Showing posts with label மருத்துவ அனுபவம். Show all posts
Showing posts with label மருத்துவ அனுபவம். Show all posts

Wednesday, September 30, 2009

என்னதான் வலியோ!!???????

வலி.. வலி..வலி வலி என் வாழ்வில் ஒரு பங்கு ஆகிவிட்டது.
வலியோடு வாழ்வது எப்படி? என்று பழக ஆரம்பித்திருக்கிறேன்.

அப்படி என்னதான் வலி????

என் முந்தைய பதிவு இங்கே.


ஸ்பாண்டிலைடிஸ் என்று சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
ட்ராக்‌ஷன், பிசியோதெரபி கையை அசைக்க உதவியது.
மெல்ல மெல்ல முன்னேற்றம் வந்தது. ஆனாலும்
கைகளில் வலி குறையவில்லை.

மேலும் பரிசோதித்து பார்த்த மருத்துவர் சொன்னது
Fibromyalgia - பேரெ வாயில் நுழையவில்லை எனக்கு.
ஃபைரோமயால்ஜியா. இது வரை இதைப்பற்றி
கேள்விபட்டதுமில்லை.





வலி வலி என எப்போதும் வலி இருந்து கொண்டே
இருக்கும். அதிகம் பெயின் கில்லர் எடுத்துக்கொள்ளக்
கூடாது என்பதால் வலி வரும்போது மேலே நிவாரனி
பூசி, வெந்நீர் ஒத்தடம் தான். தவிர நரம்புகளுக்கு
வலு தரும் மருந்து எடுத்துக்கொள்கிறேன்.

Fibromyalgia - எப்படி எதனால் வருகிறது என்று
கண்டுபிடிக்க முடியாத ஒன்றாம்.நோயின்
அறிகுறி பற்றிய செய்திக்கு இங்கே கி்ளிக்கவும்.
கீழே படத்தில்
பாருங்கள். இந்த இடங்களில் எல்லாம் வலி இருக்கும்.
தலை சுற்றி மயக்கம் வரும். குனிந்து ஏதும்
செய்யப்போனால் ”டமால்” என் விழுந்துவிட நேரம்.
படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல் பெரிய விடயம்.




எனக்கு வலது கையில் வலி என்பதால் கையை
உபயோகிப்பது குறைவாகிப்போனது.
தூக்கம் நல்ல நாளிலேயே சரியாக
வராது. இந்த நிலையில் நிம்மதியான
தூக்கம் இராது. கொடுக்கப்படும்
மருந்தில் தூக்கம் வரவழைக்கும் காரனிகள்
உண்டு. தூக்கம் ஒருவகையான மருந்தாகிறது.
அதிக தூக்கம் பழக்கமேயில்லாத ஒன்று
கஷ்டமாக இருக்கிறது.

மருந்துடன், உடற்பயிற்சி அதுவும் ஸ்ட்ரெட்சஸ்
என்ப்படும் வகை மிக அவசியம் என
மருத்துவர் பரிந்துரை செய்திருக்கிறார்.
1 மாதத்தில் கொஞ்சம் முன்னேற்றம்.

அதிகம் வீட்டு வேலை(பாத்திரம் கழுவுதல்,
பெருக்குதல்) காய்கறி வெட்டுதல் போன்றவை
செய்யாமல் இருந்தால் உடற்பயிற்சியின் உதவியோடு
வலி குறைவாக இருக்கிறது.

சோம்பி இருக்க முடியாமல் மெல்ல மெல்ல
என் வேலைகளை செய்கிறேன். ஆனால்
முன்புபோல் செய்யமுடியவில்லையே என்று
மன வருத்தம். மன வருத்தம் மேலும் வருத்தத்தை
தரும் என்று சொல்கிறார்கள். அதனால் மனதை
மாற்ற பாட்டு, புத்தகம் எப்போதாவது பதிவு என
இருக்கிறேன்.


இந்த நேரத்தில் நம் ராமலட்சுமியின் இந்த கவிதை
படித்து பாருங்கள். எனக்கு ஊட்டம் தரும் விதமாக
இருக்கிறது.

ஒரு வேண்டுகோள்:
Fibromyalgia பற்றி அதிகம் சொல்லக் கூடியது
நம் தமிழ்த்துளி தேவா டாக்டர் தான்.
உங்களிடம் எனது அன்பு கோள் இதுதான்
தேவா சார். இந்த வலியைப் பற்றி தமிழில்
பதிவு எழுதுங்கள். பலருக்கு இந்த வலி
இருக்கிறது என்றே தெரியாமல் கழுத்தெலும்பு
தேய்வுக்கு மருத்துவம் தவறாக கொடுக்கப்படுகிறதாம்.
ப்ளீஸ்...

வலைத்தளத்தில் தேடினால் நிறைய்ய விடயங்கள்
கிடைத்தது. எப்படி எதிர்கொள்வது? போன்ற
விடயங்கள். என் மருத்துவர் சொன்னது Fibromyalgia
வுக்கு இந்தியாவில் அதிக மருந்துகள் அல்லது
மருத்துவ முறை இல்லை. விடாமல் உடற்பயிற்சி
முக்கியம். அவர் சொன்ன தகவல் வலிகுறைய்ய
தாய்ச்சி கற்றுக்கொள்வார்களாம்ம். (தாய்ச்சி ஒருவகை
கராத்தே பயிற்சி)Taichi india


”நானும் தாய்ச்சி கத்துக்கறேன்”என்று அயித்தானிடம்
கேட்டேன். உடனே ஆஷிஷ், அம்ருதாவைக்கூப்பிட்டு
“கண்ணுங்களா! எப்பவும் என் கூடவே இருங்க.
என்னிய பத்திரமா பாத்துக்கங்க. நீங்க டீவி பாக்கறப்ப
ஏதும் சத்தம் கேட்டா கவனமா இருங்க”ன்னு சொன்னார்.

பசங்க,”ஏன்பா! என்னாச்சு”ன்னு கேட்க,

”அம்மா தாய்ச்சி கத்துக்கப்போறாங்களாம்!!!!” என்னை
நீங்க தான் காப்பத்தணும்னு” கிண்டல் அடிச்சு பயந்து
போயிட்டார்.

அயித்தான் ரொம்பவே பயந்து போயிருப்பதால்
தாய்ச்சி கற்றுக்கொள்வதை தள்ளி வைத்து
யோகா மட்டும் செய்வதாக முடிவெடுத்திருக்கிறேன்.

:)))))))))


Friday, January 09, 2009

மருந்தாகும் உணவு!

டாக்டர் பாக்கச் சொன்னபடி ந்யூட்ரீஷயனைப் பார்த்தோம்.
ரொம்ப சின்ன பொண்ணாக தெரிந்தார்!!
(உன்னைவிட எனக்கு 4 வயது அதிகம்னு அவர்
சொன்ன போது மயக்கம் வராத குறை எனக்கு!
சும்மா சிக்னு இருந்தார்.)

“எது உன்னை என்னிடம் வரவழைத்ததுன்னு”,
அழகா கேட்டார். மிக நட்புடன் பேசிய அவரது
பேச்சும் பி்டித்திருந்தது.

விவரங்கள் சொன்னேன். அவரும் என் உடலில்
நடக்கும் நிகழ்வுகளைச் சொன்னார். இந்த
நேரத்தில் உணவு, உடற்பயிற்சி மிக அவசியம்.
அப்படின்னு சொல்லிட்டு என் உணவுப் பழக்க
வழக்கங்கள், உடற்பயிற்சி ஏதும் செய்கிறேனா?
எல்லாம் கேட்டார்.

“ம்ம்! நல்ல அவேர்ன்ஸுடன் தான் இருக்கீங்க”ன்னு
பாராட்டுதல் வேற கிடைச்சது. ( வெக்கம் வெக்கமா
இருக்கு!!) ஆனால் சில மாற்றம் செய்யணும்னு
சொல்லிட்டு டயடில் சிறு மாற்றம், காலையில்
வாக்கிங்கிற்கு பதில் யோகா, மாலையில் வாக்கிங்
என்று மாற்றினார்.

உணவில் கார்போஹைட்ரேட் குறைவு,
காய்கறி, பழங்கள் அதிகம், தயிர்
3 வேளையும் கட்டாயம் எடுத்தல் என
சின்ன மாற்றம் தான். ( இரவு நான் சாப்பிடுவதே
3 ரொட்டி. அதையும் 1 ரொட்டியா மாத்தினது
மட்டும்தான் குறை.:( )

எனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை கண்டிப்பா
செய்யணும்னு சொன்னார். இரவு தூங்குமுன்
சூடா பால் கொஞ்சம் குடிக்கணும் என்பது தான்.
அது தான் எனக்கு தூக்கத்தைக் கொடுக்கும்னு
சொன்னார். ஆனா அந்த நேரத்தில் பாலா!
நம்மால அவாதே! (இதுக்கு மட்டும் தினமும்
அயித்தான் திட்டிகிட்டே இருக்காரு :( )

( சொல்ற எல்லாத்தையும் கேட்டுப்புட்டாலும்
தப்பாயிடும்ல! :)))) )

ஹோம் மேக்கர்களைத் தான் இந்த நோய்
அதிகம் தாக்குதுன்னு சொன்ன்வர் எனக்கு
சில டிப்ஸ்களைச் சொன்னார். அதை
உங்களுக்கும் சொல்றேன். வருமுன் காப்பது
நல்லதாச்சே!

1. வீட்டு வேலைகளை முடித்தோ, முடிக்குமுன்னரோ
வாக்கிங் செல்ல வேண்டாம். ( டயர்டாகி விடுவோம்)
ஸ்டெமினாவை பேலன்ஸ் செய்ய யோகா போன்றவைகளை
காலையில் செய்ய வேண்டும்.

2. காலை உணவு அவசியம் சாப்பிடணும்
(2 இட்லி போதும். தேங்காய்ச் சட்னி நோ சொல்லிடுங்க.
காபி டீக்கு பதில் திக் மோர் 1 டம்பளர் வரை
சாப்பிடணும்.


3)வேலை வேலைன்னே எப்போதும் ஓடாமல்
வேலைகளை முடித்துவிட்டு அதிகம் அவைப்
பற்றி நினைக்காமல் இருக்கணுமாம்.
(உதாரணத்திற்கு: ஒரு அறையை சுத்தம்
செய்வதானால் சுத்தம் செய்து விட்டு அதை
பூட்டி வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டே
நகர்ந்து போய் விட வேண்டும். மறுபடி
மறுபடி அந்த அறையேயே பார்த்துக்கொண்டிருந்தால்
மனமும் க்ளீனிங்க் செய்வதைப் பத்தியே
ஓடுமாம்)

3அ. திட்டமிட்டு வேலைகளை முடித்து விட்டு
கண்டிப்பாக புத்தகம் படித்தல், பாடல் கேட்டல்
போன்றவைகளைச் செய்ய வேண்டும்.
(காலை 10- 11 சரியான நேரம் இதற்கு)
கொறிக்க பழங்களை பக்கத்துல வெச்சுக்கணும்
:), வாழைப்பழம் சாப்பிட்டா வெயிட்
அதிகமாகிடும்.


4. 3 வேளையும் தயிர் கண்டிப்பாக உணவில்
சேர்க்கபடணும். உடலில் ஏற்படும் மாற்றங்களை
மட்டுப்படு்த்த உதவும்.

5. சிறு அளவில் நாளைக்கு 5 முறை உண்ண வேண்டும்.
அதில் 2 முறை வெறும் பழங்கள் மட்டுமே!

6. காபி/ டீ குடிக்காமல் இருந்தால் நல்லதாம்.
(அதிலும் பீ.எம்.எஸ் இருக்கிறவங்க காபியை
தவிர்த்தல் நலம்.) சோயாமில்க் சாப்பிடலாம்.

7. தினம் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாக்காய்,
பப்பாளி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

8. உணவில் பருப்பு, காய்கறி, தானிய வகைகள்
இருத்தல் அவசியம்.

மொத்தத்துல உடம்புக்கு நல்லதில்லைன்ன
அதை வாயில போடாம இருக்கறது நல்லதாம்!

அதைவிடவும் அவசியம் உடற்பயிற்சி.

இங்கே எனக்கொரு விஷயம் பேசணும்?

எத்தனை பேரு விட்டில் பெண்கள் உடற்பயிற்சி
செய்யறாங்க?

இதுல நிறையபாயின்ட்ஸ் இருக்கு!!

1. நேரமில்லை.
2. அவசியமென்று சிலருக்கு தோணாது.
3. அப்படியே செய்ய நினைத்தாலும்
“காலங்கார்த்தால் வேலை செய்யறதை
விட்டுட்டு எக்சஸைஸ் என்ன வேண்டியிருக்கு”!
என பேச்சுக் கேட்க நேருமே என்கிற பயம்.
4 வீட்டு வேலை செஞ்சாலே பெரிய எக்சஸைஸ்
தான்” எனும் தவறான நினைப்பு.
5. மாலையில் பள்ளியிலிருந்து திரும்பும்
பி்ள்ளைகளை கவனிக்க, கணவனுக்கு காபி
போட என போய் விடும்.

ஆனால் இதற்கிடையிலும் அவர்கெளுக்கென
ஒரு நேரத்தை ஒதுக்கி (வீட்டுல இருக்கற
மத்தவங்க ஒதுக்கி கொடுத்தாத்தான் உண்டு!!:( )
உடற்பயிற்சி செய்வதை அவசியாமாக்கிகணும்.

30 நிமிட நடை போதும். முடிந்தால் தெரிந்தால்
யோகா செய்வது மனதை அமைதிப் படுத்தும்.

பெரிய நோயா இல்லாட்டி போனாலும்
முறையா கவனிக்கப் படாவிட்டால்
மனநோயாக மாறும் அபாயம் இருக்கு.
அதனால் உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க!

(நான் என்னைய நல்லா கவனிச்சிக்க
ஆரம்பிச்சாச்சு! :) )

Thursday, January 08, 2009

கண்டேன்! கண்டேன்! மருத்துவரை

சஸ்பென்ஸ் தாளாமல் எல்லோரும் நகத்தைக் கடிச்சிகிட்டு
உக்காந்திருக்கீங்களா?

முந்தைய பதிவுக்கு இங்கே:
மருத்துவர் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்.

பெண்களின் ப்ரச்சனைக்கு மகப்பேறு மருத்துவர்தான்
வைத்தியம் பார்க்க முடியும். வெறும் ப்ரசவம்
மட்டும் பார்ப்பது மகப்பேறு மருத்துவரின் வேலை இல்லை.

ஆனாலும் எனக்கு இந்த ப்ரஃபொஷனல்ஸ் மேல்
கொஞ்சம் வருத்தம் தான். ஏதோ அவர்களால் மட்டுமே
இந்தப் படிப்பை படிக்க முடிந்து என்ற நினைப்பில் சற்று
கர்வமாகவே இருப்பார்கள். அதிலும் மருத்துவர்கள்
கேக்கவே வேண்டாம். பொறுமையாக பேசி, நிலையை
புரியவைப்பது போன்றது நான் மிக மதிக்கும்
டாக்டர். வந்தனா பன்சால் போன்றோருக்குத்தான்
சாத்தியம். (பேஷண்டுகளிடம் பேசினால் தனது
நிலை குறைந்துவிடும் என்று நினைப்பார்கள்.
உயிர் காக்கும் மருத்துவரை தெய்வமாக
நினைக்கிறோம். தெய்வம் கூட மனித உருவி்ல்
வரும் என்பார்கள். ஆனால் மருத்துவர்கள்???!
ம்ம்ம்)

என்ன பிரச்சனை என்று?" கேட்ட மருத்துவருக்கு
நான் என் நிலையை எடுத்துச் சொன்னேன்.
அமைதியாக கேட்டுக்கொண்டார்.

அதே அமைதியுடன் பேசினார்.
"பல பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது
என்பதே தெரியவில்லை. I am talking to so many ladies
and trying create an awarenes about this.

என்ன தான் நடக்கிறது இந்த சமயத்தில்? என்பதை
நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

மாதவிடாய்க்கு முன்பு உடலில் ப்ரோஷ்ட்ரோஜோன்
சுரக்கும். அது சிலருக்கு ஒவ்வாத்தன்மையை
கொடுக்கிறது. மூளைக்கு இடப்படும் கட்டளை
மாறி அதன் விளைவுகள் தான் நீ பட்டுக்கொண்டிருக்கும்
அடையாள உபாதைகள். எப்படி காற்றில் மாசு இருந்தாலும்
சிலருக்கு மட்டுமே ஒவ்வாத்தனமை ஏற்பட்டு
ஜலதோஷம், சளி தும்மல் வருகிறதோ அது போல்
இது" என்றார்

நடிக்கிறாய் என்று கூறிய மருத்துவரைப் பார்த்திருந்த
எனக்கு என் பிரச்சினையை உடனே நூல் பிடித்துவிட்ட
இந்த மருத்துவர் மேல் நம்பிக்கை மெல்ல வந்தது.

அவர் மேலும் சொன்னது இது," நான் U.Kவில்
P.M.Sற்கு என்று இருக்கும் ஷ்பெஷல் கீளினிக்கில்
பயிற்சி பெற்றிருக்கிறேன். பல பேஷண்டுகளைப்
பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் மனநிலை
பாதிக்கப்பட்டவர்கள் போல் கூட நடந்து கொள்பவர்கள்
இருக்கிறார்கள். நான் அதிகமாக கூறுவதாக நினைக்காமல்
இருந்தால் சொல்கிறேன். இந்த நேரத்தில் பல
பெண்கள் தான் அனாதை, தனக்கு யாருமே இல்லை
போன்ற எண்ணங்கள் தலை தூக்கும் என்று கூறினார்.

பக்கத்திலிருந்த அயித்தானும்," படும் அவஸ்தைகளை
காண முடியவில்லை" நடிக்கிறாள் என்று அந்த
டாக்டர் சொன்னார்" என்று சொல்ல

சிரித்துக்கொண்டே அவர்," அந்த சமயத்தில் தற்கொலைக்கு
கூட முயற்சிப்பார்கள்!!!" மேலை நாடுகளில் அதிகம்
காணப்படும் இந்த நிலை இன்று நம் நாட்டிலும்
வந்து விட்டது என்றார்.

கருப்பை சரியாக இருக்கிறதா என்று ஸ்கேன்
செய்து பார்த்தார். ஹார்மோன்கள் சரியாக
இருக்கிறதா என்று ரத்த பரிசோதனை செய்தார்.
எல்லாம் நார்மலாக இருந்தது.

நீ எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள்
விட்டமின் மாத்திரைகள் தான். அவற்றால்
பெரும் மாற்றம் ஏதும் வராது. இதற்கென
சில ட்ரீட்மெண்டுகள் இருக்கிறது.
(சில கேஸ்களில் மனதை அமைதிப்படுத்த
மனநோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மாத்திரை
தரும் அளவுக்கு இருக்குமாம். மனநோயாக
சிலர் நினைத்து அந்த மருந்து எடுத்துக்கொள்ள
மாட்டார்கள் என்று வருத்தப்பட்டார்.)

மாதவிடாயின் சுழற்சியை தற்காலிகமாக
நிறுத்தி(மாத்திரையின் உதவியால்)
செய்யக்கூடிய வகை மருத்துவத்தை
எனக்கு ஆரம்பிப்பதாகச் சொல்லி மருந்து
கொடுத்தார். 3 மாதங்கள் தொடர்ச்சியாக
அந்த மருந்து எடுத்துக்கொண்டு பிறகு
வந்து பார்க்குமாறு சொன்னார்.

நிறைந்த கண்களுடன் நன்றி கூறினேன்.
"நியூட்ரிஷியனை" சந்திப்பது மிக
அவசியம். இங்கேயே இருக்கிறார்.
அவரையும் பார்த்துவிட்டு செல்லுங்கள்"
என்றார்.

இதுக்கும் சாப்பாட்டிற்கு என்ன சம்பந்தம்?
வெறும் மருந்து மட்டும் போதாதாமா?
அடுத்த பதிவுல சொல்லட்டுமா????

:)))))))))))))))

Wednesday, January 07, 2009

மருத்துவர் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்.

முன்பு ஒரு கதை எழுதியிருந்தேன்.
ஞாபகப்படுத்திக்க பாகம்:1
பாகம்:2 .

அந்தக் கதையில் குறிப்பிட்டிருந்த P.M.Sஆல் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
பலரில் நானும் ஒருத்தி. டாக்டர் வந்தனா பன்சால் (அப்போலோ-கொழும்பு)
எனக்கு என்ன நேர்கின்றது என்பதை ஓரளவுக்கு புரியவைத்தார்.
அயித்தானிடமும் பேசியதால் அவருக்கும் என் நிலை
புரிந்து எனக்கு தேவையான உதவிகளைச் செய்தார்.

என் போறாத காலம் அந்த டாக்டர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
வேறு டாக்டரிடம் போக ஏனோ மனதில்லை!

அவர் கொடுத்திருந்த மல்டி விட்டமின்களை மட்டும்
சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

மாதாமாதம் நான் படும் அவஸ்தை சொல்லில்
அடங்காது!

15 நாள் சக்கரமாக சுழலும் நான் 10 நாள் படிப்படியாக
ஓய்ந்து விடுவேன். சில நாட்கள் பேசக்கூட முடியாமல்
லோ பீபீ ஆகி்விடும். (எஸ் எம் எஸ் அடித்துதான்
நான் சொல்ல நினைப்பதை சொல்ல முடியும்!)

ஆஷிஷை உண்டாகி இருந்த பொழுது எனக்கு
(ஹைதையில்) மருத்துவம் பார்த்த
கைனகாலஜீஸ்டை அணுகி
என் பழைய ரிப்போர்ட்களைக் காட்டி என்
நிலையைச் சொன்னேன். (அந்த நேரத்தில்
உபாதையுடன் தான் சென்றேன்!!)

ரிப்போர்டை எல்லாம் பார்த்துவிட்டு அவர்.
பயப்பட ஒன்றும் இல்லை. என்று
சொல்லிவிட்டு சொன்னது இதுதான்.
"உனக்கு ஒன்றும் இல்லை.உனக்கு
மனதில் ஏதோ வருத்தம் இருக்கிறது!
உன் கணவருடன் சண்டையா?
குடும்பத்தில் ப்ரச்சனையா? என
கேள்விக் கணையைத் தொடுத்தார்.

இல்லாத ஒன்றை இருப்பதாக எப்படிச்
சொல்ல முடியும்!

அப்படி ஏதும் இல்லை என்றால் நீ நடிக்கிறாய்!
U are acting to divert u r husband's mind!!
என்றார். அயித்தான் போகலாம் எழுந்துவா
என்று கூட்டி வந்துவிட்டார்.

2 மாதம் பழைய மருந்தையே எடுத்துக்கொண்டேன்.
அவதி தாளமுடியாமல் இன்னொரு மருத்துவரைப்
பார்த்தேன். அவர் ப்ளட் டெஸ்ட், தைராய்டு
டெஸ்ட் எல்லாம் செய்து பார்த்துவிட்டு
ப்ரச்சனை ஏதும் இல்லை. நாங்கள் இதை
P.M.S என்று சொல்வோம், என கூறி
சில விட்டமின் மாத்திரைகள், கால்சியம்
கொடுத்தார். அவைகளை எடுத்துக்கொண்டும்
எந்தப் பலனும் இல்லை.

பாடப்பாட ராகம், முனக முனக ரோகம்
என பாட்டி சொல்வார். எனக்கு இருப்பது
வியாதி அல்ல. அதைப் பற்றி நான் நினைக்கவே
கூடாது என முடிவு செய்து பிளாக்கில் எழுதுவது,
படிப்பது, யோகா, பாட்டு, என என்னை ரிலாக்ஸாக
வைத்துக்கொண்டாலும் அந்த 10 நாள் கொடுமை
அதிகமாகவே இருந்தது.

சமீபகாலமாக மாதவிடாய்க்கு முன்னர் படுத்த
படுக்கையாகி அவதி ஜாஸ்தி ஆகி விட்டது.
இருந்த இடத்தில் சாப்பாடு கொடுத்தால் தான்
உண்டு. எழும்பவே முடியாத நிலை!
பள்ளி செல்லும் பிள்ளைகள்! புது இடத்தில்
அலுவலகம் அமைத்துக்கொண்டிருக்கும் அயித்தானின்
வேலை இவைகளுக்கு என்னால் இப்படி இடைஞ்சல்
ஏற்படுகிறதே என்று மிக வருத்தமாக இருந்தது.

அந்தக் கதையில் கூறியிருந்த சிம்ப்டம்ஸ்
மிக அதிக அளவில் இருந்தது. 1 நாள் முழுதும்
சாப்பிடக்கூட முடியாது!

என்னை எப்படியும் ஒரு நல்ல டாக்டரிடம்
காட்ட வேண்டும் என அயித்தான் பலரிடம்
விசாரித்துக்கொண்டே இருந்தார். தெரிந்தவர்
ஒருவரின் மருமகள் இங்கே RAINBOW HOSPITALS
(CHILDREN'S HOSPITAL AND PERINATAL CENTRE)ல்
(மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவம்)
மகப்பேறு மருத்துவராக இருக்கிறார் என
அவரின் நம்பர் கொடுக்க அயித்தான்
அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி என்னை
அழைத்துச் சென்றார்.

பல மருத்துவரை சந்திப்பு என்னை
நம்பிக்கையற்றவளாக ஆக்கியிருந்தது.
நம்பிக்கையே இல்லாமல்
அவரை சந்தித்தேன். அவர் என்
ஃபைலை பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
அவர் பேசப் பேச எதற்கும் கண்ணீர்
விடாத என் கண்களிலிருந்து நீர்!!

என்ன பேசினார்?
அடுத்த பதிவில் அதுதான்.

(இந்தப் பதிவு ரொம்ப பெருசாயிடுச்சுன்னு
திட்டாதீங்க! என்னைப் போல பாதிக்கப்பட்ட
பலருக்கு இது உபயோகமா இருக்கும்னே
இவ்வளவு பெரிய புலம்பல்