Showing posts with label பத்ராசலம். Show all posts
Showing posts with label பத்ராசலம். Show all posts

Thursday, October 02, 2008

பத்ராசலம், பர்ணசாலை புகைப்படங்கள்

இதோ பத்ராசலம் கோவிலின் நுழை வாயில் மற்றும்
கோபுரம்.
உள்ளே பிராகாரத்தில் இருக்கும் கோபுரம் புகைப்படம்
எடுக்க அனுமதி இல்லை. மூல விக்ரகம் இருக்கும்
அந்த இடத்தின் மேலிருக்கு கோபுரத்தில் சக்கரம்
வைக்கப்பட்டுள்ளது)





கோவிலினுள் ராமதாஸ் அவர்கள் செய்து தந்த
ஆபரணங்களின் கண்காட்சி, லட்சுமி கொவில்,
பத்ரசரணம்(ஸ்ரீராமன் வந்து நின்ற பாறையில்
அவரின் பதகமலங்கள், ஆஞ்சநேயர் கோவில்
ஆகியவை இருக்கின்றன.)


பக்தனுக்காக ஓடி வந்த பரந்தாமன் தன் துணைவியை
மடியில் இருத்தி, தம்பி லட்சுமணனுடன் காட்சி
அளிக்கிறார்.





அங்கிருந்து நேராக நாங்கள் சென்றது 35 கி.மீ
தூரத்தில் இருக்கும் பர்ணசாலைக்கு.

வனவாசம் வந்த ராமர் இங்குதான் கூடாரம்
அமைத்து இருந்தார். கூடாரம் இருந்த இடத்தில்
கோவில் கட்டியிருக்கிறார்கள்.






சூர்ப்பனகையின் மூக்கறுத்தது, மாயமானைத் தேடிச்
சென்றது, ராவணன் சீதையை கவர்ந்து
சென்றது, எல்லாம் இங்கேதான் நடந்தது.




பர்ணசாலைக்கு கொஞ்சம் அருகில் சீதை அம்மா குளித்து
புடவையைக் காயவைத்த இடம் இருக்கிறது.
(”அந்த 5 நாட்களை” தாயார் இங்குதான் கழித்தாராம்)




சூர்ப்பணகை இல்லாவிட்டால் ராமாயணமே இருந்திருக்காது.
ராமர் பட்ட கஷ்டம் நாம் படக்கூடாது என்பதற்காக
இடது கையால் 3 கல் எடுத்து வேண்டிக்கொண்டு
சூர்ப்பணகை மூக்கறுக்கப்பட்ட இடத்தில் வீசி அடித்த
கற்கள் சூர்ப்பணகை கோட்டையாக இருக்கிறது.



நேரமின்மையால் ஜடாயு ராவணனுடன் போரிட்டு
உயிர் நீத்த இடத்திற்கு செல்ல இயலவில்லை.

கோவில் ப்ரசாதம் இப்பப்பூ( ஒரு வகைப் பூ மரத்திலிருந்து
விழுவது. சித்தரத்தையை வெல்லத்துடன் சேர்த்து
உண்ணும் சுவையில் இருக்கிறது இப்பூ) லட்டு,
கல்கண்டு.


தெலுங்கு எழுத்துக்களில் ஸ்ரீராமா என்று எழுதப்பட்டு
அந்த வடிவத்தில் புல் வளர்த்திருக்கிறார்கள்.



ராமசந்திராய ஜனகா ராஜஜா மனோகராய்
கீத சித்ர வரப்ரதாய சர்வ மங்களம்

பக்த ராமதாஸ்

சபரியின் பரம்பரையைச் சேர்ந்த பொக்கல தம்மக்கா அவர்களின்
கனவில் இறைவன் தோன்றி தான் அடர்ந்த வனத்தில் இருப்பதாக
சொல்லியிருக்கிறார். மண்ணில் புதையுண்டு கிடந்த ராமனை
வெளியே எடுத்து பனைமரத்தின் அடியில் கீரை வேய்ந்து
கோயில் அமைத்து ஆராதித்து வந்தார்.

இவர்தான் அரசு வேலையாக வந்த ராமதாஸிற்கு ராமரைக்
காட்டினார். அவரிடமிருந்து ராமதாஸ் அந்த பொறுப்பை
ஏற்றார்.

ராமதாஸின் இயற்பெயர் ஸ்ரீ கான்செர்ல கோபண்ணா.
(1630 A.D)கோல்கொண்டா மஹாராஜா தானிஷா அவர்களின்
அரசாங்க அதிகாரியாக ”பலவஞ்சா” (பத்ராசலத்திற்கு
அருகில் இருக்கிறது) வருவாய்களை வசூலித்து வந்தார்.

ராம பக்தி மிகுந்த அவரிடம் தான் மண்ணில் கண்டெடுத்த
ராமரைப் பற்றி தம்மக்கா சொல்கிறார். உடனே
ராமருக்கு கோவில் கட்ட ஏற்பாடு செய்கிறார்.
காஞ்சிபுரத்திலிருந்து 5 வைணவ பூஜாரிகளை அழைத்து
வந்து ஆகம் முறைப்படி பூஜை ஏற்பாடுகள் நடக்க
வழி செய்தார்.




சிறந்த அறிவாளியான கோபண்ணா பல பாடல்களை
ராமரின் மேல் பாடியிருக்கிறார். “தாசர சத்கம்” என்று
புகழ் பெற்றிருக்கின்றன.

ராமாலயத்திற்காக அரசு நிதையை செலவழித்து
செவ்வனே செய்ததனால் அரசவைக்கு செல்ல வேண்டிய
நிதிகள் பல நாட்களாக வராததை கண்ட தானிஷா
விசாரித்து ராமதாஸரை கோல்கொண்டா
சிறையில் அடைக்கிறார்.

சிறையில் படும் சித்ரஹிம்சைகளை பாடல்களாக
பாடுகிறார்.

இக்சுவாகு குல திலக - எனும் பாடலில்
பரதனுக்கு செய்த “பச்சாகு பதக்கம்”
சீதாவிற்கு செய்த “சிந்தாகு பதக்கம்”
இவையெல்லாம் யார் செய்தார்கள்.
உன் அப்பனா, இல்லை மாமனா
நான் தானே செய்தேன்.செய்து
கொடுத்ததைப் போட்டுக்கொண்டு
ஒய்யாரமாக திரிந்தாயே! இப்போது
என்னை வந்து காப்பாற்றக் கூடாதா
என்று கேட்பார். மிக அருமையான பாடல்.

”நனு ப்ரோவமனி சொப்பவே சீதம்ம தல்லி”
(எனைக் காப்பாற்றும் படி சொல்லம்மா
சீதம்மா) என்று அவர் பாடியதும் சீதை
ராமனிடம் சொல்லி,” இப்படி இவரை
வதைப்பது தாங்காது” என்று கூற

சிரித்த வண்ணம் ராமர் பதிலுறுக்கிறார்.
“சுதந்திரமாக திரிந்த கிளியை பிடித்து
கூண்டில் அடைத்தான் கோபண்ணா.
அந்தப் பாவத்தைத்தான் இப்போது
அனுபவிக்கிறான். தெரிந்து செய்தாலும்
தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான்”
என்று கூறி காவலாளிப் போல் தானிஷாவின்
படுக்கை அறையில் தோன்றி அரசவைக்கு சேரவேண்டிய
பணத்தை கொடுத்து ரசீதும் வாங்கிக் கொண்டு
வந்து அந்த ரசீதை சிறையில் இருக்கும்
ராமதாஸ் அவர்களின் தலையணைக்கு அடியில்
வைத்து விட்டு மறைகிறார்.

காலையில் விழுந்தடித்துக்கொண்டு வந்த
தானிஷா ராமதாஸின் பாதங்களில் வணங்கி
மன்னிக்க வேண்டுகிறார். அந்த தாலுக்காவில்
சேரும் பணம் கோவிலுக்கு செலவு செய்ய
உத்தரவிடுகிறார்.

பத்ராசலத்திற்கு திரும்பி வந்த ராமதாஸ்
கோவில் பணிகள் செவ்வனே நடக்க
ஏதுவாக அனைத்தும் செய்கிறார். இதைக்
கேள்வி பட்ட மக்கள் பத்ராசலத்திற்கு
பயணம் செய்து பகவானை தரிசிக்க ஆரம்பித்தனர்.
ஸ்ரீராம நவமி வெகு விமரிசையாககொண்டாடுகின்றனர்.

இன்றும் கோவிலில் ராமதாஸ் அவர்கள் செய்து
கொடுத்த நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சீதம்மாவிற்கு செய்து கொடுத்த தாலி தான்
இன்றும் ஸ்ரீராம நவமி அன்று கோவிலில் நடக்கும்
கல்யானோற்சவத்தில் சாற்றப்படுகிறது.

Tuesday, September 30, 2008

பத்ராசலம்

பத்ராசலம்- எப்படி உருவானது? ராமர் அங்கே
எப்படி குடி கொண்டார். புராண,வரலாற்று
கதைகள் சிலவற்றைப் பார்ப்போமா!

சுழித்துக்கொண்டு அமைதியாக ஓடும் கோதாவரி கூட
ராமா! ராமா! என்று சொல்லிக்கொண்டு ஓடுகிறதோ
என்று தோன்றுகிறது.

ஸ்ரீராம நவமி அன்று பத்ராசலத்தில் நடக்கும்
கல்யாண உற்சவத்தைக் காண வரும் கூட்டமும்
கோதாவரி அளவுக்கு பெரிது.

திருப்பதி,உப்பிலியப்பன் , ஸ்ரீரங்கம் ஆகிய
கோவில்களிலிருந்து கூட சீதா ராம கல்யாணத்திற்கு
புடவை, வேஷ்டி பத்ராசல ராமனுக்கு அனுப்பி
வைக்கப்படுகிறது.

பிரம்மானந்த புராணதில் கொளதமி மகாத்யமத்தில்
பத்ராசலத்தைப் பற்றியும் பத்ராசல ராமரைப் பற்றியும்
கூறப்பட்டுள்ளது.

ஆண் மகவை வேண்டி மேரு மலையும்
அவரின் மனைவி மேருதேவியும்
பலவருடம் தவம் இருந்தனர். அவர்களின்
மகன் தான் ”பத்ரா”.

அரக்கர்களிடமிருந்தும், வன விலங்குகளிடமிருந்தும்
தன்னைக் காத்துக்கொள்ள முனிவர்கள் தன்னை
உரு மாற்றிக்கொண்டு தவமிருப்பது வழக்கம்.

பத்ராவும் தன் இஷ்ட தெய்வமான ராமரை
நினைத்து தவம் புரிய ஆரம்பித்தான். பத்ரா
தன்னை ஒரு பெரிய பாறையாக மாற்றிக்கொண்டு
கோதாவரிக் கரையில் தண்டக
வனத்தில் தவமிருந்தார்.

வனவாசத்திற்காக தனது மனைவி மற்றும் தம்பி
லட்சுமணனுடன் தண்டக வனத்திற்கு வந்த
ஸ்ரீராமர் களைப்பாற ஒரு பாறையின் மீது
அமர்கிறார். அமர்ந்ததும் மனதுக்கு மிகவும்
மகிழ்ச்சியாக, தெய்வீகமாகவும் உணர்கிறார்.
ஞான திருஷ்டியின் பாறையாக இருப்பது
”பத்ரா” என்பதை உணர்ந்து அவரை
அழைக்கிறார்.

உண்மையான முனிவரான பத்ரா உடன்
ராமரின் பொற்பாதங்களை பணிகிறார். ராமர்
பத்ராவின் விருப்பத்தைக் கேட்கிறார்.

ராமர் தன் மேல் அமர்ந்து அனைவருக்கும்
தரிசனம் தந்து பக்தர்கள் செய்யும் அர்ச்சனையை
ஏற்று அவர்களுக்கு மோட்சம் அளிக்க
வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.




சந்தோஷமாக வரமளிக்கிறார் இறைவன்.
உடன் அந்தப் பாறையில் மடியில் சீதையை
இருத்தி நான்கு கரங்களுடன் கூடிய ராமரும்,
அண்ணலுக்கு துணையாக தம்பி லட்சுமணரும்
இருப்பது போல் சுயம்புவாக உருவாகிறது.






தண்டக வனத்தில் மற்றைய பகுதிகள்
காடாகவே இருக்கிறது. 1000 வருடங்களாக
இப்படி இருந்தது. தேவர்கள் வந்து பூஜித்து
சென்றனர்.

கோதாவரியில் குளித்து, விரதமிருந்து
ராம நவமி அன்று இறைவனுக்கு
அர்ச்சனை செய்து, ஏழைகளுக்கு அன்னமிட்டால்
போதும். சுலபமாக மோட்சம் அடைந்து
விடலாமாம்.

(இந்த தண்டக வனத்தில் தான் சீதையை
ராவணன் அபகரித்துச் சென்றது, ஜடாயு
போரிட்டு தனது உயிரைத் தியாகம் செய்தது,
சீதையை மீட்டுக்கொண்டு வந்த பிறகு
கடைசி 3 வருடங்கள் இங்கே தான் கழித்தார்களாம்.)



பத்ராசலம் உருவானது இப்படித்தான்.
மண்ணில் புதைந்து போன இறைவன்
எப்படி வெளியே வந்தான்? யார் கண்ணில் முதலில்
பட்டான்? அடுத்த பதிவுவரை காத்திருந்தால்
தெரிந்துகொள்ளலாமே
!