Total Pageviews

Thursday, April 29, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி - 29/4/10

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்
பொன் மாதிரி சானியா கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி
பின்னாடியும் சரி பரபரப்பு நியூஸ்தான். கல்யாணம் ஆகி
ஊருக்கு போய் இறங்கியிருக்காங்க இரண்டு பேரும்.
ரசிகர்கள் கூட்டம் மொய்ச்சு எடுத்து சானியாவை தொட
முயன்றார்களாலாம். போலீஸால கூட கட்டுப்படுத்த
முடியாம திண்டாடி போனாங்களாம்.

இப்படி “டச்சிங்” வரவேற்பு கொடுத்திட்டாங்களேன்னு
அம்மையார் ஒரே புலம்பல்ஸாம்.
*****************************************
நம்ம ஊர்ல கண்ட எடத்துலயும் கரெண்ட் எடுத்து
ஜகஜ்ஜோதியா விளக்கு வெச்சு அநியாயம் செய்வாங்க.
ஆனா அதை யாரும் தடுக்க மாட்டாங்க. ஆடம்பர
விளக்குகள் இல்லாம எளிமையா எந்த விழாவும்
நடக்காது. மைக் செட் அது இதுன்னு கரெண்ட்
கன்னாபின்னான்னு உபயோகப்படுத்துவாங்க.
அதுவும் அநாவசியாமா தனது டாம்பீகத்தைக்
காட்டிக்கத்தான்.

நம்ம பக்கத்து நாடான பாகிஸ்தானில் சோயப்மாலிக்
சானியா திருமண வரவேற்பில் போடப்பட்டிருந்த
அலங்கார விளக்குகளை எடுக்கச் சொல்லிட்டாங்களாம்.
”எனர்ஜீ சேவிங்”அப்படின்னு அரசு அறிவிச்சு
இருக்கும் இந்த வேளையில் இப்படி செஞ்சா அது
தப்புன்னு சொல்லி அலங்கார விளக்குகளை
எடுக்க வெச்சாங்க. சோயப்போட மச்சான்
எவ்வளவோ கெஞ்சி பாத்தும் முடியாதுன்னு
சொல்லிட்டங்களாம். கோவத்தோட அவங்க
அலங்கார விளக்குகளை எடுத்ததா படிச்சேன்.

நம்ம நாட்டுல இது சாத்தியமா!!???

***********************************************

ஆந்திராவில் முதல்வர் ரோசய்யா ஒரு சட்டம்
கொண்டுவந்திருக்காரு. அது வணிக வளாகங்களுக்கு
மின் கட்டணம் அதிகரிப்பு. 10 மணியிலேர்ந்து
இரண்டு மணிவரை அதிகமா தேவையில்லாம
மின் உபயோகம் செய்வது இவங்க. அதனால்
மின் கட்டணம் உயர்த்தப்படுதுன்னு சொல்லியிருக்காங்க.
அலங்கார விளக்குகள், அதுஇதுன்னு இங்கயும்
கரெண்ட் அதிகமாத்தான உபயோகிக்கறாங்க.

அங்க ஏத்தினாங்க சரி, அதை சரிக்கட்ட நமக்கு
கடைக்காரங்க நமக்கு பில் ஏத்திடுவாங்களே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*************************************************

ஏதோ எடுத்துக்குடுக்கச் சொன்னதுக்கு அயித்தான்
”வயசான காலத்துல என்னைய ஏன் வேலை வாங்கற”!
அப்படின்னு சொன்னாரு. “நீங்க யங்காத்தான் இருக்கீங்க,
எனக்குத்தான் வயசாயிடிச்சுன்னு”நான் சொல்ல உடனே
அம்ருதம்மா “இது எந்த ஊரு நியாயம். எந்த பஞ்சாயத்துலயும்
செல்லாது. அப்பா யங்குன்னா நீங்களும் யங்கு” அப்படின்னு
கமெண்ட் அடிச்சாங்க.

உடனே அப்பாவுக்கு செம சந்தோஷம். முகமெல்லாம் பூரிப்பு.
ஆஷிஷ் அண்ணா,”எனக்கு இந்த அளவுக்கு பேசும் தெளிவு
இருந்தா நல்லது!” அப்படின்னு சொன்னாங்க.

பொம்பிளை பசங்களுக்கு மெச்சூரிட்டி சீக்கிரம் வந்திடுத்துன்னு
சும்மாவா சொன்னாங்க.
**************************************************

ஆண்டவனோட படைப்புல ஆணும் பெண்ணும் சரிசமம்,
அது இது பெண்ணீயம் எல்லாம் பேசுவோம். ஆனா
உண்மையில் பாத்தா இருவருக்கும் பயங்கர வித்தியாசம்.
பெண்ணைவிட ஆணுக்கு கலோரிகள் அதிகமாக இருக்கணும்.
உடல் எடையிலேர்ந்து எல்லாமே வேற வேற.

சில ரங்கமணிகள் ”என் தங்க்ஸ் எப்பவும் தூங்கிகிட்டே
இருப்பாங்க. எவ்வளவு தூங்கினாலும் பத்தலைன்னு
சொல்வாங்க” அப்படின்னு ஒரே புலம்பல்ஸ்.

இனி அப்படி புலம்பாதீங்க ரங்கமணிகளே. ஏன் சொல்றேன்
தெரியுமா பெண்களுக்கு தூக்கம் அதிகமாத்தான் தேவை.
மல்ட்டி டாஸ்கிங் என்பது பெண்களுக்கு கைவந்த கலை.
அந்த மாதிரி கலைக்கு அவங்க மூளை அதிகமாக வேலை
செய்வதனால அவங்களுக்கு ஓய்வும் அதிகமா தேவை.
அதனால அடுத்த வாட்டி உங்க தங்க்ஸ் தூங்கினா தூங்கட்டும்னு
விடுங்க. அந்த ஓய்வு அவங்களை அதிக வேலை செய்ய
உதவும்.

********************************************

போன மாசம் லீவுக்கும் பசங்களை எங்கயும்
கூட்டிகிட்டு போகலை. இப்பவும் 2 மாசம் லீவு.
அதனால் இன்னைக்கு சாயந்திரம் கூ சுகு சுகுன்னு
மீ த டாடா கோயிங். 1 வாரத்துக்கு கடைகு
லீவு. யாரும் அழக்கூடாது.அழாம நல்ல பிள்ளையா இருங்க.
வெயில்ல சுத்தாமா நுங்கு, இளநின்னு சத்தா
குடிங்க. கூல் ட்ரிங்க்ஸ் வேண்டாம்.
பை பை


Wednesday, April 28, 2010

பதின்மவயதுக்குழந்தைகளுக்குச் சத்தான உணவு பாகம்:1

ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைச்சு தேடுவோம்.
கிடைச்சா சந்தோஷப்படுவோம். இல்லாட்டி வருத்தப்படுவோம்.
அந்த மனநிலைதான் எனக்கு. என் மகனும் பதின்மவயதில்.
அவனுக்கு எப்படி போஷாக்கான உணவு கொடுப்பது?
நம் பழங்கால வழக்க உணவு ஏதும் இருக்கா?
எனக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க எல்லார் கிட்டயும்
கேட்டுப்பாத்தேன். பெண்குழந்தைகளுக்கு சொல்லியிருப்பது
போல ஆண்குழண்ந்தைகளுக்குன்னு ஷ்பெஷலா யாருமே
சொல்லவில்லை.

1 வருடம் முன்பு ஆஷிஷ் ரொம்ப மெலிஞ்சு போய்
இருந்தான். சில சமயம் தலை சுத்தி மயக்கம்
போட்டு விழுவான். வகை வகையா சமைச்சு
போடுறேன். சத்தான காய்கறிகள், பழங்கள்னு
பாத்து பாத்து செய்யறோமே! என்னாச்சோன்னு
பயந்து டாக்டர்கிட்ட கூட்டிகிட்டுப்போனா
உடம்பு சத்துல சத்து குறையுது, உயரம் அதிகம்.
அதுக்குத் தகுந்த எடை இல்லை. இதனால
லோ பீபீ வந்து மயக்கம் அப்படின்னு
சொன்னார். இதென்ன கொடுமைடா சாமின்னு
பால், சீஸ், தயிர், பழங்கள்னு இன்னும் அளவுக்
கூட்டிக்கொடுத்தேன். 42 கிலோவிலிருந்து 48 கிலோவுக்கு
கொண்டு வந்தேன். மயக்கம் வருவது குறைஞ்சு,
கொஞ்சம் ஆக்டிவா இருக்க ஆரம்பிச்சான்.

எங்க வீட்டுல எல்லோரும் நல்ல உயரம். மாமனார்
6 அடிக்குமேலே. அயித்தானும் நல்ல உயரம்.
என் தம்பியும் அயித்தான் அளவுக்கு உயரம் தான்.
அதனால் வளர்ச்சி நல்லா இருக்கு. ஆனா அதுக்கு
ஏத்த உடல் பருமன் ஆஷிஷுக்கு இல்ல.(பதின்மவயதில்
எடைக்கும் உயரத்துக்கும் இருக்கும் அளவு பெரியவர்களுக்கு
வேறுபடும்) வெறும் சாப்பாடு மட்டும் போதாது.
ஆனா இப்ப ஜிம் அனுப்பும் வயசும் இல்ல.
ஏதாவது செய்யணுமே. மண்டைல குடைச்சல்.

உயரம் அதிகமா இருக்கும் குழந்தைகளைப் பாத்தீங்கன்னா
ரொம்ப ஒல்லியா கூன் போட்டு தெரிவாங்க. அந்த
உயரத்துக்கு நல்லா ஆஜானுபாகுவா தோள்கள்
வலிமையா வந்தா நல்ல உடல்வாகு அமையும்.
பாக்கவும் நல்லா இருக்கும். முகம் கூட சிறுத்துப்போய்
கொஞ்சம் ஒரு மாதிரியா இருப்பாங்க. இது
உயரம் அதிகமான பிள்ளைகளுக்கு.

நார்மல் உயரம் இருக்கும் சில பிள்ளைகள் அதீத
எடையுடன் இருப்பாங்க. இதுவும் கஷ்டம்.

போன மாசம ஆஷிஷை என்னோட டயட்டீஷியன்
கிட்ட கூட்டிகிட்டுப்போனேன். அவங்க கிட்ட
என்னோட டென்ஷனைச் சொன்னேன். இவ்வளவு
தூரம் யோசிச்சதுக்கு பாராட்டினாங்க. ஒரு தாயா
என் மகனின் உடல்வளர்ச்சியும் எனக்கு முக்கியம்.
”ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே
வளர்ச்சி!!”

நல்ல டயட் ப்ளான் போட்டுக் கொடுத்திருக்காங்க.
டயட்டுன்னவுடனே பலரும் கிண்டல் செஞ்சாங்க.
வயசுப்பிள்ளைக்கு எல்லாம் கொடுங்க டயட்டுன்னு
வயத்தக் காயப்போடாதீங்கன்னு அட்வைஸ் வேற.
டயட்டுன்னாலே சாப்பாடுதான்னு புரியாதவங்க கிட்ட
பேசுறது வேஸ்ட். இப்ப மகனுக்கு கொடுப்பது
BALANCED DIET. நாம் உண்ணும் உணவும் இப்படித்தான்
இருக்கணும்.

ஆஷிஷ் இன்னும் உயரம் வளருவான். அதுக்கேத்த
நல்ல உடலமைப்பை இப்ப உருவாக்கினாத்தான் உண்டு.
இந்த சமையத்தில் உடலை கொஞ்சம் வளைக்க முடியும்,
இப்ப முடியாட்டி எப்பவுமே முடியாது. பின்னாளில்
உடல் பருமன் ஏறும். அப்ப அருமையான உடல்வாகு
கொண்டுவர முடியாதுன்னு சொன்னார் டயட்டீஷியன்.

இந்த வயதில் பிள்ளைகளுக்கு சத்துச் செலவு அதிகம்.
எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. அதனால கார்போஹைடரேட்
அளவைக் கொஞ்சமா குறைச்சு மத்த அயிட்டங்களையும்
கொடுக்கணும். 3 வேளை உணவு பத்தாது. அதை அப்படியே
ஸ்பிலிட் செஞ்சு 9 வேளையா கொடுக்கணும்.

ஸ்கூல் போனபோது ஒரு டயட் ப்ளான் இருந்தது.
இப்ப வீட்டில் இருக்கும் போது வேறு ப்ளான்.

பால், பழங்கள்,சீஸ், ப்ரட்,ஃப்ரெஷ் ஜூஸ், மோர், காய்கறிகள்,
பருப்பு,இட்லி/தோசை/உப்புமா,அரிசி/சப்பாத்தி,
சோயா மில்க், வால்நட்,பாதாம் எல்லாம் கொடுக்கணும்.
அசைவம் சாப்பிடறவங்க
முட்டை (அதிக எடை இருப்பவங்க மஞ்சள்கரு
இல்லாம சாப்பிடணும்), இறைச்சி, மீன் எல்லாம்
கொடுக்கலாம்.

இரவு படுக்க போகும் முன் ராகி மாவில் கஞ்சி செய்து
அதில் வெல்லம் பால் சேர்த்து கொடுக்கலாம்.
இதனால ராத்திரியில் நல்லா தூங்குவாங்க.
உடலுக்கும் பலம். குளிர்ச்சியும் கூட.

இரும்புச் சத்து இப்ப ரொம்ப முக்கியம். பேரிச்சம்பழம்
கொடுக்கலாம். பேரிச்சம்பழம் விரும்பாதவங்களுக்கு
அந்த சிரப்பை பாலில் கலந்து கொடுக்கலாம். பீன்ஸ்,
கீரைவகைகள், வால்நட், பாதாம் போன்றவைகள்
நல்லா கொடுக்கணும்.

இரும்புச் சத்தும், கால்சிய சத்தும் இப்ப அதி முக்கியமான
தேவை பிள்ளைகளுக்கு. பெண்குழந்தைகளுக்கு 200mg,
ஆண்குழந்தைகளுக்கு 300 mg அளவு நாளொன்றுக்குத்
தேவை. அதனால பால், தயிர், சீஸ் கொஞ்சம் அதிகமாக
கொடுக்க வேண்டும்.

இதோடு உடற்பயிற்சி முக்கியம். 20 புஷப்ஸ், 20 நிமிடம்
சைக்கிளிங், டான்ஸ், விளையாட்டுக்கள்னு
வைக்கணும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம்
30 நிமிடங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு
ஒதுக்கி அவங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கணும்.
இல்லாவிட்டால் உண்ணும் உணவு கொழுப்பாகி
அவஸ்தையைக் கொடுக்கும்.முறையான உடற்பயிற்சி
பதின்மவய்தில் செய்ய துவங்குவதால பின்னாளில்
heart disease, certain cancers, diabetes,
hypertension, bowel problems மற்றும் osteoporosis
போன்ற நோய்களில் இருந்து காக்கப்படுவாங்க.

ஸ்லிம்மா இருக்கணும், சிக்ஸ் பேக் வைக்கணும்னு
சாப்பாட்டைத் தவிர்க்க பாப்பாங்க பசங்க. அதனால
கவனம் தேவை. பச்சைக்குழந்தைக்கு சாப்பாடு
எப்படி பாத்து பாத்து கொடுப்போமோ அப்படி
பதின்மவயதுக்குழந்தைகளுக்கு கொடுக்கணும்.
இதில் ஆண்குழந்தை, பெண்குழ்ந்தைன்னு
பாகுபாடே இல்லை.


இந்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா உணவு
கொடுப்பதால வயறும் காய்வதில்லை. உடலுக்குத்
தேவையான எல்லா சத்துக்களும் கிடைச்சிடுது.
அப்ப உடல் ஆரோக்கியமா இருக்கும்.
உடல் ஆரோக்கியமா இருந்தா செய்யும் வேலையும்
பளிச், பளிச் தானே!

இந்த வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்ட்ரெஸ்,
எமோஷன் அப்சட் குழந்தைகளின் உணவுபழக்கத்தில்
பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பாட்டின் அளவு
குறைஞ்சிடும். இதனால் ரொம்ப பாதிப்புக்கள் வரும்.
உடல் பருமனாகிடும்னு பல பெண்குழ்ந்தைகள்
ரொம்ப கொஞ்சமா சாப்பிடுவாங்க. பழங்கள், ஜுஸ்,
தயிர், மோர், பால், சீஸ் எல்லாத்துக்கு நோ
சொல்லிடுவாங்க. இந்த மாதிரி பிள்ளைகளை
ரொம்பவே கவனிச்சு சாப்பாடு கொடுக்கணும்.
இல்லாட்டி அவர்களின் மாதவிலக்கின் போது
பல பிரச்சனைகள் வருமாம்.

முறையான சாப்பாடு, போதுமான உடற்பயிற்சி
கொடுத்தா ஸ்ட்ரெஸ் ஓடி போயிடும். அதோட
நாம கொடுக்கும் அன்பும், ஆதரவும் இருக்கறப்போ
பிள்ளையை ஏதும் அண்ட முடியுமா என்ன??

குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜ் வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம். பலர் பள்ளி போகும் பருவம்
வரை பாத்து பாத்து செஞ்சிட்டு அப்புறம் விட்டுவாங்க.
பதின்மவயதின் மனவளர்ச்சியும், உடல்வளர்ச்சியும்
ரொம்ப முக்கியம்.

முடிஞ்சா உங்க குழந்தையையும் நல்லதொரு
டயட்டீஷியன் கிட்ட கூட்டிகிட்டுப்போய் பேசுங்க.
அவங்க கொடுக்கும் உணவுமுறை (நாமும் கொஞ்சம்
அவங்களுக்காக ஆரோக்கியமான உணவு எடுத்துக்கலாமே,
நாமதானே அவங்களுக்கு ரோல் மாடல்) பிள்ளைக்கு
கொடுக்கலாம். டயட்டீஷியன்ஸ் அடம் பிடிக்கும்
குழந்தைகளுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் செஞ்சு
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு கொண்டு வருவாங்க.
(ராகி கஞ்சிக்கு நோ சொன்ன ஆஷிஷை டயடீசீயனின்
கவுன்சிலிங் தான் எஸ் சொல்ல வெச்சுச்சு)இல்ல
மேலே சொல்லியிருக்கும் உணவுகளை சரியா
கொடுக்கலாம்.


இப்ப ஆஷிஷிடம் நல்ல முன்னேற்றம். இப்பவே
என் உயரம் வந்தாச்சு.(5.4) அதுல அவருக்கு ரொம்ப
சந்தோஷம். இனி அப்பா உயரத்தை எட்ட டார்கெட்
வெச்சிருக்காரு. ஆஷிஷோட கால் சைஸும்,
அயித்தானின் கால் சைஸும் சமம். அப்பாவோட
ஷூஸ் எனக்குத்தானு டெர்ரர் மெசெஜ் கொடுக்கறாரு.


வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு
கொடுன்னு பெரியவங்க சொல்வாங்க. அது
நம்ம பதின்மவயதுக்குழந்தைகளுக்கும் பொருந்தும்.
நல்லா சாப்பிட்டு, நிறைவா வளர உதவியா
இருக்கும்.

இப்ப நம்மளைத்திட்டினாலும் பின்னாளில்
அவங்க சந்தோஷமா இருப்பாங்கள்ல.
இந்த வெப்பேஜில் பார்த்தால் நிறைய்ய ஐடியாஸ்
கிடைக்கும்.


Tuesday, April 27, 2010

பதின்மவயதுக்குழந்தைகளுக்கு சத்தான உணவு

தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்னு முண்டாசு கவிஞர் பாடிவெச்சதிலேயே
உணவு எவ்வளவு முக்கியம்னு தெரியுது. அதிலயும்
நாம் சாப்பிடும் உணவு சத்தான உணவா இருப்பது
ரொம்ப முக்கியம்.

குழந்தை பிறந்ததும் முதல் உணவு அன்னையின்
அமுதான தாய்ப்பால்தான். அதில் கிடைக்காத
சத்துக்களே இல்லை. அதன் பிறகு குழந்தைக்கு
திட உணவு கொடுக்கும்போது கூட சத்தான
உணவா கொடுக்கணும். இல்லாட்டி உடல்பருமன்,
அல்லது குறைவான எடைன்னு குழந்தை அவதிப்படும்.

பிறந்த குழந்தையை வளர்ப்பதைவிட பள்ளிப்போகும் வயது
குழந்தையை வளப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனா
உள்ளதிலேயே ரொம்ப கஷ்டமான ஸ்டேஜ்னு சொன்னா
அது இந்த பதின்மவயதுதான்.

சின்னக்குழந்தையை மிரட்டி, திட்டி, கொஞ்சின்னு
எப்பாடுபட்டாவது சாப்பிடவெச்சிடலாம். வாயில
ஊட்டி ஏதோ ஒரு வகையா சாப்பாட்டை உள்ளேத்
தள்ளிடலாம். ஆனா இந்த பதின்மவயதுக்குழந்தையை
இடுப்பில வெச்சு ஊட்டவா முடியும்?

ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்துக்கு வரப்போகிறாள்னு
அவளோட உடல்வளர்ச்சி கட்டியம் கூற ஆரம்பிச்சதும்
வீட்டுல ஆரம்பிச்சிடுவாங்க. சத்தான உணவு கொடுப்பாங்க.
பூப்பெய்தியதும் பச்சை முட்டை, நல்லெண்ணெய்,
உளுந்தங்களி, அது இதுன்னு நல்லா கவனிப்பாங்க.
நெய், பால், இடுப்பை பலமாக்க திண்பண்டங்கள்னு
ஓவ்வொரு ஊரிலும் ஒரு பழக்கம் இருக்கும்.
எப்படியோ பொண்ணை சரியா கவனிச்சிடறாங்கன்னு
சொல்வேன்.

ஆனா இந்த பதின்மவயது ஆண்குழந்தைகள்தான்
ரொம்ப பாவம். தட்டு நிறைய்ய சோறு வெச்சா
சரி. பத்தோ பதினொண்ணோ தோசைன்னு ஊத்தி
போட்டா சரின்னு இருப்பாங்க சிலர். இதனால
அந்த வயசுபசங்க சரியான வளர்ச்சி இலலாமா
ஒண்ணா ரொம்ப குண்டா இல்லாட்டி ஒல்லியா
இருப்பாங்க. முறையான கவனிப்பு இல்லாததுதான்
காரணம். எங்க ஊர் பக்கம் ஒரு வாக்கியம் சொல்லி
கேள்விப்பட்டிருக்கேன். “குறத்தி பிள்ளைபெற
குறவன் மருந்து சாப்பிட்டானாம்” என்பதுதான் அது.

சத்தான உணவு குறவனுக்கு கிடைக்காட்டி பிரச்சனைதானே!!!
யாருக்காவது பதின்மவயதுக் குழந்தைக்கு என்ன
கொடுக்கணும்? எப்படிக்கொடுக்கணும்னு தெரியுமா?
காலங்காலமா சமைஞ்ச பொண்ணு, சமைய போகும்
பொண்ணுன்னு எல்லாம்பொண்ணையே டார்கட் கட்டி
ஊட்டச்சத்தை கொடுத்தாங்க.

அதுக்காக நாம அப்புடியே விட்டுடலாமா?
எப்படி உணவு கொடுக்கணும்? எப்பப்போ கொடுக்கணும்?
இதைப்பத்தி பேசுவோமா??

தெரிஞ்சவங்க உங்க கருத்தையும் சொல்லுங்க.
பலருக்கும் உதவப்போகுது இந்தப் பதிவு.


Monday, April 26, 2010

சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி

நான் முதன் முதலில் டான்ஸுன்னு ஆட ஆரம்பிச்சது
இந்தப்பாட்டுக்குத்தான். எதிர்வீட்டுல ஒரு அக்கா
டான்ஸ் கத்துகிட்டு வந்து வீட்டுல ஆடிப்பாப்பாங்க.
நான் அவங்களைப்பாத்து கத்துகிட்டு ஆடின பாட்டு.
அதைவிடவும் இந்தப்பாட்டின் வரிகள்....
கம்பீரக்குரலில் குழைஞ்சு பாடியிருப்பார் சீர்காழி
கோவிந்தராஜன்.

ஸ்பீக்கர் கட்டி நடக்கும் திருவிழாக்களில் இந்தப்பாடல்களை
கேட்டிருக்கேன். அதுக்கப்புறம் வாய்ப்பு இல்ல.
இப்பத்தான் வலையில் எதுவும் ஈசியா கிடைக்குதே.
நீங்களும் கேட்டுப்பாருங்க.


அபிராமி பட்டருக்காக தன் தோட்டைக்கழற்றி
வானத்தில் எறிந்து அமாவாசையன்று பொளர்ணமியை
வரவழைத்தாள். இந்த அபிராமி அந்தாதியும்
சீர்காழி அவர்களின் குரலில் பக்தி ப்ரவாமாக இருக்கும்.


என்னப்பன் கந்தப்பன் மீது கோவிந்தராஜன் அவர்கள்
பாடிய இந்தப்பாட்டும் என் ஆல்டைம் ஃபேவரைட்.

நீயல்லால் வேறு தெய்வமில்லை.. எனது
நெஞ்சே நீ வாழும் எல்லை- முருகா




நானொரு விளையாட்டு பொம்மையா....

சிறுவாச்சூர் மதுர்காளியம்மன். இது அம்மாவின் தாத்தாவுக்கு
இஷ்ட தெய்வம்.தாத்தா வாயைத்திறந்தாலே காளி,காளி
பத்ரகாளி என்று தான் எப்போதும் வரும். என்னைக்
கூப்பிடுவதும் காளி என்றுதான். (நம்ம ஆட்டத்துக்குத்தான்
தாத்தா காளின்னு கூப்பிடுறாருன்னு ஒரு சந்தேகம்
எப்பவும் இருக்கும். வீட்டுக்கு மூத்த பேத்தின்னு எப்பவும்
அல்லி ராணி ரேஞ்சுக்கு நடந்துப்போம்ல)

சிறுவாச்சூரில் தாத்தாவுக்கு நிலங்கள்,
வீடு இருந்ததுன்னு சொல்லக் கேள்வி. என்னாஆச்சோ
தெரியாது.



பத்து வயது இருக்கும். அம்மம்மாவீட்டில் அனைவரும்
எங்கள் குடும்பம் எல்லோருமாக சேர்ந்து கோவிலுக்கு
வேன் எடுத்துச் சென்றது ஞாபகம் இருக்கு.
வெயில்காலத்தில் கூரைவீட்டின் குளிர்ச்சியில் ஹாயாக
அமர்ந்திருந்தேன். அம்மா, சித்தி, அம்மம்மா மாவிளக்கு
போட மாவிடுத்துக்கொண்டிருந்தனர்.

பொங்கல் எல்லாம் ஏற்பாடு செய்து அம்மனுக்கு
அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள். பச்சை
மஞ்சளை அரைத்து கொண்டுவந்திருந்தார் அம்மா.
அதை நீரில் கரைத்து அபிஷேகம் செய்யும் பொழுது
கிளர்ந்தெழும் வாசம்....

அம்மா நல்லா பாடுவாங்க. குரலும் இனிமையா
இருக்கும். பாட்டு கத்துகிட்டவங்க ஆச்சே.
அம்மா இந்தப் பாட்டை பாடினாங்க. பாட ஆரம்பிச்ச
கொஞ்ச நேரத்துலேயே அழ ஆரம்பிச்சிட்டாங்க.

சாமிகிட்ட போய் யாராவது அழுவாங்களான்னு
அறியாத அந்த வயசுல நினைச்சிருக்கேன்.
சாமியைப்பாத்ததும் உள்ளும் உருகி கரையும்னு
இப்ப அனுபவம் கத்துக்கொடுத்திருக்கு.

அம்மா பாடிகிட்டே அழுத இந்தப்பாட்டு
எனக்கு ரொம்ப பிடிச்சிது. அருமையான
வரிகள்.


நானொரு விளையாட்டு பொம்மையா...
ஜகன் நாயகியே உமையே

நாநிலத்தில் பலபிறவி எடுத்து
திண்டாடினது போதாதா

அருளமுதைப்பருக அம்மா அம்மா
என்றலருவது கேட்பதுஆனந்தமா!!!
ஒரு புகழினிர் உன் திருவடி அடைந்தேனே
திருவுள்ளம் இறங்காதா - உனக்கு

அவ்வளவுதான் பாடல்வரிகள்.
பாபநாசம் சிவன் அவர்கள் எழுதியது.
பாடலைக்கேட்டுப்பாருங்கள் உங்கள்
உள்ளம் கண்டிப்பாய் உருகும்.


Friday, April 23, 2010

அம்மா.. வயிறு வலிக்குதே...

ஒவ்வொரு திங்கக்கிழமையும் ஸ்கூல் வேனிலிருந்து
இறங்கும்பொழுதே ஆரம்பமாகிவிடும் வயிற்றுவலி.
காரணம் வேறொன்றுமில்லை. அன்று வெள்ளவத்தையில்
இருக்கும் டீச்சர் வீட்டில் ஆங்கில ட்யூஷன். இதற்கு
elocution என்று பெயர்.

ஆங்கிலம் ஆஷிஷுக்கு பிடித்த பாடம்தான். ஆனா
அந்த டீச்சர். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்ட்ரிக்ட். இதை
(இன்வேர்டர் கமாஸ் போட்டு, போல்ட்லெட்டரில்
போட்டு படித்துக்கொள்ளவும்)

வாரம் ஒரு முறை மட்டும் elocution வகுப்பு. அதுவும்
ஒருமணிநேரம் என்று பேர்தான். ஆனால் பல நாட்கள்
4 மணிநேரம் கூட காத்திருந்திருக்கிறேன். கிட்டத்தட்ட
8 புத்தகங்கள். அவற்றை முடிக்காமல் விடமாட்டார்.
அந்த டீச்சர் சொல்லிக்கொடுக்கும் டெக்னிக் கொஞ்சம்
வித்தியாசமானது.

கணக்கு மாடல் சம் சொல்லிக்கொடுத்து மற்றவற்றை
நீங்களே போடுங்கள் என்று சொல்வார்களே அந்த ரகம்.
ஆங்கிலமும் அப்படித்தான் இவரிடம். ”நீ டிக்‌ஷனரி தேடு,
என்னவோ செய் ஆனால் எனக்கு விடை வேண்டும்”
அதற்குத் தேவையான டிக்‌ஷனரி,தெசாரஸ் போன்ற
புத்தகங்களும் வகுப்பில் வைத்திருப்பார். அதைத் தேடி
விடையைக் கண்டு பிடிக்க வேண்டும். சில சமயம் 2
மணிநேரத்தில் முடித்து விடுவார் அண்ணா. சில சமயம்
ஆஷிஷை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு அம்ருதாவை
மட்டும் அழைத்து வந்திருக்கிறேன். பிறகு போய் அழைத்து
வருவேன்.

ஒரு நாள்,”வெள்ளவத்தை கிளாசுக்கு நான் இனி
வரமாட்டேன்!” என்று அண்ணா சொல்லிவிட்டார்.
அவனுக்கு பிடிக்கவில்லை என்று பியானோ, நீச்சல்,
கம்ப்யூட்டர் வகுப்புக்களை நிறுத்தினேன். ஆனால்
என்ன ஆனாலும் சரி இலங்கையை விட்டு வரும்
வரை இந்த வகுப்பை மட்டும் விட மாட்டேன் என்று
கங்கணம் கட்டி இருந்தேன்.

”அம்மா உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்துவதற்காக
திட்டிக்கொண்டு இருந்தாலும் இருப்பாய். இப்போது
வருத்தப்படும் நீ பின்னாளில் இதற்காக மகிழ்வாய்.
அதனால் இந்த வகுப்பிலிருந்து மட்டும் நாம்
உன்னை விலக்க மாட்டேன்!” என்று கறாராய்ச்
சொன்னேன்.

வீட்டில் ஆங்கில புத்தகங்கள்,இதழ்கள் வாசிக்கச்
சொன்னேன். vocabulary முன்னேற்றத்துக்கு இது
உதவும். அப்போது ஒவ்வொரு வருடமும் வரும்
elocution பரிட்சை வந்தது. IWMS COLOMBOவால்
நடத்தப்படும் பரிட்சை இது. மொத்தமும் வாய்மொழி
தேர்வு. poem, அப்புறம் சில வார்த்தைகள் (things in
the bedroom, things in the kitchen) போன்றவற்றை
திக்காமல் திணறாமல் டகடகவென சொல்ல வேண்டும்.




உச்சரிப்பு, நம் உடை, நாம் நடந்துகொள்ளும் விதம்,
மனன சக்தி இப்படி எல்லாம் பார்த்து மதிப்பெண் கிடைக்கும்.
அந்த தேர்வுக்கு இந்த டீச்சர் தனது மாணவர்களை
அனுப்புவார். வயதுக்கு ஏத்தமாதிரி பரிட்சை. அந்த
வயது மாணவர்கள் மட்டுமே அந்த பரிட்சை செய்வார்கள்.

அந்தத் தேர்வுக்கு ஆஷிஷை அனுப்பினார் ஆசிரியை.
அம்ருதாவும் தான். 3 மாதங்கள் கழித்து ரிசல்ட் வரும்.
அதுவும் டீச்சருக்குத்தான். சஸ்பென்சாக உள்ளே அழைத்தார்
ஆசிரியை போனேன். Do you know how much your son and
daughter scored?" என்றார். மொளனமாக இருந்தேன்.
மதிப்பெண் தாளை கொடுத்தார். இன்ப அதிர்ச்சி இருவரும்
100 மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர். இலங்கை மொத்தமும்
நடைபெறும் தேர்வில், மொத்த இலங்கையிலும் 400 பேர்தான்
100/100. அதிலும் இந்த டீச்சரின் வகுப்பிலிருந்து 10 பிள்ளைகள்
சென்றதில் ஆஷிஷ் மட்டும்தான் 100. அம்ருதா வயதுக்குழந்தைகளிலும்
அம்ருதாதான் 100.. ஆசிரியைக்குமிக சந்தோஷம்.

வெளிநாட்டிலிருந்து வந்து எங்கள் ஊர் தேர்வில்
உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்கள் உன் பிள்ளைகள்
என்று பாராட்டினார். இந்த மாதிரி ஒரு தருணத்துக்காகத்தான்
காத்திருந்தேன். இந்த பரிசு பெற்ற மாணவர்களை கொழும்புவில் இருக்கும்
BANDARANAYAKE MEMORIAL INTERNATIONAL CONFERENCE HALLல்
சான்றிதழும் கோப்பையும் கொடுப்பார்கள்.


பரிசளிப்பு விழாவுக்கு போய் அங்கே போட்டோவெல்லாம்
எடுத்து வீட்டுக்கு வந்ததற்கப்புறம் ஆரம்பித்தேன்.
“இப்போ எப்படி ஃபீல் செய்யற”
ரொம்ப பெருமையா, சந்தோஷமா இருக்கும்மா”

குட். நீத்து மிஸ் கிளாசுக்கு போகமாட்டேன்னு
சொன்னீங்க. அங்க போனதாலதான இந்த கொளரவம்!”

”ஆமாம்மா, அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கறதால
அப்படி சொன்னேன். ஆனா அவங்க அவ்வளவு
ஸ்ட்ரிக்டா இருப்பது என் நல்லதுக்குன்னு புரிஞ்சிச்சுமா!”

நல்லது. சரி வெள்ளவத்தை கிளாசை நிப்பாட்டிலாமா”

”ஐயோ! அடுத்த வருஷமும் நான் இதுமாதிரி பரிசு
வாங்கணும். நானும் அம்ருதாவும் கண்டிப்பா போறோம்”
பெருமை பொங்க ஆஷிஷும் அம்ருதாவும்.





இப்படி எல்லாம் பேசி அந்த வகுப்பை மட்டும்
விட்டுவிடாமல் அழைத்துச் சென்றதன் பலன்
இப்போது வகுப்பில் இருவரும் ஆங்கிலத்தில் கிளாஸ் டாப்பர்.
"Ashish excells in english" "Amrtha's vocabulary is good"
என்று ரிப்போர் கார்டில் வரும்பொழுது மறக்காமல்
நினைவு கொள்வது அவர்களது எலோக்யூஷன் டீச்சர்
திருமதி. நீத்து டிசெல்வா அவர்களைத்தான். போன் போட்டு
தங்களின் மகிழ்ச்சியை ஆசிரியையுடன் பகிர்ந்துகொள்வார்கள்
இருவரும். அவருக்கும் மகா ஆனந்தம். இன்னமும்
என்னை மறக்காமல் இருக்கிறீர்களே பிள்ளைகளே என
உருகுவார்.

ஆங்கில பரிட்சைக்குமுதல் நாள் மட்டும் டீச்சர்
இலங்கையில் பாடம் நடத்திய புத்தகங்களை
செய்வார்கள் இருவரும். அவ்வளவேதான்.
ரொம்ப மெனக்கடல் இல்லை. அதான்
அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்டு
வழியமைத்துக்கொடுத்துவிட்டாரே ஆசிரியை.

சென்றமுறை கொழும்பு போனபோது ஆசிரியையை மறக்காமல்
சந்தித்து வந்தோம். பிள்ளைகள் இருவரையும் கட்டித்தழுவிக்கொண்டார்.
”முன்பு என்னைக்கண்டாலே பயப்படுவார்கள்,
இப்போது என் தோழர்கள் போல போன் செய்து
பேசுகிறார்கள். " you both were angels in my class!" என்ற
ஆசிரியரை ஆச்சிரியமாக பார்த்தனர் இருவரும்.

ஈன்ற பொழுதில் பெரிதுவப்பது அன்னை. ஆனால்
அதே அளவு பெருமை கொள்வது ஆசிரியரும் தான்.
எந்த ஆசிரியரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்
,”என் ஸ்டூடண்ட் அங்கே பெரியவேலை, எப்படி
இருக்கிறான் தெரியுமா!!” என் பெருமை பொங்க
பேசுவார்கள். அது அன்னையின் பாசத்தைப்போன்றது.

இங்கே வந்த பிறகு அறிவியலுக்கும், கணக்குக்கும்
மட்டும் ட்யூஷன் வைத்தேன்.(இந்திய பாடத்திட்டத்தில்
படித்திராத காரணம், நமக்கு சொல்லிக்கொடுக்கும்
அளவுக்கு கணக்குத் தெரியாது என்பது முக்கிய
காரணம் :) ) ஆண்டவனருளில்
அவரும் மிக நல்ல திறமையான ஆசிரியையாக்
கிடைத்தார்.

இருவரின் வளர்ச்சியிலும் அவரின் பங்கு அபாரம்.
ஆஷிஷ் தன் கனவாக aeronautical engineering
படிப்பு என்று சொன்னதும் உன்னை BITS PILANI
கல்லூரியில் சேர்த்துவிட்டுத்தான் ஓய்வேன் என்று
சொல்லி அதற்காக ஏற்பாடுகள், பயிற்சி கொடுக்க
என்னென்ன செய்யலாம் என அவரே கேட்டு,
அறிந்து எல்லாம் செய்கிறார்.

”உன் கனவு நனவாக வேண்டும ஆஷிஷ்.
கை நிறைய்ய சம்பாதித்து, பெரிய வீடு
கட்டி வாழ வேண்டும். அப்போது நான் என்
பிள்ளைகளை அழைத்துவந்து இந்த அண்ணா
என் ஸ்டூடண்ட், நீயும் இவரைப்போல வரவேண்டும்
என சொல்வேன்” என்பார் ட்யூசன் டீச்சர் சந்தனா.

என்னைப்போலவே படிப்பு மட்டும் போதாது,
மற்ற குணாதிசயங்களும் நல்லவையாக இருக்க
வேண்டும் என நினைக்கும் ஆசிரியை இவர்.
அம்ருதாவுக்கு வெளியுலகோடு இன்னமும்
நிறைய்ய எக்ஸ்போஷர் வேண்டும் என்று
அடிக்கடி சொல்லி அவளுக்குத் தைரியம்
கொடுப்பார்.

நல்ல ஆசிரியர் கிடைப்பது ஆண்டவனருள்.
எனக்கு கிடைத்த இந்த இரண்டு ஆசிரியைகளையும்
சிறம் தாழ்த்தி வணங்குகிறேன். உன்னதமான
பணியில் தன்னை ஈடுபடுத்தி அதன் பெருமையை
உணர்ந்து அதை செயல்படுத்தி காட்டும் இவர்களைப்
போன்ற ஆசிரியர்களுக்கும் என் வணக்கங்கள்.

Thursday, April 22, 2010

சீத்தாராமன் தாத்தா ட்யூசன் சென்டர்

3ஆம் வகுப்பு படிச்ச போது நடந்த டெஸ்ட் ஒன்றில்
என் வகுத்தல் கணக்கு தப்பாகிப்போச்சு. அதுவரைக்கும்
டெஸ்டில் குறைந்த மார்க் எடுக்காததால் ரொம்ப
கஷ்டா இருந்துச்சு. வீட்டுக்குப்போய் அம்மாகிட்ட
ரொம்ப அழுதேன். ”என்னைவிட ஸ்ரீதர் மார்க் கூடம்மான்னு
சொல்லி அழுதேன்”. ஸ்ரீதருக்கு அவங்க தாத்தாதான்
ட்யூஷன் டீச்சர்னு தெரிஞ்சதும் எனக்கும் சொல்லித்தருவாங்களான்னு
கேக்க அம்மாவை தூதுவிட்டேன்.

பின்னாடித் தெருவில் அவங்க வீடு. அம்மாவுக்கும்
தெரிஞ்சவங்க தான். அதனால போய் கேட்க
தாத்தாவும் சரின்னு சொல்லிட்டார். தாத்தா கையில
பிரம்போட ட்யூஷன் நடத்திக்கிட்டு இருந்தார்.
வம்பை விலைகொடுத்து வாங்கிட்டோமோன்னு
இருந்துச்சு. வேணாம்னு சொன்னா மத்தளத்துக்கு
இரண்டு பக்கமும் இடி மாதிரி ஆகிடும். ஆனது
ஆகட்டும் கிளாசில் ஸ்ரீதரை பீட் செய்யணும்.

அங்க நிறைய்ய பசங்க குறைஞ்சது பத்து பேராவது
ட்யூஷன் படிச்சாங்க. பெரிய கிளாஸ் பசங்களும்
அடக்கம். சாயந்திரம் 6 மணிலேர்ந்து 8 மணிவரை
எல்லா சப்ஜக்டும் பாடம் நடக்கும். மனப்பாடம்
செஞ்சு அங்கயே சொல்லிடணும்.

தாத்தா செம ஸ்ட்ரிக்ட். கணக்கு சரியா போடலைன்னா
வீட்டுக்கு போக விடமாட்டார். நல்லா கத்துக்க
முடிஞ்சது. தாத்தா எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா
இருந்தார். பாடம் நடத்தும் போது கண்டிப்பாகவும்
அப்புறம் அன்பாகவும் அவரால இருக்க முடிஞ்சதை
இன்னை வரைக்கும் நானும் கடைபிடிக்கிறேன்.

என் பசங்களுக்கு பாடம் எடுக்கும்போது கறாரா
அம்மான்னு டிமிக்கி கொடுக்க முடியாது, இப்ப
நான் ஒரு டீச்சர். அப்படின்னு சொல்லி படிக்க
வைப்பேன்.

சரி தாத்தா ட்யூஷன் செண்டருக்கு வருவோம்.
அவங்க பேரப்பசங்க அங்க படிச்சாலும் ஷ்பெஷல்
ட்ரீட்மெண்டெல்லாம் கிடையாது. தப்பு செஞ்சா
அடிதான். கரண்ட் கட்டான ஹையான்னு ஒரு
சந்தோஷம் வரும் மனசுக்குள்ள. அந்த நேரத்தையும்
தாத்தாவிட மாட்டார். விடுகதை, மணக்கணக்கு,
வாய்ப்பாடை பாதியிலேர்ந்து கேப்பதுன்னு
வகுப்பு விடாம நடக்கும். அதனால் வாய்ப்பாடு
அப்பப்ப படிச்சு மறந்திடாம இருக்கணும்.

தாத்தாவை நினைக்கும் பொழுது மறக்காமல்
ஞாபகத்துக்கு வருவது அவங்க மருமக.
அவங்க வீட்டுல 4ம் பசங்க. பெரிய அண்ணா
ராஜா. அந்தக்கால நிழல்கள் ரவி மாதிரி இருப்பார்.
அதே ஹேர்ஸ்டைல், டிரெஸ் அப்படின்னு சூப்பரா
இருப்பார். இரண்டாவது சிவாண்ணா. அப்ப ஏதோ
ஹாஸ்டலில் தங்கி படிச்சார்னு நினைக்கிறேன்.
அப்புறம் என் வகுப்புத் தோழன் ஸ்ரீதர் அவன் தம்பி
பேர் மறந்துவிட்டேன்.

இப்படி வீட்டில் 4ம் பசங்களே இருந்ததால் நான்
என்றால் மாமிக்கு உயிர். வீட்டில் நடக்கும்
எந்த நிகழ்வுக்கும் நான் இருப்பேன். நல்ல நாள்
பெரியநாளுக்கு அவங்க வீட்டில் செய்யும் பலகாரங்கள்
எனக்காக வீட்டுக்கு வரும். ட்யூஷனில் கொஞ்சம்
ஃப்ரீயாக இருக்கும் நேரம் தாத்தா,” ட்யூஷன் முடிஞ்சதும்
மாமியை மறக்காம பாத்துட்டு போ” என்பார்.
அது வேறெதுக்குமில்லை. மாமி நெய் காய்ச்சி
இருப்பார். அந்த நெய்க்காயச்சும் பாத்திரத்தில்
அரிசிமாவு போட்டு சிவக்க வறுத்து, சர்க்கரை
சேத்து பொடி செய்வாங்க. நெய்பொடின்னு
பேரு. அது கூட எனக்காக எடுத்து வெச்சிருப்பாங்க.

நானும் இலங்கையில் இருந்த பொழுது சுத்தமான
எருமைப்பால் வாங்கி ஏடு எடுத்து நெய்க்காய்ச்சினேன்.
அந்த வாணலியில் மாமி ஞாபகமாய் நெய்பொடி
செய்தேன். அம்ருதாவுக்கு ரொம்ப பிடித்தது.
அவளுக்காக நெய்காய்ச்சும் பொழுது பொடி செய்வது
பழக்கமாக இருந்தது.

இங்கே வந்த பிறகு நல்ல பால் கிடைக்கவில்லை.
சமீபத்தில் நல்ல பால் கிடைத்து ஏடு எடுத்துவைத்து
வீட்டிலேயே நெய்காய்ச்சி பொடி செய்து கொடுத்தேன்.
அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.


சீத்தாராமன் தாத்தா பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாடம்
எடுக்கும் பாணி தனித்து இருக்கும். தாத்தாவிடம்
கண்டிப்பு படிப்புக்கு மட்டும்தான். மிரட்டலிலேயே
காரியம் சாதித்து விடுவார் தாத்தா.

பல நாட்களுக்குப் பிறகு அம்மாவிடம் தாத்தாவைப்
பற்றி கேட்ட பொழுது தாத்தாவுக்கு கண்பார்வை
இல்லாமல் போனதாகச் சொன்னார். தாத்தாவைப்
பார்க்க போயிருந்தேன். ஒரு சிங்கம் நடை தளர்ந்து
போயிருந்ததாக பட்டது. ஆசிர்வாதம் வாங்கிக்
கொண்டு வந்துவிட்டேன். தாத்தா இப்போது இல்லை.

இவரைப்பற்றி நினைக்காத நாளில்லை. அதே போல்
இன்னொரு ஆசிரியை. இவர் என் குழந்தையின்
ஆசிரியை. வாழ்நாள் இருக்கும் வரை மறக்கவே
முடியாத, மறக்கக்கூடாத ஒருவர். அவரைப்பற்றி
அடுத்த பதிவில்.

தொடரும் போட்டு ரொம்ப நாளாச்சு பாருங்க.



நொண்டி நொண்டி நொடிச்சுக்கோ வெல்லம் தாரேன் கடிச்சிக்கோ

லீவுவிட்டாச்சு. போர் அடிக்குது அவ்வா!! என அவ்வாவை
தொண தொணத்த நாட்களை நினைச்சுப்பார்க்கிறேன்.
கூட ஆட யாருமில்லாமல் வெளியே போகக்கூடாது
எனும் அம்மாவின் கட்டளையை மீளவும் முடியாத
என்னுடன் அவ்வாதான் விளையாடுவார்.


பல்லாங்குழி, தாயம், பரமபதம் எல்லாம் விளையாடுவோம்.
பல்லாங்குழியில் காசிதட்டி லாபம் எடுக்கும் போது ஏதோ
சொத்தே கிடைத்தது போல ஒரு குஷி வரும்.

தாயம் ஆடும்பொழுது
”அய்யோ என்னை வெட்டாம போ அவ்வான்னு” கெஞ்சி
கூத்தாடுவேன். ஒரு தடவையாவது வெட்டினாத்தான்
பழம் எடுக்க போக முடியும்னு சொல்வதால சரின்னு
வெட்டு படுவதுன்னு ஜாலியா இருக்கும். அவ்வாதான்
எனக்கு கதை சொன்னதெல்லாம்.

ரொம்ப சீக்கிரமா ஏணியில ஏறின அதே ஜோருல
பாம்பு வாயில் கடிபட்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு கீழே இறங்கும்போது
அவ்வா சொன்னது,”இது தான் நிஜ வாழ்க்கையிலையும்
நடக்கும்னு”

இப்படி நம்ம பாரம்பரிய ஆட்டங்கள் மணக்கணக்கு,
கவனமாக இருத்தல், எண்ணிக்கை ஆகியவற்றுடன்
வீட்டுக்குள்ளேயே உக்காந்து ஆடுவதை சொல்லிக்கொடுத்துச்சு.


இப்ப இங்க வெயில் செம ஹாட். இரவு நேர வெப்பமே
35 டிகிரி. பகலில் 44. பசங்களுக்கு விடுமுறை. எங்கே
வெளியே விளையாட அனுப்புவது? ஆனா அவங்களுக்கும்
போர் அடிக்கக்கூடாது. என்ன செய்யலாம். ஐடியா!!

வீட்டிலேயே சம்மர் கேம்ப்.அப்பாவோட சேர்ந்து
செஸ் விளையாடுறாங்க. தனது வரையும் திறமையை
அண்ணா தூசு தட்டி தினமும் ஒண்ணா வரைஞ்சுகிட்டு
இருக்காரு. கைவேலையும் நடக்குது. அம்ருதம்மா
எம்ப்ராய்டரி போட கத்துக்கறாங்க.(நானே சொல்லிக்
கொடுத்துகிட்டு இருக்கேன்) அப்பப்போ LITTLE CHEF'S IN
ACTION னு சமையற்கட்டுல நுழைஞ்சிடுவாங்க இரண்டு
பேரும். ஆனாலும் தினமும் ஒரே மாதிரின்னா போர்
அடிக்குமே!

வித்தியாசம் வேணுமே! நான் விளையாடின விளையாட்டுக்களை
சொல்லித்தரலாம்னா பலது மறந்தே போச்சு. தாயம்,
பரமபதம், சீட்டுக்கட்டுதான் ஞாபகத்துல இருக்கு. நம்ம பாரம்பரிய
விளையாட்டுக்களை இப்படி மறந்துட்டா எப்படி? பல்லாங்குழி
விளையாட்டில் என் குருவான அவ்வாவும் இப்போ
உயிரோடு இல்ல. நம்ம கூகுள் ஆண்டவரைக்
கேக்கலாம்னு கேட்டேன்.

அட ராமா! இப்படி கூட உண்டா. நம்ம பாராம்பரிய
விளையாடுக்களான கிச்சு கிச்சு தாம்பாளம், பச்சைக்குதிரை,
கலர் கலர் என்ன கலர் இப்படி நிறைய்ய வெளி விளையாட்டு,
உள்விளையாட்டுன்னு பிரிச்சு தனித் தனியா எப்படி
விளையாடுவதுன்னு அழகா தொகுத்துகிட்டு வர்றாங்க

Traditional games அப்படிங்கற வலைத்தளக்காரங்க.
என்ன மாதிரி மறந்த பலரும் இங்க ஒரு விசிட்
அடிச்சா ரெஃப்ரெஷ் செஞ்சுகிட்டு பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுக்கலாம்.

அம்ருதம்மாவுக்கு நொண்டி விளையாட
அதாங்க பாண்டி விளையாடச் சொல்லிக்கொடுத்தேன்.
சாக்பீஸால வரைஞ்சு நானும் எங்க அம்ருதம்மாவும் சேர்ந்து
நொண்டி விளையாடினோம். அம்மாவுக்கு
ரொம்ப சந்தோஷம்.



பசங்களுக்கு போரடிக்காமல் வீட்டுல உக்காந்து விளையாட
வெளியே போய் விளையாண்டாலும் வெரைட்டியா
விளையாட சொல்லிக்கொடுக்கலாமே. கோலி, கில்லிதண்டா,
எல்லாம் ஞாபகம் இருக்கா. ஒருவாட்டி மேலே சொல்லியிருக்கும்
வலைதளத்துக்கு விசிட் அடிச்சு பாருங்க.


Tuesday, April 20, 2010

தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு.....

சிட்டுக்குருவி படத்தில் வரும் “என் மன்னவன் உன் காதலன்”
பாட்டு ரொம்ப பிடிக்கும். அந்த படத்தை பார்த்திராத
பருவத்திலிருந்து இன்னமும் அதன் மேல் இருக்கும்
காதல் போகவில்லை.” இந்தம்மா கருவாட்டுக்கூட
முன்னால போ” போன்ற வசங்கள் பாடலுக்கு நடுவுல
வரும்.

அம்மம்மாவீடு லோக்கலில். அங்கே பள பள சில்வர்
கலர் டவுன் பஸ்ஸில் போகணும்னு ஆசை. 10பைசாதான்
டிக்கெட் ஆனா நடந்து போனதுதான் ஞாபகம். ஆனால்
கல்லூரி சென்ற அந்த வருடமும் பஸ்தான். புதுகை-காரைக்குடி
போகும் பஸ். பள்ளத்தூரில் என் காலேஜ்.
தினமும் காலேல 8.15க்கு போகும் பஸ்ஸில்
ஏறுவேன், சாயந்திரம் 4.5க்கு வரும் பஸ் பிடித்து
புதுகையில் 5 மணிக்கு வந்திடுவேன்.

மூகூர்த்த நாட்களில் கூட்டமாக இருக்கும் பஸ்.
கானாடுகாத்தான் அழகப்பா இன்ஸ்டிடியூட் மாணவர்கள்
அந்த பஸ்ஸில் தான் வருவாங்க. செம சவுண்ட்
பார்டிகளாக இருப்பாங்க. புதுகையிலிருந்து நானும்
இன்னொரு பெண் மாலதி மட்டும்தான் அந்த்க்
காலேஜுக்கு என்பதால் மும்பை ட்ரையினில் கொட்டம்
அடித்த அளவுக்கு இல்லாமல் வாய்மூடி மவுனமாகவே
காலேஜுக்கு போயிட்டு வந்தேன்.

மழைக்காலங்களில் ஜன்னோலர சீட்டில் உக்காந்து
போற சுகம் என்ன ஒரு சுகமோ தான்....

திருச்சிக்கு தனியா பஸ்ஸுல போனது, மதுரையில்
இருக்கும் சித்தி & அத்தை வீட்டுக்கு என பஸ்
பயணம் நிறைய்ய்... ஆனால் பஸ் பயணம் என்றால்
நினைவுக்கு வருவது நானும் என் மகளும் மட்டும்
பயணம் செஞ்சதுதான்.

“அம்மா! என்னை ஒரு தடவை பஸ்ஸுல கூட்டிகிட்டு
போங்க!” என அம்ருதா கேட்ட பொழுது அம்மாவுக்கு
7 வயசு. அப்பாவைக்கேட்டு கூட்டிகிட்டு போறேன்னு
சொல்லிருந்தேன். அயித்தான் நோ தான் சொல்வார்.
அப்போ நாங்க இருந்தது கொழும்புவில். பஸ்களில்
குண்டு சர்வசாதாரண விஷயம் என்பதால் இலங்கையில்
இருந்தவரை ரயில், பஸ் பிரயாணங்களை அயித்தான்
விரும்பினதில்லை.



மக கேட்டு அழைச்சு போக முடியவில்லையேன்னு
வருத்தம். ரோடில் அந்த சிகப்பு நிற பஸ்ஸை
பாக்கும்போதெல்லாம் ஏக்க பார்வையுடன் அம்ருதம்மா
”எப்பம்மா! கூட்டிகிட்டு போறீங்க”ன்னு கேட்பாள்.
பஸ் கண்டக்டர் கண்டிப்பாக சிங்களத்தில்தான்
பேசுவார். அங்கே ஆங்கிலம் எடுபடாது. அதனால்
சில பேஸ் வொர்க்குகளை செஞ்சு வெச்சுகிட்டேன்.
எங்க வீட்டு வேலைக்காரம்மாகிட்ட கேட்டு
எந்தெந்த ஸ்டாப்பிங், எப்படி கேட்பது எல்லாம்
தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன்.

ரொம்ப நாளா கெஞ்கிக்கூத்தாடி அயித்தானை
ஒரு வழியா சம்மதிக்க வெச்சேன். ரொம்ப
தூரமெல்லாம் போகக்கூடாதுன்னு சொன்னார்.
“இல்லப்பா! நம்ம வீட்டுலேர்ந்து இரண்டு ஸ்டாப்.
அங்கேயிருந்து டிக்மன்ஸ் ரோடுவழியா
கால் ரோட் போய் அங்கேயிருந்து மெஜெஸ்டிக்
சிட்டி ஷாப்பிங் மால் போகப்போறேன்னு!”
சொன்னேன். உடனே சிரிச்சார்.” நம்ம வீட்டுலேர்ந்து
நடந்தே போனாலும் 2 கிமீ கூட இருக்காது.
இதுக்கு ஆட்டோல போகவேண்டியதுதானே!
எதுக்கு பஸ்ஸுல சுத்தணும்னு”. அம்ருதாக்காக!
அப்படின்னு சொன்னேன். ஜாக்கிரதை, போயிட்டு
வந்து போன் செய்ங்கன்னு சொல்லிட்டு போனார்.
ஆனால் அம்ருதாவிடம் சொல்லவில்லை.

அண்ணாவுக்கு ஸ்கூல் இருந்து அம்ருதம்மாவுக்கு
மட்டும் லீவு இருந்தது ஒரு நாள். அன்னைக்கு
”மெஜஸ்டிக் சிட்டி போகலாமா அம்ருதான்னு” கேட்டேன். ஓ
போகலாமேன்னு ரெடியாகி வந்ததும் கிளம்பினோம்.
எப்பவும் ஆட்டோ பிடிக்கும் இடத்துக்கு பக்கத்துலதான்
பஸ் ஸ்டாப். அதே வழியில கூட்டிகிட்டு போனேன்.
ரவி அங்கிள கூப்பிடவான்னு கேட்டா வேண்டாம்
பஸ்ஸுல போகலாம்னு சொல்லவும் முகத்தில்
அப்படியொரு சந்தோஷம்.

எங்க நல்ல நேரம் உடனேயே பஸ் கிடைச்சிடுச்சு.
அதுவும் புது பஸ். நடுவில் தானியங்கி கதவுடன்.
லும்பினி ஸ்டாபில் இறங்கி மயூராட்பேளேஸ்
கோவில் அருகில் பூ வாங்கிக் கொண்டு அங்கேயிருந்து
காலி வீதிக்கு பஸ் பிடிச்சோம். பம்பலபிட்டிய
ஸ்டாப்பில் இறங்கி அங்கேயிருந்து மெஜஸ்டிக்
சிட்டி மாலுக்கு பஸ். கால் ரோட் மெயின் வீதி
என்பதால் எல்லா பஸ்ஸும் போகும் பாதை.

ரொம்ப சந்தோஷமாகவும், த்ரில்லிங்காகவும்
முகம் வெச்சுகிட்டு எங்க அம்ருதம்மா
பயணம் செஞ்சது இப்பவும் கண்ணு முன்னால
இருக்கு. ஆட்டோவில் போய் வந்திருந்தால்
இலங்கை பண மதிப்பில் 60 ரூபாய் ஆகியிருக்கும்.
ஆனால் அன்று செலவழித்தது 20 ரூபாய் கூட
இல்லை. என் மகளின் ஆசையை தீர்த்த சந்தோஷம்
எனக்கு. தான் விரும்பிய படி பஸ்ஸில் பயண
சந்தோஷம் அவளுக்கு.

ரொம்ப நாளைக்கு அண்ணாவிடம் “நாங்க இந்த
பஸ்ஸுல போனோமேன்னு” பெருமையா சொல்லிக்கிட்டு
இருந்தா.

ஒரு முறை நானும் பிள்ளைகளும் மட்டும்
மதுரை- புதுகை பஸ்ஸில் 3 மணிநேரம்
பிரயாணம் செஞ்சதை ஆஷிஷ் ரொம்ப
ரசிச்சாப்ல. திருப்பத்தூரில் முறுக்கு,
பலாப்பழம், பஸ்ஸில் காதலிக்க நேரமில்லை
சினிமான்னு ரொம்ப ரசிச்சான் மகன்.

அல்ப சந்தோஷங்கள் கூட தீர்க்க முடியாவிட்டால்
அப்புறம் என்ன வாழ்க்கை. சென்ற டிசம்பரில்
திருச்சி ரயில்வே ஷ்டேஷனிலிருந்து பஸ்ஸ்டாண்டுக்கு
பஸ்ஸில் போகலாம்னு சொல்லி அண்ணனும் தங்கையும்
பஸ்ஸில் ஓடி ஏறிட்டாங்க. ”காலங்காத்தால பஸ்ஸுல
போவது நல்லாயிருக்கும்மா, அதோட காசும் சேமிக்கலாம்ல”
அப்படின்னு மகன் சொன்னது இன்னமும் காதுல கேக்குது.


எல்லா இடங்களுக்கும் கார்ல போயிருக்கோம். அதே
இடத்துக்கு பஸ்ஸுல போகும்போது வித்தியாசமா
இருக்கறாப்ல இருக்கும்மா என்று ஆஷிஷ் சொல்வது
உண்மைதான்.
பஸ் பத்தில் பலரின் கொசுவத்தி தொடர்பதிவா
படிச்சபோது என் மனதில் ஓடியது இந்தக் கொசுவத்திதான்.


Friday, April 16, 2010

பிள்ளையப் பெத்தா கண்ணீரு

நிலமை இப்படி ஆகிப்போச்சேன்னு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன்.
”ஓடமும் ஒரு நாள் கரையிலேன்னு” சொல்லுவாங்க அதுமாதிரில்ல
ஆகிப்போச்சு.

ஒரு இருவது வருடங்களுக்கு முன்னால் மங்கையர் மலரில்
வரும் திருமண விளம்பரங்களில் முதிர்கன்னிகள் புகைப்படங்கள்
பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டேன். இப்போது நிலமைத் தலைகீழ்.

40 வயதுக்கும் பெண் தேடும் ஆண்கள் படங்களை பார்க்கும்
பொழுது பாவமாக இருக்கிறது. அதே பத்திரிகையில் மணமகள்
தேவை விளம்பரங்கள் அதிகமாகவும், மணமகன் தேவை
விளம்பரங்கள் குறைவாகவும் வருவதைப்பார்க்கும் பொழுது
பெண்கள் திருமணமே வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்களா!!
எனத் தோணும்.

சில பெண்களுக்கு எதிர்பார்ப்பு அதாவது கணவனாக
வரப்போகும் ஆணின் மீது அதீத எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்பொழுது ஒரே பிள்ளையானாலும் மாமன்,மாமியுடன்
கூடி வாழ சில பெண்கள் விரும்புவதில்லை. தாலி
கட்டும் முன்னேயே தனிக்குடித்தனத்திற்கு ஒப்புதல்
பெற்றுதான் பல கல்யாணங்கள் நடக்கிறது. சமீபத்தில்
ஒரு பெண் மாதம் 11/2 லட்சம் தான் சம்பளமா??
அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது எனக்
கேட்டதை அறிந்து நொந்து நூடுல்ஸானேன்.

மாதம் ஒண்ணரை லட்சம் சம்பளம் போதாதா!!!’
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஏன் இந்த மாற்றம்?? இது ஆரோக்கியமானதா??? பேசினால்
பிரச்சனைதான் அதிகமாகும்னு தோணுது.

எண்ணச் சிதறல் எனும் வலைப்பூவில் இந்த வார
நட்சத்திரம் குறும்பன் அவர்கள் எழுதியிருந்த இந்தப்
பதிவை படித்த பொழுது மனதில் தோன்றியவைகளை
இங்கே பதிகிறேன்.

வரதட்சனை, சீர் எனக் கொடுத்து மாளாது என
பெண்குழந்தைகளை கொலை செய்துவிட்டார்கள்.
இப்போது 40 தாண்டியும் பலர் முதிர் கண்ணன்களாக
இருக்கிறார்கள். இதைத் தவிரவும் பல காரணங்கள்.
அதில் முக்கியமானது பொண்ணுங்க அதிகம் படிச்சிருப்பது.

அந்த பதிவில் சொல்லியிருப்பது போல படிக்க வேண்டிய
வயதில் ஆண் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக
இருந்து விடுகிறார்கள். பாலிடெக்னிக், ஐஐடி என
டிப்ளமா படித்தமோ வேலைக்கு போனமா என்று
பணம் சம்பாதிக்க போய்விட இப்போது பல பெண்கள்
சர்வசாதரணமாக எம் பீ ஏ படித்து முடித்து நல்ல
வேலைகளில் இருக்கிறார்கள். தனக்கேற்ற படிப்பு
இல்லாத, வேலை இல்லாத மாப்பிள்ளைக்கு
நோ சொல்லி விடுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் பொதுத் தேர்வில் பெண்கள்
அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதைப்
பார்த்தாலே தெரியவில்லை. அதிகம் ஃபெயிலாவதும்
ஆண் குழந்தைகள் தான்.

இந்த வயதில் பிள்ளைக்கு உயர்கல்வி பற்றி பேசி
அவனுக்கு எதில் விருப்பமோ அது நல்லதா என
பார்த்து நல்ல டிகிரி வாங்க வைக்க வேண்டியது
பெற்றவர்களின் பொறுப்பு. இதைச் செய்யத்
தவறினால் அவனின் வேலை வாய்ப்பை பொறுத்துதான்
திருமண வாழ்க்கையும் அமையும் என்பது நிதர்சன
மான உண்மை.

ஆண்குழந்தைகளின் படிப்பைப் பத்திபேசும் பொழுது
சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் நடந்த
கலந்துரையாடல் நினைவுக்கு வருகிறது.

”இப்ப பசங்களை படிக்க உக்கார வைக்கறதுக்குள்ள
தாவு தீந்துடுதுங்க. போதும் எடுத்து வைன்னு!! எப்ப
சொல்வோம்னு காத்துகிட்டு இருக்காங்க.!! நானும்
என் மனைவியும் அன்றாடம் படும் டென்ஷன் இது!”
அப்படின்னு புலம்பினார்.

உங்களுக்கு பரவாயில்லிங்க. வீட்டுல ஒரு பொண்ணாவது
இருக்கு(!!) எனக்கும் இரண்டும் பசங்க. இவங்க
எதிர்காலத்தை நினைச்சு மனசு பிசயது தினமும்.
எப்படி கரை சேர்க்கப்போறோனோ என்று மேலும்
வருத்தப்பட்டார்.

பதின்ம வயதில் பெண்பிள்ளையை கையாளுவதில்
அவ்வளவு சிரமம் இருப்பதில்லை. அதுவே ஆண்குழந்தைகள்?
இதனால்தானே பர்சனாலிட்டு டெவலப்மெண்ட் பதிவுகள்
வந்தன! உண்மையில் அந்த வயதில் ஆண்பிள்ளையை
சரிவரக் கையாளா விட்டால் ரொம்ப கஷ்டம்.
பயமுறுத்த வில்லை. உளவியல் ரீதியா கற்றதைச்
சொல்கிறேன்.


வரதட்சணைக் கொடுமை எதிர்காலத்தில் இருக்காது.
(இப்ப இருக்கு. நேற்று பழம்பெரும் நடிகை ஜமுனாவின்
மகளை வரதட்சணைக் கொடுமை செய்கிறார்கள் என்று
போலீஸ் ஷ்டேஷனில் கம்ப்ளையண்ட் கொடுத்து
மாமனும் மாமியும் அரெஸ்ட் செய்யப்பட கணவர்
ஆளையே காணமாம்) வரதட்சணைக் கூட வேண்டாம்,
நகையோ நட்டோ நீங்க எது போட்டாலும் சரின்ன்னுதான்
பல மணமகன் வீட்டுல சொல்றாங்க. ஆனாலும்
குதிரைக் கொம்பா போச்சு!!

கிடைக்கும் பெண்களும் ஆட்டிவைப்பதாக பல
செய்திகள், பத்திரிகைகளில் வருவதும் அதை
ஊர்ஜிதப்படுத்துகின்றன. இல்லாவிட்டால்
பெங்களூரில் தங்கமணிகள் சங்கம் ஆரம்பிச்சிருப்பாங்களா!

டைரக்டர் விசுவுக்கு அப்பவே வேண்டுகோள் வெச்சு
பதிவு போட்டிருந்தேன்.


அப்ப பெண்கள் கல்யாண மார்கெட்டில் விலைபோகாமல்
கஷ்டப்பட்டது மகாபாவம் என்றால் இப்போது ஆண்குழந்தையே
வேணாம் என தந்தையே நினைக்கும் அளவுக்கு நிலை
இருப்பதை என்னவென்று சொல்வது????

மேச்சா கழுதை இல்லாட்டி பரதேசம் என்று சொல்வார்களே
அப்படி இல்லாமல் நடுநிலையான ஒரு நிலை உருவாகாதா!!!

எனக்கும் மகன் இருக்கிறான். கவலைப்பட வேண்டுமா?
வேண்டாமா? புரியவில்லை

இந்தப் பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது

Get Your Own Hindi Songs Player at Music Plugin

நான் ஆதவனின் முதிர்கண்ணன்கள் படிச்சிருக்கீங்களா?


பிரம்மசாரிகளுக்குன்னு பாலான்னுஒருத்தர் பதிவு எழுதியிருக்கார்.

சென்னையில் என் முகவரி

நங்கநல்லூரில் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு
கோடம்பாக்கத்துக்கு குடி பெயர்ந்த பொழுது அம்ருதாவுக்கு
4 மாதம் முடிந்திருந்தது. அப்பொழுதுதான் ஒரு பெரிய
புயலில் சிக்கி நான் உயிர் பிழைத்திருந்த நேரம்.

புதுவீட்டுக்கு பால்காய்ச்சி வந்த உடன் க்ரவுண்ட் ஃப்ளோர்
வீடாக இருக்க கிச்சனிலிருந்து செல்லும் கதவைத்
திறந்து வெளியே வந்தால் பக்கத்துவீட்டில் ஒரு
பெண்மணி சிநேகமாக சிரித்தார். “இங்க பாருடா
குட்டிப்பாப்பா” என தன் மகன்களை அழைத்து
காட்டினார்.

அவரின் கணவர் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில்
பேராசிரியர். கொஞ்சம் இல்லை இல்லை அதிகமாகவே
கண்டிப்பானவர். தானுண்டு தன் வேலையுண்டு என
இருப்பார். அவரை மெல்லக் கரைத்தவள் அம்ருதா.
அம்ருதாவுக்கு மட்டும் அவர்கள் வீட்டில் ஷ்பெஷல்
ட்ரீட்மெண்ட் நடக்கும். அவள் என்ன செய்தாலும்
அவளை ஒன்றும் சொல்லக்கூடாது என்பது அந்த
அங்கிள் போட்டிருந்த சட்டம்.

அம்ருதா கொஞ்சம் தவழ ஆரம்பித்ததும் பின் கதவு
வழியாக தவழ்ந்தே பக்கத்து வீட்டுக்கு போய்விடுவாள்.
அதுவும் அங்கிள் கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும்
பின் பக்கம் சேர் போட்டுக்கொண்டு காற்று வாங்கிக்
கொண்டு பேப்பர் படிப்பது அல்லது மாலை டிபன்
சாப்பிடுவது பழக்கம். அப்போது அம்ருதா கங்காரு
குட்டிப்போல் அங்கிளின் லுங்கியில் அமர்ந்திருப்பாள்.
“நாங்க கூட இப்படி உங்க கிட்ட உக்காந்தது இல்ல!
அம்ருதா மட்டும் ஏன்?” என கேட்கும் பிள்ளைகளுக்கு
அங்கிளின் பதில் “அது பெண் குழந்தைடா தம்பி!”

அம்ருதா முதலில் அடி எடுத்து வைத்து நடந்தது
இவர்கள் வீட்டில் தான். அதில் நோபல் அம்மாவுக்கு
ரொம்ப சந்தோஷம். தனக்கு பெண்குழந்தை இல்லை
என்ற குறை தீர்க்க வந்தவள் அம்ருதா என அங்கிளுக்கும்
ஒரே குஷி.

நோபல் அம்மா என்றே அவரை நாங்கள்
அழைத்து பழகிவிட்டோம். அவரின்
பெயர் சொன்னால் அம்ருதாவுக்குத் தெரியாது.
நோபல் அம்மா ஆண்ட்டி என்பாள்.
அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல்
பல நேரம் அங்கே தான். இரவு ப்ரேயர்
சொல்லும் பொழுது கூட தானும் ஜபமாலையை
உருட்டிக்கொண்டு அங்கேதான் இருப்பாள்.

பிள்ளைகளுக்கும் அம்ருதாவுடன் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.
அம்ருதா வீட்டில் இருக்கும் நேரம் அப்பாவிடம்
திட்டுகிடைக்காது என்பது கூடுதல் சந்தோஷம். :))


அயித்தான் இலங்கைக்கு போன அந்த 1 1/2 வருடங்கள்
நான் தனியாக கழித்த பொழுது எனக்கு உதவிய
அன்பு நெஞ்சங்கள் இவர்கள். அந்தக் கொடுமையான
காலகட்டத்தில் என் காலில் கொதிக்கும் பால் கொட்டி
அவதிப்பட்டேன். சமைத்துக்கொடுத்து பார்த்து கொண்டது
நோபல் அம்மாதான். அங்கிளும் ஊருக்கு போயிருந்து,
அயித்தானும் ஊருக்கு போயிருந்தால் ஒரே கொண்டாட்டம்
தான் எங்களுக்கு. இருவருக்கும் பிடிக்காத சமையல்,
அதே சமயம் பிள்ளைகள் விரும்பும் சோறு சமைப்போம்.
அதுவும் நான் கொஞ்சம் செய்வேன். நோபல் அம்மா
கொஞ்சம் செய்வார். இருவீட்டு சாப்பாட்டையும்
சேர்த்து பிள்ளைகள் சாப்பிடுவார்கள்.

என்னுடன் பேச மட்டும்தான் அங்கிள் அனுமதித்திருந்தார்.
நோபல் அம்மா வைத்திருந்த பழைய கேஸ் அடுப்பை
மாற்றி, புது மிக்ஸி வாங்கி, தினமும் மஸ்கா அடித்து
அடித்து அங்கிளை வாஷிங் மெஷின் வாங்க வைத்தது
எல்லாம் என் சாதனைன்னு இப்பவும் நோபல் அம்மா
சொல்வாங்க. நோபல் அம்மா கிறிஸ்துமஸுக்கு
பலகாரம் செய்யும் பொழுது நானும் உதவுவேன்.
கேக் செய்யும் அழகே தனி. ருசியா இருக்கும். என்
பங்காக ஜாங்கிரி செய்து கொடுப்பேன்.

நோபல் அம்மாவின் பெரிய மகன் என் வளர்ப்பு மகன்.
பதினம் வயதுக்குழந்தையாக இருந்த அவனுக்கு
அப்பாவின் கண்டிப்பும் கறாரும் கோவம் வரும்.
அவனுடன் பேசி மனதை மாற்றுவேன். கோவம்
வந்தால் என் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து விடுவான்.
சென்றவாரம் போன் செய்து,”ஆண்ட்டி!
ஆஷிஷுக்கு முகப்பருவுக்கு ஏதோ மருந்து
கொடுத்தீங்களாமே! எனக்கும் சொல்லுங்க”
என கேட்டான் என் 25 வயது வளர்ப்பு மகன்.
அவனிடம் ஏதும் பேசவேண்டும் என்றால்
நோபல் அம்மா எனக்கு போன் செய்து
“நீங்களே உங்க வளப்புக்கு சொல்லுங்க,
நீங்க சொன்னா கேப்பான்!” என்று சொல்வார்.


எந்த ஒரு பெருநாளுக்கும் வாழ்த்து சொல்ல
நாங்கள் மறந்ததில்லை. அப்படியே எங்கள்
திருமணநாள், குழந்தைகள் பிறந்தநாள் என
வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வோம். சென்னைக்கு
வந்தால் இன்றும் நாங்கள் முதலில் செல்வது
நோபல் அம்மா வீட்டுக்குத்தான். “உன் ஃப்ரெண்ட்
வர்றாங்க, ஷ்பெஷலா செய்!” என ஆர்டர்
போட்டிருப்பார் அங்கிள். “இவரு சொல்லித்தான்
நான் செய்யணுமா, எனக்குத் தெரியாதாக்கும்”
இது நோபல் அம்மா. :))

சொந்தங்களே வீட்டுக்கு விருந்தினர் வருவதை
பிடிக்காத இந்தக் காலத்தில் 2 வருடங்கள்
பக்கத்துவீட்டில் இருந்த பழகிய நட்பு எங்க
வீட்டுக்கு வரலைன்னா பாத்துக்கங்க என்று
மிரட்டும் பாசம்...


சென்ற ஜூலையில் ஒரு திருமணத்திற்காக
நான் மட்டும் சென்னை வந்த பொழுது நேரே
சென்றது நோபல் அம்மா வீட்டுக்குத்தான்.
நோபல் அம்மா பிறந்தநாளுக்காக ட்ரெஸ்
வாங்கிப்போயிருந்தேன். “நீங்களும் வாங்கியிருக்கீங்களா!
நானும் உங்க பர்த்டேக்கு புடவை வாங்கி
வெச்சிருக்கேன்” என்றார். இன்னமும் என்னை
மறக்காமல் இருப்பது ஆண்டவனின் அருள்.

என்றும் நல்ல திடகாத்திரத்துடன், நல்ல
சந்தோஷத்துடனும் அந்தக் குடும்பம் வாழ
வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
ப்ரார்த்திக்கிறேன்.


Thursday, April 15, 2010

என் இன்னொரு பிறந்த வீடு

LOWER TANK BUND AREAவில்
அந்த வீட்டுக்கு நாங்கள் குடி போன பொழுது
இந்த வீட்டுக்காரர்கள் ரொம்ப கறார்.
இருக்கறவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல்
இருக்கணும்னு நினைச்சோம். நானும், அயித்தானும்
மட்டும்தான் அப்போது. (அந்த அங்கிளும்
சட்ட திட்டமாகத்தான் பேசினார்)

ராஜரத்தினம் அந்த வீட்டின் பெரியவர் பெயர்.
அவரது மனைவி(பெயர் ஞாபகமில்லை. ஆண்ட்டி
என்றுதான் அழைப்பேன்) மிகவும் நல்ல மாதிரி.
மூத்த மகனுக்கு மட்டும் திருமணமாகி இரண்டு
குழந்தைகள். மொத்தம் 3 மகன்கள், 1 மகள்.

அப்போது ஆஷிஷை உண்டாகியிருந்தேன்.
அவர்களது மகளுக்குத் திருமணமாகவில்லை,
பல பையன்கள் பார்த்து வேண்டாமென்றதால்
திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார் மகள்
என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார் ஆண்ட்டி.
”உங்கள் மகளுக்காக நான் பிரார்த்தனை
செய்கிறேன்!” என்று சொல்லி செய்யவும்
செய்தேன். எம்மதமாக இருந்தால் என்னம்மா!
எல்லாக் கடவுளும் ஒன்றே என்று சொன்ன
ஆண்ட்டி குடும்பத்தினர் கிறிஸ்துவ மதத்தைச்
சேர்ந்தவர்கள்.

ஆஷிஷ் பிறந்து ஹைதைக்கு சென்றதிலிருந்து
அவர்கள் வீட்டில் ஒரே குஷி. ஆண்ட்டியின் மூத்த
மகனான ஜான் அண்ணா அவரது மனைவி வாணி
இருவரும் வேலை முடிந்து வந்ததும் ஆஷிஷ்
என்ன செய்கிறான்? என்று கேட்காமல் இருக்க
மாட்டார்கள். அவர்களது பிள்ளைகள் சின்னாவும்,
டாலியும் பள்ளிவிட்டு வந்ததும் கை கால் கழுவி
முதல் வேலையாக ஆஷிஷை கொஞ்சிவிட்டுத்தான்
போவார்கள்.

ஆண்ட்டி துணி எடுக்க மேலே வரும்பொழுதெல்லாமோ,
சாப்பிட்டு முடித்துவிட்டு கொஞ்ச நேரம் வந்தோ
ஆஷிஷுடன் இருப்பார். ஆஷிஷ் தலை நின்று
கொஞ்சம் தவழ ஆரம்பித்ததும் ஜான் அண்ணா
வேலை விட்டு வந்ததும் ஆஷிஷை கொண்டு
வரச்சொல்லிவிடுவார். அவர்களுடன் தான் குழந்தை
இருப்பான். அவர்களுக்கு ஏதும் தொந்திரவாக இருக்குமோ!
என நான் தான் நினைப்பேன். எங்க கிட்ட இருக்கட்டும்
என தூக்கிப் போய்விடுவார்கள்.

ஏப்ரல், மே மாதங்களில் வெயில் மிக மிக அதிகம்.
(கடந்த 10 வருடங்களில் ஹைதையில் இந்த வருடம்
தான் அதிக பட்ச வெப்பமாக ஏப்ரல் மாதத்தில் 42 டிகிரி)
நாங்கள் மேல் தளத்தில் இருந்ததால் சூடு இறங்கி
ஆஷிஷுக்கு sun stroke வந்துவிட்டது. 6 மாதக்
குழந்தை. ஜுரம் என்றால் அப்படி ஒரு ஜுரம்.
ஆனாலும் சூடாக ஏதும் கொடுக்க முடியாது.
ஃபிர்டிஜில் வைத்து கொஞ்சம் சில்லென்று தான்
கொடுக்க வேண்டும். முடிந்தால் வீட்டை காலி
செய்துவிட்டு கீழ்தளத்துக்கு போகச் சொன்னார்
டாக்டர்.

”இரண்டுமாதத்துக்காக ஏம்மா,ஆஷிஷ் பகலெல்லாம்
எங்க வீட்டுல இருக்கட்டும்” என ஆண்ட்டியும்
அவரது மகள் ராணி அக்காவும் சொல்லிவிட்டார்கள்.
காலை 8 மணிக்கு எடுத்துப்போவார்கள். சாயந்திரம்
7 மணிக்கு மேல்தான் கூட்டி வருவேன். சாப்பாடு
எல்லாம் ஆண்ட்டி பார்த்து கொள்வார்கள். நான்செய்து
மட்டும் கொடுப்பேன். அப்போது உடல்நிலை சரியில்லாத
என் மாமியாரும் என்னுடன் இருந்தார். பார்கினிஸம்
எனும் ஒரு வித வியாதி அவருக்கு. அதனால் வேகமாக
நடக்க முடியாது. பாத்ரூம் போக எழுவார். அவர் பாத்ரூம்
போய்ச் சேர்வதற்குள் வழியிலேயே எல்லாம்...
ராத்திரியில் கட்டிலுக்கு அடியில் ஈரம் இல்லாத நாளே
கிடையாது.

”நீ அவங்களை கவனி. ஆஷிஷ் இங்கே இருக்கட்டும்.
இன்ஃபெக்‌ஷன் ஆகிட்டால் கஷ்டம் என,” பார்த்துக்கொண்டது
அவர்கள்தான்.

நான் செய்யும் சமையல்கள் அவர்களுக்கு ரொம்ப
இஷ்டம். அதுவும் அடை செய்தால் போதும்.
மேல்போர்ஷனில் என்னுடன் இன்னொரு குடித்தனக்காரரும்
பக்கத்து வீட்டில் இருந்தார். அவர்களால் நிறைய்ய
கஷ்டங்களை பார்த்து இருந்தனர் அங்கிள் குடும்பத்தினர்.
யூசர் ஃப்ரெண்ட்லி போல் நாங்கள் ரொம்ப அட்ஜஸ்ட்
செய்து பிரச்சனை ஏதும் தராமல் இருந்தது அவர்களுக்கு
பிடித்திருந்தது. ராணி அக்கா திருமணத்திற்காக என்
பிரார்த்தனை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆஷிஷை வளர்க்கும் அந்த நேரத்தில அவர்களின்
அந்த உதவிகள் இல்லாவிட்டால் நான் ரொம்பவே
கஷ்டப்பட்டிருப்பேன். இதை அவர்களிடமே
சொன்ன போது,”ஸ்ரீராமும் ஊரில் இல்லாமல்
நீ மாமியையும் பார்த்துகொண்டு பிள்ளையை
வளர்க்கிறாய். என் மகளாக இருந்திருந்தால்
நான் செய்திருக்க மாட்டேனா” என்பதுதான் பதிலாக
வந்தது.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் ராணி அக்காவுக்காக
நான் பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருந்தேன்.

சென்னைக்கு மாற்றலாகிவிட மொத்த குடும்பமும்
வருத்தத்துடன் பிரியாவிடை கொடுக்க
கிளம்பி வந்தோம். நாங்கள் சென்னை வந்த பிறகும்
போனில் தொடர்பு கொண்டிருந்தோம். ஒரு முறை
ஜான் அண்ணா தன் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
என்னுடம் தான் தங்கினார்கள். நான் கூட உங்க
சொந்த் அண்ணான்னு நினைச்சேன். அப்படின்னு
பக்கத்து வீட்டுக்காரங்க பெருமையாச் சொன்னாங்க.
அண்ணா அப்படி ஒரு பாசக்காரர்.

அம்ருதாவை உண்டாகி இருந்த பொழுது ஹைதைக்கு
போகவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தேன்.
மறக்காமல் சென்றது ஆண்ட்டி வீட்டுக்கு. அனைவருக்கும்
அவ்வளவு மகிழ்ச்சி. எனக்கொரு சந்தோஷமான
விஷயம் காத்திருந்தது. ஆமாம் ராணி அக்காவுக்கு
திருமணம் நிச்சயமாகியிருந்தது.(நான் போவதற்கு
3 நாள் முன்னாடி) சட்டென நடந்திருக்கிறது. உன்
பிரார்த்தனை வீண் போகவில்லை என ஆண்ட்டி
உருகினார்.

அவரது திருமணத்துக்கு செல்ல முடியவில்லை.
4 வருடங்களுக்கு முன் ஹைதை விசிட் அடிக்க
வந்திருந்த பொழுது மற்ற அண்ணாஸுக்கும்
கல்யாணம் முடிந்திருந்தது. புதிதாக வந்திருக்கும்
மருமகள்கள் கூட,” நீங்கதான் கலாவா! உங்களைப்
பத்தி ஆண்ட்டி தினமும் சொல்லிகிட்டே இருப்பாங்க”
என்றார்கள். டாலி ஆஷிஷை கூட்டிக்கொண்டு மேலே
போய் நீ இங்கதான் இருந்த, இங்க இந்தலூட்டி
அடிச்ச என்று காட்டிக்கொண்டிருந்தாள். அங்கே
ஆஷிஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்
பெரிதாக்கி வைத்திருக்கிறாள் டாலி. அந்த
அன்பு!!!!! ஆண்டவன் கொடுத்த வரம்.

சமீபத்தில் ஜாண் அண்ணா ஹார்ட் அட்டாக்கில்
இறைவனடிச்சேர்ந்து விட்டார். இன்னமும்
அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறேன்.
LOWER TANK BUND பக்கம் போகும் போது
அந்த வீட்டை ஏதோ கோவிலை தரிசிப்பது
போல் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்வது
எங்கள் பழக்கமாகிவிட்டது.

அடுத்த உறவு... பற்றி அடுத்த பதிவில்



ஒரு ப.மிளகாய் வேணும்னாலும் கடன் கேட்க பக்கத்துல யாருமில்லை

அம்மா என்னை வீட்டுக்குள்ளேயே வெச்சிருப்பாங்க.
யார்கூடயும் விளையாட அனுப்பியதே இல்லை.
8 வருடம் கழித்து தம்பி பிறந்த பிறகு என்
துணை அவந்தான். லீவு எடுத்திருந்தால்
நோட்ஸ் வாங்கப்போவதைத் தவிர
பள்ளித் தோழிகள் வீட்டுக்கு
போகும் பழக்கமும் இல்லை.

பள்ளியில் கல்லூரியில் எனக்கென தோழிகள்
உண்டு. ஆனால் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு
போகும் அளவுக்கு இல்லை. திருவப்பூர்
மாரியம்மன் கோவிலுக்கு போய்விட்டு
என் தோழி மங்கையை பார்க்காமல் வந்தால்
அவள் சாமியாடுவாள் என்பதற்காக அவள்
வீட்டுக்கு மட்டும் போயிருக்கிறேன்.

இந்த வளர்ப்பு முறை என்னை யார் வீட்டுக்கும்
அதிகம் போக வைத்ததில்லை. வம்பு பேசும்
பழக்கமோ சுத்தமாக இல்லை. பேச்சுத் துணைக்கு
ஆள் யாரும் இல்லாவிட்டாலும் என் வேலைகளை
நான் பார்த்துக்கொண்டு, புதிதாக ஏதாவது கற்க,
படிக்க என இருப்பது பழக்கம். கொழும்புவில்
ஒவ்வொரு வீட்டிற்கும் பெரிய பெரிய மதில்சுவர்கள்.
வாசலில் இருக்கும் இரும்பு கதவே பெரிதாக
இருக்கும். மனிதர்கள் முகம் பார்க்க கூட முடியாத
சூழலிலும் தனிமை தெரிந்ததே இல்லை.


இங்கே வந்த பிறகும் எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள்
என யாரும் கிடையாது!!! எப்போதும் பூட்டுதான்
தொங்கும். யாருமில்லாமல் மூடி வைத்திருக்கிறார்கள்.
அப்பார்ட்மெண்டில் பல தோழிகள் இருக்கிறார்கள்.
இங்கும் அரட்டை அடிக்க யார் வீட்டுக்கும் போனதில்லை.
ஒரு முறை இந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும்
தெரிந்தவர் ஒருவர் .”எப்படித்தான் இப்படி உன்னால்
இருக்க முடியுதோ!! ஒரு ப.மிளகாய் வேணும்னாலும்
கடன் கேட்க பக்கத்துல யாருமில்லைல...!!” அப்படின்னு
கேட்டார்.

எனக்கு இந்த கடன் வாங்கும் பழக்கம் மகா அலர்ஜி.
இருந்தால் சரி. இல்லாவிட்டால் மாற்றுவழி அல்லது
தேவைக்கு உடன் கடைக்கு ஓடுவேனே தவிர
யாரிடமும் ப.மிளகாய் கொடு கறிவேப்பிலை கொடு
என ஓட மாட்டேன்.

அவ்வாவின் ஃப்ரெண்டுகள், அக்கம் பக்கத்து
வீட்டுக்காரர்கள் ஒரு டம்ப்ளர் காபிப்பொடி,
சர்க்கரை, தயிர் இப்படி கடன் வாங்கிக்கொண்டு
போவதுண்டு. அவர்கள் திருப்பி தராவிட்டால்
தர்மசங்கடமாக இருக்கும். அப்பொழுதிருந்தே
யாருக்கும் இம்மாதிரி சாமான்கள் கடன்
கொடுப்பதுமில்லை, வாங்குவதுமில்லைன்னு
கொள்கையா வெச்சிருக்கேன்.


ப.மிளகாய் இல்லாவிட்டால் வரமிளகாய் போட்டு
சட்னி செய்தாலும் ருசிக்கும். ஒரு நாள் கறிவேப்பிலை
இல்லாவிட்டால் ருசி குறைந்து விடாது.

இதைப் பற்றி நினைக்கும் பொழுது சென்னையில்
என் எதிர் வீட்டுக்காரம்மாதான் ஞாபகத்துக்கு
வருவார். கோடம்பாக்கத்தில் முக்கியமான பகுதியில்
1500 சதுர அடி, 3 பெட்ரூம் வீடு அவர்களுடையது.
ட்ராவல்ஸ், மினரல் வாட்டர் சப்ளை என வருமானத்துக்கும்,
ஆள்களுக்கும் குரைவில்லை.

”என் சின்ன மிக்ஸி வேலை செய்யலை,
உன் மிக்சியில் அரைச்சுக்கிறேன்!” என்று ஒருநாள்
வந்தார். அதுவே பழக்கமாகி மிக்ஸி கழுவி, துடைத்து
(என் வேலைகள் முடிந்த பிறகு) என எனக்கு
வேலை அதிகமானது. “இன்னுமா உங்க மிக்ஸி
ரிப்பேர் செஞ்சுக்கலை!!” என கேட்டதில் அந்தம்மாவுக்கு
கொஞ்சம் வருத்தம். அதன் பிறகு அந்தம்மா
கறிவேப்பிலை, கொத்துமல்லி, பூண்டு என
எதுக்கேட்டாலும் இல்லை என்றே சொல்லிவிடுவேன்.

மகா கேவலமாக ஒரு நாள் அந்தம்மா
”சாப்பிட உக்காந்துட்டேன், நெய் இல்ல. நெய் இல்லாம
சோறு இறங்காது! உன் பொண்ணுக்கு நெய் போடுவ
இல்ல.அதனால நெய் எப்பவும் இருக்கும்ணு
தெரியும்!! கொஞ்சம் நெய் கொடு!!” என்று
கேட்டது மகா கொடுமை. அப்படி என்ன வாய்??
இருந்தால் சாப்பிடுவதுதான் நல்லது. என்னிடம்
கடன் கேட்டதிற்கு பதில் அந்தம்மாவே 2 தப்படி
நடந்திருந்தால் திரும்பியதும் கடை. இல்லை
தன் வீட்டில் வேலை செய்பவரையாவது
அனுப்பியிருக்கலாம்”!!


எனக்கு இந்தக் குணம் பிடிக்கவே இல்லை.
தெலுங்கில் “அப்பு சேஸி பப்பு கூடு” கூடாது
என்பார்கள்.அதாவது கடன் வாங்கியாவது
பருப்பு சோறு சாப்பிடவேண்டும் என்பது இல்லை.
அது பெரிய தவறு.

ஃப்ரிட்ஜ் இல்லாத காலங்களில அதிகம் வாங்கி
வைத்திருந்தால் கெட்டுப்போகும் என்பதால்
குறைவாக காய்கறிகள் வாங்கினார்கள். வீட்டுக்கு
வீடு பெரிய சைஸ் ஃப்ரிட்ஜ் இருக்கும் இந்தக்காலத்திலும்
பக்கத்துவீட்டில் பச்சை மிளகாய் கடன் வாங்கித்தான்
சமைக்க வேண்டும் என்றால் அந்தப் பெண்ணின்
வீட்டு நிர்வாகம் நல்லா இல்லைன்னு புரியுது.

ஆத்திர அவசரத்துக்கு உதவத்தான் அக்கம் பக்கம்
என்றால். சரி. இல்லைன்னு சொல்லவில்லை.
உண்மையிலேயே உதவி வேண்டும் நேரத்தில்
உதவுவது மனித இயல்பு. ஆனால் இப்படி
அல்ல.

எனக்கும் நிறைய்ய உதவிகள் என் அக்கம் பக்கத்தினர்
செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லையேல்
ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன் எனும் நிலையில்
அவர்கள் செய்திருக்கும் உதவிகள் மகத்தானது.
”முன் கை நீண்டால்தான் முரண் கை நீளும்”
நானும் செய்திருக்கிறேன்.

அப்படி என் வாழ்நாளில் மறக்க முடியாத
இரு குடும்பங்களை பற்றி அடுத்த பதிவுகள்.

இப்போதைக்கு தொடரும் போட்டுக்கறேன்.





Monday, April 12, 2010

ராஜா ஆரு ராணி ஆரு!!!!

சகோதரி ஸாதிகா இந்த விருதை எனக்குக் கொடுத்திருக்காங்க.
சந்தோஷமா இருக்கு. நான் விரும்பும் சிலருக்கு
ராஜா ராணி விருது கொடுக்க விரும்புகிறேன்.

எப்பவும் லேடீஸ் ஃபர்ஸ்டுதானா. ஒரு மாறுதலுக்கு
இந்த தடவை ஜென்ஸ் ஃபர்ஸ்டு.




சர்வே எடுப்பதே என் தொழில்னு இருக்கும் சர்வேசனுக்கு
இந்த விருது.( பொண்ணு பாக்கப்போனதைப்பத்தி
இன்னும் பதிவு வரலைன்னு ஞாபகம் இருக்கட்டும்)

மறந்து போகக்கூடாத பாடல்களை அவ்வப்போது
ஞாபகப்படுத்தும் எங்கள் பாஸ் கானா பிரபாவுக்கு
இந்த விருது.

சமீபத்துல நான் படிக்க ஆரம்பிச்சு விரும்பி படிக்கற
(சில சமயம் படிச்சிட்டு பின்னூட்டம் போடாம
வர்றதும் உண்டு) பதிவரில் சேட்டைத் தம்பி.
இந்த ஒரு போஸ்டுக்காகவே இந்த விருது. என் ராசி பலன்
எப்பன்னு காத்துகிட்டு இருக்கேன். பாப்போம் சரியா
சொல்றீங்களான்னு.





நானானி. இவங்க ப்ளாக் பக்கம் ஒரு ரவுண்ட் அடிச்சா
எப்படியெல்லாம் சுவாரசியமா பதிவு போடலாம்னு
ஐடியா கிடைக்கும். தான் நனையாமல் கார் மட்டும்
குளிச்ச போஸ்ட் படிச்சிருக்கீங்களா?? இல்லையா.
சீக்கிரம் போய் படிங்க. நானானிக்கு இந்த விருது.

வலையுலக ஆசிரியை துளசி டீச்சருக்கு
இந்த விருது.

பக்கடோ சுத்தி வந்த காகிதத்தையும் படிக்கும்
என்ன மாதிரி ஆளுங்க இருப்பாங்கன்னு நல்லாத்
தெரியும் போல விதூஷுக்கு. தன் வலைப்பூவுக்கு
அந்தப் பெயர்தான் வெச்சிருக்காங்க. சுவாரசியமாவும்
இருக்கும். அவங்களுக்கு இந்த ராணி விருது.

கிறுக்குவதா சொல்லிக்கிட்டு கலக்கல் போஸ்டுகள்
போடும் வித்யாவுக்கு இந்த விருது.

விருதுபெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

Sunday, April 11, 2010

ஐஸ்... ஐஸ்.. கூல்... கூல்ல்

பாலேஸ், கப்பைஸ் அப்படின்னு வெள்ளக்கலர்
கைவண்டில வெச்சு ஐஸ்கிரீம் வித்துகிட்டு போவாங்க.
ஆனா வீட்டுல வாங்கிக் கொடுக்க மாட்டாங்க.
தயாரிப்பு எப்படி இருக்கும்னு ஒரு டவுட் தான்.
கீழ3ல நாங்க இருந்தப்ப பின் வீதியாக கீழ 4ல
முருகன் ஐஸ்கீரிம்னு ஒரு கடை. அவ்வா போய்
அங்க செக் செஞ்சு பால் ஐஸ் மட்டும் வாங்கிக்கலாம்னு
பர்மிஷன் கொடுத்தாங்க.

குச்சி ஐஸ் தான். பால் சுவை. குச்சி ஐஸை
சாப்பிடும் சுகமே தனி... சேமியா, ஆரஞ்ச்னு
பலவகை இருதாலும் பால் ஐஸ் மட்டும் தான்
வாங்கிக்கொடுப்பாங்க.

வண்டி வாசலில் வராத பொழுது ஒரு டம்ப்ளரும்
காசும் அவ்வா கொடுத்தனுப்புவாங்க. ஐஸ் வீட்டுக்கு
வருவதற்குள் உருகிவிடாம டம்ப்ளரில் போட்டு
எடுத்துகிட்டு வருவேன்.

அந்த ஃபேக்டரி இடம் மாறிப்போனதும் அம்மம்மா
வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் மாடர்ன் ஸ்கூல்
பக்கத்துலேர்ந்து ஒருத்தர் கோன் ஐஸ் கொண்டு
வருவார். அது வாங்கிக் கொடுத்தாங்க. நம்ம நேரம்
டான்சில்ஸ் வந்ததால ஐஸ் வண்டி போகும் பொழுது
ஜொள்ளு விடுவதோட சரின்னு ஆச்சு. டான்சில்ஸ்
கரைஞ்ச பின்னாடியும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கல.
சில சமயம் சாப்பிட உடனே தலைவலி வந்திடும்.
அதனாலயும் வேணாம்னு விட்டுடேன்.

மும்பை போன பிறகு மாமா ஐஸ்கிரீமை தலைவலி
மருந்தா மாத்திட்டாரு. ”வால்ஸ் ஐஸ்கிரீம் சாப்பிடு
ஒண்ணும் செய்யாதுன்னு” வாங்கித் தருவார் மாமா.
அப்புறம் ஐஸ்கீரீம் ஐஸ்கீரிம் தான். செம ஜாலியா
இருந்துச்சு.

கல்யாணத்துக்கு அப்புறம் கூட வால்ஸ் ஐஸ்கிரீம்னாதன்
சாப்பிடுவேன்.(இப்ப வரை) ஹோட்டல், திருமண
வீடுகளில் கொடுக்கும் ஐஸ்களை தவிர்த்துவிடுவேன்.
எனக்கு பிடிச்சது சாக்கோபார்தான். மேலே சாக்லட்
கிரிஸ்ப் உள்ளே அவ்வா வாங்கிக்கொடுத்த பால் ஐஸ். :)
வெந்நிலா ஃப்ளேவரும் பிடிக்கும்.



கொழும்புவில் வால்ஸ் கிடைச்சது. ஆனாலும்
elephant house நல்லா இருக்கும். வகை வகையா
ஐஸ்கிரீம்னு ஒரே எஞ்சாய் தான். கொழும்பு மெக்டொனல்ட்ஸில்
கிடைக்கும் ஐஸ்கிரீம் சண்டே( வெந்நிலா +சாக்லேட் சாஸுடன்
ம்ம்ம்ம்ம் யம்மி :) )




பத்து வருஷம் முன்னாடி OUTLOOK MAGAZINEனு நினைக்கிறேன்.
ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தாங்க. பல கம்பெனி ஐஸ்கிரீம்களை
பரிசோதனை செஞ்சு எது சிறந்ததுன்னு? கட்டுரை.
தயாரிக்கும் விதம், தயாரித்த பின் பதப்படுத்தும் முறை,
மென்மைத் தன்மை, ஃப்ரீஸரில் வைக்கப்படவேண்டிய
விதி முறைகள், ஃப்ரீஸரில் இருந்து எடுத்த பின்
ஐஸ்கிரீம் இருக்க வேண்டிய தன்மை எல்லாம் ஆராய்ஞ்சிருந்தாங்க.

அதில் அமுல் ஐஸ்கிரீம் நிறுவனம் தான் முதல் இடம்.
என் ஃபேவரீட் வால்ஸ் இரண்டாம் இடம். 3ஆவதா இன்னொரு
கம்பெனி ஞாபகமில்லை. மத்த தயாரிப்புக்கள் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு
ஆணையத்தின் எந்த பிரிவுக்குள்ளும் வரவில்லை. மார்க்கெட்டில்
விற்பனைக்கே லாயக்கற்றவைன்னு சொல்லியிருந்தாங்க.
இப்ப எப்படியோ தெரியலை.

போன வாரம் இங்க லோக்கல் நியூஸ் சேனல் TV9ல்
ஹைதையின் 5 இடங்களிலிருந்து ஜூஸ், லஸ்ஸி போன்றவற்றிற்கு
உபயோகப்படுத்தப்படும் ஐஸ் பார்களை எடுத்து பரிசோதனை
செஞ்சு அதிர்ச்சி ரிப்போர்ட் வந்ததை காட்டினாங்க.

வெயிலுக்கு இதமா இருக்க இந்த ஜூஸை மக்கள்
குடிக்கறாங்க. ஆனா இதம் பாக்க போய் உடல்
பாதகமாயிடும் நிலமை இருக்குன்னு அறிக்கைகள்
சொல்லுது. ஐஸ் பார்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும்
தண்ணீர் சுத்தமில்லையாம். contaminated water,
bore water இவற்றைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள்.



இப்படி தயார் செய்யப்படும் ஐஸ்பார்கள் பாதுகாக்கும் வகையோ,
விற்பனையாளரிடம் செல்லும் முறையோ எதுவுமே
சுகாதரமாக இல்லை. சில இடங்களில் ஜூஸ் பார் எதிரில்
டயரில் கட்டி உடைத்து தெர்மாகோல் பெட்டியில் போடுவதை
பார்த்திருக்கிறேன். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட
இப்படித்தான் இருக்குமாம்!! அலாரம் அடிச்சிருக்காங்க
அந்த சேனல் காரங்க. வெயிலின் தாக்கத்தை தாங்க
ஜூஸ் குடிக்கப்போனா, அந்த ஜூஸே எமனாகும்
வாய்ப்புக்கள்தான் அதிகம்.

இங்கன்னு இல்லை. எல்லா ஊர்களிலும், மாநிலங்களிலும்
இப்படித்தான் இருக்கும். எடுத்து பரிசோதனை செஞ்சு
பாத்தாத்தான் தெரியும்.

உங்க அனைவருக்கும் என் வேண்டுகோள் என்னன்னா?
எங்கயும் இப்படி ஜில் ஜில் பானங்களை தவிர்த்திடுங்க.
ஐஸ் போடாமல் செஞ்சு தரச்சொல்லி குடிங்க.
கல்யாண வீட்டில் தரப்படும் சர்பத்தும் வேணாம்.
எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கோ!!!
நம்மை நாமதானே பாத்துக்கணும்!!!!

Saturday, April 10, 2010

BACK YARD SCIENCE& ART ATTACK

தொலைக்காட்சி பெரியவங்க சின்னவங்கன்னு
பாகுபாடு இல்லாம கட்டிப்போடுது. தொலைக்காட்சி
மொத்தமாவே உதவாத முட்டாள்களின்பெட்டி அல்ல.
பல நல்ல உபயோகமான செய்திகளும் அதில் இருக்கு.

ஆஷிஷ் அம்ருதா அதிகமா டீவி பார்க்காம
இருக்கும் படி பாத்துப்பேன். ஆனா இந்த நிகழ்ச்சிக்கு
மட்டும் ஓகே சொல்வேன். டிஸ்னி சேனலில் வரும்
BACK YARD SCIENCE ரொம்ப அருமையா இருக்கு.
பிள்ளைகளுக்கு உபயோகமாவும் இருக்கு.



சின்னச் சின்ன அறிவியல் பயிற்சிகளை அழகா
செய்வாங்க. அற்புதமா இருக்கும். இதைப் பாத்தா
பசங்க நிறைய்ய கத்துக்க முடியும்.

இது ஆஸ்திரேலியாவில் இருக்கும்
குழந்தைகளுக்கான கல்வி சேனலில் இருந்து
தயாரித்து வெளியிடப்படும் நிகழ்ச்சிகள்.
Dorling Kindersley அவர்களின் புத்தகத்திலிருந்துதான்
இவை தயாரிக்கப்படுகின்றன.




இது பிரிட்டனில் வெளியாகும் தொலைக்காட்சி
தொடர். இதுலயும் பிள்ளைகள் அதுவும்
வரைய, கைவேலைகள் கற்க விருப்பம்
இருக்கும் பிள்ளைகளுக்கு உதவியா இருக்கும்.
ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.

ஒரு முறை காகிதங்களை கசக்கி ஒட்டி
முதலை மாதிரி செய்ததை பார்க்கும் பொழுது
அசந்துட்டேன்.

art attack
இணைய தளம்.

இதன் தயாரிப்புக்கள் மார்கெட்டுகளில்
கிடைக்கிறது. பிள்ளைகள் விரும்புவாங்க.
பெரியவங்க நமக்கும் ரொம்ப பிடிக்கும்.
ஒரு மாறுதலுக்கு டிஸ்னி சேனலை
பசங்ககூட உக்காந்து நாமும் பாக்கலாம்.


Friday, April 09, 2010

வலையுலகமும் பெண்ணும்

வலையுலகில் என்ன நடக்கிறதென்பதே சமீபமாகத்
தெரியவில்லை. காரணம் நான் அவ்வளவாக
வராதது. சங்கம் வைப்பது குறித்து ஏதோ சச்சரவுகள்
நடக்கிறது என்பது மட்டும் சில நண்பர்கள் சொல்லித் தெரிந்தது.

நர்சிம் அவர்களின் இந்தப் பதிவை இன்று தான்
தாமதமாகப் படித்தேன்.



பெண்ணீயம் பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை.
குழந்தைகளின் வளர்ச்சியை ரசித்து அதை
அழகாக பதிவிட்டு தன் தாய்மையை
காட்டுவதிலும் எந்தத் தவறும் இல்லை.


உண்மையில் சங்கம் வைத்தால் பெண்கள்
வருகிறார்கள் வரவில்லை என்பதில்லை.
பல ஆண் பதிவர்கள் தரும் டார்ச்சர்களால்
இருக்கும் பெண்பதிவர்கள் ஓடிப்போகாமல் இருந்தால் சரி.

இது என்ன புது கூத்து என்று கேட்பவர்களுக்கு இப்படியும்
நடக்கிறது என்பதுதான் நிஜம்.

கண்ணியமாக நடந்துகொள்பவர்களுக்கும், உற்ற
சகோதரியாக நினைப்பவர்களும் நிறைய்ய இருக்கும்
இங்கே சிலரின் தவறான நடவடிக்கைகளும் இருக்கத்தான்
செய்கின்றன. நட்பாக சாட்டிங் செய்து, நட்பை
மட்டுமே பரிச்சயப்படுத்தி உதவும் நல்ல உள்ளங்களுக்கு
என் சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக்
கொள்கிறேன்.


இமெயிலில் சாட்டினால் ஜொள்ளுவது, உன் போன்
நம்பர் கொடு என்று அடாவடியாக கேட்டுவாங்குவது,
தர மறுத்தால் “என்னை தவறாக நினைக்கிறாயா”
என்று கேட்பது, பதிவர் சந்திப்புக்கு வர நினைத்தாலும்
தடுக்கும் விஷயம் ஜொள்ளு ஜொள்ளு தான்.


இல்லையென்று சம்பந்தபட்டவர்கள் சொல்ல மாட்டார்கள்.
படிக்கும்பொழுது சம்பந்தபட்டவர்களுக்கு மனசாட்சி
என ஒன்று இருந்தால் “இது நான் தான்!!” என
குத்தும். இதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது.

பல விஷயங்கள் சொல்லலாம். சொன்னால்
பிரச்சனை அதிகமாகும். பிரச்சனை செய்ய
இந்தப் பதிவு அல்ல.

சில பெண்கள் தங்களுக்கு நடக்கும் டார்ச்சர்களை
வெளியே சொல்லி ஆவப்போவதில்லை என்பதால்
வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆகப்போவது ஒன்றுமில்லை, இவைகள் இந்த ரகம்
தான் என ஆண்களின் மீதே வெறுப்பு வரவைக்கும்
ஆட்கள் இருப்பதால் சகித்துக்கொண்டுதான் போக
வேண்டியிருக்கிறது. இந்த மாதிரி நிலை இங்கே
மட்டுமல்ல, எங்கும் பெண்களுக்கு இப்படித்தொல்லை
உண்டு என்பதால் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை
மனதில் பதிய வைத்துகொண்டுதான் பெண்கள்
பதிவர்களாக இங்கே இருக்கிறார்கள்.

பதிவர் ஒருவர் பெண்பதிவர் ஒருவரைப்பற்றி
அடித்த கமெண்டும் அதை சட்டைசெய்யாமல்
தாண்டிவந்த விதமும் பாராட்டுக்குரியது.
சட்டை செய்யாமல் விட்ட காரணம் தான்
மேலே நான் சொல்லியிருப்பது.

ஒருபடத்தில் விவேக் டயலாக் ஒன்று
ஞாபகத்துக்கு வந்தது,”இன்னைக்கு நாம
பேண்ட், ஷர்ட் போட்டுகிட்டு மாடர்னா
வந்தாலும் ஒருகாலத்தில் நாம ஆதிவாசிங்கதானே!!”

என்னதான் காலம் மாறினாலும்
மாட்ர்னானாலும், படித்தாலும் பெண்ணை
போகப்பொருளாகவே பார்க்கும் ஆணின்
அடிப்படை புத்தி மாறாவிட்டால் ஒன்றும்
நடக்கது.

பிறன் மனை நோக்காமல், ஒழுக்கமாக
வாழ்ந்து தன் மனைவியைத் தவிர
மற்றவர் அனைவரையும் சகோதரியாக
பாவிக்கும் எண்ணம் வந்தால் நல்லது.
கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே
உதிக்கலாம். ஆனால் ஆண்களில் இந்த
மாற்றம் நிகழாது.
ஏதோ என் மனதில் பட்டதை, சில அனுபவங்களை
பதிய ஒரு வாய்ப்பாக நினைத்தேன். பதிந்தேன்.


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சித்திகிட்ட பேசலாம்னு போன் செஞ்சேன்,
மொதல்ல நான் பேசறேன்னு வந்தா பெரிய தங்கை.
நல்லா அர்ச்சனை செஞ்சிட்டு போனை சித்திகிட்ட
கொடுத்திட்டா... :(( அர்ச்சனை எதுக்கு?

முந்தா நேத்து புளிப்பொங்கல் செஞ்சிருக்காங்க வீட்டுல.
எல்லோரும் சாப்பிட உக்காந்திருக்காங்க. எங்க
சித்தப்பா,” இது என் மூத்த பொண்ணுக்கு பிடிச்சதுன்னு!!!”
சொல்ல அதுக்கு அப்ப ஏற்பட்ட கோபத்தை நான்
போன் செஞ்சதும் அர்ச்சனை செஞ்சா தங்கச்சி.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இதுக்குத்தான்.

அந்த மூத்த பொண்ணு நான் தான். எஸ் மீ ஒன்லி.
(இதுக்கும் கத்துவாங்க இரண்டு தங்கைகளும்)

ஒரு சாப்பாட்டு ஐட்டம் கூட உன் பேரு சொல்லாம
சாப்பிட விடமாட்டேங்கறாங்க அக்கா!!”” அப்படின்னு
ஒரே புலம்பல்ஸ்.

என் சித்தி திருமதி. உமா. இவங்க என்னை வளத்தவங்க.
கண்டிப்பு கறாரும் ஜாஸ்தி. வெள்ளிவிழா வாணிஸ்ரீ போல
என்னைக் கடிதங்களாலேயே மேம்படுத்தினவங்க. அம்மா
வேலைக்கு போனதால் அதிகமாக அம்மம்மா வீட்டுலயே
இருந்தேன். அப்ப சித்தி தான் வளத்தது. எங்க போனாலும்
அவங்க கொடுக்கு மாதிரி கூடவே போவேன்.

ஊர்ல எல்லோரும் என்னை அவங்க சொந்த பொண்ணுன்னே
நினைச்சிருந்தாங்க.” உமா உன் பொண்ணான்னு கேட்டா!!
ஆமாம் என் பொண்ணுதான், என் அக்கா பொண்ணுன்னா
என் பொண்ணு இல்லையான்னு!! பதில் சொல்லிட்டு போவாங்க”



(சென்ற வருடம் டப்பர்வேர் மேனேஜர்ஸ் மீட்டுக்காக
சித்தி ஹைதை வந்திருந்தாங்க.(சித்தியும் மேனஜர்ல)
அப்போ என் மொபைலில் நான் கிளிக்கிய சித்தி போட்டோ இது.)

அசப்புல அவங்க மாதிரி இருப்பேன்னு பாத்தவங்க
சொல்வாங்க. ஆனா மும்பையில பாட்டிவீட்டுக்கு
பக்கத்துவீட்டுல ஒரு மாமி, “உமா ஏன் எங்கூட பேசலைன்னு!!”
எங்க அம்மம்மா கூட சண்டை போட,”உமா வரவே இல்லைன்னு!!”
அம்மம்மா சொல்ல அங்க வந்த என்னை பாத்து கை காட்ட
“இது என் பேத்தி அப்படின்னு!!” அம்மம்மா அறிமுகம் செஞ்சு
வைக்கும் கூத்து நடந்திருக்கு.

சித்திக்கு அழகா கோலம் போடத்தெரியும். தையல் தெரியும்.
இப்படி ஏகப்பட்ட தெரியும்கள். இன்னைக்கு எனக்கு ஏதாவது
தெரியும்னா அதுக்குக் காரணம் சித்திதான்.

எவ்வளவோ திட்டு வாங்கியிருக்கேன். துணி சரியா மடிக்க,
துணி அலசும் போது பல டெக்னிக்குகள், காய்கறிகளை
கழுவிவிட்டுதான் வெட்டணும், பாத்திரங்களை கழுவி
கவுக்கும் விதத்திலேயே அந்த பாத்திரங்கள் காற்று
உள்ளே போய் சீக்கிரம் காய்ந்து விடவேண்டும்,
உள்ளாடைகள் வெளியே தெரியாமல் காயப்போட
வேண்டும்(அதே சமயம் தேவையான சூரிய ஒளி
உள்ளாடைக்கும் போக வேண்டும்) ம்முச்சு விட்டுக்கறேன்.
இப்படி பல பயிற்சிகள். சரியா செய்யாட்டி திட்டுதான்.

”நீ பர்ஃபெக்டா இருக்கணும், செய்யும் வேலையிலும்
அது தெரியணும்” சித்தி சொல்லிக்கொடுத்தது இது.


சித்தியோட பல குணாதிசயங்கள் என் கிட்டயும் இருக்குன்னு
நல்லாத் தெரியும். ரேடியோ கேட்டுகிட்டே வேலை செய்யும்
குணம், நிறைய்ய படிப்பது,சூடா இல்லாட்டி சோறே வேணாம்னு
பட்னி கிடப்பது, ஏன் இப்ப கோர்வையா எழுதுவது
எல்லாம் அங்கேயிருந்து வந்ததுதான்.(சித்தியும் பல இதழ்களுக்கு
எழுதியிருக்காங்க.) அவங்களை மாதிரி நான்னு எல்லோரும்
சொல்லி சொல்லி அப்படியே ஒரு வாரிசாக நான் ஆகிட்டேன்.

இதெல்லாம் என்னாத்துக்கு இப்பன்னு கேக்கறீங்களா??
எங்க சித்திக்கு தினமும் டெய்லி அர்ச்சனை நடக்குது.
அப்பப்ப சித்தப்ஸுக்கு நடக்குது. :)) நடத்துபவர்கள்
என் அருமை தங்கைகள் தான். காரணம்??? அங்க தான்
இருக்கு மேட்டர். காலேல எழுந்துலேர்ந்து ஒரு நாளாவது
அவங்க பேரைச் சொல்லி சித்தி கூப்பிட்டதே இல்லை. :))
ஆரம்பிக்கும் போதே கலா.... தான்.

பல நாள் தங்கசிங்க பதிலே சொல்லாம் இருக்க, ஏண்டி
காட்டு கத்தல் கத்திகிட்டு இருக்கேன், பதில் பேசாம
இருக்கிங்க ரெண்டு பேரும்னு சித்தி சொல்ல, “நீங்க
கூப்பிட்டது உங்க அருமை பொண்ணை எங்களை இல்ல,
எங்க பேரைச்சொல்லி கூப்பிட்டா நாங்க வருவோம்,
உங்க பொண்ணு வரும் வரை வெயிட்டுங்க!!”” அப்படின்னு
சொல்லியிருக்காங்க. :))))

தங்கச்சிங்க பேரு நித்யா, ஸ்வேதா. பெரிய தங்கச்சி
காலேஜ் முடிக்க போறாங்க. சின்னவங்களுக்கு இன்னும்
ஒரு வருஷம் இருக்கு. இப்ப வரைக்கும் இதே கதைன்னா
என் பேர்ல கோவம் வரும் தானே!!! (செல்லக் கோபம் தான்)

நான் போன் பேசினா இன்னும் கோவம் வரும்.:))
காரணம் சித்தி லைன்ல வரும் போதே “கண்ணம்மா!”
அப்படின்னு கூப்பிடுவாங்க. (என்னைத்தான் :)) )
”ஒரு நாளாவது அப்படி எங்களை கூப்பிட்டிருக்காங்களா!”
அப்படின்னு புலம்பல்ஸ் தான் இரண்டு பேரும்.

சித்திக்கு கல்யாணம் நடந்த போது எனக்கு 16 வயசு.
கல்யாணம் முடிந்து சித்தி மதுரைக்கு பஸ்ல கிளம்பிட்டாங்க.
கல்யாண சத்திரத்தில் அவங்களை கட்டிகிட்டு உக்காந்திருந்து
பஸ்ல ஏத்திவிட்டு வந்தப்புறம் ஒரு வெறுமை. உடனே
ஓடினேன் பஸ்டாண்டுக்கு. நிஜமாவே ஓடினேன். 2 கிமீ
தூரம் இருக்கும். பஸ்ஸ்டாண்டில் இருந்த சித்தியை
கட்டிகிட்டு அழுதேன். எங்க சித்தப்பா இப்பவும்
இதை சொல்லிகிட்டு இருப்பாங்க.


பாவம் சித்தி. என்னால ரொம்ப திட்டு வாங்கறாங்க.:))
”வாயத்தொரந்தாலே உன் பேருதான் வருதும்மா, நான்
என்ன செய்யன்னு கேக்கறாங்க,!!””
பெற்றால்தான் பிள்ளையா!!! இல்லையே வளர்த்த பாசம்
இன்னும் அதிகமாச்சே. கிருஷ்ணனை பெற்றவளை விட
வளர்த்தவள் பாசம் பன்மடங்கு ஆச்சே. என்ன்னைப் பெத்த
மகராசி மேல என் மூத்த தங்கைக்கு பாசம் அதிகம்.
பெரியம்மா, பெரியம்மான்னே கிடக்கும்.

க்ராஸ் மல்டிபிளேகஷன் மாதிரி அன்பு க்ராசாகிடுச்சு இங்க.
அம்மாவின் மேல் வைத்திருக்கும் அந்த அன்பு, மரியாதை,
பாசம் என் சித்திமேலும் எனக்கு உண்டு.

என் தம்பிக்கும் சித்தி என்றால் ரொம்ப பிடிக்கும்.
சிங்கையிலிருந்தாலும் அடிக்கடி போன் போட்டு
பேசிவிடுவான். நானும் தம்பியும் சேர்ந்து சித்திக்கு
ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்தோம். சித்திக்கு
மகா சந்தோஷம். என் பசங்க வாங்கிக்கொடுத்தது
எனும் சந்தோஷம் அது.

என் சித்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதாலேயே
இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். அவங்களுக்காக
இந்தப் பாடல் இங்கே: (இந்தப் பாட்டு என் ஃபேவரீட்டுன்னு
எனக்கே மறந்துப்போச்சு என்பதுதான் சித்தியின் சமீபத்திய
கமெண்ட் :)))



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Thursday, April 08, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 8/4/10

நான் இல்லைன்னு சோயப், இவருதான்னு ஆயிஷா
இரண்டு பேரும் சேர்ந்து நடத்தின மெகா சீரியல் 2 நாள்ல
முடிஞ்சே போச்சு. 15 பெரியவங்க சேந்து பஞ்சாயத்து
நடத்தி டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்த போட வெச்சதுக்கு
பின்னாடி ஸ்ட்ராங்கான ஆதாரம் தான் காரணமாம்.
”டைவர்ஸ் செய்யாம சானியாவோட கல்யாணம்
நடந்தா தன்னிடம் இருக்கும் ஸ்ட்ராங்கான ஆதாரத்தை
வெளியிட நேரும்னு” சொன்னதால பயந்து டைவர்ஸ்
நடந்ததாம். என்ன ஒரு ஆதாரம்??? யாருக்கும்
தெரியவில்லை. சோயப் ஆயிஷாவை டைவர்ஸ் செஞ்சு
சானியாவை கல்யாணம் செய்வதால் சானியா இனி
பீவி நம்பர்:2. “என்ன நடந்தது என்பது என் குடும்பத்தாருக்கும்,
இறைவனுக்கும் தெரியும்னு” அறிக்கை விட்டு பத்திரிகை
காரங்க கிட்ட எகிறினாங்க அக்கா!!! இப்ப என்ன
சொல்வாங்க.!!!

**********************************************

நம்ப ரம்பாவுக்கு இன்னைக்கு திருப்பதியில் கல்யாணம்
முடிஞ்சிரிச்சு. மாப்பிள்ளை இந்திரகுமாராம்.
திருமண வாழ்வில் இணையும் இவர்கள் ஆனந்தமான
வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

*********************************************

ஷார்ஷாவுல ஆண்கள் லுங்கியுடன் பொது இடங்களுக்கு
வருவது தடை செய்யப்பட்டிருக்குதுன்னு படிச்சேன்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் தண்டனைக்கு
ஆளாகிறாங்க. அதுவும் நம்ம இந்தியர்கள் தானாம்.
“உடம்பை மறைச்சுத்தானே இருக்கு இந்த உடை,
இதுல என்ன கஷ்டம்னு கேட்டிருக்காரு” ஒருத்தர்.

இதைப் படிக்கும் பொழுது குமுதம் சிநேகிதிலன்னு
நினைக்கிறேன் படிச்ச ஒரு கமெண்ட் ஞாபகம் வந்துச்சு.
பெண்கள் உடையணியும் பாங்கினால்தான் அவர்களின்
கற்புக்கு பங்கம் வருதா? என்பது போல ஒரு விஷயத்துல
பலரும் கருத்து சொல்லியிருந்தாங்க. அதுல ஒரு
ஆண் வாசகர் சொன்ன கருத்து ரொம்ப பிடிச்சிருந்தது.

“பெண்கள் உடையணிவதைப் போல ஆண்களும்
கவர்ச்சிகரமாகவோ, மேலாடை அணியாமலோ,
பனியனுடனோ காட்சி அளித்தாலும் பெண்கள்
தன் மனதை கட்டுப்படுத்திக்கொள்வது போல
ஆண்களுக்கு மனதை கட்டுப்படுத்திக்கொள்ளும்
தன்மை இல்லாமல் இருப்பதுதான் பிரச்சினைன்னு”
போட்டுத் தாக்கிட்டாரு.
******************************************

திருநங்கைகளைக்கண்டால் எனக்கு பயம் இருந்ததுண்டு.
அந்த பயத்துலேர்ந்து வெளியில வந்ததைக்கூட
பதிவா போட்டிருந்தேன்.
சமீபத்துல சூப்பர் மார்க்கெட்டுக்கு போய்
சாமான் எடுத்துகிட்டு பில்லிங் கவுண்டர் வந்தா
அங்க ஒரு திருநங்கை இருந்தார். நான் பில் போடும்
வரை சும்மா இருந்தவர் பர்ஸை பார்த்ததும் பணம்
கொடு என்று ஆரம்பித்தார். 10 ரூபாய் கொடுத்தால்
போதாதாம். 21/51 வேணும்னு அடம்!!!

கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கன்னு சொன்னா,
“இம்புட்டு சாமான் வாங்குற! எனக்கு பணம்
கொடுத்தா என்ன?”ன்னு எதிர் கேள்வி. ஸ்டோர்
காரங்களும் ஏதும் செய்ய முடியாத நிலை.
நல்லா பாட்டுவிட்டு 21 ரூபாய் கொடுத்தேன்.

அப்புறம் ஆட்டோவில் போகும் போது பணம்
கேட்ட திருநங்கைக்கு கொடுக்க பணம் எடுக்க
முற்படும் போது ஆட்டோ டிரைவர் அவரை
அதட்டி விரட்டிவிட்டார்.

“தப்பா நினைக்காதீங்கம்மா!! இவங்கள்ல
பாதி பேர் திருநங்கைகளே இல்லை. ஆண்கள்தான்.
கஷ்டபடாம காசு சம்பாதிக்க மீசையை மழிச்சு,
புடவையை சுத்திகிட்டு கிளம்பிடறாங்கம்மா
போலிஸ் சொன்ன தகவல் இது, எனக்கே இந்த
ஆண்கள் மேலே கோவம் வருது”” அப்படின்னு
சொன்னார்.

திருநங்கைகள் வாழ்வு மோசமானது. அதுலயும்
இந்தமாதிரி ஆட்கள் இருந்தால் என்ன செய்வது!!!
புல்லுறுவிகள் மாதிரி ஊடுருவும் ஆண்களை
கண்டுபிடித்து திருநங்கைகள் சமூகத்துக்கு
அரசு ஏதும் செய்யுமா!!! அரசு ஏதும் நடவடிக்கை
எடுத்தால்தான் இவர்களின் அடாவடியிலிருந்து
மக்கள் தப்பிக்க முடியும். :((
************************************************

ப்ரூக் பாண்ட் தேயிலை விளம்பரங்கள் அதுவும்
லேட்டஸ்டா அந்தப் பொய்க்கோழி கணவன்-மனைவி
இருவரும் வருவது போன்ற விளம்பரங்கள் ரசிக்கும்படியா
இருக்கு. இப்ப லேட்டஸ்டா இன்னொரு கப் டீக்காக
காலிங் பெல்லை தானே அழுத்தி யாரோ வந்திருப்பதாகவும்,
அவருக்கு டீ கொண்டு வரும் படி சொல்லி தானே
டீ அந்த டீயை குடிப்பது போலவும் வருது.

ஆனா தன்னுடைய விற்பனையை அதிகரிக்க இந்த
விளம்பரம் வருது. ஆனா அளவுக்கதிகமா தேநீர் குடிச்சா
உடம்பில் நாம் சாப்பிட்ட உணவில் இருக்கும் இரும்புச்
சத்து உறிஞ்சப்பட்டு உடல் நிலை மோசமாகும்.

ஒவ்வொரு கப் டீயில் சேர்க்கப்படும் சர்க்கரையின்
அளவு கலோரிகளாக உடலில் சேர்ந்து உடல் பருமனை
ஏற்படுத்தும். அதனால் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 கப்
தேநீர்/காபி தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கவனம்: உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க
*********************************************



Wednesday, April 07, 2010

VARUDU

பாக்கணும்னு நினைச்ச படம் பாத்தாச்சு.
படத்தை பாத்தவங்கள்ல பலர் படம் ஃபாளாப்ன்னு
சொன்னாலும் பாத்திடணும்னு நினைச்சுப்போனேன்.
எனக்குப் பிடிச்சிருந்தது வருடு. கதை என்னன்னு
பாப்போம்.



நவீன இளைஞனான சந்தீப்(அல்லு அர்ஜூன்) தனது
திருமணம் பெற்றவர்களால் நிச்சயக்கப்பட்டதாக இருக்க
வேண்டும் என்று சொல்ல அதிர்ச்சி ஆவது அவங்க
பெற்றோர். (சுகாசினி- ஆஷிஷ் வித்யார்த்தி.
சுகாசினிa சிந்து பைரவிக்கால இளமையுடன்
இப்பவும் அழகா இருக்காங்க)

பொண்ணு பாக்கும் படலம் நடக்குது. இண்டர்நெட்சம்பந்தம்,
ப்ரோக்கர்கள் ஏதுமில்லாம நீங்களே தேடுங்கன்னு சொல்ல
அப்பா, அம்மா தேடி கொண்டு வரும் பெண்ணை
பார்க்காமலேயே மணம் முடிக்க சம்மதிக்கிறார்.
அதாவது தெலுங்கு பத்ததியில் மணமகன்,
மணமகள் இருவரும் பார்த்துக்கொள்வது
மணமேடையில் முகூர்த்த நேரத்தில் தான்.


அந்தக்காலம் போல உறவினர்கள் அனைவரையும்
அழைத்து 5 நாள் திருமணம் செய்ய வேண்டும்
என்று கட்டளையிடுகிறார் ஹீரோ. மணப்பெண்ணும்
மணமகனின் போட்டோ பார்க்காமலேயே மணமேடைக்கு
வருகிறார். கூடையில் மணப்பெண் வந்து மணமேடையில்
அமர்ந்து, ”நாதிச்சராமி” மந்திரம் சொல்லி, ஜீரகம்-வெல்லம்
வைத்து, கண்பார்த்து, கன்யாதானம் முடிந்து தாலி
கட்டும் நேரத்தில் வருகிறார் வில்லன் ஆர்யா(நம்ம
நான் கடவுள் ஆர்யாவே தான். வில்லனாக
கலக்கியிருக்கிறார்.சைக்கோ கேரக்டர் கொஞ்சம்
கலந்த கேரக்டர் இவருடையது)
மணப்பெண்ணை தூக்கிப்போய்விடுகிறார்.

மணமகளை கண்டுபிடிக்கிறாரா? தாலிகட்டும் சடங்கு
நடக்குமா இது வெள்ளித்திரையில் பார்க்கவும்.

இயக்குனர் குணசேகர் ஹீரோயின் முகத்தைக் கூட
காட்டமல் வைத்திருந்து மணமேடையில்தான்
முகத்தைக் காட்ட வைக்கிறார்.



வேலை காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டி
இருப்பதாலும், தன் மகள் இனி கிடைக்கும்
வாய்ப்பு குறைவு என்பதாலும் வேறொரு பெண்ணை
மணம் முடிக்கும் படி ஹீரோயினின் தகப்பனாக
வரும் நரேஷ்(சூப்பர் ஸ்டார் க்ருஷ்ணாவின் மூத்த
தாரத்து மகன்) சொல்ல ஹீரோ வெடிக்கும்
காட்சி ரொம்ப பிடித்திருந்தது.

”தாலி ஒன்றுதான் கட்டவில்லை. மற்ற சடங்குகள்
எல்லாம் நடந்துவிட்டது. அதானல் உங்கள்மகள்
தான் என் மனைவி, என் மனைவியை நான்
தேடிக்கொண்டு வருகிறேன்” என அல்லு அர்ஜுன்
சொல்லும் பொழுது ஒரு வயதானவர் ஜீரகர-பெல்லம்
வைக்கப்படும் காரணத்தைச் சொல்கிறார்.(இது
இந்தப்படம் பாக்கும் வரை எனக்குத் தெரியாது.
இனி எல்லோருக்கும் எடுத்துச் சொல்வேன்)

ஜீரகம்-பெல்லம் இரண்டும் சேர்ந்து ஒருவித
மேக்னட் பவர் உருவாகிறது. அதை மணமகன்,
மணமகள் ஒருவருக்கொருவர் தலையில் வைக்கும்
பொழுது(பிறப்பதற்கு சற்று முன்னரே மூடிக்கொள்ளும்
உச்சித் தலை) அதாவது ஸஹஸ்ரா சக்கரா
எனப்படும் crown chakra வில் பட்டு அந்த
காந்த சக்தியால் ஆஜ்ஞா சக்கரம்( இருபுருவத்துக்கும்
மத்தியில் அமைந்திருக்கிறது) மூலம் இருவரும்
பார்த்துக்கொண்டு கண்ணும் கண்ணும் கலந்து
இருவர் ஒருவர் ஆகிறார்கள். இந்தச் சடங்கு
முடிந்தாலே திருமணம் முடிந்ததாக அர்த்தம்
என்று பெரியவர் சொல்கிறார்.(உண்மையும் அதுதான்)

அப்புறம் ஹீரோ ஹீரோயின் இருக்கும் இடத்தைக்
கண்டுபிடித்து, வில்லனுடன் போராடி அழைத்து
வந்து, தாலிகட்டி, தலம்பராலு கொட்டி முடித்து
வில்லனுடன் சண்டை போட்டு சுபம்.


ஐந்து நாள் திருமணம் இதுதான் இந்த படத்தின்
ஹைப். ஆனால் அதை ஒரு பாட்டிலேயே
முடித்துவிட்டார்கள்.(இதற்கு இயக்குனர் சொல்லும்
காரணம் இல்லாவிட்டால் திருமண சீடி பார்க்கும்
எஃபக்ட் வந்திடும்) வழக்கமான மசாலாத்தனம்,
சினிமாத்தனம் இல்லாமல் இருந்திருந்தால்
இந்தப் படம் இன்னும் அதிகம் பேசப்பட்டிருக்கும்.

ஆனாலும் மறைந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தை
நினைவு படுத்தி இப்பொழுது ஒவ்வொருவரும்
வருடு சினிமா போல் 5 நாள் திருமணம் வேண்டும்
என்று சொல்ல வைத்த சினிமாவுக்கு பாராட்டுக்கள்
குணசேகர்.

இந்த சம்மரில் ஆந்திராவில் திருமண சீசன்.
அனைத்து மண்டபங்களிலும் ஐது ரோஜுல பெல்லி
பாட்டு இல்லாமலே இருக்காது. இன்று நடந்த
ஆந்திரா ஹோம் மினிஸ்டர் இந்திரா சபீதா ரெட்டி
அவர்களின் மகனின் திருமணம் பற்றி டீவி9
சேனலில் தொகுப்பு காட்டிய பொழுது கூட அந்தப்
பாட்டுத்தான் போட்டார்கள்.

இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக சொல்லியிருக்கலாம்.



Monday, April 05, 2010

ஹைதை ஸ்பெஷல்...ஸ்....

ஹைதரபாத் அப்படின்னு சொன்னா முத்து மணிமாலை தான்
எல்லோருக்கும் ஞாபகம் வரும். அதைத் தவிரவும் ஹைதையில்
சில ஷ்பெஷல்கள் இருக்குங்க. என்னுடைய பல பதிவுகளில்
சொல்லியிருப்பதைத் தவிர்த்து ஹைதை ஷ்பெஷல்ஷாக
இந்தப் பதிவு என்னுடைய 600ஆவது பதிவுங்கோ... :))

மும்பைக்கு அடுத்து கைநிறைய்ய வளையல்கள் அணியும்
பழக்கம் ஆந்திராவில் உண்டு. சார்மினாரில் கிடைக்காத
வளையல் வகைகளே இல்லை. மீனாகாரி, கண்ணாடி,
கல் வகைகள் என வகை வகையாக வளையல்கள். எதை விடுக்க
எதை எடுக்கன்னு தான் யோசிக்கணும்.

ஆனா ஒண்ணு முத்து மாலையோ, வளையல்
வகைகளோ வாங்க சிறந்த இடம் சார்மினார் தான்.
சிட்டியில் விற்கும் கடைகளை விட 40 சதவிகிதம்
குறைந்த விலையில் வாங்கலாம். ஏமாற்றுக்காரர்கள்
எங்கும் இருப்பாங்க. அதனால் சமயோசிதமாக
இருக்கணும். துளசி டீச்சர் பதிவுகளில் சார்மினார்
வளையல் கடைகளில் எங்க ரவுண்ட் அப் பத்தி
போஸ்ட் இருக்கு.


இந்த வகை வளையல்கள் மட்டுமல்ல போல்கி, குந்தன்
செட்டுகள் கூட சார்மினாரில் வாங்கலாம்.
போச்சம்பள்ளி பட்டு, காட்டன் புடவைகள் இங்கே பிரசித்தம்.


குண்டூரில் இருக்கும் மங்களகிரியும் காட்டனுக்கு
புகழ் பெற்ற இடம். அந்த வகையும் இங்கே வாங்கலாம்.
போச்சம்பள்ளி இணையதளத்துக்கு இங்கே.
ஹைதைக்கு வந்தா நேரடியா போய் பாத்து
வாங்கலாம்.

இங்க எவ்வளவோ ஸ்வீட் கடைகள் இருக்கு அதுல ரெண்டு
பேரு ரொம்ப பேமஸ். நெய்யுல செஞ்சு, நெய்யில முக்கி
எடுப்பாங்க அதான் அம்புட்டு விலையின்னு சொல்லும்
அளவுக்கு தரமான ஸ்வீட்ஸ் வாங்க இந்த இடத்தை விட்டா
வேற இடமே இல்லை. அடிக்கடி வாங்க கட்டுப்படி ஆகாது.
எப்பாவாச்சும் ஓகே. அதுவும் இவங்க எக்லெஸ் கேக்
சூப்பர். அப்படி என்ன கடை??

DADU'S புல்லா ரெட்டிகடையை விட டேஸ்ட் அருமை.
இங்க ஒரு முக்கியமான விஷயம் ஸ்வீட் ஸ்வீட்டா
இருப்பது போல காரம் மகா காரமா இருக்கும். பாம்பே
சாட் வாங்கி சாப்பிடும் முன் நல்லா 4 தரம் யோசிச்சுக்கோங்க.
மினி பிட்ஸா ஒரே ஒரு தடவை வாங்கி வந்து
வாய் வெந்து போச்சு.

தாதூஸ் இணைய தளத்துக்கு.



பிஸ்கெட்டுகளில் இத்தனை வகைகளான்னு வாய் பிளக்க
வைக்கும் இடம் கராச்சி. தரம், மணம், சுவை இங்க
மட்டும் தான்.


சார்மினார் போகும் வழியில் இவங்க கடை இருக்கு.
சார்மினார் போகும் போது வாங்கிக்கிடலாம்.
இணைய தளத்துக்கு இங்க.

மொகல் வகை உணவுகள் ஹைதையில் பிரசித்தம்.
அதில் இப்ப வரைக்கும் அழியாப்புகழில் இருப்பது
ஹைதரபாத் பிரியாணி. வெஜிடபிள், சிக்கன், மட்டன்
என எல்லாவகை பிரியாணியும் கிடைக்கும். ஹைதரபாத்
ஹவுஸ், அது இதுன்னு ஆயிரம் இடம் இருந்தாலும்
சுவையா இருக்கணும்னா நீங்க போக வேண்டிய
இடம் இரண்டுதான். அதிலும் த பெஸ்ட் PARADISE
BIRYANI தான். பிரியாணியோடு கிடைக்கும்
மிர்ச்சிகா சலன் இல்லாம சாப்பிடாதீங்க.அவங்களே
கொடுப்பாங்க. :))

அடுத்து RTC CROSS ROADS BAWARCHI இந்த இரண்டு
இடம் தான் சிறந்த பிரியாணி கிடைக்கும்.



ஹைதை ஷ்பெஷலில் அசைவ பிரியர்களுக்காக இது:

ஹைதை ஹலீம் என்பது இந்த உணவுக்குப்பெயர்.
ரமலான் மாதத்தில் மட்டுமே இது இங்கே
தயாரிக்கப்படுகிறது. நோன்பு துறக்க இதை சாப்பிடுவாங்க.

HALEEM WIKIPEDIA



ஹோட்டல்களை விட சர்வீஸ்டு அப்பார்ட்மெண்ட்ஸ்
ஹைதையில் நல்லா இருக்கு. இங்கே போனா பாக்கலாம். 1000 முதல் 1500
ரூபாய் பட்ஜெட்டில் பேகம் பேட் ஏரியாவில் இரண்டு
இடங்கள் எனக்குத் தெரியும். யாரும் வருவதாக இருந்தால்
மெயில் அனுப்புங்க. விவரங்கள் அனுப்பி வைக்கிறேன்.

பேகம் பஜார் பக்கம் போனால் சுடிதார் ட்ரெஸ் மெட்டீரியல்ஸ்
குறைந்த விலையில் வாங்கலாம். சார்மினார் ஏரியாவில்
லேஸ்கள், பேக்குகள் எல்லாம் எல்லாம் வாங்கலாம்.
பொறுமை, பேரம் பேசும் திறமை ஆகியவற்றுடன்
நிறைந்த பர்ஸோடு ஹைதைக்கு வந்தால் ஆனந்தமாக
ஷாப்பிங் செய்யலாம். ஷாப்பிங் செய்யாத பொழுது
சிறுது அல்ல அல்ல பெரிது வயிற்றுக்கும் ஈயலாம்.

:))))

டிஸ்கி
புகைப்படங்கள் மற்றும் இணைய தளங்கள் காதில்
புகை ஏற்படவும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை
தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வயிற்றெரிச்சல்
ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது.