அயித்தானின் குணம் தன் வேலையை தானே செய்து
கொள்வது. அடிக்கடி அலுவலக டூர் போகும் அவர்
தனது பெட்டியைத் தானேதான் தயார் செய்து கொள்வார்.
துணிமணிகள் துவைத்து, உலர்த்தி இஸ்திரி போட்டு
வைப்பது வரை மட்டும் தான் என் வேலை. தான்
சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்துவிடுவார்.

இதே குணத்தையும் பிள்ளைகளிடமும் வளர்த்தேன்.
பள்ளிக்கு தயாராவது, 6 வயது
முதல் தானே குளிப்பது,(மகளுக்கு மட்டும்
வாரத்தில் ஒரு நாள் தலைக்கு குளிப்பாட்டுவேன்),
வீட்டில் சின்னச் சின்ன வேலைகள்
செய்வது, டைம் டேபிள் படி புத்தகங்களை அடுக்குதல்,
மடித்து வைத்திருக்கும் துணிமணிகளை அலமாரியில்
வைத்தல், வாரம் ஒருமுறை தனது அலமாரியை
சரி செய்து வைத்தல் என்று ஒரு டைம் டேபிள்
போட்டு கொடுத்து விட்டேன். அதை அவர்கள்
சரிவர செய்ய டிரையினிங் கொடுப்பது மட்டும்
தான் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்து.

பிள்ளைகளுக்கான டைம்டேபிள் குறித்த என்
பதிவு பேரண்ட்ஸ்கிளப்பில்.

அவரவர் வேலையை அவரவர் செய்வது
என்பது இப்போது பழக்கமாகிவிட்டது.தவிர
இருக்கும் நேரத்தில் சின்னச் சின்ன வீட்டு
வேலைகள் செய்து கொடுப்பார்கள்.

சமையற் வேலையை ஒரு சுமையாக நினைக்காமல்
வாரத்திற்கு தேவையான சமையலை முன்பே
திட்டமிட்டு (ஒரு முறை சமைத்த உணவு அந்த
வாரத்தில் மறுமுறை வராமல் திட்டமிட்டுக்கொள்வேன்)
அதை செயலாற்றுவதால் எனக்கு கணிசமான
நேரம் மிச்சம். என்ன சமைக்க?!! என்று குழம்ப
அவசியமே இல்லை. இதனால் நான் அதிக
நேரம் சமையற்கட்டிலேயே இருக்கவும் மாட்டேன்.

 எல்லாரும் ஒரு வேளை உணவாவது சேர்ந்து சாப்பிடணும்.  காலை பரபரப்புல அது முடியாது. இரவு உணவு சேர்ந்து தான் சாப்பிடணும். அதுவும் குறிப்பிட்ட நேரத்துல சாப்பிட்டு முடிச்சு என்னை ஃப்ரீயாக்கிடணும் :) பல வீடுகளில் இரவு 10 மணிக்கும் சாப்பிடுவாங்க. எங்க வீட்டுல லேட்டாவதுதான் பழக்கம்னு சொல்வாங்க. 8 - 1 - 8 இதுதான் டாக்டர்கள் சொல்லும் நேரம். காலை உணவு, மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு அந்த நேரத்தில் சாப்பிடணும்.  இரவு 7 .30 மணிக்கு மேலன்னா டீ/காபி கட். நேரடியா இரவு உணவு சாப்பிட வேண்டியது தான்.

எனக்கான நேரம் ஒதுக்கி என்னை ரெஃபிரஷ்
செய்து கொள்வது மிக அவசியம் எனக்கு.
காபி/தேநீர் அருந்தும் நிமிடங்கள் என் பொன்னான
தருணங்களாக நினைத்து மெல்ல ருசித்து பருகுவேன்.
பாடல் கேட்பேன், புத்தகம் வாசிப்பேன்.

டென்ஷனைக் குறைக்க காலையில் எழுந்த உடன்
இப்ப ஒரு ரேடியோ பெட்டி வாங்கியிருக்கேன் அதுல ஐபேட், பெண்ட்ரைவ் எல்லாம் போட்டு கேக்கலாம். அதுல  பக்தி பாடல்கள் கேட்பதால், வீட்டில்
இருப்பவர்கள் கூட டென்ஷன் இல்லாமல், வாக்குவாதம்
செய்து கொள்ளாமல் தயராகிறார்கள்.. பிள்ளைகளை எழுப்ப மாட்டேன். கிச்சன் வேலையை விட்டுட்டு அவங்களை எழுப்ப போய் அவங்க உடனே எந்திரிக்கலைன்னா டென்ஷனாகி கத்துறது அவங்களின் நாள் துவக்கத்தை மோசமாக்கிடும். (இத்தனை வருஷ பழக்கத்துக்கு அவங்களே சீக்கிரம் எந்திரிச்சிடுவாங்க.) அதனால என் வேலை சமைச்சு வைப்பது.
உங்க வேலைகளை முடிச்சு வந்து சாப்பிடுங்கன்னு சொல்லிட்டேன்.
லேட்டா எந்திருச்சு அதனால அவசர அவசரமா கிளம்பினா அதுல என் தப்பு ஏதும் இல்லை :)

