Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Monday, December 29, 2014

பை பை 2014

2014ஆம் ஆண்டின் கடைசிக்கு வந்திட்டோம். சில வருஷம் சூப்பரா இருக்கும். சில வருஷம் மிகுந்த கஷ்டங்கள் இருந்திருக்கும். வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் சமம் தான்.  தெலுங்கு புத்தாண்டின் போது இதை முன்னிறுத்திதான் யுகாதி பச்சடி சாப்பிடும் பழக்கம் இருக்கு. உப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு எல்லாம் கலந்த அந்த பச்சடி சாப்பிடுவதனால  வாழ்க்கையில் எது வந்தாலும் ஏத்துக்கணும்னு பெரியவங்க சொல்லிக்கொடுத்த விஷயம் அது.

பல பேர் ஆங்கில புத்தாண்டு நம்மளுடையது கிடையாது. அதை நாம கொண்டாடத்தேவையில்லைன்னு சொல்வாங்க. எல்லா புத்தாண்டும் கொண்டாடப்படவேண்டியது தான். புதிதுன்னாலே கொண்டாட்டாம் தான்.  தமிழ், தெலுங்கு, மராத்தி, மார்வாடி தனித்தனி புத்தாண்டு இருந்தாலும் எல்லோருக்கும் பொதுவா இருப்பது இந்த ஆங்கில புத்தாண்டு தான்.

2014- முன்னமே  பதிவுகள்ல சொன்ன மாதிரி என்னை ரொம்பவே பிசியாக்கிட்ட ஒரு வருஷம். அப்பாவுக்கு 70வது செஞ்சது, ரொம்ப நாளா எதிர் பார்த்திருந்த தம்பி திருமணம்னு மனதுக்கு நிறைந்த நல்ல செய்திகளை தாங்கி வந்த வருடம். ஆனா வேலை ஜாஸ்தியாகி  ஓவர் உழைப்பு உடம்புக்கு ஆவதுன்னு, அதனால ரொம்பவே பாதிக்கப்பட்டு இப்ப ரெக்கவர் ஆகிகிட்டு வர்றேன்.

ஒவ்வொரு வருஷமும் ஏதாவது புதுசா கத்துக்கணும்னு நினைப்பேன்.   இந்த வருஷம் வேலைப்பளுவினால முடியாம போயிருச்சு. அப்படியே விட்டுடக்கூடாதுன்னு, நவம்பர் மாதம் ஃபேப்ரிக் பெயிண்டிங் & எம்ப்ராய்டரி கத்துக்கிட்டேன். அந்த தூண்டுதலுக்கு முக்கிய காரணம் hand embroidery lovers & arts and crafts  அப்படிங்கற முகநூல் குருப் தான். அதுல அவங்க கைத்திறைமைகளை படம் பிடிச்சு காட்டும் போது நாமும் ஏதாவது கத்துக்கணும்னு ஆசை ஏற்பட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சேன். ஒரு விதத்துல  அந்த கிளாஸ் போனது என்னை மீட்டெடுத்ததுன்னு சொல்லலாம். (ஆஷிஷ் ஹாஸ்டல் போனதிலேர்ந்து ஒரு வெறுமை இருந்தது)



ரொம்ப ஷாக்கான விஷயம் அம்மம்மாவை இழந்தது. ஆனா ரொம்ப முடியாம படுத்திருந்து அடுத்தவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க கூடாதுன்னு நினைச்ச அவங்க மனசை புரிஞ்சுகிட்டு அதையும் ஏத்துக்கிட்டேன். என் சமையல்களில், நான் வாழும் வாழ்வில் அம்மம்மாவோட பாதிப்பு கண்டிப்பா இருக்கும். ஜனவரியில் நடந்த பீமரத சாந்தி விழா முடிஞ்சதும் அம்மம்மா என்னை முத்தமிட்டு என் வாரிசு நீதான்னு சொன்னது வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கின மாதிரி. மாமா சொல்ற மாதிரி 200 பர்சண்ட் சரியா செஞ்சிருந்தா மட்டுமே அம்மம்மா  என்னை பாராட்டியிருப்பாங்க. இனிமேலும் அதே மாதிரி என் வாழ்நாள் மொத்தமும் ராஜத்தின் பேத்தி எனும் அடையாளத்துக்கு தக்க நான் இருக்கணும். அதற்கு அம்மம்மாவோட ஆசிகள் எப்பவும் இருக்கும்னு நம்பறேன்.


 இந்த படம் முகநூலில் சுட்டது. எவ்வளவு நிஜம்ல. அதானல நாம நம்ம பழசை மறந்துட்டு சும்ம சும்மா அந்த பக்கம் எட்டி பாக்காம இருப்போம். நம்ம பெரியவங்க இதைத்தானே அழகா பழையன கழிதலும், புதியன புகுதலும்னு சொல்லியிருக்காங்க.



நட்புக்கள் அனைவருக்கும் அட்வான்ஸா புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.



Tuesday, December 20, 2011

நடந்தது இதுதான்.

அம்மா, அப்பா ஊரில் தனியாக இருப்பதால தினமும் ஒரு வாட்டி
போன் போட்டு நலம் விசாரிச்சிடறது பழக்கம். அவங்க தனிமைய
விரட்ட முடியாட்டி போனாலும், ஏதோ என் பங்களிப்பா இந்த வேலைய
செஞ்சுகிட்டு இருக்கேன். அன்னைக்கும் அப்படித்தான் அம்மாவுக்கு போன்
செஞ்சா ”அப்பாவுக்கு உடம்பு சுகமில்லை.நேத்து மூச்சு விட முடியாம
போயிடிச்சு. காலைல டாக்டர்கிட்ட கூட்டிகிட்டு போனேன். ஜுரம் இருக்கு
மருந்து சாப்பிட்டு அப்பா படுத்திருக்காருன்னு சொன்னாங்க.” புதுகையில்
மழை அதிகமா பெஞ்சுகிட்டு இருந்துச்சுன்னு அம்மா சொன்னாங்க. மழை,
குளிர் காலங்களில் அப்பாவுக்கு மூச்சுத்திணறல் இருக்கும். ஆனாலும்
இங்க வந்தா நல்ல டாக்டர்கிட்ட செக்கப் செய்யலாமேன்னு சொன்னேன்.
அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவங்களால தனியா டாக்டர்கிட்ட
ஓடி, வீட்டுக்கு வந்து செய்வதுன்னு முடியாதுன்னு ஹைதைக்கு கிளம்பி
வரச்சொன்னேன். பிள்ளைகளை விட்டு போகமுடியாத சூழல் இப்ப.

”அதெல்லாம் வேண்டாம். நான் நல்லாத்தான் இருக்கேன்” அப்படின்னு
அப்பா சொன்னாரு. இவரு இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருப்பாருன்னு
தம்பியாருக்கு போனைப்போட்டு மேட்டரைச் சொன்னேன். என் கிட்ட
சொல்லவே இல்லையேன்னு சொல்லிப்புட்டு சிங்கையிலிருந்து போன்
போட்டு அப்பாவை நல்லா திட்டி ட்ரையினில் டிக்கெட் ஏதும் கிடைக்காததால
அம்மா, அப்பா ரெண்டு பேரையும் ஃபிளைட்ல டிக்கெட் புக் செஞ்சு அனுப்பி வெச்சாப்ல.

வந்த மறுநாளே என்னுடைய எண்ட் டாக்டர் (அதான் ENT ) கிட்ட போனோம். :))
அவர் இது மூச்சு திணறல் இல்ல. பீபி அதிகமா இருக்கு. அப்படின்னு சொல்ல
அப்பாவுக்கு மூச்சு விட முடியாம இருந்ததற்கு அடுத்த நாள் அம்மா ஈசிஜி
எடுத்திருந்ததைக்காட்ட அதுல மேட்டர் தெரிஞ்சது. இது ஹார்ட் சம்பந்தப்பட்டது.
முதல் அலார்ம் அடிச்சிருக்கு. அதுதான் அன்னைக்கு ராத்திரி உங்களுக்கு
மூச்சு விட முடியாம போயிருக்குன்னு சொல்லி உடனடியா இருதய மருத்துவரை
பாக்கச் சொல்ல அங்கேயே இருந்த டாக்டர்கிட்ட காட்டி பீபி குறையனும் அப்படின்னு
சொல்லி அதுக்கு மருந்து கொடுத்தார். எக்கோ டெஸ்டில் ஏதும் பிரச்சனை இல்லாததால
நல்லதா போச்சு.

அம்மாவுக்கு சைனஸ் தொல்லை இருப்பதால அதுக்கு காட்டினோம். எல்லா
டெஸ்டும் எடுத்ததுல அம்மாவும் டேஞ்சர் ஜோன்ல இருப்பது தெரிஞ்சது.
அம்மாவுக்கும் பீபி ஹை, சுகர், கொலஸ்ட்ரால் எல்லாம் ஜூப்பரா ஜிவ்வுன்னு
ஏறிக்கிடந்தது தெரிய வந்து முன்னாடியே எடுத்துகிட்டு இருக்கும் மருந்துகளின்
அளவைக்கூட்டி தொடர்ந்து எடுக்கணும்னு சொன்னாங்க.

அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலை பாத்துகிட்டு இருந்து ரிடையர் ஆனவுங்க.
அப்பாவோட வேலை செம டென்ஷன் + பிசி + ட்ராவல்னு எந்த நேரமும்
இருந்தவர். அம்மா பள்ளியில எழுத்தாளரா இருந்தாலும் அவங்களும் அங்க
செம டென்ஷன்தான். உடலை கவனிக்காம ஓடிக்கிட்டே இருந்தவங்க இப்ப
வீட்டுல இருக்கும்பொழுது அவ்வளவு ஆக்டிவா இல்லாம இருப்பதும் ஒரு
காரணம். இப்ப அவங்களுக்கு உடலில் சக்தி இல்லாம இருப்பதால நமக்கு
வயசாகிடிச்சுன்னு ஒரு மனப்பான்மை வந்து உடல் உழைப்பு கம்மி ஆகிடிச்சு.

டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டு போய், டாக்டர், டெஸ்டிங்னு ஒரே
அலைச்சல். பசங்களுக்கும் டெஸ்ட் நடந்துகிட்டு இருந்த நேரம். எதையும்
விட முடியாம ஓடி செஞ்சே ஆகவேண்டிய கட்டாயம். நாம நல்ல நாளிலேயே
நாழிப்பால். இப்ப கேக்கணுமா. லோ லோ பீபி அப்படி இப்படின்னு ஒரு மாதிரி
ஆகிடிச்சு உடம்பு. ஆனாலும் மனசுல ஒரு நிம்மதி. அம்மா அப்பாவுக்கு சரியான
நேரத்துல ட்ரீட்மெண்ட் எடுத்துக்க வெச்சிட்ட திருப்தி. இரண்டு மாசத்துக்கு ஒருமுறை
வந்து டெஸ்ட் செஞ்சுக்க சொல்லி இருக்காங்க. அப்பாவுக்கு பீபி கண்ட்ரோலில்
வந்திட்டா போதும். அம்மாவுக்கு தான் சுகர், கொலஸ்ட்ரால், பீபி எல்லாம் நார்மலுக்கு
கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம். காரணம் பெண். ஆமாம் ஆணுக்கு
முடியவில்லை என்றால் ஓய்வெடுக்கலாம். மனைவி செய்வார். ஆனால் மனைவிக்கு!!
அப்பா உதவி செய்யும் ரகம் தான் என்றாலும் அவருக்கே உடல்நிலை சரியில்லாத
பொழுது அம்மாவுக்கு அது இன்னும் கொஞ்சம் டென்ஷனைக்கொடுக்கும்.


இந்த வருடத்தில் என்னுடைய மிகப்பெரிய சாதனைன்னு நான் ரொம்ப
சந்தோஷப்பட்டுக்ககூடிய விஷயம் நடந்திருக்கு. எம்புட்டு சொன்னாலும் கேக்க
மாட்டாரு மனுஷன். காலைச்சாப்பாட்டை அறவே தவிர்த்து டீயும் பிஸ்கட்டும்
மட்டும்தான் அப்பா சாப்பிடுவாரு. இப்ப இந்த மருத்துவம் நடப்பதால
காலையில் மருந்து சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்க டீ பிஸ்கட்
சாப்பிட்டே மருந்து சாப்பிடறென்னு சொல்லிகிட்டு இருந்தவரை திட்டி,
ஒரு வழியா காலையில் ரெண்டி இட்லி அல்லது ரெண்டு தோசை,
அல்லது கொஞ்சம் ஓட்ஸ் உப்புமா சாப்பிட வெச்சிட்டேன். :))))))))))))
வெச்சிட்டேன்னு சொல்லி ஸ்மைலி போட்டாலும் அதுக்கு நான் பட்ட
கஷ்டம்,ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பபாஆஆஆஆஆஆஆஆ ரகம்தான்.
இதுல பேத்தியின் பங்கும் இருக்கு. :)


ஆனா ஒரு விஷயம் என்னுடைய எண்ட் டாக்டர் கரெக்டா தான் சொன்னாரு.
அம்மாவுக்கு 180 இருந்தது பீபி. ஆனா தலை சுற்றல், மயக்கம் ஏதுமில்லை.
அப்பாவுக்கு அதே அளவுதான் ஆனால் அதுவே அவருக்கு பிரச்சனையாகிடிச்சு.

அப்ப டாக்டர் சொன்னது இதுதான்.”லேடிஸ் சும்மா இருக்க மாட்டாங்க. வீட்டு
வேலை ஏதும் செஞ்சுகிட்டே இருப்பாங்க. உடல் உழைப்பு அவங்களுக்கு அதிகம்.
ஆனா நாம் ஆண்கள் அப்படி இல்ல. வேலையில் மெண்டல் டென்ஷன் இருப்பதால்
நாம அதிகமா வேலை செய்வது போல நினைக்கிறோம். உண்மையில் நம்ம உடம்பு
உழைப்பே இல்லாமத்தான் இருக்கு. ரிடையர் ஆனவுங்க டீவி சீரியல்னு இருக்க
ஆரம்பிச்சிட உடம்பு மக்கர் செய்யுது.” உண்மை. உடல் உழைப்பு ரொம்ப அவசியம்.
ஏதாவது ஒரு உடற்பயிற்சி கண்டிப்பா அவசியம். வீட்டு வேலைதான் செய்றோமேன்னு
பெண்களும் அலட்சியமா இருந்திடக்கூடாது.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ அதை செய்து முடிக்கணும்னு எனும்
ஒரு பரபரப்பு, டென்ஷனோடவே வேலை செய்வோம். உடற்பயிற்சி அந்த ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விடு படும் ஒரு மார்க்கம். யோகா, நடைப்பயிற்சி உடம்புக்கு,
மனதிற்கு மெடிட்டேஷன். இது ரெண்டும் கண்டிப்பா தேவை.

இம்புட்டு நாள் இப்படித்தான் பிசியா ஓடிக்கிட்டு இருந்தேன். போன வாரமே
அம்மா அப்பா ஊருக்கு போயிட்டாலும் நம்ம லோ பீபி என்னை படுக்க
வெச்சிருச்சு. :) நல்லா ரெஸ்ட் எடுத்து வந்திருக்கேன். நீங்களும் உங்க
உடம்பு சொல்வதை கவனிச்சு கேளுங்க. அதற்கு தேவையானத செய்யுங்க.

உயிர் இருக்கும் வரை நம்ம உடம்பும் நல்லா இருக்கணும்ல!!!


Wednesday, June 15, 2011

நாம ஒண்ணு நினைச்சா............

எப்பவும் பாசிட்டிவ்வாவே நினைக்கனும் என்பது என்னோட பாலிசி.
முடிஞ்சவரைக்கும் அப்படியே நினைச்சு நடந்துக்குவேன். ஆனா
சில சமயம் நாம நியாயமா ஆசைப்படுவது கூட நடக்காம போயிடுது.
அப்பத்தான் இந்த நெகட்டிவிட்டு மண்டையில வந்து குடையுது.

அயித்தான் உசுப்பி விட்டு கார் டிரைவிங் கத்துக்க கட்டாயப் படுத்தினாரு.
ரொம்ப யோசிச்சு.... ஒரு வழியா டிரைவிங் கிளாஸ்ல சேர்க்க சம்மதம்
சொன்னேன். மாருதி டிரைவிங் ஸ்கூல்ல சேத்தாரு. அவங்களுடைய
சொல்லித்தரும் டெக்னிக் ரொம்ப பிடிச்சது. தியரி,சிமுலேஷன்,அப்புறம்
ப்ராக்டிக்கல்னு நல்லா ப்ளாண்டா இருக்கும்.

தியரி கிளாஸ் ரொம்ப பிடிச்சிருந்தது. என தப்பு செஞ்சிடக்கூடாதுன்னு
அழகா வீடியோல காட்டி இருக்கும் பாடம். டக்கு டக்குன்னு நான்
பதில் சொல்வதைப் பார்த்து அந்த இன்ஸ்ட்ரக்டர் (கொஞ்சம் வயசானவர்)
உனக்கு நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கும்மான்னு!! பாராட்டினார்.

சிமுலேஷன்ல வீடியோ கேம் மாதிரி ப்ராக்டிஸ் செஞ்சு பார்த்திட்டு
அப்புறம் ப்ராக்டிகல். எப்படா அந்த நந்நாள்னு காத்திருந்தேன்.
முதல் நாள் நான் ரோட்டில் கார் ஓட்டப்போறேன்னு ரொம்பவே
ஆர்வமா இருந்தேன். காலை 8.30-9.30 டைமிங் எடுத்திருந்தேன்.
டிரைவிங் ஸ்கூல்லேர்ந்து கொஞ்ச தூரத்துல இருக்குற நெக்லஸ் ரோடுக்கு
வண்டியை எடுத்துகிட்டு போய், அங்க ஓட்டப் பழகணும்னு சொன்னாரு
இன்ஸ்ட்ரக்டரு. சரின்னு கிளம்பினோம்.

வண்டியை ஓட்ட ஆரம்பிச்சது இன்ஸ்ட்ரக்டருதான் (இது வேற ஆளு). வண்டியை
ரோட்ல எடுக்க ஆரம்பிச்ச உடனே அவருக்கு போன் வந்தது.
கேர்ள் ப்ரெண்டோ/லவ்வரோ தெரியலை. ஆனா சூடான வாக்குவாதம்.
15 நிமிஷ பயணத்துல நாங்க நெக்லஸ் ரோடு போரவரைக்கும்
தொடர்ந்துதது.....

வேகன் ஆர் கார். இப்ப நீங்க ஓட்டுங்கன்னு சொல்லி, என்ன
செய்யணும்னு சொன்னாரு. மெல்ல இஞ்சினை ஸ்டார்ட் செய்து
வண்டியை மூவ் செய்ய வெச்சு லேசா கார் ரோட்ல மூவ் ஆன
அந்த தருணம் ஏதோ ஒரு சாதிச்ச திருப்தி எனக்கு.

