Showing posts with label 2015 (முக்கியமானவை). Show all posts
Showing posts with label 2015 (முக்கியமானவை). Show all posts

Tuesday, June 30, 2015

திரும்பவும் ஆரம்பிச்சிருக்கேன்!!!!!!!!!!!!!

வர வர பதிவுகள் போடுவதே ரொம்ப குறைவா போயிடிச்சு. மொபைலில் ஃபேஸ்புக் பாத்திடறதால அங்கயே நிறைய்ய சுத்தறமாதிரி தெரியுது. :)ஆனா உண்மையில் பதிவுகள் போட முடியாம போனதுக்கு காரணம் வலி. 6 வருஷமா அன்போட என் கூட இருக்கற கைவலி இப்ப துணைக்கு கால்வலியையும் சேத்து கூட்டி வந்திருக்கு. இதுவும் முன்ன இருந்தது. ஆனா ரொம்ப ஹாய் சொல்லாம அடக்கி வாசிக்கும். ஆனா இப்ப சமைக்கணும்னு நினைச்சாலும் அழுவாச்சியா வரும் சூழல்.

அரை மணி சமையற்கட்டில் நின்னா கால் வலி. அப்படியே கால் டைட்டாகி வலி ஜாஸ்தி. தோசை போடுறதே கஷ்டம்னா, இதுல காய் வெட்டி, சமையல் செஞ்சுன்னு மத்த வேலைகள் செய்ய செய்ய சதை முறுக்கிகிதா இல்லை நரம்பான்னு தெரியாம அவஸ்தை.

அடிக்கடி ஃபேஸ்புக் பக்கமே சுத்திகிட்டு இருக்கேன்னு சொன்னேன்ல. அதுவும் நல்லதா போச்சு. நம்ம  ஃப்ரெண்டு நுனிப்புல் பிளாக் உரிமையாளர்  உஷா ஃபேஸ்புக்ல தானும் கால் வலிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறதா சொல்லி பதிவு போட்டிருந்தாங்க. சென்னைக்கு வந்து கொஞ்ச நாளே ஆகியிருக்கு. இதுல எந்த டாக்டரை பார்க்கன்னு தெரியாம அவஸ்தையில் இருந்த நேரத்துல அவங்க பதிவு ஆபத்பாந்தவனா வந்திருக்கு.

அவங்க குறிப்பிட்ட அந்த மருத்துவரை போய் பார்த்தேன். கன்சல்டேஷன் ரூமுக்கு போனா பயங்கர அதிர்ச்சி. வழக்கமான டேபிள் சேரைக்காணோம்.
ரிவால்விங் சேரை பிடிச்சுகிட்டு ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தார். அவர் தான் டாக்டரான்னு டவுட் எனக்கு. பின்ன டாக்டருக்கான அடையாளமான வொயிட் கோட் கூட போடாம ஸ்போர்ட்ஸ்மென் மாதிரி ட்ரெஸ் செஞ்சுகிட்டு நின்னா!!
(ஹாஸ்பிட்டலில் வேலை பார்ப்பவங்களும் இந்த காஸ்ட்யூம் தான்) ரொம்ப நல்ல டாக்டர். அனுபவ சாலி.

உக்காருங்கன்னு சொன்னார். என்ன பிரச்சனைக்கு கேட்க என் வலி பிரதாபங்களை சொன்னேன். கூடவே வந்திருந்த தெரபிஸ்ட் இடம் இவங்களுக்கு விட்டமின் டி & ப்ளட் டெஸ்ட் மட்டும் எடுங்க. கண்ணுலயே அம்புட்டு ஸ்ட்ரெஸ் தெரியுது. வேற ஏதாவது டெஸ்ட் எடுத்தா மயக்கமாகிடுவாங்க போல இருக்காங்கன்னு சொல்லிட்டு, ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்துக்காதீங்கன்னு அட்வைஸ் செஞ்சார். ரத்தம் கம்மியா இருக்கும்னு பாத்த உடனேயே சொல்லிட்டாப்ல. REHAB னு ப்ரிஸ்க்ரைப் செஞ்சு எழுதி கொடுத்தாப்ல.

