Thursday, April 15, 2010

என் இன்னொரு பிறந்த வீடு

LOWER TANK BUND AREAவில்
அந்த வீட்டுக்கு நாங்கள் குடி போன பொழுது
இந்த வீட்டுக்காரர்கள் ரொம்ப கறார்.
இருக்கறவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல்
இருக்கணும்னு நினைச்சோம். நானும், அயித்தானும்
மட்டும்தான் அப்போது. (அந்த அங்கிளும்
சட்ட திட்டமாகத்தான் பேசினார்)

ராஜரத்தினம் அந்த வீட்டின் பெரியவர் பெயர்.
அவரது மனைவி(பெயர் ஞாபகமில்லை. ஆண்ட்டி
என்றுதான் அழைப்பேன்) மிகவும் நல்ல மாதிரி.
மூத்த மகனுக்கு மட்டும் திருமணமாகி இரண்டு
குழந்தைகள். மொத்தம் 3 மகன்கள், 1 மகள்.

அப்போது ஆஷிஷை உண்டாகியிருந்தேன்.
அவர்களது மகளுக்குத் திருமணமாகவில்லை,
பல பையன்கள் பார்த்து வேண்டாமென்றதால்
திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார் மகள்
என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார் ஆண்ட்டி.
”உங்கள் மகளுக்காக நான் பிரார்த்தனை
செய்கிறேன்!” என்று சொல்லி செய்யவும்
செய்தேன். எம்மதமாக இருந்தால் என்னம்மா!
எல்லாக் கடவுளும் ஒன்றே என்று சொன்ன
ஆண்ட்டி குடும்பத்தினர் கிறிஸ்துவ மதத்தைச்
சேர்ந்தவர்கள்.

ஆஷிஷ் பிறந்து ஹைதைக்கு சென்றதிலிருந்து
அவர்கள் வீட்டில் ஒரே குஷி. ஆண்ட்டியின் மூத்த
மகனான ஜான் அண்ணா அவரது மனைவி வாணி
இருவரும் வேலை முடிந்து வந்ததும் ஆஷிஷ்
என்ன செய்கிறான்? என்று கேட்காமல் இருக்க
மாட்டார்கள். அவர்களது பிள்ளைகள் சின்னாவும்,
டாலியும் பள்ளிவிட்டு வந்ததும் கை கால் கழுவி
முதல் வேலையாக ஆஷிஷை கொஞ்சிவிட்டுத்தான்
போவார்கள்.

ஆண்ட்டி துணி எடுக்க மேலே வரும்பொழுதெல்லாமோ,
சாப்பிட்டு முடித்துவிட்டு கொஞ்ச நேரம் வந்தோ
ஆஷிஷுடன் இருப்பார். ஆஷிஷ் தலை நின்று
கொஞ்சம் தவழ ஆரம்பித்ததும் ஜான் அண்ணா
வேலை விட்டு வந்ததும் ஆஷிஷை கொண்டு
வரச்சொல்லிவிடுவார். அவர்களுடன் தான் குழந்தை
இருப்பான். அவர்களுக்கு ஏதும் தொந்திரவாக இருக்குமோ!
என நான் தான் நினைப்பேன். எங்க கிட்ட இருக்கட்டும்
என தூக்கிப் போய்விடுவார்கள்.

ஏப்ரல், மே மாதங்களில் வெயில் மிக மிக அதிகம்.
(கடந்த 10 வருடங்களில் ஹைதையில் இந்த வருடம்
தான் அதிக பட்ச வெப்பமாக ஏப்ரல் மாதத்தில் 42 டிகிரி)
நாங்கள் மேல் தளத்தில் இருந்ததால் சூடு இறங்கி
ஆஷிஷுக்கு sun stroke வந்துவிட்டது. 6 மாதக்
குழந்தை. ஜுரம் என்றால் அப்படி ஒரு ஜுரம்.
ஆனாலும் சூடாக ஏதும் கொடுக்க முடியாது.
ஃபிர்டிஜில் வைத்து கொஞ்சம் சில்லென்று தான்
கொடுக்க வேண்டும். முடிந்தால் வீட்டை காலி
செய்துவிட்டு கீழ்தளத்துக்கு போகச் சொன்னார்
டாக்டர்.

”இரண்டுமாதத்துக்காக ஏம்மா,ஆஷிஷ் பகலெல்லாம்
எங்க வீட்டுல இருக்கட்டும்” என ஆண்ட்டியும்
அவரது மகள் ராணி அக்காவும் சொல்லிவிட்டார்கள்.
காலை 8 மணிக்கு எடுத்துப்போவார்கள். சாயந்திரம்
7 மணிக்கு மேல்தான் கூட்டி வருவேன். சாப்பாடு
எல்லாம் ஆண்ட்டி பார்த்து கொள்வார்கள். நான்செய்து
மட்டும் கொடுப்பேன். அப்போது உடல்நிலை சரியில்லாத
என் மாமியாரும் என்னுடன் இருந்தார். பார்கினிஸம்
எனும் ஒரு வித வியாதி அவருக்கு. அதனால் வேகமாக
நடக்க முடியாது. பாத்ரூம் போக எழுவார். அவர் பாத்ரூம்
போய்ச் சேர்வதற்குள் வழியிலேயே எல்லாம்...
ராத்திரியில் கட்டிலுக்கு அடியில் ஈரம் இல்லாத நாளே
கிடையாது.

”நீ அவங்களை கவனி. ஆஷிஷ் இங்கே இருக்கட்டும்.
இன்ஃபெக்‌ஷன் ஆகிட்டால் கஷ்டம் என,” பார்த்துக்கொண்டது
அவர்கள்தான்.

நான் செய்யும் சமையல்கள் அவர்களுக்கு ரொம்ப
இஷ்டம். அதுவும் அடை செய்தால் போதும்.
மேல்போர்ஷனில் என்னுடன் இன்னொரு குடித்தனக்காரரும்
பக்கத்து வீட்டில் இருந்தார். அவர்களால் நிறைய்ய
கஷ்டங்களை பார்த்து இருந்தனர் அங்கிள் குடும்பத்தினர்.
யூசர் ஃப்ரெண்ட்லி போல் நாங்கள் ரொம்ப அட்ஜஸ்ட்
செய்து பிரச்சனை ஏதும் தராமல் இருந்தது அவர்களுக்கு
பிடித்திருந்தது. ராணி அக்கா திருமணத்திற்காக என்
பிரார்த்தனை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆஷிஷை வளர்க்கும் அந்த நேரத்தில அவர்களின்
அந்த உதவிகள் இல்லாவிட்டால் நான் ரொம்பவே
கஷ்டப்பட்டிருப்பேன். இதை அவர்களிடமே
சொன்ன போது,”ஸ்ரீராமும் ஊரில் இல்லாமல்
நீ மாமியையும் பார்த்துகொண்டு பிள்ளையை
வளர்க்கிறாய். என் மகளாக இருந்திருந்தால்
நான் செய்திருக்க மாட்டேனா” என்பதுதான் பதிலாக
வந்தது.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் ராணி அக்காவுக்காக
நான் பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருந்தேன்.

சென்னைக்கு மாற்றலாகிவிட மொத்த குடும்பமும்
வருத்தத்துடன் பிரியாவிடை கொடுக்க
கிளம்பி வந்தோம். நாங்கள் சென்னை வந்த பிறகும்
போனில் தொடர்பு கொண்டிருந்தோம். ஒரு முறை
ஜான் அண்ணா தன் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
என்னுடம் தான் தங்கினார்கள். நான் கூட உங்க
சொந்த் அண்ணான்னு நினைச்சேன். அப்படின்னு
பக்கத்து வீட்டுக்காரங்க பெருமையாச் சொன்னாங்க.
அண்ணா அப்படி ஒரு பாசக்காரர்.

அம்ருதாவை உண்டாகி இருந்த பொழுது ஹைதைக்கு
போகவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தேன்.
மறக்காமல் சென்றது ஆண்ட்டி வீட்டுக்கு. அனைவருக்கும்
அவ்வளவு மகிழ்ச்சி. எனக்கொரு சந்தோஷமான
விஷயம் காத்திருந்தது. ஆமாம் ராணி அக்காவுக்கு
திருமணம் நிச்சயமாகியிருந்தது.(நான் போவதற்கு
3 நாள் முன்னாடி) சட்டென நடந்திருக்கிறது. உன்
பிரார்த்தனை வீண் போகவில்லை என ஆண்ட்டி
உருகினார்.

அவரது திருமணத்துக்கு செல்ல முடியவில்லை.
4 வருடங்களுக்கு முன் ஹைதை விசிட் அடிக்க
வந்திருந்த பொழுது மற்ற அண்ணாஸுக்கும்
கல்யாணம் முடிந்திருந்தது. புதிதாக வந்திருக்கும்
மருமகள்கள் கூட,” நீங்கதான் கலாவா! உங்களைப்
பத்தி ஆண்ட்டி தினமும் சொல்லிகிட்டே இருப்பாங்க”
என்றார்கள். டாலி ஆஷிஷை கூட்டிக்கொண்டு மேலே
போய் நீ இங்கதான் இருந்த, இங்க இந்தலூட்டி
அடிச்ச என்று காட்டிக்கொண்டிருந்தாள். அங்கே
ஆஷிஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்
பெரிதாக்கி வைத்திருக்கிறாள் டாலி. அந்த
அன்பு!!!!! ஆண்டவன் கொடுத்த வரம்.

சமீபத்தில் ஜாண் அண்ணா ஹார்ட் அட்டாக்கில்
இறைவனடிச்சேர்ந்து விட்டார். இன்னமும்
அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறேன்.
LOWER TANK BUND பக்கம் போகும் போது
அந்த வீட்டை ஏதோ கோவிலை தரிசிப்பது
போல் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்வது
எங்கள் பழக்கமாகிவிட்டது.

அடுத்த உறவு... பற்றி அடுத்த பதிவில்14 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இதயம் கனத்துவிட்டது .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

புதுகைத் தென்றல் said...

நன்றி ஷங்கர்

ப்ரியா கதிரவன் said...

ரொம்ப நெகிழ்வான பதிவு.

எம்.எம்.அப்துல்லா said...

:)

:(

Porkodi (பொற்கொடி) said...

எனக்கு தெரிஞ்சு நிறைய‌ பேருக்கு இது மாதிரி இன்னொரு குடும்பம் அமைஞ்சுருக்கு.. :))) சொந்தக்காரங்க மாதிரி பழகுற அந்த சந்தோஷமே தனி தான். நல்ல இடுகை தென்றல்!

இராமசாமி கண்ணண் said...

உருக்கமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

/அந்த
அன்பு!!!!! ஆண்டவன் கொடுத்த வரம்./
நிஜம்தான்!

அமைதிச்சாரல் said...

ஆஷிஷுக்கு ஒரு வளர்ப்பு பாட்டி அமைந்த மாதிரி, எனக்கும் ஒரு வளர்ப்புமகன் இருக்கிறான் :-))))
உங்க மாமி இப்போ எப்படி இருக்காங்க...

புதுகைத் தென்றல் said...

நன்றி ப்ரியா

புதுகைத் தென்றல் said...

நன்றி அப்துல்லா

புதுகைத் தென்றல் said...

நன்றி பொற்கொடி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி ராமசாமி கண்ணன்

புதுகைத் தென்றல் said...

நன்றி அருணா

புதுகைத் தென்றல் said...

எனக்கும் வளர்ப்பு மகன் இருக்கார் அமைதிச்சாரல். மாமியார் இறைவனடி சேர்ந்து பத்துவருடங்கள் முடிந்துவிட்டன.

வருகைக்கு நன்றி