இப்படி சின்னச் சின்ன திட்டமிடல் தான்
எனக்கு அதிக நேரம் கிடைத்தது போல் இருக்கிறது.
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பின் அதுவும்
என் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இல்லாமல்,
எந்த வேலையும் இதனால் நின்று விடாமல்
திட்டமிட்டு எழுதுகிறேன். ஃபேஸ்புக் பக்கம் போனப்ப கூட என்னுடைய எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு தான் போவேன். என்னுடைய மத்த வேலைகளும் கெடாம எனக்கான நேரத்தை ஒதுக்க ஆரம்பிச்சதுதான் எனக்கு அதிக நேரம் கிடைக்க உதவியா இருக்கு.

மிக முக்கியமாக எனக்கு ரேடியோ கேட்பது
பிடிக்கும். டீவி பார்க்க பிடிக்காது. அதாவது
நோ சீரியல்ஸ்.டீவி முன் அமராததால் பிள்ளைகளுடன்
நேரம் செலவிட முடிகிறது. வலைப்பூ போரடித்தால், புத்தகம், பாட்டு, க்ரோஷா பின்னுதல் என்று வைத்துக்கொள்வேன்.


என்னைவிடவும் மிக அழகாக திட்டமிட்டு
செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதை நான் பகிர்வது சிலருக்கு கூடுதலாகஒரு ஐடியா கொடுத்தது போலிருக்குமே!
உங்களிடம் ஏதும் ஐடியா இருந்தா  சொல்லுங்க.அதையும் சேத்துக்குவோம்.


அமிர்தசரஸ் பயணம்

போனமுறை டில்லி போனப்போ போயிருக்க வேண்டியது. பிள்ளைகளின் லீவு பிரச்சனையானதால கேன்சல் செஞ்சோம். அம்ருதம்மா அடுத்த வருஷம் காலேஜ் போறாங்க, அப்புறம் அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் சேர்ந்தாப்ல லீவு வருவது கஷ்டம். அதான் சரின்னு ப்ளான் செஞ்சு கிளம்பினோம்.
சென்னையிலிருந்து தில்லி அங்கேயிருந்து அமிர்தசரஸ் பயணம்.

4 நாள் லீவுல சுத்தி பாக்கணும் என்பதால் விமானப் பயணம் தான்.  எந்த வித தாமதமும் இல்லாம எல்லாம் ஒழுங்கா போய்க்கிட்டு இருந்தது. அமிர்தசரஸை நெருங்கிட்டோம், க்யூல இருக்கோம் அப்படின்னு விமானி அறிவிப்பு செஞ்சார்.  ஆனா கிட்டத்தட்ட 30 நிமிஷத்துக்கும் மேல வானத்துலயே வட்டமடிச்சுக்கிட்டு இருந்தது விமானம்.

எங்களுக்கு கீழ ஒரு ஃப்ளைட், மேல ஒரு ப்ளைட் இந்த ரேஞ்சுல லேண்டிங் ஆகாம சுத்திக்கிட்டு இருக்கு. இதோ அதோன்னு நேரம் போய்க்கிட்டு இருந்தது. போர் மேகம் ஏதும் சூழ்ந்திருச்சா? இல்ல ஹைஜெக் ரேஞ்சுக்கு ஏதும் ஆகிடிச்சோன்னு பயமா போயிருச்சு. ஒரு வழியா 2.15 மணிக்கு லேண்டிங் ஆனதும் தான் மனசு லகுவாச்சு.

ரொம்ப சின்ன ஏர்போர்ட். அதான் ப்ராப்ளம் (நம்ம முன்னாள் திருச்சி ஏர்போர்ட்டையும் விட குட்டி) வெளிய வந்தோம். அயித்தானோட நண்பர் எல்லா ஏற்பாடும் செஞ்சு வெச்சிருந்தார்.  கார் வெயிட் செஞ்சுகிட்டு இருந்தது . ஹோட்டல் போனோம். ஹோட்டல்ல அயித்தானோட நண்பரோட ஆபீஸ்ல வேலை பாக்கிறவர் காத்துக்கிட்டு இருந்தார். நீங்க 10 நிமிஷத்துல கிளம்பணும். இன்னைக்கு ஷோ இருக்கு, இப்பதான் தகவல் வந்துச்சுன்னாரு.

அமிர்தசரஸ் பயணத்துல ரொம்ப முக்கியமான விஷயம் வாகா பார்டர். அது இல்லாட்டி கோவில்களுக்கு போயிட்டு வந்த எஃப்கட் தான்.  அப்பதான் சில சண்டைகள் நடந்து போர் அபாயாம் மாதிரி இருந்தது.  நாங்க ஊருக்கு கிளம்பும் முன்னேலேர்ந்தே வாகா பார்ட்டர் பரேட் கேன்சல் ஆகுதுன்னு செய்தி பாத்துக்கிட்டு இருந்தோம்.

சரின்னு ரூமுக்கு போய் ரெடியாகி கீழ வந்தோம். நண்பர் ட்ரைவர்கிட்ட எப்படி செய்யணும் எல்லாம் சொல்லி வெச்சிருந்தார். மிஸ்ஸாகிடும்னு நினைச்ச ஷோவை பார்க்க போறோம். அப்படின்னு குஷியா போனா.......................


இந்த போர்ட் இருக்கும் இடத்துல வீரர்கள் நின்னுக்கிட்டு எந்த வண்டியையும் உள்ளே போக விடல. இங்கேர்ந்து ரெண்டு கிமீ தூரத்துல தான் அந்த பார்டர்.
பொது மக்கள் பார்வைக்கு அனுமதிப்பதை நிறுத்தி பத்து நாளாச்சே! உங்களுக்கு யார் சொன்னாங்க அப்படின்னு வீரர் கேக்கறாப்ல. இந்த மாதிரி வீஐபி பாஸுக்கு ஏற்பாடு ஆகியிருக்குன்னு சொல்ல, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிச்சிருந்து பாஸ் கொடுத்தா எங்க கிட்ட அந்த லிஸ்ட் இருக்கும் அப்படி ஏதுமில்லைன்னு உள்ளே போக அனுமதி இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார். இதுக்கா இவ்வளவு அடிச்சு பிடிச்சு ஓடியாந்தோம்னு ஆகிடிச்சு.

எதை வெச்சு அந்த நண்பர் ஷோக்கு அனுமதி இருக்குன்னு சொன்னார்னு இப்ப வரைக்கும் புரியாத புதிர்! பார்டர்லேர்ந்து ரெண்டு கீமீ தூரத்துக்கு ஊரே வெறிச்சோடி கிடக்கு. எல்லாரையும் காலி செய்ய சொல்லிட்டாங்க. படத்துல பாக்கற மாதிரி இருக்காது, பஸ்ஸெல்லாம் இங்க இருக்கும்னு பசங்க பேசிக்கிட்டு இருக்க, ட்ராக்டர்ல மக்கள் உக்காந்து போனது பாத்து பசங்க ஆஹா, படத்துல பார்த்த மாதிரி இருக்கேன்னு குஷியானாங்க.

சங்கர் தாபாங்கற தாபால சுடச்சுட சமோசாவும், ஃபுல் கிளாஸ் லஸ்ஸியும் குடிச்சோம். பஞ்சாபி சமோசான்னா அதுதாங்க சமோசா! காரமில்லாம இதமான டேஸ்ட்ல செமயா இருந்தது. லஸ்ஸி லா ஜவாப் தான். :)

படங்கள் உதவி: கூகுளாண்டவர். (எங்க கேமராவுல இருப்பதை இன்னும் கம்ப்யூட்டர்ல் போடலை. போட்டதும் தனி செஷனா அதை பகிர்றேன்.)

ரூமுக்கு போகலாமான்னு யோசிச்சோம். பாக்க வேண்டிய மத்த இடங்கள்ல ஏதாவது பாக்கலாம்னு போனோம்.

தொடரும்......

Thursday, November 03, 2016

மறுப்ரவேசம்!!!!!

நட்புக்களுக்கு வணக்கம், காரணம் நிறைய்ய சொல்லலாம். வலைப்பு பக்கமே வராம் இருந்திட்டேன். வலைப்பூ ஆரம்பிச்சு 9ஆவது வருடம் நிறைவடையப்போகுது. இந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில ப்ளாக்குக்கே திரும்ப வந்திடலாம்னு முடிவு செஞ்சிட்டேன். ஆமாம் பழைய புதுகைத் தென்றலா வர்றேன். வலையுலகுக்கு இது ஒரு மறுப்ரவேசம்.