நான் போனது போயஸ் கார்டன் பிராஞ்சுக்கு. நமக்கு வேளச்சேரி பிராஞ்ச் தான் பக்கம்னு சொன்னதால என் பேப்பரை அங்கே அனுப்பி வெச்சாங்க.  மருந்து மாத்திரை ஏதுமில்லை. ஆனா அவங்க சொல்லிக்கொடுக்கிற எக்சஸை செய்யணும். அதுக்கு தெரபிஸ்ட்  இருக்காங்க. ஒரு 4 நாள் செஞ்சதுக்கு வலி ஜாஸ்தி ஆகிடிச்சு. இத்தனை நாள் இதெல்லாம் செஞ்சதில்லையே (இத்தனைக்கு 6 மாசம் முன்னாடி வரை யோகா செஞ்சுகிட்டு இருந்தேன். டெயில் வாக்கிங் விடாம போவேன்) அதுக்கு ஃபிசியோன்னு 3 நாள் கொடுத்தாங்க பாருங்க. அது கிட்டத்தட்ட சுளுக்கு எடுக்கற மாதிரி. வலிக்கும் மேல வலி அது. ஆனா தசைகள் இளகினது ஆச்சர்யம்.

இப்ப இது தொடருது. ரொம்ப வீட்டு வேலை செய்யாதீங்கன்னு சொல்லியிருக்காங்க. ஆனா பிள்ளைகளுக்கு ஸ்கூல் திறந்திட்ட நிலையில் கஷ்டம். மேனேஜிங். :) அந்த ட்ரீட்மெண்ட்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. வயசானவங்க, நடக்க முடியாதவங்க, முழங்கால் வலி இருக்கறவங்கன்னு நிறைய்ய பேரை அங்கே பாக்கறேன்.  மத்தவங்களுக்கு உதவியா இருக்கும்னு அந்த ஹாஸ்பிடல் டீடயில்ஸ் கீழே. முடிஞ்சப்ப வந்து ஹாய் சொல்வேன். மறந்திடாதீங்க. :)

sparrc Institute

Tuesday, May 05, 2015

இதை எப்படி ஹேண்டில் செய்வது?

சமீப காலமா நான் கவனிச்சுக்கிட்டு வர்ற விஷயத்தை உங்க கிட்ட பகிர்ந்து ஒரு முடிவு தெரிஞ்சிக்க ஆசை.  இப்பல்லாம் மகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால வயதான கணவன் மனைவி இருவரும் தனியே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்னு வெச்சுக்கலாம்.

ரிட்டயர்ட் ஆன உடனே இல்ல, ஒரு 80 & 75 வயதுள்ள தம்பதிகள்னு வெச்சுப்போம்.  பெண்ணுக்கு எப்போது ரிட்டர்ய்மெண்ட் கிடையாது என்பது எங்க அம்மம்மாவோட ஸ்ட்ராங்கான அபிப்ராயம். எந்த ராஜா எந்த பட்டணம் போனாலும் சமைச்சுத்தான் ஆகணும். (கேட்டரிங்ல வாங்கி சாப்பிடறது எல்லாம் சிலருக்கு செட் ஆகாது)

இந்த மாதிரி வயதுகளில் இருக்கும் பல தம்பதிகளை பாத்திருக்கேன். அந்த காலத்தில் பத்து வயசு வித்தியாசத்துல கல்யாணம் செஞ்சு கொடுப்பது சர்வ சாதாரணம் என்பதால  அந்த வயசான ஆணுக்கு 85 வயசும், 75 வயசான மனைவியும்னு வெச்சுக்கோங்க.  எனக்கு வயசாகிடிச்சு அப்படின்னு ஆண் சொல்லிக்கிட்டு ரொம்ப அலட்டிக்காம ஓய்வா இருப்பதை பார்க்கிறேன். ( 70 வயசுலேர்ந்து ஆண்கள் சொல்லும் விஷயம் எனக்கு வயசாகிடிச்சு) பெருசா எந்த பொறுப்பையும் எடுத்துப்பதில்லை.  அதிலும் அவங்களுக்கு ஏதும் உடல்நிலை சரியில்லாம இருந்தா இன்னும் அதீத கவனிப்பு கொடுக்கப்படும்/படணும் என்பது எழுதாத விதி.

