ஹைதை ஸ்டேஷனில் எங்களை ரிசீவ் செய்ய அயித்தானின் நட்புக்கள் குழு.
கூடவே வந்து எங்கள் வீட்டில் விட்டுவிட்டு என்னை பயப்படுத்த பார்த்து முடியாமல் சிரித்து மகிழ்ந்து நட்புக்களாகி, காபி நல்லா போடறீங்க, சமையல் எப்படின்னு பார்க்கணும்னு மெனு கொடுத்துட்டு போன கதை வலைப்பூவில் எழுதியிருக்கேன்.
மாதத்தில் 20 நாள் போல் டூர். பொதுவாக நட்புக்களுடன் இருப்பார். சில சமயம் இங்கே. திருமணத்திற்கு வீடு மாறவில்லை. 3 மாதத்தில் பெங்களூருக்கு மாற்றல் இருக்கும் (நானும் டிரான்ஸ்பர் ஆர்டர் என் கம்பெனியில் வாங்கி வந்தேன்) அப்படி இல்லையென்றால் வேறு வீடு பார்க்கலாம் என இருந்தார்.
ஹைதையில் ஒரு ரிஷப்ஷன் முடிந்ததும் வேலைக்கு போக ஆரம்பித்தவர் டூருக்கு போனார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் அனைவருமே நல்லவர்கள். அந்த சூழல்தான் பிரச்சனை. என் நிலையும் அப்படித்தான். வீட்டில் குறைந்த பட்சம் 7 பேர் இருந்தோம். வேலைக்கு போய்வந்து, ரயில் சிநேகம் என பேசி பேசி டயர்டாகும் ரகம். ஆனால் இங்கோ தனிமைதான். இப்போ வரை நான் அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் :)))
சம்சாரம் அது மின்சாரம் லட்சுமி சொல்வது போல் ,” ம்ம்ம்ம் இனி நான் இப்படி இருக்க பழகிக்கனும்” என்று முடிவு செய்துகொண்டேன். பெங்களூர் மாற்றல் இல்லை. அதனால் ஹைதையிலேயே வேறு வீடு பார்த்து குடி பெயர்ந்தோம். எனக்கு ஹைதைக்கு மாற்றல் தரமாட்டேன் என்று சொல்ல வேலையை விட்டாச்சு.
அடுத்த வருடம் அன்னபைய்யா பிறந்துவிட என வாழ்க்கை இருந்தது. சவால் என்னவென்றால். மாமியாருக்கு பார்க்கின்சம். இன்று இதற்கு சிறப்பான மருத்துவம் இருக்கு என்கிறார்கள். அன்று ரொம்ப கஷ்டம். இருந்த இடத்திலேயே டாய்லட் எல்லாம் செய்துவிடுவார்கள். இரவு தூக்கதில் சிறுபிள்ளை போல் பாத்ரூம் போய்விட காலையில் நாம் எழுப்பி சுத்தம் செய்யும் பொழுதுதான் தன் நிலையே தெரியும். 10 அடி தூரம் நடக்க் 15 நிமிடங்கள் ஆகும்.
இவரையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். அயித்தானுக்கோ டூரிங் ஜாப். பழைய துணிகளை வீட்டில் போட்டுவிட்டு புதுத்துணிகளை எடுத்துச்செல்ல வருபவர் என்று சொல்லலாம். One women armyயாக செயல்பட வேண்டிய நிர்பந்தம்.
இப்பொழுது நினைத்தாலும் நானே அதெல்லாம் செய்தேன் என்று மலைப்பு.
2 வருடத்தில் சென்னைக்கு மாற்றலாக அதிக பட்ச வெயிலோடு உறவாடும் மே மாதத்தில் சென்னைக்கு வந்தோம். அது 1998.
தொடரும்
கலா ஸ்ரீராம்
18/8/23