Total Pageviews

Monday, October 24, 2011

மத்தாப்பு சுத்தி சுத்தி போடட்டுமா!!????

நினைக்கும்பொழுதே மனம் மகிழும் பண்டிகை தீபாவளி.
குழந்தை, பெரியவர் அனைவருக்கும் தீபாவளி ஷ்பெஷல்.
வயது ஏற ஏற அந்தந்த வயதிற்கு தகுந்த மாதிரி தீபாவளி
கொண்டாடிக்கொள்வோம் தானே...

தீபாவளி பற்றிய கொசுவத்திகள் எத்தனையோ பதிவாகி இருக்கின்றன.
சமீபகாலமாக தீபாவளி என்றதும் நினைவலைகள் இலங்கைக்கு
செல்கிறது. :))

நாங்கள் குடியிருந்த வீடு இருந்த இடம் ஹை செக்யூரிட்டி ஜோன். பக்கத்துவீட்டில்
அமைச்சர் சரத் அமுனுகம. எதிரில் ரனில் விக்ரமசிங்கே அவரின்
சகோதரி என கொஞ்சம் ப்ராப்ளமேட்டிக் ஏரியாவில் வீடு. தீபாவளியின்
போது வெடி வெடிக்க மட்டும் கொஞ்சம் பயம் தான். ரோஜா படத்தில்
மது சதுர் தேங்காய் உடைக்க போலீஸ் சூழ்ந்து கொள்ளுமே அதுமாதிரி
ஏதும் ஆகிவிடும் என்ற டென்ஷன். முன்பே அனுமதி பெறலாம் என்றாலும்
எதுக்கு வம்பு என? கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்றே நினைத்திருந்தோம்.

வெள்ளவத்தை தமிழர்கள் ஏரியா. அங்கேயும் பெட்டா பகுதியிலும்
பட்டாசு கிடைக்கும். வெள்ளவத்தையைவிட பெட்டா பகுதியில்
விலை கொஞ்சம் குறைவாக இருக்கும். தோழிகள் 4 பேர் சேர்ந்து
பெட்டா பகுதி சென்று பட்டாசு வாங்குவோம்.

இலங்கையில் இடியாப்பம், புட்டு செய்வார்கள் என்பதால் அருமையான
இடியாப்பம் மாவு வாங்கிவந்து, ரெடியாக இருக்கும் உளுந்தமாவு
(இதுவும் கடையில் கிடைக்கும்) கலந்து, வெண்ணெய், கொஞ்சமாக
புளிக்காத தயிர் எல்லாம் சேர்த்து சூப்பராக தேன்குழல் செய்துவிடுவேன்.
முள்ளுமுறுக்கு, மைசூர்பா, குலாப்ஜாமுன் வீட்டில் செய்துவிட்டு
ஒரு குஜராத்தியினர் வீட்டில் சமைக்கும் மஹராஜிடம் முன் கூட்டியே
சில ஐட்டங்கள் ஆர்டர் செய்து விடுவோம். தீபாவளி பலகாரம் ரெடி.
தீபாவளி லேகியத்திற்கு பதில் ஜிஞ்சர் பியர். :)) (பேருதான் பியர்
உண்மையில் இஞ்சி சொரசம்.)


காலையில் எழுந்து கங்கா ஸ்நானம் முடித்து ஒரு சின்ன சரக்கட்டாவது
போடலாம் என நினைப்பேன்.(முதலில் வெடிவெடிக்க வேண்டும் என்பது
அவ்வாவின் கொள்கை.) அயித்தான் வேண்டாம் ரிஸ்க் என்று
சொல்லிவிடுவார். ஆகவே விளக்குகள் ஏற்றி பிள்ளைகள் மத்தாப்பு,
கொம்புவானம் ஆகியவைகள் விடுவார்கள். அந்தப்புகையே ரொம்ப
ஜாஸ்தியாக கஷ்டப்படுத்துவது போல அக்கம் பக்கத்துக்காரர்கள்
நினைப்பார்கள். பட்டாசு புகையே புதிது போல நமக்கும் அந்தக்
கார வாசனையில் தும்மல் வர ஆரம்பிக்கும். வீட்டுக்குள் வந்து
இந்தியாவில் இருக்கும் உறவினர்களுக்கு போன் போட்டால்
பேசவே முடியாது. டமால்,டுமீல் சத்தங்களுக்கு இடையே கஷ்டப்பட்டு
வாழ்த்தை சொல்லும் அதே வேளையில் சந்தடியே இல்லாமல்
தீபாவளி கழிவதை நினைத்து ஒரு மாதிரியாக இருக்கும்.

எதுக்குமே ஒரு தீர்வு இருக்கும்ல. இந்த மாதிரி வெடி வெடிக்கத்
தடை பல இடங்களில் இருக்கும். வெள்ளவத்தையில் மட்டும்
சும்மா சூப்பராக பட்டாசு சத்தம் கேட்கும். என் தோழி அன்னபூர்ணா வீடு
வெள்ளவத்தைக்கு கொஞ்சம் அருகில். அவர் வீட்டுக்கு எதிரில்
ஒரு கால்வாய் ஓடும். தனி வீடு என்பதால் பட்டாசு வெடித்தாலும்
பிரச்சனை ஏதும் இருக்காத இடம். அமைச்சர்கள், பெரிய தலைகள்
என யாரும் அருகில் இல்லாத ஒரு சூழல்.

அதனால் முன் கூட்டியே பேசி வைத்துக்கொண்டு ஒரு கெட்டுகதர்
வைத்துக்கொள்வோம். காலையில் அவரவர் வீட்டில் தீபாவளியை
மத்தாப்பு விட்டு கொண்டாடிவிட்டு, இரவு அன்னபூர்ணா வீட்டில்
சேருவோம். பாட் லக் முறையில் ஆளுக்கு ஒரு உணவு தயார்
செய்து எடுத்து சொல்வோம். பட்டாசுகள் எடுத்து செல்வோம்.
மொத்தமாக எல்லா பட்டாசையும் பாகம் பிரித்து கொடுத்துவிடுவோம்.
அனைவரும் வந்ததும் சேர்ந்து எல்லா பிள்ளைகளுடன், பெரியவர்களும் சேர்ந்து வெடி வெடித்து சந்தோஷமாக இருக்கும்.

இரவு அனைவரும் சேர்ந்து உண்டு ஆனந்தமாக இருக்கும் தீபாவளி.
சன் டீவி, ஜெயா டீவி தெரியாது. சக்தி டீவி மட்டும் தான். அதில்
தீபாவளி சிறப்புத் திரைப்படம் மட்டும் தான். டீவி முன்னால் அமர்ந்து
பண்டிகை கொண்டாடாமல், அனைவருடன் கலந்து ஒரு இன்பமயமான
தீபாவளியாக இருந்தது. அன்னபூர்ணா ஜப்பான் கிளம்பியதும் அவ்வளவு
சுவாரசியமாக இல்லை. அவர் அங்கேயிருந்து நைரோபி போய் இப்பொழுது
தருமமிகு சென்னைக்கு வந்துவிட்டார். நாங்களும் இந்தியா வந்து கொண்டாடும்
நான்காவது தீபாவளி இது. அதுவும் சொந்த வீட்டில்.


தீபாவளிக்கு எல்லாம் தயாரா என்பதை எங்கள் ஊர் பக்கம்
“தீபாவளி வந்திருச்சா? என கேட்பார்கள். “இதோ பக்கத்து தெருல இருக்கு,
வீதி முனையில இருக்கு, தீபாவளிக்கு அன்னைக்கு வந்திரும்”
என்பது போல சொல்வார்கள்.


தீபாவளி பலகாரங்கள் ரெடி, புத்தாடை ரெடி.
(என்னென்ன பலகாரம் என்பதை தனியா போட்டோ போட்டு
நாளைய பதிவுல சொல்றேன்.)
தெருமுனையில் காத்திருக்கும் தீபத்திருநாளுக்காக வெயிட்டிங்.

:))))))))))

உங்களுக்கு தீபாவளி வந்திருச்சா???

Monday, October 17, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 17/10/11

தெலங்கானா போராட்டம் தீவிரமாகத்தொடங்கி 1 மாசத்துக்கு அப்புறம்
ஆளுங்கட்சிக்கு முழிப்பு வந்து போக்குவரத்து ஸ்ட்ரைக்கை வாபஸ்
வாங்க வெச்சிருக்காங்க. பள்ளிகள் நடத்தலைன்னா ரெஜிஸ்ட்ரேஷனை
இழக்க நேரிடும்னு பயமுறுத்தி இருக்காங்க. பள்ளிகள் வளமை போல்
இயங்கும்னு நம்பிக்கை வந்திருக்கு. நவம்பர் 5 ஆம்தேதி தெலங்கானா
பத்தி ஒரு முடிவுக்கு வருவாங்க போல இருக்கு. பாப்போம்!!!
*************************************************************
நாளிதழ் ஒன்றில் மூளை வேலை செய்வதைப்பற்றி போட்டிருந்தது.
அதில் சராசரியாக பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகளும்,
ஆண்கள் 2000 வார்த்தைகளும் உபயோகிக்கிறாங்கன்னு போட்டிருந்தது.
மகள் கொண்டுவந்து காட்டினாள். ஆண்கள் பலரும் மொளனச்சாமியா
இருக்க அவங்க மூளைதான் காரணம்னு நினைச்சுகிட்டேன்.
பொம்பளைங்க அனாவசியமா பேசுறாங்க அப்படின்னு கூட ஒரு
ஆண் புலம்பியதை முன்பு எப்பொழுதோ மகள் படிச்சிருக்காங்க போல
ஏம்மா! வொக்காபுலரியே கம்மியா இருந்தா ஆண்களுக்கு எப்படி
பேசணும்? என்ன பேசணும்னு தெரியாதுல்ல? அப்படி இருக்க
அதிகமா பேசறாங்கன்னு பெண்களைச் சொல்வது தப்பு இல்ல!!
இது கூட ஏம்மா புரிய்ய மாட்டேங்குது”!!!
அப்படின்னு கேட்க,”ஆஹா நமக்கு ஒரு வாரிசு உருவாகிடிச்சு!
ஹஸ்பண்டாலஜி பாடங்கள் எதிர்காலத்திலயும் தொடர வாய்ப்பிருக்குன்னு!”
சந்தோஷப்பட்டுகிட்டேன்.:)))))) சில விஷயங்கள் சொல்லித்தரப்படாமலேயே
பெண்கள் புரிந்து கொள்கிறார்கள்.
**************************************************************
இந்த வாட்டி ரயில்ரோக்கோவை ஒரு சூப்பரா ஹேண்டில் செஞ்சிருக்காங்க.
சாதரணமா ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ரயில்வே ஊழியர்களை
கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வெச்சு, ரயில்வே சட்டத்தை உபயோகிச்சு
14 நாள் ரிமேண்ட்ல, விஜயசாந்தி, கேசிஆர்,கவிதா, கேடிஆர்,
கோதண்டராம் எல்லாரையும் உள்ள தள்ளிட்டாங்க. பெயில்ல
வெளியில வர கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. தாங்க முடியலை
கோதண்டராமால. பொம்பளைங்களை போலீஸ் ஸ்டேஷன்ல
வெச்சிருக்காங்க, என்ன அரசு இதுன்னு? காட்டமா பேட்டி கொடுக்கிறார்.

பெண் என்பதால எந்த சலுகையும் எங்கயும் கிடைக்காது. தப்பு
செஞ்சா யாருக்கும் தண்டனை கண்டிப்பா கிடைக்கும். விஜயசாந்தி
எம்பி, பெண் என்பதால அவங்களை அரெஸ்ட் செய்யக்கூடாது
அப்படின்னா வூட்டுல சும்மா உக்காந்திருக்கணும். தர்ணா செய்ய
வரக்கூடாது.

ஆனா சும்மா சொல்லக்கூடாது. குண்டாந்தடியா இருந்த
போலீஸ் அக்காக்கள் ரயில் பட்டியில உக்காந்து தர்ணா செஞ்ச
பெண்களை குண்டு கட்டாத்தூக்கி அப்புறப் படுத்தி வண்டியில
ஏத்தின காட்சியை பாக்கணும். ஹாட்ஸ் ஆஃப் டு வுமன் போலீஸ்.
***************************************************************

பசங்க ரொம்ப குஷியா இருக்காங்க. இந்த வார விடுமுறையின் போது
அவங்க மாமா ஊர்லேர்ந்து வர்றாப்ல. அதனால குஷி. தீபாவளிக்கு
புதுகைக்கு போகும் முன் தம்பி இங்க வந்திட்டு போறாப்ல. இரண்டு
வருஷம் கழிச்சு தம்பி ஹைதை வருகிறார். 10 நாள் முன்னாடி
தம்பி போன் போட்டு “அக்கா ஏதாவது வாங்கி வரணும்னா லிஸ்ட்
அனுப்பு. முஸ்தபா மட்டும்தான் போக நேரம் கிடைக்கும்னு சொல்ல!”
அம்ருதம்மா கொடுத்த லிஸ்ட்.

2 செயின், 4வளையல், 1 ஒட்டியாணம் (தங்கத்துலதான்) முஸ்தபாவுல
கோல்ட் ஷாப்பும் இருக்கு மாமா!!

தம்பி,” நான் ஊருக்கே வர்றல்ல!!”...........
*******************************************************************
தாத்தாவுக்கும் பேத்திக்கும் நடக்கும் சம்பாஷணைகள் தாங்கமுடியவில்லை.
அப்பாவுக்கு பிடித்த பவுடர் இங்கேயிருந்து தம்பியிடம் அனுப்பச்சொன்னார்
அப்பா. அதற்கான காசு அம்ருதாவிடமிருந்து வாங்கி கொள்ளச் சொன்னார்.
போன் போட்டு தாத்தா பேத்தியிடம் சொல்ல,”நான் எதுக்குத் தாத்தா
காசு கொடுக்கணும். உங்க பொண்ணாச்சு நீங்க ஆச்சு!!””

ரவா உருண்டை பொடி அனுப்பச் சொல்லுங்க அம்மம்மாவை,
அதுக்கு வேணாம் காசு தர்றேன். எப்படி இருக்கு??!!

****************************************************************
zindagi na milege dobara தியேட்டரில் பார்க்க வேண்டும் என
நினைத்திருந்த படம். மிஸ்ஸாகிவிட்டது. சனி, ஞாயிறு இரண்டு
நாளும் இந்தப் படம் ஸ்டார் ப்ளஸ்ஸில் வந்தது. நல்லாத்தான் இருக்கு.
ரொம்ப நாளைக்கப்புறம் பாசிட்டிவான படம் என்று கூட சொல்லலாம்.


ஆனாலும் சில நெருடல்கள் ஆங்கிலப்படங்கள் தோற்றுப்போகும் அளவுக்கு
லிப்லாக், சீன்கள் ஆகியவற்றை குறைத்திருக்கலாம். பாலிவுட் எப்பொழுதுமே
இந்த மாதிரி விவகாரங்களுக்கு அதீதம். தரம் ஹாலிவுட் போல் இருக்கிறதோ
இல்லையோ இந்த மாதிரி விஷயங்கள் சில சமயம் ஹாலிவுட்டே
தோற்றுப்போய்விடும் போல இருக்கும். இந்த அழுக்கை யார் கழுவிவிட்டு
போகப்போகிறதோ!!
*********************************************************************

Friday, October 14, 2011

BUDDA HOGA TERA BAAP

அமிதாபின் அட்டகாசம் தாங்கவில்லை. வயதானாலும் இன்னும் அழகாக
இருக்கேன்னு நீலாம்பரி ரஜினிகாந்துக்கு சொல்லும் வசனம் அமிதாப்புக்கு
பக்காவா சூட்டாகுது. இப்பொழுதும் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள்,
கோன் பனேகாவில் கலக்குவதுன்னு ஐ ஆல்வேஸ் லைக் ஹிம்.

BUDDA HOGA TERA BAAPA படம் வெளியான போது பாக்கவேண்டுமென
நினைத்திருந்தேன். தியேட்டருக்கும் போகும் சூழல் இல்லை. செம பிசி.
மிஸ் செய்து விட்டேனே என்று நினைத்தேன்.

ஸ்டார் ப்ளஸ்ஸில் இந்தப் படம் போட்டார்கள். ரசித்தேன்.
தெலுங்கு டிரைக்டர் பூரி ஜெகன்னாத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது
இந்தப்படம். அதனாலேயே ஹிந்தியில் சான்ஸ் கிடைக்காமல்
தெலுங்கில் கவர்ச்சி பாமாக இருக்கும் பஞ்சாபி பொண்ணு சார்மி,
வில்லன் சுப்பிரமணியம் என தெரிந்த தெலுங்கு முகங்கள்.

அந்தக்கால ட்ரையின் டிக்கெட்டில் எழுதிவிடக்கூடிய சின்ன வரிக் கதைதான்.
ஆனால் படமாக்கியதை விட அமிதாப்பின் நடிப்பிற்காக பார்க்கலாம்.
அசால்ட்டாக அலட்டிக்கொள்ளாமல் சூப்பர் அமிதாப். ஐட்டம் சாங்க்
ஒன்று ஆடுவார் பாருங்கள். சான்சே இல்லை. மனதில் உறுதி வேண்டும்
படத்தில் ”கெட்ட வார்த்தையில் வெய்யலாமான்னு வருதுன்னு” ஒரு
டயலாக் வரும். அதுபோல செல்லமாக வெய்யலாம்மான்னு தோணுது
அமிதாப்பை. அப்படி பார்த்தா படத்தோட தலைப்பே ஒரு விதத்தில்
திட்டுவது போலத்தான். இப்படி யார்கிட்டயாவது சொன்னால் தெரியும்!!

அமிதாப்பின் பாடல்களையே ரீமிக்ஸ் மெட்லி ஆக்கி அமிதாப் ஆடும்
ஐட்டம் பாடல். யாராவது 69 வயது கிழவன் என்று சொல்ல முடியுமா!!



அமிதாப்பின் நடிப்போடு இந்தப்படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம்.
சோனி சூத். பாவம் வில்லனாகவே பல படங்களில் அடிவாங்கிக்கொண்டும்
ஆக்ரோஷமாக கத்திக்கொண்டும் இருந்த இவரை போலீஸ் இன்ஸ்பெக்டராக்கி
இருக்கிறார்கள். கம்பீரமான உடையில் கம்பீரமாக தெரிகிறார்.
ரொமான்ஸும் நன்றாகவே இருக்கிறது. சீக்கிரமே ஹீரோவாக வாய்ப்புக்கள்
இருக்கு.

இந்தப் படத்தை ANGRY MAN ரோல்களில் நடித்த அமிதாப்பிற்கு காணிக்கையாக்கியிருக்கிறார்
இயக்குனர் பூரி. தப்பே இல்லை. அமிதாப் ரசிகர்களுக்கு ஃபுல் பைசா வசூல்.
டீவியில் பார்த்ததால் அமிதாப் பர்த்டே ட்ரீட் கொடுத்தாக நினைத்துக்கொண்டேன்.
அக்டோபர் 11 அமிதாப்பின் பிறந்தநாள்.

லேட்டஸ்டாக தனிஷ்க் விளம்பரங்களில் அமிதாப், ஜெயா ஜோடி
கலக்குவது ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. நெக்லஸ் வாங்கி வரும்
அமிதாப்.


மனைவிக்கு தீபாவளி பரிசுவாங்கி பல்பு வாங்கும் அம்தாப்.
லவ்லி...


இந்த வயதிலும் துள்ளும் இளைமையுடன் கலக்கும் அமிதாப்
என்றும் இதே போல வைத்திருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.


Thursday, October 13, 2011

தாழம்பூவே வாசம் வீசு!!!!

திரைப்படப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். மனதிற்கு
இதமான பாடல்களைக் கேட்கும் பொழுது தியானம் செய்யும் எஃபக்ட்
நிச்சயம் இருக்கும். பாடல் பித்து பிடித்த எனக்கு கண்ணகி டீச்சர்
தமிழாசிரியையாக வாய்த்தார். +1, +2 அவர்தான் தமிழாசிரியர்.
சந்தம், இதெல்லாம் அழகாக திரைப்படப்பாட்ல்களுடன் புரிய வைத்தார்.

சங்கப் பாடல்கள் படித்து எளியாருக்கும் சென்று சேரும் வகையில்
அந்த தாக்கத்தில் பாடல்களை வடித்தனர் கவிஞர்கள். பாடல் பிறந்த
கதை என ஒவ்வொரு கவிஞர்களும் புத்தகமே போடலாம். அந்தப்
பாடல்களை கேட்ட பொழுது அந்த கவிஞனின் வார்த்தையில் இருந்த
பாவம் நமக்குள் இறங்கும்.



நிலா, தாழம்பூ, முத்து, இப்படி எதையாவது ஒன்றைக் கொண்டு
பாடல்கள் அமைத்தார்கள். காதலை ஒரு தெய்வீக நிலைக்கு கொண்டு
சென்றது இப்படிப்பட்ட பாடல்கள் தான் என்பது என் எண்ணம்.

உறவை வளர்க்கும் வகையில் எத்தனையோ பாடல்கள்.
மாமனுக்கும் மருமகபிள்ளைகளுக்கும் இருக்கும் அந்த உறவை
பாடல்கள் உயிர்க்கொடுத்த போல் இருக்கும்.





சோகத்துக்கும் பாடல், கொண்டாட்டத்திற்கும் பாடல் என
இப்படிப்பட்ட பாடல்களை வகைவகுத்து அப்பொழுதைய ரேடியோவில்
கேட்பதே ஒரு இனிய அனுபவம்.




மெதுவா மெதுவா ஒரு காதல்பாட்டு... கேட்கும்பொழுதே
உள்ளம் துள்ளுமே!!

அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு..
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் என்னோடு... என்ன வரிகள்!!!!



தன் வாழ்க்கையின் சம்பவத்தோடு இணைந்து போகும் என
சாதாரண மக்கள் நினைக்கும் அளவுக்கு பாடல்கள் இருக்கும். இந்தப்
பாடலுக்கு உருகாதவர் யாராவது இருந்தால் அவர் கல்நெஞ்சுக்காரராக்த்தான்
இருக்கும்.



ஆனால் இப்பொழுது பாடல்கள் எனும் பெயரில் வெளிவருவது என்ன??
ஒரு சில பாடல்களைத் தவிர எதுவும் மனதில் நிற்பதே இல்லை.
பாடல்களுக்காகவே சக்கைப்போடு போட்ட படங்கள் இப்போது இருக்கா?
என்ன வார்த்தைகள் இருக்கிறது, அதன் அர்த்தம் என்ன? பாவம் என்ன
என புரியாத ஒரு பாடல், அஷ்டகோண்ல் அங்க நடனம் என தரமிழந்து
இருக்கிறது. இதைத்தான் இன்றைய குழந்தைகள் கேட்கிறார்கள். அவர்கள்
மனதில் விஷவிதை விழத்தான் இப்போதைய பாடல்கள் உதவும்.

பாட்டிக்கும் பேத்திக்குமான உறவு... எப்படிபட்டது?
தாயா... மகளா?? மகளே தாயா? என் அம்மம்மாவுக்கும் எனக்குமான
உறவை கண்முன் நிறுத்தும் பாடல் இது.


இன்றைய இசையமைப்பாளர்கள்
இப்படிப்பட்ட பாடல்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று
மக்கள் மீது குற்றம் சாட்ட முடியாது. தப்பி வரும் நல்ல பாடல்களைத்தான்
ஹிட்டாக்குகிறார்கள். ரசிகர்கள் மாறவில்லை. மாற்றப்பார்க்கிறார்கள்.
வேண்டாமே இந்த விபரீதம்!! மனதை வருடும் மென்மையான பாடல்கள்
என்பது போய் இப்பொழுதைய பாடல்கள் மனதை நெருடும் பாடல்களானதுதான்
சோகம். இப்பொழுது வரும் பாடல்கள் இன்னும் 10 வருடங்கள் கழித்து
திரும்ப யாரும் கேட்க மாட்டார்கள். என்றும் ஒலிக்கப்போவது அன்றைய
மெலடிக்கள்தான். சத்தியமான உண்மை இது.

இன்றைய கிளாசிக் பாடல்கள் இந்தப் பாட்டுக்கு முன்னால் வெறும் தூசு
என்பது உங்களுக்கும் ஐயம் ஏதும் இருக்காது.



இனிதான மனம் மயக்கும் இதமான பாடல்கள் வரவேண்டு என
பிரார்த்தனை செய்யும் ஒரு இசை விரும்பி.


Wednesday, October 12, 2011

ஆஷிஷ் பர்த்டேக்கு எங்க போனோம்??!!!

ஆஷிஷுக்கு பிடித்த சாக்லேட் ட்ரஃபிள் கேக் ஆர்டர் செய்திருந்தோம்.
மாலை 6 மணிக்கு கேக் வெட்டி, ஊட்டிய பிறகு கோவிலுக்கு அழைத்துச்
சென்று சுவாமி தரிசனம் செய்தோம். டின்னர் யாருக்கு பிறந்தநாளோ
அவர்கள் சாய்ஸ் தான்.


பெருமைக்காக சொல்லவில்லை ஆஷிஷ் எப்பொழுதும் டிஃபரண்ட் ஸ்டைல்
ரெஸ்டாரண்டை தேடி கண்டுபிடித்து வைத்திருப்பான். இந்த முறை அவன்
போக விரும்பியது ஓரிஸ் பஞ்சாரா. பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும்
ohris ஹோட்டலுக்கு. பஷிர்பாக், நெக்லஸ்ரோட் என இந்த ரெஸ்டாரண்ட்
இருக்கும் இடம் அமைப்பு வித்தியாசமாகவே இருக்கும். பாலிவுட் ஸ்டைல்,
ஹோட்டல் பற்றி கூட ஒரு முறை சொல்லியிருந்தேன்.


ஓரிஸ் பஞ்சாராவில் ஒரு தளத்தில் ஒரு வகை உணவு. க்ரவுண்ட் ஃப்ளோரில்
சாட். முதல் தளத்தில் வட இந்திய உணவு. இரண்டாம் தளத்தில் சைனீஸ்.
ஆஷிஷ் போக விரும்பியது 3 & 4 ஆம் தளத்தில் இருக்கும் உணவகத்துக்கு.
சரி போவோம் என டேபிள் புக் செய்தேன். அன்று வெள்ளிக்கிழமைதான். ஆனாலும் இருக்கட்டும் என டேபிள் புக் செய்தேன். செம கூட்டம்.
சர்வர்கள் காட்டிலாகா போலீஸ் மாதிரி உடையணிந்திருந்தனர்.


கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் செரங்கட்டி காடுகள் போல ஒரு செட்டப்.
அங்கே கிடைக்கும் உணவோ பெஷாவரி, லக்னோவி & வட இந்திய வகை. எப்படி
கலக்கலா இருக்குல்ல?? அதுதான் ஆஷிஷின் கண்டுபிடிப்பு. குண்டன்
எங்கேயிருந்துதான் இன்பர்மேஷன் கலெக்ட் செய்வானோ. கார்களுக்கு அடுத்து
ஐயா ஆராய்ச்சி செய்வது ஹோட்டல்கள் பற்றிதான்.



அன்னைக்கு எப்பவும் ஆர்டர் செய்யும் சப்ஜீக்கள் இல்லாமல் வித்தியாசமா
ஆர்டர் செய்யணும்னு முடிவு செஞ்சிருந்தோம்.

திரங்கா பனீர் டிக்கான்னு ஒண்ணு ஆர்டர் செஞ்சோம். செம ருசி.


கோவா, புதினா சட்னி & குங்குமப்பூ சேர்த்து 3 கலர்ல பனீர் டிக்கா.

மெயின் கோர்ஸுக்கு பாலக் கோஃப்தா & லெஹான் கா மேலா எனும்
மிக்ஸ்ட் வெஜிடபிள் சப்ஜி.

இண்டியன் ப்ரட் வகைகளில் ஆஷிஷ் ஆர்டர் செய்திருந்தது chopped paratha.
பராத்தாவை பிச்சி நெய்யில் பொறிச்சு சும்மா மொறு மொறுன்னு இருந்துச்சு.
அம்ருதம்மா லச்சேதார் பராத்தா. நான் ஸ்டஃப்டு குல்சாவும் அயித்தான்
புதினா பராத்தாவும் ஆர்டர் செய்தோம். உணவு டேஸ்டோ டேஸ்ட்.
ஓரிஸில் சாப்பிட்டால் உணவின் தரம் எப்படி இருக்கும்னு சொல்லவே
வேண்டாம்.


டெசர்ட் எதுவும் வேணாம்னு முடிவு செஞ்சிட்டாரு ஆஷிஷ். நானும்
அம்ருதாவும் லஸ்ஸி குடிச்சோம். அவ்வளவுதான். பில் கொடுக்கும்
முன் பான் ட்ரிங்குன்னு ஒண்ணு குட்டி கிளாஸ்ல கொடுத்தாங்க. பாங்கா
இருக்குமோன்னு பயந்தேன். பானை கரைச்சு குடிச்சா எப்படி இருக்குமோ
அப்படி இருந்துச்சு. டேஸ்டும் நல்லாவே இருந்துச்சு.

எங்க 4 பேருக்கும் சேர்த்து வரியோட 1200 தான் பில். ஓரிஸில்
சாப்பிட்டால் வயிற்றுக்கும் பெஸ்ட், பர்ஸுக்கு பெஸ்ட்.

டைம்ஸ் ஃபுட் காண்டெஸ்டில் இந்த ஹோட்டலுக்கு விருது
கிடைச்சிருக்கு. இந்த ஹோட்டலின் வலைத்தள முகவரி




6 வித்தியாசமென்ன அதுக்குமேலயும் சொல்லலாம் அமைதிச்சாரல்!!!

புதுகைக்கு போயிட்டு வந்தே எங்க ஊரு ரொம்ப மாறிப்போச்சுன்னு
புலம்பும் படியா மாறியிருக்கு ஊரு. மும்பை மாற்றம் கேக்கணுமா?!!!
வசாய். மேற்கு ரயில்வே பகுதி. இங்கேயிருந்துதான் சர்ச்கேட்டுக்கு
என் பயணம் தினம் தினம்.

வசாய் ஷ்டேஷனில் இரவு இறங்கியதும் மார்க்கெட்டில் காய்கறி
வாங்கிக்கொண்டு போவேன். பஸ்ஸ்டாண்ட் ஷ்டேஷன் கிட்ட
கிட்ட இருக்கும். பஸ்ஸ்டாண்டில் இருந்து திரும்பும் முனையில்
காய்கறி. இப்ப அதைக்காணவே காணோம். காய்கறி மார்க்கெட்
இருந்த இடத்தில் பெரிய்ய பெரிய கடைகள் வந்திருக்கு.

அந்தேரியில் பானேரி என்று புடவைக்கடை உண்டு. எனக்கு மிகவும்
பிடித்த கடை. அங்கேதான் புடவை எடுப்பேன். என் கல்யாணத்திற்கு
மாமா அங்கேயிருந்துதான் புடவை வாங்கிக்கொடுத்தார். அங்கேயே
ஃபால்ஸ் & பீக்கோ ஃப்ரீயாக செய்து கொடுத்துவிடுவார்கள். மற்றபடி
சுடிதார் மெட்டீரியல்ஸுக்கு க்ரஃபட் மார்க்கெட் சென்று ஹோல்சேல்
விலையில் வாங்கி வருவேன். ஃபேஷன் ஸ்டீரீட்டும் செல்வதுண்டு.
தாதர் ஷ்டேஷன் அருகில், போரிவலி ஷ்டேஷன் அருகில் உள்ள
மார்க்கெட்டுகளிலும் பர்ச்சேஸ் செய்ததுண்டு. இங்கெல்லாம் விலை
வசாய் கடைகளை விட குறைவாக இருக்கும்.

ஆனா இப்போ வசாயிலேயே ஹோல் சேல் கடைகள் வந்துவிட்டன.
முன்பெல்லாம் தாதரில் வாங்கும் விலைக்கு இப்பொழுது வசாயிலேயே
வாங்கலாம். அம்ருதாவுக்கு 120 ரூவாய்க்கு டீஷர்ட் வாங்கினே.
நானிருந்த வசாய்தானா என நானே குழம்பும் அளவுக்கு இருக்கிறது
இன்றைய வசாய். ஷ்டேஷனை விட்டு வெளியே வருபவர்கள் நடந்து
செல்ல விரும்பினால் ஸ்கை வாக்கர்ஸ் இருக்கிறது. ஆட்டோக்கள்
ஒன் வே.


ஸ்டேஷனிலிருந்து நடந்துதான் வீட்டுக்குச் செல்வேன். பழைய வீட்டை
விற்றுவிட்டு மாமா புது வீடு வாங்கியிருக்கிறார். அது இன்னமும்
அருகில் தான். பழைய வீட்டுக்குச் செல்லும் பாதையில் என்னை
இறக்கிவிட்டால் தொலைந்து போய்விடுவேன் என்றே நினைக்கிறேன்.
அதே வசாயில் 3 வருடங்கள் வாழ்ந்து பயணப்பட்ட எனக்கு அயித்தான்
வழிகாட்டும் நிலமை!! ஹலோ நீங்க முன்னால அங்கே இருந்தீங்க. நாங்க
அதுக்கப்புறம் வசாய்க்கு நிறைய்ய வாட்டி வந்திருக்கோம். ரீஜண்ட் விசிட்டர்
நாங்க. அப்படின்னு அயித்தான் டயலாக் அடிக்கிறார். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(மும்பைக்கு அலுவல் விஷயமாக போகும் பொழுது மாமாவை போய்
பார்ப்பது அயித்தான் வழக்கம்.)

வசாயே இம்புட்டு மாறியிருக்குன்னா மத்த இடங்களைச் சொல்லணுமா?
வசாயில் லோக்கல் ட்ரையினில் ஏற முன்பு 3 ஆவது ப்ளாட்பாரத்தில்
ட்ரையின் வரும். அந்த ட்ரையின் அல்லது பேசஞ்சர்ஸ், வல்சாட்
எக்ஸ்பரஸ் அந்த ப்ளாட் பாரத்தில் வரும். இப்பொழுது வசாய்ரோட்
ஷ்டேஷனே மாறிப்போச்சே!!! ப்ளாட்பார்ம் பெருசாக்கியிருக்காங்க.
முதல் ப்ளாட்பாரத்தை ஆனந்த்நகர் வரை எக்ஸ்டண்ட் செஞ்சு, அங்க
லோக்கல் வருது.2& 3 ப்ளாட்பாரத்தில் விரார்லேர்ந்து சர்ச்கேட் போகும்
ட்ரையினும் வருது. வசாய் ஷ்டேஷனே புதுசா இருக்காப்ல இருக்கு!!!

இது சர்ச்கேட் ஷ்டேஷன்:

வசாயே இப்படின்னா சர்ச்கேட் எப்படி இருக்கும்னு யோசிச்சுகிட்டே
இருந்தேன். சர்ச்கேட் ஷ்டேஷனை பாக்க ப்ரமிப்பா இருக்கு!! சும்மா
பளபளான்னு இருக்கு. முன்பெல்லாம் வடாபாவ், பேல் வாங்கணும்னா
சர்ச்கேட் சப்வேவுக்கு எதிரில் இருக்கும். ஆனா இப்ப ஷ்டேஷன்
உள்ளயே (டிக்கட் கவுண்டருக்கு எதிரில்) கேண்டின் வெச்சிருக்காங்க.
அம்ருதம்மா வடாபாவ் கேட்டப்ப அங்கேயிருந்துதான் வாங்கினோம்.
நான் ஷாப்பிங் செஞ்ச கடைகள் சப்வேயில இப்ப குறைவா இருக்கு!!
ஆனா அழகா இருக்கு. போலீஸ் பாதுகாப்பு, ஸ்கேனிங்னு சூப்பரா
இருக்கு. சர்ச்கேட்டோட கம்பேர் செஞ்சா வீடி ஷ்டேஷன் வேஸ்ட்.

என்னுடைய 4ஆவது ப்ளாட்பாரத்தின் போட்டோ. இங்கேயிருந்துதான்
நான் விரார் லோக்கல் ட்ரையின் பிடிப்பேன். டேஞ்சரா சிகப்பு கலர்ல
இருந்த லோக்கல் ட்ரையின் கலரைப்பாருங்க இப்ப!!! ம்ம்ம்ம்ம்

தாதர் ஷ்டேஷன் பக்கத்துல இருந்த கடைகள் அந்த இடங்கள் கூட
ரொம்ப மாற்றம் வந்திருக்கு. என்னவோ மொதோ வாட்டி
மும்பை போயிட்டு வந்தா மாதிரி ஒரு ஃபீலிங்ஸ் :((
ஆனா உண்மையைச் சொல்லணும்னா இந்த முறைதான்
திருமணத்திற்கு அப்புறமான என்னுடைய மும்பை விசிட்டில்
நிதானமா ஊர் சுற்றி இருக்கேன்னு சொல்லலாம். 6 வருஷத்துக்கு
முன்னால கூட பசங்களை அழைச்சுகிட்டு ஒரு ரவுண்ட் போய்
வந்தேன். அப்ப இவ்வளவு மாற்றம் இல்ல.

இன்னொரு முக்கியமான புலம்பல் இருக்கு. இத்துப்போன
லோக்கல் ட்ரையின்லதான் பயணம் செஞ்சிருக்கேன். இப்ப
லோக்கல் ட்ரையினே தில்லி மெட்ரோ மாதிரி இருக்கு. உள்ள
ஏசி இல்ல. மத்தபடி சும்ம பளபளான்னுல்ல மின்னுது!!!!
ஃபட்ஸ்ட்கிளாஸ்ல போனோம். செகண்ட் க்ளாசும் ஒண்ணும்
குறைவில்ல. முன்பே சர்ச்கேட்டிலிருந்து விரார்க்கு சில ட்ரையின்கள்
தான் 12 பெட்டிகள் கொண்டா பாரா டப்பா. ஆனா இப்ப எல்லாமே
பாரா டப்பாதான். சில 15 டப்பாக்கள் கொண்ட ட்ரையினும் போகுது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். கூட்டமும் கூடியிருக்கு. ஞாயிறு அன்று
வசாயில் ட்ரையின் பிடித்தபொழுது உட்கார இடமில்லை ஃபர்ஸ்ட்கிளாஸில்.
2 ஸ்டேஷன் போனதும் எனக்கும் அம்ருதாவுக்கு சீட் கிடைத்தது.
போரிவலியில் அயித்தானுக்கு சீட் கிடைத்தது. தாதர் தாண்டியதும்
கொஞ்சம் மக்கள்தான் இருந்தார்கள். அம்ருதாவுக்கு ஆச்சரியம்.
சர்ச்கேட் சென்றடைந்த பொழுது நாங்கள் மூவர் மட்டும்தான் பொட்டியில்.
வான்கடே ஷ்டேஷன் பார்த்தது, சர்னி ரோடிலிருந்து ஷ்டேஷனுக்கு
பக்கத்திலேயே ரோட் வர ஆச்சரியமாக பார்த்தாள்.

எங்க கையில குத்திடுமோன்னு இருக்கும் லொடலொட தகர
வண்டியில பயணம் செஞ்ச எனக்கு சும்மா டாலடிக்கும் ட்ரையினைப்
பாத்து பொறாமையா இருக்கு!!

தில்லி மெட்ரோ ரயிலில் அறிவிப்பது போல வரப்போகும் ஷ்டேஷன் பற்றி
அறிவிப்பு வருது. இந்த மாதிரி டிஸ்ப்ளேவும் வருது.

வில்லே பார்லே ஷ்டேஷனுக்கு அந்தேரி ஷ்டேஷனுக்கும் நடுவில் இருக்கும்
பார்லே ஃபாக்டரியை மகளுக்கு காட்டினேன். காற்றில் கலந்து வந்த
பார்லே பிஸ்கட் வாசத்தை ரசித்தாள். அந்தேரி ஷ்டேஷன் வந்த பொழுது
இந்த இடத்தில் தாத்தா வசித்ததால் அவர் அந்தேரி தாத்தா என நாமகரணம்
பெற்றார் என பல கொசுவத்திகள் சுற்றிக்கொண்டே வந்தோம்.