நடுவுல கொஞ்சம் இந்த பக்கம் வந்தேன்.  முன்ன மாதிரி பரபரன்னு வலையுலகம் இல்லை. பஸ்ல போக ஆரம்பிச்சாங்க, அப்புறம் ப்ளஸ்ஸாகி இப்ப முகநூலில் தான் நட்புக்களை பாக்கறேன். அங்க எழுதுறது நமக்கு அம்புட்டு மனசுக்கு இதமா இல்லை. ரொம்ப பெரிய போஸ்ட்னுன்னா சும்மா லைக்க தட்டிட்டு ப்ரசண்ட் போட்டுடறாங்க. நமக்கு பெரிய பதிவா எழுதித்தான் பழக்கம். அதனால இனி ப்ளாக்குக்கே திரும்பிடலாம்னு முடிவு செஞ்சிட்டேன்.  
இங்க இருக்கற ஒரு சுகம் முகநூலில் இல்லை. இதுதான் என்னுடைய முகநூல் அனுபவம். அங்கே க்ரோஷா குருப்ல சேர்ந்திருக்கேன். நிறைய்ய டிசைன்களுக்கு ஐடியா கிடைக்குது. அதை பாக்க அங்க போய் அப்படியே அங்கயே இருந்திடறேன். இதனாலயே மக்கள்ஸ் என்னை ஃபேஸ்புக்ல அதிகம் நேரம் செலவிடறதா நினைக்கறாங்க. முக நூலிலும் நிறைய்ய கத்துக்க இருக்கு. விட்டமின் டி குறைபாட்டுக்குன்னே ஒரு குழு, உள்ளத்தனைய உடல்னு நாம செய்யற  உடற்பயிற்சிகளை பகிர்ந்துகறது. குழு உறுப்பினர்கள் ஊக்குவிக்க இன்னும் நிறைய்ய உடற்பயிற்சின்னு நல்லாத்தான் இருக்கு. ஆனா வலைப்பூவை ரொம்ப மிஸ் செய்யறேன்.

 அதனால இனி ப்ளாக்குக்கும் நேரம் ஒதுக்கணும்னு முடிவு செஞ்சு முகநூல் நேரத்தை குறைக்க ஆரம்பிக்க திட்டமெல்லாம் போட்டாச்சு. மொதல்ல மொபைல்ல முகநூல் பாக்கறதை நிறுத்தியிருக்கேன். என் ப்ளாக்குக்கு ஆப்பி 9த் பர்த்டே சொல்லிக்கிட்டு இனி தொடர்ந்து சந்திக்கலாம் எனும் நம்பிக்கையோட பத்தாவது வருஷத்துல காலடி எடுத்து வைக்கிறேன். உங்கள் ஆதரவை எப்பவும் போல வழங்க வேண்டிக்கறேன்.




Friday, April 22, 2016

சம்மர் லீவ் - பார்ட் 2

ரொம்ப பேருக்கு பசங்களுக்கு லீவுன்னா ரொம்ப கஷ்டமான விஷயம். எப்படி இவங்களை மேய்க்கறது என்பதுதான் அது?ஆமாம் மேய்க்க அவங்க என்ன ஆடா? மாடா அப்படின்னு தோணினாலும்  அவங்களுக்கு போரடிக்காம வெச்சுக்கறது என்பது கஷ்டமான வேலைதான்.

அந்த காலத்தில் ( ஏதோ வயசானவன்னு நினைச்சிடாதீங்க :) ) பசங்களுக்கு லீவு விட்டா ஊர்ல இருக்கற பாட்டி, தாத்தாவீடு, அம்மாச்சி, தாத்தாவீடு, சித்தப்பா வீடு, மாமாவீடு, அத்தை வீடுன்னு போவாங்க. பெரியவங்க கொண்டு வந்து விட்டுட்டு திரும்ப வந்து கூட்டிப்போவாங்க இல்லைன்னா யார்வீட்டுல இருக்கறாங்களோ அவங்க ஒரு எட்டு போய் விட்டுட்டு வருவாங்க.

நேரத்துக்கு சோறு போட்டு பெரியவங்க பாத்துப்பாங்க. கதை சொல்வது, தாயம் விளையாடுவது, இப்படி ஏதாவது விளையாடிட்டு வெய்யில் தாழ்ந்ததும் வெளிய விளையாட விடுவாங்க. முடிஞ்சப்ப சினிமா, பக்கத்து ஊருக்கு ஒரு ட்ரிப்னு ஓடும்.  ராத்திரிக்கு பெரும்பாலும் வீட்ல இருக்கற ஒரு குண்டான்ல சோறு பிணைஞ்சு பிள்ளைகளை வரிசையா உட்கார வெச்சு கையில சோறு போடுவாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் கதை பேசிட்டு தூங்குவாங்க. பெரியவங்க திட்டுவாங்கன்னு ஒரு பயமும் இருக்கும்.ஆனா இப்ப பசங்களை லீவுக்கு அழைச்சுகிட்டு வந்தா கொஞ்சம் டென்ஷன் தான் ஆகுது.

அவங்க வீட்ல எப்படி இருந்தாங்களோ அப்படியே வெளியவும் இருக்கணும்னு ஆசைப்படறாங்க. சைவம் படத்துல வர்ற குட்டி பையன் மாதிரி wifi  இருக்கா? இதுதான் மொதோ கேள்வி  கேட்ஜட்லாம் பொதுவா அவங்க கிட்ட இருக்குது!!! அதனால அது வேணாம். ஆனா எந்த நேரமும் அதோடயே பொழுதை கழிக்கறாங்க. சாப்பிட வைக்க எல்லாம் கஷ்டம் தான். ஏன்னா அவங்க சாப்பிடும் சாப்பாடே மாறுபட்டே இருக்கு. எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி கூட்டத்துல ஒரு 4 வயசு கொழந்தை  அவங்க டேப் சரியா வேலை செய்யலைன்னு எங்க ஐபேடை கொடுத்தாதான் ஆச்சுன்னு அடம். அவ்வளவு காசு போட்டு வாங்கி அதை குழந்தை கையில கொடுக்க நமக்கு பயம். சமாளிக்க ரொம்ப கஷ்டமாச்சு.  சோறு கொடுத்தா வேணாம். பாஸ்தா, நூடில்ஸ், இப்படி தான் வேணும்னு சொல்வது, டீவியில கார்ட்டூன் சேனலைத் தவிர வேற எதுவும் மாத்தக்கூடாதுன்னு அடம், அந்த பக்கம் இந்த பக்கம் போனாலோ நாம வேற சானல் வெச்சுக்கலாம்னு வெச்சா தரையில விழுந்து புரண்டு அடம்!!!!

இன்னொரு வீட்டுக்கு நாங்க விருந்தாளியா போனப்ப வெளிய சுத்தி வந்த டயர்டுக்கு மதியம் கொஞ்சம் படுக்கலாம்னு நினைச்சு படுத்தா டீவியை பெருசா வெச்சு பாத்துக்கிட்டு இருந்துச்சு அந்த வீட்டு குழந்தை. கொஞ்சம் சவுண்ட் கம்மி செய்டான்னு சொன்னா,” எனக்கு இப்படி இருந்தாதான் டீவி பார்க்க பிடிக்கும்னு !!!” பதில் சொல்லுது அந்த 6 வயசு வாண்டு. படுத்திருக்காங்கன்னு  தொந்திரவா இருக்கும்னு இல்லாம அடிக்கடி கதவை திறந்து உள்ளே வருவதும் போவதுமா இருந்துச்சு.

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா நம்ம வீட்டு பிள்ளை இப்படி இருக்குமோன்னு யாரும் நினைச்சு பார்ப்பதே இல்லையோன்னு ஒரு எண்ணம். நம்ம பிள்ளைகளுக்கு நாம என்ன சொல்லிக்கொடுத்து வளர்க்கறோம்? புரிதல், விட்டுக்கொடுத்தல், பெரியவர்களை மதித்தல் இதெல்லாம் சொல்லி கொடுத்திருக்கோமான்னு நம்மளை நாமே அலசி பாத்துக்கறது நல்லது. தாத்தா பாட்டிகள் செல்லத்தால பிள்ளைகள் கெடுதுன்னு ஒரு சாரார் சொன்னாலும், தாத்தா பாட்டிகளை எத்தனை பேரப்பிள்ளைங்க மதிப்பா நடத்தறாங்க? சொன்ன பேச்சை கேக்கறாங்க? இதெல்லாமும் தானே சொல்லி கொடுக்கணும். இதெல்லாம் ஸ்கூல்ல சொல்லி கொடுக்க மாட்டாங்க. நாம தான் செய்யணும்.

சம்மர் கேம்ப்புக்கு பிள்ளைகளை சேர்த்துவிடுவதை விட்டுட்டு, நாம பக்கத்துல இருந்து இந்த லீவுல பிள்ளைகளை சரியா முறைப்படுத்த முடியும். கேட்ஜட்களை தள்ளி வெச்சிட்டு, புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், தாயம், நொண்டி விளையாட சொல்லி கொடுக்கறதுன்னு நிறைய்ய செய்யலாம். ஏன் சின்ன சின்னதா வீட்டு வேலை செய்ய பழக்கலாம். துணி காயப்போட்டு, மடிச்சு, இப்படி நிறைய்ய இருக்கு.  அப்ப சம்மர் லீவு என்பது பிள்ளைகளுக்கும் சுமையா இருக்காது. பெத்தவங்க நமக்கும் மேய்க்கும் கஷ்டம் இருக்காது.

தொடரும்......

Saturday, April 16, 2016

சம்மர் லீவு- பார்ட் 1

ஏப்ரல் 16 தேதிக்கு வந்தாச்சு. இனி ஸ்கூல் லீவு தான். எப்படா லீவு விடுவாங்க எந்த ஊருக்கு போகலாம்னு ப்ளானிங் எல்லாம் பலமா இருக்கும். சிலர் பிறந்த வீட்டுக்கு போய் வர இந்த சமயம் தான் கிடைக்கும். உறவுகளை  பார்த்து கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்திட்டு வர இந்த லீவுதான் எல்லோருக்கும் வசதி. பிள்ளைகளுக்கும் படிப்பு டென்ஷன் இல்லாம ரிலாக்ஸ்டாக இருக்க உதவும். ஒரே ஒட்டமா ஓடிக்கிட்டு இருக்கறப்ப கொஞ்சம் ஓய்வெடுக்கவும் அவசியம் தான்.

நாம பொதுவா லீவுக்கு ஊருக்கு போறதுன்னா சொந்த பந்தங்கள் இருக்கற ஊரைத்தான் மொதல்ல கிளிக் செய்வோம். தங்கறதுக்கு இடமிருக்கு. ஊர் சுத்தி பாக்குற செலவு மட்டும்தான்னு யோசிப்போம். ஆனா நாம ஒரு விஷயம் மறந்திருப்போம். அடிக்கடி அதே ஊருக்கு போறவங்களா இருந்தோம்னா நமக்கு மட்டுமல்ல அவங்களுக்கும் லீவு விடறாங்களா இவங்க இங்க வந்திடுவாங்கன்னு ஒரு எண்ணம் வர வாய்ப்பிருக்கும். சிலர் வெளிய சொல்லாம இன்முகத்தோட விருந்தோம்பல் செஞ்சு அனுப்புவாங்க. சிலர் முணுமுனுத்துக்கிட்டு செய்வாங்க.  விருந்தாளி வந்தா அதுவும் குடும்பத்தோட போனா செய்ய அவங்களுக்கு கஷ்டம் இருக்கும். இந்த வேகாத வெயில்ல நம்ம வீட்டு கிச்சன்ல நின்னு நாலு பேருக்கு சமைப்பதே கஷ்டம். இதுல விருந்தாளியும் வந்தா எப்படி இருக்கும்.

அதுலயும் சிலருக்கு ஒரு பாலிசி இருக்கும். ஆணா இருந்தா வீட்டை விட்டு வெளிய கிளம்பினா நம்ம பர்ஸை ஒபன் செய்யக்கூடாது. (சிலர் பாவம் ஓவரா செலவு செஞ்சு அவஸ்தை படறதும் உண்டு) பெண்கள்னா சமையல்கட்டு பக்கம் எட்டி பாக்க கூடாது. இப்படி இருந்தா ரொம்ப கஷ்டம்.  வந்தவங்கள ஊர் சுத்தி பாக்க கூட்டிகிட்டு போகணும். அதுவும் லோக்கல் ஆளுங்க நாம கூட வரணும்னு எதிர் பார்ப்பாங்க. ஆனா இந்த கிச்சன் வேலையை பகிர்ந்துக்கணும்னு நினைக்க மாட்டாங்க. கூடமாட உதவி செஞ்சா வீட்டுல இருக்கற பெண்களுக்கு உதவியாய் இருக்கும். அவங்க கூடவே வெளியில சுத்திட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் காபியோ இரவு சாப்பாடோ உடனே ஏற்பாடு செய்யணும்னா எப்படி இருக்கும்?

என்னோட அனுபவம் வேற மாதிரி :) ஒரு சமயம் பத்து பேர் வந்திருந்தாங்க வீட்டுக்கு. அதுக்கு தக்க என்ன சமைக்கலாமோ அந்த மாதிரி ப்ளான் செஞ்சு சமைச்சேன். கூடவே எல்லா இடத்துக்கும் வரணும்னு சொன்னப்ப என்னால அப்படி வர முடியாது, சாப்பாடு அரேஞ்ச் செய்யணும்னு சொல்லிட்டேன். எப்படி போகணும், என்னென்ன பாக்கணும் எல்லாம் சொல்லி கொடுத்து அனுப்பினேன். எந்த பிரச்சனையும் இல்லாம போய்கிட்டு இருந்தது. என்ன தோணிச்சோ என்னவோ திடும்னு நான் கிச்சன்ல ஹெல்ப் செய்யறேன்னு வந்தாங்க. ராத்திரிக்கு சப்பாத்தி செய்வோம்னு சொல்ல, என்னால இத்தனை பேருக்கு செய்ய முடியாது. கைவலி இருக்குன்னு சொல்ல, நான் இட்டுத்தர்றேன் நீ சுட்டுத்தள்ளுன்னு சொல்லிட்டு ஒரு கிலோ மாவு பிசைஞ்சாச்சு.

திடும்னு அவங்களுக்கு ஏதோ பர்ச்சேஸ் செய்ய யோசனை வந்து நான் கடைக்கு போறேன்னு கிளம்பிட்டாங்க. கைவலியோட அத்தனை சப்பாத்தி தனியா செஞ்சு அவதி பட்டது தனிக்கதை. இப்படி நம்மளை பத்தி கவலைப்படாத விருந்தாளிகள் வந்தாக்க வீட்டுல இருக்கற நம்ம நிலமை என்ன ஆகும். அதே மாதிரி நாமளும் அடுத்தவங்களுக்கு தொல்லை கொடுக்கறோமான்னு யோசிச்சு பாத்திருப்போமா!!!

சரி அதுக்காக யார் வீட்டுக்கும் போகமலா இருக்க முடியும்? உறவுகள் வேணுமே. அதுக்கு தான் நானும் அயித்தானும் ஒரு ப்ளான் செஞ்சோம். எந்த ஊருக்கு போறதா இருந்தாலும் பட்ஜட் போட்டு அந்த ஊர்ல ஹோட்டல்ல தங்கிடறது. உறவினர் வீட்டுக்கு ஒரே ஒரு நாள் விசிட் அடிச்சு டின்னரோ, லஞ்சோ சாப்பிடறது. அப்புறம் அவங்களையும் வெளிய ஒரு நாள் அழைச்சுகிட்டு போறது. இதனால எங்களுக்கு தேவையான ரெஸ்ட் கிடைக்குது. ( வீட்டுல தங்க வந்துட்டோம் அப்படிங்கறதாலயே வீட்டு வேலை செய்ய வெச்சு பெண்டு கழட்டிட்டாங்க சில உறவூஸ் அதனால வந்த எக்ஸ்பீரியன்ஸ்) அவங்களும் நாம வந்திட்டோம்னு ஜெர்க் ஆவுறதில்லை.

எல்லோருக்கும் இது சாத்தியமான்னு கேக்கலாம்? ப்ராக்டிகலா யோசிச்சா நாம செலவு செஞ்சு தங்கும்போது அதிக நாள் தங்காம என்னென்ன பாக்கணும், எப்படி போகணும் எல்லாம் ப்ளான் செஞ்சு அதுக்கு தக்க அரேஞ்ச் செஞ்சிட்டு போகும்போது எல்லாம் பட்ஜட்ல முடிக்க முடியும். கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம். ஆனா டூர் போகன்னு ப்ளான் செஞ்சு பணத்தை கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சு வெச்சு டூர் ப்ளான் போகலாம். இதனால நாம நிறைய்ய இடங்களை பார்க்க முடியும். தங்குறதுக்கு உறவுகள் இருக்கற ஊர் மட்டும்தான் போவோம்னு இல்லாம மத்த இடங்களையும் பார்க்கலாம்.

இன்னும் நிறைய்ய பேச இருக்கு. தொடரும்.......


Friday, January 29, 2016

வீடு

சென்னைக்கு மிக அருகிலேன்னு கூவி விக்கறவங்க ஆகட்டும், குறைஞ்ச விலையில எல்லா வசதிகளுடனும்னு கூப்பிடறவங்க ஆகட்டும் எல்லாரும் டார்கட் செய்வது தனக்குன்னு ஒரு சொந்த வீடாவது வேணும்னு நினைக்கற மக்களுக்காகத்தான்.அது ஏன் சொந்த வீடு வாங்கணும்? வாடகை வீட்டுலயே இருந்திடக்கூடாதான்னு சிலர் நினைக்கலாம்.

வாடகை வீடுன்னு வரும்போது பலருக்கும் பலவிதமான அனுபவங்கள் தான். ஹவுஸ் ஓனர் எனப் படுபவர் போடும் கண்டீஷன்கள், இப்போ ஒண்டுகுடித்தன வீடுகள் இல்லைன்னாலும் அப்பார்ட்மெண்ட்களில் ஒவ்வொரு ரகம். ஏதோ அவங்க சொத்தை நமக்கு இலவசமா கொடுத்திட்டா மாதிரியான முகபாவம், பேசும் தோரணை இதெல்லாம் தான். அதுவும் இந்த அப்பார்ட்மெண்ட்களில் வாடகைகாரர்கள் சந்திக்கற முக்கியமான பிரச்சனை அசோஷியஷன் மீட்டிங்குக்கு அவங்க அழைக்கப்பட மாட்டாங்க. காரணம் சொந்த வீட்டுக்காரங்க மட்டும் தான் அலவ்ட் யூ சி.  ஹவுஸ் ஓனர் வாடகைக்கு இருப்பவங்க கஷ்ட நஷ்டத்தை புரிஞ்சிக்கற மனுஷனா (மனுஷியா) இருந்துட்டா சரி. இல்லாட்டி அதோகதிதான்.  குடியிருக்கறவங்க கஷ்டத்தை சொல்லிக்க முடியாது சொன்னா தீர்வும் இருக்காது.

 எத்தனையோ பிரச்சனைகள் வாடகை வீட்டு காரங்களுக்கு. சில வாடகைக்காரங்க வீட்டுக்காரங்களை  ரொம்ப கஷ்டபடுத்தறதும் உண்டு. அது தனிக்கிளைக்கதை. ( வீடு காலி செய்ய சொன்னா வேற யாரும் வாடகைக்கு கிடைக்க மாட்டாங்களோன்னு நினைக்கற ஹவுஸ் ஓனரை சிக்கிட்டாண்டா அடிமைன்னு முடிவு கட்டி படுத்தி எடுக்கற வாடகைக்கு இருக்கறவங்களை பார்த்திருக்கேன்.

இந்த கஷ்டத்துக்கெல்லாம் ஒரு விடிவா இருக்கட்டும்னு தான் “எலி வலையானலும் தனிவலைன்னு “ ஒரு சொந்த வீட்டை வாங்கிடணுனு ஒவ்வொருத்தரும் துடிக்கறது. இவங்களுக்கு வாடகையா கொடுக்கற காசோட கொஞ்சம் கூட போட்டு இஎம் ஐ கட்டிட்டா 20 வருஷத்துல கடன் தீர்ந்திடப்போகுது, வீடு நமக்கு சொந்தமாகிடும்னு ஒரு திட்டம் தான்.   கிரஹப்ரவேசத்துக்கு பத்திரிகை வைக்க போன நண்பர் ஒருவருக்கு அவங்க உறவினர் “ பெரிய்ய லெவல்ல கடன்காரன் ஆகிட்டன்னு சொல்லுன்னு” ஜெர்க் கொடுத்திருக்காரு.  கடன் இல்லாம வீடு கட்டுறது, கடன் இல்லாம கல்யாணம் செய்யறது இரண்டும் நடக்க கூடியதே இல்லை.  கைல காசு சேத்துதான் வீடு வாங்கணும்னு உக்காந்திருந்தா எப்படி வீடு வாங்க முடியும். நாம பணம் சேர்த்துக்கிட்டே இருந்தா ரேட்டு ஏறிக்கிட்டே போகும். இந்த வீட்டுக்கடன் வாங்கறதுல இன்னொரு வசதி இன்கம்டேக்ஸ் எம்ஸம்ப்ஷன் கொஞ்சம் கிடைக்கும்.  அதை வட்டியா கட்டறதா நினைச்சுக்கிட்டுத்தான் பலரும் லோன் போட்டு வீடு வாங்கறாங்க.

சொந்த வீடு வெச்சிருக்கறவங்க அவங்களே அங்க இருந்திட்டா ஓகே. வாடகைக்கு விட்டா ஆகா அது ஒரு விதமான இம்சை. :) நாம வாடகைக்கு இருக்கும்போது வாடகைப்பணம் ஒழுங்கா கொடுக்கணும், மெயிண்டனென்ஸ் கரெக்டான தேதில கட்டணும், கப்போர்ட் உடைஞ்சிருந்தா சரி செஞ்சு கொடுக்கணும், வீடு காலி செஞ்சு போகும்போது வீட்டை சுத்தமா செஞ்சு வெள்ளை அடிச்சு கொடுக்கணும். ஆனா நாம ஹவுஸ் ஓனர் ஆகும்போது வருவாங்க பாருங்க ஒவ்வொருத்தங்களும் மாஸ்டர் பீஸ்.

பைப் ரிப்பேர், பல்ப் போச்சு, ஃபேன் ரிப்பேர், வாஷ் பேசின் உடைஞ்சு போச்சு இப்படி ஏகப்பட்ட செலவு வைப்பாங்க. நாம என்னதான் அக்ரிமெண்ட்ல எழுதியிருந்தாலும் அதெல்லாம் நடக்காது. வீடு காலி செஞ்சிட்டு போகும்போது குப்பையா போட்டுட்டு போவாங்க. கப்போர்ட் கதவு தொங்கும். இந்த முன்பணம் இருக்கோ ஹவுஸ் ஓனர்ஸ் தப்பிச்சாங்க. இதைத்தவிர ப்ராபர்ட்டி டேக்ஸ் கட்டணும். வீட்டுல இருக்கறவங்களால அண்டை அசலாருக்கு பிரச்சனை இல்லாம இருக்கணும், மாசம் தவறாம ஒழுங்கா வாடகைப்பணம் வாங்கணும். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். ம்முடியல.

மொத்தத்துல சொந்த வீடோ வாடகை வீடோ  ”வீட்டுக்கு வீடு வாசப்படி தான்”