நான் கார் ஓட்டுறேன்! அதுவும் நெக்லஸ் ரோட்ல!! என்னால்
அந்த சந்தோஷத்தை எப்படி சொல்லத் தெரியலை. ஸ்மூத்தா
ஓட்டினேன். சிமுலேஷன்ல வண்டியைத் திருப்ப கஷ்டப்பட்ட
நான் ச்சும்மா அநியாசமா வண்டியை ட்ர்ன் செஞ்சேன்.
பக்கத்துல உக்காந்திருந்த அந்த இன்ஸ்ட்ரக்டர் இப்படி பண்ணுங்க,
அப்படி பண்ணுங்கன்னு சொல்லிக்கிட்டே வந்தாரு. அதுவும்
அந்த ரோட்ல சின்னதா ஒரு ப்ரிட்ஜ் வரும் பாருங்க... அதுல
ஏத்தி இறக்கினது... சூப்பர் கலான்னு எனக்கு நானே பாராட்டு
பத்திரம் வாசிச்சுக்கிட்டேன்.

அங்கேயிருந்து வண்டி மினிஸ்டர் ரோட் வழியா வந்து பேகம் பெட்
ஃப்ளை ஓவர் கீழே வந்து, பழைய ஏர்போர்டுக்கு முன்னாடி திருப்பி
மெயின் ரோட்ல இருக்கும் மாருதி டிரைவிங் ஸ்கூலுக்கு போகணும்னு
சொன்னாரு. முதல் தடவை ஓட்டும்போது அந்த மாதிரி பிசி ரோட்ல
சாத்தியமில்லை. அதுவும் மினிஸ்டர் ரோட், பேகம் பெட் ஏரியால்லாம்
காலை நேரத்துல செம ட்ராபிக் இருக்கும். என்னால இன்னைக்கு
முடியாதுங்க! வேற ரூட்ல ஓட்டுறேன்னு சொன்னேன். அந்த ஆளு
கேக்கலை. இப்படி பயப்பட்டா கஷ்டம். வண்டியை ஓட்டினாத்தான்
நல்லதுன்னு சொல்ல. சாரிங்க. பழகினதுக்கப்புறம் தானா ஓட்டலாம்
முதல் நாளே இப்படி பிசி ரோட்ல ஓட்டுவேன்னு எதிர்பார்க்கறீங்களேன்னு!
சொன்னேன்.

அம்புட்டுதான். அந்த ஆளு லேடீஸ் வண்டி ஓட்டவே வரக்கூடாதுங்கற
மாதிரி லெக்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சாரு. பொறுமையா இருந்தேன்.
உங்களைச் சொல்லி குத்தமில்லீங்க! இத்தனை வருஷம் வீடு குடும்பம்னு
இருந்துட்டீங்க, இப்பத் திடும்னு இந்த மாதிரி வெளியுலகத்துக்கு
வர்றதுன்னா கஷ்டம்... அது இதுன்னு தன்னோட கேர்ள்ப்ரண்டு
மேல இருந்த கோவத்தை எல்லாம் காட்டி கத்த, எனக்கு செம கோவம்.
எல்லோருமே வீட்டுக்குள்ளயே இருக்கறதில்லை, அவங்க எப்படி ஏதுன்னு
தெரிஞ்சிக்காம ஏதோ கோவத்துல பொத்தாம்படையா பேசுறது சரியில்லை.
அதை அப்பச் சொல்லவும் முடியாது.

மினிஸ்டர் ரோட் சிக்னலுக்கு கொஞ்சம் முன்னாடி வண்டியை ஓரங்கட்டி
நிப்பாட்டிட்டு, டக்குன்னு இறங்கினேன். என்னாச்சு மேடம்னு கேக்க?
உங்க பேரு என்னன்னு கேட்டேன்? சொன்னாரு. இதுக்குமேல நான்
வண்டி ஓட்ட மாட்டேன். அப்படின்னு சொல்லிட்டு வந்த ஆட்டோவை
பிடிச்சு வீட்டுக்கு வந்திட்டேன். அயித்தான் அப்ப ஊர்ல இல்ல.
அவரு வந்ததும் நடந்ததைச் சொன்னேன். ஆனா பெண்களுக்கு மரியாதை
தராத ஜன்மங்கள் இருக்கும் இடத்துக்கு போகக்கூடாதுன்னு முடிவு
செஞ்சிருந்தேன். ஒரு அவமானப்படுத்தப்பட்டது போல உணர்வு.

அயித்தான் மாருதி டிரைவிங் ஸ்கூலுக்கு போய் பேசறேன்னு சொன்னாரு.
நீங்க பேசுங்க நானும் பேசணும்னு சொன்னேன். அங்க போய் ரிஷப்ஷன்ல
இருந்தவங்க கிட்ட மேட்டரைச் சொல்ல,”ஐயோ! இப்படி நடந்திருக்குன்னு
தெரியாது?வேற இன்ஸ்ட்ரக்டரை வெச்சு வேணாம் சொல்லித்தர
சொல்றேன்னு சொன்னாங்க.” நான் அந்த ஆளுகிட்ட பேசணும்னு சொல்லி
போன் செஞ்சு,”ஐயா சாமி, சொல்லிக்கொடுப்பதுன்னா உன் மண்டையில
இருப்பதை அடுத்தவங்க மண்டைல ஏத்தறது இல்லை. அடுத்தவங்களுக்குள்
இருக்கும் திறமையை வெளிக்கொணர்வது தான். நான் ஒரு டீச்சர்.
நான் என்னவோ ஒண்ணுமே தெரியாம படிக்காத முட்டாள் ரேஞ்சுக்கு
பேசின. அன்னைக்கு நானும் சொல்ற நிலையில இல்லை. நீயும் கேக்கற
நிலையில இல்ல. அதான் இப்ப சொல்றேன். யூ ஆர் நாட் ஃபிட் டுபி அ
இன்ஸ்ட்ரக்டர்னு” சொன்னேன். பதிலே இல்லை. மாருதி ஸ்கூல்லேர்ந்து
அப்புறம் 3 தடவை போன் வந்திச்சு. பட் எனக்கு அந்த இடத்து மேல
இருந்த மதிப்பு போயிடிச்சு.

நிஜமா எனக்கிருந்த கோவத்துக்கு அந்த அமைப்பின் மீதும், அந்த ஆளின்
மீதும் கம்ளெய்ண்ட் கொடுக்கலாமான்னு இருந்தேன். தொலையுதுன்னு
விட்டுட்டேன்.

கோதாவரின்னு ஒரு தெலுங்குப்படம். அதுல கதாநாயகி ஒரு பொட்டீக்
வெச்சு நடத்துறவங்க. தன்னோட டிசைனைக்காட்டப்போன இடத்துல
ஒரு ஆளு கையப்பிடிச்சு இழுக்க, வீட்டுல அப்பா கத்தி கடையை
பூட்டிடறதாச் சொல்வாரு. அப்ப கதாநாயகி சொல்வாங்க,”ஒரு ஆம்பிளையால
என் கடையை மூட வேண்டிய நிலமை வந்திருக்குன்னு!” இந்த மாதிரி
தருணங்களாலத்தான் ஆண்கள் அப்படீன்னாலே வெறுக்கும் ஒரு மனப்பான்மை
வருது. பெண் என்றால் இளக்காரம்னு நினைக்கிற ஜன்மங்கள் இன்னமும்
இருக்காங்க என்பதுதான் நிஜம். இத்தனைக்கும் அந்த இன்ஸ்ட்ரக்டருக்கு
மிஞ்சிப்போன 26 வயசு தான் இருக்கும்.

காலை நேரங்களில் அங்கே நிறைய்ய லேடீஸ்தான் கோச்சிங்கிற்கு வருவாங்க.
என் நேரம் எனக்கு இப்படி ஒரு ஆளு சொல்லிக்கொடுக்க வாச்சிருந்தது.
குரங்கு புத்தி. பெண்கள் மேல அப்படி ஒரு இளக்காரம். ஏதோ இந்த ஒரு
ஆளு மட்டும்தான் அப்படின்னு இல்ல. இப்படி பலரும் இருக்காங்க. அவங்க
வீட்டுலயும் அம்மான்னு ஒருத்தி இருக்கான்னு நினைப்பே இருக்காது போல்.
தன் தாய், சகோதரி கிட்ட பக்குவமா நடந்துக்கும் ஆணுக்கு இப்படி
பெண்களை மட்டமா நினைக்கும் புத்தி வராது.

இப்பவும் மினிஸ்டர் ரோட்ல போகும் பொழுது நான் ஆனந்தமா
வண்டி ஓட்டின தருணத்தை நினைச்சு பாத்துப்பேன். அவ்வளவு
ரசிச்சு ஓட்டினேன் அன்னைக்கு.

இந்த உலகம் ஆண்கள் உலகம் தான். அப்படின்னு சொல்ல இதுவும்
ஒரு காரணம்.


Friday, December 10, 2010

வீடு பாக்கலாம் வாங்க!!!

வீட்டின் நுழைவுவாயிலில் வரவேற்கும் கணேசர்.
இருக்கும் இடத்தை சரியாக உபயோகித்துக்கொள்ள
திட்டமிட்டு செய்திருக்கிறேன்.




ஹாலிலிருந்து டைனிங் ஹாலுக்குச் செல்லும் பாதையில் இருந்த
இடத்தில்show case.  அதனால்show case  க்கு என்று தனி இடம்
தேவைப்படாமல் பொருத்தமாக அதே சமயம் இடைஞ்சல்
இல்லாமல் அமைந்திருக்கிறது.

கட்லரி யூனிட்.




கிச்சனில் மட்டும் எத்தனை இடமிருந்தாலும் போதாது.:))
அதனால் எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ் மற்றும் தேவையான
இடத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த ஐலண்ட்.
இது என்னம்மா என்று கேட்டாள் அம்ருதம்மா. இதற்கு
பெயர் ஐலண்ட் என்று சொன்னதற்கு. அப்ப இந்த ஐலண்டிற்கு
என்ன பெயர்னு சொல்லவா??? என்றாள். என்ன பெயர்
வைத்திருப்பாள்??? எனி கெஸ்!!! :)))

அதே தான் ஸ்ரீலங்கா :))) மறக்க முடியவில்லை!!!!


மேலும் படங்களுக்கு இங்கே சென்றால் பார்க்கலாம்.

படங்களை பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க

Wednesday, December 08, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க- நிறைவுப்பகுதி

பார்ட்டி முடிஞ்சதும் செகண்ட் கோட் பெயிண்ட் அடிக்க
சொல்லியிருந்தேன். நவம்பர் 27 புதுவீட்டுக்கு சாமான்
சிப்டிங் அப்படின்னு திட்டம் போட்டாச்சு. இவங்களை
இப்படியே விட்ட என் திட்டம் நிறைவேறாது. ஆகவே
தினமும் இங்கேயே வந்து தங்கி வேலை வாங்கினேன்.

கண்ணாடிக்கதவுகளை ஃபிட் செய்ய திங்கள்கிழமை
வரச்சொல்லியிருந்தேன். ஆளைக்காணோம்!!! மரவேலைகளுக்கு
பாலிஷ் போட வரும் ஆளையும் காணோம். இருவருக்கும்
போன அடிச்சு அடிச்சு கைதான் வலிச்சிச்சு. :(( புதன் கிழமை
காலையில் வருவதாக சொன்னாங்க. நான் வந்து
உக்காந்திருந்தேன். அவங்களைக்காணோம்.

பாத்ரூம் கம்மோட் ஃபிட் செய்ய 3 நாள் ஆகும்னு
வியாழக்கிழமை வந்த ப்ளம்பர் சொன்னார்.
பீபீ ஏற ஆரம்பிசிச்சு. அன்னைக்கு வந்த பாலிஷ் காரர்
கையில சாமான் ஏதும் கொண்டு வராம அட்வான்ஸ்
பணம் கொடுங்கன்னு கேக்க நல்லா காய்ச்சு காய்ச்சின்னு
காய்ச்சி,”நாளைக்கு வா வேலையை முடி, பணம் தரேன்னு”
கத்தி அனுப்பினேன். கண்ணாடிக்கதவுகள் வந்து வெச்சாங்க.

இங்கே ஹைதையில் ஒரே ஒரு பிரச்சனை அது இங்கே
இருப்பவர்கள் “லேட் லத்தீபுகள்”. மெல்ல 12மணிக்குத்தான்
வேலையை ஆரம்பிப்பாங்க. மால்கள் கூட 11 மணிக்குத்தான்
திறக்கும்.ப்ளம்பர் டைல்ஸை உடைச்சு மட்டும் வெச்சிட்டாரு.
“கல் ஆகே ஃபிட் கரேங்கே மேடம்”(நாளைக்கு செய்யறாராம்)
அப்படின்னு போயிட்டாரு. நல்ல வேலை கீயிசர் வெச்சிட்டாரு.
12 மணிக்கு வந்து வேலை ஆரம்பிச்சா எப்ப
முடியும்? வெள்ளிக்கிழமை இரவாகியும் பாலிஷ் வேலை
முடியலை. ”இன்று போய் நாளைவா!!””ன்னு அனுப்பி
வெச்சிட்டு வீட்டுக்கு வந்து கட்டையை சாச்சதுதான் தெரியும்.

அடுத்த நாள் சனிக்கிழமை சாமான் எடுக்கறோம். காலேலியிருந்து
பேக்கிங் நடக்குது. அதுக்குள்ள அயித்தானும் பிள்ளைங்களும்
புத்தகங்களை கொண்டு போய் வெச்சிட்டு வந்தாங்க.
10.30மணிக்கு ”அமாலி” சாமான் எடுப்பவங்க வந்தாங்க.
4 பேர் சொல்லியிருந்தோம். 3 பேர்தான் வந்திருந்தாங்க.
பாலிஷ்காரங்க காத்திருப்பதா சொல்லவும் நானும் அம்ருதாவும்
கிளம்பி அங்கபோக கீழே வந்தா சின்னதா ஒரு ஆட்டோ நிக்குது.
நாங்க கேட்டிருந்ததோ பெரிய லாரி. ஒரே லாட்டுல அடிச்சிடலாம்னு!!

என்னய்யா??ன்னு கேட்டா,”ஹிஹி... அந்த லாரி வேற இடத்துக்கு
போயிருக்குன்னு!” சொல்ல இனி கத்தி ஒண்ணும் செய்ய முடியாது,
வேலை முடியனும்னு சாமானை ஏத்தி கொண்டுவந்தாங்க. 4 ட்ரிப்
தான் அடிச்சாங்க. ஆனா அதுக்கே சாயந்திரம் 5 மணி ஆக்கிட்டாங்கன்னா
எம்புட்டு நல்ல காரியக்காரங்கன்னு பாருங்க. :((

4 மணிவரைக்கு சோறு கூட சாப்பிடலை. நானும் அம்ருதாவும்
இங்கே, ஆஷிஷுஅயித்தானும் அங்கே!! எங்க சாப்பிட?
அப்புறம் 3ஆவது ட்ரிப்பின் போது அயித்தான் பாவ்பாஜி
வாங்கிட்டு வந்து கொடுக்க எல்லோரும் சாப்பிட்டோம்.
சக்ஸச்ஃபுல்லா கம்மோட் ஃபிட் செஞ்சிட்டாரு ப்ளம்பர்.
“ஷாம் தக் யூஸ் கர் சக்தே ஹே” அப்படின்னு சொல்ல
7.45மணிக்கு பழைய வீட்டுக்குப்போய் ஹீட்டர் போட்டு
குளிக்கலாம்னு போனா ட்ரான்ஸ்பார்மர் ஒண்ணு வெடிச்சு
நோ கரண்ட். :)) அரைமணிநேரம் வெயிட் செஞ்சு குளிச்சு
ஃப்ரெஷ்ஷாகி திரும்ப கொஞ்ச சாமான் எடுத்துகிட்டு புது
வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, கட்டையை அப்படி சாச்சோம்.

அடுத்த நாள் காலையில் எழுதிருக்கவே முடியவில்லை.
பசங்க பாவம். அதுவும் ஆஷிஷும் அம்ருதாவும்
மேலே ஏறி இறங்கி கால் ஒரே வலி. அடுத்தநாள்
முதல் பசங்க ஸ்கூலுக்கு போய் ஆகணுமேன்னு
நல்லா ரெஸ்ட் எடுக்க வெச்சேன். அந்த வீட்டைப்போல
ரெண்டு பேருக்கும் பஸ் வீட்டு வாசலிலேயே வருது.
அதைவிட குஷி காலையில் 30 நிமிடம் எக்ஸ்ட்ராவா
கிடைக்குது பசங்களுக்கு. அங்கே காலைல 7 மணிக்கு
பஸ். இங்கே 7.30க்குத்தான்.:))

அஷ்ட கஷ்ட பட்டாலும் சொந்த வீட்டுல இருப்பது
ஒரு சுகம். எதுவும் சுலபமா கிடைச்சிட்டா அதோட
அருமை தெரியாதுன்னு சொல்வாங்க. இந்த் வீட்டோட
அருமை பசங்களும் நல்லாவே உணர்ந்திருக்காங்க.
இன்னமும் சின்னச் சின்ன வேலைகள் பாக்கியிருக்கு.
மொத்த அப்பார்ட்மெண்ட்டில் எங்களையும் சேர்த்து
இரண்டு குடும்பம்தான் வந்திருக்கு. பெயிண்ட், வார்னிஷ்
வாசம்... சில ப்ளாட்டுகளில் டும் டும்னு மரவேலை
நடக்கும் சத்தம்... எல்லாவற்றுக்கும் இடையில்
வாழ துவங்கி 11 நாள் ஆயாச்சு.

HOME SWEET HOME!!!!


Tuesday, December 07, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க-4

நவம்பர் 20 சனிக்கிழமை நட்புக்களை கூப்பிடத்திட்டம். ஆனா 14ஆம் தேதி
வரை சுவத்துக்கு பெயிண்ட் கூட அடிக்கலை!!! இப்படியே
விட்டா சரியா வராதுன்னு வூட்டுல சமைச்சு வெச்சிட்டு
காலேலியே புதுவீட்டுல போய் உக்காந்து சூப்பர்வைசர்
வேலை பார்க்க ஆரம்பிச்சேன். எனக்கு இப்ப ஆளை அனுப்பறீங்களா?
இல்லையான்னு பில்டர் கிட்ட சண்டைப்போட்டு திங்கள்கிழமை
பெயிண்ட் அடிக்க ஆரம்ப வேலை நடந்துச்சு. மதியம் சாப்பாட்டுக்கு
அயித்தான் வந்து அழைச்சுகிட்டு போய் திரும்ப கொண்டு வந்து
விடுவாரு. பசங்க ஒரு சாவி எடுத்துக்கிட்டு போய் தானே திறந்து
வீட்டுக்கு வருவாங்க. வீட்டுல துணி காயப்போட்டு, மடிச்சு
பாத்திரம் கவுத்துன்னு பசங்க செஞ்சு எனக்கு டீயும் போட்டு
வெச்சாங்க. தினமும் இதே கதைதான். பாவம் பசங்க
இரண்டு பேரும் உதவி செய்யத்தான் எங்களால மேனேஜ்
செய்ய முடிஞ்சது. குட்டீஸூங்களுக்கு அன்பு முத்தங்கள்.

இங்க வேலை முடிஞ்சதும் ஒரு 6.30மணிக்கு அயித்தான் வந்து
என்னியக்கூட்டிகிட்டு போவாரு. அடுத்த நாளிலிருந்து சோத்தையும்
கட்டி எடுத்துகிட்டு வந்து அங்கயே உக்காந்திட்டேன். வீட்டுக்கு
போனா அந்த நேரத்துல இவங்க எஸ்ஸாகிடறாங்க. அவங்க தடுக்குல
பாஞ்சா நான் கோலத்துல பாயற ஆளாச்சே!!! :))
கறாரா நின்னு சண்டை போட்டு, பேசி பேசி முதல் கோட்டிங்
பெயிண்டிங் முடிச்சாச்சு,( அந்த தைரியம் வந்தப்புறம் நண்பர்களை
விருந்துக்கு அழைச்சோம்.வேலை முடியாட்டி அப்புறமா பாத்துக்கலாம்னு
திட்டம்) பில்டர் சொன்ன மாதிரி 3 நாளில் எல்லாம் வீடு
ரெடியாகாது. முதல் கோட்டிங் பெயிண்டிங் முடிஞ்சு இரண்டு
நாள் கழிச்சு லப்பம், பட்டி பாத்து அப்புறம் உப்புத்தாள் வெச்சு
தேச்சு அப்புறம்தான் செகண்ட் கோட்டிங்.

ஃபேன்,லைட் எல்லாம் பக்கத்துலேயே இருந்து வெச்சோம்.
எங்க பில்டர் தரப்பு எலக்ட்ரீஷியனுக்கு வேலையே தெரியாது
போல. அவர் கன்னா பின்னா கனெக்‌ஷன் கொடுத்துவெச்சிருக்க,
பத்தாதக்கு எங்க இண்டீரியர் டெக்கரேட்டர் தரப்பு எலக்ட்ரீஷியனும்
தன் இஷ்டத்துக்கு வேலை பாக்க அதை சரி செய்ய வந்தாளு
தலையை பிச்சிக்கினு வேலையை பாத்ததானல சாதரண ட்யூப்
லைட் ஃபிக்சிங் கூட இரண்டு நாள் இழுத்துச்சு. கிச்சன்,
பசங்க புத்தக அலமாரி, டைனிங் ஹால் யூனிட் ஆகிய இடத்துல
கண்ணாடி கதவுகள் வைக்கணும். இந்தோ வர்றேன் அந்தோ
வர்றேன்னு அந்த ஆளு வரலை. சனிக்கிழமை காலேல
கொண்டு வந்து வைக்கறேன்னு சொன்னாரேன்னு அங்க போய்
12 மணி வரைக்கும் நிக்கறோம். ம்ஹூம்... வண்டி கவுந்திடிச்சு,
குடை சாஞ்சிடிச்சுன்னு சொல்லிட்டாரு.

அந்தக் கண்ணாடிகள் வெச்சப்புறம்தான் அழகே கூடுதலா இருக்கும்.
அது இல்லாமலே பார்ட்டி. 7.30மணிக்கு பார்ட்டின்னா நானும்
அயித்தானும் 6 மணி வரை புதுவீட்டுலேயே இருக்கோம்.
வீடு க்ளீனிங் எல்லாம் நடக்கணுமே!! அப்புறமா வீட்டுக்குப்போய்
ஃப்ரெஷ்ஷாகி ஓடி வந்தோம்.

இரவு 12 மணி வரை நண்பர்களோட கலகலன்னு இருந்துச்சு
வீடு. எல்லோருக்கும் வீடு பிடிச்சிருந்துச்சு. கல்யாணப்பொண்ணு
மாதிரி நல்லா அலங்காரமா இருக்கு!!! வீடுன்னு ஒருத்தங்க
சொன்னாங்க. ஒரு கல்யாணம் செய்வதும் வீடு கட்டிப்பாப்பதும்
சமமா ஏன் பெரியவங்க சொன்னாங்கன்னு நல்லாவே புரிஞ்சது.
தலைப்பை கொண்டுவந்தாச்சுன்னா முற்றும்னு நினைக்கறீங்களா!!
அதான் இல்ல. இதக்கப்புறம் என்ன நடந்துச்சு????
அடுத்த பதிவுல. :))



Monday, December 06, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க-3

சாமான்களை கண்ட இடத்தில் போட்டுவெப்பதை விட அதை நேர்த்தியா
அழகா எடுத்து வெச்சாலே ஒரு அழகு கிடைக்கும். அதே போல இருக்கும்
இடத்தை சம்யோசிதமா உபயோகிச்சு, சின்ன இடத்தையும் பெரிதாக
காட்டும் மாயாஜாலத்தை INTERIOR DECORATION மூலம் செய்யலாம்.
கப்போர்ட் செய்வதானால் கூட அதை எந்த இடத்தில் சரியான
லைட்டிங்க் விழுவது போல செஞ்சு வெச்ச அந்த இடமே அமர்க்களமா
இருக்கும். இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதுன்னு வெச்சுக்கலாம்.
அதனாலேயே சொந்த வீட்டை ஒரு நல்ல டெகரேட்டர் வெச்சு
வடிவமைக்கணும்னு ஆசை. இதெல்லாம் வாழ்க்கையில் ஒரு தடவை
செலவு செய்யும் சமாச்சாரம்.

அந்த எண்ணத்தில்தான் அவங்க கிட்ட அந்த வேலையைக் கொடுத்தேன்.
ஆகஸ்ட் 16ம் தேதியே பீம் போட அரம்பிச்சு ஆகஸ்ட்30 வயரெல்லாம்
தொங்க்கினு இருந்துச்சு. என் கிட்ட அவங்க சொன்னது செப்டம்பர்1
ஆம் தேதியிலேர்ந்து கிச்சன் வேலை ஆரம்பமாகிவிடும். அக்டோபர்
15க்குள் வீடு ரெடியாகிடும் என்பது திட்டம். கிரஹப்ரவேசம் முடிஞ்சு
அசதியானதுல கொஞ்சம் கண்டுக்காம இருந்திட்டேன். செப்டம்பர்
4 தேதி வாக்கில் வீட்டுக்குப்போய் பார்த்தா??!! வீடு அப்படியே இருக்கு.
எந்த ஒரு வேலையும் நடக்கலை. மெட்டீரியல்ஸ் வாங்க பணம்
வேணும்னு கேட்டிருந்தாங்கனு சொல்லி கொடுத்திருந்தோம்.
”லேபரர்ஸ் ஊருக்கு போயிருக்காங்க, வந்த உடன் வேலை ஆரம்பமாகும்னே!”
சொல்லிகிட்டு இருந்தாங்க. அந்த ஆளு ஊருக்குப்போனவன் வரவே இல்லை. :((

செப்டம்பர் 20 தேதி ஆகியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனக்கு
செம டென்ஷன். இவங்களை நம்பி அக்டோபர் கடைசியோட வீட்டைக்
காலி செய்வதா சொல்லியாச்சு. ஆரம்பிச்ச பிறகு வேற ஒருத்தர் கிட்ட
போகவும் முடியாது. பாதியில நின்ன வேலைன்னு தெரிஞ்சா புதுசா
வரும் ஆளு அதை லாபம் ஆக்கிக்க பாப்பான். தவிர பெருந்தொகை
கொடுத்தாச்சு. ”என்னங்க இப்படி ஆச்சு? ஒரு வேலையும் நடக்கலை!
அப்படின்னு கேக்க அவங்க டென்ஷன் ஆகிட்டாங்க. ”லேபரர் ஓடிப்போனா
நான் என்ன செய்ய??!!” அப்படின்னு சொல்ல நல்லா காய்ச்சிவிட்டோம்.

சரின்னு மரவேலையை ஆரம்பிச்சாங்க. கட கடன்னு சமையற்கட்டு,
மற்ற இடங்கள் ஆரம்பமாச்சு. அப்பவும் ஃபால்ஸ் சீலிங் ஆள் வரலை.:((
இண்டீரியர் டெகரேஷன்ல ஒரு வேலைக்குப்பின்னாடி ஒரு வேலைன்னு
தொடர்ச்சியா இருக்கணும். ஒரு வேலை முன்ன பின்ன ஆனாலும்
மத்த வேலை சரியா இருக்காது. உதாரணமா: ஃபால்ஸ் சீலிங் முடிச்சு,
உப்புத்தாள் வெச்சு தேப்பாங்க. அப்புறம் தான் லப்பம் பட்டி பாத்து
பெயிண்ட் அடிப்பாங்க. அப்புறம் அழகா லைட் வெக்க குடைஞ்சு
லைட் ஃபிட்டிங்.அப்புறம் எலக்ட்ரீஷியன் வந்து கனெக்‌ஷன் கொடுக்கணும்.
இதெல்லாம் நடக்காம மரவேலை ஆரம்பிச்சா!! மரவேலைகளின் மீது
பவுடர் தூள்கள் விழுந்து நாசமாகும். ஆனா எனக்கு இப்படித்தான்
நடந்துச்சு. மரவேலைகள் முடிக்க 10 நாள் இருக்கும்பொழுது
ஃபால்ஸ் சீலிங் வேலை செஞ்சாங்க. மரவேலைகளின் மீது
பேப்பர் போட்டு முடுங்கடா தம்பிகளான்னு!! பேப்பரைக் கொடுத்தும்
அதை அப்படியே போட்டுட்டு அவங்க பாட்டுக்க அவங்க வேலையை
செஞ்சுகிட்டு இருந்தாங்க.

ஃபால்ஸ் சீலிங் காரங்க வேலை முடிஞ்சு அது காய 1வாரமாவது
டைம் கொடுக்கணும். என் நேரம் வருண பகவான் ரொம்பவே
ஆனந்தமா ஆட்டம் போட்டுகிட்டு இருந்தாரு.அதனால வேற
லேட்டாகிடிச்சு.

கீழேயெல்லாம் பெயிண்ட். இந்த லட்சணத்துல தரையை பாலிஷ்
செய்யும் ஆளு மிஷினை வேற இடத்துக்கு எடுத்துகிட்டு போகணும்னு
உடனே வேலையை முடிக்கணும்னு சொல்ல அந்தக் கூத்தும்
நடந்துச்சு. அந்த பாலிஷ் தண்ணி மரவேலைகளின் மீது தெறிச்சு
அதை சுத்தம் செய்வதுன்னு அது ஒரு சோகக்கதை.
இதுக்கு நடுவுல தசராவுக்கு ஊருக்குப்போன ஆளுங்களும் திரும்ப
வரலை. மரவேலைக்காரங்களை எங்கயும் போகவிடாம எங்க
வீட்டுலேயே தங்க வெச்சு வேலை நடக்குது. அவங்க வேலை
நடக்கும் இடத்திலேயே சமைச்சு சாப்பிட்டுக்கிடு இருந்தாங்க.
அதனால அந்த வேலை மட்டும் சுறுசுறுப்பா போய்க்கினு இருந்துச்சு.
தசராவுக்கு புதுவீட்டுக்கு போகமுடியாதுன்னு புரிஞ்சதும்
வீட்டு சொந்தக்காரரிடம் 2 மாசம் எக்ஸ்டண்ட் செஞ்சுகிட்டோம்.
ஆனா வேலைக்காரங்க கிட்ட நவம்பர் 4 கடைசி தேதி. அதுக்குள்ள
எல்லோரும் வேலையை முடிச்சு வெளியே போனாத்தான்,
பில்டர் பெயிண்டிங், பாத்ரூம் ஃபிக்சிங், எல்லாம் செய்வாரு
அப்படின்னு சொன்னோம். பில்டர், இவங்களை வெளியில அனுப்பிட்டு
”எனக்கு 4 நாள் டைம் கொடுங்க நான் வீடு ரெடி தர்றேன்னு”
நம்பிக்கை வார்த்தை சொன்னாரு.

தினமும் நானும் அயித்தானும் புதுவீட்டுக்குப்போய் ஒரு விசிட்
அடிப்பதுன்னு வெச்சிருந்தோம். சில சமயம் நான் 11 மணிக்கு
கிளம்பிப்போய் மதியம் வரை இருந்து வேலை வாங்கிட்டு
வருவேன்.

நடுவுல இண்டீரியர் டெக்கரேட்டரோட பொண்ணுக்கு (இஞ்சினியரிங்
படிக்கற பொண்ணு) வைரல் ஃபீவர் வந்திருச்சுன்னு அவங்க
டென்ஷனாகி வீட்டை சரியா கவனிக்கலை. வேலை சரியா
நடக்கலையேன்னு எங்க கவலை. அவங்களே மெட்டீரியல்ஸும்
பாத்துகிட்டதனால பணம் கொடுக்கனும், பணம் கொடுக்கணும்
போன் போடுவாங்க. வேலை சரியா நடக்காம பணம் மட்டும்
கேக்கறாங்களேன்னு பயங்கர கோபம். அதுல கொஞ்சம் தகராறு.
அப்புறம் அவங்க பொண்ணுக்கு சரியானதும் கொஞ்சம் ரிலாக்ஸ்டானாங்க.


ஹேண்டில் வாங்குவது, விளக்குகள் வாங்குவதுன்னு ஹோல்ஸேல்
கடைக்கு அலைஞ்சு திரிஞ்சு வாங்கினேன். துணைக்கு இண்டீரியர்
டெக்கரேட்டர் அம்மாவும் வந்தாங்க. திரும்ப திரும்ப அவங்க கிட்ட
ஒரே ராமயணம் பாடிக்கிட்டு இருந்தோம். நவம்பர் 10ஆம் தேதிக்குள்ள
வீடு கொடுத்திருங்க. எங்களுக்குமத்த வேலையிருக்குன்னு கிளிப்பிள்ளைக்கு
சொல்ற மாதிரி சொல்லிகிட்டே இருந்தோம்.

”பணம் பணம்” அப்பப்பா இந்த வார்த்தையை கேட்டாலே பத்திக்கிட்டு
வருது இப்ப. அட்வான்ஸா பணம் கொடுத்தாத்தான் வேலை நடக்கும்.
ஏதோ கொஞ்சமா வாங்குவாங்களா? அதுவுமில்லை 75% சதவிகிதம்
போல வாங்கிக்கறாங்க. பணத்தைக் கொடுத்திட்டு பக் பக்குன்னு
உக்காந்திருக்கணும். வேலை நடக்கற வரைக்கும் நிச்சயமில்லாத
நிலையில அவ்வளவு பணம் கொடுக்கணும்னா கோவமாத்தான் வருது.
சிலருக்கு நான் அட்வான்ஸ் தரமாட்டேன்னு சொன்னா எங்க
வேலையை வாங்கிகிட்டு பணம் கொடுக்காம போயிடுவோமோன்னு
ஒரு நினைப்பு. நாங்க நம்பணும். ஆனா அவங்க நம்ப மாட்டாங்க.
என்ன மாதிரியான உலகமடா சாமின்னு நானும் அயித்தானும்
வெறுத்திட்டோம்.

அப்படி இப்படின்னு நவம்பர் 14 வீடு ரெடியானிச்சு.அதாவது மரவேலை,
ஃபால்ஸ் ஸீலிங் முடிஞ்சு அலங்கார விளக்குகள் வெச்சாச்சு.
மரவேலைகளுக்கு பாலிஷிங் வேலையும், கண்ணாடிக்கதவுகள்
வைக்க வேண்டியது பாக்கியிருந்துச்சு. 20ஆம் தேதி நண்பர்களுக்கு
விருந்து.

பார்ட்டி நடந்துச்சா??!!! அப்புறம் என்னாச்சு? அடுத்த பதிவுல.



Friday, December 03, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க-2

எப்படியோ லோன் வாங்கி பணம் கொடுத்ததுல நிப்பாட்டினேனா!!
வீட்டை ரெஜிஸ்ட்ர் செஞ்சாச்சு. இனி அடுத்த கட்டம். அதான்
கிருஹப்ரவேசம். முடிஞ்சும் முடியாமலும் இருக்கும் சமயத்துல
தான் புதுமனை புகுவிழா செய்யணும்னு சொல்வாங்க. சரி செப்டம்பர்
மாசம் வெச்சுக்கலாம்னு ப்ளான் செஞ்சிருந்தேன். ஆனா வெளியூரில்
இருந்து வரவேண்டிய உறவினர்களுக்கு முன்னக்கூட்டியே சொன்னத்தானே
டிக்கெட் புக் செஞ்சுக்க முடியும்!!

சரி நல்ல நாள் பார்க்கப்போனேன். என் நேரம் செப்டம்பர் மாசம்
எங்க இரண்டு பேருக்கும் ஒத்துவரும் நல்ல நாளே இல்லை. அப்ப
ஆகஸ்ட் மாசமே கிருஹப்ரவேசம் செஞ்சாகணும். இதை விட்டா
நவம்பரில் தான் கிருஹப்ரவேசம் செய்ய முடியும்!!! இதை நான்
கொஞ்சமும் எதிர் பார்க்கவேயில்லை. இவ்வளவு சீக்கிரமா எப்படி??
வேற வழியில்லை 20 நாளில் கிருஹப்ரவேசம். அம்மா,அப்பா
கிரஹப்ரவேசத்துக்கு 2 நாள் முன்னாடி வந்தாங்க. அயித்தானோட
அண்ணி வந்திட்டாங்க. அவங்க அக்கா,மாமாவால வரமுடியாத
சூழல். இதனால நாளைத் தள்ளவும் முடியாது. சீக்கிரமா மரவேலைப்பாடுகள்
முடிச்சு நவராத்ரியை புது வீட்டில் கொண்டாடனும். வீட்டு வாடகையும்
கட்டி, லோனையும் கட்டின்னு இரட்டைக்குதிரை சவாரி செய்ய
முடியாது. சரின்னு ஏற்பாடுகளை செஞ்சோம்.

கிருஹப்ரவேசம் உறவினர்கள் வரைக்கும். அதன்பிறகு தனியா
நண்பர்களைக்கூப்பிட்டு பார்ட்டி கொடுத்துக்கலாம்னு ப்ளான்
செஞ்சோம். கிருஹப்ரவேசமும் ரொம்ப நல்லாவே நடந்துச்சு.






அட புதுமனைபுகுவிழா பத்தி சொல்ல ஆரம்பிச்சதுல அதுக்குமுன்னால
நடந்த மேட்டரைச் சொல்ல மறந்திட்டேனே!!
பில்டர் 4 சுவரு மட்டும்தான் தந்தாருன்னு சொன்னேன்ல,
முழு வீடாக்க மரவேலைப்பாடுகள் முக்கியமாச்சே. துணிமணி
வைக்க இடம் வேணுமே!! சரி நல்லதொரு இண்ட்ரீயர் டெகரேட்டரை
கூப்பிட்டு தரமான பொருட்களால நம்ம பட்ஜட்டுக்குள்ள முடிக்கச்
சொல்லணும்னு நினைச்சோம். ஆனா யாரை கேப்பதுன்னு புரியலை.

அப்பதான் அயித்தானின் அலுவலகத்துல இருக்கும் ஒருத்தர்
தனக்கு தெரிஞ்சவர் ஒருவர் இருக்காருன்னு சொல்லி கூட்டிகிட்டு
வந்தார். நாங்க சொன்னதையெல்லாம் கேட்டுகிட்டாரு. இமெயிலில்
ப்ளான் அனுப்புவதாகவும் அதைவெச்சு நீங்க மாற்றம் ஏதும்
வேணும்னா செய்வதா சொன்னாரு. அனுப்பி வெச்ச ப்ளான் களில்
சில மாற்றங்கள் செய்யச் சொன்னேன்.

”நீங்க என் ஆபிஸூக்கு வாங்க மத்ததெல்லாம்(!!) பேசலாம்னு!!”
போனோம். அவரு வீடு/ஆபிஸ் இருப்பது மெஹதிபட்டணம்.
இங்கேயிருந்து 15 கிமீட்டருக்கு மேல இருக்கும். போனோம்.
பேசினோம். இண்ட்டீரியர் டெக்கரேட்ட்டர்களுக்கு அவங்க
தரும் டிசைனுக்கு ஒரு ரேட், மெட்டீரியல்ஸ் வரவழைச்சு,
தேவையான ஆள்களை கொடுப்பதுக்கு ஒரு ரேட். மொத்தமா
எல்லாத்தையும் முடிச்சு கொடுப்பது படி காண்ட்ராக்ட்.
அவர் கேட்ட ஃபீஸெல்லாம் ஓகே. ஆனா நாங்க சொன்ன பட்ஜெட்டுக்கு
சரி சரின்னு சொல்லிட்டு போக போக அவரு,” பேங்கல 10 லட்சம்
வெச்சுக்கங்க!!! நான் கேட்கும் போது கொடுத்தாத்தான் நல்லா
செய்ய முடியும்னாரு!!!” பாருங்க, நானும் அயித்தானும்
மயக்கம் போட்டு விழாம  இருக்க உக்காந்திருந்த சேரை
பத்திரமா பிடிச்சுகிட்டோம். இதுல இவரு அடிக்கடி வந்து
மேற்பார்வை செய்ய மாட்டாராம். 3 தடவை மட்டும் இலவசமா
செய்வாராம். அதற்கப்புறம் ஒரு தடவைக்கு 3000 ஃபீஸ்!!!
நாம போய் அல்லாட முடியாதுன்னுதான் காண்ட்ராக்டுக்கு
விடுறது. அதுவும் செய்ய மாட்டாருன்னா!!

அடுத்த தெருவுல ஒரு வீட்டுல அவர் போட்ட டிசைன்ல
வேலை நடந்துக்கிட்டு இருப்பதை போய் பார்த்துட்டு
வரச்சொன்னாரு. ப்ளைவுட்டுதான் உபயோகிச்சிருந்தாலும்
அதுவும் தரமானதா தோணலை. யோசிச்சு சொல்றோம்னு
வந்திட்டோம். பத்து லட்சம்லாம் டூமச், நம்மால ஆவாது.
நம்ம பட்ஜட்ல முடிக்கும் ஆளைப்பாப்போம்னு!”நானும்
அயித்தானும் பேசிக்கிட்டு வீட்டுக்கு வந்தோம்.

அந்த ஆள் கிட்ட வேலை கொடுக்கப்போவதில்லைன்னு
சொன்னதுக்கு அவரு அப்படின்னா நான் டிசைன் போட்டுக்
கொடுத்ததுக்கு 30000 பணம் கொடுக்கணும்னு சொல்லிவிட்டாரு.
அந்த டிசைன் எங்களுக்கு வேண்டவே வேண்டாம், திருப்பி
கொடுத்திடறோம், 1 நையா பைசாக்கூட கொடுக்க மாட்டோம்னு
சொல்லிட்டோம்.

சரி! இனி யாரைக்கேட்பது? என்ன செய்வது. ஒண்ணும்
புரியலை. எங்க அப்பார்ட்மெண்ட்ல லிஃப்ட பலநாள்
வேலை செய்யாது. அன்னைக்கும் அப்படித்தான் ஆகி
நானும் அயித்தானும் பேசிக்கிட்டே மாடிப்படி ஏறிகிட்டு
வந்தோம். அப்போது எங்க அப்பார்ட்மெண்ட் நண்பரும்
வந்தாரு. வீட்டு வேலை ஆரம்பிச்சீங்களான்னு!! கேக்க
எங்க சோகக்கதையைச் சொன்னோம்.
எனக்குத் தெரிஞ்சவரோட மருமகள் செய்யறாங்க, அப்படின்னு
சொல்லி நம்பர் கொடுக்க, பேசினோம்.எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே
அவங்க இருப்பது வசதியாக போய் உடன் வந்தாங்க. அவங்க
இப்ப செஞ்சுகிட்டு இருக்கும் இடத்தை கூட்டிகிட்டு போய்க்காட்டினாங்க.
வேலை நல்லா இருந்துச்சு.


எங்க புதுவீட்டைக்கூட்டிக்கிட்டு வந்து காட்டி, எங்க தேவைகளைச்
சொன்னோம்.CADDயில் டிசைன் போட்டா 30000 ஆகும். நான்
போட்டோவா காட்டறேன்னு சொன்னாங்க. சரின்னு சொன்னோம்.
எங்க பட்ஜட் தாண்டாம செய்யணும்னு திரும்ப திரும்ப சொன்னோம்.
புது வீடு இரண்டாவது மாடிதான்னாலும் அயித்தானுக்கு ஃபால்ஸ்
சீலிங் போட்டு அலங்கார விளக்குகள் வைக்கணும்னு ஆசை.

சரின்னு அதுக்கும் சேத்து பேசினோம். முதலில் ஃபால்ஸ் சீலிங்
வேலை அடுத்து மரவேலைகள் அப்படின்னு முடிவு செஞ்சாங்க.
ஆகஸ்ட் 15  அட்வான்ஸ் பணம் கொடுத்து வேலைகளை ஆரம்பிக்கச்
சொன்னோம்... ஆகஸ்ட் 30 கிருஹப்ரவேசத்தின் போது
ஃபால்ஸ் சீலிங்கிற்கு பீம் போட்டு, விளக்குகளுக்கு வயர்லாம்
தொங்கிகிட்டு இருந்துச்சு....

 அப்புறம்!!??!!




Thursday, December 02, 2010

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!!!!!

நம்ம சொந்த வீடு நம்ம விருப்பத்துக்கு தகுந்த மாதிரி இருக்கணும்னு
நினைப்பது தப்பில்லையே!! அந்த நினைப்போட ஹைதைக்கு
வந்து இறங்கியதிலேர்ந்து வீடு தேட ஆரம்பித்தோம். என்னைப்
பொறுத்த வரை வீட்டில் சமையற்கட்டும், பாத்ரூமும் வசதியோட
இருக்கணும். ஆனா நம்ம நாட்டுல அந்த இரண்டு இடமும்
ரொம்பவே சின்னதா இருக்கும்!!! அதனாலேயே பல வீடுகளை
வேணாம்னு சொல்ல வேண்டியதா போச்சு. என் மனசுல தனிவீடு
ஆசை எப்பவும் இருக்கும். அதுவும் ட்யூப்ளஸ் ஹவுஸ் ரொம்பவே
இஷ்டம். அப்படிப்பட்ட வீடுகளை பாத்தோம். அதுவும் கூட
சொல்லிக்கற மாதிரி இல்லை.:( நல்லா இருந்தா ஊருக்கு
கடைசியில இருக்கு, இல்லாட்டி விலை நம்ம பட்ஜட்டுக்கு
அடங்காம போனிச்சு. :(((

ஹைதையில் பிரசித்தமான பல பில்டர்கள் ப்ராஜக்ட்களைப்
போய்ப் பார்த்தோம். முன்னாபாய் எம் பீபீ எஸ்ஸில் சொல்வது
போல,”ஆரம்பிச்ச உடனேயே முடிஞ்சு போகும்” டைப்பா
தெரிஞ்சிச்சு. சில இடங்களில் அம்புக்குறி போட்ட போர்டு
இருக்கும் ஏரியாவை சுத்தி சுத்தி அது கடைசியில் ஊர்கடைசிக்கு
போனுச்சு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்படி
வீடு பாப்பதிலேயே போய் ஒரு நேரத்துல வெறுத்துப்போய்
கொஞ்ச நாளைக்கு கேப் விடுவோம்னு விட்டோம். எங்க
நல்ல நேரம். சதுர அடி விலை நல்லா குறைஞ்சிச்சு.

திரும்பவும் தேட ஆரம்பிச்சோம். இந்த வாட்டியும்
சரியா அமையலை. அப்பத்தான் நாங்க குடியிருந்த
அப்பார்ட்மெண்டில் இருக்கும் நண்பர் தனது நிலத்தை
அப்பார்ட்மெண்ட் கட்ட விட்டிருப்பதாச் சொன்னார்.
எங்களை கூட்டிகிட்டுப்போய் காட்டினார். சரியா கட்டப்படாத
நிலையில அமைப்பு புரியலை. வேணாம்னு சொல்லிட்டேன்.
ஆனா கொஞ்சம் தளம் போட்ட நிலையில் திரும்பவும்
கூட்டிகிட்டுப்போனார். கிச்சன் நான் நினைச்சபடி இருக்கு.
3 பெட்ரூம், 3 பாத்ரூம். ஆனா ஒரே ஒரு பாத்ரூம்
மட்டும் பொதுவா இருக்கு. மத்த இரண்டும் அட்டாச்ட்.
சரி எல்லாமே சரியா அமையாது ஏதாவது ஒரு வகையில
காம்ப்ரமைஸ் செஞ்சுதான் ஆகணும்னு!! ஓகே சொல்லும்
முன்னாடி பசங்களை கூட்டிகிட்டுப்போயி காட்டினோம்.
அவங்களுக்கும் பிடிச்சிருக்கணும்ல!!!

ஆஷிஷுக்கு செம குஷி. ஏன்னா?? இந்த வீட்டுலசாமிக்கு
தனியா சின்னதா ஒரு ரூம். :)) அதனால ஐயாவுக்கு
தனி ரூம் கொடுக்க வாய்ப்பு இருக்கு. அம்ருதம்மாவுக்கும்
தனி ரூம். எனக்கும் அயித்தானுக்கும் இந்த வீட்டில்
இருக்கும் சிட் அவுடு ரொம்ப பிடிச்ச இடம். ரெண்டு
சேர் போட்டு அமைதியா உக்காந்து டீ குடிக்கலாம். :))
சரி வாங்கிடலாம்னு முடிவு செஞ்சு பணம் அட்வான்ஸ்
கொடுத்திட்டு லோனுக்கு அப்ளை செஞ்சோம். லோன்
வாங்க தகுதி இருந்தாலும் 2 பேங்குல என்னவோ முடியாதுன்னு
சொல்ல திக்குன்னு ஆயிடிச்சு. ஒரு வழியா இன்னொரு வங்கி
லோன் கொடுத்தாங்க. பணத்தை வாங்கி நண்பரிடம்
கொடுக்கும் வரை உயிரே இல்லை.

அப்புறம் என்ன நடந்துச்சு????? அடுத்த பதிவுல



Saturday, June 20, 2009

அன்புள்ள அப்பா...

ஹலோ ரமணி சார்,

இன்றைக்கு தந்தையர் தினம். அதான் உங்களுக்கு
ஒரு கடிதம் எழுதலாம்னு... (ரொம்ப நாளாச்சுப்பா)

போன்ல யாரு கூட பேசினாலும் முதல் வாக்கியம்
”வணக்கம் ரமணி” என்ற சுய அறிமுகம் + வாழ்த்துக்களுடன் தான்
உங்க உரையாடல் துவங்கும்.

வாழ்த்தும்போது வளமான வாழ்வு, மனம்போல வாழ்வு
இதைத் தவிர வேறு வாழ்த்து வாயில் கேட்டதேயில்லை.


ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை மட்டுமல்ல
எனக்கு எப்போதும் தந்தையர் தினம் தான்.

பக்தி செய்யும் போது இறைவனை தந்தையாகத்தான்ப்பா
பார்க்கிறேன்.

சூர்ய வம்சம் படத்தில் ஒரு வசனம் வரும் அப்பா.(உங்களுக்கு
மிகவும் படமாச்சே) உளிக்கு தப்பின கல் சிற்பம் ஆவதில்லை.

ஆமாம், என்னை எப்படி எல்லாம் செதுக்கினீங்க. அதன்
பலனை நான் இப்ப சந்தோஷமா அனுபவச்சிகிட்டு இருந்தேன்.

அடிக்கடி டூருக்கு போகும் வேலை உங்களுக்கு. ஊருக்கு போகும்
அந்த நாட்களில் உங்கள் லுங்கியைக்
கையில் பிடித்துக்கொண்டுதான் என் இரவுகள் கழியும்.
பல முறை ஜுரம் கூட வந்திருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.

3 மாதம் சிலோனை சுற்றி பார்க்கப்போகிறேன் என்று
கிளம்பியவர், ஒரே மாதத்தில் திரும்பிய காரணம்
அங்கே என் மற்றும் தம்பியின் வயதொத்த பிள்ளைகள்
இருவரை பார்த்ததும் எங்கள் ஞாபகம் அதிகமாகி
திரும்பியது தான் என தெரிந்த போது பலரின்
புருவம் உயர்ந்தது.


தினமும் இரவு நான் தூங்கிய பிறகு வீட்டிற்கு வரும்
நீங்கள் எனக்காக வாங்கி வந்த தின்பண்டத்தை நான்
தூக்கத்தில் எழுந்து திண்ணாவிட்டால் எப்படி கோபப்படுவீர்கள்??

சைக்கிள் கற்றுக்கொண்டதற்கு, வேகமாக டைப் அடிப்பதற்கு
என எல்லாவற்றிற்கும் எனக்கு நீங்கள் தரும் ட்ரீட் இதோ.
இன்றும் இதில்லாமல் என்னால் முடியாது.




நீங்கள் வைக்கும் ரசத்துக்கு நானும் தம்பியும் அடிமை.
உங்களைப் போல் நானும் நல்ல ரசம் வைப்பதை ருசித்து
நீங்கள் அடித்த கமெண்ட்” என் கை மணம் அப்படியே உன்
கிட்ட இருக்கு”!!!

சமீபத்தில் எனக்கு கைவலி அதிகமாகி அவதி பட்ட பொழுது
போனில் நீங்கள் ,”புதுகைக்கு கிளம்பி வாம்மா! நான் சமைத்து
போடுகிறேன்” என்று சொன்ன பொழுது நீங்கள் அம்மாவா? அப்பாவா?
என நினைத்து குழம்பினேன்.

தந்தையின் நிலை நாம் பெற்றோர் ஆகும் போதுதான் தெரியும்.
இன்று என் பிள்ளைகளை வளர்க்க நீங்கள் கற்றுக்கொடுத்த
பாதைதான்.


என் பதிவுகளில் நிறைய்ய இடங்களில் நீங்கள் இருப்பீர்கள்
அப்பா. அந்தப் பதிவுகளின் தொ்குப்பு சில இங்கே.

கலர் டீவி

உங்கள் பிறந்த நாள் பதிவு

சைக்கிள் கற்ற அனுபவம்

இனியும் உங்களைப் பற்றி நிறைய்ய எழுதுவேன் அப்பா.

மனமார்ந்த தந்தையர்தின வாழ்த்துக்கள்.

அன்னை அன்பைத் தருகிறாள். தந்தை அறிவைத் தருகிறார்
என்பது உலக வழக்கு. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு
தந்தைக்கும் என் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
எம்டன் மகள்

Tuesday, January 13, 2009

பிறந்த நாளுக்கு வீட்டில் இல்லாமல் ......

எனது திருமணத்திற்கு முன்பு வரை அப்பாவின்
பிறந்த நாளின் போது அவர் எங்களுடன் இருந்ததே இல்லை!!

”கொஞ்சம் முன்னாடியே அங்கே போனால் என்ன?”
என்றால் கோபப்படுவார்.

அப்பாவின் பிறந்த நாளுக்கு அது செய்யணும்?
இது செய்யணும்னு நாங்க நினைச்சாலும்
விட மாட்டார். வீட்டில் இருந்தால் தானே
பிரச்சனை என்று கிளம்பிப் போய்விடுவார்.

பிறந்தநாளுக்கு புத்தாடை உடுத்த மாட்டார். 2 வயதில்
தகப்பனை இழந்து இளமையில் வறுமையை அனுபவித்தவன்!
இப்பொழுதென்ன புத்தாடை என்பார். (தீபாவளிக்கும்
இதே நிலைதான். சாவகாசமாக எழுந்து குளிப்பார்.
ஒரு நாள் கூட கங்காஸ்னானம் கிடையாது.
புத்தாடை கிடையாது அப்பாவிற்கு!!! )

அப்படி எங்கேதான் செல்வார்?

அப்பா போகும் இடத்தில் கூட ஒரு பிறந்த நாள்
கொண்டாட்டம் இருக்கும்! லட்சக் கணக்கான
பேர்கள் கூடி இருப்பார்கள் அங்கே!!!!

ஜனவரி 14 அப்பாவின் பிறந்த நாள்!
அன்றுதான் ஐயப்பனுக்கும் பிறந்த நாள்.
ஐயப்பனுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாட
சபரி மலைக்குச் சென்று விடுவார் அப்பா.

அப்பாவிற்கு மிகவும் பி்டித்த பாடல்
1975 ஆம் ஆண்டு வெளிவந்த
சுவாமி ஐயப்பன் படப் பாடல்.
தமிழில் டீ.எம்.எஸ் அவர்களின்
குரலில் சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்”

தமிழில் கிடைக்காததல் மலையாளத்தில்
அந்தப் பாடல்.



அச்சாணி படத்தில் ஜானகி அம்மா பாடிய
“மாதா உன் கோவிலில் மணி தீபம்
ஏற்றினேன்” பாடலை “சாஸ்தா உன் கோவிலில்
நெய் தீபம் ஏற்றினேன்” என்று அப்பா பாடுவார்.
மிக பிடிக்கும்.

அப்பா- என் உலகத்தின் முதல் ஆண்மகன்.
என்னை தன்னம்பிக்கையுடன் வளர்த்தவர்.
பொத்தி பொத்தி பெண்னை வளர்ககாமல்
கடைக்கு போவது, வங்கி விவகாரம்
என பலதும் பழக்கினார்.

நானும் ஒரு எம்டன் மகள்!!
அதைப்பத்தி படிக்க இங்கே: :)


ஜனவரி 1 அப்பா, அம்மாவுடன் இருந்தோம்.
கோவிலுக்குச் சென்று வரும் வழியில்
சீடி கடைக்குச் சென்று வேண்டிய சீடிகளை
வாங்கும் பொழுது அந்த சீடிக்கள் கண்ணில்
பட்டது. வாங்கிக் கொண்டு வந்து வண்டியில்
அமர்ந்திருந்த அப்பாவிடம் கொடுத்தேன்.

“ஹை! தேங்க்யூ! தேங்க்யூ!!” என்று
குழந்தையாக குதூகலித்தார். அது
அப்பா மிகவும் விரும்பும் “தில்லானா
மோகனாம்பாள், மணல்கயிறு, கல்யாணப்
பரிசு” பட சீடிகள்.

நான் வாங்கிக் கொடுத்த புடவையை
அம்மா புத்தண்டன்றே கட்டிக்கொள்ள,

அப்பா,” இந்த டீஷர்டை பர்த்டேக்கு
போட்டுக் கொள்கிறேன்ம்மா. அதுக்குள்ள
பேண்டும் தெச்சிக்கரேன்” என்றதும்
சந்தோஷமாக இருந்தது.
(கடந்த 3 வருடங்களாக நானும் தம்பியும்
அதிகம் வற்புறுத்துவதால் புத்தாடை
அணிகிறார் அப்பா)

அப்பாவுக்கும், ஐயப்பனுக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்