சர்ச்கேட் ஷ்டேஷனை அடைந்த பொழுது எங்கள் கம்பார்ட்மெண்டில்
நாங்கள் மூவர் மட்டும்தான். செம குஷி.காலியாகத்தானேம்மா இருக்கு
என்றவளிடம்,”தாயே! நீங்க ஞாயிற்றுக்கிழமை இரவு 8மணிக்கு
சர்ச்கேட் ஷ்டேஷன் சேர்ந்திருக்கீங்க. இதுவே மற்ற நாளாக இருந்தால்
இறங்ககூட முடியாமல் தபதபவென ஓடிவந்து ஏறுவாங்கன்னு” சொன்னதும்
அந்த லோக்கல் ட்ரையின் முன்னே போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டாங்க.

போட்டோ எடுத்துகிட்டு வடாபாவ் வாங்கிக்கிட்டு மனமில்லாமல் மும்பைக்கு
பை சொல்லி ஊருக்கு கிளம்பினோம்.

ரொம்பத்தான் மாறிப்போச்சு மும்பை!!!

Tuesday, October 11, 2011

பேரு வாயில நுழையாட்டி என்ன??!!! :))

மஹாலட்சுமி கோவில் தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் இடங்களில்
அழகா பந்தல் அமைச்சு அதில் ஃபேன் எல்லாம் வெச்சிருந்தாங்கன்னு
சொன்னேன். இதோ படம்.


நம்ம ஊர்ல பூ கட்டுவது ஒரு அழகுன்னா, மும்பையில ஒரு ரக.
இதோ அழகழகா கட்டி வெச்சிருக்காங்க பாருங்க.



சிறுதிண்டிகளுக்கு மும்பைதான் பெஸ்ட். என் ஆல்டைம் ஃபேவரீட்
வடாபாவ். சேவ் பூரி பிடிக்கும் அதைவிட தஹிபூரி. பேல் கொஞ்சம்
சரியாக கலக்காவிட்டால் காரபேல் ஆகி நம் வாய் பணால்
ஆகிவிடும். ஜுஹூ பீச்சில் சுடச்சுட பாவ் பாஜி சாப்பிடுவது ஆனந்தம்.
கோல்கப்பா எனப்படும் பானிப்பூரி வீட்டில் செய்தால் பிடிக்கும்.
ஆலு பேட்டீஸ், சமோசா ரகடா இவைகள்தான் எனக்குத் தெரியும்.
ஊருக்கு போனதிலிருந்து பெரிய மாமாவின் சின்ன மகள் “ஒதினா
ஆப்.... கானா ஹி சாஹியே!” என்று சொல்லிக்கொண்டிருந்த பண்டத்தின்
பெயர் என் காதில் சரியாக விழவே இல்லை. காதில் விழுந்தால்தானே
மண்டைக்குள் செல்லும்.

மாமாவின் சின்ன மகள் பிறந்த 9ஆவது மாதத்தில் என் திருமணம்.
மேடம் இப்போ +2 படிக்கறாங்க. கைக்குழந்தையாக தூக்கி கொஞ்சிக்
கொண்டிருந்த என் பாப்ஸ் என்னை டூவீலரில் உட்கார வைத்து
பர்ச்சேசிங்கிற்கு அழைத்துச் சென்றாள். பேரம் பேசுவது
இவளிடம் தான் கற்கவேண்டும். நாங்களும் பேசுவோம். கொஞ்சம்
இதமாக இருக்கும். மேடம் அடித்து பேசி வாங்கிவிடுவாள்.
அம்ருதாவுக்கு ஜெக்கின்ஸ் வாங்கினேன். மேடமின் பேரத்தால்
200ரூபாயில் முடிந்துவிட்டது!!

சசியும் பெரியவளாகிவிட்டாள். டாக்டரம்மா இப்பொழுது பிசி. இந்த பாப்ஸ் +2.இந்த முறை என் பயணம் ஏதோ சகோதரிகளுடன் அளவளாவிய ஒரு இனிதாக
மனதில் பதிந்துவிட்டது. உண்மையில் எனக்கு உடன் பிறந்த
சகோதரி கிடையாது. தம்பி மட்டும்தான். இந்த முறை சசியும்,
வர்ஷாவும் அந்தக்குறை நீங்கியது போல் நடந்து கொண்டார்கள்.
சரி மேட்டருக்கு வருவோம்.

வர்ஷா சொல்லிக்கொண்டிருந்த பண்டம் தபேலி. (Dabeli)
த்ரீ இடியட்ஸ் படத்தில் கரீனா சொல்வது போல இந்த குஜராத்தி
ஐட்டங்கள் இப்படித்தான் கொஞ்சம் கரடு முரடா இருக்கும் போல.
ஆனா தபேலி சாப்பிட்ட பொழுது என் உச்சி மண்டையில சுர்ருன்னது!!

அதென்ன தபேலின்னு சொல்லி வயிற்றெரிச்சலைக்கொட்டிக்காட்டா
தப்பாச்சே!


தபேலி அப்படின்னா அமுக்கியதுன்னு குஜராத்தியில் அர்த்தம்.
கிட்டத்தட்ட நம்ம பர்கர் மாதிரி இது. வேகவைத்த உருளை மசியலுடன்
தபேலி மசாலா சேர்த்து அதை பர்கர் பன்னின் நடுவில் வைத்து,
நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நெய் ஊற்றி தவாவில் சுட்டெடுத்து கொடுப்பார்கள்.
அதோடு ஒரு சாஸ் + புதினா சட்னி கொடுப்பார்கள். புதினா சட்னி +
சாஸ் மிக்ஸ் செய்து தொட்டு சாப்பிட்டால் உச்சி மண்டையில் சுர்ருன்னு
ஏறும். அந்த சட்னி சாஸ் தான் ருசியைக்கூட்டும். தபேலி மசாலா
ப்ளண்ட்டாக இருக்கு.


தபேலி எங்கே எப்படி ஆரம்பிக்கப்பட்டதுன்னு பாக்கலாம்.
கட்ச் பகுதியில் Keshavji Gabha Chudasama alias Kesha Malam,
அப்படிங்கறவர் கண்டுபிடிச்சதுதான் இந்த உணவு.
ஆரம்பிச்சப்போ 1 அணா 6 பைசாவுக்கு வித்தாராம். (1960ல)
இப்போ 8 ரூபாய். வடா பாவுக்கு போட்டியா இதுவும் ருசிக்கப்படுது.
கட்ச்ல இவங்க கடை இன்னமும் இருக்காம். கட்சி பகுதியில்
பிரபலமானதால கச்சி தபேலின்னும் சொல்வாங்களாம்.

இதைத்தான் என் மாமன் மகள் டேஸ்ட் செய்யச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஆஹா நிஜமாவே நல்ல ருசி. தேசி பர்கர் என்று கூட இதற்கு
பெயர் உண்டாம். Mumbai, Pune, Delhi, Nagpur, Aurangabad, Nizamabad, Nasik, Raipur, Bilaspur, Jabalpur, Indore, Bhopal, Udaipur, Jaipur,
இங்கெல்லாம் கூட தபேலி கிடைக்குதாம்.


எனக்கு ரொம்ப ஃபேவரீட்டான வடாபாவ் அம்ருதாவுக்கு
ரொம்பவே பிடித்துவிட்டது. ஊருக்கு கிளம்பும் அன்று அத்தை
சப்பாத்தி சப்ஜி செய்து கொடுத்திருந்தாலும் சர்ச்கேட் ஷ்டேஷனில்
வடாபாவும் வாங்கிக்கொண்டாள்!! ஹைதையிலும் கிடைக்குதும்மா,
ஆனா இந்த டேஸ்ட் வராதுல்ல!! அண்ணா ஊருக்கு வந்ததும்
வடாபாவ், தபேலி சாப்பிட்டதை சொல்லி அவன் காதில்
புகை விட வைத்தாயிற்று

:)))

Monday, October 10, 2011

அப்பா அப்பா தொப்ப கணேசா.....

இந்தத் தெலங்கானா பிரச்சனையால தினமும் 4 மணிநேரம் கரண்ட் கட்.
காலையில் 2 மணிநேரம், மாலையில் இரண்டு மணிநேரம். அந்த சமயம்தான்
நான் பதிவுகளுக்குன்னு ஒதிக்கி வெச்சிருக்கற நேரம்.:(( அதனால
தொடர்ச்சியா பதிவு போட முடியறதில்லை. வழக்கத்துக்கு மாறாக
இரவில் இந்தப் பதிவை போடுறேன்.

மஹாலட்ச்மியில் வடாபாவ் சாப்பிட்டுவிட்டு அடுத்த ப்ளானாக
சர்னி ரோட் கோவிலுக்கு போகணும். இங்கயே இம்புட்டு நேரமாயிடிச்சே
கோவில் திறந்திருக்குமான்னு தெரியலை. மாமாவுக்கு போனைப்போட்டா
12மணிக்கு கோவில் மூடிடும்னாரு! மஹாலட்சுமி கோவிலிலிருந்து
சர்னி ரோட் கோவிலுக்கு போக 40 நிமிஷமாகும்னு சொல்ல ஐடியாவை
ட்ராப் செஞ்சோம். அதென்ன கோவில்?

சர்னி ரோட் ஷ்டேஷனை ஒட்டி இருக்கும் இந்தக்கோவில் பெருமாளுடையது.
மிக அழகாக இருக்கும். வானஸ்வாடி கோவில்னும் இதை சொல்வாங்க.
அந்த ப்ளான் ட்ராப் ஆனதால அடுத்து போக இருந்த கோவிலுக்கு
டாக்ஸி பிடிச்சோம்.

மும்பையில் நான் இருந்தப்ப கூட இந்தக்கோவிலுக்கு போனதில்லை
என்பது ரொம்பவே வேதனை தரும் விஷயம். எத்தனையோ வாட்டி
ட்ரை செஞ்சும் அதென்னவோ அவனுக்கு அப்போ தரிசினம் கொடுக்கும்
எண்ணமில்லை போல. பாந்த்ரா மாதாகோவிலுக்கு கூட போயிருக்கேன்.
வஜ்ரேஸ்வரி கோவிலுக்கும் போயிருக்கேன். ஆனா பாருங்க சித்தி
விநாயக் கோவிலுக்கு போனதே இல்லை. அதனால இந்த வாட்டி
கண்டிப்பா ஒரு விசிட் போட்டே தீரணும்னு முடிவு செஞ்சிருந்தோம்.
(அடுத்த வாட்டி ப்ரத்யேகமா டிட்டிவாலா போகணும்னு அயித்தான்
முடிவு செஞ்சிட்டாரு)


ஓரளவுக்கு கூட்டம்.ரொம்ப ஜாஸ்தி இல்லை. சித்திவிநாயக் கோவிலுக்கு முன்னாடி
அழகழகா மாலைகள் தொடுத்து வெச்சிருப்பதை பார்த்துக்கிட்டே
இருக்கலாம். மோதக் பேடா, தேங்காய்த்தட்டு மாலையோட வாங்கிக்கிட்டு
போனோம். சீக்கிரமே தரிசனம் முடிஞ்சது. ஆனா குறைவான கூட்டம் இருந்தும்
தள்ளுமுள்ளு ஏனோ புரியலை. அன்னைக்கு சனிக்கிழமைதான். கொஞ்சம்
நிதானமா தரிசனம் செய்ய விட்டிருக்கலாம்.

எதிர்பார்த்ததை விட சீக்கிரமா தரிசனம் முடிஞ்சிருச்சு. அயித்தானோட
நண்பர்களை சந்திப்பதா திட்டமிருந்தது. ஆனா அவசர மீட்டிங் வந்திருச்சு
என பல காரணங்களால் யாரையும் மீட் பண்ண முடியலை. இனி
வண்டியை நேரா வசாய்க்கு விட வேண்டியதுதான்னு முடிவு செஞ்சு
வீட்டுக்கு போனைப்போட்டு லன்சுக்கு வந்திடறோம்னு சொல்லிட்டு
தாதர் ஷ்டேஷனுக்கு டாக்ஸி பிடிச்சோம்.

மும்பையில் மாறாம இருக்கும் ஒரு விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கு.
சென்னையில் இறங்கினதும் ஆட்டோ காரங்ககிட்ட போராடரது ஒரு
மஹாபாரதம். இப்ப ஹைதையில் இதே சூழல் உருவாகியிடிச்சு. ஆனா
மும்பையில டாக்ஸி மீட்டர் போட்டு எந்த பிரச்சனையுமில்லாம வருது.
வசாயில் கூட இன்னமும் அதே மாதிரிதான் இருக்கு. மும்பை டப்பாவாலாக்கலை
கொண்டு ஏதோ பாடமெல்லாம் எடுக்க வெச்சிருக்காங்க. மற்ற ஊர் வாடகை
கார் காரர்களையும், ஆட்டோகாரர்களையும் ஒருங்கிணைச்சு மும்பை
ஆட்டோ/டாக்ஸி காரங்ககிட்ட ட்ரையிங் எடுத்துக்க விடணும். நல்லதெல்லாம்
செய்ய நம்ம ஆளுங்களுக்கு எங்க நேரம் இருக்கு.

தாதர் ஷ்டேஷன் வந்ததும் வசாய் ட்ரையின் வந்திச்சு. ஏறி உட்கார்ந்து
1 மணிநேரத்தில் வசாய் போய்ச் சேர்ந்தோம். 10ஆவது நிமிடம் வீட்டில்.
அனைவருடனும் கலந்து பேசி சாப்பிட்டு கட்டையைச் சாய்த்ததுதான் தெரியும்.

இரவு வசாயிலேயே இன்னொரு பக்கம் வீடு வாங்கி கிரஹப்ரவேசம் செய்திருக்கும்
சின்னமாமாவீட்டுக்குப் போய் தங்கி ஞாயிறு மதியம் அங்கேயிருந்து கிளம்பி
பெரியமாமாவீட்டுக்கு வந்து பொட்டி எடுத்துகிட்டு 6.30 மணிக்கு லோக்கல்
ட்ரையின் பிடித்து, சர்ச்கேட் வந்து அங்கேயிருந்து வீடி சென்று ப்ளாட்பாரத்தை
அடைந்த பொழுது எங்க ட்ரையின் ப்ளாட்பாரத்துக்கு வந்து கொண்டிருந்தது.
சாப்பிட்டு படுத்ததுதான் தெரியும். வளமைக்கு மாறாக நிசப்தமாக, ஆனந்தமாக
உறக்கம் கிடைத்தது மஹா மஹா ஆச்சரியம்.

Friday, October 07, 2011

HAPPY BIRTHDAY DEAR ASHISH

தாத்தாவுக்கும் அம்மம்மாவுக்கும் பெருமை தாங்கவில்லை. பேரன்
பள்ளி சுற்றுலாவில் குல்லு மணாலி சென்று வந்ததிருக்கிறார் என்று.
ஆஷிஷ் கிளம்புவதற்கு முதல் நாள் போன் போட்டு ஸ்வெட்டர் வாங்கிக்
கொடுத்தாயா, குளிருக்கு இதமான உடைகள் எடுத்துக்கொண்டானா?
அவசரமான மருந்துகள் கொடுத்தாயா என குடைந்து எடுத்துவிட்டார்
தாத்தா. பாலைவிட பாலாடை ருசிக்கும்!!! ம்ம்ம்ம்ம் :)))

எனக்கு டில்லியிலிருந்து அழகான புடவை வாங்கிவந்திருக்கிறான்.
அப்பாவுக்கு ஷர்ட், தங்கைக்கு வாட்ச். என் குட்டி குட்டி ஆஷிஷ்
இன்று தனியாக பர்ச்சேஸ் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டான்
என்பதை நம்பமுடியாமல் நம்பிக்கொண்டிருக்கிறேன்.


இன்று எங்கள் செல்லத்திற்கு பிறந்தநாள். 14 வசந்தங்கள் முடிந்து
15ஆவது வசந்த்ததில் அடி எடுத்துவைக்கும் இந்த நந்நாளில் இறைவன்
அவனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்வான வாழ்வையும்,
நல்ல குடிமகனாக, நல்ல மனத்தோடு,உடலோடும் வைக்க பிரார்த்தித்து
வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்ளும் அன்பான அப்பா, அம்மா.

ஆஷிஷ் அண்ணா பர்த்டே ஷ்பெஷல்:

காலை டிபன் : இட்லி + சாம்பார் (வடநாட்டு டூர் அடித்து வந்திருப்பதால்)
மதியம் : மிக்ஸ்ட் வெஜிடபிள் புலாவ் (ப்ரெட்டெல்லாம் சேர்த்து நான்
செய்யும் ஷ்பெஷல்)
ஸ்வீட்: ஆஷிஷுக்கு பிடித்த ரஸமலாய்.
டின்னர் வளமை போல அவுட்டிங். அண்ணா சாய்ஸ்.

Thursday, October 06, 2011

அலைகடலின் ஓரத்திலே..............

நவராத்திரி சமயமாக இருந்ததால் கண்டிப்பாக இந்தக்கோவிலுக்கு
போகவேண்டும் என திட்டம் போட்டிருந்தேன். நவராத்திரி சமயம்
என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். தரிசனத்திற்கு 4 மணி
நேரத்திற்குமேல் ஆகும் என்று மாமா சொன்னார். ஆனால்
விடாது கருப்பாக தரிசனம் செய்ய திட்டம்.

அதிகாலையிலேயே எழுந்துவிட்டோம். குளித்து ரெடியாகி 6.45க்கு
வீட்டைவிட்டு புறப்பட்டு, 7.20 வசாய் ரோட் லோக்கல் ட்ரையினில்
ஏறினோம். அயித்தான் முதல்நாளே எங்கள் மூவருக்கும் ஃபர்ஸ்ட்கிளாஸில்
3 நாளுக்கான பாஸ் வாங்கிவைத்திருந்ததால், டிக்கெட் வாங்க க்யூவில்
நிற்கத்தேவையில்லை + 3 நாள் பாஸில் எத்தனை முறை வேண்டுமானாலும்
பயணம் செய்யலாம்.


கொஞ்சம் கூட்டம் இருந்தாலும் உட்கார இடம் கிடைத்தது. 7.30 மணிக்கே
ட்ரையினில் தள்ளுமுள்ளு கூட்டத்தை பார்த்து அம்ருதா ஷாக்காகிவிட்டாள்.
மும்பை செண்ட்ரல் ஷ்டேஷனில் இறங்கி அங்கிருந்து வாடகை கார்
பிடித்தோம். அங்கேயிருந்து மஹாலாக்‌ஷ்மி கோவிலுக்கு சேரிங்கில்
ஆளுக்கு பத்துரூபாய். இன்னொரு பேசஞ்சருக்காக காத்திருக்காமல் அந்த
பத்துரூபாயையும் நாங்களே தருவதாக சொல்லி உடன் போகச் சொன்னோம்.
காரணம் மும்பையின் பிரசித்தி பெற்ற மஹாலக்‌ஷ்மி கோவிலில் நவராத்திரி
சமயம் தரிசனத்திற்கு க்யூவில் நிற்க வேண்டும்.


அனுமார் வால் போல நீண்டு கொண்டே சென்றது க்யூ.hEERA PANNA SHOPPING
CENTRE ஹாஜிஅலி எனும் முஸ்லிம் ப்யூர் வெஜ் கடை ஒன்று வைத்திருக்கிறார்கள்.
jUICE & SNACKS கிடைக்கும். அதற்கு இன்னும் கொஞ்சம் அந்தப்பக்கம்
தள்ளி மெயின் ரோடிலிருந்து வரிசையில் நின்றது கூட்டம். மணி 8.35.
மெல்ல மெல்ல ஊர்ந்த வரிசையில் ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு
தனி வரிசை. கோவில் முகப்பை சென்றடைந்த பொழுது மணி 10.20

கோவிலுக்கு செல்லும் இருபுறமும் கடைகள். பேடா, அம்பாளுக்கு
ரவிக்கைத்துணி, தேங்காய் எல்லாம் வைத்த தட்டு ஒன்று வாங்கிக்
கொண்டேன். பசி வயிற்றைக்கிள்ளியது. கையில் பிஸ்கட்டும் தண்ணீரும்
இருந்தது அதை வைத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டோம். சீக்கிரமே
வந்தால் அதிகம் க்யூவில் நிற்க வேண்டாம் என நினைத்தேன். ஆனால்
தரிசனம் அவ்வளவு சீக்கிரம் தரவில்லை.


மஹாலக்‌ஷ்மி கோவில் என்று சொல்லப்பட்டாலும் இங்கே முப்பெருந்தேவியரும்
குடியிருக்கிறார்கள். மஹாகாளி, மஹாலக்‌ஷ்மி, மஹா சரஸ்வதி இந்த
மூவரும் இங்கே அருள் புரிகிறார்கள். மஹாலக்‌ஷ்மியின் ப்ரத்யக்‌ஷ்ம கடாட்சம்
மும்பையின் மீது இருப்பதாகவும் அதனால்தான் மக்கள் இங்கே நல்ல
வாழ்க்கை வாழ்வதாகவும் மக்கள் நம்பிக்கை. அவளின் அருள் இருப்பதால்தான்
மும்பை மாநகரமே இந்தியாவின் வர்த்தக மையமாக இருக்கிறது. அவளைத்
தரிசித்தேன். நவராத்திரி சமயத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு மகிழ்ந்தேன்.
தங்கக் கவசங்கள் சாற்றி இருகைகளாலும் பக்தர்களுக்கு மூவரும்
அபயஹஸ்தம் அளித்த காட்சி கண்கொள்ளாக்காட்சி.

வரிசையில் நின்ற பொழுது எனக்கு பின்னால் இருந்த ஒரு அம்மா
ரொம்பவே புலம்பித்தள்ளிக்கொண்டிருந்தார். ”உங்க மக எவ்வளவு
பொறுமை!! கோவிலுக்கு வந்து எதுவும் சாப்பிடாமல் வரிசையில்
நின்று அம்மனை பார்க்க வந்திருக்கிறாள். என் மகளை அழைத்தற்கு
நீயே போம்மா என்று சொல்லிவிட்டாள்” என 15 தடவையாவது
சொல்லியிருப்பார்.

பக்தர்களுக்காக பந்தல் அமைத்து, அதில் மின்விசிறியும்
ஏற்பாடு செய்திருந்ததோடு மட்டுமல்லாமல், அங்காங்கே தண்ணீர்,
குளுக்கோஸ் லெமன் ஜூஸ் என விநியோகம் செய்தார்கள்.
ஃபளைட்டில் தருவது போல மினரல் வாட்டரை சீல் செய்த
டம்பளரிலும் கொடுத்தார்கள். மும்பையில் இப்பொழுது
இரண்டாவது வெயில்காலம். மிகக்கொடுமையானது. தாகசாந்தி
செய்தவர்கள் நன்றாக இருக்கட்டும்

இந்த பத்து நாளுக்கும் ஒவ்வொரு கலர் அலாட் செய்து அன்றைக்கு
அந்த கலர் உடை அணிந்து பூஜிக்க வேண்டும் என்று ஒரு தீம்
செட்டாகி இருக்கிறது மும்பையில். கர்பா ஆட்டங்கள், பெரிய்ய
சைஸ் ஸ்பீக்கர்களுடன் அங்காங்கே பார்க்கலாம். இதற்காக அதிக
மின்சாரம் உபயோகப்படுத்தப்படுவதாலோ என்னவோ தெரியவில்லை
வசாயில் மின் வெட்டு அதிகமாக இருந்தது.


எனக்கு முன்பே அயித்தான் சென்றாலும் ஆண்கள் வரிசை
குறைவாக இருந்தாலும் கொஞ்சம் அவர்களையும் நிற்க
வைத்து அனுப்பியிருக்கிறார்கள். நான் கோவிலின் முகப்பு
துவாரத்தில் நுழையும் இடத்தில் அயித்தான் நின்றிருந்தார்.
தரிசனம் முடித்து வெளியே வந்தோம். நேராகா ஓடியது
எஸ்ஸூ.... :)))

வடாபாவ் சாப்பிடத்தான். மணி 11.15. அதுவரை எதுவும்
சாப்பிடவில்லை. சுடச்சுட வடா பாவ்... ம்ம்ம்ம். அடுத்து
சூப்பராக ஒரு பஞ்சாபி லஸ்ஸி. :)) ஒரு காலத்தில் என்
நித்ய உணவாக இருந்தது இவை இரண்டும். அப்போ 3 ரூபாய்
விற்ற வடாபாவ் இப்பொழுது 8 ரூபாய். 5 ரூபாய் இருந்த
லஸ்ஸி 15 ரூபாய்.

அடுத்து இன்னும் இரண்டு இடங்களுக்குச் செல்ல திட்டம்.
ஆனால் ஒன்று முடியாது. நேரம் ஆகிவிட்டது.
போன இடம் எங்கேப்பா..... அடுத்த பதிவில் சொல்றேன்.


Wednesday, October 05, 2011

அன்பாலே அழகான வீடு!!!!!!!!

வசாய் ரோட் ஷ்டேஷனில் எங்கள் ட்ரையின் நுழைந்த பொழுது அதிகாலை 6.30 மணி ஆகியிருந்தும் இருள் பிரிந்தும் பிரியாமலும் இருந்தது. ஆட்டோ பிடித்து
வீடு சேர்ந்தோம். மாமா இன்னும் எந்திர்க்கவில்லை. மெல்ல பூனை போல
சென்று மாமா பக்கத்தில் படுத்துக்கொண்டு கட்டிக்கொண்டு குட்மார்னிங் மாமா
என்றேன். அடடே! வந்தாச்சா!! என கட்டிக்கொண்டவர் அடுத்த நிமிடத்தில்
காதை திருகினார். “வாடி ஷ்டேஷன்ல மசாலா சாய்! மசால் வடை சாப்பிட்டேன்னு
எஸ் எம் எஸ் அனுப்பி டெம்ப்ட் செய்யறிய்யா!!” என்று செல்ல திட்டு திட்டினார்
மாமா.

அப்பாவிடம் இருந்ததை விட கூடுதல் நெருக்கம் என் மாமாக்களுடன்
எனக்கு. வீட்டில் பெரிய்ய பேத்தி. எல்லாரிடமும் வளர்ந்திருக்கிறேன்.
இதுவே எனக்கு பெரிய்ய நெருக்கம். ராம்மாமா(அம்மாவின் பெரியம்மா
மகன்) ரொம்பவே ஷ்பெஷல். அம்மாவின் சொந்தத்தம்பியான இந்த
சத்யாமாமா பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
நான் மருமகள் அல்ல மாமாவுக்கும் அத்தைக்கும் முதல் குழந்தை
நான் தான். அதனால் மும்பை வீடு எனக்கு பிறந்த வீடு. அம்மம்மாகூட
என்னை தன் பேத்தி என்று சொல்லிக்கொள்வதை விட மகள் என்றே
சொல்வார்.

நானும் தம்பியும் மட்டும்தான் வீட்டில். இங்கே மாமாவீட்டில் மாமாவின்
மகள்கள் இருவரும் கூட எனக்கு உடன்பிறப்பு போல. பெரியவள்
ஆயுர்வேதா டாக்டருக்கு படிக்கிறாள். சின்னவள் +2. அம்மம்மாவுக்காக
எனக்கும் பெரியவளுக்கும் போட்டாபோட்டி நடக்கும். ரொம்ப சின்னது
அது. ஆனாலும் அம்மம்மா என் பக்கம் திரும்பி படுக்கக்கூடாது,
எனக்கு தலை வாரக்கூடாது என ரொம்ப படுத்துவாள். இப்போது
கூட நான் அம்மம்மாவை கட்டிக்கொண்டாள் தானும் போட்டிக்கு
வந்துவிட்டாள். ராட்சசி. எஸ் என் அன்பான எதிரி சசி. :)))

அதே சமயம் வேறு யாரும் அம்மம்மாவுடன் போட்டி வந்தால் நானும்
சசியும் ஒன்று சேர்ந்து விடுவோம். என் பிள்ளைகளுக்கும் பாம்பேஅவ்வா
என்றால் உயிர். அத்தை அன்று நான் வருகிறேன் என்று சுவாசினி
பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். 9 பெண்கள், 2 குட்டி பெண்கள்
அழைத்து புடவை கொடுத்து, சாப்பாடு போட ஏற்பாடு. அந்த 9
பெண்கள் லிஸ்டில் நானும் உண்டு. தேங்காய்சாதம், சர்க்கரைப்பொங்கல்,
அவியல், பிசிபேளாபாத், வடை, என நான் பெரிய அத்தை, சின்ன
அத்தை 3 பேரும் சேர்ந்து சமைத்தோம். வந்தவர்களிடம் எல்லாம்
மாமாவும் அத்தையும் என் அக்கா மகள், ஆனால் எங்கள் மகள்
போலத்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

அம்மா என்னை “ட்ரில்” வாங்கியது, திட்டியது எல்லாம் பிள்ளைகளுக்கு
சொல்லிக்கொண்டிருந்தார். என் சொன்னப்பேச்சை கேட்டது கலாதான்.
அதனால்தான் திரம்பட தன் வேலையை செய்கிறாள் என பெரிமிதத்துடன்
சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு தகப்பனுக்கே உரிய பெருமிதம் அதில்
தெரிந்தது.

ஆனாலும் மாமா என்னிடமிருந்து தப்பித்துவிடவேண்டும் என்று நான்
கிளம்பும் வரை ஷேவிங் செய்து கொள்ளாமல் இருக்கப்பார்த்தார்.
கடைசிநாள் கிளம்புவதற்கு சற்று முன் ஏதோ மாற்றம் தெரிய
”மாட்டீட்டீங்க மாமா! ஷேவிங் செஞ்சாச்சா!!”” என சந்தோஷமாக
கத்தினேன். கண்டுபிடிச்சிட்டியா!! என மாமா இருகைகளாலும் தன்
கன்னத்தை மூடிக்கொள்வதற்குள் இரண்டு கைகளாலும் கன்னத்தை
கிள்ளிவிட்டேன்(செல்லமாகத்தான்) எஸ் க்ளீன் செய்து கொண்டு
மாமா இருந்தால் இப்படித்தான் நடக்கும் :))))))))))))))))

நம்ம கிட்டயும் பயப்பட வைப்போம்ல!!!!!!!

எங்க ஊருக்கு போயிட்டு வந்தேன்!!!!

வேலை வேலை வேலைன்னு அப்படி ஒரு வேலையாப்போச்சு நமக்கு.
ஆஷிஷ, அம்ருதா பரிட்சை அதற்கு பட்ட கஷ்டங்கள்னு போன பதிவுல
புலம்பியிருந்தேன். டிக்கெட் எல்லாம் புக் செஞ்சு வெச்சாச்சு. போகமுடியுமான்னு
தெரியலை!! எல்லாம் ரயில்ரோக்கோ நடத்தறாங்களேங்கற பயம்தான்.
ஆனா இப்ப விட்டா போகமுடியாது என்பதால கிளம்பியாச்சு. ஆஷிஷ்
அண்ணா குல்லு மணாலிக்கு எக்ச்கர்ஷன் கிளம்ப, அன்னைக்கே நான்,
அயித்தான், அம்ருதா மூணு பேரும் என் ஊருக்கு கிளம்பினோம்.

வர்ற ப்ளான் இருக்குன்னு சொன்னதும் அம்மம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.
மாமாக்கள் குஷி. எஸ் எங்க ஊருன்னு சொன்னது “அம்ச்சி மும்பை”!
நவராத்திரியில் வரும் மூலம் நட்சத்திரத்தன்று என் அன்பு அம்மம்மா
ராஜலக்‌ஷ்மிக்கு பிறந்தநாள். அம்மம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு
சுகமில்லை. என்னை பார்க்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
சின்ன மாமா செப்டம்பர் 1 கிரஹப்ரவேசம் செஞ்சிருந்தாரு. அதுக்கும்
போக முடியாம பசங்க பரிட்சை வந்திருச்சு. ஆஷிஷ் அண்ணா ஊருக்கு
போயிருக்க, அம்ருதம்மாவுக்கும் ஒரு ஜாலி ட்ரிப் என ஒரே கல்லுல
மூணு மாங்கா அடிச்ச ட்ரிப் இது!!

ஹைதையிலிருந்து ஹுசைன்சாகர் எக்ஸ்பிரஸ்ஸில் கிளம்பியாச்சு.
எங்க போதாத நேரம்னு தான் சொல்லணும்! சமீபகாலமா ரயில்
பயணத்துல ரொம்பவே கஷ்டமா இருக்கு. ஒவ்வொரு இடத்துலயும்
நான் புலம்பும் பொது இடத்தில் எப்படி நடந்துக்கொள்வது என்பதை
மக்கள் படிக்கவே இல்லைன்னு தோணுவது இந்த முறையும் நினைக்க
வெச்சிருச்சு. எங்க கூட பயணம் செஞ்சது 35 பள்ளிக்குழந்தைகள்!!!!!
சாமி ரங்கா!! வகுப்பறையிலேயே பிள்ளைகளை மேய்ப்பது கஷ்டம்.
இதில் மும்பைக்கு 5 ஆம் வகுப்பு மாணவர்களை எக்ஸ்கர்ஷன் அழைத்து
செல்கிறார்கள். ஆணும் பெண்ணுமாய் 35 குழந்தைகள். கூடவே 4
ஆசிரியர்கள்.

2.45க்கு ஹைதராபாத் ஷ்டேஷனில் ட்ரையின் ஸ்டார்ட் ஆனதிலிருந்து
ஸ்டார்ட் ஆனது நான் ஸ்டாப் சத்தம். சில பிள்ளைகளுக்கு குடும்பங்களின்
நடுவே சீட் வர ,”நானும் என் ஃப்ரெண்டும் சேர்ந்துதான் உக்காருவோம்”
என இடம் தரவே அடம்பிடித்தது தனிக்கதை என்றால், காச் மூச் என்று
கத்திக்கொண்டே இருந்தார்கள். நேரம் ஆக ஆக சத்தம் கூடிக்கொண்டே
இருந்தது. ஆசிரியர்கள் பெண்குழந்தைகள் இருக்கும் பகுதியில் போய்
உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் கொஞ்சம் சாந்தமாக இருந்தார்கள்.
ஆனால் எங்களுக்கு அருகில் அமர்ந்திருந்த ஆண்குழ்ந்தைகள்
“அப்பப்பா!!!” குழந்தைகளை எதுவும் சொல்லவும் முடியாது.

பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நேரத்தில் அந்த தனிமையை,
சுதந்திரத்தை அனுபவிக்க எண்ணுவது இயல்புதான். ஆனால்
நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம், உடன் மற்ற பயணிகளும்
இருக்கிறார்கள் எனும் நினைப்பே இல்லை. (சொல்லிக்கொடுக்கப்படவில்லை)
4 மணிக்கே பர்த்களை போட்டுக்கொண்டு ஏறிக்குதித்து அதகளம்
செய்து கொண்டிருந்தார்கள். ஆசிரியைகள் கண்டுகொள்ளவே இல்லை.
ஓயாத சத்தத்தால் 6 மணிக்கே தலைவலி துவங்கி விட்டது.
ஆஷிஷும் அன்று காலை 6.50 ஏபி எக்ஸ்பிரஸ்ஸில் டில்லி கிளம்பியதால்,
அண்ணாவுக்கு சாப்பாடு செய்து கொடுத்து, தயார் செய்ய வேண்டி
3 மணிக்கே எழுந்துவிட்டேன். 3 மணிக்கு தூங்கிவிடக்கூடாது என
நினைத்துக்கொண்டே இருந்ததால் 1.30 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது.

ஆஷிஷை ஏற்றிவிட்டு வந்து படுக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால்
1.30க்கு நாங்கள் ஹைதரபாத் ஷ்டேஷன் செல்ல வேண்டியிருந்ததால்
வேலைகளை முடித்து, சாப்பிட்டு என சரியாக இருந்தது. ட்ரையினிலாவது
படுக்கலாம என நினைத்திருந்தேன். ஆனால் பிள்ளைகளின் கொட்டத்தில்
தலைவலி அதிகமாகிவிட்டது. 7 மணிக்கு பள்ளிக்குழந்தைகளுக்கு உணவு
கொடுத்து 8 மணிக்கெல்லாம் படுக்க வைத்துவிடுவதாக ஆசிரியை சொல்ல
காத்திருந்தேன். 8.30 மணியாச்சு. சத்தம் கொஞ்சமும் குறைவில்லாமல்
வர டீச்சரிடம் போய் பேசினேன். இதோ சொல்றேங்க என்றார்.
வந்தார் ஏதோ பேருக்கு சொன்னார். போய்விட்டார். :(

9 மணிக்கு பெண் குழந்தைகள் படுத்துவிட்டார்கள் போலும் அந்தப்
பக்கத்திலிருந்து சத்தம் ஏதும் வரவில்லை. எனக்கு அடுத்த
பர்த்லிருந்து ஆண்குழந்தைகள் கத்தி பேசிக்கொண்டே இருந்தார்கள்.
“இன்னும் ஒரு சத்தம் வந்தால் டீடியை கூப்பிட்டு க்ம்ப்ளையெண்ட்
செய்து விடுவேன்! என மிரட்டியதில் சில குழந்தைகள் படுத்துக்கொண்டனர்.
ஆனாலும் ஒரு பையன் இரவு 11 மணிக்கு படுத்துதான் பழக்கமாம்!!
அதனால் 4 பையன்களை கூட சேர்த்துக்கொண்டு பேசிக்கொண்டே
இருந்தான். டெசிபல் அதிகமாக இருந்தது. ஏசி கம்பார்ட்மெண்ட்
என்பதால் சத்தம் இன்னும் அதிகமாக கேட்டது.

10மணிக்கு அயித்தான் எழுந்து போய் ஆசிரியைகளிடம் பேசினார்.
“உங்களால் அடக்கி வைக்க முடியாவிட்டால், எக்‌ஷ்கர்சன், டிரிப்
என ஏன் அழைத்து வருகிறீர்கள் என்று” கத்த தன் சக ஆசிரியைகளிடம்
பேசிக்கொண்டு கடமை ஆற்றிக்கொண்டிருந்த ஒரு ஆசிரியை வந்து
அந்தப் பையனை படுக்க வைக்க அதன் பிறகு தூங்கி 4.30 மணிக்கு
தாதர் ஷ்டேஷனில் இறங்க 3.30க்கே முழித்தது தனிக்கதை.

எனக்கு அந்த தலைவலியிலும் ஒரு விஷயம் மண்டையைக்
குடைந்துக் கொண்டிருந்தது. அந்தப் பிள்ளைகள் ரிடர்ன் ஃப்ளைட்டிலாம்.
அந்த ஏர்ஹோஸ்டஸ் பாவம் என நினைத்தேன்!!!

5 மணிக்கு தாதர் ஷ்டேஷனில் இறங்கிய நிமிடம் எனக்குள் கொசுவத்தி
சுத்த ஆரம்பித்தது. (எல்லாம் வலைப்பூவில் ஏற்கனவே சுத்தியதுதான்)
ஹா! அம்ச்சை மும்பை. நான் இருந்த மும்பை என ஒரே சந்தோஷம்.
லோக்கல் ட்ரையின் டிக்கெட் வாங்கிக்கொண்டு ட்ரையின் ஏற ப்ளாட்பார்ம்
வந்தோம். மறந்த போச்சு ரொம்ப நாளாச்சு எனும் பாட்டை ஞாபகத்தில்
கொண்டு வருவது போல எந்த ப்ளாட்பாரத்தில் ட்ரையின் வரும் என்பதை
மறந்து போயிருந்தேன். அதாவது 1,2 ப்ளாட்பார்ம் ஸ்லோ ட்ரையின்.
(எல்லா ஷ்டேஷன் களிலும் நிற்கும்) 3,4 ப்ளாட்பார்ம் ஃபாஸ்ட் ட்ரையின்.
குறிப்பிட்ட ஷ்டேஷன் களில் தான் நிற்கும்) இதைத்தான் மறந்துவிட்டேன்.
தினம் தினம் மும்பை லோக்கலில் பயணித்த நான் இதை மறந்தது எப்படி?


திருமணம் ஆகிச்செல்லும் சில வருடங்கள் கழித்து பிறந்த வீடு
வரும்பொழுது ஏதோ அன்னிய வீட்டுக்கு வந்தது போல (அதாவது
சாமான்கள் எது எங்கே இருக்கு என்று தெரியாமல் போகுமே!)
அது போல இதுவும் நடந்தது என நினைக்கிறேன்.

பதிவு பெரிசா போச்சு. மீதி தொடரும்....