Showing posts with label parenting tips. Show all posts
Showing posts with label parenting tips. Show all posts

Sunday, January 03, 2016

பசங்க - 2 (எனது பார்வையில் )

வலையுலக நட்புக்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு அதுவும் ஒரு அழகான படத்துக்கு. சந்தோஷமா ஆரம்பிக்கறேன்.

 ஆஹா ஓஹோன்னு எதிர்பார்பெல்லாம இல்லாம தியேட்டருக்கு போனீங்கன்னா உங்களுக்குள்ள ஒரு மாற்றத்தோட வெளியில வருவீங்க. இதை எதிர் பார்த்துதான் டைரக்டர் பாண்டிராஜ் ( பசங்க படம் எடுத்த அதே புதுக்கோட்டை பாண்டிராஜ் தான்) இந்த படத்தை உருவாக்கியிருக்கார். முந்தைய படம் எங்க புதுகையில் நடக்கறாப்ல இருக்கும். ஸ்லாங்க் கூட அப்படியே வரும். இந்த படத்தோட களம் சிட்டி. நகர வாழ்க்கையில் இருக்கும் பிள்ளைகளின் பிரச்சனையை சொல்லியிருக்கார். கதைன்னு கேட்டா வழக்கமான ஒன்லைன். பிரச்சனையுடைய பிள்ளைகள், அது என்னன்னு தெரியாம, எப்படி ஹேண்டில் செய்ய தெரியாத பெற்றோர்கள் ரெண்டு பேருக்கும் நடக்கும் போராட்டம், அதற்கான தீர்வு இதுதான்.

 சுட்டி கவின் மற்றும் அவனுடைய பெற்றோர், குட்டி சுட்டி நயனா மற்றும் பெற்றோர் இவங்களுடன் டாக்டர் தமிழ்நாடனாக வரும் சூர்யா, அமலா பால் (வெண்பா டீச்சர்) இவங்க பிள்ளைங்க. இவங்களை சுத்திதான் கதை நகருது. கவினுக்கும் நயனாவுக்கும் ஒரே பிரச்சனை. ஒரு இடத்துல அவங்களால உட்கார முடியாது, குறும்பு சேட்டை, கவனக்குறைவு அதனால படிப்பு சுமார், இதனால பள்ளிகள் அப்பார்ட்மெண்ட்கள் மாற்றம்னு அவஸ்தை. அவங்களை ஹாஸ்டலில் போடுவதுதான் தீர்வுன்னு முடிவு செஞ்சு அதை அமுலாக்கற பெற்றோர். ஆனா அது தேவையில்லைன்னு தன்னுடைய அணுகுமுறையால புரிய வைக்கிறார் டாக்டர். தமிழ்நாடான்.


குழந்தைகளின் உலகம் வேற . அதுக்குள்ள நாம இருக்கணும். நானும் இந்த ஸ்டேஜெல்லாம் கடந்து தான் வந்திருக்கேன்லாம் சொல்லலாம். ஒவ்வொரு பிள்ளையும் வேறு. ஆனா பிசியா ஓடிக்கிட்டு இருக்கற பெற்றோருக்கு குழந்தைகளின் அழகு உலகை புரிஞ்சிக்க நேரம் இருக்கா என்பது கேள்விக்குறி தான்? அவங்களை புரிஞ்சிக்காம அவங்க அவஸ்தைகளை புரியாம பிள்ளைகளையே பிரச்சனையா பாக்கறது நடக்குது.

 ADHD நம்ம வலைப்பூல இதைப்பத்தி நிறைய்ய எழுதியிருக்கோம். குழந்தைகள் அதிகமா டீவி பார்க்க விடறது, மொபைல், ஐபேட், வீடியோ கேம்ஸ் அதிகமா உபயோகிப்பது இதெல்லாம் முக்கியமான காரணங்கள். இதைப்பத்தி கொஞ்சம் அதிகமா டாக்டரின் பார்வையிலாவது சொல்லியிருக்கலாம். ஆனா முக்கியமான பாயிண்டை பிடிச்சு சொன்னதற்காக டைரக்டருக்கு பூங்கொத்து கொடுக்கறேன்.

மாண்டிசோரி கல்வி முறையில 0-7 வருடங்கள் ரொம்ப முக்கியமானது. அப்படி பார்த்தா கரு உருவானது முதலே வளர்ச்சி துவங்குது. ரொம்ப முக்கியமான கட்டம் கருவறைப்பாடம் தான். தாய் என்ன சூழ்நிலையில் இருக்காங்க, கணவன் மனைவி உறவு எப்படி இருக்கு, என்ன சாப்பிடறாங்க, என்ன செய்யறாங்க, என்ன நிகழ்ச்சி பாக்கறாங்க, எதை விரும்பி செய்யறாங்க இதெல்லாம் குழந்தைக்கும் பாதிப்பு உண்டாக்கும். கருவிலேயே சக்கரவ்யூகத்துக்குள் போக கத்துக்கிட்ட அபிமன்யு, விஷ்ணுவின் கதையை கருவிலேயே கேட்டதால விஷ்ணு பக்தியுடன் பிறந்த பிரகலாதன் இவர்களை நினைவு படுத்திக்கணும்.

கவின், நயனா அம்மாக்கள் அவர்களை கருவுற்றிருந்த காலத்தில என்னென்ன செஞ்சாங்கன்னு காட்டியிருக்கார் டைரக்டர். அதை கவனிக்காம விட்டாங்கன்னா படத்தில் பிள்ளைகள் செய்யும் குறும்புக்கான புரியாம போயிடும். அப்புறம் படத்துல கதை என்ன? என்ன சொல்லவர்றாரு டைரக்டர்னு புரியாம போயிடும். பிள்ளைகள் நல்லவங்களா இருந்தாலும் கெட்டவங்களா இருந்தாலும் அளவோடு குறும்பு செஞ்சாலும், அளவுக்கதிகமா குறும்பு செஞ்சாலும், அடுத்த பிள்ளைகளை அடிப்பது, கடிப்பது இப்படி செஞ்சாலும் அது பெற்றோர் வளர்ப்பு குறைபாடுதான். ஆனா இதை பெற்றோர் சிலர் ஒத்துக்க மாட்டாங்க.

 குழந்தை பேறுங்கறதை செல்வம்னு சொல்வாங்க. பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது. அவர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு எடுத்து பாத்து பொறுப்பா செய்ய வேண்டிய விஷயம். அதை இந்தப்படம் இன்னொரு வாட்டி தெளிவா புரிய வெச்சிருக்கு. நல்ல சூழலை உருவாக்கி கொடுத்து, நாம ஒரு உதாரணமா அவங்களுக்கு வாழ்ந்து காட்டி, அவர்கள் உதவியோடு அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்த்து அனுபவித்து மகிழ்வது சுகம். இது தான் இப்போதைய அத்தியாவசிய தேவையும் கூட. HAPPY PARENTING. HAPPY NEW YEAR 2016

Thursday, May 21, 2015

நான் கேட்பது தப்பா??!!!!

உங்க கிட்ட கேட்காம யாருகிட்ட கேட்கிறது?!! நாம சின்ன குழந்தையா இருந்தப்ப வீட்டுல சில பொருட்கள் குழந்தைகள் கையில் எட்டாத இடத்துல வைப்பாங்க. மருந்து, கெரோசின், எண்ணெய்கள் தவிர, அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்களை எட்டாத உயரத்துல வெச்சிருவாங்க. பீரோவை திறந்து அதை அண்ணாந்து பாத்துக்கிட்டு இருப்போமே தவிர அதை கையால ஒரு போதும் தொட அனுமதி கிடையாது.

அந்த மாதிரி நம்ம பெற்றோர் இருந்தது தப்பேதுமில்லை. விலை ஜாஸ்தின்னு பிள்ளைக்குத் தெரியுமா. கைபட்டு உடைஞ்சு போய் இல்லை ரிப்பேர் ஆகின்னு ஆகிட்டா அதை சரி செய்ய செலவாகும். அதோட அருமை பிள்ளைகளுக்கு தெரியாது. அறியாத வயசுன்னு அந்த மாதிரி வளர்த்தாங்க.

ஆனா இப்பொழுதைய பிள்ளை வளர்ப்புல மட்டும் இதுல மாற்றத்தை பார்த்தேன். மாத்திரை, மருந்தெல்லாம் எட்டாம தூரமாத்தான் வைக்கறாங்க. ஆனா பிறந்த குழந்தை டீவி சத்தத்துக்கு தலைய திருப்பி பாத்ததெல்லாம் பழைய கதை. லேட்டஸ்ட் பிறந்த குழந்தை ஃபேஸ்புக் அக்கவுண்ட்டோட மட்டுமில்லை அதை எப்படி ஆப்பரேட் செய்வதுன்னு தெரிஞ்சுகிட்டே பிறக்கற மாதிரி இருக்கு.

மிகைப்படுத்தி ஏதும் சொல்லலீங்க. சில உறவினர்கள் மட்டும் நண்பர்கள் வீட்டில் நான் கண்டதை பத்தி தான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன். சின்ன குழந்தைகளுக்கெல்லாம் ஐபாட், டேப் தான். கேட்டா அதுக பாட்டுக்கு அதுல கேம்ஸ் விளையாடிகிட்டு இருப்பாங்க. பிரச்சனை ஏதுமில்லை. சாப்பாடு ஒழுங்கா உள்ள போகுதுன்னு அதுக்கு விளக்கம் வேற.

ஐபாட்லாம் என்ன விலை. ஐபாட் விடுங்க ஒரு டேப் குறைஞ்சது 16000. இம்புட்டு விலை கொடுத்து வாங்கி அதை பிள்ளைகள் கொடுப்பது நல்லதா???
காஸ்ட்லியான பொருள் என்பதோட மட்டுமில்லாமல் இதுக்கு பழக்க பட்ட குழந்தைகள் கவனச்சிதைவு குறைபாடு ஏற்படுது. ADD  ( attention deficiency syndrome) தன் குழந்தைகளை பாதிச்சிருக்குன்னு எத்தனை பெற்றோர்களூக்கு தெரியும். பரிட்சையில மார்க் ஒழுங்கா வருதுல்ல அப்புறமென்னன்னு பசங்க கேட்கறாங்க.  பரிட்சையில் மார்க் வருது சரி.  விஷய அறிவு எம்புட்டு தூரம் இருக்குன்னு பரிட்சை மார்க் வெச்சு சொல்லிட முடியாது. (இதுக்கு தான் இந்த சிலபஸ்களை மாத்தணும்னு பலரும் சொல்றாங்க)

தன் வீட்டுல ஐபாட், டேப்ல பழகின பசங்க விருந்தினரா யார் வீட்டுக்கு போனாலும் அவங்க வீட்டு ஐபாட், ஸ்மார்ட் போனை கேக்காமலேயே எடுத்து உபயோகிக்க ஆரம்பிக்கறப்ப அவங்க எவ்வளவு தூரத்துக்கு அடிக்‌ஷன் ஆகியிருக்காங்கன்னு தெரியுது. இதுல பெத்தவங்க என் குழந்தைக்கு ஐபேட்ல்லாம் நல்லா ஆப்பரேட் செய்ய தெரியும்!!  ஸ்மார் போன்லாம் அவங்களுக்கு ஜுஜூபின்னு சொல்லும்போது எனக்கு மனசு ரொம்ப வருத்தமா இருக்கும். டெக்ன்லாஜி வளர்ச்சி மனிஷங்க  கூட பேசறதை மட்டும் குறைக்கலை சின்ன குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்குது. ஆனா அதைப்பத்தி யாரும் கவலைப்படாம இருக்காங்க.

மேலை நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு தோழன் தோழி எல்லாமே லாப்டாப், ஐபாட், டேப் தான். அவங்க இந்தியா வரும்போது பாத்தீங்கன்னா இதெல்லாம் தூக்கிகிட்டு வருவாங்க. இங்க இருக்கும்போது கூட பசங்க உறவுகளோட பேசித் திரியாம ஐபாட்/டேப்போட தான் இருப்பாங்க. வெளியில போனா பொல்யூஷன்னு சொல்லி இன்னமும் அதோட ஐக்கியமாகி இருப்பாங்க. ஆனா இந்த நிலை இப்ப நம்ம இந்தியாவிலேயே இருக்கும் குழந்தைகள் கிட்டயும் இருக்கு என்பது தான் வேதனை தரும் விஷயம்.

அந்த வயசுக்கு அவங்களூக்கு என்ன கொடுக்கலாமோ அதை மட்டும் கொடுப்போமே? ஐபேட்/ டேப்புக்கு நோ சொல்லி வளர்க்கலாமா? 18 வயசு ஆகாம டூவிலர் ஓட்டகொடுப்பது எவ்வளவு தப்பு. சட்டப்படி குற்றம். ஆனாலும் சில பொடிசுகள் ஓட்டிக்கிட்டு தான் இருக்காங்க. ஆனா சில பெற்றோரால மட்டும் 18 வயசு ஆகாம வண்டி கிடையாதுன்னு கறாரா சொல்லி எப்படி வளர்க்க முடியுது? பிள்ளைங்களுக்கு நல்லதுன்னு நினைப்பதாலத்தானே அப்படி செய்யறாங்க. இப்படி செய்வதால நாம குழந்தைக்கு கெடுதல் ஏதும் செய்யலீங்க. நல்லது தான் செய்யறோம். அடிக்‌ஷன் ஆன பசங்களுக்கு அந்த பழக்கத்துலேர்ந்து வெளிய வருவது ரொம்ப கஷ்டம். ஆனா பெற்றோர் கொஞ்சம் மெனக்கெட்டா முடியும். இது சாத்தியமாகும்.  டாம் & ஜெர்ரி ஷோவே நெகட்டிவிட்டிய காட்டுதுன்னு சொல்வாங்க. அப்படி இருக்க பிள்ளைக விளையாடும் கேம்ஸ் ரூபத்துல எத்தனை வில்லன்கள் இருக்கும்னு தெரியுமா? யோசிச்சு பாருங்க.

இந்த மாதிரி பிள்ளைகளை பார்க்கும் போது ஆஷிஷ் அம்ருதா என் கிட்ட அடிக்கும் கமெண்ட்.  எங்களை விட எம்புட்டு பொடிசுகளெல்லாம் தனக்குன்னு ஒரு ஐபாட்/டேப் வெச்சுக்கிட்டு இருக்காங்க பாருங்கன்னு. இதிலிருந்து எல்லாம் என் பிள்ளைகளை விலக்கி வெச்சதாலத்தான் அதுங்க நல்லா இருக்கு. இதில் என் பிள்ளைகளுக்கும்  சந்தோஷம் தான். மத்த பிள்ளைகளும் சந்தோஷமா, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழணும் எனும் ஆசையில் இதை பகிர்ந்துக்கிறேன்.

Saturday, September 25, 2010

அழையா விருந்தாளியை அன்புத்தோழி ஆக்குவோமா!!!!

வயது வித்தியாசமில்லாம எல்லா பெண்ணும் சலிச்சுக்கும்
விஷயம் இது. யாரு கூப்பிட்டா இந்த அழையா விருந்தாளிய?
எப்ப வேணாம்னு நினைக்கிறோமோ அப்ப கரெக்டா வந்திடும்?
இப்படி அர்ச்சனை வாங்குவது வேற யாருமில்லை மாதாமாதாம்
வரும் மாதவிடாய்க்குப் பெயர் தான் அழையா விருந்தாளி.

ஒரு பெண் பூப்பெய்திவிட்டாள்னு சொன்னாலே பாவம்! இன்னும்
35 வயசுக்கு கஷ்டப்படணும், தலையெழுத்து!!! நல்லவங்களுக்குத்தான்
40ல நிக்கும்!! என ஏஏஏகப்பட்ட சொலவடைகள் சொல்லி
டெர்ரர் ஆக்குவதே வேலையா இருக்கும். இது மனோதத்துவ
ரீதியில பாதிச்சு மனசுல செட்டாகி மாதவிடாய் என்றாலே
ஏதோ ஒரு வியாதி மாதிரி ஆகி அதனாலே கூட அந்த
சமயங்களில் உபாதைகள் அதிகமா இருக்காம்.

இப்பெல்லாம் பெண் குழந்தைகள் மிக சீக்கிரமாக பூப்பெய்திடறாங்க.
அதனால அவங்களுக்கு எல்லாம் சொல்லி வைக்க வேண்டியது
அவசியம். என்னைப்பொறுத்தவரைக்கும் இதை ஒரு
mental preparation அப்படின்னு சொல்வேன். இப்படி செய்வதால
அழுது, பயந்து, மயக்கமாகின்னு பசங்க கஷ்டப்படாம இருக்கும்.
தனது வகுப்பில் ஒரு ஃப்ரெண்ட் பூப்படைந்ததை அம்ருதா
சொல்வதற்கு முன்னே அவளிடம் பேசிக்கொண்டு தான்
இருந்தேன். ஆனாலும் அவள் எதற்கோ தயங்குவது போல
தெரிந்தது.

“நான் தான் எல்லாம் சொல்லியிருக்கேனே பாப்பா! உங்களுக்கென்ன
பயம்?” அப்படின்னு கேக்கவும் அம்மா ஆரம்பிச்சாங்க.
“இல்ல!!! வந்து.... பீரியட்ஸ் வந்தா நானும் உங்களை மாதிரி
கஷ்டப்படுவேனா??? அதை நினைச்சாலே பயம்மா இருக்கு!!இது ஏந்தான்
பெண்களுக்கு வரணும்? ஏம்மா இந்தக் கஷ்டம்??”
நான் இந்தக் கோணத்தில் யோசிக்கலையே. என் நிலை
மகளுக்கு பயம் தரும்னு நினைக்கலையே!!! பெற்றவர்கள்
ஆன பிறகு கற்பதுதானே நிறைய்ய...

பக்கத்தில் உக்கார வெச்சு பேசினேன். இந்த மாதிரி எல்லோருக்கும்
இருக்காது, என் வயசென்ன? உன் வயசென்ன? அப்படி எல்லாம்
இருக்காது! போன்ற பதில்கள் சமாதானம் ஆக்கவில்லை. தேவையாம்மா
இப்படி ஒரு பீரியட்ஸ்? அதனால என்ன பலன்? அப்படின்னு கேட்டாள்.
நானும் முன்பு மாதவிடாய் காலங்களில் பாரதியாரின் பாடல்வரிகளை உல்டா
செஞ்சு “மங்கயராகப் பிறப்பதற்கே மாபாதகம் செய்திடல் வேணுமடா””ன்னு பாடியிருக்கேன்.


எல்லாத்தையும் சொல்லிட முடியுமா??? ஆனா சிலதை அழகாச்
சொல்லலாமேன்னு முயற்சி செஞ்சேன். குழந்தையின் மனதிலிருந்து
பயத்தை எடுப்பது தான் என் நோக்கம்.

அம்ருதம்மா, PUBERTY ஆண்டவன் பெண்களுக்கு கொடுத்திருக்கும்
வரம். ஹார்மோன்ஸ் சேஞ்சாகி சின்னக்குழந்தைக்கும்-
பெரிய பெண்ணிற்கும் இடைபட்ட இந்த நிலை ரொம்ப
முக்கியம். மாதாமாதம் சின்ன சின்ன கஷ்டம் இருக்கும்.
இல்லைன்னு சொல்லலை. இது கிளைமேட்
சேஞ்சானா எப்படி தும்மல், ஜுரம் வருதோ அதுமாதிரி தான்.
அதுக்காக மழைக்காலமே வேணாம், குளிர்காலமே வேணாம்னு
சொல்வோமா!!

இல்ல சொல்ல மாட்டோம். வீ வில் எஞ்சாய் த கிளைமேட் வித் த
கிளைமேடிக் சேஞ்ச் என்றாள் அம்ருதம்மா.

ஆமாம். உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாறுதல்களை சகிச்சுகிட்டாத்தான்
அழகான பெண்மை ஏற்படும். இதுதான் உனக்கு அழகைத் தரும்.
அழகான உடலமைப்பு, நல்ல சத்துள்ள எலும்புகள் எல்லாத்துக்கும்
உன்னை பாதுகாக்கும் ஒரு ஃப்ரெண்டா பீரியட்ஸ் இருக்கு
45-50 வயது வரைக்கும் கூட வரும் இந்த ஃப்ரெண்டால தான்
நம் எலும்புகள் வலுவா இருக்கு. இதனால நமக்கு எத்தனையோ
நன்மைகள் இருக்கும்மா” என சொன்னதும் கண்களை
அகல விரித்து இவ்வளவு இருக்கா!!
தெரியலையே அம்மா! என்றாள்.

இப்பச் சொல்லு இந்தப் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும்
வேணுமா? வேண்டாமா?

கண்டிப்பாய் வேணும்மா! நீங்க எப்பவும் சொல்வது போல்
with out pain no gain புரிஞ்சுகிட்டேன்! அப்படின்னு சொல்லியும்
மனசு பூர்த்தியா நிறைஞ்ச மாதிரித் தெரியலை.

இனிமே பீரியட்ஸை ஃப்ரெண்டுன்னு சொல்லிக்குவோம்.
அந்த ஃப்ரெண்ட் இல்லாட்டி நமக்கு கஷ்டம் தானே.
ஆக பெண்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் பீரிட்யட்ஸ். சரியா?
என்றேன். சரிம்மா என்ற கண்களில் இருந்த ஒளி மனதுக்கு
நிம்மதியை தந்தது.

எல்லா பெண்களும் மாதவிடாயின் போது
படும் துயரங்களை வீட்டில் இருக்கும் மகளும் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறாள் என்பதை நினைவில் வைய்யுங்கள். அதற்காக
வலி பொறுத்து நடிக்க வேண்டுமென்பதில்லை. அந்த
நேரத்தை வேண்டா வெறுப்பான நேரமாக்கி விடாதீர்கள்.

நாம்தான் நம் பிள்ளைகளுக்கு முன்னுதாரனங்கள். நாமே
வெறுப்பு உமிழ பேசினால் அது அவர்களுடைய மனதிலும்
பசுமரத்தாணி போல உட்கார்ந்துவிடும்.

இப்பொழுதெல்லாம் அம்ருதம்மா நான் அதிக டயர்டாக
இருந்தாலோ இல்லை பீ எம் எஸ் சிம்ப்டங்களுடன்(இப்போது
எவ்வளவோ குறைந்துவிட்டன)இருப்பதை உணர்ந்தாலோ,
“ஏம்மா டயர்டா இருக்கீங்க? உங்க ஃப்ரெண்ட் வந்தாச்சா??”
என்று கேட்கிறாள். பூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் மகளிடம் பேசுவதும்
ஒரு சுகம். பகிர்ந்துகொள்ள ஒரு தோழி கிடைத்தது போல்
இருக்கிறது.


மாதவிடாயை அழையா விருந்தாளி எனச் சொல்லி வெறுத்து
ஒதுக்காமல் அன்புத்தோழி ஆக்கி ஆனந்தமாக இருப்போம்.

ஒவ்வொரு வீட்டில் பிள்ளைகளும் வேறுபடலாம். ஆனால்
எனக்கும் எனது மகளுக்குமிடையேயான இந்த உரையாடல்
சிலருக்கு உதவலாம் என்பதால் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.


Wednesday, January 20, 2010

பெற்றோர்கள் செய்யக்கூடாதவை

பல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல.
எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும்
நானே வளர்ந்திருப்பேன்” என்ற நிலைதான். மாரல் ஸ்டடி வகுப்புக்களும்
இல்லை, வீட்டிலும் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை எனும்
நிலையில் ஒரு தலைமுறையே முறையாக வளர்க்கப்படாமல்
போய்விட்டது.

நாம் செய்யக்கூடாதவை என்னென்ன என்று தெரிந்து விட்டால்
செய்யக்கூடியவை புரிந்துவிடும். பெற்றோர்கள் நல்ல பிள்ளைகளை
வளர்க்க இது உதவும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.


1.குழந்தை ஆசையா சொல்லணும்னோ, பேசனும்னோ
வந்தா ”நான் பிசியா இருக்கேன் அப்புறம் பேசலாம்”!,
மேல விழுந்து கொஞ்சனமாக்கும் தள்ளி நின்னு அப்படின்னுல்லாம்
பேசக்கூடாது. அம்மா, அப்பா, தன்னை தவிர்க்கிறார்கள்,
உதாசினப்படுத்துகிறார்கள் எனும் எண்ணம் விதைக்கப்படுகிறது.


2. பெல்டால அடி, குட்டு, கிள்ளுவது, கைல கிடைச்சதால அடி
இவை physica abuse வகை. இவை தரும் நேர்மறை விளைவுகள்.


3. அடிப்பது குத்தம். வாய்க்கு வந்தபடி திட்டுவது மஹா கொடுமை.
நம் நாட்டில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது இன்னமும் குற்றமாக
இல்லை. மேலை நாடுகளில் எங்கப்பா அடிச்சார், அம்மா திட்டினாங்கன்னு
போலிஸ்ல கேஸ் போட முடியும். நம்ம நாட்டுல அந்த வசதி
இல்லை என்பதற்காக வரைமுறை இல்லாமல் திட்டுவது
“தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்டவடு”ஆகிப்போகும்னு
வள்ளுவர் சொல்லி வெச்சிருக்கார்.

4.” நான் பெத்தது சரியில்லீங்க!!!” ”இதெல்லாம் நாளைக்கு
எனக்கு சோறா போடப்போகுது!!” இதெல்லாம் தன் மனக்குறையை
அடுத்தவங்க கிட்ட சொல்லிக்கிறா மாதிரி பெத்தவங்க பேசுவது.
ஆனா இது தவறு. நம்ம பிள்ளையை பத்தி நாமே குறையா
அடுத்தவங்க கிட்ட சொல்லக்கூடாது. அதே சமயம் ரொம்பவும்
புகழ்ந்தும் சொல்லக்கூடாது.

“தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்”
என்பதையும் மறக்கக்கூடாது.



5. இந்த உலகத்துல ஒண்ணு கூட சரியில்லை, “உங்கம்மா
ஒரு உதவாக்கரை!!” உங்கப்பனுக்கு மூளையே வேலை செய்யாது”
”நீ பைசா ப்ரோயஜன்ம் இல்லாதவன்” இப்படி அடுத்தவர்
பற்றியோ பிள்ளைகள் பற்றி பிள்ளைகளிடமோ குறை சொல்வதும்
ஆகாது.

6. அடுத்தவங்களைப் பத்தி பேச வாய்ப்பு கிடைச்சா போதும் மக்களுக்கு.
இதுல எதுத்து பேச முடியாத பிள்ளைகளை பத்தி விமர்சனம்
செய்ய தயங்கவும் மாட்டாங்க. அந்த விமர்சனங்கள் அவர்களின்
வளர்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

7. நம் கனவுகளை சுமக்க பிறந்தவங்க இல்லை பிள்ளைகள்.
அவர்கள் விரும்பும் படிப்பு,வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நாம் சொல்லுவதை கேட்க வேண்டுமென அடம் பிடிக்கக்கூடாது.

8. அம்மா, அப்பா சண்டை போட்டுக்கொள்ளும் சூழ்நிலையில் வளரும்
குழந்தை பாதுக்காப்பின்மையாக உணர்ந்து கூனிக்குறுகி முன்னேர
முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் முரட்டுத்தனமாக
மாறிவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.



9. பசங்க சின்னவங்க என்பதால் அவங்க செய்வது எல்லாமே
தவறா இருக்கணும்னு சட்டமில்லை. அவர்களின் செயல்கள்,
பேச்சுக்கள், நடவடிக்கைகள், எல்லாவற்றையும் தவறாகவே
புரிந்துக்கொள்ளக் கூடாது.

10. ”என் பையன் எதிர்காலம் என்னாகுமோ!!”
“நாளைக்கு அவங்க என்ன ஆவாங்களோ!!”
“எஞ்சினியரிங், டாக்டர் படிகாட்டி கை நிறைய்ய
சம்பாதிக்க முடியாதே” போன்ற தேவையில்லாத வருத்தங்கள்
பட வேண்டாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

11. பிள்ளைகள் விரும்பியதை அவர்கள் அடைந்தே தீர்வார்கள்
எனும் நம்பிக்கை நமக்கு முதலில் இருக்க வேண்டும்.

12. பிள்ளையின் கனவை நனவாக்க நமது தூண்டுகோல்(சுடர்
விளைக்கைத் தூண்டும் தூண்டுகோல் போல)இருக்க வேண்டும்.
அவர்கள் சோர்வுறும் தருணத்தில் ஆதரித்து, பேசி
முன்னேற்றப்பாதையில் நடக்க வைக்க வேண்டும்.

13. ”வயசாகிடுச்சு இன்னும் என்ன அம்மாவை கட்டிகிட்டு”
”வயசு வந்த பொண்ணு அப்பனை கட்டிக்கிறது எல்லாம்
எங்க காலத்துல இல்லை” எனும் பேச்சுக்களை கேட்டிருப்போம்.
நம் பிள்ளைகளை நாம் கட்டியணைத்து, பேசினால் அவர்களின்
தன்னம்பிக்கை வளரும். வசூல் ராஜா எம்பீபீ எஸ் பரிந்துரைத்த
”கட்டிப்பிடி வைத்தியம்” ரொம்ப முக்கியம். நம் குழ்ந்தைகளிடம்
மட்டும்.

14. அன்றாட வாழ்க்கையில் பசங்களின் நடவடிக்கை, பேச்சு,
ஆகியவைகளை கண்காணிப்பது அவசியம். ஏதும் மாறுதல் இருந்தால்
அட்வைஸ் மழை பொழியாமல் நட்புடன் பேசுவது போல பேசி
கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

15. ”உபகாரம் செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தா
போதும்னு!!” பெரியவங்க சொல்லியிருக்காங்க. பசங்களின்
வளர்ச்சிக்கு உதவும் வார்த்தைகள் சொல்லாட்டியும் அவர்களை
Demotivate செய்யும் வார்த்தைகளை பேசாமல் இருப்பது உசிதம்.


16. பெரிய தவறுகள் செய்தால் தண்டனை அவசியம்.
சின்ன சின்ன தவறுகளுக்கும் பெரிய பெரிய தண்டனை கொடுத்தால்
தண்டனையில் தன் தவறை புரிந்து கொள்வது போய் பிள்ளை
முரடாக தயாராக வாய்ப்பிருக்கிறது. தண்டனை தவறாக புரிந்து
கொள்ளப்படும்.

நாம் தவறு செய்திருக்கிறோம், அதை மறுமுறை
செய்யக்கூடாது என அறிவுறுத்தத்தான் தண்டனை.
அந்த பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டால் நமக்கு
பிரச்சினையே இல்லை.

செய்யக்கூடாதது தெரிந்து கொண்டதால், நாம் செய்ய வேண்டியது
தெளிவாக புரிந்து கொள்ள வசதி. நல்ல பெற்றோராக
பிள்ளையின் வளர்ச்சிக்கு உதவுவோம்.


சிவகாசிராம்குமார் எனும் இந்த நண்பரின் தளத்தில்
பல விடயங்கள் இருக்கின்றன. பாருங்களேன்.