எல்லாம் சரி. ஆனா அவங்களை விட வயசு கம்மிங்கறதால அந்த அம்மாவுக்கு எல்லாம் செய்ய முடியும்னு எப்படி நினைக்கத்தோணுது?
ஒரு குழந்தை உண்டானதுமே உடலில் மாற்றங்கள். 2 அல்லது 3 குழந்தை பேறு, அதற்கப்புறம் குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன், இதைத் தவிர அவங்களுக்கு ஏதும் ஆப்பரேஷன்கள் ஆகியிருந்தா அது....  மெனோபாஸ் அவஸ்தைகள், தெரியாமலே இருந்த ஹார்மோன் பிரச்சனைகள், பெண்/மகன் திருமண வேலைகள், அவர்களின் பிள்ளை பேறுன்னு பெண்ணுக்கு எத்தனையோ உடல் அவஸ்தைகள் இருக்கும்போது உண்மையா பாக்க போனா வயசாகிடிச்சுன்னு அந்த அம்மாவைல்ல உட்கார வெச்சு அந்த  ஐயா பாத்துக்கணூம்???!!!!!

ஆனா தனக்கு வயசு கூட என்பதால  சலுகைகள் தனக்குத்தான் கிடைக்கணூம்னு நடந்துக்கறவங்களை பார்க்கும்போது ரொம்ப கோவம் வருது. எத்தனை வயசானாலும் பெண் தன்னை கவனிப்பதை விட்டு விட்டு கணவரை மட்டுமே கவனிக்கனும் என்பது எந்த விதத்தில் நியாயம். இதில் சில விதி விலக்குகளும் பார்த்திருக்கேன். முழங்கால் வலியால் அவதி படும் தன் மனைவியால் அதிக நேரம் நிற்க முடியாதுன்னு கேட்டரிங் சாப்பாட்டுக்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டு, தன்னால் முடிஞ்ச சில உதவிகளை, இரவு சாப்பாடு செஞ்சு கொடுப்பது கூட செய்யர சில நல்ல வயதான கணவன்கள் இருக்காங்க. ஆனா பெரும்பாலும் பாத்தா நான் முன்னே சொன்னது போல தான் ஆண்கள் நடந்துக்கறாங்க.

இதைப்பத்தி நாம பேசி ஏதும் செய்ய முடியாதுன்னு போயிட முடியாது? அவங்கங்க வீட்டு சூழலை பொறுத்ததுன்னாலும்,  ஏதாவது செஞ்சாத்தான் நல்லது. தன் உடம்பில் இருக்கும் உபாதைகளை எல்லாம் விட்டு விட்டு நேரத்துக்கு காபி/டீ, சாப்பாடு என மனைவி கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்களை எப்படி மாற்றுவது. (இத்தனை வயசுக்கு மேல எப்படி மாத்த முடியும்னு தோணினாலும், அந்த அம்மாகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது)

 வயதான அந்த பெண்மணிகள் மணி ஆயிடுச்சு அவருக்கு ஹார்லிக்ஸ் கொடுக்கணூம்னு ஓடுவதை பார்க்க கஷ்டமா இருக்கு. என்ன செய்யலாம்? சொல்லுங்களேன்.

Tuesday, January 20, 2015

என்ன தலைப்பு வைக்கன்னு தெரியலை!!!!!

சமீபகாலமாவே சில விஷயங்கள் என்னை ரொம்ப பாதிக்குது அதுல முக்கியமான விஷயம் முதுமை. வயசான என்னாவோம்னு பயம்லா இல்லீங்க. வயதானவர்களுக்கான சலுகைகள், உரிமைகள், அவர்களை பார்த்துக்கொள்ளும் விதம், அவங்க சின்னவங்க கிட்ட நடந்துக்கும் விதம்னு இப்படி நிறைய்ய விஷயங்கள்.

சிலருக்குதாங்க அந்த கொடுப்பினை இருக்கு! எந்த கொடுப்பினைன்னு கேக்கறீங்களா? அது முதுமையிலும் கூட தன் இஷ்டத்துக்கு இருப்பதற்கு.  யாரைப்பத்தியும் எனக்கெந்த கவலையும் இல்லை. என் வழி தனி வழின்னு எந்த பொறுப்புலையும் சிக்காம தாமரை இலைமேல தண்ணியா வாழ்றாங்க. அப்படில்லாம் யாருமில்லைன்னு மட்டும் சொல்லாதீங்க. என் அனுபவத்துல கண்டிருக்கிறேன்.

ஆனா பலருக்கு வயோதிகம் ஒரு வியாதி மாதிரி இருக்கு. மருந்தில்லா நோய்னு கூட சொல்லலாம். இளவயதில் பம்பரமா சுத்திட்டு உடம்புல தெம்பில்லாம போறவங்க சிலர். ஆனா எனக்கு தெரிஞ்சு நமக்கு முன்னால இருக்கும் ரோல் மாடல்களை பார்த்து தான் நாம நம்மளை மாத்திக்கிறோம். அந்த வகையில் வயசானா இப்படித்தான் இருக்கனும்னு யாரோ தப்பா சொல்லிக்கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுலயும் குறிப்பா பெண்களுக்கு ரொம்பவே வரைமுறைகள்.

பெண்ணீயம்லாம் பேசலீங்க. ப்ராக்டிகலா பாருங்களேன். ஆண் எப்ப வேணாம் உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கிக்க முடியும். ஆனா பெண்ணுக்கு அப்படியா? குழந்தை வளர்ப்பு, குடும்ப பொறுப்பு, அடுப்பாங்கரைன்னே பாதி வாழ்க்கை ஓடிடுமே!! காலையில் எந்திரிச்சதும் பொறுமையா காஃபி குடிக்க நேரமில்லாம எத்தனை பேர் அடுப்பாங்கரையில் வேலை பாத்துக்கிட்டே காப்பி குடிக்கறாங்க! நிலமை அப்படி இருக்க காலை நேர வாக்கிங்குக்கு பெண் ஆசை பட முடியுமா??? (வாக்கிங் போயிட்டு வந்து உடன் சமைக்கறதோ அல்லது சமைச்சு வெச்சிட்டு  வாக்கிங் போற பெண்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக்கறேன். சமையல் கட்டில் வேலை முடிப்பதே எனர்ஜி ட்ரையினாகும் விஷயம்.  அதுக்கு முன்னயே பின்னயோ வாக்கிங் செஞ்சா குறைஞ்சது ஒரு மணிநேரமாவது கேப் இருக்கணும். இல்லாட்டி அந்த உடற்பயிற்சி உதவாதுங்கோ.)

என் கல்யாணத்துக்கு நகை வாங்கும்போது கல் வெச்ச தோடு வேணாம்னு கறாரா இருந்தேன். ஏனோ எனக்கு அது பிடிக்காது. ஆனா உறவுக்காரம்மா ஒருத்தவுங்க கேட்டது நாப்பது வயசானா கல்தோடுதான் போடணும் அப்ப என்ன செய்வ!!!???? யாருங்க சொன்னா 40 வயசானா கல்தோடுதான் போடணும்னு. போடாட்டி என்ன குத்தமாகும்??    தெற்குல தான் இந்த மாதிரி விஷயங்கள் இருக்குன்னு எனக்கு தோணுது. வடக்குல 40ன்னாலும் ஒண்ணுதான் 60ன்னாலும் ஒண்ணுதான். இப்பதான் நம்ம ஊர்ல கூட 60 வயசு காரங்க கூட சுடிதார் போடறாங்க. அட இந்த ஒரு விஷயத்துலயாவது மாற்றம் வந்திருக்கேன்னு அல்ப சந்தோஷப்பட்டுக்கறேன்.

சுடிதார், புடவை ரெண்டும் உடைதான். ஆனா குழந்தை பிறந்திருச்சுங்கறதுக்காகவோ,  இத்தனை வயசாயிடுச்சுன்னோ, இதுதான் போடணும் அப்படின்னு யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. ஆனா மறா என்ன நடக்குது,” வயசாயிடிச்சு ஆனா போட்டிருக்கற ட்ரைஸ்ஸை பாரு!!! 
அப்படின்னு பேசறவங்க இருக்காங்க. நைட்டி போட்டு ரோட்ல அலைஞ்சா தப்பு. சுடிதார் போட்டுகிட்டா என்ன தப்பு? புரியலை.  வேலைக்கு போகும்போது அம்மாவோட புடவைகள் மேட்சிங்கா செட்டா எடுத்து கொடுத்து அனுப்புவேன். எங்க அம்மா வாலண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டாங்க. நான் கல்யாணம் முடிச்சு, குழந்தைகளோட பிசியா இருந்ததுல அம்மா என்ன உடுத்தறாங்கன்னு சரியா கவனிக்கலை.  அம்மா , அப்பா லீவுக்கு இலங்கை வந்திருந்தப்பதான் கவனிச்சேன்  ஜரிப்புடவை, அப்படி இப்படின்னு ஒரு ஓல்டு லுக்குக்கு அம்மா வந்திருந்தது.

சரிப்படாதுன்னு களத்துல இறங்கி அம்மாவோட வார்ட் ரோபை மாத்தணும்னு ப்ளான் செஞ்சு இந்தியா வந்தப்ப அந்த வேலைகளில் இறங்கினேன். அந்த மாதிரி புடவைகளை கட்டி பழகிட்டவங்க கிட்ட உங்களுக்கு வயசாகலைம்மா, வேலைக்கு போயிருந்தா 58 வயசுல தானே ரிட்டயர்மெண்ட். அந்த வயசு கூட ஆகாம ஏன் இப்படி கிழவி வேஷம்னு புரிய வெச்சு ஜார்ஜட் புடவைகள் இல்லாம ஷிஃபான் புடவைகள் வாங்கி கட்ட வெச்சேன். விஷேசங்களுக்கு கட்ட ஜரியிலேயே அழகான கலர் புடவைகள் வாங்கி கட்ட சொன்னேன்.

சிலர் விஷேஷங்களில் துணிமணி எடுத்து கொடுப்பாங்க பாருங்க அவங்களே ஒரு முடிவுக்கு வந்து இவங்க இது கட்டினா போதும்னு நூல் புடவை, ஜரிப்புடவைன்னு கொடுப்பாங்க. அந்த மாதிரி நிறைய்ய சேர்ந்ததும் அம்மா அவைகளையே கட்ட ஆரம்பிச்சாங்க. அம்மா கட்டிக்க ஏதுவான புடவைன்னா இருக்கட்டும். இல்லாட்டி ரொட்டேஷன்ல  யாருக்காவது கொடுத்திட சொல்லி கொடுத்தேன். (பரிசு கொடுத்ததுன்னு பேசறவங்களுக்கு, நாம கொடுப்பதை அடுத்தவங்க உபயோகிக்கணும்னு நினைச்சா கொஞ்சம் தரமானதாத்தான் கொடுக்கணும். இல்லாட்டி பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது மாதிரி புடவைக்கு பதில் ஏதாவது ஒரு உபயோகமான பொருள் கொடுக்கலாம் தப்பில்லை)

அம்மாவோட வார்ட்ரோப் மாறினதுல அம்மாவுக்கு இன்னமும் வயசு குறைஞ்ச மாதிரி ஆகிடிச்சு. :)  சிக்குன்னு தெரிஞ்சாங்க. ஒரு நல்ல லுக்கும் வந்தது. தோல்கள் சுருங்க ஆரம்பிச்சிடும்னு எண்ணெய் தேய்ச்சு குளிக்கல்லாம் நேரமில்லாத காரணத்தால் கை,காலுக்கு க்ரீம் தடவச்சொல்லி வாங்கி கொடுத்தேன். முகத்துக்கு தனி க்ரீம்னு வாங்கி கொடுத்தேன். இதையே வாங்கி தடவிக்கணும்னு சொல்லிக்கொடுத்தேன். தம்பியை பார்க்க சிங்கை போனாங்கன்னா நல்ல புடவைகளா எடுத்துக்கிட்டு போகணும்னு கறாரா சொல்லியிருந்தேன். வீட்டுக்கு உடுத்தும் புடவைகள் கூட நல்லதா இருக்கணும்னு சொல்லி சொல்லி அனுப்புவேன்.  இப்ப எங்கம்மாவை பார்த்து மருமக ரொம்ப சந்தோஷ படறாங்க.” அத்தை நீங்ககட்டுற புடவைகள் அழகா இருக்கு. பாந்தமா கட்டுறீங்கன்னு” பாராட்டறாங்களும். “ எல்லாம் கலா சொல்லிக்கொடுத்ததுன்னு” அம்மா சொல்லிக்கறாங்க. :)

அம்மாவுக்கு அழகான நீள்ளமான முடி இருந்தது. ஆனா காலப்போக்குல எலிவால் மாதிரி ஆகிடிச்சு. அம்மாவை பார்லருக்கு கூட்டிகிட்டு போய் அழகா ட்ரிம் செஞ்சு விட்டேன். சின்னதா போனி போட்டுக்கும்போது நல்லா இருக்கும். சவுரி வெச்சு கொண்டைல்லாம் நோன்னு சொல்லிட்டேன்.  உறவுக்காரங்க என்ன சொல்வாங்க அப்படி இப்படின்னு அம்மா நினைச்சிருந்தா இந்த மாற்றம் சாத்தியமாகியிருக்காது.  அவங்கவுங்க சூழலை பொறுத்து இருந்துக்கலாம். ஆனா வயசாகுதுன்னு நம்மளை நாமே இப்படித்தான் இருக்கணும்னு சொல்லிக்கிட்டு வயசான லுக்குக்கு கொண்டு போக கூடாது.  இளமை மனசுல இருந்தா முதுமையே தெரியாது.  இந்த மாதிரி சின்ன சின்ன மாற்றங்கள் ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தது. உடம்பு கொஞ்சம் படுத்தினாலும் அம்மா தன்னை ஆக்டிவா வெச்சுக்க ஆரம்பிச்சாங்க.

 
வெளிநாடுகளில் வயசானாலும் அவங்க ஆக்டிவ்வா இருக்க பழகிக்கறாங்க. அதுமாதிரி நாமளும் இருக்கணூம்.  இலங்கையில நாங்க மொதல்ல குடியிருந்த வீட்டு ஓனர் மல்லு ஆண்ட்டி தான். அங்கயே செட்டிலாகினவங்க. 70வயசுக்கு மேல இருக்கும். தனியா அந்த வீட்டுல இருந்தாங்க. மகன் கண்டியில இருக்க இவங்க கொழும்புல இருந்தாங்க. தானே கார் ஓட்டிக்கிட்டு
போவாங்க. எனக்கு பிரமிப்பா இருக்கும். இந்த வயசுல நம்ம ஊர்ல எப்படி இருப்பாங்க. வயசான காலத்துல ராமா, கிருஷ்ணான்னு வீட்டுல இருப்போம்னு தானே நினைப்பாங்கன்னு தோணும். வயசு ஆகிடிச்சுங்கற நினைப்பை முதல்ல எடுத்து எறிங்க. அதுதான் தடை. மனது ஒத்துழைச்சா உடம்பு தானா ஒத்துழைக்கும். வயோதிகம் ஒரு வியாதி இல்ல. அது ஒரு பருவம் அம்புட்டு தான்.

ஆண்களில் பலரும் ரிட்டயர் ஆகிட்டாலே ஏதோ தள்ளாமை வந்தமாதிரி ஆகிடறாங்க. சொற்பமானவங்க தான் ஆக்டிவா இருப்பாங்க. சாயந்திரம் வாக் போகும்போது எனக்கு தெரிஞ்ச ஒருத்தரை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்.
அங்க அங்கிளுக்கு வயசு 80. 2 முட்டியும் ஆப்பரேஷன் செஞ்சிருக்கு. ஆனாலும் தினமும் சாயந்திரம் பார்க்குக்கு வந்து மெல்ல 8 ரவுண்ட் ஆவது வாக் செய்யறார். அவங்க மனைவிக்கும் மூட்டு பிரச்சனை என்பதால அவரால இயன்ற உதவியை வீட்டு வேலைகளில் செஞ்சு கொடுக்கிறார்.  நம்ம மனசுதான் காரணம்.  மனசை இளமையா வெச்சுக்கிடறதோடு, நமக்கு தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம். அது குறைஞ்சா எல்லாமே குறைஞ்சிடும்.

நாம வாழும் வாழ்க்கை நமக்காக. அடுத்தவங்க பேசறதுக்காகல்லாம் நாம நம்மளை மாத்திக்காம தன்னம்பிக்கையோட ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சா முதுமையிலும் இளமைதான்.  இந்த பதிவை படிக்கற ஒவ்வொருத்தர்கிட்டயும் என் அன்பான வேண்டுகோள். “ இந்த எண்ணத்தை வயதான இளைஞர்களுக்கு புரிய வைங்க. அவங்களுக்கு துணையா இருங்க. நம்ம அப்பா, அம்மாவா மட்டும் இருக்கணும்னு இல்லை, அறிஞ்சவங்க தெரிஞ்சவங்களா கூட இருக்கலாம்.” செய்வீங்களா??!!1