Thursday, February 25, 2010

நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்

நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம் இதை
யாரும் மறுக்க முடியாது. இதை அனுபவத்தில்
உணர்ந்தவர்கள் பலர். இப்படி ஒரு நல்ல குடும்பம்
தனக்கு அமையவில்லையே என மறுகும்
உள்ளங்கள் இல்லாமல் இல்லை.

மனித இனத்துக்கு முக்கியமான சந்தோஷம்
நல்ல குடும்பச் சூழல்தான். கைநிறைய்ய சம்பாதிக்கும்
பலரும் ஏங்குவது அன்புக்குத்தானே!! கொடுக்க
கொடுக்க ஆனந்தம் தருவது அன்பு. இனிமையான
கதகதப்பான குடும்பச் சூழல் இந்த ஏக்கத்தை நிவர்த்தி
செய்துவிடும். நம்பிக்கை, புரிதல்,கருணை ஆகியவற்றை
அள்ளித் தரும். சொர்க்கத்தை இறந்த பின் தான் அடைய
வேண்டும் எனும் ஏக்கம் இல்லாமல் வாழும் வீடே
சொர்க்கமாகி பிரச்சனைகள் எதுவந்தாலும் சுமுகமாக
தீர்க்க வழி கொடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் வளரும்
குழந்தைகள் வளர்ச்சி அளவிட முடியாமல் அதீதமாகவே
இருக்கும்.

பெற்றோரின் பங்கு:

பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு வசனம்,
“உலக அழகியும், உலக அழகனுமே திருமணம்
செய்து கொண்டாலும், ஒருவர் முகத்தை ஒருவர்
எத்தனை நாள் பார்த்துக்கொண்டிருப்பார்கள், போரடிக்கும்”
கணவன் - மனைவி வாழும் வாழ்க்கையின் பூரணம்
அவர்கள் அன்பால் பிறந்த குழந்தை.

குழந்தையை பெற்றால் மட்டும் போதாது. குமுதமோ,
குங்குமமோ நினைவில்லை பிள்ளை வளர்ப்புத் தொடர்
வருகிறது. அதில் குறிப்பிட்டிருப்பதுபோல் பிள்ளையை
முறையாக வளர்க்க மனம் இருந்தால் மட்டுமே குழந்தை
பெற்றுக்கொள்வது நலம். தன் காலில் நின்று முன்னேறும்
விதமாகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் குழந்தையை
வளர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.


சொத்து கொடுக்கிறோமோ இல்லையோ அன்பையும்,
கல்வியையும் கொடுத்தால் போதும். அதீத அன்பு ஆளையே
அழித்துவிடும். கவனம் தேவை. அன்பு என்றால் தன்னலமற்ற
அம்மாவின் அன்பைத்தானே அனைவரும் சொல்வோம்.

அன்னைதான் குழந்தையின் முதல் ஆசிரியை. இதில் எந்த
மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பிள்ளை மேல் இருக்கும்
அதீத பாசத்தினால் சில அம்மாக்கள் கண்டிப்பு இல்லாமல்,
தகப்பனிடமும் சொல்லாமல் பொத்தி பொத்தி வளர்த்து
கெடுத்துவிடுவார்கள். கணவனும் மனைவியும் நன்கு புரிந்து
பேசி குழந்தை வளர்ப்பில் ஈடு பட வேண்டும்.

அன்னையின் அன்பு, தந்தை கற்றுக்கொடுக்கும் உலக அறிவு
இரண்டும் முறையாக சரியாக குழந்தைக்கு கிடைத்தால் அதன்
வளர்ச்சி மேல் சந்தேகமே வேண்டாம்.

அன்னை, தந்தை இருவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
நல்லது கெட்டது சொல்லிக்கொடுப்பது, ஒழுங்கு நடவடிக்கைகளின்
வரைமுறைகள், அன்பு என கலந்தே வளர்க்க வேண்டும்.

பெற்றோர்-குழந்தை உறவு முறை:

தனக்கு கிடைக்காததும் தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள் தான் பெற்றோர்கள். சிறு குழந்தையிலிருந்து
வளர்த்து வருபவர்கள். அதுவரை தன் பெற்றோர்கள் தான் உலகம்
என நினைத்து, மகிழ்ந்து, பிரமித்து பார்த்து வந்த பிள்ளை
பதின்ம வயதில் மாறிப்போவதேன்?????

காரணம் வேறொன்றும் பெரிதாக இல்லை. தனக்கான அடையாளத்தை
எதிர்பார்க்கும் வயது இது. பெற்றோரை விட்டு ஓடிப்போய் தன்
அடையாளத்தை காட்ட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால்
அவர்களை சார்ந்திருப்பது இதற்கு தடையாக இருப்பதாக நினைப்பார்கள்.
தனது நண்பர்களையே அதிகம் சார்ந்து இருப்பார்கள்.


அப்பாவைவிட அம்மாக்கள்தான் பதின்மவயது பிள்ளைகளுக்கு
வில்லிகளாகத் தெரிவார்கள். தகப்பன் வேலைப்பளு, பிள்ளைகளின்
எதிர்காலம் என ஓடிக்கொண்டிருப்பவர். தாயோ பக்கத்திலேயே
இருந்து அனுஅனுவாக வளர்ச்சியை பார்ப்பவள். சின்ன அசைவும்
சந்தேகத்தை தந்து தாயையை அலர்ட்டாக்கிவிடும்.

சில சமயம் பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது,”இதை அப்பாவிடம்
சொல்லவேண்டாம் என்பார்கள்”, சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாகி கடைசியில்
கணவனிடம் சொல்லிவிடுவாள். பிள்ளை கடுப்பாகி விலக ஆரம்பிக்கும்.
சொல்லாமல் போனால் கணவன் மனைவி உறவுக்குள் விரிசல்
வந்துவிடும் என அந்தக் குழந்தைக்கு தெரியாது!!


தவிர அம்மாவிடம் அதிகம் பிரச்சனையாக காரணம் நண்பர்கள்,
பாடங்கள், ஹோம் வொர்க்குகள்,டிவி அதிகம் பார்த்தல்,
அறையை,வீட்டையை சுத்தமாக வைக்கச் சொல்லுதல்
போன்ற சின்ன சின்ன விஷயங்களும் பிரச்சனையை
தரும். அரசியல் போல பெரிய்ய பிரச்சனை இல்லை. அருகில்
அமர்த்தி பேசி புரிய வைக்க வேண்டும்.

(peer pressure என சென்ற பதிவுகளில் படித்தோமே,
அது எப்படி பாதிக்கிறது என்று என் அனுபவத்தில் உணர்ந்ததை
உங்களிடம் பகிர்கிறேன்.)

6 மாதங்கள் முன்பு ஆஷிஷின் கிராப் கொஞ்சம் குறைய்ய
ஆரம்பித்தது. மதிப்பெண் குறைந்தால் அடித்து திட்டுவதை
விட பிள்ளைகளுடன் உட்கார்ந்து எங்கே தவறு நடக்கிறது?
என ஆராய்ந்து அதை முன்னேற்ற வழி சொல்வது என் பாணி.

காரணம் கேட்ட பொழுது அவன் சொன்னது,”என் நண்பர்கள்
கீழே விளையாடுகிறார்கள், நானும் விளையாட வேண்டும்.
அப்பொழுதுதான் படிப்பேன்” என்றார்.
வெள்ளிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை வெளியே விளையாட
அனுப்புவேன். மற்ற நாட்களில் யோகா, தியானம்,ஸ்லோகம்
என நானே சொல்லிக்கொடுப்பது பழக்கம். இரண்டு நாள் அம்ருதா
ஆஷிஷ் இருவர் மட்டும் பார்க்குக்கு சென்று
ஷட்டில் விளையாடுவார்கள். விளையாட்டு,
பிறருடன் கலத்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்
மற்ற விஷயங்களும். அனுப்ப மாட்டேன் என்றால் பிடிவாதம்
ஜாஸ்தியாகும். குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட
வேண்டும் எனும் கண்டீஷனுடன் தினமும் விளையாட அனுப்பினேன்.


யோகா,தியானம், ஸ்லோக வகுப்புக்கள் நடக்கவில்லை. பரிட்சைகள்
முடிந்து மதிப்பெண்கள் பார்த்தால் இன்னும் குறைந்து விட்டது.
“அனுப்பினால் படித்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்றாயே!
இப்போது என்னாச்சு? ஏன் குறைந்தது?” எனக் கேட்டேன்.
பதிலே இல்லை.” இப்பொழுது என் சொல்படி கேட்டே ஆக வேண்டும்!
உன் வழியில் சென்றதில் பலனில்லை. என் வழியில் வந்தால்
விளையாட்டு, படிப்பு மற்றும் மற்ற கலைகளுக்கும் நேரம்
இருக்கிறது.” என்றதும் யோசித்து ஒத்துக்கொண்டான். மதிப்பெண்
நல்ல படியாக வந்தது. இப்போது நானும், பிள்ளையும்
சந்தோஷம்.

விட்டு பிடிப்பது எனும் டெக்னிக் தான். இது அதிகம் விட்டு
விடாமல் கொஞ்சம் கயிறை என்னிடமும் வைத்துக்கொண்டு
விட்டேன். பலன் கிடைத்தது. இந்த டெக்னிக் தான் பதின்மவயதுக்கு
ஒத்துவரும். அவர்கள் வழியிலேயே போய் அவர்களை
மாற்றுவது.


மதிப்பெண் பற்றி பேசும்பொழுது வகுப்பில் முதல் மதிப்பெண்,
எல்லாவற்றிலும் 90 க்கு மேல்தான் வரவேண்டும் என அடம்
பிடிக்க மாட்டேன். மனனம் செய்து 100 வாங்குவதை விட
புரிந்து 75 வாங்கினாலும் சந்தோஷம்.


ஆஷிஷிடம் நான் சொல்வது இதுதான்,”நல்லதோர்
வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோன்னு
பாரதியார் பாடியிருக்கிறார். உனக்கு படிப்பு ஏறாத
முட்டாள் என்றால் என் பிள்ளைக்கு இருக்கும் திறன்
அவ்வளவுதான் என விட்டுவிடுவேன். வேறு வகையில்
உன் வாழ்க்கை அமைய என்ன செய்யவேண்டுமோ
அதற்கான முயற்சி செய்வேன். அபாரமான
உன் திறமையை நீயே வீணாக்கி கொள்ளும் பொழுது
மனம் பாரமாகிறது”. (இருவரும் இப்போதும் நல்ல
மதிப்பெண்கள், நான் வற்புறுத்தாமலேயே கிளாஸ் செகண்ட்
டாப்பர் மதிப்பெண்கள் பெறுகிறார்கள்)


அப்புறம் சின்ன சின்ன பாராட்டுக்கள் மிக முக்கியம்.
ஊக்கம்தரும் அந்த வார்த்தைகள் செடிக்கு உரம் போல.
பசங்க படத்தில் ஒரு காட்சி. சைக்கிள் ரேஸ் போட்டியில்
தன் பெற்றோர் தன் கூட கைதட்டி வரவேண்டும் என
அன்பரசு கேட்பான். ”சரிப்பா!!” என்று மொத்தக் குடும்பமும்
கைதட்டி உடன் வரும்.

எதிர்வீட்டு ஆசிரியர்,”பையனை ரேஸ் ஆடச்சொன்னா
மொத்த குடும்பமும் கூட ஓடுது” என கமெண்டினாலும்
ஜெயித்தது பெற்றோரின் ஊக்கத்தோடு பங்குபெற்ற
அன்பரசு தான்.

”தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும்
புகழுறைகள்” அப்படின்னு பாடியிருக்காங்க.அதனால்
ஓவர்டோஸாகிப்போகாமல் நிஜமாகவே அவர்களுக்கு ஊக்கம்
தரும் விதத்தில் பாராட்டுக்கள் அவசியம். சின்ன ட்ரீட்
கொடுக்கலாம்.

உடன்பிறப்புக்களுடனான உறவுமுறை:

நண்பர்களுடன் தினம் விளையாண்டாலும் ஆஷிஷ் அம்ருதா
இருவர் மட்டும் சில சமயம் தனியாக விளையாடவேண்டும்
என சொல்லியிருக்கிறேன். காரணம் அண்ணன் தங்கையின்
உறவு பலப்படும். வயது ஏற ஏற உடன் பிறந்தவர்களுடன்
உறவில் கொஞ்சம் விரிசல் விழும். அதிலும் அதிக வயது
வித்தியாசம் இருந்தால் ரொம்ப கஷ்டம்.

ஒருவருக்கு மட்டும் அதிக அன்பு கிடைப்பதாக மற்ற பிள்ளை
நினைப்பது, அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் சண்டைகள்,
பொறாமை ஆகியவை இடைவெளியை கொடுக்கிறது.
பெற்றோர்கள் இருவரிடம் எப்படி நடக்கிறார்கள் என்பதை
பொறுத்தும் இது அமையும். ஆண் குழந்தைதான் பெரிது
என கொஞ்சம் இழிவாக நடத்தப்படும் பெண்குழந்தை, அல்லது
அடுத்தவர் வீட்டுக்கு போய்விடுவாள் என்பதற்காக அன்பை
அள்ளிக்கொட்டி வளர்க்கப்படும் பெண்குழந்தை இருக்கும்
வீட்டில் அன்புக்கு ஏங்கும் ஆண்மகன் இவர்கள் மனதில்
இருக்கும் வடுக்கள் அவர்களின் முதுமை காலத்திலும்
கூட ஆறாத வடுக்கள்.

இது குழந்தைக்கு தன் மீதே வெறுப்பு வர வைக்கும்.
இதனாலேயே தன் உடன் பிறந்தவரைவிட தன்
நட்புடன் காலத்தை கழிக்க விரும்புவார்கள்.

நல்லதொரு குடும்பத்தை பிள்ளைக்கு அளித்து
நல்லவிதமாக வாழ வழி செய்வோம்.


நீதிக்குத் தலைவணங்கு படத்தின்
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்
பாட்டு பல கருத்துக்கள் சொல்லும்.
இதோ உங்களுக்காக.



குறிக்கோளற்ற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
அதைப்பற்றிய பதிவோடு திங்கள் கிழமை
சந்திக்கிறேன்.

19 comments:

நட்புடன் ஜமால் said...

ஒவ்வொரு செயலும் கவணிக்கப்பட்டு திருப்பி செய்தாவுது இங்கே

கண்கூடாக பார்த்து வியந்து கொண்டிருக்கின்றேன்.

தாய் தான் முதல் ஆசிரியை - சரியா சொன்னீங்க.

சென்ஷி said...

:)

நல்ல பதிவு..

pudugaithendral said...

தாய் தான் முதல் ஆசிரியை - சரியா சொன்னீங்க.//

வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி ஜமால்

pudugaithendral said...

வேலை பிஸியில் ஸ்மைலிக்கு நன்றி சென்ஷி

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கருத்துள்ள பதிவு தென்றல். நான் மிகவும் வியந்த உங்களது பதிவுகளில் இதற்குத்தான் முதலிடம்.

Jaleela Kamal said...

நல்ல பதிவு எல்லோருக்கும் பயனுள்ளது, இதில் நீங்கள் சொல்வது போல் தான் என் பிள்ளைகளிடமும் நான் நடந்து கொள்வது

ஹுஸைனம்மா said...

//உனக்கு படிப்பு ஏறாத
முட்டாள் என்றால் என் பிள்ளைக்கு இருக்கும் திறன்
அவ்வளவுதான் என விட்டுவிடுவேன்//

அதே வசனம்!!

/சில அம்மாக்கள் கண்டிப்பு இல்லாமல், தகப்பனிடமும் சொல்லாமல் பொத்தி பொத்தி வளர்த்து கெடுத்துவிடுவார்கள்//

இந்தப் பசங்களுக்கு எப்படி கரெக்டா அம்மாகிட்டதான் ரெகமண்டேஷனுக்கு வரணும்னு தெரியுதோ? என்னிடமும் என் பையன் வரும்போது, நான் உனக்கு தூதுவர் இல்லை, நீயே வாப்பாட்ட நேரா பேசிக்கோன்னு சொல்லிடுவேன்.


எல்லாமே நல்ல விஷ்யங்கள் தென்றல். நாம் பின்பற்றுறதுன்னாலும் (அல்லது பின்பற்ற நினைப்பது), இங்க படிக்கும்போது, ஒரு ரீ-கேப் மாதிரி உதவுது. நன்றி.

pudugaithendral said...

நான் மிகவும் வியந்த உங்களது பதிவுகளில் இதற்குத்தான் முதலிடம்.//

ஊக்கம் தரும் வார்த்தைகள் டானிக்காக இருக்கு. நன்றி அமைதிச்சாரல்

pudugaithendral said...

நீங்கள் சொல்வது போல் தான் என் பிள்ளைகளிடமும் நான் நடந்து கொள்வது//

பாராட்டுக்கள் ஜலீலா.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

அம்மாதான் அன்பின் திரு உருவமாச்சே அதான் அம்மாகிட்ட, தவிரவும் இமோஷன்ல் ப்ளாக் மெயில்களுக்கும் அம்மா மசிஞ்சிருவாங்க.

நாம் பின்பற்றுறதுன்னாலும் (அல்லது பின்பற்ற நினைப்பது), இங்க படிக்கும்போது, ஒரு ரீ-கேப் மாதிரி உதவுது. //

இப்ப பிள்ளை வளர்ப்பை ஏனோ தானோன்னு செய்ய யாரும் விரும்பலை. அதனால் பலருக்கும் ஒரே கருத்துதான்.
வருகைக்கு நன்றி ஹுசைனம்மா

(இன்னைக்கு கேள்வி ஏதும் கேக்கலை)
:))

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. ரொம்ப நல்லாவே அலசி இருக்கீங்க.

pudugaithendral said...

நன்றி இராகவன்,

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க

எல் கே said...

romba periya pathiva iruku veetla ukkanthu nithanama padikaren ippotahiku ottu pottachu

pudugaithendral said...

நன்றி எல் கே

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்புறம் சின்ன சின்ன பாராட்டுக்கள் மிக முக்கியம்.
ஊக்கம்தரும் அந்த வார்த்தைகள் செடிக்கு உரம் போல.//

இது கண்டிப்பா எல்லாரும் ஃபாலோ பண்ணினா ரொம்ப நல்லாயிருக்கும்...

pudugaithendral said...

ஆமாம் வசந்த்,

சின்னச்சின்ன உக்குவிப்புகள், பாராட்டுக்கள், பரிசுகள் ரொம்ப அவசியம்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

இந்தப் பதிவுக்கு 12/12 ஓட்டுக்கள் வந்திருக்கு. ரொம்ப மகிழ்ச்சி. வாக்கிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

மங்களூர் சிவா said...

wow excellent!

pudugaithendral said...

thanks siva