Monday, November 21, 2016

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? - பாகம் 1

ஒவ்வொரு நாளும் பல தரப்பட்ட மனுஷங்களை சந்திக்கிறோம். பலவித அனுபவங்கள் ஏற்படுது.   உதவி செய்யறவங்க கிடைச்சா போதும். அவங்களை மஸ்கா அடிச்சே தன் வேலையை சாதிச்சுக்கறவங்க இருப்பாங்க.

தன் வேலையை அடுத்தவங்க தலையில் கட்டிட்டு ஹாயா இருக்கறவங்க, சுயநலமிக்கவங்க, பணத்தை மட்டுமே குறிக்கோளா கொண்டவங்க, அன்புன்னா கிலோ எவ்வளவுன்னு கேட்கும் ரகம்னு எத்தனையோ பேரோட தினமும் பழகுறோம்.

ஒரு சிலர் நான் ரொம்ப ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டாக்கும்னு மனசுல பட்டதை டப்பு டப்புன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க. அப்படி சொல்லும்போது எதிராளி மனசு ஏதும் பாதிக்குமான்னு யோசிக்காம வார்த்தைகளை  அள்ளி கொட்டிடுவாங்க. சொல்லிட்டேன் அப்பதான் என் மனசு லேசாகும்னு நினைக்கறவங்க,” தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடுன்னு ”நினைக்கறதில்லை.

சிலர் எங்க போனாலும் மாலையும் மருவாதியும் தனக்குத்தாங்கற ரேஞ்சுக்கு நடந்துக்குவாங்க. இதனால அடுத்தவங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கா பாக்கறதில்லை. சிலருக்கு எது செஞ்சாலும் அதுல ஏதாவது ஒரு கமெண்ட் அடிக்கணும். அப்பதான் மனசுக்கு நிம்மதி. நிம்மதி அவங்களுக்கு ஆனா அடுத்தவங்களுக்கு????! அதைப்பத்தி நமக்கென்ன கவலை!!!

ஆனா இப்படி பட்பட்டுன்னு பேசறவங்களை கவனீச்சீங்கன்னா ஒரு விஷயம் புரியும். அவங்களைப்பத்தி ஒரு நெகட்டிவ் கமெண்ட் கொடுங்க அவ்ளோதான் தாங்க மாட்டாங்க. அதெப்படி என்னைப்பத்தி இப்படி பேசலாம்னு சண்டைதான் போடுவாங்க.

ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவங்க எதிர்த்து பேச மாட்டாங்க. இல்ல பேசி என்ன ஆகப்போகுதுன்னு போயிடுவாங்க. நாம ஏதாவது பேசி அவங்க மனசு காயப்பட்டுட்டா பாவமாச்சேன்னு நினைக்கறவங்க மனசு தான் அதிகம் காயப்படுது. (எங்க அம்மம்மா பதிவு முழுக்க நிறைய்ய இடத்துல இவங்க வருவாங்க அதனால் ஒரு அறிமுகம். அம்மாவுடை அம்மா அம்மம்மா. பாட்டின்னு எழுதலாம் ஆனா என் மைண்ட்ல அவ்வா (பாட்டி)ன்னா அது அப்பாவுடைய அம்மா. ). எங்க அம்மம்மா சொல்வாங்க நாம பேசும் வார்த்தைகள் நமக்கு எவ்வளவு மன வருத்தம் இருந்தாலும் கடுமையானதா இருக்க கூடாது. நாம சொல்லும் சொல்லால அவங்க ஆத்மா துடிச்சா அந்த பாவம் உனக்கு தான் வரும்னு. ஆனா எல்லோரும் இந்த மாதிரியான நினைப்போட இருக்க மாட்டாங்க.

ஒரு பிரச்சனை அல்லது  சம்பவங்கள் போது நடக்கும் வாக்கு வாதங்கள், பேசக்கூடிய வார்த்தைகள் எல்லாம் அப்படியே மனசுல பதிஞ்சு ஆறாத காயமாகிடும். அவைகளை நாம வெளிக்காட்டாம உள்ளயே வெச்சு மூடிடுவோம்.  நீறு பூத்த நெருப்பா உள்ள இருப்பது நமக்கு தெரியாது. சரி மறந்திட்டோம்னு நினைப்போம். ஆனா அடுத்த அடி விழும்போது அது பொங்கி வரும். இப்பவும் வெளிக்காட்டினா பின் விளைவுகளை நினைச்சு பேசாம இருப்போம். அப்படியே ஆழ்மனசுல ஆழமா பதிஞ்சு ரணமா இருக்கும். இதுதான் நம் உடம்புல அங்கங்க வலியை தருது. இதை வெளியேத்தினா தான் எந்த மருத்துவமும் வேலை செய்யும். எவ்வளவோ மருந்து சாப்பிடறேன் ஆனா வலி குறையலையே!!! காரணம் என்ன?

ஒரு தடவை சுய அலசல் செஞ்சு பாப்போமா?  சுய அலசல் எதுக்கு? நாம யாரையாவது கடுமையா பேசி இருக்கோமா? நாம பேசினது அவங்களை பாதிச்சிருக்குன்னு தெரியாமலையே கூட இருந்திருக்கும். சில இடத்துல எதுவும் ரியாக்ட் ஆகாம இருந்திருக்கலாம். ஆனா ஏதாவது எடக்கு மடக்கா பேசிருப்போம். அதனால அடுத்தவங்களை பாதிச்சிருக்கலாம்.

சரி உள்ள இருக்கும் நெகட்டிவ் எண்ணங்களை  எப்படி வெளியே கொண்டு வருவது. பேசலாம்.