Thursday, January 28, 2010

ஏணிப்படியில் ஏறும் வயது

பதின்ம வயது பிள்ளைகள் அந்தந்த வயதிற்கே உரிய வளர்ச்சியுடன்
காணப்படுவார்கள். பெண் பிள்ளை பூப்பெய்வதும் அப்போதுதான்.
வெளியே சொல்ல முடியாமல், சொன்னால் தவறாக நினைப்பார்களோ!!
என்று குழம்பி தவிப்பான் ஆண்பிள்ளை.

(13 வயது தான் டீன் ஏஜின் துவக்கம் என்றாலும் பல பிள்ளைகள்
11 வயது அடைந்த உடனே மாற்றங்கள் மெல்ல நிகழும்)


தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரியா? தவறா? எல்லோருக்கும்
இப்படித்தான் இருக்குமா? போன்ற அனாவசிய குழப்பங்கள்
பிள்ளைக்கு ஏற்படும். யாருக்கும் நேராத ஒன்று தனக்கு மட்டும்
ஏற்பட்டிருப்பதாக உள்ளுக்குள் புழுங்கிப்போவார்கள். தெளிய
வைக்க வேண்டியது நம் பொறுப்பு.

அந்தரங்க உறுப்புக்களில் முடிவளர்தல் சாதாரணமான ஒரு
நிகழ்ச்சி என்று புரிய வைக்க வேண்டும். பெண்களுக்கு
ஏற்படும் உடல் மாற்றத்தையும் சாதரண நிகழ்வு என
புரிய வைத்து மனதை லேசாக்கி வைப்பது அவசியம்.


என் மகனுடன் பேச முதலில் எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது.
இதுவே பெண்குழந்தையாக இருந்தால் இந்தத் தயக்கம் இருந்திருக்காது
என நினைக்கிறேன். கணவரோ அடிக்கடி டூர் போகிறவர். பக்கத்தில்
இருந்து மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஆண்டவன்
பெண்களுக்குத்தான் கொடுத்திருக்கிறான்.

குழ்ந்தை பிறக்கும் பொழுதுதான் தாய், தந்தையர் எனும் பதவி
வருகிறது. அதன் பிறகுதான் கற்றலும் நடக்கிறது. ஆம் தாயாக,
தந்தையாக நாம் செய்ய வேண்டியதை கற்கிறோம். இப்போது
பதின்ம வயது மகனை ஹேண்டில் செய்யும் திறனை நான்
வளர்த்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்து தனியறையில்
நானும் மகனும் மட்டும் உரையாடினேன்.

”கண்ணா, உன் உடலில் சில மாற்றங்கள் நேரும்
இதற்காக கலங்கக்கூடாது. மற்ற பிள்ளைகளிடம் இது குறித்து
ஆலோசனை செய்ய வேண்டாம். இது தவறல்ல! இயற்கை உன்னை சின்ன
குழந்தையிலிருந்து பெரிய மனிதனாக்க செய்யும் வேலை இது.
இது சாதாராண நிகழ்வு,” என்று சொன்னேன்.


”ஆமாம்மா, சின்ன சின்ன மாற்றம் பயமாயிருக்கு! என்ன செய்வதுன்னு
புரியலை!!” என்றான் கண்களில் நீருடன். தக்க சமயத்தில் பிள்ளையிடம்
பேசும் புத்தியை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கண்ணீரை
துடைத்து மடியில் இருத்திக்கொண்டேன்.


“நம் வாழ்க்கையில் டீன் ஏஜ் பருவம் ரொம்ப முக்கியம். ஏன் தெரியுமா?
inner PERSONALITY DEVELOPMENT அப்போதுதான் ஏற்படும். இதுவரை
சின்னக்குழந்தையாக தெரிந்த உன் உடல் இனி சில மாற்றங்கள் கொண்டு
தன்னை தயாராக்கிக்கொள்ளும். 13-19 வயது வரை நீ ரொம்பவே
கவனமாக இருக்க வேண்டும். பயப்பட ஏதும் இல்லை. ஆனந்தமாக
கொண்டாடலாம். இப்போது நீ குழந்தையுமில்லை, பெரிய மனிதனும்
இல்லை. அதனால் உனக்கு எப்போதாவது எதற்காவது சந்தேகம்
வந்தால் நானோ, அப்பாவோ உடன் இருக்கிறோம். கடினமான
இந்தக் கட்டத்தை நீ ஆனந்தமாக கடக்க நாங்கள் இருக்கிறோம்.

நீ செய்ய வேண்டியதெல்லாம், எங்களை நம்பு. 13-19 வயது
என்பதை ஏணிப்படி போல் கற்பனை செய்து கொள். ஒவ்வொரு
அடி எடுத்துவைக்கும்பொழுதும் உனக்குள் ஒவ்வொரு மாற்றம்,
ஒரு முதிர்ச்சி ஏற்படும். படியில் ஏறும்பொழுது கொஞ்சம் பயமாக
இருந்தால் என் கைகளைப்பிடித்துக்கொள்!!! அப்பாவைக் கேள்!நாங்கள் நீ ஏற
உதவி செய்கிறோம். நானும் உன்னைப்போல அந்த வயதைத்
தாண்டித்தானே வந்திருக்கிறேன், என்றதும் முகத்தில் நம்பிக்கை
வந்தது மகனுக்கு.

அவரிடமும் பேசி நீங்களும் மகனிடம் பேச வேண்டும்
என்று சொல்ல ,”நானும் அது பற்றி தான்
யோசித்து கொண்டிருக்கிறேன்!” உற்ற நண்பனாய் இருப்பேன்!! என்றார்.
சொன்னபடி செய்தும் வருகிறார்.


நாங்கள் அப்போது இருந்தது வெளிநாட்டில்! அங்கே கேர்ள்/ பாய்ஃப்ரெண்ட்
சகஜம். அது இல்லாவிட்டால் ஏதோ பெரும் குத்தம் என்பது
போல் பேசும் ஜென்மங்களும் உண்டு. அவர்களது கலாச்சாரம் அது.
6ஆம் வகுப்பு மகனிடம் கேர்ள் ஃப்ரெண்ட் பற்றி பேச தைரியம்
கொடுத்தது குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி. அப்போதுதான்
அவர் இது பற்றி சிநேகிதியில் எழுதியிருந்த தலையங்கம் படித்திருந்தேன்.
அவர் சொன்ன உதாரணத்தை என் மகனிடம் சொன்னேன்.

“பதினம வயதில் தான் ஆண்/பெண் கிளர்ச்சி ஏற்படும். வயதுக்கோளாறு
அது. ஆனால் அது உன் வாழ்வை நாசமாக்கி விடக்கூடாது. உன்
விருப்பப்படி நீ படித்து செட்டிலாகிவிட்டு அதைப் பற்றி யோசிக்கலாம்.
சில உதாரணங்கள் சொல்லி,” அம்மா இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன்
தெரியுமா? வானத்தில் ஆனந்தமாக பறக்கும் குருவி தன் காலில்
ஒரு சிறு கல்லைக் கட்டிக்கொண்டு பறந்தால் என்னவாகும்!?” எனக்கேட்டேன்.

“பறக்கவே கஷ்டமாக இருக்கும் அம்மா, ஃப்ரியா பறக்க முடியாது”
என்றான்.

“ஆமாம். படிக்கும் வயதில் காதல் கூட அப்படித்தான். ஒரு பாரமாகி
உன்னை திசை திருப்பும். பெண் நண்பர்கள் இருப்பது தவறில்லை.
உன் தோழி AQUILA இல்லையா. ஆனால் நட்பு வேறு காதல் வேறு!”
என்றதும் மகன் சொன்னது, ரொம்ப தேங்க்ஸ்மா, புரிய வெச்சதுக்கு!”
என்றான்.

என் மகனிடம் பேசியதை ஏன் இங்கே கொடுத்தேன் தெரியுமா??
நம் பிள்ளைகளிடம் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
நான் பேசுவது அட்வைஸாக இருந்தால் பிள்ளைகளுக்கு
போரடித்து விடும். அதுவே நட்பிடம் பகிர்வது போல் பக்குவமாக
பேசினால் நல்ல பலன் இருக்கும்.

தன்னைக் குழந்தையாக நடத்தாமல் பெரிய பிள்ளை போல்
நடத்துவதாக பிள்ளை புரிந்து நம்மிடம் மனம் விட்டு பேச வரும்.
“என்ன ஆனாலும், நானிருக்கிறேன்!” என்ற நம்பிக்கையை
நாம் கொடுத்து விட்டால், என்னை காக்க என் பெற்றோர்
இருக்கிறார்கள் என்ற எண்ணமே தன்னம்பிக்கை மிளிர வைக்கும்.


நாமே நம் பிள்ளையிடம் பேசாவிட்டால் அந்தக் குழந்தை
தன்னை பாதுகாப்பற்றவனாக/ளாக ஆக நினைத்து வருந்தும்.
சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரிவதால் அவர்கள்தான்
தெய்வம் போலவும், தவறான நட்புக்கள் மூலம் பாதை மாறுதலும்
நடக்கும். வீட்டில் போதிய சப்போர்ட் இல்லாத குழந்தைகள் தான்
வழி மாறிச் செல்கின்றன.

போதை, குடி, சிகரெடி போன்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவது
இதனால் தான். தமிழ்த்துளி தேவா அவர்களின் இந்தப் பதிவை
பாருங்கள்.
போதை பழக்கத்துக்கு ஆளானல் மீட்பது கஷ்டம்.


குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படி நாகரீகம்


இதுவும் படிச்சி பாருங்க

வரும் திங்களன்று அடுத்த பதிவு வரும்
அதுவரை
தொடரும்....

38 comments:

அமுதா said...

நல்ல பதிவு & முயற்சி தென்றல். நன்றி.

ரங்கன் said...

இப்படி தயங்காம தன் பிள்ளைகளிடம் நட்புடன் பேசும் பெற்றோர்கள் வருங்காலத்தில் அதிகரிக்க வேண்டும் என்பதே என் ஆவல்..!!

வருங்காலத்தில் நானும் அப்படிபட்ட நண்பனாகவே இருப்பேன்..!!

நன்றி மா.!!

புதுகைத் தென்றல் said...

நன்றி அமுதா

புதுகைத் தென்றல் said...

வருங்காலத்தில் நானும் அப்படிபட்ட நண்பனாகவே இருப்பேன்.

நன்றி ரங்கன்

Jeeves said...

:) இது போல பேசுவதற்கு தயங்கும் பெற்றோர்களாலே பிள்ளைகள் வழித்தடம் மாறுகிறார்கள். Ashish, You are Lucky enough to have such a parents :)

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு தென்றல்.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

Jaleela said...

ரொம்ப அருமையான எல்லா தாய் மார்களும் படிக்க வேண்டிய பதிவு.

நட்புடன் ஜமால் said...

மருமக்களுக்கு வாழ்த்துகள் இறைவனுக்கு நன்றிகள்.

எல்லோரும் இப்படி முயற்சிக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

அம்மா மட்டுமேன் ஜலீலா,

பெற்றோர்கள் இருவரும் தெரிந்து கொள்ளத்தான் இந்தத் தொடர்.

அம்மா மட்டுமே எல்லாம் செய்யணும்னு இல்லை என்பது என் எண்ணம்

வருகைக்கு நன்றி

SanjaiGandhi™ said...

தேவையான நல்ல பதிவு.. பாராட்டுகள் அககா.

போகிற போக்கில் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்கள் மத்தியில், உங்கள் மகனுடனான உரையாடலைப் சொல்லி நம்பிக்கை ஏற்படும் விதத்தில் இந்தக் கட்டுரை எழுதி இருப்பதற்கு சபாஷ்.. கலக்கறிங்க..

மகனுடன் நேரடியாய் பேச கூச்சப்படும் அம்மாக்கள் இந்தப் பதிவை படிக்க சொல்லிவிடலாம்.. வேலை சுலபம்..

ஜீவ்ஸ் சொல்லி இருக்கிறது தான் என்னோட கருத்தும்..

SanjaiGandhi™ said...

//ஆமாம். படிக்கும் வயதில் காதல் கூட அப்படித்தான். ஒரு பாரமாகி
உன்னை திசை திருப்பும். பெண் நண்பர்கள் இருப்பது தவறில்லை.
உன் தோழி AQUILA இல்லையா. ஆனால் நட்பு வேறு காதல் வேறு!”//

அந்தக் கேள்வியையும் இந்த பதிலையும் ப்ளாக் சைட்பார்ல போட்டு வைங்க.. இது புரியாம நெறைய பேர் வாழ்க்கையை சீரழிச்சிட்டு இருக்காங்க...

தேவன் மாயம் said...

பெற்றோர்கள் அனைவருமெ படித்து பின்பற்ற வேண்டிய விஷயம்.நானும் என் மனைவியும் இதை செய்து வருகிறோம் என்பதை இங்கு தெரிவித்துகொள்கிறேன்

புதுகைத் தென்றல் said...

எல்லோரும் இப்படி முயற்சிக்கலாம்.//

நன்றி ஜமால்

T.V.Radhakrishnan.. said...

நல்ல பதிவு

புதுகைத் தென்றல் said...

போகிற போக்கில் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்கள் மத்தியில், உங்கள் மகனுடனான உரையாடலைப் சொல்லி நம்பிக்கை ஏற்படும் விதத்தில் இந்தக் கட்டுரை எழுதி இருப்பதற்கு சபாஷ்.. கலக்கறிங்க..//

உபதேசம் செய்வது மிகச் சுலபம். பின் பற்றுவதுதான் கஷ்டம். அதை செய்து பார்த்த அனுப்வம் வந்த பிறகு தான் பகிர்கிறேன். பாராட்டுக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

மகனுடன் நேரடியாய் பேச கூச்சப்படும் அம்மாக்கள் இந்தப் பதிவை படிக்க சொல்லிவிடலாம்.. வேலை சுலபம்.. //

அட ஆமாம்ல!!( ஆண்மகனிடம் பேசச் சற்று கூச்சமாத்தான் இருக்கும். எனக்கும் இருந்துச்சு.அதான் பதிவிலயும் சொல்லியிருக்கேனே)

புதுகைத் தென்றல் said...

நானும் என் மனைவியும் இதை செய்து வருகிறோம் என்பதை இங்கு தெரிவித்துகொள்கிறேன்//

மனமார்ந்த பாராட்டுக்கள் தேவா

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி டீ வீ ஆர்

கோமதி அரசு said...

நல்ல பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தென்றல், ஏணிப்படியில் ஏறும் வயது மிகச்சரியான உதாரணம் சொல்லி விளக்கி இருக்கிறீர்கள்.

மணிநரேன் said...

நல்லதொரு பதிவு.

நாஸியா said...

அடடே! இன்ஷா அல்லாஹ் எங்களுக்கும் வருங்காலத்தில் உபயோகமாக இருக்கும்..

அநன்யா மஹாதேவன் said...

மிக நல்ல பதிவு தென்றல். வருங்காலத்தில் நான் புரட்டி பார்க்க வேண்டிய பக்கங்கள். நிச்சயம் இதை பின்பற்ற தயங்க மாட்டேன்.

புதுகைத் தென்றல் said...

நன்றி கோமதி அரசு

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கயல்

புதுகைத் தென்றல் said...

நன்றி மணிநரேன்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் நாஸியா அனைவருக்கும் உபயோகமா இருக்கப்போவுது இந்தத் தொடர்

புதுகைத் தென்றல் said...

நன்றி அநன்யா,

ஹுஸைனம்மா said...

நேத்தே படிச்சுட்டேன். இப்பத்தான் பின்னூஸ்!!

தொடர்ந்து எழுதுங்க; கரெக்டா எனக்கு தேவைப்படுற சமயத்தில ஆரம்பிச்சுட்டீங்க!!

ஆனா, ஒரே ஒரு சந்தேகம். 6வது படிக்கும்போது கேர்ள்/ பாய் ஃப்ரண்ட்ஸுன்னு பிரிச்சு பாக்க ஏன் சொல்லணும்? அந்த வயசுல நட்பு மத்தும்தானே தெரியும்; காதல் தெரியுமா என்ன?

புதுகைத் தென்றல் said...

அந்த வயசுல நட்பு மத்தும்தானே தெரியும்; காதல் தெரியுமா என்ன?//

நல்ல கேள்வி (இன்னிய பங்குக்குன்னு வெச்சுக்குவோம் :)) )

காதல்னா என்னன்னு சத்தியமா அந்த வயசுல புரியாது. ஆனா நாங்க இருந்த இடத்துல அது இண்டர்நேஷன்ல் பள்ளி என்பதால் பாய்/கேர்ள் ஃப்ரெண்ட் என்பது கட்டாயம் இருந்தே ஆகணும்ன் என்பது மாதிரியான சூழல்.

நம்ம நாட்டிலயும் 6 ஆம் வகுப்புலேயே சைட் அடிப்பதெல்லாம் உண்டு. பிள்ளைகள் இப்போது மீடியா, சினிமாவிடம் இருந்து தெரிந்து கொள்வது காதல் பற்றிதான்.

இது ரொம்ப பெரிய மேட்டர். முன்னாடியே பதிவுகள்ல சொல்லியிருக்கேன். முடிஞ்ச போது லிங்க் அனுப்பறேன்.

நாம படிச்ச காலம் மாதிரி இப்ப காலம் இல்ல ஹுசைனம்மா

நிஜமா நல்லவன் said...

அருமையான பதிவு போட்டு இருக்கீங்க அக்கா.

தாரணி பிரியா said...

தேவையான நல்ல பதிவு. பாராட்டுகள் தென்றல்.

என் ப்ரெண்ட் இன்னிக்கு இதைப்பத்திதான் பேசிக்கிட்டு இருந்தா. (அவ பையன் வயசு 12). இந்த லிங்க் அனுப்பினேன். ரொம்ப நன்றி சொல்ல சொன்னா :)

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நிஜம்ஸ் தம்பி

புதுகைத் தென்றல் said...

இந்த லிங்க் அனுப்பினேன். ரொம்ப நன்றி சொல்ல சொன்னா //

நன்றி உங்களுக்கு நான் தான் சொல்லணும் தாரணி. என் பதிவை அவங்களை படிக்க வெச்சதுக்கு மனமார்ந்த நன்றிகள்.

வருகைக்கும்

fundoo said...

யோசிக்க வைத்த பதிவு. தென்றல் அனுபவம் சிறிதும் இல்லாத அந்தப் பருவத்தில் பிள்ளைகள் எத்தணை பெரிய சுமையைச் சுமக்கிறார்கள்.?? காலவினை அந்த சமயத்திலதான் அவங்க வாழ்க்கைய தீர்மாணிக்கிற பழக்கங்களும் படிப்புகளும் இருந்து தொலைக்கிறது.

புதுகைத் தென்றல் said...

ஆமாம் ஃபண்டூ,

அந்தக் கஷ்டத்தை பலரும் அனுபவிச்சிருந்தாலும் இதெல்லாம் இந்த வயசுல சகஜம்னு சும்மா இருந்திடறோம். நம்ம பசங்க கஷ்டப்படறதை பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாதே!!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி