Showing posts with label அம்ருதம்மா. Show all posts
Showing posts with label அம்ருதம்மா. Show all posts

Friday, June 26, 2015

பணமும் பத்தா இருக்கணும்..... பொண்ணும் முத்தா இருக்கணூம்.

10 வந்ததிலேர்ந்து அம்ருதம்மாவிற்கு சனிக்கிழமை கூட ஸ்கூல் வெச்சிடறாங்க. ஹைதையில் ஒரு ட்யூஷன் செண்டர் போய்க்கிட்டு இருந்தாங்க.வாரத்துக்கு 5 நாள் தான் கிளாஸ். சனிக்கிழமை டெஸ்ட் & டவுட் கிளியர் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க. ஆனா வர வர மாமியார் கழுதை போல ஆனாப்ல ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைக்க ஆரம்பிச்சாங்க.
எனக்கு இந்த சனி, ஞாயிறுல ஸ்கூல், கிளாஸ் வைக்கறவங்களை கண்டா கடுப்பா இருக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம் அத்தோட ரிலாக்ஸ் செய்வதும் முக்கியம்னு ஏன் தான் புரிய மாட்டேங்குதோ!!. அதனால் இங்கே
சென்னை வந்ததும் அம்மா எனக்கு சனி. ஞாயிறுல்லாம் கிளாஸ் வேண்டாம். அவ்ளோ ஸ்ட்ரெஸ் பட முடியாதுன்னு கிளியர் கட்டா சொல்லிட்டாங்க. சனிக்கிழமை அரை நாள் ஸ்கூல் இருக்கு அதை ஒண்ணும் செய்ய முடியாது.

+1 & +2 ரெண்டு வருஷமும் பசங்க ட்யூஷன் ட்யூஷன்னே ஓடிக்கிட்டு இருப்பாங்க. காலையில ஒரு சப்ஜக்ட், மாலையில் ஒரு சப்ஜக்ட்னு. இந்த பெரிய நகரத்துல டிராபிக்ல போய் வர்றதுக்குள்ள பிள்ளைங்க வாடி வதங்கிடுவாங்க. ஆனா கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஹெல்பும் பிள்ளைகளுக்கு தேவைதான். என்ன செய்ய? இப்படி குழப்பம் இருந்தப்பதான் மண்டையில பல்பு எரிஞ்சது.

போன வருஷம் ஹைதை ஸ்கூலில் TIMES OF INDIA -NYE நடத்தின ஒரு பரிட்சையில் ஸ்கூல் லெவலில் செலக்ட் ஆனாப்ல. அதோட அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகியிருந்தாப்ல. கச்சிபவுளிங்கற இடத்துல ஒரு ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிட்சைக்கு நாங்களும் கூட வரணும் சொன்னதால் போனோம்.  அங்க பிள்ளைகள் எல்லோருக்கும் பரிட்சை எழுத samsung tab.
கொடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது ஒரு நிறுவனம்.

பரிட்சை முடிஞ்சதும் பெற்றோர்களுக்கான வொர்க்‌ஷாப்னு ஆரம்பிச்சாங்க. அந்த நிறுவனத்தில் தலைவர் 6 முறை ஐஐடி எக்ஸாம் கிராக் செஞ்சிருக்கார். அவரால மட்டும் எப்படி முடிஞ்சதுன்னு அவரே யோசிச்சு, அதையே கான்சப்டாக்கி மத்தவங்களுக்கு சொல்லி கொடுக்க பாடத்திட்டத்தை உருவாக்கினார்னு சொல்லி அதற்கான டெமோ கொடுத்தாங்க. அதை பார்த்து அம்ருதம்மா செமையா வியந்து போனா. இப்படி சொல்லிக் கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு சொன்னாப்ல.

அப்ப 10தான் என்பதால பரிட்சை முடியட்டும்னு இருந்தோம். இங்க வந்திட்டு இந்த ட்யூஷன், கோச்சிங் எல்லாம் விசாரிச்சு பாத்ததுக்கப்புறம் எதுவும் செட் ஆகலை. அதுவும் அம்ருதம்மாக்கு இங்க ஸ்கூல் 3.45 வரைக்கும். அப்புறம் வீட்டுக்கு வர 4.30 ஆகிடுது (ஹைதையில் 2.45கெல்லாம் வீட்டில் இருபாங்க) இதுக்கப்புறம் ட்யூஷன் போகணூம், அன்றைய பாடங்களை படிக்கணும் அப்படின்னு பாக்கையில ரொம்ப டய்ர்ட் ஆகிடுவேம்மான்னு சொல்லவும். ஹைதையில் பார்த்த அந்த நிறுவனம் ஞாபகத்துக்கு வந்தது. அவங்களுக்கு இங்க தொடர்பு ஏதும் இருக்கான்னு நெட்ல செக் செஞ்சப்ப சென்னையில் அவங்களுடைய கிளாஸ் ரூம் செஷன் கூட இருக்குன்னு தெரிஞ்சது.

போன் செஞ்சு பேசி டெமோல்லாம் வேணாம் எங்களுக்கு Tab போதும்னு சொன்னோம். மேலே தொடர்வதற்குள் அந்த நிறுவனம் அதை பத்தின விவரங்களை சொல்லிடறேன்.

BYJU's  இதான் அந்த நிறுவனம். இதோட வெப் பேஜ் இங்க.   நம்ம கிட்ட சாம்சங் டேப் இருந்ததுன்னா அவங்க கிட்ட கொடுத்தா அதுல பாடத்திட்டத்தை போட்டு கொடுப்பாங்க. இல்லாட்டி பதினொண்ணு மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்புக்கான பாடத்திற்கான பணத்தை சேத்து கட்டினோம்னா சாம்சங் டாப் இலவசமா வரும். அதுல முதலில் பதினோராம் வகுப்புக்கான பாடத்திட்டத்தை போட்டு கொடுப்பாங்க. CBSC, STATE BOARD  இரண்டு போர்ஷன்களையும் கவர் செய்யறாங்க. கிளாஸ் ரூம் செஷன்லயும் டேப் உண்டு. ஆனா அதில் மத்த கோச்சிங் மாதிரி இல்லாம. பதினொன்னு, பணிரெண்டு ரெண்டு வகுப்பு பாடத்தையும் கவனிக்கறாங்க. தேவையான டெஸ்ட்கள் வைக்கறாங்க. அதைத் தவிர ஐஐடி,ஜேயி கோச்சிங் உண்டு. ரேட்டும் அதுக்கு தக்க.

டேப்லெட்ல பாடத்திட்டத்துக்கு ஆகுற கட்டணம் மாசம் ட்யூஷனுக்கு 5000 கொடுக்கறாப்ல். ஆனா அதை நாம முன் கூட்டியே இங்க ரெண்டு வருஷ பாடத்துக்கும் சேத்து கட்டறோம். கிளாஸ் ரூம் செஷன் சனி, ஞாயிறு மட்டும் வந்தா போதும்னாங்க. அது கொஞ்சம் கூட. ஆனா நமக்கு அதுல இண்டரஸ்ட் இல்லை என்பதால அதைப்பத்தி விசாரிக்கலை. டேப்லட் மட்டும் வாங்கி கிட்டோம்.

cat, GMAT, IAS, GRE ஆகிய எல்லா எக்ஸாமுக்கும் டேப்லட்லயே பாடம் இருக்கு. பழக்கத்தில் இருக்கற சாம்சங்க் டேப்லட்தான் என்பதால அதை பிறகு நாம உபயோகிச்சுக்கவும் முடியும். இந்த பாடங்களை படிக்க ஆன்லைன்ல இருக்கணும்னு அவசியம் இல்லை.  பாடங்கள் ஆஃப்லைனிலேயே படிக்க முடியும் என்பதால பிள்ளைகள் படிப்புல டிஸ்ட்ராக்‌ஷனுக்கு வழி குறைவு.

அதை உபயோகபடுத்திகிட்டு இருக்கும் அம்ருதம்மாவின் மொழியில் அதோட உபயோகங்கள்.

1. வெளியே வெயிலில் எங்கேயும் அலைய தேவையில்லை. :)
2. எனக்கு எப்ப நேரம் இருக்கோ அப்ப டேப்லட்ல வீடியோ பாத்துக்கலாம்.
3. வீடியோவுலயும் ஒவ்வொரு சப்ஜக்ட்டும் ஒரு ஆசிரியர் இருந்து நேர்ல சொல்லிக்கொடுக்கறாப்ல தான் இருக்கு. தெளிவா படம் வரைஞ்சு விளக்கறாங்க. இண்டலக்சுவல் திங்கிங் லெவலுக்கு நமக்கு சொல்லி கொடுப்பதால நல்லா புரியுது.
4. ஸ்கூலில் சொல்லி கொடுத்தது புரிஞ்சிருக்குன்னா அதே வீடியோவில் நமக்கு தெரிஞ்சதுக்கு மேலே சொல்லிக்கொடுக்கறாங்க. டவுட் கிளியர் செய்யறாங்க.
5. ஒவ்வொரு சாப்டர் முடிஞ்சதும் நாம டெஸ்ட் எழுதறதுக்கு தக்க பேப்பர்கள் டேப்லயே இருக்கு.

இதே மாதிரி இன்னொரு சைட்டும் எனக்கு பிடிச்சிருக்கு. அதுல பைஜூஸ் மாதிரி லைவ் டீச்சிங் இல்லைன்னாலும் டவுட் கிளியர் செய்வது,  NCERT பாடப்புத்தகத்தின் ஒவ்வொரு கேள்விக்கும் விடைகள் தருவதுன்னு இதுவும் நல்லா இருக்கு.  MERITNATION .  இதுல ஃபீஸ் கொஞ்சம் நாமினலா இருக்கு.

எல்லோருக்கும் உதவும் என்பதால இதை பகிர்கிறேன்.


ஆணியே.......... வேணாம்

அம்ருதம்மாவுக்கு ட்யூஷன் ஏதும் ஏற்பாடு செய்யலாம்னு பக்கத்துல இருக்கற ஒரு செண்டருக்கு போனேன். IITiansகளால நடத்தப்படுதுன்னு விளம்பரம் இருந்தாலும் அதுக்கு கீழ ட்யூஷனும் எடுக்கப்படும் போட்டிருந்தாங்க. அதனால போய் விசாரிச்சேன். அம்ருதம்மாவும் கூடவே வந்திருந்தாங்க.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்துக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுக்கறீங்கன்னு பாத்தேன் அதைபத்தி விசாரிக்க வந்திருக்கேன். அப்படின்னு சொன்னேன்.

அங்க ஒரு லேடி இருந்தாங்க. இன்னொரு ஆந்திரா அப்பாயி (abbayi) இருந்தாரு. அவர்தான் ஃபேக்வல்ட்டியாம். அதனால அவர் தெளிவா சொல்வாருன்னு சொல்லி இந்தம்மா சொல்ல சரி சொல்லுங்கன்னு கேட்டேன்.

நான் விசாரிச்சது ட்யூஷனுக்கு ஆனா, அவர் ஆரம்பிச்சது ஐஐடி. ஜேயி கோச்சிங்குக்கு. இது நான் கேக்கலியேன்னு சொன்னேன். மேடம் நான் சொல்வதை முழுதும் கேட்டுட்டு பிறகு முடிவு செய்யுங்கன்னு சொன்னார். ஆந்திரா அப்பாயி ஆங்கிலத்துல தான் பேசினார். நானும் அம்ருதாவும் தெலுங்கில் பேசினதை கேட்டு முகம் மலர்ந்து தனக்கு விஜயவாடா பக்கம்னு சொல்லிக்கிட்டார்.

மேட்டருக்கு வருவோம். இங்க நாங்க ஐஐடி எண்ட்ரன்ஸுக்கு கோச்சிங் தர்றோம். எங்க கோச்சிங் அப்படி இருக்கும் இப்படி இருக்கும்னு சொன்னவர் சொன்ன மேலும் சில தகவல்கள்.

1. வாரத்துக்கு 4 நாள் கோச்சிங். 5 ஆம் நாள் டெஸ்ட்.
2.  +1 பாடம் எதுவும் சொல்லிக்கொடுக்க மாட்டாங்க. ஒன்லி எண்ட்ரன்ஸ் பேப்பர்  அதை எப்படி செய்வதுன்னு பரிட்சைக்கு தயாராக்குவதுதான் வேலை.

சரி. +1` சப்ஜக்ட்ல டவுட் வந்தா எப்படி?

+1ல மார்க்கு கம்மியா எடுத்தாலும் பிரச்சனை இல்லை. நமக்கு ஐஐடி எண்ட்ரன்ஸ் கிராக் செய்வதுதான் முக்கியம்.!!!!!!!!!!!!!!!!! ஓஓஒ அது சேரி.

+2லயாவது பாடத்திட்டத்தை டச் செய்வீங்களா? - இது நான்.

ஆமாமா! அதுக்கு வெயிட்டேஜ் உண்டுல்ல. அதனால +2 ஆரம்பிச்சதுலேர்ந்து அந்த பாடத்தில் நல்ல மார்க் எடுக்க பயிற்சி கொடுப்போம்.

அந்த சமயத்துல ரெண்டையும் கான்சண்ட்ரேட் செய்வது கஷ்டம் என்பதாலத்தான் நாங்க +1லயே முழு மூச்சா ஐஐடி கோச்சிங் கொடுக்கறோம்.
அம்ருதாவை பார்த்து - +1ல 70% மார்க் வந்தா போதும். அதை கூட யாரும் கண்டுக்க மாட்டாங்க. பாஸ் செஞ்சிட்டா போதும்னு சொல்ல அம்மா என்னை பாக்கறாங்க.

இப்படியே விடக்கூடாதுன்னு நானும் சில பவுன்சர்களை போட்டேன். சரி மக்கா, இந்த +1 ஸ்கூல்ல போயித்தான் படிக்கறாங்க. அவங்க வைக்கற டெஸ்ட்ல மார்க் குறைஞ்சா டீச்சர்ஸ் கூப்பிட்டு பெத்தவங்களுக்கு கிளாஸ் எடுப்பாங்களே!!

அதுக்குதான் மேடம் சொல்றேன். +1ல எவ்வளவு மார்க் குறைஞ்சாலும் அதெல்லாம் கண்டுக்க கூடாது. உங்களூக்கே தெரியும். ஆந்திராவில எப்படின்னு. (ஆந்திரா போர்ட்ல +1 & +2 ரெண்டுமே போர்ட் எக்ஸாம் தான். ஆனா சிபிஎஸ்சில அப்படி இல்லையே. இதை அந்த நல்லவர் மறந்திட்டாரு)

+2ல நல்ல மார்க் எடுத்தா தான் காலேஜ் அட்மிஷன் கிடைக்கும். அப்ப என்ன செய்ய. - நம்ம அடுத்த பவுன்சர்.

அதாகப்பட்டது மேடம் ஐஐடி கோச்சிங் என்பது உச்சபட்ச நிலை படிப்பு!!! அதையே ஈசியா அவங்களால முடிக்க முடியும்ங்கற போது +2 படிப்பெல்லாம் ஜுஜூபி. அப்படின்னு சொல்ல. இதுக்கு மேல எனக்கு பொறுமை கிடையாதுன்னு , நான் யோசிச்சு சொல்றேன்னு வந்திட்டேன்.
***********************************************************************

சில நல்ல கல்லூரிகள், வெளி நாட்டுல மேல் படிப்பு படிக்கணும்னு நினைக்கறவங்களுக்கு +1 மார்க் ரொம்ப முக்கியம். +2 ரிசலட் வந்து அதற்கப்புறம் அப்ளை செஞ்சுன்னு இன்னும் தாமதமாகும் என்பதால +!ல 95% மதிப்பெண் இருந்தா அதை வெச்சு அப்ளை செய்யலாம்னு இருக்கு.

எல் கே ஜில என்ன சொல்லி கொடுத்திடப்போறாங்க, அதனால இந்த வருஷம் வீட்டுல இருக்கட்டும்னு முடிவு செஞ்சு யூ கே ஜில தான் ஒரு குழந்தை மொதோ மொதலா ஸ்கூலுக்கு போகுதுன்னு வெச்சுக்காங்க அப்ப அந்த குழந்தை  எல் கே ஜில மிஸ் செஞ்சதையும் சேத்து படிக்கணூம். +1 & +2 வருட படிப்பையும் சேர்த்து படிக்கறதுதான் ஹையர் செகண்ட்ரி. +1 பாடத்தையே படிக்காம டைரக்டா +2 பாடத்தை படிச்சு பாசாகி  மார்க் வாங்க வைக்கறது பல பள்ளிகளிலேயே நடக்கற விஷயம்.

+2 மார்க்கை வெச்சு அட்மிஷன் வாங்கி காலேஜ் சேர்ந்தாலும், அங்க போய் பசங்க படிக்க முடியாம கஷ்டப்பட காரணம் +1 போர்ஷனை கத்துக்காம போறதுதான். அடிப்படையை ஒழுங்கா கத்துக்காம எப்படி மேல்படிப்பு?
நல்லா யோசிச்சு கோச்சிங் கிளாஸ்ல போடுங்க நட்புக்களே. எல்லாரும் போடுறாங்கன்னு நாமும் கோச்சிங்க் , ட்யூஷன் போட்டு பிள்ளைகளுக்கு நல்லது செய்வதை விட்டு கெடுதல் செஞ்சிடாம இருக்கணூம்.

+2ல நல்ல மார்க் எடுத்தாதான் நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கும். ஆனா அந்த காலேஜ்ல ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கினா தான் ஒழுங்கான வேலை கிடைக்கும்.

டிஸ்கி: இந்த பதிவோட தலைப்பு தான் நானும் அம்ருதம்மாவும் எடுத்த முடிவு.
:)




Thursday, September 19, 2013

அம்ருதம்மா பதிவு

அம்ருதம்மா பத்தி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. (பதிவு போடறதே குறைஞ்சுகிட்டு வருது) இந்தப் பதிவை படிச்சிட்டு தம்பட்ட பதிவுன்னு நினைக்காதீங்க. இதுவும் அறிதல், புரிதல் பகிர்வு தான்.

அம்ருதம்மாவும் இப்ப டீன் ஏஜ் கேர்ள் ஆகிட்டாங்க. அதனால நாமதானே பெஸ்ட் ஃப்ரெண்டா இருக்கணும்!!! அதனால முகம் சுணங்கியிருந்தா பார்த்து என்னன்னு விசாரிக்கறது, பாத்து சாப்பாடு கொடுப்பது, படிப்பில் உதவி இப்படி என்ன உதவி செய்ய முடியுமோ அப்படி சாஞ்சுக்க ஒரு தோளா இருக்கறதுக்கான முயற்சிகளை செஞ்சிகிட்டு வர்றேன்.

ஒவ்வொரு வயசுலயும் பெத்தவங்களை பத்தின ஃபீலீங்ஸ் மாறும்னு சொல்வாங்க. டீன் ஏஜ்ல ஆரம்பிச்சு..... ஒரு 30 வயசு வரைக்கும் பெத்தவங்க தான் மோசமான ஜந்துவா கூட சிலருக்கு தெரியும்னு சொல்வாங்க. அது அவங்க தப்பில்லை. வயசு தப்பு. அதனால நம்ம குழந்தைதானேன்னு சின்ன வயசுல இருந்த மாதிரி இப்பவும் இருக்க முடியாது.

லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏற்ப ட்ரெஸ்ஸிங் வேணும்னு சொன்னாக்க, நம்ம வீட்டுக்கு தகுந்த மாதிரி அந்த உடை இருக்கான்னு பார்த்து தேர்ந்தெடுக்க வைப்பேன். சொல்ல வேண்டியது என் கடமை. ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்க இஷ்டம். ஆனா நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சு பார்ப்பதில் தப்பில்லையேன்னு சொல்லி மெல்ல பேசி புரிய வைப்பேன்.

சில குழந்தைகளுக்கு முன் நெற்றி வழிச்சு சீவி சீவி வழுக்கை விழுந்தாப்ல ஆகிடும். எனக்கு அப்படி தலை வார பிடிக்காது. அதனால சின்ன வயசுலேர்ந்து அம்ருதம்மாவுக்கு அழகா ஃப்ரிஞ்சஸ் கட் செஞ்சுக்க வைப்பேன். தலை முடி நீளமா இருந்து நான் அவதி பட்டது என்னுடைய தனி சோகக்கதை. பார்க்க அழகா இருக்கும் முடி. ஆனா பராமரிப்பது கஷ்டம்.

அம்ருதம்மாவுக்கு எங்க அம்மம்மா பரம்பரை வாகுல என்னை போல நல்ல அடர்த்தியான முடி. ரொம்ப நீளமாவும் இல்லாம ரொம்ப குறைவாவும் இல்லாம அழகா ட்ரிம் செஞ்சு அதுவும் ஸ்கூலுக்கு ஜடை போட்டுக்கறாப்லயும், வெளியில போகும்போது பார்க்க நல்லா இருக்கற மாதிரியும் கட் செஞ்சுப்பாங்க அம்மா. சில்க்கி ஹேர்னு ஸ்கூல்ல பசங்க ஜடை போட்டு வெச்சிருந்த முடியையும் அவுத்து விட்டு தொட்டு பாப்பாங்க. ஏனோ தானோன்னு பின்னிய முடியோட வந்து நிப்பாங்க அம்மா!!!  

ஒரு தடவை பார்லருக்கு ஆட்டோவுல போய்கிட்டு இருந்தப்ப அம்ருதம்மாவுக்கும் எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே தர்றேன்.

“அம்மா! என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் நீங்க தான் என்னை ஹேர் ட்ரிம் செய்ய கூட்டிகிட்டு போறீங்கன்னு சொன்னா நம்ப மாட்டேங்கறாங்க”

“ஏன் அம்ருதம்மா”

“ அவங்க அம்மாவுக்கெல்லாம் அப்படி முடி கட் செஞ்சா பிடிக்காதாம்!! திட்டுவாங்களாம்!”

“ஆனா நான் உங்க ஃப்ரெண்ட்ஸை ஹேர் ஸ்டைல் செஞ்சு பார்த்த மாதிரி ஞாபகமே அம்மா!!”

ஆமாம்மா!! அவங்க அம்மாவுக்கு தெரியாம செஞ்சுப்பாங்களாம். வீட்டுக்கு வந்து கேட்டா ,”எனக்கு பிடிச்சிருக்கு செஞ்சிருக்கேன்னு!! சண்டை போடுவாங்களாம்!!

இது எப்படி இருக்கு?  சில விஷயங்கள் பிள்ளைகளுக்கு நல்லது இல்லைன்னு பெத்தவங்களுக்கு தெரிஞ்சா அதை அவங்களுக்கு புரிய வைக்கணும். இப்ப அம்ருதம்மா ஸ்லீவ் லெஸ்ஸோ, டைட்ஸோ போட அனுமதி கிடையாது ஆனா அதை பல தடவை சொல்லி புரிய வைச்சோம். அம்ருதம்மாவும் ஒத்துகிட்டாங்க.ஆஷிஷ் அண்ணாவுக்கு ட்ரஸ் கோட் இருக்கு. வூட்டுல ஷார்ட்ஸ், பாக்ஸர்ஸ் போட்டு அலைவதெல்லாம் கூடாது. அன்னைக்கு ரோட்ல போகும் போது ஒரு 25 வயசு ஆம்பளை பாக்ஸர் போட்டுகிட்டு பைக்ல போனதை பார்த்து செம கடுப்பானுச்சு. நானும் ஆஷிஷ் அண்ணாவும் டக்குன்னு சிரிச்சதை அந்த ஆளு பார்த்து ஒரு மாதிரி ஆகிட்டாப்ல. ஆம்பளையோ பொம்பளையோ வெளியில வரும்போது இதுதான் ட்ரஸ் கோட்னு சட்டம் போட வெச்சிருவாங்க போல இருக்கே.

இப்படி பல விஷயங்கள் நீ செய்ய கூடாதுன்னு கறாரா சொல்வதை விட அதை ஏன் செய்யக்கூடாதுன்னு புரிய வைக்கணும்.  பசங்க சொல்வதில் நியாயம் இருந்தா அதை நாம ஏத்துப்பதில் என்ன குழப்பம்??? பிள்ளைகளுக்கு இருக்கும் பியர் ப்ரஷர் எவ்வளவோ. அதனால அவங்க நட்புக்கள் சொல்வது எல்லாமே செய்ய வைக்கணும்னு இல்லை. ஆனா நியாயமான கோரிக்கைன்னா என் பெற்றோர் ஏத்துக்குவாங்க அப்படிங்கற புரிதல் பிள்ளைகளுக்கு வரவைக்கணும். இது பெற்றோரின் முக்கியமான பங்கு. பசங்க சொல்வதையும் காது கொடுத்து கேக்கணும். அப்பதான் அவங்க நம்மளை எந்த ஸ்டேஜ்லயும் வில்லனா/ வில்லியா நினைக்காம மனசு வருத்தத்தை பகிர்ந்துக்குவாங்க. இது ஏன் பலருக்கு புரிய மாட்டேங்குது இதுதான் என் வருத்தம்?

அம்ருதம்மா தன் தோழிகளோட மெக்டொனால்ட்ஸ் போயிருந்தாங்க. 1 மணி நேரம் டைம் தான். வந்து என்னை பிக் அப் பண்ணிக்கோங்கன்னு சொல்லியிருந்தாப்ல. பிக் அப் பண்ண போனேன். போட்டோஸ் எடுக்கலையான்னு கேட்டு அவங்களை (3 பொண்ணுங்கதான்) போட்டோ எடுத்துக்கிட்டு கிளம்பி வந்தோம்.

டீன் ஏஜ் வயசு என்பது கைக்குழந்தைக்கு பல் முளைக்கும் பருவம் போல. அந்த நேரத்துல எவ்வளவு ஜாக்கிரதையா இருந்து வளர்த்தோமோ அந்த மாதிரி டீன் ஏஜ் பிள்ளைகளையும் வளர்க்கணும். தவழ்ந்து போற குழந்தை கண்டதை வாயில போட்டுக்கும்னு தவழ விடாம வெச்சிருந்தா பிள்ளைக தவழ கத்துக்கறது எப்போ??  இதுவும் ஒரு இனிமையான பருவமா, சுகமான அனுபவமா மாத்த வேண்டியது பெற்றோர், பசங்க ரெண்டு பேருக்கும் இருக்குன்னு சொன்னாலும், நமக்கு அதிகம். ஏனென்றால் நாமும் அந்த வயதை கடந்துதானே வந்திருக்கோம்.


Thursday, February 19, 2009

பிரிவும்!!! சந்தோஷமும்...

பிரிவு::

காலையில் காபிக்காக காத்திருக்க ஆளில்லாமல்
தனியே காபிக் குடிக்க முடியவில்லை.

மாலை வேளைகளில் டீ போடும் பொழுது
மறந்துபோய் ஒரு கப் அதிகமாகவே
தயாரித்து விடுகிறேன்.

டீயை கையில் வைத்துக்கொண்டு அந்திக் காற்று
வீச பால்கனியில் பேசிக்கொண்டே டீ அருந்தியதை
நினைத்துக்கொண்டே தனியாக டீ குடிக்கிறேன்.

பிள்ளைகள் ஏதும் கேட்கையில் ,”நாநா வந்ததும்
கேட்போம்!” என்றுச் சொல்ல ,”அம்மா நாநா
ஊருக்கு போயிருக்காங்க!!” என்று சோகமாக
முகத்துடன் சொல்வார்கள்.


மாத்திரை சாப்பிட்டியா? என நினைவூட்ட
ஆளில்லாததால் மாத்திரை சாப்பிடவே இல்லை.
(வந்ததும் அதுக்குத் தனி திட்டு இருக்கு :) )


அலுவலகம் போய் வீடுதிரும்பிவிடுவீர்கள்
எனும் நினைப்பிலேயே ஓட்டி ஊருக்குப்
போயிருப்பது இது போன்ற தருணங்களில்
உரைக்கும்பொழுது அதிகமாக
பிரிவை உணர்கிறேன்!!(இப்படி அடிக்கடி
ஊருக்குப் போவது நியாயமான்னு அயித்தான்
வந்த உடன் செல்லச் சண்டை போடுவேன், பேசி முடித்த
உடன் அடுத்த வாரம் ஊருக்குப் போவதாய்ச்
சொல்வார்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ம்ம்ம்முடியலை..)

********************************************
சந்தோ்ஷம்

அயித்தான் ஊருக்குபோனால் அண்ணனும் தங்கையும்
தலையனையை எடுத்துக்கொண்டு எங்கள் அறைக்கு
வந்துவிடுவார்கள். :)

இருவரும் கட்டிலில் படுக்க நான் கீழே படுத்துக்
கொள்வேன். நேற்று பயங்கரத் தலைவலி.
விடாமல் இருக்கவே மாத்திரை எடுத்துக்கொண்டு
படுக்கப்போனேன்.

சிறிது நேரத்தில் அம்ருதா அழைத்தாள்

“என்னம்மா?”

R u feeling ok?
ம்ம் பரவாயில்லை.

கஷ்டப்படாதே அம்மா! மேலே படுத்துக்கொள்.
நான் கீழே படுத்துக்கொள்கிறேன் என்றாள்.

அம்மாவின் அக்கறை 9 வயது மகளிடம்.

காலையில் பிள்ளைகளுக்கு சப்பாத்தி செய்து
ஆலு கறி கட்டிக்கொடுத்து மிச்சம் இருந்ததை
எனக்கு ஒரு டப்பாவில் எடுத்து வைத்தேன்.
பார்த்துக்கொண்டிருந்த அம்ருதா,”உனக்காம்மா!
இங்கே கொண்டா அம்மா, நான் எடுத்து
வைக்கிறேன்.நானும் பாத்துக்கிட்டு இருக்கேன்.
வரவர சரியாவே சாப்பிடுவதில்லை!!!!” என்றாள்.

ஆலு என்பதால் குறைவாகவே வைத்துக்கொண்டேன்
என்றும் என் உணவு ந்யூட்ரீஷயன் சொன்னபடிதான்
இருக்கிறது என்று சொன்னாலும் சமாதனமாகவில்லை
அவள்.

போஜ்யேஷு மாதா - என உணவளிக்கும் பொழுது
ஒரு பெண் தாய்போல் பார்க்கவேண்டும் என்று
சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

என அம்ருதம்மா” போஜ்யேஷு மாதாவாகி”
என்னை கண்டிக்கிறாள்.

எங்கே கற்றுக்கொண்ட வித்தையிது!!!!!

Monday, December 08, 2008

அம்மாவும்! நானும்!

தலைக்குளித்து முடியை காயப்போட்டால்
ஓடி வந்து முடிக்கொள் கையைவிட்டு
அளைந்து கொண்டே இருப்பாள்.

தலைகோதும் விரல்களில் தாய்மை தெரிகிறது.

”ஏன்மா என்னை அம்மான்னு கூப்பிடறீங்கன்னு!!” கேட்டாலும்

அம்மா என்றழைத்தால் முகத்தில் அம்புட்டு பெருமை.

உடனே ஓடிவந்து கட்டிக்கொண்டாகவேண்டும். :)



”நான் என்ன எங்க அம்மாவீட்டுக்கு போறேனா”?
நீதான் அம்மாமாதிரி என்னிய பாத்துக்கணும்”

”நான் அம்மா! சரி!” அப்ப அண்ணா?

ம்ம் அண்ணா, அன்னபைய்யா! (annabayya)
(அப்படித்தான் அண்ணனை அழைப்பாள்)




சரி! அம்மா எனக்கு என்னென்ன செய்வீங்க?

நீங்க என்னைப் பாத்துக்கற மாதிரி?
நல்லா பாத்துப்பேன், நெய் தோசை செஞ்சு
கொடுப்பேன்!..... இப்படி பெரிதாக
போனது லிஸ்ட்.






பேசிக்கொண்டிருக்கும்போதே யோசனை வந்து
“ஆமா! இதெல்லாம் செய்யணும். ஆனா,
நான் ஸ்கூலுக்கு போயிடுவேனே!” அப்புறம்
எப்படி அம்மாவா இருந்து பாத்துக்கறது??!!

”ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்து பாத்துக்கலாமே!”இது
annabayya.




ஸ்கூல் விட்டு வந்து டயர்டா இருக்கும்ணா,
ஹோம்வொர்க் கொடுத்தாங்கன்னா முடியாது.

ம்ம். இப்படி செய்வோம்! எனக்கு எப்பல்லாம்
லீவு வருதோ அப்பெல்லாம் நான் அம்மா!

அப்ப நான் நல்லா பாத்துக்க முடியும் பாருங்க!
என்ன சொல்ற annabayya? (கூட்டுக்கு ஆள்
வேறு :) )

வார இறுதிகளிலும், விடுமுறைகளிலும்
அம்மாவாக இருப்பதாக ஒப்பந்தம் போடப் பட்டது.




ஒப்பந்தம் ஞாபகம் வரும்பொழுது
குட்டிச் செஃப் போல் சப்பாத்தி செய்யும்பொழ்து
பக்கத்தில் வந்து நின்று கொள்வாள்.


தூங்கும்பொழுது பக்கத்தில் வந்து
கட்டிக்கொண்டு(அம்மா கட்டிபிடிச்சுக்கறாங்களாம்!!!!)
தான் தூங்கிப்போவாள்!!!


தனக்கு சாதகமாக இருக்கும்பட்சத்தில்
நான் இப்ப அம்மா!” என்று சொல்லிக்கொள்வாள்.


மழலையர் பள்ளியில் படிக்கும்போது
ஒப்பந்தம் போட்டாள் மகள்.

இன்று 4ஆவது படிக்கிறாள்.

நேற்று அம்மாவின் தலைக்கு
வெந்தயம்,ஆம்லா,செம்பருத்தி பேக்
போட்டுக்கொண்டே மகனிடம் கேட்டேன்,
“ஏன் அன்னபையா! யாரோ
வீக் எண்ட் மற்றும் லீவின் போது தான்
தான் அம்மாவா இருக்கபோறதா? சொன்னாங்களே!
அது என்னாச்சு”?

சிரிப்புடனே மகன்,”உங்கம்மாவைத்தான்
கேக்கணும். அம்மா அம்ருதம்மா பதில்
சொல்லுங்க” என்றான்.


”ஞாபகம் எல்லாம் இருக்கு!. நான்
ரொம்ப பிசி! என்று சொல்லிவிட்டு
அப்பாவிடம் ஓடிவிட்டாள். :((





இந்த அம்மாக்களே சுத்தம் மோசம்!!!!


வலைப்பூக்களில் எழுதும் அம்மாக்கள் சேர்ந்து
வலைப்பூ ஆரம்பிச்சிருக்காங்க.
முடிஞ்சப்ப போய் பாருங்க.

அம்மாக்களின் வலைப்பூக்கள்: