Tuesday, August 27, 2013

சீதா கல்யாண வைபோகமே- 6

காலிங் பெல் அடிக்கவே ஹாலில் உட்கார்ந்து டீவி பார்த்துக்கொண்டிருந்த பானுபின்னி மெல்ல எழுந்து கதவை திறந்தார். தியாகுதான் வந்தது. பத்மா குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசினார், “ சம்மந்தி அம்மா சொல்லியிருந்த படி நாலு நல்ல நாள் பார்த்து குறிச்சுக்கொண்டு வந்திருக்கேன்” என்றார் “அவங்க பெண் ரூபா டெலிவரி முடிந்து ஊருக்கு கொண்டு போய் விடுவதற்குள் நாள் பார்க்க சொல்லியிருந்தார்களே!” என பத்மா கேட்க “ஆமாம், அப்படித்தான் பார்த்து வந்திருக்கேன். கரெக்டா 6 மாசம் டைம் இருக்கு.” என்றார் தியாகு.

”வர்ற வெள்ளிக்கிழமை ரூபாவுக்கு வளைகாப்பு. அதற்கு போகும்போது
இந்த நாள் குறிச்சு கொடுத்திருப்பதை பத்தி விவரமாக சொல்லிட்டு வந்திடலாம்” என்றார் பத்மா.  சாயந்திரம் சீதாவுக்கும், ஷ்யாமுக்கும் வேலையிலிருந்து வர ரொம்ப தாமதம் ஆனது. அண்ணனும் தங்கையும் சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

சாப்பாட்டு வேலை முடிந்தது  நாள் பார்த்திருப்பதையும், வெள்ளிக்கிழமை ஃபங்ஷனுக்கு போகும் போது இந்த விவரத்தை சொல்லவிருப்பதாக பத்மா சொல்ல, சீதாவிற்கு அப்பொழுதுதான் அந்த விவரம் ஞாபகத்திற்கு வந்தது.
“அம்மா, என்னால் வெள்ளிக்கிழமை ஃபங்க்‌ஷனுக்கு லீவ் போட முடியாது.
முக்கியமான மீட்டிங் இருக்கு,” என்று சொல்ல,” என்னடி? இப்படி சொல்ற!!
நான் அவங்க கிட்ட போய் எப்படி சொல்ல முடியும் என்றார் பத்மா.
”நானும் ரொம்ப ட்ரை செஞ்சு பார்த்தேன் அம்மா! நான் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும்,” என்று சொல்ல, அவங்க என்ன நினைச்சுக்கப்போறாங்களோ!
என்று சங்கடப்பட்டுக்கொண்டே படுக்க போனார்.

காலையில் எழுந்தது தியாகு “ பார்க்கலாம்ம்மா, எப்படி நடக்கணுமோ அப்படி தான் நடக்கும்” என்று சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பினார். வெள்ளிக்கிழமை தியாகு, பத்மா இருவருடன் மிகவும் வற்புறுத்தி அழைத்தார்காளென பானுபின்னியும் புறப்பட்டார்கள். சீதா வரவில்லை என்பதால் என்ன சொல்வார்களோ என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. ஷ்யாம் அவர்களை அங்கே இறக்கி விட்டு அலுவலகம் போவதாக ப்ளான்.

சத்திரத்தில் வைத்துதான் ஃபங்க்‌ஷன் நடக்கிறபடியால் அங்கே போனார்கள்.
சம்மந்தி மணி வாசலிலேயே நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். காரை விட்டு இறங்கும் வருங்கால சம்மந்தி அருகில் போய் கைபிடித்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். பேருக்கு உள்ளே வந்து 5 நிமிடம் இருந்து விட்டு ஷ்யாம் கிளம்பிவிட்டார். அவனுக்கும் மீட்டிங் அவசரம்.

லீலா தான், “சீதா எங்கே காணோமே! என்று கேட்டார்.  தப்பா நினைச்சுக்காதீங்கோ! ரொம்ப ட்ரை பண்ணா. லீவு எடுக்க முடியலை. மீட்டிங். இவ இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்,” என பயத்துடன் பத்மா சொல்ல , அதை கேட்டுக்கொண்டே அங்கே வந்த சுந்தரி அவ்வா,” ரகுவுக்கும் மீட்டிங்னு அவசரமா கால் வந்து நேத்து சாயந்திரம் கிளம்பி போயிட்டான். இதுக்கெல்லாம் நாம ஒண்ணும் செய்ய முடியாதும்மா. நீங்க உள்ள வாங்கோ!” என பானுபின்னியை கைபிடித்து அழைத்து சென்றார்.

பெரிய களேபரம் வெடிக்கும் என பயந்து கொண்டிருந்த பத்மா கொஞ்சம் ரிலாக்ஸானார். பானுபின்னி மெல்ல பத்மாவின் கைபிடித்து,”நல்லா புரிஞ்சுக்க கூடிய சம்மந்தி கிடைச்சிருக்காங்கம்மா உனக்கு.” என சொல்ல பத்மா சிரித்தார். வளைகாப்பு ரொம்ப நன்றாக நடந்தது. பத்மா ரூபாவிற்கு வெள்ளியில் கிண்ணம் சின்னதாகவும், புடவை, ரவிக்கையுடன், வளையலும் வாங்கி கொண்டு வந்திருந்தார். அதை வைத்து கொடுத்ததும் புடவை கலர் தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாக ரூபா சொன்னதைக்கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார் பத்மா

வளைகாப்பு முடிந்து கொஞ்சம் ஓய்வாக உட்கார்ந்த சமயத்தில் தியாகு சென்று மணியிடம் நாள் பார்த்து வந்திருப்பதாக சொல்ல,”அப்படியா அம்மாவையும் லீலாவையும் கூப்பிடறேன்   இருங்கோ” என சொல்லி அவர்களையும் அழைத்து வந்து பேசினார்கள். ”ரூபாவுக்கு டெலிவரி முடிந்து 3ஆம் மாதம் கொண்டு வந்து விடச்சொல்லியிருக்கிறார்கள்.அதனால் அந்த சமயத்தில் கல்யாணம் வைத்துக்கொண்டால் சொளகர்யமாக இருக்கும் என நினைத்தேன். நீங்களும் அதே மாதிரி நாள் பார்த்து கொண்டு வந்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம் ” என்று சொல்லி 6 மாதம் கழித்து வந்த முதல் முஹூர்த்தத்தை ஃபிக்ஸ் செய்து கொண்டு மாடல் கல்யாண பத்திரிகை எப்படி எழுதுவது என்று பேசி எழுதி கொண்டார்கள்.

“நாங்க எப்படியும் இங்கிலீஷ் பத்திரிகை அடிக்கறோம். அதுல உங்களுக்கு எத்தனை பத்திரிகை வேணுமோ அவ்வளவு அனுப்பி வைக்கிறோம் என்று மணி சொல்ல,” சம்ப்ரதாய பத்திரிகை ரோஸும், மஞ்சளும் கலந்த மாதிரி வருமே அது நாங்க அடிச்சு அனுப்பி வைக்கிறோம்” என்று சொன்னார் தியாகு.
 

அதைத் தவிர இருபக்கத்து முக்கியமானவர்கள் லிஸ்ட் எழுதிக்கொ சொன்னார் பானு பின்னி. “எதற்கு பின்னி” என தியாகு கேட்க, “ அவங்க பக்கத்து முக்கியபட்டவங்க மாப்பிள்ளையோட சித்தப்பா, அத்தை, மாமா, சம்மந்தி போன்றவர்களுக்கு நாமளும் பத்திரிகை அனுப்பனும். அதே மாதிரி அவங்களும் நம்ம பக்கத்து மரியாதைபட்டவங்களுக்கு அனுப்பறது முக்கியம்”  என பானுபின்னி சொல்ல ,” ஆமாம்,ஆமாம்! என்னதான் இருவீட்டார் அழைப்புன்னு போட்டாலும் இந்த மாதிரி மரியாதை செய்வது முக்கியம் என்றார் ”சுந்தரி அவ்வா.

பத்மா, தியாகு பானுபின்னி வீட்டிற்கு கிளம்பினார்கள். தாம்பூலம் கொடுத்துக்கொண்டே லீலா நல்ல நாள்பார்த்து வேலைகளை ஆரம்பிச்சிடலாம் என்று சொல்ல,” அப்படியே செய்வோம்” என சொல்லிவிட்டு பத்மா,தியாகு, பானுபின்னி புறப்பட்டார்கள்.

ரூபாவின் கணவர் வீட்டார் கோயம்புத்தூரில் வசிக்கிறார்கள். இருவருக்கும் ஏதுவாக இருக்கும் என்பதாலும், உறவினர்கள் வர சொளகர்யம் என்பதாலும் சென்னையில் வளைகாப்பு ஃபங்க்‌ஷன் வைத்தார்கள் சென்னையில் மணியின் தம்பி வசிக்கிறார். ஃபங்ஷன்முடிந்ததும் அங்கே போய் இரவு தங்கிவிட்டு
அடுத்த நாள் காலை ஃப்ளைட்டில் டில்லி போவதாக ஏற்பாடு.

சீதாவிற்கு் மீட்டிங் முடிய 7 மணி ஆகிவிட்டது. போன் செய்து அட்ரஸ் விசாரித்துக்கொண்டு ரூபாவின் சித்தப்பா வீட்டிற்கு சென்று தான் வரமுடியாத காரணத்தை சொல்லி கொஞ்ச  நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வந்தாள்.
பாவம் டயர்டாக இருந்தாலும் மரியாதைக்காக வந்து பார்த்துவிட்டு போகிறாள் குழந்தை என சந்தோஷப்பட்டார் சுந்தரி அவ்வா. காலையில் போக முடியாவிட்டாலும் மாலையிலாவது போய்விசாரித்து வந்தாளே என்று பத்மாவும் மகிழ்ச்சி அடைந்தார்.

தொடரும்

,

No comments: