Showing posts with label குழந்தைகள் சைக்காலஜி. Show all posts
Showing posts with label குழந்தைகள் சைக்காலஜி. Show all posts

Wednesday, January 30, 2013

புரிந்துகொள்வோம் குழந்தைகளை - பாகம் 2

குழந்தைக்கு பெரிதாக என்னத்தேவை இருந்துவிடப்போகிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் குழந்தைகள் என்பதாலேயே அவர்களின் தேவையை நாம் பெரிது படுத்துவதில்லை. ஆனால் குழந்தையின் தேவையை பூர்த்தி செய்வதுதான் நம் முதல் வேலையாக இருக்க வேண்டும்.

 நல்ல சுற்றுபுறச்சூழலை அமைத்து கொடுக்க வேண்டியது நம் கடமை. சுத்தமான சுகாதாரமான சூழலை அமைத்து கொடுப்பதனால் குழந்தை நோய்வாய்ப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுகிறது. குழந்தை பிறந்த நொடியிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த சுகாதார தேவை.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இது சாதரணமாகவே எல்லோருக்கும் பொதுவான தேவை. குழந்தைகள் சரியான போஷாக்கான உணவை உண்கிறார்களா என்பதை கவனிப்பது அவசியம் அவர்களின் வளர்ச்சியில் அவர்கள் உண்ணும் உணவின் பங்களிப்பு அதிகம். வயிற்றுக்கு தேவையான சமச்சீரான உணவை , சரியான நேரத்தில் உண்ண பழக்குவது நம் கடமை. ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்களுக்கு அடிமைகளாமல் பழக்க வேண்டும். கூல்ட்ரிங்க்ஸ்கள் குழந்தைகளின் உடம்பை பதம் பார்ப்பது நமக்குத் தெரியாது.

சில குழந்தைகள் குளிர்காலமோ, மழைக்காலமோ ஐஸ்க்ரீம், ஃபிரிட்ஜில் வைத்த ஜூஸ் என எடுத்துக்கொள்வார்கள். வேண்டுமென பிடிவாதம் பிடிப்பதை பொறுக்க முடியாமல் பெற்றோரும் வாங்கிகொடுத்துவிடுவார்கள். விளைவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தையாக இருந்தால், மருத்துவமனை, மருந்து என ஜலதோஷத்திற்கு  சிகிச்சை பெற நேரிடும்.
குழந்தைக்கு தெரியாது என்பதால் நாம் தான் எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். கூடிய மட்டும் ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்றவற்றை வாங்கி ஸ்டாக் வைக்காமல் இருப்பதும், கேட்டால் கூட வாங்கிக்கொடுக்காமல் இருப்பதும் நலம். மருந்துகளின் பக்கவிளைவுகள் பாதிக்கும்.

குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவரிடம் அழைத்து செல்கிறோம்,  குழந்தை என்ன சாப்பிடலாம் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து உணவு கொடுப்பது முக்கியம்.


 குழந்தைகள் பள்ளி செல்லும் முன் காலை உணவை சாப்பிட்டு செல்வதை கட்டாய பழக்கமாக்க வேண்டும். காலை உணவு எடுத்துக்கொள்ளாத குழந்தைகளின் கவனம் படிப்பில் குறைவாகவே இருக்கும். பால், பழங்கள் கூட சரி.  இது மிக முக்கியமான தேவை. குழந்தைக்கு தேவையென தெரியாது. தவிர்த்துவிடும்.

குழந்தைகள் தன் வேலையை தானே செய்து கொள்ளும் வகையில் பழக்கப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட வயது வந்ததும் தானே சாப்பிடவும், உடை மாற்றவும்,  ஷூ அணிதல் ஆகியவற்றை செய்து கொள்ள பழக்க வேண்டும். தனது உடமைகளை தான் பேணிகாப்பது எப்படி என்றும் சொல்லி கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுக்கவே நேரம் சரியாக இருக்கும், இன்றைய சூழலில் வீட்டில் குழந்தைகளுக்கு நீதிபோதனையை கதைகளாகவது அடிக்கடி சொல்லி கொடுப்பது அவசியம். இது பற்றிய முந்தைய பதிவு.

எந்த வயது குழந்தையும் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது அன்பையும் அரவணைப்பையும் தான். நம் கோபதாபங்களை பிள்ளையின் மீது காட்டக்கூடாது. அவர்கள் முன் வீட்டுப்பெரியவர்கள் சண்டை போடுவதும் அரவே கூடாது. இவை குழந்தைகளுக்கு மன உளைச்சலை கொடுத்து அவர்களின் வளர்ச்சியை தடை செய்யும். குழந்தைகளுக்கு நம் மன உளைச்சல், பிரச்சனைகள் பெரிதாக புரியாவிட்டாலும், நமது உடல்மொழியால் அவர்கள் அதை உணர்ந்து கொள்வார்கள்.


குழந்தை வேண்டும் என கேட்கும் எதையும் உடனடியாக வாங்கிக்கொடுத்தால் பிடிவாதம் அதிகமாகும். அவசியம் பார்த்து (நியாயமான கோரிக்கையாக இருந்தால் உடனடியாகவும், தேவை குறைவு என்றால் பேசி புரியவைக்க வேண்டும். சில பிள்ளைகள் வேண்டியது கிடைக்காவிட்டால் கடை என்று கூட பார்க்காமல் விழுந்து புரண்டு அழுவார்கள். பிடிவாதத்திற்கு இடம் கொடாமல் வளர்ப்பது பெற்றோர் கையில்தான் இருக்கிறது.

அன்பை விதைத்தால் அன்பைத்தான் அறுவடை செய்வோம். அதனால் குழந்தைக்கு 100% பரிசுத்தமான அன்பை கொடுத்தோமேயானால், நமக்கும் அந்த அன்பு திரும்ப கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வு, நல்ல போதனைகள் ஆகியவற்றை கொடுப்பது மிக முக்கியமானது.




Thursday, January 24, 2013

புரிந்துகொள்வோம் வாருங்கள் - குழந்தையை!!!-1

பெற்றோருக்கு எந்த வயதுப்பிள்ளையும் குழந்தைதான். அந்தக்குழந்தையின் நல்லபடியாக பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து, கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து, என ஒவ்வொரு வயதிலும் ஒரு ரகமாக அவர்களுடன் நம் பயணம் இருக்கும். ஒவ்வொரு வயதிலும் பிரச்சனை ஒவ்வொரு ரகமாக இருக்கும். அவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.


 சின்னக்குழந்தைக்கு என்ன பிரச்சனை என்றோ, டீன் ஏஜ்ல என்ன படிப்புல கான்சண்ட்ரேட் பண்ணாம என்றோ இருந்துவிட முடியாத விடயம் பிள்ளை வளர்ப்பு. குழந்தை வளர்ப்பின் மிக முக்கியமான நிகழ்வாக குழந்தையை புரிந்துக்கொள்வதை சொல்லலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகம் என்பதால் புரிந்து கொண்டால் தவிர அந்தக்குழந்தையின் வளர்ச்சியில் நம்மால் முழு பங்கு எடுத்துக்கொள்ள முடியாது.

 பெற்றோருக்கும் குழந்தைக்குமான உறவு: பெற்றோரும் குழந்தையுமே உறவுதானே!! இதுல என்ன தனியாக இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். ஒவ்வொரு உறவிலும் ஒரு தனித்தன்மை. அதை பேணிக்காக்க வேண்டும். கணவன் - மனைவி உறவுக்குள் அந்த புரிதல், பேணல் இல்லாவிட்டால் வாழ்வில் ஜீவனே இருக்காது. அது போலத்தான் பெற்றோர்- குழந்தை உறவு.

அன்பு - இது எந்த உறவுக்கும் தேவையான விஷயம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே கலப்படமில்லாத அன்பு இருக்க வேண்டும். திகட்ட திகட்ட அன்பை கொடுக்கும் அதே வேளையில் அன்பு எனும் பெயரால் பிள்ளைகளை கெடுத்துவிடவும் கூடாது. தவறைத் திருத்தி, பாராட்டி, என சமமாக அன்பு இருக்க வேண்டும். எதைக்கொடுத்தும் நிவர்த்தி செய்து விட முடியாத அளக்க முடியாத அன்பை குழந்தைக்கு கொடுப்பதை விட சிறந்தது வேறெதுவும் இருக்காது.

கேட்டதை உடனே வாங்கி கொடுப்பதோ, கேட்காததையும் முன் கூட்டியே வாங்கி கொடுப்பதோ அன்பாகாது. அது அவர்களை கெடுத்து விடும்.
 அன்பு  காட்டும்  அதே சமயம்  நாம் குழந்தைகளுக்கு தேவையான நீதி போதனைகளை, ஒழுக்கத்தை, நல்லெண்ணத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அதை தவற விட்டால் ரொம்ப கஷ்டம். 5 வளையாதது 50ல் வளையாது!!

இளம்ப்ராயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் ரோல்மாடல். எதற்கெடுத்தாலும் பெற்றோரிடம் தான் ஓடிவருவார்கள். அந்தச் சமயத்தில் நாம் நம் குழந்தையை எப்படி இருக்க வேண்டும் என ஆசைபடுகிறோமோ அப்படி நாம் அவர்கள் முன் நடந்து கொள்ள வேண்டும். கற்றல் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. பெற்றோர்தான் சிறந்த முன்னுதாரணம் என்பதை நாம் மறக்க கூடாது. அதே நேரம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளும் அளவளாவ வேண்டும். அதுதான் முக்கியம். குழந்தைகளுடன் செலவிடும் அந்த நேரம் அவர்கள் மனதில் பாசத்தை உண்டு செய்யும்.


வாரி எடுத்து அணைப்பது என்பது அன்பின் வெளிப்பாடு. வயது ஆக ஆக அது குறைந்துவிடாமல் என்றும் குழந்தைக்கு நம் ஸ்பரிசத்தை தந்தால் குழந்தை பாதுகாப்பாக, கதகதப்பாக உணரும் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளரும்.

அவர்களின் பேச்சை பொறுமையாக கேட்க வேண்டும். நாம் சொல்வதை பெற்றோர் காதுகொடுத்து கேட்கிறார்கள் எனும் எண்ணம் அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை தரும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு அலுத்து கொள்ளாமல் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு பதில் சொல்வது அவசியம். குழந்தைகளிடம் பொறுமை இழந்து கத்துவது கூடவே கொடாது.
பொறுமையாகத்தான் அவர்களை கையாள வேண்டும்.

குழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக நம் பேச்சு இருக்கவேண்டும்.
அவர்களிடம் பேசுவது, அவர்கள் பேசுவதை நாம் கேட்பது என இருவருக்குமிடையே ஆன கருத்து பரிமாற்றம் எப்போதும் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும்.


வெளியிடங்களில் பிள்ளைகள் பலவிதமான எதிர்மறைக்கருத்துக்களை கேட்கநேர்கிறது. பள்ளியில், விளையாட்டில் என ஈடுபடும் பொழுது பாராட்டு அவசியமாகிறது. பெற்றோர் பாராட்டி ஊக்குவித்தால்தான் குழந்தை தன் முயற்சியை விடாமல் செய்யும் பக்குவத்தை அடையும். ஞாபகமிருக்க வேண்டிய விஷயம். பெற்றோரின் பாராட்டு ஓவர் டோஸாக போய்விடக்கூடாது. “தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்” என்பதனால் தூக்க மருந்து ஓவர் டோஸாகிடாமல் ஊக்கமருந்தாக அவர்களை முன்னேறச்செய்யும் அளவுக்கு இருக்கட்டும்.

பிள்ளைகள் தவறு செய்தால் மிதமான கண்டிப்புடன் புரிய வைக்க வேண்டும். நல்லது எது கெட்டது எது என புரியவைப்பது அவசியம். ஏன் நல்லபாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி புரியவைப்பது அவசியம். ஆனால் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்ககூடாது. அவர்கள் பிள்ளைகள்!!


”நீ ஒரு முட்டாள்!” “ உனக்கு ஒன்றும் தெரியாது!” போன்ற எதிர்மறையான வார்த்தை ப்ரயோகங்களை தவிர்ப்பது நலம். இது குழந்தையின் மனதில் அதீத பாதிப்பை உண்டு செய்துவிடும். மாறாக “ நான் உன்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால்!!” என்று “இப்படி செய்தால் மகிழ்ச்சியாக இருக்கு” என்றோ சொல்வதனால் மாற்றங்கள் நிகழ வாய்ப்புக்கள் அதிகம்.




 அடுத்த பதிவு குழந்தைக்கு என்ன தேவை? (அடுத்த வாரம் )
இனி ஒவ்வொரு புதன்கிழமையும் சைக்காலஜி பதிவுகள் வெளிவரும் என்பதை தெரிவித்திக்கொள்கிறேன்.